022 திருவெள்ளியங்குடி / Thiruvelliyankudi

மரகதவல்லித்தாயார் ஸமேத கோலவில்லி ராமர் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவெள்ளியங்குடி, பார்கவபுரி, சுக்ராபுரி
மூலவர்கோலவல்வில்லி இராமன்
உத்ஸவர் சிருங்கார சுந்தரன்
தாயார் மரகதவல்லி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 0435 – 2450118 : +91 94433 96212

கோவில் பற்றி

நான்கு யுகங்களிலும் இந்த ஸ்தலம் வழிபடப்பட்டுள்ளது. க்ருத யுகத்தில் பிரம்மபுத்திரம் என்றும், த்ரேதா யுகத்தில் பாராசரம் என்றும், துவாபர யுகத்தில் சைந்திய நகர் என்றும் கலியுகத்தில் பார்கவ க்ஷேத்திரம் என்றும் வழிபட்டு வருகிறது.

சுக்ரனுக்கு பார்வை வழங்கியதால், இந்த திவ்யதேச எம்பெருமானை சேவித்தால், 108 திவ்யதேச எம்பெருமான்களையும் சேவித்தத பலன் கிடைக்கும் என்று சொல்வர்.

வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாதவகையில் இங்கு கருடன் (பெரியதிருவடி) நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இதேபோல் அனுமன் (திருவடி), நான்கு கரங்களுடன் காட்சி தரும் ஸ்தலம், திருக்கடிகை அல்லது கடிகாசலம் என்னும், சோளிங்கர் ஆகும்.

இங்கு கோவிலில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்துவரும் காட்சியை காணலாம். இங்கு வாழையே ஸ்தலவிருட்சமாகும்.

சுக்ர பரிகார ஸ்தலம்.

இந்த கோவில் ஸம்ப்ரோக்ஷணம் ஸ்ரீரங்கம் பெரியாஸ்ரமம் ஆண்டவனால் நடத்தப்பட்டது. அருகில் உள்ள சேங்கனூர், பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம். இவர் நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு வியாஞ்ஞானம் அருளி செய்தவர்.

ஸ்தலபுராணம்

வாமன அவதாரத்தின் போது, மாவலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, அதை கொடுக்க ஒப்புக்கொண்ட சக்ரவர்த்தி, நீர் கொண்டு தாரை வார்க்க தயாரானபோது,
அம்மன்னனுக்கு அசுர குல குருவான சுக்கிரபகவான், உண்மை நிலைபுரியாது மன்னன் இவ்வாறு செய்கிறானே என்றெண்ணி தாரை வார்க்கும் குடத்தின் துவாரத்தை ஒரு பூச்சியாக உருவெடுத்து அடைக்க, அதை அறிந்த வாமனன் ஒரு சிறு தர்ப்பை புல்லால்
துவாரத்தில் குத்த, சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தான். பிறகு சுக்கிரன் இந்த ஸ்தலத்தில் இருந்து தவம் செய்து இழந்த தன்னுடைய கண்ணைப் பெற்றான்.

தேவர்களுக்கு சிற்பி விஸ்வகர்மா. அவன் எம்பெருமானுக்கு பல திவ்ய தேச கோவில்களை கட்டினான். அசுரர்களுக்குச்சிற்பி மயன். அவன் பெருமாளுக்கு தான் எந்த திவ்யதேச கோவிலையும் கட்டவில்லையே என்று வருத்தப்பட்டு தவம் செய்தபோது, சங்கு, சக்ரதாரியாக, நான்கு திருக்கரங்களுடன் மஹாவிஷ்ணு காட்சியளித்தார். தான் இரண்டு திருக்கரங்களுடன், இராமாவதாரத் திருக்கோலத்தையே தரிசிக்க விரும்புவதாக மயன் கூற, தம் கரத்தில் இருந்த சங்கு, சக்கரங்களைக் கருடனுக்கு கொடுத்துவிட்டு வில், அம்புகளுடன், அலங்காரக் கோலத்துடன் கோலவில் ராமனாக காட்சியளித்தார். எனவேதான் இப்பெருமானுக்கு கோலவில்லி ராமன் என்னும் பெயர் உண்டானது. ஆகவே இங்கு கருடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.

ஆழ்வார்கள்

சுக்கிரனுக்கு எம்பெருமான் அருளியதை “வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்” (பெரிய திருமொழி 4.10.7) என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார். தனக்கு கோல வில்லி இராமனாக காட்சியருள வேண்டுமென்று திருமங்கையாழ்வார் வேண்ட அவ்விதமே காட்சியளித்தார்.  

எம்பெருமானுக்கு உதவும் எல்லா ஆயுதங்களும், அவன் கையில் உள்ள சுதர்சன் என்னும் சக்கரமே ஆகும். வாமன அவதாரத்தில் உதவிய சிறு தர்ப்பை கூட, சக்ரத்தாழ்வானே ஆவான். இதையே பெரியாழ்வார், ” சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ அச்சோ“(பெரியாழ்வார் திருமொழி 1.9.7) என்று சொல்கிறார். ‘துரும்பாற் கிளறிய சக்கரம்’ என்றதனால் “கருதுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன்” என்கிறபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லும் தன்மையை உடைய திருச்சக்கரமே தர்ப்பையாக இருந்து சுக்ரன் கண்ணைக் கலக்கினான் என்று புலப்படும்.

Google Map

திருவெள்ளியங்குடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவெள்ளியங்குடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading