A Simple Devotee's Views
பத்மபாணி நாச்சியார் ஸமேத உய்யவந்த பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்ய தேசம் | திருவித்துவக்கோடு |
| மூலவர் | உய்ய வந்த பெருமாள் ; அபயபிரதன் |
| உத்சவர் | |
| தாயார் | வித்துவகோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார் |
| திருக்கோலம் | நின்ற திருக்கோலம் |
| திருமுகமண்டலம் | தெற்கே திருமுக மண்டலம் |
| பாசுரங்கள் | 10 |
| மங்களாசாசனம் | குலசேகர ஆழ்வார் 10 பாடல்கள் |
| தீர்த்தம் | சக்கர தீர்த்தம் |
| விமானம் | தத்வ காஞ்சன விமானம் |
மலைநாட்டு திவ்ய தேசங்கள் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கே காணலாம்.
மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).
திருவித்துவக்கோடு – இந்த ஸ்தலத்தை பற்றி
திருவித்துவக்கோடு – location – Google Map
திரு வித்துவக்கோடு பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திவ்ய தேசத்தை பற்றி
கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு
அருகில் அமைந்துள்ளது. ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து குருவாயூர் செல்லும் பாதையில் 16 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து குறுகிய பாதையில் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்தால் வரும். பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து பாரதபுழாய் ஆற்றை கடந்து 1.5 கிலோமீட்டர் நடந்தால் கோவிலை அடையலாம். கோவிலை சுற்றி ஆகாரம் போன்றவைகளுக்கு வசதி இல்லை.
திருவித்துவக்கோடு என்னும் இத்தலம், திருமிற்றக்கோடு எனவும், திருவீக்கோடு, திருவீச்சிக்கோடு எனவும் திருமித்தக்கோடு என்றும் வழங்கப்படுகிறது. கோவிலின் சுவர்களில் அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி, தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் பேரழகு பொருந்தியதாக உள்ளன.
இந்த திவ்ய தேச கோவிலில் நுழைந்த உடன் சிவன் சந்நிதி உள்ளது. அதன் பின் எம்பெருமான் சந்நிதி உள்ளது; இங்குள்ள எல்லா நான்கு விஷ்ணு மூர்த்திகளும் நின்ற திருக்கோலத்தில், சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஏந்தி காட்சி அளிக்கின்றனர். இந்த நான்கு மூர்த்திகளும், வாசுதேவ, சங்கர்ஷணன், பிரத்யூமன அனிருத்தர் என்று எம்பெருமான் வியூகத்தில் தன்னை பிரித்துக்கொண்டது போல உள்ள வடிவுகளாக காட்சி அளிக்கின்றன.
முன்னே இருக்கும் சிவனுடன் சேர்ந்து, இது ஐந்து மூர்த்தி தலம் என்றும், ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் கூறபடுகிறது. இங்கு தீபம் ஏற்றி துளசி கொண்டு பூஜை செய்தால், மனதில் உள்ள கவலைகள் நீங்கும் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்றும், வேலை தடை உள்ளவர்களுக்கு உத்தியோக தடைகள் நீங்கி வேலை கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.
மாதாமாதம் வரும் திருவோணம் நக்ஷத்திரம் மற்றும் வைகுந்த ஏகாதேசி ஆகியவை இங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஆகும். காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளி இருப்பதாலும் பத்து நதிகள் இணைந்து பாரத புழா நதிக்கரையில் உள்ளதாலும் இதுவும் பித்ரு தர்ப்பணம் கொடுக்கும் இடமாக கருதப் படுகிறது.
ஸ்தல வரலாறு
பல புராணங்களிலும் ஸ்தலவரலாறு பேசப்படுகிறது. துவாபர யுகத்தில்
தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில்
தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம்
ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த
அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர்.
நித்ய வழிபாட்டிற்காக விக்கிரகங்களையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர்.
முதலில் அர்ஜு னன் மஹாவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்தான்.
அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு
சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு
சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அவர்களது வனவாசம் முடியும் வரை
இங்கேயே இருந்ததாகவும் கூறுவர். வெகு காலத்திற்குப் பின்னால்
பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.
இது பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம். அம்பரீஷன் பரதேவதையை தரிசிக்க வேண்டி வியூக அவதாரத்தை வேண்டியதால், இங்கு எம்பெருமான் நான்கு வடிவம் கொண்டு எழுந்தருளி உள்ளதாக ஐதீகம். நடுவில் உள்ள மூர்த்தியை தர்மன் பிரதிஷ்டை செய்ததாகவும், மேற்கில் இருக்கும் மூர்த்தியை அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகவும் இடது பக்கத்தில் உள்ள மூர்த்தியை பீமன் பிரதிஷ்டை செய்ததாகவும் வலது பக்கம் உள்ள மூர்த்தியை நகுலன் பிரதிஷ்டை செய்ததாகவும் கூட சொல்வார்கள். அதே மூர்த்தியை சகாதேவன் பூஜை செய்ததாகவும் சொல்வார்கள். அம்பரிஷன் முக்தி அடைந்த ஸ்தலம்.
நெடுங்காலம் இந்த நான்கு மூர்த்திகளோடு இருந்த இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று அங்கேயே வெகு காலம் தங்கி, பின்னர் அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததை அடுத்து அவர் திரும்பி வரும் போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி
விஸ்வநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும் போது நான்கு மூர்த்திகளுக்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அதில் இருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியதாக சொல்வார்கள். காசி விஸ்வநாதரே இந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்கு இங்கே வந்து விட்டதாகவும், பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டு விட்டது.
ஆழ்வார் ஆசார்யார்கள்
குலசேகர ஆழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களா சாசனம், செய்யபட்ட பெருமாள். மூலவரின் திருநாமத்தை உய்ய வந்த பெருமாள் என்ற அர்தத்தில் உன்னைவிட்டால் எங்ஙனம் நான் உய்வேன் என்று குறிப்பிட்டது இந்த பெருமாளைத்தான். பத்து பாடல்களிலும் வித்துவக் கோட்டம்மானே, வித்துவக் கோட்டம்மானே என்று
இந்த பதிகத்தில், நாம் என் பரமாத்மாவை விடாது பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை பற்பல உதாரணங்களால் சிறப்புடன் விளக்குகிறார்.
வைணவ சம்பிரதாயத்தில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது. ஒன்று அநன்ய கதித்துவம், மற்றொன்று ஆகிஞ்சன்யம். அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால் எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது. இந்த இரண்டும் நமது முக்கிய கோட்பாடான சரணாகதியுடன் சேர்ந்தே இருப்பது. இந்த கருத்துக்களையே ஆழ்வார் இந்த பதிகத்தில் “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்ற சொற்தொடர்களோடு, நமக்கு மனதில் பதியவைக்க சொல்கிறார்.
குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி – ஐந்தாம் பதிகம்
5.1 தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை * விரைகுழுவு மலர்ப் பொழில் சூழ் விற்றுவக் கோட்டு அம்மானே * அரி சினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்று அவள் தன் * அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே
கோபத்தில், தாய் தனது குழந்தையை தள்ளி வைத்தாலும், குழந்தைக்கு வேறு எங்கும் செல்ல தெரியாமல், அது அழுது கொண்டே தன்னுடைய தாயினிடத்திலேயே சென்று, தாயின் கருணையினையே வேண்டுவது போல், தானும் திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சரண் அடைந்து அவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவனை விட்டு அகலாமல் இருப்பேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
நீ கொடுக்கும் துக்கத்தை நீயே தான் மாற்ற வேண்டும் என்கிறார். குருவி கட்டிய கூட்டினை பிரிக்க தெரியாத மனிதன், இப்படி எலும்பு எலும்புகளாலான உடம்புகளில் இருந்து துயரங்களை எப்படி விடுவிக்க முடியும், அவன் காலை கட்டி கொண்டால் தான் முடியும் என்கிறார். எம்பெருமானே வந்து உரையுமிடம் கொண்ட வாசனை இருப்பது போல உள்ள சர்வகந்த மலர்களை உடைய சோலை சூழ்ந்த வித்துவக்கோடு என்கிறார். ஈன்ற தாய் என்றதால், இது வளர்ப்பு தாய் இல்லை என்றும், பிராப்தியை சொல்லியது. பெறுகைக்கு நோன்பு நோற்பதும் பத்து மாதம் சுமப்பதும், பிரசவ வேதனையை அனுபவிப்பதும் இவை எல்லாம் இருப்பவளை சொல்லியது; தன்னை தவிர மற்று வேறு ஒன்றை அறியாத பிள்ளையை அருளுடைய நாம் கோபிக்கலாமோ என்று கோபத்தினால் தள்ளினாலும் வேறு எங்கும் போகாததிற்கு ஒரு ஐதீகம் சொல்லபடுகிறது; நம்பி திருவழுதி வளநாடு தாசரை, முதலி ஆண்டான் கோபித்து திண்ணையிலே விட்டதும், அடுத்த நாள் தாசர் ஏன் எங்கும் செல்லவில்லை என்று கேட்டதற்கு, ஒரு நாள் சோறு போட்டவனை, அவன் எவ்வளவு கோபித்தாலும், திட்டினாலும், அடித்தாலும், ஒரு நாயே வேறு எங்கும் செல்லாத போது, நான் எங்கே போவது என்கிறார்.
5.2 கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும், * கொண்டானை யல்லால் அறியாக் குலமகள் போல் * விண்டோய் மதிள் புடைசூழ் விற்றுவக் கோட்டம்மா நீ * கொண்டாளாயாகிலும் உன் குரை கழலே கூறுவனே
கணவன், மற்றவர்கள் குறை சொல்லும்படி நடந்துகொண்டாலும், நல்ல குணமுடைய மனைவி, தனது கணவனை விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வதுபோல், ஆழ்வாரும் திருவித்துவக்கோட்டு அம்மானை விட்டு பிரியாமல் இருக்கிறார்.
கண்டார் இகழ்வனவே காதலன் என்று சொல்வது, தானும் அவனும் மட்டும் அறிந்த ஊடல்களும் அதற்கு அவன்/அவள் செய்த பரிகாரங்களும், ஒரு அவதியாக தோன்றதாத நிலையில், இவர்களிடம் காரியம் பெற்றவர்களும், இவர்களை உதாசீனம் செய்தவர்களும் வெறுத்து இகழும்படி அவன் செய்தாலும், அவன் அவளிடம் இருக்கும் காதலை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளவன் என்கிறது.
விண்டோய் மதிள் புடைசூழ் விற்றுவக் கோட்டம்மா நீ என்று சொன்னது, ஸ்ரீசீதா பிராட்டி ஸ்வயம்வரத்திற்கு மிதிலையில் புற சோலையில் வீற்று இருந்தார் போல் இங்கே திருவித்துவகோட்டில் இருந்தார் என்கிறது.
கொண்டானை யல்லால் அறியாக் குலமகள் போல் என்று சொல்லியதில், கொண்டானை அல்லால் என்பது , அக்னிக்கு அந்தர்யாமியான சர்வேஸ்வரனை சாக்ஷியாக கொண்டவை அல்லது மற்று ஓருவனை அறியாதவளை போல, அவளது பதிவிரத குணம் சொல்லியது. குலமகளே என்று சொல்லியது.
நீ கொண்டாளாயாகிலும் என்று சொன்னது, உபகாரம் செய்பவன் என்றாலும், நீ வெளியே தலை காட்ட முடியாதபடி காரியங்கள் செய்தாலும் என்று சொல்வதாகும்
உன் குரை கழலே கூறுவனே என்று சொல்வது, உன் திருவடிகள் அல்லாது வேறு புகல் இடம் இல்லை என்று சொல்கிறார். உபகாரகனான நீ என்னை நிராகரித்தாலும் உன்னை விடமாட்டேன் என்பதை எனதாவியார் ஆனார் (திருவாய்மொழி, 2.3.4) என்பதை போல நீ செய்த உபகாரத்திற்கு தலை சாய்ந்து வணங்குபவன் என்கிறார்.
5.3 மீன் நோக்கும் நீள் வயல் சூழ் விற்றுவக்கோட்டு அம்மா என்* பால் நோக்கா யாகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன் * தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன் * கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே *
அரசாளும் மன்னன், பொதுவாக மக்களுக்கு செய்திடும் செய்கைகள் யாவும் தனி ஒரு பிரஜைக்கோ அல்லது எல்லாருக்குமோ துன்பம் தந்தாலும், குடிமக்கள் தொடர்ந்து அந்த மன்னனையே தங்களுக்கு நன்மை செய்வான் என்ற எதிர்பார்ப்போடு காத்து இருப்பதை போல், ஆழ்வாரும், வித்துவக்கோட்டு பெருமாள், ஆழ்வாரை கவனிக்காவிட்டாலும் எம்பெருமானை விடாமல் இருப்பேன் என்று இந்த மூன்றாம் பாட்டில் கூறுகிறார். மஸ்யம் என்று பெயர் வைத்த எல்லாவற்றையும் காப்பாற்றும் தேசம் என்று கூறுகிறார். கடலில் உள்ள மஸ்யம் கடல் வற்றினால் நம்மை காக்கும் தேசம் என்று இருக்கும் திருவித்துவகோடு என்கிறார்.
விற்றுவக்கோட்டு அம்மா என்று சொன்னது, பரம பதத்திலும் இருப்பவர்கள் கூட எம்பெருமானின் சீல குணத்தை அனுபவிக்க வரும் தேசம் ஆயிற்று என்கிறார். விற்றுவக்கோட்டு அம்மா என் பால் நோக்கா யாகிலும் என்று சொல்லும்போது, பரம பதத்தை ஒரு நாடாக நோக்கும் நீ, என்னை நோக்குவதற்காக இங்கே வந்தாலும், எனக்கு அருள் புரியாமல் இருந்தாலும், என்ற கருத்தை சொல்கிறது.
உன் பற்றல்லால் பற்றில்லேன் என்று சொன்னது, என்னுடைய பாதுகாப்பிற்கு பொறுப்பான உன்னை விட்டு எனக்கு பாதகமான மற்று ஒருவரை பற்றுவேனோ என்கிறார்.
5.4 வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் * மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் * மீளாத் துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா நீ * ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
நாம் ஒரு வியாதி என்று மருத்துவரிடம் செல்லும் போது, அவர் நம்மை கத்தி மற்றும் பிற உபகரணங்களை கொண்டு, கீறி, நம் உடம்புக்கு தற்காலிகமாக துன்பம் கொடுத்தாலும், நாம் அதை பொறுத்துக்கொண்டு, அந்த மருத்துவரிடம் தொடர்ந்து மரியாதையும், விருப்பதையும் கொண்டு உள்ளது போல், ஆழ்வார், வித்துவக்கோட்டு அம்மானிடம் சொல்வது என்ன வென்றால், அவர் தனக்கு தொடர்ந்து துன்பங்கள் தந்து கொண்டு இருந்தாலும், அவருடைய அருளையே எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் என்பதே. இது இந்த பதிகத்தின் மிக பிரசித்தி பெற்ற பாடலும், நான்காவது பாடலும் ஆகும்.
மீளாத் துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா நீ என்று சொன்னது, என்னுடைய பாதுகாப்பிற்கு என்று இங்கே வந்து இருக்கும் நீ, மீளா துயர் தரினும், நித்ய துயரம் கொடுத்ததாலும், பெற்ற தாய் தன்னுடைய குழந்தைக்கு கெட்டவைகளை செய்ய மாட்டாது போல் நீயும் எனக்கு என்கிறார்.
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே என்று சொன்னது, ஸ்வரூபம் விருத்தி அடைவதற்காக, இப்போது தோன்றுகின்ற துயரங்களை பார்க்காமல், உன்னுடைய கருணையை எதிர்பார்த்து இருப்பேன் என்கிறார்.
5.5 வெங்கண் திண் களிர் அடர்த்தாய் விற்றுவக்கோட்டு அம்மானே * எங்குப்போய் ஊய்வேன் உன் இணையடியே அடையலல்லால் * எங்கும் போய்க் கரைகாணா தெறி கடல் வாய் மீண்டேயும் * வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே *
சுற்றும் அலைகளை தூக்கி எறிந்து கொண்டு இருக்கிற கடலில் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து எங்கும் கரையை காண முடியாமல், தான் இருந்த இடமான கப்பலுக்கே, திரும்பி வரும் பெரிய பறவைப் போன்று, தானும் வித்துவக்கோட்டு அம்மானின் பாதங்களில் சரண் அடைவதாக ஆழ்வார் இந்த பதிகத்தின் ஐந்தாவது பாசுரத்தில் தெரிவிக்கின்றார். சம்சார சாகரத்தை (சுமுத்திரத்தை) கடப்பதற்கு எம்பெருமான் உகந்து அருளின தேசமான திருவித்துவக்கோடு திவ்ய தேசத்தை அல்லால் வேறு ஒரு உபாயமும் இல்லை என்றும், இந்த திவ்ய தேசத்தை தவிர மற்றதெல்லாம் இந்த பறவைக்கு சமுத்திரம் போல ஆகும் என்கிறார்.
வெவ்விய கண்களும் வலிமையான தோள்களையும் உடைய எம்பெருமானே, குவாலாயபீடம் என்ற யானையை கொன்றவனே அவதார காலத்தில் எதிரிகளை அழித்து தீர்த்த பிரசாதம் சாதித்து பரமபதம் அடைந்தும், அதன் பிறகு பிறந்தவர்கள் இழந்தோம் என்று வருத்தபடா வண்ணம் திருவித்துவக்கோட்டினில் எழுந்து அருளி இருப்பவனே, பரம்பதம் இருக்க, மோக்ஷம் அளிக்க அல்லது சாம்யம் என்ற மோக்ஷத்தை நிர்வகிக்க இங்கே எழுந்தருளி இருப்பவனே என்கிறார்.
பசியோடு பிராப்தம் உடையவன் வீட்டு வாசலில் நின்று சோறு சோறு என்று வேண்டிய போதும், அந்நியர்களாய் மற்றவர்களை உண்ண அழைப்பவர்கள் போல இங்கு இருக்கும் உன்னை விட்டு, பரமபதத்தில் இருப்பவனிடம் போல கேட்க போகிறேனா என்று கேட்கிறார். உஜ்ஜீவனத்திற்கு போகும் இடம் இல்லை; நாசத்தை தேடி போக நிறைய இடம் உண்டு; உகந்து அருளின நிலங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்வது நாசத்தை தேடி செல்வது போல ஆகும் என்கிறார்.
5.6 செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் * அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால் * வெந்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டு அம்மா உன் * அந்தமில் சீர்க்கு அல்லால் அகங்குழைய மாட்டேனே
இந்த பதிகத்தில் இது வரையில், நீ என்ன செய்தாலும் உன்னை விட்டு அகலமாட்டேன் என்று உரைத்த ஆழ்வார், இனி வேறு யார் எதைச்செய்தாலும், அவர்களிடம் செல்ல மாட்டேன் என்றும் சொல்வது போல் பாடல்களை அமைத்து உள்ளார். தாமரை, சூரியனை பாரத்தால் மட்டுமே மலரும், தீயோ அல்லது மற்ற எந்த விதமான வெப்பத்தைத் தருகின்ற உபாயத்திலும் மலராது, அது போல் உன்னுடைய உயர்ந்த குணங்களுக்கு மட்டுமே நெஞ்சு உருகுவேனே தவிர, மற்றவைகளுக்கு நெஞ்சு உருக மாட்டேன் என்று வித்துவக்கோட்டு அம்மானிடம் தெரிவிக்கின்றார். தாமரைக்கு வெகு தூரத்தில் சூரியன் இருந்தாலும், அக்னியை வெகு அருகே கொண்டு வந்தாலும் அக்னியை சாதனமாக கொண்டு தாமரை அலராது என்பது போல பாவங்களை போக்கி மோக்ஷத்தை கொடுக்க கூடிய எம்பெருமான் துயர் கொடுத்தாலும் கல்யாண குண நலன்களை கொண்ட எம்பெருமானை தவிர வேறு எங்கும் தன் நெஞ்சு செல்லாது என்கிறார்.
5.7 எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் * மைத்தெழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்றவைப் போல் * மெய்த் துயர் வீட்டா விடினும் விற்றுவக்கோட்டு * அம்மா என் சித்தம் மிகவும் உன் பாலே வைப்பன் அடியேனே
மேகம், தொடர்ந்து பலகாலம் மழையை தராவிட்டாலும், பசுமையான பயிர்கள், தனக்கு வேண்டிய நீருக்காக, அந்த மேகத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்குமே தவிர வேறொன்றையும் எதிர்பார்க்காது இருப்பது போல், ஆழ்வாரும், பரமாத்மாவாகிய வித்துவக்கோட்டு அம்மான், தன்னுடைய துன்பங்களை போக்காமல் விட்டாலும், தான் தொடர்ந்து அந்த பெருமானையே வேண்டி இருப்பேன் என்று கூறுகிறார். பாவத்தை போக்கி சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க வந்திருகின்ற நீ, அது செய்யவில்லை என்றாலும், என் பாதுகாப்பில் நெகிழ்ந்தாய் என்று உன்னிடம் தோற்று உன் பக்கம் நெஞ்சு நிலையாக இருக்கிறது என்று சொல்கிறார்.
5.8 தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடுகடலே * புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் * மிக்கிலங்கு முகில் நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா உன் * புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே *
கரை புரண்டு ஓடுகின்ற நதியானது, கண்டவிடமெல்லாம் ஓடி, கடைசியில் அது ஆழமான கடலிடத்தில் சென்று அடையுமே தவிர வேறு எங்கும் சென்று முடியாது என்பது போல், தானும் வித்துவக்கோட்டு அம்மானின் திவ்யகுண நலன்களில் மூழ்கி இருப்பேனே தவிர வேறுஎங்கும் தனது கவனத்தை திருப்ப மாட்டேன் என்று இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் தெரிவிக்கின்றார். இந்த நதிகள் புகுந்தால் தான் கடல் நிறைந்து காணபடுகிறது என்றோ, இவை புகாவிட்டால் கடல் குறைந்துவிடும் என்றோ கிடையாது. இந்த நதிகளுக்கு வேறு வழியில்லாமல் கடலில் புகுகின்றன, அது போல, உன் கல்யாண குணங்களை தவிர வேறு எங்கும் புக எங்களுக்கு வழி இல்லை என்கிறார்.
5.9 நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் * தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால் * மின்னையே சேர் திகிரி விற்றுவக் கோட்டம்மானே * நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
இந்த பாடலில் வரும் உதாரணம் சிறிது கடினமானது. உலகத்தில் உள்ள செல்வங்களை விரும்பாமல். பெருமானையே வேண்டி நிற்பவனை செல்வம் தானாக வந்தடையும் என்பது உலக நியதி. எவனொருவன் ஆண்டவனிடம் அன்பு கொண்டு அவனை மட்டுமே விரும்பி, இந்த உலக ஐஸ்வரியம் மற்றும் பிற பொருள்களை விரும்பாதவனுக்கு, பகவான் எப்படி தொடர்ந்து அன்பு காட்டி அவனுக்கு மேலும் மேலும் எல்லா செல்வங்களும் தருகிறார் என்பது உதாரணத்தின் ஒரு பகுதி. இது, ஆழ்வார் தன்னுடைய வாழ்க்கையே சொல்வது போல் உள்ளது. சிறந்த வீரரும், மன்னருமாய் விளங்கும் ஆழ்வார், இந்த உலக செல்வம் வேண்டாம், ராஜ்ஜியம் வேண்டாம் என்றும் மோட்சம் தான் வேண்டும் என்ற போதும், அவருடைய ராஜ்ஜியம் சேர நாட்டில் இருந்து மேலும் மேலும் சோழ, பாண்டிய நாடுகளாக விரிவு அடைந்து கொண்டே இருந்தது.
இறைவனையே வேண்டி செல்வத்தை வேண்டாதிருப்பவருக்கு செல்வம் தானாக வந்து சேரும் என்கிற கருத்து சிந்திக்கத்தக்கது. சில பெரியவர்கள், சென்ற வாக்கியத்தின் செல்வம் என்பது, மோட்சம் என்று பொருள் சொல்வதுண்டு. ‘அண்ட சராசரங்களை வைகுந்தத்திற்கு ஏற்றிய” ஸ்ரீ ராமர், அனுமனுக்கு மோட்ச பலன் கொடுத்தும், அனுமன் அதனை தவிர்த்து, இந்த உலகத்தில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமர் பூஜை செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் இருக்கவே ஆசைப்பட்டார். அதே போல், தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும் தம் பாசுரங்களில் திருவரங்கத்தில் இருப்பதையே வேண்டுகின்றனர். “அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதையும், “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று திருப்பாணாழ்வார் பாடியதையும் கருத்தில் கொண்டால், குலசேகர அழுவார் சொன்ன செல்வம் என்பது மோட்சத்தையே குறிக்கும். ஏனென்றால், அனுமனும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், மோட்சம் வேண்டாம் என்றாலும் அவர்களுக்கு பரமாத்மா மோட்சத்தைக் கொடுத்து இருக்க வேண்டும். அதே போல், பரமாத்மாவான வித்துவக்கோட்டு அம்மான், ஆழ்வாரை கவனிக்காமல், ஆழ்வாருக்கு அருளாமல் இருந்தாலும், ஆழ்வார் மீண்டும் மீண்டும் வித்துவக்கோட்டு அம்மானிடமே செல்வேன் என்று உறுதியாக சொல்கிறார்.
5.10 விற்றுவக்கோட்டம்மா நீ வேண்டாயே யாயிடினும் * மற்றாரும் பற்றில்லேன் என்று அவனைத் தாள் நயந்த * கொற்ற வேல் தானைக் குலசேகரன் சொன்ன * நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
இந்தப் பத்துப் பாடல்களிலும் இதே தொனியில் எந்தத் துயரம் தந்தாலும் உன்னை விட மாட்டேன் என்பது பல வித படிமங்களில் விரிகிறது. மேலே சொன்ன பாசுரங்களை படிப்பவர்களுக்கான பலனை இறுதி பாசுரத்தில் வெளியிட்டு, இந்த பதிகத்தினை ஆழ்வார் முடிக்கிறார். வித்துவக்கோட்டு அம்மான் ஆழ்வாரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் தான் வேறு யாரையும் சரண் அடைய மாட்டேன் என்றும், அந்த பெருமானின் திருவடிகளிலேயே பக்தி கொண்டு காத்து இருப்பேன் என்றும் சொல்லும் ஆழ்வார் இந்த பதிகத்தைப் படிப்பவர்கள் எத்தனை கொடிய பாவங்கள் செய்து இருந்தாலும் நரகத்தை அடைய மாட்டார்கள் என்றும் இந்த சம்சார வாழ்க்கைக்கு திரும்ப வர மாட்டார்கள் என்றும் சொல்லி முடிக்கிறார்.
மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.