034 திருவாலி திருநகரி Thirvaali Thirunagari

அம்ருதவல்லித்தாயார் ஸமேத வேதராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

அம்ருதகடவல்லித்தாயார் ஸமேத வயலாளி மணவாளப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

.

திருவாலி, திருநகரி இரண்டும் தனித்தனியே சுமார் 5 கிலோமீட்டர் தள்ளி அமைந்து உள்ளன. திவ்யப்ரபந்தத்தில் பாடப்பெற்றுள்ள வயலாளி மணவாளன் திருவாலியில் இல்லாமல், திருநகரியில் இருப்பதால், இந்த இரண்டும் சேர்த்து 108ல் ஒரு திவ்யதேசமாகவே கருதப்படுகிறது. திருவாலி அம்ருதகடவல்லி தாயாரின் பிறந்த ஊர். அவர் வயலாளி மணவாளனை திருமணம் முடிந்து புகுந்த ஊர் திருநகரி.

இந்த திவ்ய தேசம் திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. எப்படி ஆழ்வார்திருநகரி என்ற திவ்யதேசம் நம்மாழ்வாருக்கோ அதே போல், திருவாலிதிருநகரி திருமங்கையாழ்வாருக்கு.

இந்த திவ்யதேசம் திருநாங்கூர் திவ்ய தேசங்களுக்கு அருகில் இருந்தாலும், இது திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் ஒன்று இல்லை.

Google Map

திருவாலி திருநகரி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

வலது தொடையில் மஹாலக்ஷ்மியுடன் நரசிம்மர் – Thanks to friends from whatsapp group

திருவாலி திருநகரி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

திருவாலி திருநகரி screenshot thanks to Google
திவ்யதேசம்திருவாலி , லக்ஷ்மிநரஸிம்ஹ க்ஷேத்திரம், பூர்ணபுரி திருநகரி ,  ஸ்ரீபுரி, ஆலிங்கன புரி, பில்வாரண்ய க்ஷேத்திரம்
மூலவர்லக்ஷ்மிநரஸிம்ஹர், வயலாளி மணவாளன் வேதராஜன், வயலாளி மணவாளன்
உத்ஸவர்திருவாலி நகராளன் கல்யாண ரங்கநாதன்
தாயார்அம்ருதகடவல்லி தாயார் /
பூர்ணவல்லி நாச்சியார்
அம்ருதவல்லி
திருக்கோலம்வீற்று இருந்த திருக்கோலம் வீற்று இருந்த திருக்கோலம்
திசைமேற்கு மேற்கு
பாசுரங்கள்42
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 41
குலசேகராழ்வார் 1
தொலைபேசி+91 4364 – 256927 ; +91 94433 72567

திருவாலி கோவில் பற்றி

இரண்ய வதத்துக்குப் பிறகு, நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க, தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மஹாலக்ஷ்மி இங்கு வந்து, நரசிம்மர் மடியில் வலது புறம் அமர்ந்து கொள்ள, எம்பெருமான் மஹாலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டார். மஹாலக்ஷ்மியை (திரு) ஆலிங்கனம் செய்ததால் திரு ஆலிங்கனம் என்று ஆகி, அது மருவி திருவாலி என்று பெயர் பெற்றது.

பொதுவாக லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மன், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் என்று லட்சுமியுடன் இருக்கும் எம்பெருமான்கள் லக்ஷ்மியை அவரது இடது புறம் அமர்த்தி சேவை சாதிப்பார்கள். இங்கு தேவியை எம்பெருமான் வலது தொடையில் அமர்த்தி காட்சி அளிக்கிறார்.

இந்த ஸ்தலத்தை சுற்றி பஞ்ச நரசிம்ஹர் இருக்கிறார்கள். அதனால் பஞ்ச நரசிம்மர் க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. (இதற்கு முன்பு தஞ்சைமாமணிக்கோவிலில் பஞ்ச நரசிம்மர் பார்த்து உள்ளோம்)

  1. திருவாலியில் லட்சுமி நரசிம்மர்
  2. திருநகரியில் யோக நரசிம்மர்,
  3. திருநகரியில் ஹிரண்ய நரசிம்மர்
  4. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூரில் உக்கிர நரசிம்மர்.
  5. மங்கைமடத்தில் இருக்கும் வீர நரசிம்மர்

குமுதவல்லியாரின் கோரிக்கைப்படி ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தினந்தோறும் ததியாரதனம் (அன்னதானம்) செய்த இடம் இன்றும் மங்கை மடம் என்றே அழைக்கப் படுகிறது. திருக்குறையலூரிலிருந்து வெகு அருகாமையில் உள்ளது.

திருவாலி, திருமங்கையாழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் வளர்க்கப்பட்ட இடம்.

ஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும், சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலும் இப்போதும் திருவாலியில் உள்ளன.  

திருவாலி ஸ்தல வரலாறு

திருமங்கைஆழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று பிராட்டி வேண்ட, எம்பெருமான், அவளை திருவாலியில் தவம் செய்து கொண்டு இருக்கும் பூர்ணமஹரிஷியின் மகளாக அவதாரம் செய்ய சொன்னார். அவரே வந்து திருமணக்கோலத்தில் தாயாரை ஏற்றுக்கொள்ளும் போது ஆழ்வாருக்கும் அருள் புரிவோம் என்று சொன்னனர். அதன்படி, திருவாலியில் பூர்ண மகரிஷிக்குப் புதல்வியாக அமிர்தவல்லி என்ற பெண்ணாகப் பிறந்த மகாலக்ஷ்மி திருநகரியில் பிறந்த வயலாலி மணவாளனாகப் பிறந்த எம்பெருமானைத் திருமணம் செய்து கொண்டாள்.

பூர்ண மஹரிஷி தவம் புரிந்தமையால் பூர்ண புரி என்ற பெயரும் உண்டு

திருநகரி கோவில் பற்றி

பத்ரிநாத்தில் எம்பெருமானே குருவாகவும், தானே சீடனாகவும் இருந்து (நாராயணனாகவும், நரநாராயணனாகவும்) திருமந்திரத்தை உபதேசித்த பிறகு, அவர் திருமந்திரத்தை திருமங்கையாழ்வாருக்கு உபதேசித்த இடம் என்பதால், இந்த திவ்யதேசத்தை பத்ரிநாத்திற்கு இணையானது என்று சொல்வார்கள்.

திருமங்கைஆழ்வார் ஆராதித்த நரசிம்மர் இரண்டு மூர்த்திகள் இங்கே உள்ளனர்.

ஐந்து பிரகாரங்கள் ஏழு நிலை,  ஐந்து நிலை,  மூன்று நிலை என்று கோபுரங்கள் இருக்கின்றன.

கோவிலுக்குள் திருமங்கையாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. அவர் ஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் மிக அழகாக காட்சி தருகிறார். இந்த தனி சன்னதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உத்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார். அவர் இப்பொழுதும் திருமங்கையாழ்வார் உற்சவமூர்த்தியுடன் எழுந்து அருளுவார். ஆண்டாள் மனத்துக்குஇனியான் என்று கொண்டாடியதை இங்கே நினைவில் கொள்ளலாம். திருமங்கை ஆழ்வாரின் திருவடியின் கீழ் ஸ்வாமி ராமானுஜரின் சிறு வடிவிலான உற்சவ மூர்த்தி இருக்கிறது.

ஆழ்வாருக்கு தனி கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனி கொடிமரம் உண்டு. மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சன்னதிகள் கொடிமரம் உள்ள மற்ற இரண்டு ஆகும்.

ரங்கநாத பெருமாள், தாயாருடன் இளம் திருமண தம்பதிகளாக திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்த ஸ்தலம். அதனால் இந்த எம்பெருமானுக்கு கல்யாண ரங்கநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.

தை மாதம் திருநாங்கூர் 11 கருட சேவைக்காக திருநகரியிலிருந்து  திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டு மணிமாடக்கோவில், திருநாங்கூர் செல்வார்.  11 கருட சேவை முடிந்து எல்லா எம்பெருமானுகளுக்கும் மங்களாசாசனம் செய்து முடித்தபின், ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும் திருவெள்ளக்குளம் (38 வது திவ்யதேசம்) என்ற நாச்சியாரின் பிறந்த வீட்டுக்கு சென்று பிறகு தான் தங்களுடைய இருப்பிடமான திருநகரி செல்வார்கள்.

திருநகரி ஸ்தல வரலாறு

க்ருதயுகத்தில், பிரம்மாவின் ஐந்தாவது புதல்வர் கர்த்தமப் பிரஜாபதி மோக்ஷம் வேண்டும் என்று எம்பெருமானைக் குறித்துத் தவமிருந்தான். பிராட்டி எம்பெருமானிடம் அவனைப்பற்றி கூறி அவனுக்கு அருள்தர வேண்டும் என்றாள். எம்பெருமான் அதற்கு சம்மதித்தும், அவனுக்கு உடனே மோக்ஷம் தரவில்லை. அதனால் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் ஒரு தாமரை மலருக்குள் புகுந்து கொண்டார்.

எம்பெருமான் இங்கு வந்து திருக்குளத்தை பார்த்த போது, நிறைய தாமரை மலர்கள் மூடிக்கொண்டு இருந்தன. எம்பெருமானின் திருக்கண்கள் சூரியனுக்கும் சந்திரனுமும் ஆகும். ஆகவே, எம்பெருமான் தன்னுடைய ஒரு கண்ணை, சிறிது மூடிக் கொண்டு, இடது கண்ணை பெரிதாக விரித்துப் பார்த்தான். தாமரை மலர்களில் ஒன்றை தவிர எல்லாம் விரிந்தன. அந்த ஒன்றில் தான் மஹாலக்ஷ்மி தாயார் இருந்தார், உடனே அவரை எம்பெருமான் ஆலிங்கனம் செய்து இந்த திருத்தலத்தில் சேவை சாதித்தான். எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. அப்பொழுது கர்த்தம ப்ராஜாபதி மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் ப்ரம்ம புத்திரனை நோக்கி அவனுக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்று அருளினார்.

திரேதாயுகத்தில் இவரே உபரிசர வஸு என்னும் மன்னனாக பிறந்தார்.  ஆகாய மார்க்கமாக சஞ்சாரம் செய்பவர் என்பது பொருள். இவர் ஒரு சமயம் பறந்து இந்த ஸ்ரீபுரிக்கு மேலாக வரும்போது, மேற்கொண்டு செல்லமுடியாமல் விமானம் தடைபட்டு நின்றது. இவ்விடத்தின் மகிமையினையும் அறிந்து, இவ்விடத்திலேயே திருமாலைக் குறித்து கடும் தவம் செய்தார். நேரில் வந்த எம்பெருமானிடம், முக்தி அளிக்க வேண்டினார். எம்பெருமான் மீண்டும் அது கலியுகத்தில் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். இதன் பிறகு உபரிசர வசு இக்கோவிலுக்கு நெடுங்காலம் பல
கைங்கர்யங்களை செய்து வந்தார்.

துவாபுரயுகத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நாட்டை ஆண்ட வஜ்ரகோஷன் என்னும் மன்னனுக்குப் புத்திரர் இல்லை. அதனால் அவர் சங்க பாலன் என்னும் ஒரு மந்திரியின் வைரமேகன், நிதிபாலன் என்ற இரண்டு புத்திரர்களுக்கு பொறுப்புகளை கொடுத்தார். வைரமேகனை நாட்டின் இளவரசனாக்கி, நிதிபாலனை மந்திரியாக்கினான். பிறகு சங்கபாலன் திக்விஜயம் மேற்கொண்டான்.  திக் விஜயத்தின் போது இந்த லட்சுமிபுரியின் மகாத்மியத்தைக் கேள்விப்பட்டு இங்கு பல மஹரிஷிகளை வைத்து பெரிய யாகம் செய்ய, அங்கு தோன்றிய திருமாலிடம் சங்கபாலன் தனக்கு மோட்சம் வேண்டும் என்று கேட்க எம்பெருமான் அது கலியுகத்தில்தான் நடக்கும் என்று கூறி மறைந்தார்.

கலியுகத்தில் திருநகரிக்கு அருகாமையில் உள்ள குறையலூரில் சோழனின் ஆளுகைக்குட்பட்ட சேனைத் தலைவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தார். இவரது திருமேனி நீலவண்ணமாயிருந்ததால் இவருக்கு நீலமேகன் (நீலன்) என்று பெயர் இட்டு அழைத்தனர். அவரே திருமங்கைஆழ்வாராக மாறி கலியுகத்தில் மோக்ஷம் அடைந்தார் என்பது வரலாறு.

ஆழ்வார்

குலசேகர ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை ஒரு பாடலில் (பெருமாள் திருமொழி 8.7) ஆலிநகர்க்கு அதிபதியே, அயோத்தியனே, தாலேலோ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். 

திருமங்கையாழ்வார், திருநகரிக்கு அருகில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருகுறையலூர் என்ற இடத்தில் தான் அவதரித்தார். ஒரு காலத்தில் இந்த இடம் ஆலி நாடு என்ற ஒரு குறுநிலப் பகுதியாக இருந்தது. அதற்கு நீலன் என்ற பெயரில் திருமங்கை ஆழ்வார் குறுநிலமன்னராக இருந்தவர்.

திருநாங்கூரில் உள்ள திருவெள்ளக்குளம், திருமங்கையாழ்வாரின் தேவியாரான குமுதவல்லி நாச்சியார் தோன்றிய இடம் ஆகும். திருவெள்ளக்குளத்தில் அப்சரஸாக வந்து திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைப் பற்றி கேள்விபட்டு அவரைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேட்க, அதற்கு குமுதவல்லி நாச்சியார், “ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்து, வைஷ்ணவர்கள் போல் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொண்டால், திருமணம் செய்துக் கொள்கிறேன்” என்று கூற, நீலனும் அவ்வாறே முதலில் அன்னதானம் செய்ய துவங்கினான். தன்னிடம் இருந்த பொருள் தீர்ந்தபிறகு வழிப்பறி செய்து அதைக் கொண்டு அன்னதானம் செய்தான். நீலனின் துன்பங்களைப் பார்த்த பிராட்டி, அவருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று திருமாலிடம் வேண்ட, எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு ஆலி மணவாளனாக எழுந்தருளி, பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்துகொண்டார்.

எம்பெருமான் வயலாலி மணவாளராகப் புது மாப்பிள்ளையாக மனைவியுடன், திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்டு, திருநகரியில் இருந்து சுமார் 0.5 மைல் தூரத்தில் உள்ள வேதராஜபுரத்தில் (திருமணங்கொல்லையில்) வந்து கொண்டிருந்த போது, அவரிடம் நீலன் கொள்ளை அடிக்க முயற்சித்தார். அப்பொழுது அவரின் மிடுக்கினைக் கண்டு எம்பெருமான் நீலனை, கலியன் என்று அழைத்தார். அவருக்கு திருமந்திர உபதேசம் செய்து, அதற்கு எல்லை நிலமான அர்ச்சாவதாரங்களையும் காட்டிக்கொடுத்து அவரை ஆட்கொண்டார்.

தெய்வங்களுக்கு எல்லாம் அரசனான எம்பெருமான், ஆலிநாட்டுக்கு அரசனான நீலனுக்கு, மந்திரங்களுக்கு எல்லாம் அரசனான (தலைமையான) திருமந்திரத்தை, மரங்களுக்கு அரசனான அரசமரத்தடியில் உபதேசித்தார். நீலன், திருமங்கையாழ்வார் ஆனார்.

திருமங்கை ஆழ்வாருக்குப்  எம்பெருமான், கல்யாண ரங்கநாதராகக் காட்சி அளித்தது திருநகரியில் தான். எட்டு இழையாய், மூன்று சரடாய், இருக்கின்ற ஒரு மங்கள சூத்திரத்தை, (திருமந்திரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்டின இடமாகையால் இதனைத் திருமணங் கொல்லை என்று சொல்வர். இதன் பெருமையை மணவாள மாமுனிகள், “இங்கேதான் வெட்டுங் கலியன், வாள் வலியால் வெறுட்டி நெடுமாலை எட்டெழுத்தும் தட்டிப் பறித்த இடம்” என்று அனுபவிப்பார்.

எம்பெருமான் இவருக்கு திருமந்திர உபதேசம் செய்த்தைக் குறிக்கும் வகையில் இன்றும் ஆண்டு தோறும் இங்கு பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் இரவு வேடுபறி உத்சவம் நடைபெறுகிறது. எம்பெருமானிடம் திருமங்கைஆழ்வார் கொள்ளையிட்ட / வேடுபறி நடந்த இடத்தில் வேடுபறி மண்டபம் என்ற ஒரு மண்டபமும் உள்ளது.

பங்குனி உற்சவ திருவிழா 10 நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம். 9ம் நாள், பகலில் திருவாலியில், திருநகரி வயலாளி மணவாளனுக்கும், அமிர்தகடவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இரவு வேடுபறி உற்சவம். பெருமாள் தாயார் பல்லக்கில் வர, ஆழ்வார் குதிரை வாகனத்தில், திருநகரியில் இருந்து எழுந்துஅருளி திருமணங்கொல்லையில் வேடுபறி உற்சவம் நடக்கிறது. இந்த மந்திர உபதேச நிகழ்ச்சி மின்சார விளக்குகள் இல்லாமல், பல தீவட்டிகள் வெளிச்சத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பு.

திருமந்திர உபதேசம் பெற்றவுடன் அடியவர்கள் அனைவரும் வாடினேன் வாடி வருந்தினேன் என்ற பாசுரம் தொடங்கி ஆழ்வாரின் அனைத்து பாசுரங்களையும் பாடிக் கொண்டே வருகின்றனர், திருநகரி வந்து சேரும் போது அதிகாலையாகிவிடும். மறுநாள் காலையில் எம்பெருமானும் ஆழ்வாரும் தனித்தனித் தேரில் சேவை சாதிக்கின்றனர். பின் தீர்த்தவாரி நடக்கும்.

திருமங்கையாழ்வார், திருநறையூரில் பஞ்சசம்ஸ்காரம் செய்து கொண்டதை பற்றியும் திருநறையூர்க்கு 100 பாசுரங்கள் போல், திருக்கண்ணபுரத்திற்கும் 100 பாசுரங்கள் பாடியுள்ளார் என்றும் பார்த்தோம். அதில் ஒரு பாடலில் (பெரிய திருமொழி 8.2.2), நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் என்ற வரிகளில் வரும் நீணிலா முற்றம் என்பது இந்த திருநகரி திவ்யதேசத்தில் தான் உள்ளது. திருமங்கையாழ்வார் 41 பாசுரங்களால் இத்திருத்தலத்திற்கு மங்களாசாசனம் செய்து உள்ளார்.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பட்டப் பெயர்கள் உண்டு.

ஆழ்வாரைப்பற்றி சொல்லி முடிக்க முடியாததால், மணவாள மாமுனிகள் திருவாலி திருநகரி திவ்ய தேசங்களுக்குச் சென்ற பொழுது, ஆழ்வாரின் திவ்ய திருமேனி ஸௌந்தர்யத்தில் மிகவும் ஈடுபட்டு, அந்தத் திருமேனி அழகு நம் கண்ணுக்கும் அழகாகப் புலப்படும்படி சமர்ப்பித்த பாசுரத்துடன், இந்த பதிவினை முடித்துக் கொள்வோம்.

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும், பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும், அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கனணக்காலும் குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய, நீலக்கலிகன்றி, மருவலர்தம் உடல்துணிய வாள்வீசும் பரகாலன், மங்கைமன்னனான வடிவே.

குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

033 திருவைகுந்தவிண்ணகரம் thiruvaikunthavinnagaram

வைகுண்டவல்லித்தாயார் ஸமேத வைகுண்டநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவைகுந்தவிண்ணகரம்
மூலவர்திருவைகுந்தநாதன் / தாமரைக்கண்ணுடைய பிரான்
உத்ஸவர்வைகுந்தநாதன்
தாயார்வைகுந்தவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)
திருக்கோலம்வீற்று இருந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 275 478
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம். இந்த உலகத்தில் இருக்கும்போதே பரமபதநாதனை தரிசிக்க வாய்ப்பு நல்கும் திவ்யதேசம்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

விண்ணகரம் என்பது பரமபதம் அல்லது வைகுந்தத்தை குறிப்பது. இந்த விண்ணகரம் மட்டும் வைகுந்த விண்ணகரம் என்று வைகுந்தத்தை இரண்டு வார்த்தைகளாலும் குறிக்கின்றது. இதற்கு காரணம் இங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமான் பரமபதத்தில் இருந்து வந்தவன்.

மூலவர் வைகுந்தநாதன் தாமரை பீடத்தின் மீது வலது திருகாலினை மடக்கி வைத்து, இடது திருகாலினை கீழே தொங்கவிட்டு, இடது திருக்கரம் அனந்தாழ்வான் மீதும், வலது திருக்கரம் வலது திருகாலின் மீதும், பின் இரண்டு கரங்களில் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார். ஆதிசேஷன் மீது அமர்ந்த திருக்கோலம். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வைகுந்தவல்லி தாயாரும் காட்சி கொடுக்கிறார்கள்.

ஸ்தல வரலாறு

வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன்
எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் அங்குள்ளது போலவே, இங்கும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்து அருளி உள்ளான்.

ஹிம்சகன் என்ற கொடிய அரக்கனைத் திருத்துவதற்காக எம்பெருமான் இங்கு வரச் செய்து, இங்குள்ள திருக்குளத்தின் நீரை பருகவைத்து, அவனுடைய கெட்ட எண்ணங்களை போக்கினார். பிறகு பல தர்ம காரியங்கள் செய்து நிறைய புண்ணியத்தை சம்பாதித்தான்.

ஸ்வேதகேது என்ற ஒரு அரசன் நல்ல வழியில் ஆட்சி செய்து, பின் தன் மனைவியுடன் காட்டில் தவம் புரிந்து வைகுந்தம் அடைந்தான். இருந்தாலும் அவனுக்கு பரமபத நாதன் தரிசனம் கிடைக்கவில்லை. நாரதரிடம் விசாரித்ததில், தாங்கள் பூமியில் இருக்கும்போது தான தர்மம் மற்றும் இறைவனுக்கு பூஜை செய்யவில்லை; அதனால் இந்த திருத்தலத்திற்கு சென்று தவம் செய்ய, எம்பெருமான் அவர்களுக்கு ஸ்ரீவைகுந்த தரிசனத்தை இங்கேயே காட்டி அருளினார்.

ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி உள்ளார். நரசிம்மன், இராமன், கண்ணன் என்று எல்லோராகவும் இந்த எம்பெருமானை காண்கிறார்.

Google Map

திருவைகுந்த விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவைகுந்த விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

032 திருமணிமாடக்கோவில் Thirumanimaadakovil

புண்டரீகவல்லித்தாயார் ஸமேத சாச்வததீபநாராயணப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருமணிமாடக்கோவில்
மூலவர்நாராயணன், நந்தா விளக்கு
உத்ஸவர்1. நாராயணன், 2. அளத்தற்கு அரியான் (இரண்டாவது உத்சவர்)
தாயார்புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம்வீற்று இருந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 12
தொலைபேசி+91 4364 – 256 424, +91 4364 275 689, +91 94439 – 85843
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

திருநாங்கூரில் உள்ள பதினோரு திவ்யதேசங்களில், இந்த திவ்யதேசத்திற்கே முதன் முதலில் பத்ரிநாத் நாராயணன் நான்கு வேதங்களை குதிரைகளாக்கி சிவனை சாந்தப்படுத்த, வந்தார்.

பத்ரியிலும் நாராயணன் என்ற பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அமர்ந்த திருக்கோலமே.

பத்ரிகாஸ்ரமத்தில்தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை நரநாராயணனுக்கு உபதேசித்து அருளினார். எனவே எமக்கும் அந்த மந்திரத்தை அருளவேண்டும் என்று தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். திருமந்திரம் உபதேசித்த பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலமாக கருதப்படுகிறது.

நாராயணர் தாமரை மலரின்மீது கால் பதித்து கிழக்கு முகமாக வீற்று இருக்கிறார். வருடத்தின் எல்லா நாட்களும் காலையில் சூரியஒளி எம்பெருமான் மீது வீசுகிறது என்று சொல்கிறார்கள். இதனால் எப்பொழுதும் அணையாத விளக்காக (நந்தா விளக்கு) எம்பெருமான் பாடப் படுகிறார்.

உற்சவர் நின்ற திருக்கோலத்தில், சக்கரத்தை பிரயோக சக்கரமாக தாங்கி உள்ளார். இவரை நரநாராயணர் என்றும் கூறுவதுண்டு. பத்ரிநாத் ஸ்தலத்தில், நரநாராயணனுக்கு நாராயணன் திருமந்திர உபதேசம் செய்ததை, திருநறையூர் திவ்யதேசத்தில் சொல்லி உள்ளோம் அதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஸ்வாமியின் பீடத்தின் கீழ் பிரம்மா உள்ளார்.

இந்த கோவில் மாடம் போன்ற அமைப்பில் உள்ளதால் மணிமாடக்கோவில் என்று பெயர் பெற்றது. (திருநறையூரும் மணிமாட கோவில் அமைப்பு தான்).

இந்த திருக்கோவிலில் தான், திருநாங்கூர் பதினோரு கருட சேவை தை மாத அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகிறது.

சுவாமி ராமானுஜருக்கு ஐந்து ஆச்சார்யார்களில் ஒருவரான திருகோஷ்டியூர் நம்பிக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

இங்கு இரண்டு தீர்த்தங்கள். இந்திர புஷ்கரணி மற்றும் ருத்ர புஷ்கரணி என்பவை.

ஸ்தல வரலாறு

பதினோரு சிவன்களுக்கு காட்சி கொடுத்த சரித்திரம் இந்த திருத்தலத்தில் தான் நடந்தது. இந்த கோவிலுக்கு எதிரில் மதங்கீஸ்வரர் என்ற சிவன் கோவில் பெருமாளை பார்த்தவாறு உள்ளார். இந்த சரித்திரத்தை இங்கே காணலாம்.

இன்னொரு வரலாறு. சந்திரன் தன்னுடைய சாபம் தீர இந்த ஸ்தலத்தில் தவம் புரிந்தது அருள்பெற்றான். அவன் மட்டும் இல்லாமல், அவனுடைய ஐராவதம் என்ற யானையும் அருள் பெற்றது இந்த திருத்தலத்தில் தான். நாக என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு யானை என்று பொருள். ஐராவதம் என்ற யானை அருள் பெற்றதால், இந்த ஊருக்கு நாங்கூர் என்ற பெயர் வந்தாக சொல்வர்.

ஆழ்வார்

வேதம் ‘ஸத்யம் ஞானம் அனந்தம் பிரஹ்மம்’ என்ற பிரஹ்ம ஸப்தத்தினால் ஸ்ரீமந் நாராயணனைக் கூறுகிறான். அதை அப்படியே தமிழில் திருமங்கைஆழ்வார், “நந்தா விளக்கே, அளத்தற்கு அரியாய்  நரநாரணனே (பெரிய திருமொழி 3.8.1) என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆழ்வார், தாயார் புண்டரீகவல்லியையும் சேர்த்து “கொங்கு ஆர் இலை புண்டரிகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட” (பெரிய திருமொழி 3.8.3) என்று மங்களாசாசனம் செய்து உள்ளார்.

Google Map

திருமணிமாடக்கோவில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருமணிமாடக் கோவில் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

031 திருசெம்பொன்செய் கோவில் / Thirusemponseikovil

ஸ்வேதபுஷ்பவல்லித் தாயார் ஸமேத செம்பொன்னரங்கப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருசெம்பொன்செய் கோவில் (திருநாங்கூர் 4)
மூலவர்பேரருளாளன்
உத்ஸவர் ஹேமரங்கர் செம்பொன்னரங்கர்
தாயார்அல்லிமாமலர் நாச்சியார்
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 236172
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

பரமபதத்தில் இருந்து அருளுபவர் அருளாளன். இங்கு வந்து நமக்கு அருள் செய்பவன் பேரருளாளன். உறையூரில் இருந்த வந்த அழகியமணவாளன் இவன்.

இழந்த செல்வத்தை பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் எம்பெருமானை சேவிப்பது
மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பது ஒரு நம்பிக்கை.

ஸ்தல வரலாறு

இராவணவதம் முடிந்தபின் இராமபிரான், த்ருடநேத்திரர் என்ற முனிவரிடம், ப்ராஹ்மணனை வதம் செய்தால், மக்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தானும் அதை செய்து மக்களுக்கு ஒரு நீதியை செய்து காட்டுகிறார்.

த்ருடநேத்திரரின் ஆலோசனையின் பேரில், தங்கத்தினால் ஒரு பெரிய பசு செய்து அதற்குள் தான் ஒரு நான்கு நாட்கள் தங்கி இருந்து, பின்னர்
அந்த தங்க பசுவை ஒரு பிராம்மணர்க்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு அந்த பிராம்மணர் இந்தக் கோவிலை கட்டியபடியால், இதற்கு செம் பொன்னால் செய்த கோவில் என்றும் செம் பொன் செய் கோவில் என்றும் கூறுவர்.

எம்பெருமானின் இந்த கோவிலை, எம்பெருமானே கட்ட உதவினார் என்பதும் ஒரு சிறிய தகவல்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்த எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்கிறார். (பெரிய திருமொழி 4.3).

ஒவ்வொரு பாசுரத்திலும், “நாங்கை நன் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே’ என்று சொல்வது, செம்பொன்செய்கோவில், திருநாங்கூர் திவ்யதேசங்களில் நடுவே உள்ளது என்பதை சொல்வதற்கே ஆகும். ஆழ்வாரும் பெரிய திருமொழியில் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேசங்களை பாடும்போது, இந்த பதிகத்தை நடுவில் வைத்து, இதற்கு முன் ஐந்து திருநாங்கூர் திவ்யதேசங்களை பாடியும், இதற்கு பிறகு மீதம் உள்ள ஐந்து திவ்யதேசங்களை பாடி உள்ளார் என்பதும் ரசிக்க வேண்டியது.

நந்தாவிளக்கே” என்று தொடங்கி (3.8) கம்ப மாகடல் (4.2) என்று ஒரு முன் ஐந்து, நடுவே பேரணிந்து (4.3) என்று இந்த ஸ்தலம், பிறகு ‘மாற்றரசர்‘ (4.4) என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” (4..8) என்ற பின் ஐந்திணையும் நினைவில் கொள்ளலாம்.

இரண்டாவது பாசுரத்தில் எம்பெருமான் “இறப்பு எதிர், காலக்கழிவும் ஆனாவனை ” என்று எம்பெருமான், எக்காலத்திலும் உள்ளான் என்பதை இறந்த காலத்தில் இருந்தான், நிகழ்காலத்தில் உள்ளான், எதிர் காலத்தில் இருப்பான் என்கிறார். கழிந்து கொண்டே செல்லுகிற நிகழ்காலத்தை காலக் கழிவும்’ என்று அழகாக சொல்கிறார்.

ஒன்பதாவது பாசுரத்தில், தெளிந்த நான்மறையோர் என்று ஆழ்வார் சொல்வது எம்பெருமான் காப்பாற்றுவானா அல்லது கைவிட்டுவிடுவானா என்று தெளிவளில்லாமல் கலங்குவது என்று இல்லாமல் எப்போதும், எங்கும், எந்த சூழ்நிலையிலும், எம்பெருமான் காப்பாற்றுவான் என்று தெளிவாக உள்ளவர்கள் வாழும் திருநாங்கூர் என்கிறார்.   இப்படிப்பட்ட தெளிவு உடையவர்களுக்கு காட்சி கொடுக்கிறோம் என்ற மகிழ்ச்சியை “வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை” என்கிறார். .

Google Map

திருசெம்பொன்செய் கோவில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருசெம்பொன்செய் கோவில் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

ஐப்பசி விழா – நன்றி whatsapp group நண்பர்கள்

030 திருவண்புருடோத்தமம் thiruvanpurushothamam

புருஷோத்தமநாயகி தாயார் ஸமேத புருஷோத்தமப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர் 3)
மூலவர் புருஷோத்தமன்
உத்ஸவர் புருஷோத்தமன்
தாயார்புருஷோத்தம நாயகி
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364-256221
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

மூலவர் புருஷோத்தமன் நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சி அளிக்கிறார். புருஷோத்தம நாயகி நாச்சியாருக்கு தனிக்கோவில் உள்ளது. அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளினார்.

புருஷர்கள் மூன்று வகை. தான் இன்பம் அடைய, மற்றவனை துன்பறுத்துபவன் அதமன். எல்லோரும் இன்பமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் மத்யமன். தான் துன்புற்றாலும், மற்றவர் இன்பம் அடையவேண்டும் என்பவன் உத்தமன்.

தான் துன்பமுற்றாலும் பரவாயில்லை, உலகம் இன்பமுற வேண்டும் என்று அவதாரம் எடுத்ததால் இவனே உத்தமன். அயோத்தி ஸ்ரீ ராமன் புருஷர்களின் உத்தமர், அதனால், புருஷோத்தமன்.

இந்த கோவிலில் மூன்று ஆஞ்சநேயர் உள்ளனர். அதில் இராமர் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்தி காட்சி அளிப்பது சிறப்பான ஒன்று.

ஸ்தல வரலாறு

பிரம்மா முதலான தேவாதி தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டவர் தாம் புருஷோத்தமன். இந்த திவ்யதேசத்தில், சிறு குழந்தைக்கும் பால் வழங்கி ரட்சித்ததை பார்க்கலாம்.

வ்யாக்ரபாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூ பரித்து, மாலை கட்டி எம்பெருமானுக்கு சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்கு புருஷோத்தம நாயகி மூலம் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பதும் இந்த ஸ்தல வரலாறு ஆகும்.

அப்பொழுது வரவழைத்த திருப்பாற்கடல், இன்று திருப்பாற்கடல் தீர்த்தமாக இந்த திருத்தலத்தின் வடக்கே அமைந்து உள்ளது .

ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை அயோத்தி ஸ்ரீராமனாகவே பாவித்து பாசுரங்கள் பாடி உள்ளார். (பெரிய திருமொழி, 4.2.1 முதல் 4.2.10)

Google Map

திருவண்புருடோத்தமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவண்புருடோத்தமம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

029 திருஅரிமேயவிண்ணகரம் Thiruarimeya vinnagaram

அம்ருதகடவல்லித்தாயார் ஸமேத குடமாடுகூத்தபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஅரிமேயவிண்ணகரம்
மூலவர்குடமாடுகூத்தன் / அமிர்தகடேஸ்வரர்
உத்ஸவர்கோபாலன் (நான்கு கரங்களுடன்)
தாயார்அமிர்தகடவல்லி
திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 275 689, +91 94439 – 85843.
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

இங்கு எல்லாம் அமிர்தம். எம்பெருமான், தாயார், புஷ்கரணி என்று எல்லாம் அமிர்தத்தில் தொடங்கும்.

அடியவர்களின் பகைவர்களை அழிக்கும் பொருட்டே எம்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பகை நீக்கும் பரந்தாமன் என்றும் சொல்லலாம். பகைவர்களை வெல்ல நினைப்பவர்கட்கு இப்பெருமாள் ஒரு வரப்பிரசாதி.

குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளி குடத்தின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கொண்டு, குடமாடு கூத்தனாக காட்சி அளிக்கிறான்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

ஸ்தல வரலாறு

உதங்க முனிவர், பாரத போர் முடிந்து துவாரகைக்கு செல்லும் கண்ணனை வழியில் சந்திக்கிறார். கண்ணனிடம் பாரதப்போர் பற்றியும், யார் ஜெயித்தார், ஏன் ஜெயித்தார் என்று கேட்டார். கண்ணனும் எல்லாம் சொல்லி, விதியின் படி தர்மர் வென்றார் என்று சொல்லி முடித்தார். உதங்க முனிவருக்கு இதில் உடன்பாடு இல்லை, இருந்தாலும், கண்ணன் அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால், அவருக்கு அவர் வேண்டியபடி விஸ்வரூப தரிசனம் கொடுத்து, விடைபெற்றான்.

பின் ஒரு நாள், முனிவருக்கு தாகம் எடுத்தபோது, தண்ணீர் கிடைக்காமல் போக, அங்கே வந்த ஒரு இடையன் தன்னுடைய பானையில் உள்ள தண்ணீரை கொடுக்க முயன்றபோது, முனிவர் அவனுடைய தோற்றத்தையும் சுற்றுசூழலையும் பார்த்து தண்ணீரை மறுக்கிறார்.

இடையன் சென்றபின், கண்ணன் அங்கு தோன்றி, இடையன் பானையில் வைத்து இருந்தது அமிர்தம் என்றும், விதியின் படி அது அவருக்கு கிடைக்கவில்லை என்றும், இடையன் இந்திரன் என்றும், சொல்ல, முனிவர் முன்பு கண்ணன் சொன்னதை நினைவில் கொண்டு, கண்ணனை வணங்கி விதிப்படி நடக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். இந்த திருத்தலத்தில் இது நடந்தது என்றும், பானையில் இருந்து ஒரு சில அமிர்தத்துளிகள் இந்த திவ்யதேசத்தில் விழுந்தன என்றும் ஒரு வரலாறு.

இன்னொரு வரலாறு

கருடாழ்வாரின் தாயான வினதாவை, அவளின் தங்கையும் நாகத்தின் தாயும் ஆன கத்ரு தன்னுடைய தந்திரத்தால் அடிமையாக்கிக் கொண்டாள். அந்த அடிமைத்தன்மையில் இருந்து விடுதலையாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட கருடனிடம், கத்ரு தேவலோகத்தில் இருந்து அமிர்தம் வேண்டும் என்று சொன்னாள். கருடாழ்வாரும் தன்னுடைய திறமையால் அமிர்த குடத்தை கொண்டு வந்தார். ஆனால் அங்கு வந்த கண்ணன் அமிர்த குடத்தில் ஏறி நின்று நடனம் ஆடி நாகங்கள் அமிர்தத்தை உண்ணாமல் பார்த்துக் கொண்டான். கருடாழ்வாரும் தன்னுடைய தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்க, கருடனை மன்னித்து, அவன் தாயாரையும் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார் என்பது சரித்திரம்.

கண்ணனின் பிரசித்தமான நடனங்களில் சில, இந்த குடமாடு கூத்து, காளிங்க நர்த்தனம், கோபிகைகளுடன் ராசாலீலா, குன்றமெடுத்து கோவர்த்தன நடனம் ஆடியது.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் எம்பெருமான் தேவர்களுக்காக
அமிர்தம் கடைந்து அசுரர்களை வென்றதையும், கம்சனைக் கொன்றதையும், ஹிரண்யனை இரண்டாக பிளந்ததையும், மாவலியை வாமன அவதாரம் எடுத்து வென்றதையும், இராவணனை கொன்றதையும், பூதனையை அழித்ததையும் சொல்லி, பகைவர்களை வெல்ல அருள் செய்பவர் இவரே என்று முடிக்கிறார்.

குடக்கூத்த” என்ற ஒரு சொல்லினால், குடங்கள் மேல் ஆடினான் என்றும் குன்றை குடையாய் கொண்டும் ஆடினான் என்றும் அர்த்தம் காணமுடியும். காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் (பெரிய திருமொழி, 3.10.8) என்று கூறியதால், ஆழ்வார் பிருந்தாவனத்தில் இருந்து வந்து, குன்றை குடையாய் பிடித்த கோவர்தனகிரியாக அனுபவித்தார் என்று தெரிகிறது.

Google Map

திருஅரிமேய விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅரிமேய விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

028 திருக்காழிச்சீராம விண்ணகரம் Thirukazhisiramavinnagaram

லோகநாயகி தாயார் ஸமேத தாடாளப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருகாழிச்சீராம விண்ணகரம் / சீர்காழி / பாடலிகவனம் / உத்தமக்ஷேத்திரம்
மூலவர்த்ரிவிக்ரமன் தாடாளான் உலகளந்த நின்ற திருக்கோலம்
உத்ஸவர் லோகநாதன் / தாடாளன் / விட்டுப் பானைத் தாடாளன்
தாயார் லோகநாயகி / மட்டவிழ்குழலி
திருக்கோலம்நின்ற திருகோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 270 ; +91 4364 207, +91 94424 – 19989

கோவில் பற்றி

இங்கு எம்பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி திரிவிக்ரம கோலத்தில் காட்சி அளிக்கிறார். வலது திருஅடிகளால் எம்பெருமான் பூவுலகத்தை அளந்ததும் இடது திருவடியால் மேலுலகத்தை அளந்தத்தையும் நினைவில் கொண்டால், எம்பெருமான் இடது கரத்தை தூக்கி மேலுலகை காட்டும் காட்சியாகவோ, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மாவலியை கேட்பது போலவோ இருப்பதாக அனுபவித்து மகிழலாம்.

திரி விக்ரம அவதாரம் எடுத்து, தன் தாள்களால் எல்லா உலகங்களையும் அளந்ததால், இப்பெருமானுக்கு தாள் ஆளன், என்பது, தாளாளன் என்றுஆகி தாடாளன் என்ற திருநாமம் இத்தலத்து எம்பெருமானுக்கு ஆயிற்று.

முன் மண்டபத்தில், வாமன அவதாரம் எடுத்த பெருமாள், ஒரு கையில் குடையுடனும் வலது கை தானம் ஏற்கும் நிலையிலும் சாளக்ராம மாலை அணிந்து காட்சி அளிக்கிறார்.

எம்பெருமான் உலகத்தையே ஒரு காலால் அளந்ததால், பூமி நிலம் வாங்குவதற்கு / பூஜை செய்வதற்கு உகந்த கோவில்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

இந்த கோவிலுக்கு அருகிலேயே திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி பால் ஊட்டிய சட்டைநாதர் கோவில் உள்ளது.

ஸ்தல வரலாறு

பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும் அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக் குறித்து இங்கு கடுந்தவம் செய்ததாகவும் முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவர் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின் ஆயுளில் ஒரு வருடம் குறையும் என்று கூறி பிரம்மனின் கர்வத்தை அழித்தார் என்றும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான் அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டி அருளினார் என்றும் வரலாறு.

மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த சித்தாஸ்ரமம் என்ற இடத்தில தானும் யாகம் செய்ய விரும்பி, அதற்கு எந்த இடையூறும் வராமல் காக்க, இராம இலக்குவர்களை விசுவாமித்திரன் அழைத்து வந்ததாக இராமாயணம் சொல்லும். அந்த சித்தாஸ்ரமம், பக்சார் என்று பிஹார் மாநிலத்தில் உள்ளது. அதேபோல் சித்தாஸ்ரமம் என்ற பெரியார் உள்ள இடம் இததலத்திற்கு அருகில் இருப்பதால், இது ராம விண்ணகரம் ஆயிற்று.

ஆழ்வார்

இத்திருத்தலத்திற்கும் திருமங்கையாழ்வாருக்கும் நிறைய சுவாரஸ்யமான தொடர்புகள் உண்டு. அவற்றில் சிலவற்றை நம் காண்போம்.

ஒரு சமயம் இத்தலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, ஒரு மூதாட்டி உற்சவப் பெருமாளை மட்டும் தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து தினமும் திருவாராதனம் செய்து வந்தாள்.அதனால் “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் எம்பெருமானுக்கு உண்டு. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம், அந்த மூதாட்டி, ஆழ்வாரிடம் எம்பெருமானை ஒப்படைக்க, அவர் எம்பெருமானை இங்கே பிரதிஷ்டை செய்தார்.

திருஞான சம்பந்தர், திருமங்கையாழ்வாரை ஒரு சமயம் வாதத்திற்கு இந்த ஸ்தலத்தில் அழைத்ததாகவும், அவர் கவி பாட ஆராதன விக்ரகம் வேண்டும் என்று தெரிவிக்க அவரது சீடர்கள் மூதாட்டியிடம் இருந்து தாடாள விக்ரகப் பெருமாளை பெற்று வந்து கொடுத்ததாகவும் கூறுவர்.

இந்த திருத்தலத்தில் திருஞானசம்பந்தரை, திருமங்கை ஆழ்வார் வாதத்தில் வென்றதற்காக, அவருடைய வேலை, ,திருமங்கையாழ்வாருக்குப் பரிசாக அளித்து கவுரவித்தது திருமங்கையாழ்வாரின் கவித்திறனை உலகிற்கு மேலும் பறைசாற்றும் ஒரு காரணமாக அமைந்தது.

வாதத்தின் போது திருமங்கையாழ்வார், ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி….. அருமறையின் திறன் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவைகள் ஆறும் இசைகள் எழும் என்று, (பெரிய திருமொழி, 3.4.1) தொடங்கி, ஒன்று, முதல் ஏழு வரை எண்வரிசையில் பாடி, தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பல அவதாரங்களை விளக்க, ஆழ்வாரின் திறமை கண்டு வியந்த திருஞான சம்பந்தர், ஆழ்வாருக்கு விருதுகள் தகும் என்று சொல்லி திருமங்கை ஆழ்வாரின் கால்களுக்கு தண்டையும் அணிவித்து மகிழ்ந்ததுவும் இத்திருத்தலத்தில்தான்.

திருமங்கையாழ்வார் தன் பாசுரங்களில் பலஸ்ருதி வரும் இடங்களில், பொதுவாக தம்முடைய பட்டப்பெயர்களில், ஒன்று அல்லது இரண்டு மட்டும் இணைத்துப் பாடுவார். ஆனால் இங்கே இவரை நாலுகவிப்பெருமாள் என்று மக்கள் பாராட்டியதால், தனது 8 விருதுப்பெயர்களையும் ஒரு பாடலில் சொல்கிறார்.

அவை,

  1. ஆலிநாடன்
  2. அருள்மாரி
  3. அரட்டமுக்கி
  4. அடையார் சீயம்
  5. கொங்குமலர் குழலியர்வேள்
  6. மங்கை வேந்தன்
  7. பரகாலன்
  8. கலியன்.

   

Google Map

திருக்காழிச் சீராம விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்காழிச் சீராம விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

027 திருக்காவளம்பாடி Thirukaavalampaadi

செங்கமலநாச்சியார் ஸமேத கோபாலக்ருஷ்ண பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்காவளம்பாடி (திருநாங்கூர் திவ்யதேசம் 1)
மூலவர்கோபாலகிருஷ்ணன் / ராஜகோபாலன்
உத்ஸவர்கோபாலகிருஷ்ணன்
தாயார்மடவரல்மங்கை / செங்கமலவல்லி நாச்சியார் (தாயார் தனிக்கோவில் இல்லை)
திருக்கோலம்நின்ற திருக்கோலம் ( ருக்மணி , சத்யபாமாவுடன் திருக்கோலம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 275 478
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

திருநாங்கூர் பற்றி

திருநாங்கூர் திவ்யதேசங்கள் பதினொன்று. அவை

     1. திருக்காவளம்பாடி            
     2. திருஅரிமேய விண்ணகரம்     
     3. திருவண்புருடோத்தமம்        
     4. திருச்செம்பொன் செய்கோவில்  
     5. திருமணிமாடக்கோவில்        
     6. திருவைகுந்த விண்ணகரம்
     7. திருத்தேவனார்த் தொகை
     8. திருத்தெற்றியம்பலம்
     9. திருமணிக்கூடம்
     10. திருவெள்ளக்குளம்
     11. திருப்பார்த்தன் பள்ளி

திருநாங்கூர் திவ்யதேசங்கள் – Thanks to Dinam Oru Divyadesam website

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் இந்த 11 பெருமாள்களும் கருட சேவையில் மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் எழுந்தருளி திருவிழா காண்பர். இந்த 11 பெருமாள்களையும் ஒருவர் பின் ஒருவராக திருமங்கையாழ்வார் வந்து மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்த கண் கொள்ளா கருடசேவை திருவிழாவில் கலந்து கொள்ள, பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

ஆண்டுதோறும் எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் திருநாங்கூரை சுற்றி உள்ள வயல் வெளிகளில் வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. கருடசேவைக்கு முன் நெற் பயிர்கள் காற்றினால் சலசல என்று சப்தமிட, அந்த சத்தத்தை கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரேவேசித்து விட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும் அவரால் மிதிக்கப்பட்ட வயல் வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்றும் இப்பகுதியில் மக்கள் பரிபூர்ணமாக நம்புகிறார்கள்.

இந்த பகுதிக்கு புரசங்காடு என்றும், பலாசவன க்ஷேத்திரம் என்றும், மதங்காச்சரமம் என்றும், நாகபுரி என்றும் உபய காவேரி மத்திமம் என்றும் பல பெயர்கள் உண்டு

திருநாங்கூர் ஸ்தல வரலாறு

பராசக்தியின் தந்தையான தட்சன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே பார்வதிதேவி நேரில் சென்று தட்சனுக்கு புத்திமதிகள் கூற அவன் சிவனை மேலும் இகழ்ந்து பேசினான். இதனால் கோபமுற்ற பார்வதி, தட்சனை சபித்து அவன் யாகத்தை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வர, சிவன் கோபம் அடங்காமல் இவ்வுலகமே அழியும்படியாக கொடூர ருத்ர தாண்டவம், இந்த உபயகாவேரி மத்திமத்தில் வந்து ஆடினார்.

அப்பொழுது சிவனின் தலையில் உள்ள சடாமுடித் தரையில் பட்ட உடன் அதில் இருந்து ஒரு சிவன் தோன்றி நடனம் ஆட, இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிவனுடைய தலைமுடி தரையில் பட அதிலிருந்து ஒவ்வொரு சிவனாக தோன்ற தேவர்களும், ரிஷிகளும் பேரழிவு வந்துவிடுமோ என்று எண்ணி உலகை காக்குமாறு மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். பரமபதத்தில் இருந்து மகாவிஷ்ணு புறப்பட்டு வரும்போது, இங்கு 11 சிவன்கள் (சிவ ரூபங்கள்) தோன்றி ஆடிக்கொண்டிருக்க, அவனை கண்டதும், சிவன் தனது கொடூரமான தாண்டவத்தை நிறுத்தி தன்னை போல் 11 திருமால்களாக காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டினார். அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10 பெருமாள்களை பரமபதநாதன் நினைத்த மாத்திரத்தில் இங்கு வந்து எழுந்தருளினர். சிவன், மஹாவிஷ்ணுவை, ஏகாதச மூர்த்தியாக காட்சி தரவேண்டும் என்று விண்ணப்பிக்க, அவரும் அப்படியே அருளினார். அந்த 11 பெருமாள்கள் நின்ற இடந்தான் இந்த 11 திருநாங்கூர் திவ்யதேசங்கள் ஆகும்.

திருநாங்கூர் 11 கோவில்கள் வந்து சேர்ந்த 11 பெருமாள்கள்
திருக்காவளம்பாடி – கோபாலகிருஷ்ணன்
பாமா ருக்மணியுடன்
துவாரகை – துவாரகதீசன்
அரிமேயவிண்ணகரம்
குடமாடு கூத்தர்
கோவர்த்தனகிரி – கிருஷ்ணன்
வண்புருடோத்தமம் – புருஷோத்தமன் அயோத்தி சக்ரவர்த்தி திருமகன்
செம்பொன்செய் கோயில் – பேரருளாளன் உறையூர் அழகிய மணவாளன்
மணிமாடக் கோவில் நாராயணப்பெருமாள்பத்ரிநாத் நாராயணன்
வைகுந்தவிண்ணகரம் – வைகுண்ட நாதன் பரமபதம் நாராயணன்
திருத்தேவனார்த் தொகை – கீழச்சாலை – மாதவப்பெருமாள் திருவடந்தை – லக்ஷ்மிவராஹ பெருமாள்
திருதெற்றியம்பலம் –
ரங்கநாத பெருமாள்
ஸ்ரீரங்கம் – திருவரங்கநாதன்
திருமணிக்கூடம் – வரதராஜப்பெருமாள்திருக்கச்சி (காஞ்சி) தேவப்பெருமாள்
திருவெள்ளக்குளம் – அண்ணன்கோயில் ஸ்ரீனிவாசன் திருப்பதி – ஸ்ரீனிவாச பெருமாள்
பார்த்தன்பள்ளி –
பார்த்தசாரதி
குருக்ஷேத்திரம் பார்த்தசாரதி

இதன்பின் பதினொரு சிவரூபங்களை திருமால் ஒரு சிவரூபமாக மாற்றி, பார்வதியையும் ஏற்றுக் கொள்ள வைத்ததாக ஐதீகம்.

கோவில் பற்றி

சத்யபாமாவிற்கு பிடித்த பாரிஜாத மலர் செடியை பகவான் கிருஷ்ணன் நட்ட இடம் தான் இந்த திவ்யதேசத் திருத்தலமான திருக்காவளம்பாடி. காவளம் என்றால் பூஞ்சோலை என்று பொருள். இந்தமாதிரி இடங்களில் கிருஷ்ணனுக்கு பிரியம் அதிகம், துவாரகையில் இருந்து அவன் உகந்து வந்து தங்கும் இடமாக கருதப்பட்டு துவாரகைக்கு இணையாக புராணங்களில் பேசப்படுகிறது.

கோவில் சிறியது என்றாலும், அழகாக உள்ளது.

திருக்காவளம்பாடி ஸ்தல வரலாறு

 கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனை அழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்களுக்கே மீட்டுக் கொடுத்தான். பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன்
இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங் கொண்ட கண்ணன் அவனோடு போர்புரிந்து அவனது பூம்பொழிலை அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக
துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான்  இருக்க காவளம் போன்ற பொழிலைத் தேடினான். இந்தக் காவளம் பாடியில் நின்றுவிட்டான்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வாரால் 10 பாடல்கள் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு ததீயாராதனம் (அன்னதானம்) நடத்திய
மங்கை மடம் இந்த ஸ்தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது.

திருமங்கையாழ்வார், நாச்சியாரின் இனிய தமிழ் திருநாமமான “மடவரல் மங்கை” என்பதை மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே (பெரிய திருமொழி 4.6.5) என்று பாடி உள்ளார்.

Google Map

திருக்காவளம்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்காவளம்பாடி பற்றி சொல்வது

026 திருஇந்தளூர் Thiruindaloor

புண்டரீகவல்லி தாயார் ஸமேத பரிமளரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஇந்தளூர்
மூலவர்பரிமள ரங்கநாதன், மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்
உத்ஸவர்பரிமள ரங்கநாதன்
தாயார்சுகந்தவல்லி தாயார், புண்டரீகவல்லி, பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசனவல்லி
திருக்கோலம்கிடந்த (வீர சயனம்) (நான்கு திருக்கரங்களுடன் சயன சேவை)
திசைகிழக்கு
பாசுரங்கள்11
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 11
தொலைபேசி+91 4364-223 330.

கோவில் பற்றி

சிறுவயது முதல் இன்றும் எங்களை, நாங்கள் எங்கு இருந்தாலும் அதீத கருணையுடன் வளர்த்து கொண்டு வரும் எங்கள் சுகந்தவல்லி தாயார் சமேத பரிமள ரங்கநாதனுக்கு எங்களின் கோடானகோடி நமஸ்காரங்களுடன் இந்த பதிவினை தொடங்குகிறோம்.

பஞ்ச ரங்க க்ஷேத்திரத்தில் இறுதியாக உள்ள க்ஷேத்திரம் இந்த திருஇந்தளூர்.

பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் ஐந்து. அவை,

  • ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன்,
  • மத்திய ரங்கம் – திருவரங்கம் ரங்கநாதன்,
  • அப்பாலரங்கம் – கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் ,
  • சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி,
  • பஞ்ச ரங்கம் – திரு இந்தளூர் பரிமளரங்கன்

நான்கு திருக்கரங்களுடன், சங்கு சக்கரங்களை ஏந்திக்கொண்டு மிக பெரிய திருஉருவில், ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். சங்கு சக்கரத்துடன் இருப்பதால் வீர சயனம் என்று போற்றப் படுகிறார்.

திருவடியருகில் காவிரித் தாயாரும், சிரசருகில் கங்கைத்
தாயாரும், வணங்குகின்றனர். . திருவடிக்கருகில் சந்திரனும், சரசுக்கு அருகில் சூரியனும் உள்ளனர். நாபிக்கமலத்தை பிரம்மன் ஆராதிப்பதாக ஐதீகம்.

ஏகாதசி மண்டபம் ஒன்று இந்த கோவிலில் உள்ளது. ஏகாதசி விரதம் தொடங்க இருப்பவர்கள் இந்த திருத்தல எம்பெருமானை தரிசித்து / எண்ணிக்கொண்டு ஆரம்பிப்பது சிறப்பு.

ஐப்பசி மாதம் முழுதும் இங்கே திருவிழாக் கோலமாக இருக்கும். துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்தியாவிலிருந்து இங்கு பக்தர்கள் வருவர். ஆண்டுதோறும் திருஇந்தளூர் பரிமள ரங்கன் சன்னதி ஐப்பசி அமாவாசை ‌கருட‌சேவை புறப்பாடு நடைபெறும்.

ஐந்து அடுக்கு கோபுரம், 350 அடி நீளமும் 230 அடி அகலமும் உள்ள கோவில்.

ஸ்தல வரலாறு

சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபங்களை போக்குதற்காக இந்த தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவம் இருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு. இன்றும் திருஇந்தளூர் பரிமள ரங்கன் சன்னதி துலா ப்ரஹம்மோத்ஸவம் 4ம் திருநாள் காலை சந்திர ‌சாப விமோசனம் நடைபெறுகிறது.

சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு சாபம் தீர்த்த இத்தலம் தனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்று வேண்ட, அதுவே திரு இந்தளூர் என்று ஆயிற்று.

ஏகாதசி விரதத்தின் சிறப்பு இந்த உலகத்திற்கு தெரிய உதவும் திருத்தலம். ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷன் என்ற மன்னவனுக்கு தேவர்கள் துர்வாச முனிவர் மூலம் கொடுத்த தொந்தரவுகளில் இருந்து பரிமள ரங்கநாதன் காப்பாற்றியதாக சொல்வார்கள்.

மக்கள் தங்கள் பாவங்களைப்போக்கி கொள்ள புண்ணிய நதிகளுக்கு சென்று நீராடி வருவார்கள். அந்த பாவங்கள் தீர, அந்த புண்ணியநதிகள், துலா மாதத்தில் (தமிழ் மாதம் ஐப்பசி) காவிரி நதியில் நீராடி தங்கள் புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வார்கள்.

Google Map

திருஇந்தளூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருஇந்தளூர் பற்றி

ஆழ்வார்

திருமங்கைஆழ்வார் ஆண் பாவத்தில் ஊடல் பாசுரங்கள் பாடியுள்ள ஒரே ஸ்தலம்.

அடியேன், திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை சிறிது விளக்கங்களுடன் கொடுக்க முயற்சி செய்துள்ளேன்.

திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப் பட்டுவிட்டது. தான் வருவதற்குள் எம்பெருமான் கதவுகளை மூடி கொண்டாரே என்று திருமங்கையாழ்வார், அவரை “வாழ்ந்தே போம் நீரே” என்று பாடியுள்ளார்.

சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே, மருவினிய மைந்தா” என்று விளித்து, ஆழ்வார் எம்பெருமானின் அடிமை என்று தெரிந்திருந்தும் அவருக்கு காட்சி கொடுக்காது கதவுகளை மூடி கொண்டார் என்றும், ஆழ்வார், பரிமளரங்கனைக் காண ஆசைப்பட்ட போது, அப்படி செய்தான் என்ற பழிச்சொல் அவனுக்கு வந்து சேரும் என்றும் ஆகவே தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்றும் ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.

தனக்கு பழிச்சொல் வருவது பற்றி ஆழ்வார் கவலைப்பட வேண்டாம் என்று எம்பெருமான் சொல்ல, எம்பெருமானால் தாங்க முடியாதபடி அவனின் பக்தர் மீது பழிச்சொல் வரும், என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆழ்வார், எம்பெருமான் புலப்படாது செல்லச் செல்ல மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்.

எம்பெருமானடைய ஸர்வஜ்ஞத்வத்திற்கும் (எல்லாம் தெரிந்தவர்) ஸர்வ சக்தித்வத்திற்கும் (எதையும் செய்ய முடியும்) குறை கூறுவது போல் இருந்தாலும், ஆழ்வாரின் விளக்கங்களை எம்பெருமான். மேலும் மேலும் கேட்க விரும்புகிறார்.

ஆழ்வார் திவ்யதேசங்களை சுற்றி திரிகிறார் என்பது எம்பெருமானுக்கும் தெரியும். அப்படி இருந்தும், ஆழ்வாருக்கு பொன்னின் ஒளியைக் காட்டிலும் சிறப்பாக உள்ள அவனின் வடிவழகைக் காட்டாமல் இருப்பதை எடுத்து உரைக்கிறார்.

பரமபதத்தில் நித்திய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் பேரழகை, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு காட்டுவதற்காகவே அர்ச்சாவதாரம் எடுத்து உள்ளார் என்றும் இந்தளூரிலும் அப்படியே இருந்தாலும், தனக்கு நடையழகு காட்டாமல் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.

எம்பெருமானுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்து இருந்தும், ஆழ்வாரையும் எல்லா பக்தர்களைப்போல் தன்னையும் எண்ணிவிட்டார் என்றும், பரதன் போல் 14 ஆண்டுகளோ, சீதா பிராட்டியைப்போல் ஒரு மாதமோ பெருமாளை பிரிந்து இருக்க முடியும் என்ற தன்மை இல்லாதவராய், ஒரு நொடி பொழுதும் பிரிய மாட்டாத தன்மையுடைவர் ஆழ்வார் என்றும் சொல்கிறார்.

நன்றி : whatsapp group நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்

ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு நிறத்துடன் இருந்த, எம்பெருமானின் திருமேனி, இந்தளூரில் என்ன வண்ணம் என்று கேட்டு, “சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், சிறிதும் திருமேனி, இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!” என்று ஆழ்வார் முடிக்கிறார்.

மாசி சமுத்திர தீர்த்தவாரி
மாசி சமுத்திர தீர்த்தவாரிக்கு புறப்பாடு
மாசி சமுத்திர தீர்த்தவாரி காலஅட்டவணை

025 திருத்தலைச் சங்க நாண்மதியம்

தலைச்சங்கநாச்சியார் ஸமேத நாண்மதியப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருதலைச்சங்க நாண்மதியம் / தலைச்சங்காடு
மூலவர்நாண்மதிய பெருமாள், வெண்சுடர் பெருமாள், சந்திரசாபஹரர்
உத்ஸவர்வியோமஜோதிபிரான் வெஞ்சுடர்ப்பெருமாள் லோகநாதன்
தாயார்தலைச்சங்க நாச்சியார் / செங்கமலவல்லி தாயார்
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2
தொலைபேசி +91 99947 29773

கோவில் பற்றி

சந்திரனுக்கு உண்டான சாபத்தைத் தீர்த்து இவ்விடத்தில்
எம்பெருமான் சந்திரனுக்கு காட்சியளித்ததாக சரித்திரம். அதனால், சந்திர தோஷம் தீர்வதற்கான திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு, திருஇந்தளூர், மற்றும் திருவரங்கம். திருவரங்கம் கோயில் உள்ளேயே சந்திர புஷ்கரணி உள்ளதை நினைவில் கொள்ளவும்

இந்த திருத்தலத்தில், எம்பெருமான், சந்திரனை தலையில் சூடி, சிவன் போல், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

விலை மதிப்பற்ற சங்கு ஒன்றை இந்த எம்பெருமான், ஏந்தி கொண்டு இருப்பதால் சங்கம் என்ற பெயர் வந்தது என்பர்.  இந்த திருத்தலத்தின் அருகில் கடல் இருப்பதாலும், அங்கு அந்த காலத்தில் உயர்ந்த சங்குகள் கிடைத்து அவை அதிகமாக வாணிகம் செய்யப் பட்டதால் இந்த பெயர் ஏற்பட்டது என்று சொல்வதுண்டு.

மூலவர், நாண்மதிய பெருமாள் என்றும், உற்சவர் வெண்சுடர் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எம்பெருமானும் தேவிமார்களுடன் மிகப் பேரழகுடன் செப்பு மூர்த்திகளாக எழுந்தருளி உள்ளனர்.  கையில் ஏந்தி உள்ள சங்கும் மிகவும் பேரழகு வாய்ந்தது.

ஸ்தலபுராணம்

சந்திரன், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, மகாலட்சுமிக்கு முன் தோன்றியவர், அதனால், சந்திரன் லட்சுமியின் சகோதரன் ஆகிறார். நவகிரஹங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக உள்ளவன்.

சந்திரன் தான் செய்த தவற்றினால் தேவகுருவால் சாபமிடப்பட்டான். சந்திரன், தான் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு செலுத்துவதாக கூறியத்திற்கு மாறாக, தான் விரும்பி திருமணம் புரிந்துகொண்ட 27 நட்சத்திர மனைவிகளில் ரோகிணி என்ற ஒரு தேவிக்கு மட்டும், அதிக அன்பு செலுத்தி வந்தான். அதனால், நட்சத்திர மனைவிகளின் தந்தையான தக்கன் என்பவன் சந்திரன் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போக சாபமிட்டான். இந்த இரண்டு சாபங்களில் இருந்து விடுபட, சந்திரன், திருமாலிடம் வேண்டி அவர் சொல்படி, திருவரங்கம், திருஇந்தளூர் புஷ்கரணிகளில் ஸ்னானம் செய்து, பின் அருள் பெற்ற இடம் இத்திருத்தலம் ஆகும்.

ஆழ்வார்கள்

எம்பெருமானுக்கு அமைந்துள்ள பெயர் மிகவும்
ரசிக்கத்தக்கதாகும். எம்பெருமானின் திருமுகத்தை தண் என்னும் குளிர்ச்சியான சந்திர ஒளிக்கு ஒப்புமையாக பல ஆழ்வார்கள் கூறியுள்ளார்கள்.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் என்று திருப்பாவை (22) ஆண்டாளும்,  பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றொடு, பால் மதியேந்தி, என்று நம்மாழ்வாரும் (திருவாய்மொழி 8.2.10) , “திரைநீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன்” எனறு பெரியாழ்வாரும் (பெரியாழ்வார் திருமொழி, 1.8.10), சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச, மலர்ந்தெழுந்த அணவு மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் என்று பெரியாழ்வாரும் (பெரியாழ்வார் திருமொழி, 4.7.2), பாடியதில், சந்த்ர சூரிய ஒளிக்கற்றை எம்பெருமானின் திருமுகமண்டலத்திற்கு ஒப்பு சொன்னாற்போல், இங்கே, அதையே திருநாமமாக சூடிக்கொண்டுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஆண்டாள், திருப்பாவை (1) பாசுரத்தில், கதிர்மதியம் போல் முகத்தான் என்று பாடியுள்ளது இந்த திவ்யதேச எம்பெருமானுக்கு பொருத்தமாக உள்ளது என்று எண்ணி அனுபவிக்கலாம், நம் ஆச்சார்யர்கள் கூற்று அப்படி இல்லை.

Google Map

திருதலைச்சங்க நாண்மதியம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருதலைச்சங்க நாண்மதியம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

RSS
Follow by Email