A Simple Devotee's Views
பரிமளவல்லி நாச்சியார் ஸமேத பரமபுருஷன் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருப்பிருதி / ஜோஷிமட் | |||
| மூலவர் | பரமபுருஷன் | |||
| உத்ஸவர் | பரமபுருஷன் | |||
| தாயார் | பரிமளவல்லி | |||
| திருக்கோலம் | கிடந்த (புஜங்க சயனம்) | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 10 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
| தொலைபேசி |
வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி.
Google Map
திருப்பிருதி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருப்பிரிதி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
கோவில் பற்றி
ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் இன்று திருப்பிருதி என்று பொதுவான அபிப்பிராயம். ஹரித்துவாரில் இருந்து சுமார் 150 மைல் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6200 அடி உயரத்தில் ஜோஷிர்மட் என்ற இந்த இடத்தைத்தான் 108 திருப்பதிகளில் ஒன்றாக வழிபடுகிறார்கள். பக்தர்கள் மீது எம்பெருமானுக்கு இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப் ப்ரீதி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருப்பிருதி என்று பெயர் மாறியது என்று சொல்வார்கள்.
இமயமலைக்கு உள்ளே வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற அழகுள்ள இடத்தில் அமைந்திருந்தது என்று சொல்பவர்களும் உண்டு. ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஜோஷிமட்டில் தான் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். மேலும் பத்ரிநாத் எம்பெருமானும் இமயமலையின் மிதமிஞ்சிய குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே பத்ரிநாத் கோவிலில் காட்சி அளித்து மீதி சுமார் ஆறு மாத காலம் இந்த ஜோஷிர்மட் கோவிலுக்குத்தான், எழுந்தருளி, ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் இருந்து காட்சி அளிக்கிறார்.
ஆதிசங்கரர் இங்கு (ஜோஷிர்மட்) தான் திவ்யஞானம் பெற்று சங்கரபாஷ்யம் அருளியதாக சொல்வார்கள். இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோஷிர்மட், கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை). இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடையதாகக் கருதப்படும் கல்பதரு ஒன்றையும் இங்கே காண முடியும்.
ஜோஷிர்மட், திருப்பிருதி இல்லை என்று நினைக்க சான்றோர் கூறும் வார்த்தைகள்;
1. திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார். இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிருதியாக இருந்திருந்தால் ஆழ்வார் முதலில் பத்ரியை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் அப்படி இல்லாமல், முதலில் திருப்பிருதியை பாடிவிட்டு, பிறகு பத்ரியை பாடியுள்ளார். ஆழ்வார் முதலில் திருப்பிருதியை தமது திருமொழியில் 1.2 ல் மங்களாசாசனம் செய்து விட்டு பிறகு பத்ரியை 1.3 மற்றும் 1.4 பதிகங்களில் மங்களாசாசனம் செய்கிறார். எனவே ஜோஷி மடமே திருப்பிருதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்.
2. மேலும், பத்ரியை பாடும் போதும், கண்டமெனும் கடிநகர் பற்றி பாடும் போது கங்கைகரையை வெகுவாக குறிப்பிட்ட ஆழ்வார் ஜோஷிர்மட்டினை பாடும் போது கங்கைகரையை பத்து பாடல்களில் ஒன்றில் கூட குறிப்பிடவில்லை. ஆகையால், ஆழ்வார் குறிப்பிடும் திருப்பிருதி, பதிரியைவிட மேலும் உயரத்தில் கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தை விட மேலும் வடக்கே, இமய மலையில் இருந்திருக்க வேண்டும் என்பதும் ஒரு கருத்து,
3. திருப்பிருதியை பற்றி பாடிய ஆழ்வார் அங்குள்ள பயங்கர விலங்குகளையும் யானைகளை விழுங்கும் மலைபாம்புகளையும் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் பத்ரிநாத் பாசுரங்களில் அப்படி ஒன்றும் சொல்லாமல் பாரோர் புகழும் வதிரி என்றும், பயங்கர மிருகங்களைப் பற்றி சொல்லாததாலும், பத்ரிநாத்தில் இருந்து இருபது மைல் தெற்கே திருப்பிருதி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
4. மேலும் ஆழ்வார் பாடல்களுக்கு விளக்கம் அளித்த பெரியவாச்சான்பிள்ளை தெற்கே உள்ள திவ்ய தேசங்களுக்கு எப்படி திருமலை ஒரு எல்லையாக உள்ளதோ அதேபோல் எல்லா திவ்யதேசங்களுக்கும் திருப்பிருதி எல்லையாக உள்ளது என்று சொன்னதால் இந்த திவ்யதேசம் எல்லா திவ்யதேசங்களுக்கும் வடக்கே இருக்க வேண்டும் என்றே கொள்ளவேண்டும்.
5. இங்கு இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ் தீர்த்தம் என்று குறுப்பிடப்பட்டு உள்ளன. புராணங்களும் இதிகாசங்களும் மானஸரோவரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில் வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000 அடி உயரத்தில் உள்ளது. பிரம்மன் தனது ஸங்கல்பத்தாலே முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த ஏரியை படைத்ததால் மானஸரஸ் என பெயர் உண்டானது. இதன்படி பார்த்தாலும், ஜோஷிர்மட், திருப்பிருதியாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. திருமங்கை ஆழ்வாரும் மனசரோவஸ் தீர்த்தத்தை திருவுள்ளத்தில் கொண்டு, தடஞ்சுனைப் பிருதி (பெரியதிருமொழி 1.2.1) என்று இந்த திவ்யதேசத்தின் முதல் பாடலில் சொல்லி இருப்பார் போலும். அதுபோல் ஒரு ஏரி ஜோஷிர்மட்டில் இல்லை என்பது ஓர் தகவல்.
6. “பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணப் பள்ளிகொள் பரமா என்று ,” ( பெரிய திருமொழி 1.2.6) என்று இந்த திருப்பிருதி எம்பெருமானின் திருநாமத்தையும் அவரின் கிடந்த சயனத்தையும் சொல்லி ஆயிரம் தலைகளை கொண்ட அனந்தாழ்வானையும் ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று ஜோஷிமட்டில் எம்பெருமான் இந்த திருக்கோலத்தில் இல்லை. ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரசிங்க பெருமாள் ஆலயமும் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் நாராயணர் ஆலயமும் மட்டுமே உள்ளன.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்தது இந்த திருத்தலம் தான். இங்கிருந்துதான் இவர் தனது பற்பல திவ்யதேச மங்களாசாசனங்களை தொடங்கி தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து வரும் வழியில் உள்ள ஸ்தலங்களில் மங்களாசாசனம் செய்து கொண்டே வந்து தென்னாடு வருகிறார்.
திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.
மீண்டும் இன்னொரு திவ்யதேசத்தை பற்றிய வலைப்பதிவில் சந்திக்கலாம், நன்றி.




எம்பெருமான் கிருபையினால் இந்த ஆண்டு மீண்டும் (2024) ஜோஷி மட் ஆலய தரிசனம் கிடைத்தது. காலை திருமஞ்சனம் (7 மணி அளவில்) நரசிம்மர் திருமஞ்சன தரிசனம் கிடைதத்து. புது கோவில், புது பொலிவுடன் சிறப்பாக உள்ளது. சில புகைபடங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.











