சூதனாய் கள்வனாய்

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும் அவனை தங்களால் அடைய முடியாது என்று சொன்னார்கள். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் என்று ஆழ்வார் சொல்லி இராமபிரானை அடையச் சொன்னார். இராமனோ சக்ரவர்த்தி திருமகன், அவனை அணுகுவதும் தங்களுக்கு சிரமம் என்று நம் போன்றவர்கள் சொன்னதால், ஆழ்வார், கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின் என்று எளிமையான கண்ணனை அடையச்சொன்னார். கண்ணனும் இந்த காலத்தில் இல்லை என்று நாம் நழுவிய போது, ஆழ்வார், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார். அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான்; அப்படிப்பட்ட பெருமாளின் அழகு எல்லா சந்தேகங்களையும் தீர்த்து விடும் என்றும் அவன் உறையும் இடம் திரு அரங்கம் என்றும் சொன்னார்.   இனி அடுத்தது.

திருமாலை பதினாறாவது பாசுரம்

சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம், மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை, போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால், ஆதரம் பெருக வைத்த அழகனூர் அரங்க மன்றே. (திருமாலை 16)

இந்த பாசுரத்தின் பதவுரையைப் பார்ப்போம். பெருமாளும் இல்லை, தர்ம அதர்மங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டும், பெருமாளுக்கு சொந்தமான ஆத்மாவை தன்னது என்று நினைத்துக்கொண்டு உலக விஷயங்களில் லயித்துக்கொண்டு இருப்பவருடன் சேர்ந்துகொண்டு இருந்த காலத்தில், மீன்களை போன்ற கண்களை உடைய பெண்களின் வலைகளில் சிக்கி மூழ்கி கிடந்த ஆழ்வாரை, அவன் தன் பக்கம் வா என்று கூப்பிட்டு, ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்த வடிவழகு உள்ள பெருமாள் உறையுமிடம் திருவரங்கம் ஆகும்.

எம்பெருமானால் தாம் பெற்றபேற்றை மற்றொரு வகையாகப் பேசுகிறார். முதல் இரண்டு வரிகளில் தான் முன்பு இருந்த நிலை கூறிய ஆழ்வார், பின் இரண்டு வரிகளால் தான் பெற்ற நன்மையை சொல்கிறார். அடைய வேண்டிய பொருளும், அதற்கான வழியும் நானே என்று சந்தேகங்களை சென்ற பாடலில் சந்தேகங்களைத் தீர்த்த பெருமாள் இந்த பாடலில், தன்மீது அன்பு வெள்ளம் பெருகும்படி செய்தார் என்கிறார் ஆழ்வார்.

சூதனாய்க் கள்வனாகி

இங்கு ஆழ்வார் தான் முன்னால் இருந்த காலத்தை நினைத்து பார்க்கிறார். ஒருவன் உலக விஷயங்களில் ஈடுபடும் போது அதற்கு செலவு செய்ய நிறைய பொருள் தேவைப்படும். அதனை பெற களவிலும், அந்த பொருள் மேன்மேலும் வளர சூதிலும் ஈடுபடுவான். ஒருவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மற்றவரின் பொருளை எடுத்து செல்வது சூது எனப்படும். பிறருடைய பொருளை தன்னுடைய பொருளாக நினைப்பதை களவு என்று சொல்லப்படும். இப்படி சூதையும் களவையும் தனியாகவும் பின்னர் இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டு கூட்டமாகவும் செய்வார்கள். இதனால் பெண்கள் வீசும் கண் வலைகளிலும் விழுந்து முழுகுவார்கள். இத்தனையும் தனக்கு உண்டானதாக ஆழ்வார் முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார்.

இங்கு பெருமாளுக்கு சொந்தமான ஆத்மாவை தன்னது என்று நினைப்பதை களவு என்று ஆழ்வார் சொல்கிறார். அதேபோல், வேதங்களும் மற்றைய தர்மசாஸ்திரங்கள் சொல்லும் உண்மைகளை (ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு அடிமை; எம்பெருமானுக்கு உகந்தது புண்ணியம்; எம்பெருமானுக்கு பிடிக்காதது பாவம்) மறுத்து, தன்போலவே இன்னும் சிலரையும் நாஸ்திகர்கள் ஆக்குவது சூது என்று ஆழ்வார் சொல்கிறார். களவிற்கு கொடுக்கப்படும், தண்டனை, திருடப்படும் பொருளாலும், திருட்டு கொடுப்பவரின் தன்மையாலும் வேறுபடும் என்ற காரணத்தினால், இந்த சூதும் களவும் உலகில் சாதாரணமாக சொல்லப்படும் சூது மற்றும் களவை விட மிக அதிகமானவைகளாக கருதப்படும் என்று உரையாசிரியர் சொல்கிறார்.

காட்டில் உள்ள ஒரு குச்சியை திருடியவனை காட்டிலும், ஒரு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்ததை திருடியவனுக்கு, திருடப்பட்ட பொருளின் உயர்வினால், தண்டனை அதிகம். அதே போல், ஒரு பொருளை ஒரு அரசனிடமோ, உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து திருடியவனுக்கு, அதே பொருளை சாதாரண மக்களிடம் இருந்து திருடுவதைக் காட்டிலும், திருட்டு கொடுப்பவரின் நிலையை கொண்டு அதிக தண்டனை தருவது உலக நியதி என்கிறார். இங்கு திருடப்பட்டதோ மிக உயர்ந்த பொருளான ஜீவாத்மா, பெருமாளின் மார்பில் உள்ள கௌஸ்துப மணி அளவிற்கு மதிப்பு உடையது, பொருளின் உரிமையாளரோ மிகமிக உயர்ந்த பரமாத்மா ஆவார். அதனால் மிக பெரிய குற்றம் புரிந்தவனாக இருந்தவன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்லிக்கொள்கிறார்.

தொண்டரடிபொடியாழ்வார் இங்கு பெருமாளிடம் தான் சூதனாகவும் கள்வனாகவும் இருந்ததை சொல்கிறார். மதுரகவி ஆழ்வார் இதே போன்ற கருத்தினை தன்னுடைய குருவாகிய / ஆச்சார்யனான சுவாமி நம்மாழ்வாரிடம் முறையிடுகிறார். “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” (கண்ணிநுண் சிறு தாம்பு, 5) என்று சொல்லும் போது, நன்பொருள் என்று ஆத்மாவை குறிப்பிடுகிறார். நம்பினேன் என்பது விரும்பினேன் என்ற பொருளில் வருகிறது.

தூர்த்தரோடு இசைந்த காலம்

இப்படி மனதார குற்றம் செய்தவர்கள் அவைகளை வளர்ப்பவர்களுடன் தான் கூட்டு சேர்வார்கள் என்பதை, ‘தூர்த்தரோடு இசைந்த காலம்’ என்று ஆழ்வார் சொல்கிறார். இசைந்த என்று சொல்வதற்கு காரணம், அப்படிப்பட்டவர்களுடன் மிக நன்றாக பொருந்தி வாழ்ந்ததாக சொல்வது. காலம் என்பது நேரம் என்ற குறுகிய காலத்தைக் குறிக்காமல், நீண்ட காலத்தை குறிப்பதாகவும், அல்லது அப்படிப்பட்ட நேரம் ஆழ்வார்க்கு மிக நீண்ட நேரமாக தோன்றுவதாகவும் கொள்ளலாம். பக்தர்களோடு சேர்ந்து இருப்பது பகவானுடன் சேர்ந்து இருப்பது மாதிரி; ஆனால் தூர்த்தர்களோடு இருப்பது இன்னும் உலக விஷயங்களில் தம்மை அழுத்துவது என்கிறார். முதல் திருவந்தாதியில் (16) பொய்கையாழ்வார் “பழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி அழுதேன்” என்ற பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.

மாதரார் கயற்கண் என்னும் வலையுள்பட்டு அழுந்துவேனை

உலக விஷயங்களில் ஈடுபட்டவன், மீன்போன்ற கண்களை உடைய பெண் என்று தான் நோக்குவானே தவிர, அந்த பெண்ணின் குணம், மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை ஆராய மாட்டான். வலை வைத்து பிடிக்கும் விலங்கினைபோல் மனிதரை அகப்படுத்தும் வலை என்று பெண்களின் கண்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார். வலை உள் பட்டு என்பதால் உள்ளே சென்று திரும்ப முடியாதபடி இருப்பதை இங்கே ஆழ்வார் குறிப்பிடுகிறார். வலையுள் என்பதால், துன்பமே இருக்கும் என்றும், இன்பம் இல்லை என்றும் சொல்கிறார். அழுந்துவேனை என்றது, இந்த துன்பத்தை, இன்பமாக நினைத்து மயங்கி இருப்பதை சொல்கிறார்.

மறுபடியும் மதுரகவி ஆழ்வாரின் கண்ணி நுண் சிறுதாம்பில் இருந்து அதே ஐந்தாம் பாசுரம். தொண்டரடிபொடியாழ்வார் இங்கு பெருமாளிடம் சொன்னது போல், “நம்பினேன் மட வாரையும் முன்னெல்லாம்” என்று மதுரகவி ஆழ்வார் சொன்னது பிற மாந்தரை தான் முன்பு விரும்பியதை நம்மாழ்வாரிடம் சொல்வது போன்ற பாசுரம்.

இங்கு நாம் நம் சம்பிரதாயத்தில் இருந்து சில நிகழ்வுகளை காணாலாம். ஒன்று நாம் பார்க்கவேண்டிய ஆழ்வாரான திருப்பாணாழ்வாரைப் பற்றியது. திருப்பாணாழ்வாருக்கு பெரிய பெருமாள் தன்னுடைய திருமேனி அழகினை காட்டியபிறகு அதில் மயங்கிய திருப்பாணாழ்வார் இந்த உலகில் வேறு எதையும் பார்க்க விருப்பம் இல்லை என்பதை “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” (அமலனாதிபிரான் 10) என்று பாடினார். எம்பெருமான் அப்படியே ஸ்வீகரித்து ஏற்றுக்கொண்டான் எனபதும், அவர் அவன் திருமேனியில் கரைந்தார் என்பதும் நம் ஸம்ப்ரதாயம். திருப்பாணாழ்வார் பெரியபெருமாளின் கண்ணழகை “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே” (அமலனாதிபிரான் 8), என்று பாடி உள்ளார்.

அடுத்தது, பிள்ளை உறங்காவில்லிதாஸர் என்பவரின் சரித்திரம். ஒரு முறை சுவாமி ராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் வந்து கொண்டு இருந்தபோது தாஸர் தன் மனைவிக்கு குடை பிடித்துக்கொண்டு வந்தார். சுவாமி ராமானுஜர் கேட்டதற்கு, தாஸர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன்; மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கவே அப்படி செய்தேன் என்றும் கூறினார். இதைக் கேட்ட இராமானுஜர் தாஸரிடம் அந்த கண்களைவிட வேறு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவீரா என்று கேட்க தாஸரும் ஒப்புக்கொண்டார். எம்பெருமானாரும் தாஸரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துக் கொண்டு சென்று , எம்பெருமான்  திருப்பாணாழ்வாருக்குத் தாம் காட்டியருளிய அழகிய கண்களை தாஸருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார். எம்பெருமானும் தம்முடைய  அழகிய கண்களைக்  காட்டியருள, தாஸரும் எம்பெருமானாரிடம் சரணடைந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார்.

இதுவும் கண்களைப் பற்றியது, ஆனால், பெரியபெருமாளை பற்றியது அல்ல. நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுஜரைக் கைது செய்ய ஆணையிட்டான். கூரத்தாழ்வார், இராமானுஜர் போல் வேடம் தரித்துக் கொண்டு அரசனிடம் சென்றார். முடிவில், அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன. கூரத்தாழ்வார், இராமானுஜருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார். சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் வேண்டி இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி வேண்டினார். கூரத்தாழ்வான் அப்போதும் தனக்கு பார்வை வேண்டியது கூட தன் ஆச்சார்யரான இராமானுஜரையும் பெருமாளையும் சேவிக்கவே என்பதால் தான் என்று கூறுவார்கள் உண்டு. வரதராஜப் பெருமாளும் அவருக்கு அருளினார்.

போதரே என்று சொல்லி

இப்படி அழுந்தி துன்பப்பட்டு இருந்த தன்னைப் பெரிய பெருமாள் தான் திருந்த வழி காட்டியதை அடுத்த இரண்டு வரிகள் சொல்கின்றன. மாதரார் கண்ணழகில் மயங்கி கிடந்த தன்னை, பெரியபெருமாள் தன்னுடைய மேற்கூறிய கண்ணழகை காட்டி திருத்துவதாக ஆழ்வார் சொல்கிறார். இங்கு உரையாசிரியர் சொல்வது அருமை. பெரியபெருமாள் எதை பார்த்து இப்படி மாதரிடம் மயங்கி கிடந்தீர் என்று ஆழ்வாரிடம் கேட்க, அதற்கு ஆழ்வார், தன்னுடைய ரசிகத் தன்மையினால் பெண்களின் கண்ணழகினில் மயங்கியதாகவும், அதைவிட சிறந்த தார்மீகமான கண்ணழகினை காட்டினால், அதிலே மகிழ்ந்து இருப்பேன் என்று பதில் உரைத்ததாகவும் சொல்கிறார். பெரியபெருமாளும் தன்னுடைய திருத்திரையை விலக்கி ஆழ்வாருக்கு தன்னுடைய அழகிய திருமுகத்தை காட்டி அவரை திருத்தியதாக உரையாசிரியர் கூறுகிறார். திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி 7.1.9 பாசுரத்தை இங்கு நினைவு கூர்ந்து, “தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா” , அதாவது, தாய்போன்று அருள்புரிகின்ற குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை உடையவனே என்று திரு கண்களின் பெருமையை கூறுகிறார்.

அனுமன் சீதையிடம், இராமனின் கண்ணழகை பற்றி கூறியதை இராமாயணத்தில் இருந்து இங்கே பார்ப்போம். இராமபிரானின் திரு கண்கள், தாமரை இதழை ஒத்ததாக இருந்தது என்றும், அவை, தன் போன்ற எல்லா பிராணிகளின் மனங்களையும் கவர்ந்து செல்ல வல்லன என்றும் கூறுகிறார். அனுமன் மேலும், வடிவழகு போன்ற பார்வைக்கு தெரியும் குணங்களையும், தாக்ஷண்யம் போன்ற ஆத்ம குணங்களையும் பெற்றவர் என்று இராமனை புகழ்கிறார்.

புந்தியில் புகுந்து

புந்தி என்பது நினைவினை குறிக்கும். இங்கு நினைவின் தொடக்கமாக உள்ள நெஞ்சத்தையும், நெஞ்சத்தில் உறைகின்ற அந்தர்யாமியாக புகுந்து என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வளவு காலமாக பெருமாளிடம் இருந்து ஆழ்வார் விலகி இருந்ததற்கு காரணமாக இருந்த நெஞ்சத்தினுள் நுழைந்து, அது இனி விலகி செல்ல முடியாதபடி பெருமாள் ஆழ்வாரின் நெஞ்சத்தினுள் புகுந்தான். இனி ஆழ்வார் தன்னை விட்டு விலகக்கூடாது என்று விஷேசமான சங்கல்பத்துடன் பெருமாள் இருந்ததாக உரையாசிரியர் சொல்கிறார். ஜீவாத்மா தனக்கே ஆக வாழ்வது, பெருமாள் என்ற நினைவினை விலக்கி விடும். ஆதலால் பெருமாள், ஆழ்வார் தனக்காக வாழ்வதை தவிர்த்து, பெருமாளுக்காக வாழ ஆரம்பித்ததை பற்றாகக்கொண்டு இனி எப்போதும் இப்படியே ஆழ்வார் இருக்க வேண்டும் என்று ஆழ்வாரின் நெஞ்சினுள் புகுந்தான்.

இன்னும் ஒரு முறை கண்ணி நுண் சிறு தாம்பு, இந்த முறை பாசுரம் 9. “மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்” என்று மதுரகவி ஆழ்வார் சொன்னது, நம்மாழ்வார் திருவாய்மொழி பாடி, நன்றாக வேதம் படித்தவர்கள் சொல்லும் உள்ளுறை கருத்துகளை தன்னுடைய நெஞ்சுனுள் நன்றாக பதியவைத்ததாக சொல்வது ‘புந்தியில் புகுந்து‘ என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வது போன்று உள்ளது என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள்.

ஆதரம் பெருக வைத்த

பெருமாள், ஆழ்வாரின் நெஞ்சினுள் புகுந்து என்ன செய்தான் என்றால், இத்தனை காலம் வேறு எங்கோ செலுத்திய அன்பையெல்லாம், தன் பால் திருப்பி விட்டான். தரிசு நிலங்களில் பாய்கின்ற நீரை, பயிர்நிலங்களில் பாயவிட்டு பயன் அடைவித்ததை போல் பெருமாள் செய்தார் என்று ‘ஆதரம் ‘ என்பதற்கு உரையாசிரியர் விளக்கம் கூறுகிறார்.

பெருக ‘ என்பதற்கு உரையாசிரியர் எடுத்து கொள்ளும் மேற்கோள், திருவாய்மொழி பாசுரம் 10.10.10, ல் வரும் “அதனில் பெரிய ” என்பதாகும். சித், அசித் என்ற தத்துவங்களைக் காட்டிலும் பெரியதாக உள்ள, அனுபவிக்கத்தக்கதான ஈஸ்வர தத்துவத்துவமாகிய தன்னை காட்டிலும் பெரியதாக ஆழ்வாரின் அன்பை பெருக செய்தான் என்கிறார். பெருமாள் எதற்காக இப்படி அன்பை பெருக வைத்தான் என்று பார்த்தால் ஒரு காரணமும் இல்லாததால் ஏதோ தண்ணீர் பந்தல் வைத்தாற்போல் என்று சொல்கிறார். தண்ணீர்பந்தல் எப்படி ஜீவாத்மாக்களுக்கு உபயோகமாக இருக்குமோ அதே போல் இவை, ஆழ்வாருக்கும், அவர் மூலம் நமக்கும் மிகப்பயன் உள்ளதாக ஆகிறது.

அழகனூர் அரங்க மன்றே

எதை காட்டி இப்படி ஆதரம் பெருக வைத்தான் என்று கேட்டுக்கொண்டு, தன்னுடைய திருமேனி அழகை காட்டியே ஆதரம் பெருக வைத்தான் என்று சொல்கிறார். இதற்கான மேற்கொள், திருவாய்மொழியில் 5.3.4 என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் கூறும், “பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த, காரமர் மேனி நம் கண்ணன்” என்பதாகும்.

நம்மாழ்வாருக்கு பெருமாள் மேல் காதல்; அதைப்பற்றி யாருக்கும் தெரியாத போது, ஊரார்கள், ஏதோ ஒருமுறை இடும் உரம் போல், ஒரு பூசல் செய்து எல்லோருக்கும் தெரிய வைத்தார்கள். தாயார் தொடர்ந்து அந்த காதலைப் பற்றி பேசி, தினமும் நீர் பாய்ச்சுவதை போல் வளர்த்தாள். பெருமாளும் தன்பங்கிற்கு, மேகத்தில் இருந்து பெய்யும் மழை நீரையும் கொண்டு அந்த காதலை வளர்த்ததாக ஆழ்வார் பாடுகிறார். அப்படி வளரும் காதலுக்கு நாயகியாகிய நம்மாழ்வார் சொல்லும் காரணம், நம் கண்ணனின் திருமேனி அழகே என்பதாகும்.

கர்ம ஞான வழியை பற்றி செல்பவர்களுக்கு, அவை அவர்களை பக்தியோகத்திற்கு அழைத்து செல்லும். இங்கு எம்பெருமானின் திருமேனி அழகு, அந்த கர்ம ஞான ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜீவாத்மாக்களை பக்தி யோகத்திற்கு அழைத்து செல்லும் என்பது கருத்து. இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், பெருமாள், நாம் மோக்ஷம் அடைவதற்கான வழியை, தன்னுடைய திருமேனி அழகினைக் கொண்டு மேலும் எளிதாக்கியதால் ஆழ்வார், பெருமாளின் கருணையை மேலும் போற்றுகிறார்.

சென்ற பாசுரத்தில், ‘ ஐயப்பாட்டை அறுத்து தோன்றும் அழகன்’ என்று கூறிய ஆழ்வார் இந்த பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ என்று சொல்லி, எம்பெருமானின் திருமேனி அழகே ஆழ்வாருக்கு பக்தி வளர்வதற்கு சாதனமாக இருந்தது என்று சொல்கிறார். ஆழ்வார் நெஞ்சத்திற்குள் புகுவதற்கு சமயம் பார்த்து இருந்த எம்பெருமான் வாழுமிடம் திருவரங்கம் ஆகும் என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார். பரமபதம், ஸ்ரீவைகுந்த நாதரின் (பெருமாளின்) ராஜசபை என்றும் அது முடிந்ததும் அவர் சென்று நன்றாகத் தங்கும் இடம் திருவரங்கம் என்றும் முன் பாசுரத்தின் விளக்கத்தில் சொன்னபடி, இங்கும் அதனை சொல்லி, பரமபதத்தை போல் அடைய முடியாததாக இல்லாமல், பக்தர்கள் ஆசை ஏற்பட்டவுடன் சென்று அனுபவிக்கும் இடம் திருவரங்கமே என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த வலைப்பதிவில் சந்திப்போம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading