046 திருவேளுக்கை Thiruvellukai

வேளுக்கைவல்லி தாயார் ஸமேத முகுந்தநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவேளுக்கை
மூலவர்அழகியசிங்கர், ந்ருஸிம்ஹர், முகுந்தநாயகன், ஆள் அரி,
உத்ஸவர்முகுந்தநாயகன்
தாயார்வேளுக்கை வல்லி , அம்ருதவல்லி
திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம் (யோக நரசிம்மர்)
திசைமேற்கு
பாசுரங்கள்4
மங்களாசாசனம்பேய் ஆழ்வார் 3, திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 44 6727 1692 ; +91 98944 15456

தொண்டை நாட்டு திவ்யதேசங்கள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி

முன்னுரை

இன்று(25 5 2021) நரசிம்ம ஜெயந்தி. ஆழ்வார் பாடிய திவ்யதேசங்களில் நரசிம்மருக்கு என்று சில திவ்யதேசங்கள் சிறப்பாக உள்ளன, அஹோபிலம் (சிங்கவேள்குன்றம்), திருக்கடிகை (சோளிங்கர்), திருவேளுக்கை, திருவல்லிக்கேணி என்ற சிலவற்றை உதாரணமாக கொள்ளலாம். பொதுவாக எல்லா ஆழ்வார்களும், பற்பல திவ்யதேச எம்பெருமான்களை அழகியசிங்கராகவே (நரசிம்மராகவே) அனுபவித்து உள்ளனர். இன்று நாம் இந்த பதிவில் திருவேளுக்கை பற்றி சிறிது காண்போம். எல்லோருக்கும் அழகியசிங்கரின் அருளாசி கிடைக்க பிரார்த்தித்து தொடங்குவோம்.

பெருமாளின் அவதாரங்களில்

  • மிக அழகிய அவதாரம் என்றும்,
  • மிகவும் போற்றப்படுகின்ற அவதாரம் என்றும்,
  • பக்தர்களை காப்பதில் மிக விரைந்து வரும் அவதாரம் என்றும்,
  • பிரம்மன் முதல் தன்னுடைய எல்லா அடியவர்களின் வார்த்தைகளையும் காப்பாற்றுவதில் அக்கறை உள்ளவன் என்றும்,

பல பெருமைகளுடன் போற்றப்படும் அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகும்.

பிரஹ்லாதன் கூப்பிட உடனே, தூணிலிருந்து புறப்பட்ட மாதிரி, தனக்கு உதவ வரவில்லையே என்று மகள் நான்கு பக்கங்களும் சுற்றி சுற்றி பார்த்து வருந்தியதாக தாய் சொல்லும் பாடல் நம்மாழ்வாரின், ” ஆடியாடி அகம் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடி வாடும்“  (திருவாய்மொழி 2.4.1). 

கோவில் பற்றி

வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள், நரசிம்மன் ஆசையுடன் இருக்கும் இடம் என்ற பொருளோடு இந்த இடம், வேள் இருக்கை, என்றாகி மருவி வேளுக்கை ஆனது.

தான் இல்லாமல் பிரம்மன் செய்யும் யாகத்தைத் தடுத்து நிறுத்த சரஸ்வதி தேவி பல அரக்கர்களை யாக சாலையை நோக்கி அனுப்பினாள். நரசிம்மர் மேற்கு திசையில் இருந்த ஹஸ்திசைலம் குகையில் இருந்து வெளி வந்து வேறொரு நரசிம்ம உருவில், அசுரர்களை துவம்சம் செய்து அவர்கள் மீண்டும் காஞ்சிக்கு வராதபடி அங்கேயே மேற்கு நோக்கி யோகநரசிம்மராக அமர்ந்த திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார். இது காமாஸிஹா நரசிம்மன் சன்னதி.

பெருமாள், தாயார், கருடன் சக்ரத்தாழ்வார் சன்னதிகள் உள்ளன. நரசிம்மஸ்வாமியின் உக்ரம் தாங்காமல் கருடன் சற்று தலை தாழ்ந்து பயத்துடன் இருப்பது ஒரு சிறப்பு.

ஸ்தல புராணத்தில் பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீஹம். ஆனால்
தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று ஆழ்வார் சொல்வது போல், மூலவர் அழகியசிங்கர் அழகு; உத்சவர் முகுந்த நாயகன் மிக மிக அழகு.

ஆழ்வார் ஆச்சாரியார்

 ‘மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ (பெரிய திருமடல் 127) என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்.  ஆள் அரி என்பது அழகான தமிழ் திருநாமம்.

பேயாழ்வார், “ சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம்கடவார் தண்டுழா யார் ” (மூன்றாம் திருவந்தாதி, 26) என்று இந்த திவ்யதேசத்தை. எம்பெருமான் என்றும் வாழும் (நித்யவாஸம்) இடங்களை சொல்லும் போது சொல்கிறார்.

இருந்து வேளுக்கை (34) ” என்ற பாசுரத்தில், திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் எம்பெருமான் வீற்றுஇருந்து சேவை சாதிப்பது, முன்பு உலகளந்த களைப்பு தீருவதற்கோ என்று  பேய்ஆழ்வார் வினவுகிறார்.

இன்னொரு பாசுரத்தில் இந்த திருத்தல எம்பெருமானின் சௌலப்ய, ஸௌசீல்ய அனுபவங்களில் ஆழ்வார் திளைக்கிறார். “விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம், மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு” (62) என்பதில் கடைசி வரியில் உள்ள நீர் ஏற்றான் தாழ்வு என்பது வாமன அவதாரத்தின் போது, தாழ்ச்சிதோற்ற இருந்த எளிமையை சொல்வது ஆகும்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன், இந்த திவ்யதேச எம்பெருமானுக்கு காமாஸிகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தை அருளியுள்ளார். அதனால் இந்த சந்நிதியை காமாஷிகா நரசிம்ம சந்நிதி என்று அழைப்பார்கள்.

Google Map

திருவேளுக்கைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவேளுக்கை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

நம்முடைய வலைப்பதிவில் இருந்து

024 திருச்சிறுபுலியூர் thirusirupuliyur

திருமாமகள் ஸமேத அருள்மாகடல் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருச்சிறுபுலியூர், பாலவியாக்ரபுரம்
மூலவர்அருள்மாகடல் பெருமாள் / சலசயனப்பெருமாள்
உத்ஸவர்க்ருபாசமுத்திர பெருமாள்
தாயார்திருமாமகள் நாச்சியார் / உத்சவர் தயாநாயகி
திருக்கோலம்கிடந்த திருக்கோலம் (புஜங்க சயனம்)
திசைதெற்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91-4366-233 041, +91 4366 233 826

கோவில் பற்றி

திவ்யதேசத்தின் பெயரில் தான் சிறியது இருக்கிறதே தவிர, எம்பெருமானின் கருணையில் மிகப்பெரிய கடல். ஆம், எம்பெருமானின் திருநாமம், அருள்மாகடல்.

மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி அருகில் இந்த திவ்யதேசம் இருக்கிறது. சுற்றிலும் அருமையான வயல்வெளிகளுக்கு இடையே அழகான திவ்யக்ஷேத்திரம். அதைவிட அழகான சிறிய திருவுருவில் சந்நிதியில் சயனத்தில் எம்பெருமான். அடியேன் சேவித்த தினம் ஒரு பௌர்ணமி, மாலை 6 மணிக்கு பிறகு. அன்று அங்கு எம்பெருமான் தரிசனம், மின்சாரம் இல்லாமல், இயற்கையின் ஒளியில் தான். அந்த அழகு மனதை விட்டு நீங்காமல் இன்னும் பசுமையுடன் உள்ளது.

ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த ஸ்தலம் நாகதோஷங்கள் நீங்க சிறப்பான ஒன்று. பால் பாயசம் நிவேதனம், ஆதிசேஷனுக்கு செய்வது சிறப்பு.

கருடனுக்கு அபயமளித்த இடம். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், உயர்ந்த இடத்தில்
ஆதிசேஷனுக்கு சன்னதியும் உள்ளன.

இத்தலத்தின் எம்பெருமானை பூஜித்து மோக்ஷம் அடைந்த வியக்கிரபாதர் எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகிலேயே உள்ளார். பதஞ்சலியும் எம்பெருமான் சன்னதியில் உள்ளார்.

கருடாழ்வார் சன்னதி, உள் திருச்சுற்றில் விஷ்வக்சேனர், மூலவர் சன்னதி, வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.

ஸ்தலபுராணம்

ஒரு சமயம் கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைக் குறித்து ஆதிசேஷன் இந்த க்ஷேத்திர குளக்கரையில் தவம் புரிந்தார். எம்பெருமான் மகிழ்ந்து ஒரு மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி அன்று இந்த ஸ்தலத்தில், பால சயனத்தில் எழுந்துஅருளினார். ஆதிசேஷனை அனந்த சயனமாக்கிக்கொண்டு குழந்தை வடிவில் சேவை சாதிக்கிறார்.

வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, அவர் சிவலிங்க ரூபமாக
வழிகாட்ட, அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் அவரை தொடர்ந்து, இத்தலத்திற்கு வந்து சேர்ந்து எம்பெருமானின் கருணையால் முக்தி பெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என்று ஆயிற்று.

ஆழ்வார்கள்

இத்திருத்தலத்தில், எம்பெருமான் புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாக இருந்ததைக் கண்டு
திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட, உமது குறைதீர திருக்கண்ணமங்கையில், நமது மிகப்பெரிய உருவை காணும் என்று எம்பெருமான் அருளிச் செய்த க்ஷேத்திரம்.

நம்மாழ்வார் “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத்து உள்ளேயுறையும் பிரான் கண்டீர்” (திருவாய்மொழி 8.6.2) என்றருளிச் செய்ததுபோலே இவரும் “சிறுபுலியூர்ச் சலசயனத் துள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை” (பெரியதிருமொழி 7.9.1) என்றார்.

Google Map

திருச்சிறுபுலியூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருச்சிறுபுலியூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

023 தேரழுந்தூர் Therazhunthoor

செங்கமலவல்லித்தாயார் ஸமேத ஆமருவியப்ப பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்தேரழுந்தூர் . கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு)
மூலவர்தேவாதிராஜன் / கோஸகன்
உத்ஸவர்ஆமருவியப்பன்
தாயார்செங்கமலவல்லி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்45
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 45
தொலைபேசி +91- 4364-237 952

கோவில் பற்றி

தேவாதிராஜன் நின்ற திருக்கோலத்தில், 13 அடி உயரத்திலான சாளக்ராம திருவுருவம். மூலவருக்கு வலது புறம் ப்ரஹ்லாதாழ்வாரும், இடது புறம் கருடாழ்வாரும் சேவை சாதிக்கின்றனர். இடது புறம், காவிரி தாயார் மண்டியிட்டு சேவிக்கிறாள். உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள
பேரழகு சொல்லி முடிக்க முடியாது.

கம்பர்

கம்பராமாயணம் இயற்றிய கம்பன் பிறந்த ஊர். கோபுரத்தின் உட்புறம், கம்பனும் அவர் மனைவியும் சிலைவடிவதில் உள்ளனர். அருகில் உள்ள கம்பன் மேடு என்ற இடத்தில வாழ்ந்தாக சொல்கிறார்கள். வருடம் தோறும் மிகச்சிறப்பாக கம்பன் விழா கொண்டப் படுகிறது.

ஸ்தலபுராணம்

கோகுலத்தில் கண்ணன், கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஒரு பசுமந்தையை, பிரம்மா கண்ணனுக்கு தெரியாமல் (என்று நினைத்து) தேரழுந்தூருக்கு ஓட்டிவர, அதை அறிந்த கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை படைத்த்தான். தன் தவறை உணர்ந்த பிரம்மா, கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, கண்ணனும் அப்படியே ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக வந்து அருளுகிறார்.

ப்ரஹ்லாதன், நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்தபோது, எம்பெருமானின் சாந்தமான உருவத்தை வேண்டிய போது, சினம் குறைந்த சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம் குறையாமல் இருக்க, இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்து ப்ரஹ்லாதனின் பயத்தை போக்கினார். அதனால் மூலவர் அருகில் ப்ரஹ்லாதனும் இடம் பெற்று, நித்திய பூஜைகள் பெறுகிறான்.

இந்திரன் ஒரு வைரமுடியினையும் ஒரு விமானத்தையும், கருடனிடம் கொடுத்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயணபுரத்தில் (மேல்கோட்) உள்ள செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும், தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். அதனால் இந்த ஸ்தல விமானம், கருட விமானம் ஆயிற்று. மேலும் எம்பெருமான் கருடனையும் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார்.

அகத்தியரிடம் பெற்ற சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து காவிரி தவமிருந்து, தன்னுடைய சாபத்தை போக்கி கொண்டாள் என்று வரலாறு. இப்பெருமானை நோக்கித் தவம் இருந்த நிலையில் காவிரித் தாயார் மண்டியிட்டு மூலவர் சந்நிதியில் காட்சி அளிக்கிறாள்.

விமானத்தில் ஆகாசத்தில் பறக்கும் தவ வலிமை பெற்ற உபரிசரவசு, தன் விமானத்தின் நிழல் எதன் மேல் விழுந்தாலும் அது கருகிவிடும் என்ற வரம் பெற்று இருந்தான். அது கண்ணனின் பசுக்கூட்டத்திற்கு துன்பம் கொடுக்க, கண்ணன் அவனின் கர்வத்தை அடக்க, பறந்து கொண்டு இருந்த அவன் தேரினை பூமியில் விழ வைத்தார், அதனால் தேர் அழுந்தி, தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது.

இதுவே வேறு ஒரு விதத்திலும் சொல்லப்படுகிறது. விமானத்துடன் ஆகாசத்தில் சஞ்சரிக்கும் தவ வலிமை பெற்ற உபரிசரவசு என்னும் அரசன் தேவர்கட்கும் ரிஷிகளுக்கும் இடையில் நடந்த ஒரு விவாதத்தில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பளிக்க, இதனால்
கோபமுற்று ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் வீழ்ந்து அவன் தேர் அழுந்தி விட்டது. அதனால் இதற்குத் தேரழுந்தூர் என்ற பெயர்.

சிவன் பார்வதியை பசுவாக மாற சாபம் இட்டபொழுது லட்சுமி தேவியும் பசுவாக மாறி இந்த ஸ்தலத்திற்கு வர, எம்பெருமானும் கோசகனாக (ஆ மருவி அப்பனாக) இங்கு வந்து ஆட்சி புரிகிறார்.

சிறப்புகள்

மார்க்கண்டேயர் இந்த எம்பெருமானை வணங்கி மோட்சம் பெற்றார் என்பது ஒரு வரலாறு.

ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்திற்கு 45 பாசுரங்கள் பாடி உள்ளார். “திருவுக்கும் திருவாகிய செல்வா”  (பெரிய திருமொழி 7.7.1) என்று எம்பெருமானை போற்றுகிறார். “செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியில்” (7.8.1) என்று இந்த திவ்யதேச தாயாரின் பெயர் கொண்டு ஆழ்வார் பாடியுள்ளது, தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து உள்ளது போல் தோன்றுகிறது. (பெரியவாச்சான் பிள்ளை மற்றும் நம் ஆச்சார்யர்கள் இவ்வாறு விளக்கம் சொல்லவில்லை).

Google Map

தேரழுந்தூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தேரழுந்தூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

நம் வலைப்பதிவில் கம்பர் பற்றி ஸ்ரீ ஸ்வாமிநாதன்

திருமாலை – குளித்து மூன்று

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருஅரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவத்அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி. இதனை நம் சம்பிரதாயத்தில் நைச்சானுசந்தானம் என்று கூறுவார்கள். அதனை பார்ப்பதற்கு முன் மோக்ஷம் பற்றி சில கருத்துக்களை இங்கே சொல்வோம்.

மோக்ஷம்

எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதையே குறிக்கோளாக் கொண்டு தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.  இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறுகிறோம். அதை அடைவதற்கு சிலவழிகள்பற்றி சுருக்கமாக,

  • கர்ம யோகம் (தவம் போன்ற நடவடிக்கைகள், சாஸ்திரம் நமக்கு விதிக்கும் கடமைகள்)
  • ஞான யோகம் (அறிவு மூலம் பரமாத்மாவை பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்வது)
  • பக்தி யோகம் (பரமாத்மாவின் மேல் தூய்மையான அன்பு செலுத்துதல் )

இவற்றில் எதன் மூலமும் மோக்ஷம் அடையலாம் என்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன மூன்று ஸ்லோகங்களை இப்பொழுது காண்போம். முதலில், ஜனகன் முதலானோர் கர்மயோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தான் என்று கூறுகிறார் (3.20). கர்மயோகத்தைவிட அதில் உள்ள ஞான பாகமே முக்கியம் என்றும், எல்லா கர்மங்களும், எல்லா சாதனங்களும் ஞானத்திலேயே முடிவு பெறுவதாக கண்ணன் சொல்கிறார். (4.33). ஒரு பயனையும் எதிர்பாராத பக்தியினாலேயே தன்னை உண்மையாக அறியவும், பார்க்கவும், உட்புகவும் முடியும் என்று கண்ணன் கூறுகிறார். (11.54). இப்படி, மூன்று யோகங்களும் தனித்தனியே மோக்ஷத்தை அளிக்க வல்லன என்பதே ஆகும்.

மேலும் மூன்று யோகங்களில் ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் கலந்தே உள்ளன என்றும் இந்த மூன்று யோகங்களிலும் ஒன்று பிரதானமான சாதனமாகவும், மற்ற இரண்டும் ஆதரவு சாதனங்களாவும் இருக்கும் என்றும் நம் ஆச்சார்யர்கள் கூறுவர். அப்படி இரண்டினை ஆதரவாக கொண்டு கொண்டு மூன்றாவதை சாதனமாக்கி மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு உதாரணங்களை பார்ப்போம். ஜனகர், ஞான யோகத்தையும், பக்தி யோகத்தையும் கொண்டு கர்ம யோகத்தை சாதனமாக்கி சாதித்தவர். ஜடபரதர், கர்மயோகத்தையும், பக்தி யோகத்தையும் ஆதாரமாகக் கொண்டு ஞானயோகத்தை சாதனமாகக் கொண்டவர். பிரஹ்லாதன், கர்ம, ஞான யோகங்களை ஆதாரமாகக் கொண்டு பக்தியோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தவர். இப்படி இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லன.

கர்மயோகம் மூலம் தொடங்கிய சில காலத்திலே ஞான யோகம் ஏற்படக்கூடியது. ஞான யோகம் தொடங்கியவுடன் உணர்வது பரபக்தி. கர்மயோகம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்றும் வீணாவதில்லை. அதாவது, ஒரு ஜீவாத்மா, கர்ம யோகம் செய்து, அது முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து விட்டால், அந்த கர்மயோகத்தின் பலன்கள், அந்த ஜீவாத்மாவை அதன் அடுத்த பிறவியில் வந்து அடையும். பொதுவாக, கர்ம, ஞான யோகங்கள் தொடங்கிய பின்னர் ஒரு ஜீவாத்மா பக்தி யோகம் அடைவது என்பது சாத்தியமாகிறது.

பக்தி யோகம் நமக்கு பிறக்காமல் இருப்பதற்கு தடையாக உள்ள விரோதிகள் நாம் செய்த பாவங்களே ஆகும். பற்பல பிறவிகளில் நாம் செய்த கர்ம, ஞான யோகங்கள், நம் பாவங்களை நீக்கி, நம்மை, கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆக்கி, நாம் பக்தி யோகம் செய்ய உதவுகின்றன என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.

நாம், நான்கு யுகங்கள் உள்ளன என்றும், அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்றும் பார்த்து உள்ளோம். கர்ம, ஞான, பக்தி யோகங்களை பின்பற்ற வேண்டிய திறமைகளும், அவகாசமும், ஆயுளும், சூழ்நிலைகளும் முதல் மூன்று யுகங்களுக்கு அதிகம் என்றும், கலியுகத்தில் அது கடினம் என்றும் சொல்வதை கேட்டு இருக்கிறோம். அதனால், நமக்காகவே, சரணாகதி என்ற மோக்ஷம் செல்லும் வழி உள்ளது என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

அவன் மூலம், அவனை மட்டுமே அடைவது என்பது சரணாகதி என்று சுருக்கமாக கொள்ளலாம். அவன் திருவடிகளே சரணம் என்று வேறு எந்த வித உபாயமும் இன்றி அவனை அடைவது; அப்படி அவனை அடைந்தபின், அவனை தவிர வேறு எதுவும் அவனிடம் வேண்டுவதில்லை என்பதே இதன் உட்கருத்து. இவ்வாறு வேண்டுபவர்களை பகவத்லாபார்த்தி என்று கூறுவார்கள். இவ்வுலக இன்பங்களை வேண்டுபவர்கள் ஐஸ்வர்யார்த்தி என்றும், இவ்வுலக இன்பத்தைத்தாண்டி, பரமாத்மாவிடம் செல்லாமல் கைவல்யம் என்ற விருப்பத்தை வேண்டுபவர்கள் கைவல்யார்த்தி.

மோக்ஷம் என்பதை விரும்பாமல், கைவல்யம் என்பதை விரும்பும் சில ஜீவாத்மாக்கள் உள்ளன என்று நாம் பார்த்து உள்ளோம். அப்படி கைவல்யத்தை வேண்டுபவர்களுக்கு இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியே சாதனமாக கூடும் என்று ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் அருளிச்செய்து உள்ளார்.

பரமாத்மா கைவல்யார்த்திகளுக்கும் அவனை வந்துஅடைய, இறுதிவரை அந்த ஜீவாத்மாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறார். தன்னுடைய இறுதி மூச்சின் போது, ஒரு கைவல்யார்த்திக்கு பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டால், பரமாத்மா அந்த கைவல்யார்த்திக்கு மோக்ஷத்தை அளித்துவிடுவார். இத்தனையும் அருளி செய்தவர் ஆளவந்தார் என்ற ஆச்சார்யர்.

வராக சரமச் ஸ்லோகத்தில் “நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்” என்று சொல்வதில் இருந்து எந்த வழியில் சென்றாலும் இறுதி மூச்சின் போது அவனை நினைக்கவேண்டும் என்றும், நாமாக நினைக்கலாம், அல்லது அவன் நமக்காக நினைக்கிறான் என்றும் கொள்ளலாம்.

மோக்ஷம் பற்றி மேலே சொன்ன சில குறிப்புகளை நினைவில் கொண்டு, இப்பொழுது திருமாலை 25ம் பாசுரத்திற்குள் செல்வோம்.

திருமாலை இருபத்தி ஐந்தாம் பாசுரம்

குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன், களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன், அளித்து எனக்கு அருள் செய் கண்டாய், அரங்க மா நகருளானே (திருமாலை 25)

ஆழ்வார், பிராம்மணன் என்ற குலத்தில் பிறந்திருந்தும், அது கர்மயோகம் செய்வதற்கு தரும் தகுதிகளை தான் இழந்துவிட்டதாகவும், தனக்கு ஆத்ம ஞானம் இல்லை என்றும், தான் பரமாத்மாவிடம் உண்மையான பக்தி உடையவன் இல்லை என்றும் அதனால், தான் மகிழ்வதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று கதறுகிறார். அரங்கன் தனக்குத் தகுதி முதல் தொடங்கி எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று இந்த பாசுரத்தில் வேண்டுகிறார்.

இதற்கு முன் உள்ள பத்து பாசுரங்களில் எம்பெருமான் தனக்கு செய்த பேருதவிகளை சொன்னார். சென்ற பாசுரத்தில், தனக்குள்ள பக்தி கள்ளத்தனமானது என்றார். இந்த உடலோடு சம்பந்தம் நீங்கி, பரமபதம் அடைந்து நித்யமும் அவனை அனுபவிக்க தனக்கு ஒரு சாதனமும் இல்லை, அதனால் இந்த பகவத்விஷயத்தை இழந்து விடுவோமோ என்று ஆழ்வார் தவிக்கிறார்.

இதைக்கண்ட பெரியபெருமாள், பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் இவர்கள் பின்பற்ற வேண்டிய கர்ம, ஞான பக்தி வழிமுறைகள் சாஸ்திரங்களில் உள்ளன என்றும், மற்றவர்கள், விலங்குகள் எல்லாவற்றிக்கும் வழிமுறைகளான சரணாகதி, திருநாம சங்கீர்த்தனம் போன்றவைகளும் உள்ளனவே என்றும் ஆழ்வாரிடம் கூறுகிறார். இந்த உபாயங்களை பின்பற்ற தனக்கு தகுதி தொடங்கி ஒன்றும் இல்லை என்றும் தம்மிடம் கர்ம, ஞான பக்தி யோகங்களில் எதுவும் இல்லை என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.

இதற்கு முன் பாசுரங்களில் தனக்கு பக்தி மற்றும் ஞானம் இருப்பதாக ஆழ்வார் சொன்னது, எம்பெருமானை இந்த உலகில் அவனை அனுபவிக்க அவன் அருளியவையே தவிர, அவை பரமபதம் சென்று அவனை அனுபவிக்கவல்ல சாதனம் அல்ல என்றும் கூறுகிறார்.

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை

குளித்து

ப்ராஹ்மணனாக பிறந்தவன் மூன்று விதமான குளியல் செய்யவேண்டும் என்றும் , மூன்று அக்னிகளை வளர்க்க வேண்டும், என்றும் வேதசாஸ்திரங்கள் சொல்லும் எதையும் பிறந்த நாளில் இருந்து தாம் செய்ததில்லை என்று ஆழ்வார் கூறுகிறார். மூன்று விதமான குளியல் என்பது, தினமும் மூன்று வேளைகளில் செய்யும் ஸ்னானம், கிரஹண காலங்களில் செய்யும் ஸ்னானம், மற்றும் பிராயச்சித்தம் செய்யும் முன் செய்ய வேண்டிய ஸ்னானம் ஆகும். இந்த மூன்று விதமான ஸ்னானங்களில் ஒன்றை செய்து மற்றதை செய்யாமல் இருக்க முடியாது. இவை அனைத்தும் பலவித கர்மங்களை செய்வதற்கான தகுதியை கொடுக்கும். (கர்மயோகத்திற்கான தகுதி). ஆழ்வார் சாஸ்திரங்கள் சொல்லும் கர்மங்களை பின்பற்றுவது ஒருபுறம் இருக்க அவைகளுக்கு உண்டான தகுதியை கொடுக்கும் குளிப்பது போன்ற செயல்களை பின்பற்றுவதே ஒரு அரியதான செயலாக உள்ளது என்கிறார். ஸ்னானம் போன்று உயரிய சொற்களை சொல்வதற்கும் தகுதி இல்லை என்பதை தெரிவிக்கவே ஸ்னானம் என்று சொல்லாமல் குளித்து என்று ஆழ்வார் சொல்கிறார்.

மூன்று அனலை ஓம்பும்

சாஸ்திரம் மூன்று அக்னிகளை ஆராதிக்க வேண்டும் என்று சொல்கின்றது. இங்கும் ஆழ்வார் அக்னி என்ற உயர்ந்த வார்த்தையை கூறாமல், அனல் என்ற சாதாரணமான வார்த்தையை கையாள்கிறார். இப்படி ஆழ்வார் அனல், குளித்து என்று சாதாரண நடைமுறை வார்தைகளை சொல்வது, அவர் தூய்மையான வார்த்தைகள்கூட அறிந்தவர் அல்லர் என்பதை எம்பெருமானுக்கு தெரிவிக்கவே ஆகும்.

ஒரு அனலை ஆராதிப்பதே அரிது ஏனெனில், போதும் என்ற நிலை எதற்கு கிடையாதோ அதற்கு அனல் என்று அர்த்தம். அதாவது எவ்வளவு ஆராதித்தாலும் போதாது, மேலும் மேலும் ஆராதிக்க வேண்டும் என்ற தன்மை உள்ள ஒரு அனலை ஆராதிப்பதே அரிது என்று ஆழ்வார் சொல்கிறார். அதுவும் மூன்று அனல்களை ஒரு அந்தணன் ஆராதிக்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுவது மிக கடினம் என்பது ஆழ்வார் வார்த்தைகளால் தெரிகிறது. குழந்தைக்கு சோறும் நீரும் கட்டிக்கொண்டு செல்லும் தாயை போல் அந்தணன் அனலை ஆராதிக்க உமியும் சமித்தும் (தீயில் இட குச்சிகள்) சுமந்து கொண்டு எப்பொழுதும் திரிய வேண்டி உள்ளது என்கிறார்.

குறிகொள் அந்தணமை

உச்சரிக்கும் மந்திரத்தின் பலன் கிடைக்க மிகவும் ஜாக்கிரதையாக செயல் படுத்தவேண்டியது அந்தண்மை என்ற ப்ராஹ்மண்யம். இதில்

  • மந்திரங்களை உச்சரிப்பதில் தவறு செய்வது,
  • மந்திரங்களை சொல்லும்போது செய்யும் செயல்களில் தவறு செய்வது,
  • பயன்படுத்தும் பொருள்களில் அளவு மற்றும் குணத்தில் உள்ள குறை,
  • செய்ய வேண்டிய காலத்தில் உண்டான மாற்றத்தினால் ஏற்படும் குறை,
  • ஆராதிக்கப்படும் தேவதையை மாற்றுவதால் உண்டான குறை

என்று ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் மந்திரத்தின் பலன் கிடைக்காமல் போகும். இது அஞ்சலி செய்தால் மன்னிப்பது போன்று எளிமையான ஒன்று அல்ல என்பதால் இதனை பின்பற்றுவதும் ஆழ்வாருக்கு சிரமம் என்று அவர் கூறுவது தெரியவரும்.

தன்னை ஒளித்திட்டேன்

அப்படிப்பட்ட ப்ராஹ்மண்யம் தன்னிடம் இல்லை என்பதை ஒளித்திட்டேன் என்று கூறும் ஆழ்வார், இவரால் அந்த சமூகத்தில் உள்ள மற்றவர்க்கும் அவப்பெயர் உண்டாகும்படி தான் இருப்பதாகவும் கூறுகிறார். இதனால் ஆழ்வார் பெரியபெருமாளுக்கு தெரிவிக்கும் விஷயம் , கர்மயோகத்திற்கு தகுதியான ப்ராஹ்மண்யமே தன்னிடம் இல்லை, அதனால் கர்மயோகம் என்பது தன்னிடம் ஏற்பட வழியே இல்லை என்பதே ஆகும்.

என்கண் இல்லை

கர்மயோகம் ஏற்பட வழி இல்லை என்றால், ஞான யோகத்திற்கு முயற்சி செய்யலாமே என்று பரமாத்மா / பெரியபெருமாள் ஆழ்வாரிடம் வினவிய போது, ஞான யோகத்திற்கு தகுதியான, தன்னை (ஜீவாத்மா / ஆத்மாவை) பற்றிய உண்மையான அறிவு தன்னிடம் இல்லை என்பதை என்கண் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார். தன்னிடம் ஞான யோகத்திற்கு தகுதி இல்லை என்பதால், தன்னிடம் ஞான யோகத்திற்கான வழியும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

கர்மயோகம் இல்லை என்ற போதே அதனால் ஏற்படக்கூடிய ஞான யோகம் கிடையாது என்று ஆகிவிட்ட பிறகும் ஆழ்வார் ஏன் மீண்டும் தனியாக ஞான யோகம் ‘என்கண் இல்லை‘ என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான விளக்கத்தை உரையாசிரியர் கூறுகிறார். சென்ற பிறவியில் கர்மயோகம் செய்து அதனால் ஏற்படக்கூடிய ஞானயோகம் பிறப்பதற்கு முன்னால் மரணம் ஏற்பட்டு அதனால் அடுத்த பிறவியின் ஆரம்பத்திலேயே ஞானயோகம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற ஒரு சாத்திய கூற்றினையையும் ஆழ்வார் மறுக்கிறார்.

நின் கணும் பத்தன் அல்லேன்

கர்மயோகம், மற்றும் ஞானயோகம் இவற்றிற்கு தகுதி இல்லை என்றால் பக்தியோகம் செய்வது தானே என்று பெரியபெருமாள் கேட்டபோது அதற்கு தகுதியான பரமாத்மாவின் மேல் அன்பு தனக்கு சிறிது கூட இல்லை என்பதை நின் கணும் பக்தன் இல்லை என்று சொல்லி பக்தியோகத்திற்கும் வழி இல்லை என்று கூறுகிறார்.

முன்பு போல், கர்மயோகம் மற்றும் ஞான யோகம் இவை இரண்டும் இல்லை என்றால் அவற்றினால் ஏற்படும் பக்தியோகம் இல்லை என்று தனியாக சொல்ல வேண்டுமோ எனில், பற்பல பிறவிகளில் கர்ம, ஞான யோகங்களை செய்தவர்களுக்கு, பக்தியோக ஆரம்ப விரோதிகளான பாவங்கள் நீங்கப்பட்டு கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆவார்கள் என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன என்பதை முன்பு பார்த்தோம். ஆழ்வார் அதுவும் தனக்கு இல்லை என்கிறார்.

இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லனவாகையால், ஆழ்வார் இந்த மூன்றுக்கும் தேவையான தகுதிகளே தன்னிடம் இல்லை என்பதை தனி தனியாக கூறி உள்ளார்.

மற்றவர்கள் கர்ம, ஞான பக்தி யோகங்கள் பற்றி

“குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன் ” என்ற இந்த முதல் இரண்டு வரிகளால் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான பக்தி மார்க்கங்களில் ஒரு சிறிது தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். இனி மற்ற ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சுவாமி நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் ” (திருவாய்மொழி 5.7.1) என்பது கர்மயோகமும், ஞான யோகமும் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக தெரிகிறது. “கறவைகள் பின்சென்று” என்ற திருப்பாவை (28) பாசுரத்தில்ஆண்டாள் “அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்” என்று சொல்வதை, ‘அறிவு இல்லாத”, “அறிவு ஒன்று இல்லாத ” மற்றும் “அறிவு ஒன்றும் இல்லாத” என்ற பிரித்து கர்ம,ஞான மற்றும் பக்தி மார்க்கங்கள் ஒன்றும் தனக்கு இல்லை என்பதை சுருக்கமாக சொல்லி உள்ளார்.

ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் தன்னுடைய ஸ்தோத்திர ரத்தினம் என்ற நூலில் (22) ஸ்லோகத்தில் ‘ந தர்ம நிஷ்டோஸ்மி, நசாத்மவேதி, ந பக்திமான்” என்று சொல்வதின் மூலம் ‘கர்மயோகத்தில் நிலை நின்றவன் இல்லேன், ஆத்ம ஞானமும் உடையவன் இல்லேன், உன்னுடைய திருவடித்தாமரைகளில் சிறிதும் பக்தி உடையவன் இல்லேன்’ என்று சொல்லி, ஒரு சாதனமும் இல்லை, உன்னுடைய திருவடித் தாமரைகளே சாதனம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவே தன்னிடம் கைமுதல் ஒன்றும் இல்லை அல்லது ஆகிஞ்சன்யம் என்ற வைஷ்ணவ தத்துவத்தை விளக்குகிறார்.

களிப்பது என் கொண்டு

சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதற்கு பெரியபெருமாள், அறிவாளிகள் செய்வதுபோல், ஒரு சாதனமும் இல்லை என்ற வெறுமையை, ஆகிஞ்சன்யத்தை, சொல்வதும் மிகவும் அரிது, அப்படி ஆழ்வார் சொன்னபடியால், தம்மை அடைவதில் ஒன்றும் குறை இல்லையே என்று சொன்னார். அதற்கு ஆழ்வார், தன்னிடம் கர்ம, ஞான பக்தி யோகங்கள், இல்லையே என்ற வருத்தமும் இல்லை, கீதையில் (18.66) ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனையே பற்றும்படி சொன்னதற்கும் தன்னிடம் உள்ள ஆகிஞ்சன்யமும் ஒரு அனுதாபமும் இல்லாத ஒன்றாக இருப்பதால், தான் எதை கொண்டு ஆனந்தப்படுவது என்று கலங்குகிறார்.

நம்பீ

அப்படியானால் ஆழ்வாரை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பெரியபெருமாள் உரைத்தபோது, ஆழ்வார், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும், அவனிடம் எல்லா கல்யாண குணங்களும் இருக்கின்றன என்றும் அவற்றைக்கொண்டு தனக்கு பேற்றை அருளலாமே என்று ஆழ்வார் வேண்டுகிறார். அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்தில் என்று சொன்ன பிறகு, குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று ஆண்டாள் திருப்பாவை (28) பாசுரத்தில் சொன்னாற்போல், எம்பெருமானின் குண பூர்த்தியை, நம்பீ என்று தன்னுடைய வெறுமையை சொன்னபின் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.

கடல்வண்ணா

அவனுடைய உயர்ந்த, சீலம் போன்ற குணநலன்கள் தேவையில்லை என்றும் அவனுடைய வடிவழகே தனக்கு பரமபதம் அளிக்க போதும் என்பதை கடல்வண்ணா என்பதால் ஆழ்வார் தெரிவிக்கின்றார். கம்பராமாயணம் யுத்த காண்டம், (6718) பாடலில், “கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி ” என்று சொல்லி, ஒரு கடலோடு மற்றொரு கடல் போட்டி போட்டு சாய்ந்தாற்போல் பெரியபெருமாள் சயனித்து இருப்பது என்கிறார். ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன், (15), என்றும் ஆதரம் பெருக வைத்த அழகன் (16) என்றும் பாடிய ஆழ்வார் தனக்கு சரணாகதி அளிக்கும் பெரியபெருமாளுக்கு வடிவழகும் குணங்களும் குறைவின்றி இருப்பதால் தான் இழக்க வேண்டியது இல்லை என்பதை சொல்வதாக பொருள்.

கதறுகின்றேன்

ஆழ்வார் இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்

  • தன்னிடம் கர்ம ஞான பக்தி மார்கங்களுக்கு தேவையான தகுதிகள் இல்லாது இருப்பதும்,
  • பெரியபெருமாளுக்கு குணங்களும், வடிவழகும் நிறைந்து இருப்பது தெரிந்தும்,
  • கர்ம ஞான பக்தி யோகங்களில் நின்றவர்கள் தங்களுக்கு பலன் கிடைக்காத போது கதறுகின்ற மாதிரி கேட்பவர்கள் காதுகளுக்கு கர்ணகொடூரமாக சப்தம் செய்வதாகவும்,
  • சிறிய பக்தி செய்பவர்களுக்குக்கூட கருணை காட்டும் எம்பெருமான் ஆழ்வாருக்கு கருணை காட்ட வில்லையே என்று பெரியபெருமாளுக்கு அவப்பெயர் அல்லது தாழ்வு வருமாறு செய்து விட்டதாகவும்,
  • தான் எம்பெருமானுக்கு பல்லாண்டு மட்டுமே பாடி இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

அளித்து எனக்கு அருள் செய் கண்டாய்

ஆழ்வார் பெரியபெருமாளிடம், தனக்கு அவரிடம் அனுதாபம் முதல் எல்லாம் பிறக்க அருள் செய்யவேண்டும் என்பதை ‘அளித்து‘ என்பதால் தெரிவிக்கின்றார். அதற்கான கருணை அவனிடம் இருப்பதால் அவன் அருள் பொழிய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

அரங்க மா நகருளானே

தான் ஏன் ஆழ்வாருக்கு, தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று பெரியபெருமாள் கேட்டதற்கு, குறையற்றவர்களை மட்டும் அருள்வது என்று இருந்தால் அவன் பரமபதத்தில், முக்தர்களையும் நித்யர்களையும் அருள் செய்து கொண்டு அங்கேயே இருந்து இருக்கலாம், திருவரங்கத்திற்கு வந்து சயனித்து இருக்கும் கிடையழகையும், சீல குணங்களையும் காட்டுவது, தன்போன்றவர்களுக்கு அருள் பாலிக்கவே என்று சொல்லி, ஆழ்வார் இந்த பாசுரத்தை நிறைவு செய்கிறார்.

மீண்டும் அடுத்த பாசுரத்தில் பார்க்கலாம், நன்றி.

022 திருவெள்ளியங்குடி / Thiruvelliyankudi

மரகதவல்லித்தாயார் ஸமேத கோலவில்லி ராமர் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவெள்ளியங்குடி, பார்கவபுரி, சுக்ராபுரி
மூலவர்கோலவல்வில்லி இராமன்
உத்ஸவர் சிருங்கார சுந்தரன்
தாயார் மரகதவல்லி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 0435 – 2450118 : +91 94433 96212

கோவில் பற்றி

நான்கு யுகங்களிலும் இந்த ஸ்தலம் வழிபடப்பட்டுள்ளது. க்ருத யுகத்தில் பிரம்மபுத்திரம் என்றும், த்ரேதா யுகத்தில் பாராசரம் என்றும், துவாபர யுகத்தில் சைந்திய நகர் என்றும் கலியுகத்தில் பார்கவ க்ஷேத்திரம் என்றும் வழிபட்டு வருகிறது.

சுக்ரனுக்கு பார்வை வழங்கியதால், இந்த திவ்யதேச எம்பெருமானை சேவித்தால், 108 திவ்யதேச எம்பெருமான்களையும் சேவித்தத பலன் கிடைக்கும் என்று சொல்வர்.

வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாதவகையில் இங்கு கருடன் (பெரியதிருவடி) நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இதேபோல் அனுமன் (திருவடி), நான்கு கரங்களுடன் காட்சி தரும் ஸ்தலம், திருக்கடிகை அல்லது கடிகாசலம் என்னும், சோளிங்கர் ஆகும்.

இங்கு கோவிலில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்துவரும் காட்சியை காணலாம். இங்கு வாழையே ஸ்தலவிருட்சமாகும்.

சுக்ர பரிகார ஸ்தலம்.

இந்த கோவில் ஸம்ப்ரோக்ஷணம் ஸ்ரீரங்கம் பெரியாஸ்ரமம் ஆண்டவனால் நடத்தப்பட்டது. அருகில் உள்ள சேங்கனூர், பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம். இவர் நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு வியாஞ்ஞானம் அருளி செய்தவர்.

ஸ்தலபுராணம்

வாமன அவதாரத்தின் போது, மாவலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, அதை கொடுக்க ஒப்புக்கொண்ட சக்ரவர்த்தி, நீர் கொண்டு தாரை வார்க்க தயாரானபோது,
அம்மன்னனுக்கு அசுர குல குருவான சுக்கிரபகவான், உண்மை நிலைபுரியாது மன்னன் இவ்வாறு செய்கிறானே என்றெண்ணி தாரை வார்க்கும் குடத்தின் துவாரத்தை ஒரு பூச்சியாக உருவெடுத்து அடைக்க, அதை அறிந்த வாமனன் ஒரு சிறு தர்ப்பை புல்லால்
துவாரத்தில் குத்த, சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தான். பிறகு சுக்கிரன் இந்த ஸ்தலத்தில் இருந்து தவம் செய்து இழந்த தன்னுடைய கண்ணைப் பெற்றான்.

தேவர்களுக்கு சிற்பி விஸ்வகர்மா. அவன் எம்பெருமானுக்கு பல திவ்ய தேச கோவில்களை கட்டினான். அசுரர்களுக்குச்சிற்பி மயன். அவன் பெருமாளுக்கு தான் எந்த திவ்யதேச கோவிலையும் கட்டவில்லையே என்று வருத்தப்பட்டு தவம் செய்தபோது, சங்கு, சக்ரதாரியாக, நான்கு திருக்கரங்களுடன் மஹாவிஷ்ணு காட்சியளித்தார். தான் இரண்டு திருக்கரங்களுடன், இராமாவதாரத் திருக்கோலத்தையே தரிசிக்க விரும்புவதாக மயன் கூற, தம் கரத்தில் இருந்த சங்கு, சக்கரங்களைக் கருடனுக்கு கொடுத்துவிட்டு வில், அம்புகளுடன், அலங்காரக் கோலத்துடன் கோலவில் ராமனாக காட்சியளித்தார். எனவேதான் இப்பெருமானுக்கு கோலவில்லி ராமன் என்னும் பெயர் உண்டானது. ஆகவே இங்கு கருடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

ஆழ்வார்கள்

சுக்கிரனுக்கு எம்பெருமான் அருளியதை “வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்” (பெரிய திருமொழி 4.10.7) என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார். தனக்கு கோல வில்லி இராமனாக காட்சியருள வேண்டுமென்று திருமங்கையாழ்வார் வேண்ட அவ்விதமே காட்சியளித்தார்.  

எம்பெருமானுக்கு உதவும் எல்லா ஆயுதங்களும், அவன் கையில் உள்ள சுதர்சன் என்னும் சக்கரமே ஆகும். வாமன அவதாரத்தில் உதவிய சிறு தர்ப்பை கூட, சக்ரத்தாழ்வானே ஆவான். இதையே பெரியாழ்வார், ” சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ அச்சோ“(பெரியாழ்வார் திருமொழி 1.9.7) என்று சொல்கிறார். ‘துரும்பாற் கிளறிய சக்கரம்’ என்றதனால் “கருதுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன்” என்கிறபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லும் தன்மையை உடைய திருச்சக்கரமே தர்ப்பையாக இருந்து சுக்ரன் கண்ணைக் கலக்கினான் என்று புலப்படும்.

Google Map

திருவெள்ளியங்குடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவெள்ளியங்குடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

021 திருநந்திபுர விண்ணகரம் thirunandhipura vinnagaram

செண்பகவல்லித்தாயார் ஸமேத ஜகந்நாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருநந்திபுர விண்ணகரம் / நாதன் கோவில் / தக்ஷிண ஜெகந்நாதம்
மூலவர்ஜகந்நாதன், நாத நாதன் , விண்ணகரப்பெருமாள், நந்தி நாதன் , போக ஸ்ரீனிவாசன்
உத்ஸவர் ஜகந்நாதன்
தாயார் செண்பகவல்லித் தாயார்
திருக்கோலம்வீற்றிந்த திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 435 2417575 / +91 98430 95904 / +91 94437 71400

கோவில் பற்றி

இந்த கோவில், வானமாமலை மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

எம்பெருமான் ஜகந்நாதன் ஆனபடியால், அவர் பெயரில் உள்ள நாதனுடன் கோவில் சேர்ந்து நாதன் கோவில் ஆயிற்று.

இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

அதிகார நந்தி, சந்நிதியின் இடதுபுறம் உள்ளது.

ஸ்தல புராணம்

திருமகள், திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று செண்பகாரண்ய க்ஷேத்திராமான இந்த ஸ்தலத்தில், கிழக்கு நோக்கி திருமாலை நினைத்து தவம் செய்ய, எம்பெருமான் மேற்கு நோக்கி தாயாருக்கு காட்சி கொடுத்து திருமகளின் பிரார்த்தனையை நிறைவேற்றினார். செண்பகாரண்ய க்ஷேத்திராமானதால், தாயார் செண்பகவல்லி ஆனார்.  திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில் ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீனிவாசன் என்பது பெயர்.

அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா விஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு வந்தபோது காவலில் நின்ற துவார பாலகர்களை கேளாது உள்ளே புக முயன்றபோது, துவார பாலகர்கள் தடுத்து, தங்கள் அனுமதி பெறாமல் செல்ல முயற்சித்ததால், காரணம் காணா அளவுக்கு அவர் உடம்பில் உஷ்ணம் எரிந்துகொண்டிருக்கக்கடவது என்று சபித்துத் திருப்பி அனுப்பினர். நந்தி, சிவபெருமானை உதவி கேட்க, அவர் இவ்வியாதியைப் போக்க நந்தியை செண்பகாரண்ய க்ஷேத்திரத்தில் கடும் தவம் இருக்க சொன்னார். எனவே அங்கு சென்று நந்தி, திருமாலைக் குறித்து தவமிருந்து சாபத்தைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு.

நந்திபுர விண்ணகரம் துவாபர யுகத்திலேயே நாதன் கோவில் என்றே அழைக்கப்பட்டது, பின்னர், நந்தியின் இந்த தவத்திற்கு பிறகு, நந்திக்கு அருள் புரிந்ததால் நந்திபுர விண்ணகர் என்று ஆயிற்று.

சிபி சக்ரவர்த்தி புறாவின் உயிரைக் காப்பற்ற தராசின் ஒரு பக்கத்தில் தான் அமர்ந்து புறாவின் எடைக்கு எடை சமமாக மாற்றி அவன் உயிர் தியாகம் செய்ய இருந்ததை காண்பதற்காக எம்பெருமான், கிழக்கில் இருந்து திரும்பி, மேற்கு நோக்கி உள்ளான் என்றும் சொல்கிறார்கள்.

ஆழ்வார்

நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்” என்பதே திருமங்கையாழ்வாரின் பாடலிலும் பயின்று வந்துள்ளது. நந்தி பணி செய்த நகர் என்று திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். ” வாளும் வில்லும் வளையாழி கதை சங்கமிவை யங்கை யுடையான்” என்று ஐந்து ஆயுதங்களையும் ஏந்தி உள்ள எம்பெருமான் என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.  

நம்மாழ்வார், “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும், திகழ்கின்ற திருமாலார்” (திருவாய்மொழி, 10.6.9 ) என்ற பாடல் திருவட்டாறு என்ற திவ்யதேசத்திற்கு மட்டுமே. இந்த திவ்யதேசத்திற்கு கிடையாது. இருந்தாலும், இந்த பாசுரத்தை இங்கே நினைவில் கொள்ளலாம், ஏன் என்றால், திருமகள், திருமாலின், திருமார்பில் நிரந்தரமாக இருக்க வேண்டி தவம் செய்த திருத்தலம் ஆயிற்றே. திருமாலுக்கும், அவரின் திருமார்பிற்கும், பெரிய பிராட்டியாருக்கும் உள்ள சிறப்புகளை சேர்த்து, அவை, ஒன்றோடு ஒன்று சேர்வதால் மேலும் மேலும் அழகு கூட்டிக்கொள்வதை நினைத்து ரசிக்கலாம்.

Google Map

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருநந்திபுர விண்ணகரம் பற்றி

தினம் ஒரு திவ்யதேசம், திருநந்திபுர விண்ணகரம் பற்றி

020 திருத்தஞ்சை மாமணிக்கோவில் Thanjai Maa Manikovil

செங்கமலவல்லித்தாயார் ஸமேத நீலமேகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி அம்புஜ வல்லித்தாயார் ஸமேத மணிக்குன்ற பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

தஞ்சைநாயகி தாயார் ஸமேத வீரநரசிம்மஸ்வாமி திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருத்தஞ்சை மா மணிக்கோவில் மணிக்குன்றம் தஞ்சையாளி
மூலவர்நீலமேக பெருமாள் மணிக்குன்ற பெருமாள் வீர நரசிம்மன்
உத்ஸவர்நாராயணர்
தாயார்செங்கமலவல்லி அம்புஜவல்லி தஞ்சை நாயகி
திருக்கோலம்வீற்றிருந்த வீற்றிருந்த வீற்றிருந்த
திசைகிழக்கு கிழக்கு கிழக்கு
பாசுரங்கள்5
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 3
பூதத்தாழ்வார் 1
நம்மாழ்வார் 1
தொலைபேசி+91 4362 223 384

கோவில் பற்றி

இது மூன்று கோவில்கள் சேர்ந்த ஒரு (1) திவ்யதேசம். பராசர க்ஷேத்திரம், வம்புலாஞ் சோலை, கருடாபுரி, தஞ்சையாளி நகர் என்று பலபெயர்கள் உண்டு.

இந்த மூன்று எம்பெருமான்களும், முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதி அருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சை அருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளத்து அருகில் உள்ள சிங்கப் பெருமாள் குளத்திற்கு அருகேயும் இருந்தனர். தற்போதைய கோவில்கள், பிற்காலத்து நாயக்க மன்னர்களால் இப்படி வெண்ணாற்றங்கரையில் அமைக்கப்பட்டன.

இந்த திருத்தலத்தில் ஐந்து நரசிம்மர்கள் காட்சி அளிக்கிறார்கள்.

  • நரசிம்மர் கோவிலில், வீர நரசிம்மர்
  • நரசிம்மர் கோவிலில், முன்மண்டபத்தில் யோக நரசிம்மர்
  • நீலமேக பெருமாள் கோவில் பிரகாரத்தில், லட்சுமி நரசிம்மர்
  • நீலமேக பெருமாள் கோவில் கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர்
  • நீலமேக பெருமாள் கோவில் தாயார் சந்நிதி தூணில், கம்பத்தடி யோக நரசிம்மர்

இதே போல் பஞ்ச நரசிம்மர், திருவாலி திருநகரியிலும் (திவ்யதேசம் 34) உள்ளது.

இந்நகரில் கருடனின் சக்தி இருப்பதாகவும், கருடன் பறந்து இந்நகரத்தை காப்பதாகவும் ஐதீகம். எனவே கருடன் பறப்பதால் இந்நகரில் பாம்பு கடிக்காது என்று சொல்வர்.

தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால், தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி என்றும் போற்றப்படுகின்றன.

பங்குனி, சித்திரை, வைகாசி என்று தொடர்ந்து மூன்று கோவில்களுக்கும் மூன்று மாதங்களில் மூன்று ப்ரஹ்மோத்ஸவம் நடைபெறுகிறது. வைகாசியில் 18 கருட சேவை விசேஷம்.

ஸ்தல புராணம்

கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய, சிவன் அவர்கள் முன் தோன்றி தன்னால் அவர்கள் மூவருக்கும் மரணமில்லை என்று அருளினார்.  இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று முனிவர்களின் தவத்தை சிதைத்து கொடுமைகள் புரிந்து வந்தனர். அப்போது பராசரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார். அவரைத் துன்புறுத்தி அழிக்க, அவர் ஹரி, ஹரி என்று விஷ்ணுவை அழைக்க, எம்பெருமான் தானே நேரில் வந்து தஞ்சகனை சக்ராயுதத்தால் தலையைச் சீவினார். தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன் பெயரிலேயே இந்நகரம் திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். எனவே தஞ்சகனூர் என்று மாறி, பிறகு தஞ்சாவூராயிற்று.

இதன் பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல, அவன் இறக்கும் தருவாயில் தனக்கு மோக்ஷம் வேண்டும் என்று கேட்க அவனுக்கு திருநாடருளினார். இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால் தஞ்சையாளி என்றே பெயராயிற்று.

இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட தண்டகன் மிக்க சினத்துடன் திருமாலுடன் சண்டையிட்டு பின் பாதாளத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டான். திருமால் உடனே வராக உருவம் கொண்டு இந்த ஸ்தலத்தில், பூமியை பிளந்து, பூமிக்குள் சென்று, அவனைப் பின் தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில வெளியே வந்து, அவனது தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடம் தன் பெயரால் வழங்கப்பட வேண்டும் என்று வேண்ட, அந்த காடு “தண்டகாரண்யம்” என்று ஆயிற்று. அதன் நடுவே ஸ்ரீமுஷ்ணம் என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தில் இருந்து வெளியே வந்த எம்பெருமான் ஸ்ரீபூவராகப் பெருமாளாக காட்சி தந்தார்.

ஆழ்வார்கள்

வெட்டுங்கலியன் வேல் வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறித்த மணங்கொல்லை” என்று திருமங்கை ஆழ்வார் பகவானிடம் திருமந்திரத்தை பெற்றுக் கொண்ட திருமணங்கொல்லை என்ற ஸ்தலமும் இந்த திவ்யதேசமும் ஒரே வெண்ணாற்றங்கரையில் தான் அமைந்துள்ளன. இது இந்த நதியின் ஒரு கோடியிலும் அது மற்றொரு கோடியிலும் உள்ளது. இங்கு விண்ணாறு எனப்படுகிறது. அங்கு வெண்ணாறு எனப்படுகிறது.

108 திவ்யதேசங்களில், 84 திவ்யதேசங்களை பாடிய திருமங்கையாழ்வார், ஆயிரத்து எண்பத்து நான்கு (1084) பாசுரங்கள் கொண்ட பெரிய திருமொழியில், ஆறாவது பாடலாக தஞ்சை மாமணி கோவிலை இரண்டாவது திவ்யதேசமாக பாடி உள்ளார். ஆழ்வார் பாடிய முதல் திவ்யதேசம் திருக்குடந்தை ஆகும்.

Google Map

திருத்தஞ்சை மாமணிக்கோவில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம், திருத்தஞ்சை மாமணிக் கோவில் பற்றி

019 திருநாகை / Thiru Nagai

சௌந்தர்யவல்லித் தாயார் ஸமேத சௌந்தர்யராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருநாகை / நாகப்பட்டினம்
மூலவர்நீலமேக பெருமாள் (கதையுடன் காட்சி அளிக்கிறார்)
உத்ஸவர்சௌந்தர்யராஜன்
தாயார்சௌந்தர்யவல்லி / கஜலக்ஷ்மி (உத்ஸவ தாயார்)
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 94422 13741; +91 4365 221 374

கோவில் பற்றி

நான்கு யுகம் கண்ட எம்பெருமான். இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது. ஒவ்வொரு யுகத்திலுமும் ஒவ்வொருவருக்கு காட்சி அளித்து உள்ளார். கிரேதாயுகத்தில் இங்குள்ள ஸார புஷ்கரணிக்கு அருகில் ஆதிசேஷனுக்கு காட்சி அருளிய ஸ்தலம்.   திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபர யுகத்தில் மார்க்கண்டேயனும் பகவானைக் குறித்து தவமிருந்து அருள் பெற்ற ஸ்தலம்.  இக்கலியுகத்திலேயே பக்தியில் சிறந்த சாலிசுகன் என்னும் சோழன் இப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றான்.

நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இங்குண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர்.

தசாவதாரதத்தை விளக்கும் செப்பு தகடுகளால் ஆன மாலையை இந்த திருத்தல எம்பெருமான் இடையை அலங்கரிப்பதை சேவிப்பது பெரும் புண்ணியம் / பாக்கியம்.

பெண் கருடன் கேள்விப்பட்டதுண்டா ? கருடனின் மனைவி, கருடி எனப்பெயர். நாகை அழகியார் கோவில் தாயாருக்கு பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு
இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு.
பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு) ! நாகை அழகியார் கோவிலில் பெருமாள் கருட வாஹனத்திலும் தாயார் கருடி வாஹனத்திலும்
ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும் !

மேலே குறிப்பிட்ட இந்த தகவலையும் புகைப்படத்தையும் அளித்த whatsapp நண்பருக்கு நன்றி.

இந்த திவ்யதேசத்தில் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, எட்டு திருக்கரங்களுடன், பக்த பிரஹலாதனுக்கு ஓரு திருக்கரம் ஆசி வழங்குவதும், ஒரு திருக்கரம் அபயஹஸ்தமாகவும், மற்ற திருக்கரங்களால் ஹிரண்யனை வதம் செய்வது போலவும் இருப்பது சிறப்பாகும்.

அஹோபிலம்

இதேபோல், அஹோபிலம் திவ்ய தேசத்தில், ஜ்வால நரசிம்ம ஸ்வாமி, எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பதை நினைவில் கொள்ளலாம். அஹோபிலத்தில், இரண்டு திருக்கரங்கள் ஹிரண்யனை பிடித்து கொள்ள, இரண்டு திருக்கரங்கள் அவனின் குடலை கிழிக்க, இரண்டு திருக்கரங்கள் குடலை தனக்கு மாலையாக சார்த்திக் கொள்ளும்படியும். இரண்டு திருக்கரங்கள் சங்கு, சக்கரம் கொண்டும் அமைந்துள்ளன.

ஸ்தல புராணம்

இங்கு ஆதிசேஷன் (நாகம்) சார புஷ்கரணி என்ற ஒரு புஷ்கரணியை உருவாக்கி அதன் கரையில் இருந்து எம்பெருமானை குறித்து தவம் செய்து ஆராதனம் செய்தார். அதனால் இந்த ஸ்தலம் நாகன்பட்டினம் என்று தொடங்கி, நாகப்பட்டினம் என்று ஆயிற்று. அந்த புஷ்கரணியில் ஸ்னானம் செய்து எம்பெருமானை வழிபட்டால் வைகுந்தம் அடையலாம் என்று ஐதீகம்.

துருவன் நாரதர் மூலம், இந்த எம்பெருமானின் பெருமைகளை அறிந்து கடும் தவம் புரிந்தான். எம்பெருமான் கருடவாகனத்தில் வந்து தன்னுடைய பேரழகை அந்த சிறுவனுக்கு காட்டினார். அந்த அழகினில் ஆச்சரியப்பட்டு அந்த அழகினை எப்பொழுதும் தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்ட, எம்பெருமானும் அதனை இந்த திவ்யதேசத்தில் நிறைவேற்றினான்.

Google Map

திருநாகை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருநாகை பற்றி சொல்வது

Thanks to friends in whatsapp group

ஆழ்வார்

அழகு இரண்டு வகை என்று சொல்வார்கள்; ஒன்று லாவண்யம், மற்றொன்று சௌந்தர்யம். லாவண்யம் என்பது மொத்த அழகு, சமுதாய சோபை என்று அழைக்கப்படும். சௌந்தர்யம் என்பது பகுதி பகுதியாக ஒவ்வொன்றும் அழகாக இருக்கும் அவயவ சோபை என்பதாகும். 108 திவ்யதேசங்களில், லாவண்யத்திற்கு என்று திருக்குறுங்குடி என்ற திவ்யதேச எம்பெருமான் என்றும், சௌந்தர்யத்திற்கு என்று இந்த திவ்யதேசமான திருநாகையைச் சொல்வார்கள் திருநாகை எம்பெருமானை, நாகை அழகியார் என்றே அழைப்பார்கள்.

திருமங்கையாழ்வார் இந்த திருத்தலத்திற்கு 10 பாசுரங்கள் பாடி உள்ளார். முதல் 9 பாசுரங்களில் எம்பெருமானின் அழகில் மயங்கி, ‘அச்சோ, ஒருவன் அழகியவா‘ என்று பாடியவர் பத்தாவது பாடலில் தான் எம்பெருமானின் பெயரை “நாகை அழகியாரை ” என்று குறிப்பிட்டு உள்ளார்.

018 திருக்கண்ணங்குடி Thirukannankudi

லோகநாயகி தாயார் ஸமேத லோகநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கண்ணங்குடி கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், பஞ்ச பத்ரா
மூலவர்லோகநாத பெருமாள் , ஷ்யாமளமேனி பெருமாள், சாம மாமேனிப் பெருமாள். நீலமேகவண்ணன்
உத்ஸவர்தாமோதர நாராயணன்
தாயார்லோகநாயகி – அரவிந்தவல்லி (உற்சவர்)
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 04365 – 245350

கோவில் பற்றி

பரத்துவத்தின் மேன்மையின் மேல் எல்லைக்கும், மிக எளிமையான எளிமையின் கீழ் எல்லைக்கும் பொருந்தும் திருநாமங்களை கொண்ட எம்பெருமான் ஆவார். நாராயணன் என்பது பெருமைகளின் உச்ச ஸ்தானம். தாமோதரன் என்பது இடைச்சி கையால் இடுப்பில் கட்டுப்பட்டு இருந்த எளிமையின் திவ்யதரிசனம். இந்த இரண்டு திருநாமங்களும் சேர்ந்து தாமோதர நாராயணன் என்ற திருநாமத்துடன் இங்குள்ள உற்சவ பெருமாள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு ஸ்ரீதேவி பூதேவிகளுடன் கண்ணனாக காட்சி அளிக்கிறார்.

இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் என்ற ஐந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா என்றாயிற்று.

தாயார் சந்நிதியில் மூலவரும் உத்ஸவரும் ஒரே முக ஜாடையில் உள்ளது ஒரு அதிசயம்.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. (திருக்கண்ணபுரம்,  திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).

இந்த திவ்யதேசத்தில், கருடன், மற்ற இடங்களைப்போல் கை கூப்பிக்கொண்டு நில்லாமல், கைகட்டிக்கொண்டு வைகுந்ததில் இருப்பது போல் நிற்பது ஒரு சிறப்பு.

முன்பு இந்த ஊரில் முக்கிய அடையாளங்களாக இருந்த ஊராக் கிணறும், உறங்காப்புளியும், இப்பொழுது இல்லை. காயா மகிழ் (காய்ந்து போன, ஆனால் பட்டு போகாத மகிழ மரம் சன்னதியின் பின்புறம் உள்ளது.)

இங்குள்ள புஷ்கரிணீயின் பெயர்,  சிரவண புஷ்கரிணி, அதாவது, இதன் பெயரை எங்கிருந்து கேட்டாலும் உடனே சகல பாபங்களையும் போக்கவல்லதால் இப்பெயர் பெற்றது. 

இந்த திவ்யதேசத்தை சுற்றி ஐந்து நாராயணர்கள் இருக்கிறார்கள். அவர்கள், ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன், பெரிய ஆலத்தூர் என்ற பதியில் வரத நாராயணன், தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன் மற்றும், கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன் ஆவர். இதனால், இவற்றை, பஞ்ச நாராயண ஸ்தலம் என்றும் கூறுவார்கள். இவை எல்லாம் சுமார் 6 கிலோமீட்டருக்குள் இருக்கும்.

இதேபோல், இன்னொரு பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களையும் பற்றியும் சிறிது அனுபவிக்கலாம். (நன்றி, Travelogue by Sri Kazhiyur Varadan in anudinam.org)

ஸ்வாமி ராமானுஜர் மேல்கோட் என்ற திவ்யதேசத்தில் வாழ்ந்த காலத்தில், அவர் தன் அருளால் விஷ்ணுவர்தன் என்ற அரசனின் மகளினை காப்பாற்றியதால், அரசன் வைணவத்திற்கு மாறியதுடன், ஐந்து நாராயண கோவில்களை இராமானுஜரின் சீடரான முதலியாண்டான் என்ற ஆச்சாரியாரின் மேற்பார்வையில் ஒரே நேரத்தில் கட்டி வைணவத்தை அந்த பகுதியில் வளர்க்க உதவினான். அவை,

  • ஸ்ரீ கீர்த்தி நாராயண க்ஷேத்திரம், தலைக்காடு
  • ஸ்ரீ நம்பி நாராயண க்ஷேத்திரம், தொண்டனுர்
  • ஸ்ரீ திருநாராயண க்ஷேத்திரம், மேல்கோட்
  • ஸ்ரீ கேசவநாராயண பெருமாள் க்ஷேத்திரம், பேலூர்
  • ஸ்ரீ சௌமியநாராயண க்ஷேத்திரம், நாகமங்களா
  • ஸ்ரீ வீரநாராயண க்ஷேத்திரம், கடக் ( ஹூப்ளியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர்)

சிலர், ஸ்ரீ திருநாராயண க்ஷேத்திரம், மேல்கோட் இந்த பஞ்ச நாராயண க்ஷேத்திரத்தில் சேர்த்து கொள்வது இல்லை, என் எனில், இது மற்ற க்ஷேத்திரங்களை போல் முதலியாண்டான் மேற்பார்வையில் கட்டப்பட்டது இல்லை.

ஸ்தல வரலாறு

வசிட்டருக்கு கண்ணன் மேல் மிகுந்த பக்தி. அவர் வெண்ணெயை உருண்டை பிடித்து அதனை கண்ணனாக பாவித்து பூஜை செய்வார். ஒரு நாள், கண்ணன் சிறு குழந்தையாக அங்கே வந்து, அந்த வெண்ணையை எடுத்து, உண்டு, ஓடினான். வசிட்டர் துரத்தி வர, இங்கே விஷ்ணுவை நோக்கி கடுமையாக தவம் செய்து வந்த முனிவர்களால், அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் பக்தியினால் கண்ணன் கட்டுப்பட்டு நின்றான். வசிட்டர் வந்து கண்ணனை வணங்கினார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று.

ஆழ்வார்

காயா மகிழ், தோலா வழக்கு, உறங்காப்புளி, ஊராக் கிணறு திருக்கண்ணங்குடி என்று ஒரு பழமொழி உண்டு. இது திருமங்கை ஆழ்வார் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். திருவரங்கத்தில் மதில் கட்டுவதற்கு, நாகைப்பட்டினத்தில் இருந்து ஓரு தங்க புத்த விக்கிரஹத்தை எடுத்து வந்து, அதை இங்கு ஒரு நிலத்தில் இரவில் புதைத்து வைத்தார். ஆழ்வார் உறங்குவதற்கு முன், அங்கிருந்த ஒரு புளிய மரத்திடம், இந்த விக்கிரகத்தை உறங்காமல் பார்த்துக்கொள்ள சொல்ல, அதுவும் அப்படியே செய்ததால், ஆழ்வார் அதனை உறங்காப்புளி என்று வாழ்த்தினார்.

காலையில் நிலத்தை அதன் சொந்தக்காரன் உழ ஆரம்பிக்க, ஆழ்வார் அதனை தடுத்து அது தன்னுடைய நிலம் என்று வாதிட ஆரம்பித்தார். இந்த ஊர் மக்களிடம் வாதிட்டு, ஆழ்வார் தன்னுடைய பத்திரத்தை திருவரங்கத்தில் இருந்து எடுத்து வர, ஒரு நாள் அவகாசம் வாங்கினார். நிலச்சொந்தக்காரன் வெற்றி பெறமுடியாமல் இதனை ஒரு தீரா வழக்காகப் பார்த்தான். தீரா வழக்கு, தோற்காத வழக்கு, தோலா வழக்கு என்று ஆனது. ஆழ்வார் இந்த ஊர் மக்களிடம் தண்ணீர் கேட்க அவர்கள் மறுக்க, இந்த ஊரில் ஒரு கிணற்றிலும் தண்ணீர் ஊறக்கூடாது என்று ஆழ்வார் சபித்து விட்டு சென்றதால், இன்றளவில், இவ்வூர் கிணறுகளில் தண்ணீர் வற்றிய நிலையில் (ஊரா கிணறு) உள்ளன. ஆழ்வார் தாகத்துடன் ஒரு மகிழ மரத்தின் கீழ் சிறிது ஓய்வு எடுக்க, எம்பெருமான் ஒரு மனிதன் வடிவில் வந்து, நீருடன் பசியாற உணவும் கொடுக்க, ஆழ்வார் அவைகளை ருசிக்க அந்த மனிதன் அந்தஇடத்தைவிட்டு மறைந்தான். ஆழ்வார் அந்த மனிதனை நினைவு கொள்ள முயன்றபின், அது திருக்கண்ணங்குடி எம்பெருமானே என்று தெரிந்துகொண்டார். பிறகு மகிழ மரத்தை வாழ்த்தி, அது காய்ந்து போனாலும் இங்கேயே சிறப்புடன் வாழும் என்றார். அதனால் அது காயா மகிழ் ஆயிற்று.

திருமங்கை ஆழ்வார் இந்த எம்பெருமானுக்கு 10 பாசுரங்கள் பாடி உள்ளார்.

Google Map

வேளுக்குடி ஸ்வாமிகள் திருக்கண்ணங்குடி பற்றி

திருக்கண்ணங்குடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

017 திருக்கண்ணபுரம் Thirukannapuram

கண்ணபுர நாயகி ஸமேத சௌரிராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கண்ணபுரம் , கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், பஞ்சகிருஷ்ணக்ஷேத்திரம் , சப்தபுண்ணியக்ஷேத்திரம், ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹா மந்த்ர சித்தி க்ஷேத்திரம்
மூலவர்நீலமேக பெருமாள், சௌரிராஜன்
உத்ஸவர்சௌரிராஜன்
தாயார்கண்ணபுரநாயகி , ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்128
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 104
நம்மாழ்வார் 11
குலசேகராழ்வார் 11
பெரியாழ்வார் 1
ஆண்டாள் 1
தொலைபேசி+91 4366 270 557; +91 4366 270 718; +91 99426 56580

கோவில் பற்றி

விரைந்து மோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமிசாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் திருக்கண்ணபுர திவ்ய தேசத்தைப் பற்றி விவரிக்கிறார்.

ஸ்வாமி நம்மாழ்வாரும் “சரணம் ஆகும் தன தாள் அடைந்தார் எல்லாம், மரணம் ஆனால் வைகுந்தம் அளிக்கும் பிரான் ‘ என்று பாடி உள்ளார்.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களான திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், வானமாமலை, முக்திநாத், பத்ரிநாத், நைமிசாரண்யம், புஷ்கரம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாக்ஷரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் எம்பெருமான் இவ்விடத்து திருவஷ்டாக்ஷர எழுத்துகளின் மொத்த சொரூபமாக விளங்கி முக்தி அளிக்கிறார். இந்த திவ்யதேசத்தில் கால் பதித்தாலே முக்தி கிடைக்கும் என்பதால், இந்த கோவிலில் தனியாக சொர்க்கவாசல் .கிடையாது.

64 சதுர்யுகங்களையும் தாண்டி பழமையானது இந்த திவ்யதேச எம்பெருமான் என்று கூறுவர்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், 649 வது திருநாமமாக சொல்லும் ஸௌரி என்பது இந்த திவ்யதேச எம்பெருமானான சௌரிராஜப்பெருமாளையே குறிக்கும். இங்கு ஸௌரி என்பது யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்ற அர்த்தத்தில் வந்து உள்ளது.

தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம் ஆதலால், சப்தபுண்ணியக்ஷேத்திரம் என்று கூறப்படுகிறது.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம்,  திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).

வடக்கு வீடு எனப்படும் திருவேங்கடத்தையும், தெற்கு வீடு எனப்படும் திருமாலிருஞ்சோலையையும், மேற்கு வீடு  எனப்படும்  ஸ்ரீரங்கத்தையும் போல், திருக்கண்ணபுரம் நம் சம்பிரதாயத்தில் கிழக்கு வீடு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.  

இவர் திருக்கரங்களில் உள்ள சக்ரம், பிரயோக சக்ரமாக விளங்குகிறது. எம்பெருமானின் இன்னொரு திருக்கரம் தானம் வாங்குவதுபோல் காட்சி அளிக்கும். மற்ற திவ்யதேசங்களில் திருமாலின் திருக்கரம் அபயம் என்று சொல்லும். ஆனால் இங்கு நம் பாவங்களை வாங்கி கொள்வது போல் உள்ளது.

உபய நாச்சிமார்களுக்கு இடது புறம் ஆண்டாளும், வலது புறம் பத்மாவதி (செம்படவ /மீனவ அரசகுமாரி) தாயாரும் வீற்றுஇருக்கிறார்கள்.

இவ்விடத்தில் வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் எம்பெருமான், மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.

மாசி மக பெருவிழாவின் போது, எம்பெருமான் திருமலை ராயன் பட்டினம் வரை கருட வாகனத்தில் சென்று சமுத்திர தீர்த்தவாரி காணுகிறார்.

Google Map

திருக்கண்ணபுரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

மாசி ப்ரம்மோஸ்தவம்

ஸ்தலபுராணம்

உபரிசரவசு

உபரிசரவசு என்ற மன்னன் ஒருமுறை இந்த ஸ்தலம் வழியாக சென்ற போது, மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் / மஹரிஷிகள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் வெட்ட, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய, உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்று அறிந்த மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். மஹரிஷிகள, மிகவும் மெலிந்து, உலர்ந்த சதைகள் உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவித்ததால் இதற்கு உத்பலவதாக
விமானம் என்று பெயர். உபரிசரவசுவின் மகள் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க
வேண்டுமென்று, தவம் செய்ய எம்பெருமானும் அவ்விதமே மணமுடித்துக் கொண்டார் .

விபீஷ்ணன்

“நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும்” என்று விபீஷ்ணர் கேட்க, “கண்ணபுரத்தில் காட்டுவோம், வா ” என்று விபீஷ்ணனுக்கு இங்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் எம்பெருமான் விபீஷ்ணனுக்கு தன்னுடைய நடைஅழகினை காட்டுகிறார்.

சௌரிராஜன்

சௌரி என்ற சொல்லுக்கு தமிழில் முடி என்றும், அழகு என்றும் அர்த்தங்கள் உள்ளன.

இக்கோவிலில் பூஜை புரிந்து வந்த அர்ச்சகர் தான் காதல் கொண்ட கன்னிக்கு சூட்டிய மாலையை எம்பெருமான் பிரசாதம் என்று சோழராஜனுக்கு அளித்தார். அதில் தலைமுடி ஒன்றிருக்க அரசர் அர்ச்சகரை அழைத்து காரணம் கேட்டார். எம்பெருமானுக்கு முடி வளர்ந்துள்ளதாக அவர் தெரிவிக்க, இதனைச் சோதிக்க மறு நாள் காலை சோழன் சந்நிதிக்கு வந்து எம்பெருமானின் தலையில் இரண்டு மூன்று கேசங்கள் இருப்பதைப் பார்த்து, அதில் ஒரு கேசத்தையிழுக்க, அதில் இருந்து தெறித்த ரத்தத் துளிகள் மன்னனின் முகத்தில் பட, இறைவன் தன் பக்தனைக் காப்பதற்கே இவ்வாறு செய்தான் என்று உணர்ந்த அரசன் அர்ச்சகரின் பக்தியை மெச்சியதோடு தானும் இப்பெருமானுக்கு
அடிமையானான். இதன் காரணமாகத்தான் சௌரி ராஜன் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்றென்பர்.

முனியோதரம் பொங்கல்

இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், எம்பெருமானுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து வந்தார். அவர் எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு இரவில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மூடிய கோவிலில் மணி சப்தம் கேட்டது. மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் இப்பெருமானுக்கு அர்த்தஜாம நிவேதனமாக முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நெற்றி வடு

இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று 7 மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, இப்பெருமானின் நெற்றியில் “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.

ஆழ்வார்கள்

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானுக்கு 104 பாசுரங்கள் பாடி உள்ளார். இந்த திவ்யதேச பெருமாள், ஆழ்வாருக்கு திருமந்திரத்தின் அர்த்தத்தை (திருமந்திர உபதேசம்) சொல்லி கொடுத்ததால், பஞ்சஸம்ஸ்காரம் செய்துவித்த திருநறையூர் எம்பெருமான் போல் இவருக்கும் பெரிய திருமொழி என்ற பிரபந்தத்தில் 8ம் பத்து முழுவதும் 100 பாசுரங்கள் பாடி உள்ளார்.

இதைத்தவிர திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில், “கணபுரத்து என் கனியே” என்று பதினாறாம் பாசுரத்திலும், ‘திருக்கண்ணபுரம் புக்கு‘ என்று இருப்பத்தியேழாம் பாசுரத்திலும் பாடி உள்ளார். சிறிய திருமடலில் ஓர் இடத்திலும், பெரிய திருமடலில் இரண்டு இடங்களிலும் திருக்கண்ணபுரபெருமானை பற்றி பாடி உள்ளார்.

நம்மாழ்வார்

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே தனது துயர்கள் எல்லாம் போய்விட்டன, இனிமேல் தனக்கு என்ன குறையுள்ளது என்று நம்மாழ்வார் கேட்ட திவ்யதேசம். தன்னை சரண் அடைந்த எல்லோருக்கும் மரணத்திற்குப் பிறகு முக்தி அளிக்கும் எம்பெருமான் என்று பாடிய திவ்யதேசம்.

வேலை(கடல் அலை) மோதும் மதிள்சூழ், வெள்ளி ஏய்ந்த மதிள்சூழ்,, வானை உந்தும் மதிள்சூழ், அரண் அமைந்த மதிள்சூழ், நன் பொன் ஏய்ந்த மதிள்சூழ், மணிபொன் ஏய்ந்த மதிள்சூழ், கல்லில் ஏய்ந்த மதிள்சூழ் என்று திருக்கண்ணபுரத்தில் மதில்கள் பெருமைகளை பாடியுள்ளார். வண்டு பாடும் பொழில் சூழ், செய்யில் வாளை உகளும், வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரம் என்று மேலும் சில சிறப்பு அடைமொழிகளையும் ஆழ்வார் தருகிறார்.

குலசேகர ஆழ்வார்

பஞ்சகிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றான, இந்த தலத்து எம்பெருமானை, “மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே” என்று கோசலையின் மடியில் தவழும் இராமபிரானுக்கு தாலாட்டு பாடல்கள் என்று பிள்ளைத்தமிழில் ஆழ்வார் போற்றிப் பாடுகிறார்.

பெரியாழ்வார்

அர்ச்சாவதாரமாக ஆங்காங்குக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தான் என்றும், திருக்கண்ணபுரத்தில் பரம யோக்யனாயிருக்கும் எம்பெருமானை, “கண்ணபுரத்து அமுதே” என்றும் அழைக்கிறார்.

ஆண்டாள்

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் என்று திருவேங்கடத்தை காடு என்றும், திருக்கண்ணபுரத்தை நகரம் என்று இரண்டிலும் மகிழ்ச்சியுடன் நித்தியவாசம் செய்யும் எம்பெருமானை அழைக்கிறார். இராமபிரான் வனவாசத்தின் போது இருந்ததை திருமலை வாசத்துடனும், அயோத்தியில் சகலருடன் கூடி வசித்ததை திருக்கண்ணபுரத்திற்கும் ஒப்பிடுகிறார். அதேபோல் கண்ணபிரான் பிருந்தாவனத்தில் வசித்த நேரத்தை திருமலையுடனும், ஆயார்பாடி மாளிகையில் வசித்ததை திருக்கண்ணபுரத்துடனும் ஒப்பிட்டு பாடுகிறார்.

இனி, பாசுரங்கள் :

  • பெரியாழ்வார் : 1 (72),
  • ஆண்டாள் : 1 (535)
  • குலசேகரஆழ்வார் : 11 (719-729)
  • திருமங்கையாழ்வார் : 104 (1648-1747, 2067, 2078, 2673(72), 2674 (90,133)
  • நம்மாழ்வார் : 11 (3656-3666)
RSS
Follow by Email