திருப்பாவை – சிறு விளக்கம்

ஸம்ஸாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஆழ்வார்களை எழுப்பி, எம்பெருமான், தன்னை காட்டி கொண்டார், ஆனால் ஆண்டாள் உறங்கி கொண்டு இருக்கும் எம்பெருமானை எழுப்பி, தன் குறையை சொல்வதில் இருந்து, இவள் மற்ற ஆழ்வார்களிடம் இருந்து வேறுபடுகிறார். மார்கழி நோன்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, எம்பெருமானிடம் சென்று, இந்த பிறவியை அனர்த்தம் ஆகாதபடி, கைங்கரியங்கள் கொடுத்து, உஜ்ஜீவிக்கும் படி கேட்டு கொள்கிறாள்.

திருப்பாவையின் சிறப்புகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் அதன் சிறிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இங்கே அதில் இருந்து எடுக்கப் பட்ட ஒரு சிறு தொகுப்பு கொடுக்கபட்டு உள்ளது.

மார்கழி நோன்பு

மார்கழி

நாம் நோன்பு நோற்பதற்கு சரியான காலம் மார்கழி என்று அந்த மாதத்தினை கொண்டாடி, மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை அழைப்பது மார்கழி திங்கள் என்ற முதல் பாட்டு. நெடுநாளாகக் கண்ணனைப் பிரிந்து இருந்ததால் உண்டான தாபம் முழுவதும் அடங்க, நீராட விருப்பமுடையீர் வாருங்கள் என்று அழைக்கிறார். இங்கு, நீராட என்று கூறியது, “கண்ணனோடு சேர்ந்து இருக்க” எனக் கூறியதாகும். தங்களுடைய கைங்கரிய விருப்பத்தை தெரிவிக்கவே பறை என்று சொல்லிக் கொண்டு போவது. அந்த கைங்கரியத்தைத் தாமாகவே செய்ய இவர்களுக்கு பிராப்தி இருந்தாலும், எம்பெருமானின் நியமனம் கொண்டு செய்வதே தகும் என்பது அவர்கள் கருத்து. மீட்சியின்றி வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும், வேறு ஒருவகை அதிகாரமும் வேண்டாம் என்று சொல்கிறார். கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அழகு மிகுந்து தோன்றியதால் “ஏரார்ந்த கண்ணி” என்ற அடைமொழி கொடுக்கப் பட்டது. பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்களை கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறைபொருள். 

வையத்து

பகவத் விஷயத்தில் எவற்றை செய்ய/பற்ற வேண்டும், எவற்றை விட வேண்டும் / செய்ய கூடாது என்பதை வையத்து வாழ்வீர்காள் என்ற இரண்டாவது பாட்டில் சொல்கிறார். மற்ற உலக விஷயங்களில் பற்ற வேண்டியவைகளும், விட வேண்டியவைகளும் அரிதாக இருக்கும், ஏனெனில் இது அவரவர் கர்மத்தை கொண்டு இருக்கும். இதே போல அவரவர் கருமத்தை பொருத்தே, மனமும் ஒரு சமயம் விடுவதை அடுத்த சமயம் பிடிக்கும் என்ற நிலையை எடுக்கும். இப்படி இல்லாமல் அல்பமாய் இருக்கிற விஷயங்களை விட்டு, சமஸ்த கல்யாண குணாத்மகனை பிடிப்பதால், இரண்டும் எளிது என்கிறார். சென்ற பாட்டில், ப்ராப்ய, ப்ராபக, அதிகாரி ஸ்வரூபங்களை சொன்ன ஆண்டாள், இங்கே அந்த அதிகாரிக்கான ஸ்வபாவங்களை இந்த பாடலில் சொல்கிறார். நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஈடுபட்ட ஆயர் மங்கைகள் தாங்கள் விட வேண்டியவைகளையும், பற்ற வேண்டியவைகளையும் சொல்கிறார்.

ஓங்கி

ஆயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்தில் கொண்டு உள்ளவர்கள், ஆதலால் அந்த எம்பெருமானை ஓழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்; ஆயினும் இவர்கள் நோன்பு நோற்குமாறு அநுமதி அளித்தவர்களுக்கு சில பலன்கள் தருமாறு வேண்டுகிறார்கள். இந்த மார்கழி நீராட்டத்தினால் ஊரோடு சம்பந்தபட்ட நாட்டுக்கும் வளம் விளையும் என்று கூறப்படுகின்றது.  பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவத் அநுபவம் பண்ணினால் இந்த உலகமே தோஷங்கள் ஒன்றும் இன்றியே இருக்கும் என்று இந்த ஓங்கி உலகளந்த என்ற பாட்டில் சொல்கிறார். ‘தன் முடிமேல் அடி வைக்க வேண்டும் என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும் அளப்பதையே ஒரு காரணமாக கொண்டு, அனைவர் முடியிலும் தீண்டி அருளின எம்பெருமான், இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தை முடிக்காமல் விடமாட்டான் என்று கருத்து தோன்ற ஆச்சியர்கள் ‘உலகளந்தான்‘ என்கிறார்.

ஆழி

ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இப்படி சிந்தித்து கொண்டு இருக்க, மழைக்கு நிர்வாகனனான பர்ஜயன் (மேகம்), பகவத் காரியம் செய்யும் அவர்களுக்கு சிறிது உதவி செய்தால் தனக்கும் ஸ்வரூப லாபம் கிடைக்கும் என்று எண்ணி, அவர்களிடம், ‘நான் உங்களுக்காக செய்ய வேண்டியவைகளை செய்ய அடியேன் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை நியமிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்து நிற்க, ஆய்ச்சியர்கள், “ ‘பெண்கள் நோற்றது என்ன, மழை பெய்தது எப்படி’ என்று அனைவரும் நன்றாக கொண்டாடும்படி மழை பெய்ய வேண்டும்” என்று அவன் செய்யவேண்டிய கைங்கரியத்தை ஆழி மழைகண்ணா என்ற பாட்டினால் சொல்கிறார்.

மாயனை

‘நாராயணா’ என்று பரமபதம் முதல் பாட்டிலும், திரு அவதாரங்களுக்கு அர்த்தமான திருப்பாற்கடலில் கண்வளர்ந்து இருப்பது இரண்டாம் பாட்டிலும், இந்திரன் குறை தீர, ஸ்ரீ வாமனனாக திரு அவதாரம் செய்து, ஒரு நாடாக, யாரிடமும், எந்த வித்தியாசமும் பாராமல் திருவடிகளை கொண்டு தீண்டியது மூன்றாம் பாட்டிலும் சொல்லப் பட்டது. மாயனை என்ற பாட்டில் கிருஷ்ணனாய் திருஅவதாரம் செய்து, எளியவனாய், ஒரு அளவும் இல்லாமல், எல்லோருக்கும் கட்டவும், அடிக்கவும் இடம் கொடுத்து, ஒரு ஊருக்காக தன்னை முற்றுமாய் கொடுத்ததை சொல்கிறது. மன்னு வட மதுரை மைந்தனை என்று சொல்லியதால், அர்ச்சை சொல்லபட்டது.

திரிவிக்ரமனாக அவதரித்து எல்லோருடைய விரோதிகளையும் போக்கியதை நினைத்து, இதனை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தி, நமக்கு என்று கிடைத்த வாய்ப்பை கொண்டு பகவத் அனுபவத்தை செய்ய வேண்டும். ஆகையால் மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனை துறைவனை, ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை, தாயை கூடல் விளக்கம் செய்த தாமோதரனை, செப்பு, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்கிறார்கள்.

ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ,  விபவ,  அந்தர்யாமிஅர்ச்சை நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி உள்ளார். (“நாராயணனே நமக்கே பறை தருவான், பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஊழிமுதல்வன், வடமதுரை மைந்தனை” ). அது மட்டும் இல்லாமல் அடுத்த பாடலான புல்லும் சிலம்பின என்ற பாட்டில், உள்ளத்து கொண்டு முனிவர்களும், யோகிகளும் என்று மீண்டும் அந்தரயாமியில் சொல்கிறார்.

நோன்பிற்கு பெண்களை எழுப்புவது

புள்ளும்

புள்ளும் சிலம்பின என்ற பாட்டு முதல், “எல்லே இளங்கிளியே” என்ற 15ம் பாட்டு வரையில் பத்துப் பாசுரங்களாலே, பாவை நோன்பு நோற்க, மற்ற பெண்களை எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது.  ஆச்சியர்களின் கிருஷ்ண அநுபவத்திற்குப் பிரதான உபகரணமான, அவன் மீது ஆசையும், ஏகாந்தமான காலமும், ஆயர்குல பெரியவர்களின் இசைவும் பஞ்சலக்ஷங்குடியில் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்த போதும், சுவைமிக்க பொருள் தனியே புஜிக்கத் தக்கது அல்லது என்பதால் தோழிமார்களுடன் கூடிப் புசிக்க ஆசை கொள்கின்றனர். பகவத் சம்பந்ததைவிட, பாகவதர் சம்பந்தம் சரியானது ஆனதாலும், பகவத் விஷயம் தனியே அனுபவிக்கும் விஷயம் இல்லாததாலும், உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்கள்.

பெண் பிள்ளைகள், பொழுது விடிந்தமையை அறியாமல் கிடந்து உறங்குகின்ற பெண் ஓருத்தியின் மாளிகை வாசலில் நின்று பிள்ளாய், விடிந்த பின்பும் இப்படி உறங்கலாகுமோ’, என்று சொல்ல, அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தமைக்கு அடையாளம் ஏது? என்று கேட்க, “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று ஓர் அடையாளம் கூறுகின்றனர். திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் இன்னொரு அடையாளமாக சொன்னார்கள். இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார் உண்டு.

கீசு கீசு

பகவத் விஷயத்தில் சுவடு அறிந்து மறந்து உறங்குகின்ற இன்னொருத்தியை ‘கீசு கீசு’ என்ற பாடலில் எழுப்புகின்றாள். ‘அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்றும், ‘அந்தமில் பேரின்பத்து அடியோவரோடு இருந்தமை’ என்று எல்லோருடன் இருப்பதால் இனிமை உண்டாவதை கீசு கீசு என்ற பாடலில் ஆச்சியர் சொல்கின்றனர். பேய்ப்பெண்ணே என்ற பெண்ணை எழுப்ப முயற்சிக்கையில் ஆனைச்சாத்தன் பேச்சரவம், மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் ஆகியவற்றை விடிந்ததற்கு அடையாளமாக கூறுகிறார். கேசி வத வ்ருத்தாந்தமும், சக்கரவர்த்தி திருமகனை, ஜனகனின் மகள் தழுவிகொண்ட சரித்திரமும் சொல்லப்பட்டது. குலசேகராழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள் உண்டு.

கீழ்வானம்

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்பட, கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாக இருப்பாளை, கோதுகலமுடை பாவாய் என்ற ஒருத்தியை உணர்த்தும் கீழ் வானம் வெள் என்று என்ற பாசுரம். கீழ்வானம் வெள்ளென்று என்றும் எருமை சிறுவீடு மேய்வான் என்ற அடையாளங்களை சொல்கிறது. உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதை காட்டிலும், அத்தலத்தை நோக்கிச் செல்லுகைதானே, அர்ச்சிராதி கதி போல், போக ரூபமாக இருக்கும் என்பதை இந்த பாடல் கூறுகிறது. ஸர்வசேஷியான எம்பெருமான், சேஷபூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமை உடையனாய் இருந்து, அவன் அப்படி செய்யாது இருந்தால், நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கும் இடத்திற்கு சென்று சேவித்தால், அவன் நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே; அன்ன நடை அணங்குகளை கஷ்டப் படுத்தினோமே என்று நம் மீது இரக்கம் கொண்டு, நம் காரியத்தைச் செய்து முடிப்பான். எல்லாருமாகத் திரண்டு, எழுந்து வாருங்கள் என்று அழைக்கின்றனர். கிருஷ்ண திரு நாமங்களை வாயாரப்  பாடியதே ஒரு பலன் என்றும், பறை கொண்டு என்பதை, நாட்டிற்கு பறை கொண்டு என்றும், தங்களுக்கு கைங்கரியம் கொண்டும் என்பதை மற்றொரு பலன் என்றும் சொல்கிறது. நம்மாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள்.

தூமணி

கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும், மைத்துனமை உறவை உடைய ஒருத்தியை, மாமன் மகளை, தூமணி மாடத்து என்ற இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் என்பது சொன்ன அடையாளம் ஆகும். திருவாய்ப்பாடியிலே ஒரு அடியவரின் ஸம்பந்தம் தனக்கு மோக்ஷம் கொடுக்க உதவும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்று உரையாசிரியர் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் கூறி உள்ளார். இது திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள்.

நோற்று

எல்லோரும் கிருஷ்ண அனுபவத்தில் தங்களை படுத்துவதாக சொல்லும் நேரத்தில், கிருஷ்ணன், ‘தண்ணீர், தண்ணீர் என்று கதறும்படியாக அவனைப் படுத்தும், நேரம் ஆவதற்கு அவனே காரணம் என்று, அவனிடம் சண்டை போடும், கிருஷ்ணன் திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய், இடை சுவர் இன்றி, அவனுடன் ஒரே படுக்கையில், தண்ணீர் துரும்பு அற்று படுத்து இருக்கும் ஒருத்தியை, ஆற்ற அனந்தல் உடையாய் என்று இருக்கும் ஒருத்தியை, வெளியில் இருக்கும் மற்றவர்கள் எழுப்பும் நோற்று சுவர்க்கம் என்ற பாசுரம். நாராயணனே என்று அவனையே உபாயமாக அனுசந்தித்து விடிந்த பின் எழுந்து குளிக்க கடவது என்று இருக்கிறாள். கிருஷ்ணனே சுக சப்த வாக்கியன் ஆனதால் அவனையே சுவர்க்கம் என்கிறார்கள். நாற்ற துழாய் முடி நாராயணன் என்று சொன்னது, ஆசைபட்டவர்களை ரக்ஷிப்பதாக தோளில் மாலை இட்டு இருப்பவன் என்று சொல்கிறார். “ஸ்ரீ பரசுராமனை வென்று பெருமாள் (ராமபிரான்) அவன் கையில் வில்லை வாங்கினாற் போலே, நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக்கொண்டாயோ?” என்பது ஆராயிரப்படி விளக்கம். ஊற்றமுடைய மஹாநுபாவரை உணர்த்துதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாகும். பேயாழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்பார்கள்.

கற்று

கண்ணன் ஊருக்கான ஒரு பிள்ளையாய் அனைவராலும் கொண்டாடப்பட்டு, வளர்ந்து அருளுவதை போல, ஊருக்காக ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாளாய், கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவம் உடையளாய் இருக்கும் கோவலர் தம் பொற்கொடி என்கிறவளை, அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன், வேணுமாகில் அவன் தானே நோற்று வருகிறான் என்று கிடக்கிறாள் ஓருத்தியை உணர்த்தும் கற்று கறவை என்ற பாசுரம். உனது உறவு முறையார் தோழிமார் என்ற வர்க்கங்களில் ஒருவர் தப்பாமல் அனைவரும் திரண்டு வந்து எம்பெருமான் திருநாமங்களைப் பாடும் போது, நீ உடம்பிலும் அசைவின்றி, வாயிலும் அசைவின்றி, இப்படி கிடந்து உறங்குவது என்ன பயனைக் கருதியோ என்கின்றனர். கண்ணன் கன்றுகளை அன்றிப் பசுக்களைப் பெரும்பான்மையாகக் காண மாட்டாதவன் ஆதலால், இவன் தனது கர ஸ்பர்சத்தினால் பசுக்களையும் கன்றாக்கி அருள்வான் என்கிறார்கள். கணங்கள் பல என்றதால் கறவைகள் தனித்தனியே எண்ண முடியாதவை மட்டும் இல்லாமல், அவற்றின் திரள்களும் எண்ண முடியாதது எம்பெருமானது மேன்மையைப் பொறுக்க முடியாதவர்கள், எம்பெருமான் அடியார்களுக்கு பகைவர்கள்.  திறலழிய என்று சொன்னது, ருத்ரன், பிரம்மன், இந்திரன், ஈஸ்வரன் போன்றவர்களை தமக்கு எதிரி என்று நினைத்து இருந்த, கம்சனின் மிடுக்கை அழித்த என்ற பொருளில் வருகிறது. இது பூதத்தாரை யுணர்த்தும் பாசுரம் என்பர்.

கனைத்து

நாட்டில் இருந்த நாட்களோடு, காட்டில் இருந்த நாட்களோடும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் எம்பெருமான் இராமனை பின்தொடர்ந்து, நோக்கிக் கொண்டு திரியும், இளையபெருமாளை (லக்ஷ்மணன்) போன்று, கண்ணனை அன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொத்தமாக அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கம் மிகவும் பரிவு பூண்டிருப்பான் ஓருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாள் ஓரு ஆய்ப்பெண்ணை, நற்செல்வன் தங்காய் என்பவளை, உணர்த்தும், கனைத்து இளம் கற்றெருமை என்ற பாசுரம். கறவைகளைக் காலந் தவறாது கறப்பதில்லை ;  அந்த கறவைகள் வகுத்த காலத்தில் கறக்கப் படாததால், வாசலிலே நின்று குமுறி, தூரத்தில் கட்டப்பட்டு நின்றுள்ள கன்றின் மீது தனது பாசத்தை செலுத்தி அதனால், கன்று பால் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, முலை வழியே பால் சொரிந்து கொண்டே இருக்கும். அர்ஜுனன் கேளாதே இருந்த போதும், கண்ணன் கீதையை கூறத் தொடங்கினால் போல உள்ளது கரவைகள் பால் சுரப்பது என்கிறார். அந்தப் பால் பெருக்கால் வீடு முழுவதும் வெள்ளம் பெருகியது. அது ராவண வதம் முடிந்த பிறகு, திருவயோத்திக்கு மீண்டும் எழுந்து அருள, பெருமாளை (இராமன்) நோக்கி, பரத்வாஜ மஹர்ஷி, பரதாழ்வான் இரவும் பகலும் எப்போதும் அழுது அழுது, நனைத்தில்லம் சேறாக்கினன் என்பதற்கு ஒப்பு ஆகும். இங்கு பால் சேறு ஆனாலும் அதனைச் செல்வம் என்று சொல்லி, இப்படி செல்வம் உடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை அழைக்கின்றனர். தென் இலங்கை கோமானை, என்பதை பற்றி சொல்லும் போது, ஒரு அம்பாலே இராவணனின் தலை அறுக்காமல், படையை கொன்று, புத்திர, பௌத்திரர்களை கொன்று, ஆயுதங்களை முறித்து, அரக்கர் கோன் என்ற பெருமைகளை அழித்ததை சொல்கிறார். இராமன் இராவணனோடு போர் புரியும் போது அவன் ஆயுதங்களை இழந்து நிற்கும் போது, இரக்கமுற்று, “போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடம் சென்று சிறிது தேறி நாளை போர்க்கு வா,” என்று அனுமதி தந்து, தானே போகவிட்டு அருளினது முதலிய பல குணங்களினால் “மனத்துக்கு இனியானை” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. 

பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது என்பார்கள். இந்த பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை எல்லாம் சொல்லியாயிற்று. ஸ்ரீ மதுர கவி, ஆண்டாள் ஆகிய இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் சொல்வார்கள்.

புள்ளின்

கண்ணன் பிறந்து வளரும் ஊரான திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க, அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும்,  அவனை மனத்துக்கினியான் என்று பாடியதையும் க்ருஷ்ண பக்தர்களுக்கு ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது.  உடனே சில பெரியார்கள் கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே என்கிற தத்துவத்தை விளக்கி ஸமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள். தன் கண் அழகினில், பெருமை கொண்ட ஒருத்தி, தன் கண் அழகிற்கு எல்லோரும் தன்னை வந்து பார்க்கும் போது, தான் ஏன் கண்ணனை சென்று பார்க்கவேண்டும் என்று இருக்கும் ஒருத்தியை, போதரிக் கண்ணினாயை, மற்றவர்கள் எழுப்பும், புள்ளின் வாய் கீண்டாய் என்ற பாசுரம். விரோதியை போக்கி, தன்னை கொடுப்பது, அவன் பணி ஆகும். இவனுடைய அனுமதியும், அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகுமத்தனை, கர்ம ஞானங்களை துணையாக கொண்டு, பக்தியை உபாயம் என்று இருப்பவர்கள் அன்றோ இவர்கள். சென்ற பாட்டிலும் இந்த பாட்டிலும் இராமனை பற்றி பாடிய இவர்கள் இந்த பாட்டில் இராமனோடு சேர்ந்து, கண்ணனையும் பாடுகிறார்கள். கண்ணனோடு இராமன் ஏன் என்றால், இராமன் பிராட்டியை பிரிந்து வருந்துபவன், திருவினை பிரித்த குற்றத்திற்காகவும், பொல்லா அரக்கன் என்று சொன்னார்கள். “புள்ளுஞ் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஆரவாரங்களை அடையாளமாகக் கூறுகின்றனர். இது தொண்டரடிப்பொடி ஆழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள். ‘பிள்ளைகளெல்லாரும்’ என்று ஆண்டாள் சொன்னதால், தனக்கு முந்தின எல்லா ஆழ்வார்களையும் சொன்னபடியும் ஆகும்.

உங்கள்

ஆய்ச்சியர்களுக்கு எல்லாம் தலைவியாய், ‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும் உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து, அதனை மறந்து உறங்குவாள் ஓருத்தியை, நங்காய், நாணாதாய், நாவுடையாய் என்ற ஒருத்தியை, உணர்த்தும், உங்கள் புழக்கடைத் தோட்டத்து என்ற பாசுரம். செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினது, புழக்கடை தோட்டத்துள் இருக்கும் ஆம்பல் பூ என்று அடையாளங்கள் சொல்கிறார்கள். செங்கற்பொடிக்கூறை என்று சொல்வதன் மூலம், திவ்யதேசங்களில் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளித் திறவுகோல் கொடுத்துத் திருக்காப்பு நீக்குவிக்கிற ஸம்பிரதாயம் உண்டானதை சொல்கிறது. கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியும் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகி அது கண்டு அஞ்சி, ‘இந்த ஆயுதங்களை மறைத்துக் கொள்’ என வேண்ட அவனும் அப்படியே அந்த ஆயுதங்களை உடனே மறைத்துக்கொண்டான் என்பது வரலாறு. ஆச்சியர்கள் கண்ணனைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல், கண்ணன் அவ்வாயுதங்களை மறைத்தது உகவாத பகைவர்களுக்காக அல்ல என்றும் அன்பர்களுக்காத்தான் என்பதை சொல்கிறார். இந்த பாசுரம், திருப்பாணாழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள்.

எல்லே

எல்லாப் பெண்களுடைய கூட்டத்தை காண கருதிக் கிடப்பாள் ஓருத்தியை, இளம் கிளியே என்ற ஒருத்தியை, உணர்த்தும் எல்லே இளம் கிளியே என்ற பாசுரம். இந்த பாடலே திருப்பாவை ஆகிறது என்று ஆராயிரப்படி விளக்கம் சொல்கிறது. பகவத் விஷயத்தில் சிற்றம் சிறு காலையில் என்ற பாடலில் இருக்கும்படி சொல்கிறது; பாகவத விஷயத்தில் இருக்கும்படி இந்த பாடல் சொல்கிறது; பங்கய கண்ணானை பாடு என்று அகத்தில் உறங்கும் பெண்ணை எழுப்பும் பாடல். இந்த பாடல் முழுவதும், ஒவ்வொரு சொற்தொடரும் வைணவத்தின் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட என்று சொன்னது, எம்பெருமான் தன் திறத்தில், மாறு செய்பவர்களது செருக்கை வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரித்திரங்களுக்குள் கோவர்த்தன கிரியை ஏந்தியது மிகச் சிறந்தது.  மாறு செய்த இந்திரனுக்கு ஒரு தீங்கும் இழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை அடக்கியது. திருமங்கையாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள்.

கண்ணன் திருமாளிகையில்

நாயகனாய்

சென்ற பத்து பாட்டுக்கள் பத்து பெண்களை உணர்த்தினதை கூறியது. பத்து பெண்களை சொன்னது, திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலட்சங் குடியில் உள்ள அத்தனை பெண்களையும் உணர்த்தியதை சொன்னதற்கு சமம். எல்லா பெண்களையும் உணர்த்தித் தம்முடன் கூட்டிக் கொண்டு எல்லோரும் பெரும் கூட்டமாக திரண்டு ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற்கு சென்று, திருக் கோயில் காப்பானையும் திரு வாசல் காப்பானையும் நோக்கித் ‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று வேண்டியதை கூறும் நாயாகனாய் நின்ற என்ற பாசுரம். முதலடி, கோயில் காப்பானையும், இரண்டாவது அடி, வாசல் காப்பானையும் உணர்த்துகின்றது. உகந்து அருளின நிலங்களில் உள்ளே புகும் போது, க்ஷேத்திராதிபதிகளையும், துவார யக்ஷயர்களையும், அனுமதி பெற்று கொண்டு புக வேண்டும் என்று பகவத் சாஸ்திரங்களில் கூறியதுபோல, இந்த ஆச்சியர்களும் செய்கிறார்கள். அவன், (எம்பெருமான்) உணர்ந்தெழும் அழகுக்கு மங்களாசாஸநம் பாட வந்தோம் என்றார்கள். தோரணவாசலுக்குக் “கொடித்தோன்றும்” என்று சொன்னது, நடுநிசியில் ஆயர்மாதர் தடுமாறாமல் ‘இது நந்தகோபர் திருமாளிகை’ என்று உடனே உணர்ந்து வருதற்காகக் கொடி கட்டி வைக்கப்பட்டிருக்கும் என்பதாகும். ஏதாவது உபாயத்தை தேடியோ, வழியை தேடியோ வரவில்லை, எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதே பரம புருஷார்த்தமாக நினைத்து வந்தோம், யாம் என்கிறார்கள்.

வாசல் காப்பான், “நான் உங்களை மறுக்கவில்லை’ கதவைத் தள்ளிக்கொண்டு புகுங்கள்” என்று சொல்ல, அது கேட்ட ஆய்ச்சியர்கள்,’ “நாயகனே! எம்பெருமான் திறத்து உனக்குள்ள பரிவினை காட்டிலும் மிக விஞ்சின பரிவு இந்த கதவிற்கு உள்ளது போலும்’ எங்களால் தள்ள முடியவில்லை” என்று சொல்கிறார்கள். வாயில் காப்பவன் இவர்களை விலக்குவது கண்ணன் மேல் உள்ள ஸ்னேகத்தாலே என்றால், இந்த நிலை கதவுகள் திறக்க முடியாமல் இருப்பதும் ஸ்னேகத்தாலே தான் என்கிறார். திறந்து கொள்வார் முகத்தில் அறைவது போல் கம்ஸனுடைய ஆட்களுக்கு உயிருள்ளவை, உயிரற்றவை என்று ஒரு வித்யாசமும் இன்றி எல்லாம் திருவாய்பாடியில் கண்ணனுக்கு துணை போகின்றன என்கிறார்.

நந்தகோபன், யசோதை, பலராமனை எழுப்புதல்

அம்பரமே

திருவாசல் காப்பவர்களின் அநுமதிகொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சியர்கள் ஸ்ரீநந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணனையும், நம்பி மூத்தபிரானையும் (பலராமன்) திருப்பள்ளி உணர்த்தும் அம்பரமே தண்ணீரே என்ற பாசுரம். கண்ணனை ஆய்ச்சியர்கள் களவு காண்பார்கள் என்ற அச்சத்தினால் நந்தகோபர் முன்கட்டில் கிடப்பாராம்.  முதல் கட்டில் நந்தகோபானும், இரண்டாம் கட்டில் யசோதையும், மூன்றாம் காட்டில் கண்ணனும், நான்காம் கட்டில் நம்பி மூத்தபிரானும் (பலராமனும்) பள்ளிக்கொள்வது முறையாதலால், அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு சொல்லப்பட்டது. ஸ்ரீ நந்தகோபரை எழுந்திராய் என்றும், யசோதையை ‘அறிவுறாய்’ என்று சொல்லியும் திருபள்ளி எழுப்புவது, இவளை நெஞ்சினால் உணர்த்தி எழுப்பினால் அது கண்ணனை பெறுவதற்கு உதவும் என்பதால் ஆகும். இப்படி வேண்டப்பட்ட நந்தகோபனையும், யசோதைப் பிராட்டியும் இவர்கள் உட்புகுவதற்கு இசைந்தமை தோன்ற, மூன்றாங்கட்டில் புகுந்து கண்ணனை உணர்த்துகின்றனர். இப்போது உலகளந்த வைபவத்தை எடுத்துக் கூறுகிறார். இவர்கள் இப்படி இரந்து எழுப்ப செய்தேயும், அவன் ‘இவர்கள் நம்பி மூத்த பிரானை எழுப்பாமல் நம்மை எழுப்புகின்றனர் ஆதலால் முறை கெடச் செய்தார்கள் என்று இவர்களுக்கு நாம் முகம் கொடுப்பது தகுதியன்று’ என்று பேசாதே கிடந்தான். செம்பொற் கழலடிச் செல்வா! என்று சொல்வதன் மூலம், தனக்குப் பின்பு ஸாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே!” என்ற ஆறாயிரப்படி அர்த்தம் கூறிய பலராமனை எழுப்புகிறார்கள். உம்பியும் நீயுமுறங்கேல் என்று சொல்வது, உனக்கு பவ்யனான தம்பியும் அவனுக்காக பவ்யனான நீயும், உறங்காது இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

எல்லாம் ஒன்றெயான வஸ்துவை தரலாகாதோ என்று, எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் நாங்கள், என்று சொல்லி, எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாயுள்ள கண்ணனை எமக்குத் தந்து எங்களை நன்றாக பார்த்து கொள்ளும் ஸ்வாமி நீயன்றோ என்கிறார்கள்.

தாயார் பாசுரம்
உந்துமத

இந்த பாடல், தாயாருக்கான பாசுரம். இந்த பாடலை தவிர, அங்கண் மாஞாலத்து என்ற இன்னும் ஒரே ஒரு  பாடலில் மட்டும்  தான் ஆண்டாள், எம்பெருமானின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் நந்தகோபன் மருமகளே  நப்பின்னாய் என்று தாயாரை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார், ஆகையால் கண்ணன் திருவுள்ளத்தில் கொண்டுள்ள நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் உந்து மதகளித்தன் என்ற இந்த பாசுரம், தாயார் பாசுரம் எனப்படும். கிருஷ்ணாவதாரத்திற்கு நப்பின்னை பிரதான மஹிஷி ஆதலால், எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டி முன்னாகப் பற்ற வேண்டும் என்ற பிரமாணம் இருப்பதால், இப்போது இவர்கள் நப்பின்னையைப் பற்றுவது.

பெருமிடுக்கைப் பெற்றுள்ள இவர் அஹங்காரம் சிறிதும் இன்றி, தாழ்ந்தார்க்கும் பரம சுலபராக இருக்கும் தன்மையைத் தெரிவிப்பது ‘நந்தகோபாலன், என்ற இவர் பெயர்.  நப்பின்னையை “கும்பர்மகளே!” என்று விளியாது “நந்தகோபலன் மருமகளே!” என விளித்தற்குக் காரணம், நப்பின்னை இளமையே தொடங்கி இங்கே வளர்வதினாலும், புக்ககத்தில் வாழ்வையே பெரிதாக மதித்து ஸ்ரீ நந்தகோபருடைய ஸம்பந்தத்தைத் தனக்குப் பெரும் பெறாக நினைத்து இருந்ததினாலும் இப்படி அழைக்கப்பட்டாள்.

நப்பின்னைக்கு அடையாளம் கூறும் போது, கோழி அழைத்தமையை அடையாளமாகக் கூறுகின்றனர். ’குருக்கத்திப் பந்தலின் மேற் கிடந்து உறங்கின குயிலினங்கள் பல்கால் கூவினமையையும் அடையாளமாகக் கூறுகின்றனர். உன் மைத்துனன் பேர்பாட என்று சொன்னது, எல்லையின்றி அவன் பெற்றுள்ள பல பெயர்களையும் சொல்லி வாயாரப் பாடுவதற்கு தாங்கள் வந்ததாக ஆச்சியர் கூறுகின்றனர்.

இந்த பாடலில் உள்ள எல்லா வரிகளும் தாயாரை பாடுகின்றன. அடுத்த பாசுரமான குத்து விளக்கு எரிய  பாடலில், ஆண்டாள், பெருமாளை பாட ஆரம்பித்து, பாதியில் திரும்ப தாயார் பக்கமே சென்று விடுகிறார்.  அதற்கு அடுத்த பாசுரத்திலும் (முப்பத்து மூவர்) பெருமாளிடம் ஆரம்பித்து, முக்கால் பாசுரம் முடிந்த பின்பு தாயாரிடம்  வந்து, தன்  கோரிக்கையை வைக்கிறார். இந்த பாடல்களுக்கு பின் ஏற்றகலங்கள் என்ற பாடல் முதல் திரும்பவும் எம்பெருமான் பற்றி பாடுகிறார்.

கண்ணன் திருபள்ளிஎழுச்சி

குத்துவிளக்கு

சென்ற பாட்டினால், நப்பின்னைப் பிராட்டியை உணர்த்திச் “சீரார் வளை ஓலிப்ப வந்து திறவாய்” என வேண்டிய பிறகு, அவள், கதவைத் திறப்போம் என்று எழுந்து புறப்பட, அடுத்த பாடலான குத்து விளக்கு என்ற பாடலில், அதனைக் கண்ட கண்ணன், “நம்மைப் பற்றினாரை, இவள் தன் அடியாராக அபிமானிப்பது போல, நாமும் இவளைப் பற்றினாரை நம்மடியாராக அபிமானிக்க வேண்டியது’ என்று ஆன பின்பு நம்முடையாரான இவ்வாய்ச்சியர்கட்கு இவளுக்கு முன் நாம் காரியம் செய்ய வேண்டும் ‘, எனக் கருதி, தான் சடக்கென எழுந்து நப்பின்னையைக் கதவு திறக்க வொட்டாமல், மற்கட்டாகக் கட்டிப் பிடித்து இழுத்துப் படுக்கையில் தள்ளித் தானும் அவள் மேல் விழுந்து, அவளுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் தானும் மயங்கி, ஆய்ச்சியர்கள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க, இவர்கள் அவனை எழுப்பின அளவில், நப்பின்னை, ‘நம் முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சியர்களின் வெறுப்புக்கு நம்மை உறுப்பாக்கின இவனை வாய் திறக்க விடுவதில்லை,’ என்று அவனை சிக்கெனக் கட்டிக் கொண்டு, அவனை விடை சொல்ல வல்லமை இல்லாதபடி கிடக்க வைத்து, இப்படி மீண்டும் இவளை உணர்த்துவதும் கண்ணனை உணர்த்துவதும் என்று இருக்கிறார்கள். இவர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் அடியவர்களுக்காக மல்லு கட்டிக்கொண்டு ஒரு மிதுனமாக இருப்பது நமக்கு தஞ்சம் என்பது விளங்கும். இவர்கள் சேர்ந்து இருந்து நேரம் சென்றால் கூட, புருஷக்காரத்திற்கு உதவுவதாகவும், தனியே வந்தால் தாங்கள் கேட்டுக்கொண்ட காரியம் நிறைவேறும் என்றும் ஆச்சியர்கள் கருதுகிறார்கள். உனக்காகத் தானே அவன் புறப்படாமல் இருக்கிறான். அவன் பிரிந்தால் நீ தாங்க மாட்டாய். எங்கள் பக்கம் இருந்து நீ இப்படி செய்வது தருமமன்று என்றும் சொன்னார்கள்.

முப்பத்து

சென்ற பாட்டில் “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சியர்கள், தங்கள் ஆற்றாமையினால் வருத்தம் தோன்ற சில குற்றம் கூறினாலும், எம்பெருமானுடைய திருவுள்ளம் அறிந்து, ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பம் செய்வோம் என்று எண்ணி, நப்பின்னை பேசாதே பள்ளி கொண்டு இருந்தாள். அவளை பற்றினாலும் காரியம் செய்யும் அவன், இவள் தன்னையும் பேச விடாமல் இருந்ததை கண்டு, பேசாது கிடந்தான். அவளோடு பரவசப்பட்டுள்ள கண்ணனையும் “நப்பின்னைப் பிராட்டியை குறை கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகம் காட்ட வேண்டாம்” என்று சீற்றமுற்றிருக்கக் கூடும் என்று சந்தேகித்த ஆய்ச்சியர்கள், மீண்டும் கண்ணனை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பேசித் துயிலெழ வேண்டின போதும், அவன் வாய் திறவாது இருக்க, இந்த ஆய்ச்சியர்கள், நப்பின்னையின் பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியும் என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் கூறி ஏத்தி, “நங்காய்! எங்கள் மனோரதத்தை முடித்து அருள வேண்டும் என்று முப்பத்து மூவர் என்ற இந்த பாடல் கூறுகிறது. திருவே துயிலெழாய் என்று சொன்னது, பிராட்டியின் திருநாமத்தை நீ வஹிப்பதற்கு இணங்க அவளுடைய குணங்களும் உனக்கு வர வேண்டாமா, பெண்களின் வருத்தம் அறியாதவனை போல உறங்கலமோ, அவன் அடியார்க்காகப் பத்து மாதம் பிரிந்து ஊண் உறக்கமற்றுச் சிறையில் அகப்பட்டுப் பட்ட பாடுகளை, நீ ராமாயணத்தில் கேட்டு அறிவாயோ, அவ்வளவு வருத்தமும் நீ படவேண்டா’ எங்களுக்காக இப்போது துயிலெழுந்தால் போதும் என்கிறார்கள். விசிறியும் கண்ணாடியும் தரும்படி வேண்டினது மற்ற வேண்டியவை எல்லாவற்றையும் கேட்டதற்கு சமமாகும். இப்போதே என்றது இந்த நொடி தப்பினால் பின்பு ஊராரும் இசைய மாட்டார்கள், நாங்களும் உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். எம்மை என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்.

ஏற்றகலங்கள்

சென்ற பாட்டில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பின பின்னர், அவள் உணர்ந்து எழுந்து வந்து “தோழிகளே, நான் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்தைக் குறையற முடிக்கிறேன்’ நீங்கள் இறையும் வருந்த வேண்டாம்’ நாமெல்லாரும் கூடி, கண்ணனின் குண நலன்களில் தோற்றார் தோற்றபடியே சொல்லி, இளையபெருமாளை போல, குணங்களுக்கு தோற்று வந்தோம் என்று சொல்லி, வேண்டி நப்பின்னைப் பிராட்டியுமும் உட்பட அனைவருமாகக் கூடிக் கண்ணன் வீரத்தைச் சொல்லி ஏத்தி, அவனை உணர்த்தும், ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி என்ற பாசுரம்.

கண்ணன் கடாக்ஷம்

சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேண்டுதல்

அங்கண்

“நந்த கோபன் மகனே” என்று அழைத்ததற்கு காரணம், அவன் இன்னும் பரமபதத்தில் இருப்பதாகவும், திருபாற்கடலில் இருப்பதாகவும், சக்கரவர்த்தி திருமகனாகவும் இருப்பதாகவும், நந்தகோபர் மகனாக இருப்பதை உணரவில்லை என்கிறார்கள். நீ இந்த திருவாய்ப்பாடியில் நந்தகோபர்க்குப் பிள்ளையாய் பிறந்தது இப்படி கிடந்து உறங்கவோ, எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ என்று சொல்வதை கூறும். சத்ருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று. அவை பிடரியைப் பிடித்துத் தள்ளத் தள்ள வந்தாற் போலே, நாங்கள் அவனுடைய ஸௌந்தரிய ஸௌசீல்யாதி குணங்களை பிடித்திழுக்க வந்தோம் என்று சொல்கிறார்கள். வலிதொலைந்து என்று சொன்னது, வணங்கா முடிகளாக இருப்பதற்கு காரணமான முரட்டுத்தனத்தை முடித்துக் கொள்ளுவது. ஆற்றாது வந்து என்று சொன்னது இராமபிரான் ப்ரஹமாஸ்த்ரம் தொடுத்து விடும்படி பிராட்டி விஷயத்தில் மஹா அபசாரப்பட்டு, எத்திசையும் உழன்றோடி, எங்கும் புகலற்று, இளைத்து விழுந்த காகம் போல் என்று கொள்ளலாம்.

சென்ற பாட்டில், “மாற்றாருனக்கு வலிதொலைந்து” என்று சொன்னதால் தாங்கள் போக்கற்று வந்ததை கூறினார்கள். அம்கண் மா ஞாலத்து அரசர் என்ற இந்த பாடலில் “இன்னமும் இவர்களுடைய உள் மனத்தில் உள்ளதை அறிய வேண்டும்” என்று கண்ணன் பேசாதே இருக்க, அது கண்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எங்களுக்கு நீ தான் புகல் ஆகாமல் போனாலும் வேறொரு புகலைத் தேடி ஓடாதபடி நின்ற எங்களை நீ கடாக்ஷித்து அருள வேண்டும் ” என்று பிரார்த்திக்கும் பாசுரம். தங்கள் அங்கீகாரம் பெற்றால் திரும்ப செல்ல வேண்டாம் என்று விபீஷணன் சொல்லியது போல, இந்த ஆச்சியர்களும் இவன் அங்கீகாரம் பெற்றால் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள். ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரை மலர் பாதி மூடியும், பாதி திறந்தும் என்று கொண்டு, கண்ணனுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர். கண்ணனுடைய திருக்கண்கள். சேதனருடைய குற்றம் குறைகளை நினைத்துப் பாதி மூடியும், அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்தும் இருக்கும் ஆதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும். முதலிலேயே பூர்ண கடாக்ஷம் செய்து அருளினால் தாங்கப் முடியாதென்று, சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேணும் என்கிறார்கள்.

புறப்பாடு காண விழைதல்

மாரி மலை

மாரி மலை முழைஞ்சில் என்ற இந்த பாடலில் இந்த ஆய்ச்சியர்கள் நப்பின்னை பிராட்டி சம்பந்தமே நமக்கு ஏற்றமாகும் என்று நல்லவர்கள் சொன்னதை மனதில் வைத்து இருந்தும், “சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்று வேறு புகலற்று வந்து விழுந்தோம் என்று நம்மை முன்னே இப்படி சொல்கிறார்கள் என்றதைக் கேட்டு, தனக்கு தானே வருந்தி, உடனே கண்ணன் வந்து, உணர்ந்தருளி, “பெண்களே மிகவும் வருந்தி இவ்வளவு வரை வந்தீர்களே, உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குகை அன்றோ எனக்குக் கடமை, என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்கள் அன்றோ, யாரேனும் பகைவர் கையில் அகப்பட்டு, வருத்தமுற்று, நம்மிடம் வந்து முறையிட்டால், நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று, உங்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு முன்னமே வந்து உங்களை காப்பாற்ற வேண்டிய கடமையை உடைய நான் அப்படி முன்பே வரா விட்டாலும் வருத்தம் நேர்ந்தவுடனே ஆகிலும் வந்து உதவி இருக்கலாமே, அப்படியும் வந்து உதவி செய்ய வில்லையே, வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்வரை நான் இருந்தேனே’, என்று வருந்துகிறார்.

விபீஷணன், தான் ராவணன் தம்பி என்றும் ஆராயாமல் ஏற்றுக்கொள்வாயே என்று போற்றி பாடிய போது, இலங்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கும் நாம் தானே காரணம், நீர் இருந்த இடத்திற்கு வந்து உனக்கு அருள் பாலிக்காமல் இருந்தது தன் குறை அன்றோ என்று இராமபிரான் சொன்னதை போலவே உள்ளது என்கிறார். மேலும் ஆண்கள் விஷயத்திலேயே இப்படி என்றால் பெண்கள் விஷயத்தில் உங்களை எப்படி இந்த இடம் வரை வைத்தேன் என்று வருந்துவதையும் சொல்கிறார். என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும்’ என்று அஞ்சி நடுங்கிக் கூறும் முறையை உடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையே அன்றோ உங்களை நான் இவ்வளவு வருத்தம் உறுத்தியதைப் பற்றி வேண்டுகின்றேன். இனி உங்கள் காரியத்தைக் குறையறத் தலைகட்டித் தருகின்றேன்: உங்களுக்கு நான் செய்ய வேண்டியது என்ன ?” என்று சொல்ல, அதனைக் கேட்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! எங்களுடைய மனோரதம் இப்படி ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்யக் கூடியது அன்று, பெரிய கோஷ்டியாக எழுந்து அருளி இருந்து கேட்டருளவேணும்” என்று புறப்பாடு ஆக வேண்டிய கிரமத்தை விண்ணப்பம் செய்யும் மாரி மலை முழைஞ்சில் என்ற இந்த பாசுரம். சிங்கம் பிறக்கும்போதே, “மிருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெற்றதால் சீரியசிங்கம் எனப்பட்டது. கண்ணனும் நரஸிம்ஹாவதாரத்தில் சில பாகம் சிங்கமாகவும் சில பாகம் மானிடராகவும் மட்டும் இன்றி “சிற்றாயர் சிங்கம்” “யசோதை இளம் சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாக இருப்பதால், சீரிய என்னும் அடைமொழி கொடுக்கபட்டது. இவர்கள் எம்பெருமானை வேறு ஒரு பயனுக்கும் இன்றி இவன் இருந்தபடியே அப்படியே ஏற்று கொண்டவர்கள் ஆதலால், தீவிழித்து, சீற்றம், சீரிய சிங்கம், அறிவுற்று என்று இந்த எல்லாவற்றையும் போக்கியமாக கொண்டவர்கள் இவர்கள். புறப்பட்டு என்று சொன்னதற்கு, உன்னுடைய மேன்மைக்கும், சௌரியத்திற்கும், காம்பீரியத்திற்கும் உதாரணமாக சிம்மத்தை சொன்னோம் அன்றி, இரண்ய, இராவணர்கள் முன்னே இருந்தபடி நின்ற சிங்கத்தை சொல்லவில்லை என்கிறார். பூவை பூவண்ணா என்று சொன்னது, பிரிந்தார்க்கு பிழைக்க முடியாத வடிவழகு என்று சொல்வது புரியும். “யாம்வந்த காரியம்” என்று சொன்னது, இப்போதே இவர்கள் வந்த காரியம் இன்னது என்று சொல்லாமல், சற்று நேரம் சென்று விண்ணப்பம் செய்வோம் என்று இருக்கிறார்கள். அதாவது “சிற்றஞ்சிறுகாலே” என்ற பாட்டில் விண்ணப்பம் செய்கிறார்கள். 

எம்பெருமானை போற்றி பாடுதல்

அன்று

பாரதப் போரில் அர்ஜுனன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டு போய் நிறுத்து’ என்று சொல்ல, அப்படியே செய்த கண்ணன், பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதவன் ஆதலால் அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்களே, இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித் திருப்பள்ளியறையில் இருந்தும், திவ்ய சிம்மாசனம் வரை வரத் தொடங்க, அதனைக் கண்ட ஆய்ச்சியர்கள், பல ஆண்டு காலமாக தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராம பிரானைக் கண்டவுடனே ராக்ஷகசர்களால் நமக்கு நேரும் துன்பங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று காத்து கொண்டு இருந்தவர்கள், இராமபிரானைக் கண்டவுடன் ராக்ஷஸ துன்பங்களை மறந்து, மங்களா சாஸநம் பண்ணத் தொடங்கினாற் போல, இவர்களும் தங்கள் மனோரதங்களை எல்லாம் மறந்து ‘இந்த திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது!’ என வருந்தி அந்த திருவடிகளை எடுத்து முடி மேல் புனைந்து கண்களில் ஒற்றிக் கொண்டு, முன்பு உலகளந்து அருளினவற்றையும், சகடம் உதைத்தவாற்றையும் நினைந்து, இந்த திருவடிகளுக்கு ஒரு தீங்கும் நேராது ஓழிய வேணும் என்று மங்களாசாஸனம் செய்வதாய்ச் செல்லும் பாசுரம், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்ற பாசுரம். “அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி!” என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஆறு வார்த்தைகள் / கட்டளைகள். உன்னுடைய வீர சரித்திரங்களை ஏற்றி பேசியே உன்னை அனுபவிப்போம் என்கிறார்கள்.

அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்,  இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை ஆச்சியர்கள் குறிப்பிடுகிறார்.

ஆச்சியர்களின் வேண்டுதல்

ஒருத்தி

சென்ற பாட்டில் மங்களாசாஸனம் (வாழ்த்தி பாடிய) பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணன், ஒருத்தி மகனாய் என்ற இந்த பாட்டில், ‘பெண்களே, நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஸித்தம்; இது கிடக்க, நீங்கள் இந்த குளிரிலே உங்கள் உடலைப் பேணாமல் வருந்தி வந்தீர்களே. உங்களுடைய நெஞ்சில் ஓடுகிறது, வெறும் பறையேயோ, மற்று ஏதேனும் உண்டோ’ என வினவ, அது கேட்ட பெண்கள், பிரானே, உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வருகையாலே ஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்; பறை என்று ஒரு வ்யாஜத்தையிட்டு நாங்கள் உன்னையே காண்பதையே பேறாக நினைக்கின்றோம் என்று கூற, எம்பெருமான் நீங்கள் சொன்னபோது நாம் செய்தால், அதுவே சாதனமாக குற்றம் ஆகாதோ என்று கேட்க, அரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்த உனக்கு எங்கள் வேண்டுகோளை முடித்து தருவது மிகவும் எளியதே என்றும் எங்களை போன்ற சிலர் நோன்பு நோற்று பெற்றது எங்கள் நோன்புக்கு கிடைத்த வெற்றி என்னும் கருத்து தோன்ற என்று விடை கூறுவதாய்ச் சொல்லும் பாசுரம். ‘எங்களுக்கு நீ பிறந்துகாட்டவும் வேண்டாம் ; வளர்ந்து காட்டவும் வேண்டாம் ; கொன்று காட்டவும் வேண்டாம், உன்னைக் காட்டினால் போதும்’ என்ற கூறுகிறார்கள். “என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்றபடி அடியார்க்கு நீ வேறொன்றைக் கொடுக்காமல், உன்னையே கொடுக்கும் அவனாதலால், நாங்கள் உன்னையே வேண்டி வந்தோம்.

மாலே

‘பெண்களே “உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள், எம்மிடம் ஆசை / பிரியம் உடையவர்கள், என்னை தவிர வேறு ஒன்றுக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள், ஆகவே நீங்கள் வேண்டுவன எவை, இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணன் நியமித்து அருள, அது கேட்ட ஆய்ச்சியர்கள், ‘உன் முகவொளியை வெளியிலே கண்டு உன் திருநாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு உதவியாக இருப்பதோரு நோன்பை இடையர் நடத்தும் போது அது உன்னோடு சேர்க்கைக்கு இடையூறாக இருந்ததை கருதி இடையர்கள் பக்கம் நன்றி ‘நினைவாலே’ அந்த நோன்பை மேற்கொண்டோம் ; முன்னோர்கள் செய்வது உண்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களான அங்கங்களும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் மாலே மணிவண்ணா என்ற பாசுரம். நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது வேதங்களில் சொல்லபட்ட சரணாகதி விதிகள் போல அல்ல என்றும், பிரபல பிரமாணம் போல ஆகும் என்றும் மேலையார் செய்வனகள் என சொல்கிறார்கள். திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக் கொண்டு போகும்படி மங்கள தீபம் வேண்டும்; நெடும் தூரத்திலேயே எங்கள் கூட்டங்களைக் கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக் கொண்டு போவதற்குக் கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும் போது பனி தலை மேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டு வேண்டும்?  இந்த உபகரணங்களை எல்லாம் நீ தந்து அருள வேண்டும் என்கிறார்கள். உன்னுடைய சிறிய வயிற்றிலே பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து செய்ய முடியாதவற்றையும் செய்யவல்ல உனக்கும் கூட அரியது என்ற ஒன்று உண்டோ என்று கேட்கிறார்கள்.

எம்பெருமான் அருள தொடங்குவது

கூடாரை

சென்ற பாட்டில், சங்குகளையும், பறைகளையும், பல்லாண்டு இசைப்பாரையும், கோல விளக்கையும், கொடியையும், விதானத்தையும், அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆயர் மாதரை நோக்கிக் கண்ணன், “பெண்களே, நம்மோடு ஒத்த ஈச்வரன் இன்னொருவன் உண்டு என்றால் அன்றோ, நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த ஓரு சங்கு உண்டாவது; அன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேண்டும் என்று கேட்டீர்கள். ஒன்றினை தேடினாலும், பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையவே கிடையாது. நம் பாஞ்ச ஜந்யத்தையும், புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கையும், ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கத்தையும் தருகிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்;

இனி, ‘பறை’ என்றீர்களாகில், நாம் உலகளந்த போது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்; ‘பெரும்பறை’ என்றீர்களாகில், நாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயம் சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; அதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில், மிகவும் பெரிதான பறையாவது, நாம் *பாரோர்கள் எல்லாம், மகிழப் பறை கறங்கக் குடமாடுகிற போது, நம் அரையிலே கட்டி ஆடின ஓரு பறை உண்டு; அதனைத் தருகிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள்;

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு; அவரைப் போலே ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று உங்களையும் நம்மையும் சேர்த்துக் காப்பிடுகை, அன்றியே “பொலிக பொலிக பொலிக!” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கள்;

இனி, கோல விளக்குக்காக உபயப் பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்;

அதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருடக்கொடி ஓன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும் பெரிய திருவடியைக் கொண்டுபோங்கள்;

அதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இந்த திருவாய்பாடிக்கு வரும் போது நம் மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல் விதானமாய் வந்த நம் அனந்தனைக் கொண்டு போங்கள்; இவ்வளவு தானே நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது” என்று சொன்னார்.

இது கேட்ட பெண்கள், “பிரானே! மார்கழி நீராடப் போவதற்கு வேண்டியவை இவை; நோன்பு நோற்று முடிந்த பின்னர் நாங்கள் உன்னிடத்துப் பெறவேண்டிய பல விசேஷங்களுள் அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேண்டும் என்று ப்ரார்த்திக்கும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரம்.

“நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று சத்தியம் பண்ணின இவர்கள் இன்று நோன்பு நோற்று முடிப்பதாலே “பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார” உணவை வேண்டுகிறார்கள். “கூடியிருந்து குளிர்ந்து” என்று சொல்வது, பசி தீருகைக்காக உண்ண வேண்டுவது அன்று, பிரிந்து பட்ட துயரம் எல்லாம் தீருமாறு எல்லாரும் கூடிக் களித்திருக்கை சிறந்தது என்று சொல்வதாகும்.

அடுத்த விண்ணப்பம்

கறவைகள்

மார்கழி நீராடுவான் என்று நோன்பை அறிவித்து, அந்த நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும், நோன்புதனை முடித்த பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும் அன்புடன் சுற்றங்களுடன் கூடிக் குளிர்ந்து பால் சோறு உண்பதும் சென்ற இரண்டு பாடல்களால் பாடிய ஆய்ச்சியர்களை நோக்கிக் கண்ணன், பெண்களே, உங்களுடைய கருத்து இவ்வளவு என்று எனக்கு தோன்றவில்லை; நீங்கள் இப்போது சொன்னவற்றையும் இன்னும் சில கேட்டுக்கொண்டாலும், அவற்றையும் நான் தர வேண்டில், உங்களுடைய நிலைமையை அறிந்து தர வேண்டி உள்ளது.

பேறு உங்களது தான் என்று ஆன பின்பு நீங்களும் சிறிது முயற்சி உடையீர்களாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அநுஷ்டித்த உபாயம் ஏதாவது உண்டோ என்று கேட்டருள அது கேட்ட ஆய்ச்சியர்கள்,  ‘எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறாயே என்றும், அறிவு இல்லாத நாங்கள் எடுத்துக் கூற வேண்டும்படி நீ உணராதது ஒன்று உண்டோ என்றும் எங்கள் நிலைமையை நன்கு உணர்ந்த நீ எங்களிடம் வினவியது மிக அற்புதமாய் இருக்கிறது”  என்று தங்கள் ஸ்வரூபம் இருக்கும்படியை அறிவித்து, இந்த இடைப்பெண்கள் கேவலம் தயா விஷயம் என்று திருவுள்ளம் பற்றி நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் கறவைகள் பின் சென்று பாசுரம் இது.

  • எம்பெருமானே சாதனம் என்று இருப்பவர்களுக்கு, பேற்றுக்கு தங்களிடம் சாதனமாக ஒரு நல்ல கருமமும் இல்லை என்பதும்,
  • தங்களுடைய இயலாமையை அனுஸந்திக்கையும்,
  • ஈச்வரனுடைய குணபூர்த்தியை அனுஸந்திக்கையும்,
  • ஸம்பந்தத்தை உணருகையும்,
  • பூர்வ அபராதங்களுக்கு மன்னிப்பு கோருவதும்
  • ஈச்வரன் பக்கம் அவனை அடைய வழியையும் வேண்டிக் கொள்வதும்

ஆகிய இந்த ஆறு அங்கங்களும் கைங்கர்யம் வேண்டும் அடியவர்களின் அதிகாரங்களாக இந்த பாட்டில் வெளியிடப்படுகின்றன. ஆச்சியர் இன்னது செய்தார்கள், இவன் இன்னது செய்தான், என்று நாட்டார்க்குச் சொல்லுகைக்கு ஒரு காரணம் வேண்டுமே’ என்று இவன் சொல்ல, ஆய்ச்சியர்கள், ‘ஒன்றையும் எதிர்பாராமல் நீ காரியம் செய்தால் உன்னை விலக்குகைக்கு உரியார் உண்டோ?’ என்கிறார்கள்.

எங்களை பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்; எங்களையும் உன்னையும் பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்; உன்னை பார்க்காமல் எங்களை மட்டும் பார்த்தால் நாங்கள் இழக்கிறோம். எங்களை பார்க்காமல் உன்னை மட்டும் பார்த்தாலும் நாங்கள் பெறுகிறோம். இப்படி ஆன பின் எங்கள் ரக்ஷணத்திற்கு உன்னை நாங்கள் விடலாமோ என்கிறார்கள். எங்களுக்கு அறிவில்லை என்பதால் நன்மை இல்லை என்றோம்; நீ நன்மைக்கு துணை என்றோம்; நீ பூர்ணன் என்றோம்; சுலபன் என்றோம்; உன்னோடு எங்களுக்கு என்றும் மாறாத சம்பந்தம் உண்டு என்றோம்; எங்கள் தப்புக்கு மன்னிப்பு கேட்டோம்; இனி நாங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. இனி நீ உன்னை இழவாமல் காரியம் செய்ய பார்; உன் ஞான சக்திகளுக்கு குறைவில்லாமல் இருந்தது; எங்களுக்கும் அறிவில்லாமை முழுமையாக இருந்தது. குற்றங்களை பார்த்து சீர முடியாதவனாக எல்லா விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாக நீ இருந்தாய்; பிராப்தி விஷயமாக எங்களை சோதிக்காமல் ஏற்று கொள் என்ற எங்கள் வேண்டுகோளையும் ஏற்று கொள்ள கூடாதோ என்றும் உபாய பூர்த்தியையும் சொல்லி, புகுந்த எல்லா குறைகளையும் மன்னித்து எங்கள் பிராப்த சித்திக்கு நீயே உபாயம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாடல்.

எம்பெருமான் அருள்வது

சிற்றம்

நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் சுருக்கமாக சொல்லிய ஆச்சியர்கள் இந்த பாட்டில் பிராப்ய பிராபகங்களை விவரிக்கிறார். பறை என்று அடைய வேண்டியதை முதலில் சொல்லி, தருவான் என்று பிறகு சாதனத்தை சொல்கிறார்கள்.

சென்ற பாடல்களில் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சியர்கள் அந்த பறையின் பொருளை விவரித்து விண்ணப்பம் செய்யும் பாசுரம், ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை காரணமாகக் கொண்டு வந்து புகுந்தோம். இதனை தவிர, எங்களுக்கு மிகவும் சிறந்தது என்று நாங்கள் நினைப்பது, உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் செய்வதுதான். இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிய முடியாது; வேறு ஒருவகையான விருப்பமும் எங்களுக்கு பிறவாத வண்ணம் நீயே அருள் புரிய வேணும்’ என்று அவன் காலைக் கட்டி நிற்கிறார்கள். ‘உன்னை அல்லால்  எங்களுக்கு வேறு ஒருவரும் இல்லை’, ‘உன்னை அல்லால் வேறு ஒரு போக்கியமும் இல்லை’, ‘உன்னை அல்லால் வேறு ஒன்றும் உபாயம் ஆகபோவது இல்லை; என்று இருப்பவர்கள் நாங்கள் என்கிறார்கள். நித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் இருப்பைத் தவிர்த்து, இந்த இடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாமோ, எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாது போனால் உன்னுடைய இந்த அவதாரம் / இந்த பிறவி பயனற்றதாகும் என்கிறார்கள். எம்பெருமானுடைய பிறவி தோறும் சேர்ந்து பிறக்கும் பிராட்டியைப் போலே, தாங்களும் சேர்ந்து பிறந்து கைங்கர்யம் செய்ய நினைக்கிறார்கள். எங்களை ஆட்கொள்ள தோன்றிய உனக்கு நாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டாமா என்கிறார்கள்.

சரியான காலத்தில் உணர்வதும், பகவத் சந்நிதி ஏற வருகையும், சேவிக்கையும், விக்ரக அனுபவம் செய்வதும், அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும், ஆர்த்தி (விருப்பம்) பிரகாசிப்பிக்கையும், ஸ்வரூப விரோதிகளை போக்கி தர விண்ணப்பம் செய்வதும், கைங்கர்ய ருசி உடையார்க்கு சில ஸ்வரூப லட்சணங்கள் ஆகும் என்கிறார். இவற்றை எல்லாம் கண்ணன் திருமுகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள்.

பலஸ்ருதி

வங்கக்கடல்

தங்களுடைய மநோரதம் நிறைவேற்ற பட்டதை பிற்காலத்திலே அந்த கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இந்த பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி மகிழப்பெறுவர் என்று சொல்லும் பாசுரம். ஆண்டாள் தான் கிருஷ்ணன் இருந்த காலத்தில் இருந்தது போல இந்த மார்கழி மாத நோன்பு நோற்றதாக இந்த பாடல்களை பாடினாலும், அவளுக்கு பலன் கிடைத்தது. “ஸம காலத்திலே அநுஷ்டித்தது ஒரு பாதியும், அநந்தர காலத்தில் அனுக்காரத்தாலே (செய்வதால்) ஒரு பாதியும், பிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்கும் என்று ஆறாயிரம் சொல்வது. திருவாய்பாடியிலும் பின்பு பரமபதம் சென்றால் அங்கும் எம்பெருமானின் திருவருள் பெற்று இன்புறுவர் என்று சொல்கிறார்.

விடியும் போதே எழுந்திருந்து முப்பது பாட்டையும் தப்பாமல் அநுஸந்தித்தல், சிறந்தது, முடியாதவர்கள் ‘சிற்றஞ்சிறுகாலை’ என்கிற பாட்டை அநுஸந்தித்தல் வேண்டும். அதுவும் முடியாதவர்கள் நாம் இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்வர்.  “நாம் இருந்த விருப்பை” என்றது அவர் இப்பிரபந்தத்தை அநுஸந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை சொல்கிறது.இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்குப் பலம் சொல்லி முடிக்கிறார். இந்த பிரபந்தத்தின் பயனைச் சொன்ன இந்தப் பாசுரம் திருநாமப் பாட்டென்றும், பல சுருதி என்றும் சொல்லப்பெறும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading