பெரியாழ்வார் திருமொழி – ஒரு பார்வை

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்பது 461 பாசுரங்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகவும், திருப்பல்லாண்டு என்ற 12 பாசுரங்களையும் ஒரு பிரபந்தமாகவும் பெரியாழ்வார் அருளி பாசுரங்கள் 473 ஆகும். அதன் கண்ணோட்டமாக, உயர்நிலை சுருக்கமாக, இந்த பதிவினை காணலாம். இன்னும் ஒவ்வொரு பாடலின் விளக்கமும் பார்க்க விரும்பினால், இங்குள்ள பத்திகளின் தலைப்புகளை சொடுக்கி அங்கே சென்று அனுபவிக்கலாம்.

திருபல்லாண்டு

திருப்பல்லாண்டு தனியாக ஒரு பிரபந்தம் என்றாலும், இதனை பெரியாழ்வார் திருமொழியின் முதல் பதிகமாக (1.1) எடுத்துக் கொண்டு இங்கே காண்போம்.

எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் அதிக பிரேமையும், பக்தியும் காதலும் மரியாதையும் கொண்டு உள்ளார்கள். பெரியாழ்வார், மற்ற எல்லா ஆழ்வார்களையும் விட, பெருமாளின் மேல், பக்தியும் காதலும் மரியாதையும் மட்டும் இல்லாமல், சிறிது அதிகமாகவே பொறுப்பையும், கூடவே அதிக பரிவையும் கொண்டு உள்ளார். இதனை நம் பெரியவர்கள், பொங்கும் பரிவு என்றும், ஒரு தாய், தன் குழந்தையிடம் காட்டுவதைவிட சற்று அதிகமான அன்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய அன்பே, பெரியாழ்வாரை, “பல்லாண்டு பல்லாண்டு” என்று பாட வைத்தது. இந்த பல்லாண்டு பாசுரமே உலகில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் காலையில் சொல்லும் முதல் ஸ்லோகம் ஆகும். அதே போல், பல்லாண்டு பாசுரமே, நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பின் முதல் பாடலும் ஆகும்.

12 பாசுரங்கள் உள்ள இந்த பல்லாண்டு தொகுப்பில், பெரியாழ்வார் எம்பெருமானை பற்பல ஆண்டுகள் நன்றாக வாழ மனமார வாழ்த்துகிறார்.  அதற்கு காரணம், எம்பெருமான் நன்றாக இருப்பதால்தான், நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியம் என்று பெரியாழ்வார் நம்புகிறார்.   இதற்கு திருப்பல்லாண்டு என்று பெயரிட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்  முதலில்  வைத்து உள்ளார்கள். மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில் வேதத்திற்கு ஓம் என்பது முதல் வார்த்தையாக இருப்பது போல், திவ்யப் பிரபந்தங்களுக்கு முதல், திருப்பல்லாண்டு என்பது என்கிறார்.

இந்த திருபல்லாண்டு பிரபந்தத்தில், ஆழ்வார், இங்குள்ள மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்களையும்  கருத்தில் கொண்டு பாடி உள்ளார்.

  • இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்,
  • பரமனையே வேண்டும் பகவன்லாபார்த்திகள் என்ற ஜீவாத்மாக்கள்
  • இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கைவல்யார்த்திகள் என்ற ஜீவாத்மாக்கள்

முதல் இரண்டு பாடல்களால், பெரியாழ்வார், எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார், அதன் பின் உள்ள பாடல்களால், பகவன்லாபார்த்தி, கைவல்யார்த்தி மற்றும் ஐஸ்வர்யார்த்திகள் என்ற மூன்று வகையாக மக்களையும் தனித்தனியே மூன்று பாடல்கள்(3,4,5) மூலம் வரவேற்றதையும், அடுத்த மூன்று பாடல்கள்(6,7,8) மூலம் அவர்கள் ஆழ்வார் குழுவுடன் சேர்ந்ததையும் , பின்பு அடுத்த மூன்று பாடல்கள் (9,10,11) மூலம் அவர்களுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதையும் ஆழ்வார் பாடுகிறார். திருப்பல்லாண்டில் ஆழ்வார், தான் மோக்ஷம் பெற வேண்டுவதோடு, இந்த மூன்று வகையான ஜீவாத்மாக்களையும், பரமாத்மாவை வாழ்த்தி பாடி மோக்ஷம் பெற அழைக்கிறார். இந்த விதத்திலும், பெரியாழ்வார் மற்ற ஆழ்வார்களில் இருந்து சிறிது வேறு படுகிறார்.

கண்ணன்

ஆழ்வார்களும், ஆச்சர்யார்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைகால வாழ்க்கையையே அதிகம் ரசித்துள்ளனர், அதேயே அதிகம் பாடியும் உள்ளனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் ஆட்சி செய்ததைப் பற்றியோ, மகாபாரதத்தில் பண்டவர்களுக்காக செய்த காரியங்களை பற்றியோ, தூது சென்றதைப் பற்றியோ, எம்பெருமானுடய மிக முக்கியமான படைப்பான பகவத் கீதையைப் பற்றியோ அதிகம் பாடவில்லை. அவர்களின் முன்னுரிமை இறைவனின் இளமைக் காலமே.

குழந்தை கண்ணன்

வண்ண மாடங்கள் சூழ் என்ற பதிகம் (1.2) முழுவதும், கண்ணன் மேல் உள்ள பரிவால், அவனது வளர்த்த தாய் யசோதையாகவே தன்னை கருதி கண்ணன் அவதாரம் செய்ய முடிவு செய்யபட்டதில் இருந்து தொடங்கி பாடுகிறார். திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீகிருஷ்ணனாக தோன்றிய காலம் தொட்டு, அங்கு உள்ளவர்கள் எல்லோரும் ஆனந்தம் அடைந்தது என்பதில் தொடங்கி பாடுகிறார். தேவர்கள் கூட்டமாக ஆலோசித்த இடம் ஆதலால் இதற்கு கோஷ்டீபுரம் அல்லது கோஷ்ட்டியூர் அல்லது திருகோஷ்டியூர் என்று அழைக்கபடுகிறது.

பதிகம் 1.2 ல், கண்ணனின் தோற்றத்தை பாடிய ஆழ்வார், சீதக்கடல் (1.3) என்ற அடுத்த பதிகத்தில், யசோதை கண்ணனின் அழகினை திருவடிகளில் இருந்து திருமுடி வரை (பாதாதி கேசம் வரை) அனுபவித்ததை பரிவுடன் சொல்லி இருக்கிறார். ஆழ்வார் நன்றாக அனுபவித்து பாடியதால், இந்த பதிகம் மட்டும் தான் 21 பாசுரங்கள் உள்ள நீண்ட பதிகம்,

மாணிக்கம் கட்டி(1.4), என்ற அடுத்த பதிகத்தில் யசோதை, குழந்தையை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டிய அனுபவத்தை பாடுகிறார்.

தன் முகத்து சுட்டி (1.5) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணன் தவழ்ந்து விளையாடும் பருவதிற்கு வந்த பிறகு குழந்தை கண்ணனுக்காக, ‘சந்திரனை வா’ என்று கண்ணனின் மேன்மையும் எளிமையும் உணர்த்தும் வண்ணம், யசோதை கூப்பிடும் அனுபவத்தை ஆழ்வார் பாடுகிறார்.

உய்ய உலகு படைத்து உண்ட (1.6) என்ற அடுத்த பதிகத்தில், கண்ணன் அதே பருவத்தில் ஆடக்கூடிய செங்கீரை ஆடுவதை பார்க்க விரும்பும் யசோதையின் குரலாக, ஆழ்வார், எம்பெருமானின் இந்த திருஅவதாரத்தின் லீலைகளையும், மற்ற திருஅவதார குணநலங்களையும், எம்பெருமானின் ஐந்து நிலைகளின் பெருமைகளையும் சேர்த்து பாடுகிறார்.

மாணிக்க கிண்கிணி (1.7) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணனை சப்பாணி கொட்டுகிற சிறு வயது லீலைகளை காண யசோதை வேண்டியதை ஆழ்வார் பாடுகிறார்.

தொடர் சங்கலிகை (1.8) என்ற அடுத்த பதிகத்தில் அந்த கண்ணனின் தளர் நடை பயிலும் அழகினை யசோதை ரசித்ததை ஆழ்வார் விவரமாக சொல்கிறார்.

பொன்னியல் கிண்கிணி (1.9) என்ற அடுத்த பதிகத்தில், அவன் ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும் விதத்தை எப்படி யசோதை ஆசைப்பட்டு அனுபவித்தாள் என்று ஆழ்வார், இந்த அவதாரத்திலும் மற்ற அவதாரங்களில் செய்த லீலைகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்.

வட்டு நடுவே (1.10) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணன் யசோதையின் முதுகினை பின்னால் இருந்து எப்படி கட்டிக் கொள்கிறான் என்று பாடுகிறார்.

கண்ணன் விளையாட்டு

சென்ற பதிகங்களில் யசோதை தன் மகன் கண்ணன், தன்னை அச்சோ அச்சோ என்று முன் பக்கத்திலும் முதுகிலும் கட்டி கொள்ளும் அனுபவங்களை, தன்னையே யசோதையாக பாவித்து, ஆழ்வார் பாடிய பாடல்களை பார்த்தோம். இப்பொழுது சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடுவதை அனுபவிக்க வேண்டும் என்று அவதாரத்தின் மெய்ப்பாடு தோன்ற மெச்சூது சங்கம் இடத்தான் (2.1) என்ற அடுத்த பதிகத்தில் ஆழ்வார் பாடுகிறார். அப்பூச்சி காட்டுவது என்பது எதிரிகளுக்கு பயம் வரும் படி கண்களை இறுக்கி கொள்வது, முகத்தில் தலைமுடியை போட்டு மூடி கொள்வது போன்ற லீலைகளை செய்வது.

அரவணையாய் ஆயரேறே (2.2) என்ற அடுத்த பதிகத்தில், குழந்தை பால் உண்ணாமல், மறந்து அயர்ந்து தூங்குவதை கண்டு, கண்ணனை எழுப்பி, முலை உண்ண வருமாறு அழைத்து, அவன் வராமல் இருந்தும், விடாமல் அவன் மேல் உள்ள பாசத்தால் அவனுக்கு பால் ஊட்டிய விவரத்தை ஆழ்வார் தம் காலத்தில் நிகழ்ந்தது போல் பேசி அனுபவித்து இனியவன் ஆகிறார்.

போய் பாடுடைய (2.3) என்ற அடுத்த பதிகத்தில் அவனுக்கு காது குத்த, அதற்கு வேண்டிய பொருட்களை சேகரித்து, அந்த திருவிழாவிற்கு ஆயர்பாடியில் உள்ள பெண்களை எல்லாம் அழைத்து, கண்ணன், நோகும் என்று அஞ்சி, மாட்டேன் என்று மறுத்த போதும், அவன் அஞ்சாது இருக்க வார்த்தைகளை சொல்லியும், அவனுக்கு பிடித்த பொருட்களை காட்டியும், அவனை உடன்பட செய்தததை, தன்னுடைய காலத்தில் நிகழ்வது போல அனுபவித்து ஆழ்வார் பாடுகிறார்.

தாயான யசோதை, இந்த அவதாரத்தின் பெருமை அறிந்து, அனுசரித்து, காது துளைகளை பெரிதாக்கி, காதணிகள் அணிவித்து, அந்த குழந்தையை மஞ்சனம் செய்ய வேண்டும் என்று அதற்கு தேவையான பொருட்களை சேகரித்து, திருமஞ்சனதிற்கு பிறகு தேவையான அலங்கார பொருட்களையும் சேகரித்து, கண்ணனை மஞ்சனதிற்கு அழைக்க, அவன் மறுக்க, மஞ்சனத்திற்கான காரணங்களையும் ஆழ்வார் சொல்கிறார். தான், புழுதி பொருந்திய பொன் மேனியை பார்க்க ஆசைபட்டாலும், காண்பவர்கள் எப்படி வளர்த்து இருக்கிறார் என்று பழிப்பர் என்றும், முக்கியமாக அவனுக்கு அபிமானமான நற்பின்னை பிராட்டி சிரிப்பாள் என்றும் சொல்லி அவனை திருமஞ்சனம் செய்ய அழைக்கும் பாசுரங்கள் உள்ள வெண்ணைய் அளைந்த (2.4) என்பது அடுத்த பதிகம்.

எல்லாம் தெய்வ யசோதை பெற்றாளே என்று சொல்லும் வண்ணம், திருஅவதாரம் தொடங்கி எல்லா அனுபவங்களையும் அனுபவித்த யசோதை மஞ்சனமாட வாராய், என்று அவனை அழைத்து, கஷ்டப்பட்டு, அவனை நீராட வைத்து, இப்போது அவன் குழல் வார அழைக்கிறார். அதற்கும் அவன் மறுக்க, பாசத்துடனும் மிரட்டியும் அவனை குழல் வார நிற்க வைக்கும் பாடல்களை பின்னை மணாளணை (2.5) என்ற அடுத்த பதிகத்தில் பெரியாழ்வார் பாடுகிறார்.

திருமஞ்சனம் முடிந்த பிறகு, கண்ணனின் குழலை வாரிவிட்ட யசோதை அதற்கு பூக்கூடி அழகு பார்க்க நினைக்கிறார். ஆனால் கண்ணன் மற்ற சிறுவர்கள் போல, பசுக் கூட்டங்களை மேய்க்க செல்ல விருப்பபட்டு அதற்கான கோலினை கேட்கிறான். அவனிடம் நேரிடையாக கொடுக்காமல் கோல் கொண்டு வா (2.6) என்ற அடுத்த பதிகத்தில் யசோதாவாகவே பாவித்து, ஆழ்வார் பாடுகிறார்.

தன்னுடைய தாயார் யசோதை, தனக்கு குழல் வாரிய பின், பூச்சூட்ட நினைக்கும் போது, கண்ணன் மற்ற குழந்தைகள் போல பசுக்கூட்டங்களை மேய்க்க கிளம்ப, கண்ணனும் கோல் வேண்டும் என்று கேட்க அதனையும் பல காரணங்கள் சொல்லி சமாதானம் செய்து, கண்ணனுக்கு செண்பக பூ, மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சி என்று பலவித பூக்களை சூட்ட ஆநிரை மேய்க்க (2.7) என்ற அடுத்த பதிகத்தில் யசோதையாக ஆழ்வார் அழைக்கிறார்.

கண்ணனுக்கு திருமஞ்சனம் செய்துவித்து, குழல் வாரி, மலர்கள் சூடி அழகு பார்த்த யசோதை, இந்திரனோடு பிரமன் (2.8) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணனுக்கு திருவந்தி காப்பு இட்டு திருஷ்டி கழிக்க அழைக்கிறார். சாயங்காலத்தில் பல தேவதைகள் கண்ணனை தரிசிக்க காத்திருகின்றன என்றும் உக்கர தேவதைகள் உலாவும் நேரத்தில் அங்கு இருக்க வேண்டாம் என்று சொல்லி பாடுகிறார். திருவெள்ளறை திவ்ய தேச எம்பெருமானையும் ஒவ்வொரு பாடலிலும் சேர்த்து ஆழ்வார் இங்கு பாடுகிறார்.

யசோதை, கண்ணனுக்கு பூ சூட்டி, காப்பிட்டு தன் அருகே படுக்க வைத்து, தானும் உறங்கிய அளவில், பிறகு தானும் தன்னுடைய வீட்டு வேலைகளை செய்தவளாக இருக்க, கண்ணன், மற்ற வீடுகளில் புகுந்து, அங்குள்ள வெண்ணையை விழுங்கி, அந்த பாத்திரங்களை உருட்டி, உடைத்து, காய்ச்சிய பாலை சாய்த்து பருகி, மற்ற பணியாரங்களை சாப்பிட்டு, அந்த வீடுகளில் உள்ள சிறு பெண்களை அழைத்து அவளிடம் இருந்து வளையல்களை எடுத்து, அதனை கொண்டு நாவற்பழம் வாங்கி, இப்படி பல தீங்குகள் செய்கிறான், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வந்து யசோதையிடம் முறையிட்டு கண்ணனை இங்கே அழைத்து கொள்வாய், என்று சொன்ன காரணத்தினால், அவளும், கண்ணனை பலவாறாக ஸ்தோஸ்திரம் செய்து, அவன் செய்த லீலைகளையும் சேர்த்து சொல்லி ‘வெண்ணைய் விழுங்கி(2.9) என்ற அடுத்த பதிகத்தில் ஆழ்வார் அழைத்து பாடுகிறார்.

சென்ற பதிகத்தில் மற்றைய வீட்டு பெண்கள், கண்ணன் வெண்ணைய், பால் இவற்றை எடுத்து தின்று செய்த தீம்புகளை சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு செல்ல யசோதையிடம் சொல்கிறார்கள். கண்ணன் ஊர் உலகங்களில் செய்த நவநீத லீலைகளை அனுபவித்த ஆழ்வார் ‘ஆற்றில் இருந்து’ (2.10) என்ற அடுத்த பதிகத்தில், அவன் இளமை காலத்தில் பெண்களுடன் செய்த குறும்புகளை அனுபவிக்கிறார். அவனோடு ஈடுபட்ட பெண்கள், யசோதையிடம் வந்து அவன் செய்த தீம்புகளை சொல்வதாக அமைந்த பதிகம். இங்கு, அவன் அடியவர்களை காப்பாற்றுபவனாக, எளியவனாக, அடியவர்களின் ஆசைகளை அறிந்து நிறைவேற்றுபவனாக, பூமி பிராட்டிக்காக பூமியை மீட்டுக் கொடுத்தவனாக, நற்குணங்கள் உடைய கண்ணனை, பூதனையின் கையில் அகப்படாமல் தங்களுக்கு விளையாட கொடுத்த கண்ணனின் பெருமைகளை சொல்லி, பின் தங்களிடம் குற்றம் செய்தான் என்றும் கூறினார்கள். அப்படி இருந்தும் அவன் இல்லாமல் தங்களால் ஜீவிக்க முடியாது என்றும், நாங்கள் முடிந்தோம் என்று சொல்லி பாடிய பாடல்களை ஆழ்வார் இங்கு அனுபவிக்கிறார்.

கண்ணன் குறும்புகள்

ஆயர்குல பெண்கள், கண்ணன் செய்த தீம்புகளை, யசோதையிடம் சொல்லி முறையிட்டதை, யசோதையை போலவே தானும் அனுபவித்து பாடிய ஆழ்வார், தன்னேராயிரம் பிள்ளைகளோடு (3.1) என்ற அடுத்த பதிகத்தில், யசோதை பல காலமும் அவனை அம்மம் உண்ண அழைத்து, அம்மம் ஊட்டியும், அவனுடைய மனிதர்களுக்கு அப்பாற்பட்ட லீலைகளையும் கண்டு, அவன் தன்னுடைய பிள்ளை என்ற எண்ணத்தை தவிர்த்து, அவன் ‘ஆயர் புத்திரன் அல்ல, அரும் தெய்வம்’, சர்வேஸ்வரன் என்று உணர்ந்து உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்று பலவாறு பாடிய பாடல்களை காணலாம்.

அம்மம் உண்ண துயில் எழாய் என்றும், மூலை உண்ண தருவன் என்றும் கண்ணனுக்கு கால காலத்தில் பால் உண்ண கொடுத்து, பின்னர் அவன் பலவித சேட்டைகள் செய்கிறான் என்று கேள்விபட்டு, இவன் உணவு உண்ண வேண்டும் என்று அழுத போதும், இவன் மீது புத்திர பக்திக்கு மேல், அவன் தேவதை என்ற பக்தி (தேவதா பக்தி) வளர்ந்து, இவனை அறிந்து கொண்டேன், இவனுக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்று பல சரித்திரங்களை சொல்லி அனுபவித்தவர், அஞ்சன வண்ணனை (3.2) என்ற பதிகத்தில் முன்பு சொன்னவைகளை உடனே மறந்து, புத்திர பக்தி தலையெடுக்க, பிராமணர்களுக்கு எப்படி பருவம் வந்தவுடன் பிரம்மசரியம் அனுஷிடிக்க கற்று கொடுப்பது போல், இடையர்களுக்கு பசு மேய்ப்பது தர்மம் என்று அவனை பசு கன்றுகள் மேய்க்க அனுப்பிய யசோதை, சற்று நேரத்திற்குள் ஐயோ, அவனை இப்படி கன்றுகளின் பின்னே அனுப்பி விட்டேனே, அவனுடைய சௌகர்யங்களுக்கு ஒரு குறையும் வர கூடாதே, குடையும் செருப்பும் கொடுக்காமல், கல்லும், முள்ளும், வெயிலும் உள்ள இடத்திற்கு போக செய்து விட்டேனே என்றும் சொல்லியவற்றை, தானும் சொல்லி ஆழ்வார் அனுபவிக்கிறார்.

ஆயர் குல வழக்கபடி கண்ணனை கன்றுகள் மேய்க்க அனுப்பிவிட்ட பிறகு, அவன் ஊரில் இருக்கும் போது செய்த விளையாட்டுகளையும் லீலைகளையும் சொல்லி, இப்படி அவனை திரியாமல் விட்டு, வெப்பமும் கடினமுமாக உள்ள காடுகளில் கன்றுகளை மேய்க்க விட்டோமே என்று தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தியதை பெரியாழ்வார் பாடல்களாக சொன்னார். சீலைக் குதம்பை ஒருகாது (3.3) என்ற அடுத்த பதிகத்தில் அவன் மேய்த்துவிட்டு திரும்பும்போது, அவனுடைய திருமேனியையும், அலங்காரத்தையும் பார்த்து வியந்து, அவன் மேல், மேலும் ஆசைகொண்டு, தன்னை போல பிள்ளையை பெற்றவர் யாராவது உண்டா என்று எல்லோருக்கும் சொல்லும் பாடல்களை, ‘கண்ணா, நாளை முதல் கன்றின் பின் போகேல், இங்கேயே இரு ‘ என்ற வண்ணம் அவன் செய்ய வேண்டியவைகளையும் தவிர்க்க வேண்டியவைகளையும் கூறுகிறார்.

நாளை தொட்டு எங்கும் போகேல், கோலம் செய்து இங்கேயே இரு’ என்று சொன்ன யசோதை, ஏழு நாட்கள் சென்று திருவோணம் கொண்டாடி விட்டு, பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கச் சென்று, அவை நன்றாக மேய்ந்ததால் சந்தோஷம் அடைந்து, கண்ணன் பலவிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, குழல் ஊதுவது சங்கீதம் பாடுவது என்று தன்னுடைய தோழர்களுடன் ஊர்வலமாக வருவது என்பதை திருவாய்பாடியில் உள்ள பெண்கள் மேல்மாடியில் இருந்து பார்த்து ரசிப்பதும், பார்த்து ரசித்தவர்கள் அங்கேயே நிற்பதும், அவன் அழகை காண்பதற்காக அவன் எதிரே வேறு வேலையாக வருவது போல வருவதும், அவன் அழகை பார்க்க வராதவர்களை அழைத்துக் கொண்டு வந்து காண்பிப்பதுவும் என்று அவன் பக்கம் காமம் கொண்ட பெண்களை பற்றி யசோதை ஆனந்தித்து பாடுவது போல அமைந்தது தழைகளும் தொங்கலும் (3.4) என்ற அடுத்த பதிகம்.

நாம் பிறந்து வளர்க்கிற ஊரில், ஒரு பொருளை இன்னொரு தேவதைக்கு கொடுப்பதா’ என்று கண்ணன், இந்திரனுக்கு இடுகிற சோற்றை விலக்கி, மலைக்கு இடுவித்து, அதனை அடைய, தான் அமுது செய்துவிடுவதால், இந்திரன் கோபம் கொண்டு மேகங்களை ஏவி பிருந்ததாவனத்தில் ஏழு நாட்கள் கல் மழை பொழிவித்தபோது, அதனை கோவர்தனகிரி என்ற கல் மலையை தாங்கி அங்குள்ள ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்றி, எதிரிகளை வீழ்த்தியும், அந்த மலையை தூக்கி நின்ற அழகையும், அதனால் அவனுடைய திருக்கரங்கள் நோகாததையும் அட்டுக் குவி சோற்று (3.5) என்ற பதிகத்தில், இப்படிபட்ட எம்பெருமானுடைய கல்யாண திருகுணமாக அடியவர்களை காப்பாற்றும்  ஆபத்சகத்வத்தை ஆழ்வார் அனுபவித்து பாடுகிறார்.

ஆழ்வார் நாவலம் பெரிய தீவினில் (3.6) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணன் குழல் ஊதிய போது நடந்த அதிசயங்களை அனுபவித்து பாடுகிறார். கண்ணன் பிருந்தாவனத்தில் திருக்குழல் ஊதும் போது, அந்த குழல் ஓசையின் வழியே, இளைய கோபிகள் சிலர் தங்களுக்கு வைத்த காவல்களையும் மீறி, இவன் நின்ற இடத்துக்கு வந்து இவனை சூழ்ந்து கொண்டு இருந்ததையும், இன்னும் சிலர் அவசரம் அவசரமாக ஓடி வந்து, இவன் அருகில் வந்ததும், நாணம் வந்துவிடவே, உடல் நெகிழ்ந்து தங்களுடைய உடைகள் தளரவே, அவற்றை ஒரு கையினால் பிடித்து அவனை கண்ணால் நோக்கி அங்கேயே இருந்ததையும், இன்னும் சிலர் இந்த குழல் ஓசையை கேட்டு, நெஞ்சு உருகி, திரண்டு, கண்கள் பனித்து, இதையே கேட்டு கொண்டு நின்றபடியையும், மேனகை, திலோத்தமை என்ற மேல் உலக நடனமாடும் பெண்கள், இவனுடைய குழல் ஓசையை மெய்மறந்து ரசித்து, தங்களுடைய நடனங்களை மாற்றியபடியையும், தும்பரு நாரதர், கின்னர மிதுனங்கள் முதலானோர், வீணையை மறப்பார், கின்னரம் தொடார், என்றபடி இவனுடைய குழலோசையின் ரசத்தில் ஈடுபட்டு இருப்பதையும், வான வீதியில் உலாவுபவர்கள் இவனின் அமிர்தமயமான நாத வெள்ளமாகிற வலையில் அகப்பட்டு செய்வது அறியாமல் இருப்பதையும், தேவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஹவிஸ் என்ற உணவுகளை மறந்து, திருவாய்பாடிக்கு வந்து, இவனின் இசையாகிற உணவை உண்டு அவனையே பின் தொடர்ந்ததையும், பற்பல பறவைகள் தங்கள் கூட்டை விட்டு வெளியே வந்து, இவனின் ஓசையில் அங்கேயே திரிந்ததையும், பசுதிரள்கள் கால்களை நன்றாக வைத்துக்கொண்டு செவிகளை திருப்பி, எம்பெருமானின் குழலோசையில் லயித்து நின்றதையும், மான்கள் மேய்வதையும் மறந்து அங்கேயே திரிந்ததையும், உயிரற்றவையும் (அசேதனங்கள்) உயிருள்ளவைகளை காட்டிலும் மிகவும் ஈடுபாடுடன் இருந்ததையும் தனிதனியே பேசி அவனுடைய திருகுழல் ஓசையை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் என்ற ஆழ்வார் மற்ற ஆழ்வார்கள் போல எம்பெருமானுடைய சௌந்தர்ய குணா விசேஷத்தை பாட விரும்பி, தன்னிலை மறந்து, ஒரு கன்னி கோபிகையின் அவஸ்தையை அவள் தாயார் பேசுவதாக ஐய புழுதி உடம்பு அளைந்து (3.7) என்ற அடுத்த பதிகத்தில் விவரிக்கிறார். அதாவது, பருவம் நிரம்புவதற்கு முன்பே, கிருஷ்ண விஷயத்தில் அதிக ஆர்வம் உள்ளவளாகவும், இவள் இளமையிலேயே அவனுடன் சேர்ந்து வருகிறதையும் இவள் கண்ணனுடன் செய்யும் லீலைகளை பற்றி பேசும் போது, அவனுடைய சின்னங்களை மட்டுமே பேசி, மற்ற ஒன்றினையும் அறியாதவளாக இருப்பதையும், இவை எல்லாவற்றிக்கும் மூல காரணமாக அவளுடைய தோழிகள் அவளை கிருஷ்ணனிடம் அழைத்து சென்றதையும், இவள் இப்படி பேசும் போது, அவர்களுடைய சொந்தங்கள் பேசுவதையும், மற்றவர்கள் பேசும் வார்த்தைகளையும் இந்த பதிகத்தில் ஆழ்வார் விவரிக்கிறார்.

தன்னுடைய மகள், கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு அவன் மேல் ஆசையினை வளர்த்து, அவனுடன் சேர்ந்து விடவேண்டும் என்று துடிப்பினால், முதலில் தாயானவள் சந்தேகப்பட்டு, பின்பு பல வழிகளில் தானும் அதன் உண்மை தன்மையை அறிந்து, இதனை அறிந்த சொந்தங்களும், ‘இவள் தானாக எம்பெருமானை தேடி ஓடி விடுவதற்கு முன்னர், தாயே அவனிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும்’ என்று சொல்லியதை தாயார் உடனே அப்படி செய்யாமல் இருந்ததனால், எம்பெருமானே வந்து தன் மகளை முந்தானையால் மறைத்து தன்னுடைய திவ்ய தேசமான திருவாய்பாடிக்கு கொண்டு சென்றான் என்கிறார். தாயார், மகள் காத்து கொண்டு இருப்பதாக நினைத்து இருக்க, படுக்கையில் பெண் பிள்ளையை காணாததால், கண்ணனை தவிர இவளை தூக்கி சென்றவன் வேறு எவரும் இல்லை என்றும், அவன் நிச்சயமாக திருவாய்பாடிக்கு தான் அழைத்து சென்று இருப்பான் எனவும், தன் மகள் சென்றதால், தன் திருமாளிகை அழகு இழந்து, வெறிச்சோடி போனது என்றும், இவன் இப்படி அழைத்து கொண்டு சென்றது இந்த குடிக்கு திட்டு வருமோ அல்லது இது நல்லது தானோ, என்று தடுமாறியும், இவளுக்கு திருமணம் நடக்குமோ, மாமியாரான யசோதை பிராட்டி இவளை நல்ல மருமகள் என்று கொண்டாடுவாளோ, மாமனாரான நந்தகோபர், இவளை ஏற்றுக் கொண்டு, இவள் நல்லவள், இவளை பெற்ற தாய், இவள் இப்படி இங்கு வந்ததானால் உயிர் தரிப்பளோ என்று சொல்லுவாரோ என்றும், கண்ணன் ஒரு சிலரைபோல, தன் மகளை புணர்ந்து, உடன் போவதற்கு மட்டும் என்று வாழ்வானா, அல்லது நன்றாக திருமணம் செய்து கொண்டு நாடு நகரம் எல்லாம் போற்றும் படி வாழ்வானா, கண்ணன் இவளுக்கு தன்னுடைய பெருமையால் நல்லவை கெட்டவைகளை சொல்லிக் கொடுப்பவனாக இருப்பானோ அல்லது தனது பட்ட மகிஷியாக மற்றவர்கள் முன்னே பெருமை தோற்ற வைத்து வாழ்பவனோ, அல்லது தயிர் கடைவது போன்ற கடினமான தொழில்களை செய்து தன் மகள் வாழ வேண்டுமோ என்று மனம் கவலையுற்றும் அதே சமயம் சில நல்ல நினைவுகளால் மகிழ்ந்தும், தாயின் மனம் நிலை கொள்ளாமல் சென்ற விதத்தை நல்லதோர் தாமரைப் பொய்கை (3.8) என்ற பதிகம் சொல்கிறது.

கண்ணனும் இராமனும்

கிருஷ்ணாவதாரத்தில் அதிக பிரியம் உடையவராய் கண்ணனின் குணங்களில் ஆழ்வார் அனுபவித்ததை பார்த்தோம். என் நாதன் (3.9) என்ற பதிகத்தில் ஆழ்வார் இராம கிருஷ்ண அவதாரங்களின் குணா நலன்களை ஒரே சமயத்தில் அனுபவிக்க ஆசைப் படுகிறார். இரண்டு கோபிகா பெண்கள் ஒருவர் ராமர் பக்கதிலும் மற்றொருவர் கிருஷ்ணன் பக்கத்திலும் இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகவே கருதி வாதம் செய்வதை, மற்ற அவதாரங்களையும் கொண்டு வர்ணிக்கிறார்.

இராமாவதார குணநலன்களை அனுபவித்தவர், அந்த அவதாரத்தில் அவருக்கு துணையாக வந்து அவதரித்த பிராட்டியான சீதா தேவியின் புருஷக்காரத்துடன், மற்ற குணங்களான, கிருபை, பாரதந்திரியம் (அவனுக்கே நாம் அடிமை), அனன்யகதித்துவம் (நீயே கதி) என்ற திருகுணங்களை அவனுடைய அடியார்கள் எல்லாம் அறிந்து, அவற்றை பின்பற்றி, அவனை அடையவேண்டும் என்ற காரணத்தினால் , தன்னுடைய அனுஷ்டானத்தின் மூலம் வெளிபடுத்துவோம் என்று பிராட்டியார் திருவுள்ளம் கொண்டார்.

அதில் முதலில் கிருபையை, தண்ட காரண்யத்தில், இராவணன் பிரித்தான் என்று ஒரு காரணம் கொண்டு, இலங்கையில் எழுந்தருளினாள். இந்த அவதாரத்தின் சிறப்பினாலே, எம்பெருமானாகிய இராமன், பிராட்டி இருக்கும் இடம் அறியாமல் இருந்த போது, திருவடி என்கிற ஹனுமானின் தோழமையை அங்கீகரித்து, திருவடி அல்லாமல் வேறு ஒருவரால் இந்த காரியம் நடக்காது என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு, அதனால், பிராட்டியை கண்டால் சொல்லவேண்டிய அடையாளங்களை அனுமனுக்கு அருளி செய்து, திருவாழி மோதிரத்தையும் கொடுத்தார். தெற்கில் இலங்கை என்ற தீவினில் அசோகவனம் என்ற இடத்தில் பிரம்மாண்டமான ராக்க்ஷிகளின் நடுவே நோவு கண்டவர்களை போல இருந்த பிராட்டி இனி உயிருடன் இருப்பதில் பயன் இல்லை என்று முடிவு செய்து, ஒரு சிம்சுபா மரத்தின் கிளையை, பிடித்த போது, இராம நாமங்களை சொல்லி, தான் ராம தூதன் என்று சொல்லி, திருவாழி மோதிரத்தை சமர்ப்பித்து அது கண்டு தாயார் பிரீதி கொண்டு, பாரதந்திரியம் (அவனுக்கே நாம் அடிமை), அனன்யகதித்துவம் (நீயே கதி) என்ற திருகுணங்களை அனுமன் சீதை உரையாடலின் மூலம், பெரியாழ்வார் அனுபவித்து பாடும் பாடல்களை நெறிந்த கருங்குழல் (3.10) என்ற பதிகத்தில் அனுபவிக்கிறார்.

அவதாரங்களின் ஐக்கியம்

அடுத்த பதிகமான கதிராயிரம் (4.1) என்ற பதிகத்தில், ராம கிருஷ்ணா அவதாரங்களோடு மற்ற அவதாரங்களையும், அவற்றின் ஐக்கியத்தையும் மனதில் கொண்டு, அந்த அவதாரங்களை நேரில் காண ஆசைபட்டு, ‘நேரில் கண்டார் உண்டா’ என்று கேட்கும் ஒரு பிரிவினரும், மனதில் உண்டான அபரிமிதமான அனுபவங்களை கண்களின் மூலம் கண்டதாக சொல்லும் மற்றொரு பிரிவினரையும் கண்டு, ஆழ்வார் இந்த பதிகத்தில், ஒவ்வொரு பாடலிலும், இரு பிரிவினருக்கும் ஒரு வரலாறு சொல்லி அனுபவிக்கிறார். இந்த அவதாரங்களின் மூலமான, பரமாத்மாவை அனுபவிக்க ஆசைபட்டு, ஆழ்வார் இந்த பதிகத்தை பாடி உள்ளார்.

அவதாரங்களை கண்ணால் காண வேண்டும் என்று ஆசைபட்டாலும், அது அந்தந்த காலங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்ததாலும், பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்காததாலும், பின்னானார் வணங்கும் சோதி, என்றபடி, அவதாரங்களுக்கு பின்னால் பிறந்தவர்களும் இழக்க வேண்டாதபடி, எம்பெருமானின் குணநலன்கள் பிரகாசிக்கும், எம்பெருமான் அர்ச்சாவதாரமாக உகந்து அருளின திவ்ய தேசங்களை அனுபவிக்க தொடங்கும் ஆழ்வார், முதலில் திருமாலிருஞ்சோலை என்ற தெற்கு திருப்பதியில் இராம, கிருஷ்ண அவதாரங்களின் லீலைகளையும் சேர்த்து அங்கிருக்கும் அழகரைக் காட்டிலும், அவர் உகந்து அருளின மலையை அடைந்தாலே அதுவே ஒரு அடியவன் சேர வேண்டிய இடம் என்பது போல இருக்கும்படியான பாசுரங்களை அலம்பா வெருட்டாக் கொன்று (4.2) என்ற பதிகத்தில் காணலாம்.

திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் குணநலன்களை அனுபவித்த ஆழ்வார், அவரை காட்டிலும், அவர் உகந்து எழுந்தருளி இருக்கும், தென்திருமலையே, மிகவும் ப்ராப்யம் அல்லது அடைய தகுந்தது என்று சொல்லி, தென் திருமலையை உயர்த்தி பாடினார். இப்படி பேசி அனுபவித்தும், ஆழ்வாருக்கு பிராப்தி கிடைக்கவில்லை, ஆதலால், மீண்டும் அவதார குண விசேஷங்களை எல்லாம், பிரகாசிக்கும்படி, உருப்பிணி நங்கை தன்னை(4.3) என்ற அடுத்த பதிகத்தில் அழகர் தென்திருமலையில் நிற்கின்ற நிலையை, முன்பு சொன்னதற்கு ஒரு குறையும் வராமல், தென்திருமலையின் விசேஷங்களையும், எம்பெருமானின் குணங்களையும் கூட சொல்லி அனுபவிக்கிறார். முதலில் கிருஷ்ணாவதாரத்தையும் பின் இராமவதாரத்தையும் அழகரிடம் தரிசித்து, அனுபவிக்கிறார்.

திருமாலரிஞ்சோலை எம்பெருமானை அனுபவித்த ஆழ்வார், எம்பெருமானையும் தென்திருமலையையும் பாடிய போது, எம்பெருமான் தன் திருநாமங்களை சொல்லியதற்காக தந்தை இரண்யகசிபுவிடம் கொடிய தண்டனைகள் பெற்ற பிரகலாதனை காப்பாற்றி, இரணியனை அழிக்கும் பொருட்டு, இரண்டு வடிவுகளை சேர்த்துக் கொண்டு தோன்றிய நரசிம்ம மூர்த்தி எம்பெருமானின், மகா குணம் பிரகாசிக்கும் வண்ணம் திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருப்பதை திருவுள்ளத்தில் கொண்டு அவன் உகந்து அருளிய அந்த திவ்ய தேசத்தை நாவகாரியம் சொல்லிலாதவர் (4.4) என்ற பதிகத்தில் அனுபவிக்கிறார். அவன் கொடுத்தருளிய மூன்று வித கரணங்களை கொண்டு அவனை அனுபவிப்பவர்களை உயர்வாக பாராட்டியும், அப்படி செய்யாமல் அவனோடு ஒரு சம்பந்தமும் இல்லை என்று திரிபவர்களை நிந்தித்தும் பாடுகிறார். ஆதியான் அடியவர்களையும், அடிமையின்றி திரிவாரையும், ஸம்ஸாரிகள் பொல்லாங்கும், ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் சொன்னார்.

ஸம்ஸாரிகளுக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பகவத் சம்பந்தம் ஒரே மாதிரி இருக்க, ஸம்ஸாரிகளை ஆழ்வார் தவிர்க்க காரணம், அவர்களுக்கு பாகவத சம்பந்தம் பற்றிய அறிவு குறைந்து இருப்பதே என்கிறார். இறுதி காலத்தில் பாகவத சம்பந்தம் மிகவும் நல்லது என்பதால், ஆசை வாய் சென்ற (4.5) என்ற பதிகத்தில் ஆழ்வார் ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார். பொய் சொல்லுகையும், பகவத் காரியங்களில் இணக்கம் இல்லாதவர்களாய் இருக்கும் மனிதர்களை நினைத்தும் அவர்களையும் விட முடியாத, ஆழ்வார், அவர்களின் மேல் கருணை கொண்டு, அவர்களுக்கும் நல்லதை உபதேசிப்போம் என்ற கருத்தை திருஉள்ளத்தில் கொண்டு, தங்களுடைய கடைசி காலத்திலாவது பகவத் காரியங்களில் ஆசை கொண்டு, அவனை மனதில் நிறுத்தி, எம்பெருமானின் நாம ஸம்கீர்த்தனங்களை சொல்லி வாழ்ந்தால், அவர்கள் மேல் உலகத்தில் பெறும் பெற்றை சொல்லி மாளாது என்பதில் தொடங்கி, இறுதி காலத்தில் வரும் சிரமங்களையும் சொல்லி, அந்த காலம் வருவதற்கு முன்னால் எந்த ஒரு வகையிலாவது எம்பெருமானின் திருவடியை அணுகி இந்த உடலை பிரிந்தால், யம கிங்கரர்கள் கொடுக்கும் தண்டனைகளில் இருந்து தப்பி, அர்ச்சிராதி மார்க்கம் வழியாக பரமபதம் அடைந்து, நித்யசூரிகளுடன், கால தத்துவம் என்று ஒன்று உள்ளவரை எம்பெருமானின் புகழ் பாடி, அவனுக்கு தொண்டு செய்து, வாழலாம் என்று அவர்கள் நெஞ்சுக்கு படும்படியாக உபதேசம் செய்கிறார்.

காசும் கறை உடைக் கூறைக்கும் (4.6) என்ற அடுத்த பதிகத்தில், பகவத் விஷயத்தில் ஆசையோ நாட்டமோ இல்லாதவர்களையும், அவன் திருநாமங்களை சொல்ல இயலாதவர்களையும், ஏதாவது ஒரு வழியால், எம்பெருமான் திருநாமத்தில் ஈடுபடுத்தி, அவர்களையும் உஜ்ஜீவிக்க செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, அவர்களுக்கு உபதேசம் செய்கிறார். உலக விஷயங்கள் மனதில் கொண்டு, அவர்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தாலும், இந்த பிறவியில் அவர்கள் ஆசைப்படுகின்ற அந்த பலன்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், மறுமைக்கும் பயன் கிடைப்பதில்லை என்றும் சொல்லி, அதனை தவிர்த்து, பிச்சை எடுத்தாலும், சர்வேசவரனுடைய திரு நாமங்களை தங்கள் பிள்ளைகளுக்கு இட்டு, அவனை வாழ்த்தி, அவனுக்கு பிடித்தவர்கள் ஆகுங்கள் என்கிறார். இப்படி செய்பவர்கள் நரகதிற்கு போகாமல், உஜ்ஜீவிப்பார்கள் என்று அவர்கள் நெஞ்சங்களுக்கு இனிமையான வார்த்தைகளை தெரிவிக்கிறார்.

அதனை செய்த பிறகு, முன்பு, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர் என்று எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களை அனுபவித்ததை போல, மேலும் வடமதுரை, ஸாளக்ராமம் போன்ற சில திவ்ய தேசங்களை அனுபவிக்க ஆசைகொண்டு, எம்பெருமான் உலகம் அளந்தபோது, தன்னுடைய திருவடிகளின் ஏற்றத்தாலே, எப்போதும் கரை புரண்டு ஓடுகின்ற, கங்கை நதியின் கரையில் உள்ள கண்டம் என்னும் கடி நகர் என்று சொல்லபடுகின்ற (தேவபிரயாகை) திருத்தலத்தில் அநேக அவதாரங்கள் பிரகாசமாக விளங்கும்படி, புருஷோத்தமன் என்ற திருநாமம் உடையவனான திவ்ய தேச எம்பெருமானையும், திவ்ய தேசத்தின் பெருமைகளையும் சேர்த்து தங்கையை’ (4.7) என்ற பதிகத்தில் பாடுகிறார்.

இந்த திவ்ய தேசங்கள் போல் இல்லாமல், ‘வடிவுடை வானவர் தலைவனே’ என்றும், ‘கடலிடம் கொண்ட கடல்வண்ணா’ என்றும், ‘கட்கிலி’ என்றும், ‘காகுத்தா, கண்ணனே’ என்றும் சொல்லும்படியான பரத்துவ குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படியாக இருக்கும் திவ்ய தேசமான, ‘பொங்கோதம் சூழ்ந்த புவனியும்’, என்கிறபடியும், இந்த பூமியை இங்கே இருந்தே நிர்வகின்றது போல தோன்றும், ‘மாலிருஞ்சோலை மணாளர் பள்ளிகொள்ளும் இடம்’ என்றும், ‘ஆராமம் சூழ்ந்த அரங்கம்’ என்கிறபடியும், அவன் உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ‘பகல் இருக்கை’ போல என்றும், அடியவர்களை காப்பதற்கு ஏகாந்தமான இடம் என்று எப்போதும் வாசம் செய்கின்ற திருவரங்கம் திவ்ய தேசத்திலே வாசம் செய்கின்ற, ‘வன் பெரு வானகம் உய்ய’ என்று சொல்வதைப் போல, எல்லா உலகில் உள்ளவர்களும் உஜஜீவிக்கின்றதாகவும், ‘தென் நாடும் வட நாடும் தொழ நின்ற’ என்று எல்லோரும் அனுபவித்து வணங்குகின்றதாகவும், ‘அன்போடு தென்திசை நோக்கி’, ராம கிருஷ்ண மற்றும் எல்லா அவதாரங்களும் பிரகாசிக்கும்படி, திருவுள்ளத்தில் உகப்புடன் கண் வளர்ந்து இருக்கின்ற இந்த திருவரங்க திருப்பதியை மாதவத்தோன் புத்திரன் (4.8) என்ற அடுத்த பதிகத்தில் ஆழ்வார் அனுபவித்து பாடுகிறார்.

இராமாவதார, கிருஷ்ணாவதார, மற்றும் அவதார குணநலங்கள் பெரியபெருமாள் இடத்தில் பிரகாசிப்பதாலே, அவற்றை அனுபவித்து, அவன் உகந்து அருளிய திவ்ய தேசமான திருவரங்க திருப்பதியின் வைபவத்தையும் சேர்த்து, பாடியதில் திருப்தி அடையாமல், மீண்டும் இந்த திவ்ய தேசத்தின் சிறப்புகளையும், பெரியபெருமாளின் குணவிசேஷங்களையும் பாடி, மரவடியைத் தம்பிக்கு (4.9) என்ற அடுத்த பதிகத்திலும் திருவரங்க திருப்பதியை அனுபவிக்கிறார்.

பெரியபெருமாளின் திவ்ய வைபவங்களையும், திருவரங்க திருப்பதியின் வைபவங்களையும் பாடி அனுபவித்த ஆழ்வார், ‘தன்னடியார் திறத்தகத்தே’ என்ற பாடலில் எம்பெருமான் அடியார்களை விடாமல் பிடித்து கொண்டு உள்ளதையும், ‘இருளகற்று எறி கதிரோன் ‘ என்ற பாடலில், திருவடிகளை போற்றி, எம்பெருமானை ஏற்றுக் கொண்டவர்களை, அர்ச்சிராதி மார்க்கத்திலே பரமபதம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கு அருள் கொடுத்து, அடிமை கொள்ளும், பெரியபெருமாளுடைய திவ்ய குணங்களை அனுபவித்தவர் என்பதால், எம்பெருமான் தனக்கும் , திருந்திய அடியவர்களுக்கும் பரமபதத்தை அருளும் திருவுள்ளம் கொண்டவர் ஆதலால், ஆழ்வாருக்கு அங்கு சென்று கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற ஆசை பெருக, அதற்கு இந்த தேக சம்பந்தம் அறுந்து போகும்படி, வேண்டி துப்புடையாரை அடைவது(4.10) என்ற அடுத்த பதிகத்தில் பாடுகிறார். இப்படி தேக சம்பந்தம் அறுபடும் போது, யம கிங்கரர்களால் வருத்தப்பட நேரிடும் என்று எம பயம் வந்து, துன்பம் நேரிடும் போது , அப்படிபட்ட துன்பங்களில் இருந்து, எம்பெருமான் விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். அது தன்னை எம்பெருமான் திருவடிகளில் விழுந்து பாடி, தெரிவித்துக் கொள்வோம் என்ற நிலையில், இறுதி காலத்தில் கர்ம வினை பயன்களால் யம கிங்கரர்களால் துன்பம் நேர்கையில், அத்தகைய கவலைகளால் எம்பெருமானின் திருவடிகளை நினைக்க மறந்து விடவும், அவனது கீர்த்திகளை பாடவும் சக்தி இல்லாதவனாக இருப்பேன் ஆதலால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்று சொல்லி, எம்பெருமான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவன் திருவடிகளில் சரணாகதி அடையும் பொருட்டு விண்ணப்பம் செய்கிறார்.

விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றவர்

‘தன்னால் சொல்ல முடியும்போதே. உன் நாமம் எல்லாம் சொல்கிறேன்’ என்று திருநாமத்தின் போக்கியதையை அனுபவித்து, முன்பு ‘ஆவியே அமுதே’ என்று இதர விஷயங்களில் அலைந்து திரிந்ததை எண்ணி, திருநாம இனிமையை பல காலம் இழந்தேன் என்று வருந்தி, இனி, ‘ஆவியை அரங்க மாலை’ என்றும், ‘ஆவியே அமுதே என் ஆருயிர் அனைய எந்தாய்’, என்றும், தன் தப்பினை பொறுத்த அருள வேண்டும், என்றும் பெரியபெருமாள் இனிமையில் தன்னுடைய கரணங்களை (உறுப்புகளை) லயிக்கவிட்டு பாடுவதை வாக்கு தூய்மை (5.1) என்ற அடுத்த பதிகத்தில் சொல்கிறார்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்‘ என்று ‘இறுதி காலத்தில் எம கிங்கரர்கள் வருத்தும் போது, உன்னை புகழ்ந்து பாட முடியாதோ என்று ஏற்கனவே சொல்லி வைத்தேன்’ என்று சொன்ன ஆழ்வார், ‘சழுக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்‘ என்று சொன்ன ஆழ்வார், ‘நெய் குடத்தை’ (5.2) என்ற அடுத்த பதிகத்தில் எம்பெருமான் கரணங்கள் இவர் மேல் விழுந்தது கண்டு, இது அவர் மேல், அவன் விழுந்து, புகுந்து கிடந்தபடி இருந்ததை கூறுகிறார். இந்த பதிகத்தை சேவித்தால் எந்த நோய்களும் நம்மை அண்டாமல் இருக்கும் என்பது நம் பெரியவர்கள் கூற்று.

முன்பு சொன்ன பதிகங்களில், நம்மாழ்வார் திருவாய்மொழியில், ‘திருமாலிருஞ்சோலை மலை என்றே என்ன‘ என்ற பாடலிலும், ‘சூழ் விசும்பு அணி முகில்‘ என்ற பாடலிலும் சொன்ன அர்த்தங்களை சொன்னார். ‘முனியே நான்முகனே‘ என்ற பதிகத்தில், ‘முதல் தனி வித்தேயோ. முழு மூவுலகாதிக்கு எல்லாம்‘ சொன்ன அர்த்தத்தை துக்கச் சுழலையைச் சூழ்ந்து(5.3) என்ற அடுத்த பதிகத்தில் சொல்கிறார். “சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ” என்ற பத்தாம் பாட்டின் அர்த்தத்தை சென்னியோங்கு(5.4) என்ற அடுத்த பதிகத்தில் சொல்கிறார். பரவுகின்றான் விட்டுசித்தன் என்று சொல்வதன் மூலம், சக்தைக்கும், போகத்திற்கு மட்டுமின்றி ரக்க்ஷய்க்கும் (காப்பாற்றுவதற்கும்) என்கிறார். அரவத்து அமளியோடும் என்று நம்முடைய உடம்பினில் வந்து புகுந்த பின்னர், இனி போகவிடமாட்டேன் (இனி நான் போகலொட்டேன் ) என்கிறார். கீழ் பதிகத்தில் நெய் குடத்தை பற்றி, என்றும் நோய்க்காள் என்றும் அநிஷ்ட நிவருத்தியை சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில் இஷ்ட பிரார்த்தியை செய்து தர வேண்டும் என்று திருவாணை இட்டு தடுக்கிறார்.

பர, வியூக, விபவ, அந்தர்யாமி, மற்றும் அர்ச்சாவதாரங்களில் எழுந்தருளி இருப்பது, அடியவர்களை திருத்துவதற்கும், அப்படி திருத்தியவர்களிடம் கைங்கர்யங்களை பெற்று கொள்வதற்கும் தான் என்று சென்னியோங்கு (5.4) பதிகம் சொல்கிறது. இதனை முழுவதுமாக காண்கின்ற இடம் திருமலையில் எழுந்தருளி நிற்கிற நிலையில் என்பதை அருளி செய்கிறார். ‘திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன, திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’, என்று திருவாய்மொழி (10.8.1) சொல்வது போலவும், “வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன்” என்று நான்முகன் திருவந்தாதி (4.10) சொல்வது போலவும், திருவேங்கடம் எம்பெருமான் வந்து புகுந்து, சௌகார்த்தம் (எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது) போன்ற ஆத்ம குணங்களை பிறப்பித்து, ஆச்சாரியனோடு சேர்ந்து, விரோதிகளில் அருசியையும், பிராப்யத்தில் ருசியையும் பிறப்பித்து, காரியம் செய்யும். இப்படி திருந்திய ஆழ்வாரை கண்டு அவன் உகக்க, அவன் உகப்பை கண்டு இவர் உகக்க, இந்த உகப்புக்கு மேல் வேறு ஒரு பேறு இல்லை என்று இவர் இருக்க, இவர் காரியத்தில் நாம் முதலடி எடுத்து வைக்க வில்லை என்று அவன் பதற, அவன் பதற்றத்தை தணிக்க ஆழ்வார் பார்க்கிறார். இந்த பதிகம் கற்றவர்கள், விஷ்ணுசித்தர் என்கிற பெரியஆழ்வார் போலவே அனன்யார்க சேஷ பூதர்கள் ஆவார்கள் என்கிறார்.

‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்பது விஷ்ணுசித்தர் என்ற திருநாமத்தின் பொருள். இப்படிபட்ட ஆழ்வார் பாடிய பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தின் ஒரு சுருக்கத்தை இங்கே கண்டோம். பாசுரங்களும், ஒவ்வொரு பாசுரத்தின அர்த்தங்களையும் இங்கே எனக்கு புரிந்த அளவில் சொல்லி உள்ளேன். அதில் தவறுகள் இருந்தால், அடியேனிடம் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading