உபதேசங்கள் – இராமன் கண்ணன் அரங்கன்

Please click here for English version of this weblog, thanks 

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார், பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அவைகளை முந்தைய இரண்டு பதிவுகளில் பார்த்தோம். அடுத்த பகுதியான நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்களைக் கொண்ட, தன்னுடைய அனுபவத்தை, நமக்கு உபதேசம் செய்கிறார். அவற்றின் முதல் பகுதியான நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பாடல்களைப் பற்றி சென்ற பதிவினில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியான மற்றொரு ஆச்சர்யமான பகுதியை இங்கு காணலாம்.

ஸ்ரீராமனே தேவன் ஆவான்

புலை அறமாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம், கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம், தலையறுப் புண்டும் சாவேன் (சாகேன் )சத்தியம் காண்மின் ஐயா, சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான். (திருமாலை 7)

தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர், என்றும் புள் கவ்வக் கிடக்கின்றீரே என்றும் சென்ற பாசுரங்களில் ஆழ்வார் சொன்னதை கேட்ட நம்போன்றவர்கள், இப்படி தங்களை இகழ்வதால் பயன் ஒன்றும் இல்லை என்றும், இதுவே உலக இயற்கையாக உள்ளது என்றும், தண் துழாய் மாலை மார்பன் என்று சொல்லப்படும் பரமபதநாதன் எங்கோ எட்டாத தூரத்தில் உள்ளான், அவனை அடைய பல தடைகளும் உள்ளன, அத்தகைய தடைகளை தாண்ட வழிகளை சொல்லித்தந்து அவன் யார் என்பதையும் தங்களுக்கு எளியதாக சொல்லும்படி ஆழ்வாரிடம் வேண்டினார்கள். அதற்கு ஆழ்வார், இங்கு வந்து அவதரித்து, தடைகளை நீக்குவதே இயல்பாக கொண்டவனாக சக்ரவர்த்தித் திருமகன் என்னும் ஸ்ரீராமனையே அடையவேண்டும் என்று தெளிவாக சொன்ன பாசுரம்.

வேதத்தை ஒப்புக்கொள்ளாதவர்களையும், வேதத்தை ஒப்புக்கொண்டு அதற்கு தப்பான அர்த்தத்தை கற்பிப்பவர்களையும், பாடலின் முதல் வரியில் ஆழ்வார் குறிப்பிட்டு அவர்களை அறவே விலக்குவது, அதாவது, அவர்களை பார்க்காமலும், அவர்கள் வார்த்தைகளை கேட்காமலும் இருக்க வேண்டும் என்பது வழக்கம் என்பதை நமக்கு தெரிவிக்கின்றார். கூரத்தாழ்வான், இஷ்டசித்தி என்ற புறச்சமய நூலை, மற்றவர்கள் படிப்பதை சிறிது நேரம் கேட்டதற்காக அவரின் திருத்தகப்பனார், “கலையறக்கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் ” என்ற ஆழ்வார் வாக்கியம் இருக்க, இப்படி செய்யலாமோ என்று சொல்லி அவருக்கு ஸ்ரீபாத தீர்த்தம் கொடுத்து அவரை பரிசுத்தப் படுத்தினார் என்பது இங்கு குறிப்பிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான ஐதீகம். மேலும் கலையறக்கற்ற மாந்தர் என்பதற்கு, வேதம் மற்றும் மனு முதலானவர்கள் இயற்றிய தர்மசாஸ்திர நூல்களை கற்றவர்களும், இதிகாச புராணங்களை நன்கு தெரிந்தவர்களும், நல்ல தர்க்கங்கள் போன்ற உண்மைகளை பற்றியவர்களும் ஆவார்கள் என்றும், அவர்களுக்கு கூரத்தாழ்வானையே ஒரே உதாரணமாகவும் பெரியவாச்சான்பிள்ளை கூறுகிறார்.

சக்ரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே நாம் பற்ற வேண்டிய பரம்பொருள் என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆழ்வார், தன்னுடைய தலையை வெட்டினாலும் சாக மாட்டேன் என்று சத்தியம் செய்வதாவும், அதைப்பார்த்த பிறகாவது, நாம் அதில் உறுதி கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இங்கு சாகேன் என்று ஒரு பாடமும், சாவேன் என்று இன்னொரு பாடமும் இருக்கின்றன. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்று தான். ஆழ்வார் சத்யம் செய்ததே போதும் என்று அனைவரும் ஆழ்வார் சொல்வதை ஏற்றுக்கொள்ள தயார் ஆனார்கள்.

ஸ்ரீராமன், தர்மாத்மாவாகவும், சத்தியவானாகவும், வீரத்தில் எவருக்கும் ஒப்பு இல்லாதவனாகவும் இருப்பது சத்தியமானால், யாரும் தன் தலையை அறுக்க முடியாது என்று வரம் வாங்கியிருந்த இந்திரஜித்தை தன் அம்பு அழிக்கட்டும் என்று லட்சுமணன் சத்தியம் செய்து அதை செய்து காட்டியதையும் இங்கு பெரியவாச்சான்பிள்ளை நினைவு கூறுகிறார்.

இராவணனின் பலம் பெருகுமாறு வரம் கொடுத்த தேவதைகள் தங்களுடைய பதவிகளை காத்துக்கொள்ள, பெருமாளிடம் வரம் வேண்டியதால், அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த பூமியில் இராம அவதாரம் எடுத்து தன்னுடைய கை வில்லினாலே இலங்கையை அழித்த ஸ்ரீராமனே நாம் அடையவேண்டிய தெய்வம் ஆகும் என்று ஆழ்வார் அடுத்த வரியில் கூறுகிறார். இந்த இராவணனை பெருமாள் ஸ்ரீ வைகுந்ததில் இருந்து தன்னுடைய சங்கல்ப சக்தியினால் அழித்து இருந்தால், யார் செய்தார் என்பது விளங்காமல் போயிருக்கும். இதிலிருந்து தேவதைகளையும், மற்றும் எல்லோரையும் காக்கும் தெய்வம், ஸ்ரீராமன் என்று உறுதியாக தெரிய வரும். இராவணனை கொன்ற பிறகு, தனி வீரனுக்கு உள்ள அழகுடன் தோன்றும் அவனே(தேவனே) நமக்கு கதி என்று சொல்லும்படி உள்ள பரம்பொருள் (தேவன் ஆவான்) என்று முடிக்கிறார்.

இனி அடுத்த பாசுரம்.

வேதத்திற்கு புறம்பான வார்த்தைகள்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால், பொறுப்பு, அரியனகள் பேசில் போவதே நோயதாகி, குறிப்பு எனக்கு அடையுமாகில் கூடுமேல், தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய், அரங்கமா நகரு ளானே. (திருமாலை 8)

சென்ற பாசுரத்தில், சக்கரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீ ராமனை பின்.பற்றுங்கள் என்று தெளிவாக சொன்னபிறகும், சம்சாரிகள் அவனை பின் பற்றாமல், உண்டு உறங்கி, எம்பெருமானை குறித்து பொறுக்க முடியாத வார்த்தைகளை பேசுவதற்கு காரணம், அவர்களுக்கு பிற சமயங்களில் ஏற்பட்டிருக்கும் ஈடுபாடே ஆகும் என்றும், அவர்கள் மிக பெரிய தண்டனைக்கு உரியவர்கள் என்றும் பெரியபெருமாளை குறித்து பாடும் பாசுரம்.

அனைவர்க்கும் பெரியவனாகவும், நல்லகுணம் உடையவர்களில் தலைசிறந்தவனாகவும் விளங்கும் பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனை இழித்து உரைக்கும் வார்த்தைகள் வைதீகர்களுக்கு பொறுக்க முடியாதவைகளாகும் என்பதை ‘பொறுப்பறியன‘ என்று ஆழ்வார் உரைக்கிறார். மேலும் அந்த வார்த்தைகளை தன் வாயால் சொல்லக்கூடாது என்று அவற்றை எந்த வார்த்தைகள் என்று கூறாமல், ‘பொறுப்பறியன‘ என்று ஆழ்வார் விட்டுவிட்டார். ஆண்டாள், திருப்பாவை இருபத்தி ஐந்தாம் பாசுரத்தில், ‘தான் தீங்கு நினைந்த‘ என்றும், நாச்சியார் திருமொழி (47), ‘அன்று இன்னாத செய் சிசுபாலனும்‘ என்றும், நம்மாழ்வார் திருவாய்மொழி (7.5.3) ‘கீழ்மை வசுவுகளே வையும் ‘ சொல்பவை இதே போன்ற உதாரணங்கள்.

பிள்ளை திருநறையூரரையர் என்ற சத்வகுணம் நிரம்ப பெற்ற ஸ்ரீவைஷ்ணவர், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநாராயணபுரத்தில் எம்பெருமானுக்காக உயிரை விட்டது போல், எம்பெருமானை பற்றிய நிந்தனையை கேட்டால், அதையே காரணமாக கொண்டு உயிரை விட வேண்டும் என்றும், உயிரை விட துணிவு இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இப்படி சொல்வது, எந்த இடத்தில, ஆசார்யனைப் பற்றி அவதூறு பேசப்படுகிறதோ காதுகளை பொத்திக்கொள்ள வேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்று மனுஸ்ருதியில் கூறப்பட்டு உள்ளதை ஒத்து உள்ளது. இதுவே ஆழ்வார் கூற்றில் ‘போவதே நோயதாகி‘ என்றாயிற்று.

அரங்கமாநகருளானே என்று சொன்னதற்கு, விபவதிற்கு பின்பு பிறப்பவர்களின் எதிரிகளை போக்குவதற்காகவே இருக்கும் அரங்கன் என்று சொல்லி இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

இந்த பாசுரத்தில் சொல்லப்படும் இன்னும் சில கருத்துக்களை எழுதுவதற்கு அடியேனுக்கு இன்னும் ஞானமும் அனுபவமும் வேண்டும் என்பதால், இப்போது சுருக்கமாக முடித்து, என்னுடைய இயலாமையை தெரிவித்து, உங்களிடம் மன்னிப்பு கேட்டு அடுத்த பாசுரத்திற்கு செல்கிறேன்.

கண்ணன் கழலிணை பணிமின்

மற்றுமோர் தெய்வம் உண்டே, மதியிலா மானிடங்காள், உற்றபோது அன்றி, நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர், அற்றம் மேல் ஒன்று அறியீர், அவனல்லால் தெய்வமில்லை, கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே. (திருமாலை 9)

நம் போன்ற சம்சாரிகள், ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து, சென்ற பாசுரத்தில், ஆழ்வார் சொன்னது போல், பிற சமயங்களில் உள்ள ஈர்ப்பால் தாங்கள் எம்பெருமானை பின்பற்றாமல் இல்லை என்றும், அவர் சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமனை பின்பற்ற சொன்னதால், அவனை அடையவிடாமல் தடுக்கும், அரண்மனை காவலாளிகளை காரணம் காட்டி, ஸ்ரீ ராமனை பின்பற்ற முடியவில்லை என்றும் சொன்னார்கள். அப்படியே உள்ளே சென்றாலும், வசிட்டர் போன்ற பெரியவர்கள் தங்கள் தகுதிகளை காட்டி அவனை அணுகவிடமாட்டார்கள் என்று கூறி, அப்படி தகுதிகள் பார்க்காத ஒருவனை தங்களுக்கு காட்டுமாறு ஆழ்வாரிடம் வேண்ட ஆழ்வாரும், அப்படிப்பட்ட, தானே மேல் விழுந்து ஆட்கொள்ளும் கண்ணனை, பின்பற்ற வேண்டும் என்று எடுத்துரைத்த பாசுரம்.

கீதையில் (9.23), மற்ற தேவதைகளை அவரது பக்தர்கள் சிரத்தையுடன் பூஜை செய்தாலும்,அது ஸ்ரீகிருஷ்ணனையே வந்து அடையும் என்று கூறியதைப்போல், ஆழ்வாரும் இங்கு அவனல்லால் தெய்வம் இல்லை என்று கூறுகிறார்.

மற்றும் ஓர் தெய்வம்‘ என்று சொன்ன இடத்தில, ‘உண்டே‘ என்று சொன்னது இல்லை என்ற பொருளில் வருகிறது. மேலும், ஆபத்து வந்த காலத்திலே அப்படிப்பட்ட மற்ற தேவதைகளை காத்தருளினவனாக எம்பெருமானே கண்ணன் என்று சொன்ன நம்மாழ்வார் பாசுரத்தையும் (‘ஏ பாவம்,பரமே, ஏழுலகும், ஈ பாவம் செய்து அருளாலளிப்பார் ஆர் ‘, திருவாய்மொழி, 2.2.2), ‘உண்டே‘ என்ற பதத்திற்கு, பெரியவச்சான் பிள்ளை மேற்கோள் காட்டி உள்ளார். இதிலிருந்து எம்பெருமானே சர்வ ரக்ஷகன் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகிறது.

மற்ற தேவதைகளுக்கு தெய்வத்தன்மை இல்லையா என்று கேட்கிற ஸம்ஸாரிகளை ‘மதி இலா மானிடர்கள்‘ என்று ஆழ்வார் கூறுகிறார். இங்கு சில மேற்கோள்கள் அல்லது உதாரணங்கள் :

  • திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில், (11.7.9), “ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆள் ஆனார் அல்லாதார், மானிடவர் அல்லர் ” என்று சொன்னதை போல், பெருமாளை வணங்காதார், மானிடர் அல்ல என்று இங்கு தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் சொல்கிறார்.
  • பூதத்தாழ்வாரும், இரண்டாம் திருவந்தாதியில், (44) பாசுரத்தில், “செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்” என்கிறார்.
  • அதேபோல், பொய்கையாழ்வார், முதல் திருவந்தாதியில், (67) “உன் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு “, என்று சொன்னதில், பெருமாள் பற்றிய அறிவே அறிவு, மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதும் இங்கு நினைவு கூறப்படுகிறது.
  • எந்த வித்தை, முக்திக்கு காரணமோ, அதுவே வித்தை, மற்றதெல்லாம் வீண், என்று ஸ்ரீ பராசரர் என்ற மாமுனிவர் கூறியதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.
  • எல்லா யாககளிலும் தானே இறைவனாக தானே இருந்து பலன் அளிப்பவனாகிறேன் என்று கீதையில் (9.24) கண்ணன் சொன்னதும் இது போல ஒன்றே.
  • எவர் பித்ருக்களையும், தேவர்களையும், பிராமணர்களையும், அக்னியையும், வணங்குகிறார்களோ, அவர்கள் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக உள்ள கண்ணனையே வணங்குகிறார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.

‘உற்றபோது அன்றி ‘ என்பதற்கு, பிரளய காலத்தில், மற்ற தெய்வங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எம்பெருமான் வயிற்றில் புகும் போதுதான் அவன் பரம்பொருள் என்று நாம் உணர்ந்து கொள்வோம் என்று ஒரு கருத்து. இராவணன், ஹிரண்யன், பஸ்மாசுரன் போன்ற தீயவர்களால் துன்ப படுத்தப்பட்டு, எம்பெருமானிடம் மற்ற தெய்வங்கள் வருவதை பார்த்தபின்பு தான் இவனே பரம்பொருள் என்று ஒப்புக்கொள்வோம் என்பது இன்னொரு விளக்கம்.

மற்ற தெய்வங்களிடம் வைக்கும் அன்பை கூட, தலைசிறந்த பலனான, சம்சாரத்திற்கு திரும்பி வரமாட்டாத மோக்ஷ சாம்ராஜ்யத்தை தரும் எம்பெருமானிடம் காண்பிக்க மாட்டோம் என்பதே ‘உணர மாட்டீ ர்‘ என்பதில் ஆழ்வார் உரைக்கும் உட்பொருள் ஆகும்.

வேதத்தில் சொல்லி இருப்பவைகளுக்கு, மேல் எழுந்தவாரியாக உள்ள அர்த்தத்துடன், உள்ளர்த்ததையும் நன்கு உணராமையே, சம்சாரிகள் அறியாமைக்கு காரணம் என்பதை, அற்றம் மேல் ஒன்று அறியீர், என்பதின் பொருளாக ஆழ்வார் கூறுகிறார். பகவத்கீதை (15.15), கிருஷ்ணன்,

  • தானே எல்லா வேதங்களாலும் அறியப்படுபவன் என்றும்,
  • எல்லோருடைய இதயங்களில் நுழைந்து இருப்பவன் என்றும்,
  • எல்லோருக்கும் நினைவையும், அறிவையும், அறிவின்மையையும் கொடுப்பவன் என்றும்,
  • வேதங்கள் சொல்லப்பட்ட பலத்தைக் கொடுப்பவனும் தானே என்று சொல்வது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

வேத வாக்கியங்கள் பற்பல தெய்வங்களைப்பற்றி தெரிவித்தாலும், அவை யாவையும் அவைகளின் அந்தர்யாமியாக இருக்கும் நாராயணனையே குறிக்கின்றன என்பதும் அவனை தவிர மற்ற எவர்க்கும் நிறைந்த தெய்வத்தன்மை இல்லை என்பதுவுமே பாகவதத்தில் (2.5.15) இருந்து, அவனல்லால் தெய்வமில்லை என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள். அவனை என்று இங்கே குறிப்பிடுவது, பின்னால் சொல்லப்போகும் கண்ணனைப் பற்றியது.

மற்ற தெய்வங்களை போல் வணங்குவதற்கு அரியதானவன் அல்லன் என்றும், பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் கூட தானே வந்து எளியவனாக இருப்பவன் என்பதை காட்டுவதற்கே, கிருஷ்ணன் என்று சொல்லாமல், கற்றினம் மேய்த்த எந்தை என்று ஆழ்வார் சொன்னது.

தன்னை தானே காப்பற்றிக்கொள்ளுகிற வல்லமை உள்ள மாடுகளை குறிப்பிடாமல், அத்தகைய வல்லமை அற்ற கன்றுகளை காப்பதில் கண்ணனுக்கு ஒரு தனி ஈடுபாடு என்பதை சுட்டிக்காட்ட, ஆவினம் என்று சொல்லாமல், கற்றினம் என்று ஆழ்வார் கன்றுகள் இனத்தை சொல்கிறார். மற்ற ஆழ்வார்கள் பாடல்களில் இருந்து சில உதாரணங்கள்:

  • திவத்திலும் பசுநிரை மேய்ப்புவுத்தி என்று நம்மாழ்வார் திருவாய்மொழி (10.3.10)
  • கன்றுமேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் என்று திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகம் (16)
  • காலி மேய்க்க வல்லாய் என்று நம்மாழ்வார் திருவாய்மொழி (6.2.4)
  • கன்று மேய்த்து விளையாட வல்லானை என்று திருமங்கையாழ்வார்,பெரிய திருமொழி (2.5.3)

தான் அனுபவித்த கிருஷ்ணாவதாரத்தில் நம்மையும் ஈடுபட ஆழ்வார் ‘கழலிணை பணிமின்‘ என்று அழைக்கிறார். இராமனின் குணங்களுக்கு தான் அடிமைப்பட்டவன் என்று லக்ஷ்மணன் சொன்னது போல், தொண்டரடிப்பொடி ஆழ்வார், கண்ணனின் கன்றுகளை மேய்க்கும் இந்த எளிமை என்ற பண்பிற்கு வசப்பட்டு அவன் திருவடிகளில் வீழ்ந்தேன் என்று உரைக்கிறார். மற்ற தெய்வங்கள் போல் அல்லாமல், பெருமாள் ஒருவரே, தன்னை தாழ்த்திக்கொண்டு இந்த உலகத்தில் அவதரித்து, நமக்கு அவனுக்கு இணையான பேரின்பத்தை அளிக்க வல்லவன் என்பதை கன்றுகளை மேய்த்த இந்த செய்கையினாலும் இதிகாச புராண சரித்திரங்களில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் மற்ற தெய்வங்கள், தங்களுக்கு இணையான நிலையை யாருக்கும் வழங்க மாட்டார்கள் என்றும், மஹாவிஷ்ணு ஒருவனே எல்லாவற்றையும் வழங்கிய பிறகும் இவர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என்று குறைபட்டு இருப்பார் என்றும் உரை ஆசிரியர் கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

திருஅரங்கம் காட்டினான்

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம், கேட்டிரே நம்பிமீர்காள். கெருட வாகனனும் நிற்க, சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே (திருமாலை 10)

பரமபத நாதனை சென்று அடைய முடியாதாகையால், ஸ்ரீராமனை அடையுங்கள் என்று ஆழ்வார் சொன்னபோது, அவரும், மிகவுயர்ந்த சக்கரவர்த்தி ஆனதால், அவரையும் அடைய முடியாததால், தொடர்ந்து எளிமையான கண்ணனைப் பற்ற வேண்டும் என்று ஆழ்வார் சொன்னது சென்ற பாசுரம்.

தேசத்தாலும் காலத்தாலும் அடையமுடியாத, பரவாசுதேவன் மற்றும் ஸ்ரீராமன், கிருஷ்ண அவதாரங்கள் போல் இல்லாமல் எல்லோரும் இப்போதும் அடையும்படி, ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அரங்கனை பின்பற்ற வேண்டும் என்றும், மற்ற தெய்வங்களை மோக்ஷத்திற்காக வேண்டி வணங்குவது, ஐஸ்வர்யங்களை அடைய மூதேவியை வேண்டுவது போல் ஆகும் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் கூறுகிறார்.

நாட்டினான் தெய்வம் எங்கும் ‘ என்பதற்கு சொல்லும் விளக்கம் மிக அருமை. முதலில், எதற்கு பல தெய்வங்கள் என்று கேட்டுக்கொண்டு, மனிதர்கள் சத்வ, தாமஸ, ராஜஸ குணங்களின் பலவித கலவைகளுடன் பிறப்பதால், அவரவர்களின் குணங்களுக்கு ஏற்ற தெய்வங்களுடன் ஈடுபாடு ஏற்பட்டு படிப்படியாக சத்வ குணம் அதிகப்பட அவர்கள் பெருமாளை வந்து அடைவார்கள் என்பது தனி சிறப்பு. நாட்டினான் என்பதற்கு அவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து கொண்டு அவர்களை வழி நடத்துகிறான் என்பது இன்னொரு விளக்கம். ராஜஸ, தாமஸ குணங்கள் அதிகம் உடையவர்கள் நேரடியாக தன்னைப் பற்ற மாட்டார்கள் என்று ஒரு சுள்ளிக்கால் அல்லது கொடி படர்வதற்கான ஒரு பற்றுக்கொம்பு போல் மற்ற தெய்வங்களை நாட்டினான் என்பது மற்றொரு விளக்கம். திருவாய்மொழியில் நம்மாழ்வாரும் இதை போன்ற கருத்தை சொல்வதற்கு “நிறுத்தினான் தெய்வங்களாக” (5.2.8) என்பதும் “அவரவர் விதிவழி அடைய நின்றனரே” (1.1.5) மேற்கோள் சொல்லப் படுகின்றன.

நல்லதோர் அருள் தன்னாலே‘, திருஅரங்கம் காட்டினான் என்றும், ‘நல்லதோர் அருள் தன்னாலே‘, நாட்டினான் தெய்வம் எங்கும் என்றும் கொள்ளலாம். ஜீவாத்மாக்கள் தன்னை அடையாமல், இப்படிக் கெட்டு போகிறார்களே என்று, அவர்கள் கேட்காமலே, தன்னை காட்டினான் என்பது சிறப்பு. யாருக்கு காட்டினான் என்றால், ‘ உய்பவர்க்கு ‘, அதாவது மோக்ஷம் பெற வேண்டும் என்று ஆசை உள்ளவர்களுக்கு அல்லது, அவன் கருணையை காட்டும் போது அவனை விட்டு விலகி செல்லாமல் இருப்பவர்களுக்கு என்று ஆழ்வார் சொல்கிறார். திருவரங்கத்திற்கு சென்று அவனையே வழியாகவும், அவனை அடைவதையும் கொள்வது எல்லாருக்கும் பொருந்தும் என்று உரையாசிரியர் சொல்வதும் இன்னொரு சிறப்பே.

கெருட வாகனனும் நிற்க என்பதில் உள்ள நிற்க என்பது, நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்றும், தம்மை அடையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் நிற்கிறான் என்றும் பொருள் படும்.

சக்ரவர்த்தியின் மனைவி மக்கள் அவனுடைய வேலைக்காரர்களை மதிக்காமல் இருப்பது போல், எம்பெருமானை பற்றியவர்கள் மற்ற தெய்வங்களை பற்றி கவலை படாமல் இருப்பார்கள் என்றும், திருமழிசை ஆழ்வார் ஆகாயத்தில், சிவனும், பார்வதியும் சென்று கொண்டுஇருந்த போது, கந்தலை தைத்துக்கொண்டு இருந்தும் மேற்கோள் காட்டப்படுகிறது.

இதுவரை

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும் அவனை தங்களால் அடைய முடியாது என்று சொன்னார்கள். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் என்று ஆழ்வார் சொல்லி இராமபிரானை அடையச்சொன்னார். இராமனோ சக்ரவர்த்தி திருமகன், அவனை அணுகுவதும் தங்களுக்கு சிரமம் என்று நம் போன்றவர்கள் சொன்னதால், ஆழ்வார், கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின் என்று கண்ணனை அடையச்சொன்னார். கண்ணனும் இந்த காலத்தில் இல்லை என்று நாம் நழுவிய போது, ஆழ்வார், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார். தொடர்வது அடுத்த பதிவினில், நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading