நரசிம்ம அவதாரம்

To Read this article in English, kindly click here, thanks

விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம்.

பிரதோஷம்

பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும்.  ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும் பௌர்ணமி தினத்திற்கு முன்று நாட்களுக்கு முன்னரும் வரும் தினத்தில் மாலை நேரமான பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  திங்கட்கிழமை வருகின்ற பிரதோஷங்கள் சிவனுக்கு சிறப்பாகவும், சனிக்கிழமை வருகின்ற பிரதோஷங்கள் விஷ்ணுவிற்கு சிறப்பாகவும் சொல்லப்படுகின்றன.

தசாவதாரம்

நாம் எல்லோரும் வேதங்களிலும் இதிகாச புராணங்களிலும் சொல்லி இருக்கிறபடி வாழ்ந்து, நம்முடைய கர்மாக்களை களைந்து முக்தி அடைய வேண்டும்.    இவைகளை நமக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன் இந்த உலகினில் பல முறை தோன்றி உள்ளார்.  இவ்வாறு ஸ்ரீமந் நாராயணன் அவதரிப்பதை அவதாரங்கள் என்று சொல்கிறோம். ஸ்ரீ விஷ்ணுவின் இப்படிப்பட்ட பல அவதாரங்களுள் பத்து முக்கிய அவதாரங்களையே நாம் தசாவதாரம் என்று கூறுகிறோம்.   பிரம்மம் தான் நம்மைப் படைத்து, காத்து இறுதியில் நமக்கு முக்தியாகிய மோக்ஷத்தை அளிக்க வல்லது.   அதுவே ஸ்ரீமந் நாராயணன், அதுவே ஸ்ரீ மகாவிஷ்ணு.  அதுவே பரமாத்மா.      

நரசிம்ம அவதாரம்

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் நான்காவது அவதாரம், நரசிம்ம அவதாரம்,.  நரசிம்ம அவதாரமானது மனித உடம்புடனும் சிங்கத் தலையுடனும் இவ்வுலகினில் தோன்றியது.  ஸ்ரீ விஷ்ணு, தமிழ் மாதமான வைகாசியில் வளர்பிறை (சுக்ல பக்ஷம்) பிரதோஷம் ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்மராக அவதரித்தார். நரஸிம்ஹ அவதாரம் எதற்கு? ஹிரண்யகசிபுவை தண்டிக்கவோ, பிரகலாதனை ரட்சிக்கவோ அல்ல. பிரகலாதனை மலையில் இருந்து உருட்டியபோதே ரட்சிக்கவில்லையா? ஆழக்குழி வெட்டி ஆங்கே தீ மூட்டி, அந்தத் தீக்குழியில் தள்ளியபோது ரட்சிக்க வில்லையா? விஷத்தைக் கொடுத்தபோது ரட்சிக்க வில்லையா? பாறாங்கல்லைக் கட்டி நடு சமுத்திரத்தில் விட்டபோது ரட்சிக்க வில்லையா? தம்பராசுரன் மாயையால் அந்தக் குழந்தையை வஞ்சித்தபோது, ரட்சிக்கவில்லையா? பிறகு எதற்காக இந்த அவதாரம்? பிரகலாதனின் வாக்கை ரட்சிக்க!

Thanks to friends from whatsapp for all the images and videos
Thanks to friends from whatsapp for all the images and videos

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில், நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய திருநாமங்கள் முதலில், இடையில் மற்றும் முடிவிலும் வருகின்றன. 21 மற்றும் 22வது திருநாமங்களாக ‘நாரசிம்மவபு , ஸ்ரீமான்‘ என்று முதலிலும், பிறகு 200 முதல் 210 வரையிலான திருநாமங்களாக ‘அம்ருத்யு‘ என்று தொடங்கி, ‘ஸுராரிஹா‘ வரையில் இடையிலும், அவதாரங்களின் பயன்களாக வரும் திருநாமங்களுள் (946-970) ‘ஆதாரநிலைய’ என்று தர்மத்தால் உலகினை தாங்கும் பிரஹ்லாதன் போன்றவர்களுக்கு ஆதாரமானவன் என்றும் நரசிம்மரின் திருநாமங்கள் வருகின்றன. சங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு எழுதிய உரையில், கடைசி திருநாமமான “ஸர்வ ப்ரஹரணாயுத:” என்பதற்கு, எதையும் ஆயுதமாக்க வல்லவன் என்ற பொருளில் தன் நகங்களை ஆயுதமாக்கி கொண்ட ஸ்ரீ நரசிம்ம பெருமானை குறிக்கும் என்கிறார்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிள்ளையான பிரம்மா, படைக்கும் தொழிலை நடத்தி வருபவர். ஹிரண்யகசிபு, தன்னை யாரும் அழித்து விடக்கூடாது என்பதற்காக, பிரம்மாவைக் குறித்து, கடுமையாக தவம் புரிந்தான்.  ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் இருந்து, தான், இரவிலோ அல்லது பகலிலோ, மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ, ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ, வீட்டின் உள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியிலேயோ, பிரம்மாவாலோ அல்லது அவரால் படைக்கப் பட்டவர்களாலேயோ, ஆகாயத்திலேயோ அல்லது பூமியிலேயோ, உயிர் உள்ளதாலேயோ அல்லது உயிர் அற்றதாலேயோ, ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறக்கக்கூடாது என்று வரம் வேண்டி பெற்றுக் கொண்டான்.

Thanks to friends from whatsapp for all the images and videos

ஹிரண்யகசிபு  இப்படி வரங்களைப் பெற்ற பின் அவன் மக்களையும் தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான்.  கடவுளை வணங்குவதற்கு பதில் தன்னையே வணங்கவேண்டும் என்றும் பிரகடனம் செய்தான்.   எல்லோரும் வேறு வழி தெரியாமல் ஹிரண்யகசிபு சொன்னவாறு செய்தனர்.   ஆனால் ஹிரண்யகசிபுவின் மகனான பிரஹ்லாதன் தன் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப் படவில்லை.   மாறாக அவன் மக்களுக்கு ஸ்ரீ விஷ்ணுவை வணங்கவேண்டும் என்று நல்வழி காட்டினான்.  

இதனால் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு பிரஹ்லாதனுக்கு பல கஷ்டங்களைக் கொடுத்தான்.  பலமுறை அவனை கொல்லவும் முயற்சி செய்தான்.  ஆனால் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒவ்வொரு முறையும் பிரஹ்லாதனைக் காப்பாற்றினார்.   இதனால் மிகவும் கோபமடைந்த ஹிரண்யகசிபு  ஒரு நாள் மாலைப் பொழுது, பிரஹ்லாதனிடம் அவன் சொல்கின்ற விஷ்ணு எங்கு உள்ளார் என்று உரக்கக் கேட்டான். பிரஹ்லாதன், ‘அவர் எங்கும் வியாபித்து உள்ளார், தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’,  என்றான். எங்கேடா இருக்கிறான் என்று நீ கேட்கும் சொல்லிலும் அவன் உறைகிறான். அவன் இல்லாத இடம் உண்டோ? அவன் உன்னுள்ளும் இருக்கிறான்; என்னுள்ளும் இருக்கிறான்” (கம்ப ராமாயணம் 6.3.124) என்று பகவானின் நீக்கமற நிறைந்திருத்தலை பிரகலாதன் விளக்குகிறான். அங்குள்ள ஒரு தூணைக் காட்டி அதில் விஷ்ணு உள்ளானா என்று வினவினான். அதற்கு ஆம் என்று பிரஹ்லாதன்  சொல்ல மிகக் கோபத்துடன் ஹிரண்யகசிபு அந்த தூணை உதைக்க அதில் இருந்து ஸ்ரீ விஷ்ணு, மனித உடம்புடனும் சிங்கத் தலையுடனும், பிரதோஷ காலத்தில், நரசிம்மமாக மிக கோபத்துடன் வெளிப்பட்டார்.   அவர் ஹிரண்யகசிபுவை தனது மடியில் தூக்கிக்கொண்டு வாசல் படியில் தான் அமர்ந்து கொண்டு, பிரஹ்லாதன் சொன்ன வார்தைகளான ‘அவன் எங்கும் இருப்பான்’ என்பவை பொய்யாகாமலும், ஹிரண்யனுக்கு மற்ற தேவதைகளால் கொடுக்கப்பட்டு வரங்கள் ஒன்றும் பொய் ஆகாமலும், தன்  நகங்களால் அவனை கிழித்துக் கொன்றார்.  

Thanks to Sri Vellukudi Swamigal and whatsapp group friends for sharing this audiofile explaining why and when Emperumaan took Lion’s face in Narasimha’s incarnation

ஹிரண்யகசிபுவின் மேல் கொண்ட கோபம் அவனை கொன்ற பிறகும்,  நரசிம்மருக்கு குறையவில்லை.   வானுலகில் இருந்து மற்ற தேவதைகளும் வந்து நரசிம்மரை சமாதானப் படுத்த முயன்று தோற்றுப் போனார்கள்.   ஸ்ரீ மஹா லக்ஷ்மி அங்கு தோன்றி நரசிம்மரை சமாதானப் படுத்தினாள்.   அதன் பின்னர் நரசிம்மர், பிரஹ்லாதன் உட்பட்ட, அங்குள்ள எல்லோருக்கும் ஆசி வழங்கினார். 

அவதார மகிமை

பல ஆண்டுகளைக் கொண்ட ராம(10,000 மேற்பட்ட வருடங்கள்), கிருஷ்ண (சுமார் 120 க்கும் மேற்பட்ட வருடங்கள்) அவதாரங்களைப் போல் இன்றி நரசிம்ம அவதாரம் இந்த பூவுலகில் இருந்தது மிகச் சிறிய காலமே. துணினை அடித்த கைகளை, பிடித்தவன் இந்த நரசிம்மன். தோன்றிய உடனேயே அவதரித்ததன், பலனை அளித்து, தான் ஒரு விரைவு அவதாரம் என்று நிலை நாட்டினார்.

தன்னிடம் அபராதம் செய்தால் கூடப் பகவான் பொறுத்துக்கொள்வான்; தன் பக்தர்களுக்கு  அபராதம் செய்தால், பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதைக் காட்டும் அவதாரம். இதேயே இராமாவதாரத்தில் செய்து காட்டிய ராமனுக்கு ராகவ சிம்மம் என்றும், க்ருஷ்ணாவதாரத்தில் நடத்திக்காட்டிய கிருஷ்ணனுக்கு யாதவ சிம்மம் என்று நம் பூர்வாச்சார்யார்கள் கூறுவர். அதனால் மூன்று சிம்மங்களில் முதல் சிம்மம் இந்த நரசிம்ம அவதாரம்.

ஒரு கண்ணில் பிரஹ்லாதனுக்கு கருணையும், இன்னொரு கண்ணில் ஹிரண்யகசிபுவிற்கு கோபத்தையும் ஒரே சமயத்தில் காட்டிய பெருமாள். ஆனால் இவரை மூன்று கண்கள் உடையவனாக பார்க்கலாம். சுவாமி தேசிகன் என்ற ஆச்சாரியாரல், “தபன இந்து அக்நி நயன:” என்ற வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. நரசிம்மனுக்கு வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மற்றும் நடுவிலே இருக்கும் கண் அக்கினி ஆகும் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தைகளைக் கொள்ளலாம்.

நரசிம்மர் பல ஆச்சார்யர்களுக்கு நித்திய ஆராதனை பெருமாளாக இருந்தவர். கம்பநாட்டாழ்வார், தன்னுடைய இராமாயணயத்தில் , ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரத்துக்கு என்றே  தனிப் படலம் எழுதி இருக்கிறார்.

பிரஹ்லாதனுக்கு கொடுத்த வரம்

பிரஹ்லாதனுடைய தந்தையை தான் கொன்று விட்டதால், இனி அவனுடைய சந்ததிகளை கொல்ல மாட்டேன் என்று அவனுக்கு வாக்கு கொடுத்தார். அதேபோல், பின்பு, பிரஹ்லாதனுடைய பேரனான மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் வாமன அவதாரம் எடுத்த போதும், அவர் வாமன அவதாரத்திற்கு உரிய பலனை அளித்து விட்டு, அவனை கொல்லாமல் விட்டு விட்டார்.

நரசிம்ம ஸ்துதி ஒன்றை இங்கே கேட்கலாம். இதனை அடியேனுக்கு பகிர்ந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஆழ்வார்கள் பார்வையில்

ஆழ்வார்கள் நரஸிம்மரைப் பற்றி பாடிய சில பாசுரங்கள் விபவத்திலும் சில அர்ச்சையிலும் உள்ளன. அவற்றில், சிலவற்றை கீழே காண்போம்.

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார், நரசிம்மனின் திருநாமங்களை நினைத்தால், அப்பெருமான், பிரஹ்லாதனின் விரோதியான ஹிரண்யகசிபுவை அழித்து, தன்னையே பிரஹ்லாதனுக்கு தந்தாற்போல், நமக்கும் அருளுவார் என்பதை, “களியில் பொருந்தாதவனைப் பொரல் உற்று , அரியாய் இருந்தான் திருநாமம், எண் ” (முதல் திருவந்தாதி, 51) என்று சொல்கிறார்.

மேலும் பெருமாள் தனக்கு இழைக்கும் அபச்சாரங்களை பொறுத்துக்கொள்வார். ஆனால் தன் பாகவதனுக்கு செய்யும் கொடுமைகளை சிறிதும் அனுமதிக்க மாட்டார் என்பதை விளக்க, “உரத்தினால், ஈர் அரியாய் நேர்வலியோனாய இரணியனை, ஓர் அரியாய் நீ இடந்த ஊன்” (முதல் திருவந்தாதி, 90) என்ற பாசுரத்தில் கேள்வியை மட்டும் வைத்தார். இதையே பின்னாளில் “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம்  பொறாமை யென்று ஜீயரருளிச் செய்வர்” என்று ஸ்ரீவசநபூஷணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாகவத அபசாரத்தை பெருமாள் பொறுக்கமாட்டார் என்ற இந்த கருத்தினையே, மீண்டும் “எயிறு இலக வாய் மடுத்தது ஏன் ” (முதல் திருவந்தாதி, 93) என்ற பாசுரத்தின் மூலமும் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

பூதத்தாழ்வார்

இரணியனை, நரசிங்கமாகிக் கிழித்த அழகியானுடைய அடியினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளது என்று பூதத்தாழ்வார், “நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே அங்கண்மா ஞாலத்து அமுது” (இரண்டாம் திருவந்தாதி 84) என்று கூறுகிறார்.

பேயாழ்வார்

பேயாழ்வார், “இரணியனது ஆகம், அவை செய்து அரி உருவமானான் ” (மூன்றாம் திருவந்தாதி, 31) என்று நரசிம்ம அவதாரத்தை. பெருமாளுக்கு உகந்த இடங்களை சொல்லும் போது எடுத்துக் கொள்ளுகிறார். ஆழ்வார் இதற்கு முந்தைய பாசுரத்தில் (30), “கடல், குடந்தை, வேங்கடம், நேர்ந்த என் சிந்தை, நிறை விசும்பு, – வாய்ந்த மறை, பாடகம் அனந்தன்“, அதாவது திருப்பாற்கடல், கும்பகோணம், திருவேங்கடம், ஆழ்வாருடைய சிந்தை (அந்தர்யாமி), பரமபதமான திருவைகுந்தம், வேதம், திருபாடகம் என்ற திவ்யதேசம், நித்யசூரியான ஆதிசேஷன் ஆகியவைகளை பெருமாளுக்கு உகந்த இடங்களாக சொல்லி இருக்கிறார்.

பேயாழ்வார் “மேவி அரி உருவமாகி இரணியனது ஆகம், தெரி உகிரால் கீண்டான் சினம்” (மூன்றாம் திருவந்தாதி 42) என்று நரசிம்மரின் கோபத்தை நமக்கு நினைவு படுத்துகிறார். இதையே “அருள் அன்று நமக்கு உத்தேச்யம், ஆச்ரிதவிரோதிகள் பக்கல் அவனுக்குண்டான சினம் உத்தேச்யம், அச்சினத்தைத் தெரிந்து அநுஸந்தி“ என்று பெரியவாச்சான்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். இங்கே, திருமங்கையாழ்வாரின் ““கொண்டசீற்றம் ஒன்று உண்டு உளதறிந்து, உன்னடியனேனும் வந்தடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!“ என்பதையும் நினைவு கொள்ளலாம்.

பெருமாள், தன்னுடைய பக்தர்களிடத்தில் இருக்கும் அன்பினால், அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் துன்பங்களை போக்குவதற்கும் அவர் ஆற்றும் செயல்களுக்கு ஓர் எல்லை இல்லை என்பதற்கு “செற்றதுவும் சேரா இரணியனை” (மூன்றாம் திருவந்தாதி 49) என்று பேய் ஆழ்வார் நரசிம்ம அவதாரத்தை ஒரு உதாரணமாக சொல்கிறார்.

அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து, மங்க இரணியனது ஆகத்தை, பொங்கி அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே ” (மூன்றாம் திருவந்தாதி, 65) என்று நரசிம்ம அவதாரத்தை எடுத்ததும் கண்ணனும் ஒருவனே என்று ஆழ்வார் சொல்கிறார். இங்கும் சொல்லப்படும் விஷயம், பகவான் தன் பக்தர்கள் துயரம் பொறுக்க மாட்டான் என்பதே.

திருமழிசை ஆழ்வார்

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒவ்வொரு சிறப்பு. திருமழிசை ஆழ்வாரின் சிறப்பு, பகவானின் ஐந்து நிலைகளில் ஒன்றான, அந்தர்யாமி நிலையை பாடுவது. நான்முகன் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில், (4) “வேறு ஒருவர் இல்லாமை நின்றானை” என்றும் “எப்பொருட்கும் சொல்லானை” (ஸர்வ சப்த வாச்யனாய்) என்றும் சொல்லி ஸ்ரீமந் நாராயணனை பரம்பொருள் என்று விளக்குகிறார். அதன் தொடர்ச்சியாக, அடுத்த பாசுரத்தில் “தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம், வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே” (நான்முகன் திருவந்தாதி 5), என்று தேவர்களுக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் தாவரங்களுக்கும் ஆகிய நான்கு பிரிவுகளில் சொல்லப்படும் அனைத்து ஜீவாத்மாக்களையும் பிரளய காலத்திலும், பின்பு அவைகளை படைக்கும் காலத்திலும் அவைகளை காப்பாற்றி, அவைகளுக்கு அந்தர்யாமியாக இருந்து அவைகளின் பிறவிப் பலன்களை அடைய வழி செய்பவனாய் இருக்கும் திருமாலே, நரசிம்மன் ஆவான் என்று கூறுகிறார்.

மாறு ஆய தானவனை வள்ளுகிரால் மார் இரண்டு கூறாகக் கீறிய கோளரி” (நான்முகன் திருவந்தாதி 18) என்று நரசிம்ம அவதாரத்தின் பெருமைகளை, திருமழிசை ஆழ்வார் குறிப்பிடுகிறார். எம்பெருமானிடத்தில் தொண்டராய் இருந்தால், மறு பிறப்பையோ, மோக்ஷம் நின்ற பிறப்பற்ற உயர்நிலையையோ பெற முடியும். எம்பெருமானின் தொண்டர்களுக்கு தொண்டராய் இருந்தால், மோக்ஷம் என்ற பிறப்பற்ற உயர் நிலை மட்டுமே கிடைக்கும். ஆகவே பகவானிடத்தில் தொண்டராய் இருப்பதைக் காட்டிலும் அவருக்கு தொண்டு செய்யும் பாகவதர்களிடத்தில் தொண்டராய் இருப்பதே சிறந்தது என்ற கருத்தை இந்த பாசுரத்தில் கூறுகிறார்.

மற்ற எல்லா அவதாரங்களைக் காட்டிலும் நரசிம்ம அவதாரமே மிக அழகு என்பது ஆழ்வார்களுக்கும் மற்றும் நம் பெரியவர்களுக்கும் உள்ள கருத்து. அதனாலேயே அவரை அழகிய சிங்கர் என்று குறிப்பிட்டு உள்ளனர். நான்முகன் திருவந்தாதி என்ற இந்த பிரபந்தத்தின், 21 மற்றும் 22 பாசுரங்களில், நரசிம்ம அவதாரத்தின் அழகினை, ஆழ்வார் விவரிக்கிறார். நரசிம்ம அவதாரம் என்றோ நடந்து இருந்தாலும், ஆழ்வார்க்கு கண் முன் நிகழ்வது போல், தன்னுடைய பக்தர்களுக்கு விரோதம் இழைக்கும் எதிரிகளிடம் அவர் காட்டும் சீற்றம் எவ்வளவு அற்புதமானது என்ற அவதார பெருமையை விளக்குகிறார். பெருமாளின் தெளிவான தோற்றத்தைக் காட்டிலும் அவரது சீற்றமே பக்தர்களுக்கு சிறந்தது என்பதை சொல்லும் 21வது பாசுரம். நெருப்பை உமிழும் பெரிய வாய், உருண்டு, சிவந்து ஜொலிக்கின்ற கண்கள், மற்றும் அக்னி போன்று பொங்கும் திருமேனி என்பவை ஆழ்வாரின் சொல்லும் நரசிம்மனின் அழகு. அந்த சிந்தனையிலே தொடர்ந்து, ஆழ்வார், “அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று அடுத்த பாசுரத்தில் பன்னெடுங்காலமாக நம்மை காத்து வரும் அவனின் திருவடிகளை நாடுங்கள் என்று உபதேசம் செய்கிறார்.

திருமழிசை ஆழ்வார், திருச்சந்தவிருத்தத்தில் (67), “திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும், இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்ப” என்று சொல்லி, ஸுகுமாரனான உன்னை முரட்டுச் சிங்கம் என்பது தகுமோ என்று வியக்கிறார்.

நம்மாழ்வார்

திருவிருத்தம் என்ற பிரபந்தத்தில் ஐந்தாம் பாசுரத்தில், சுவாமி நம்மாழ்வார் பொன்பெயரோன் தடநெஞ்சம் கீண்ட பிரானார்” (46) என்று நெஞ்சை தூது விடும் பாசுரத்தில் நரசிம்மரை, தம்மைச் சரணமடைந்தார்க்கு வலிமையான பகை உண்டானாலும் அதனை எளிதில் ஒழித்து அவர்களைப் பாதுகாத்தருளும் பேருதவிக் குணமுடையவர் என்று குறிப்பிடுகிறார். இந்த பாசுரத்தின் சிறப்பு என்னவென்றால், நெஞ்சத்தை ஒளித்து ஒரு வஞ்சகமில்லை என்பதுபோல் ஆழ்வார், தன்னுடைய அந்தரங்க விஷயத்திற்காக, நெஞ்சை பெருமாளிடம் தூது விட்டபோது, அது திரும்பி வராததுடன், ஆழ்வார் சம்பந்தத்தையே மறந்து, நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்டு அவர் பின்னேயே சென்று விட்டது என்பதை சொல்வது. .

பெரிய திருவந்தாதியில், சுவாமி நம்மாழ்வார், “அன்று அம் கை, வன் புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான், அன்பு உடையன் ” (35) என்று நரசிம்மரின் அன்பை போற்றி பாடுகிறார். ஆழ்வாரின் நெஞ்சில் அமர்ந்தும், நின்றும், கிடந்தும், திரிந்தும், ஆழ்வார் நெஞ்சைவிட்டு ஒரு நொடி பொழுதும் அகலாமல் இருந்தும், தான் ஆழ்வாருக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று நினைக்கும் மனம் பெருமாளின் அன்பு என்று கூறுகிறார்.

தழீஇக் கொண்டு போர் அவுணன் தன்னை, சுழித்தெங்கும், தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் ” (பெரியதிருவந்தாதி, 57) என்று இரணியனின் மார்பை பிளந்த போது எழுந்தோடிய இரத்தம் பள்ள நிலங்கள் பக்கம் ஓடியது என்று கூறி அத்தகைய பெருமாள் நம்முடைய பாவங்களில் இருந்தும் காப்பாற்றுவார் என்று ஆழ்வார் உறுதி கூறுகிறார்.

திருவாய்மொழி

ஆடியாடி அகம் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடும் “ (திருவாய்மொழி 2.4.1). இது நம்மாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்து சொல்லும் பாசுரம். இந்த ஆழ்வார் மட்டுமே, தலைவியாக (பராங்குச நாயகி), தோழியாக மற்றும் தலைவியின் தாயாக என்று மூன்று விதமான பெண்கள் பார்வைகளிலும் பாசுரங்களையும் பாடி உள்ளார். இது தாய் பாசுரம். பிரஹ்லாதன் கூப்பிட உடனே, தூணிலிருந்து புறப்பட்ட மாதிரி, தனக்கு உதவ வரவில்லையே என்று மகள் நான்கு பக்கங்களும் சுற்றி சுற்றி பார்த்து வருந்தியதாக தாய் சொல்லும் பாடல்.

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட, என் முன்னை கோளரியே” (திருவாய்மொழி, 2.6.6) என்று சொல்லியது, பெருமாள் தண்டிப்பதற்கான காரணத்தை நமக்கு சொல்லும் பாசுரம். ‘சிந்தையினால் இகழ்ந்த‘ என்பதை, இரணியனின் நெஞ்சை தொட்டு பார்த்து, பிளந்து, உள் நெஞ்சிலும் ஆராய்ந்து பார்த்து பகை உள்ளூர இருந்தது கண்டு, அதனால் தண்டனை என்கிறார். அப்படி ஆராய்ந்து பார்க்காமல் நிந்தனை செய்பவரை பெருமாள் தண்டிப்பதில்லை. அதேபோல், ஒருவன் பெருமாளை துதி செய்யும் போது, அவன் உள்ளார்ந்து செய்கிறானா அல்லது கபடமாக செய்கிறானா என்றும் பெருமாள் பார்ப்பதில்லை. பெருமாளுக்கு அருள் செய்வதிலேயே ஆசை அதிகம் என்று ஆழ்வார் நமக்கு சொல்லும் பாசுரம்.

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து, இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப, அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, என் சிங்கப்பிரான்பெருமை” (திருவாய்மொழி, 2.8.9) என்று சொல்லி, நினைத்த இடத்தில, நினைத்த உடனே தோன்றிய நரசிம்ம பெருமானின் கருணையை சொல்கிறார் நம்மாழ்வார்.

கிளரொளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்தெழுந்து, கிளரொளிய இரணியனது அகல் மார்பம் கிழிந்து உகந்த” (திருவாய்மொழி 4.8.7) நரசிம்ம பெருமான் விரும்பாத வளை தனக்கு வேண்டாம் என்று தலைவியாகிய பராங்குச நாயகி பாடும் பாசுரம் இது. இந்த பாடலின் பிற்பகுதியில் இரணியனின் உடல், நரசிம்ம பெருமானின் விரல் நகங்களுக்கே இரை ஆனதால், ஸ்வாமியின் திவ்யஆயுதங்களான சங்கும், சக்கரமும் தங்களுக்கு இதில் பங்கிலேயே என்று வருந்தின என அழகாக உரைக்கிறார்.

அந்திப்போது அ வுணன் உடல் இடந்தானே ” (திருவாய்மொழி 7.2.5) என்று நரசிங்க பெருமாளின் பெருமையை தலைவியின் தாய் பாடுவதாக அமைந்த திருஅரங்க பாசுரம்.

பராங்குசநாயகியான நம்மாழ்வார் வலிமை இழந்து சோர்ந்து இருந்த காலத்தில், பெருமாள் தன்னுடைய வெற்றி செயல்களை எல்லாம் சொல்லி அவளை (அவரை /நம்மை) ஊக்கப்படுத்தும், ஆழியெழ என்ற பதிகத்தில், நரசிம்மனின் வெற்றியை எடுத்து உரைத்த பாசுரம், “போழ்து மெலிந்த புன் செக்கரில், வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா, மலை, கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால், அப்பன் ஆழ் துயர் செய்து அசுரைக் கொல்லுமாறே” (திருவாய்மொழி 7.4.6). ஆகாசமும் எல்லா திசைகளும் இரத்த வெள்ளம் ஆகும்படி, நரஸிம்மமூர்த்தி, அளவிலாத துன்பங்களைக் கொடுத்து, இரணியனை வதம் செய்தது, ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து, ஒரு மலை பிளக்கின்றதோ என்றபடி இருந்தது என்பது இந்த பாடலின் விளக்கம்.

பக்தர்களிடம் பெருமாளுக்கு இருந்த அளவிடமுடியாத கருணையை விளக்கும் போது, நரசிம்ம அவதாரத்தை எடுத்து சொல்லும் பாசுரம். அதிகமான தவங்களை செய்து, பல வரங்களை பெற்று, அவற்றை கொடுத்த தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் எல்லாவித இன்னல்களையும் அளித்த இரணியனை, பெரிய நரசிங்க உருவம் எடுத்து அவனை இரண்டு பிளவாக பிளந்த சரித்திரத்தை அறிந்தபின் பகவானின் திருக்குணங்களை அல்லாமல் வேறு ஒன்றை கற்பார்களோ என்று வியக்கும் பாசுரம், “செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீரன்றிக் கற்பரோ, எல்லையிலாத பெருந்தவத்தால், பல செய் மிறை, அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை, மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே?“. (திருவாய்மொழி, 7.5.8) இங்கு செல்ல உணர்ந்தவர் என்று ஆழ்வார் சொல்வது, இந்த உலக அனுபவத்தைத்தாண்டி பகவதுஅனுபவம் வரையில் தங்கள் உணர்ச்சிகளை செல்ல விட்டவர்கள் என்று பொருள்.

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த, சக்கரச் செல்வன் தன்னைக்” (திருவாய்மொழி, 7.6.10), என்று ஆழ்வார் நரசிம்ம அவதார பெருமைகளை பாடும் ஜீவாத்மாக்களுக்கு திருநாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சொல்கிறார். நரஸிம்ஹ அவதாரத்தில், சக்கரச் செல்வன் என்று சக்கரத்தாழ்வானை அழைக்க காரணம், அங்கு நகங்களில் சுதர்சன சக்கரத்தின் சக்திஆவேசம் உள்ளது என்று பெரியவர்கள் கூறுவார்கள். எல்லா அவதாரங்களிலுமே சுதர்சன சக்கரத்தின் பங்கு உண்டு. உதாரணமாக, இராமாவதாரத்தில் அம்புகளிலும், வராக அவதாரத்தில், (பன்றியின்) பற்களிலும் (தம்ஷ்ட்ரை) பரசுராமவதாரத்தில் மழுவிலும், நரசிம்ம அவதாரத்தில் நகங்களிலும் சுதர்சன சக்கரத்தின் சக்தி உண்டு.

பெருமாள், தான் அடியவர்களுக்கு எளியவன் என்று காட்டிய பிறகு நம்மாழ்வாரான தனக்கு உதவி செய்ய வரவில்லையே என்று நினைத்து பாடும் போது, “கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக கை உகிர் ஆண்ட வெங்கடலே” (திருவாய்மொழி, 8.1.3) என்று நரசிம்மனின் பெருமையை கூறுகிறார். ஒரு சிறுவனுக்காக உலகில் யாரும் பார்த்திராத ஒரு திரு உருவத்தை எடுத்துக்கொண்டு வந்தாற்போல் தனக்காவும் ஒரு உருவம் எடுத்து வரக்கூடாதா என்று இந்த பாசுரத்தில் நம்மாழ்வார் உருகுகிறார்.

இரணியன் தூணினை தொட்ட உடனே அங்கு தோன்றி, ப்ரஹ்லாதன் வேண்டியதை நிறைவேற்றிக்காட்டினாற்போல், தன்னுடைய ஆசையும் உடனே நிறைவேற வேண்டும் என்று ஆழ்வார் “மிரும் தானவன் மார்பு அகலம் இருகூறா, நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே” என்று நரசிம்மனை வேண்டுகிறார்.

பெரியாழ்வார்

பெரியாழ்வார் பல்லாண்டு பாசுரங்களில் “அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை ” (திருப்பல்லாண்டு 6) என்று பாடுகிறார்.

அதேபோல் பிறந்த கண்ணனின் அழகினை காண மற்றவர்களை அழைக்கும் போது, “மறங்கொள் இரணியன் மார்பை முன் கீண்டான், குறங்குகளை வந்து காணீரே” (பெரியாழ்வார் திருமொழி 1 3 5) என்று திரு தொடைகளுக்கு நரசிம்ம மூர்த்தியை சொல்கிறார்.

கண்ணன் காக்கும் கடவுள், அதற்கான லட்சணங்களை சிறுவயது கண்ணனிடம் கண்ட ஆழ்வார், “கோன் அரியின் உருவங் கொண்டுஅவுணன் உடலம் குருதி குழம்பியெழக் கூர் உகிரால் குடைவாய்” (பெரியாழ்வார் திருமொழி, 1.6.2 ) என்று நரசிம்மனின் சீற்றத்தை உதாரணமாக சொல்கிறார்.

கண்ணனின் குழந்தை பருவத்தை பாடிய பெரியாழ்வார் அவன் சப்பாணி கொட்டும் (தொட்டிலில் இருக்கும் போது இரண்டு கைகளையும் தட்டி அதிலிருந்து வரும் சப்தத்தை கேட்டு மகிழ்வது) பாடல்களில் ஒன்று, “அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே, வளர்ந்திட்டு வான் உகிர்ச் சிங்க உருவாய், உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பு அகலம், பிளந்திட்ட கைகளால்” (பெரியாழ்வார் திருமொழி 1.7.9) சப்பாணி கொட்டு என்கிறார.

பெரியாழ்வார் கண்ணனுக்கு பூச்சூடும் பாசுரங்களில், “இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்” (பெரியாழ்வார் திருமொழி, 2.7.7) என்று நரசிம்ம பெருமானை விளித்து அவருக்கு குருக்கத்தி பூ சூட்ட அழைக்கிறார்.

பின்பு நான்காம் பத்தில், சக்ரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீ ராமனை எங்கே தேடுவது என்று கேட்பவருக்கு, “அதிரும் கழற்பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய், உதிரம் அளைந்த கையோடு இருந்தவனை உள்ளவா கண்டாருளர்” (பெரியாழ்வார் திருமொழி 4 1 1) என்று நரசிம்மராக கண்டவர் உளர் என்று சொல்லி அவதாரங்களின் ஐக்கியத்தை பெரியாழ்வார் நமக்கு அருளினார்.

ஸ்ரீரங்கம் கோவில் பற்றி பெரியாழ்வார் கூறும் போது, “உரம் பற்றி இரணியனை, உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றி, சிரம் பற்றி, முடி இடியக் கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில்” (பெரியாழ்வார் திருமொழி 4 9 8) பிரஹ்லாதனுடைய எதிரியை முடித்தோம் என்று மகிழ்ச்சியோடு உறையும் கோவில் என்று நரசிம்மனுக்கு பல்லாண்டு பாடுகிறார்.

ஆழ்வார் தன் திருமேனியை சிங்கப்பிரான் உறையும் கோவில் என்று “சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்” (பெரியாழ்வார் திருமொழி 5 2 5) என்று நோய்களுக்கு எச்சரிக்கை விடுகிறார்.

ஆண்டாள்

ஆண்டாள், திருப்பாவையில் “மாரி மலை முழைஞ்சில் ” என்ற பாசுரத்தில்(23), நரசிம்ம அவதாரத்தை  மறை முகமாக சொல்லி உள்ளார்.

நாச்சியார் திருமொழி என்ற பிரபந்தத்தில், “ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்” (8.5) என்று சொல்லி, நரசிம்மனே திருவேங்கடவன், அவன் அவளிடத்தில் எடுத்த சென்ற வளைகளை திருப்பி கொடுப்பதாக இருந்தால், அவனை விட்டு பிரிந்து இருப்பதால் தனக்கு உண்டான மனவேதனையை அவனிடம் தெரிவியுங்கள் என்று மேகக்கூடங்களிடம் சொல்வதாக அமைந்த பாசுரம். இந்த பாசுரத்தில் மூலம் ஆண்டாள் வேண்டுவது அநிஷ்ட நிவிர்த்தியுடன், இஷ்ட ப்ராப்தியையும், அதாவது துன்பங்களை துடைப்பது மட்டுமில்லாமல், இன்பங்களையும் தரவேண்டும் என்பது.

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார், அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், “பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய ஆதிபிரான் ” (8) என்று நரசிம்ம பெருமானை குறிப்பிட்டு அவருடைய திருக்கண்களை திருஅரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானிடம் கண்டு தான் பேதைமை கொண்டதாக சொல்கிறார்.

திருமங்கை ஆழ்வார்

அஹோபிலம்

  • அங்கண் ஞாலம் அஞ்ச, அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்
  • பொங்க ஆகம், வள் உகிரால் போழ்ந்த புனிதனிடம்,
  • பைங்கணானைக் கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
  • செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. (திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி  1-7-1) .
  •  
  • இந்த பதிகம் 1.7 முழுவதுமே, அஹோபிலம் என்று சொல்லப்படும் சிங்கவேள் குன்றம் என்ற திவ்யதேசத்தைப் பற்றியும் அதில் உறைகின்ற நவ (ஒன்பது) நரசிம்மர்களைப் பற்றியும் திருமங்கை ஆழ்வார் சிறப்புடன் விளக்கும் பத்து பாசுரங்கள் ஆகும். இதில், “தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே” என்றும், “சென்று காண்டற்கு அரி ய கோயில் சிங்கவேள்குன்றமே” என்றும் “திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே” என்றும் “தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே” என்றும் அஹோபிலத்தை தரிசிக்க செல்ல இருக்கும் பக்தர்களுக்குள்ள சிரமங்களையும் பகவானின் பெருமைகளையும் திருமங்கையாழ்வார் சேர்த்து சேர்த்து எடுத்து சொல்கிறார். இன்று அஹோபில மட ஜீயர்கள் மற்றும் நிர்வாகத்தின் விடா முயற்சிகள் காரணமாக அஹோபிலம் சென்று தரிசிக்க எளிமை ஆகி உள்ளது.

சோளிங்கர்

  1. மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள்
  2. புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
  3. தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
  4. அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே (திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி  8-9-4)

சிறந்தவனும், வேதமாக விரிவு பெற்ற விளக்கு போன்றவனும், என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருப்பவனும், கீர்த்தி வாய்ந்தவனும், ஜுவலிக்கின்ற பொன் மலை போன்றவனும், தகவுடையவனும்,  கடிகை என்னும் பெரிய திருமலையின் மீது எழுந்து அருளி இருக்கின்ற அக்காரக் கனியுமான எம்பெருமானை அடைந்து உய்ந்து போனேன் என்று திருமங்கை ஆழ்வார் திருக்கடிகை அல்லது இப்போது சோளிங்கர் என்ற பெயருடன் சென்னையில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் (100 KM) தூரத்தில் உள்ள நரசிம்மர் உறையும் திருத்தலம் பற்றி கூறுவது.

திருவல்லிக்கேணி

  • பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்,
  • ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பிலன் ஆகி,
  • பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிறு அனல் விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே. (பெரிய திருமொழி 2.3.8)

பள்ளிக்கூடத்தில் இருந்த வந்த தன் மகன் பிரஹ்லாதன், விஷ்ணுவை ஆயிரம் நாமங்களால் வழிபட, அந்த சமயத்தில் அங்கு வந்த இரணியன் சிறிதும் பொறுக்க மாட்டாமல், பிரஹ்லாதன் மீது கோபம் கொண்டு துணை தட்டிய போது, பிறை போன்ற பற்களையும் நெருப்புப் பொறி தெரிகின்ற கண்களையும் பெரிய வாயையும் உடைய தெள்ளிய சிங்கம் ஆக அவதரித்த தேவனை திருவல்லிக்கேணியில் கண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

தெள்ளிய சிங்கம் ஆக அவதரித்த தேவன் என்று ஆழ்வார் அழைத்ததால் திருவல்லிக்கேணியில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளை “தெளிசிங்கப்பெருமாள்” என்று திருநாமம் கொண்டு அழைப்பர். ‘துள சிங்கப்பெருமாள்’ என்று வழங்குவது பிழை ஆகும்.

திருஅரங்கம்

எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால், இரணியன் இலங்கு பூண் அகலம், பொங்கு வெங்குருதி பொன்மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய, வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது தெழுந்தது, அங்ஙனே யொக்க அரி உருவானான், அரங்கமா நகரமர்ந் தானே” (பெரிய திருமொழி, 5.7.5)

என்று நரசிம்ம அவதாரம் உருவெடுத்ததை சொல்லி, அவனே திருஅரங்கத்தில் எழுந்தருளி உள்ளான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

இரணியனின் அணிகலன்கள் இருந்த அகலமான மார்பிலிருந்து பொங்குகின்ற உஷ்ணமான இரத்தமானது, மேரு மலையை பிளந்து கொண்டு வருகின்ற அருவி போல், நீண்ட கண்களையும், வாள் போன்ற பற்களையும் கொண்டு பெரியதான ஒரு வெள்ளி மலை ஆகாசத்தின் அளவிற்கு உயர்ந்து தீயை போன்ற கண்களுடன் விழித்தால் எப்படி இருக்குமோ அப்படி உருவான நரசிம்ம பெருமானை திருஅரங்கத்தில் காண்கின்றேன் என்றும் இப்படி கொடுமையான தண்டனையை அனுபவித்த இரணியனை நினைத்தால் அசுரர்கள் எப்படி வாழ்வார்கள் என்றும் ஆழ்வார் இந்த பாடலில் விளக்குகிறார். ஹிரண்யனுக்கு பொன்னன் என்று பெயர், அதனால் பொன்மலை பிளந்து என்று கூறுகிறார். நரசிம்ம பெருமாள் வெள்ளை நிறம் உடையவர், அதனால் வெள்ளிமலை போன்ற என்று அவரை குறிப்பிடுகிறார். இதை ஆழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் “திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,” (3), அதாவது கிருத யுகத்தில் சங்குபோலே வெளுத்த நிறத்தை உடையவன் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

மேற்சொன்ன பாசுரம், நாம் அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர்களில் ஒருவரான ஜூவால நரசிம்மரை மனதார நினைந்து உருக ஆழ்வார் நமக்கு ஒரு சந்தர்ப்பம் உருவாக்கி கொடுத்துள்ளார். அதே போல், “உக்ரம் வீரம் மஹா விஷ்ணும், ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்ஹம், பீஷணம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம்யஹம்” என்ற நரசிம்ம மூல மந்திரத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். கோபம், வீரம், தேஜஸ் (ஒளி) கொண்டவர் ஸ்ரீ மஹாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை கொண்டவர். எதிரிகளுக்கு பயத்தையும் மரணத்திற்கே மரணம் தர வல்லவர். அவரை வணங்குகின்றேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

பெரிய திருமொழி

மேலும் பல திவ்யதேச பெருமாள்களை பாடிய திருமங்கையாழ்வார், அங்கே ஸ்ரீ நரசிம்மரை சேவித்து இருக்கிறார் அல்லது பெருமாள் நரசிம்மராக ஆழ்வாருக்கு காட்சி கொடுத்து இருக்கிறார். அவற்றில் சில,

  • பொன்னிறத்துரவோன், ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து” (பெரிய திருமொழி, 1.4.8) என்று நரசிம்மன் பதரிஹாஸ்ரமத்தில் இருக்கிறான் என்றும்,
  • ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை, ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் ” (பெரிய திருமொழி, 1.5.7) என்று நரசிம்மன் சாளக்ராமம் என்ற திவ்யதேசத்தில் உறைகிறான் என்றும்,
  • “ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன், ஒள் எயிற்றொடு, திண் திறல் அரி ஆயவன்” (பெரிய திருமொழி, 1.8.6) என்று நரசிம்மன் திருவேங்கடத்தில் எழுந்தருளி உள்ளான் என்றும்,
  • மாறு கொண்டு அவன் எதிர்ந்த வால் அவுணன் தன் மார்பகம் இரு பிளவா, கூறு கொண்டு அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவன் இடம் “(பெரிய திருமொழி, 3.1.4) என்று திருவயிந்தபுரம் திவ்யதேசத்தை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
  • சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு ” (பெரிய திருமொழி, 3.9.1) என்றும், “திண்ணியதோர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத் தேவரொடு தானவர்கள் திசைப்ப, இரணியனை நண்ணியவன் மார்பு அகலத் துகிர் மடுத்த நாதன் ” (பெரிய திருமொழி, 3.9.2) என்றும் பாடி, நரசிம்மன் எழுந்தருளி உள்ள திருநாங்கூர் திவ்யதேசமான வைகுந்த விண்ணகரம் ஆகும் என்றார்.
  • ஓடாத ஆள் அரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி, வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம்” (பெரிய திருமொழி, 3.10.4) திருநாங்கூர் திவ்யதேசமான அரிமேயவிண்ணகரம் என்று திருமங்கை ஆழ்வார் கூறுகிறார்.
  • ஓடாத ஆள் அரியின் உருவாகி இரணியனை, வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்” (பெரிய திருமொழி, 4.1.7) திருத்தேவனார்தொகை என்று ஆழ்வார் சொல்கிறார்.
  • உளைய ஒண்திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும், வென் சினத்து அரி” (பெரிய திருமொழி, 4.2.7) என்று நரசிம்மர் வந்து உறையும் கோவில் வண்புருஷோத்தமன் என்ற திவ்யதேசம் என்கிறார்.
  • முடி உடை அமரர்க்கு இடர் செயும் அசுரர் தம் பெருமானை, அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்“(பெரிய திருமொழி, 4.10.8) என்று அசுரர்களுக்கு பெருமான் போல் இருந்த இரணியனை, அன்று தன்மடியிலே வைத்து மார்பை கிழித்த நரசிம்மர் உறையும் கோவில், வெள்ளியங்குடி என்ற திவ்யதேசம் ஆகும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.
  • வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவு ஆக கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே” (பெரிய திருமொழி, 5.3.3)என்று நரசிம்ம பெருமாளின் நகங்களின் பெருமைகளை திருவெள்ளறை என்ற திவ்யதேச பெருமாளை முன்னிறுத்தி வர்ணிக்கிறார்.
  • தரியாது அன்று இரணியனை பிளந்தவனை” (பெரிய திருமொழி, 5.6.4) என்றும் திருஅரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை திருமங்கையாழ்வார் பல்லாண்டு பாடுகிறார்.
  • பொன் ஆகத்தானை, நக்கு அரி உருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த “(பெரிய திருமொழி, 5.9.5) திருப்பேர்நகர் என்று நரசிம்ஹன் மகிழ்ந்து உறையும் இடம் என்று ஆழ்வார் பல்லாண்டு பாடுகிறார்.
  • முனையார் சீய மாகி அவுணன் முரண் மார்வம், புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதனூர்” (பெரிய திருமொழி, 6.5.2) , அதாவது இரணியனின் மார்பை தன்னுடைய ஒளிபொருந்திய நகங்களால் இரு பிளவாகும்படி கிழித்துப்போட்ட நரசிம்ஹனின் ஊர் என்று திருநறையூர் திவ்யதேசத்தை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
  • பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்தோள் இரணியனைப் பற்றி வாங்கி, அங்கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அங்குருதி பொங்கு வித்தான் அடிக்கீழ் நிற்பீர்” (பெரிய திருமொழி, 6.6.4) என்று இரணிய வதத்தை திருநறையூர் பதிகத்தில் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
  • சிங்கமதாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த” (பெரிய திருமொழி 7.6.1) என்று நரசிம்மத்தில், முகமே முக்கியம் என்பதை நமக்கு உணர்த்தும்படி, தேரழுந்தூர் பெருமாளுக்கு ஆழ்வார் பல்லாண்டு பாடுகிறார்.
  • தேரழுந்தூர் பெருமாளே தசாவதாரம் எடுத்த பெருமாள் என்று சொல்லும் போது, “சினமேவும் அடல் அரியின் உருவமாகி திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு” (பெரிய திருமொழி 7.8.5) என்று நரசிம்ம அவதாரத்தை, ஆழ்வார் குறிப்பிடுகிறார்.
  • அதே போன்று திருக்கண்ணபுர பெருமாளே தசாவதாரம் எடுத்த திருமால் என்று பாடும் போது, “உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து, விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்து, பிளந்து வளைந்த உகிரானை” (பெரிய திருமொழி, 8.8.4) என்று ஆழ்வார் ஸ்ரீநரசிம்மரை போற்றுகிறார்.
  • பரிய இரணியன் தாகம் அணியுகிரால், அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு, பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன், அரிமலர்க் கண்ணீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே” பெரிய திருமொழி (9.4.4), என்று நரசிம்மன் தனக்கு செய்த கிருபையை ஆழ்வார் திருப்புல்லாணி பதிகத்தில் குறிப்பிடுகிறார். பெரியவாச்சான்பிள்ளை, “ஆழ்வார் அலைகள் மோதும் திருப்புல்லாணி சேவிக்க ஆசைப்பட்டார் என்பதை, பெருமாள், இவர்க்கு நீரில் மீது மோகம், ஆகவே அதை தேடி அவர் போக வேண்டாதபடி, உடல் முழுவதும் நனையும் படி கண்ணீரைக் கொடுத்தான்” என்று சுவாரஸ்யமாக விளக்குவார்.
  • சந்திரமண்டலத்தையும் மேகமண்டலத்தையும் தொடும் சிகரத்தை உடைய திருமாலரிஞ்சோலையில் நிற்பவரை, திருமங்கையாழ்வார் “சிங்கம் அதாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த, பங்கய மாமலர் கண் பரனை எம் பரம் சுடரை” (9.9.4) என்று வர்ணிக்கிறார்.
  • பத்தாம் பத்தில் ஆறாம் திருமொழியில், திருமங்கையாழ்வார் கண்ணன் வெண்ணையுண்டு இருந்த நீர்மையை (எளிமையை), திருமாலின் பற்பல மேன்மை சம்பவங்களுடன் கலந்து அனுபவிக்கிறார். மூன்றாவது, மற்றும் நான்காவது பாசுரங்களில், மேன்மைக்கு நரசிம்ம பெருமானை “வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால், அளைந்திட்டவன்” (10.6.3) என்றும் “தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என, தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான்“(10.6.4) என்றும் குறிப்பிடுகின்றார்.
  • திருமொழியில் இறுதியாக ஒருமுறை நரசிம்ம பெருமானையும் அவன் அவதாரத்தின் பெருமையையும் நான்காம் பதிகத்தில் நான்காவது பாசுரத்தில் சொல்வது மிகவும் ஸ்வாரஸ்யமாகவும் விளக்கமாகவும் உள்ளது. “வெம்மை மிக்க அரியாகி” (11.4.4), நரசிம்ம பெருமான், இரணியனின் மார்பினை பிளந்ததால் உண்டான ரத்தப்பெருக்கு மகாபிரளயத்தைக் காட்டிலும் மும்மடங்கு பெரிதாக இருந்தது என்று சொல்லி முடிக்கிறார்.

மற்ற பிரபந்தங்கள்

சிறியதிருமடல் என்ற பிரபந்தத்தில், “போர் ஆர் நெடுவேலோன் பொன் பெயரோன் ஆகத்தை, கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு, குடல் மாலை சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி, செம் குருதி சோரா கிடந்தானை குங்குமம் தோள் கொட்டி ஆரா எழுந்தான் அரி உரு ஆய்” என்று நரசிம்ம அவதாரத்தை திருமங்கை ஆழ்வார் வர்ணிக்கிறார்.

பெரியதிருமடல் என்ற பிரபந்தத்திலும், திருமங்கை ஆழ்வார் நரசிம்ம அவதாரத்தை விவரமாக சொல்லி இருக்கிறார் , தன்னுடைய பக்தனான பிரஹ்லாதனுக்கு பல கொடுமைகள் புரிந்ததால், தூணில் இருந்து தோன்றிய உடனே இரணியனை கொல்லாமல் சித்திரவதை செய்து அவன் பெற்ற வரன்கள் தோற்காதபடி, இரணியனின் மார்பினை நகங்களால் பிளந்து கொன்றார், என்கிறார்.

ஆயிரம் கண் மன்னவன் வானமும், வானவர் தம் பொன்னுலகும், தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை, பின்னோர் அரி உருவமாகி எரிவிழித்து, கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே, வல்லாளன், மன்னும் மணிக்குஞ்சி பற்றி வர ஈர்த்து, தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, அவனுடைய பொன் அகலம், வள்ளுகிரால் போழ்ந்து, புகழ்படைத்த மின் இலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை” (பெரியதிருமடல்,99-103)

பெரிய பெரிய பெருமாள்

நம் சம்பிரதாயத்தில் சக்கரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீராமபிரானை பெருமாள் என்று அழைப்போம். அவரின் ஆராதனை பெருமாளாக இருந்த ஸ்ரீ ரங்கநாதனை, பெரிய பெருமாள் என்று அழைப்போம். காட்டில்திரிந்த ஸ்ரீனிவாசனை, நித்யஸ்ரீ நித்ய மங்களம் என்று மாற்றியது நரசிம்ம ஆராதனம் ஆகும். ஸ்ரீ ராமபிரானும் நரசிம்மனை (Nrisimha Panchaamruta Stotram ) நரசிம்ம பஞ்ஜாமிர்த ஸ்தோதிரம் கொண்டு பிரார்த்தனை செய்தார். இரண்டு பெருமாள்கள் நரசிம்மனை ஆராதனை செய்ததால் நரசிம்மப் பெருமாளை பெரிய பெரிய பெருமாள் என்று அழைப்பார்கள்.

சிவன் நரசிம்மரை பல்லாண்டு பாடிய சுலோகம் மந்திரராஜபத ஸ்தோத்திரம் என்பதாகும். நரசிம்மர், பிரஹ்லாதனுக்கு ஆசி வழங்கியதை போல், தன் பக்தர்கள் வேண்டுவன எல்லாவற்றையும் மிக விரைவாகவே அருள்கிறார். 

மந்திரராஜபத  ஸ்தோத்திரம் ஒலிவடிவில்

சென்னையில் திருவல்லிக்கேணி, சோளிங்கர், விழுப்புரம் அருகில் உள்ள பூவரசம்குப்பம், சிங்கிரிக்குடி மற்றும் பரிக்கல், ஸ்ரீரங்கத்தில் காட்டு அழகிய சிங்கர், மதுரைக்கு அருகில் யானைமலை, கர்நாடகாவில் உள்ள மேல்கோட் என்பவை, இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்ம தலங்களுள் ஒரு சில ஆகும்.

ஆந்திராவில்

முக்கூர் ஸ்வாமியின் சில வார்த்தைகள், அவருக்கு எங்கள் நமஸ்காரங்களுடன்.

ஆந்திர மாநிலத்தில் நரசிம்ம க்ஷேத்திரங்கள் பல உள்ளன. ஸ்ரீஅஹோபிலம், மங்களகிரி, வேதாத்ரி, கேதவரம், மட்டபல்லி, வாடபல்லி, யாதகிரிகுட்டா, சோபநாத்ரி, ஸிம்ஹா சலம், கோருகொண்டா, புட்ட கொண்டா, ஸ்தம்பாத்ரிபுரம், ரேபாலா, புஷ்பகிரி, சிங்கராயகொண்டா, மால கொண்டா என்று இப்படி பல்வேறு மஹா க்ஷேத்ரங்களில் எம்பெருமான் பெருமையுடன் விளங்குகிறான். இவற்றுள் கிருஷ்ணாநதி தீரத்தில் அமைந்த மங்களகிரி, வேதாத்ரி, மட்டபல்லி, வாடபல்லி, கேதவரம் ஆகிய ஐந்தும் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேதாத்ரியில் இருப்பவன் யோகானந்த நரசிம்ஹன். இடுப்பிலே கத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு தேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளிப்பது போன்று எல்லா வியாதிகளையும் நிவர்த்தி பண்ணுகிறான். வாடபல்லி நரசிம்ஹனுக்கு தீபாலயன் என்று பெயர். அவன் மூக்குக்கு நேராக ஒரு தீபமும் திருவடியில் ஒரு தீபமும் இருக்கும். கர்ப்பக்ரஹத்திலோ துளி காற்று கிடையாது. உள்ளே போனால் வேர்வை கொட்டும். ஆனால், பகவான் மூக்குக்கு நேரே இருக்கும் தீப ஜ்வாலை மட்டும் ஆடிக்கொண்டே இருக்கும். அவன் திருவடியிலே இருக்கிற ஜ்வாலை ஆடவே ஆடாது. நாம் மிகவும் சஞ்சலத்துடன் இந்த ஸந்நிதியில் நுழைகிறோம். இதை ஆடும் தீப ஜ்வாலை காட்டுகிறது. அவன் திருவடி பற்றியவர்களுக்கு சஞ்சலம் இல்லை என்பதை,  திருவடிக்கு நேராக இருக்கும் அசையாத தீபம் காட்டுகின்றது.

வாடபல்லிக்கும் வேதாத்ரிக்கும் இடையிலே இருக்கும் ஸ்வயம்பு ரூபமான மட்டபல்லி நாதனோ சஞ்சலத்தையும் போக்குவான்; ரோகத்தையும் போக்குவான். நம்மிடத்திலே இருக்கிற அத்தனை கெடுதல்களை யும் போக்கி நலத்தையே கொடுக்கும் எம்பெருமான் இந்த க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கிறான்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் கோதாடா. இங்கிருந்து ‘கோ தாதா, கோ தாதா’ (யார் எல்லாவற்றையும் கொடுப்பவன்) என்று நினைத்துக்கொண்டே 40 கி. மீ. கடந்து, மந்திகள் பாய்ந்திடும் ப்ருஹ்மாநந்த விமானத்தைக் கடந்து வந்தால், ‘அய மேவ தாதா’ (நானே அனைத்தையும் கொடுப்பவன்) என்று நம்மை இன்முகத்துடன் வரவேற்கிறான் ஸ்ரீமட்டபல்லிநாதன்.

உயர்ந்த ப்ரஹ்ம வித்யைகளில் உறைபவன் இவனே. அதனால்தான் மிகவும் ஏகாந்தமான இந்த இடத்திலே குகைக்குள் ரஹஸ்யமாய் வீற்றிருக்கிறான். ப்ரஹ்ம வித்யைகளால் அறியப்படுபவனே நமக்கு சுலபமாய் இங்கே கிடைக்கும்போது, அவனை அறிவிக்கும் ப்ரஹ்ம வித்யைகள் நமக்குத் தேவையே இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுப் பெற வேண்டியவனை ஸ்ரீமட்டபல்லி மகா குகையில் சுலபமாக நாம் அனுபவிக்கின்றோம். இதுவும் அவனது இன்னருளே. அவன் நினைக்கவில்லை என்றால் நம்மால் அவனைக் காண இயலுமா? அவனே அவனைக் காட்டித் தருகின்றான்!

சதுர் யுகங்களாக இருந்து வரும் இந்தத் திருத்தலத்துக்கு க்ருத யுகத்தில் – மதுபுரி; திரேதாயுகத்தில்- ரத்ன புரி; துவாபர யுகத்தில்- ஆனந்தபுரி என்று பெயர். இந்தக் கலியுகத்தில் மாந்ருஹரிபுரம் என்று பெயர். ஆனால் இங்குள்ள மக்கள் சுந்தரத் தெலுங்கில் இதை மட்டபல்லி என்கின்றனர். காடு, நதி, மலை இவை மூன்றும் ஒருங்கிணைந்து காணப்படும் அரிதான க்ஷேத்ரங்களில் மட்டபல்லியும் ஒன்று. ஸ்ரீமட்ட பல்லிநாதனின் கருணாம்ருத தாரைதான் கிருஷ்ணா நதி. அம்ருதவர் ஷிணியாம் இந்த நதியின் பெருமையை அளவிட முடியாது. மட்டபல்லி பர்வத குகையில் எம்பெருமான் இருந்தாலும், அவனுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த நதிக் கரைதான். தினமும் தாயாருடன் திருக்கரம் பற்றி இந்தக் கரையில் சஞ்சரிப்பான். சிலநேரம் கிருஷ்ணவேணியும் (நதி) ஆர்ப்பரித்து, மட்டபல்லி நாதனின் குகைக்குள் பிரவேசித்து, அவனுடைய ஸ்பரிச தீ¬க்ஷயைப் பெற்று மகிழ்வாள். மட்டபல்லியில் எங்கு பார்த்தாலும் அதர்வண வேதம் எதிரொலிக்கிறது. ஓம்காரத்தினுள் முதலாவதாக வரும் அகார ரூபமாய் விளங்குகிறவன், சாட்சாத் மட்டபல்லி லக்ஷ்மிநரசிம்மன்.

ஸ்ரீமட்டபல்லிநாதன் தனது திருமேனியிலேயே இடது பக்கத்தில் ஸ்ரீப்ரஹ்லாதாழ்வானைத் தாங்கி நிற்கிறான். தன்னிடம் நிஜமான பக்தி கொண்டவர்களை ஒருநாளும் கைவிடமாட்டேன் என்கிற அவனது ப்ரதிஜ்ஞைக்கு இது எடுத்துக்காட்டு.

விசாலமான நெற்றியும், தீர்க்கமான புருவங்களும், மிக விசாலமான, எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் ஆட்கொள்ளும் திருநேத்ரங்களும், நீண்ட மூக்கும், மதுராதர பல்லவமும் (வாய்), கம்புக்ரீவமும் (மீசை), விசால வக்ஷஸ்தலமும், இடது திருக்கரத்தில் ஓங்கார ரூபியான சங்கும், வலது திருக் கரத்தில் மிளிரும் சுதர்சனனும், வக்ஷஸ்தலத்தில் விளங்கும் ஸ்ரீமஹா லட்சுமியுமாக இரண்டு திருவடிகளையும் மடித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அதியற்புதமான ரூபம் ஆனதால் அவன் மதுரானந்தரூபி! இந்த திவ்ய ரூபத்தை தினமும் அதிகாலை நடக்கும் திருமஞ்சனத்தின்போது சேவிக்கலாம். இவன் அமர்ந்த இருக்கைக்குப் பின்புறம் இருந்து ஸ்ரீஆதிசேஷன் தன் ஆயிரம் படங்களையும் விரித்து இறைவனுக்கு மேல் விதானமாய் இருக்கிறான். இந்த ஸ்ரீமட்டபல்லி மஹா க்ஷேத்திரத்தில் வேத ஸ்வரூபனாகவும், வேள்வி ஸ்வரூபனாகவும்எம்பெருமான் விளங்குகிறார்.

இன்னும் பல பாசுரங்கள், பல நரசிம்மனின் பெருமைகள், பல நரசிம்ம தலங்கள், பல ஸ்தோஸ்திரங்கள், இந்த வலைப்பதிவினில் விட்டு போயிருக்கலாம். இது ஒரு சிறு முயற்சியே. இது போல் இன்னும் சில அவதாரங்களை ஆழ்வார்கள் பார்வையில் பின்னாளில் பார்க்க கூடும். அதுவரை நரசிம்மனின் கருணை மழையில் நனைவோம்.

=================================================

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading