073 திருத்துவாரகை

ஸ்ரீ கல்யாணநாச்சியார் சமேத கல்யாணநாராயணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருத்துவாரகை
மூலவர்கல்யாணநாராயண பெருமாள் துவாரகாதீசன் – துவாரகாநாத்ஜீ
உத்ஸவர்
தாயார் கல்யாண நாச்சியார் / லக்ஷ்மிஸ்ரீ / ருக்மணி தேவி / அஷ்ட மகிஷிகள்
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்பெரியாழ்வார் – 5
ஆண்டாள் – 4
திருமங்கை ஆழ்வார் – 2
திருமழிசையாழ்வார் – 1
நம்மாழ்வார் -1
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

திருத்தலம் பற்றி

குஜராத் மாநிலத்தில், ஜாம்நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் துவாரகை உள்ளது. மேற்கு சௌராஷ்டிராக் கடலோரம் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில், கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. கோமதி நதி சுமார் ஐந்து மைல் தூரமே ஓடும் சிறிய நதி. இந்த திருத்தலத்தை பாடாத, சொல்லாத வடநாட்டுப் புராணங்களே இல்லை என்று சொல்லலாம்.

அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு முக்தி தரும் க்ஷேத்திரங்களுக்குள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு இங்கிருந்து மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப் படுவதால் இது துவாரகை என்று அழைக்கப் படுகிறது.

திருத்துவாரகைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்

Google Map

திருத்துவாரகை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தலம். ‘அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ என ஸ்ரீகிருஷ்ணனால் கொண்டாடப்பட்ட திவ்யதேசம். துவாரகையின் பெருமையால், புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள்கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையும் என்றும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு முக்தி உண்டு என்றும், துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும் கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, மோக்ஷத்தை அடையும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவிகளுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம்.

Nava Dwaraka – Thanks to google map நவ துவாரகா google க்கு நன்றி

நவ துவாரகா மற்றும் பஞ்ச துவாரகா

பஞ்ச துவாரகா என்று, ஐந்து கிருஷ்ணர் கோவில்களை உள்ளடக்கிய பயணம் ஒன்று சொல்வதுண்டு, அவற்றில், இந்த கோமதி துவாரகா என்னும் துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில் ஆகியவை உள்ளன. இவற்றில் நாத் துவாரகா (ஸ்ரீநாத் ஜீ), காங்கோர்லி (துவாரகீஷ்) என்ற இரண்டும் ராஜஸ்தானில் உள்ளன. மற்றவை குஜராத்தின் மற்ற பகுதிகளில் உள்ளன.

இதனை தவிர, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா என்ற நான்கினை சேர்த்து நவ துவாரக என்றும் கூறப்படுகிறது.  

துவாரகாவில் எங்களின் திருத்தாயார்

துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் மட்டுமே குறிக்கும். பஞ்ச துவாரகை தரிசனம் என்பது நெடுங்காலத்து வழக்கம் அல்ல. எனினும், கிருஷ்ண அனுபவத்தின் பெருமையினால், துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட இன்னும் சில கிருஷ்ண ஸ்தலங்களை சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றும், நவ துவாரகா என்றும் நம் முன்னோர்கள் கொண்டாடுகிறார்கள்.

கோமதி துவாரகா

With Kannan anna
Nice art work at the temple

துவாரகையை துவாரவதி என்றும் கோமதி துவாரகா என்றும் அழைப்பார்கள். துவாரகை, மகாபாரதத்தில், யது குலத்தின் ஒரு பிரிவான  விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டதாகும். புராணங்களில் குறிப்பிட்ட துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இங்குள்ள கோவிலை துவாரகா நாத்ஜி ஆலயம் என்று அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். இப்போதுள்ள கோவில் கண்ணனின் வழிவந்தவர்களில் ஒருவரான வஜ்ரநாபி கட்டியது என்றும் ருக்மணி தேவி பூஜித்த மூர்த்தி என்றும் சொல்கிறார்கள். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றங்களாலும் பிற இன்னல்களாலும் இந்த கோவில் பாதிக்கப்பட்ட போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப் பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கே பல படிகள் (56) ஏறித் தான் கண்ணனை தரிசிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணன் 56 கோடி யாதவர்களை இங்கே கொண்டு வந்து தங்க வைத்தான், அதனால் 56 படிகள் என்று சொல்வார்கள்.

இங்கு அவனது அஷ்ட மகிஷிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணன் சன்னதிக்கு எதிரே அவன் தாயார் தேவகிக்கு ஒரு சன்னதி உண்டு. அதிகாலையில் எம்பெருமான் கண் விழிப்பது தாயின் திருமுகத்தில் தான். மேலும் எந்த குறையும் இல்லாமல் தன் மகனுக்கு எல்லா சீர்களும் நடைபெறுகின்றதா என்று அன்னை கவனித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை.

இத்தலத்தின் ஸ்ரீ கிருஷ்ணன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் கருப்பு நிறத்தில் சிரசில் கொண்டையுடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். தாயார் கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிஷிகள் (எட்டு பட்டத்தது அரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பைச் சேர்ந்தது.

temple view
கோமதி ஆறு கடலில் சேரும் இடம்

இங்கே ஆஹாரப்ரியன் க்ருஷ்ணனுக்கு கண்டருளச் செய்யும் உணவும் அலங்காரமும் விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரண்மனையில் கொடுப்பது போல், 56 வகை உணவுகள் கொடுத்து ஒவ்வொரு மணியும் உடை மாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். காலை 7.30 க்குள் தீர்த்தமும் பிரசாதமும் அமுது செய்த படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சர்க்கரை பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு பலவகை பழங்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு செய்யப்படும் திருவாராதனத்திற்கு போக் என்று பெயர், ஒரு நாளைக்கு பண்டா போக், ஸ்நான் போக், ஷ்ருங்கார் போக், ராஜ் போக், உத்தப்பன் போக், சயன் போக் என்று ஆறு காலங்கள். மதியம் உணவிற்கு பிறகு சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர்.

இங்கே, யாத்ரீகர்கள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக வருவதால் எந்நேரமும் இந்த திருக்கோவில் கலகலப்புடன் இருக்கிறது. இங்கு பெண்கள் ஆயர்ப்பாடி கோபிகைகள் போல் ஆடை அணிந்து வருவது ஒரு சிறப்பு,

துவாரகநாத்ஜீ பிரதான கோவிலின் மேல் உள்ள கொடிகம்பம் தனித்துவமானது, மற்றும் புனிதமானது. இது 52 கெஜம் துணியால் ஆனது. ஒவ்வொரு நாளும் இந்த கொடி கோபுரத்தின் மேல் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு முற்றத்திலும் 52 சிறிய கொடிகள் தனித்தனியாக நெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முற்றமும் பண்டைய நகரமான துவாரகாவின் நுழைவாயில்களைக் குறிக்கிறது. சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது என்றும் மூன்று முறை ஏற்றப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறன. அடியேன் ஒருமுறை ஏற்றும் போது பார்த்து உள்ளேன். வாயிலில் இருக்கும் பலராமன் சன்னதியில் சமர்ப்பித்து அனுமதி பெற்று கொடி ஏற்றப்படுகிறது. இந்த 52 கெஜ கோடி, 10 கிலோமீட்டர் தூரம் வரை தெரிகிறது என்பார்கள். 27 நக்ஷத்திரம், 12 ராசி, 9 கிரகங்கள் 4 திசைகள் – இவற்றின் கூட்டுத்தொகை 52. இதுவே கொடியின் நீளத்திற்கான காரணம்.

இந்த கோவில் ஐந்து நிலைகளைக் கொண்டது, மற்றும் 72 சுண்ணாம்பு தூண்களில் உள்ளன. மேலும், இங்கு கோபுரத்தின் மொத்த உயரம் 157 அடி. இந்த ஸ்தலம் உலக பாரம்பர்ய ஸ்தலம் என்று அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கோகுலாஷ்டமி, தீபாவளி, குஜராத் புத்தாண்டு, ஹோலி, மட்கோபாட் என்ற உறியடி திருநாள் ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. கோகுலாஷ்டமி அன்று ஆண்களும் பெண்களுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பானைகளை சுமந்து பாவன் பேடா என்ற நடனம் ஆடுவார்கள்.

காலையில் பால கிருஷ்ணனாகவும், மதியம் மஹாராஜாவாகவும் இரவில் எல்லோரும் வணங்கும் பூஜிக்கும் தெய்வமாகவும் அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு முறை ஆர்த்தி நடக்கும் போது அங்குள்ள பக்தர்கள் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது கண் கொள்ள காட்சியாக உள்ளது.

இங்கு கோமதி நதி கடலில் கலக்கும் இடத்தில துவாரகசிலா எனப்படும் தெய்வீக கற்கள் கிடைக்கின்றன. இது சாளக்ராமம் போல் வைத்து வீட்டில் பூஜை செய்கிறார்கள். சாளக்ராமத்திற்கு உள்ள பலன்கள் இதற்கும் உண்டு என்று சொல்கிறார்கள். இவற்றை தாயார் வடிவம் என்றும் போற்றுகிறார்கள். துவாரகசிலா  மகாலட்சுமியின்  அம்சம்,  சாளக்கிராமத்துடன் துவாரகசிலாவையும் சேர்த்து வழிபடுவது மிகச்சிறப்பானது என்றும், இவ்வாறு வழிபடுவது கோடிக்கணக்கான பலன்களை தரும் என்பதும் இந்துக்களின் நீண்ட நாள் நம்பிக்கை.

ருக்மணி துவாரகா

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 4 KM தூரத்தில் ருக்மணி தேவி கோவில் உள்ளது. இந்த ருக்மணி தேவியின் சன்னதியில் தான் ஸ்ரீகிருஷ்ணன் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப் படுகிறது.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜ களை ஜொலிக்க சிரித்த முகத்துடன் வீற்றிருக்கிறாள். இது ருக்மணி துவாரகா என்று கூறப்படுகிறது.

Rukmani Devi Temple = a separate temple in Dwarka

பேட் துவாரகா

இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இதனை பேட் துவாரகை என்று பெயர். இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். மகாபாரதத்தில், இந்த இடம் ‘அந்தர்த்வீபா’ அல்லது ‘சங்கிதர்’ என்று குறிப்பிடப்படுகிறது. துவாரகாவில் இருந்து ஒகா துறைமுகம் (சுமார் 33 கிலோ மீட்டர்) வரை சென்று அங்கிருந்து விசைப்படகு மூலம் (சுமார் 2 கிலோமீட்டர்) இத்தலத்தை அடையலாம்.

இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினம் தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். இதனை நாம் நேரில் நின்று காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி காட்சி தருகிறாள். இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவதி, லட்சுமி நாராயணன், பலராமன் என்று தனித்தனி சன்னதிகள் உண்டு.

With Manni, Kannan in Bhet Dwarka

இங்கு தான் கண்ணனின் குருகுல நண்பனாகிய குசேலர், அவனிடம் உதவி கேட்க நினைத்து பேட்டி கேட்க வந்த இடம், பேட் துவாரகா. ஆனால் கண்ணனின் உபசரிப்பையும் பரிவையும் கண்டு ஒன்றும் கேட்காமலே திரும்ப சென்று விட்டார். இருந்தும், கண்ணன் அவர் கேட்காமலேயே அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பலவித நன்மைகளை செய்தார் என்பது வரலாறு.

சுதாமா துவாரகா

நம்முடைய தேச தந்தை மஹாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் அருகே குசேலருக்கு என்று ஒரு கோவில் உள்ளது. குசேல பட்டினம் என்று ஒரு பெயரும் உண்டு. இது சுதாமா துவாரகா ஆகும்.

தூய நட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன்-சுதாமா. சுதாமா தான் குசேலர். துவாரகையிலிருந்து சோம்நாத் செல்லும் வழியில் 105 கி.மீ தொலைவில் போர்பந்தர் எனும் சுதாமா துவாரகை அமைந்துள்ளது.  ஊரின் மையமாக சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் நடுவே ஆலயம் அமைந்துள்ளது.

Kannan anna explaining to Ravi in Sudama Temple, Porbandar
Kuchelar place in Porbandar
Kannan anna explaining to Ravi in Sudama Temple, Porbandar

ஒரே   ஒரு மண்டபம், அழகிய தூண்களுடன்  பிரம்மாண்டமான இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும் ஒரு சித்திரத்தையும், பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையும் தரிசிக்கலாம்.

முக்தி துவாரகா

Sri Krishna side view
Somnath

ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்பினால் அடி பட்ட இடத்தின் பெயர் விராவல்.  அந்த ஆலமரம் இன்றும் உள்ளது,  நன்றாகப் பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்ர கதாதாரியாக, ஒரு காலை மற்றொரு காலின் மேல் வைத்த கோலத்தில் இருக்கிறார். அறியாமல் அம்பு எய்த வேடன் மண்டியிட்டு எம்பெருமானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் உள்ளது.

பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு விராவல் என்னும் ரயில் நிலையம் அமைந்துள்ள பிரபாஸ் பதான் (ப்ரபாஸ தீர்த்தம்) என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் திரும்புவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை சயன திருக்கோலத்தில் காணலாம். இது முக்தி துவாரகா என்கின்றனர். இதற்கு அருகில் பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயம் உள்ளது.

Kannan Anna in Prabasa Theertham
Krishna in Prabasa Theertham with Hunter apologising

இந்த சமயத்தில் கிருஷ்ணன் பற்றிய சில தகவல்கள் (சுருக்கமாக)

கிருஷ்ணன் திருஅவதாரம் செய்தது இன்றைக்கு (22 Feb 2023) சுமார் 5255 ஆண்டுகளுக்கு முன்னர். ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்திரம், அஷ்டமி திதி, நடுநிசியில் (0:00 hrs). ஸ்ரீ கிருஷ்ணன் இந்த உலகத்தில் 125 ஆண்டுகளும், 8 மாதங்களும் 7 நாட்களும் வாழ்ந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் 89 வயதில் மஹாபாரத போர் நடைபெற்றது. அதற்கு பிறகு 36 வருடம் சென்று அவர் பரமபத்திற்கு மீண்டும் எழுந்தருளினார்.

ஸ்ரீ கிருஷ்ணரை, கிருஷ்ணா என்று மதுராவிலும், ஜகன்னாதா என்று ஒரிசாவிலும், விதோபா என்று மஹாராஷ்ட்ராவிலும், ஸ்ரீநாத்ஜீ என்று ராஜஸ்தானிலும், துவாரகாதீஷ் என்றும், ரன்சோடராய் என்றும் குஜராத்திலும், கிருஷ்ணா என்று உடுப்பியிலும், அன்புடன் அழைத்து வணங்குகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணனை பெற்ற தாய் தேவகி, தந்தை வசுதேவர்; வளர்த்த தாய் யசோதா, வளர்த்த தந்தை நந்தகோபன்; பலராமன் அண்ணன், சுபத்ரா சகோதரி, பிறந்த இடம் மதுரா.

கண்ணனின் மனைவிகள், ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, நக்நாஜிதி, பாத்ரா, லக்ஷ்மணா.

கிருஷ்ணர் மதுராவிற்கு திரும்பிய பின் நான்கு பேர்களை கொன்று இருக்கிறார்; அவர்கள், சாணூரன் (மதுராவில் கண்ணனுடன் மற்போர் புரிந்தவன்), கம்சன், (கண்ணன் மாமா) சிசுபாலன், தந்தவக்ரன் (இவர்கள் இருவரும் கண்ணனின் உறவினர்கள்). சிறு வயதில் பூதனையில் தொடங்கி, தன்னுடைய தாய் மாமன் கம்சன் அனுப்பிய பல அரக்கர்களை முடித்து உள்ளான்.

ஸ்ரீகிருஷ்ணரின் தாய் உக்ரா குலத்தைச் சேர்ந்தவர், தந்தை யாதவ குலத்தைச் சேர்ந்தவர், இனங்களுக்கு இடையேயான திருமணம். அவர் கருமையான நிறத்துடன் பிறந்தார். அவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய உயிருக்கு ஆபத்தான பல சூழ்நிலைகள் கொண்டது.

அவர் தன்னுடைய 14-16 ஆண்டுகள் வரை கோகுலம் மற்றும் பிருந்தாவனத்தில் இருந்தார். பிறகு மதுராவிற்கு சென்று தனது மாமனைக் கொன்று, மாமனால் சிறையில் அடைபட்டு இருந்த தன்னுடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்தார். இதற்கு பின் அவர் பிருந்தாவனம் திரும்பவே இல்லை; தன்னுடைய வளர்த்த தாய் தந்தை மற்றும் அவனுடன் விளையாடி காலம் கழித்த ஆயர்குல சிறுவர் சிறுமியர்களை சந்திக்கவே இல்லை.

தன்னுடைய குடிமக்களுக்கு காலயவனின் அச்சுறுத்தல் காரணமாக மதுராவிலிருந்து துவாரகாவிற்கு குடிபெயர வேண்டியிருந்தது. கோமந்தக மலையில் (இப்போதைய கோவா) பழங்குடியினரின் உதவியுடன் ‘ஜராசந்தனை’ தோற்கடித்தார்.

16-18 வயதில் பள்ளிப்படிப்பைத் தொடங்க உஜ்ஜயினியில் உள்ள சாந்திபனியின் ஆசிரமத்திற்குச் சென்றார். குசேலர் அங்கு தான் அவருக்கு நண்பர் ஆனார்.

தனது கல்விக்குப் பிறகு, வனவாசத்தில் பாண்டவர்களுக்கு “மெழுகு இல்லத்தில்” ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து காப்பாற்ற வந்தார், பிறகு மஹாபாரதத்தில் திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் துணையாக இருந்த அவரது பங்கு அளப்பற்றது.

யாதவர்களின் கேலி பேச்சினால் தங்களுடைய குலமே அழிவதை கிருஷ்ணர் பார்க்க நேரிட்டது. இறுதியில் ஜரா என்ற வேடன் தவறாக அம்பு எய்ததால் அதையே காரணமாக கொண்டு இந்த திருவவதாரத்தை முடித்துக்கொண்டு பரமபதத்திற்கு திரும்பினார்.

வாழ்நாள் முழுவதும் அவருக்கு சவால்கள் மற்றும் இன்னும் பெரிய சவால்கள் இருந்தன.
அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பொறுப்புணர்வுடன் எதிர்கொண்டு எல்லாவற்றில் இருந்தும் விலகியே இருந்தார். இதையே அவர் நம் எல்லோருக்கும் பகவத் கீதை என்ற பெரும் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷத்தில் அளித்தார்.

மீண்டும் துவாரகா பற்றி தொடர்வோம்.

மூல துவாரகா

துவாரகையிலிருந்து 75 கி.மீ தொலைவில் , சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருக்கும் விசாவாடா எனும் கிராமத்தில் உள்ள  ஒரு புராதமான ஆலய வளாகத்தை  மூலத் துவாரகை என்றழைக்கின்றனர். மூல துவாரகா என்பது கிருஷ்ணர் துவாரகைக்கு முதலில் காலடி எடுத்து வைத்த இடம். காலயவனன் ஸ்ரீகிருஷ்ணரை துரத்தி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்கு சாமர்த்தியமாக வழி காண்பித்த முசுகுந்தன்  குகை அருகில் உள்ளது. மதுராவிலிருந்து துவாரகை செல்லும் வழியில்  முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தம் பாதத்தை இவ்விடம் பதித்துத் தங்கினார் என்பது சரித்திரம். விஷ்ணு தன் பாதத்தை இங்கு பதித்ததால் ரண்சோட்ராய் ஜீ சன்னதியில் விஷ்ணு பாதம் உள்ளது. விஷ்ணு பாதம் என்பதே  மருவி விசாவாடா ஆகிவிட்டதாம்.     தற்போதைய முக்கிய துவாரகையான கோமதி துவாரகா ஆலயத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் இது மூலத் துவாரகை ஆயிற்று. ஆலய முகப்பில் அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ரண்சோட்ராய்ஜீ,  நீலகண்டேஸ்வரர் ஆகியோருக்கு முக்கிய சன்னதிகள் உள்ளன. அருகில் மற்றொரு ஆலய வளாகம் உள்ளது. அதில் சிவன், கார்த்திகேயன், தத்தாத்ரேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில், குர் ஸோமன்த் மாவட்டத்தில் கோடிநார் என்ற ஊர் அருகில் உள்ள இன்னொரு கிருஷ்ணன் கோவிலையும் மூல துவாரகா என்று சிலர் கூறுகின்றனர். இது ப்ரபாஸ தீர்த்தம் அல்லது முக்தி துவாரகாவில் இருந்து தெற்கில் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிருஷ்ணர் துவாரகைக்கு முதலில் காலடி எடுத்து வைத்த இடம் என்பதை தெரிவிக்கும் வகையில் இங்கு ஒரு கல்வெட்டு உள்ளதாக சொல்கிறார்கள். மஹாபாரத நாட்களின் போது இது ஒரு சிறந்த துறைமுகமாக இருந்தது என்று சொல்லப் படுகிறது. இங்கு ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் துவாரகாவிற்கு செல்வதற்கு முன்னால் வாழ்ந்தார்கள். இங்குள்ள கோவில் சிறிது பாழடைந்த நிலையில் உள்ளது. அதில் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ராமர் சீதா ஆகியோரில் விக்ரகங்கள் உள்ளன. கோவில் அருகில் உள்ள கிணற்றில் ஸ்ரீ கிருஷ்ணன் குளித்ததாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர் இந்த இடத்தைத் துறந்து பேட் துவாரகாவுக்குச் சென்றதாகத் தெரிகிறது.

காங்கோர்லி துவாரகாதீஷ்

காங்கோர்லி கோயில் அல்லது துவாரகீஷ் என்ற பஞ்ச துவாரகையில் ஒன்றானது ராஜஸ்தானில் உதய்பூருக்கு அருகில் உள்ளது. இது உதய்பூரில் இருந்து 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது துவாரகாதீஷ் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது வைணவர்களின் மிக முக்கியமான கோவில். கிருஷ்ணரின் சிவப்புக் கல் சிலை மதுராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக பலர் நம்புகிறார்கள்.

இத்தலத்தில் எம்பெருமான், வலது  மேல் திருக்கரத்தில் கதை, இடது மேல் திருக்கரத்தில் சக்கரம், வலது கீழ்கரத்தில் பத்மம், இடது கீழ் கரத்தில் சங்கம் ஏந்தி  நின்ற கோலத்தில்  சதுர்புஜ விஷ்ணுவாக சேவை சாதிக்கின்றார்.

நாத் துவாரா / ஸ்ரீநாத் ஜீ

ராஜஸ்தானில் உதய்பூரில் நாத துவாரா என்ற ஸ்ரீநாத்ஜி கோவில் உள்ளது. நாதத்வாரா என்றால் கடவுளின் வாசல் என்று பொருள். இது உதய்பூருக்கு வடகிழக்கில் சுமார் 48 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீநாத்ஜி அசல் கருப்பு பளிங்கு சிலையினால் ஆன இவர் முதலில் 14ம் நூற்றாண்டில் சுயம்புவாக கோவர்தனில் தோன்றினார். பின்னர் முகலாயர்கள் படையெடுப்பின் போது இவரைப் பாதுகாத்து, அங்கிருந்து ஸ்ரீநாத்ஜீ இந்த ஸ்தலத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து, இக்கிராமத்தில் கோவில் அமைத்தனர். ஸ்ரீநாத்ஜீ கோவில் கொண்டதால் பின்னர் இவ்வூர்  நாத்துவார் என்று அழைக்கப்படலானது.

எம்பெருமான் ஸ்ரீநாத்ஜி, ‘கோவர்த்தன’ மலையை தூக்கியபோது, இருந்த கிருஷ்ணரின் ஒரு வடிவத்தை அடையாளப் படுத்துகிறார். கோவர்த்தன கிரிதாரியாக, நின்ற கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர்  சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் ஸ்ரீநாத்ஜீ இடது திருக்கரத்தால் கோவர்த்தனகிரியைத் தாங்கி வலக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்துக் கொண்ட அற்புதக் கோலம். பக்த மீராபாயை ஆகர்ஷித்த கோலம். மாயக்கண்ணனின்  கண்கள் இத்தலத்தில் விரிந்து பரந்தனவாக இல்லாமல் பாதி மூடிய நிலையில் கீழ் நோக்கிய பார்வையாக தனி அழகுடன் அமைந்திருக்கும். .

காய்கறிகள் வெட்டுதல், கோவில்களை துடைத்தல், மாலைகள் கட்டுதல் மற்றும் விறகு சுமந்து செல்வது என பல சேவைகளை இங்கு பக்தர்கள் செய்கிறார்கள். கோயில்களின் பணியாளர்கள் அரசர்கள் மற்றும் ராணிகளின் காலத்து ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை பிரியமான இளவரசராக சேவிப்பார்கள். இதனாலேயே இந்த ஆலயம் ‘ஹவேலி’ அதாவது பணக்கார வணிகர்களின் பெரிய மாளிகைகள் என்று பொருள்படும். அனைத்து வாசல்களிலும் யானைகள், குதிரைகள், கன்னிகள் மற்றும் பல அழகான பெரிய ஓவியங்கள் உள்ளன. நுணுக்கமான மர வேலைப்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை அழகுடன் கூடிய அற்புதமான ஆலயம் மற்றும் இறைவன் தனது அனைத்து மகிமையிலும் நிற்கிறார். கேரளாவில் இருக்கும் குருவாயூரப்பன் போல் உள்ளார்.

இவருக்கு தினமும் எட்டு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது மட்டுமே பக்தர்கள் இவரை தரிசிக்க முடியும், மற்ற சமயங்களில் திரை போடப்படுகிறது. கிருஷ்ணரைக் காண எப்போதும் கோபியர்கள் யசோதையின் வாயிலில் காத்துக் கிடப்பதால், தனது செல்லப்பிள்ளை உரிய சமயத்தில் உணவு உட்கொள்ளவும், சிறுவர்களுடன் விளையாடவும், தோழர்கள் பின் செல்லவும், கோபியர்களுடன் இராசலீலை ஆடவும் யசோதை அன்று செய்தது போல இன்று இங்கு அமைத்து உள்ளார்கள். அதுவும் இரவு, பகல், கோடை, குளிர், வசந்தகாலம் என்று கால நேரத்தைப் பொறுத்து இவருக்கு செய்யும் அலங்காரமும் மாறுபடுகின்றது. அவசியம் இரண்டு நாட்களாவது தங்கி இருந்து தரிசிக்க வேண்டும்.

அந்தந்த காலங்களுக்கு ஏற்ற இராகத்தில் பாடல்கள் இசைக்கப்பட்டு, அந்தந்த நேரத்திற்கு ஏற்றவாறு பிரசாதம் (போக்),  உடை மற்றும் அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுகின்றது. கோடை காலத்தில் ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார், குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன் சேவை சாதிக்கின்றார்.

முதல் பூஜை, மங்களா எனப்படும்; கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம். இந்த பூஜை, திருக்கதவுகள் மூடிய நிலையில், குளிர்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது. சிறுவர்கள் கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால்  எழுந்தவுடன் அவர் விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் தருவதில்லை, ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்ய விடமாட்டான் என்பதாக ஐதீகம்.

இரண்டாவது பூசை சிருங்கார்  என்றழைக்கப்படுகின்றது. கண்ணனுக்கு அலங்காரம் செய்து வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர் தன் மகனைக் காண யசோதை அனுமதிக்கின்றாள். அப்பொழுது கண்ணனுக்கு புல்லாங்குழல் தரப்படுகிறது.

மூன்றாவது பூசை க்வால்.மாடு கன்றுகளை  ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.

அடுத்த பூஜை, மதிய நேரத்தில் நடைபெறும் ராஜ் போக்ஆகும். மிக விமரிசையாக நடக்கும் இந்த பூஜைக்குப்பின், மூன்று மணி நேரம் நடை அடைக்கப்படுகின்றது.

அடுத்த பூஜை,  உத்தப்பன் என்று அழைக்கப்படுகிறது.  மாடுகளை மேய்த்தபின் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம்.

அடுத்த பூசை போக் ஆகும். பசுக்களை கறவைக்காக அழைத்து செல்ல ஒரு அறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம்.

மாலை பூசை சந்தியா ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது. யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன.

நாளின் நிறைவு பூசை  சயன்  ஆகும். சயன ஆரத்திக்குப் பிறகு திரையிடப்படுகின்றது. எம்பெருமான் திருப்பள்ளி கொள்கிறார். .

டாகூர் துவாரகா

அசல் துவாரகாதீஷ் சிலை தனது சொந்த விருப்பத்தின் பேரில் டாகோரில் உள்ள தனது பக்தரின் இடத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. அகமதாபாத் நகரில் இருந்து பரோடா செல்லும் வழியில், ஆனந்த் எனும் ஊருக்கு அருகில் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் டாகோர் நகரம் அமைந்துள்ளது. இங்கு கண்ணனின் திருநாமம் ரணசோட் ராய்; ‘யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்’ என்று அர்த்தம், மதுரா நகர மக்களும், யாதவ குல மக்களும் போரில் அவதி படுவார்களே என்று கண்ணன் யுத்தத்தை துறந்ததை சொல்வது. ஆக, காலயவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்தது.

கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறார். துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, என்னும் பக்தர், தன்னுடைய தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்கு நடந்து சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். வரும் காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியாதோ என்ற கலக்கத்துடன் பகவானை வேண்ட, அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான். தன்னை எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியிலேயே அழைத்து செல்ல போடானாவிற்கு எம்பெருமான் கட்டளை இட்டாராம். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக கண்ணன் ஒரு வேப்ப மரக் கிளையில் சாய்ந்து நின்றதாகவும், அந்த மர இலைகள் மட்டும் இனிப்பாக உள்ளதாகவும் சொல்லி, அந்த மரத்தை இன்றும் மக்கள் வழிபடுகிறார்கள்.

டாகோர் துவாரகை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் ஒரு கோட்டை போல அமைந்துள்ளது. மிகப் பிரம்மாண்டமான மதிற்சுவர்,  நாற்புறமும் வாயில்கள், கோட்டை வாயில்களைப் போலவே உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தின் உட்புறத்தில்  இரு புறமும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பங்கள் இச்சுற்றில் மற்ற அலுவலக அறைகளும் உள்ளன. ஆலயத்தை வலம் வரும் போது துவாரகை கிருஷ்ணரை எடையை அளந்த துலாபாரத்தைக் காணலாம். தற்போது தங்கக் கவசத்தில் கண்ணாடி பெட்டிக்குள் மின்னுகின்றது அந்த தராசு.

கருவறையும் சபா மண்டமும் உயரமாக அமைந்துள்ளன. வண்துவாராபதி மன்னனைச் சேவிக்க   சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். சியாமள வண்ணத்தில் சங்கு, சக்கரம், கதை, அபயத் திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கின்றார் மனமோகனன். அபயத் திருக்கரத்தில் தாமரையும் உள்ளது. கிரீடத்தில் கண்ணனுக்கே உரித்தான மயிற்பீலி, பட்டுப் பீதாம்பரம், வனமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருமேனியை அலங்கரிக்க எழிலாக, ஒயிலாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். துவாரகையிலிருந்து வந்த சக்கரவர்த்தி   என்பதால் பொன் சிம்மாசனத்தில்  நின்ற கோலத்தில் எழிலாகச் சேவை சாதிக்கின்றார்.

பெருமானுக்கு மிக அருகில் பெண்களுக்குக்கென்றே தனி இடம் ஒதுக்கியிருக்கின்றனர். கிருஷ்ணருக்கு அருகில் சென்று தரிசிக்க உரிமை, அவர்கள் கோபிகைகளாக இருந்ததனால் அந்தச்சலுகையை இக்கோவிலில் வழங்கியுள்ளனர்.

அடியேன் இதுவரை தரிசித்தவை, துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா.  ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில்களுக்கு அந்த கண்ணன் தான் அழைத்து செல்ல வேண்டும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • துவாரகநாத்ஜி கோவில்
  • பேட் துவாரகா
  • குசேலர் பவன்
  • ப்ரபாஸ தீர்த்தம்
  • மூல துவாரகா
  • ருக்மணிதேவி கோவில்
  • கோமதி நதி

ஸ்தல வரலாறு

காலயவனன்‘ என்று ஒருவன் செருக்குடன் திரிந்து கொண்டு இருந்தான்; ஒருமுறை நாரதரைப் பார்த்து ‘இவ்வுலகில் யாராவது சூரர்கள் உண்டா?’ என்று கேட்க, அதற்கு நாரதர் ‘வட மதுரையில் யாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்‘ என்றார். காலயவனன் அதைக் கேட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டு வடமதுரைக்கு வந்து யாதவர்களுடன் போர் செய்யத் தொடங்கினான், கண்ணபிரான் இதையறிந்து மேற்கு கடலுக்குச் சென்று அங்கு ஸமுத்ர ராஜனிடம் கேட்டு, பன்னிரண்டு யோஜனை பரப்புள்ள இடத்தை வாங்கி அங்கு துவாரகை என்ற தங்க மயமான இந்த நகரத்தை ஒரே நாள், ஒரே இரவில் அமைத்து வடமதுரையிலுள்ள யாதவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்து அவர்களுடைய அச்சத்தை அழித்தான். பிறகு திரும்பி வந்து காலயவனனையும் முடித்தான். காலயவனனை முடித்த இடம், ரண சோட ராய் என்று அழைக்கப்படும் பஞ்ச துவாரகையில் ஒன்றான டாகூர் துவாரகா ஆகும்.

இதே போல் கண்ணன் மதுரையின் மஹாராஜாவாக இருந்த போது, ஜராசந்தன் என்னும் அரக்கன் மதுராபுரி மக்களுக்கு பல துன்பங்கள் விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டும் என்று கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை அழைக்க அவனால் வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி என்ற ஒரு வரலாறும் உண்டு. இந்த துவாரகாபுரி முன்பு சொன்னது போல் கடல் சீற்றத்தால் விழுங்கப்பட்டு விட்டது.

ருக்மணியின் அண்ணன் ருக்மி, ருக்மணியை சிசுபாலனுக்கு மணம் செய்விக்க விரும்பினான். ஆனால் ருக்மிணி,  ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக வரித்து விட்டார். எனவே  கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். கண்ணனின் ஆலோசனைப்படி காத்யாயினி ஆலயத்திற்கு பூசை செய்ய வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் தேரில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார். எதிர்த்து வந்த சிசுபாலனையும், ருக்மியையும் போரில் தோற்கடித்து துவாரகை வந்து சித்திரை மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசியன்று திருமணம் செய்து கொண்டார்.  ருக்மிணித் தாயார் எழுதிய கடிதத்தை தினமும் படித்து வந்தால் எல்லா  நன்மைகளும் கிட்டும், வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் என நம்பிக்கை.

ப்ரபாஸ தீர்த்தத்தில் தான் கண்ணன் மீண்டும் இந்த திருஅவதாரத்தை முடித்து மீண்டும் பரமபதம் திரும்பியது. யாதவர்கள் ஒரு முனிவரிடம் பெற்ற சாபத்தினால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு முடிந்தனர். இறுதியில் கண்ணன் ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறி கொண்டு இருந்த போது, ஒரு வேடன் கண்ணனின் திருவடிகளை மான் கொம்பு என்று தவறாக நினைத்து மறைந்து இருந்து அம்பு எய்தியதால், அதையே காரணமாக கொண்டு கண்ணன் பரமபதம் அடைந்தான்.

வேடன் மறைந்திருந்து எய்தது, முன்பு இராம அவதாரத்தில், வாலியை தாக்கியதற்கு பரிகாரமாக இந்த அவதாரத்தில் இப்படி தன் திருஅவதாரத்தை முடித்து என்று சொல்பவர்கள் உண்டு. அதே போல் மஹாபாரதத்தில் காந்தாரியின் சாபத்தினால் கண்ணன் தன் குலத்தோர் அனைவருடன் மறைந்ததாகவும் சொல்வது உண்டு. இவைகளுக்கு ஆதாரம் சேகரிக்க வேண்டும்.

மஹாபாரதத்தில் துவாரகையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகள்;

துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160). பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அர்ச்சுனன் சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான். பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72) துவாரகைக்கும்  இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. (14-53, 55). குருக்ஷேத்திரப் போரில் துவாரகையின்  கிருதவர்மன்,  கௌரவர்  அணியிலும்;  சாத்யகி  பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர். மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35).

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துவாரகாவில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சியில் இருந்து செப்பு நாணயங்கள், கற்பாறைகள், தூண்கள் மற்றும் பானை வகைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். எனவே, 2 ஆம் நூற்றாண்டில் நன்கு நிறுவப்பட்ட நகரம் இருந்தது என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், 1983 மற்றும் 1990 க்கு இடைப்பட்ட ஆய்வுகள், நகரம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது. அவை கரையிலிருந்து ஒரு மைல் தூரம் வரை நீட்டிக்கப்பட்டன. கடல் ஆய்வுகள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் தூண்கள், துறைமுகங்கள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளன. எனவே, பகவான் கிருஷ்ணரின் காலத்தில் ஒரு பழங்கால நகரம் இருந்ததை இது ஆதரிக்கிறது. மேலும், பண்டைய கையெழுத்துப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நகரத்தின் அமைப்பு, இந்தியாவின் கடல் தொல்லியல் துறையால் (The Marine Archaeology Unit of India) கண்டுபிடிக்கப்பட்ட நகரத்துடன் பொருந்துகிறது.

1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல்  அகழ்வாய்வுப்  பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது. கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர்  சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில்  துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய ஹரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. 

துவாரகையில் தான் பக்த மீரா  கண்ணனை ஆரத்தழுவி அவனுடன் கலந்தது. அவளுக்கு விஷம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதும் இங்கே கதவுகள் மூடி கொண்டன, அதே போல் மீரா கண்ணனை தேடி இங்கே வந்ததும் அந்த கதவுகள் தானாகவே திறந்தன.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம், இந்த திருத்துவாரகை ஆகும்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி அஞ்சப் புணர் முலை வாய் மடுக்க, வல்லானை மாமணி வண்ணனை மருவும் இடம் நாடுதிர் எல், பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை, எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர். (4.1.6)

சிறு குழந்தையாக இருந்த, கண்ணனை வஞ்சனையால் கொல்ல நினைத்த, வறண்டு வளைந்து எலும்பும் நரம்பும் தோண்டும் படியாக, பொல்லாத உருவம் கொண்ட பூதனை என்ற அரக்கி, கம்ஸனால் ஏவப்பட்டு, தன்னுடைய உருவத்தை மறைத்து, பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி என்றபடி, முலையில் விஷத்தைத் தடவிக் கொண்டு, யசோதை போல் தாய் உருவம் எடுத்து முலை கொடுக்க, அதனை வாயில் வைத்து, விஷப்பாலை, அமுதமாகவே அமுது செய்து, உண்ண வல்லவன் இந்த கண்ணன். நீலமணி போன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமான் கண்ணன், அவனை தேடுகிறீர்கள் என்றால், கடல் அலைகள் வீசி எறிகின்ற துவாரகையில், பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிம்மஹாசனத்தில் எழுந்தருளி எல்லோரும் சூழ இருப்பதை கண்டார் உண்டு என்கிறார்.

நரகாசுரனால் பல திசைகளில் இருந்தும் கொண்டு செல்லப்பட்டு, மந்தரகிரியின் சிகரமான ரத்தகிரியில், சிறை வைக்கப்பட்டிருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும், கண்ணபிரான் நரகாஸுரனை வதம் செய்த பின்னர், மணந்துகொண்டு வந்தது சரித்திரம். இது ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவார் என்று சொல்லப் படுகிறது. கண்ணன் சத்தியபாமாவிற்காக கொண்டு வந்த, பரிஜாதம் முதலிய எல்லா பொருட்களையும் சேர்த்து எல்லாரும் சூழ என்று சொல்கிறார்.  

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டமென்னும் கடி நகரே. (4.7.8)

கடல் சூழ்ந்து திண்மையான மதிளை உடைய துவராகையின் இராஜாவான எம்பெருமான், தன்னையே தங்களுக்கு துணையாகவும், பலமாகவும், காதலாகவும் பற்றிக்கொண்டு உள்ள தன்னுடைய மைத்துனர்களான பாண்டவர்களுக்கு ஒரு தலை பட்சமாக இருந்து, அவர்களிடம் இருந்து சூழ்ச்சி செய்து, சூதில் பறித்துக் கொண்ட இராஜ்யத்தில் பத்து ஊர், ஒரே ஒரு ஊர் என்று எல்லாம் கேட்டு, அவை மறுக்கப்பட்ட பிறகு, துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு தோல்வியை கொடுத்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும், கண்ணபிரான், கண்டமெனும் கடி நகரில் புருஷோத்மனாக சேவை சாதிக்கிறான் என்கிறார். தன்னை பற்றிக் கொள்பவர்களுக்கு சகல பாவங்களையும் போக்கிவிடுகிறான் என்பது கருத்து. பசுக்கள் கட்ட உள்ள ஸ்தம்பங்கள் இடைவிடாமல் இருக்கும் கங்கைக்கரை, வேள்வி அல்லது யாக புகை இரண்டு கரைகளிலும் மணம் கமழ்கின்ற கங்கைக்கரை என்று அடைமொழி கொடுத்து அங்கே இருக்கும் கங்கை எனும் கடிநகர் திவ்யதேசம் (தேவப்ரயாகை) என்று பெருமையுடன் கூறுகிறார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தட வரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே. (4.7.9)

தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமார்கள் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளைக் குறிப்பிடுகிறார்.

பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாண் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இருமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே. (4.9.4)

பதினாறாயிரவர் தேவிமார் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா என்று முன்பு (4.1.6 மற்றும் 4.7.9) சொன்னவர் இங்கும் அதனை குறிப்பிடுகிறார். தேவிமார் பதினாறாயிரத்து ஓரு நூற்றுவர் என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காணப் படுகிறது. திருவரங்க மாநகரைச் சுற்றிச் சூழ்ந்துள்ள காவேரியில் எம்பெருமானது திருநாபிக் கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றன என்றும், அப்பூக்களுக்கு சமமான அழகிய பூக்கள் மற்றோர் இடத்தில் இல்லை என்றும் கூறுகிறார். எல்லா உலகங்களையும் அதனுள் எல்லா ஜீவராசிகளையும் படைப்பதற்கு தானே காரணமாக இருந்து அவை எல்லாவற்றிற்கும் நிர்வாஹகமாக இருக்கின்ற இருப்பை நினைத்து கர்வத்துடன் அருள்பாலிக்கிறார் என்று சொல்கிறார்.

Somnath

தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடி போல் சுடர் ஒளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே.(5.4.10)

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரிணி தடே ! ரமயா ரமமாணாய  வேங்கடேசாய மங்களம் ” என்பது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ஸ்லோகம்.    இதன் படி, வெங்கடேச பெருமாள், தனது நிரந்தர வாசஸ்தலமான பரமபதம் அல்லது ஸ்ரீ வைகுந்ததில் இருந்து, மிக புனிதமானதும் வராக புஷ்கரணியும், உயர்ந்த மலைகளை உடையதுமான திருவேங்கடம் என்ற இந்த ஸ்தலம் வந்து, விண்ணோர்களுக்கும், இந்த மண்ணில் உள்ளவர்களுக்கும் அருள் பாலிக்கிறார்.   இப்படிப்பட்ட திருவேங்கடத்தை   விட்டு விலகி, ஆழ்வாரின் மனதிற்குள் வந்து விட்டார் என்று பெரியாழ்வார், தனது திருமொழியின்  (5.4.10) கடைசி பாடலில் “வடதடமும், வைகுந்தமும், மதிள் துவராபதியும், இட வகைகள் இகழிந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே” என்று முடிக்கிறார். இதற்கு முன் பாட்டில், தாம் உகந்து அருளின நிலங்களுடன் ஒப்பிட்டு பெரியாழ்வாரின் திருமேனியையும் எம்பெருமான் விரும்பினார் என்று கூறினார், இந்த பாடலில், அவற்றை விட்டு தம்மையே விரும்பியதை சொல்கிறார்.
ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டும், பின்பு அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பது போல் அன்றி, அந்த பொருளில் சில குற்றம் குறை காரணமாக அதனை இகழ்ந்து விட்டால், மீண்டும் ஒருநாளும் அவற்றை நினைக்க மாட்டாது போல், எம்பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்திபூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்ததனால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளக் கருத்து. 
பெரிய பரப்பை உடைய உயரமான மலையின் உச்சியில் விளங்குகின்ற ஒரு பரிசுத்தமான கோடி எல்லாரும் காண எளிதாக இருப்பதைப்போல் தன்னுடைய இதயத்தில் பளிச்சென்று இருந்த தேஜஸ்ஸ்வரூபியே என்று எம்பெருமானை விளிக்கின்றார். 

சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணங்கள் என்று பொருள் கொள்ளலாம். எம்பெருமான் தன்னுடைய திருவுள்ளத்தில் புகுந்த பின்பு, தன் உடல் பூரித்ததை, பூர்ணமானதை, சொல்கிறார். மேலே சொன்ன திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணங்கள் எல்லாம், ஆழ்வார் தனக்கு பிரகாசித்ததாக சொல்கிறார்.

கொண்டனையே” என்றதற்கு, இப்படியும் ஒரு ஸௌசீல்யம் இருக்கின்றதே, இப்படியும் ஒரு ஸௌலப்பயம் இருக்கின்றதே, இப்படியும் ஒரு வாத்ஸல்யம் இருக்கின்றதே என்று எம்பெருமானை ரசிக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

“உனக்குரித்தாக்கினையே”என்பாலிடவகை கொண்டனையே’ என்பதற்கு, ‘இப்படி செய்தாயே’ என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட ஆழ்வாரை எடுத்து தன் மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய் இந்த பிரபந்தத்தை முடிக்கிறார். “அதனிற் பெரியவென்னாவா‘ என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசம் எல்லாம், இப்பெரியாழ்வார் பக்கம் எம்பெருமானுக்கு பிறந்தபடி இத்திருமொழி என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

One Siva temple on the way to Bhet Dwarka
The SunSet in Western India

சுவரில் புராண நின் பேரேழுதிச் சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும் கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா அவரைப் பிராயந் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – 1.4

முதல் இரண்டு வரிகளில், கண்ணபிரானைக் காண வேண்டும் என்ற ஆவலுடைய ஆண்டாள், அவனைக் கண்ட பின்பு காமதேவனை மறக்கக் கூடும் ஆகையால், அப்படி மறதி நேர்ந்திடாமல் இருக்க, அந்த மன்மதன் பெயரையும் மற்றும் அவனது அம்சங்களையும் சுவரில் எழுதியதை கூறுகிறார். இறுதி இரண்டு அடிகளில், கண்ணபிரானை அன்றி மற்ற எவரையும் அனுபவிக்கத் தனக்கு ருசி இல்லாததையும், பிரிந்தாரை சேர்த்து வைப்பவன் என்று பழைய காலத்தில் இருந்து பெயர் பெற்று இருக்கும் மன்மதன், கண்ணபிரானிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தனது பருத்த முலைகளை துவாரகைக்குத் தலைவனான அக்கண்ணபிரானே அனுபவிக்க தகுந்தவன் என்று அவனை சங்கல்பித்து, அவற்றை தொழுகின்றேன் என்கிறார். பக்திசெல்வம் மிகுந்தவனான இளைய பெருமாள் (லக்ஷ்மணன்) எல்லா உலகங்களையும் ஆனந்திக்க செய்பவனும், தன் அண்ணனுமான ஸ்ரீ ராமபிரானிடம், சிறு வயது முதல் எப்பொழுதும் அன்பு கொண்டவனாக இருந்தான். அது போல், ஆண்டாள் நாச்சியாரின் திருமுலைகளும் பருவம் நிரம்புவதற்கு முன்பே கண்ணனை அணைக்க ஆசைப்பட்டதால் அவனே அனுபவிக்க தக்கவன் என்கிறார். இப்போது அவனாலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி பெருத்து உள்ளதாகவும் கூறுகிறார். அவனுக்கு என்று சங்கல்பித்த பின்பு அவைகளும் தொழ தக்கவைகளே என்கிறார். இவை வாடுவதற்கு முன்பு அவனோடே சேர்ப்பிக்க வேண்டுமாக கேட்கிறார்.

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக்கு காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே 4.8

தனக்கு அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, அவனுடைய ரக்ஷகத்வத்திற்கும் (பாதுகாக்கும் தன்மைக்கும்) ஸௌலப்யத்திருக்கும் (எளிமையாக பழகும் தன்மை) குறையில்லை; கூடல் கூடாததுதான் காரணம் என்று ஆண்டாள் சொல்வதான பாடல்.

ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் நல்ல வாசனை சூழ்ந்த துவாரகையை நிர்வகிப்பவனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனான கண்ணனுடன் கூடிட, கூடலே நீ கூடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன், ஆகையால் நம்மை ஏற்றுக்கொண்டே தீருவான், எனவே அவன் வரும்வரை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதே நமக்கு நல்லது என்று சீதா பிராட்டி இருந்ததைப்போல் என்று ஆண்டாள் உபவாசம் இருந்தாலும், ஆர்வம் மிகுதியால் அவனை பெறுவதற்காக, நோன்பு நோற்பது, காமனிடம் சொல்வது, சிற்றில் இழைப்பது, பனி நீராடுவது, கூடலிழைப்பது என்று தங்களுடைய ஸ்வரூபத்திற்கு ஒவ்வாத காரியங்கள் செய்பவர்கள் ஆவல் உடையார்.

மல்லாண்ட திருத்தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பாடுவதும், “உரகல் உரகல்” என்று எப்போதும் விழித்திருக்கும் நித்யஸூரிகளை பார்த்து , உறங்காமல் இருந்து எம்பெருமானை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொங்கும் பிரிவால் பெரியாழ்வாரை போல், காரியங்கள் செய்பவர்கள் அன்புடையோர்.

ஆழ்வார் குடிப் பிறப்பால் தன்னுடைய அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, என்பதை ஆண்டாள் சொல்கிறார்.

விரைசூழ் துவராபதிக்கு என்று சொல்வதன் மூலம் இயற்கையிலேயே வாசம் நிறைந்த பதினாயிரம் தேவிமார்களை காப்பாற்றி துவாரகைக்கு அழைத்து வந்தது சொல்லி அவனது ரக்ஷகத்துவம் சொல்கிறார். இவள் அளவுக்கு ஆவல் அன்பு இல்லாதவர்கள் ஆதலால் எம்பெருமான் தன்னை சேர்த்துக்கொள்வார் என்கிறார்.

நித்யஸூரிகளை ரக்ஷிப்பதைக் காட்டிலும் பசுக்களை காப்பதில் உவந்து இருப்பான் (திவத்திலும் பசுநிரை மேய்ப்பு என்று நம்மாழ்வார் திருவாய்மொழி10.3.10) என்று சொல்வது போல் இங்கே கன்று மேய்த்து விளையாடும் கோவலன் என்று சொல்லி அவனது எளிமை (சௌலப்யம்) சொல்லப்பட்டது.

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள், மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ, சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே (9.8)

கரியகுருவிக் கூட்டங்கள் விடியற்காலையில் மனிதர்களுக்கு முன்னம் எழுந்திருந்து திருமாலிருஞ்சோலை மலை மற்றும் துவாரகைக்கு தலைவனாகவும், ஆல மரத்தின் இலையில் எழுந்தருளிய ஸர்வேஸ்வரனாகவும் உள்ள எம்பெருமானின் வார்த்தைகளை சொல்லி அவன் வருவதை மருள் என்ற பண்ணினை பாடுகின்றன, இது உண்மையா என்று ஆண்டாள் சொல்கிறார்.

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற, என்று நம்மாழ்வார் (திருவாய்மொழி 6.7.2) சொல்வதுபோல், ஆண்டாள் தன்னுடைய ஊரில் அறிவற்ற குருவிக்கூட்டங்களும், எம்பெருமானைப்பற்றி பேசுகின்றன என்கிறார்.

ஆலின் இலை பெருமான் என்றதால், எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கிக்கொண்டு, அப்போது துளிர்த்த ஓர் ஆலிலையில் சயனித்து, சேராதவற்றை சேர்த்து வைக்கும் திறமையை உடையவன் என்று சொல்லிற்று.

கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும், ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும், நாட்டிற்றலைப் பழி எய்தி உங்கள் நன்மை அழிந்து தலையிடாதே, சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (12.9)

தான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்துகொண்டு எல்லா நேரங்களிலும் கோவிந்தா கோவிந்தா என்று கூறுகின்றது, உணவு கொடுக்காமல் இருந்தால் உலகளந்த பெருமானே என்று உரக்க கூவுகிறது, இந்த திருநாமங்களை கேட்டாலே தான் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறது என்கிறார். பெரும் பழியை ஏற்றுக்கொண்டு தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி தன்னை துவாரகைக்கு கொண்டு விடுங்கள் என்கிறார்.

தான் எம்பெருமானுடன் சேராமல் தவித்துக்கொண்டு இருக்கும் போது, தான் வளர்த்த கிளி முன்பு சொல்லி கொடுத்த திருநாமங்களை சொல்லி தன்னுடைய துயரத்தை அதிகரிக்க, அந்த கிளியை கூண்டில் அடைத்தாள். அது கோவிந்தா கோவிந்தா என்று கூவ ஆரம்பித்தது. இவள் சொன்ன ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்ற பரமபத நாதன் திருநாமத்தை சொல்லாமல், சௌலப்யத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பசுக்களை மேய்த்த கண்ணனின் திருநாமத்தை சொன்னால் அது அவளுக்கு மேலும் துயர் கொடுக்கும் என்று தெரிந்து இன்னும் உரக்க சொன்னது. அந்த கிளிக்கு பட்டினி போட்டால் அது பேசாமல் இருக்கும் என்று நினைத்தது தவறாக சென்று அந்த கிளி, த்ரிவிக்ர அவதார நாமத்தை, எம்பெருமானின் திருவடிகள் சென்ற வானத்தில் எல்லாம் கேட்கும்படி உரக்க கூவ ஆரம்பித்தது. கோவிந்தன் பசுக்களின் பின்னே தனிமையில் செல்லும்போது அந்த பசுக்களின் ரக்ஷகத்துவத்திற்கு அடிமையானவள் இவள்; அதனால் தான் அது கோவிந்தா என்று கூவிற்று.

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே, இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டானடிக் கீழெய்தகிற்பீர் மலைத்தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளங் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே. (6.6.7)

பூதனையானவள் முடியும்படியாக, அவளின் பெருத்த முலையில் சுரந்த விஷம் நிறைந்த பாலை அமுது செய்தவனாய், துவாரகைக்கு நிர்வாககனாய், பசுக்களின் பின்னே பெரிய இலையினால் செய்யப்பட்ட குழல் கொண்டு, ஊதிக்கொண்டு போனவனாய், இடை பெண்களுடைய வளை மற்றும் ஆபரணங்களை விளையாட்டுக்காக (லீலை) அபகரித்தவனின் திருவடிகளை அடைய விரும்புபவர்களே, மலைகளில் இருந்து மணிகளை திரட்டிக்கொண்டு, உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி, வளத்தை கொண்டு தருகின்ற, பெருகி வருகின்ற தண்ணீரை கொண்டு உள்ள, காவேரியை உடைய நாட்டுக்கு அதிபதியாய், வில்லை கையில் ஏந்திய க்ஷத்ரிய வம்சத்து சோழன் சேர்ந்த கோவில் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே. (6.8.7)

காண்டவ வனம் என்பது தேவேந்திரனுக்கு உரிய இந்த உலகத்தில் உள்ள ஒரு காடு. ஒரு நாள் அக்னி, ஓரு அந்தணன் வேடம் பூண்டு அர்ஜுனனும் கண்ணனும் யமுனா நதி கரையில் கூடி இருந்த இடத்தில வந்து சேர, அந்த அந்தணனை அவர்கள் நன்கு உபசரிக்க, அக்னி அவர்களிடம் உணவு வேண்ட, ‘வேண்டிய உணவை அளிப்போம்’ என்று அவ்விருவரும் உறுதி கூற, உடனே அந்த அந்தணன் தான் யார் என்ற உண்மையை தெரிவித்து காண்டவ வனத்தைத்  தனக்கு இரையாக அளிக்குமாறு வேண்ட, அவர்கள் பல கொடிய அசுரர்களும் அரக்கர்களும் துஷ்ட மிருகங்களும் நிரம்பியிருக்கும் இந்த காடு அழித்து ஒழிவதே நாளது என்று நிச்சயித்து அக்னியிடம், ‘அப்படியே உண்பாயாக’ என்று அனுமதி கொடுத்ததினால் அக்னி அந்த காடு முழுவதையும் ஆக்ரமித்துப் பூர்ண திருப்தியுடன் உண்டான் என்பது கதை மஹாபாரத்தில் ஆதி பருவத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனான கண்ணபிரான் தனது அன்பனான இந்திரன் வருந்தும்படி அவனது காட்டை அழிக்க அனுமதித்தது அவதார பலன் நிறுவுவதற்காக என்று அறிந்து கொள்ளலாம். காட்டில் உள்ள அளவற்ற கொடுமையான விஷ உயிரினங்களை அழித்து பூமியி்ன் பாரத்தைக் குறைத்து அருளினதை உணரலாம். . 

திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும், தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை சத்தியபாமாவிற்காக துவாரகையில் கொண்டு நட்டவனான எம்பெருமானை திருநறையூரில் கண்டனே என்கிறார்.

திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன், அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய் ஞானம் இல். (71)

மஹா பிரளயத்தின் போது, பூமியை எடுத்து காப்பாற்றியதை அறியாததை போல், இந்த பூவுலகில் இருந்து உய்ய (சம்சார பிரளயத்தில் இருந்து மீள) அவன் கூறிய வார்த்தைகளை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்று வருந்துகிறார். இப்பாட்டில் சேயன் என்பது மிகப்பெரியன் என்பதோடும் அணியன் என்பது சிறியன் என்பதோடும் சேர்ந்து வரும். எம்பெருமான் எளியவனாகவும் மிக உயர்ந்தவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பான் என்று சொல்வது மாயன் என்பதால் விளங்கும்.

ருத்ரன், பிரமன் போன்ற தங்களுக்கே, மிக தூரத்தில் இருப்பவன் என்று இராமாயணம் உத்ரகாண்டத்தில் சொன்னது போல், இவன் எக்காலத்திலும் எவனாலும் காண அரியவன் என்று பிரமன் சொன்னதை இங்கே குறிப்பிட்டு உள்ளார். இதேபோல், வராக புராணம், கீதை, மற்றும் விஷ்ணு தர்மம் இவற்றில் இருந்தும் மேற்கோள் காட்டப்படுகிறன. வேதத்தில் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவன் என்று சொல்லி அளவிடமுடியாதபடி பெரியவன் என்று சொல்கிறது. அவன் மிகவும் பெரிய ரூப, ஸ்வரூப, குண விபூதிகளை கொண்டவன் ஆகையால், இப்படி அரியவனாக இருக்கிறான்.

அணியன் என்று சொன்னது, ஆசையுள்ளவர்களுக்கு மிக அருகிலேயே எளிமையாக அறியலாம்படி உள்ளவன் என்கிறார். அணியன் சிறியன் என்று சௌலப்யத்தை சொல்லும். சேயன் பெரியன் என்பது அவனுடைய பரத்வத்தை சொல்லும்.

துரியோதனன் போன்றவர்களுக்கும் தன் முயற்சியால் அறிய முயல்பவர்களுக்கும் தூரத்தில் உள்ளவன்; யசோதை, ஆய்ச்சியர் போன்ற ஆசை உடையவர்களுக்கு மிக அருகில் உள்ளவன் என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொன்னதும் (1.3.4) இங்கே குறிப்பிட்டுள்ளார்.

துவரைக்கோனாய் என்று சொன்னதில் துவாரகைக்கு நிர்வாககன் என்ற பெருமை உடையவனாய், பதினாயிரம் ஸ்திரீகளுக்கு ஒரே காலத்தில், ஆடல் கொடுக்கவல்ல ஆச்சர்யமான கண்ணன் என்பது விளங்கும். பாரத போரில், சொன்ன சரம ஸ்லோகத்தை அறியாதவர்கள் எம்பெருமானுக்கு எதிரிகள் என்கிறார். அவர்கள் சரம ஸ்லோகத்தை அறியாததற்கு காரணமே அவர்கள் எம்பெருமானை வெறுப்பவர்களாக இருப்பது தான் என்கிறார்.

எல்லா தர்மங்களையும் அடியோடு விட்டுவிட்டு, என் ஒருவனையே உபாயமாக அடைவாய் என்று சொன்னது சரம ஸ்லோகம். ‘ஞான சக்திகளுடன் கூடிய நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுகின்றேன்’ என்று சொன்னதில் மாம் என்ற சௌலப்பியம் அணியன் சிரியன் ஓதிய வாக்கு என்றும் அஹம் என்ற பதத்திற்கு சொன்ன ஞான சக்தி முதலியவை சேயன் பெரியன் ஓதிய வாக்கு என்றும் கூறுகிறார். துவரைகோன் என்றது ஸ்வாமித்யம் சொல்கிறது. மாயன் என்பது சௌலப்யதோடு ஞான சக்திகளை சேர்த்து சொன்னது.

நம்மாழ்வார் – திருவாய்மொழி 5.3.6

அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லி என் தோழிமீர், என்னை இனியும் உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன், முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன், மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.

தோழிமார்களே! அழகிய துவாரகைக்கு அரசனும் நித்யஸூரிகளுக்கு தலைவனும் மணிவண்ணனும் ஆன கண்ணனின் கண் வலையில் அகப்பட்டுக்கொண்டதாகவும், அதனால் தோழியர்களும், தாயாரும் தன்னை பற்றி இனி ஆசைவைக்க நியாயம் இல்லை, ஊரார் என்ன செய்தால் என்ன என்று ஆழ்வார் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

முதல்வன் வண் துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், ஆகையாலே தன்னைப் பற்றி இனி உமக்கு ஆசை இல்லை என்று தாயாருக்கும் தோழிக்கும் சொல்கிறார். கண்ணபிரானுடைய குணசேஷ்டிதங்களில் தான் அகப்பட்டதாகவும் இனி யார்  என்ன செய்தால் என்ன என்றும் கூறுகிறார். “வாசுதேவன் வலையுளே அகப்பட்டேன்” என்றது தப்ப முடியாதபடி அகப்பட்டு விட்டேன் என்று சொல்வதாகும். எம்பெருமானுடைய வலை என்பது அவனது திருக்கண்களை வலையாக கொள்வது ஆகும்.

மீண்டும் இன்னொரு திவ்யதேச அனுபவத்தோடு சந்திக்கலாம். நன்றி.

திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

எம்பெருமான், திருவரங்கனாக

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொள்கிறார்.
  • மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல கைங்கர்யம் செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் சொல்வது குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய கஜேந்திரன் என்ற யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்தியது கூறப்பட்டது.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன, மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக ஆனதாகவும் ஆழ்வார் வருந்தி இந்த பிறவி வீணானதாக தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்கிறார்.

திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால் அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற பாடலில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 34

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா, கள்ளத்தே நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.

ஆழ்வார் இந்தப் பாடலில், ஆத்மாவை தன்னுடையதாக எண்ணிக் கொள்ளும் கள்ளவனாகிய தான், அவனுக்கு அடிமை செய்பவன் போலத் தோன்றி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்த போதிலும், எம்பெருமான் ஒவ்வொருடைய நெஞ்சத்தில் இருந்து கொண்டு எல்லாருடைய நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை, புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே தன் விலா எலும்பு நோகும்படி சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

  • நாம் எங்கும் தேடி ஓட வேண்டாதபடி, நம் இதயத்திலுள்ளே எப்போதும் நெருக்கமாக இருக்கும் எம்பெருமான் என்கிறார்.
  • நெஞ்சத்தின் உள்ளே, எப்பொழுதும் வசிக்கின்ற, எங்கும் வெளியே செல்லாத, எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமான் என்கிறார்.
  • சிந்திப்பதற்கு உறுப்பான, அறிவு சிறிதும் இல்லாதவன் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார்.
  • “ஆழ்வார் பரம பாகவதன், பரமபக்தன்” என்று அனைவரும் புகழும்படியாகவும் “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி” (திருப்பள்ளியெழுச்சி, 10) என்று கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்ததாக சொல்கிறார்.
  • எல்லை கடந்து சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

கள்வனாகிய தான், எம்பெருமானுக்கு தொண்டு செய்பவனாக, தொண்டு செய்வதற்கு வேண்டிய வேஷங்களை போட்டு கொண்டு இருப்பதை, சிந்திப்பவர்களின் சிந்தனைகளை எல்லாம், கூடவே இருந்து அறிந்துகொள்ளும் எம்பெருமான் தெரிந்து கொண்டு இருப்பான் என்று ஆழ்வார் தெரிந்து கொண்டு, அதனால், தனக்குள்ளே, வெட்கம் அடைந்து, எம்பெருமானை விட்டு விலகிச் சென்றதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய விலா பக்கத்துக்கு எலும்பு உடைந்து விழும்படி ஆழ்வார் சிரித்தார் என்பது பாடலின் பதவுரை.

அறிவு வெளிப்படும் வழியான மனதிலே, எப்போதும் வாழ்கின்றவனாய், அதனால் நம்முடைய குற்றங்களை நேரே எல்லாவற்றையும் அறிபவனான (சர்வக்ஞனான) இவனை, பொய்யனாக தான் அணுகி, இவனுக்கும் தோஷத்தை விளைவித்து, என்ன காரியம் செய்து விட்டேன் என்று வெட்கமடைந்து, இருட்டும், சூரியனின் தேஜஸும் ஒன்றாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, இப்படி எம்பெருமானுக்கு குற்றம் விளைவிப்பதை காட்டிலும், நம்முடைய குற்றங்களை அறிந்து கொள்வதற்கு அறிவில்லாமல் இருக்கிற சம்சாரிகளோடு கூடியிருந்து அழிந்து போவதே நல்லது என்று நினைத்து பெரியபெருமாள் திருவடிகளில் உள்ள ஆசையை விட்டு அகல நினைக்கிறார். இங்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த வளவேழ் உலகின் (5.1) பதிகத்தை நினைவில் கொண்டால், ஸ்வாமியும் எம்பெருமானின் பெருமையும் தன்னுடைய தாழிச்சியையும் சொல்லிக்கொண்டு அவனை விட்டு அகல பார்த்ததையும் ஒரு வித ஒப்புமையாக கொள்ளலாம்.

இனி சற்று விளக்கமாக.

உள்ளத்தே உறையும் மாலை

எண்ணங்களின் ஊற்று வாயாக உள்ள நெஞ்சத்தில் வாழ்பவன் என்பதை உள்ளத்தே என்று ஆழ்வார் கூறுகிறார். வெளியிலே உள்ளவன் கண்ணால் கண்டதை தவிர வேறு ஒன்றையும் அறிய மாட்டான் என்றும், உள்ளத்திலே இருப்பதனால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. உறையும் என்பதால் எப்போதும் வசிப்பவன் என்று பொருள். அவன் எங்காவது, எப்போதாவது வெளியே போய்விட்டு வந்தால், அந்த சமயத்தில், சரியான வழியாகவோ (சாஸ்திரப்படி நடப்பது), அல்லது நம் இஷ்டப்படி (மூளை சொன்னபடி) நடக்கலாம், எப்போதும் வசிப்பதால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. மாலை என்பதால் எல்லோரையும் விட பெரியவன் என்று பொருள் கொள்ளலாம். அதனால் இவனை ஏமாற்ற முடியாது.

ஜீவாத்மா இந்த உடலின் உள்ளே இருந்த போதும், அதனால் இந்த உடலினுள்ளே இருப்பவற்றை எல்லாம் அறியாது. ஆகாயம் எல்லா இடத்தில வியாபித்து இருந்தாலும் அதனால் எல்லாவற்றையும் நியமிக்க முடியாது. ஆனால் இவன் எல்லாவற்றையும் அறிந்தவனாய், அனைத்தையும் நியமிப்பவனாய் பெரியவனாக இருப்பதால் இவனை ஏமாற்றுவது என்பது அடியோடு முடியாது என்று கருத்து.

பெரியாழ்வார் திருமொழியில் (5.4.11) பெரியாழ்வார் “விட்டுசித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனை” என்று அருளிச் செய்தார்.

ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.6.1) “என் நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ் நூல் இவை மொழிந்து” என்று கூறுகிறார். இவரே திருவாய்மொழி (7.9.3) ல், “என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை ” என்று எம்பெருமான், ஆழ்வாரின் நாவின் மூலமாக அவருள் புகுந்ததை சொல்கிறார். “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-2)  என்றும் திருப்பேர்நகர் பதிகத்தில் சொல்கிறார். இதேபோல், திருவட்டாறு பதிகத்தில் (திருவாய்மொழி 10.6.1), “மெய் நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன், கை நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல், மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு, எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?” அருளிச்செய்த பாடலையும் சொல்லலாம். ஆழ்வார் திருமேனியில் நின்ற எம்பெருமான் என்று ஒரு அர்த்தம்; எம்பெருமான் திருமேனியில் அணிந்திருந்த திருத்துழாய் மாலையின் மணம் அவர் திருமேனியில் இருந்து அவரது திருமுடிக்கு மேலே சென்றதாக இன்னொரு பொருள். ஆழ்வார், “என்ன நன்மை செய்தேன் என்று என் நெஞ்சில் புகுந்து, ஏதோ பெறாப் பேறு பெற்றார் போலே விளங்குகிறான்! ” என்று மகிழ்கிறார்.

எம்பெருமான் நம்மாழ்வாரின் வாக்கிலும் உடம்பிலும் அவருக்கு நல்லது செய்வதற்காக அவருள்ளே வசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆசார்யன் தெரிவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் “வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போய் அறியாய்” என்று பெரிய திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் பதிகத்தில், (8.9.5) திருக்குடந்தை பெருமானை பற்றி சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா

நமக்குள்ளே அந்தர்யாமியாக வாழ்கிறான் என்று சிந்திப்பதற்கு உறுப்பான அறிவு இல்லை என்று கருத்து. பரமாத்மாவான அவனை பற்றி அறிவு இல்லாததோடு ஜீவாத்மாவாகிற தன்னைப்பற்றிய அறிவும் இல்லை, தன்னை பற்றி அறிந்தால் மட்டுமே தன்னை உடையவனாக அவனை பற்றிய அறிவு வரும் என்பது கருத்து. ஒன்றில்லா என்பதற்கு விளக்கம் சொல்கையில்,

  • ஜீவாத்மாவான தன்னை பற்றிய அறிவு இல்லை
  • அறியவேண்டிய பரமாத்மாவை பற்றிய அறிவு இல்லை
  • இந்த உடல், தாழ்ந்தது, தற்காலிகமானது, ஜீவாத்மாவை விட வேறு பட்டது, பரமாத்மாவிற்கு தொண்டு செய்வதற்காகவே ஜீவன் ஏற்பட்டது என்ற தன்மைகளை பற்றிய அறிவு இல்லை

என்று சொல்கிறார்.

அந்தர்யாமி என்பதும், அந்தராத்மா என்பது இரண்டு வேறு வேறு விஷயங்கள். அந்தராத்மா என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளே இருக்கும் பரமாத்மாவின் ஐந்து நிலைகளில் ஒன்று. அந்தர்யாமி என்பது அந்த ஜீவாத்மாவின் உள்ளே இருக்கும் அந்தராத்மாவின் / பரமாத்மாவின் நியமிக்கும் (நியந்த்ருத்வம்) தன்மை அல்லது குணம். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதுமாக வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)

கள்ளத்தே நான்

அறிவற்றவன் என்று உலகத்தார் அறியமுடியாதபடி வெளி வேஷங்களால் தன்னை மறைத்து கள்ளன் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அறிவு இல்லாதவர்களிடம் தன்னிடம் தன்னுடைய அந்தராத்மா அறிய தீய குணங்கள் ஒன்றும் கிடையாது என்று சொல்லி ஏமாற்றுவாராம். அறிவாளிகளிடம் தன்னிடம், தன் அந்தராத்மா அறிய ஒரு நல்ல குணமும் கிடையாது என்று சொல்லி நைசாந்துசந்தானம் வேஷம் தரித்து, அவர்களும் இவருக்கு ஆத்மாவை பற்றிய அறிவும், பரமாத்மாவைப் பற்றிய அறிவும் அவசியம் இருக்கும் என்று நினைக்கும்படி செய்து அவர்களையும் ஏமாற்றுவாராம்.

பிறப்பில் இருந்தே தீய குணங்களுக்கு கொள்கலமாக இருந்ததாகவும், அவை ஒன்றும் தமக்கு இல்லை என்று மற்றவர்களை நம்ப செய்ததாகவும், அதுவும் எம்பெருமான் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இந்த கள்ளத்தனங்களை செய்ததாக சொல்கிறார். கள்ளத்தனங்களை செய்த போதும், இப்போது அப்படி இல்லை என்று காட்டிக்கொள்ளும் இந்த சமயத்திலும், எம்பெருமான் கூடவே சாட்சியாக இருந்தார் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்.

நானும் தொண்டாய்

ராமாயணத்தில் பகவத் சம்பந்தம் இல்லாதவனை குறித்து வால்மீகி தன்னை தானே நிந்தித்து கொள்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

யஶ்ச ராமஂ ந பஶ்யேத்து யஂ ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநஂ விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

‘யார் ராமனைப் பார்க்கவில்லையோ அல்லது ராமனைக் காணவில்லையோ, அவர் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களாலும் குற்றம் சாட்டப்படுவார். தன்னை தானே கூட இகழ்ந்து கொள்வான்.” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இங்கு ஆழ்வார், ஆத்ம குணங்கள் நிரம்பியவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகளை ஒரு நன்மையும் இல்லாத தானும் செய்ய வந்ததாக சொல்லி, நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வந்ததால் தன்னை தானே இகழ்ந்து கொள்கிறார்.

தொண்டுக்கே கோலம் பூண்டு

எம்பெருமான் விஷயத்தில் கள்ளத்தனம் செய்வதோடு மட்டும் இல்லாமல், சத்வ குணங்களை கொண்ட நல்லவர்களும் தன்னை கொண்டாடும்படி வேஷங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு உள்ளதாக ஆழ்வார் கூறுகிறார். தன் உடம்பு முழுவதும் 12 திருமண் இட்டுக்கொண்டும் பஞ்ச ஆயுதங்களை தரித்துக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்.

ஆழ்வார் பஞ்ச ஆயுதங்களையும் தரித்து கொண்டதாக சொல்கின்ற உரைநூல் ஆசிரியர் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலங்களிலோ பஞ்சசம்ஸ்கார நிகழ்வின் போது ஐந்து ஆயுதங்களையும் தரிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், அது தற்பொழுது சங்கு சக்கரங்களை தரிப்பதோடு உள்ளது.

கோலம் பூண்டு என்று சொல்வதால், கோலம் மட்டும் பூண்டு கொண்டு, அடிமைத்தனம் (கைங்கர்யம்) எதுவும் செய்யாமல் என்றும் கொள்ளலாம். ஆத்ம குணம் நிறைந்தவர்கள் செய்ய வேண்டிய அடிமைத்தனங்களை செய்யாமல் இருந்தேன் என்பதை “தொண்டுக்கே” என்ற ஏகாரத்தின் மூலம் சொல்கிறார்.

மனப்பூர்வமாக இல்லாமல், வெளி வேஷத்திற்காக அச்சுதா, அமரர் ஏரே, ஆயர் தம் கொழுந்தே (திருமாலை 2), என்று எம்பெருமான் பெயர்களை சொல்லியும், இச்சுவை தவிர, யான்அச்சுவை பெறினும் வேண்டேன் (2) என்று அவன் இனிமையை பேசியதாகவும், நாவிலிட்டுழி தருகின்றோம், நமன் தமர் தலைகள் மீது (1) என்று பிறர் மயங்கும்படி எமன் முதலியோர் தலையில் கால் வைக்கின்றேன் என்றும், தன்னை ஒரு பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு பிறருக்கு உபதேசம் செய்கிறேன் என்றும் இப்படி எத்தனை பிதற்றினேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

எண்ணங்கள், ஊற்று போல் புறப்படும் நெஞ்சத்தில் எழுந்தருளி இருப்பதால் நினைப்பவர்கள் நினைப்பதையெல்லாம் கூடவே இருந்து அறிகிறான் என்பதை தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

சகுந்தலை, துஷ்யந்தனைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “துஷ்யந்த மஹாராஜனே, நான் ஒருவனே இருக்கிறேன் என்று நீ எண்ணுகிறாய், இதயத்தில், நித்யவாசம் செய்கின்ற ஆதிபுருஷனான பகவானை நீ அறியவில்லை, எவரொருவர் பாப கர்மங்களை அறிபவரோ, அவர் அருகிலேயே, நீ பாபத்தைச் செய்கிறாய்” என்று சகுந்தலை கூறிய வார்த்தைகள் இங்கே கவனிக்க தக்கவை. எல்லாம் அறிந்தவன் ஆன, எல்லாவற்றையும் நியமிக்கின்றவன் ஆன, எம்பெருமான் நெஞ்சினில் இருக்கும்போதே, யாருக்கும் தகாத காரியங்களைச் செய்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

வெள்கிப் போய்

தன்னுடைய கள்ளத்தனத்தையும், அவன் எல்லாம் அறிபவன் என்பதையும், அவன் நெஞ்சினில் எப்பொழுதும் இருப்பவன் என்பதையும் நினைத்தவுடன் ஆழ்வார் வெட்கம் அடைகிறார். இப்படி வெட்கம் அடைந்து, தலை குனிந்து எம்பெருமான் முன் நிற்கமுடியாமல், அவரை விட்டு விலகி போனார். மற்ற விஷயங்களில் வெட்கம் அடைந்தால், அது இல்லாத இடமாக பார்த்து விலகி போவது போல், எம்பெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை சிந்திக்க மறந்து, பெரியபெருமாள் இல்லாத இடமாக, ஆழ்வார் தேடி போவதாக சொல்கிறார்.

என்னுள்ளே நான்

சம்சாரிகள் சுத்தமாக வெட்கம் அற்றவர்கள் ஆகையால், அவர்கள் விலவறச் சிரிக்கும் விஷயத்தில் ஆழ்வாரோடு சேர மாட்டார்கள்; பெரிய பெருமாளை விட்டு ஆழ்வார் விலகி விட்டதாக நினைத்தாலும், முன்னே இருந்தால் கூட ஆழ்வாரை பார்த்து சிரிப்பது என்பது எம்பெருமானுக்கு இஷ்டம் இல்லாத ஒன்று, ஆகையால், பெரியபெருமாளும் ஆழ்வாருடன் இந்த விஷயத்தில் சேர மாட்டார்; இதனால், ஆழ்வார் மட்டும் தனக்கு தானே சிரித்து கொள்ள வேண்டி உள்ளது. தாம் சிரிக்க தக்கவன் என்பதை உணர்ந்து, கூட சிரிப்பவர் யாரும் இல்லாமையால், இவ்விஷயத்தில், இவரே இவர்க்கு துணை ஆனார் என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

விலவறச் சிரித்திட்டேனே

விலா எலும்புகள் முறியும் படி சிரித்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார். தாம் செய்த காரியம், சிரிக்கத்தக்க காரியங்களின் எல்லையில் நிற்பதால், தன் சிரிப்புக்கும் எல்லை இல்லை என்று சொல்கிறார். தீக்குளிக்க நினைப்பவர்கள், முதலில் வெற்றலை போட்டுகொண்டு தீக்குளிக்கலாம் என்று நினைப்பது போல், பெரிய பெருமாளை விட்டு அகன்று அழியலாம் என்று நினைப்பதுவும் ஒன்றே என்று எண்ணி சிரிக்கிறார்.

பரத பெருமான், இராமபிரானை தேடி, அந்த பரத்துவாச முனிவர் சொன்ன ஆசிரமத்தை அடைந்தேனோ என்று சத்ருக்னனிடம் மகிழ்ச்சியுடனும் ஒளிரும் முகத்துடனும் சொல்கிறார்.

கச்சந்நேவ மஹாபாஹுர்த்யுதிமாந்பரத ஸ்ததா.ஷத்ருக்நஂ ப்ரவீத்தரிஷ்டஸ்தாநமாத்யாஂஷ்ச ஸர்வஷஃ৷৷

மந்யே ப்ராப்தாஃ ஸ்ம தஂ தேஷஂ பரத்வாஜோ யமப்ரவீத். நாதிதூரே ஹி மந்யேஹஂ நதீஂ மந்தாகிநீமிதஃ (இராமாயணம், அயோத்தியா காண்டம் 2.99.8 மற்றும் 9)

சரம ஸ்லோகம் கேட்பதற்கு முன்னால், அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் அதனை அடைய வழிகளை கேட்டு அறிந்து, அவை அரியனவை என்று சோகத்துடன் இருந்தான். கிருஷ்ணனிடம் மீண்டும் கேட்டால் அவன் அதற்கும் அவன் ஒரு பரிகாரம் சொல்வான், அவனை அதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தான். அதே போல், அர்ச்சுனன் சோகத்துடன் இவ்விஷயத்தை விட்டு அகன்று விடுவானோ என்று எம்பெருமான் சரம ஸ்லோகம் அருளி செய்கிறார்.

அதே போல் ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.1.3)ல், “அந் நலனுடை ஓருவனை நணுகினம் நாமே” என்று சொல்வதும் “எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!” என்ற பொருளில் வரும்.

பரதனும், அர்ச்சுனனும் நம்மாழ்வாரும் எம்பெருமானை நெருங்கும் போது, இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், இவ்விஷயத்தில் இனி பெரியபெருமாளை அணுக கூடாது என்று ஆசையற்று நீங்க பார்க்கிறார். ஆகையால், வெற்றிலை தின்று, பூச்சூடி, தீக்குளிப்பவர்களை போலே சிரித்துக்கொண்டே எம்பெருமானை விட்டு அகலப் பார்க்கிறார்.

இந்த பாடலுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை, கெட்ட குணங்கள் அத்தனையும் உண்டு என்று சொல்லும் நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி நிறைவடைகிறது. இனிஅடுத்து வரும் பகுதி, ஆழ்வார் அருளி செய்த திருமாலையின் மிக முக்கிய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும். அதனை அடுத்த பாசுரம் பற்றிய பதிப்பில் அனுபவிக்கலாம். நன்றி.

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம். அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி இங்கே கண்டோம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மீது பாடிய மற்ற பாடல்களை கீழே காண்போம். நன்றி.

பெரியதிருமொழி

4.3.8

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை, மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை, தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்  செம்பொன் செய் கோயிலி னுள்ளே, மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஓழிந்தேனே.

இங்கே, பாலோடு சக்கரையும் சேர்த்து பருகுவார் போல் க்ருஷணாவதாரத்தோடு திருவேங்கடமுடையானையும் சேர்த்து அனுபவிக்கிறார். தன்னுடைய பேரனோடு பகைத்த பாணாசுரனின் ஆயிரம் தோள்கள் கீழே விழும்படி அன்று திருவாழியை தொட்டவனை, இன்னமும் விரோதிகள் வந்தால் என்ன செய்வது என்று ஒளிபடைத்த சிகரங்களை உடைய திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற, வேதங்களை பிரதிபலிக்கின்றவனாய், தானே பிரகாசம் மிக்கவனாய், தெற்கே திலகம் போல் இருக்கின்றவர்கள் எல்லோரும் கூடும் திருநாங்கூர் செம்பொன்கோவிலில் கண்டு தொழுதேன்.

4.7.5

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே, நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், சேடார் பொழில் சூழ் திருவெள்ளக் குளத்தாய், பாடா வருவேன் விணையாயின பாற்றே.

திருவெள்ளக்குளத்தில் இருப்போருக்கு முகம் காட்டிக் கொண்டுள்ள எம்பெருமானிடம் , தன் பாவங்களை நீக்கு என்ற ஆழ்வாரிடம், அங்குள்ள புகழ் பெற்ற வேதியர்கள் போல் சில தர்மங்களை செய்து ஆழ்வாரும் விரோதிகளை போக்கிக்கொள்ள கூடாதோ என்ற எம்பெருமானிடம், கானமும், வானரமும், வேடுவரும் என்று எல்லாவற்றிற்கும் முகம் காட்டி கொண்டுள்ளவன் அன்றோ அவன்; தனக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகிறார்.

பரிவிற்கும் ஆண்பிள்ளைத்தனத்திற்கும் குறைவற்றும், திருமலையில் நின்றும், வேடுவர்கள் நிறைந்திருக்கின்ற அங்கே நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமான் தன்னுடைய ரூப, ஸ்வரூப குணங்களுக்கு தானே பிரகாசம் கொடுக்கின்றான் என்றும், தேசம் எங்கும் இருக்கின்ற கீர்த்தியுடைய வேதியர்கள் நிறைந்துள்ள, தளிர் சோலைகளில் சூழப்பட்ட திருவெள்ளக்குளம் என்ற திருநாங்கூர் திவ்யதேசத்தில் எழுந்தருளி இருப்பவனே என்றும் எம்பெருமானுடைய குணங்களை பாடி வருகின்ற தன்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் சிதற அடிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு உள்ள சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டு என்பது வழக்கம். இந்த ஒற்றுமை விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என்று இங்கே விளிக்கின்றார்.  திருவேங்கடமலை விஷயமான “கண்ணார் கடல் சூழ” என்ற திருமொழியில் அடியேன் இடரைக்களையாயே என்றதும், இந்த ஒற்றுமையை குறித்தே என்று கொள்ளலாம்.

5.3.4

வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்க்கட்கு அரசளித்த, காம்பின் ஆர்த் திருவேங்கடப் பொருப்ப. நின் காதலை அருள் எனக்கு, மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த, தீம் பலங்கனித் தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!

மாஞ்சோலையிலே சென்று அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அதனை போக்க வேறு சுவை வேண்டி, இனிய பலாப்பழத்தின் தேனினை சுவைக்கின்றது. அத்தகைய திருவெள்ளரையில் நின்ற எம்பெருமானிடம், பாரத போரில் மேல் விழுகின்ற குதிரைகள் மாய்ந்து போகும்படியும், எதிரிகள் உயிர் போகும்படியும் செய்து, பஞ்ச பாண்டவர்களை வெற்றி பெற செய்த உதவி செய்தவனும் மூங்கில்கள் நிறைந்த திருவேங்கட மலையில் உள்ள அவனிடத்தில் பரமபக்தியை பிறப்பித்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

காவ்யங்களிலும், நாடகங்களிலும் ஆகமங்களிலும் ஈடுபட்டு அவைகள் கசந்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவத் அனுபவம் செய்து களிக்கின்றார்கள் என்று உள்ளுறை பொருளாக கூறுகிறார்.

5.5.1

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள், மருவாளா என்குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே.

இது திருமங்கையாழ்வார் பாடும் தாய் பாசுரம் ஆகும். திருவரங்கம் பற்றி ஆழ்வார் பாடிய ஐந்து பதிகங்களில் இரண்டாவது பதிகம். ஆனால் இதில் திருவரங்கமே என்று சொல்லாமல், வேங்கடமே வேங்கடமே என்று திருவேங்கடத்தைப்பற்றி ஆழ்வார் சொல்வதை உரையாசிரியர் பெரியபெருமாள் இங்கு வந்து சேர்ந்த வரலாறு கூறுவதாக கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அங்கு உள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக ரிஷிகளும் நம் ஆச்சார்யார்களும் சொல்வார்கள். பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு இருந்து பயணம் தொடங்கி, வரும் வழியில் திருவேங்கட மலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சயனிப்பதாக சொல்வார்கள்.

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் என்ற திவ்ய ப்ரபந்தத்தின் முதல் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்று சொல்லி, விண்ணவர் கோனான எம்பெருமான், வேங்கடவனான வந்தான் என்கிறார். இரண்டாம் பாட்டில் அன்று நேர்ந்த நிசாசரரை என்று, நம்பெருமாள் (உத்ஸவர்) இராவண வதத்திற்கு பிறகு தெற்கு வாசல் வழியாக வந்து சேர்ந்ததை சொன்னார். மூன்றாம் பாட்டில் “மந்திபாய் வடவேங்கடமலை வானவர்கள் சந்திசெய்ய நின்றான் அரங்கத்தரவினணையான்” என்று சொன்னதை, திருவேங்கடமலையில் இருந்து, வடக்கு வாசல் வழியாக பெரியபெருமாள் (மூலவர்) வந்து திருவரங்கத்திலே நுழைந்தான் என்று பட்டர் என்ற ஆச்சாரியார் சொல்வார்.

மேலும், திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலமாக இருப்பதால், அடுத்த பயணத்திற்கு காத்து இருப்பவர் போல் தெரிகிறார். திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக ஸேவை சாதிப்பதால் இனி எங்கும் போகவேண்டாம் என்ற தோற்றத்தோடு இருப்பது போல் உள்ளது பொருத்தமாக இருக்கும். ஆக, திருவரங்கத்துக்கு மூலம் திருமலை என்பதால், இப்போது திருவரங்கத்திலே  ஆழ்வார்க்கு ஏற்படும் பற்று, திருமலையளவும் சென்றதனால் ‘வேங்கடமே வேங்கடமே’ என்கிறார் என்று விளக்கம் கொடுக்கிறார்.

தன் வயது, பருவத்தின் காரணமாக, ஒரு சில விஷயத்தை சிலருக்கு சொல்லி, ஒரு சில விஷயத்தை சிலருக்கு மறைத்து என்று மனிதர்கள் இருப்பார்கள்; உதாரணமாக தோழிகளுக்கு சொல்லும் மகள் சில விஷயத்தை தாய்க்கு சொல்ல மாட்டாள்; ஆனால் தன்னுடைய பெண், அப்படி இல்லாமல், வேங்கடமே, வேங்கடமே என்று எவருக்கும் அஞ்சாமல் / வெட்கப்படாமல் பிதற்றுகின்றாள், என்கிறாள்.

பரத்துவத்தை பற்றி சொல்லாமல், வியூகத்தை சொல்லாமல், விபவங்களை சொல்லாமல், விட்டு விட்டு, அவன் உகந்து அருளின தேசத்தை மட்டுமே (வேங்கடமே) என்று பிதற்றுகிறாளே தவிர அதனுள் புகுந்து செல்வதற்கு அறியாதவள், தன் மகள் என்கிறாள். காட்கரை ஏற்றும் அதனுள் கண்ணா (திருவாய்மொழி, 9.6.7) என்று நம்மாழ்வார் திவ்ய தேசத்தையும், எம்பெருமானையும் சேர்த்து சொன்னது போல் இல்லாமல், இங்கு திருவேங்கடமுடையான் என்று குறிப்பிடவில்லை.

நீண்ட கண்களில் உறக்கத்தை மறந்துவிட்டாள் ; தன்னுடைய மடியிலும் பொருந்த மாட்டேன் என்கிறாள்; வேறு யார் மடியில் தான் பொருந்துகிறாளோ ? திருப்பாற்கடலில் பிராட்டியை கைகொண்டவனான எம்பெருமான் தன் மகள் விஷயத்தில் செய்த காரியங்களை தான் நினைக்க முடியுமோ என்று சொல்வதாக பாசுரம். கணவனின் ஊர் பெயரை அஞ்சாமல் கூச்சம் கொள்ளாமல் பிதற்றுகின்றாள்; தன்னுடைய வடிவைக்காட்டி முன்பு திருப்பாற்கடலில் இருந்து பிராட்டியை கொள்ளை கொண்டான், இன்று ஸம்ஸாரக் கடலில் இருந்து தன் மகளை கொள்ளை கொண்டான் என்றும் எப்போதும் இவனுக்குப் பெண்பிள்ளைகளைக் கொள்ளை கொள்வதே வேலை என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.

ஸம்ஸாரத்துக்கு ஆளாகாதபடி செய்யும் அனைத்தும் கொள்ளை கொண்டது போல் என்று சொல்லி, தாய் வசத்தில் இருக்கும் மகளைகூட, எம்பெருமான் கொள்ளை கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமானால் ஏற்று கொள்ள கூடிய பெருமை ஒருவரால் சிந்திக்கக் கூடியதோ? நெடுநாளாக இருகின்ற ஸம்ஸாரத்திலே இன்று இப்படிப்பட்ட பகவத் விஷயம் கிடைத்தது என்றால் அதற்கான காரணம் தன் பெண் அறிய மாட்டாள் என்றும், கரையிலே நிற்கிற தான் எப்படி அறிவேன் என்று தாய் சொல்வது போல் உள்ள பாசுரம்.

5.6.7

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்து எனது, மனத்திருந்த வடமலையை, வரி வண்டார் கொந்தணைந்த பொழில் கோவல் உலகளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, யான் கண்ட தணி நீர்த் தென் அரங்கத்தே

“ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி 3.3.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், ஒருவருக்கு உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவனும், அவைகளுக்கு உபாயமாக இருப்பவனும், உபாயத்திற்கு புருஷகாரத்வம் செய்யும் திருமகளுடன் சேர்த்தி கொள்பவனும், திருவேங்கட மலையின் நிர்வாகம் செய்பவனும், எம்பெருமானே ஆவார்.

அப்படியிருந்தும், அதனை விட்டு எழுந்து, தன்னுடைய நெஞ்சத்தில் ஒரு நொடி கூட விட்டு பிரியாமல் இருப்பவனும் அவனே; அழகிய பூங்கொத்துகள் உள்ள வண்டுகள் இருக்கும் சோலைகளைக் கொண்ட பூங்கோவலூரில், உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான எம்பெருமானை தான் கண்டது திருவரங்கத்தில் என்கிறார்.

அந்தணனை என்று சொன்னது, வேதத்தை காப்பவன் என்று சொல்லி, பிரம்மச்சர்ய வேஷத்தை குறிப்பிட்டு, உலகளந்த விஷயத்திற்கு நம்மை கூட்டிச்சென்றது.  அந்தணன் என்பது, அழகிய தண்மை பொருந்தியவன், பரம தயாளு என்ற அர்த்தத்தில் வருகிறது.

6.8.1

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய், மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.

மான் தோலை மார்பிலே போர்த்திக்கொண்டு, மஹாபலியிடம் பூமியை யாசித்து பெற்று, அவனை தன் திருவடிகளால் ஆக்ரமித்துக்கொண்ட தேனை உடைய சாரல்களை கொண்ட திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானை தான் தேடி சென்று திருநாரையூரில் சேவித்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமான் தன்னைப் பெறுதற்குப் பல அவதாரங்கள் எடுத்தார் என்றும், அந்த சமயங்களில் தான் ஒரு புக்தி அற்றவனாக இருந்ததாகவும், இன்று தான் அவனைத் தேடித் திரிய வேண்டி உள்ளது என்றும் ஆழ்வார் கூறுகிறார். நீண்ட பயணம் சென்று திருமலை உச்சியிலே காண வேண்டாமல், தாகம் எடுத்தவார் தண்ணீர் கண்ட இடத்திலே குடிப்பதை போலே திருநறையூரிலே கண்டு சேவித்தேன் என்கிறார்.

கொண்டல்லது போகேன் என்று தானம் வாங்கியதை சொல்கிறார். மாவலி தன்னையுடையது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பூமியை, தன்னுடையதாக ஆக்கிக்கொண்ட எம்பெருமான் என்கிறார். அவனல்லாததை அவனுடையதாக்கி, தனக்கு இதுவே போதும் என்று மாவலியிடம் கேட்டு வாங்கியதை சொல்கிறார். கையில் நீர் விழுந்தவுடன், மனம் மாறுவதற்குள் சுகுமாரமான திருவடிகளாலே காடும் மேடையும் எல்லை நடந்து அளந்து கொண்டவன் என்கிறார். எல்லோரையும் அடிமை கொள்ள கூடியவன், (சர்வசேஷி), எல்லோருக்கும் அதிகாரி (சர்வாதிகாரனாய்) இருக்கும் எம்பெருமான் தன்னை தாழ விட்டுக்கொண்டது தான் தோற்றதால் அல்ல என்றும் தன்னை தாழ விட்டுக் கொள்ளும் நல்ல குணம் உடையவன் என்றும் சொல்கிறார். உலகளந்த போது, எம்பெருமானை தவறவிட்டவர்கள், இப்போது தவறவிட கூடாது என்பதற்காக திருமலையில் நிற்பதை சொல்கிறார்.

7.3.5

ஆங்கு வெந் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு, தாமரை யன்ன பொன்னார் அடி எம் பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற, வேங்கடத்து அரியைப் பரி கீறியை வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட தீங் கரும்பினை, தேனை நன் பாலினை அன்றி யென் மனம் சிந்தை செய்யாதே.

கொடிய நரகங்களிலே நோவுபட நேர்ந்த போது, அங்கு வந்து, பயப்படவேண்டாம் என்று அடியேனை, அழகு மிக்க திருவடிகளையுடையனும், தனக்கு உபகாரம் செய்பவனும், மேல் உலகங்களுக்கு எல்லாம் அலங்காரமாய் இருக்கின்ற, திருமலையில் எழுந்தருளி இருக்கிற, சிங்கம் போன்றவனும், குதிரை முகத்துடன் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும், வெண்ணையை திருடி உண்டு, உரலோடு கட்டுண்டு இருந்தவனும், கரும்புச்சாறு மற்றும் தேன் போன்றவனும், இனிய பால் போன்ற திருநறையூர் நம்பியை தவிர வேறு எவரையும் தன் நெஞ்சம் நினைக்காது என்கிறார்.

7.10.3

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை, பங்கில் வைத்த உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ் மங்குலைச், சுடரை வட மாமலை உச்சியை, நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை, பகலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.

தங்கள் விஷயத்தில் கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும், வாசம் வீசுகின்ற கூந்தலை உடைய பார்வதியைத் தன்னுடலில் பாதி உடையவனான ருத்ரனை, தனது ஒரு பக்கத்திலே இடம் கொடுத்து அதிலே ஒரு உகப்பை உடையவனும் இப்படிப்பட்ட சீல குணமே சுபாவம் உள்ளவனும், குளிர்ந்த முழு சந்திரன் தவழ்கின்ற ஆகாசமாய் நிற்பவனும், சூரியனை அந்தர்யாமியாக உள்ளவனும், திருவேங்கடமலையின் உச்சியில் இருப்பவனும், நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும், இரவு பகல் என்ற இரண்டிற்கும் நிர்வாஹகனை சென்று நாடி திருகண்ணமங்கையில் கண்டு கொண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

8.2.3

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள், உள் மெலிந்தாள் இது வென்கொலோ.

பரகாலநாயகியானவள் (திருமங்கை ஆழ்வார் நாயகியாக பாடுவது) அருவிகள் பொழியும் திருமலை என்றும், திருநீர்மலை என்றும் சொல்லி வாய் பிதற்றுகின்றாள். திருமெய்யத்தைப் பற்றி, அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்த இடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று என்று கேள்வி கேட்டு அதற்கும் பதில் எதுவும் கிடைக்காததால் பெருமூச்சு விடுகிறாள். சீர் மிகுந்த திருக்கண்ணபுரம் என்று சொல்லியபோது, நீர் பண்டமாக உருகுகிறாள். நெஞ்சு தளர்கின்றாள்; இதற்கு இவள் செய்த பாவமே அன்றி வேறு எந்த காரணமும் தெரியவில்லை என்கிறாள்.

9.7.4

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று, எண்ணுவார் எண்ணம் அது ஓழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல், விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடத்து உளார் வளங் கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

இசை விளக்குகின்ற இனிய பேச்சுக்களுடைய பெண்களை அணைப்போம் என்ற சிந்தையில் உள்ளவர்களை சிந்தனையை மாற்றி, நாம் உஜ்ஜிவிக்க வேண்டுமானால், நித்யஸூரிகளுக்காக பரமபதத்தில் காட்சி கொடுக்கின்றவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவரும், அழகிய கடல் போன்ற வடிவை உடையவருமான திருவல்லவாழ் எம்பெருமானுடைய பெருமையை பேசவேண்டும் என்கிறார்.

9.9.9

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன் தன்னை, புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை, சிலம்பு இயல் ஆறு உடைய திரு மாலிருஞ் சோலை நின்ற, நலந் திகழ் நாரணனை நணுகும் சகால் என் நல் உதலே

சங்கும் சக்கரமும் உடையனும், மலை போன்ற திரண்ட திருத்தோள்களை உடையவனும், யஜ்ஞோபவீதத்தை உடையவனும், சோலை சூழ்ந்த திருவேங்கட மலையில் உள்ளவனும், வேதியனை, ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுர கங்கையை உடைய திருமாலிருஞ் சோலை என்ற திவ்யதேசத்தில் நிற்பவனும், திருக்கல்யாண குணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந் நாராயணனை, அழகிய நெற்றியை உடையவளான தன்னுடைய மகள் கிடைக்க பெறுவாளா என்று ஆழ்வார் கூறுகிறார். வட திருவேங்கட மலையையும் தென் திருமாலிருஞ்சோலையையும் சேர்த்து ஆழ்வார் அனுபவிக்கிறார்.

10.1.2

பொன்னை மாமணியை அணியார்ந்த ஓர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை எம் பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்கா விலே.

நேற்று திருவேங்கடத்தில் கண்ட எம்பெருமானை இன்று திருத்தண்காவில் கண்டேன் என்கிறார். திருத்தண்கா என்பது காஞ்சியில் உள்ள விளக்கொளி பெருமாள்; பொன்போல விரும்பத் தகுந்தவனும் நீலமணி போன்றவனும், அழகு மிக்க ஒரு மின்னல் போன்று ஜவாலை ஸ்வரூபமானவனும் தன்னை அடிமை கொண்ட ஸ்வாமி என்கிறார்.

10.10.5

சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலன் உயர்த்த, மல்லார் தோள் வட வேங்கடவன் வர, சொல்லாய் பைங்கிளியே.

பசுமை தங்கிய கிளியே! ஒளிமிக்க திருவாழியை வலத் திருக் கையிலே உயர தாங்கி பிடித்தவனும், மிடுக்குடைய திருத்தோள்களை உடையவனும் வட திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானை இங்கே வரச்சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். தன்னை அணைப்பதற்கு என்றே பயணம் மேற்கொண்டு திருவேங்கட மலையிலே நிற்கின்ற எம்பெருமானை இங்கு வரச் சொல்கிறார்.

11.3.7

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன் மேய, அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.

கண்ணபிரான் என் நெஞ்சில் எழுந்தருளி இருக்கச் செய்தேயும், எனது கைகளில் வளைகளானவை ஏனோ கழன்று போயின; இவை என்ன ஆச்சரியம் ; பெண்குடியிலே பிறந்துள்ள நாம் வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாய் இருக்கின்றோம் ; அந்த எம்பெருமான் விரும்பி இருக்கும் இடமான திருவரங்கமும் திருவேங்கடமலையும், பாடாமல் இருக்கிறோமோ என்கிறார்.

11.5.10

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான், வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, வெள்ளத்தான் வேங்கடத்தானேலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உலன் கண்டாய் சாழலே.

தோழி, கபட வேடித்தினால் மஹாபலியிடம் இருந்து மூன்றடி மண்ணை இரந்து பெற்று அளந்து கொண்டவன், திருப்பாற்கடலிலே உள்ளான், திருமலையிலே உள்ளான் என்று சொல்கின்றார்களோ ? திருப்பாற் கடலிலும் திருமலையிலும் உள்ளவனே ஆயினும் கலியனுடைய நெஞ்சத்தில் உள்ளான் என்கிறார்.

திருக்குறுந்தாண்டகம்

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற, மெய்ம்மையை விரிந்த சோலை வியந் திருவரங்கம் மேய, செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையானை, தன்மையை நினைவார் எந்தன் தலைமிசை மன்னுவாரே. (7)

அமரர் சென்னி பூவினை என்று இதற்கு முந்தைய பாடலில், நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருக்கும் எம்பெருமான், என்று பாடியதை தொடர்ந்து, எம்பெருமான் ஆழ்வார் தலைமீதும் அணியாக இருக்க விரும்புவதை தெரிவிக்க, ஆழ்வார் அதைவிட அவன் சீலத்தை போற்றி பாடும் அடியவர்களை தன் சிரத்திலே ஏற்க விரும்புகிறார் போலும்.

இந்த பிறவியில் இவ்வுலக இன்பத்தையும், மறுபிறவியில் பரமபத இன்பத்தையும் தருபவரும், பல சோலைகளை உடைய வியப்பு தரும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்பவரும், வெவ்வேறு யுகங்களில் கருப்பு சிவப்பு என்று வெவ்வேறு நிறம் கொண்டு உள்ளவரும், விண்ணவருக்கும் மண்ணில்உள்ளவருக்கும் ஒருமையாக திருவேங்கடமலையில் நின்று கொண்டு இருப்பவனுமான எம்பெருமானை நினைப்பவர்கள், தன்னுடைய சிரத்திலே பொருந்த தக்கவர்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.

திருமலையில் உள்ள எம்பெருமானை, இங்கு உள்ளவர் பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள் என்றும், மேலுலகத்தில் உள்ளவர்கள் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள் என்று உரையாசிரியர் கூறுவது சிறப்பு.

திருநெடுந்தாண்டகம்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய். நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே. (8)

பல திவ்யதேசங்களையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.

காஞ்சியில் திருநீரகம், என்பது ஸ்ரீ உலகளந்த  பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. அந்த எம்பெருமானை நீரின் ஸ்வபாவத்தை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம் என்பார்கள்;

நெடுவரையின் உச்சி மேலாய் என்று சொன்னது, இந்த உலகத்தில் உள்ளவர்களும், மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கும்நாடி ஓங்கியுள்ள திருமலையிலே நின்று அருள்பவன் என்பதை குறிக்கும். “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற பாசுரங்களிலும் இது சொல்லப் படுகிறது.

நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திவ்யதேசம் ஆகும்.

ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரக ரூபியாக (ஆதிசேஷன் வடிவமாக) இத்தலத்தில் ஸேவை சாதிக்கிறார். நிறைந்தகச்சி என்று சொல்வது பல திவ்யதேசங்கள் நிறைந்த காஞ்சி என்று சொல்வதாகவும், ஆதிசேஷனின் ஒளியால் நிறைந்த கச்சிநகர் என்றும் கொள்ளலாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய் என்பது திருவெஃகா திவ்யதேசத்தை சொல்லும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண் வளர்ந்து அருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை”என்கிறார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா என்ற திருமழிசை ஆழ்வாரின் சொற்களுக்கும், “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா!  நீ கிடக்க வேண்டும் “என்ற சொற்களுக்கும் கட்டுப்பட்டு அந்த ஆழ்வாரின் பின்னே அவன் சென்றும் பிறகு திரும்பி வந்ததும் எம்பெருமானின் ஆச்ரித பாரதந்திரியம் என்ற குணம் இருப்பது என்கிறார். ஆச்ரித ஸ்பர்சமுள்ள ஒரு துறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யம் என்கிறார்.

தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருப்பவன் என்பதை உள்ளுவார் உள்ளத்தாய் என்கிறார். எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் (திருவரங்கத்தில்), திருமலை (திருவேங்கடம்) பெருமாள் கோயில் (திருக்கச்சி) முதலான உகந்தருளின இடங்களில் இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரம உத்தேச்யம் என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் / திவ்யதேசங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், நம் ஆசார்யர்கள் சொல்வது இங்கே நினைவில் கொள்ளலாம்.

உலகமேத்துங் காரகத்தாய் என்பது திருகாரகம் என்ற திவ்யதேசத்தை சொல்வது. இதுவும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் இருக்கும் இடம் என்பதால் இந்த திருத்தலத்திற்கு திருகாரகம் என்று பெயர் என்பார்கள்.

கார்வானத்துள்ளாய் என்பது திருகார்வானம் என்ற தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ள நான்கு திவ்யதேசங்களில் ஒன்று.

கள்வா என்பது ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்தில் உறைபவனே என்ற பொருளில் வரும். பிறர் அறியாதபடி காரியம் செய்பவனைக் கள்வன் என்பர்; இவன் காத்திருந்து சிறந்தவர்களையே (சத்தான) பிடித்துக்கொள்வார் என்பதால் கள்வன் எனப்படுகிறான்.  

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்“என்று சோழநாட்டு திவ்யதேசங்களில் ஒன்றான ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளி கொண்டருள்கின்றவனை கூப்பிடுகிறார்.

மீண்டும் இன்னொரு ஆழ்வார் / இன்னொரு திவ்யதேசம் பற்றிய சிந்தனையில் சந்திக்கலாம், நன்றி.

திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

எம்பெருமான், திருவரங்கனாக

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
  • மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பதுபோல் உள்ள  குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய கஜேந்திரன் என்ற யானையின் சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.
  • அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும், மற்றும் கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதைப் பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்றும் மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடலை கண்டோம்.

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் சம்பந்தங்கள் அற்று போகும்படி, கள்வனாகவும் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அதனால் இந்த பிறவி வீணானதாக வருந்துவது தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்லப்பட்டது.

திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை, விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 33

மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டு, பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி, எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் கூறும் பாடல்.

சென்ற எட்டு பாடல்களால் தன்னிடம் நன்மைகள் எதுவும் இல்லை; தீமைகளுக்கும் குறைவில்லை; இங்குள்ளவர்களுக்கு ஆகாதவன் ஆனேன் என்றும், மூர்க்கனேன் வந்து நின்றேன் என்று சொன்ன ஆழ்வாரிடம் எம்பெருமான், அந்த வார்த்தைகள் ஆழ்வாரின் இதயத்தில் இருந்து உண்மையாக வருகிறதா என்று திருவுள்ளமாக, ஆழ்வார் அதுவும் பொய் என்கிறார். அப்படி ஒரு உபாயமும் இல்லையாகில் தான் எப்படி அருள்வது என்று திருவுள்ளமாக, ஆழ்வார் எம்பெருமான் திருவடிகளின் சம்பந்தமும் கிருபையையும் மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

மனம், மொழி, உடல் என்கிற மூன்றினாலும், உண்மையாய் இருக்க வேண்டியவராய் இருக்க முடியாமல் போனாலும் ஏதாவது ஒன்றிலாவது உண்மையானவனாக இருந்திருக்கலாம். ஆனால்; அப்படிப்பட்ட நிலைமையும் தனக்கு இல்லை; உலக விஷயங்களில் உள்ள ஆசையினால் பொய் தவிர வேறு எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். ஆயினும் எம்பெருமானின் திருவருள் இருக்குமானால், தனக்கு ஒரு குறையும் இல்லை என்கிற விசுவாசம் ஒன்று மட்டும் தன்னிடத்தில் உள்ளதால் அந்த ஆசையினால் வெட்கமும்  அச்சமும் கொண்டு அவர் முன்பு வந்து நின்றேன் என்கிறார்.

இனி சற்று விளக்கமாக

மெய் எல்லாம் போக விட்டு

மெய் என்பது உயிர்களுக்கு நன்மை விளைவிப்பதாக, உள்ளதை உள்ளபடியே பேசும் என்று அர்த்தம் ஆகும். முன் பாடல்களில், (25 – 29) தம்மிடம் இல்லை என்று ஆழ்வார் சொன்ன எல்லா நன்மைகளுக்கும் மூலம் சத்யம் என்ற மெய் ஒன்றே ஆகும்.

ஸத்ய மூலமிதம் சர்வம் லோக; ஸத்யே ப்ரதிஷ்டித : நாஹம் மித்யா ப்ரவஷ்யாமி ஸத்யமேவ வதாம்யஹம் : (கைசிக மஹாத்மியம், 32) என்றதன் படி, இந்த உலகம் உண்டானது சத்தியத்தினால், இந்த உலகம், சத்தியத்திலேயே நிலைநிற்கிறது. நம்பாடுவான், தான் எப்போதும் உண்மையே பேசுபவன், எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்று சொல்வது இங்கே மேற்கோளாக காட்டப்படுகிறது.

உண்மை (மெய் ) பலவகை பட்டது; மனதில் நினைப்பது உண்மையாக இருக்க வேண்டும்; அதே போல் அதை சொல்வதும் உண்மையாக இருக்க வேண்டும். முடிவில் அது செயலிலும் உண்மையாக இருப்பது மட்டுமே மெய். இதில் ஏதாவது ஒன்று மாறுபட்டோ, அல்லது இவைகளை பலவிதமாக பலரிடம் சொல்வதிலோ செய்வதிலோ வெளிப்படுவது என்பது, முழுமையான உண்மை இல்லை. அதனால் தான் ஆழ்வார் மெய் எல்லாம் என்கிறார். ஆழ்வார், தான் மட்டும் மெய்யாக இல்லாமல், தன்னை சுற்றி இருப்பவர்களும், தான் இருக்கும் நாடு முழுவதிலும் மெய்யர்கள் இல்லாதவர்களாக பார்த்துக் கொண்டதை ‘போக விட்டு‘ என்பதன் மூலம் சொல்கிறார். அனைத்தும் அறிந்த எம்பெருமானிடம் , உண்மையே பேசித் தீர வேண்டும்; இருந்தும் அவர் முன்பும் பொய் பேசினேன் என்று ஆழ்வார் வருந்துகிறார்.

விரிகுழலாரில் பட்டு

இப்படி உண்மையை அடியோடு கைவிடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு, ஆழ்வார் ‘விரி குழலாரில் பட்டு‘ என்று பிற பெண்களுடன் பழகியதை குறிப்பிடுகிறார். எப்படி எம்பெருமானை நேசிப்பவர்களுக்கு பொய் சிறிதும் ஆகாதோ, அதே போல் விரிகுழலாருடன் கூடி மகிழ்பவர்களுக்கு உண்மை ஆகாது என்பது கருத்து. இங்கு திருவாய்மொழி (5.10.2) மேற்கோள் சொல்லப்படுகிறது. ‘அது இது உது என்னல் ஆவன அல்ல, என்னை உன் செய்கை நைவிக்கும்’ என்று நம்மாழ்வார் சொல்வது எம்பெருமான் விஷயத்தில் எந்த செயலை நினைத்தாலும் அடியவர்கள் அவைகளில் நன்றாக ஈடுபடுவது போல், விரிகுழலாரில் ஆழ்ந்தவர்கள் அவர்கள் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபடுவார்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார்.

பட்டு‘ என்பது, மீளமுடியாதபடி வலையில் அகப்பட்டு என்பதாகும். ஆச்சார்ய உபதேசத்தாலே எம்பெருமானின் திருமேனி அழகை நேரில் காண நிற்கும் போதும், நெஞ்சம் அந்த பெண்களை நினைக்கும்படி அன்றோ அவர்கள் வலையில் இவன் அகப்பட்டு இருப்பது என்கிறார்.

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட

மெய்யை எப்படி அடியோடு விட்டது போல், பொய்யை ஒன்று விடாமல் முழுவதுமாக சேர்த்துக் கொண்டேன் என்கிறார். எம்பெருமானோடு கொண்ட தொடர்பு, பொய் பேசுபவர்களையும் உண்மை பேச வைப்பது போல், பிற பெண்களின் தொடர்பு, உண்மை பேசுபவர்களைக்கூட பொய் பேச வைக்கும் என்கிறார்.

உண்மை போலவே, பொய்யும் பலவகை படுவதால், அதையும் எல்லாம் என்று குறிப்பிடுகிறார். பொய் என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும் தன்னுடன் வைத்து கொண்டார் என்கிறார்.

பொதிந்து கொண்ட என்பதற்கு, எல்லா பொய்களும் எங்கும் தப்பி போகாமல் தன்னுடன் சேர்த்து வைத்து கொண்டேன் என்று சொல்வதாகும். உலகத்தவர் யாராவது எப்போதாவது தங்கள் பெண்டிரிடம் பொய் செல்ல வேண்டுமானால் ஆழ்வாரிடம் வந்து கேட்டு பெற்று செல்ல வேண்டும், ஏனெனில், பொய் என்பதனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார் போல் சொல்லப்படுகிறது. கோட்டையின் எட்டு திக்குகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளே உள்ளவர்கள் வெளியே போகாதபடி வைத்து இருப்பது போல், பொய்கள் ஒன்றும் இவரைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு உள்ளதாக சொல்கிறார்.

போட்கனேன் வந்து நின்றேன்

மெய் பேசுபவர்கள் மட்டும் தான் எம்பெருமானை அணுக முடியும் ஆகையால், தன்னுடைய தாழ்வை மட்டும் எடுத்துக்கொண்டால் அவனை அணுக முடியாது என்றும் வேறு போக்கிடம் இல்லாததால் எம்பெருமான் முன் வந்து நின்றேன் என்று பாடுகிறார். எம்பெருமானை அடையவேண்டிய சாதனங்களை செய்தவர்கள் அவன் வாசல் முன், வேலை செய்தவன் கூலி பெறுவதற்கு நிற்பது போல், தானும் வந்து இருப்பதை ‘நின்றேன்‘ என்கிறார். போட்கனேன் என்றால் கதியற்ற நிலை, போக்கிடம் இல்லாமல் வந்து நின்றதாக ஆழ்வார் உரைக்கிறார்.

ஐயனே அரங்கனே

ஐயனே என்பதற்கு இயற்கையிலேயே எம்பெருமானிடம் தனக்கு உள்ள உறவினை பற்றி ஆழ்வார் கூறுகிறார். வெளி இந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கியவர் மட்டுமே அடையக்கூடிய பரமபத்திற்கு வர ஆசை கொள்வது ஏன், விரிகுழலாரிடமே செல்ல வேண்டியது தானே என்றதற்கு ஆழ்வார், தன்னால் அழித்துக்கொள்ள முடியாத இயற்கையிலேயே உண்டானதான உறவு எம்பெருமானிடம் உள்ளதால் வந்ததாக சொல்கிறார். தாய் தந்தையர்களிடம் பல தீங்குகளை செய்தவர்கள், பிறர் அறியாமல் பின்பக்கம் வழியாக வந்து அவர்களிடம் உதவி பெறுவதுபோல் வந்ததாக கூறுகிறார்.

‘இயற்கையிலே உறவினன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள், ஸாஸ்திரத்தை படித்தா, அல்லது ஆச்சார்யர்களின் உபதேசத்தின்படியாக இங்கு வந்தீர்’ என்பதற்கு, அரங்கனே என்ற பதத்தால், சம்சாரிகள் உஜ்ஜிவிக்க வேண்டும் என்பதையே பெரும் பயனாக கொண்டு திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானிடம் வந்ததாக கூறுகிறார். பரமபதத்தின் உயர்வினையும் கருத்தில் கொள்ளாமல், தம்மை வெறுப்பார்கள் இருக்கும் இடமாக இருந்தாலும், தான் வெறுப்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள அனைவரையும் பரம்பத்திற்கு அழைத்து செல்லும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று உறுதி செய்து கொண்டு வந்துள்ளதாலும், எம்பெருமான் சயன திருக்கோலம் கொண்டுள்ளதாக சொல்கிறார்.

உன் அருள் என்னும் ஆசை தன்னால்

எம்பெருமானின் கருணையை பெறுவதற்காக வந்து நின்றேன் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் கருணை, தாம் அழியும்படியான அளவிற்கு தங்களுக்கு தீங்கை விளைவித்துக் கொண்டவர்களும் அவனின் கருணை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அல்லவோ உள்ளது என்று ஆழ்வார் கூறுகிறார். அப்படி சொல்வதற்கு காரணம், இராமபிரான் காகாசுரனிடம் காட்டிய கருணை. ப்ரம்மாஸ்திரத்தினால் இராமன் காகாசுரனை அழிக்க முற்பட்ட நிலையிலும், அவன் இராமபிரானின் திருவடிகளில் விழலாம் போல் அல்லவோ இராமனின் கருணை இருக்கிறது. இராமாயணம், சுந்தர காண்டம், 38.34ல் சொல்வது, சரணம் அடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான காகாசுரனை, கொல்ல தகுதியான இருந்தபோதிலும், சரணம் அடைய தக்கவனான இராம பிரான் தன் அருளாலே காப்பாற்றினான்.

பொய்யனேன் வந்து நின்றேன்

தம்மிடம் நன்மைகள் எதுவும் இல்லை, தீமைகளும் ஒன்று விடாமல் உண்டு என்று அறிந்து, எம்பெருமானிடம் உள்ள உறவையும் அறிந்து ஆழ்வார் வந்துள்ளதை ஆமோதித்து அது போன்ற அதிகாரிகளையே தாம் எதிர்பார்த்து இருப்பதாக சொல்லி, ஆழ்வார் இப்படித்தான் வந்தாரா என்று எம்பெருமான் வினவ, ஆழ்வார், ஆராய்ந்து பார்க்கையில் அது உண்மை இல்லை, பொய்யாகவே இருந்தது என்கிறார். இயற்கையாகவே எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமானிடம் தான் மெய் என்று ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.

பொய்யனேன் என்று சொன்னது, தீமைகளில் தன்னிடம் இல்லாது எதுவும் இல்லை என்பது ஆகும். எம்பெருமான் முன், தமக்கு புகலிடம் இல்லை, அவனை தவிர வேறு போக்கிடம் இல்லை, அவனே தனக்கு உபாயம் என்று செய்வது சரணாகதி ஆகும். இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது; இதை அவன் முன் செய்வதால் பயன் உண்டு என்று சொன்னதால் தானும் செய்ததாக சொல்கிறார். உண்மையாகவே தன் தாழ்வினை மனதில் கொண்டு சொல்லவில்லை என்ற கருத்து.

பொய்யனேன் பொய்யனேனே

பொய்யனேனே என்று சொன்னது, இயற்கையிலேயே எல்லாவற்றையும் அறிந்திருக்கும் எம்பெருமானே மெய் என்று மயங்கும்படி பொய் சொன்னதாக சொல்கிறார். முன்பு சொன்ன பாசுரங்களில், ஆதரம் பெருக வைத்த அழகன் (16), கண்ணினை களிக்குமாரே (17), பனியரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று எல்லாம் சொன்ன வார்த்தைகளை பொய் மாலைகள் என்று இங்கே குறிப்பிட்டு, பொய்யனேன் பொய்யனேனே என்று சொல்கிறார். மெய்யே சொல்லி பிழைக்க வேண்டிய எம்பெருமான் முன் எத்தனை பொய்கள் சொன்னேன் என்று சொல்லி ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம். நன்றி.

072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி

ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத நவமோஹன கிருஷ்ணன் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல் )
மூலவர்நவமோஹன கிருஷ்ணன்
உத்ஸவர்
தாயார் ருக்மணி சத்தியபாமா
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்22
மங்களாசாசனம் பெரியாழ்வார் – 10
ஆண்டாள் – 5
திருமங்கை ஆழ்வார் – 7
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

Google Map

திருவாய்ப்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்

திருவாய்ப்பாடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

திருத்தலம் பற்றி

டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் வழியில் மதுரா புகைவண்டி நிலையம் உள்ளது. அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் திரு ஆய்ப்பாடி என்றும் ஆயர்பாடி என்றும் கோகுலம் என்றும் சொல்லப்படும் இந்த திவ்யதேசம் உள்ளது.

கண்ணனின் லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக வ்ரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் வ்ரஜ பூமி’யில் உள்ளன.

யமுனா நதி இங்கே ஓடுகிறது. அருகில் புராண கோகுல் என்ற இடம் உள்ளது. இங்கே நந்தகோபர், யசோதை, பலராமர் மற்றும் கிருஷ்ணருக்கு மரத்தினால் ஆன சிலைகள் உள்ளன. இங்குள்ள மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் உடையனவாக உள்ளன. சிறு வயது கண்ணன் இங்கே மண் உண்டு தன்னுடைய திருவாயில் ஏழு உலகங்களையும் யசோதைக்கு காட்டியதை நினைவுகூறும் வண்ணம், மண்ணே பிரசாதமாக தரப் படுகிறது.

சிறைச்சாலையில் தேவகிக்கு மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் நந்தகோபர் வீட்டில், வந்து சேர்ந்த, கண்ணன் பிறந்த நாளுக்கு அடுத்த நாள், அதாவது ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் இங்கே நந்தோற்சவம் என்று ஆயர்பாடி வந்த திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் இப்போது இல்லை என்றாலும், இப்போது இருப்பவை, பிற்காலங்களில் ஏற்பட்டவை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும். மதுராவில் கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

எம்பெருமானை “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது. அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன் இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது. இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே மிகவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு. கிருஷ்ணரின் ரஸா அனுபவத்தை ரசித்தே உலகில் உயிரினங்கள் காலம் கடத்துகின்றன என்பதே உண்மை.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • கோகுலம்
  • புராண கோகுல் (சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில்)
  • மதுரா திவ்யதேசத்தில் குறிப்பிட்ட இடங்கள்
    • மதுரா சிறைச்சாலை கண்ணன் கோவில் – கிருஷ்ண ஜென்ம பூமி / கேசவதேவ் கோவில்
    • கோவர்த்தன கிரி, மலை, பரிக்ரமா அல்லது சுற்றி வருதல்
    • கேசீ காட், காளிய மதன் காட், சீர் காட், ரமண்ரேதீ, வம்சீ வட், சேவா குஞ்ச், நிதிவனம், பங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திர், ரங்கஜி மந்திர் / ரங்கமந்திர்

ஸ்தல வரலாறு

இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து திருஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.

கண்ணனின் சிறு வயதில் நடத்திய லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன்
சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த விளையாட்டுக்கள் எல்லாம்
பல நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்று பலவிதமான லீலைகளை செய்த இதன் இந்த கோகுலம்.

பூதகியை கொன்றது, கன்றுகள் மேய்த்து திரும்பியது, நந்த கோபர் வீட்டுக்கு முன் இருந்த மரங்களை முறித்தது, கொக்காசுரன், சகடாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்தது, கோபியரோடு ஆடியது, காளிங்க நர்த்தனம் செய்தது, குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தது, கோபியரோடு குரவை கூத்து ஆடியது, வேணுகானம் இசைத்தது, கம்ச வதம் செய்தது என்று ஆயர்ப்பாடி வரலாற்றை நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

கோகுலத்தில் கண்ணன் செய்த லீலைகளை தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள்.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களால் 22 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த கோகுலம் என்ற திவ்யதேசம்.

கண்ணன் வளர்ந்த ஊர் என்பதால் ஆயார்பாடிக்கு பெருமை உண்டானது. ஆயர்பாடியின் செல்வத்தை, அதன் வளத்தை, சீர்மல்கும் ஆய்ப்பாடி, என்று ஆண்டாள் பெருமை பேசுகிறார். அங்கே ஆயர்கள் பாலை கறக்க குடத்தை எடுத்ததும், ஒரு சில நொடிகளில் குடத்தை நிறைந்ததும், அதனால் வள்ளல் பெரும்பசுக்கள் என்று அவள் போற்றி பாடுகிறார். பரம் பொருளாகிய நாராயணனின், கிருஷ்ணனின், தங்கள் வீடு வந்த சந்தோஷத்தை ஆயர்கள் கொண்டாடினர். கண்ணன் பால் தயிர் வெண்ணையை திருட வருவான் என்று நினைத்து பால், தயிர் வெண்ணை என்று வீடு எங்கும், நிறைத்து வைத்துஇருப்பார்கள் என்று பெரிய ஆழ்வார் பேசுகிறார்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

14ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார், பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே. (பெரியாழ்வார் திருமொழி 1.2.2)கோகுலத்தில், எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து, தாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஓடினார்கள்; சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; உரக்க கோஷம் செய்தார்கள்; குழந்தை எங்கே என்று தேடினார்கள்; பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்றபடி கூத்தாடினார்கள்; ஆக பஞ்சலக்ஷம் குடியில் இருந்த எல்லோரும் கோலாகலமாக இருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தால் திருவாய்ப்பாடியில் சந்தோஷம் அடையாதவர் ஒருவரும் இல்லை; ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்று என்பர்.
16
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே. பெரியாழ்வார் திருமொழி 1.2.4
கண்ணன் பிறந்த சந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டு, முற்றத்திலே கொட்டி உருட்டி விட்டு ஆடினார்கள்; நெய் பால் தயிர் முதலியவற்றை அதிக அளவில் தானம் செய்தார்கள்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள்; கோகுலத்து இடையர்கள் எல்லாரும் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்துடன் ஆடினார்கள்; நன்றாக தூவுவார் என்று சொன்னதை, நன்று ஆக தூவுவார் என்று கொண்டு, பிறந்த பிள்ளைக்கு நன்மை உண்டாகும்படி என்றும் பொருள் கொள்ளலாம்.
132தீயபுந்திக் கஞ்சன்உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போகவேண்டா ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே. பெரியாழ்வார் திருமொழி 2.2.5)கண்ணபிரானே, கெட்ட புத்தியையுடைய கம்சன், உன்னிடத்தில் கோபம் கொண்டு, நீ தனியாக இருக்கும் சமயம் பார்த்து, வஞ்சனையால் உன்னை கைப்படுத்திக் கொண்டால் நான் உயிருடன் இருக்கும் சக்தி அற்றவளாக இருப்பேன், தாய்மார்கள் சொல்லும் வார்த்தைகள், மிகவும் முக்கியமான அவசியமான வார்த்தைகள் ஆகும். மீண்டும் வற்புறுத்தி சொல்கிறேன், நீ எங்கும் செல்ல வேண்டாம், திருவாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே! அமர்ந்து வந்து என் முலை உணாயே என்கிறார். உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், இத்திருவாய்ப்பாடி முழுவதும் இருள் சூழ்ந்து விடும் என்கிறார்.
145முலையேதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பைப் பறித்து எறிந்து விட்டு மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திருவாயர்பாடிப் பிரானே தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே. (பெரியாழ்வார் திருமொழி 2.3.7)முலையையும் மற்றும் உள்ள பக்ஷ்ணங்களையும் வேண்டாம் என்று சொல்லி காதில் இட்ட காதணியை தூக்கி எறிந்து விட்டு கோவர்த்தன மலையை குடையாக தூக்கி ஆலங்கட்டி மழையில் இருந்து ஆயர்குல மக்களையும், ஆடு மாடுகளையும் மனம் உகந்து காத்துஅருளினவனே, இராமாவதாரத்தில், சிவ தனுசுவை முறித்து, பிராட்டியை மணம் கொண்டவனே, த்ரிவிக்ரமனே, திருஆய்ப்பாடிக்கு உபகாரகனே, என்று பலவிதமாக யசோதை கண்ணனை புகழ்ந்து மீண்டும் அந்த காதணியை அணிவிக்க முயல, அவன் இசையாமலிருக்க யசோதையானவள் ‘அப்பா! உன்மேல் ஒரு குற்றமும் இல்லை; தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டது என்னுடைய குற்றமே’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.
231தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கன்று ஆநிறைப் பின்பு போவர் நீ ஆய்ப்பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவேபெரியாழ்வார் திருமொழி 3.1.9தாய் மோர் விற்பதற்கு வெளியே செல்வார்கள்; தந்தை இளம் பசுக்கூட்டங்களை மேய்பதற்காக அவற்றின் பின்னே போய்விடுவர்கள்; அப்படிப்பட்ட சமயங்களில், ஆயர்பாடியில் தனியே இருக்கும் அந்த இளம் பெண்களை நீ விருப்பம் போல், இஷ்டமான இடங்களுக்கு அழைத்து செல்கிறாய்; உன்மீது பகைமை பாராட்டும், சிசுபாலன், கம்சன் முதலானவர்களுக்கு உன்மீது பழிச்சொல் சொல்லி சந்தோஷம் படுபவர்களுக்கும், உன்னை விரும்புபவர்களும் உன் செயல்களை கண்டு, உன்னை வெறுக்கும்படி, திரியும் ஆயனே, உன்னை சாதாரண மனிதன் அல்ல என்றும், அருந்தெய்வம் என்றும் நான் அறிவேன்; உனக்கு முலை தர அஞ்சாமல் நின்றேன் என்று யசோதை சொல்வது போல் அமைந்த பாடல்.
235பற்று மஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே, கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. பெரியாழ்வார் திருமொழி 3.2.2திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சள் அரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதை சோதித்து பார்ப்பதற்கு கண்ணனுடைய கரிய திருமேனியிலே பூசிப் பார்ப்பார்கள் ; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பெயர் பெற்றது. சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடுகளை தன் திருவடிகளால் சிதைத்து விளையாடி திரியாமல், முன்னே வருபவர்கள் தெரியாதபடி கன்றுகளின் தூளிகளால் நிறைந்து இருக்கும், அடித்து பிடுங்கும் வேடர்கள் நிறைந்த காடுகளுக்கு கன்றுகளின் பின்னே ஏன் அனுப்பினேன், கண்ணபிரானுடைய பொன் போல் மேனி நிறம் மழுங்குமே என்றும், எல்லாம் நான் செய்த பாவமே என்று யசோதை வருந்துவதான பாடல்.
237வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே கண்ணுக்கே இனியானைக் கான் அதர் இடைக் கன்றின் பின் எண்ணற் அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே. பெரியாழ்வார் திருமொழி 3.2.4 எவ்வளவு தீங்கு செய்தாலும் இந்த கண்ணனின் வடிவழகை நினைத்தால் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பதைப்போல், இவனை விடமுடியாதே என்ற கருத்துடன் உள்ள பாடல். அழகியதான கறுத்த கூந்தலை உடைய பெண்டிர், தலைமுடி கலைந்து ஓடி கண்ணனின் தாயான என்னிடம் வந்து, பல தீமைகளை செய்ததாக பழி தூற்றிடும் படி அவனை எங்கும் திரியவிடாமல் செய்து, காட்டுவழியில் கன்றுகளின் பின்னே ஏன் அனுப்பினேன், எல்லாம் தான் செய்த பாவமே என்கிறார். தீங்குகளால் நெஞ்சங்கள் புண் பட்டாலும், கண்கள் அவற்றை பதிவிடாமல் செய்யும் அழகை உடையவன் என்பதை கண்ணுக்கு இனியானை என்று கூறுகிறார். இந்த தன்மையானவன் என்று யாராலும் நினைக்க முடியாதவன் கண்ணன் என்பதை எண்ணற் அரியானை என்று கூறுகிறார்.
239மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே கடிறு பல திரி கான் அதர் இடை கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (பெரியாழ்வார் திருமொழி 3.2.6)கண்ணபிரானை வெண்ணெயை தொண்டையில் உறுத்தாமல் மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி பல இடங்களுக்கு சென்று, பல கள்ள வேலைகளை செய்து, இந்த ஆய்ப்பாடி முழுவதும் திரியவிடாமல், பல யானைகள் திரியும் காடுகளில் கன்றுகளின் பின் போக விட்டேனே, எல்லாம் என் பாவமே என்று வருந்தும் ன்பாடல்;
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி என்பதற்கு, மற்ற பக்ஷணம், உணவு என்றால் பார்த்து சாப்பிட வேண்டும், வெண்ணை என்றால், அப்படியே விழுங்கிவிடலாம் என்கிறார். தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை (பெரியாழ்வார் திருமொழி 1.1.5), என்றும், தடாநிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு (பெரிய திருமொழி 10.7.3) என்றும், ஈட்டிய வெண்ணை தொடுவுண்ண வந்து அவதரித்தவன் என்றும் விளக்கப்படுகிறது.
படிறு பல என்பதால் எண்ணில் அடங்காமையை சொல்லியது. பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் (பெரிய திருமொழி 10.7.5) என்றும், தொட்டு தைத்து நலியேல் கண்டாய்  (நாச்சியார் திருமொழி, 2.8) என்றும், எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால்
(நாச்சியார் திருமொழி 2.9) என்றும் படிறு பல விளக்கப் படுகிறது.
263விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மறைத்து ஆயர் பாடியில் வீதியூடே கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னி மார் காமுற்ற வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் பண்ணின இன்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே (பெரியாழ்வார் திருமொழி 3.4.10)ஸ்ரீவைகுண்டத்திலே நித்யஸூரிகள் விரும்பி சேவித்த போதும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அவர்களிடம் இருந்து தன்னை மறைத்து, திருவாய்ப்பாடியில் வந்து திருஅவதாரம் செய்து, பசுக்களின் பின்னே நின்றது, ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள அவனது மேன்மைக்கு எதிரிடையான, அவனுடைய சௌலப்யத்தை / நீர்மையை ஜீவாத்மாக்களுக்கு காட்டவே என்கிறார். பெரியாழ்வார் அருளி செய்த சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் இனிமையாக பாட வல்லவர்கள் வைகுந்தம் பெறுவார் என்று பலம் கூறி முடிக்கிறார்.
281புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத்தது அளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. (பெரியாழ்வார் திருமொழி 3.6.7)பூமியில் நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தை காணுங்கள்; கன்றுகள் மேய்கின்ற கோபாலன் இருக்கிற கூட்டத்திலே, திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்டு இருக்கின்ற சர்வேஸ்வரன் திருகுழலை ஊத, அந்த இசையானது தேவலோகம் முழுவதும் பரவ, வானவர் அனைவரும், அந்தணர்கள் தங்களுக்கு அளிக்கும் ஹவிஸை (யாகங்களில் அக்நிக்கு அளிக்கப்படும் பிரசாதம்) உண்ண மறந்து, திருஆய்ப்பாடியானது நிறைந்து வழியும்படி, நெருங்கி செவியின் உள்நாவால் குழல் ஓசையின் இனிமையை உட்கொண்டு, உள்ளம் களித்து பசு மேய்க்கும் கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் விடாமல் இருந்தார்கள்.
பெரியாழ்வார் திருமொழி

ஆண்டாள் – திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி

474மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர், சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம், கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். (திருப்பாவை 1)இந்த பாடல், திருவாய்ப்பாடி சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கு ஏற்ற காலம் ஏது” என்று மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களிடம் கூறுவது, பகவத் கீதையில் கண்ணபிரான், மாதங்களில் தான் மார்கழி மாதமாகிறேன் என்று மார்கழி மாதத்தின் பெருமையை கூறினார். இங்கு, நீராட எனக் கூறியது நெடுநாளாகக் கண்ணபிரானைப் பிரிந்து இருந்தமையால் பிறந்த தாபம் அடங்க நீராட விருப்பமுடையீர், வாருங்கள் என்று அழைப்பது. “மார்கழித் திங்கள்” என்று கூறியது ஸத்துவகுணம் நிரம்பிய கால விசேஷத்தைக் குறிக்கும்.
கீழ்மையான ஸ்வர்க்கலோக அனுபவத்திற்கு ஹோமம் யாகம் முதலிய அரிய காரியங்களை செய்ய வேண்டும்; மீண்டும் திரும்ப முடியாத வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்களால் விளங்கும்.  
பால், நெய் மற்றும் வெண்ணெய் முதலியவற்றால் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில் திருநாட்டுத் தலைவனான கண்ணபிரான் வந்து பிறந்தமையால், “சீர்மல்கும் ஆய்ப்பாடி” எனப்பட்டது. 
எம்பெருமானிடம் அன்பு காட்டுவதைத் தவிர மேன்மையானது வேறு எதுவும் ஜீவாத்மாவிற்கு இல்லை என்பதாலும், தண்டகாரண்ய வாசிகளான முனிவர்கள் இராமபிரானது வடிவழகின் அதிசயத்தில் ஈடுபட்டு அன்பு மிகுதியால் அடுத்த பிறவியில் பெண்மையை விரும்பி ஆயர்பாடியில் மங்கையராய் பிறந்து, கண்ணணைக் கூடினர் என்பதாலும் “செல்வச் சிறுமீர்காள்” என்று கூறப்பட்டது.
எறும்பு முதலிய சிறிய உயிர்களின் அழிதலுக்கு அஞ்சிப் புல்லின் மேல் காலை வைத்து நடந்து அறியாத நந்தகோபன், கண்ணனை மகனாகப் பெற்ற பின்பு அவனிடத்தில் இருந்த அளவு முகுந்த பாசத்தினால், தொட்டிலின் கீழ் ஒரு சிறிய எறும்பு ஊர்ந்தாலும் அதனைக் கொல்வதற்காக எப்போதும் கூரிய வேலுடன் இருந்தான் என்பதை “கூர்வேற் கொடுந்தொழிலன் ” என்று கூறப்பட்டான்.  
உலகில் சிறுவர்கள் தந்தையரிடம் அஞ்சி நிற்பதும், தாய்களிடம் அடங்காமால் இருப்பதும் போல் கண்ணபிரானும் நந்தகோபனிடம் கன்றாகவும், யசோதையிடம் சிங்கமாகவும் இருந்தமையை “நந்தகோபன் குமரன்,” “யசோதை யிளஞ்சிங்கம்” எனப்பட்டது.
நாராயணனே என்று சொல்லும் போது உள்ள ஏகாரம் நாராயணன் அடியார்க்குக்கு அருளும் போது எதையும் எதிர்பாராது செய்பவன் என்று உணர்த்தும்.  நமக்கே என்ற இடத்தில் உள்ள ஏகாரமும் அதே பொருளுடன் நாராயணன், ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் ஆகியவற்றுடன் உள்ள நமக்கன்றி மற்றவர்க்கு காரியம் செய்ய மாட்டான் என்று கூறுகிறார்.
பறை என்பது நோன்புக்கு ஒரு விசேஷமான வாத்யம் ஆகும். பறை என்பதற்கு கைங்கர்ய பிரார்ப்த்தி என்ற ஒரு உள்ளுறை அர்த்தமும் உண்டு. எம்பெருமானிடம் ஆண்டாள் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று பிரார்திக்கிறார். இந்த பறை என்ற வார்த்தையும் அர்த்தமும் திருப்பாவையில் பல இடங்களில் பார்க்கலாம்.
618மற்று இருந்தீர்கள் அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்றிருந்தேனுக்கு உரைப்பதெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஓழியவே போய்ப் பேர்த்தொரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற்பொருந்தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின் (நாச்சியார் திருமொழி 12.1)
எம்பெருமானை இப்பொழுதே பெற்று விட வேண்டும் என்று வருந்தி இருக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் தாயும் ‘அம்மா! இது நம்மால் முடிவதில்லை, பேறு, அவன் தான் கொடுக்க வேண்டும் என்பதே ஸித்தாந்தமான பின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே, பேறு பெறுபவர் என்று ஆனபின்பும் அதற்காக காத்து இருப்பதே முறை, அசோக வனத்தில், சீதா பிராட்டி சொன்னதும் செய்தவைகளும் உனக்குத் தெரியாததா, அவளைப் போலே நீயும் பொறுத்து இருக்க வேண்டும், நீ இப்படி பதற கூடாது’ என்று சொல்லும் போது , ஆண்டாள் ‘எனக்கு இப்போது நிகழ்கிற துன்பங்களை சிறிதும் அறியாத நீங்கள், எம்பெருமான் விஷயத்தில் எனக்கு இருக்கின்ற ஆசை, மிகவும் அதிகமாக உள்ளதால், நீங்கள் எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என் காதுகளில் புகாது. புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை. ஆகையாலே நீங்கள் எனக்கு சமாதானம் சொல்வதை விட்டுவிட்டு, “ஒருத்தி மகனாப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து, முஷ்டிக சாணுரர் என்ற மல்லர்களோடு போர் புரிந்து, வெற்றி பெற்ற கண்ணன் எழுந்து அருளி இருக்கின்ற மதுரா நகர் புறம் என்னை சேர்த்து விடுங்கள்” என்கிறாள். இதுவே இந்த பாடலின் கருத்து.
‘இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசலாமா’ என்று தாய் வினவ, அதற்கு ஆண்டாள், “அந்த கண்ணனே, பெற்ற தாயை விட்டு ஒரே இரவில் மற்றொரு இடத்தில வளர்ந்தவன் தானே”, தானும் அதேபோலே என்பது போல் உள்ளது.
ஆண்டாள், தான் கண்ணனை அணைக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கையில் , அவன் முஷ்டிக சாணுர்களுடன் உடம்போடு உடம்பு கட்டி மல் யுத்தம் செய்வதற்கு முன், தான் இடையில் சென்று கண்ணனை அணைக்கும்படி, தன்னை மதுராவிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்வதாக உரை ஆசிரியர் சொல்வது சுவாரஸ்யமான ஒன்று.
630ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும், கார் ஏர் உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே (நாச்சியார் திருமொழி 13.4)திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளை கொண்டு அநுபவிக்கின்ற ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் துன்புறுத்த, அதனால் தான் மிகவும் துன்பப்பட்டதாகவும் பலவிதமாய் சிதலமடைந்து நொந்து கிடக்கிற தன்னை இந்த உலகத்தில், தேற்றுபவர் யார் உண்டு என்று கேட்க, தாய்மார்கள் தாங்கள் இருப்பதாக சொல்ல, எவ்வளவு அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று எப்பொழுதும் திருப்தி அடைய முடியாதபடி இருக்கின்ற கண்ணபிரானுடைய அமுதம் சுரக்கிற திருவாயில் ஊறி இருக்கின்ற மணம் மிகுந்த திரவத்தையாவது (ரசத்தையாவது ) ஈரப்பசையுடன் உலராமல், கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து அதை தான் பருகும்படி செய்து, தன்னுடைய இளைப்பை போக்க முயற்சி செய்யுங்கள் என்று ஆண்டாள் கூறும் பாசுரம்.
இராமபிரானை விரும்பி இருந்தால், அவனுடைய தெய்வீக திருக்குணங்களை எண்ணி அனுசந்தித்து சீதா பிராட்டியை போல் காத்திருக்கலாம் என்றும், கண்ணனை நம்பியவர்கள் அப்படி காத்திருக்க முடியாது என்றும் சொல்வது போல் உள்ளது. திருவாய்ப்பாடியில் உள்ள அத்தனை பெண்களிடமும் நன்றாக விளையாடிய கண்ணன் தன்னிடம் மட்டும் வராமல் இருந்தால் தான் எப்படி உயிருடன் இருப்பது என்கிறார். அம்பு பட்டு இருந்தால், மருந்து போட்டு கொள்ளலாம் என்றும் இப்படி தளர்த்தும் சிதைந்தும் இருந்தால் தன்னை தேற்றுவார் உண்டோ என்று ஆண்டாள் கேட்கிறார். சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாம் என்று எண்ணி, ஆராமுவது போன்ற எம்பெருமான் திருநாமங்களைச் அவள் செவிகளுக்கு கேட்கும்படி சொல்ல, அது கேட்டு சிறிது தெளிந்து, தான் உலர்ந்து போவதற்கு முன் தனக்கு எம்பெருமானின் வாயமுதம் என்ற பானத்தை பருகவைத்து தன்னுடைய இளைப்பை நீக்கப் பாருங்கள் என்கிறார்.
636அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே 13.10)
இந்த பதிகம் படித்தவர்களுக்கு இந்த பாடல் மூலம் பலன் சொல்லி முடிக்கிறார். நிச்சலும் தீமைகள் செய்யும் (பெரியாழ்வார் திருமொழி 3.7.1) எம்பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச் செய்த இந்த சொல் மாலைகளைப் புகழ்ந்து பாட வல்லவர்கள் ஸம்ஸாரம் என்கிற பிறவி பெருங் கடலிலே விழுந்து நோவு படமாட்டார்கள் என்கிறாள்.
பஹவோ ந்ருப! கல்யாணருணா புத்ரஸ்யஸந்திதே என்பதில் நல்ல குணவான் என்று இராமபிரான் புகழ் பெற்றதை போல் கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ் பெற்று இருப்பதால், கண்ணன் செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கு போல் திகழ்கிறது என்று “அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை“ புகழ்கிறாள். “இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊரே இருண்டு கிடக்கும்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி ஆகும்.
வில்லை துலைத்த புருவத்தாள் என்று சொல்வதை ‘துலா‘என்ற வடமொழி சொல்லின் ஆதாரமாக கொண்டு வில்லை தோற்கடித்த புருவம் உடையவள் என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், அதனை பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம் பற்றவில்லை; தன்னுடன் சமமாக இருக்கும் மற்ற பொருட்கள் எல்லாம் தோற்கும்படியான வில்லும் போராடி தோற்கும்படி உள்ள புருவங்களை உடையவள் என்ற பொருள் சொல்கிறார். ஆக துலைத்த என்பதற்கு தொலைத்த என்பது ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
638அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாளி குட் ஏற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
தான் மிகவும் தளர்ச்சி அடையும்படி என்னைப் பிரிந்து போய்த் திருவாய்ப்பாடி முழுதையும் கொள்ளை கொண்டு திரியும், ‘வெண்ணெயளைந்த குணுங்கு‘ (பெரியாழ்வார் திருமொழி 2.4.1) நாற்றம் கமழும் எம்பெருமானை (கண்ணனை) கண்டீர்களா என்று கேட்பது பாடலின் முதல் பகுதி. மின்னலும் மேகமும் சேர்ந்தது போல் திருமேனியில் வனமாலை அசைய அசைய ஆயிரக்கணக்கான பிள்ளைகளோடு விளையாடி இருக்குப்பதை விருந்தாவனத்தே கண்டோம் என்று விடை சொல்வது போல் இருப்பது பாசுரத்தின் பின் பகுதி.
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் என்பதில், ஆயர்பாடி எனபது, திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய் பால் முதலிய பொருட்களையும் குறிக்கும்.
குட்டேறு என்பதற்கு இளைய காளை என்று பொருள்.
கோவர்த்தனன் என்பதற்கு பசுக்களை ஒன்று நூறாக வளர்க்கும் ஆற்றல் பெற்றவன் என்று பொருள்.
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான் என்பது பெரியாழ்வார் திருமொழி (3.1.1).
ஆண்டாள் பாசுரங்கள்

திருமங்கை ஆழ்வார்

1021பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெங்கோவலன், ஏத்துவார்த் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான், தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே. (பெரிய திருமொழி, 1.8.4)பாண்டவர்களுக்காக மஹாபாரத யுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி அடியவர்களுக்காக காரியம் செய்வதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், திருவாய்ப்பாடியில் இடைச்சிகளோடு ராஸக்ரீடை என்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதவனும், இடவெந்தை என்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானுடைய, பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார். பாரதம் கை செய்திட்டு என்று சொன்னது, பாரத யுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய உபகாரங்களைச் செய்த கண்ணன் என்கிறார்.   குரவை கூத்து என்பது ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவங்கள் எடுத்துக் கை கோத்து ஆடும் கூத்து.
அடியவர்களுக்காக காரியம் செய்தது என்பது, தர்மனுக்கு பட்டாபிஷேகம் செய்தது, திரௌபதி குழல் முடிக்க வகை செய்தது, குரவைக் கூத்திலே தன்னையும் ஒருவனாக இணைத்தது போன்றவை.
1392பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மையெழுதாள் பூவை பேணாள், ஏணறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும், நாண் மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, ஆண்மகனா என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர அறிகிலேனே, (பெரிய திருமொழி 5.5.5) திருமங்கையாழ்வாரின் தாயார் தன் மகளின் நிலையைப்பற்றி பாடும் பாடல்; தன் மகள் முத்தாரம் போன்ற ஆபரணங்கள் அணிந்த முலையின் மேல் சந்தனத்தை பூசுவில்லை ; ஒன்றோடு ஒன்று சண்டை செய்யும் இரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளவில்லை; தான் வளர்த்துக் கொண்டிருந்த பூவைப் பட்சியையும் ஆதரிக்கவில்லை; எந்த பொருளையும் நெஞ்சினால் நினைக்கவில்லை; ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்; செவ்வித்தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு வல்லவனானவனும், நமக்கெல்லாம் தெரியும் படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்த கண்ணபிரான், பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு என் மகளை செய்தவைகளை அறிய முடியாதவளாக இருக்கிறேன்.
தாயார் சொல்வது, ‘ஸ்ரீரீயப்பதி என்றே எம்பெருமான் அறியப்படுகிறான், இப்படி அவன் அவளுக்கு துன்பம் கொடுத்தால், அவள் எப்படி அவனுக்கு முகம் கொடுப்பாள், இது தெரியாதவனா எம்பெருமான்’ என்று வியக்கிறாள்;
1435அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள், கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான், செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப்பேர் அருள் மேவும், எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே, (பெரிய திருமொழி 5.9.8)அழகிய பொன் போன்ற சிறந்த ஏழு உலங்களும் அறியும் படியாக திருவாய்ப்பாடியிலே நப்பின்னைப் பிராட்டியினுடைய கைப்பிடிக்க ஏழு எருதுகளை வீழ்த்தியவன் சிவந்த பொன் போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட தென் திருப்பேர் நகரில் இருந்து அருள் செய்கிறான். அவனுடைய திருநாமங்களை நாள் தோறும் சொல்லி தான் உஜ்ஜிவனம் அடைந்ததாக சொல்கிறார்.
1993தந்தை தளை கழல்த் தோன்றிப் போய், ஆய்ப்பாடி நந்தன் குலமதலை யாய் வளர்ந்தான் காணேடீ, நந்தன் குலமதலை யாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண், எந்தை பெருமான் காண் சாழலே. (பெரிய திருமொழி 11.5.2)தோழீ, தந்தையாகிய வஸுதேவருடைய விலங்கு கழன்று விழும்படியாக திருஅவதாரம் செய்து, மதுரையில் இருந்து ஆயர்பாடி சென்று நந்தகோபருடைய குலத்திற்கு விளக்காக வளர்ந்தான். இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன் நான்முகனுக்கு தகப்பன் ஆவான். என்னுடைய எம்பெருமான் என்கிறார்.
கம்ஸனால் விலங்கிடப்பட்டுச் சிறையில் இருந்த வஸுதேவன், தேவகி இவர்களின் விலங்குகள் கண்ணபிரான் திரு அவதாரம் செய்த போது உடைந்த வரலாறு தந்தை தலைகழல என்பதால் சொல்லப்பட்டது.
1994ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப்போய், ஆய்ப்பாடித் தாழ்குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ, தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன் வயிறு, இவ் ஏழு உலகம் உண்டும் இடமுடைத்தால் சாழலே. (பெரிய திருமொழி 11.5.3)தோழீ, நீ பெருமையாக பேசுகின்ற எம்பெருமான் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாக இருந்தால் அன்றோ அவனுக்கு பெருமை. அவனுடைய சரித்திரங்களை ஆராய்ந்தால் அவனும் நம்மைப் போலவே பிறர் பொருள்களில் விருப்பமுள்ளவனாகக் காணப்படுகிறான். திருஆய்பாடியில் கண்ணாகப் பிறந்து கள்ளத்தனத்தினால் தயிர் வெண்ணெய் பால் முதலியவற்றை வாரி உண்டான் என்பது தெரிவதால் இப்படி பிறர் பொருள்களில் ஆசையுள்ளவன் பரம புருஷனாக இருக்கத் தகுமோ? என்று பாசுரத்தின் முன்பகுதியில் கேட்கிறாள்; அதற்கு மறுமொழியாக இன்னொருத்தி, தோழீ, திருவாய்ப்பாடியில் இடைச்சிகள் சேமித்து வைத்திருந்த தயிரை அமுது செய்தான் என்பது உண்மை; நம்முடைய வயிறு போலே ஏதேனும் சிலவற்றை உண்டு, அதனால் நிறைந்து விடுகிற வயிறு இல்லை அவனது திரு வயிறு. காரேழ் கடலேழ் மலை ஏழ் உலகுண்டும் ஆராவயிற்றான் (திருவாய்மொழி, 10.8.2) என்று இருப்பவன். . ஏழு உலகங்களையும் திருவயிற்றினுள் சேர்த்துக் கொண்டாலும், இன்னமும் வயிற்றை நிறைக்க வேணும் என்கிற எண்ணத்தினால் தயிர் முதலியவற்றை அவன் வாரி உண்டால் அவன் பெருமைக்கு குறை உண்டு எனலாம். ஆனால், அவன் கொண்டாடத்தக்க எளிமை குணத்தை காண்பிக்கவே இவாறு செய்தான் என்கிறாள்; அதனால் அவன் பெருமைக்கு ஒரு குறையும் இல்லை என்பது கருத்து.
1995அறியாதார்க்கு ஆன் ஆயனாகிப் போய், ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காணேடீ உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிறுக்கு, எறி நீர் உலகு அனைத்தும் எய்தாது ஆல் சாழலே. (பெரிய திருமொழி 11.5.4)தோழி, ஒன்றும் அறியாதவர்களுக்கு மாடு மேய்க்கும் இடையர் குல மகனாக ஆய்ப்பாடியில் உறிகளில் உள்ள வெண்ணையை களவாடி உண்டு மகிழ்ந்தவன். உறிகளிலே இருந்த மணம் மிக்க வெண்ணெயை உண்டு உகந்தவனின் திருவயிற்றுக்கு கடல் சூழ்ந்த உலகங்கள் போதாது என்று ஆச்சரியப்படுகிறார்.
எம்பெருமான் மனிதனாக திரு அவதாரம் செய்தாலும் அவனுடைய மேன்மை குணங்களை அறியாதவர்களுக்கு, அவன் தயிரை கடைந்து உறியிலே சேமித்து வைத்தவன் இல்லை. கடைந்த வெண்ணையை உண்டு உகந்தான் என்றும் சம்சாரிகளுக்கு எப்படி பகவத்லாபமோ அது போல் அவனுக்கு இது என்று உரையாசிரியர் கூறுகிறார்.
2673ஆராத தன்மையனா ஆங்கொரு நாள் ஆய்ப்பாடி சீரார்க் கலையல் குல் சீரடிச் செந்துவர் வாய் (சிறிய திருமடல், 28)பல செயல்களாலே தனது திருக்குணங்களை வெளிப்படுத்தினன், இருந்தாலும் திருப்தி அடையாமல், தன்னுடைய ஸௌலப்ய (எளிய) குணத்தை நன்கு விளக்க வேண்டி ஒரு நாள் அந்தத் திருவாய்பாடியிலே அழகிய சேலையை அணிந்த அல்குலை உடையவளும், அழகிய கால்களை உடையவளும் மிகவும் சிவந்த அதரத்தை உடையவளும் (ஆன யசோதை மத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு அழகிய இடுப்பு நோகும்படி வெகுகாலமாக சிறந்த தயிரைக் கடைந்து அதில் திரண்ட வெண்ணையை வேர்வை மிக்க நெற்றியை உடைய யசோதை வேறொரு பாத்திரத்திலே இட்டு பத்திரமாக வைத்துவிட்டு சென்றாள்.)
திருமங்கையாழ்வார்

மீண்டும், இன்னொரு திவ்யதேச யாத்திரையில் சந்திப்போம், நன்றி

சில புகைப்படங்கள்

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம்.

இனி அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி சிறிது இங்கே காணலாம்.

பெரிய திருமொழி (2.1)

அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே என்றும், இனி யான் உன்னை என்றும் விடேன் என்றும், கைங்கர்ய லாபத்திற்காக அவன் திருவடிகளை அடைந்து சரண் புகுந்ததும், அந்த கைங்கர்யமே எப்போதும் வேண்டும் என்கிற ஒரு ஆசை பிறந்ததையும் ஆழ்வார் கருத்தில் கொண்டு, அது எப்படி தன்பக்கலில் வந்தது என்று ஆராய்ந்து, மற்றவர்கள் (பொங்கு பொதியும் (2.1.5), துவரியாடையர் (2.1.6) பாடல்களாலும் இந்த பிறவி பலன் தெரியாமல் பாழ்பட்டு நிற்க, தனக்கு மட்டும் கைங்கர்யம் செய்ய ஆசை பிறந்ததற்கு காரணம் தன் நெஞ்சே (என் நெஞ்சம் என்பாய் , பெரிய திருமொழி 2.1.2 முதல் 2.1.8) என்று உணர்ந்து கொண்டு திருவுள்ளதோடு கூடி இனியர் ஆகின்றார்.

பெரிய திருமொழி முதல் பத்தில், ஆழ்வார், திருமந்திரத்தின் பலன்களையும், திருமந்திரத்தின் அர்த்தங்களை அருளி செய்ததையும், அந்த மந்திரம் விளைந்த நிலங்களில் தனக்கு உண்டான ஆசை மற்றும் அபிமானங்களை அருளி செய்தார். ஸ்ரீ சாளக்ராமம், ஸ்ரீ நைமிசாரண்யம், ஸ்ரீ அகோபிலம், ஸ்ரீ வெங்கடாச்சலம் இவற்றின் மேல் எழுந்த ஆசையினால் அவற்றை அனுபவித்து தமக்கு பகவத் விஷயத்தில் மிகவும் உகந்தது நித்ய கைங்கர்யமே என்று உறுதியாக சொன்னார்.

இனி இரண்டாவது பத்தில், திருவேங்கடம், திருஎவ்வளுர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருகடல்மல்லை, திருவிடவெந்தை, திரு அட்டபுயகரம், திருபரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர் இவற்றில் உகந்து எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான்களை அனுபவித்து பாடி, தன்னுடைய ஸ்வரூபம், பாகவத கைங்கர்யத்திற்கு இன்னும் பொருத்தமாய் இருக்கும் என்று சொல்லி, முதல் பத்தில் சொன்ன எம்பெருமான் நித்ய கைங்கர்யம் அவன் அருளாலே வரவேண்டும் என்பதால், பாகவத கைங்கர்யத்தை கொண்டு, அதனை ஒதுக்கி விடுகிறார்.

முதல் பாடல் (2.1.1)

வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிது வந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை, கானவர் இடு காரகிற் புகை ஓங்கு வேங்கடம் மேவி, மாண் குறள் ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

“என்னுடைய நெஞ்சமே, மிக்க தவம் செய்த மனிதர்கள் நெஞ்சங்களில் பொருந்தி நித்யவாஸம் செய்கின்ற என் ஸ்வாமியாய், வேடர்கள் வைரம் கொண்டு அறுத்த கருமையான அகில் மரங்களை நெருப்பில் இடுவதால் உண்டான புகை பரவி இருக்கின்ற உயர்ந்த திருமலையில் நித்யவாஸம் செய்கின்றவனாய், அழகிய வேடம் கொண்ட வாமனன் என்ற பிராமணனாக திகழும் எம்பெருமானுக்கு, நித்யஸூரிகளுடைய இதயங்களை போலவே இனிதாக உவந்து வந்து இப்பொழுது கைங்கர்யம் செய்வதில் ஆசைகொள்கின்றாயே” என்று ஆழ்வார் பாடுவது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

தன்னுடைய நெஞ்சத்தினை குறித்து, ஆழ்வார், என் நெஞ்சில் உளானே என்றும், என் சிந்தையுள் நின்ற மாயன் என்றும் சொல்லி, அவன் தன் திருவுள்ளத்தில் வந்த அமர்ந்து இருக்கின்ற தன்மையை சிறப்பாக கூறி, மஹா தபஸ்விகள் இருதய கமலத்தில் வீற்று இருக்கும் ”மாண் குறள் ஆன அந்தணர்க்கு அடிமை பூண்டாயே” என்று பெருமையுடன் சொல்கிறார். தன்னுடைய உடைமையை பெறுவதற்கு தானே இரப்பாளனாகி வந்தமை மாண் என்பதன் மூலம் சொல்லப்பட்டது. மண் இரக்க வாமன அவதாரம் எடுத்தது போல் இப்பொழுது தன்னை அடிமை கொள்ள தன் நெஞ்சில் வாமன அவதாரம் எடுத்ததாக சொல்கிறார். அவனும் இரந்து நின்ற பின், தன் நெஞ்சமும் அவன் நினைவின்படியே போகின்றதே என்கிறார்.

நித்யஸூரிகளின் இதயம் பகவத் கைங்கர்யத்தில் எப்பொழுதும் ஆசையும் அபிமானமும் கொண்டு இருப்பதுபோல், என் நெஞ்சமான நீ அவன் திருவடிகளில் உகப்போடு ஈடுபாடு கொண்டு இருக்கிறாய் என்று சொல்கிறார்.

இரண்டாம் பாடல் (2.1.2)

உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவியே கெடுப்பானது கண்டு என் நெஞ்சம் என்பாய், குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

ஆழ்வாரின் நெஞ்சம், ஆழ்வாரிடம், ‘நீர் எம்மை கொண்டாடுகிறீர், கைங்கர்யம் நமக்கு தொடர்ந்து நித்யம் கிடைக்குமோ என்று கவலை படும்படியான பாவங்கள் நிறைந்த பூமியில் அன்றோ நாம் வாழ்கிறோம்,” என்று சொல்லி, எம்பெருமானுடைய மோக்ஷம் அளிக்கும் மேன்மையே ஆழ்வார் இங்கே கொண்டாடுகிறார்.

நெஞ்சமே! திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களை அறிந்து நீ அவனிடத்தில் அடிமைத் தொழில் பூண்டாயே! நாம் பந்துக்களென்று சிலரை எண்ணிக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும், சிலரை எதிரிகள் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்குத் தீமை செய்வதுமாக இருக்கிறோமே, எம்பெருமானுடைய ஸ்வபாவம் அது போல் அல்ல. அவன் கர்மத்தின் காரணமாக / நிர்பந்தமாக உறவு சுற்றம் என்று ஒன்றும் இல்லாத ஒருவன். எல்லாரிடத்திலும் வேறுபாடு இன்றி அன்புடையவனாக இருப்பவன். தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களின் பாபங்களை களைந்து, அவர்களை ஸம்ஸாரத்தில் இருந்து நீக்கி, நித்ய ஸூரிகளுடைய கூட்டத்திலே நிறுத்துபவன். அதனைப்பார்த்து அவன் மேல் அடிமைத் தொழில் பூண்டாயே” என்று தன் நெஞ்சிடம் சொல்வதாக சொல்வார்கள்.

உகந்தவர் தம்மை’ என்பதற்கு, ‘தன்னிடத்தில் எவர் அன்பு வைக்கிறார்களோ, அவர்களை’ என்றும், ‘எம்பெருமான் தான் எவர்களிடத்தில் அன்பு வைக்கிறானோ அவர்களை’ என்றும் உரைக்கலாம்.

அறவன் என்பதற்கு “ தண்ணீர்ப் பந்தலை வைத்து, நம்மை அடிமையாக பெறுகைக்குத் தம்மை நமக்குத் கொடுத்து நிற்கின்ற பரம தார்மிகன்” என்பது பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கம். நம்மிடத்தில் கைங்கரியம் கொள்வதற்காக திருமலையிலே வந்து நித்ய வாசம் செய்கிற பெரிய தருமத்தைச் செய்த எம்பெருமான் என்று சொல்கிறார்.

மூன்றாம் பாடல் (2.1.3)

இண்டையாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும், வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என் நெஞ்சமென்பாய், வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டதனோடும், மீமிசை அண்ட மாண்டிருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

பரமபதத்தில் எப்பொழுதும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் இருக்கின்ற நெஞ்சத்தை மீண்டும் அன்போடு கொண்டாடுகிறார்.

பலவகைப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு எம்பெருமானை துதிக்க வருகின்ற தொண்டர்களையும் அவர்களோடு ஸம்பந்தம் உள்ள மற்றவர்களையும் அவன் ஏற்றுக்கொண்டு, பரமபதத்திலே கொண்டு சேர்க்கிறான் என்கிற இந்த சிறந்த குணத்தைக் கண்டு நெஞ்சே, அந்த திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே என்று மகிழ்கிறார்.

இண்டை என்பது பூமாலை. ” எண்டிசையுமுள்ள பூக்கொண்டேத்தி” (திருவாய்மொழி, 4.7.8) என்று நம்மாழ்வார் சொன்னபடி, பூமாலை என்று பெயர் கொண்ட ஒன்றை ஏந்திக்கொண்டு சென்றாலும் போதும் என்கிறார்.

தொண்டர்களெத்துவார் என்பதனால், தொண்டர்கள் பகவத் விஷயத்தில் “கையினால் பூக்களை கொண்டு, வாயினால் எம்பெருமானை பாடி” என்று ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

உறவோடும் வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என்று சொல்வதால் தொண்டர்கள் மட்டுமின்றி அவர்களோடு ஸம்பந்தம் உள்ள அனைவர்க்கும் மோக்ஷம் என்று ஆழ்வார் கூறுகிறார். இங்கு சம்பந்தம் என்பது ஒருநாள் காரியம் செய்தாலும் என்று கொண்டு, வேறுபாடு இல்லாமல் அழைத்து செல்கிற குணம் என்கிறார்.

இங்குத்தை இருப்பு தன்னையும் இழக்கிறோமோ என்று அஞ்சி அவன் அருகே சென்று கைங்கர்யம் செய்ய ஆசை கொண்ட நெஞ்சே என்று நெஞ்சத்தினை கொண்டாடும் போது, அஞ்சி என்பது இந்த உலகத்தில் உள்ள லௌகீகர்கள் அஞ்சுவது போல் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டம் என்று சொல்வது ஆகாயம் என்று பொருள். வெறும் ஆகாயத்தை என்று சொன்னால் அது சொர்க்கத்தை மட்டுமே குறிக்கும் என்பதால் மீமிசை அண்டம் என்று சொல்லி, மஹா ஆகாயம் அல்லது பரம ஆகாயம் என்று சொல்லி, பரமபதத்தையும் சேர்க்கிறார்.

அவாப்த ஸமஸ்த காமன் (எல்லா ஆசைகளும் நிறைவேறியவன் அல்லது நிறைவேறாத ஆசை ஒன்றும் இல்லாதவன்) என்று சொல்லப்படும் எம்பெருமானுக்கு, இவரை அடிமை செய்யாவிட்டால் என்ன குறை என்று கேட்டுக்கொண்டு, திருமலையில் ஆழ்வார் வந்து புகுந்து எம்பெருமானிடம் அடிமை கொள்வதற்கு முன்பு, இந்த பூ உலகத்தை ஒரு ஐஸ்வர்யமாக நினைத்தது கிடையாது. (தனலுப்தன்) ஒரு ஏழை அல்லது கஞ்சன் ஒரு காசு விழுந்த இடத்தில் துழாவி கையெல்லாம் புழுதியாகி நிற்பதைப்போல் அவன் திருமலையில் நிற்கிறான் என்று உரையாசிரியர் எழுதுகிறார்.

நான்காம் பாடல் (2.1.4)

பாவி யாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை, மண்மிசை மேவி ஆட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை, கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கடமலை ஆண்டு, வானவர் ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

இந்த ஆழ்வார் முன்பு பெரிய திருமொழி 1.4.4ல் “துணிவினி உனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழு தொண்டர்கள் தமக்கு, பிணியொழித்த அமரர்ப் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்,’ என்று சொல்வதை ஆழ்வாருடைய நெஞ்சமானது குறிப்பிட்டு, ‘இப்படி நீங்கள் உபதேசம் செய்ததால் மோக்ஷத்தை பற்றி சொன்னேன்’ என்று கூற, அதற்கு ஆழ்வார் ‘தான் எத்தனை காலமாக உபதேசத்திருந்தாலும் அப்போதெல்லாம் மறுத்ததை நினைவில் கொண்டு, அதனால் இப்போதும் கேட்கமாட்டேன் என்று சொல்லாமல், உடனே இசைந்தாயே ‘ என்று நெஞ்சத்தை புகழ்கிறார்.

எம்பெருமான் இந்த மண்ணுலகத்திலே வந்து அவதரித்து, பக்தர்களிடத்தில் பற்பல கைங்கரியங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருளி, அத்துடன் திருப்தி பெறாமல் இன்னமும் இவர்களிடத்தில் நித்ய கைங்கரியம் கொள்ள வேண்டும் என்று அவர்களை பரமபதத்திற்கு கொண்டு வைப்பவனாய் இருக்கும் கோபால கிருஷ்ணனான திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே நெஞ்சே என்று உகக்கிறார்.

முன்பு தமக்கு அடிமை செய்தவர்களை, தான் திருஅவதாரம் செய்து, இவன் எனக்கு மைத்துனன், இவன் எனக்கு நண்பன் என்று சொல்லி அவர்களோடு பொருந்தி, அவர்களுக்கு கைங்கர்ய ருசியை ஏற்படுத்தி, அவர்களை தனக்கு அடிமை செய்ய வைத்து, அவர்களை பரமபதத்தில் கொண்டு வைக்கும் சுவாமி என்கிறார். இங்கு மைத்துனன் என்றது அர்ச்சுனனை, நண்பன் என்று சொல்வது குகப்பெருமானை.

பாவியாது செய்தாய் என்பதில் உள்ள பாவி, என்பது பாவித்தலாகிய ஆராய்தல் என்பதை சொல்வது. ஆராயாதே செய்தாய் என்றதன் கருத்து, “அத்தைச் செய்வோமோ இத்தைச் செய்வோமோ” என்று அலைபாயாமல், உறுதியான எண்ணம் கொண்டு தொண்டு செய்தாயே என்று கூறுதல் ஆகும். இந்த உலக விஷயங்களில் மண்டி சம்சாரியாக இருக்கலாமா, எம்பெருமானுக்குத் தொண்டு செய்து பிறவிப்பயன் ஏய்தலாமா என்று தடுமாறாமல் சடக்கெனக் கைங்கரியத்தில் ஈடுபட்டாயே என்று சொல்கிறார்.

கோவிநாயகன் (கோபிநாயகன்) என்பது ஆய்ச்சிகட்கு அன்பன் என்று அர்த்தம் ஆகும். கோபியர்களுடன் கண்ணன் கலந்து விளையாடுவதைபோல் எம்பெருமான் தன்னுடைய அடியார்களோடு ஆர்வத்துடன் சேர்வான் என்பதை குறிக்க கோவிநாயகன் என்று கையாண்டு உள்ளார்.

ஐந்தாம் பாடல் (2.1.5)

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி உள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்நெஞ்சமென்பாய்! எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்கணாயகற்கு இன்றடி மைத்தொழில் பூண்டாயே.

பாவியாது செய்தாய் என்று என்னை புகழ்வது ஏன் என்று நெஞ்சம் கேட்டபோது, ஆழ்வார் வெளியே இவ்வுலகில் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்று இந்த பாடலின் மூலம் ஆழ்வார் சொல்கிறார். உலகத்திலே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் மிகச் சுருங்கியும், ஜைநர் பௌத்தர் முதலிய புற மதத்தவர்களின் சமயம் வளர்ந்தும் வரும் இப்படிப்பட்ட உலகத்திலே விதிவசத்தாலே நாம் புற மதங்களிலே புகுந்தோ பிறந்தோ பாழாய்ப் போகாமல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தாலே பிறந்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப் பெற்றோமே என்கிற தமது மகிழ்ச்சியை ஆழ்வார் இது முதல் மூன்று பாசுரங்களில் (2.1.5, 2.1.6 மற்றும் 2.1.7) வெளியிடுகிறார்.

பௌத்தர்களின் தேவதை அரச மரத்தடியை இருப்பிடமாக கொண்டும், ஜைநர்களின் தேவதை அசோகமரத்தடியை இருப்பிடமாக கொண்டும் இருப்பதை, பொங்குபோதியும்  பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர் என்றார். போதி என்று அரசமரத்திற்குப் பெயர்;  அது கிளையும் கப்புமாக மிக வளர்ந்த மரமாதலால் பொங்குபோதி எனப்பட்டது.  பிண்டி என்று அசோக மரத்திற்குப் பெயர்.  ஜைநர்கள் அதிகமாக விரதங்களை கடைபிடிப்பவர் ஆகையால், நோன்பியர் எனப்பட்டனர்.  ஆக, புத்தர்களும், ஜைநர்களும் ஆகிய புற மதத்தவர்களும் இவர்களால் தொழப்படும் தெய்வங்களும் நிறைந்து இருக்கும் மண்ணுலகிலே, நெஞ்சமே! நீ அந்தத் தீயவழியில் செல்லாதே திருவேங்கட முடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே, நீயே பாக்யசாலி என்று ஆழ்வார் உவக்கிறார்.

தாங்களுமேயாக என்பதற்கு ஆழ்வார் உட்கருத்தாக சொல்வது, லோகத்தில் உள்ள மற்றவர்கள் முக்தர்கள் ஆகும்படி என்பதாகும். எப்படி ஆழ்வாரது நெஞ்சம், மற்றவைகளை ஆதரிக்காமல், எம்பெருமான் விஷயத்தை ஆதரித்ததோ அதே போல் லோகத்தில் உள்ள மற்றவர்களும் எம்பெருமான் விஷயத்தை ஆதரித்து, பின்பற்றி முக்தர்கள் ஆவார்கள் என்கிறார்.

தானவரென்று அஸூரர்களைச்சொல்வதுடன் இந்த நிலவுலகத்தில் உள்ளவர்களையும் குறிப்பதாக சொல்வதுண்டு.   ஸ்தாநம் என்ற வடசொல் தானம் என திரிந்து ஸ்தானத்தில் உள்ளவர் என்பதை தானவர் என்று கொண்டு, அவ்வுலகத்தில் உள்ளவர்களும் இவ்வுலகத்தில் உள்ளவர்களும் நிறைந்து போற்றுமிடம் வேங்கடம் என்றும் கொள்ளலாம்.

அங்கணாயகற்கு (அம் கண் நாயகர்க்கு ) என்பதற்கு எம்பெருமானின் கண்ணழகிற்கு தோற்று அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் வழியில் சேர்ந்தாயோ என்று நெஞ்சத்தை கொண்டாடுகிறார்.

ஆறாம் பாடல் (2.1.6)

துவரிய ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டியுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே.

இடுப்பிலே காவி உடையை கட்டிக்கொண்டு மொட்டைத் தலையராகக் இருக்கிற சமணர்கள் கண்டபடி சோறுகளைத் தின்று அவ்வளவோடு திருப்தி பெறாமல், தங்களைப் போன்ற மற்றுமுள்ள சமணர்களுடனே பின்னையும் பெருங்கூட்டமாக இருந்து தின்று தின்று தடித்து இருப்பதை காண்கிறோம், நெஞ்சமே நீயும் அவர்களைப்போலே உண்டு உடல் பெருத்து போகாமல் திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டு வாழப் பெற்றாயே என்று தன்னுடைய நெஞ்சத்தினை ஆழ்வார் உகந்தார்.

ஓ மனமே, காஷாய வஸ்திரம் அணிந்து மொட்டை தலையராக இருக்கிற சமணர்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்து, மனம் போனபடி பல உணவுகளையும் உண்டு, அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களும் உடல் பருத்து இருக்க, நீயும் அவர்களைப்போல் உண்டு, உடம்பு பெருக்காமல் கவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கிற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும், விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான எம்பெருமானுக்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே என்று ஆழ்வார் உகக்கிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஏழாம் பாடல் (2.1.7)

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார் அலக்கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

தருக்கினால் என்று சொன்னது தர்க்கத்தினால் என்று கொண்டு வெறும் கேவலம் வாதங்களாலே மட்டும் தங்கள் மதத்தை ஸ்தாபிக்க செய்வார்கள் என்றும் சாஸ்த்ரங்களுடன் கூடிய அல்லது ப்ரமாணங்களுடன் கூடிய வாதங்ககளை கொண்டே மதங்களை ஸ்தாபிக்க வேண்டியது உசிதமானது என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.

சமணமதத்தில் ஒரு விரதமுண்டு; அதாவது, பெருஞ்சோறுண்ணுதல் என்ற அந்த விரதத்தின் போது, தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி கழுத்துவரை சோறிட்டு கொள்வார்களாம். அந்த கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டு பூண்டு மகிழப் பெற்றாயே நெஞ்சமே, என்று ஆழ்வார் உகக்கிறார். இதே ஆழ்வார் பெரிய திருமொழி ஏழாம் பத்து ஒன்பதாவது பதிகம் இரண்டாம் பாடலில் (7.9.2) “தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு என்பது வைதிகர்கள் வணங்கும்படியாக ஸூர்ய மண்டலத்திலே எழுந்தருளி இருப்பவனே என்றுசொல்வர். அதேபோல், சூரியனுக்கு அந்தராத்மாவாக இருக்கும் எம்பெருமானுக்கு அடிமை பூண்டாய் என்றும் சொல்வதுண்டு. .  “த்யேயஸ் ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண:” என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

எட்டாம் பாடல் (2.1.8)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பது சிலர்ப் பேசக் கேட்டிருந்தே, என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே, வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய, ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

இந்த பாடல் துவங்கி மூன்று பாடல்களில், (2.1.8, 2.1.9 மற்றும் 2.1.10), எம்பெருமானின் அருள் என்ற பாக்யம் பெற்றவர்களின் உயர்வை ஆழ்வார் சொல்கிறார். அது மட்டுமின்றி நல்ல புத்தி இல்லாதவர்களின் நிலைகளையும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

பகவத் விஷயத்தில் சேரமால் இருக்கின்ற ஜீவாத்மாக்களை போல் உண்டு உடுத்து திரியாமல், அதற்கு (தன்னுடைய நெஞ்சத்திற்கு) காரணமான தன்னிடம் சேராமல், தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல், திடீரென்று திருவேங்கடமுடையான