திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார்.
அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராம பிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
எம்பெருமான், திருவரங்கனாக
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல நெஞ்சத்தோடு செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பதுபோல் உள்ள குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு வரும்படி செய்த, கஜேந்திரன் என்ற யானையின், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.
குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனித்தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.
அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம், இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,
இந்த வகையில், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்றும் மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் மனதிலோர் தூய்மையில்லை என்ற பாடலை சென்ற பதிவினில் கண்டோம். இனி அடுத்த பாசுரம், நன்றி.
தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன், உவர்த்த நீர் போல உந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன், துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (31)
“மோக்ஷத்தின் பொருட்டு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்கள் ஒன்றும் தங்களிடம் இல்லை என்று கூறுகிறீர்கள்; அது இல்லாவிட்டாலும் ஸ்வர்க்கத்தை பெறுவதற்காகவோ, பிறரை ஏமாற்றி பணம் பறிக்கவோ, வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்கள் ஏதாவது செய்து இருந்தால், அவற்றில் உம்முடைய நினைப்பை மாற்றி, படிப்படியாக மோக்ஷம் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று எம்பெருமானின் திருவுள்ளமாக, ஆழ்வார், அவை ஒன்றும் இல்லை, தங்களை அடைவதற்காக தாங்கள் கொடுத்த இந்த பிறப்பை, உலக விஷயங்களில் மண்டி, அனைவரிடம் வெறுப்பையே காட்டி, அழிவதற்காகவே இந்த பிறவி தந்ததாக இருக்கின்றன தன்னுடைய நடத்தை என்று மறுமொழி கொடுப்பதுபோல் உள்ள பாசுரம். பிறர் பெருமை பொறாதவன் என்று முன் பாட்டில் சொன்ன ஆழ்வார் அவ்வளவோடு நில்லாமல், உலக விஷயங்களில் ஈடுபட்டு உறவினர்களுக்கும் ஆகாதவன் ஆகிவிட்டதாக சொல்கிறார்.
அரங்கமா நகருளானே, தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் அடியேன் இல்லை, ததியாராதனத்தின் பொருட்டு பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் அடியேன் இல்லை, அடியேனுடைய சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவன் ஆனேன்; சிவந்த அதரங்களை உடைய பெண்களுக்கும் சம்பந்தங்கள் அறுந்து போகும்படி, கள்வனாக ஆனேன்; இப்படிப்பட்ட எனக்கு இந்த பிறவியை வீணாகவே தந்து அருளினாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இங்கு வீணாகவே பிறவி தந்துவிட்டாய் என்று ஆழ்வார் எம்பெருமானை குறை கூறவில்லை, ஆனால் தன்னுடைய நைசானுசந்தானத்தை சொல்லி வருத்தத்தை தெரிவித்து எம்பெருமானை விட்டு விலக வேண்டுமோ என்ற அச்சத்தில் பாடுவதாக கொள்ளலாம். அடுத்த சில பாடல்களில், ஆழ்வார் தாம் எம்பெருமானை விட்டு விலக தன்னை தயார் செய்யும் தருணத்தில், எம்பெருமான் ஆழ்வாருக்கு நம்பிக்கை அளித்து தன்னுடன் வருவதற்கு ஏற்பாடு செய்வார் என்பதை பின்பு பார்க்கலாம்.
இதே போல் பின்னாளில் நம்முடைய ஆச்சார்யரான ராமானுஜர், அப்போது வைணவ குருவாக இருந்த ஆளவந்தாரின் அருள்பார்வை கிடைப்பதற்கு முன்னால் தன்னுடைய பிறவியை, ஒரு அவத்தமாக, மரம் போல் இருந்ததாக சொல்கிறார். இதை திருவாய்மொழியில், (7.9.3) ஆம் முதல்வன் இவனென்று தன் தேற்றி, என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? என்று சொல்லி எம்பெருமானை என்றாவது மறப்பேனோ என்று நம்மாழ்வார் சொன்னது போல், ஆளவந்தாரை மறப்பேனோ என்று ராமானுஜர் சொல்கிறார்.
இனி சிறிது விளக்கத்துடன் இந்த பாடலை ரசிக்கலாம்.
தவம் என்பது சரீரத்தை வருத்தி செய்யும் காரியம் ஆகும். மோக்ஷத்திற்காக தவம் புரிபவர்கள் உண்டு, மற்ற உலக விஷயங்களுக்காக தவம் செய்பவர்களும் உண்டு. ஞானிகள் பிரம்மத்தை அல்லது பரமாத்மாவை வேத அத்யயனத்தினாலும், யாகங்களாலும், தானத்தினாலும், தவங்களாலும் அறிய விரும்புகிறார்கள் என்று ப்ருஹ தாரண்ய உபநிஷத் (6.4.22) சொல்வதில் இருந்து வேதாந்தங்கள், தவத்தை ஒரு மோக்ஷ சாதனமாக உரைத்தது. ‘தவத்தோர் தம்மில்’ என்று சொல்லாமல், தவத்துளார் தம்மில் என்று சொன்னதற்கு மேல் சொன்ன, வேதம், யாகம், தானம் மற்றும் தவங்கள் என்று எல்லாவற்றையும் சேர்த்து சொன்னதாக கொள்ளலாம். அதே போல், தவத்துளார் தம்மில் என்றுசொன்னதில், இன்ன பயனை குறித்து தவம் புரிவோர், மோக்ஷத்தை குறித்து தவம் புரிவோர், ஸ்வர்கத்தை குறித்து தவம் புரிவோர், தவத்தை தொடங்கி முடிக்காதவர், அதற்காக பிராயசித்தம் செய்ய வேண்டிய அரைகுறை தவம் செய்தவர்கள் என்று எவருடனும் சேராதவானாக இருந்தேன் என்று ஆழ்வார் தன்னைப்பற்றி கூறுகிறார்.
தனம் நல்ல விஷயங்களில் செலவிடப்பட்டால் அத்தகைய பணம் படைத்திருப்பதையும் ஒரு மோக்ஷ சாதனமாக கொள்ளலாம். அது மேலே சொன்ன ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் (6.4.22) தனமும் ஒரு மோக்ஷ சாதனமாக சொல்லப்பட்டு உள்ளது. தனம், சாத்வீக தானம் ராஜச தானம் தாமச தானம் என்ற மூன்று வகையான தானங்கள் செய்ய பயன்படுகிறது.
கண்ணன் பகவத் கீதையில் (18.5) சொல்வது போல், யாகம், தானம், தவம் முதலிய கர்மங்கள் விடத்தக்கவை அல்ல, கடைபிடிக்க வேண்டியவைகள், ஏன் என்றால் அவை அவர்களை பரிசுத்த படுத்தும். கொடுத்தல் கடமையென்று கருதி, கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீக தானம் என்பர். ( கீதை 17.20). கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், அமங்களமான பொருட்கள், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச தானம் என்பர் (17.21). தகாத இடத்தில், தகாத காலத்தில், ( தோஷமுள்ள தேச காலத்தில்), தகாதவர்களுக்குச் செய்யப்படுவதும், கவுரவமில்லாமல் அவமதிப்புடன், இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச தானம் (17.22) என்பர்.
இப்படி, தவமும், சாத்வீக தானமும் செய்யா விட்டாலும், கொடையாளி எனும் பெயர் பெறுவதற்காக ராஜஸ, தாமச தானங்கள் செய்தவர்கள் கூட்டத்தில் உள்ளாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டக்கூடாது என்பது விரதம். இதற்காக எந்த வழியிலும் அன்னத்தை சம்பாதிக்க வேண்டியது என்பதற்கு தைத்ரிய, ப்ருஹதாரண்ய உபநிஷத் (10.1)ல் சொன்னபடி நல்ல விஷயங்களில் செலவிடுவதாக இருந்தால், அல்லாத வழியிலும் சம்பாதிக்கலாம் என்பது இங்கே உள்ள மேற்கோள். திருமங்கையாழ்வார் முதலியோர் இந்த அர்த்தத்தை அனுஷ்டிக்கவும் செய்தார்கள். இப்படி, பகவத், பாகவத விஷயங்களில் செலவிடுவதற்கும் பணம் படைத்தவர் கூட்டத்தில் தான் சேரவில்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு கூறுகிறார்.
இதனையே தொண்டரடி பொடியாழ்வார் தான் இதற்கு முன் தீயவழிகளில் கூட பணம் சம்பாதித்து இருக்கலாம், அதில் ஒரு பகுதியாவது பாகவத தாதியாராதனத்திற்காக செலவிட்டு இருந்தால், தானும் திருமங்கையாழ்வாரை போல் வீடு பெற்று இருப்பேன் என்று விளக்கம் கொடுப்பதும் உண்டு.
இப்படி தவம், தனம் பெற்றவர்கள் என்ற கூட்டத்தில் இல்லை என்றால், உறவினர்களுக்காவது இனியவர்களாக இருந்தீரா என்று ஆழ்வாரிடம் கேட்பதாக நினைத்து, அதற்கும் மறுத்து பதில் சொல்லும் வரிகள் இவை. உப்பு தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டால் அது கண் விழிக்க முடியாதபடி கரிப்பது போல், தன்னை நேருக்கு நேர் பார்க்கமுடியாதபடி குற்றமே உருவானவனாக உறவினர்களிடத்தில் வாழ்ந்து வருவதாக ஆழ்வார் கூறுகிறார். உறவினன் என்றால் இனியதையோ நல்லவைகளையோ செய்பவனாக இருக்க வேண்டும் என்றும், தான் தீமைகளையே திட்டமிட்டு செய்து தனக்கும் சேர்த்து தீமைகளையே செய்ததால், ஒருவனுக்கும் உறவினனாக இருக்கும் தகுதியை பெறவில்லை என்கிறார். அதாவது உறவினர்களுக்கு உப்புநீர் போல் ஒன்றுமல்லாதவனாக ஆனேன் என்று கருத்து.
உறவினர்களுக்கு ஆகாதவர் ஆயின், தம் நெஞ்சுக்கினிய பெண்களுக்கு வேண்டியவர்கள் ஆயிருப்பீரே என்றால் அதுவும் இல்லை என்று இந்த பதத்தால் சொல்கிறார். துவர்த்த செவ்வாயினார் என்றதால், உள்ளத்தில் இருக்கும் தீய குணங்களை மறைத்து, கோவைக்கனி போன்ற உதட்டு அழகை காட்டி மற்றவரை வசப்படுத்திக் கொள்வார்கள் என்கிறார். இவனும் அவர்கள் நெஞ்சில் உள்ள குற்றங்களை அறிய மாட்டான், தம்மிடம் உண்மையான அன்பு இல்லை என்பதையும் அறியாமல் அவர்களிடத்தில் சிக்கி கொள்வான். அதனால் பெற்றோர்களிடமும் மற்ற உறவினர்களிடமும் உள்ள உறவை அறுப்பார்கள் என்கிறார்.
துவக்கற என்று சொன்னதால், எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு, தான் பற்றிய எல்லா பெண்களோடும் உள்ள உறவுகளையும் அறுந்து போகும்படி என்பது ஒரு விளக்கம். அவர்களிடத்தில் தான் கள்ளத்தனத்தோடு நடந்து கொண்டதால் அவர்களாலும் நிராகரிக்கப் பட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார். அவர்களுக்கும் தீங்கு செய்ததால், அவர்களும் பிரிந்தால் போதும் என்று நினைக்கும்படி தான் நடந்துகொண்டதாக ஆழ்வார் கூறுவதாகவும் கொள்ளலாம். துரிசன் என்றால் கள்ளன் என்று பொருள்.
செவ்வாயினார்க்கே என்பதில் உள்ள ஏகாரதிற்கு உரையாசிரியர் கூறும் விளக்கம் ரசிக்கத் தக்கது. ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 19.4, தான் ராவணனுடைய தம்பி என்றும், அவனாலும் அவமதிக்கப்பட்டவன் என்றும், எல்லா ஜீவராசிகளும் சரணம் அடைய தகுந்த தங்களிடம் சரணம் அடைந்தேன் என்று விபீஷணன் கூறும் வார்த்தைகளில் விபீஷணன் தான் தாழ்வுக்கு எல்லை நிலமாக ஆகிவிட்டதை கூறியதைப் போல், ஆழ்வாரும், தண்மைக்கே எல்லை நிலமான பெண்களுக்கும் ஆகாதவனாகி, அவர்களாலும் துரத்தப் பட்டவன் தான் என்று கூறுவதும் உண்டு.
இங்கு, திருமங்கையாழ்வாரின் திருநறையூர் பதிகத்தின் பாடலை (பெரியதிருமொழி 6.4.1) நினைவு கொள்ளலாம். “கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால், பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன், விண்ணும் மலையும் வேதமும் வேள்வியுமாயினான், நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே” என்று சொல்லி, கிளரொளி இளமை கெடுவதன் முன் திருநறையூர் சென்று எம்பெருமானை தொழுங்கள் என்று சொல்கிறார். பண்ணின் மொழியார் பைய நடமின் என்று திருமங்கை ஆழ்வார் சொல்வதும், துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசன் ஆனேன் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வதும் ஒன்றே.
இப்படி ஆனபின்பு தாங்கள் எனக்கு அளித்த இந்த பிறவி வீணானதே என்று சொல்கிறார். தம்முடைய கர்மங்களால் வந்த இந்த தாழ்வினை எம்பெருமான் தந்ததாக சொல்லலாமோ என்று கேட்டுக்கொண்டு, கர்மம் என்பது என்ன என்பதையும் தன்னுடைய ஸ்வரூபம் என்ன என்பதையும் அறிந்தவர் ஆகையால் இப்படி சொல்கிறார். இவருக்கு வரும் எல்லா கர்மங்களின் பலன்களையும் கருணை மிக்க எம்பெருமான் பொறுத்தேன் என்று சொன்னால் போகக்கூடியவை இந்த கர்மங்கள் என்கிறார். பகவத் கீதையில் கண்ணன் கூறியது (10.10) போல், என்னுடன் எப்போதும் கூடி இருக்க விரும்புபவர்களுக்கும், என்னை பஜனை செய்பவர்களுக்கும் என்னை அடைவதற்கான சாதனமான புத்தி யோகத்தை பேரன்புடன் கொடுக்கிறேன் என்கிறபடி, இந்த அடியவனுக்கு எம்பெருமான் நல்லறிவை கொடுத்து நல்வழி நடத்த வேண்டும் என்று அவர் நினைத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. இதை எல்லாம் உணர்ந்தவர் ஆகையால் வீணான பிறவியை தந்து விட்டாயே என்று எம்பெருமானை பார்த்து ஆழ்வார் கூறுகிறார். குழந்தை கிணற்றில் விழுவதை தாய் பார்த்துக் கொண்டு இருந்தால், அவளே குழந்தையை கிணற்றில் தள்ளினாள் என்று சொல்லலாம் அன்றோ, அது போலவே ஆழ்வார் இங்கு சொல்கிறார்.
சாஸ்திரங்களிலாலே திருத்த முடியாதபடி கர்மங்கள் தூண்டிய வழியே சென்று மற்ற விஷயங்களில் ஆழ்ந்து விடுபவர்களை தன்னுடைய அழகையும் குணத்தையும் காட்டி திருத்துவதற்காக திருவரங்கத்தில் சயனித்து இருப்பது. அது தன் விஷயத்தில் பலிக்காமல் போய் விட்டதே என்று ஆழ்வார் கூறுவதாக கருத்து.
எம்பெருமானை அடைவதற்காக தான் ஒரு காரியமும் செய்யவில்லை: கையில் காசு உள்ளவனாக இருந்திருந்தால் ஆகிஞ்சந்யத்தில் குறை உடையவனாக ஆகி இருப்பேன் என்றும், தான் அப்படி இல்லை என்றும், ஆகிஞ்சநர்களில் தலைவனாக இருந்தேன் என்றும் கூறுகிறார். கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் என்ற பந்துகளுடன் சேர்ந்து இருந்தால், ‘தாய் தந்தையும் இவரே இனி ஆவாரே” என்னும் நிலை வாய்ந்த பிறகு ஆழ்வாரை கைப்பற்றுவோம் என்று எம்பெருமான் காத்து இருக்கலாம், ஆனால் அதுவும் இல்லை ; ஏன் என்றால், ஆழ்வார் உறவுகளும், தன்னை விட்டொழிந்தனர் என்கிறார். அதே போல் மகளிரும் தன்னைத் துரத்திவிட்டனர் என்று சொல்லி, இனி எம்பெருமானுடைய விஷயம் இடையூறின்றி தன் உள் புகுரலாம் என்று ஆழ்வார் சொல்கிறார். இப்படி தான் எம்பெருமான் விஷயத்திற்கு உசிதமாக இருந்தும் எம்பெருமான் தன்னை சேர்த்துக் கொள்ளா விட்டால், தன்னை வீணே படைத்தான் என்று சொல்லி பாடலை முடிக்கிறார்.
மீண்டும் அடுத்த ஆழ்வார் பாடலில் சந்திக்கலாம், நன்றி
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).
பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு
இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.
ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37 திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.
இந்த பதிவில், மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள திருவாய்மொழியில், திருவேங்கடவனை பற்றிய மற்ற பாசுரங்கள் (18) பற்றிய ஒரு சிறு தொகுப்பினை காண்போம். நன்றி
எண் | பாசுரம் | விளக்கம் |
---|---|---|
1 | கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்கு, தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” (1.8.3) | விண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும், மண்ணுலகத்தில் உள்ளவர்களுக்கும் திருவேங்கடமுடையான் என்றும் கண் போல் இருப்பான், என்றும் நித்யஸூரிகள் வந்து சேவை செய்யும் இடம் என்றும் ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் ஆர்ஜவ குணம் பேசப்படுகிறது. ஆர்ஜவம் என்றால் எண்ணுவது, உரைப்பது செய்வது என்ற மூன்றும் ஒருங்கே பொருந்தி அமைவது. சௌலப்யம் என்றால் ஸ்ரீவைகுந்ததை தன்னுடைய சபையாக கொண்டு இருந்தாலும், சம்சாரிகள் வாழும் இடத்தில் அவதாரம் செய்து அவர்கள் அளவில் தான் எளியவனாக வந்து நிற்பது. சௌசீல்யம் என்றால் இவர்கள் அளவிற்கு எளியவனாக வந்து தம்மை தாழ்த்திக்கொண்டதை பற்றி நினைக்காமல், அவர்களுடன் கலந்து பழகுவது மற்றும் அதனால் தனக்கு பயன் உள்ளதாக நினைப்பது ஆகும். இங்கு பக்தர், முக்தர் நித்யர் என்று எண்ணம் சொல் செயல் என்ற மூன்றும் ஒத்துப்போகாத எல்லோருடன் பழகும் போது, அவர்களை தன்னுடைய நிலைக்கு வரும்படி செய்யாமல், அவர்கள் நிலைக்கு தக்கவாறு, தன்னுடைய ஸ்வரூப, ரூப குணங்களை மாற்றி கொண்டு போகும் தன்மையை ஆர்ஜவம் என்கிறார். விண்ணோருக்கும் மண்ணில் வாழ்பவர்களுக்கும் பொதுவாக இருந்தாலும், நித்யஸூரிகள் பார்வையில் விண்ணோர் வெற்பனே என்கிறார். அவர்கள் திருவேங்கடவனை அதிகம் அனுபவிப்பதால், விண்ணோர் வெற்பு என்கிறார். திருமலையில் உள்ள விலங்குகள், தாவரங்கள், பறவைகள் என்று எல்லாவற்றையுமே நித்யஸூரிகளின் அம்சமாகவே நம் பெரியவர்கள் கருதுவர். |
2 | கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல், சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய், அடல் கொள் படையாழி அம்மானைக் காண்பான் நீ, உடலம் நோயுற்றாயோ வூழிதோறூழியே. (2.1.4 ) | இந்த பாடலில் நேரடியாக திருவேங்கடம் என்று வரவில்லை; இருந்தாலும் நம் பெரியவர்கள், மலை என்பதை திருமலையாக அர்த்தம் கொண்டு இதனை திருவேங்கடமுடையானுக்கு என்று கொண்டு உள்ளனர். காற்றானது எங்கும் பரவிய தத்துவம், அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலையாக இருக்காது; உடம்பிலே புழுதியை ஏற்றிக்கொண்டு வடிவு தெரியாதபடி எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும். அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசை வைத்து விருப்பம் நிறைவேறததால் இருந்தவிடத்தில் இருக்காமல், சுரம் கொண்டு, குளிர்ந்த வாடையே! நீயும் நான் பட்டது போல் பட்டாயோ என்கிறார். துழாய் என்றது துழாவி என்ற அர்த்தத்தில் வருகிறது. பகவத் விஷயத்தில் அகப்பட்டவர்கள், எம்பெருமானை, திருப்பாற்கடலில் சென்று தேடலாமா, திருமலையிற் சென்று நாடலாமா அல்லது பரமபதத்திற்கே போய்ப் பார்க்கலாமா என்று அங்கும் இங்கும் தேடுவது போல் தேடுவார்கள், காற்றையும் அப்படியே என்கிறார். கையும் திருவாழியுமான ஸர்வேச்வரனை நீயும் காண ஆசைப்பட்டு இரவு பகல் கண்ணுறங்காதே அலைகிறாய் என்கிறார். |
3 | எந்தாய் தண் திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய், மராமரம் பைந்தாள் ஏழு உருவ ஓரு வாளி கோத்த வில்லா! கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே ! உன்னை யென்னுள்ளே குழைத்த வெம் மைந்தா! வானேறே, இனி யெங்குப் போகின்றதே? (2.6.9) | குளிர்ந்த திருவேங்கடத்தில் நின்று உள்ளவனே, என்னோடு ஒன்றாக கலந்தவனே இனி வேறு எங்கு போகப் போகிறாய்’ என்று ஆழ்வார் வினவுகிறார். முதலிலே அவனை அறியாது இருந்த தனக்கு, தன்னையும் தன்னுடைய சிறப்புகளையும் தெரியவித்து, அவனை பிரிந்தால் உயிர் தாங்கமுடியாத நிலையை விளைவித்த அவன், இனி தன்னை விட்டுப் பிரிந்து போவது தகுதியோ என்கிறார். அஹங்காரமே உருவான இராவணனை ஒழிந்தாற்போல் தன்னுடைய அஹங்கார மமகாரங்களை போக்கிய எம்பெருமான், வாலிவதத்திற்கு முன்னால் ஏழு மரங்களை ஒரு அம்பினால் துளை போட்டு சுக்ரீவனுக்கு விசுவாசத்தை உருவாக்கியதைப்போல் தனக்கும் மிகவும் கடினமான பலகாரியங்கள் செய்து விச்வாஸத்தை உண்டாக்கியவன் என்கிறார். திருத்தோள், திருமார்பு, திருமுடி மற்றும் திருத்தாள் மேலும் துழாய் மாலை அணிந்த எம்பெருமான், தன்னோடு ஒரு நீராகக் கலந்துவிட்டு, அகல்வது எப்படியோ என்று வினவுகிறார். இராமனுக்கு துளசி வளையம் உண்டோ என்று கேட்டுக்கொண்டு, அவதாரத்திற்கு ஏற்ப எந்த மலர் வளையம் இருந்தாலும் அது துளசி போன்றே ஆழ்வாருக்கு தோன்றுகிறது என்கிறார். |
4 | போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள், தாய் தந்தை உயிர் ஆகின்றாய், உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ, பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண் வேங்கட மேகின்றாய் தண்டுழாய் விரை நாறு கண்ணியனே. (2.6.10) | எம்பெருமான் தான் ஆழ்வாரை விட்டு போவது ஒரு புறம் இருக்கட்டும், ஆழ்வார் தன்னை விட்டு அகன்று விடுவாரோ என்று கவலை கொண்டவராக, அதற்கு ஆழ்வார் தான் எங்கும் போகப் போவதில்லை என்பதை முக்காலத்திலும் எல்லா வகையிலும் தனக்கு உபகாரம் செய்தருளின எம்பெருமானை விட்டு, இனி அகன்று போவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார். இறந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்பெருமான் செய்யும் நன்மையைத் தெரிந்துகொண்டு பேச முடியும், எதிர்காலத்தில் இனி அவன் செய்யப் போகிற நன்மையை இவர் எப்படி தெரிந்நு கொண்டார் என்று கேட்டுக்கொண்டு, எந்தக் காலத்திலும் எம்பெருமானைத் தவிர வேறு எவரும் ரக்ஷகனல்லன் என்கிற உண்மையைக் கொண்டு கூறுவதில் குறையொன்றும் இல்லை என்றும், இறந்தகாலமும் நிகழ் காலமும், ஒருகாலத்திலே எதிர்காலமாக இருந்தவைதானே; அதனாலும் சொல்லலாம் என்றும் கூடி முடிக்கிறார். இப்படி அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருந்த போதும், தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரது களைப்பை போக்கும் திருமலையில் எழுந்தருளி உள்ளவனை விட்டு விடுவேனா என்று கூறுகிறார். |
5 | பற்பநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன், எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம், என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. (2.7.11) | மிகவும் எளியனாய், தன்னை அடிமை கொண்ட எம்பெருமான், என்னைத் தவிர வேறொன்றையும் அறியாதபடி ஆனான் என்கிறார். எல்லா உலகங்களுக்கும் உற்பத்திக்குக் காரணமான திருநாபிக் கமலத்தை உடையவனும், பேச ஆரம்பித்தால், அளவிட்டுப் பேசமுடியாதபடி செளர்யம் வீர்யம் முதலிய பல திருக்குணங்களை உடையவனும், இவ்வளவு மேன்மை இருக்க, தன்னிடத்தில் மிகவும் ஆசை உடையவனும், தனக்கே அவனை முழுவதுமாக கொடுத்தவனும், தனக்கு ஒரு கற்பகமரம் போல, யாசகனாகிய ஆழ்வாருக்கு அருளியதால் கற்பக மரத்தைக் காட்டிலும் சிறப்புப் பெற்றவனாய், தனக்குப் பரமபோக்யனாய், கொடுத்தோம் என்பதே நினைக்காமல் கொடுக்கும் மேகத்தின் கொடைத்தன்மை போல் கொடைத்தன்மையுடன் திருவேங்கட மலையில் வாழ்பவனாய், நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருந்து இடையர்க்கும் இடைச்சிக்கும் கட்டவும், அடிக்கவும்படி, எளியவனாக அவதரித்து, அந்த செயலால் தன்னை ஆட்படுத்திக்கொண்டான் என்கிறார். கற்பக மரம் எல்லாவற்றையும் தரும், ஆனால், தன்னை தராது, எம்பெருமான் தன்னையும் தந்து அதைவிடவும் உயர்வாக நின்றவன் என்கிறார். பற்பநாபன், உயர்வின் உயர்ந்த எல்லை, தாமோதரன் எளிமையின் கீழ் எல்லை. |
6 | தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால், அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல, கலைப்பல் ஞானத்தென் கண்ணனைக் கண்டு கொண்டு, நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே. 3.2.10 | இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமுமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், அடுத்த பதிகம், துவய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய “ஸ்ரீமதே நாராயணாய நமஹ ” என்பதின் அர்த்தத்தை சொல்லும் மிகவும் முக்கியமான பகுதியாகும். என் கண்ணனைக் கண்டு என்பதற்கான விளக்கத்தில், எம்பெருமான், அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் பலன் பெறும்படி, தான் கண்ணனாக வடக்குத் திருமலையில் நிற்கும் காட்சியை ஆழ்வாருக்கு காட்டியதாக சொல்வர். ஆழ்வாரின் 1.8.3 பாடலிலும், கண்ணனே திருவேங்கடத்தில், விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் உள்ளான் என்று கூறியதை, நினைவில் கொள்ளலாம். ஆழ்வார் இந்த உயிர் இவுலகை விட்டு நீங்கும் போது , எமகிங்கரர்கள் வந்து பாசக்கயிற்றை வீசும் போது, அப்போது உண்டாகும் துயரம் பொறுக்க முடியாதபடி இருக்கும் என்றும் அந்தத் துயரம் தனக்கு நேராதபடி எம்பெருமான் காட்சி தந்து அருளியதால் தன் மனம் எம்பெருமானிடத்தின் மேல் உள்ள அடிமைத்தனத்தில் நிலைபெற்றது என்பது இந்த பாடலின் ஒரு அர்த்தம். |
துவய மந்திரத்தின் இறுதிப் பகுதி 3.3.1 முதல் 3.3.11 வரை உள்ள 11 பாசுரங்கள் இந்த பதிவினில் கொடுக்கப்பட்டுள்ளது.
எண் | பாடல் | விளக்கம் |
---|---|---|
7 | வார்புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை, பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற, ஊர்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்றாடி, ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே.(3.5.8) | ஒழுகுகின்ற தண்ணீரையுடைய அழகிய குளிர்ந்த அருவிகள் நிறைந்த வடதிருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எந்தையினுடைய பல திருப்பெயர்களைச் சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்று பிறர் கூறும்படி பல ஊர்களிலே புகுந்தும் புகாமலும் உலக மக்கள் சிரிக்கும்படியாக நின்று ஆடி அன்பு பெருகி நடனம் செய்கின்றவர்கள் தேவர்களாலே தொழப்படுவார்கள்,’ என்கிறார். ‘திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு ஈடுபடுவாரைக் கொண்டாடுகைக்கு நாம் யார், நித்தியசூரிகள் அன்றோ அவர்களைக் கொண்டாடுவார்கள்’ என்கிறார். மனிதர்கள் உள்ள இடத்தோடு யாருமே இல்லாத இடங்களுடன் எங்கும் சென்று இவனை அறியாத மக்கள் இவன் என்ன செய்கிறான் என்று சிரிக்க அதேயே தாளமாகக் கொண்டு ஆடி பாடும் அடியார்களை நித்யஸூரிகள் கொண்டாடுவார்கள் என்கிறார். |
8 | சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ, என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து, என் ஆனை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே. (3.9.1) | “நான் இந்த நலத்தைச் சொன்னால் உங்களுக்கு விரோதமாகவே இருக்கும்; ஆயினும் சொல்வேன், கேளுங்கள்: வண்டுகள் தென்னா தென்னா என்று ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற என் யானையும் என் அப்பனும் ஆக எம்பெருமான் இருக்க, என் நாவினின்றும் வருகின்ற இனிய கவிகளை யான் ஒருவர்க்கும் கொடேன்” என்கிறார். மனிதர்களைக் கவி பாட வேண்டாம் என்றும், அடையத் தக்கவனான பகவானைத் துதி செய்யுங்கள் என்று தான் கூறுவது மக்களின் கருத்துக்கு விரோதமாக இருக்கும், என்பது ஒரு விளக்கம். ‘காலையிலும் நடுப்பகலிலும் மாலையிலும் தேவா என்றும், கோவிந்தா என்றும் சொல்லுகின்றவர்கட்கு ஏதேனும் குறை உண்டோ, இருந்தால் சொல்லப்படட்டும் என்ற விஷ்ணுபுராண வார்த்தைகளைச்a சொல்லி எம்பெருமான் திருநாமங்களை சொன்னதனால் இடி விழும் என்று யாராவது கேட்டுஇருக்கிறீர்களா என்று ஸ்ரீ பிரஹலாதன் சொன்னதை இங்கு நினைவு கூறலாம். சேவிக்கத் தகாதாரைச் சேவித்தல் விலக்கத்தக்கது என்ற கருத்தில், தன் வாயால் இதனை சொன்னால் தனக்கு விரோதம் என்று சொல்கிறார். இவர் கவியை ஈசுவரன் கேட்டு மகிழ்ந்தவனாய் இனியனாக இருக்க ஆழ்வார் தன்னை இன்கவி என்று பாடிக் கொள்கிறார். அர்ச்சாவதாரத்திற்கு உரிய குணங்களான சௌலப்யம் முதலானவை ‘எப்பொழுதும் காட்சிக்கு இனியனாய் எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன்’ என்பது, ஆனை என்பதற்கு பொருள் கொள்ளலாம். திருவேங்கடத்து என் ஆனை என்பதற்கு வேதத்தைக் காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக் காட்டிலும் தாம் கவி பாடின விஷயத்திற்கு எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன் என்பதால் ஏற்றம் என்று சொல்லுகிறார். இவர் கவி பாடிக் கட்டின யானை எம்பெருமான் ஆயிற்று என்கிறார். கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுபவர் அவன் இல்லை. ஆதலால், ஆழ்வார் என் ஆனை என்கிறார். அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ என்பதனை என்னப்பன் என்பதன் மூலம் தெரிவிக்கிறார். வேதங்களை காட்டிலும், ராமாயணத்திற்கு ஏற்றம் ஏனெனில், வேதங்களை எம்பெருமான் நேரடியாக கேட்டதில்லை; லவகுசர் பாட , இராமாயணம் கேட்டு உள்ளார்; ஆனால் அங்கு அவருடன் தேவியர் இல்லை, ஆனால் நம்மாழ்வார் திவ்யப்ரபந்தம் பாடியபொழுது எம்பெருமான் தேவியருடன் சேர்ந்து கேட்க விருப்பம் தெரிவித்துள்ளார் (இன்பம் பயக்க, 7.10.1), அதனால் திவ்யப்ரபந்தம் இராமாயணத்தை விட உயர்ந்ததாக நம் பெரியவர் கூறுவர். |
9 | மாரி மாறாத தண் அம்மலை வேங்கடத் தண்ணலை, வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர், காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால், வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே.(4.5.11) | இந்த பதிகம் கற்பாருடைய தீ வினைகளை எல்லாம் பெரிய பிராட்டியார் தீர்த்தருளக் கூடும் என்று பயன் உரைத்து முடிக்கிறார். மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகிய திருவேங்கடமலையிலே, தாழ்ந்தார்க்கு முகம் கொடுப்பதற்காக வந்து நிற்கிற சீலம் பொருந்திய எம்பெருமான் விஷயமாகப் பேசியது இந்த பதிகம். இந்த பதிகத்தில் வேறு எங்கும் திருவேங்கடமுடையான் பற்றி குறிப்பிடாமல் இங்கு இவ்வாறு சொல்வதற்கு காரணம், “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” (4.5.8) என்று பெரிய பிராட்டியார்க்கு முன்பே நித்ய ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கும் சீலத்தைச் சொல்லி இருக்கையாலே சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானைக் கவிபாடினது என்பர். “வேரிமாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்பதால், பிராட்டிக்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்கும் திறன் உண்டு என்று சிலர் சொல்லுவார்கள். நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகார க்ருத்யத்தாலே பிராட்டி போக்குவாள் என்று இதனை சதுச் ச்லோகீ பாஷ்யத்திலே ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன் சொல்வார். |
10 | நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன ஒன்றலா வுருவாய் அருவாய நின் மாயங்கள், நின்று நின்று நினைகின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு ஒன்று நன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே. 5.10.6 | இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமுமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், பெரியவாச்சான்பிள்ளை மற்றும் நம்பிள்ளை வியாக்யானங்களில் நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் என்பதற்கு இராம, கிருஷ்ண அவதாரங்களில் இருந்து மேற்கோள் காட்டி, பின்னர், தொண்டைநாட்டு பாண்டியநாட்டு அர்ச்சாவதாரங்களில் மேற்கோள்காட்டி, திருவரங்கத்தில் எம்பெருமானிடத்திலும் மேற்கோள் காட்டி , இறுதியாக, ஆழ்வார் திருவுள்ளக் கருத்தாக நின்றது, திருவேங்கடம் என்றும், இருந்தது பரமபதம் என்றும், கிடந்தது திருப்பாற்கடல் என்றும் நிறைவு செய்கின்றனர். |
11 | கட்டெழில் சோலை நல் வேங்கடவாணனை, கட்டெழில் தென்குரு கூர்ச் சடகோபன் சொல், கட்டெழில் ஆயிரத்தி(ல்) இப்பத்தும் வல்லவர், கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 6.6.11 | இந்த பதிகம் முழுவதுமே திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்பவர்கள் உண்டு. இருந்தாலும், நம் பெரியவர்களின் உரைகளிலும், பாடலிலும் திருவேங்கடம் என்ற சொல் அடியேன் பார்த்த வரையில் எங்கும் வரவில்லை. ஆகவே இந்த பாடலை மட்டும், வேங்கடவாணன் என்று இருப்பதால் இங்கு எடுத்து கொள்வோம். இந்த பதிகம் முழுவதும் திருவேங்கடவன் பற்றி எதுவும் சொல்லாமல் பலஸ்ருதி சொல்லும் இந்த பாட்டில் மட்டும் ஏன் திருவேங்கடம் என்று உரையாசிரியர் கேட்டுக்கொண்டு, முன்னே சொன்ன ‘சொன்னால் விரோதம் இது ‘ என்று 3.9.1ல் என் நாவின் இன் கவி வேறு யாருக்கும் இல்லை, திருவேங்கடவனுக்கே என்று சொன்னதால் ஆழ்வார் எங்கு வேண்டுமானுலும் அவரை அழைக்கலாம் என்று பதிலும் சொல்லியுள்ளார்கள். மிகவும் அழகாக விளங்குகிற சோலைகளை உடைய திருவேங்கடத்தில் நித்ய வாசம் செய்கின்ற எம்பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளி செய்த இந்த பத்து பாடல்களையும் ஓத வல்லவர்கள் நித்யஸூரிகள் அனுபவிக்கும் போகத்தை பெறுவார் என்று ஆழ்வார் சொல்கிறார். |
12 | விண் மீதிருப்பாய் மலை மேல் நிற்பாய். கடல் சேர்ப்பாய்! மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்! எண் மீதியன்ற புறவண்டத்தாய் என தாவி, உண்மீதாடி உருக் காட்டாதே ஓளிப்பாயோ? 6.9.5 | இந்த பாசுரத்தில் திருவேங்கடம் என்ற சொல் எங்கும் வரவில்லை. ஆனால் நம் பெரியவர்கள், இந்த பாசுரமுமும் திருவேங்கடமுடையானுக்கு என்று சொல்வார்கள், ஏனென்றால், வியாக்யானங்களில் மலை மேல் நிற்பாய் என்பதற்கு திருமலை அர்ச்சாவதாரத்திற்காக குறிப்பிடுவார்கள். நித்யஸூரிகளும், நித்ய சம்சாரிகளும் ஒரே துறையில் நீர் குடிப்பதுபோல், உண்ண செய்கின்ற வேங்கடத்தாடு கூத்தன் என்ற திருவேங்கடம் மலைமேல் நிற்பாய் என்பதற்கு ஆயிற்று. சதா சர்வ காலமும் தரிசனம் பெரும் பாக்கியம் பெற்ற நித்யஸூரிகளுக்காக காட்சி கொடுக்கும் பரமபதத்தை விண்மீது இருப்பாய் என்கிறார். கடல் சேர்ப்பாய் என்பது ப்ரம்ம ருத்ராதிபதிகளுக்கு காட்சி கொடுக்க திருப்பாற்கடலில் இருக்கும் நிலையை சொல்வது. மண்மீது உழல்வாய் என்றது இராம கிருஷ்ணா அவதாதாரங்களாக இந்த பூமியில் அவதரித்து நடையாக நடந்ததை சொல்வது. இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் என்றது அந்தர்யாமியாய் இருக்கும் நிலையை சொல்லி இந்த பாசுரத்தில் எம்பெருமானின் ஐந்து நிலைகளையும் ஆழ்வார் கூறுகிறார். |
துவய மந்திரத்தின் முதல் பகுதி 6.10.1 முதல் 6.10.11 வரை உள்ள 11 பாசுரங்கள் இந்த பதிவினில் கொடுக்கப்பட்டுள்ளது.
எண் | பாடல் | விளக்கம் |
---|---|---|
13 | நங்கள் வரிவளை ஆயாங்களோ ! நம்முடை ஏதலர் முன்பு நாணி, நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன், சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த் தளர்ந்தேன், வெங்கண் பறவையின் பாக ன் என் கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. 8.2.1 | “அழகிய வளை அணிந்த நம்முடைய தோழிகளே! நம்மிடத்துப் பகை பாராட்டுகின்ற தாய்மாரின் முன்பு சொல்ல வெட்கப்பட்டு, உயிர்த் தோழிகளான உங்களுக்கு மட்டும் செவியில் படும்படி ஒரு வார்த்தை, சொல்கிறேன். ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் சொல்லும் வழி அறியேன். வெம்மையான பார்வையை உடைய பெரிய திருவடியை (கருடாழ்வானை) நடத்துபவனான, திருவேங்கடம் உடையானைக் காண ஆசைப்பட்டுப் புறப்பட நினைத்தது ஒன்றே காரணமாக என் கைவளைகள் தானே கழன்றன, அதாவது நான் இளைத்தேன், மேனி ஓளியை இழந்தேன், தடமுலைகள் வெளுத்துப்போய் உடலும் தளர்ந்தவள் ஆனேன்” என்பது பாடலின் பதவுரை. கருடன், விரோதிகள் மேல் வெம்மையான பார்வையை செலுத்தி, அவர்களை முடித்து, எம்பெருமானை இங்கே கொண்டு வர வல்லவன் என்று சொல்லி, கருடனை நண்பன் என்பதுபோல் ஒரு பொருள்; எம்பெருமானை இங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்வதை காரணம் காட்டி, கருடனை வெவ்விய பார்வையை உடையவன் என்று நண்பன் அல்லன் என்பது போல் ஒரு பொருளும் கூறுவர். ஒரு காலத்தில், தலைவியும் தோழிகளும் வளைகள் அணிந்து, இன்ப துன்பங்களில் ஒன்றாக இருந்தார்கள்; ஆனால் தலைவி, இன்று தலைவனை பிரிந்து, துன்பமுடன் இருக்கிறார் என்பதை சொல்வதற்காக நங்கள் வரிவளை என்று சொன்னது. இராமன், பிராட்டியை பிரிந்த காலத்தில், இளையபெருமாள் தளர்ந்தது, இராமபிரான் தளர்ந்ததை விட அதிகமாக இருந்தாலும், பிராட்டியின் பிரிவு, தன்னுடைய காவற் சோர்வால் ஏற்பட்டது என்று அவன் நினைத்ததால், தன்னுடைய தளர்ச்சி இரட்டிப்பாக ஆனாலும், இளையபெருமாள், இராமபிரான் மேலும் வருந்துவாரே, என்று அதை காட்டிக் கொள்ளாமல் இருந்ததை போல், தலைவனைப் பிரிந்து தலைவி கவலையுற்று இளைத்து உடல் தளர்ந்தாலும், தோழி, தலைவி வருத்தப்படக்கூடாதே என்பதற்காக, தோழி வளைகள் அணிந்து தான் சாதாரணமாக இருப்பது போல் காட்சி அளித்ததாக ஒரு விளக்கம் கூறுவர். எங்கும் காண மாட்டேன், என்று சொன்னது இந்த உலகமே அழிந்தது போல் சொல்லப்பட்டது ஏன் என்றால், தலைவியை பிரிந்தால் நாயகன் தாங்க மாட்டான், அவன் இலன், நாயகன் இல்லாதபோது, இந்த உலகம் இல்லை. அதாவது, தலைவியின் வளைகள் நழுவி விழும் போது, தலைவனுடன் சேர்த்தி இல்லை என்றால், தலைவன் உளன் ஆக மாட்டான்; உலகே அழியும் என்பதாம். சாய் இழந்தேன், தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன், என்று சொன்னது, தலைவனுடன் சேர்த்தி இல்லாது போனால், அவன் வரவுக்கு தன்னிடம் இருந்த கைமுதலான மேனி ஒளியை இழந்தேன் என்று சொல்ல தொடங்கி, தடமுலை பொன்நிறமாக வெளுத்து போவது, நல்ல விளைநிலம், மணல்மேடாக போவது போல், அவன் திரும்பி வந்தாலும் தன்னிடம் ஒன்றும் கைமுதல் ஒன்றும் இல்லாதவள் ஆகிவிட்டேன் என்றும், அப்படியே அந்த மேனியொளி திரும்பிவந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள, உடலில் வலிமை இல்லை என்பதை தளர்ந்தேன் என்பதாலும் சொல்லி உள்ளது ஆச்சர்ய பட வைக்கிறது. பரமபதத்தில் இருப்பவனை காண ஆசைப்படவில்லை, நமக்கு காட்சி கொடுப்பதற்காக, வந்து நின்ற இடத்தே (திருவேங்கடத்தே), நம்மை வேண்டி வந்த வேங்கட வாணணை, நாம் வேண்டி சென்று, அவன் இங்கு வரவேண்டும் என்று எண்ணாமல், தான் அவன் இருக்கும் தேசத்திற்கு சென்று விட வேண்டும் என்று தலைவி ஆசைகொண்டதை சொல்கிறார். |
14 | இடையில்லை யான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்! மயில்காள், உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான், அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய, கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண் கொடானே. 8.2.8 | இதில் நேரடியாக திருவேங்கடம் என்று வரவில்லை; இருந்தாலும், நம் ஆச்சார்யர்கள் அஞ்சன வெற்பும் என்பது திருவேங்கடமே என்று பொருள் கூறுவதால் இந்த பாடலும் திருவேங்கடவனுக்கே என்று கொள்ளப்படுகிறது. “நான் வளர்த்து வந்த கிளிகளே, பூவைகளே, குயில்களே, மயில்களே, இனி உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, நம்முடைய நிறத்தையும், வளையையும், நெஞ்சத்தினையும், ஒன்று விடாமல், கொள்ளை கொண்டவன், இங்கிருந்து, சென்ற பரமபதம், திருப்பாற்கடல், திருவேங்கடம், ஆகிய திருத்தலங்கள், அண்மையில் தான் இருக்கின்றன, எளிமையானவையே, ஆனால் பாசங்கள் நீங்காவிட்டால், பற்றுகளை விடாவிடில், அவன் அவற்றை காண கண் கோடான் அல்லது, அங்கு சென்று அடைய விடமாட்டான்” என்பது பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்திற்கு இதுவே உயிர் பாட்டு என்று சொல்வர். பற்றுக்கள் சிறிதும் இல்லாமையை தெரிவிப்பதே இங்கு முக்கியக் கருத்து. இதற்கு முன்பாட்டில், தோழிகளுடன் சம்பந்தம் இல்லை என்று உறவு அறுத்தமை சொன்னார். இந்த பாட்டில், ஆழ்வார் வளர்த்த கிளிகள், பூவைகள், மயில்கள், குயில்கள் இவற்றுடன் சம்பந்தம் இல்லை என்று உறவு அறுத்தமை சொல்கிறார். தோழிகளை உறவு அறுத்த பின்னும் அவனை காண கிடைக்காததால், இவைகளை உறவு அறுத்து அவனை நோக்கி செல்கிறார். கிளிகள் முதலியவைகளை பன்மையில் சொல்லி, கூட்டம் கூட்டமாக உள்ள அவைகளிலும் தனக்கு ஆசை இல்லை என்கிறார். ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான், என்று சொன்னது, புறப்பொருட்களோடு அகப்பொருள்களையும் எடுத்துக்கொண்டு, நம்மிடம் ஒன்றும் இல்லாமல், கைக்கொண்டான் என்பதே ஆகும். அடையும் வைகுந்தமும் என்று சொன்னது, இப்படி கைக்கொண்ட பொருட்களை எல்லாம், எட்டாத தூரத்தில் உள்ள பரமபதத்திற்கு எடுத்து சென்று, அங்கே வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கிறான் என்பதற்காக ஆகும். பாற்கடலும் அஞ்சன வெற்பும் என்று திருபாற்கடலையும், திருவேங்கடத்தையும் பரமபதத்துடன் சேர்த்து சொல்வது குறிப்பிடத்தக்கது. அவை நணிய என்று சொன்னது, மேற்படி திருத்தலங்கள், அண்மையில் தான் இருக்கின்றன, எளிமையானவையே, என்று சொன்னாலும், அவன் அவனைத்தவிர வேறு எதில் பாசம் வைத்து இருந்தாலும், அவன் அந்த அனுபவத்தை காட்டி கொடுக்க மாட்டான் என்பதை தெரிவிக்கவே ஆகும். |
15 | இன்றிப்போக இருவினையுங்கெடுத்து ஒன்றியாக்கைபுகாமை உய்யக் கொள்வான், நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது, சென்று தேவர்கள் கைதொழுவார்களே (9.3.8) | பாவம் புண்ணியம் என்ற இரண்டு கர்மங்களையும் தொலைத்து, சரீரம் என்று ஒன்று இல்லாமல் உஜ்ஜீவனம் செய்கின்ற எம்பெருமான், அடியார்களை எதிர்பார்த்து நிற்கின்ற திருவேங்கடமலை, பரந்த இந்த உலகத்தில் உள்ளதேயாகும். அங்கு சென்று கைதொழுபவர்கள் மனிதர்கள் இல்லை, தேவர்களே என்பது இந்த பாடலின் பொழிப்புரை. வைகுந்தம் காண்பதற்கு எண்ணம் கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர் ! சரீர ஸம்பந்தம் போன பின்பு அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடு அனுபவிக்கவல்ல திருவேங்கடம் இந்த உலகத்தில் உள்ளதே, அதை விட்டு வைகுந்தம் காண்பதற்கு ஆசைப்படுவதில் என்ன விசேஷம்?” என்று வினவ, அதற்கு ஆழ்வார், “திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான், காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும் என்ற நிலையில் இருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்கியம் இல்லாதவன், தேவர்களே அன்றோ அங்கு சென்று தொழுவார்கள் ; ஆகவே திருமலை, பரமபதம் இரண்டும் தனக்கு இல்லை” என்கிறார். இருவினையுங்கெடுத்து என்று சொன்னதால், பாவம், புண்ணியம் இரண்டையும் அனுபவித்த முடித்த பிறகே மோக்ஷ அனுபவம் என்பதால், அதை தர வல்ல அதிகாரியின் சிறப்பினை கூறுகிறார். சென்று தேவர்கள் கைதொழுவார்களே அங்குச் சென்று கை தொழுபவர்கள் மனிதர்களாக இருக்க முடியாதே; தேவர்களாக அன்றோ இருக்க வேண்டும் என்று வரும்படி, சென்று கைதொழுவார் தேவர்கள் என்று வார்த்தைகளை மாற்றி பொருள் கொள்ளலாம். ‘உய்யக் கொள்வான்’ என்று சொன்னது, உய்யக் கொள்கைக்காக என்றும் பொருள் கொள்ளலாம். |
16 | தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க, மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேனே (10.4.4) | “அவன் திருவடிகளை என் தலை மேல் அணிந்து கொண்டேன்; ஆலிலையில் கண் வளர்ந்தவனும், நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையில் எழுந்தருளி நின்று, தக்க தருணம் பார்த்து, என் நெஞ்சின் உள்ளே புகுந்து இருபவனான எம்பெருமான் தான் இந்த நிலையில் இருந்து மாறாமல் இருப்பதில் உறுதியாக இருக்கின்றான், தானும் அதில் உறுதியாக இருக்கின்றேன்” என்று ஆழ்வார் சொல்வதாக பாசுரம். இந்த பாசுரத்தில் நேரடியாக திருவேங்கடம் என்ற சொல் கிடையாது, நம் பெரியோர்கள், உரையாசிரியர்கள் இங்கே மலைமேல் தான் நின்று என்பதை திருவேங்கடம் என்று சொல்கிறார்கள்; இதனால் இன்றும், மலைக்கு செல்கிறேன் என்றால், அது திருவேங்கடத்தையே குறிக்கும். ஆலின் இலை மேல் துயின்றான் என்றது, தன்னை கொண்டு காரியம் செய்து கொள்ள நினைக்கும், சிலரை கண்டு கொள்ளாமல், எல்லோரும் ஆச்சர்யம் கொள்ளும்படி ஆலின் இலையின் மேல் இருந்ததை சொல்கிறார் போலும். வேண்டாம் என்பவர்களை காண்பதில்லை . நித்யஸூரிகளும் தானுமாக வந்து திருமலையிலே நின்றான்; ஆழ்வாருடைய இதயத்தில் வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார் இல்லாமையாலே இங்கேயே நிலையாக இருந்தான். பெரியாழ்வார் திருமொழியில் சொன்னது போல் (5.4.9) “பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து” இவருடைய மனக்கடலிலே வாழ புகுந்தான். ‘ ஸ்ரீவசனபூக்ஷணம் என்ற நூலில், (171) “ அங்குத்தை வாஸம் ஸாதனம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்” என்று சொன்னதற்கு மூலகாரணம் இந்த பாசுரம் என்று சொல்லப்படுகிறது. அங்குத்தை என்று சொன்னது, திவ்யதேசங்களை, இங்குத்தை என்று சொன்னது, ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இருப்பதை சொல்வது. அதாவது எம்பெருமான், திவ்யதேசங்களில் வாசம் செய்வது, தக்க சமயத்தில், உபாயங்கள் செய்து, ஆழ்வார் போன்ற ஞானிகளின் உள்ளத்தில் புகுவதற்க்காகவே என்ற அர்த்தத்தில் மேற்படி வசனம் சொல்லப்பட்டது. இங்கே புகுந்தபின், அங்கே உள்ள ஆதரவு குறைந்து விடும் என்று சொல்வதற்கு, “கல்லும் கனைகடலும் …. புல்லென்று ஒழிந்தன” என்று பெரிய திருவந்தாதியில், (7.8) சொன்னதை நினைவில் கொள்ளலாம். இளங்கோயில் கைவிடேல் (இரண்டாம் திருவந்தாதி, 54) என்று இவன் பிரார்த்திக்க வேண்டி இருக்கும். ஆழ்வார் போன்ற ஞானிகளிடத்தில் வாசம் செய்வதே எம்பெருமானுக்கு பரம பிரயோஜனம் என்பதால், அவர்கள் கிடைத்து விட்டால், திவ்யதேசங்களுக்கு ஆதரவு குறைந்து விடுமோ எனில், இல்லை. ஏன் என்றால், அவை எம்பெருமான் உகந்து அருளின நிலங்கள், ஆழ்வார் போன்றவர்களின் பெரிய அபிமானம், அதிக உகப்பு கொண்ட ஸ்தலங்கள், அங்கே நித்யவாஸம் செய்ததால் தான் ஆழ்வார் போன்ற ஞானிகளின் உள்ளங்களில் புக முடிந்தது என்ற நன்றி உணர்ச்சியாலும், திவ்யதேசங்களுக்கு என்றும் எம்பெருமானிடம் ஆதரவு குறைவதில்லை என்று சொல்வார்கள். இவ்வளவு விருப்பத்தோடு வந்து சேர்ந்து, பேராப் பேறு பெற்றவனாக நினைத்துக்கொண்டு இருக்கும் எம்பெருமான், ஆழ்வாரின் திருவுள்ளத்தில் இருந்து நிலை பெயரமாட்டான் என்பது நிச்சயம். ஆழ்வாரின் நெஞ்சமும் அதற்கு ஒத்து இருப்பதால், அவரும் இதில் உறுதியாகவே இருக்கின்றார் என்று இதனை பாடலை நிறைவு செய்கிறார். |
17 | மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன், பேயார் முலையுண்ட வாயான் மாதவனே. (10.5.6) | காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தை உடையனாய் மாதவன் பூதனையின் முலையைச் சுவைத்துண்டு, அவளை முடித்தவனானன் திருவேங்கட மலையில் உள்ளான் என்பது இதன் பொழிப்புரை. சென்ற பாட்டில்,(10.5.5), நாடீர் என்று சொன்னதற்கு எந்த இடம் என்பதை இந்த பாடலில் காண்பிக்கின்றார். எம்பெருமானுக்கு ரூபமில்லையென்றும், அவன் சாதாரண ஊன கண்களுக்குப் புலப்பட மாட்டான் என்றும் சாஸ்திரங்களில் சில இடங்களில் சொல்லி இருப்பதுண்டு; அதே போல், அவன் தன்னுடைய ஸங்கல்பத்தினால் பல திருஉருவங்களை உடையவன் என்றும் சொல்லி இருப்பது உண்டு. இவற்றால், அவனுக்கு கர்மங்களால் உண்டான தேகம் இல்லாதவன் என்றும், திவ்ய மங்கள விக்ரஹங்களை உடையவன் என்றும், அவை, அவன் உகந்து அருளின திருமலை போன்ற திவ்யதேசங்களில் அடியார்களுக்கு காட்சி கொடுத்து கொண்டு இருக்கும் வடிவில் இருக்கிறான் என்றும் விளங்கும். ராம, கிருஷ்ண திருஅவதாரங்களில் விபவாவதாரங்களிலும் காட்டிக் கொடுத்து உள்ளான்; அத்திருமேனியை இப்போது காண இயலாது என்றாலும், திவ்யதேசத் திருமேனியை நன்கு கண்டு களிக்கலாமே என்று இந்த பாட்டில் சொல்கிறார். பேயார் முலையுண்ட வாயான், மாதவனான காயா மலர் வண்ணனே வேங்கடம் மேயான்; அவ்விடத்தே நாடீர், நாடோறும் வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம், வீடே பெறலாமே என்று சென்ற பாசுரத்தையும் (10.5.5) சேர்த்து பொருள் கொண்டு அனுபவிக்கலாம். |
18 | திருமாலிருஞ்சோலை மலையே, திருப்பாற் கடலே, என் தலையே, திருமால் வைகுந்தமே, தண் திருவேங்கடமே எனதுடலே, அருமா மாயத்து எனது உயிரே, மனமே வாக்கே கருமமே, ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.(10.7.8) | தெற்குத் திருமலையோடும் திருப்பாற்கடலோடும் ஒப்பு சொல்லக் கூடிய என் தலையையும், ஸ்ரீவைகுண்டத்தோடும் திருவேங்கட மலையோடு ஒப்பு சொல்லக்கூடிய என்னுடைய உடலையும், கடக்க அரிதான, ப்ரக்ருதியோடு கலந்து இருக்கின்ற என்னுடைய ஆத்மாவையும், மனதையும், வாக்கையும், கிரியைகளையும் எல்லாவற்றிக்கும் காரணமான சர்வேஸ்வரன், எம்பெருமான் ஒரு நொடியும், எந்த தேசத்திலும் பிரிய மாட்டான் என்பது பொழிப்புரை. இந்த பதிகத்தின் சுருக்கத்தை இங்கே காணலாம். எம்பெருமான், அவருக்கு உகந்ததான திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், வைகுந்தம் மற்றும் திருவேங்கடமலை போன்ற திவ்யதேசங்களில் அடையும் இன்பத்திற்கு ஒப்பாக தன்னுடன் சேரும் போதும் எம்பெருமான் பெறுவதாக ஆழ்வார் சொல்கிறார். ஆழ்வார் தனது தலையை, திருமாலிருஞ்சோலை மலைக்கும், வியூகத்திற்கும் (திருப்பாற்கடல் ), ஒப்பிடுகிறார். அதேபோல், திருவேங்கடத்தையும், வைகுந்ததையும் (பரமபதம்) தன்னுடைய உடலுக்கு ஒப்பிடுகிறார். இதனால், எம்பெருமானுக்கு, பர, வியூக, திருமலை மற்றும் திருமாலிருஞ்சோலை போன்ற தமக்கு உகந்த திவ்ய தேசங்களில் இருப்பதும், ஆழ்வாருடன் இருப்பதும், ஒன்று என்று ஆழ்வாரை சிறப்பாக சொல்வதும் உண்டு. இந்த பாசுரத்தில், தன் தலையும், திருமாலிருஞ்சோலை மலையும், திருவேங்கடமும், வைகுந்தமும், திருப்பாற்கடலும் என்று ‘உம்’ என்ற விகுதி கொண்டு இணைத்துச் சொல்லாமல், தனித்தனியே சொல்வது, எல்லா இடங்களிலும் எம்பெருமான் ஒரே நேரத்தில் இருப்பதைச் சொல்வதாகும். இந்த கருத்தை நம்பிள்ளை கீழ்கண்டவாறு விளக்கி அருளுகிறார். ஸௌபாரி என்பவன் மான்தாதா என்ற ரிஷியின் ஐம்பது(50) பெண்களை மணம் புரிந்து, தனித்தனி ஐம்பது வடிவுகள் எடுத்து, அந்த தேவிமார்களுடனே தனித்தனியே ‘என் கணவன் என் ஒருத்தியை விட்டு வேறொருத்தி மேல் ஒரு நொடிப் பொழுதும் நினைக்கிறவன் அல்லன்’ என்றே நினைத்திருந்தாளாம். அப்படியே எம்பெருமானும் இப்பாட்டில் சொல்லப்படுகிற இடங்களில், ஒன்றில் இருக்கும் போது, மற்றொன்றில் இல்லை என்று நினைக்கும்படி, இருந்தமை என்று காட்டவே, உம் என்ற விகுதியை தவிர்த்து, ஆழ்வார் ஏகாரம் சொல்லி உள்ளார் என்று விளக்குவார். அதேபோல், எம்பெருமான், ஆழ்வாரின், மனம், வாக்கு மற்றும் செயல்களில் தனித்தனியேயும், ஒன்றாகவும், முழுவதுமாகவும் இருக்க விரும்புவதை ஆழ்வார் சொல்கிறார். இப்படி ஆழ்வார், எம்பெருமான் தன்னை விட்டு ஒரு நொடியும் பிரியாமல் இருப்பதை கண்டு தன்னுடைய ஜீவாத்மாவின் மேல், உடலின் மேல், சொல்லின் மேல், மற்றும் செயல்களின் மேல் எம்பெருமான் லயித்து கிடப்பதை ஆழ்வார் உணர்ந்து நெகிழ்கிறார். |
மீண்டும் மற்றொரு ஆழ்வார், மற்றொரு திவ்ய தேசம் பற்றிய செய்திகளுடன் சந்திக்கலாம். நன்றி
ஸ்ரீ சத்யபாமா நாச்சியார் ஸமேத கோவர்த்தனகிரிதாரி திருவடிகள் போற்றி போற்றி !!
திவ்யதேசம் | திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்தனகிரி சேர்ந்தது) | |||
மூலவர் | கோவர்தனேஸன் பாலகிருஷ்ணன் | |||
உத்ஸவர் | ||||
தாயார் | சத்தியபாமா நாச்சியார் | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 50 | |||
மங்களாசாசனம் | பெரியாழ்வார் – 17 ஆண்டாள் – 18 தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 1 திருமங்கை ஆழ்வார் – 4 நம்மாழ்வார் – 10 | |||
தொலைபேசி |
வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.
Google Map
திருவடமதுரை பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்
திருவடமதுரை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்
திருத்தலம் பற்றி
இந்த திருத்தலம் பற்றி எழுதுவதற்கு முன், சொல்லவேண்டிய விஷயம், மதுரா செல்வதற்கு நானும் என் மனைவியும் டெல்லி சென்று அங்கு தங்கியபோது, என்னுடைய உறவினர் என்னிடம் கேட்ட கேள்வி, என்னை சிலிர்க்க வைத்தது. அவர் கேட்ட கேள்வி, ” மதுராவில், அதனை சுற்றி உள்ள பகுதிகளில், சுமார் 5000 ( ஆம், ஐயாயிரம்) கோவில்கள் உள்ளன என்று கேள்விப்பட்டு உள்ளேன், அவற்றில் எத்தனை கோவில்களை நீங்கள் இந்த மூன்று நாட்களில் காண போகிறீர்கள் என்று கேட்டதை என்னால் இன்று அளவும், மறக்க முடியவில்லை, ஏன் என்றால், அதைவிட அதிகம் கோவில்கள் உள்ளனவோ என்ற அளவிற்கு அமைந்துள்ள மதுரா, ஆய்ப்பாடி, பிருந்தாவன், மற்றும் அதனை சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் அங்குள்ள ஆலயங்களும், தீர்த்தங்களும், க்ஷேத்திரங்களும் சரித்திரமும், மற்றும் எங்கும் தவழும் எளிமையும், பக்தி மயமும். எப்படியும் ஒரு ஏழு நாட்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக தரிசனம் செய்து இருக்கலாமோ என்ற நினைவு இன்றும் உண்டு. இருந்தாலும் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களையும் எங்களுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த ஹரே ராம ஹரே கிருஷ்ணா , இஸ்கான், அலுவலகத்தினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் வழியில் மதுரா புகைவண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் உள்ளது. இதே போல் இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கோவர்த்தனம் எனப்படும் கோவர்த்தன கிரியும் உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. கண்ணனின் லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி’ என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன.
முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இந்த க்ஷேத்திரமும் ஒன்று. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.
இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர் சிலர் அது கோவர்தன பரிக்ரமா எனப்படும். சிலர் மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. இப்படி பரிக்ரமா பல உள்ளன. நேர, கால, தேக சௌகர்யங்களுக்கு ஏற்ப மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை இன்றும் நாம் கண்கூடாக காணலாம்.
கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. அவை, மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுத வனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம்.
மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, கேசவ தேவ் கோயில் என்று பெயரிட்டுள்ளனர். தற்பொழுது பாதுகாப்பு படையினரால் காக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்குள் சென்று விட்ட பின் மிகவும் அருமையாக அனுபவிக்க வேண்டிய இடம். எல்லாவற்றையும் அடைந்த கண்ணன், நமக்காக இந்த சிறைச்சாலையில் வந்து பிறந்து பற்பல லீலைகள் புரிந்ததை நினைத்தால் நம் கண்களில் கண்ணீர் குடிகொண்டுவிடும்.
கிருஷ்ணனின் அவதார ஸ்தலமான கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்றவாறு பெரிய மண்டபங்களும், மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிருந்தாவனத்தில் தமிழ்நாட்டு முறைப்படி அமைக்கப்பட்ட ரங்கமந்திர் என்று அழைக்கப்படும் விசாலமான கோவில் அல்லது ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. இதில் ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள், திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர் களுக்கு சன்னதிகள் உண்டு.
கோகுலாஷ்டமி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
ஸ்தல வரலாறு
இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் சேர்த்து பாடப்பட்டுள்ளது. கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து ஆயர்பாடிக்கு/ஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபாலன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.
இந்த மதுரா நகரம் எல்லா யுகங்களிலும் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரமாகும். ஸ்ரீவாமனனாய் எம்பெருமான் திருஅவதாரம் செய்த போது, இங்கு தவம் புரிந்து இருந்தார்.
பின்பு, த்ரேதா யுகத்தில், மது என்னும் பெயரில் சிறந்து விளங்கியது. ஒரு சமயம், அந்நகரை அரசாண்டு வந்த லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்து, ரிஷிகள் நடத்தும் யாகங்களை அழித்து அவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தான். இதனால் சில ரிஷிகள் இராமபிரானிடம் சென்று விசுவாமித்திரருக்கு உதவியது போல, லவணாசுரனை கொன்று தங்களை காத்திட வேண்டும் என்று வேண்டினர். ராமன் தன் தம்பி சத்ருக்னனை அனுப்பி லவணாசுரனை அழித்தான். சத்ருக்னன் மாத்ரா நகரத்தை விரிவாக்கி நெடுங்காலம் ஆண்டு வந்தான் .
கிருஷ்ணனாய் இங்கு அவதரித்ததாலும், இப்படி பல யுகங்களில் திருவடமதுரைக்கு பகவத்ஸம்பந்தம் தொடர்ந்து வருவதால், ஆண்டாள் மன்னு வடமதுரை என்று கூறுகிறார்.
கண்ணன் ஆயர்பாடியில் வாழ்ந்த சமயம், அங்கு இந்திர பூஜை நடப்பது வழக்கம். அதன்படி இந்திரனுக்கு, ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழையை வேண்டுவார்கள். கண்ணன், இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருந்த போது, என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக, இந்திரனுக்குப் பிடித்தமான
உணவு வகைகளைச் செய்து அவனுக்கு படைப்போம், அதனைக்கொண்டு அவன் மழை கொடுப்பான் என்று சொன்னார்கள். அதற்கு கண்ணன், மழையை கொடுப்பது இந்த கோவர்த்தன மலை தான் என்றும், இந்திரனுக்கு படைக்க வேண்டாம் என்று சொன்னான். அந்த ஊரில், கண்ணன் சொன்னதை மறுப்பவர் கிடையாது, அவன் அந்த மக்களுக்கு மிக பிரியமானவன். கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை கொடுக்க சொல்லி, தானே கோவர்த்தன மலையாக இருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டான்.
இதனால் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி, அங்கிருந்த ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் தொல்லை கொடுத்து ஏழு நாட்கள் கடுமையான மழையால் அவதிக்குள்ளாக்கினான். மனிதர்களும், ஆடுமாடுகளும் கஷ்டப்படுவதை கண்ட கண்ணன், அந்த அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினான். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். அந்த மலை கோவர்தன மலை என்றும், அதனை குடையாக பிடித்து அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான் என்பது குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் வரலாறு என்றும் கூறப்படும். கண்ணனின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார் . அந்த மலை, அவர்களை காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கண்ணன், கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார். அந்த கோவர்த்தன மலை இன்றும் கொண்டாப்பட்டு, மக்கள் பரிக்ரமா என்ற கால்நடையாக அந்த மலையை சுற்றி வருகிறார்கள்; இது சுமார் 26 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.
ஹரிதேவரின் கோயில் என்ற இடத்தில கிருஷ்ணர் நாராயண ரூபத்தில் வீற்று இருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே. இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன், ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.
லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர்.
இதற்கு அருகில் இருக்கும், தான கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.
அடுத்து, அனியோர், இங்கு சாதம், இனிப்புகள், காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.
கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளன. ராதா குண்டம், இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது. ராதாராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன.
குசும சரோவர் என்ற இடத்தில், கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தார்
ஆழ்வார் ஆச்சார்யர்கள்
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.
கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள்.
பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி இங்கே கிளிக் செய்யவும்
ஆண்டாள் – திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி இங்கே கிளிக் செய்யவும்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை
வளவெழும் தவளமாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை, துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல், இளைய புன் கவிதை யேலும் எம்பிறார்க்கு இனிய வாறே. (45) | அழகு மிகுந்து இருப்பதும், வெண்ணிறத்தில் மாடங்களை கொண்ட பெருமை தங்கிய வடமதுரையில் கம்சனின், குவலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனின் கோவிலில் எம்பெருமானுக்கு திருத்துழாய்க் கைங்கர்யம் செய்யும், இயற்கையிலே எம்பெருமானுக்கு தொண்டு செய்வதில் நிலை நின்றவரான தொண்டரடிபொடியாழ்வார் அருளிச்செய்த இந்த திருமாலை என்ற பிரபந்தம் குறைகள் கொண்ட கவிதையாக இருந்த போதிலும் பெரியபெருமாளுக்கு (அரங்கநாதர்) மிகவும் போக்யமாக இருக்கிறது என்று ஆழ்வார் பாடியுள்ளார். குவலயாபீடம் என்ற யானையை ஒழித்தது போல் தன்னுடைய குறைகளை போக்கி அருளி செய்த எம்பெருமானின் விருப்பமே தமக்கு பயன் என்கிறார். எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பியவை ஆயினும், தனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரியபெருமாளுக்கு இது ஆராவமுதமாக இருக்கிறது என்கிறார். “இப் பிரபந்தம் கற்றார்க்குப் பயன் என்று தனியாக ஒன்றும் சொல்லாமல் ஆழ்வார் இந்த பிரபந்தத்தை முடித்தார் என்று சொல்பவர்களுக்கு ‘இந்த உகப்பே இந்த பிரபந்தத்தை படித்தவர்களுக்கு பலம் / பயன் ஆகும்’ என்ற வயாக்யான ஸூக்தி இங்கு நினைவில் கொள்ளதக்கது. |
திருமங்கை ஆழ்வார்
1 | வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து, கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே. (பெரிய திருமொழி 6.7.5) | கம்ஸன் நடத்தின விழாவில் கலந்து கொள்ள வடமதுரைக்கு ஆசைப்பட்டு எழுந்தருளி, எதிரிகளை ஒழித்து, பின்னர் மலைபோல் உள்ள தோள்களை கொண்ட கம்சனையும் சீறி எழுந்து, கொன்றவனும், காளிங்கனின் மேல் குதித்து நர்த்தனம் செய்தவனுமான கண்ணபிரான், வேதங்களை முறைப்படி ஓதி வைதிகர்கள் பலர் வாழும் திருநறையூரில் நின்ற நம்பியே. |
2 | மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன் நறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார், கன்னவிலும் தோளான் கலியன் ஓலி வல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. (பெரிய திருமொழி 6.8.10) | பகவத் ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல் நித்யமாக இருக்கிற வடமதுரையில் வசுதேவருடைய வாழ்வுக்கு ஆணிவேராக வந்து பிறந்தவனான நறையூர் நின்ற நம்பியை, வாசனை மிகுந்த மாலையை அணிந்து, மலை போல் புஜங்களை உடைய திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இத்திருமொழியை ஓத வல்லவர்கள் பரமபதத்திற்கு சென்று அங்குள்ள நித்யஸூரிகளால் கொண்டாடப் பெறுவர். நித்ய பகவத் சம்பந்தம் என்று சொல்வது, வெவ்வேறு யுகங்களில் வாமனனாக தவம் செய்தது, சத்ருக்கனன் ஆட்சி செய்தது, மற்றும் கண்ணன் திருஅவதரித்தது. |
3 | நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான், வாச மலர்ப் பொழில் சூழ் வட மாமதுரைப் பிறந்தான், தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற, கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ. (பெரிய திருமொழி 9.9.6) | பரபக்தியில்லாதவர்களுக்கும், நெஞ்சால் எண்ணாதவர்கட்கும் கிடைக்க மாட்டாதவனாகவும் மணம் மிகுந்த மலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட, திருவடமதுரையில் எல்லா தேசத்தவர்களாலும் வணங்கப்படுபவனே, திருமாலிருஞ்சோலையில் இருப்பவனும், சிறந்த குழல் கற்றையை உடையனுமான எம்பெருமானை, கெண்டைமீன் போன்ற கண்ணழகுடையளான என்மகள், பரகால நாயகி காணப்பெறுவாளோ என்று தாயார் கேட்கும் பாடலாக அமைந்துள்ளது. நேசமுள்ளவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் எளியன் என்பது முதலடியின் கருத்து. இதனால் எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியமே வெளியிடப்பட்டது. அத்தகைய திருக்குணம் வாய்ந்தவனும் இத்திருக்குணத்தை வடமதுரையில் பிறந்தருளிப் பிரகாசித்தவனும், அது தன்னை திருமாலிருஞ்சோலையிலே காட்டி அருள்பவன் என்று ஆழ்வார் சொல்கிறார். |
4 | பாரோர் புகழும் வதரி வடமதுரை ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் (சிறிய திருமடல், 74) | நான் அவனுடைய காளமேகத் திருவுருவைக் கண்டு களிக்கும் வகையில் ஊர் ஊராக சென்று வடமதுரை, திருவேங்கடமலை, திருக்கோவலூர், மதிள் சூழ்ந்த காஞ்சீநகரத்திலுள்ள ஊரகம், அப்பக்குடத்தான் ஸந்நிதி, திருவெள்ளறை, திருவெஃகா, திருவாலி, திருத்தண்கால், திருநறையூர், குட்டநாட்டுத் திருப்புலியூர், அழகிய தோட்டங்கள் சூழ்ந்த திருவரங்கம், திருக்கண்ணமங்கை, திருவிண்ணகர், அழகிய திருக்கண்ணபுரம், திருச்சேறை, தேரழுந்தூர், திருக்குடந்தை, சோளிங்கர், திருக்கடல்மல்லை, திருவிடவெந்தை, திருநீர்மலை, அழகிய திருமாலிருஞ்சோலை திருமோகூர், உலகத்தாரனைவரும் துதிக்கின்ற ஸ்ரீபதரிகாச்ரமம், வடதிசை மதுரை என்று பல திவ்யதேசங்களை குறிப்பிடுகிறார். |
நம்மாழ்வார்
1 | வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற, வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந் நெலும் வயல் சூழ் திருவாறன்விளை, வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த, வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே. (திருவாய்மொழி 7.10.4) | செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற திருவாறன்விளை திவ்யதேசத்தில் மிக்க கீர்த்தியை உடையவனும் மூவுலங்களுக்கும் ஸ்வாமியும் வடமதுரையில் அவதரித்தவனும் அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தை உடையவனுமான கண்ணனுடைய திருவடித் தாமரைகளை இடைவெளி இன்றி எப்பொழுதும் இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ என்று ஆழ்வார் பாடுகிறார். திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தி இல்லை என்றாலும், அங்கு நின்று அருளுகின்ற எம்பெருமான் திருவடிகளை இங்கே இருந்து நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ என்கிறார். நிச்சலும் எப்பொழுதும் என்று சொன்னது, தினமும் இடைவிடாது என்பதை தெரிவிக்கவே. உலகினர் மனோரதம் என்றும், அனுபவம் என்றும் இரண்டு விஷயங்களை, சொல்லி தனக்கு மனோரதம் ஒன்றே போதும் என்கிறார். |
2 | இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இரும் சிறைப் புள், அதுவே கொடியா உயர்த்தானே! என்று என்று ஏங்கி அழுதக்கால், எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான், மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே? (திருவாய்மொழி 8.5.9) | ஒளி பொருந்திய சக்கரத்தாழ்வானை ஆயுதமாக உடையவனே! தனக்கு வாகனமாகவும், பெரிய சிறகை உடையவனுமான ஸ்ரீ கருடாழ்வாரையே கொடியாக கொண்டவனே ! இப்படி உன்னை காண ஆசைப்படுகிறேன் என்று பல காலமும் சொல்லி அழுதால், இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக தேன் வெள்ளம் பாய்கின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான் தன் திருவுள்ளத்தில் என்ன கொண்டு உள்ளாரோ என்று ஆழ்வார் பாடும் பாடல். இப்படி கூப்பிடும்போது, அவன் வாராமல் இருப்பதால், கூப்பிட்டு போகலாம் என்று நினைக்கிறாரோ, இல்லை அவன் உள்ளம் புண்படுகிறதோ என்று ஆழ்வார் எண்ணுகிறார். இவனிடம் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்த துன்பங்களையும் / எல்லாருடைய வேதனைகளையும் போக்கி, ஒருவர் தப்பாமல் அவர்களை ரக்ஷித்து அருள்வதற்காக வடமதுரையிலே திருஅவதாரம் செய்த ஆச்சர்ய குணங்களை கொண்ட கண்ணன் என்கிறார். நினைத்த இடத்தில நொடியில் சேர்க்கவல்ல கருடாழ்வானை படையாக கொண்ட எம்பெருமான் இன்னும் இங்கு சேராதது, என்னோடு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தந்தானோ அவனோடும் என்று நினைப்பது போல் “இதுவோ பொருத்தம் ” என்கிறார். |
3 | பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்றே எழுவர், இருள் கொள் துன்பத்து இமை காணில் என்னே என்பாரும் இல்லை, அருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு அருள் கொளாளா உய்ய வல்லால் இல்லை கண்டீர் அரணே.(திருவாய்மொழி 9.1.3) | கையில் பொருள் இருப்பதைக் கண்டால், வணக்கம் என்று கூறி ஏதாவது ஒன்று பெற்று அகன்று போவார்; அறிவின்மையையும் துன்பத்தினையும் கொடுக்கும் வறுமையை கண்டால், அந்தோ என்று இரங்குவாரும் இல்லை; ஆகையால் கண்டவர்கள் அனைவரும் கலங்கும்படியான தொழில்களை செய்கின்ற அசுரர்கள் அழியும்படியாக வடமதுரையில் அவதரித்த ஸ்ரீ கண்ணன்பிரானின் னை அருளை பெறுவதற்கு அடியவர்களாகி வாழ்ந்தால் நலம், அப்படி இல்லை என்றால் பாதுகாப்பு வேறு இல்லை என்கிறார். |
4 | அரணம் ஆவார் அற்ற காலைக்கு என்று அமைக்கப் பட்டார், இரணங் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அஃதே, வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சரண் என்று உய்யப் போகில் அல்லால் இல்லை கண்டீர் சதிரே. (திருவாய்மொழி 9.1.4) | செல்வம் நீங்கி, வறுமை அடையும்போது புகல் ஆவார் என்று நினைத்து செல்வம் உள்ள காலத்தில், செல்வம் முதலியவைகளால் வசப்படுத்திக் கொள்ளப் பட்டவர்கள் கடனை திரும்ப பெற்றவர்கள் போல் ஒரு உதவியும் செய்ய மாட்டாத அற்பர்களாக நடந்து கொள்வர். ஆதலால் நன்றி மறந்தவர்களை பற்றி பேசி என்ன பயன்; வடமதுரையில் திரு அவதாரம் செய்த ஸ்ரீ கண்ணபிரானின் கல்யாண குணங்களே நமக்கு தஞ்சம் என்று நினைத்தும், கூறியும் உய்ந்து போங்கள் ; அப்படி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். |
5 | சதிரமென்று நம்மைத் தாமே சம்மதித்தின் மொழியார் மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்று உறுவர் அதி கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு எதிர் கொள்ளா உய்யுய்ய ல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே.(திருவாய்மொழி 9.1.5) | தங்களை தாங்களே இசைந்து இனிய வார்த்தைகள் பேசிய மகளரிடத்தில் இன்பம் அனுபவித்தவர்களே, அந்த இனிய அனுபவம் நீங்க, வேறு ஒரு துன்பத்தை அடைவார்கள்; ஆதலால், கண்டவர்கள் அஞ்சத்தக்க காரியங்களை செய்த அசுரர்களை, அழியும்படி செய்வதற்காக திருவடமதுரையில் திருஅவதாரம் செய்த கண்ணபிரானுக்கு அடியவர்களாகி போவதே இன்பம் ஆகும், மற்றதெல்லாம் இன்பம் இல்லை என்கிறார். சிற்றின்ப சுகம், இன்பம் என்று மயங்குகின்ற மயக்கமே அன்றி, இன்பம் இல்லை என்கிறார். |
6 | இல்லை கண்டீ ர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே. (திருவாய்மொழி 9.1.6) | இவ்வுலகத்தில் இன்பம் என்பது சிறிதும் இல்லை; நிலை நின்ற பேற்றினை நினையாமல், முன்பு இருந்த எத்தனை பேர் இறந்து போயினும் ஒரு பயன் இன்றி கழித்தார்கள்; ஆதலால், பழைய நகரமாகிய செழித்த வடமதுரையிலே திருஅவதாரம் செய்த கண்ணபிரானுடைய சீரிய கல்யாண குணங்களை சொல்லி உய்ந்து போவதை தவிர சுருங்க சொல்வது வேறு ஒன்றும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார். எல்லை இல்லாத பேரின்பமான பேற்றினை உணராமல் முன்பு உள்ளோர் பலர் முடிந்து போனார்கள்; ஆதலால் நீங்கள் அப்படி போகாமல், அடியவர்களை காப்பதற்கே அவதரித்தவனைப் பற்றி உய்யுங்கள், அதனை தவிர ஆத்மாவிற்கு வேறு நன்மை இல்லை என்கிறார் . |
7 | மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிருக்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றிமில் சீர் கற்று வைதல் வாழ்தல் கண்டீர் குணமே . (திருவாய்மொழி 9.1.7) | வேறு வழிகளை தேடி அலைய வேண்டாம், இந்த பெரிய உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இறைவனைப் பற்றி சிந்தித்தால் ஆகிய ஒன்றே போதுமானதாகும்; ஆகையால் வடமதுரையில் அவதரித்த கண்ணபிரானின் குற்றம் இல்லாத கல்யாண குணங்களை நாள்தோறும் சொல்லிக்கொண்டு வாழ்வதே குணம் ஆகும். எம்பெருமானை பற்றுவது மிக எளிதானது, இனிமையானது என்கிறார். விஷ்ணு புராணத்தில், 5.13.13, ” நான் தேவன் அல்லன் ; கந்தர்வன் அல்லன் ; யக்ஷன் அல்லன்; அசுரன் அல்லன் ; உங்கள் பந்துவாய் பிறந்தவன் ; ஆதலால் வேறு நினைவு வேண்டாம் ” என்று கண்ணன் சொன்னதை இங்கே நினைவில் கொள்ளலாம். |
8 | வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போம் இதனில் யாதுமில்லை மிக்கதே. (திருவாய்மொழி 9.1.8) | மேல் பாசுரத்தில் கூறியபடி வாழ்வதே குணமானது; மாயவனாகிய எம்பெருமானுடைய திருவடிகளை துதித்து காலத்தை கழிக்க நினைக்க கூடியவர்களான பெரியோர்களுடைய வாழ்ச்சிக்கு துணை ஆவதற்காக வடமதுரை வந்து திருஅவதாரம் செய்தவனுடைய புகழையே ஆசைப்படும் துணையாக கொண்டு வாழ்வதே மேலான வாழ்வாகும். இதனைத்தவிர மேம்பட்ட வாழ்வு யாது ஒன்றும் இல்லை. |
9 | யாதுமில்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் மா துகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே. (திருவாய்மொழி 9.1.9) | பகவத் விஷயம் தவிர வேறு ஒன்றைப்பற்றிக் கொண்டு அதைக் காட்டிலும் மேலானது ஒன்றும் இல்லை என்று பலகாலும் அதையே சிந்தனை செய்யும் அளவில். காதுகளின் துளையை பெருக்க நினைத்து, மூளி ஆக்கி கொள்வதைப் போல், முறையாய் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற ஸம்ஸார வாழ்க்கையும் இழந்து விடுவர். பெரிய துகில் கொடிகள் கட்டப்பட்டு உள்ள மாடங்களை உடைய வடமதுரையில் திருஅவதாரம் செய்து தோளில் மாலைகளை சூடிக்கொண்டு இருக்கும் கண்ணபிரானைத் தவிர பாதுகாக்க வேண்டியது ஒன்று இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அதனில் மிக்கு யாதுமில்லை என்று படிக்க வேண்டும் என்று உரை ஆசிரியர் கூறுகிறார். இவனை விட வேறு ஒன்றினை பற்றியவர்கள் இருக்கின்ற வாழ்க்கையும் தொலைத்து, பிறகு இவன் அல்லது சரணம் இல்லை என்று ஆகிறார்கள். செல்வத்தைக் கொடுப்பதிலும் ஆபத்தை போக்குவதிலும் அந்த புருஷோத்தமனைத் தவிர ஆற்றல் உடையவன் வேறு யாரும் இல்லை. முதல் இரண்டு அடிகளுக்கு ‘கைவல்யம்‘ என்ற அடையத்தக்க ஒரு பொருளிலும் அர்த்தம் சொல்வதுண்டு. கைவல்ய ஸுகத்தை விரும்பி இந்த ஆத்ம அனுபவ சுகத்திற்கு மேம்பட்டது மற்றொரு இன்பம் இல்லை என்று துணிந்து, அதனை வளர்ப்பவர்கள், ஸாம்ஸார ஸுகத்தையும் இழந்து விடுவதை சொல்கிறார். ஆதலால், ஸ்ரீமதுரையிலே திருவவதாரம் பண்ணியதால் பெற்ற அழகை உடையவனான கண்ணனே அடையத் தகுந்தவன் என்கிறார். இப்பொருளில் “அது கருதி” என்றது கைவல்யத்தை தம் வாக்காலே சொல்லக் கூசி ‘அது ‘ என்றதாகக் கொள்ளவேண்டும். |
10 | கண்ணன் இல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் திண்ணமா அம் உடைமை உண்டேல் அவனடி சேர்த்து உய்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே. (திருவாய்மொழி 9.1.10) | கண்ணபிரான் அல்லால் வேறு யாவரும் புகல் ஆவதற்கு இல்லை என்ற உண்மையை நிலைநிறுத்தவும் பூமியின் பாரத்தை போக்குவதற்கும் திருவடமதுரையில் திருஅவதாரம் செய்தான். மனிதர்களே, உங்களுடைய பொருள் ஏதாவது உள்ளதாக இருப்பதாக நினைத்து இருந்தால், அவைகளை அவன் திருவடிகளில் சமர்பித்துவிட்டு, உய்ந்து போவீர்கள் என்றும் வேறு ஒன்றும் யோசிக்க வேண்டாம் என்றும் சொல்லி உங்களாதாக நினைத்துக்கொண்டு இருக்கும் பொருட்கள் அனைத்துமே அவனதாகும் என்றும் சொல்லி பாடலை முடிக்கிறார். இறுதி அடிக்கு பொருளாக, உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுவன அனைத்தும் அவன் பக்கத்தில் தான் உள்ளன, உங்கள் பக்கத்தில் ஒன்றும் இல்லை என்பதை குறிப்பிடுகிறார். பலன் கிடைப்பதற்கு தகுந்த சாதனைகளும் அவனை ஒழிய வேறு ஒன்று இல்லை என்கிறார். |
ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்கள் இவை ஆயிரத்துளிப் பத்தும் ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே. (திருவாய்மொழி 9.1.11) | கண்ணபிராணக் காட்டிலும் துணை ஆகும் பொருள் வேறு ஒன்று இல்லை என்பதை துணிந்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணபிரானை திருக்குருகூரில் அவதரித்த சடகோபன் (நம்மாழ்வார்) அருளிச் செய்த குற்றமில்லாத ( அறநெறியை விட்டு விலகாத) ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இந்த பத்து பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்க வல்ல உபகாரகர்கள் முன்பே நம்மை அடிமை கொண்ட பெரியோர்கள் ஆவார்கள். |
சில புகைப்படங்கள்
இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.
As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.
In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by “silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin‘; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”.
Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.
These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).
Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.
In the first hymn of this subsection, Kulithu Moondru Analai (25), doing Naichiyaanusandhaanam, we saw Azhwaar mentioning that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.
In the next hymn, Podhellam Podhu Kondu (26), Emperumaan asked Azhwaar, that he could have done the poojas and singing slokas on Him, which anyone could do, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams. Azhwaar responded that he did not do them as well.
After hearing Azhwaar say that he did not do what humans could do, Paramathmaa stated that He accepted the services that were carried with good intention by squirrels and monkeys, when He took Rama incarnation, the same way as He accepts the services of Nithyasoories. When Periyaperumal inquired Azhwaar whether he had done any such thing with good intentions, Azhwaar responded negatively in the hymn “kurangugal malaiyai nooka” (27).
In the hymn Kulithu moondru analai (25), Emperumaan asked Azhwaar, if he had done prayers using all the three elements, thinking through mind, offering flowers using hands and reciting holy chants using mouth. In the next hymn, Podhellam Podhu Kondu (26), Emperumaan asked Azhwaar whether he did prayers using his mouth, by reciting holy chants. In the next hymn kurangugal malayai nooka, (27), Emperumaan asked Azhwaar whether he had served with his hands and legs, like the monkeys and squirrels.
In the next hymn, Umbaraal ariyalaaha” (28), Emperumaan asked Azhwaar whether his mind had thought about Paramaatma as his saviour, like the elephant Gajendra when a crocodile caught the legs of the elephant and was saved by Emperumaan. Azhwaar responded negatively like how did in the previous hymns.
So, initially Emperumaan asked Azhwaar whether he has done all the three together, when Azhwaar replied negatively, Emperumaan started asking about each one of them in each of the subsequent hymns.
In the next hymn, Oorlien, kanni illai, (29) Emperumaan asked Azhwaar whether he had any association with His Divyadesams, as He is committed to protect all those who have any association with divyadesams like chanting of Tirupallandu, or holding any piece of land for doing some service to Him and Azhwaar, replied negatively.
In this fourth part of Azhwaar’s Naichanusanthanam, which consists of ten verses 25 to 34, we saw Azhwaar saying that he had no good qualities, in the five hymns from 25 to 29 and in the next five songs, he is going to say that he has all kinds of evils or all bad qualities.
Now let us move on with the next hymn, where he claimed that he would not tolerate the rise of others.
Manathilor thooymai illai, vaayil or in sol illai, sinathinaal setram nokki thee vili vilivan vaalaa, punthuzhaai maalaiyaane, ponni soozh Thiruvarangaa, enakku ini gathi en solaai, ennai aaludaiya kove (30)
Emperumaan acknowledged what Azhwaar said in the last five hymns, such as Azhwaar not having any good qualities and continued that He would give Azhwaar the moksham, or paramapadham, as long as he did not have any bad or evil qualities, in the same way like Azhwaar not having any good qualities. For this Azhwaar answered that he has all the bad qualities in him and there is no bad quality left in this world, that he did not have. Allavandhaar, one of our great acharyaars have told very much similar things in later years in one of his slokams.
We can recall what Nammazhwaar had told in Thiruvaaimozhi (3.3.4), “niraivonrum illen“, meaning that he did not have any good qualities, as similar what Thondaradipodi Azhwaar sung in the five hymns, 25th to 29th of Thirumaalai. In the same hymn, Nammazhwaar had told “neesanen” meaning a man with all evil qualities, which is expanded by Thondaradipodi Azhwaar in the hymns 30 to 34. In those hymns, Thondaradipodi Azhwaar had told that he being the repository of all the bad or evil qualities.
The direct meaning of this hymn is given below : Azhwaar admired Emperumaan as “One who has worn the Thulasi garland (Basil leaves garland), the One who is in Srirangam, which is surrounded by the river Cauvery, the One who enslaves Azhwaar . Azhwaar continued that he had all the evil or bad qualities, such as, he did not have any clarity in his mind; would not speak any good words or nothing good could come out of his mouth; would utter only the most cruel words out of anger and enmity. Azhwaar wondered what would be the way for such person who had all such evil qualities and concluded that only Emperumaan should bless him. Let us look into this with little bit more details in the coming paragraphs.
This means that Azhwaar did not have purity in his mind. Azhwaar says that reducing even a little bit of our evil qualities or vices such as lust, enmity, greed, love, religion, and infidelity, will help in purifying us at least a little bit. Azhwaar says that keeping the mind clean is helpful for attaining moksham or paramapadham. Paramathma can never be seen or felt by normal eyes and words, but only be felt or seen by those who have obtained purity and clarity in their mind through wisdom. (Manasaathu visudhena). Vishnupurana slokam (1.4.41) explains the above by stating :
With this we can understand that keeping the mind clean or purified is a route to reach Him through Knowledge or Wisdom. Azhwaar stated that he did not have that kind of a purity in his mind. Since he did not have that purity in his mind, his mind was always intoxicated with some kind of imperfections, such as lust, hatred, greed, fear, malice, love, religion, and insanity. So Azhwaar concluded that his mind would never be pure.
Azhwaar states that he could never speak any pleasant words.
Emperuman wonders if Azhwaar could speak some good or pleasing words with his mouth, even though his mind might be completely spoiled, and Azhwaar said of himself that not even a single good word would come out of the mouth, even unconsciously. When Azhwaar said that he had not spoken good words, it meant that he never asked anyone how they were or enquired about them politely or sweetly. Similarly he said that he did not respond to anyone cordially as well, when they enquired him. We can recall how Thirumangai Azhwaar in his Periya Thirumozhi (1.6.5) mentioned “nendum solaal marutha neesanen” meaning that he, a man with lowly values, refused people with long lecture of harsh words. This hymn appears when he sang about the Emperumaan in Naimisaaranyam.
With the above two phrases, Azhwaar summarizes the comments he made in the previous five hymns that he has no good qualities.
Sinathinal Setram Nokki means glaring at others with anger. Azhwaar says that despite his lack of purity in heart and words, he is trying to harm those who try to go away from him, but made sure that they could not escape from him. Azhwaar says that at first he would show all the anger in his heart towards them and burn them with hostile look, so that they were treated like enemies who would curl up. The words Sinam and Seetram in Tamil mean the same thing, Anger. Since Azhwaar had used these words next to each other, could mean that Azhwaar wanted to convey that he was very angry. If a man is well-dressed and good, Azhwaar said that he would not tolerate that superiority of his, for no apparent reason, and there was no limit to the words he could utter against them.
Azhwaar talks about himself that he would not be as if, he would always be with such an angry look whenever he would see that person. But whenever azhwaar would open his mouth and speak, he would pour out fire to his listeners and say words that were doomed to extinction. If someone asks whether there is any benefit for talking like this or looking like this, Azhwaar would say that it is not useful. But azhwaar did these, only because he believed that looking like this or talking like this were the real use or benefit. People who follow satvic (virutous) qualities, would feel as though that they attained the benefits, even if those benefits were enjoyed by someone else. In the same way, Azhwaar wanted to convey that he would get the benefits if others were hurt or others were in pain.
This means that Alvar says that those who are virtuous think of the benefit of others as their own benefit, as well as the benefit of others.
It means, One who has worn the Thulasi garland (Basil leaves garland).
Emperumaan thought “If azhwaar was so evil, then there was no point in forcing Himself to do give Azhwaar abode”. Azhwaar seeing that he started appreciating Emperumaan, by stating that Emperumaan has determined to protect all those who surrendered to Him and what all He wanted from them is only them surrendering to Himself. Emperumaan would never consider the lowly qualities of his devotees and leave them. His vow to protect His devotees can be seen from the Thulasi Garlands He has on His chest. Punam refers to the fertile land where basil grows. Here He is said to have possessed a similar Thulasi garland on His chest.
The Protector if not nearby will not be beneficial. But Azhwaar said that Emperumaan was very near and close to him. Azhwaar was astonished that Emperumaan has been in Thiruvarangam in such a way that He would accept all, how much ever lowly they were. Azhwaar also wondered why He should wear a special garland and wait in Thiruvarangam, when people like Azhwaar were supposed to go through the effects of their own karma.
When Azhwaar said “Ponni Soozh“, it looks as though Azhwaar said that the river Cauvery is like another garland over the Basil garland worn by Emperumaan in Thiruvarangam.
This means that Azhwaar is requesting Emperumaan to show or tell him a way for abode.
When he said “enaku“, it meant that Azhwaar wanted to convey that the ‘he’ included all the evil or lowly qualities that were mentioned earlier. When he said ‘ini” it means from now onwards. Here Azhwaar clearly meant that he was not trying to protect himself after admitting all the evil or lowly qualities that he had. But, he meant that it was after, Azhwaar had entrusted the responsibility of protecting him to Emperumaan. When he said “gathi en sollaai” Azhwaar was asking for a way to get abode. The whole hymn looks as though Azhwaar is trying to fight a case with Emperumaan, to give him abode, when he had acquired all the evil or lowly qualities. But actually Azhwaar is doing naichyanusandhaanam Emperumaan.
Since Emperumaan is The appropriate Lord, Azhwaar did not fight with Him. When Emperumaan felt what was the need for Him to provide a way, when Azhwaar asked for abode, Azhwaar politely responded to Him that he is a staunch devotee or a slave to Him and He is The Lord for Azhwaar and this status is permanent. So Azhwaar concluded anxiously that He is the only appropriate protector to Azhwaar and in case Azhwaar could not achieve moksham, or his soul goes downhill, the resulting shortcoming would go only to Emperumaan. With this anxiety Azhwaar concluded this hymn.
Let us meet again in the next hymn, thanks
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).
பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு
இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.
நம்மாழ்வார் மொத்தம் 37 திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.
இனி பெரியாதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காண்போம். நன்றி
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல் என்று ஓழிந்தன கொல் ஏ பாவம், வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனது உள்ளத்து அகம். (68)
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்தோடு தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரமாக இருக்கும் நிலையை இந்த பாடலில் ஆழ்வார் சொல்கிறார். இந்த பாசுரத்தில் முதல் வார்த்தையான கல் என்பது திருமலையை குறிக்கும் என்பதால், இந்த பாசுரம் திருவேங்கடமுடையனுக்கு என்று நம் பெரியவர்கள் கூறுவர்.
வெல்ல நெடியான் என்றது நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாது இருப்பவன் என்று சொல்கிறார். அவன் தானே, தன் அருளாலே தடை செய்வார் இல்லாமையாலே வந்து புகுந்தான் என்கிறார். வெல்ல நெடியான் என்பதற்கு வெல்வதற்கு முடியாதவன் என்றோ ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்றோ பொருள் கூறுதல் இங்கே சிறப்பாக இருக்காது.
வந்து புகுந்ததாகத் தோன்றுவது மட்டும் இல்லாமல், மெய்யே (உடம்போடும்) வந்து புகுந்தான் என்பதை தெரிவிப்பதற்காக நிறங்கரியான் என்று திருமேனியையும் கண்டறிந்து பேசுகிறார். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேன் இறையும், அகலகில்லேன் இறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “அகலகில்லேன் இறையும், அகலகில்லேன் இறையும்” என்று தானே சொல்லிக் கொண்டு, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறான் என்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று பாடுகிற அழகு மிகவும் ரசிக்கத் தக்கது.
எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், திருவேங்கடமலை முதலான உகந்து அருளினை இடங்களில் இருப்பதை காட்டிலும் மெய்யடியாருடைய இதய கமலத்திலே வாழ்வதே சிறந்தது என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் எம்பெருமான் தங்குகின்றான் என்றும், அதனால், பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாகவும் பக்தருடைய இதயத்தில் வாஸமே அவனுடைய இலக்காக இருக்கும் என்றும், இது நடந்து விட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் அவனுடைய ஈர்ப்பு குறைந்து விடும் என்றும் ஸ்ரீவசன பூஷத்தில் பிள்ளையுலகாசிரியர் பரம ரஸமாக அருளிச் செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டே என்று உணர வேண்டும்.
“கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை, என்ன சொல்வது, இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியாகிற நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே! ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவர்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயினும், ஏதோ பாக்ய விசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசுரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சிறிது நேரம் நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இந்த உலகத்தில் பெற்றதொரு கனத்த பேறாம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேண்டும் என்பது பெரியோர்களின் உபதேசம்.
கல்லும் என்பது சாதாரணமாக மலையைச் சொல்வது, அது இங்கே சிறப்பாக திருவேங்கடமலையைச் சொல்கிறது. கனைகடல் என்பது சப்தம் செய்யும் என்ற அர்த்தத்தில், எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றான் என்கிற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கிறது. “புல் என்று ஒழிந்தன கொல்” என்பதற்கு அற்பத்தனமடைந்து என்ற பொருளில், எனது நெஞ்சின் முன்னே அவை எல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்று வருகிறது. அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு நின்றதால், அவை புல் மூடிப் போயினவோ என்று சிலர் சொல்வதும் உண்டு. சிறந்த ஸ்தலங்கள் என்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது, ஐயோ பாவம்!! என்று சொல்வது போல் “ ஏ பாவம்” என்று சொல்லப்பட்டது.
பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்” என்ற இரண்டு பாசுரங்களின் கருத்தும் இப்பாசுரத்தின் இரண்டாம் அடியின் கருத்துடன் நினைவு கொள்ளலாம்.
மீண்டும் இன்னொரு பாசுரம், இன்னொரு ஆழ்வார் என்று சந்திக்கலாம், நன்றி.
கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர்.
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, தனியாக ஒரு கோவில் என்றில்லாமல் அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி கொண்டாடி விட்டார்கள். இந்த பதிப்பினில் திருவடமதுரா திவ்யதேசத்தை கொண்டாடும் ஆண்டாள் பாசுரங்களை நாம் சிறிது காணலாம்.
ஆண்டாள் திருப்பாவை
1 | மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை, தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினுள் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் – திருப்பாவை 5 | தனது திருஅவதாரத்தினால் தன் தாயாருக்கு மேன்மை அளித்த, யமுனை நதிக்கரையில் உள்ள வடமதுரையில் பிறந்த ஆச்சர்யமானவனை, தூய உள்ளதோடு வந்து, தூய மலர்களை தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், நாம் செய்த தவறுகளால் நமக்கு ஏற்பட்ட பாவங்களும், நம்மிடம் வந்து சேர வேண்டும் என்று காத்திருக்கும் பாவங்களும் தீயிலிட்ட தூசு போலாகிவிடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. |
ஆண்டாள் – நாச்சியார் திருமொழி
1 | மாட மாளிகை சூழ் மதுரைப் பதி, நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மாமத யானை யுதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே 4.5 | குவலயா பீடமென்னும் யானையை முடித்த கண்ணன், மாட மாளிகைகளாலே சூழப்பட்ட (திருவட)மதுரை மாநகரிலே நம் வீட்டைத்தேடி, நம் தெருவிற்கே வந்து நம்மை கட்டுவானாகில் கூடிடு கூடலே என்று ஆண்டாள் பாடுகிறார். ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர். கண்ணன் திருவாய்ப்பாடியில் இருந்து வருவதாகவும், ஆண்டாள் திருவடமதுரையில் இருப்பதாகவும் விளக்கம் செய்வார்கள். திருவடமதுரை செழிப்புடன் இருப்பதையும் நோக்கலாம். |
2 | அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால் செற்றவன் திகழும் மதுரைப்பதி கொற்றவன் வாரில் கூடிடு கூடலே 4.6 | முன்னமே, “ஆண்டாளுக்கானவன் இவன்” என்று அற்றுத் தீர்த்தவன் என்றும், மருத மரங்கள் முறிந்து விழும்படி, தவழ் நடை கற்றவன் என்றும், கம்சனை வஞ்சனையில் கொன்று தீர்த்தவன் என்றும் விளங்குகின்ற மதுரை நகரத்தின் மன்னனான கண்ணன் வருவானாகில் கூடலே கூடிடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை. கண்ணன் உக்ரஸேந மஹாராஜனை விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்து வைத்தாலும், திகழும் மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனே ஆனாலும், கண்ணனே மன்னன் என்பது ஆண்டாளுடைய வாதம் ஆகும். |
3 | கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள, மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் 6.5 | பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லோரும் நோக்கிக் கொண்டிருக்கும்படி மிக்க அழகு வாய்ந்த மாதர்கள் தீபங்களையும் பூர்ண கும்பங்களையும் ஏந்திக்கொண்டு எதிர்கொண்டு வர, மதுரா ராஜ்யத்திற்கு அரசனான கண்ணன், பாதுகை சாத்திக்கொண்டு பூமி அதிரும்படி நடநது வருவதை கனவில் கண்டேன் என்று ஆண்டாள் கூறுகிறார். அதிர புகுந்த என்ற இடத்திற்கு ஒரு ஐதீகம் அருளி செய்வர். மஹாபலியின் யாக பூமியில் ஸ்ரீவாமனன் நடந்த போது பூமி நெளிந்தது என்று ஒரு நூலில் இருக்க அதற்கு என்னபொருள் என்று சொல்லும் போது, பட்டர் என்னும் ஆச்சார்யர் அருளிச்செய்வதாவது, ‘ யாசகம் செய்ய வந்த பதற்றத்தாலே பூமியில் திருவடிகளை பதித்ததால் பூமி நெளிந்தது என்றும், பூமிக்காக, இப்படி பதறியவன், பெரியாழ்வார் திருமகளை பெற எங்கனே பதறாமல் இருப்பான் என்பார். |
4 | தடவரையின் மீதே சரற்கால சந்திரன் இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே 7.3 | சரத்காலத்தில் முழுமையாக நிரம்பின பூரணசந்திரன், உதயகிரியின் மேல் வந்து தோற்றினால் போல், ஸ்ரீ பாஞ்ஜசந்நியமே ! நீயும் கண்ணனது, திருக்கரத்தின் மேலே அழகாக வீற்றிருந்து தோன்றுகின்றாய், உனது பெருமையே பெருமை என்று ஆண்டாள் கொண்டாடுகிறாள். வாசுதேவன் என்றது, வஸுதேவருடைய புத்திரன் என்றும், எங்கும் நிறைந்த கடவுள் என்றும் பொருள்படும். |
5 | மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி மற்பொருந்தாமற் களமடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் 12.1 | எம்பெருமானை இப்பொழுதே பெற்று விட வேண்டும் என்று வருந்தி இருக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் தாயும் ‘அம்மா! இது நம்மால் முடிவதில்லை, பேறு, அவன் தான் கொடுக்க வேண்டும் என்பதே ஸித்தாந்தமான பின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே, பேறு பெறுபவர் என்று ஆனபின்பும் அதற்காக காத்து இருப்பதே முறை, அசோக வனத்தில், சீதா பிராட்டி சொன்னதும் செய்தவைகளும் உனக்குத் தெரியாததா, அவளைப் போலே நீயும் பொறுத்து இருக்க வேண்டும், நீ இப்படி பதற கூடாது’ என்று சொல்லும் போது , ஆண்டாள் ‘எனக்கு இப்போது நிகழ்கிற துன்பங்களை சிறிதும் அறியாத நீங்கள், எம்பெருமான் விஷயத்தில் எனக்கு இருக்கின்ற ஆசை, மிகவும் அதிகமாக உள்ளதால், நீங்கள் எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என் காதுகளில் புகாது. புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை. ஆகையாலே நீங்கள் எனக்கு சமாதானம் சொல்வதை விட்டுவிட்டு, “ஒருத்தி மகனாப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து, முஷ்டிக சாணுரர் என்ற மல்லர்களோடு போர் புரிந்து, வெற்றி பெற்ற கண்ணன் எழுந்து அருளி இருக்கின்ற மதுரா நகர் புறம் என்னை சேர்த்து விடுங்கள்” என்கிறாள். இதுவே இந்த பாடலின் கருத்து. ‘இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசலாமா’ என்று தாய் வினவ, அதற்கு ஆண்டாள், “அந்த கண்ணனே, பெற்ற தாயை விட்டு ஒரே இரவில் மற்றொரு இடத்தில வளர்ந்தவன் தானே”, தானும் அதேபோலே என்பது போல் உள்ளது. ஆண்டாள், தான் கண்ணனை அணைக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கையில் , அவன் முஷ்டிக சாணுர்களுடன் உடம்போடு உடம்பு கட்டி மல் யுத்தம் செய்வதற்கு முன், தான் இடையில் சென்று கண்ணனை அணைக்கும்படி, தன்னை மதுராவிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்வதாக உரை ஆசிரியர் சொல்வது சுவாரஸ்யமான ஒன்று. |
6 | கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக்கொலோ, கற்றன பேசி வசை உணாதே காலிகளுய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் 12.8 | மற்றும் சில பெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘ நீ இராமபிரானை ஆசைப்பட்டாலும் குற்றமில்லை, மாடு மேய்க்கப் பிறந்த கண்ணனைப் போய் நீ ஆசைப்படுகிறாய், அவனோ ஊரில் தங்குபவன், இவனோ மாடுகன்றுகளை மேய்ப்பதற்காக அவற்றின் பின்னே திரியும் சிறுவன்; பசுக்களுக்கு நீரும் புல்லும் உள்ள இடத்தே தங்குவான்; வெண்ணையையும் நெய்யையும் களவாடிவிட்டு உரலிலே கட்டுப்பட்டு திண்டாடுமவன், அப்படிப்பட்டவனை பெறுவதற்காகவோ நீ இப்படி துடிப்பது” என்று ஏளனமாகச் சொல்ல, அவர்களைநோக்கிச் ஆண்டாள், “அவன் கன்றுகளை மேய்த்ததும் காடுவாழ் சாதியாக வாழ்ந்ததும், உரலிடை ஆப்புண்டதும் குணமாகத் தோன்ற வேண்டியது, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோன்றுவதற்கு காரணம் உங்களுடைய பாவமேயாம், உரலோடு இணைந்திருந்தது அவன் எளிமையே, இனி நீங்கள் இப்படிப்பட்ட தீய வார்த்தைகளை என் காதில் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன். அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது அந்த மழையைத் தடுத்து அனைவரையும் காத்த கோவர்த்தன மலையின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்கிறாள் |
7 | பட்டி மேய்ந்தோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க்கன்றாய் இட்டீர் இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே 14.1 | சிறையில் இருப்பவர் போல், பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும், ஸேனை முதலியார் பிரம்பின் கீழிலும், பெரியதிருவடி சிறகின் கீழிலும், ஒடுங்கி இருக்கின்ற எம்பெருமான் இந்த பூவுலகில் தடை செய்வார் யாரும் இல்லாதபடி, எல்லா சுதந்திரத்துடன் திரிந்து விளையாடி நீங்கள் கண்டதுண்டோ என்று கேட்டுக்கொண்டு, தனக்கு மிகவும் பிடித்தமான பசுக்களைப் புல்லும் தண்ணீரும் உள்ள இடங்களிலே அழைத்து சென்று, மிக்க சந்தோஷத்துடன், விளையாடும் பிருந்தாவனத்தில் காணலாம் என்று பதில் கொடுக்கும் விதமான அமைந்துள்ள பாசுரம். பெண்களிடத்தில் நிச்சலும் தீமைகள் செய்து திரியும் கண்ணன், பலராமனிடத்தில் பவ்யமாக இருக்க காரணம், கண்ணனுக்கு பிடித்த விஷயங்களிலே அவனுக்கு துணையாக அவன் நினைத்தபடி இருப்பதால் என்று உரையாசிரியர் கூறுவர் |
8 | அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே 14.2 | என்னைப் பிரிந்து, அதனால் நான் மிகவும் தளர்ச்சியடையும்படி, திருவாய்ப்பாடி முழுதையும் கொள்ளை கொண்டு திரிபவனை, “வெண்ணெயளைந்த குணுங்கு” நாற்றம் கமழும் கண்ணனைக் கண்டதுண்டோ என்று கேட்டு, மின்னலும் மேகமும் சேர்ந்ததது போல், எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்ற வனமாலை அசைய “தன்னோராயிரம் பிள்ளைகளோடு” விளையாடும் விருந்தாவனத்தே கண்டோம் என்று பதில் கூறும்விதம் அமைந்த பாசுரம். |
9 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.3 | பெண்களிடத்தில் உள்ள மோகமே ஒரு வடிவுகொண்டது போல் இருப்பவனும், ஸகல குணங்களாலும் பரிபூர்ணனும், எல்லோரும் ஆசைப்படத் தகுந்தவனும், பொருந்தாத பொய்களைக் கூசாது கூறுபவனுமான கண்ணன் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ என்று கேட்டதற்கு, மேலே வெய்யில் படாதபடி பெரிய திருவடி தன் சிறகை விரித்து நிழல் செய்ய, அதன் கீழ் விருந்தாவனத்திலே எம்பெருமான் எழுந்தருளக் கண்டோம் என்று விடையளிப்பர் . |
10 | கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங் கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே 14.4 | மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ என்றபடி திருக்கண்களாகிற வலையிலே என்னை அகப்படுத்தித் தான் போகும் இடம் எங்கும் என்னையும் (அதாவது, என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு போகும் எம்பெருமானை கண்டீர்களா என்ற கேள்விக்கு, முத்துச் சட்டை போட்டு கொண்டாற்போல் வேர்வை அரும்பிய உடலுடன் விளையாடுவதை விருந்தாவனத்திலே கண்டோம் என்று விடை அளிப்பது போல் உள்ள பாசுரம். கண்ணன் யானைக்குட்டிபோலவும், அவன் உடலில் துளிர்த்து இருக்கும் வேர்வை அரும்புகள் முத்துச்சட்டை அணிந்திருப்பது போலவும் சொல்லி இருப்பது அழகு. |
11 | மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே பீதக வாடை உடை தாழப் பெரும் கார்மேகக் கன்றே போல் வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.5 | திருமகள் கேள்வனாய், எனக்கு நீலமணி போலே அனுபவம் கொடுப்பவனாய் , வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றி போல் ஒருவர் கைக்கும் பிடி கொடுக்காதவனான பாய்ந்தோடும் எம்பெருமானை கண்டதுண்டோ என்ற கேள்விக்கு பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்து கொண்டு காளமேகக் குட்டி போல் திருவீதி நிறைய எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம் என்று விடை அளிப்பது போல் அமைந்துள்ள பாசுரம். |
12 | தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப் பருப்பதத்தின் மேல் விரியும் கதிரே போல் வானை விருந்தா வனத்தே கண்டோமே 14.6 | தயை என்கிற தர்மத்தை சிறிதும் அறியாதவன் போல் குறும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டவனாய், தன் கையிலுள்ள சார்ங்க வில் போன்று வட்டமாய் அழகிய திருப்புருவங்களை உடையவனாய், உகதந்தாரோடே பொருந்தி வாழப் பெறாதவனான எம்பெருமானைக் கண்டது உண்டோ என்ற கேள்விக்கு பார்த்தவர்களின் கண்களெல்லாம் குளிரும்படி கருமை உடலுடன், செந்தாமரை போன்ற சிவந்த திருமுக மண்டலத்தை உடையவனாய், உதய பர்வதத்தின் மேலே ஆதித்யன் உதிப்பது போல் விளங்கும் கண்ணனை விருந்தாவனத்திலே கண்டோம் என்று பதில் சொல்வதைப்போல அமைந்துள்ள பாசுரம். தர்மம் என்ற வடசொல்லுக்கு, பிறர் பக்கல் இரக்கமே, பரம தர்மமாகச் சொல்லப்படுவதால், அப்படிப்பட்ட இரக்கமில்லாதவன் என்று சொல்கிறார். பர்வதம் என்பது பருப்பதம் என்று சொல்லப்பட்டது. |
13 | பொருத்தமுடைய நம்பியைப் புறம் போலுள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்ற அக் கருமா முகிலைக் கண்டீரே அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.7 | பொருத்தமுடைய ஸ்வாமியாய் உடம்பு போலே உள்ளமும் கறுத்து நின்றவனாய், சேர்ந்து இருக்கும் காலத்திலே “பெண்ணே, உன்னை நான் விட்டுப் பிரியேன், பிரிந்தால் தரியேன்“ என்று அவன் சொல்ல அதை உண்மைதான் என்று நம்பியிருக்கிற நம்பிக்கையைப் போக்கடித்தவன் அல்லது, இப்படிச் சொல்லுகிறவன் ஒருகாலும் நம்மைவிட்டுப் பிரியமாட்டான் என்று கொண்ட கருத்துக்கு மாறாக, பிரிந்திருப்பவனாக, கறுத்த பெரிய மேகம் போன்ற கண்ணனை கண்டீர்களாக என்ற கேள்விக்கு எல்லோராலும் விரும்பப் படுகின்ற நட்சத்திர கூட்டங்கள் நிறைந்த ஆகாயம் போல், பெரும்கூட்டமாக விருந்தாவனத்தில் கண்டோம் என்று பதில் சொல்வதுபோல் அமைந்துள்ள பாசுரம். |
14 | வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக வாடை உடையானை அளி நன்கு உடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே களி வண்டு எங்கும் கலந்தாற் போல் கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே 14.8 | வெளுத்த ஸ்ரீ பாஞ்ச சந்நியம் என்ற சங்கினை திருக்கரத்தில் உடையவனும், பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனும், பிராட்டியோடு கொண்ட சேர்த்தியினால் கருணையுடையனும் திருஆழியானை திருக்கரங்களில் கொண்டவனும் ஆன எம்பெருமானை கண்டதுண்டோ என்ற கேள்விக்கு, மது உண்டு களித்த வண்டுகள் எல்லா பக்கங்களிலும் பரந்து பரிமளிக்கின்ற அழகான திருக்குழல்களானவை திருத்தோள்களிலே விளங்க நின்று விளையாடும் கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோம், என்று விடை சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம். |
15 | நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே, காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.9 | உலகங்களில் உள்ள ஜீவராசிகளை படை(பிறப்பித்தல்) என்று ப்ரம்மா முதலியவர்களை படைத்து, அந்த நான்முகனுக்கு இருப்பிடமாக தன்னுடைய திருநாபிக்கமலத்தை தந்து, விளையாடுகின்ற எம்பெருமானை கண்டீரோ என்ற கேள்விக்கு, தேனுகாஸுர னையும் குவலயாபீடம் என்ற யானையையும், மற்றும் கம்சன் ஏவின எல்லாவற்றையும் காட்டிற்கு சென்று வேட்டை ஆடி, உடனே மடியும் படியாக செய்த கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோம், என்று விடை சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம். தேனுகாஸுரன், குவலயாபீடம், மற்றும் கம்சன் ஏவின எல்லாம் பற்பல சமயங்களில் அழித்து இருந்தாலும் , ஆண்டாளைப் பார்வையில் எல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தாற்போல், உடன் மடிய என்று சொல்வதாகவும் கொள்ளலாம். |
16 | பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே 14.10 | பருத்த கால்களையுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த எம்பெருமானை, இந்த உலகில், பிருந்தாவனத்தில் சேவித்தமை பற்றி பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த இந்த பாடல்களை பிறவி பிணிக்கு மருந்தாக தங்கள் மனதில் அனுசந்தித்து கொண்டு வருபவர்கள் பெருமை மிகுந்த திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே எந்நாளும் அனுபவித்து வருவார்கள் என்று இந்த பதிகத்தை முடிக்கிறார். |
17 | உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே 13.8 | என்னுள்ளே உருகி நைந்து போகின்ற என்னை, இருக்கிறேனோ இல்லையோ என்று எல்லாம் கேட்காமல், என்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளை கொண்டவன்னான, பெண்களிடத்தில் குறும்பு செய்யும் கோவர்தனனை, ஒருக்கால் நான் காணும் போது, ஒரு பயனுமில்லாத என் மார்பகங்களை வேர் முதலாக பிடுங்கி அவன் மார்பில் எறிந்து என் ஆயாசத்தை, களைப்பினை, தாபத்தை, துக்கத்தை போக்கிக்கொள்வேன் என்கிறார். இங்கு, கிழங்கோடு என்று ஆத்மாவை சொல்கிறார். பகவத் அனுபவத்திற்கு பயனில்லாத ஆத்மா மற்றும் உடம்பினை வெறுக்கும் பக்தர்களை உவமையாக உரை ஆசிரியர் கூறுகிறார். அதேபோல் கோவர்தனனை என்ற இடத்தில் ” பெண்களை வெறும் தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறுஆயிரம் ஆக்கும் ” என்ற ஸ்ரீஸுக்தியை குறிப்பிட்டதும் ரசிக்கதக்கது . |
மீண்டும் இன்னொரு ஆழ்வார், இன்னொரு திவ்யதேசம், என்ற ஒரு கருத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.
கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள். ஆண்டாள் இந்த திவ்யதேசத்தை பாடிய பாடல்களைப் பற்றி இங்கே கண்டோம். திரு வடமதுரா திவ்யதேசத்தை கொண்டாடும் பெரியாழ்வாரின் பாசுரங்களை இங்கே காணலாம்.
பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி
1 | ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார், பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று, ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. 1.1.2 | கோகுலத்தில், எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து, தாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஓடினார்கள்; சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; உரக்க கோஷம் செய்தார்கள்; குழந்தை எங்கே என்று தேடினார்கள்; பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்றபடி கூத்தாடினார்கள்; ஆக பஞ்சலக்ஷம் குடியில் இருந்த எல்லோரும் கோலாகலமாக இருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தால் திருவாய்ப்பாடியில் சந்தோசம் அடையாதவர் ஒருவரும் இல்லை; ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்று என்பர். |
2 | உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.1.1.4 | கண்ணன் பிறந்த சந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டு, முற்றத்திலே கொட்டி உருட்டி விட்டு ஆடினார்கள்; நெய் பால் தயிர் முதலியவற்றை அதிக அளவில் தானம் செய்தார்கள்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள்; கோகுலத்து இடையர்கள் எல்லாரும் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்துடன் ஆடினார்கள்; நன்றாக தூவுவார் என்று சொன்னதை, நன்று ஆக தூவுவார் என்று கொண்டு, பிறந்த பிள்ளைக்கு நன்மை உண்டாகும்படி என்றும் பொருள் கொள்ளலாம். |
3 | வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வான் இளம் படியர் வந்து வந்து தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப தேனளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.3.6.3 | கண்ணபிரானது குழலிசையைக் கேட்ட மேல் உலகத்து பெண்கள் தங்கள் இருப்பிடத்திலே இருக்கமாட்டாமல், கண்ணன் இருக்குமிடத்தில் கூட்டம் கூட்டமாக ஓடி வந்து அக்குழலோசையை நன்றாக கேட்டு அனுபவித்த பிறகு அவர்களது மனம் உருகி, கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகி பனித்தன; கூந்தல் அவிழ்ந்தது; நெற்றி வேர்த்தது; இப்படி பல மாறுதல்களுடன் அந்த இசையைக் கேட்டு மயங்கி கிடந்தனர். பரமபதத்தில் எம்பெருமான் நித்யஸூரிகளின் தலைவராக, அவர்களையும் நிர்வகிப்பவனாக இருப்பதை வானிளவரசு என்கிறார். “திருவனந்தாழ்வான் மடியிலும், ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும், பெரிய திருவடி சிறகின் கீழிலுமாயிற்று இத்தத்துவம் வளர்வது” என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் அருளி செய்வார். அந்த நித்ய ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் குழந்தையை கொண்டாடி, இவனுக்கு மங்களாசாஸனம் செய்வதை வைகுந்தக் குட்டன் என்கிறார். பரமபதத்தில் ஸ்வதந்திரர் ஒருவரும் இல்லாததால் அங்கு அவன் இளவரசராக இருப்பது அவரின் தன்மைக்கு தகும். ஆனால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் ஸ்வதந்திரராக இருப்பதால், அவர்களுக்கும் மன்னனாக இருப்பதை நாம், உணர மதுரை மன்னன் என்றார். இடைச்சேரியிலுள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபன் என்பதால் இவனை நந்தர்கோன் இளவரசு என்கிறார். சென்னி என்ற சொல் தலையைக் குறிப்பதாயினும், இங்கு நெற்றியைக் குறிக்கிறது. |
4 | வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை, தடவரை அதிரத் தரணி விண்டி அடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே. 4.7.9 | தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றை எல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடிநகர் என்கிறார். பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளையும் குறிப்பிடுகிறார். |
5 | அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத்துற்று மாரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு குற மகளிர் கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.1 | குறப்பெண்கள், பெரிய கண்களை உடைய, மான்குட்டியை வலையிலே பிடித்து, அதனைத் தங்களுடையதாக கொண்டு, அதற்கு பஞ்சுச் சுருளின் நுனியாலே பாலை எடுத்து ஊட்டி வளர்க்கும் இடம் ‘கோவர்த்தனம்’. மலையாக குவிக்கப்பட்ட சமைத்த சாதமும், ஓடையாகிற தயிர் திரளும், சேறு போல் கிடக்கின்ற நெய்யும் ஆகிய இவற்றை முழுதும் ஒரே கபளமாக, விரைவில் அமுது செய்து விட்டு, இதனால் இந்திரனுக்குக் கோபம் மூட்டி, பெரு மழையை பகையாக்கி, அலையெறிகிற பெரிய கடலினது நிறம் போன்றவனான கண்ணன் தனது திருக்கைவிரலால் தூக்கின மலையே கோவர்தனத்தில் வெற்றியை உடைய குடை ஆகும். வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பருப்பதம்’ எனப்பட்டது. மலையில் ஓடைகளும் சேறுகளும் இன்றியமையாதன ஆகையால், இங்குத் தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப்பெருக்கைச் சேறாகவும் உருவகப் படுத்தினார். பாலும், பழமும் காய்கறிகளும் அடக்கம். இந்திரன் பசிக்கோபத்தினால் ( கல்வ்ருக்ஷங்கள் – கல் மேகம் – ஆலம் கட்டி மழை) மேகங்களை ஏவி ஏழு நாட்கள் விடாமல் மழை பெய்வித்ததனால், மழையாகிற பகைக்குக் கண்ணன் காரணம் ஆனதால், ‘மாரிப்பகைபுணர்த்த’ என்கிறார். |
6 | வழு வொன்று மிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு மழை வந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடு குதலும் குழவி இடைக் காலிட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.2 | ஒரு குறையுமற்ற செய்கைகளை செய்து இந்திர பதவியை அடைந்த தேவேந்திரனுடைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அவனுடைய கோபத்தினால் ஏவப்பட்ட மேகங்களானவை, குமுறிக் கொண்டு வந்து ஏழு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து பசுக்களையும் மனிதர்களையும் துன்பப்படுத்த, கண்ணபிரான் எல்லாவற்றையும் காப்பதற்காக, அடியோடு எடுத்து தலைகீழாகப் பிடித்து அருளின மலையானது ‘கோவர்த்தனம்’ ஆகும். தன்குட்டியின் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத, அதனை பெற்ற பெண் யானையானது, தன் குட்டியை, தன்னுடைய நான்கு கால்களின் நடுவில் அடக்கிக்கொண்டு, அந்தச் சிங்கக்குட்டியோடு எதிர்த்து போரிட்ட இடம் கோவர்த்தனம் என்ற குடையே என்கிறார். |
7 | அம்மைத் தடங்கண் மடம் ஆய்ச்சியரும் ஆன ஆயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர்சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.3 | அழகிய மை அணிந்த விசாலமான கண்களையும், மடப்பம் என்ற குணத்தையும் கொண்ட இடைச்சிகளும், ஆயர்களும், பசுக்கூட்டங்களும் மழையின் கடுமையால் கதறி, ‘எம்பிரானே! நீயே எங்களுக்கு ரக்ஷகனாக இருக்க வேண்டும் ’ என்று வேண்ட, பிரகாசமான ஆழியை கையில் ஏந்திய எங்களுக்கு ஸ்வாமியான கண்ணன், கையில் எடுத்த மலை, பெரிய புஜங்களை உடைய குறவர்கள், தங்களை சரண் என்று சேர்ந்த பெண்களின் கண்களை கண்டு, இவை மான் பேடைகள் என்று ஆச்ரயித்து தங்களின் வில்லினை வளைத்து நிற்கும் கோவர்தனம் என்ற குன்று ஆகும். இந்த பாடலில் ஆழ்வார் ஆழி என்று சொல்லியது, எம்பெருமான், இந்திரனை அழிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், தன்னுடைய திருக்கரத்தில் இருக்கும் சுதர்சன சக்கரத்தை உபயோகித்து இருக்கலாம், ஆனால் எம்பெருமானின் கருணையால் அவனை அழிக்க நினைக்கவில்லை என்பதை எடுத்து உரைக்க என்று உரையாசிரியர் கூறுகிறார். குறப்பெண்களின் கண்களை மானுக்கு ஒப்பிட்டு, அவை தங்களின் தோட்டங்களை அழிக்க வந்தனவோ என்று எண்ணி, வில்லினை கையில் எடுக்கிறார்கள் என்று சொன்னது மரபு கவிதை. |
8 | கடுவாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பானவன் போல் அடி வாயுறக்கை இட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் படநீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப் பட நின் று மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.4 | பயங்கரமான வாயையும் மிக்க சீற்றத்தையும் கூர்மையான கண்களையுமுடைய ஒரு யானைக்கு சோற்றுக் கவளத்தை எடுத்து கொடுக்கின்ற யானைப்பாகனைப் போல, தேவர்களுக்குத் தலைவனான கண்ணன், தன்னுடைய ஒரு திருக்கரத்தால் மலையின் அடிபாகத்தையும், மற்றொரு திருக்கரத்தினால் மலையின் மேல்பக்கத்தையும் பிடித்து தாங்கி நின்ற மலை கோவர்தனம் என்ற மலையாகும் . முதலில், மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம் மலையை எடுத்து பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப் படுத்தினார். மீண்டும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளார். கடுவாய், சினம், வெங்கண் என்ற மூன்று அடைமொழிகளை மேகத்துக்கும் பொருந்தும். மேகங்கள் திருவாய்ப்பாடி முழுவதும் மழையைப் பொழிந்து வருத்த, அதனை குறைப்பதற்காக தூக்கின குடை கோவர்தனம் என்ற குடையே என்கிறார். |
9 | வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கும் என்பவன் போல் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை கானக் களியானை தன் கொம்பிழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை யெடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.5 | வராஹரூபம் கொண்டருளின ஸ்வாமியாயும் எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணன், “மேலுலகத்திலிருப்பவர்களே! நீங்கள், என்னோடு சமமாக வல்லமை உள்ளவர்களாய் இருப்பீர்களாகில் இங்கே வந்து, இந்த மலையை தாங்கிக்கொண்டு நில்லுங்கள்” என்று சொல்கிறவன் போல், ஒரு மண்கட்டி போல் எடுத்து, நிற்கின்ற மலையாவது, காட்டில் செருக்குடன் திரிகின்ற யானையானது, ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த தன் தந்தத்தை இழந்ததனால் அக்கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே மதநீரானது ஒழுக தனது துதிக்கையை உயரத்தூக்கி, வானில் தோன்றும் பிறையை தான் இழந்த கொம்பாக நினைத்து பிடிக்க விரும்பி மேல்நோக்கி பார்த்து கொண்டு இருக்கும் மலையே, கோவர்தனம் என்ற குடையே. கண்ணன், விடாது, வருந்தாது , தூக்கிக்கொண்டு இருக்கும் ஆற்றலை இங்கே ஆழ்வார் சொல்கிறார். மேலுலகத்தில் உள்ளவர்களிடம் உண்மையிலேயே வலிமை உள்ளவர்கள் ஆனால், இந்த மலையை சிறிது நேரம் தூக்குங்கள் என்று கூப்பிடுகிறார். பாதாள உலகம் சென்று பூமாதேவியை விடுவித்து திருஎயிற்றிலே தாங்கி நின்ற எம்பெருமானுக்கு இந்த மலையை தூக்குவது ஒரு அரிதான காரியமா என்று ஆழ்வார் கேட்கிறார். |
10 | செப்பாடுடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.6 | செவ்வைக் குணத்தை உடைய கண்ணன் தன்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கரத்தில் உள்ள ஐந்து விரல்களையும் மலைக்கு கிளைக் கொம்புகளாக அமைத்து அழகிய நீண்ட திருத்தோளினை மலைக்கு தாங்கு காம்பாகக் கொடுத்து தலைகீழாகக் கவித்த மலையாவது, எல்லாப் பக்கங்களிலும் பரவி தெளிந்த சுனை நீர் அருவிகள் அழகிய முத்துக்களாலான சட்டை என்று காணப்பெற்ற கோவர்தனம் என்ற குடையே. செவ்வை குணம் என்பது, இந்திரனுக்கு கொடுக்க வேண்டிய சோற்றைத் தான் அமுது செய்து, அதனால் மழை பெய்ய வைத்து, அதனால் துன்பமுற்ற மக்களை ஈரமற்ற நெஞ்சத்துடன் இல்லாமல் தானே முன்னே இருந்து காப்பாற்றியது. இந்த குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்தது என்பர், அதனால், ஆழ்வார் திருமால் என்றார். |
11 | படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை தான் அடங்கச் சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.7 | பல படங்களையுடைய ஆதிசேஷன், தங்கள் பரந்த பூமியை தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டிருப்பது போல கண்ணன், பெரிய திருக்கரத்திலுள்ள ஐந்து விரல்களாலும் விரித்து தாங்கிக்கொண்டு இருக்கின்ற மலை, பெண் குரங்குகள் இலங்கையில், தங்களுடைய குலத்தில் தங்களுக்கு முன் அவதரித்த அனுமன், இலங்கையை துவம்சம் செய்த கீர்த்தியை பாடிக்கொண்டு, தங்களுடைய குட்டிகளை தங்கள் கைகளில் படுக்க வைத்துக் கொண்டு, கண் வளர்ந்த மலை கோவர்தனம் என்ற குடையே. |
12 | சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை, இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலைவாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் கொற்றக் குடையே. 3.5.8 | நீர் கொண்ட கார்மேகங்கள் பல, யுத்த பூமியில் அம்புமழை பெய்தாற்போல் இடைச்சேரி முழுவதும், இடித்து முழங்கி யுத்தம் செய்து அங்குள்ள மக்களையும், ஆநிரைகளையும் வருத்தி, எங்களிடம் இருந்து தப்ப முடியமா என்று கேட்பது போல் இருந்தபோது, கண்ணன், அந்த அம்புமழை போன்ற மேகங்களை எதிர்கொண்டு கேடயம் போல் ஏந்திக்கொண்டு எல்லாவற்றையும் காப்பாற்றிய மலை, பர்ணசாலைகளில், வசிக்கின்ற முனிவர்களுக்கும், தவம் செய்பவர்களுக்கும் எதிரே, புலிகளைக் கண்டு அவர்கள் தங்களுடைய கழுத்தை சொரியும் நேரம், அவர்களை கொல்லக் கூடிய வாயையும் சினத்தையும் உடைய புலிகள் அந்த சுகத்திலேயே நின்றுகொண்டே உறங்கும் என்ற தன்மை கொண்ட கோவர்தனம் என்ற குடையே. |
13 | வன் பேய் முலை உண்டதோர் வாய் உடையன் வன்தூண் என நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் முன்பே வழிகாட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம் முடைக் குட்டன்களை கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.9 | கொடிய பூதனையின் விஷம் தடவின முலையை உண்ட வாயை கொண்ட கண்ணன், தன்னுடைய திருநாமத்தை ஒரு மலைக்கு கொடுத்து, பாரத்தைத் தாங்கிக் கொண்டு நின்ற ஒரு வலிமையான தூணைப்போல நின்று, இந்த உலகத்தில் உள்ளவர்கள் பார்க்கும்படி, தான் தாங்கி கொண்டு மலையானது, முசு என்ற குரங்குகள் தங்கள் குட்டிகளுக்கு மரம் விட்டு தாவுவதை கற்றுக்கொடுக்க அவைகளை தங்கள் முதுகில் காட்டிக்கொண்டு ஒரு மரக்கொம்பில் இருந்து மற்றொரு கொம்பிற்கு குதிப்பதை பழகுவிக்க செய்யும் கோவர்தனம் என்ற குடையே. கண்ணன், குன்றத்தை ஏந்தும் இந்த அற்புத செய்கையைப் பிரமன் இந்திரன் முதலிய தேவர்களுக்கு காட்டாது, தன்னுடைய பரம கிருபையினால் மனிதர்க்குக் காட்டி அருளியதை, தரணிதன்னில் என்று ஆழ்வார் கூறுகிறார். |
14 | கொடியேறு செந்தாமரைக்கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் முடி எறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போ குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.10 | அழகிய செந்தாமரை போன்ற திருக்கரங்களையும் திரு விரல்களையும் கொண்ட கண்ணன் ஏழு நாட்கள் இந்த குன்றினை ஏந்திய போதும், அழகு சிறிதும் குறையாமல், கொஞ்சமும் வாட்டமும் முடியாமல், திருநகங்களும் சிறிதும் நோவு எடுக்காமல், சிறிதும் மாற்றம் இல்லாமல் இருந்த நீலமணி போன்ற நிற கண்ணன், எடுத்த மலையும் அவன் நின்ற நிலையும் ஒரு மாயா ஜால வித்தையை போல் உள்ளது. அந்த மலை, முகட்டில் சேர்ந்த பல மேகங்கள் மழையை பெய்வித்து செழிப்பாக செய்ததனால் அந்த மலையின் முன்புறம் நரைத்திருந்ததைப்போல் பலர் குடியேறி வாழும் கோவர்தனம் என்ற குடையே. |
15 | அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர்தி அவனுடைய குரவில் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல் திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மன நன்கு உடைப் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே. 3.5.11 | இந்த திருமொழி / பதிகம் கற்றவர்க்கு பலன் சொல்லி முடிக்கிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு, காளியன் என்ற பாம்பை துரத்தி விட்டு, பாம்பின் பகைவனான கருடனின் மேல் அமர்ந்து செல்லும் பரமாத்மா இந்த கண்ணன் என்று மொழிகிறார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிறைந்து விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதங்களை நன்கு அறிந்த பெரியாழ்வார் சொன்ன இந்த பத்து பாடல்களை விருப்பத்துடனும், பரவசமாய் பேசும் நல்ல மனதை உடைய பக்திமான்கள், தங்களுடைய ஞான, பிரேமா குணமான பகவத் அனுபவ கைங்கர்யங்களில் ஆழ்ந்து, அடியார்கள் கூட்டங்களுடன் சேர்ந்து இருக்கும்படியான சர்வ உத்தமமான ஸ்ரீவைகுந்ததை அடையப்பெறுவர் என்று முடிக்கிறார். |
16 | ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே. 4.2.4 | சொர்க்க லோகத்தில் உள்ள பெரிய பூக்களையுடைய கற்பக மரத்தில் இருந்த பூங்கொத்தில் இருந்து பெருகும் தேன் ஆறாய் பாய்ந்து ஓடுகின்ற அழகை உடைய திருமாலரின்சோலை, இடையர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனுக்கு படைப்பதற்கு இருந்த உணவை தேவேந்திரனுக்கு சேராமல், கோவர்தன மலைக்கு அருளிய கண்ணனின் மலையாகும். |
17 | நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மாமாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.4.10.8 | பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் தலைவனாக இருப்பவனே, திருவடமதுரையில் திருஅவதாரம் செய்தவனே, மிக ஆச்சரியமான சக்திகளை உடையவனே, பாகனுக்கு வசப்பட்டுள்ள யானையைப் போல் எனக்கு வசப்பட்டு உள்ளவனே, அடியேன் உன் மாயைகளில் எதுவும் அறிய மாட்டேன், திருவரங்கத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு இருப்பவனே, யமகிங்கர்கள் என்னை பிடித்து, இந்த சரீரத்தோடு கொடுக்க வேண்டிய துன்பங்களை அளித்தபின், ‘இந்த யாத்நாசரீரத்தினுள்ளே செல்” என்று சொல்லி துன்புறுத்தும் போது உன்னை நினைக்க மாட்டேன், நீதான் என்னை காக்க வேண்டும் என்பது இந்த பாட்டின் பொழிப்புரை. நரகத்தில் மிகவும் தீவிரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் இந்த ஆத்மாவிற்கு பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நா சரீரம்” என்று பெயர். |
18 | எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துபட்ட, அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண், செந்நாள் தோற்றித் திருமதுரை உள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே 1.1.10 | திருப்பல்லாண்டு நான்காம் பாசுரத்தில் அழைக்கப்பட்ட கைவல்யார்த்திகள், அதே பதிகத்தின் ஏழாம் பாட்டினால் தாங்கள் திருந்தி ஆழ்வார் குழுவுடன் சேர்ந்ததை சொன்னார்கள். அவர்களை எம்பெருமானை நோக்கி மங்களா சாஸநம் செய்யும்படி ஆழ்வார் கேட்டுக் கொள்வதாக அமைந்துள்ளது இந்த பாசுரம். எம்பெருமான் அவர்கள் திரும்ப முடியாத கைவல்யத்தை அடைந்து கெட்டுப் போகாத படி அருள் புரிந்து, நல்லபுத்தியை கொடுத்து திருத்தியதால், எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறவர்களாக மாறிவிட்டோம் என்கிறார்கள். |
மீண்டும் இன்னொரு ஆழ்வார், இன்னொரு திவ்யதேசம், என்ற ஒரு கருத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற (11) எல்லா ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).
பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு
இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.
ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37 திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.
இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் திருவேங்கடமுடையான் மேல் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்து திருவாய்மொழியில் த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியாகிய உலகமுண்ட பெருவாயா என்ற பகுதியை இங்கு பார்த்தோம். இனி இப்பொழுது திருவாய்மொழியில் இருந்து த்வய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய ஒழிவில் காலமெல்லாம் என்ற மூன்றாம் பத்தின் மூன்றாவது பதிகத்தைப்பற்றி ஒரு சிறிய விளக்கத்தை காண்போம். நன்றி.
மூன்றாம் பத்து, மூன்றாம் பதிகம், மிக விசேஷமானது. ஒழிவில் காலமெல்லாம் எனும் இந்த பதிகத்தில் 3.3.1 முதல் 3.3.10 வரை ஒவ்வொரு பாசுரத்திலும் திருவேங்கடமுடையான் திருநாமம் உள்ளது. இந்த பதிகத்தில் ஆழ்வார், த்வய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய “ஸ்ரீமதே நாராயணாய நம: ” என்பதின் அர்த்தத்தை, நாம் தொடர்ந்து பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த பத்து பாசுரங்களின் மூலம் விளக்குகிறார். த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே‘ என்பதை “உலகம் உண்ட பெருவாயா” என்ற (6.10) பதிகத்தில் சொன்னதை முன்பு பார்த்தோம்.
தன்னுடைய சொரூபத்திற்குத் தகுதியான எம்பெருமானுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆழ்வார் விரும்புகிறார். எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று இருந்த ஆழ்வாருக்கு, எம்பெருமான், ஆழ்வாரை அழைத்து, அவருக்காகவே திருமலையில் வந்து இருப்பதாகவும், ஆழ்வாரை அனுபவிக்கைக்காகவே திருமலையில் வந்து நிற்பதாகவும் சொல்லி, பரமபதத்திற்கு சென்று காணக்கூடிய காட்சியை இங்கே வந்து காட்டியதாகவும், எல்லோரும் அனுபவிக்கும்படி ஆழ்வாரை மேலும் பாட சொல்கிறார்.
பாடல் | விளக்கம் |
---|---|
3.3.1 | ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம், தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே. (3.3.1) மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற அழகினைக்கொண்ட ஒளி உருவனான, தங்கள் குலத் தலைவனான, எம்பெருமானுக்கு எல்லையில்லாத காலமெல்லாம், எல்லா இடத்திலும், அவன் கூடவே உடன் இருந்து, ஒன்றும் குறையாதபடி எல்லா தொண்டுகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது பாடலின் பொழிப்புரை. திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளையும் செய்ய வேண்டும் என்கிறார் ஆழ்வார்; காலம் எல்லாம் என்று சொன்னது முடிவில்லாத காலம் என்பதையும் கடந்த, நிகழ், எதிர் என்ற எல்லா காலங்களையும் குறிக்கும். கடந்த காலத்தில் தொண்டு செய்ய வேண்டும் என்று சொன்னதை, இனி வரும் காலங்களில் செய்யும் தொண்டு, கடந்த காலத்தில் தொண்டு செய்யாமல் போன துக்கம், மனதிற்கு வராத அளவிற்கு செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பாடலை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் அநுஸந்திக்கும்போது, ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம் என்று நெடு நேரம் பாடுவாராம். வழுவிலா அடிமை என்றது தொண்டில் யார்க்கும் பங்கு கிடைக்காதபடி தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று விரும்புவது, லக்ஷ்மணன் இரவும் பகலும் எப்பொழுதும் தொண்டு செய்தது போல் செய்யவேண்டும் என்கிறார். பரதன் நாட்டில் இருந்து சேவை செய்ததுபோல், லக்ஷ்மணன் காட்டில் இருந்து சேவை செய்தது போல், எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்கிறார். ஆழ்வாராக இல்லாவிட்டாலும், திரையாக, குத்துவிளக்காக எதுவாக இருந்தாலும், எப்பொழுதும் எம்பெருமானுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிறார். அதாவது, தான் கைங்கர்யம் செய்ய விரும்பும் எம்பெருமான் நிரந்தரமாக இருந்து கொண்டு, அடிமை செய்யும் தானும் எப்போதும் அங்கு இருந்து கொண்டு, காலமும் நிரந்தரமாக இருந்து கொண்டு, தேசமும் நிரந்தரமாய், அகங்கார, மமகாரங்களுடன் கூட வரும் அனுபவம்போல் இல்லாமல், துக்கம் கொஞ்சமும் இல்லாமல், எப்போதும் சுக அனுபவம் தருகிற கைங்கர்யம் வேண்டும் என்கிறார். கைங்கரியம் செய்வதைக் காட்டிலும், செய்ய வேணும் என்கின்ற ஆசை எப்பொழுதும் நிலை நின்றிருந்தாலும் போதும் என்ற சாஸ்திர அர்த்தம் வெளிப்படும்படி ஆழ்வார் பாடுகிறார். எம்பெருமானார் ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் “கைங்கரியத்தில் ஆசையை வளர்த்திக் கொள்ள வேண்டும்” என்ற கருத்துப்பட அருளிச் செய்திருப்பதை இங்கே நினைவில் கொள்ளலாம். ‘நாம்‘ என்று சொல்லி இருப்பது, தன்னுடன் கூடிய அடியவர்களை சேர்த்து கொண்டு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கேசவன் தமர் என்ற 2.7 பதிகத்திற்கு பிறகு, ஆழ்வார் தனியாய் இல்லாமல், ஸ்ரீவைஷ்ணவர்களையும் சேர்த்து கொண்டு இருப்பதை நினைவில் கொள்ளலாம். தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, என்று சொன்னது, கைங்கரியம் செய்ய வேண்டும் ஆழ்வாரின் எண்ணத்தைவிட, இவரிடம் கைங்கர்யம் கொள்ள வேண்டும் என்ற எம்பெருமானின் எண்ணத்தை தெரிவிக்கிறது என்பர். ஆழ்வார் தான் இருந்த இடத்திலே இருக்கும் போது, எம்பெருமான் கலங்கா பெரு நகரான பரமபத்தைவிட்டு திருமலையில் நின்று இருப்பது அதனை காட்டுகிறது என்பர். கைங்கர்ய ருசி உடையவர், இங்கு பாயும் அருவிகளின் சப்தத்தை ஒரு காரணமாக கொண்டு, எம்பெருமானுக்கு தொண்டு புரிய திருமலைக்கு வாருங்கள் என்கிறார். திவ்யதேச யாத்திரை செல்கிற அடியவர்களிடம் வழிப்பறி செய்பவர்களின் ஆராவாரமும் ஆழ்வார்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் போது, அருவியின் ஓசையை சொல்ல வேண்டுமோ என்று உரையாசிரியர் எழுதுகிறார். அடியவர்களின் சேவையை பெற உகந்த நிலமாக எம்பெருமான் திருவுள்ளம் பற்றி அவன் வந்து இருக்கின்ற நிலம் ஆகையால், ஏதோ ஒரு காலத்தில், சரீர சம்பந்தம் அற்று, அர்ச்சிராதி மார்க்கத்தில், பரமபதம் அடைந்து செய்கின்ற சேவையை இங்கேயே செய்யுங்கள் என்று சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம். எழில் கொள் சோதி என்பது அவன் மேல் விழுந்து அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது போல் இருக்கும் வடிவழகு என்கிறார் ஆழ்வார். வானோர் சோதி(திருவாய்மொழி 1.5.5), பகலில் விளக்கு வைத்தது போல் இருக்கும் என்றும், நீல் ஆழி சோதி, (பெரிய திருவந்தாதி 34) கடல் கொண்டு கிடக்கும் (மீனுக்கு தண்ணீர் வார்த்தது போல்) என்றும், திருவேங்கடத்து எழில் கொள் சோதி, குன்றின் மேல் இட்ட விளக்காக இருக்கும் என்று இதன் பெருமை பேசுகிறார். அதாவது அந்த இடங்களில் இவனது சோதி குன்றியே இருக்கும், இங்கு பிரகாசிக்கும் என்பது போல் உள்ள ஈட்டு ஸ்ரீஸுக்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி ராமானுஜர் இந்தபதிகத்தை அருளிச்செய்யும்போது, அங்குஇருந்த நூற்றுக்கணக்கான சிஷ்யர்களை நோக்கி, “ஆழ்வார் விரும்பியபடி, திருவேங்கடமுடையான் திவ்யதேசத்தில் இருந்து நித்திய கைங்கரியம் பண்ண விருப்பமுடையார் யாரேனும் உண்டோ என்று வினவ, எல்லாரும் அஞ்சி விடை கூறாமல் இருக்க, அனந்தாழ்வான் எழுந்து ‘அடியேனுக்கு நியமித்தருளவேணும்’ என்றார்; அது கேட்டு உகந்த எம்பெருமானார் ‘நீர் ஒருவரே ஆண்பிள்ளை’ என்று சொல்லி அவரை கொண்டாடித் தழுவி விடைகொடுத்தருளினர்; அதுமுதல் அனந்தாண்பிள்ளை என்று பெயர் உண்டாயிற்று. இந்த பாட்டின் மூலம் திருமந்திர அர்த்தத்தை அருளி செய்ததாகவும் சொல்வர்; ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்பது பிரார்த்தனையை சொல்கிறது. தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி என்பது நாராயண அர்த்தத்தை சொல்வது. |
3.3.2 | எந்தை தந்தை தந்தை தந்தைக்கும், முந்தை, வானவர் வானவர் கோனொடும், சிந்துபூ மகிழும் திரு வேங்கடத்து, அந்தம் இல் புகழ்க் காரெழில் அண்ணலே. (3.3.2) நித்தியசூரிகள் சேனை முதலியாரோடும் (விஷ்வக்ஸேனர்) வந்து, வாசனை வீசுகின்ற பூக்கள் தூவி, வணங்குகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல், ஆழ்வார் குலத்திற்கு முதல்வன் ஆவான் என்று சொல்கிறார். பரமபதத்திற்கு சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதுதான், பொதுவாக எல்லோரும் செய்வது, விரும்புவது; அப்படியிருக்க, ஆழ்வார் மட்டும், இங்கே திருமலையிலே தொண்டு செய்ய விரும்புவது ஏன் என்று எம்பெருமான் நினைக்க, திருநாட்டிலுள்ள நித்யசூரிகளும் முக்தர்களும் கூட இத்திருமலையிலே வந்து தொண்டு செய்யும் போது, தான் இங்கே தொண்டு செய்வதில் என்ன குறை என்கிறார். எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று சொல்லி, எம்பெருமானின் தலைமையின் மேன்மையை, பர ஸ்வரூபத்தை மேன்மையை சொல்கிறார். (பரமாத்மாவின் பெருமை / மேன்மை). இதே ஆழ்வார் தன்னுடைய நிலையை சொல்லும்போது, (ஜீவாத்மாவின் அடிமை செய்யும் தன்மை-சேஷி) அடியார், அடியார்தம் அடியார், அடியார் தமக்கடியார் அடியார், தம் மடியார் அடியோங்களே” (திருவாய்மொழி 3.7.10) என்று தன்னை மேலும் மேலும் கீழே இறங்கிக் கொண்டு சொல்வதும் குறிப்பிடத்தக்கது. பரமபதத்தில் தங்களுக்கு அருகில் இருக்கும் எம்பெருமான், இங்கு திருமலையில் கானமும், வானரமும் என்று எல்லோருக்கும் முகம் கொடுத்து தன்னுடைய சௌசீல்யத்தை காட்டிக்கொண்டு இருப்பதை அனுபவிக்க விரும்பி, விஷ்வக்சேனர் முதல் எல்லா நித்யஸூரிகளும் விண்ணுலகில் இருந்து திவ்ய புஷ்பங்களை எடுத்துக்கொண்டு, வரும்போது, அவனின் சௌசீல்யத்தில் உருகி, அவை அவர்களின் கைகளில் இருந்து அவசரமாக சிந்தினாலும், இந்த புண்ணிய ஸ்தலத்தின் ஸ்வபாவத்தால் புஷ்பங்களின் வாசமும் மலர்ச்சியும் சிறிதும் குறையவில்லை என்கிறார். இங்குள்ளார் அங்கு சென்று அவனது மேன்மையை அனுபவிப்பதைப்போல், அங்குள்ளார் இங்கு வந்து இவனின் நீர்மையை அனுபவிப்பதை சொல்கிறார். பரமபதத்தில் புகழுக்கு அந்தம் உண்டு என்பது போலேயும் இங்கு திருமலையில் புகழுக்கு அந்தம் இல்லை என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு ஆளி, கோளரி, பொன்மணி, முத்து. பூ மரம் ஆனவற்றிக்கு தன்னை கொடுத்துக்கொண்டு இருப்பதால், இங்கு அவனுக்கு புகழ் ஸாஸ்வதமாக இருக்கும் என்கிறார். |
3.3.3 | அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன், செங்கனி வாய்க் கரு மாணிக்கம், தெண்ணிறைச் சுனை நீர்த் திரு வேங்கடத்து, எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே. பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன், அழகினைக் கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களை உடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையும் உடையவன், தெளிந்த, நிறைந்த தண்ணீரை உடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவிடமுடியாத இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகளுக்குத் தலைவன் ஆவன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. திருமலையில் தொண்டு செய்ய வேணும் என்று ஆசைப்படுகிறீர்கள், அது கிட்டுமோ என்று கேட்க, ஆழ்வார், ஆசையற்றவர்களான நித்யஸூரிகளுக்கு இங்கே அருள் புரியும் எம்பெருமான், ஆசையுடன் இருக்கும் தனக்கும் அருள் புரிவார் என்று சொல்லும் பாடல். அண்ணல் என்றதால், குறிஞ்சி நிலத்தின் தலைவன், சர்வஸ்வாமி என்று கூறுகிறார். மாயன் என்றதால், சௌந்தர்ய சீல குணங்களால் ஆச்சரியமானவன், என்கிறார். இந்த கண் அழகு உடையவனுக்கு ஒப்பு ஒன்றும் வேண்டாம் என்பதுபோல் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் என்று சொல்லி, முதல் சந்திப்பில் தப்ப முடியாமல் இருக்கும் கண் அழகு சொல்லப்பட்டது. அதில் இருந்து தப்பினாலும், தப்ப முடியாதபடி இருக்கும் வாய் முறுவல், என்று செங்கனி வாய் சொல்லப்பட்டது. மொத்த வடிவழகும் சேர்ந்து கரு மாணிக்கம் என்று சொன்னார். கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, எம்பெருமானின் குணங்களும் அளவு இல்லாமல், எண்ண முடியாத கல்யாண குணங்களை இயல்பலாகவே கொண்டதால், எண்ணில் தொல்புகழ் ஈசன் என்கிறார். |
3.3.4 | ஈசன் வானவர்க்கு என்பவன் என்றால், அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு ? நீசனேன் நிறைவொன்றும் இலேன், என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. தாழ்ந்தவனாய், குணம் சிறிதுமில்லாதவனான தான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று சொன்னால், அது திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் புகழாகுமோ?ஆகாது, திருமலையில் வந்து நின்று சுலபனாய் எல்லோருக்கும் அருள் பாலிக்கின்ற வைகுந்தநாதனுக்கு ஏற்றம் என்று பொருள். ஆழ்வார் தன்னிடத்தில் அன்பை வைத்த, மேலான சுடரை உடைய ஒளி உருவனான எம்பெருமான் என்கிறார். “எண்ணில் தொல் புகழ் வானவரீசன்” என்று கீழ்ப்பாட்டில் சொன்னது, நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தான் என்பதை ஒரு ஏற்றமாக அருளிச் செய்தார்; நீசத்தன்மையும் நிறைவு ஆகாத தன்மையும் ஒன்று சேர்ந்து ஆழ்வார் என்று ஆனது என்கிறார். இந்த பாடலில் மிகவும் நீசனான தன் பக்கலிலே பாசம் வைத்திருப்பது பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறார். மிகவும் நீசனான, தன்னிடத்தில் பாசம் வைத்து அதனால் பெருமை உடைய எம்பெருமானை, வானவர் ஈசன் என்பது என்ன பெருமை என்றார். நித்யஸூரிகளிடம் உள்ள அன்பு, முதல் மனைவியிடம் காட்டும் கடமை போன்றது என்றும், ஆழ்வார் பக்கம் காட்டுவது ஆசையின் காரணமாக என்றும் உரையாசிரியர் கூறுகிறார். என்கண்பாசம்வைத்த என்பதற்கு எம்பெருமான் விஷயமான பாசத்தை ஆழ்வார் பக்கலிலே உண்டாக்கின என்று இன்னொரு வகையாகவும் பொருள் சொல்லலாம். |
3.3.5 | சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவு ஆகுமோ, வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீதுஇல் சீர்த் திரு வேங்கடத் தானையே? நீசனான தனக்கு, தன்னைத் தந்தவனுக்கு, நித்யஸூரி நிர்வாஹம் ஒரு ஏற்றமோ என்று கீழ்ப்பாட்டில் கேட்ட ஆழ்வார் இந்த பாட்டில், தன்னிலும் தாழ்ந்தவர்களைத் தேடிக் கிடைக்காத எம்பெருமானுக்கு, ஆழ்வாருக்கு தன்னைத் தந்தான் என்று சொல்வது தான் ஓர் ஏற்றமோ என்கிறார். வேதங்களை அறிந்த அந்தணர்களுடைய, எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற, அமிர்தம் போன்ற இனிமை உடையவனை, குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற பேரொளி உருவனாகி, எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற, வடிவை உடையவன் என்று கூறினால் அது பெருமையாகுமோ? ஆகாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும். தனக்கு மேம்பட்ட, மேல் ஒன்று இல்லாத பேரொளி உருவமான திருமேனியை உடைய எம்பெருமான் என்பதை சோதி என்கிறார். ஆதி மூர்த்தி என்பதால் எல்லா உலகங்களையும் படைத்தவன் (ஜகத் காரண ஸ்ருஷ்டி) என்பதும் எல்லா உலகுந் தொழும்’ என்பதால் உலகங்களுக்கு எல்லாம் முதல் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்பதும் விளங்கும். அதோடு, இந்த ஒரு குணத்தை சொல்வதால் எம்பெருமானின் எல்லா கல்யாண குணங்களையும் சொல்வது போல் என்று நம் பெரியவர்கள் சொல்வர். தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை என்றது குற்றமற்ற குணங்களை உடையவன் என்றும் குற்றங்களைக் குணமாகக் கொண்டு அங்கீகரிப்பவன் என்றும் பொருள்படும். வேதங்களை நன்றாக படித்து எம்பெருமானை அறிந்துகொள்வதற்கு ஈடாக திருமலையில் எளிமையாக எம்பெருமான் காட்சி அளிக்கிறான் என்பதும் தெரிய வரும். ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ ஏற்றம் என்று கண்டோம். அதேபோல், எல்லா உலகுந்தொழும்’ என்பதைக் காட்டிலும் தீதுஇல் சீர்த் திரு வேங்கடத் தானையே என்பது ஏற்றம். |
3.3.6 | வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை, அது சுமந்தார்க்கட்கே திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானுக்கு வணக்கம் என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியம்; அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக் கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்து விடும்; அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. திருமந்திரத்தின் பொருளை முதல் பாடலில் (ஒழிவில் காலம் எல்லாம்) அருளிச்செய்தார்; அங்கு அருளிச் செய்யாத ‘நம:’ என்ற பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். எம்பெருமானுக்கு தொண்டு செய்ய அடியவர்கள் விரும்பும்போது, அவர்களின் பாவங்கள் அவர்களை தொண்டு செய்ய விடாமல் தடுக்குமே என்று கேட்டதற்கு ஆழ்வார், அடியவர்கள் தொண்டு செய்ய விரும்ப தொடங்கும் போதே அந்த பாவங்கள் தானாகவே எரிக்கப்படும் என்கிறார். பக்தர்களின் வாக்கில் நம, என்கிற ஒரு சிறிய சொல் வந்தாலும் இதை மலையாக எம்பெருமான் நினைப்பான் என்பது தெளிவாகும். எல்லோரும் பிறக்கும் போது மூன்று கடன்களுடன் வருவார்கள்; அவைகளை, பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பித்ரு கடனையும் தீர்க்கலாம் என்று வேதம் சொல்கிறது. மெய் மேல் வினை என்பது, உடம்பினால் (சரீர சம்பந்தத்தால்) வருகிற வினைகளை சொல்கிறது. தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், என்று சொல்லும்போது, அதற்கான விரோதிகளை பிரார்த்தித்து போக்க வேண்டாம் என்றும் சொல்கிறார். “வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை, அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்று அமைத்து பொருள் கொள்ளலாம். (திருவேங்கடவனுக்கு தொண்டு செய்ய விரும்பும் அடியவர்களின், சரணாகதிக்கு முன் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை எரித்தும், சரணாகதிக்குப் பின் தெரியாமல் செய்த பாவங்களையும் ஒதுக்கி தள்ளியும், நம்மிடம் இருந்து விலக்கி விடுவான் என்பது உண்மை (மெய்) என்ற சாஸ்திர வார்த்தைகளை இந்த பாடல் சொல்கிறது என்று இராமானுஜர் மற்றும் ஆளவந்தாரின் விளக்கமாக கூறுவது உண்டு). |
3.3.7 | சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு, அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு, சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே. நித்தியசூரிகள், விஷ்வக்சேனருடன் அல்லது ப்ரம்மா தேவர்களுடன், சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப் புகையையும் தாங்கிக்கொண்டு வந்து வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாகவுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய பெரிய மலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. திருவேங்கடமுடையானை பின்பற்றக்கூட வேண்டியதில்லை, திருமலையை வணங்கினாலே போதும் என்கிறார். கைங்கரியம் என்பது, பகவானை அடைதலுக்குப் பலனாக வருவதால், முதல் பாட்டில் சொன்ன கைங்கர்யத்தையும், இப்பொழுது சொல்கின்ற வீடாகிய மோக்ஷத்தையும் திருவேங்கடம் தரும் என்பது பொருத்தமே. ‘வானவர் வானவர்கோனொடும் மாமலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு அமர்ந்து நமன்று எழும் திருவேங்கடம் தடம் குன்றம் நங்கட்குச் சமன்கொள்வீடு தரும்’ என்று பாடலை அர்த்தம் கொள்ளலாம். மா என்ற சிறப்பு, மலருக்கு மட்டும் அல்லாமல் நீர், தீபம், சுடர் என்று கொள்ளவேண்டும். பக்தியின் கனத்தாலே சுமந்து என்று சொல்கிறார். ப்ரம்மா தேவர்களுடன் வந்து என்று சொல்லும் போது, அவர்கள் ஒரு பலனை எதிர்பார்த்தே எம்பெருமானிடம் வருவார்களே என்றாலும், இந்த திருப்பதி, அவர்களையும் பலன் ஒன்றும் எதிர்பாராமல் வணங்கும்படி செய்யும் என்று அமர்ந்து என்ற பதத்திற்கு விளக்கம் சொல்வர். சங்கரர் அத்வைதத்தில் மோக்ஷம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் கலந்து விடும் என்பது. ஆனால் இராமானுஜர் விஸிஷ்ட்டாத்வைதத்தில், மோக்ஷம் என்பது ஜீவாத்மா பரமபதம் சென்று பரமாத்மாவிடம் இருந்து எட்டு உயரிய குணங்களில் நிறைவு பெற்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து எம்பெருமானை அனுபவித்துக் கொண்டு இருக்கும் என்பதை ஆழ்வார் இந்த பாட்டில், சமன் கொள் வீடு என்கிறார். அந்த எட்டு குணங்கள், பாவங்கள் தீண்டாது, பசி இருக்காது, தாகம் இருக்காது, துன்பம் அண்டாது, மூப்பு வராது, மரணம் கிடையாது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற பட்டவையாக இருக்கும், நினைத்த எதனையும் செய்து முடிக்கும் தன்மை உடையதாக இருக்கும். திருமலை தனக்கு சமமான குணத்தை அடியவர்க்குக்கு பெற்று தரும் என்பது இன்னொரு அர்த்தம். திருமலை எப்படி எம்பெருமானுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து வருகிறதோ, அதே போல் அடியவர்களை எம்பெருமானுக்கு தொண்டு செய்பவர்களாக செய்து விடும் என்றும் பொருள் கூறுவர். |
3.3.8 | குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர் திரு வேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே. கோவர்த்தனம் என்ற மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையில் இருந்து பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; முன்பு உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலையை வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. எம்பெருமானுக்கு விருப்பமான திருமலையே தங்களுக்கும் விருப்பம்; தங்களுக்கு ஒரு பயனையும் தராவிட்டாலும் திருமலையே தாங்கள் அடையவேண்டியது, திருவேங்கடமுடையான்தான் பலனை தர வேண்டும் என்பதிலை, திருமலையே பலனைத் தரும், என்பதை ஆழ்வார் இந்த பாடலில் அறுதியிட்டு சொல்கிறார். ஒரு ஊரை காப்பாற்ற கிருஷ்ணர் குன்றத்தை கையில் எடுத்தார். எல்லா உலகங்களையும் காக்க த்ரிவிக்ரமனாக அவதாரம் எடுத்து தாவி அளந்தார்.இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று சேர்ந்த இடம் திருமலையாகும். அந்த திருமலையை தொழுதால் நம் பாவங்கள் நீங்கும் என்கிறார். |
3.3.9 | ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன், நாள் மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே. நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்தில் இருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளின் பெருமைகளை வாயினால் சொல்பவர்களுக்கும் மனத்தினால் நினைப்பவர்களுக்கும், முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. முன் இரண்டு பாடல்களில், நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையே தரும் என்றார்; இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலை முழுவதும் வேண்டுமோ? திருமலையின் ஒரு பகுதி போதாதோ என்று இந்த பாசுரத்தில் கேட்கிறார். ஆழ்வார் சொன்ன ஒரு பகுதி என்றது திருவேங்கடமுடையானை என்பது சுவையான விளக்கம். திருமங்கை ஆழ்வார் இதனையே ‘வட மா மலை உச்சியை’ என்பார். ஓயும் மூப்பு என்பதை, ஓய்வை விளைவிக்கின்ற மூப்பு என்று மூப்புக்கு அடைமொழியாக விளக்கம் செய்வார். பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன் என்று பொருள் கொள்ள வேண்டும். அவன் திருவடிகளை காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும் என்று பொருள் கொள்ளவேண்டும். வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு என்று சொன்னது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சொன்னதாகவும், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்று சொல்வதாகவும் நினைவில் கொள்ளலாம். வாயுள் வைக்கை என்பது ‘ஓவாது உரைக்கும் உரை’ என்கிறபடி உரைத்தல் என்றும் மனத்துள் வைக்கை என்பது மறவாதிருத்தல் என்றும் ஆகும். |
3.3.10 | வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை. வானவர் வானவர் கோனொடும்’ என்றதனால் நித்தியசூரிகளுக்கும், ‘பரன் சென்று சேர் திருவேங்கடம்’ என்றதனால் சர்வேசுவரனுக்கும் உகந்த தேசமாக உள்ளதால், எல்லோருக்கும் உகந்த தேசமான திருமலையை எல்லோரும் சென்று அடையுங்கள் என்கிறார். ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளி இருக்கின்ற திருவேங்கடத்தினது நெருங்கின சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய நீர்நிலைகளையும் உடைய திருத்தாள்வரையை, ஆயுளின் முடிவில் தளர்ச்சி அடைவதற்கு முன் சென்று சேருங்கள் என்று ஆழ்வார் கூறும் பாடல். திருதாள்வரை என்பது மலையடிவாரம். சர்வேஸ்வரன் இந்த ஆத்மாவிற்கு உடலை கொடுத்தது நரகம் செல்வதற்கு காரணமாக உள்ள இடங்களை தேடி செல்வதற்கு அல்ல என்றும் திருமலை செல்வதற்கு என்றும் ஆழ்வார் இந்த பாடலில் சொல்கிறார். சுமித்திரை, இராமன் காட்டுக்கு செல்லும் போது, லக்ஷ்மணனிடம், உன்னை பெற்றது எப்பொழுதும் எம்பெருமானுக்கு சேவை செய்வதற்கு என்றும், ஸ்ரீராமன் காட்டில் நடந்து செல்லும் போது அவன் நடை அழகில் மயங்கி தளர்ந்து விடாதே என்றும் சொல்வதை இங்கே எடுத்து, நம் போன்ற ஆத்மாக்கள் பிறந்தது திருமலையை அடையவே என்று கூறுகிறார். பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்று சொல்வதனால், திருமலை தம்மைத் திருவனந்தாழ்வானாக எடுத்துக் கொண்டதாக சொல்லலாம். |
3.3.11 | தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழிற் குருகூர்ச் சட கோபன் சொல் கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே. திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், பூமியில் உள்ளவர்கள் எல்லாரும் புகழும்படி பேற்றினை அடைந்து வாழ்வார்கள் என்பது பொழிப்புரை. இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக் கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்யப் பெறுவர் என்கிறார். தாள் பரப்பி மண் தாவிய ஈசனை என்று சொன்னது, கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற் போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்து கொண்ட சர்வேசுவரன் என்று அர்த்தம். கேழில் என்று சொன்னது ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பதிகம் ஆகையால் ஒப்பு இல்லாத பாடல்கள் என்றார். |
மீண்டும் ஆழ்வாரின் திருவேங்கடமுடையானின் இன்னொரு அனுபவத்தில் சந்திக்கலாம். நன்றி
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு வரும்படி செய்த, கஜேந்திரன் என்ற யானையின், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.
குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனித்தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.
அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம், இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,
இந்த வகையில், தன்னிடம், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் உள்ளதாக சொல்லும், அடுத்த பாடலை இங்கே காண்போம், நன்றி.
மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொல் இல்லை, சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா, புனத்துழாய் மாலை யானே பொன்னி சூழ் திருவரங்கா, எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே. (30)
எம்பெருமான் ஆழ்வாரிடம், மேலே சொன்ன ஐந்து பாடல்களில் எந்தவிதமான நல்ல குணங்களும் இல்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒருவிதமான நன்மையையும் இல்லாதை போல், ஒருவித தீமைகளும் இல்லாது இருந்தால் அது போதும், அதைக் கொண்டே ஆழ்வார் விரும்பும் வீடு போன்ற பேறு கொடுப்போம் என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் பின்னொரு காலத்தில் சொன்னது போல், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லாவித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்கிறார்.
நம்மாழ்வார், திருவாய்மொழியில் (3.3.4) நிறையொன்றும் இல்லேன், என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார், 25வது பாடல் முதல் 29வது பாடல் வரை, தன்னுடைய நன்மை இல்லாமையை சொல்கிறார். அதே பாடலில் நீசனேன் என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார், 30வது பாடல் முதல், 34வது பாடல் வரை தாழ்வுகள் அனைத்திற்கும் கொள்கலமாய், இருப்பதாக விவரிக்கிறார்.
திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே, காவிரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் இருந்து அருளுபவனே, அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே, என் மனதில் தெளிவு கொஞ்சமும் இல்லை, ஒரு நற்சொல்லும் வாயில் இருந்து வருவதில்லை, கோபத்தினால் பகைமையுடன் பார்த்து, மிக கொடுமையான வார்த்தைகளை சொல்பவன், இப்படி துர்குணங்கள் கொண்ட எனக்கு என்ன கதி, எம்பெருமான் தான் அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இனி சிறிது விளக்கத்துடன் கீழே காண்போம்.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற பல துர்குணங்களில் ஏதாவது ஒன்றில் கொஞ்சம் குறைத்தாலாவது கொஞ்சம் சுத்தி ஏற்படும் என்று ஆழ்வார் சொல்கிறார். மனதை சுத்தமாக வைத்திருப்பதை பேற்றுக்கு உதவியாக உள்ளதை ஆழ்வார் சொல்கிறார். பரமாத்மா, கண்களாலும் வாக்காலும், அறியப்பட முடியாதவன் என்றும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனத்தினால் மட்டுமே அறியப் படுகிறான் (மனஸா து விசுத்தேந) என்ற வாக்கியதாலும், “எவர்கள் ஞான ஸ்வரூபமான ஆத்மாவை அறிந்தவர்களாயும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனதை உடையவர்களையும் உள்ளனரோ, அவர்கள், உலகம் எல்லாவற்றையும் ஞானமயமானது என்றும் அது எம்பெருமானின் உடலாகவும் உள்ளதை அறிந்து கொள்கிறார்கள்” என்ற விஷ்ணு புராண (1-4-41) ஸ்லோகத்தாலும், மனத்தூய்மை, பரமாத்மா ஞானமாகிற பேறுக்கு உபாயமாக சொல்கிறார்கள். அந்த தூய்மை தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அந்த தூய்மை இல்லாதால், மனதுக்கு தோஷங்களான, காமம், குரோதம், லோபம்(பேராசை), பயம், துவேஷம், மோகம், மதம், மாத்சர்யம் என்பவை எதாவது ஒருவிதத்தில் எப்போதும் குடிகொண்டு உள்ளன என்றும் அதனால், ஒரு போதும் மனம் தூய்மை ஆக இருப்பதிலை என்று ஆழ்வார் சொல்வது தெரிய வரும்.
மனது முழுமையாக கெட்டுப் போயிருந்தாலும், வாயினால் சில நல்ல அல்லது பிரியமான சொற்களை சொல்வதுண்டா என்று எம்பெருமான் வினவ, தான், அப்படியும் இல்லை, மறந்தும் ஒரு நல்ல வார்த்தை வாயினில் இருந்து வருவதில்லை, என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார். இன்சொல் இல்லை என்றது, தான் யாரையும் குளிர விசாரித்தது கிடையாது, தன்னை விசாரித்தவரையும் இனிய மறுமொழி கூறி குளிர்வித்தது கிடையாது என்கிறார். பெரிய திருமொழியில், திருமங்கையாழ்வார் சொல்லிய “நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், ” என்ற 1.6.5 நைமிசாரண்ய பாடலை இங்கு நினைவு கூறலாம்.
மேற்சொன்ன இரண்டு தொடர்களாலும், தனக்கு நிறைவு ஒன்றும் இல்லை என்று, இதற்கு முன் சொன்ன ஐந்து பாடல்களில் சொன்ன கருத்தை சுருக்கமாக சொல்கிறார்.
மனத்தூய்மையும் இன்சொல்லும் இல்லாவிட்டாலும், இவரிடம் இருந்து ஒதுங்கி பிழைக்கலாம் என்று தப்பி செல்ல முயல்பவர்களையும் தப்ப முடியாதபடி, இவர் வலியச் சென்று அவர்களுக்கு தீமை செய்ய முயல்வதாக ஆழ்வார் சொல்கிறார். முதலில் நெஞ்சில் உள்ள கோபத்தையெல்லாம் காட்டி விரோத பாவத்துடன் அவர்களை எரிப்பது போல், அதாவது, எதிரியானவன் சுருண்டு விழும்படி பார்ப்பேன் என்கிறார். சினம் என்றாலும் செற்றம் என்றாலும் கோபம் என்ற ஒரே அர்த்தத்தையே தருவதால், ஆழ்வார் மிகவும் கோபமுடன் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவன் நல்ல ஆடையை உடுத்திக்கொண்டு, நல்லவனாக இருந்தால், அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்க மாட்டாமல், காரணம் ஒன்றும் இல்லாமல், தான் அவர்களை பழித்துக் கூறும் சொற்களுக்கும் ஒரு அளவே இல்லை.
ஆழ்வார் சொல்வதாவது, அவரை பார்த்தால் இப்படி கோபப் பார்வையுடன் எப்போதும் இருப்பாரா என்றால் இல்லை; வாய் திறந்து பேச தொடங்கினால் கேட்பவர்களுக்கு நெருப்பை வாரி கொட்டி, பூண்டோடு அழியும்படி இருக்கும் வார்த்தைகள் என்கிறார். இப்படி சொல்கிற வார்த்தைகளால் ஏதாவது பயன் உண்டா என்றால் இல்லை; இப்படி பார்ப்பதும், சொல்வதுமே பயனாக கருதி செய்வதாக ஆழ்வார் சொல்கிறார். இதன் கருத்து, சத்வ குணம் மிக்க நல்லவர்கள், பிறர் பயன் பெறுவதையே தங்கள் பயனாக எண்ணிக் கொள்வது போல், பிறர் துன்பப்படுவதையே தனக்கு பயனாக நினைத்து இருப்பதாக ஆழ்வார் சொல்வதாக பொருள்.
“நீர் இவ்வளவு தீமை உடையவரானால் தன்னை நிர்பந்திப்பதில் எந்த பயனும் இல்லை ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார், “அடியவர்களின் தாழ்வுகளை பார்த்து, அகல முடியாதபடி, அவர்கள் நம்மிடம் வேண்டுவதை ஒன்றையே அவர்களிடம் எதிர்பார்த்து, அவர்களை பாதுகாப்போம்” என்று பாதுகாப்பதிலேயே குறிக்கோளாக உறுதியாக கொண்டு, அதற்கேற்ப, திருத்துழாய் மாலை அணிந்து இருப்பவர் அன்றோ தேவரீர், நீர் ஸ்வாமியாக இருப்பதையும் இனிமையாக இருப்பதையும் கண்டபின், உம்மை விட்டு அகலமுடியுமோ ?’ என்று விடையளிக்கிறார். புனம் என்பது துளசி விளையும் செழிப்பான நிலத்தை குறிக்கிறது. இங்கு எம்பெருமானின் திருமார்பில் அதேபோல் இருக்கும் திருத்துழாய் மாலையை உடையவனே என்று சொல்கிறார்.
பாதுகாப்பவனாக இருந்தாலும், அருகில் இல்லாமல் இருந்தால், பயன் இல்லை; ஆனால் எம்பெருமான், தனக்கு மிக அருகில் திருவுள்ளம் கொண்டு இருப்பதாக சொல்கிறார். எந்த அளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் ஆட்கொள்வதுபோல் ஆச்சரியமாக திருவரங்கத்தில் எழுந்து அருளி உள்ள எம்பெருமானே என்கிறார். தங்களை போன்றவர்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு எம்பெருமான் ஏன் தனிமாலை அணிந்து கொண்டு இருப்பானேன் என்று வினவுவது போல் உள்ளது.
பொன்னிசூழ் என்று சொன்னது, திருத்துழாய் மாலைக்கு மாலை சூடினாற்போல் திருக்காவேரியால் சூழப்பட்டு இருப்பது என்கிறார்.
எனக்கு என்று சொன்னது, இது வரை சொல்லப்பட்ட அத்தனை தாழ்வுகள் நிறைந்திருக்கும் தன்னை சொல்லிக்கொள்கிறார். இனி என்று சொல்வது, தன்னுடைய தாழ்வுகளை சொல்லிக்கொண்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ள முயலாமல், தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை எம்பெருமானிடம் ஒப்படைத்த பின்பு என்று கொள்ளவேண்டும். கதி என் சொல்லாய் என்று சொல்வது, உய்ய வழி சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். உஜ்ஜிவிக்க முடியாதபடி தீமைகளை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு, தான் உஜ்ஜிவிக்க தேவரீர் வழி சொல்ல வேண்டும் என்று வழக்காடுவது போல் உள்ளது. ஆனால் ஆழ்வார் வழக்காடவில்லை.
எம்பெருமான் வகுத்த (பொருத்தமான) ஸ்வாமியாக இருப்பதால், ஆழ்வார் வழக்காடவில்லை. “நீர் உஜ்ஜிவிக்க வழி கேட்டவுடன் தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் “தான் அடிமையாய் இருப்பதும், எம்பெருமான் ஸ்வாமியாக இருப்பதும் எப்போதும் நிலையாக இருக்கும் ஒன்று அன்றோ, ஆகையால் தன்னை காப்பதற்கு அவனை தவிர வேறு யார் தகுதி பெற்றவர் இருக்கிறார், தன்னுடைய ஆத்மா தாழ்வுற்று போனால் அதனால் வரும் குறையும் எம்பெருமானையே சேருமே ” என்று கவலை தோன்ற ஆழ்வார் இந்த பாடலை முடிக்கிறார்.
மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம், நன்றி.
பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.
திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).
பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு
இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கும் நான்கு வேதங்களுக்கு இணையான தமிழ் மறைகள் ஆகும். இதில் திருவிருத்தத்தில் உள்ள 100 பாடல்களுமே திருவாய்மொழியில் உள்ள 100 பதிகங்களுக்கு இணையாக சொல்லப்படுகின்றன. (திருவாய்மொழியில் மொத்தம் 1102 பாசுரங்கள், 100 பதிகங்கள் என்ற விவரங்களை இங்கே காணலாம். )
ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37 திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும். இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.
இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இனி சுவாமி நம்மாழ்வார், திருவாய்மொழியில் திருவேங்கடத்தானைப் பற்றி பாடிய பாசுரங்களை பார்க்கலாம். திருவாய்மொழியில் மொத்தம் 40 பாசுரங்களில் சுவாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையானை குறித்து பாடியுள்ளார். அவற்றில், இப்பொழுது த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியை உலகமுண்ட பெருவாயா என்ற பதிகத்தில் உள்ள 11 பாடலைகளைப் பற்றிய ஒரு குறிப்பை இங்கு காண்போம். நன்றி.
ஆறாம் பத்து, பத்தாம் பதிகம் மிக விசேஷமானது. ஐந்து இடங்களில் சரணாகதி வேண்டிய ஆழ்வார்க்கு இந்த பதிகத்தில்தான், பிராட்டியை முன்னிட்டு 6.10.1 முதல் 6.10,11 வரை சரணாகதி விண்ணப்பித்ததால், இது நிறைவேறியது என்று சொல்வார்கள். சரணாகதி என்பது எப்போதும் அவன் திருவடிகளிலேயே என்பதால், இந்த பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாசுரத்திலும், திருவேங்கடத்தையும், அவனது திருவடிகளையும் நேரிடையாகவே ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். எட்டாவது பாசுரத்தில் ப்ரம்மா, சிவன், இந்திரன் போன்றவர்கள் எம்பெருமானின் திருவடிகளை காண விழைவதையும், பதினோராவது பாசுரத்தில், எம்பெருமானே தன்னுடைய அடிகளில் வந்து அடைந்த ஆழ்வாரைப் பற்றியும் சொல்கிறார். மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடியின் சிறப்பினை போற்றுகிறார். திருமலையில், திருவேங்கடமுடையானும் தனது வலது திருக்கரத்தால், நாம் எல்லோரும் அவனிடம் சரண் அடைய, தன் பாதங்களையே நமக்கு காண்பிக்கின்றார்.
இந்த பதிகத்தில் ஆழ்வார், எம்பெருமான் பிராட்டிக்கு அருளிய த்வய மந்திரத்தின் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே‘ என்பதை “உலகம் உண்ட பெரு வாயா” என்று தொடங்கி விளக்குகிறார். த்வய மஹா மந்திரத்தின் இறுதி பகுதியை பின்பு ஒழிவில் காலம் எல்லாம் என்ற 3.3 பதிகத்தில் கண்போம். இதற்கு முந்திய சரணாகதிகள், திருமந்திரம் போல் என்றும், இந்த சரணாகதி த்வய மஹா மந்திரம் போல் என்றும் சொல்வார்கள். திருமந்திரத்தில் பிராட்டி சம்பந்தம், த்வயத்தில் உள்ளது போல் நேரடியாக இல்லை. அதே போல் மற்ற சரணாகதிகளில் பிராட்டி சம்பந்தம் எம்பெருமானின் ஸ்வரூபம் மூலம் வருவது போல் இல்லாமல் இங்கே அலர்மேல்மங்கை மலர்மார்பா என்று நேரடியாக உள்ளது. கால நியதி, அங்க நியதி, அதிகாரி நியதி என்று நிர்பந்தங்கள் எதுவும் இல்லாமல் ஆச்ரயிக்கும்படி தன்னுடைய சீல குணத்தை வெளிகாட்டிக்கொண்டிருக்கும் திருவேங்கடமுடையானிடம் ஆழ்வார் சரணாகதி செய்கிறார். ஒன்பது பாடல்களில் எம்பெருமானின் பெருமைகளை சொல்லி, பத்தாம் பாட்டில் சரணாகதி செய்கிறார்.
எண் | விளக்கம் |
---|---|
1 | உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி. நெடியாய் அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குல தொல் லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. (6.10.1) பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் அமுது செய்த பெரிய வாயை உடையவனே, தேஜோ மயமான திவ்ய விக்ரஹத்தை உடையவனே, மிகப்பெரியவனே, அடியேனுக்கு உயிராய் இருப்பவனே, உலகுக்கெல்லாம் திலகம் போன்ற திருமலையிலே விளங்குகின்ற எம்பெருமானே, பரம்பரை பரம்பரையாக எம்பெருமானுக்கு அடிமையான அடியேன், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேரும்படி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார். உலகம் உண்டது எம்பெருமான் உலகங்களை காக்கும் குணத்தை சொல்வது; ஆழ்வார் பிரளய காலத்தில் ஏற்படும் மொத்த துன்பமும் ஒருசேர தனக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்சாரத்தில் இருந்து காக்கவேண்டும் என்று வேண்டுவது. மிகவும் அனுபவிக்க வேண்டிய ஈட்டு ஸ்ரீஸூக்தியை கீழே காணலாம்; ஒரு உலகத்திற்கு ஆபத்து என்ற போது, ஓடி வந்த எம்பெருமான் ஆழ்வாருக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடிவரக்கூடாதா; பிரளய ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் எம்பெருமான் சம்சார ஆபத்தில் உள்ளவரை காப்பாற்றலாகாதோ; உதவி கேட்காதவர்களுக்குக் கூட உதவும் எம்பெருமான், உதவி கேட்கும் ஆழ்வாருக்கு உதவக்கூடாதோ; பிரளய காலத்தில் சரீரத்திற்கு வரும் ஆபத்தை நோக்குபவர், இங்கே ஆத்மாவிற்கு ஆபத்தை நோக்கக்கூடாதோ; ஜலப்ரளயத்தில் அமுங்குவோரை காக்கும் எம்பெருமான், பிரிவு துயரத்தில் வீழ்ந்தோரை காப்பாற்ற வேண்டாமோ; பிறரால் வந்த துன்பம் என்றால் காப்பாற்றுவாய், அவனால் நேரும் துன்பம் என்றால் காப்பாற்ற மாட்டானோ; சரணம் புகாதவரை தான் காக்க வேண்டும் என்று நியதி உள்ளதோ, சரணம் என்று வந்தவரை காக்க மாட்டானோ என்று ஆழ்வார் கதறுவது போல் உள்ளது. பெருவாயா என்று சொன்னது எவ்வளவு செய்த பின்னரும், அடியவர்களுக்கு மேலும் செய்யவேண்டும் என்ற மனது கொண்ட எம்பெருமானை சொல்வதாகும். உதாரணம், திரௌபதிக்கு எல்லாம் செய்த பின்னரும், மனதில் புண்ணோடு தன்னடி சோதிக்கு எழுந்தருளிய எம்பெருமானின் நிலையை சொல்லலாம். உலப்பில் கீர்த்தியம்மானே என்று சொன்னது ராமாயணத்தில் சூர்ப்பணகை, தாரை, மண்டோதரி ஆகிய மூன்று பெண்களும், நிந்திக்கவேண்டிய சமயத்திலும், வாயார வாழ்த்தினதை சொல்வதாகும். நெடியாய் என்று சொன்னது, தொட்ட எல்லா துறை தோறும் தரை காண முடியாதபடி பெருகிச் செல்பவனே என்று சொல்வது. அதாவது எல்லா குணங்களுக்கும் எல்லை காணமுடியாதபடி உள்ளவனே என்று பொருள். இதில் விளக்கம் சொல்லும் போது, எந்த குணத்திற்கு எல்லை கண்டாலும், அவனுடைய சௌந்தர்யத்திற்கும் லாவண்யத்திற்கும் எல்லை இல்லாதவனே என்று சொல்கிறார். இதே போல், நெடியானே என்று பெருமாள் திருமொழியில் (4.9) குலசேகர ஆழ்வார் சொல்லும் போது, அடியவர்களை காப்பதில் எல்லை இல்லாத கருணை உடையவனே, என்று சொல்வதை நினைவில் கொள்ளலாம். அதற்கு இன்னொரு உதாரணம், எம் அடியார் அது செய்யார் என்ற பெரியாழ்வார் திருமொழி, 4.9.2 பாசுரம் ஆகும். அதேபோல் நெடியானே என்பதற்கு நீண்டகாலம் ஆனாலும் நினைவில் கொள்பவன் அல்லது நாம் ஒருகால் நினைக்க, அதையே பலகால் நினைத்ததாகக் கொண்டு செயல்படுபவன் என்று பொருள்படும்படி “நினைமின் நெடியானே” (திருவாய்மொழி 10.5.10) என்று நம்மாழ்வார் சொல்வதையும், அப்போதைக்கு இப்போதே சொன்னேன் (பெரியாழ்வார் திருமொழி 4.10.1) என்ற பெரியாழ்வார் பாடலையும் நினைவில் கொள்ளலாம். அடியேன் உன் திருவடி சேருவதைப் பற்றி மாசுச : என்று ஒரு வார்த்தை அருள வேண்டும் என்கிறார். |
2 | கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலம் எல்லாம் சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே. (6.10.2) மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் பல துண்டுகளாக செய்தும் ஜுவாலையுடன் ஸ்ரீஸுதர்சனத்தை கையில் ஏந்திக்கொண்டு இருக்கும், திருவேங்கடமுடையான், நித்யஸூரிகளுக்கு நாயகன், ஆழ்வாரை அவன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாடுகிறார். சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் என்பதற்கு எண்ணெயாலே எரியும் விளக்கு இல்லாமல், நீராலே எரியும் விளக்கு கண்டு அநுபவிக்க வேண்டும் என்று ஆழ்வார் ஆசைப்படுவதாகவும், நீரிலே நெருப்பு எழுந்தார் போல் இருப்பதாகவும் சொல்கிறார். ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன் என்பது போல், சுனை நீர் வற்றினாலும் தன் அன்பு மாறாத, ஆறாத அன்பு உடைய ஆழ்வார் என்கிறார். இப்படிப்பட்ட அடியேன் உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி கிருபை செய்ய வேண்டுகிறார். |
3 | வண்ணம் அருள் கொள் அணி மேகவண்ணா! மாயவம்மானே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே! தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே! அண்ணலே! உன் அடிசேர அடியேற்கு ஆவாய் என்னாயே (6.10.3) அழகிய மேகம் போன்ற நிறத்தை உடையவனே! ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! தேவாதி தேவனே! தெளிந்த அழகிய அருவிகள் மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் கொழிக்கும் இடமான திருமலையிலே விளங்குபவனே! உன் திருவடிகளில் வந்து சேரும்படி அடியேன் விஷயத்திலே இரங்கி அருள வேணும் என்கிறார். வண்ணம் அருள் என்று கொண்டு, அருள் தானே வடிவெடுத்த மாதிரி, அருளே திருவேங்கடமுடையானாக மூர்த்தியாக நின்று என்று கொள்ளலாம். வண்ண மருள் கொள் அணி என்று கொண்டு, கண்டவர் நெஞ்சை இருளச் செய்கின்றவனே என்றும் கொள்ளலாம். மாயவம்மானே! என்பதற்கு, வெறும் வடிவழகு மாத்திரம் இல்லாமல், ஆச்சரியமான குண விசேஷங்கள் கொண்ட பெரியவனே என்கிறார். எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்ற இடத்தில், தேவர்களுக்கான அமிர்தத்தின் பலனை பெற பல நியதிகள் உள்ளன, ஆனால், திருவேங்கடமுடையானின் கருணையை பெற, நினைத்த மாத்திரத்தில், “ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்“ (5.10.10) என்று தித்திக்கும் என்று மீண்டும் சொல்கிறார் போலும். |
4 | ஆ ஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல், தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமா மகள் கேள்வா, தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே. (6.10.4) உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான அசுரர்களின் ஆயுளை முடிப்பதற்காக நெருப்பை உமிழ்கிற அம்புகளை மழை போல பொழியும் சார்ங்கம் என்ற வில்லை உடையவனே, திருமகள் மணாளனே, தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக கூடியிருக்கும், திருவேங்கடமலையில் எழுந்தருளி இருப்பவனே, உனது திருவடிகளை அடியேன் அடைய வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார். பரம தயாளுவாய் சக்திமானான எம்பெருமான் பாவங்களைப் போக்கி, அருள வேண்டும் என்கிறார். எம்பெருமான் கண்டு அருளிய நான்கு சாதனங்கள் (கர்ம, ஞான, பக்தி, சரணாகதி) தனக்கு உதவவில்லை என்றும், புதியதொரு சாதனம் வேண்டும் என்கிறார். இதனை உரையாசிரியர்கள், புதிய சாதனம் முக்கியமில்லை, எம்பெருமானே! நீ இருக்கும் போது நான் இங்ஙனே இழக்கலாகுமோ என்ற கருத்தே முக்கியமாம் என்று சொல்வார்கள்; நஞ்ஜீயர், நம்பிள்ளை ஆச்சார்யர்களின் உரையாடல் இங்கு சொல்லப்பட்டு உள்ளது. ஐந்தாவது சாதனம் என்று ஆச்சார்ய அபிமானத்தை சொல்ல முடியாது, ஏன் என்றால் ஆச்சார்ய அபிமானம் நான்காவது சாதனமான சரணாகதியில் அடக்கம், ஆச்சார்யனே, எம்பெருமானின் திருவடி ஆவார், ஆகையால், “ஈச்வரனைப் பற்றுகை, கையை பிடித்துக் கார்யங்கொள்ளுமோ பாதி, ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி’ என்ற ஸ்ரீவசனபூஷணத்தில் சொல்வது போல், ஆச்சார்ய அபிமானம், காரியம் செய்துவிக்கையில் அமோகமானது என்று தெரியம். “தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமாமகள் கேள்வா“ என்று சேர்த்து சொல்கின்ற அழகு மிகவும் ரஸிக்கத் தக்கது. அசுரர்களை (கரதூஷணாதிகள்) வதை செய்ய நெருப்பை உமிழ்கின்ற மிகக்கொடிய அம்புகைளப் பிரயோகித்த கோதண்டராமா (தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா) என்று சொல்லும் போது, அப்போது சக்கரவர்த்தி திருமகனின் வெற்றியை கண்ட சீதா பிராட்டி, “தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே” என்று பிராட்டி, அதுவரை கணவனாக மட்டும் அணைத்துக் கொண்ட எம்பெருமானை அன்றுதான் எம்பெருமானை ஆண்மகனாக கொண்டு அணைத்துக் கொள்வதை போல் உள்ள காட்சியினை நினைத்து, ஆழ்வார் திருமாமகள் கேள்வா என்று சேர்த்து பாடுகிறார். ஒரு வில்லினை முறித்ததற்கே ஸ்ரீராமனின் வீரத்தை வியந்த ஜனகன் உகந்து சீதாபிராட்டியை மணம் செய்வித்தவர் இப்பொழுது பதினாலாயிரம் ராக்ஷசர்களை தனியொருவனாக கொன்று குவித்ததை பார்த்தால் என்ன செய்வார் என்று வியந்ததையும் நினைவில் கொள்ளலாம். |
5 | புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ, புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ, திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே, திணரார் சார்ங்கத்து உனபாதம் சேர்வது அடியேன் என் நாளே? (6.10.5) ‘உனது திருவடிகளை அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ’ என்று கேட்கும் பாசுரம். ‘உன் கையில் வில் இருக்க நான் இழக்க வேண்டியதில்லை, இழக்கமாட்டேன், இனி உன்னைப் பெறும் நாளைச் சொல்லி அருளினால் போதும்’ என்று ஆழ்வார் வேண்டும் பாடல். தேவகிக்கு பத்து ஆண்டுகள் என்று, பரதனுக்கு பதினான்கு ஆண்டுகள் என்று, சீதைக்கு பத்து மாதங்கள் என்று, கோபிகைகளிடம் ஒரு பகல் முடிந்து சாயங்காலம் வந்து விடுவதாக சொன்னது, என்று ஒவ்வொருக்கும் நேரம் சொல்லி தந்தது போல், தனக்கும் ஒரு நாள் குறித்து தரவேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார். சுக்ரீவனின் சந்தேகத்தை போக்குவதற்காக, இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அவரிடமே அடைந்தது என்கிற வரலாற்றை ஆழ்வார் இங்கு எடுத்துக் கூறியது, சந்தேகம் கொண்ட சுக்ரீவனுக்கே காரியம் செய்த எம்பெருமான், சிறிதும் சந்தேகமின்றி இருக்கும் தனக்கு காரியம் செய்யலாகாதோ என்பதற்காக என்று கொள்ளலாம். கண்ணன் குழந்தையாய், இரட்டை மருத மரத்தின் நடுவே எழுந்தருளிய பொழுது உரல் அந்த மரங்களுக்கு இடையே சென்றதால் முறிந்து விழ, முன் நாரதர் சாபத்தால் குபேர புத்திரர் இருவர் சாபம் தீர்ந்து சென்றனர் என்கிற வரலாறு இங்கு சொன்னது, எம்பெருமான் இன்னாருடைய சாபத்தைத் தீர்ப்பது, இன்னாருடைய சாபத்தைத் தீர்க்கலாகாது என்று ஒரு நியதி கொண்டு இருக்கிறார் என்று ஆழ்வார் கேள்வி கேட்பது போல் உள்ளது . |
6 | எந் நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று, எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய், மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே, மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? ( 6.10.6) “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாளே“ என்று ஐந்தாம் பாடலில் சொன்னது, ‘உன் திருவடிகளே, நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா?’ என்று சந்தேகிக்கிற மாதிரியும் பொருள் சொல்லக்கூடும். அந்த சந்தேகத்தை இங்கே எம்பெருமான் தீர்ப்பது போல் அமைந்துள்ள பாடல். இந்த உலகத்தில் உள்ளவர்கள், எம்பெருமானின் பரத்துவத்தை எண்ணி, உகந்து அங்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்பது போல், ‘மண்ணளந்த இணைத்தாமரைகளை நாம் காண்பதற்காகும் நாள் எந்நாள்’ என்று நித்யஸூரிகள் ‘ஸௌலப்ய ஸர்வஸுலபமான திருவடிகளை நாம் காணப் பெறுவதன்றோ“ என்று இங்கே திருமலைக்கு வந்து தங்கி, உடல், மனம், வாக்கு என்று மூன்று கரணங்களாலும் பலன் ஒன்றையும் விரும்பாமல் வணங்கும்படி ஆச்சரியமாக எழுந்தருளி உள்ள பெருமானே, இங்கு, தான் எப்படி உன்னை இழக்க முடியும் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானை அடைந்து அவரை விட்டு ஓரடி கூட விலகாத நிலை வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திப்பதை பாடலின் கடைசி வரி கூறுகிறது. |
7 | அடியேன் மேவி அமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே, கொடியா அடு புள் உடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே, செடியார் வினைகள் தீர் மருந்தே. திருவேங்கடத்து எம் பெருமானே, நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலாது ஆற்றேனே. (6.10.7) இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையவனாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலாக்கனிவாய் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதமானவனே, உன் பாதம் காண நோலாதே நொடியார் பொழுதும் ஆற்றேன், என்று பொருள் காணலாம். ஆழ்வார், எம்பெருமான் திருவடி கிடைப்பதற்கு தொடர்ந்து அல்லது எப்பொழுதும் அனுஷ்டானம் செய்யாமல், ஏதோ அனுஷ்டானம் செய்து பலம் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனவரைபோல் கூப்பிட்டுக் கொண்டு உள்ளேன் என்கிறார். வேறு சாதனங்களை அனுஷ்டித்து அதில் பலன் பெற காலதாமதம் ஆவதற்கு அந்த அனுஷ்டானத்தில் ஒரு சில சிறு குறைகள் இருந்து இருக்கலாம் என்று காத்துகொண்டு இருப்பது போல் இல்லாமல், ஆழ்வாருக்கு எம்பெருமானே சாதனமாக இருந்தாலும், ஆழ்வாரின் மனதில், அவன் கிருபையும் இவருக்கு வந்து சேரமுடியாதபடி இவர் இருக்கிறாரோ என்ற பயத்தை இங்கே சொல்லி உள்ளார். திருவாராதனத்தில் பெருமாளுக்கு அமுது செய்தருளப் பண்ணும்போது “அடியேன் மேவியமர்கின்றவமுதே, பச்சை மாமலை போல் மேனி‘ போன்ற பாசுரங்களை விண்ணப்பம் செய்வது என்று பராசர பட்டர் என்ற ஆச்சாரியர் சொல்லி உள்ளார். மேவி அமர்கின்ற அமுதே! என்பது எம்பெருமானுக்கு இவர் சாத்தும் ஒரு திருநாமம் ஆகும். தேவாமிர்தத்தை எம்பெருமானிடம் வேண்டும் தேவர்களையே காக்கும் எம்பெருமான், அவரையே அமிர்தமாக எண்ணும், தன்னை காக்கக் கூடாதா என்று கேட்டு கொள்ளவதாகவும் சொல்வதுண்டு. தேவர்கள் அமுதம் கேட்கும்போது அவர்கள் அதனை உண்டு சாகா வரம் வேண்டுவது; ஆனால் ஆழ்வார் எம்பெருமானான அமுதத்தை வேண்டி இவ்வுலகில் இருந்து சென்று பரமபதம் அடைய வேண்டும் என்பது இரண்டு அமுதங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை விளக்கும். இமையோர் அதிபதியே என்றது, நித்யஸூரிகள் எம்பெருமானை பரமபதத்தில் அனுபவிக்கும் அளவு தானும் இங்கு அனுபவிப்பவனாக சொல்கிறார். கொடியா அடு புள் உடையானே என்றது, ஆழ்வாரை திருமலைக்கு வந்து சேர சொன்னதற்கு, கஜேந்திர சரித்திரத்தில், கருடனையும் தான் சுமந்து விரைந்து சென்றதைப் போன்ற கருணையை எம்பெருமான் தன்னிடம் காட்டக்கூடாதோ என்று சொல்வதுபோல் உள்ளது. கோலக்கனிவாய்ப் பெருமானே! என்பது தன்னுடைய திருவதரத்தின் பழுப்பைக் காட்டி தன்னை அடிமையாக்கி கொண்டவனுக்கு மீண்டும் அதை காண்பிப்பது அரிதாக உள்ளதோ என்று கேட்பது போல் தோன்றும். “கோலக்கனிவாய் பெருமானே கொடியாவடு புள்ளுடையானே“ என்று சேர்த்து சொல்லி, அடியவர்கள் இந்த அழகை அனுபவிக்க கொடி கட்டி பறந்துகொண்டு இருப்பவனே என்று நம்பிள்ளை என்ற ஆச்சார்யர் அனுபவிப்பார். செடியார் வினைகள் தீர்மருந்தே என்று சொன்னது, நிலத்தில் விளையும் மருந்தைக் காட்டிலும் மலையில் விளையும் மருந்த மிகச் சிறப்பாகும் என்ற கருத்தில் திருமலையை சொல்வது. |
8 | நோலாது ஆற்றேன் நுன பாதம் காண வென்று நுண் உணர்வில், நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும், சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே, மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போல வாராயே. (6.10.8) சிவபிரானும், பிரமனும், தேவேந்திரனும் எம்பெருமானின் திருவடிகளைக் காண்பதற்கு சாதனா அனுஷ்டானங்கள் என்று உபாயம் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, ஆசைப்பட்டு, எம்பெருமானின் திருவடிகளை காண்கிறார்கள். இப்படி ப்ரம்மாதிகளுக்கும் ஆகிஞ்சன்யம் மூலமே எம்பெருமான் தரிசனம் என்பதை விளக்கும் பாடல். ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அல்லது எம்பெருமானை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கலங்குவது.சேலேய்கண்ணார் பலர் சூழவிரும்பும் என்று சொல்வதால், சிவனும், பிரமனும் இந்திரனும் தங்கள் மனைவிகளுடன் வந்து சரணம் புகுந்தார்கள் என்று சொல்கிறார். மாலாய் மயக்கி அடியேன்பால் வாராய் என்று ஆழ்வார் சொல்லும் போது, அவர் மால் என்று கண்ணபிரானை சொன்னது மட்டும் இல்லாமல், கண்ணனை அவன் செய்த விளையாட்டுகளுடன் ஆழ்வார்க்கு காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். இந்த பாடலில் வரும் எம்பெருமானின் திருவடிகளை என்று சொன்னது, பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் காண விழைவது. மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை வேண்டுவார். |
9 | வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே, செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோளமுதே. எனதுயிரே, சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே, அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே. (6.10.9) கைக்கு கிடைத்ததைப்போல் இருந்து கிடைக்காதவனே, கிடைக்காதவன் போல் இருந்து சற்று தள்ளி நிற்பவனே, செந்தாமரை கண், செங்கனி வாய், நான்கு தோள்கள் என்று அனுபவிப்பதற்கு சிறந்தவனே, ரத்தினங்களின் ஒளியால், இரவையும் பகல்போல் ஜொலிக்கும் திருமலையில் உறைபவனே, உன் திருவடிகளை ஒரு கணமும் பிரிந்திருக்கும் சக்தி தனக்கு இல்லை என்று ஆழ்வார் திருவேங்கடவனிடம் முறையிடும் பாடல். ஆழ்வார் தனது மானசீகமான அனுபவத்தில் எம்பெருமானை அடைந்தோம் என்று இருக்கையில், அதனை உண்மை என்று எண்ணி அவனை அணைக்க நினைத்தால் அங்கு அவன் இல்லாதது கண்டு, வந்தாய் போலே வாராதாய் என்றார். இதனை வேறு ஒரு விதமாக விளக்குவதும் உண்டு. விபவாவதாரங்களில் எதிரிகளுக்கு கிட்டாதவனாகவும், அவனுடைய பரத்துவத்தை எண்ணி தங்களுக்கு எங்கே எளியவனாக வந்து காட்சி தரப்போகிறான் என்று இருக்கையில், அடியவர்களுக்கு தன்னுடைய சௌலப்யத்தால் அவர்கள் முன் வந்து நிற்பான் என்பதே அது. பரமபதம் போலே எப்போதும் பகலாய் இருக்கின்ற திருமலையில் எழுந்து அருளி இருப்பவனே என்பதை (சிந்தாமணிகள் பகர் ) அல்லைப் பகல் செய் மூலம் தெரிவிக்கின்றார். அந்தோ என்று சொல்வதன் மூலம் அவன் அருளுக்கும் குறைவில்லை, தன் ஆசைக்கும் குறைவில்லை, இருந்தும் அவனை அடைய முடியவில்லையே என்பதை வெளிப்படுகிறார். |
10 | அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா, நிகரில் புகழாய், உலகம் மூன்று உடையாய், என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (6.10.10) மேலே சொன்ன ஒன்பது பாடல்களில் எம்பெருமானின் ஸ்வரூபத்தையும் தன்னனுடைய ஆற்றாமையையும் சொல்லியுள்ளார். இந்த பாடலில், தன்னுடைய ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். (அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால் எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது.) இது அகன்று இருந்து சொல்லும் பாசுரம் இல்லை. இறையும் அகலகிலேன் என்று ஒரு நொடி கூட விலகாமல் பாட வேண்டிய பாசுரம். இங்கு வரும் அகலகிலேன் என்பது மற்றவர்கள் சொல்வது போல் அன்று என்றும், மற்றவர்கள் சொல்வது அவரவர் கர்மத்தின் பலனாக வருவது என்றும், பிராட்டியார் சொல்வது விஷயத்தின் பொருட்டு வருவது என்றும் சொல்கிறார். பிராட்டியாருக்கு கர்மங்கள் கிடையாது என்பதாலும், அவனுக்கு அவள் மேல் இருக்கும் பிரியத்தால் அவளை விட்டு பிரியாத ஸ்வபாவம் உடையவன் ஆகையாலும், அவளும் அவனை விட்டு பிரியாதவள் ஆகையாலும் அகலகிலேன் என்ற இந்த வார்த்தை அவனுடைய திருமார்பின் மேன்மையை சொல்லும் பொருட்டு, இந்த இடத்தில தேவை என்கிறார். எம்பெருமானுடைய திருமார்பிலே நித்யவாஸம் செய்கின்ற பெரிய பிராட்டியார், அகலகில்லேன் என்று சொல்வது, பெற்றிருக்கும் பாக்கியத்தின் உயர்வினை எண்ணி, அகன்று விடுவோமோ என்ற சந்தேகத்தின் வெளிப்பாட்டினால் தேவை ஆகிறது என்கிறார். அலர் மேல் மங்கை என்றதால், புஷ்பத்தின் மணம், அதுவே ஓரு வடிவு எடுத்தது போல் தோன்றின மஹாலக்ஷ்மி, அந்தப் பூவில் வசிக்க பிடிக்காமல், எம்பெருமானின் திருமார்பிலே சேர்ந்தது, அந்த பூவைக் காட்டிலும் மென்மையான, மேன்மையான சிறந்த இடமாக இந்த திருமார்பே ஆகும் என்ற முடிவால் ஆகும். அப்படிப்பட்ட திருமார்பை உடையவனே என்பதை உறை மார்பா என்று சொல்கிறார். உறை என்பதால் எப்பொழுதும் வாசம் செய்வது சொல்லப்பட்டது. உறைமார்பா என்பதனால் பிராட்டி ஈச்வரன் இவர்களின் சேர்த்தியானது எப்போதும் உண்டு என்பது காட்டப்பட்டது. அதனால், அடியவர்கள் எப்போது வேண்டுமானாலும் சரணாகதி செய்யலாம் என்றும், பிராட்டி உடன் இருப்பதால், சரணாகதி பலிக்கும் என்றும், அடியவர்கள் பயப்படாமல் இருக்கலாம் என்றும், சரணாகதி செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதும் என்றும் அறியலாம். எம்பெருமானுக்கு உள்ள தனிசிறப்புகளில் உபாயத்துவம் என்ற ஒரு ஜீவாத்மாவிற்கு முக்தி அளிக்கும் சக்தி மிகவும் முக்கியமானது. பெரிய பிராட்டிக்கும் புருஷகாரத்துவம், என்ற தோஷங்கள் நிறைந்துள்ள அடியவர்களை / அறிவுள்ள ஜீவாத்மாக்களை, எம்பெருமான் அங்கீகரிக்கும்படி செய்யும் குணம் தனிச்சிறப்புடன் முக்கியமாக உள்ளது. எம்பெருமானுக்கு முக்தி அளிக்கும் சக்தி இருக்கும் போது ஏதற்காக பிராட்டியை முன்னிட்டு சரணாகதி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஆச்சார்யார்கள் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள். ஜீவாத்மா செய்யும் எண்ணற்ற பாவங்களை கண்டு எம்பெருமான் மிகவும் சீற்றம் அடைய காரணம் உள்ளது. அப்படி சீற்றம் பிறந்தாலும், அந்த ஜீவாத்மாவை மன்னித்து அருளுவது பெரிய பிராட்டியாருக்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தன்னுடைய கருணையால், எம்பெருமானுக்கு பாவங்கள் பல செய்த இந்த ஜீவாத்மா மேல் தயை பிறக்கும்படி செய்வது பிராட்டியின் புருஷகாரத்துவம் ஆகும். சம்பந்தப்பட்ட ஜீவாத்மாவிற்கும் அபராத பயத்தினால் பிராட்டியின் புருஷகாரத்துவம் மிகவும் தேவையான ஒன்று. பிராட்டிக்கு, அனைவர்க்கும் மாதாவாக இருந்து, அனைவரின் மேல் நெஞ்சார்ந்த அன்பு கொண்டு, அந்த ஜீவாத்மாக்களின் வருத்தங்களை கண்டு பொறுத்திருக்க முடியாத ஒரு தன்மையும், எம்பெருமானுக்கு பத்தினியாக இருந்து, தான் செய்யும் பணிவிடைகளை கண்டு, அவன், அவள் சொற்படி நடக்க வைக்கும் தன்மையும் இருப்பதால், அவளது புருஷகாரத்துவம் நிச்சயம் ஒவ்வொரு முறையும் பயன் அளிக்கும். பிராட்டி கூடஇருந்ததால், பிராட்டியிடம் தவறு செய்து இருந்தாலும், எம்பெருமான் ராமச்சந்திர மூர்த்தி, காகாசுரனை மன்னித்ததும், பிராட்டி கூட இல்லாததால், இராவணன் தலையறுப்பு நடந்து அவன் வாழ்வு முடிந்ததும் பிராட்டியின் புருஷகாரத்துவத்திற்கு எடுத்துக்காட்டுகள். பிராட்டியின் அபயப்ரதானத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. இராவணனை அழித்த பின், அனுமன், சீதையிடம் செய்தி சொல்லி, பிறகு பிராட்டிக்கு, அசோகவனத்தில், முன்னாளில் தீமைகள் செய்த ராக்ஷசிகளை, எம்பெருமான் பகவத் அபச்சாரம் செய்தவர்களையும், பாகவத அபச்சாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் வண்ணம் / முறையில் முடித்துவிட உத்தரவு வேண்டிய அனுமனுக்கு தாயார் சொல்லும் பதில் இதுதான். “அவர்கள் தாங்கள் சொல்வது போல் பாபிகள் அல்ல; நான் நினைப்பது வேறு; அப்படியே பாவிகள் என்றாலும், அழுக்கு உடையவர்கள் தாம் குளிப்பதற்கு தகுதியானவர்கள்; ஆகவே அவர்களுக்கு, நாம் தாம் முகம் கொடுக்க வேணும், கைமுதல் இல்லாதவர்க்கன்றோ, நாம் கைமுதலாக இருக்க வேண்டும். சரணம் என்று வந்த விபிஷணனுக்கு தோஷம் இருந்தாலும், எம்பெருமான் சரணாகதி கொடுத்தார் அல்லவா? வசிஷ்டாதிகளை, மந்திரிகளாக கொண்ட இஷுவாகு வம்சத்தில் பிறக்காததாலோ, யோகிகளான ஜனககுலத்தில் பிறக்காததாலோ, சரணாகதியின் சிறப்பு தங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் போனது; எம்பெருமானும், எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்; இப்படி கேட்டு இங்கே கோபம் வர செய்வாயோ? இவர்களது பாவ புண்ணியங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இப்பொழுது தங்கள் கையில் இவர்கள் அகப்பட்டு எங்களை காப்பாற்றுபவர் யார் என்று ஓலமிடும் போது, நாம் இவர்களிடத்தில் இரங்க வேண்டும், நாம் இவற்றை உமக்கு கற்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம், இந்த வாழ்க்கையில் குற்றம் செய்யாதவர் யார் ? நல்லவர் என்று பெயர் எடுத்த இராமபிரான் மீது குற்றம் சொல்ல முடியாதா, எங்கள்மேல் குற்றம் சொல்ல முடியாதா, அல்லது தங்கள் மேல் குற்றம் சொல்ல முடியாதா ? இராவணன் சொன்ன காரியத்தை செய்த இவர்களை தண்டிப்பது எப்படி? இராமன் ஒரு விஷயத்தில் முனைப்பாக இருந்தாலும், அவனை ஆற விடுவதற்கு நாங்கள் உண்டு, அவன் செல்வதற்கு நாங்கள் இருக்கும்போது, தாங்களும் எங்களுடன் இருப்பீர்கள் என்று இருந்தேன், நீங்கள் இப்படி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்” என்று நீண்ட விளக்கம் கொடுத்த பிராட்டி கருணை கடல், புருஷகாரத்வத்திற்கு அவள் ஒருவளே. எட்டு மாதம் பிராட்டியை விட்டு பிரிந்து இருக்க வல்லவரானதால் இராமனிடத்தில் குற்றம் ஆகிறது. பாரதந்திரியத்திற்கு அனுகுணமாக தான் பேசாமல் இருந்திருக்கவேண்டும், அப்படி செய்யாததே தன குற்றம் ஆகிறது; இராவணன் சொன்ன வார்த்தைகளுக்கு காரியம் செய்த இந்த ராக்ஷிசிகளை தண்டிக்க சொல்வது அனுமனின் குற்றம் என்று சீதையின் கூற்றாக கொள்ள வேண்டும். எம்பெருமான் பிராட்டி சொல்வதை நிச்சயம் கேட்பார் என்பதற்கு உதாரணமாக, “மாய மானின் பின்னே போ“ என்றாலும், அதன் பின்னே தொடர்ந்து போகும் இவன் அவளுக்கு ரசிகன் என்பதின் மூலம் அறியலாம். நிகரில் புகழாய் என்று தொடங்கும் பதத்தை நாராயண சப்தத்திற்கு அர்த்தமாக சொல்லி, சரணாகதனை ஏற்றுக்கொண்டபின், ஒரு போதும் நழுவ விட மாட்டான் என்ற குணாதிசயத்தை சொல்வதாக கூறுவார்கள். இதனை தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் எனது அடியார் அது செய்யார் என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். நிகரில் புகழாய் (வாத்ஸல்யம்),உலகம் மூன்று உடையாய், ( ஸ்வாமித்வம் ) என்னை யாள்வானே (ஸௌசீல்யம்), நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே ( சௌலப்யம் ) என்றது எம்பெருமானின் பல குணங்களையும் வரிசையாக சொல்லி உள்ளார். அடியார்கள், எம்பெருமானிடம் தங்களுடைய அபராதங்களை பொறுக்க வேண்டும் என்று பிராட்டியை முன்னிட்டு வேண்டும்போது, எம்பெருமானின் வாஸ்தல்யம் தலையெடுக்கும் என்பதால், அது முதலாக சொல்லப்பட்டது. தானே உபாயமாகவும், தானே ப்ராப்யமாகவும் (தானே வழி, தானே அடையும் இடம்) இருந்து தனக்கு செய்த உபகாரத்தை நினைவு கூறுகிறார். அவன் மேன்மையும் தன்னுடைய சிறுமையும் பாராது, ஒரே நீராக கலந்து போல் தன்னுடன் கலந்ததை சொல்கிறார். மொத்தத்தில், தாழ்ந்தோருக்கும் முகம் கொடுக்கும் திருவேங்கடம் என்பதால் இங்கு பரமபதத்தை விட அதிகமாக சிறப்பாக வெளிப்படும் சீல குணமே முக்கியத்துவம் பெறுகிறது. புகல் ஒன்று இல்லா அடியேன் என்று சொல்வதன் மூலம், ப்ரபத்யே என்ற பதமும், அநந்யகதித்வமும் அநன்யார்க சேஷத்வமும், அதிகாரியான எம்பெருமானின் ஸ்வரூபமும் சொல்லப்பட்டுள்ளன. ( அநன்யார்க சேஷத்வம் என்பது அவரைத் தவிர வேறு யாரிடம் அடிமையாக முடியாது என்று சொல்வது, அநந்யகதித்வம் என்பது அவனைத்தவிர வேறு யாரிடமும் சேரும் வழி இல்லை என்று சொல்வது). உன் அடிக்கீழ் என்பதனால், சரநௌ என்ற பதம் சொல்லப்பட்டு, நடுவோர் இடையூறு இல்லாமல் இருக்கும் தன்மை என்று விளக்கப்பட்டது. உலக விஷயங்களில் ஆசையை அகற்றியது முதல், எம்பெருமானிடத்தில் ருசியை ஏற்படுத்தி, அப்படி பிறந்த ருசியையும் நன்றாக வளர்த்து, அடைய வேண்டியதில் உள்ள அத்தனை விரோதிகளை தவிர்த்து, எப்பொழுதும் இந்த உலகத்தில் கைங்கர்யம் செய்து அனுபவிக்க வைக்கும், அழகுமிகு திவ்யமங்கள விக்ரகத்தை இங்கு சொல்கிறார். திருவாய்மொழி முதல் பாடலிலேயே ‘ துயர் அறு சுடர் அடி தொழுது எழு ‘ என்று சொன்ன ஆழ்வார், தாம் எம்பெருமானின் திருவடிகளை பற்றுகின்ற இந்த பதிகத்தில், விடாமல் ஒவ்வொரு பாசுரத்திலும் மண்ணளந்த இணைத்தாமரைகளான திருவடிகளின் சிறப்புகளை பாடியதை மேலே பார்த்தோம். அமர்ந்து என்று சொல்வது, ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்றும் சரணம் வ்ரஜ என்றும் எம்பெருமான் சொல்லும் போது திருவேங்கடமுடையானுடைய திருவடிகளும், தன்னுடைய தலையும், ஆபரணத்தில் கொக்குவாயும் படுகண்ணியும் போலே, இந்த பக்க விளக்கின் வெளிச்சம் அந்த பக்கம் தெரியாதது போலே, ஒன்றுடன் ஒன்று சரியாக பொருந்தி அமைந்துள்ளதை சொல்கிறது. தன்னுடைய சரீரத்தில், தமக்கு அந்தர்யாமியாய் இருக்கும் எம்பெருமானை அறிந்திருந்த ஆழ்வார், புகுந்தேனே என்ற இந்த வார்த்தை சாதாரண இயக்கத்தை சொல்வதல்ல என்கிறார். புகுந்தேனே என்று சொல்வது, அவனுடைய சர்வ ஜகத் காரணத்துவத்தையும், சர்வ ஆத்மபாவத்தையும், சர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து அவனே உபாயம் என்கிற அத்தியாவசியமான ஞானத்தை சொல்கிறது. |
11 | அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்றும் அருள் கொடுக்கும், படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும், பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. (6.10.11) இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் கற்றவர்கள், மஹாகம் என்றும், பிரமாகாசம் என்றும் சொல்லப்படுகிற, பரமபதத்தில், நித்ய கைங்கர்யம் செய்து நன்றாக அனுபவிப்பர் என்று பயன் உரைக்கும் பாசுரம். பட்டர் என்ற ஆச்சாரியார், ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் திருவேங்கடமுடையானுடைய திருக்கையானது அவரது திருவடியை நோக்கி இருப்பதன் காரணம், “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்து அருள் பெறுவீர்” என்று காட்டுவதே ஆகும் என்கிறார். அடியவர்களுக்கு அருளுவதில், ஒப்பில்லாத சர்வேஸ்வரன் என்கிறார். சில ஆசாரியர்கள், தம்முடைய மநோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரமென்று உரைத்தார்கள். நம்பிள்ளை என்ற ஆச்சார்யர், “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த ஆயிரம்“ என்பர். திருவேங்கடத்துக்கு இவை பத்தும் என்று சொன்னது, “வான் திகழும் சோலை, மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்” என்ற திருவாய்மொழி தனியன்படியே ஆயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக ஸங்கல்பிக்கப்பட்டு அதில் இந்த பதிகம், திருவேங்கடத்துக்குப் பகுத்துக் கொடுக்கப்பட்டது. நம்பிள்ளை மேலும், “ஆழ்வார் பண்ணின ப்ரபத்தியே நமக்கு எல்லாம் போதும், தனித்து வேண்டாம் ” என்று இப்பாசுரத்தை சொல்லி அதன் பலனை அனுபவிப்பார். ஆழ்வாரை நினைத்து, இப்பத்தும் கற்றவர்கள் இடத்தும் ஈச்வரன், ஸ்ரீ விபிஷ்ணாழ்வானோடு கூட வந்த நால்வர்க்கும், விபீஷணன் பண்ணின சரணாகதியே அமைந்தார் போல், இவனுடையவன் என்று இந்த பாசுரங்களை கற்றவர்களுக்கும் அருள் புரிவார் என்கிறார். பிடித்தார் பிடித்தார் என்ற இரண்டு முறை சொன்னதை, இரண்டு வகையாக பொருள் கூறுவர், இந்த பாசுரத்தின் சொல்லைப் பற்றினவர்கள் என்றும், பொருளைப் பற்றினவர்கள் என்றும் சொல்வது ஒரு வகை. பிடித்தாரைப் பிடித்தவர்கள் என்று அர்த்தம் கொண்டு, ஸம்பந்த ஸம்பந்திகளைச் சொன்னதாக மற்றொரு வகை. இந்த பாசுரத்தில் குறிப்பிடும் திருவடிகள் எம்பெருமானே தன் திருவடிகளை, “அடிக்கீழ்” என்று குறிப்பிடுவது போல் ஆழ்வார் பாடியுள்ளார். முன்பே சொன்னது போல், எட்டாவது பாடலில் வரும் திருவடிகளை என்று குறிப்பிட்டது, பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் எம்பெருமானின் திருவடிகளை காண விழைவது. மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை வேண்டுகிறார். |
இந்த பதிப்பு கொஞ்சம் நீண்டு விட்டது, மன்னிக்கவும். மீண்டும் ஆழ்வாரின் திருவேங்கடமுடையானின் இன்னொரு அனுபவத்தில் சந்திக்கலாம். நன்றி