044 திருஅஷ்டபுஜகரம் Thiruashtapujakaram

அலர்மேல்மங்கை தாயார் ஸமேத ஆதிகேசவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி.

திவ்யதேசம்திருஅஷ்டபுஜகரம்
மூலவர்ஆதிகேசவ பெருமாள் , கஜேந்திர வரதர், சக்ரதரர்
உத்ஸவர்அஷ்டபுஜகரத்தான்
தாயார்அலர்மேல்மங்கை பத்மாஸினி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 44-2722 5242

தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் முன்னுரையை இங்கே பார்க்கவும், நன்றி.

கோவில் பற்றி

திருஅஷ்டபுயகரம் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. 108 திவ்யதேசங்களில், வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாதபடி இங்கு எம்பெருமான் 8 திருக்கரங்களுடன் திவ்ய ஆயுதங்கள் தாங்கி, சேவை சாதிக்கிறார்.

வலப்புறம் உள்ள 4 திருக்கரங்களில் சுதர்சன சக்கரம்,
வாள், தாமரை மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, சார்ங்கம் என்னும் வில், கேடயம், தண்டாயுதம் போன்றவற்றைப் பெற்றுத் திகழ்கிறார்.

தொண்டை மண்டல திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பரமபத வாசல் உள்ளது. அதுவும் எம்பெருமான் நோக்கும் திசையான மேற்கு பக்கமே உள்ளது.

இங்கு  வராகப் பெருமாள் சன்னதி, சக்கரவர்த்தி திருமகன் சன்னதி, தனிக்கோவில் நாச்சியார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகியன உள்ளன.

ஸ்தல வரலாறு

தான் இல்லாமல் பிரம்மன் செய்யும் யாகத்தைத் தடுத்து நிறுத்த சரஸ்வதி தேவி பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து, அவளுடன் கொடிய
அரக்கர்களையும் அனுப்பினாள். எம்பெருமான் எட்டு திருக்கரங்களுடன் தோன்றி காளியுடன் வந்த அரக்கர்களை அழித்து, காளியையும் அடக்கினார். அதனால் அஷ்ட புயக்கரத்தோன் என்று பெயர் பெற்றார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8 திருக்கரங்களுடன் நிற்கிறார். ஒரு திருக்கரத்தில் மட்டும் தாமரைப்பூ கொண்டு உள்ளார், மற்ற எல்லா திருக்கரங்களில் திவ்ய ஆயுதங்களை தங்கி உள்ளார்.

அஷ்டாக்ஷர எம்பெருமான், அஷ்டபுஜகரத்தனாய் சேவை சாதிப்பது, ஆழ்வார் பாடலுக்கு பிறகு என்று சொல்வர்.

அஷ்டபுஜ கரத்தோனாக ஆகும் முன்பே இவ்விடத்தில்
ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அஷ்டபுஜக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு.

மகாசந்தன் என்னும் முனிவர் மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்தார். தனது பதவியைப் பெறுவதற்காக
இந்த முனிவர் தவமிருக்கிறார் என்று தவறாக நினைத்த இந்திரன், தேவலோக மாதர்களை அனுப்பி அவரின் தவத்தை கலைக்க முயற்சி செய்தான். முனிவரிடம் அது பலன் இல்லாமல் போக, அவனே ஒரு யானை வடிவத்தை எடுத்து, ஒரு யானை கூட்டத்தையும் அழைத்து சென்று முனிவர் முன்னால் காமக்களியாட்டம் நிகழ்த்தினான். இதைக் கண்ட முனிவர் மனம் தடுமாறி, தன் தவ வலிமை இழந்து, ஒரு யானையாக மாறி பெண் யானைகளுடன் இன்புற்று திரிந்தார்.

பல வருடங்கள் கழித்து ஒரு நாள் யானை வடிவிலிருந்த முனிவனுக்கு தீர்த்த மகிமையால் தனது முன்பிறவி ஞானம் வரலாயிற்று. ம்ருகண்டு முனிவரிடம் அவர் யானை தனது பாஷையில் விமோச்சனம் வேண்ட, ம்ருகண்டு முனிவர், அந்த யானையை காஞ்சிபுரத்திற்கு போகச் சொன்னார். இவரும் காஞ்சிபுரம் வந்து தேவப்பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தது(வந்தார்). ஒருநாள் மலர் பறிக்க வரும் வழியில் அஷ்டபுஜகரத்தானைக் கண்டு அன்று முதற்கொண்டு அவனுக்கு புஷ்ப கைங்கர்யத்தைச் செய்தார். ஒருமுறை யானை ஒரு குளத்தில் இறங்கி அங்கிருந்த மலர்களை பறிக்க, அதிலிருந்த முதலை யானையின் காலை கவ்வியது. முன்பு, வேறு ஒரு கஜேந்திரன் ஆதிமூலமே என்று ஒரு அழைத்தது போல், இந்த முனிவரான யானையும் விஷ்ணுவை அழைக்க, அஷ்டபுஜகரத்தான் வந்து சக்கராயுதத்தால், முதலையின் தலையைக் கொய்ய, யானைக்கு சாபம் நீங்கியது. முனிவர் மோட்சம் வேண்ட, எம்பெருமானும் அவருக்கு மோட்சம் அளித்தார்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும் பேய்ஆழ்வார் ஒரு பாடலும் இந்த திவ்யதேச எம்பெருமான் மீது பாடி உள்ளனர்.

திருமங்கையாழ்வார் எம்பெருமானை அமர்ந்த, நின்ற, நடந்த, சயன திருக்கோலங்களில் சேவித்துள்ளார். இராம, கிருஷ்ண, திரிவிக்ரம, வாமன, வராஹ, நரசிம்ம என்று பற்பல அவதாரங்களையும் தரிசித்திருக்கிறார். நீர்வண்ணம், பால்வண்ணம், பொன்வண்ணம், மேக வண்ணம், கடல் வண்ணம் என்று பல வர்ணக் கலவைகளிலும் எம்பெருமானை கண்டு மகிழ்ந்து இருக்கின்றார். இரன்டு திருக்கரங்களுடனும், நான்கு திருக்கரங்களுடனும் சேவித்து உள்ளார். ஆனால் இங்கு எட்டு திருக்கரங்களுடன் கண்ட காட்சியை விவரிப்பதற்கு முன் அவனிடமே அவன் யார் என்று வினவ, அவன் அஷ்டபுயகரத்தான் என்று சொல்ல அப்படியே மங்களாசாசனம் செய்து உள்ளார்.

திருமங்கையாழ்வார் எம்பெருமானின் எட்டு திருக்கரங்களில் உள்ள பொருள்களை “செம் பொன் இலங்கு வலங்கை வாளி, திண்சிலை, தண்டொடு, சங்கம் ஓள்வாள், உம்பர் இருசுடர் ஆழியோடு, கேடகம், ஓண்மலர் பற்றி” என்று பெரியதிருமொழியில் (2.9.3) சொல்லி உள்ளார். இந்த பாசுரத்தில் வலது என்று சொல்லி, இடது சொல்லாததால், ஆழ்வாருக்கு எல்லாவற்றையும் வலது பக்கத்திலேயே வைத்து எம்பெருமான் காட்சி அளித்திருந்தாக கொண்டாலும் ரசிக்கத் தக்கதே. இதே பதிகத்தில் எட்டாவது பாசுரத்தில் வலது இடது இரண்டையும் அப்பால், இப்பால், என்று ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.

முற்காலத்தில் பலபல அரசர்கள் பல திவ்யதேசங்களை ஆதரித்து, பல சிறப்புகளைச் செய்து உள்ளார்கள். இந்த திவ்யதேசத்தை வயிரமேகம் என்னும் ஒரு தொண்டை நாடு அரசன் ஆதரித்தான் என்று ஆழ்வார் அதே பதிகத்தில் பத்தாவது பாசுரத்தில் அருளி செய்கிறார்.

பேய்ஆழ்வார் தனது மூன்றாம் திருவந்தாதியில், (99) அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று – குட்டத்துள், கோள்முதலை துஞ்சர் குறித்தெறிந்த சக்கரத்தான் என்று இந்த திவ்யதேசத்தில் நிகழ்ந்த, மகாசந்தன் என்ற முனிவரின் கஜேந்திர மோக்ஷத்தை குறிப்பிட்டுள்ளார். பேய் ஆழ்வார் அஷ்டபுஜகரத்தானிடம் கஜேந்திர மோட்ச காட்சியை தமக்கு காட்ட வேண்டும் என வேண்ட, அவரும் அவ்விதமே காட்சிஅளித்ததாகவும் ஒரு
வரலாறு உண்டு.

வேதாந்த தேசிகனும், மணவாள மாமுனிகளும் இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்து உள்ளார்கள்.

Google Map

திருஅஷ்டபுஜகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅஷ்டபுஜகரம் பற்றி தினம் எஒரு திவ்யதேசம் சொல்வது

043 திருக்கச்சி (காஞ்சிபுரம்) Thirukacchi (Kanjeepuram )

பெருந்தேவி தாயார் ஸமேத வரதராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கச்சி ஸத்ய வ்ரத க்ஷேத்திரம்
மூலவர்வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள் , அத்தியூரான் மலையாளன்
உத்ஸவர் தேவாதிராஜன்
தாயார்பெருந்தேவித் தாயார் மஹாதேவி
திருக்கோலம்நின்ற திருகோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்7
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 4
பூதத்தாழ்வார் 2
பேயாழ்வார் 1
தொலைபேசி+ 91

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர்.  ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி  அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின்படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிகலனுக்கு காஞ்சி என்று பெயர். இந்த நகரம், அந்த அணிகலன் வடிவில் இருந்ததால் காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது. காஞ்சி ஒரு புண்ணிய பூமி. தொண்டை மண்டலத்தில் உள்ள 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களை காஞ்சியிலே காணலாம்.  

பெரிய காஞ்சியில் 9 திவ்ய தேசங்களும் (திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திரு நீரகம், திருக்காரகம், திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம்-திருப்பச்சைவண்ணன், திருப்பரமேச்சுர விண்ணகரம்) சின்னக் காஞ்சியில் 5 திவ்ய தேசங்களும் (திருக்கச்சி, திருஅட்டபுயகரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருவெஃகா ) உள்ளன.

இதேபோல், திருவிடவெந்தை வராகமூர்த்தியும், திருகடல்மல்லையில் கலைச் சிறப்பும் திருப்புட்குழி திவ்யதேஸ விஜயராகவனும் இராமனுஜரும், திருநீர்மலையில் நின்று, இருந்து, நடந்து மற்றும் சயன சேவையும் திருக்கடிகை யோகநரசிம்ஹரும், திருவள்ளூரில் வீரராகவனும் திருநின்றவூரில் என்னைபெற்ற தாயாரும் திருவல்லிகேணியில் ஐந்து மூர்த்திகளுக்கு பாசுரங்களும் என்று தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் சிறப்புகளை காண உள்ளோம்.

இதேபோல், தொண்டைநாடு, முதல் ஆழ்வார் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் அவதரித்த ஸ்தலங்களை கொண்ட பெருமை உடையது. ஜகதாச்சார்யர் என்று கொண்டாடப்படும் சுவாமி ராமானுஜர் அவதரித்த ஶ்ரீபெரும்புபுதூர் எனும் புண்ணிய பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவத்தின் வடகலை ஸம்பிரதாயத்தில் முக்கிய ஆச்சாரியரான ஸ்வாமி வேதாந்த தேசிகனையும் தந்தது இந்த தொண்டை நாடே.

காஞ்சி வரதராஜனுக்குத் திரு ஆலவட்ட கைங்கர்யம் செய்த திருக்கச்சி நம்பிகள் அவதரித்த பூவிருந்தவல்லி, எம்பார் அவதரித்த மதுரமங்கலம், முதலியாண்டார் அவதரித்த பேட்டை எனப்படும் வரதராஜபுரம், கூரத்தாழ்வான் அவதரித்த கூரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களும் கொண்டது இந்த தொண்டைநாடு.

தேவப்பெருமாள் இரட்டை புறப்பாடு

கோவில் பற்றி

நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் பலமுறை, ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளுடன் அதிகமாக ஈடுபட்டு இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவைகளில் சில, திருஅரங்கம்,  திருப்பதி மற்றும் திருக்கச்சி எனப்படும், காஞ்சி தேவப்பெருமாள் சன்னதி. ஆழ்வார்களால்  பாடப்படாவிட்டாலும், மேல்கோட் என்ற திருநாரயணபுரமும்  அந்த மூன்றுடன் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று.   இவைகளின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய  ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,  ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்,  ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்”. என்ற ஸ்லோகம் சான்று.

ஸயனகோலத்தில் அரங்கனாதன் அருள்புரியும் திருவரங்கம் ”போகமண்டபம் என்றும் நின்ற திருக்கோலத்துடன் திருமலையில் ”புஷ்ப மண்டபமாகவும்”, காஞ்சியில் “தியாக மண்டபமாகவும்”, மேல்கோட் என்ற திருநாரணபுரத்தில் ”ஞான மண்டபமாகவும்”, நம் முன்னோர்களால் பாராட்டி வணங்கப்படுகிறன.

இதில் முதல் மூன்று அர்ச்சா மூர்த்திக்களும் தங்கள் அர்ச்சையில் இருந்து வந்து சாமானிய மனிதர்களிடம் பேசியதும் நான்காவது மூர்த்தியான இராமப்ரியன், ஸ்வாமி இராமானுசரின் சொல் கேட்டு, நடந்து வந்து, செல்லபிள்ளையாக வந்து சேர்ந்ததும் அதிசயமே.

108 வைணவத்திருத்தலங்களில் கோவில் என்று திருவரங்கத்தையும், மலை என்று திருமலை என்ற திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று
இத்திருத்தலத்தையும் குறிப்பர்.

அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுப்பதால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலை வடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றதால், இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

ஐராவதம் என்பது வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

மலை மீது காட்சி தருவதால், மூலவருக்கு மலையாளன் என்ற திருநாமுமம் உண்டு.

இவர் பல யுகம் கண்ட எம்பெருமான். கிருத யுகத்தில் பிரம்மனும், திரேதாயுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிருஹஸ்பதியும், கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு பல நற்பலன்களை அடைந்தனர். பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். அதே போல் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷனுமும் இங்கு வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மலைகளால் ஆனது இந்த திருத்தலம். வாரணகிரி என்ற முதல் தளத்தில் நரசிம்ம அவதார அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர் ஹரித்ரா தேவித் தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.  இரண்டாவது தளமான அத்திகிரியில் தேவப்பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.

இங்குள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. அதில் தெற்கில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்தி மரத்தால் ஆன எம்பெருமானை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்து அடியார்கள் தரிசனத்திற்குப் பிறகு மீண்டும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே எழுந்தருள செய்கிறார்கள்.

thanks to friends in whatsapp group

இந்த குளக்கரையில் உள்ள சுதர்சன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விஷேசமானது. மிக பெரியவடிவில், பதினாறு திருக்கரங்களுடன், காட்சி அளிக்கும் இந்த சக்கரத்தாழ்வாரை சுற்றி உள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் புறப்பாடு, ஒவ்வொரு ஏகாதசியும் எம்பெருமான் புறப்பாடு. இரண்டும் சேர்ந்து வந்தால், இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு என்று அடியவர்களுக்கு ஆனந்தம்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாக கருட சேவை (3ம் நாள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை வையம் கண்ட வைகாசி திருநாள் என்று கொண்டாடுவர். இந்த கருட சேவையை குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனை பாடி உள்ளார்.

உடையவர் திருமாளிகை என்று இராமானுஜர் இளமை காலத்தில் வாழ்ந்த இல்லம் இன்றும் இங்கு உள்ளது. இந்த கோவிலின் பிரகாரத்தில் தான் ஸ்ரீஆளவந்தார் என்ற ஆச்சாரியார், இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம், முதல்வன் இவன் என்று அருளியது. ஸ்வாமி இராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியதும் இந்த தேவப்பெருமாள் தான்.

Thanks to friends in whatsapp group
thanks to friends in whatsapp group

Google Map

திருக்கச்சி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்கச்சி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

தொண்டை நாடு பற்றி நம் முந்தைய பதிப்பு

thanks to friends in whatsapp group
thanks to friends in whatsapp group
thanks to friends in whatsapp group

ஸ்தல வரலாறு

ஒரு முறை பிரம்மா எம்பெருமானிடம் தான் ஓர் அஸ்வமேதயாகம் நடத்த வேண்டும் என்று கேட்க, அதற்கு எம்பெருமான், பிரம்மாவை சத்தியவ்ரத க்ஷேத்திரமான இந்த திருக்கச்சிக்கு வந்து யாகம் செய்ய சொன்னார். ப்ரம்மா சரஸ்வதி தேவி இல்லாமல் இந்த யாகத்தை காயத்திரி தேவியுடன் தொடங்கினார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, இந்த யாகத்தைத் தடுக்க பல தடைகளை உருவாக்கினார். ஒவ்வொரு முறையும் எம்பெருமான் அந்த தடைகளை உடைத்து, பிரம்மாவின் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

சரஸ்வதி, இருள்மயமாக, யாக குண்டத்தை மாற்றியபோது, திருத்தண்கா தீப பிரகாசராக (விளக்கொளிபெருமாள்) எம்பெருமான் வந்தார். சரஸ்வதி அரக்கர்களை அனுப்பி வைத்தார். அப்பொழுது எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாக ஆதிகேசவ பெருமாளாக வந்து அரக்கர்களை விரட்டி அடித்தார். தொடர்ந்து, சரஸ்வதி யானைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்து இந்த யாகத்தை தடை செய்ய முயற்சித்த போது, எம்பெருமான் வேளுக்கை யோகநரசிம்மராக வந்து யானைகளை விரட்டினார். சரஸ்வதி வேகவதி என்ற நதியில் வெள்ளமாக வந்தபோது, சொன்னவண்ணம்செய்த பெருமாளாக வந்து நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார்.

இப்படி, இங்குள்ள திவ்யதேச எம்பெருமான்கள் ஒரே காரணத்திற்காக ஒரே காலத்தில் எழுந்தருளி உள்ளனர்.

இப்படி எல்லா தடைகளையும் தாண்டியபின், பிரம்மாவின் யாககுண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் தோன்றியவர் தான் இந்த திருக்கச்சி தேவப்பெருமாள். யாககுண்டத்தில் இருந்து அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் இருந்து வந்ததால் தான் இன்றும் எம்பெருமானின் திருமுகத்தில் அக்னி வடுக்கள் இருப்பதை நாம் காணலாம். பிரம்மா அத்தி மரத்தால் வடித்த ஒரு எம்பெருமானை இங்கே அத்தி வரதர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு சிஷ்யர்கள், குருவிற்கு எடுத்துவைத்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து இருந்ததை கவனிக்காததால், முனிவர் கோபம் கொண்டு அவர்கள் இருவரையும் பல்லியாக மாற சபித்தார். அவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க, முனிவர் இந்திரன் திருக்கச்சிக்கு வரும்வரை காத்து இருந்தால், அவர்கள் மீண்டும் பழைய நிலை அடைவார்கள் என்று கூற அவர்களும், பல்லிகளாக திருக்கச்சியில் காத்து இருந்து, பின் கஜேந்திரன் என்ற யானையாக இந்திரன் இங்கு நுழைந்த போது, இருவரும் சாபம் தீர்ந்து பழைய நிலை அடைந்தார்கள் என்பது வரலாறு. அந்த பல்லிகளே இன்று தங்க, வெள்ளி பல்லிகளாக பிரகாரத்தில் உள்ளன. இவற்றை தரிசித்தால் எல்லா நோய்களும் அகலும் என்று நம்பிக்கை.

வைகாசி விசாக கருட சேவையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி. சோளிங்கரில் வசித்த தொட்டாச்சார்யார் என்ற பக்தர் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரிசனத்தை காண்பார். ஒரு வருடம் உடல் நலம் குன்றியபோது அவரால் காஞ்சி வந்து இந்த திவ்ய சேவையை காண இயலவில்லை. அதனால் அவர் சோளிங்கரில் உள்ள குளக்கரை அருகே வந்து நின்று எம்பெருமானிடம் உருகி தன்னுடைய நிலையை சொல்லி வருந்தினார். எம்பெருமான் அவருக்கு உடனே அங்கேயே கருட சேவை காட்சியைக் கொடுத்தார். அதனால் இன்றும், காஞ்சியில் இந்த கருட சேவை போது, எம்பெருமானை ஒரு வினாடி குடைகளால் மூடி அந்த அடியவருக்கு காட்சி கொடுத்ததை நடத்தி காண்பிப்பார்கள்.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இந்த திவ்யதேசத்திற்கு மங்களாசாசனம்.

திருமங்கை ஆழ்வார், ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருக்கும் இந்த தேவப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தமும் அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களும் இனிமையானவை, நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு தூண்கள் போல் உறுதியாக வெகு காலமாக போற்றப்பட்டு வருகின்றன.

திருக்கச்சி என்பது காஞ்சியில் உள்ள எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் சேர்த்தது தான் என்றும் தேவப்பெருமாளுக்கு என்று தனியாகப் பாசுரங்கள் இல்லை என்றும் சொல்லப் படுவது உண்டு. நம்மாழ்வார், திருவிருத்தம் முதல் பாடலில், இமையோர் தலைவா, மெய் நின்று கேட்டு அருளாய் என்றும் திருவாய் மொழி முதல் பாட்டில் அயர்வறு அமரர்கள் அதிபதி என்றும் சொல்வது இந்த எம்பெருமானைத்தான் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். அதன்படி, வேறு எந்த ஸ்தலத்திலும் காட்டும் ஞானமுத்திரையைக் காட்டாமல், ஸ்வாமி நம்மாழ்வார் இங்கு தம் நெஞ்சில் கை வைத்து எழுந்து அருளி உள்ளார். இது துயரறு சுடர் அடிதொழுது எழு என் மனனே என்று கூறுவது போல் உள்ளது.

தேவப்பெருமாள் திருமங்கையாழ்வார் வரலாற்றிலும் மிகவும் நெருங்கிய சம்பந்தம் கொண்டு அவரை வழி நடத்தியுள்ளார். குமுதவல்லி நாச்சியாரின் வேண்டுதலால், நீலன் என்ற திருமங்கை ஆழ்வார், அரசுப் பணம் முழுதும் அடியார்க்கு  உணவளிப்பதில் செலவிடுவதாக புகார் வர, அரசன் அவரிடம் சமாதானம் பேசினான். ஆழ்வாரை ஒரு கோவிலில் சிறை பிடித்து வைத்தான். திருமங்கையாழ்வார் கனவில் தேவப்பெருமாள் வந்து, வேதவதி ஆற்றில் மணலின் கீழ் மிகுந்த செல்வம் உள்ளதாகவும் அதை அரசனிடம் கொடுக்க சொன்னார். திருமங்கையாழ்வார் மன்னரின் ஆட்களோடு செல்ல, அங்கு அவர் தோண்டி எடுத்த மணல் நெல்லாக மாறியது கண்டு, அரசன் அவரிடம் மன்னிப்பு கேட்டு தானும் ஸ்ரீவைஷ்ணவனாக மாறி தான தர்மங்கள் செய்தான். தேவப்பெருமாள் தெரிவித்தபடியே வேகவதியில் ஆழ்வார் பெரும்புதையல் கண்டெடுத்து, அரசனின் மொத்த கடனையும் திருப்பி அழித்து தம் கைங்கர்யம் நிறைவேறத் திருக்குறையலூர் திரும்பினார் என்பது தேவப்பெருமாள் அடியாரை ஒரு நாளும் கைவிட மாட்டான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியில் (96), அத்தியூரான் புள்ளை ஊர்வான் என்று பாடி இருப்பது, இந்த திவ்யதேச எம்பெருமானான பேரருளாளன், கருட சேவையை முன்னிட்டு என்பதால் இன்றும் வரதனின் கருடசேவை பிரசித்தம்.

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியில் (26), நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் என்று திருக்கச்சிக்கு நிரந்தசீர் என்று சிறப்பு அடைமொழி கொடுத்து உள்ளார். இதற்கு உரையாசிரியர், நிறைய திவ்யதேசங்களை உடைய காஞ்சி என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.

இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எம்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அதாவது பெருமாளுக்கு விசிறி வைத்து காற்று வீசுவார். திருக்கச்சி நம்பிக்கு காஞ்சி பூர்ணர் என்ற சிறப்பு பெயர் உண்டு. எம்பெருமான், திருக்கச்சி நம்பிகள் தன்னுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு அவருக்கு அருள் புரிந்து இருந்தான்.

ராமானுஜர், தம் முதல் குருவான யாதவப்பிரகாசருடன் வடநாட்டு யாத்திரை சென்ற போது, அவருக்கு எதிரான சதி, அவரின் சித்தி பிள்ளை கோவிந்தபட்டர், (பின்னாளில் எம்பார் என்ற ஆச்சார்யர்) மூலம் தெரிய வந்ததால் யாருக்கும் தெரியாமல் விந்திய மலையிலேயே தங்கிவிட்டார். பிறகு ஒரே இரவில், தேவப்பெருமாளும், பெரிய பிராட்டியும், வேடன், வேடுவச்சி வேடம் புனைந்து ராமானுஜரை காஞ்சிக்கு அருகில் உள்ள சாலைக்கிணறு என்ற இடத்தில கொண்டு விட்டார்கள்.

தமக்கு உதவி புரிந்தது தேவப்பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்து கொண்ட ராமானுஜர், திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்றுக்கொண்டு, சாலைக் கிணற்றிலிருந்து தேவப்பெருமாளுக்கு திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார். சுவாமி ராமானுஜருக்கு ஆரம்ப காலத்தில், நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளுடன் பேசி, தேவப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு சொல்லியவர் திருக்கச்சி நம்பி ஆவார். இராமானுஜருக்கு அருளிய அந்த ஆறு வார்த்தைகள்.

அஹமேவ பரம்தத்வம்ஸ்ரீமந் நாராயணனே எல்லாவற்றிக்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்
தர்சனம் பேத ஏவசஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத்மோட்சம் அடைய சரணாகதியே சிறந்தவழி
அந்திமஸ்ம்ருதி வர்ஜனம்இறுதி காலத்தில் எம்பெருமானை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை
 தேஹாவஸானே முக்திஶ்யாத்அவனை உபாயமாகக் கொண்டவர்களுக்கு, பிறவி முடிந்ததும் மோக்ஷம் தருகிறார்.
பூர்ணச்யார்ய ஸமாச்ரயபெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது

ஸ்ரீ இராமானுஜருக்காக கிருமி கண்ட சோழ மன்னனிடம் தன்னுடைய கண்களை இழந்த
கூரத்தாழ்வான், ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜ ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை இந்த எம்பெருமானுக்குகாக எழுதி, அவர் முன்னே சொல்ல, உடனே இந்த எம்பெருமான் அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்.

வேதாந்த தேசிகரிடம் ஒரு ஏழை பிரம்மச்சாரி பையன் தன் திருமணத்திற்காக நிதி உதவி கேட்க, அவர் பெருந்தேவி தாயார் சந்நிதியில், ஸ்ரீ ஸ்துதி என்ற இருபத்திஐந்து ஸ்லோகங்களை பாட, தாயாரின் மனதை தொட்ட ஸ்லோகங்கள், அங்கே ஒரு பொன்மழையை கொட்ட செய்து அந்த பையனின் துயரைத் தீர்த்தது. இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் ஆதி சங்கரர் ஓர் ஏழைப் பெண்ணிற்காக தங்கமழை பெய்வித்ததைப் போலவே இந்த திவ்யதேசத்தில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதனால் இந்த தாயாருக்கு தங்கத்தாயார் என்ற திருநாமமும் உண்டு.

பெருந்தேவி தாயார். நன்றி whatsapp group நண்பர்களுக்கு

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இந்த திவ்யதேசத்தில் இருந்து வைணவத்திற்கு மிக பெரிய சேவை செய்து உள்ளார்.

அத்திகிரி அருளாளரும் தேசிகனும் |
an ebook – thanks to friends in whatsapp group, who shared this great content

இன்னும் பல சிறப்புகள் உள்ள இந்த திவ்ய தேசத்தைப் பற்றி மேலும் அறிந்து மெருகு ஏற்றுவோம்.

042 திருக்கோவலூர் Thirukovalur

பூங்கோவல் நாச்சியார் ஸமேத திரிவிக்ரம பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கோவலூர்
மூலவர்த்ரிவிக்ரமன் , நடுநாட்டான்
உத்ஸவர்ஆயன் , இடைகழி ஆயன், வேணுகோபாலன்
தாயார்பூங்கோவல் நாச்சியார் புஷ்பவல்லி தாயார் 
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்21
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 18
பொய்கைஆழ்வார் 2
பூதத்தாழ்வார் 1
தொலைபேசி+91 94862 79990

Google Map

திருக்கோவலூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்கோவலூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

கோவில் பற்றி

த்ரிவிக்ரம எம்பெருமான், இந்த திவ்யதேசத்தில், மிக பிரம்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை விண்ணை நோக்கித் தூக்கி, மேல் உள்ள ஏழு உலகங்களையும் அளந்த நிலையில், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் ஆகும். . இதற்கு முன் நாம் காழிசீராம விண்ணகரம் என்ற சீர்காழி திருத்தலத்தில், த்ரிவிக்ரமனை சேவித்து உள்ளோம். அங்கு அவர் இடது திருவடியை விண்ணை நோக்கி தூக்கியும், வலது திருவடியை உலகை அளந்து தரையிலும் வைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ளலாம்.

பொதுவாக எல்லா எம்பெருமான்களும், வலது திருக்கரத்தில் சக்கரமும், இடது திருக்கரத்தில் சங்கும் கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கு இந்த எம்பெருமான், இடது திருக்கரத்தில் சக்கரம், வலது திருக்கரத்தில் சங்கும் கொண்டு வர்ண கலாபத்துடன், கருநீல மேக நிறத்தில் திருமேனியுடன், மார்பில் ஸ்ரீவத்ஸம், கழுத்தில் கௌஸ்துபம், காதுகளில் மஹரகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் ஒளி சிந்தும் திவ்யப் புன்னகையுடன் காட்சி அளிக்கிறார். இவரை சுற்றி, பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், கருட, விக்ஷவக்சேனர் என்று பலருடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி இருக்கிறார்.

கிருஷ்ண கோவில் என்று பெயர் பெற்ற இந்தத் திருத்தலம் பல சதுர் யுகங்களுக்கு முற்பட்டதாகும். நாரதரும், பிரம்மனும் அகத்தியரும், பரசுராமரும் மற்றும் பலரும் இந்தக் கிருஷ்ண ஷேத்திரத்தில் தவம் செய்து உள்ளனர் என்று புராணங்களிலும், இலக்கியத்திலும் காணலாம்.

பஞ்ச கிருஷ்ணச் ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். திருக்கண்ணபுரம்திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடிதிருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்.

மிருகண்டு முனிவர் எம்பெருமானின் வாமன – திரிவிக்ரம அவதாரத்தைக் காண விரும்பி தவம் இயற்றிய திருத்தலம் இது. வாமன திரிவிக்ரம அவதார ஸ்தலம் என்றும் இது அழைக்கப் படுகிறது.

இடைகழியில் ஆழ்வார்களுக்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததாலும் இங்கு த்ரிவிக்ரம பெருமாள் வருவதற்கு முன்பே கண்ணன் திருத்தலம் ஆதலாலும் இந்த எம்பெருமானுக்கு இடைகழி ஆயன் என்னும் பெயர் உண்டு. விண்ணுலகிற்கும், பாதாள லோகத்திற்கும் நடுவில் நின்றதால் நடுநாட்டான் என்னும் பெயர் உள்ளது.

இங்கு மூலவர் திருமேனி தருவால் (மரத்தினால்) ஆனது. மிக உயரமான நின்ற திருக்கோலம். சாளக்ராமத்தால் ஆன வேணுகோபாலன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். கேரளாவில் திருக்காட்கரை என்ற திவ்யதேசத்தில், வாமனனுக்கு என்று தனி கோவில் உள்ளது. இங்கே வாமனன் மூலவருக்கு பின் எழுந்தருளி உள்ளார்.

இங்கு பெருமாள் சன்னதிக்கு எதிரே 40 அடிஉயர தூண் ஒன்று உள்ளது, அதற்கு மேல் உள்ள சிறிய கோவிலில் கருடன் இருந்து எம்பெருமானை வணங்குகிறார். இந்த கோவில் பிரஹாரத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறார்.

எம்பெருமானும், இந்த துர்க்கையும் சுயம்பு மூர்த்திகளாக அருள் பாலிக்கிறார்கள்.

இங்குள்ள கோபுரம் 192 அடி உயரமுடன் பதினொரு நிலைகளோடு உள்ளது. இது தமிழ் நாட்டின் மூன்றாவது உயரமான கோபுரம் ஆகும். முதல் இடம், ஸ்ரீரங்கம், இரண்டாவது இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இந்த கோவில் 5 ஏக்கர் பரப்பு உள்ளது.

ஸ்தல வரலாறு

எம்பெருமான் தவமிருந்த முனிவர்களுக்காக இங்கே மீண்டும் ஒரு முறை வாமன – திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியதாக ஐதீஹம்.

பக்த பிரகலாதனின் பேரன், மகாபலி என்னும் மன்னன் ஆவான். அவன் நன்றாக ஆட்சி புரிந்து வந்தாலும், தேவர்களைத் கொடுமை படுத்தி அவர்களுக்கு துன்பம் இழைத்து வந்தான். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவனுக்கும் குருவாக இருந்து, எல்லா சக்திகளையும் அளித்து அவனை தேவர்களுக்கு எதிராக தூண்டி விட்டும் வந்தார். மகாபலியின் துன்பம் பொறுக்க இயலாத தேவர்கள், மஹாவிஷ்ணுவை வணங்கி, தங்களை காத்து அருள வேண்டினர்.

கசியபர், அதிதி என்ற ரிஷி தம்பதியர் இருவருக்கும் எம்பெருமான் குட்டையான வடிவம் கொண்ட வாமன மூர்த்தியாக அவதரித்து பிரம்மச்சர்யம் மேற்கொண்டார்.

மஹாபலி தேவர்களுக்கு எதிரான தன்னுடைய முயற்சியில் வெற்றி பெற பல தானங்களும் யாகங்களும் நடத்தி வந்தான். வாமனன், மஹாபலியிடம் பூமிதானம் பெறுவதற்காக வந்தார். குட்டையான வாமன ரூபத்தைக் கண்டு வியந்த மஹாபலி, என்ன வேண்டுமென்று கேட்க அதற்கு அவர் தனக்கு, அவனுக்கு சொந்தமான மூன்றடி மண் வேண்டுமென சொல்ல, உடனே தருவேன் என்று வாக்களித்து மஹாபலி தானம் கொடுக்கத் தயாரானான்.

சுக்ராச்சாரியார் மஹாபலியிடம் சென்று, வந்திருப்பது மஹாவிஷ்ணு என்றும், தானம் கொடுப்பதை நிறுத்தவும் சொன்னார். மஹாபலி, கொடுத்த தன் வாக்கிலிருந்து மாற மறுத்தான். இதைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் ஒரு சிறிய வண்டின் உருவம் எடுத்து, தாரை வார்த்துக் கொடுக்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார். சுக்ராச்சாரியார் துவாரத்தை அடைத்து இருந்ததை அறிந்த வாமனன் ஒரு சிறிய தர்ப்பை புல்லால் அந்த துவாரத்தில் குத்த, வண்டாக இருந்த சுக்ராச்சாரியார் தன் ஒரு கண்ணை இழந்தார்.

இழந்த கண்ணை மீண்டும் பெறவும், பாவ மன்னிப்பு கேட்கவும், சுக்கிராச்சாரியார் திருவெள்ளியங்குடியில் திருமாலைக் குறித்து தவமிருந்து தனது கண்ணை மீண்டும் பெற்றார் என்று பார்த்தோம்.

கமண்டல நீர் வெளியே வர, அதைக்கொண்டு மஹாபலி தாரை வார்த்துக்கொடுத்து, தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றான். வாமனன் கிடுகிடு வென்று த்ரிவிக்ரமனாக வளர்ந்து, தனது ஓரடியால் இந்த உலகு முழுவதும் அளந்து, இன்னொரு திருவடியை வானுலகு நோக்கி தூக்கி, விண்ணுலகம் எல்லாவற்றையும் முழுவதுமாக அளந்தார். மூன்று உலகுகளை மட்டுமே ஆட்சி புரிந்து வந்த மஹாபலிக்கு, ஏழு உலகுகளை அளந்து காட்டியவர் த்ரிவிக்ரமன். மூன்றாவது அடி அளக்க இடம் இல்லாததால், மகாபலியை பாதாள உலகிற்கு தள்ளினார்.

எம்பெருமான், மகாபலியை கொல்லாததற்கு இன்னொரு காரணம், அவர் பக்த பிரகலாதனுக்கு கொடுத்து இருந்த ஒரு வரம் ஆகும். நரசிம்ம அவதாரத்தின் போது, பிரகலாதனின் தந்தையை கொன்றதால், அதற்கு பிறகு, அவனுடைய அடியவனான பிரகலாதனின் வம்சத்தில் யாரையும் கொல்வதில்லை என்று அவனுக்கு எம்பெருமான் வரம் அளித்துஇருந்தார்.

ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில், விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக விண்ணுலகை அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.   

இந்த திவ்யதேசத்தில், ஒரு விஷ்ணு துர்கை இருக்கிறாள். அவளுக்கு இங்கு கோவிலும், வழிபாடுகளும் உண்டு. அவள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு முன் யசோதைக்கு பிறந்த பெண் குழந்தை. இவள் தான் கிருஷ்ணனுக்கு பதிலாக கம்சனிடம் வாசுதேவரால் கொடுக்க பட்டவள். அன்று கம்சனுக்கு தெய்வ வாக்கு கொடுத்து மறைந்தவள். ஆக அண்ணன் தங்கை இருவருமே இந்த கோவிலில் காட்சி அளிக்கிறார்கள். திருமங்கையாழ்வாரும் இருவரையும் பாடி உள்ளார்.

ஆழ்வார்கள்

முதலாழ்வார்கள் மூவரும் பல ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்கோவலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க எண்ணிய எம்பெருமான் பெரும் மழையைப் பொழியச் செய்தார்.

முதலில் வந்த பொய்கை ஆழ்வார் மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அங்கு இரவு தங்குவதற்கு இடம் வேண்டினார். முனிவர், ஒரு இடத்தைச் (இடைக்கழி) சுட்டிக் காட்டி இங்கு ஒருவர் படுக்கலாம் என்று கூறிச் சென்றார். சற்று நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார் தமக்கு தங்குவதற்கு இடம் வேண்டினார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்று கூறி பொய்கையார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டார். பிறகு அவ்விடம் வந்த பேயாழ்வார் தங்க இடம் கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவரையும் சேர்த்துக்கொண்டனர்.

அந்த இரவு நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக மூவரும் இட  நெருக்கடி ஏற்படுவது போல் உணர்ந்தனர். அவர்கள் மூவரைத் தவிர நான்காவதாக ஒருவர் உள்ளே இருந்து அவர்களை நெருக்குவதாகத் தோன்றியது. நாலாவதாக உள்ளவர் யார் என்பதை அறிய, அவர்கள் விளக்கு ஏற்ற நினைத்து பாட ஆரம்பித்தார்கள்.

முதலில், பொய்கையாழ்வார், நாம் அறிந்த மிகப்பெரிய பொருட்களைக் கொண்டு, “வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக, ” (முதல் திருவந்தாதி 1) என்று இந்த உலகத்தை தாங்கிப்பிடிக்கும் அகல் ஆகவும், ஆழ்ந்து சூழ்ந்து இருக்கும் கடல்தனை விளக்குக்கு நெய்யாகவும், சூரியனே திரியாகவும் கொண்டு அந்த இரவில், பாமாலையில் விளக்கு ஏற்றுகிறார். இதுவே நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.

தொடர்ந்து, பூதத்தாழ்வார், அளவிடமுடியாத கருத்துக்களைக் கொண்டு ” அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா,” (இரண்டாம் திருவந்தாதி 1) என்று அவன் மீது உள்ள அன்பை அகலாகவும், அவன் மீது உள்ள ஆர்வத்தையே நெய்யாகவும், அவன் மீது உள்ள பக்தியினால் இன்பம் மிகுந்து அதையே திரியாகவும் கொண்டு அடுத்த விளக்கை ஏற்றுகிறார்.  

இவர்கள் ஏற்றிய விளக்குகளால், பேரொளியாய்த் தோன்றிய எம்பெருமான் தம் திருமேனியைக் காட்டி அருள் புரிந்தார் என்பதை, மூன்றாவது ஆழ்வாரான பேய் ஆழ்வார் “திருக்கண்டேன், பொன் மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் ” என்று முதலில் மஹாலக்ஷ்மியை திருமார்பில் தரிசித்ததைச் சொல்லி, பிறகு மற்ற அழகினையும் பாடினார். (மூன்றாம் திருவந்தாதி 1).

இப்படி இவர்கள் பாடிய இடைக்கழி தான் இன்று நாம் தரிசிக்கும் த்ரிவிக்ரம சன்னதி. இவர்கள் பாடிய இடம் இந்த திவ்யதேசம் தான். மேல் சொன்ன இந்த பாசுரங்கள் இந்த திவ்யதேசத்திற்கு கிடையாது. பொய்கையாழ்வார் தன்னுடைய திருவந்தாதியில் இரண்டு பாசுரங்களில், பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்ததியில் ஒரு பாசுரத்தில் இந்த திவ்யதேசத்தை குறிப்பிட்டு உள்ளனர்.

இப்படி ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானை தரிசித்து அனுபவித்ததை தேசிகன் என்ற ஆச்சாரியார், “மூன்று ஆழ்வார்களாகிய மூன்று உருளைகள் கரும்பைப் பிழிவதைப் போல, இனிய கரும்பான எம்பெருமானுடன் மிக நெருக்கமாக இருந்து அவருடைய திருக்குணங்கள் என்ற ரஸத்தைப் பருகுகிறார்கள் என்று விளக்குகிறார்.

திருமங்கை ஆழ்வார் தனியாக ஒரு பத்து பாடலைகளை (பெரிய திருமொழி 2.10) பாடியதோடு, பெரிய திருமொழியிலும் மற்றைய ப்ரபந்தங்களிலும் இன்னும் ஒரு எட்டு பாசுரங்களில் இந்த திவ்யதேசத்தை குறிப்பிட்டுள்ளார்.

திருநெடுந்தாண்டகத்தில், திருமங்கையாழ்வார், “நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த ” என்று சொல்கிறார். அதாவது, தென்பெண்ணை ஆறாகிய பெண்மணி, ஆயனைப் பார்க்கும் மகிழ்ச்சியில், பேரார்வத்துடன் கரையை அழித்து, வரும் வழியில் உள்ள மூங்கில்களை எல்லாம் உடைத்துக்கொண்டு வருகிறாள் என்பதாகும்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேசத்தில் உள்ள துர்க்கையை ‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடி பொழில்’ என்று இந்த திருத்தலத்தை திருநெடுந்தாண்டகத்தில் புகழ்கிறார்.

மற்ற ஆழ்வார்கள் த்ரிவிக்ரமனை பற்றி பாடிய ஒரு சில பாடல்கள் :

ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று த்ரிவிக்ரமனை பாராட்டுகிறார். “உத்தமன் என்று உளன் கண்டாய் ” என்று பேய்ஆழ்வார் பாடுகிறார். வாமனாவதாரம் மற்றும் த்ரிவிக்ரம அவதாரங்களில் எம்பெருமான் யாரையும் ஸம்ஹாரம் (கொலை) செய்யவில்லை, அதனால் இந்த அவதாரம் உத்தமன் என்று ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் கூறுகிறார். இந்த அவதாரத்தின் போது எம்பெருமானின் திருவடிகளில் அம்ருதம் இருந்ததாம், தேன் வடியும் திருவடிகள் என்று ஆளவந்தார் சொல்கிறார்.

நம்மாழ்வார் “அண்டம் மோழை எழ, முடி பாதம் எழ” என்று பாடுகிறார். இதற்கு விளக்கம் கொடுக்கும் உரையாசிரியர், முடிக்கு மேல் பாதம் எழுகிறது என்று அர்த்தம் சொல்லி, எம்பெருமான் தனது பாதத்தை திருமுடிக்கு மேல் தூக்கி சென்றான் என்கிறார்.

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய்” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையில் (35),  உலகத்தாருடைய தாழ்வுகளைப் பார்க்காமல், அவர்கள் எதுவும் கேட்காமல், எல்லோருக்கும் தன் திருவடிகளால் தீண்டி மோக்ஷம் அருளிய எம்பெருமான் த்ரிவிக்ரமன் என்று பாடுகிறார்.

எல்லா ஆழ்வார்களும் சொல்வது, உலகத்தை அளந்து, பாரபட்சம் இன்றி இவ்வுலகில் உள்ள எல்லோரையும், அவர்கள் கேட்காமலே ரக்ஷித்த அந்த உத்தமனை வணங்கி நாமும் நல்வழி தேடுவோம் என்பதே.

041 திருவஹீந்திரபுரம் / Thiruvaheendrapuram

ஹேமாம்புஜவல்லி தாயார் ஸமேத தேவநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவஹீந்திரபுரம்
மூலவர்தெய்வநாயகன்
உத்ஸவர் மூவராகிய ஒருவன். தேவ நாதன், திவிஷந் நாதன், விபுதநாதன், தாஸ ஸத்யன், அடியவர்க்கு மெய்யன் அச்சுதன்
தாயார்ஹேமாம்புஜவல்லி தாயார் , வைகுண்ட நாயகி , பார்கவி, செங்கமலம், தரங்காநந்தினி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 94434 44778

கோவில் பற்றி

திருவஹீந்திரபுரம், கல்விக்கான அவதார மூர்த்தி ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாலும், ஆதிசேஷன் மற்றும் கருடனின் மகத்துவத்தாலும், வேதாந்த தேசிகன் என்ற ஆச்சார்யராலும் பெருமையும் சிறப்பும் பெற்றது. திருவஹிந்திரபுரம் நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு அளித்த பெருமாளைப் பெற்றது.

இந்த திருத்தலம் இப்போது அயிந்தை என்று வழங்கப் படுகிறது.அருகில் இருந்த மலையில் பிரம்மா தவம் செய்ததால், ப்ரம்மாச்சலம் என்று கூறுவர்.  தேவர்களுக்குத் தலைவனாக இருந்து, எம்பெருமான் யுத்தம் செய்ததால், தேவநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது. தாயார் தேவர்களைக் காப்பாற்றுவதால் ஹேமாம்புஜவல்லி என்று திருநாமம்.

இந்த எம்பெருமானுக்கு

  • தாஸ ஸத்யன்
  • அச்சுதன்
  • ஸ்த்ரஜ்யோதிஷ்
  • அனகஞ்யோதிஷ்
  • த்ரிமூர்த்தி என்று திருநாமங்கள் உண்டு.

இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கையாழ்வார் தன் பாடல்களில் கூறி உள்ளார்.

கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன. இவர் யுகம் கண்ட பெருமாள் என்றும் போற்றப் படுகிறார்.

தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப் பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும் சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர்.

கருடனால் உருவாக்கப்பட்ட கெடில நதி, தெற்கில் இருந்து வடக்காக ஓடுகிறது. அது ஒரு ரிஷியின் சாபத்தால் சிவப்பு நிற நீர் கொண்டு ஓடுகிறது, அதே ரிஷியின் சாப விமோசனத்தினால், அந்த நீர் எப்பொழுதும் கலங்கல் இல்லாமல் தெளிவாகவே உள்ளது. எம்பெருமான் இரத உற்சவ நாட்களில் இந்த கெடில நதிக்கரைக்கு வந்து, பூஜைகளையும், தீர்த்தங்களும் ஏற்று கொள்கிறார்.

ஆதிசேஷன் கொண்டு வந்த, பாதாளகங்கை தீர்த்தமும் கருடன் கொண்டு வந்த விரஜாநதி தீர்த்தமும் இந்த திருத்தலத்தில் உள்ளன. பாதாள கங்கை தீர்த்தம், எம்பெருமானின் நிவேதியத்திற்கும் விராஜா நதி தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் எடுத்து கொள்ள படுகின்றன.

இங்கு நரசிம்மர், இராமபிரான், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், பள்ளிகொண்ட நாதர், ஆண்டாள், ஆழ்வார் என்று பல சன்னதிகள் உள்ளன. இங்கு இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர்

வடமொழியில் தேவநாயக பஞ்சாசத் என்னும் ஸ்தோத்ரமும், அச்யுத சதகம் என்ற ஸ்தோத்ரங்கள் அடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றி சிறப்பாக பேசுகின்றன.

ஹயக்ரீவர்

தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான பகுதியில் அமைந்துள்ள ஒளஷதகிரி என்று அழைக்கப் படும் ஒரு இடம் மிகவும் பிரசித்தமானது. ஶ்ரீஅனுமன் சஞ்சீவி பா்வதத்தைக் கொண்டு செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறிய பகுதியே இந்த “ஔஷத மலை” என்றுசொல்வார். அங்கு திருமாலின் அவதாரங்களில் ஒருவரான ஹயக்ரீவ பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாள் சகல வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர், அதாவது இவர் கல்விக் கடவுள். ஞானத்தையும் கல்வியையும் அள்ளி வழங்குபவர். ஆயக் கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். மூலவர் லட்சுமி ஹயக்ரீவர்.

ஞானானந்த மயம் தேவம்,  நிர்மல ஸ்படிகாக்ருதிம்,  ஆதாரம் ஸர்வ வித்யானாம், ஹயக்ரீவம் உபாஸ்மஹே என்ற இந்த ஸ்லோகத்தின் அர்த்தம், ஞானமயமாக கலக்கமற்ற ஸ்படிகம் போல் திகழும் இந்த தேவனே சகல வித்தைகளுக்கும் ஆதாரமான ஹயக்ரீவராவார்.

ஹயக்ரீவ பெருமாள், சந்திர மண்டலம் போல் வெளுத்த திருமேனியும் பஞ்சாயுதங்கள் ஏந்திய நான்கு திருக்கரங்களுடனும், குதிரை முகத்துடனும் நீண்ட காதுகளுடனும் வேதமாகிய அமுதம் நுரை தள்ளும் வாயும், கருணை பொங்கும் விழிகளும், பீதாம்பர ஆடை உடுத்தி, பெரிய பிராட்டியை திருமார்பில் கொண்ட திருக்கோலமும் கொண்டு உள்ளார்.

இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள், அவை ஸ்வாமி இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிகளை குறிப்பதாகச் சொல்வர்.

ஹயக்ரீவ பெருமாள் ஆதித்திருமேனிகள் இந்தியாவில் இங்கேயும், மைசூரில் உள்ள பரகால மடதிலும் உள்ளதாக சொல்வர். எல்லா மூர்த்திகளும் மலர்மாலைகள் சார்த்திக் கொள்வார்கள், ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த மாலை, ஏலக்காய் மாலை ஆகும்.

ஹயக்ரீவர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் :

ஸ்தல வரலாறு

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் ஏற்பட்டு யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். தேவர்கள் திருமாலைத் துதித்து உதவி வேண்டி நிற்க, அசுரர்கள் பிரம்மனிடம் உதவி கேட்டனர். பிரம்மன் அவர்களை சிவனிடம் அனுப்பினார். தேவர்களுக்காக திருமால் சக்ராயுதம் கொண்டு போரிட்டு அத்தனை அசுரர்களையும் அழித்தார். அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அது சக்கரத்தில் பட்டு அதனுடன் ஒரு அணிகலன் போல் சேர்ந்து நின்றது. அதனைப் பார்த்த சிவனுக்கு, திருமால் தனது மும்மூர்த்தி வடிவத்தைக் காண்பித்தார். அந்த வடிவத்தில் திருமாலுடன், பிரம்மா, சிவன் தெரிய, சிவன் உடனே துதிக்க, எம்பெருமான் சக்ராயுதத்தை திரும்ப பெற்றுக்கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே திரும்பி கொடுத்தார். தேவர்களின் வேண்டுகோளின்படி அங்கேயே கோயில் கொண்டார்.

எம்பெருமானுக்கு அப்போது தாகம் ஏற்பட, அவர் நீர் கேட்டார். நீர் கொண்டு வர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேஷன் தனது வாலால் பூமியை அடித்து அங்கு இருந்து பாதாள கங்கை நீர் பாய, அதனை எம்பெருமானுக்கு சமர்ப்பித்தார்.  இவ்வாறு ஆதிசேஷன் பூமியை பிளந்து உடனே எம்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வந்தார். அவர் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப் படுகிறது.

ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் விரஜா நதி தீர்த்தத்தை வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்தார். கருடனால் கொண்டு வரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருட தீர்த்தமாகி, காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிருகு மகரிஷி இந்த வனத்தில் தவம் செய்யும் போது மூன்று வயது பெண் குழந்தையை கண்டு எடுத்தார் என்றும், அந்த குழந்தை கடலை நோக்கி சிரித்துக்கொண்டே இருந்தது என்றும் அதனால் அந்த பெண் குழந்தைக்கு தரங்காநந்தினி என்று பெயர் சுட்டி வளர்த்து வந்தார். தரங்கம் என்றால் கடல் அலை, ஆனந்தினி என்றால் மகிழ்ச்சி அடைவாள் என்று பொருள். அவள் திருமண வயதை அடைந்தவுடன், எம்பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். எம்பெருமானும் ஏற்றுக்கொண்டார்.

வ்ருத்தாசுரன் என்னும் அரக்கன் தனது தவபலத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு இந்திரனை வென்று இந்திரலோகத்தை கைப்பற்றினான். இந்திரன் பயந்து இங்குள்ள தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். தேவர்கள், தங்கள் தலைவனைத் தந்தருள வேண்டும் என்று திருமாலிடம் வேண்ட, அவரும் அவர்களை அயிந்திரபுரத்தில் ஒரு வைஷ்ணவ யாகம் செய்தால் தாமரைத் தண்டில் ஒளிந்துள்ள இந்திரன் வருவான் என்று அருள, அவ்விதமே அவர்கள் யாகம் நடத்த, இந்திரன் தோன்றினான். திருமாலும் பிரத்யட்சமாகி இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைக் கொடுக்க அதனால் வ்ருத்தாசுரனைக் கொன்று மீண்டும் தன் நாட்டைப் பெற்றான்.

மது, கைடபன் என்னும் அரக்கர்கள் பிரம்மனிடமிருந்த படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை எடுத்து மறைத்துக் கொள்ள, பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு மீட்டுத்தர திருமாலிடம் வேண்டினார். திருமால் ஹயக்ரீவ வடிவம் கொண்டு அரக்கர்களைக் கொன்று படைப்புத் தொழிலுக்கான வேதத்தை மீண்டும் பிரம்மனிடமே ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை ‘நால்வேதப் பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்’ என்று போற்றுவர். இப்பெருமாளை வழிபடுவர்களுக்குத் தங்கு தடையற்ற கல்வியும், தெளிவான ஞானமும் உண்டாகும்.

சைவத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு சோழ மன்னன், வைணவத்தலங்களுக்கு தீங்கு செய்து கொண்டு இருந்தான். அது போன்று, இந்த திருத்தலத்தையும் நாசம் செய்ய வந்த மன்னனிடம், ஒரு ஆடு மேய்க்கும் இடையன் அது சிவன் ஸ்தலம் என்று கூற, அந்த மன்னன் கர்ப்பக்ரஹத்தை உற்று நோக்க, எம்பெருமான் அவனுக்கு சிவனாக காட்சி அளித்தார் என்று சொல்வர். அதனால் அந்த மன்னன் இந்த கோவிலை ஒன்றும் செய்யாமல் சென்றான்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.

திருமங்கையாழ்வார் மூவராகிய ஒருவனை என்று எம்பெருமானை மங்களாசாசனம் செய்தார். மூவரும் இவனே என்பதை நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாடலாலும் அறியலாம்.

முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர், முதல்வா, நிகர் இலகு கார் உருவா நின்னகத்த தன்றே
புகரிலகு தாமரையின் பூ
(72)

மணவாள மாமுனிகள் பன்முறை மங்களாசாசனம் செய்த தலம். இங்கு மணவாள மாமுனிகளுக்கு ஒரு அழகான கோவில் ஒன்று உள்ளது.

வேதாந்த தேசிகன்

இன்றைக்கு சுமார் 750 வருடங்களுக்கு முன் பிறந்து, ஸ்வாமி ராமானுஜருக்கு பிறகு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் “கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்”, “வேதாந்ததாசரர்” என்று பல பட்டப் பெயர்களுடன் சிறப்பு பெற்றவர் தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியர்.

திருவேங்கடமுடையானுடைய திருஆராதன மணியின் அம்சமாக ஒரு மகான் அவதரிக்கப் போகிறார் என்று புராணங்களில் சொல்லியது போல், ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அரும் பெரும் தொண்டுகள் செய்து வளர்த்தார்.

சுவாமி தேசிகன், ஒளஷதகிரி என்ற திருத்தலத்தில், அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தைகொண்டு தவம் புரிந்து, கருடனின் ஆசியை பெற்றார். கருடன், தேசிகனுக்கு காட்சி கொடுத்து, அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். அதே இடத்தில, ஹயக்ரீவ மந்திரத்தைக் கொண்டு , மீண்டும் ஒரு கடுமையான தவம் புரிந்து, ஹயக்ரீவரின் அருளையும் பெற்றவர். வேதாந்த தேசிகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூா்த்தியே திருவஹீந்திர புரத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீஹயக்ரீவர் ஆவாா்.

ஹயக்ரீவரின் அருளையும், காட்சியையும் பெற்று மலையில் இருந்து திரும்பிய தேசிகன், வடபெண்ணை நதிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரை வழி மறித்து, அடியவர்க்கு உண்மையான தெய்வநாயகபெருமாள், காட்சி கொடுத்ததாக சொல்வர்.

தேசிகன், கருடன் மீதும், ஹயக்ரீவர் மீதும், தெய்வ நாயகன் மீதும் அளவற்ற பக்தி கொண்டு பல அரும் பெரும் நூல்கள் இயற்றினார். ஆச்சார்யர்களில் நாயிகா பாவத்தில் (தன்னை ஒரு பெண்ணாக பாவித்து) இறைவனை பாடல்கள் பாடி அனுபவித்து வழிபட்டவர் சுவாமி தேசிகன்.

ஒளஷதகிரியில்_ஸ்ரீந்ருஸிம்ஹன்

ஸ்வாமி தேசிகன், அஹீந்த்ரபுர க்ஷேத்ரத்தில், அடியவர்க்கு மெய்யன் திவ்ய தம்பதியரை ஸேவித்து, ஒளஷதகிரி ஏறி முற்றிலும் அடர்ந்த வனமாகக் காட்சியளித்த ஸ்தலத்தில், ஆளரி ஸந்நிதியில் அவனையும் ஸேவித்து, மாதுலர் ஸ்ரீ அப்புள்ளாரின் நியமனப்படி,. காருட மந்த்ரத்தை ஜபிக்கத் தொடங்கினார்.‌ அவ்விடத்தே ஆதியில் எழுந்தருளியிருந்தது ஸ்ரீ ந்ருஸிம்ஹன்.

  ஸ்ரீ ஹயக்ரீவன் இவ்விடத்தே ப்ரத்யக்ஷமாகி அருளியவுடன் ஸ்வாமி அநுபவித்து அருளியது ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம். ஆனால் இந்த ஸ்தோத்ரத்தின் இன்னொரு அர்த்தம் - ஸ்ரீ ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும், மஹான்கள், இந்தத் தெளிய உள்பொருளை ப்ரகாசிக்கச் செய்ய வேண்டுமென்றும் விண்ணப்பித்து இருந்தேன். ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தைச் சொன்னோமானால்,. ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும் ஸ்தோத்தரிப்பதாக ஆகும். அடியேனுடைய மந்த புத்திக்குத் தெரிந்த வரையில், இப்படியான இரண்டு முக்ய அவதார வைபவத்தை, நமது மஹாசார்யன் ஸ்வாமி தேசிகனைப் போல, வேறு எந்த மத ஸ்தாபகரும், மஹாசார்யர்களும், மஹா பண்டிதர்களும் இதுவரை ஒரே ஸ்தோத்ரத்தில் சொன்னதில்லை. இப்போதும் ஒளஷதகிரியில் ஸ்ரீ ஹயக்ரீவன் ஸந்நிதியில், ந்ருஸிம்ஹனும் மேற்கு திக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இப்படிப்பட்ட, ஸந்நிவேசம் - இங்கு ஒரு புண்ணிய இடத்தில்தான். ஆதலால், இங்கு ஆற அமர ஸேவித்து, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தைச் சொன்னோமானால், நரஸிங்கப் பெருமானின் க்ருபையும் ஒரு சேரக் கிடைக்கும்.

                ஸ்ரீ உருப்பட்டூர் செளந்தரராஜன் ஸ்வாமி, ஸ்ரீ தேசிக ஸேவாவில்

சுவாமி தேசிகன் தன்னைப்போலவே தன்னுடைய திருக்கரங்களாலேயே ஓர் உற்சவ விக்கிரகம் செய்து போட்டியில் ஜெயித்த இடம் இந்த தி திவ்யதேசம் தான்.

40 ஆண்டுகள் இந்த திவ்யதேசத்தில் வாழ்ந்திருந்த சுவாமி தேசிகன் ஒரு திருமாளிகையும், அதில் தமது திருக்கரத்தால் ஒரு கிணறும் கட்டி இருந்தார். அவை இன்றும் இங்கே உள்ளன.

இந்த எம்பெருமானின் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை அருளிச் செய்தார். சிருஷ்டித் தொழிலை மேற்கொண் டிருக்கும் நான்முகன் அனுதினமும் இத்தலத்தில் பூஜை செய்து வழிபடுவதாக தமது “மும்மணிக் கோவையில்” ஶ்ரீதேசிகா் அருளியுள்ளாா்.

திருவஹீந்திபுரத்தில் ஆனி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இறைவனை நமக்குக் காட்டித்தரும் குரு உயர்ந்தவர் என்பதை மனதில் கொண்டு ஆனி மாதம் (ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை) வளர்பிறை சதுர்த்தசி அன்று நிறைவடையும் 10 நாள் உற்சவம் இந்த வசந்த உற்சவம். இதில் காலையில் திருமஞ்சனம் காணும் தேசிகன், மாலையில் புறப்பாடு நடைபெற்று, அதன்பின் வசந்த மண்டபத்தில் அடியவர்களுக்கு அருள் புரிவார். அவர் எழுதிய ““யானும் நீயே என்னுள் உறைதலின்!”  (மும்மணிக்கோவை 7) என்பதின்படி, ஏழாம் திருநாளன்று, வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரத்திலும், எட்டாம் திருநாளன்று நாச்சியார் திருக்கோலத்திலும், ஒன்பதாம் திருநாளன்று பரவாசுதேவன் அலங்காரத்திலும் வேதாந்த தேசிகன் காட்சியளிப்பார்.  நிறைவு நாளன்று காலையில் திருமஞ்சனம் முடிந்தபின், ஔஷதகிரி மலை சென்று ஹயக்ரீவப் பெருமாளுடன் திருமஞ்சனம் கண்டருளுவார். அப்போது அவர் இயற்றிய ஹயக்ரீவ ஸ்தோத்ரம் பாராயணம் செய்யப்படும்.

புரட்டாசி மாதத்தில் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் தேசிக ப்ரமோத்ஸவம் மிக பிரசித்தி பெற்றது. தேசிகன் உற்சவத்தின் போது, காலை மற்றும் மாலையில் முத்துப் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், சந்திர பிரபை, மோஹினி அவதாரம், வெள்ளி சிம்ம வாஹனம், சொர்ணாபிஷேகம், தங்க விமானம், குதிரை மற்றும் ஹம்ச வாஹனம் என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தேசிகன் திருநட்சத்திரமான ப்ரமோத்ஸவம் திருவோணம் அன்று ஔஷத மலையில் உள்ள ஹயக்ரீவ சன்னதியில் தேசிகனுக்கு விஷேச பூஜைகளுடன், ரத்னாங்கி சேவை மிக சிறப்பாக நடைபெறும். பிறகு அவர் பல்வேறு சந்நிதிக்கு சென்று மாலை மரியாதை பெற்று கொண்டு, மாலையில் புறப்பாடும் இரவில் தெப்போஸ்தவமும் நடைபெற்று விடையாற்றி உத்சவத்துடன் தேசிக ப்ரோமோத்ஸவம் இனிதே நிறைவேறும். ஆச்சார்யனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கப் பிரார்த்தித்து இந்த பதிவினை முடிவு செய்வோம்.

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,

மாநகரில் மாறன் மறை வாழ – ஞானியர்கள்

சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Google Map

Thaayaar – thanks to friends from whatsapp group

திருவஹீந்திரபுரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

Thaayaar – thanks to friends from whatsapp group

திருவஹீந்திரபுரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

040 திருச்சித்ரகூடம் Thiruchithrakoodam

புண்டரீகவல்லித்தாயார் ஸமேத கோவிந்தராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருச்சித்ரகூடம் தில்லைநகரம், சிதம்பரம்
மூலவர் கோவிந்தராஜன்
உத்ஸவர்தேவாதிதேவன், பார்த்தசாரதி, (வீற்று இருந்த திருக்கோலம்)
சித்ரகூடத்திலுள்ளான் (நின்ற திருக்கோலம்)
தாயார்புண்டரீகவல்லித்தாயார் (தனி நாச்சியார் சன்னதி)
திருக்கோலம்கிடந்த (போக சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்32
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 21
குலசேகராழ்வார் 11
தொலைபேசி+91 4144 – 222 552, +91 98940 69422.

கோவில் பற்றி

பிரம்மாண்ட புராணத்தில் பிரம்மன் நாரதரிடம், எல்லா உலகங்களிலும், பூவுலகம் சிறந்தது. அதில் சிறந்தது நாவலந்தீவு என்னும் பரதக் கண்டம். அதில் சிறந்தது தமிழ்நாடு. அதில் வட காவேரியின் வட திசை சிறந்தது. அதில் தில்லை வனம் சிறந்தது. அதில் சிறந்தது புண்டரீகபுரம். அதில் சிறந்தது சித்திரகூடம். அந்த சித்ரகூடத்தில், அனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டுள்ள கோவிந்தராஜனைத் தானும் சிவ பெருமானும் இந்திரன் என்ற பலரும் போற்றி அவனிடம் இருந்து பல நன்மைகள் பெற்றதாக கூறுகிறார்.

இந்த கோவிலில், கோவிந்தராஜன் தனி கொடிமரத்துடன் தனிக்கோவில் மூலவராக இருக்கிறார். இங்குள்ள மண்டபத்தில் இருந்து பார்த்தால், பள்ளிகொண்ட கோவிந்தராஜனையும், அவரது நாபிக்கமலத்தில் நின்ற திருக்கோலத்தில் பிரம்மாவையும், நடனமாடும் கோலத்தில் நடராஜனையும் தரிசிக்கலாம், அது இங்கு ஒரு தனிச் சிறப்பு .

தன் எதிரில் நடராஜப் பெருமான் நடனமாடியதை எம்பெருமான் பள்ளிகொண்டு ரசித்ததால் இங்கு உள்ள சயனம், போக சயனம் என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் கோவிந்தராஜன் சயன திருக்கோலத்திலும், உற்சவர் தேவாதிதேவன் அமர்ந்த கோலத்திலும், இன்னொரு உற்சவராக சித்திரகூடத்திலுள்ளான் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஆகாயஸ்தலம். இங்கு எம்பெருமான் ஆகாயத்தை நோக்கி பார்த்துக்கொண்டு சேவை சாதிப்பது விசேஷம்.

ப்ரம்மா திருமாலின் நாபிக்கமலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தான் எப்போதும் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு, பணிவுடன் நின்ற திருக்கோலத்தில் எம்பெருமானின் அருகில் அவரை தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும், நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.

முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் தனித்தனியே இருந்தன. தில்லைத் திருச்சித்ரக்கூடம் என்று பெருமாள் கோவிலை ஆழ்வார்களும். சிற்றம்பலம் என்று நடராஜர் கோவிலை
சைவர்களும் வழங்கி வழிபட்டு வந்தனர்.

சிதம்பர ரகஸ்யம் என்பது நடராஜர் சன்னதியில் மூலஸ்தானத்தில் உள்ளது.

ஸ்தல வரலாறு

கலிங்க நாட்டு மன்னன் கவேரன் என்பவனுக்கு நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்க, அவனும் அவன் மனைவியும் பல தவங்களைப் புரிந்ததன் பயனாக காவேரியே அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தாள். பிறகு காவேரி அகத்தியனால் நதியாக ஆன பின்பு காவேரனும் அவன் மனைவியும் நீராட வந்து, தாங்கள் எந்நாளும் வாழும் சாகா வரம் வேண்டும் என்று அவளிடம் வேண்டினார்கள். அதற்கு காவேரி அவர்களை தில்லைவனம் சென்று அங்குள்ள கோவிந்தராஜனை குறித்து கோவிந்தா, கோவிந்தா என்று கூறி தவம் இருக்குமாறு கூறுகிறாள். அவர்களுக்கு எம்பெருமான் காட்சி அளித்து மோக்ஷமும் கொடுத்து அருளினான். அதனால் இதனை மோக்ஷ ஸ்தலம் என்று கூறுவர்.

எம்பெருமான் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன் என்ற மூன்று அரக்கர்களை வதம் செய்ததை தஞ்சை மாமணிக்கோயில் ஸ்தல வரலாற்றில் பார்த்ததை நினைவில் கொண்டு தொடருவோம்.

இந்த அரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள் இருந்தனர். அவர்கள் இருவரும், தம் சகோதரர்களை ஜெயித்த பூவராகப் பெருமானை சரணடைந்து தங்களுக்கும் நல்வழி காட்டுங்கள் என்று வேண்ட, பூவராக எம்பெருமான் அவர்களையும் காத்து அருளினான். ஸ்ரீமுஷ்ணத்திலேயே எம்பெருமானுக்கு காவல் புரிய வேண்டும் என்று சில்லி வேண்டிக் கொள்ள , அப்படியே நடக்க எம்பெருமானும் அருள் புரிந்தார்.

தில்லி மோக்ஷம் வேண்ட, எம்பெருமானும், அவளை புண்டரீகபுரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தன்னைக் குறித்து தவமிருக்குமாறு சொன்னார். அவளும் தவம் புரிய, எம்பெருமான் காட்சி கொடுத்தார். அவளும் எம்பெருமானின் அருகே மரமாக இருக்க வேண்டும் என்று வேண்டினாள். அதற்கும் எம்பெருமான் அருள் புரிந்தார். தில்லி இந்த க்ஷேத்திரத்தை சுற்றி, அழகான தில்லைக் காந்தார மரமாக விரிந்து பரந்து நின்றாள். எம்பெருமானும், தில்லைக் கோவிந்தனாகப் பள்ளி கொண்டார். தில்லி வேண்டியதால், இது தில்லைநகரம் ஆயிற்று.

பரமசிவனும் பார்வதியும் ஒரு சமயம் சிவலோகத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் மிக சிறப்பாக நடனம் ஆடினர். அவர்களில் யாருடைய நடனம் சிறப்பாக இருந்தது என்று இருவருமே தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.

அவர்கள் பிரம்மனிடம் சென்று தங்களில் யார் சிறப்பாக நடனம் ஆடுவர் என்று ஒரு போட்டி வைத்து தீர்ப்பு சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அவர்களை திருவாலங்காட்டில் நடனம் ஆடும்படியும், அங்கு அவர் தீர்ப்பு கொடுப்பதாகவும் சொன்னார். அப்படியே அங்கு சிவனும் பார்வதியும் சிறப்பாக நடனமாட, பிரம்மனால் ஒரு தீர்ப்பும் சொல்ல முடியவில்லை. இருவரின் நடனத்தையும் வியந்து பேசி, முடிவை திருமாலிடம் கேட்கச் சென்றனர்.

திருமால் அவர்களை மீண்டும் ஒரு நடனம் புரிய தில்லை வனத்திற்கு வரச்சொன்னார். தெய்வத்தச்சனான விஸ்வகர்மாவை கொண்டு தில்லைவனத்தில் நடுவில் சித்ர கூடத்தை அமைக்கச் சொன்னார் அவனும் அரக்கர்களின் தச்சன் மயனையும் கொண்டு, ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி நான்கு வேதங்களையும் நான்கு கோபுரமாக்கி சித்ரக்கூடத்தை கனகசபை, ரத்தின சபை, நாகசபை, தேவசபை, ராஜசபை, ஆகியன சூழ தோற்று வித்தான்.

சிறந்த சபையில் மீண்டும் இருவருடைய நடனமும் வழக்கம்போல் மிக சிறந்த முறையில் ஆரம்பித்தது. முடிவில் சிவன் தனது இடதுகாலைத் தரையில் ஊன்றி வலதுகாலைத் தலைமேல் தூக்கி நிறுத்தினான். பெண்மைக்குரிய நாணத்தால் தான் அவ்வாறு செய்யாமல் உமையவள் நின்றாள். நடராசனே வென்றான், என்று சபையில் அனைவரும் தீர்ப்புக் கூற, திருமாலும் அதனை ஆமோதித்தார். உமையவள் காளியாக மாறி தில்லை வனத்திற்குத் தெற்கே இன்றும் அங்கு ஒரு காவல்தெய்வமாய் நிற்கிறாள்.

சிவன் திருமாலிடம் இதே திருக்கோலத்தில் இங்கு எழுந்தருள வேண்டும் என்று கேட்க, எம்பெருமானும் இங்கு சயன திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

ஆதிசேஷன் ஒரு முறை, சிவனின் நடனத்தை காண வேண்டும் என்று விருப்பம் கொண்டு, எம்பெருமானிடம் தெரிவிக்க அவரும் ஆதிசேஷனை இந்த திருத்தலத்திற்கு வந்து அந்த காட்சியை காணச்செய்தார். ஆதிசேஷன், இன்றும் பிரகாரத்தில், எம்பெருமானின் திருவடிகளை நோக்கியவாறு பதஞ்சலி சன்னதி என்றது ஒரு தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.

தில்லையில் ஒரே இடத்தில விஷ்ணுவான கோவிந்த ராஜரும் சிவபெருமானான நடராஜரும் ஒன்றாக இருந்ததை விரும்பாத சோழ அரசன் (கிருமி கண்ட சோழன், அவன் குலோத்துங்க சோழன் என்றும் (1 அல்லது 2),  கோவிந்த ராஜரை பெயர்த்து கடலில் சேர்த்துவிட்டதாக ஒட்டக்கூத்தர் பாடிஉள்ளார்.

மூன்றில் கிடந்த தடங்கடல், போய் முன்னைக் கடல்புக, பிள்ளைத் தில்லை மன்றிற்கு, இடங்கொண்ட கொண்டல்

சோழன் கடலில் அமிழ்த்திய பிறகு அதனால் கோபம் கொண்டவர்கள் அப்பெருமானை மீண்டும் தேடி எடுத்து இப்போது இருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும், பின்னாளில் நடராஜர் கோவிலை விரிவு படுத்தும் போது, இந்த இரண்டு கோவில்களும் சேர்ந்து ஒரே கோவிலாக இன்னொரு சோழனால் கட்டப்பட்டது என்றும் கூறுவர்.

சோழ மன்னன் மூலமூர்த்தியை கடலில் தூக்கி வீசியபோது, அங்குள்ள சிலரால், உத்சவப் பெருமாள் காப்பாற்றப்பட்டு, திருவேங்கடத்தில், கோவிந்தராஜனாக பின்னாளில், இராமானுஜர் காலத்தில், அவரால் அங்கு நிறுவப்பட்டது என்று சொல்வர்.

ஆழ்வார்கள்

இராமன் சித்ரகூட மலையில் சீதாதேவியுடன் மிகவும் மகிழ்வோடு இருந்தான். அதே இராமன்தான் இன்று கோவிந்தராஜன் என்ற பெயரில் இந்த திருச்சித்ர கூடத்திலே திகழ்கிறான் என்று குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தமது பாடல்களில் கூறுகின்றனர்.

குலசேகர ஆழ்வார் இந்த எம்பெருமானை சித்திரகூடத்தில் இருந்த இராமபிரானாகவே எண்ணி, இராமாயணம் முழுவதையுமே 11 பாடல்களில் (பெருமாள் திருமொழி, பதிகம் 10) இந்த தில்லைநகர் திருச்சித்திரகூட எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்து உள்ளார். இதன் சிறிய விளக்கத்தை இங்கே காணலாம்.

மிகப்பெரும் மாடமதில்களையும், உயர்ந்த கோபுரங்களையும் எதிரிகளும் அஞ்சக்கூடிய நெடிய வாசல்களையும் பெற்றதாய்த் தில்லை விளங்குவதை  “தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்”
என்று குலசேகராழ்வார் சொல்வதிலிருந்து தில்லையின் அந்த நாளைய பெருமைகளை நாம் காணலாம்.

தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரவர் இந்த எம்பெருமானைத் துதித்து வந்தனர் என்பதை,“தில்லை நகர் திருச்சித்ர கூடந் தன்னுள், அந்தணர்களொரு மூவாயிரவ ரேத்த, அணிமணி யாசனத் திருந்த வம்மான் றாணே” என்று குலசேகராழ்வாரும் *பெருமாள் திருமொழி, 10.2) “மூவாயிர நான் மறையாளர் நாளும், முறையால் வணங்க அணங்காய சோதி, தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத், திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே” (பெரிய திருமொழி 3.2.8) என்று திருமங்கையாழ்வாரும் பாடுவதிலிருந்து அறியலாம்.

உடம்பை வருத்தி, வெயிலில் உலர்த்தி, காய்கறிகளை உண்டு, தண்ணீரிலும், காடுகளிலும், மலைகளிலும் கடும் தவம் செய்து மோக்ஷத்தை அடைய விரும்புகிறீர்களே, அதற்கு மாற்றாக, திருச்சித்திரகூடம் சென்று எம்பெருமானை தரிசித்தால் அந்த பயனை துன்பம் இல்லமால் அடையலாம் என்று திருமங்கையாழ்வார் கூறுகிறார்.

நாதமுனிகளின் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோவில் இங்கிருந்து மிகச் சமீப தொலைவில் உள்ளது.

Google Map

திருச்சித்ரகூடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருச்சித்ரகூடம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

நம் பதிப்புகளில் திருச்சித்திரகூடம்

இத்துடன், சோழ தேச திவ்யதேசங்கள் நாற்பதும் பார்த்து விட்டோம். இனி தொடர்வது, நாடு நாடு திவ்யதேசங்கள் இரண்டு, அவை திருவஹீந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். நன்றி

039 திருப்பார்த்தன்பள்ளி ThiruPaarthanpalli

தாமரைநாயகி தாயார் ஸமேத தாமரையாள் கேள்வன் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பார்த்தன்பள்ளி
மூலவர் தாமரையாள் கேள்வன் பார்த்தசாரதி
உத்ஸவர்பார்த்தசாரதி
தாயார் தாமரைநாயகி
திருக்கோலம்நின்ற
திசைமேற்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 275478
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

11 எம்பெருமான்களில் ஒருவராக இங்கு வந்தவர்
குருக்ஷேத்திரத்திலிருந்து வந்த பார்த்த சாரதி. மூலவர், உற்சவர், இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி
என்று மூன்று தேவி மார்கள் சூழ காட்சி அளிக்கிறார்கள்.

இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்று திருநாமம். சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும், கொண்டு காட்சி அளிக்கிறார்.

இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் திருநாமத்தில் திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவரும் இருப்பது ரசிக்க வேண்டிய ஒன்று.

பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு சன்னதி உண்டு.

பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில்
எழுந்தருளியுள்ள எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.

மூன்று நிலை ராஜகோபுரம், 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது.

ஸ்தல வரலாறு

அர்ஜூனன் இவ்விடத்திற்கு வந்த போது அதிகமான தாகமுடன் இருக்க, அங்கே தவம் செய்து
கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்திலும் நீர் இல்லாததால் அர்ஜூனனை நோக்கி அவன் எப்போதும், எந்த உதவி வேண்டுமானாலும் கண்ணனைதானே அழைக்க
வேண்டும் என்று ஞாபகப்படுத்தினார். அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம் கொடுத்தான். அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது. கண்ணனிடமிருந்து வந்த கட்கம் (கத்தி) பெற்றுத் தீர்த்தம் உண்டாக்கியதால் இங்கு உள்ள திருக்குளம் கட்க புஷ்கரணியாயிற்று. பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.

தசரதன் இவ்விடத்தில் ஒரு யாகஞ்செய்ததாகவும் ஐதீஹம்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் பெரியதிருமொழியில் (4.8) 10 பாசுரங்களில் இந்த திவ்யதேசத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்

கீழ்வரும் பாடலில் தாமரையாள் கேள்வன் என்று எம்பெருமானின் திருநாமத்தை பொய்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த திவ்ய தேசத்தின் பெயர் வராததால், இந்த திவ்யதேச பாசுரம் என்று சொல்லப் படுவதில்லை.

பெயருங் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் திருவந்தாதி-67),

Google Map

திருப்பார்த்தன் பள்ளி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம், திருப்பார்த்தன் பள்ளி பற்றி சொல்வது

இத்துடன் திருநாங்கூர் பதினோரு திவ்யதேசங்கள் பற்றிய தொகுப்பு முடிவடைக்கின்றது. அடியேனுக்கு வேறு புது தகவல்கள் கிடைக்கும் போது சேர்க்கிறேன், நன்றி. தொடர்ந்து மீதியுள்ள சோழதேச திவ்யதேசமான திருச்சித்ரகூடம் என்ற சிதம்பரத்தைப் பற்றி அடுத்த வலைப்பதிவில் சொல்ல முயற்சிப்போம்.

038 திருவெள்ளக்குளம் Thiruvellakulam

பத்மாவதி தாயார் ஸமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவெள்ளக்குளம் / அண்ணன் கோவில்
மூலவர்ஸ்ரீனிவாசன் / கண்ணன் / நாராயணன் / அண்ணன் பெருமாள்
உத்ஸவர்ஸ்ரீநிவாசன்
தாயார்பத்மாவதித் தாயார் / பூவார் திருமகள் / அலர்மேல்மங்கை
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 266534
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வெண்மை என்று பொருள். எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக் குளமாகி, அதுவே திருவெள்ளக்குளமாயிற்று.

திருமலையில் ஸ்ரீனிவாசன் என்பது எம்பெருமானுக்கு (திருவேங்கடமுடையான்) திருநாமம் என்பதும்
பிராட்டிக்கு அலர்மேல் மங்கைத் தாயார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதே பெயர்களில் வழங்கும் 108 திவ்யதேசங்களில் இன்னொரு இடம் இது ஒன்றுதான்.

வேங்கடத்தானுக்கு, வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது ஐதீஹமாவதால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதல்களை இங்கே செலுத்துவது ஒரு வழக்கமாகிறது. அண்ணன் குடிஇருக்கும் கோவில் அண்ணன் கோவில் ஆனதால், திருவெள்ளக்குளத்திற்கு அண்ணன் கோவில் என்றும் பெயருண்டாயிற்று.

இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம் என்பதோடு மட்டுமின்றி திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாரை முதலில் சந்தித்ததும் இங்கே தான். பிறகு நடந்தவை எல்லாம் ஒரு பெரிய சரித்திரம், அது நமக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால், அவர் திருமங்கை ஆழ்வாரானார்.

மணவாள மா முனிக்கு எம்பெருமான் காட்சி கொடுத்த திருத்தலம். இங்கு குளக்கரையில் இருவரும் சந்தித்து உரையாடினார்கள் என்பார்கள்.

ஸ்தல வரலாறு

துந்துமாரன் என்னும் மன்னனுக்கு சுவேதன் என்று ஒரு புத்திரன் இருந்தான். அவனுக்கு இளவயதில் மரண கண்டம் என்பதால், அதிலிருந்து மீள, தன்குல குருவான வசிட்டரை அணுகினான். அவர் இத்திருத்தலத்திற்கு சென்று, ஆயுள் விருத்தி மந்திரம் சொல்லி தவம் செய்யுமாறு கூறினார். எனவே இவ்விடம் வந்த சுவேதன்,
குளக்கரையில் வில்வ மரத்தடியில் ஆயுள் விருத்தி மந்திரத்தை ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை, ஒரு மாதம், கடுந்தவம் செய்தான். சிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரணகண்டத்தை நீக்கி நீடித்த ஆயுளை நல்கினார். இவ்விதம் சுவேதன் எம்பெருமானின் அருள் இந்த புஷ்கரணியில் கிடைத்ததால், ஸ்வேத புஷ்கரணி என்றாகி தமிழில் வெள்ளைக்குளம் ஆயிற்று.

ஆழ்வார்

திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்

தை மாதம் திருநாங்கூர் 11 கருட சேவைக்காக திருநகரியிலிருந்து  திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் புறப்பட்டு திருநாங்கூரில் மணிமாடக் கோவிலுக்குச் செல்வார்.  11 கருட சேவை முடிந்து எல்லா எம்பெருமானுகளுக்கும் மங்களாசாசனம் செய்து முடித்தபின், ஆழ்வாரும் குமுதவல்லி நாச்சியாரும் நாச்சியாரின் பிறந்தவீடான திருவெள்ளக்குளம் சென்று பிறகு தான் தங்களுடைய இருப்பிடமான திருநகரி செல்வார்கள்.

திருமங்கையாழ்வார் திருவேங்கடவனையே இத்தலத்தில் காண்கிறார். திருவேங்கடவனே இத்தலத்தில் எழுந்து அருளி இருப்பதாகவும், திருமலை ஸ்ரீனிவாசனுக்கு, இந்த எம்பெருமானை அண்ணன் என்றும் அழைக்கிறார்.

திருமங்கையாழ்வார்  அண்ணா, அடியேனிடரைக் களையாயே (பெரிய திருமொழி, 1.10.1) என்று தமது துன்பங்களைப் போக்குமாறு திருவேங்கடவனை அண்ணா என்று அழைத்து வேண்டுகிறார். அதேபோல் திருவெள்ளக்குளத்துள் அண்ணா, அடியேன் இடரை களையாயே (பெரிய திருமொழி 4.7.1) என்றும், திருவெள்ளக்குளத்துள் எந்தாய், அடியேன் இடரை களையாயே (பெரிய திருமொழி 4.7.2) என்றும், திருவெள்ளக்குளத்து உறைவானே, எல்லா இடரும் கெடுமாறு அருளாயே (பெரிய திருமொழி 4.7.6) என்றும் பாடியுள்ளார்

திருமங்கைஆழ்வார் வேறு எந்த எம்பெருமானையும் அண்ணா என்று அழைத்தது இல்லை. அவரைத்தவிர எந்த ஒரு ஆழ்வாரும் எந்த ஒரு எம்பெருமானையும் அண்ணா என்று அழைத்ததில்லை.

மேலும், திருமங்கையாழ்வார், இந்த எம்பெருமானையே, ‘வேடார் திருவேங்கடமேய விளக்கே” (பெரிய திருமொழி 4.7.5) என்று கூப்பிட்டு திருவேங்கடவனுக்கும் திருவெள்ளக்குளத்தானுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார்.

அலர் மேல் மங்கை உறை மார்பா (திருவாய்மொழி 6.10.10) என்று நம்மாழ்வார் திருவேங்கடவனை அழைக்கிறார். திருமங்கையாழ்வார் இந்த எம்பெருமானை பூவார் திருமகள் புல்கிய மார்பா (பெரிய திருமொழி 4.7.9) என்று அழைக்கிறார்.

திருவேங்கடவனுக்கு திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 4 பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றில் பலச்ருதி பாடல் ஒன்றினில் (1.10,10) திருவேங்கடவனை “கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவராகுவார் தாமே” என்று சொன்னார். திருவெள்ளக்குளத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசனான அண்ணாவை சொல்லும் பதிகத்தில் “கலியன் சொன்ன மாலை வல்லரென வல்லவர் வானவர் தாமே” (பெரிய திருமொழி 4.7.10) என்று அதே போல் கூறி இவரை அண்ணா என்று முடிக்கிறார்.

Google Map

திருவெள்ளக்குளம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவெள்ளக்குளம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

037 திருமணிக்கூடம் Thirumanikoodam

திருமகள் நாச்சியார் ஸமேத மணிக்கூடநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி.

திவ்யதேசம் திருமணிக்கூடம்
மூலவர்வரதராஜப்பெருமாள் / மணிக்கூடநாயகப் பெருமாள்
உத்ஸவர் கஜேந்திரவரதன்
தாயார் திருமாமகள் நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் கிடையாது)
திருக்கோலம் நின்ற
திசை கிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 96554 65756
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப் பட்டுள்ளது. திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப்
பெருமாள் ஆவார்.

தீராத நோய்கள் எல்லாம் கூட திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை.

ஸ்தல வரலாறு

எம்பெருமான் கூர்ம அவதாரம் எடுத்தபோது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார்.

அமிர்த கலசத்தை அசுரர்கள் பிடுங்கி ஓட, எம்பெருமான் மிக அழகுடைய பெண் வடிவில் மோகனியாக அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தைப்பெற்று, அதனை முதலில் தேவர்களுக்கு கொடுத்தார். ராகு என்ற அசுரன் சூரியன், சந்திரன் என்ற இரண்டு தேவர்களுக்கு நடுவில் வர, எம்பெருமானுக்கு அவர்கள் அவனை காட்டிக்கொடுக்க, மோகினி, அந்த அசுரனை தன் கையில் உள்ள அகப்பையால் தட்ட அந்த அசுரன் தலையில்லாத ராகு என்ற கிரகமாக மாறி, சூர்ய சந்திர கிரஹணங்கள் வர காரணமாக உள்ளார். அதனால் பயந்த சூரியன் திருத்தெற்றியம்பலம் திவ்யதேசத்தில் உள்ள சூரிய புஷ்கரணி என்ற திருக்குளத்திலும் சந்திரன், இந்த திவ்யதேசமான மணிமாடம் என்ற திவ்யதேசத்தில் உள்ள சந்திரபுஷ்கரணி என்ற திருக்குளத்திலும் மறைந்துகொண்டனர். அவர்களுக்கு எம்பெருமான் அருள் புரிந்தார்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் (பெரிய திருமொழி, 4.5) கொண்டு இந்த திவ்யதேச எம்பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளார்.

திருமணிகூட எம்பெருமான் இராமரே என்று பாடும் போது, கரு மகள் இலங்கை யாட்டி பிலங்கொள்வாய் திறந்து தன்மேல், வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை, (பெரிய திருமொழி 4.5.5) என்று இராவணனின் தங்கையான சூர்ப்பனகையின் மூக்கு, காது இவற்றை அறுத்தவர் இராமர் என்று பாடுகிறார். இதற்கான விளக்கத்தில், “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு” என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலக்கை என்ற படியால், கையாகிய லக்ஷ்மணனுடைய செயலை இராமன் செய்ததாகச் சொல்லுதல் தகுமே. பலராமன் செய்த ப்ரலம்பாஸுர வதத்தைக் கண்ணபிரான் செய்து அருளியதாக சொல்வதும், இதுபோன்றதே ஆகும்

நாம் ஸந்தேஹப்படுதல், நிச்சயித்தல் என்ற எல்லாவித ஞானத்திற்கும் காரணம் எம்பெருமானே. உலகத்திற்கு மெய்யும் பொய்யும் அவனே. கைம்மாறு கருதாமல் பூமிக்கு வழங்கும் மேகங்களும் மற்றும் மழை முதலியவைகளும் அவனாலேயே. இப்படி எல்லாவற்றையும் இயக்குபவன், எம்பெருமான் நாங்கூர்த் திருமணிக்கூடத்தான் என்று ஆழ்வார் பெரிய திருமொழி (4.5.8) பாசுரத்தில் கூறுகிறார்.

சாஸ்திரங்களில் செய்யக்கூடாதென்று மறுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதால் வரும் பாவங்களும், சாஸ்திரங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள நற்காரியங்களைச் செய்கிறதால் வரும் புண்ணியங்களும் எம்பெருமான் அருள்வதே ஆகும். உலகில் உள்ள எல்லா சுகங்கள் தொடங்கி, மோக்ஷம் வரை எல்லா சுகங்களும் அவன் அருள்வதே ஆகும். மனங்கலங்கி இருப்பதால் வரும் கோபமும், தெளிந்து இருப்பதால் கிடைக்கும் அருளும் மற்றும் ஸத்வ ரஜோ தமோ குணங்களும் அவன் அளிப்பவையே.   இப்படி எல்லாவற்றையும் இயக்குபவனாக எம்பெருமான் நாங்கூர்த் திருமணிக்கூடத்தில் உள்ளான். அரி, அயன், அரன் என மூன்று மூர்த்திகளிருந்தாலும் அடியவர்கள் அடையவேண்டிய மூர்த்தி விஷ்ணுவே என்று தெளிந்து மஹர்ஷிகளும் தேவர்களும் வந்து சேருமிடம் இது என்று ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி, 4.5.9)

Google Map

திருமணிக்கூடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருமணிக்கூடம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

036 திருத்தெற்றியம்பலம் Thiruthetriyambalam

செங்கமலவல்லித் தாயார் ஸமேத செங்கண்மால் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருத்தேற்றியம்பலம்
மூலவர் செங்கண்மால், ரங்கநாதன், பள்ளிகொண்டபெருமாள்
உத்ஸவர் ரங்கநாதன்
தாயார் செங்கமலவல்லித்தாயார்
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 275689
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது. பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.

நான்கு புஜங்களுடன் ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் இருக்கும் இந்த எம்பெருமான், செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர்.

திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர் ஸ்ரீரங்கத்து அரங்கநாதன். ஆனால் இங்கு திருஇந்தளூர் போல் நான்கு திருக்கரங்களுடன் சயனத் திருக்கோலம்; மரக்காலைத் தலைக்கு வைத்து ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது. வலது திருக்கரம் மரக்கால் மீது, இடது திருக்கரம் இடுப்பின் மீது என்று பள்ளிகொண்டுள்ள எம்பெருமானின் தலைப்பக்கம் ஸ்ரீதேவி நாச்சியாரும், திருவடிப்பக்கம் பூதேவி தாயாரும் சேவை சாதிக்கின்றனர்.

இவரும் கருடசேவைக்கு திருநாங்கூர் வருவார்.

108 திவ்யதேசங்களுக்குள் அம்பலம் என்ற பெயரில் உள்ள ஒரே திவ்யதேசம்.

ஸ்தல வரலாறு

எம்பெருமான் கூர்ம அவதாரம் எடுத்தபோது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார்.

அமிர்த கலசத்தை அசுரர்கள் பிடுங்கி ஓட, எம்பெருமான் மிக அழகுடைய பெண் வடிவில் மோகனியாக அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தைப்பெற்று, அதனை முதலில் தேவர்களுக்கு கொடுத்தார். ராகு என்ற அசுரன் சூரியன், சந்திரன் என்ற இரண்டு தேவர்களுக்கு நடுவில் வர, எம்பெருமானுக்கு அவர்கள் அவனை காட்டிக்கொடுக்க, மோகினி, அந்த அசுரனை தன் கையில் உள்ள அகப்பையால் தட்ட அந்த அசுரன் தலையில்லாத ராகு என்ற கிரகமாக மாறி, சூர்ய சந்திர கிரஹணங்கள் வர காரணமாக உள்ளார். அதனால் பயந்த சூரியன் இங்குள்ள சூரிய புஷ்கரணி என்ற திருக்குளத்திலும் சந்திரன், அடுத்த திவ்யதேசமான மணிமாடம் என்ற திவ்யதேசத்தில் உள்ள திருக்குளத்திலும் மறைந்துகொண்டனர். அவர்களுக்கு எம்பெருமான் அருள் புரிந்தார்.

எம்பெருமான் வராக அவதாரம் எடுப்பதற்கு முன் பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் என்ற அசுரன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனை கொன்று பூமிதேவியை மீது வர செல்வதற்கு முன், ஸ்ரீதேவி நாச்சியாரும், ஆதிசேஷனுமும் கலக்கமுற்றனர். எம்பெருமான் அவர்களை இந்த திவ்யதேசத்திற்கு வந்து இருக்க சொன்னதோடு, சிவபெருமானையும் இங்கு வரச்செய்தார்.

அசுரனைக் கொன்றதோடு,  தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியை வெளிக்கொணர்ந்து, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்ததோடு பூமிதேவியையும் அழைத்துக்கொண்டு இந்த திவ்யதேசத்திற்கு வந்து ஓய்வாக பள்ளிகொண்டு உள்ளார்.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் 10 பாடல்களால் (பெரிய திருமொழி 4.4) இத்திருத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்து உள்ளார்.

இப்பெருமானைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவர். திருமங்கைஆழ்வாரும் இதை “சீரணிந்த வுலகத்து மன்னராகிச் சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே” (பெரியாதிருமொழி 4.4.10) என்ற பாசுரத்தில் கூறியுள்ளார்.

Google Map

திருத்தெற்றியம்பலம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருதெற்றியம்பலம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

035 திருத்தேவனார்தொகை Thiruthevanaarthogai

சமுத்ரதனயா தாயார் ஸமேத தேவநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருத்தேவனார்தொகை
மூலவர்தெய்வநாயகப் பெருமாள்
உத்ஸவர்மாதவப்பெருமாள்
தாயார்தெய்வநாயகி தாயார். மாதவநாயகி , சமுத்ரதனயாத் தாயார்
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 266542
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென் கரையில் உள்ளது.  இதனை கீழ்ச்சாலை என்றும் கூறுவார்.

தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் சபை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.

திருநாங்கூர் 11 திவ்யதேச பெருமாளாக வந்தவர்களில் இவர் திருவிடவெந்தை (திருவடந்தை) எம்பெருமான் ஆவார்.

உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. மூலவருக்கு உண்டான தெய்வநாயகன் என்னும் திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான திருவஹிந்திரபுரத்துக்கும் பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான
வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.

ஸ்தல வரலாறு

வைகுந்தத்தில், தனக்கு கிடைத்த மஹாலக்ஷ்மி மாலையை, துர்வாசர், இந்திரனுக்கு ஸ்ரீதேவி நாச்சியாரின் பிரசாதமாகக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக தன்னுடைய யானையான ஐராவதத்தின் மேல் வீசி எறிந்தான். மஹாலக்ஷ்மி திருமாலின் திருமார்பில் வாழ்பவள், அவளிடம் இருந்த வந்த பிரசாதத்தை இந்திரன் இகழ்ந்ததாகவும், அதனால் அவனுடைய செல்வம் எல்லாம் வற்றி விடவும் துர்வாசர் சாபம் இட்டார். உடனே ஐராவதம் மறைந்தது, அவன் செல்வமும் அழிந்தது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்ட இந்திரனிடம், துர்வாசர், எம்பெருமான் ப்ரஸாதமும் எம்பெருமானும் ஒன்று தான், ஆகவே அவன் இந்த சாபம் தீர எம்பெருமானிடம் தான் செல்லவேண்டும் என்று கூறி மறைந்தார்.

இந்திரன் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்க, அவரும் அவனிடம் தன் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் செயல் படும் எவர் வீட்டிலும் தானும் மகாலட்சுமியும் தங்க மாட்டோம் என்றும், அவனை திருப்பாற்கடலில் அமிர்தம் கடையும் வரை காத்திருக்க சொல்லி, அப்பொழுது அவன் சாபம் தீரும் என்று, கூடவே, மஹாலக்ஷ்மியுடன் தன்னுடைய திருமண வைபவத்தையும் தரிசிக்கலாம் என்றும் கூறினார். திருப்பாற்கடலைக் கடையும் நேரமும் வந்தது, ஐராவதம் வெளியே வந்தது, மஹாலக்ஷ்மி தாயார் வந்தார். அவளை இந்திரன் போற்ற, அவனுக்கு மறுபடியும் ஒரு மாலை கொடுக்க அவன் அதையும் போற்றி வைத்துக் கொண்டான். அவன் செல்வம் எல்லாம் மீண்டது.

திருப்பாற்கடலில் இருந்த வந்த திருமகளை, திருமால் திருமணம் செய்து கொண்டான். இந்த வைபவத்தை தரிசிப்பதற்கு தேவர்கள் கூட்டம் கூட்டமாக இந்த திருத்தலத்திற்கு வந்ததால், இது திருத்தேவனார் தொகை ஆயிற்று.

இதே போல், திருகோஷிட்டியூர் (104வது திவ்யதேசம் ) என்ற திவ்யதேசத்திலும், தேவர்கள் கூடி பேசி, எம்பெருமானை கிருஷ்ணாவதாரம் எடுக்க எப்படி வேண்டுகோள் விடுப்பது என்பது பற்றி திட்டம்தீட்டினார்கள் என்பதை நினைவில் கொள்ளலாம்.

ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்திற்கு 10 பாசுரங்கள் பாடி உள்ளார். (பெரிய திருமொழி 4.1).

Google Map

திருத்தேவனார்தொகை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம், திருத்தேவனார்தொகை பற்றி

RSS
Follow by Email