079 திருமூழிக்களம் / Thirumoozhikalam

ஸ்ரீ மதுரவேணி நாச்சியார் ஸமேத ஸ்ரீ சுக்தி நாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

கேரளாவில் உள்ள ஆலவாயிலிருந்து இத்தலத்திற்கு எண்ணற்ற பேருந்துகள் செல்கின்றன. எர்ணாகுளத்திலிருந்தும் அங்கமாலி ரயில் நிலையத்திலில் இருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதியுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த இத்தலம் தற்போது ஒரு சிறிய நகருக்கு ஓப்பாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மிக அமைதியான சூழலில் இயற்கை எழிலோடு இணைந்து நிற்கிறது. இத்தலம் பரதனும் லட்சுமணனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலம். எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது

பாரதப் புழா ஆற்றங்கரையில் எழில் தரும் சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்ரமாக விளங்கி இருக்கிறது. ஸ்ரீஸுக்தி இங்கு அருளப்பட்டதால் எண்ணற்ற நூல்கள் இங்கு ஆராயப்பட்டு கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் ஒரு போது சிறப்புற்று இருந்துள்ளது. 

ராமாயணத்தின் புராணக்கதையுடன் இந்த கோவில் தொடர்புடையது, இங்கு ராமரின் சகோதரர் லக்ஷ்மணன் ராமனை அவர்களின் மற்ற சகோதரர் பரதனுடன் வழிபட்டார். இங்கு அதிபதி லட்சுமண ரூபம் எடுத்து வழிபட்டார். நாலாம்பலம் (நான்கு அம்பலம்) யாத்திரையின் ஒரு பகுதியாக இருக்கும் நான்கு கோவில்களில் இதுவும் ஒன்று – திரிபிரயாரில் ராமர், இரிஞ்சாலக்குடாவில் பரதம், மூழிக்குளத்தில் லக்ஷ்மணன் மற்றும் பாயம்மாள் சத்ருக்னன் என்பவை மற்ற மூன்று அம்பலங்கள் / கோவில்கள்.

இங்கு லட்சுமணப் பெருமாளையே (ஸ்ரீராமானுஜர்) மூலவராக எண்ணி வழிபடும் வழக்கம் பிற்காலத்தே ஏற்பட்டது. அதாவது இலட்சுமணைப் பெருமாளின் திருப்பணிக்கும் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபட தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு. இதனால் இந்த எம்பெருமானை லெட்சுமண பெருமாள் என்ற திருநாமத்துடன் வழிபடுகிறார்கள்.

இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி, தாயார் மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம், பூர்ண நதி ஆகியன. விமானம்: சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. 

வெவ்வேறு காலங்களில் ஆளும் பேரரசுகளின் பங்களிப்புகளுடன் கோயில்கள், கேரள பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இந்த கோவில் கிரானைட் சுவர்களுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும். மற்றும் கேரள அரசின் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 

கேரளத்தில் இராமயணத்திற்கும் பரதனுக்கும் சிறந்த மரியாதையும் வரலாறும் சொல்லபடுகிறது. இந்த கோவிலில், எம்பெருமானின் திவ்ய தரிசனமும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே உள்ள பிரிவுகளும் இந்த ஸ்தலத்தை தரிசித்தபின் அரை நொடியில் தீர்ந்து விடும் என்பதற்கு உதாரணமாக திருமூழிகளம் விளங்குகிறது.

சித்திரை மாதம் ஸ்ரவண / திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு முந்தைய பத்து நாட்கள் கொடியேற்றம் மற்றும் திருவிழா.  சித்திரை தவிர மற்ற மாதங்களில் திருவோண நாளில் சிறப்பு வழிபாடு கொண்டாட்டம்.  ஆடி மாதம் முழுவதும் கேரளா முழுவதும் இராமயண மாதம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். 

எம்பெருமான் நான்கு திருக்கரங்களுடன், மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், மற்றும் கீழ் இரண்டு திருக்கரங்களில் கதை, தாமரை மலர் இடுப்புடன் வைத்து காட்சி அளிக்கிறார்.  சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த திருத்தலத்தில் ஸ்ரவண பூஜை செய்வது வழக்கம். இது ஒரு பிரபலமான பூஜை என்பதால், ஒரு வருடம் வரை கூட காத்து இருக்க வேண்டி இருக்கலாம். 

வேத பாடங்களை கற்க, இறை பக்தி குறையாமல் இருக்க, செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட, பிளவுபட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேர திருமூழிக்கள பெருமாள் அருள்புரிவார்.

இந்த எம்பெருமானுக்கு சந்தன காப்பு சாத்துவதும் இன்னொரு வழக்கம்.

இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் ஆழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம், மென்மை; மகாத்மாக்களை பிரிந்தால் தன்னால் தாங்கவே முடியாது என்று கூறும் குணம் இது. மார்த்தவம் என்று கூறுவார்கள்.

ஹரித மஹரிஷி என்பவர் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து இவ்விடத்தில் தவம் இருந்தார். இவரின் தவத்திற்கு உகந்து இங்கு எழுந்தருளிய எம்பெருமான், உமது விருப்பம் என்ன வென்று கேட்க, எம்பெருமானை யாவரும் இலகுவில் அடையக் கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க அதற்கு, அவரவர்கள் கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் தன்னை அடைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸு க்தியை’ திரு மொழியை இவ்விடத்தில் அந்த முனிவர்க்கு வழங்கினார். 

எனவே இதற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக் களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் பொருள் காண இயலா வண்ணம் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே நெடுங்காலமாய் பிரசித்தமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது. 

இராமன் வனவாசம் செல்லும் போது சித்திர கூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போக பரதன் வந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல எத்தணித்தான். இந்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து, இலக்குவனை ஆரத்தழுவி, இன் சொல்லால் உபசரித்ததாகவும், இவ்விதம் இன்சொல் விளைந்த ஸ்தலமாதலால் திருமொழிக்களம் ஆயிற்று என்றும் கூறுவர். இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலமாகும் இது. இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். 

கிருஷ்ண பகவான் துவாரகையில் இராமர், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோரின் விக்ரகங்கள் வைத்து பூஜை செய்து வந்தார். ஒரு சமயம் அவை கடலில் மூழ்கியது. பின்னர் வாக்கேல் கைமல் என்ற முனிவரின் கையில் கிடைத்ததாகவும் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், இவற்றை பாரத புழா ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்யவும் கூறினார். அதன்படி, திருச்சூர் மாவட்டம் திருபறையார் ஸ்ரீ ராமன் கோவிலாகவும், ஈரிஞ்சால குடாவில் பரதன் கோவிலாகவும், பாயமல்லில் சத்ருக்னன் கோவிலாகவும் எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணன் கோவிலாகவும் அமைந்ததாக சொல்வார்கள்.

நம்மாழ்வார் பதினொரு பாடல்களும், திருமங்கை ஆழ்வார் மூன்று பாடல்களும் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார்கள். அவற்றை சிறிது காண்போம்.

நம்மாழ்வார் எம்பெருமானுடன் சேர்ந்து இருந்தால் வாழ்வு, இல்லை என்றால் முடிதல் என்ற நிலையை இந்த பதிகத்தில் அருளி செய்கிறார். எம்பெருமானை பிரிந்த ஒருத்தி, தன்னுடைய ஆற்றாமையின் காரணமாக, தன்னுடைய வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள பறவையிடம் தூது செல்ல சொல்லி உணர்த்துகிறாள். தூது போவோர் வருந்தி அழைக்க வேண்டாதபடி, திருமூழிக்களத்தில் நின்று அருளுபவன் என்கிறாள்; அவன் தனக்கு நல்லாரை விடமாட்டாதவன் ஆகையால், நம் நிலை அறியாது இவ்வளவு காலம் இருந்தான் என்றும், அருளை உடையவன் என்றும், உம்மை பிரிந்தோர் தரிப்பரோ என்று அவனிடம் சொல்ல வேண்டும் என்கிறாள். இப்படி ஒரு பெண் பேச்சாக ஆழ்வார் அருளி செய்கிறார்.

ஆழ்வார் இதற்கு முன் மூன்று முறை தூது விட்டு இருக்கிறார். அவைகளுக்கும் இந்த தூதுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே சொல்கிறார்.

அஞ்சிறைய மட நாராய்’ (1.4) என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தன் பக்கம் உள்ள குற்றங்களை சொல்லி, குற்றங்களை பொறுக்கும் அவனுடைய பொறை உடமையை சொல்கிறார். ‘வைகல் பூங்கழிவாய் ‘ (6.1) என்ற திருவாய்மொழியில் துன்புறுவர்களை காப்பாற்றுதலை தன் கடமையாக கொண்டு இருப்பதை சொல்கிறார். ‘பொன்னுலகு ஆளீரோ’ (6.8) என்ற திருவாய்மொழியில், அடியவர்களுடன் ஒன்று பட்ட இன்பத்தை உடையவன் என்றும், தனக்கு நல்லாரை இருப்பவர்களை விட மாட்டான் என்ற கருத்து தோன்றும்படியும் சொல்கிறார்.

இந்த பதிகத்தில்,(9.7), ‘இது என் வடிவழகு, இவை என் குணம், என்று ஆன பின்பு, பிரிந்தார்க்கு பிழைத்திருக்க முடியுமோ என்று அவன் வடிவழகும் குணங்களையும் பற்றாக கொண்டு தூது விடுகிறாள்.

பறவைகளைத் தூது விடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார்கள் என்பதை இந்த முதல் பாட்டில் தெளிவாக ஆழ்வார் கூறுகிறார். எம்முடைய கடற்கரையின் சோலையின் உள்ளே இருக்கிற உப்பங்கழியில் இரையை தேடி கொண்டு, இங்கே இனிதாக தங்கி இருக்கின்ற சிவந்த கால்களையும், மடப்பத்தையும் உடைய நாரையே, திருமூழிக்களம் என்ற திவ்ய தேசத்தில், எழுந்து அருளி இருக்கின்ற, தேன் பொருந்திய அழகிய திருத்துழாயை முடியிலே தரித்த குட கூத்து ஆடிய என் கண்ணனிடத்தில் என்னுடைய தூதராக சென்று, அவன் அழகாலும் குணங்களாலும் என்னை தோல்வி அடைய செய்தான் என்ற என் நிலையை அவனுக்கு சொல்லி, திரும்பி வந்து, உன் உறவினர்களோடு, உன்னுடைய கால்களையும் என் தலையின் மேல் சேர்க்க வேண்டும் என்கிறாள்.

எம்பெருமானுடைய திருவடியின் கீழ்த் தம்மைச் சேர்ப்பிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த ஆசாரியர்களையே தூதர்களாகக் கொண்டதாய் நன்கு காட்டியருளினார்.  அப்படிப்பட்ட ஆசாரியர்கள் தம் தலைமீது அவரின் திருவடிகளை வைக்கப் பெறுவதே பெறாப்பேறு என்று முடிப்பது, இத்தூது பதிகத்திலே உயிராக வைத்து அருளிச் செய்கிறார். எம்பெருமானுக்கு தன்னை உறுப்பாக ஆக்கியவனுக்கு(ஆசாரியனுக்கு) தன்னுடைய அத்தனையும் உரிமையாக்குவது என்பதை ‘எங்கானல்’ என்பதன் மூலம் தெரியப் படுத்துகிறார். ஆத்மாவை அவன் திருவடியில் இடுவதற்கும் இதுவே ஒருபடி ஆகும். கடற்கரை சோலை என்று சொன்னது, நுழைவதற்கு அனுமதி வேண்டாதபடி இருப்பதை சொல்கிறது. திருமூழிக்களத்தில் உறைவது என்று சொன்னது, தூது செல்வார்க்கு அணுக்கமாக உள்ளதால், பரமபதத்தை காட்டிலும் உள்ள ஏற்றத்தை சொல்கிறது. எம்பெருமானின் ஒப்பனையிலும் செயலிலும் தோற்று, அவனை அடைந்தால் உய்வு, இல்லை என்றால் முடிதல் ஆகிறது என்ற தன் நிலையை தூது சொல்லும் தொழிலை செய் என்று சொல்லுகிறாள். இப்படி உதவி செய்கின்ற உங்கள் கால்களை தன் தலை மேலே வைத்து கொள்வது என்கிறாள்.

ஸ்வாபதேசத்தில் ஆசாரியர்களைத் தூது விடுவதாகச் சொல்லுகையாலே, எம்பெருமானார் திருமாளிகையிலேயே வந்திருந்து ப்ரவசநம் செய்தருளின பெரிய நம்பியைப் போன்ற ஆசாரியர்களை இங்கு சொல்வதாக கொள்ளலாம்.  செங்கால மடநாராய்  என்று கால்களை விசேஷித்துச் சொல்லுகையாலே ஆசாரியன் திருவடிகளே தஞ்சம் என்கிற அர்த்தமும் காட்டப்படுகிறது.

உறவினர்களோடு பிரியாமல் நீரும், உம்முடைய சேவலுமாய் பொருந்திய காதலை உடைய குருகு கூட்டங்களே, அழகிய திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருக்கின்ற தலைவர், தம்மாலும் இழிக்கப்பட்டு, எம் உறவினர்களாலும் பழிக்கப்பட்டு இங்கு இருப்பதால் என்ன பயன் ? தம் பரிஜனத்தோடு திருமூழிகளத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு நாங்கள் தகுந்தவர்கள் ஆக மாட்டாமோ என்று கேளுங்கள் என்கிறார்.

சேவல், நினைவு அறிந்து கலக்கும், அதே போல எம்பெருமானும் அவனுடைய கருத்து அறிந்து கலப்பதாக ஆழ்வார் சொல்கிறார்.

திருமூழிக்களத்திலே தாமும் தாம் உகந்த அடியார்களுமாக எழுந்தருளி இருக்கும் இருப்பிலே, ஆழ்வாரும் வந்து அடிமை செய்ய வேண்டுமே என்றும், அந்த கோஷ்டியிலே சேர்ந்து இருக்க, தான் ஏற்றவன் இல்லையோ என்றும் கேட்கச் சொல்லி, சில குருகினங்களை தூது செல்ல சொல்லுகிறாள். மேலே எம்பெருமானைச் சொல்லும் போது, “தமரோடு அங்குறைவார்க்கு” என்று சொல்வது, அவன் அடியவர்களோடு கூடி வாழுகிறப் போலே, தானும் எம்பெருமானோடு கூடி வாழும்படி செய்யவேண்டாவோ என்ற கருத்து தெரியும்படி சொல்கிறார்.

திருமூழிக்களத்து எம்பெருமான் ஒருகால் ஆழ்வாரை கைவிட்டார் என்றால், அதுவே காரணமாக கொண்டு தன்னுடைய உறவினர்களும் கைவிடுவார்கள் என்கிறார். இப்படி எம்பெருமானுக்கும், உறவினர்களுக்கும் ஆகாதே, தான் இருக்கும் இருப்பு, பலன் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்று சொல்கிறார்.  

எம்பெருமான் என்னை ஏற்றுக்கொள்ள வில்லை என்றாலும், திருமூழிக்களத்திலே அவன் உகந்த பாகவதர்களோடு கூடி வாழ்ந்த இனிமையினால் ஆழ்வாரை மறந்து இருக்கிறான் என்று அவன் கருதினாலும், அந்த அடியவர்களோடு, தானும் ஒருவனாகத் திருவுள்ளம் பற்ற ப்ராப்தி இல்லையோ என்று கேளுங்கள் என்கிறார்.

விசாலமான தண்ணீரில் இரையை தேடுகின்ற கொக்கு கூட்டங்களே, குருகு இனங்களே, குளிர்ந்த திருமூழிகளத்தில் எழுந்து அருளி இருக்கின்ற, செந்தாமரை போன்ற திருக்கண்களும், திருக்கைகளும், திருவடிகளையும் சிவந்து கனிந்த திருவாயினையும் அந்த தாமரையின் இலை போன்ற திருமேனியை உடைய ஸ்வாமிகளை கண்டு இந்த அழகினை அனுபவிப்பதற்கு நாங்கள் தக்கவர்கள் இல்லையா என்று கேளுங்கள் என்கிறார்.

இந்த பாடலில், இரண்டில் ஒன்று கேட்டு சொல்லுங்கள் என்கிறார். அவன் இன்னும், இவள் வேண்டும் என்று இருக்கிறானா, அல்லது இவள் வேண்டாம் என்று இருக்கிறானா என்பதை அறுதியிட்டு சொல்லும்படி ஆழ்வார் கேட்கிறார். இவள் வேண்டும் என்று அவன் இருந்தால், உயிரை வருத்தியாவது பிழைத்து இருப்பாள் என்றும், இவள் வேண்டாம் என்றால் நாம் ஏதாவது ஒன்றுக்கு துணிவோம் என்றும் ஆழ்வார் சொல்கிறார். உபவாசத்தால் இளைத்து இருக்கும் இவளை, மிகுதியாக தண்ணீர் நிறைந்து இருக்கும் பொய்கையிலே, இரை தேடும் அளவுக்கு இருக்கின்ற தன்மையை சொல்கிறார்.

விரகதாபத்தால் தவிக்கின்ற தனக்கு, சிரமத்தை போக்கக்கூடியதான அந்த திருமூழிக் களத்தை அடைவது அரிது ஆகிறது என்கிறார். செக்கமலத்து அலர் போலும் கண், கை, கால், செம் கனி வாய் என்று சொல்லி,

  • முதல் தொடர்பு கொள்ளும் கண்,
  • அந்த நோக்குக்கு வீழ்ந்தாராய் அணைக்கும் கை,
  • அந்த இன்பம் பொங்கி எழுந்து கீழே விழுந்து வணங்கும் திருவடிகள்,
  • கீழே விழுந்தாரை நல் வார்த்தை சொல்ல ஆரம்பிக்கும் முன் வரும் புன்முறுவல்
  • அந்த கமலத்து இலை போன்ற திருமேனி என்று ஆழ்வார் சொல்கிறார்.

இப்படி அவன் புருஷர்களில் உத்தமன் என்றால், இவள் பெண்களுக்குள் உயர்ந்தவள் அன்றோ என்று சொல்லி, இது தகுமோ என்கிறாள்.

அழகிய மேகங்களே, திருமூழிக்களம் என்ற வளப்பமான நகரில் எழுந்து அருளி இருக்கின்ற, வடிவழகினை உடைய ஸ்வாமிகள் பக்கம், தீ வினையேன் ஆகிய நான் விடுகின்ற தூதாக சென்று, உம்முடைய திருமேனியை அவளுக்கு தந்து அருள்வீர் என்று சொன்னால், தன் திருமேனியின் ஒளியை போன்று இருக்கின்ற உங்கள் உடலின் ஒளியை போக்கி உங்களையும் தெளிந்த ஆகாயத்தில் இருந்து நீக்கி தண்டிப்பானோ என்று சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.  எம்பெருமானுக்குத் திருமேனி அடிகள் என்ற ஒரு திருநாமம் சொல்கிறாள். வடிவழகையே நிரூபகமாகக் கொண்ட ஸர்வஸ்வாமி என்று பொருள்.  ஸ்வரூப குண சேஷ்டிதங்களினால் ஜகத்தைத் தோற்கக்கடிப்பது ஒரு அர்த்தம்; வடிவழகாலே உலகம் முழுவதும் தோற்கடித்து அடிமை கொள்வது அல்லது அனைவர்க்கும் தலைவர் என்று தோற்றுவிப்பது, இன்னொரு அர்த்தம்.

சுழல் மன்னர் சூழக்கதிர்போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சூழலைப் பெரிதுடைத்துச் சோதனன் என்று பெரியாழ்வார், கண்ணன் பாண்டவ தூதனாய், கௌரவ சபைக்கு எழுந்து அருளும் போது, துரியோதனன் உறுதி தடுமாறி, மரியாதை செய்ததை இங்கே குறிப்பிட்டு, பரமாத்மாவின் சோதி, பகைவர்க்கும் மனக் கவர்ச்சியாக அல்லவோ எம்பெருமானின் வடிவழகு இருப்பது என்கிறார்.

செழுநகர் என்று சொன்னது, பரமபதத்தை விட ஏற்றம் உள்ள தேசம் என்கிறார்.

எம்பெருமானுடைய திருமேனியை, ஸர்வ ஸாதாரணமானது என்று எண்ணி, அப்படிப்பட்ட திருமேனியை இழந்து, மேகங்களாகிய உங்கள் காலிலே விழ வேண்டும் படியான பாபத்தைப் பண்ணியதால் தீவினையேன் என்கிறாள்; பாகவதர்களின் திருவடிகளில் விழுவது நல்வினை ஆகும். பிறர்க்கு(பக்தர்களுக்காகவே) உரிய திருமேனியை அதனை விரும்புவார்களுக்கு தந்து அருளாமல் இருக்கலாமா என்கிறாள். காதலிக்கு ஸ்வரூபம், குணம் முதலியவற்றை விட, வடிவழகே விருப்பம் அன்றோ என்கிறாள்;

இப்படி வாக்கால் தூது செய்கின்ற உங்களுக்கு, முன்பு இல்லாதவற்றையும் கொடுத்து, தொன்று தொட்டு இருக்கின்றவை போக்கி, உங்களை ஆகாயத்தில் இருந்து போக்கி தண்டிப்பானோ என்கிறார். மேலான ஒப்புமையை அடைகிறான் என்ற பொருளும் கொள்ளலாம். ஆகாயத்தில் மட்டும் இருப்பதும் அன்றி, பரம ஆகாயத்தையும் தருவானோ என்ற பொருளில் வரும். உங்களுடைய தூது வார்த்தைகளால் உங்களுக்கும் எனக்கும் பயன் உண்டு என்று முடிப்பதாக கொள்ளலாம்.

தெளிவான ஆகாயத்தில் விரைவாக ஓடி, தீ வளைத்தார் போல கொல்லி வட்டம் போல், மின்னலை தேடி தோற்றுவித்து விளங்குகின்ற ஒளியோடு கூடிய மேகங்களே, தெளி விசும்பாகிய பரமபதத்தை போன்று, தீ வினையேன் ஆகிய என்னுடைய மனத்தில் எழுந்து அருளி இருக்கின்ற துளித்து ஒழுகின்ற தேன் பொருந்திய மயிர்முடி உடையவராகிய திருமூழிக்களத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஒளி பிழம்பான எம்பெருமானுக்கு என் தூது வார்த்தையை சொல்லுங்கள் என்கிறார்.

முகில்காள், குழல் அழகராகிய எம்பெருமானுக்கு என் தூது வார்த்தை சொல்லுங்கள் என்கிறார். சென்ற பாசுரத்தில் இருந்த ‘திருமேனி ஒளி அகற்றி’ போன்ற வார்த்தைகள் மேகங்களுக்கு அச்சத்தை தருவதாக இருந்ததால், அவை, தங்கள் வார்த்தையை எம்பெருமான் கேட்பானோ என்று அஞ்சி இருந்ததால் அதற்கு விடை இந்த பாசுரத்தில் சொல்கிறார். பரமபதத்தில் செய்கின்ற ஆதரத்தை (அருளை) என் பக்கம் செய்தவன் உங்கள் சொல்லை கேட்பான் என்கிறார்.

விசும்பு என்றால் பற்றுக்கோடு இல்லாதன என்று பொருள். குற்றம் இல்லாதவனாய், பற்றுக்கோடு இல்லாத ஆகாயத்தில், பூமியில் சஞ்சரிப்பது போன்று கடு நடையில் ஓடி என்று சொன்னது, இந்த வேகம் எல்லாம் தன் காரியத்திற்காக என்று இருக்கிறாள்.

அவன் வடிவுக்கு போலியாக அல்லவோ உள்ளது உங்கள் வடிவு என்கிறாள். மனதில் பிரகாசமாக இருப்பவன் நேரில் காண முடியாதவனாக இருக்கும்படி பாவத்தை செய்தவள் நான் என்கிறாள். மிகப் பெரிய காதலை உடையவராய் தானே வருவார் என்று சொல்லி, இப்போது தூது விடும் நிலையில் இருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்கிறாள்.

தூய சொற்களை பேசக்கூடிய வாயினை உடைய வண்டு கூட்டங்களே, ஒலித்துக் கொண்டு மலர்களில் உள்ள தேனை நுகர்வதற்கு தக்கவாறு சோலைகளால் சூழப்பட்ட திருமூழிக்களம் என்ற திவ்ய தேசத்தில், எழுந்து அருளி இருக்கின்ற, பெரிய பிராட்டியாரை தன்னுடைய திருமார்பில் வைத்து கொண்டு இருக்கின்ற எம்பெருமானிடத்தில் சென்று தூது வார்த்தைகளை சொல்வீர்கள் என்றால், சுடர் வளையல்கள் பற்றியும், கலையை பற்றியும் சொல்லுங்கள் என்கிறார்.

உங்கள் வார்த்தைகள் விலை செல்லும்படி பிராட்டி சன்னதியில் சொல்லுங்கள் என்கிறார். அவன் விரும்பாவிட்டாலும், உங்கள் பேச்சு இனிமையாக இருக்க வேண்டும் என்கிறார். இராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம் 5.18)ல் சுக்ரீவன் சொன்னது போல வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும் என்கிறார். சுக்ரீவன் இராமனிடத்தில், “நீங்கள் எனக்கு அன்பான நண்பர். உன் துக்கம் என் துக்கம், உன் இன்பம் என் இன்பம். நாம் ஒன்றுதான்’ என்று ராமனிடம் சுக்ரீவன் கூற, அவன் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்ததது போல பேச வேண்டும் என்கிறார்.

“த்வஂ வயஸ்யோஸி மே ஹரித்யோ ஹ்யேகஂ துஃகஂ ஸுகஂ ச நௌ৷৷ * ஸுக்ரீவோ ராகவஂ வாக்யமித்யுவாச ப்ரஹரிஷ்டவத். – (கிஷ்கிந்தா 5.18)

அதே போல, யுத்த காண்டம், (16-50) ல் கூறியது போல, ‘வளமான கலாச்சாரம் கொண்ட ஹனுமான் இந்த மென்மையான, இனிமையான மற்றும் அர்த்தமுள்ள வார்த்தைகளை சுருக்கமாக கூறுவதும் சொல்லப் படுகிறது.

அத ஸம்ஸ்கார ஸம்பந்நோஹநுமாந் ஸசிவோத்தமः । * உவாசவசநம்ஶ் லக்ஷ்ண மர்தவந் மதுரம்லகு ।யுத்த காண்டம் 17.50।।

பூக்களில் இருக்கும் மதுவை குடிக்கும் வண்டுகள் போல அன்றி, பூக்கள் மலரும் போதே குடிக்கும் வண்டுகள் என்கிறார். ததிமுகன் போன்றவர் காவலில் இல்லை, ஆகவே குடிக்கலாம், அப்படி குடித்தால் நித்யசூரிகள் இருக்கும் இடம் சென்று அவர்களுடன் தேன் உண்ணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறார். தூது வார்த்தை சொல்லும்போது, என்னுடைய வளையும், களையும் சீர் கேடு அடைந்ததை சொல்லுங்கள் என்கிறார். அப்படி அறிவித்தால் அவன் வருதல் தப்பாது என்கிறாள்.

படர்ந்த சோலைகளில் தங்கி இருக்கின்ற குருகினங்காள், ஒளி வலையலையும் கலையும் கொண்டு, என்னை விட்டு நீங்கிய தாமரை மலர் போன்ற திருகண்களை உடைய, பரந்த புகழை உடையவனும், திருமூழிகளத்தில் எழுந்து அருளி இருக்கின்றவனும், ஒளி பொருந்திய பவளம் போன்ற திரு வாயினை உடையவனும் ஆன எம்பெருமானை கண்டு, ஒப்பற்றதான ஒரு தூய வார்த்தையை ஒரு நாள் அவனிடம் சொல்லுங்கள் என்கிறார்.

சில குருகு இனங்களை அழைத்து, ‘சிலரோடு கலந்து, அவர்களை துறந்து அதுவே புகழாக இருக்குமோ” என்று கேளுங்கள் என்கிறார். தனக்கு பயன் உள்ள பொருட்களை (வளை மற்றும் கலை ) எடுத்து கொண்டு, என்னை விட்டு சென்றான் என்கிறாள். கைக்கு அடங்கினதையும், மடிச்சரக்கையும் கொண்டு சென்றான் என்கிறாள். ஆதரித்து வந்து கலந்தவன், என்னை விட்டு செல்லும்படியான பாவத்தை செய்து உள்ளேன் என்கிறாள்.

தோள் துறந்த என்று சொல்வதன் மூலம், அந்த காதல் எல்லாம் எடுத்து கொண்டு அவன் தோளுக்கு அருகில் போக விடவில்லை என்கிறாள். தான் பட்டினியினால் மலிந்து இருக்க குருகு இனங்கள் இப்படி களித்து இருப்பது தகுமா என்கிறாள். இவள் ஜனக வம்சத்தில் வந்தவளாகவும், பறவைகளை எம்பெருமானிடத்தில் தூது சென்று எம்பெருமானிடம் சேர்ப்பாரை போன்ற ஆசார்யர்களை போலவும் எடுத்து கொள்ளலாம்.

பெரிய சோலையில் இரையை தேடி உண்டு, மனத்திற்கு இன்பம் பொருந்தும் படியாக தங்கி இருக்கின்ற வண்டுகாள், தும்பிகாள், கனம் மிகுந்த, வலிமை மிகுந்த மதில்கள் சூழ்ந்து உள்ள, திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருக்கின்ற, உலர் தானியத்திற்கு ஏற்ற நிலம், பொதுவாக மலைகளில்.இருக்கின்ற காயாம் பூவை போன்ற திருமேனியையும், திருத்துழாய் சூடிய திருமுடியையும் உடைய எம்பெருமானை கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்கிறார்.

‘நீங்கள் ஒரு வார்த்தை சொல்லாவிடில், உயிர் போகும் நிலையில் உள்ளது’ என்கிறாள்; விரகத்தால் வரும் கிலேசம் வராதபடி சேர்வது என்றும், பிரிவிலும் துன்பம் வராதபடி சேர்வது என்றும் சொல்வது, ‘மனதிற்கு இன்பம் பட’ என்பதில் தெரிகிறது. இயற்கையான வடிவழகு, காயா நிறத்திருமேனி; அதற்கு மேல் ஒப்பனை அழகு திருத்துழாய் மாலை. அப்படிபட்ட வடிவழகையும், ஒப்பனை அழகையும் அனுபவித்து பிரிந்த எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்கிறார்.

நிறைந்த நீர் நிலையில் தங்கி இருக்கின்ற இளம் குருகே, அழகிய திருதுழாயை திருமுடியில் அணிந்தவற்கு, அழகிய சக்கரத்தை திருக்கரங்களில் உடையவற்கு, திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருப்பவற்கு, ஆபரணத்தை அணிந்த முலைகள் பசலை நிறத்தை அடையவும், மலர் போன்ற இரண்டு கண்களிலும் நீர் நிறைந்து இருக்கும்படியாகவும் தாம் தம்மை கொண்டு நீங்குதல் தகுதி அன்று, என்று கூறுங்கள் என்கிறார்.

நிறைந்த நீரில் தரையில் நடப்பாரை போல நடக்க வல்ல இளம் குருகே என்கிறார், நீ பறந்து செல்லும் வல்லமை பெற்றது தனக்கு உதவுவதற்கே என்கிறார்.

பூந்துழாய் முடியார்க்கு, பொன் ஆழி கையாருக்கு என்பதால் அவனது வடிவழகு சொல்லப்பட்டது. திருமூழிக்களத்தாருக்கு என்று சொல்வதால் அவன் குணம் சொல்லப்பட்டது. அவனை, அவன் வடிவை, பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டால், பிழையார் என்று சொல்கிறார். ஆழ்வார் பிரிந்த நிலையை, இராமனை பிரிந்த தசரதன் இதே போல, ராமாயணம், அயோத்தியா காண்டத்தில் (2.59.30) புலம்புவது மேற்கோளாக காட்டப் படுகிறது.

அதோ நுகிம் துக்க தரம் ஸ : அஹம் இக்ஷ்வாகு நந்தநம் * இமாம் அவஸ்த்தாம் ஆபந்நோ : ந இஹ பஷ்யாமி ராகவம்৷৷ (இந்த நிலையை அடைந்தும் இன்னும் ராமனைக் காண முடியாமல் தவிக்கும் எனக்கு இதைவிடப் பெரிய வருத்தம் வேறென்ன இருக்க முடியும்?)

எம்பெருமானின் திருமேனி பக்தர்களுக்காகவே என்றும், தனக்காகவே தன்னை கொள்ள வேண்டும் என்றும் பாடுகிறார். காதலுக்கும் மிருது தன்மைக்கும் சேராததோடு, அருளே இல்லாதவர் செய்யும் செயல் என்றும் பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்யுமவற்றை செய்கிறீர்கள் என்றும் சொல்கிறார்.

மிக்க நீர் வளத்தை உடைய பொய்கையிலே இரையை தேடி புசித்து இனிமை கரை புரளும் படி கலக்கின்ற மெல்லிய நடையை உடைய அன்னங்காள், சரீரம் மிக மிக மெலிந்து மேலே உள்ள புடவையும் கட்டுக்குலைந்து என்னுடைய அகவாயில் சொரூபம் குலைவதற்கு முன்னே, திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானை கண்டு இது தக்கது அல்ல என்று சொல்லுங்கள் என்கிறாள். மேனி மிக மிக மெலிந்து மேகலையும் ஈடு அழிந்தது; இனி அகமேனி குலைவதற்கு முன் திருமூழிக்களத்தாருக்கு சொல்லுங்கள் என்கிறாள்.

சில அன்னங்களை குறித்து தான் முடிவதற்கு முன்பு அவனிடம் தெரிவியுங்கள் என்கிறார்.

எம்பெருமானின் உண்மை தன்மை (நிரூபகம்) அருள் புரிவது. அவனுடைய உண்மை தன்மை அழிவது என்பது தகவு இல்லை என்ற சொல்ல சொல்கிறார். இவர்கள் சேர்ந்து இருப்பது இன்பம் கரை புரளும்படி மிக அதிகமாக இருப்பது, என்றும், இவர்கள் பிரியாவிட்டால் இருவரும் அழியும்படி ஆயிற்று என்றும் சொல்கிறார்.

திருமூழிக்களத்தில் நீங்காமல் எழுந்து அருளி இருக்கின்ற ஒளிப்பிழம்பான எம்பெருமானை, அவனை பிரிந்து தரிக்க மாட்டாத, அழகிய மழலை பொருந்திய கிளியின் மொழி போன்ற மொழி பேசுகின்ற ஒரு பெண் கூறுகின்ற கூற்றிலே வைத்து, குற்றம் இல்லாத வளம் மிகுந்த திருகுருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த அழிவு இல்லாத ஆயிரம் திருபாசுரங்களில் இந்த பத்து திரு பாசுரங்களும் பகவானை பிரிந்து இருத்தல் ஆகின்ற நோயினை அறுக்கும் என்று எடுத்து உரைக்கிறார்.

இந்த திருவாய்மொழியை கற்பவர் பிரிவிற்கு காரணமான பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்து கொடுக்கும் என்கிறார். ஒண் சுடர் என்றது பின்னானார் வணங்கும் சோதி என்று சொல்வது போல என்கிறார். திருநாட்டில் விளங்கப்பெறாத திருக்குணங்களும் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே ஆதலால் ஒண்சுடரை என்றது.

அணிமழலைக் கிளிமொழியாள் என்றது ஆழ்வார் தம்மை அன்று. எம்பெருமானைப் பிரிவில் தரிக்கமாட்டாத சீதா பிராட்டியை ஆகும். ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ * முஹூர்தம் அபி ஜீவா வோ ஜலாந் மத்ஸ்யாவி நோத்தரிதௌ (இராமாயணம் அயோத்யா 53.31) என்ற மேற்கோள், ஸ்ரீராமா, உன்னிடம் இருந்து பிரிக்க படுகின்ற சீதை பிழைக்க மாட்டாள் எனப்படுபவள் அன்றோ என்பதை சொல்வதற்காக என்று கொள்ளலாம்.

இந்த பாசுரத்தை கேட்டவற்கு அக்காலத்தை போல எக்காலத்திலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று என்கிறார். பகவானை பிரிதல் ஆகிற நோயை அறுக்கும் என்றும், கலந்து பிரிந்து துக்க பட வேண்டாம் என்றும் பிரிவு இல்லாத தேசத்தில் புக பெறுவர் என்றும் சொல்கிறார்.

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே, * முனியே திருமூழிக் களத்து விளக்கே, * இனியாய் தொண்டரோம் பருகின இன் அமுதாய * கனியே உன்னைக் கண்டு * கொண்டு உய்ந்து ஓழிந்தேனே!

பனி அதிகம் உள்ள, திருப்பிரிதியில் எழுந்து அருளி இருக்கின்ற, பவளங்கள் திரண்டு அழகாக இருப்பது போல, அடியார்களுக்கு நன்மை செய்வதையே நினைத்து கொண்டு இருப்பவனே, திருமூழிக்களத்தில் விளக்கு போல விளங்குபவனே, பரம போக்கியமானவனே, தொண்டர்கள் பருகுவதற்கு இனிமையானவனே, கனியே உன்னை சேவித்து உஜ்ஜீவிக்க பெற்றேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான், * என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்ன அறிவன ஏழையேன், உலகம் ஏத்தும் * தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால தாயினாய் இமையோர்க்கு என்றும் முன்னானாய் *பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலானாயே.

எம்பெருமானே! பலவழிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதை தவிர வேறு ஒன்றும் நான் அறியேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

தெற்கே, உலகம் முழுவதும் துதிக்கத்தக்க திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே! வடக்கே திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே! மேற்கில் திருவரங்கம் கோயிலில் திருக்கண்வளர்ந்தருளுகிற யானை போன்றவனே! கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் மதயானை போன்றவனே! எக்காலத்திலும் நித்யசூரிகள் கண்ணால் கண்டு அனுபவிக்கலாம்படி அவர்கள் முன்னால் நிற்பவனே, திருஅவதாரங்கள் காலத்திற்கு பின்னால் பிறந்தவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் ஜோதியாக திருமூழிக்களத்தில் உறைபவனே ! முழுமுதற் கடவுளே! பொன் போன்றவனே! ஏழு லோகங்களையும் காத்து அருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வையே வடிவாக உடைய தொண்டனான அறிவிலியான நான், என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுவதை தவிர வேறு என்னவென்று சொல்வது ? என்கிறார்.

பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விரும்புவர்களையும் இரவும் பகலும் கண் உறங்க விடாது. எம்பெருமானும் அப்படியே; காண்பதற்கு முன்பு முக்தி வேண்டுவர்களை உறங்க விட மாட்டான்; கண்டபின்பும் நித்ய முக்தர்களை கண் உறங்க விட மாட்டான்.

பொன்னானது தன்னை இழந்தவனைக் கதறிக் கதறி அழச் செய்யும். எம்பெருமானும் அப்படியே: ஸ்ரீராமபிரானை இழந்த பரதன் சபையில் புரண்டு கதறி அழுதது ஸ்ரீ ராமாயணத்தில் பிரசித்தம். இன்னும் பல ஆழ்வார்களின் பாடல்களும் உதாரணமாக தரலாம்.

பொன்னானது தன்னையுடையவனை கர்வம் கொண்டு பெருமையுடன் பேச செய்யும். எம்பெருமானும் அப்படியே; “இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே’ என்று எம்பெருமானை உடையவர்கள் செருக்குடன் பேசுபவர்கள் ஆயிற்றே.

ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கை என்று இல்லாமல், தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ்படைத்தவனே! காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டு இருப்பவனே என்கிறார். ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரண் புகுந்த போது ஸுக்ரீவமஹாராஜர் முதலானார் இவனை ரக்ஷிக்கக்கூடாது என்று தடை செய்த போதும் ரக்ஷித்தே தீரும்படியான விரதம் பூண்டவன் எம்பெருமான் என்கிறார்.

பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்! என்று சொன்னது, திருமூழிக்களம் போன்ற எம்பெருமான் உகந்து அருளிய அர்ச்சாவதார தேசங்கள் என்று எடுத்து கொள்ளலாம். பரத்வத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்வத்திலும் அனுபவிக்க பெறாதவர்கள் இங்கு பின்னானார் என்று கூறப்படுகின்றனர். அப்படிபட்டவர்களுக்காக திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்குமவனே! என்று சொல்கிறார்.

என்னை மனங் கவர்ந்த ஈசனை, – வானவர்தம் * முன்னவனை மூழிக் களத்து விளக்கினை, 

தேவாதிராஜனாய், திருமூழிக்களத்தில் விளங்குபவனாய் இருப்பவனை இங்கே குறிப்பிடுகிறார்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading