குரங்குகள் மலையை நூக்க

To read this weblog in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

 • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருவரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
 • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
 • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
 • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
 • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
 • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
 • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவத்அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
 • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
 • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
 • சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியின் முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம். கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு என்ற பாசுர விளக்கத்தையும் முன்வலைப்பதிவில் பார்த்தோம்.

இனி அடுத்த பாசுரம்.

பாசுரம் 27

குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டு ஓடி, தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன், மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால், அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே திருமாலை 27

வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால், மலைகளை தள்ளிக்கொண்டு வருவது போலவும், தண்ணீரிலே மூழ்கி, பின்னர் கரையில் உள்ள மணலில் புரண்டு ஓடி, அலைகளுடன் பொங்கும்படியான கடலை, தூர்ப்பதில் ஈடுபட்ட கபடம் அற்ற அணில்களைப்போலவும், தான் இல்லை என்றும், மரங்களைப்போல் கடினமான மனதை உடையவனாய், வஞ்சனையில் ஈடுபட்டுள்ளவனாய் எல்லாவித கைங்கர்யங்களுக்கும் தகுதி வாய்ந்த, பெருமை உடைய, தான் திருவரங்கனுக்கு நெஞ்சார அடிமை செய்யாமல், அனர்த்தப்பட்டு நிற்கிறேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

சென்ற இரண்டு பாசுரங்களில் சொல்லியது போல், மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம்.

குரங்குகள் மலையை நூக்க

குரங்குகள் என்று பன்மையில் சொல்லி, மலை என்று ஒருமையில் சொன்னது, எண்ணிக்கையில் குரங்குகள் அதிகம் என்றும், மலைகள் குறைவாகவும் இருப்பது என்றும் ஒரு மலையை பல குரங்குகள் தள்ளிக் கொண்டு வருகின்றன என்றும் தெரிகிறது. ஒவ்வொரு வானர வீரரும் ஒரு மலையை ஒரு சிறு கல் போல் தூக்கும் சக்தி உடையவர் என்றாலும், மலைகள் குறைவாக இருப்பதால் இராம கைங்கர்யம் செய்யும் ஆசையால் பல குரங்குகள் ஒரு மலையை தொட்டு வருகின்றன என்று உரை ஆசிரியர் கூறுகிறார். மேலும், விலங்குகளுக்கு இத்தகைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வருமா என்று கேட்டுக்கொண்டு, சேவையை ஏற்றுக்கொள்ளும் ஸ்வாமியான ஸ்ரீ ராமபிரான், பொருத்தமான ஸ்வாமி ஆனதாலும், அவர் வில்லும் கையுமாக நிற்கும் நிலையைக் கண்டவுடன், ஞானம் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசம் இல்லாமல் சிறு துரும்பு போன்றவைகளும் கூட கைங்கர்யம் செய்யும் என்று சொல்கிறார்.

மலையை நூக்க

மலையை கடலில் போட என்று சொல்லாமல், நூக்க என்ற சொல்லால், மலையை தள்ளிக்கொண்டு வருவது என்று சொல்வது, முதலில் வரும் மலையை தள்ளிக்கொண்டு வரும் வானரக்கூட்டத்தில் இருந்து அடுத்த வானரக்கூட்டம் மலையைபெற்றுக்கொண்டு அப்படியே அடுத்து வரும் வானரக்கூட்டத்திற்கு கொடுக்க, இப்படி மலையை யாரும் தூக்காமல் கைமாறிமாறி, கடலில் தள்ளி விட்டன என்று கருத்து.

குளித்து

இராமாயணம், யுத்தகாண்டத்தில் (5.9) இராமர், சீதையை நினைத்து தன் உடல் மிகவும் கொதித்து உள்ளதாகவும், தான் அப்படியே சமுத்திரத்தில் சிறிது நேரம் இருந்தால், அந்த ஜுவலிக்கின்ற காமாக்னியானது ஜலத்தில் கூட கஷ்டப்பட்டே தகிக்கும் என்றும், நீரெல்லாம் வற்றி விடும் என்றும் கூறுகிறார். எம்பெருமான் சீதாபிராட்டியின் பிரிவால் வாடுவதை பார்த்த வானரவீரர்கள் எல்லோரும் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு, மிகவும் வேகமாக கடலில் அணைக்கட்டுவதை காட்டுகிறது என்று உரையாசிரியர் சொல்கிறார்.

குளித்து …. அணிலம் போலேன்

இங்கு ஆழ்வார் முதலில் அணிலின் பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.

 • குரங்குகள் மலைகளை தள்ளிக்கொண்டு போவதை பார்த்து, எம்பெருமான் பிராட்டியை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு, அந்த வேகம் போதாது என்று எண்ணின.
 • மலைகளை கடலில் வெறுமே போட்டுவிட்டால், பாலம் கட்டி முடியாது, அவைகளை பூசவேண்டும், ஒரு குரங்கும் அதை செய்யவில்லை;
 • மலைகளை பூச மணல் வேண்டும், அதையும் மலைகளுக்கு நடுவே போடவேண்டும், அவற்றை இந்த குரங்குகள் செய்ய வில்லை.
 • அதனால், அணில்கள் கடலில் மூழ்கி, கரையில் புரண்டு தன்னுடைய உடல்களில் மணலை ஒட்டி மீண்டும் கடலில் உள்ள அந்த மலைகளுக்கு இடையே மீண்டும் கடலில் குளித்தன. (குளித்து)
 • இவ்வாறு அணில்கள் கடலில் உள்ள மலைகளை பூசுவதாக நினைத்தன.
 • இப்படி அடிக்கடி கடலில் முழுவதால் அந்த தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொண்டு போக முடியும், அதனால் கடல் தண்ணீரும் சீக்கிரத்தில் வற்றி விடும் என்று அணை கட்டும் இராம கைங்கர்யத்தில் அணில்கள் ஈடுபட்டன.
 • இவை எவ்வளவு சிறியவை, இதனால் அணை கட்டிமுடிக்கமுடியாது என்று எல்லாம் அணில் நினைக்காமல், இராம கைங்கர்யத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தன.
 • குரங்குகளால் பூச முடியாமல் போன, ராமகாரியத்தை, நம்மால் செய்ய முடிகிறதே என்ற கர்வத்துடன் அணில்கள் ஓடிஓடி சேவை புரிந்தன என்பதை ஆழ்வார் ‘தாம்‘ என்ற வார்த்தையால் சொல்கிறார்.
 • தாம் என்பதற்கு சிறிய மேனி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
 • தண்ணீரில் இவ்வாறு மணலை உதிர்த்து விட்டு, மீண்டும் குளித்து, பின் அதிக மணலை தன்னுடைய உடம்பில் ஓட்டும் என்ற தவறான நம்பிகையால், கடற்கரையில் வெகு தூரம் சென்று உருண்டு, பிரண்டு மீண்டும் கடலுக்கு சென்றன. (புரண்டிட்டோடி )
 • அப்பொழுது அதனை கவனித்த வானரங்கள் ஏன் இவ்வளவு வேகம் என்று கேட்டதற்கு, இராமபிரான் துக்கமாக உள்ளார், மத்திய உணவு இலங்கையின் வடக்கு வாசலில் தான், அதற்குத்தான் இந்த வேகம் என்று சொல்லி, வானரங்களுக்கு வேகம் போதவில்லையே என்று குறைபட்டுக்கொண்டன.
 • இராம காரியத்தில் உள்ள விருப்பத்தால், தம்மால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியமா என்று யோசிக்காமல், அணில்கள் அந்த சேவையை தொடர்ந்தன.
 • அலைகளால் பொங்குகின்ற கடலை அடைப்பதற்கு இந்த சிறிய அணில்கள் முயற்சி செய்தன. (தரங்க நீரை அடைக்கல்)
 • தாங்கள் தான் மேஸ்திரிகள் போல் இருந்து கடலை அடைகின்றோம் என்றும், தங்களுக்கு உதவியாக வானரங்கள் மலையை கொண்டு கடலில் கொட்டுகின்றன என்றும் அணில்கள் நினைக்க தொடங்கின. (உற்ற)
 • அணில்கள் இந்த காரியத்தை கைங்கர்யமாக செய்கின்றவே தவிர, ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை (சலம் இலா அணிலம் )
 • அணில்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவும் கடலை அடைக்க உதவி இல்லாமல் இருக்கும்போது அது எப்படி எம்பெருமான் கைங்கர்யமாக கருதப்படுகிறது என்றால், அவைகளின் எண்ணத்தில் உள்ள சுத்தத்தன்மையே போதுமானது என்று ஆழ்வார் சொல்கிறார். எண்ணம், எம்பெருமான் விரைவில் கடலைகடந்து இலங்காபுரியை அடையவேண்டும் என்பதே.

சலமிலா என்பதை, சலனம் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு, ஆழ்வார், மனிதர்கள் போல், சாஸ்திரங்களால் வசப்படாமல், கைங்கர்யம் செய்ய கை கால்கள் கூட இல்லாமல், குளித்து, ஓடி, புரண்டு, என்று பல செயல்கள் செய்யும் இந்த தாழ்ந்த விலங்குகளிடம் உள்ள நல்ல எண்ணங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை, சென்ற பாசுரத்தாலும் (குளித்து மூன்று) இந்த பாசுரத்தாலும் சொல்கிறார்.

எல்லா விருப்பங்களும், என்றும் நிறைவேற பெற்று இருக்கும், எம்பெருமானுக்கு ஜீவாத்மாக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது இந்த நல்ல எண்ணம் ஒன்றைத்தான். பூர்ணனான எம்பெருமானுக்கு பூர்ணமில்லாத ஜீவாத்மாக்களால் ஒன்றும் செய்து விட முடியாதுதான். அதற்காக அற்ப ஞானமும், அற்ப சக்தியும் உள்ள தான் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்குவது பாக்கியம் இல்லாதவன் செய்வது. பூர்ணனான எம்பெருமானுக்கு ஒரு சிறிது காரியம் செய்தாலும், மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வான் என்று எந்த பிரதிபலனையும் கருதாமல் அவனுக்கு தொண்டு செய்பவர் ஒரு சிலரே. அப்படி செய்யும் அணிலுக்கு உள்ள ஈடுபாடு தனக்கு இல்லையே என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

அணைக்கட்டியதை பற்றிய சில பாசுரங்கள் :

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய், சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து, மலைகொண்டலை நீரணைகட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன், தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 1.5.1)

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து, கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று, தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ, கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. திருமங்கையாழ்வார், (பெரிய திருமொழி, 8.6.4)

மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே ! (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 8.8)

குரை கடலை அடல் அம்பாள் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அர்க்கரோடு இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி 10.7)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய, செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 11)

மரங்கள்போல் வலிய நெஞ்சம்

இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று 17 வது பாசுரத்தில் பாடிய ஆழ்வார், இங்கு மரங்கள் போல் வலிய நெஞ்சம் என்று பாடுகிறார். இரும்பினை தீயில் இட்டு தனக்கு வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும், ஆனால் மரத்தினை தீயில் இட்டால் சாம்பல் ஆகிவிடும் என்று காரணத்தால் ஆழ்வார் தனது நெஞ்சினை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

சலமிலா மரங்கள் போல் என்று ஒரு அர்த்தமும் சொல்லப்படுகிறது. மரத்தை ஆயுதத்தால் அசைத்து விடலாம் என்றும், ஆழ்வார் தன் நெஞ்சம் அதைவிட வலியது, எதனாலும் அசைக்கமுடியாது என்று கொள்ளலாம்.

வஞ்சனேன்

இப்படி கடினமான நெஞ்சம் இருக்கும் போது, பார்க்கிறவர்கள் இவன் நெஞ்சம் எம்பெருமானை நினைத்து இப்படி உருகுகிறதே என்று நினைக்கும்படி நடிக்க வல்லவனாக தான் இருப்பதாக ஆழ்வார் சொல்கிறார். உலகில் உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, எம்பெருமானிடத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல், ஆனால் பார்ப்பவர்கள் இவனைப்போல் உண்டோ என்று மயங்கும்படி உட்கருத்தை மறைத்து வாழ்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார். இறை இறை உருகும் வண்ணம் என்று 17வது பாசுரத்தில் சொன்னது இப்படி வேஷம் போட்டது என்று ஆழ்வார் சொல்கிறார்.

நெஞ்சு தன்னால்

அணில்கள் தங்களுடைய நல்லெண்ணத்தாலே கைங்கர்யம் செய்தது போல், அவர் கொடுத்த நெஞ்சத்தை வைத்து, அருகே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்டு இருக்கலாம் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.

அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே

ஆட்செய்தல் என்றால் அது முழுமையாக பரிபூர்ணமாக செய்வதாகும், மேலே சொன்னது போல், கொஞ்சம் ஈடுபாடு இருந்தால், அது ஆட்செய்தல் என்று ஆகாது. அணில்களின் நல்ல எண்ணத்தையே கைங்கர்யமாக திருவுள்ளம் கொள்ளும் எம்பெருமானைக் கருத்தில் கொண்டால் அவன் அந்த கொஞ்சத்தையே முழுமையாகக்கொள்வான் என்று ஆழ்வார் சொல்கிறார்.

அளியத்தேன்

இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31-25), சீதையும், இராமனும் மலை சரிவுகளில் ரம்யமாக பயணம் செய்யும் போதும் மற்றும், அவர்கள் உறங்கும் போதும், முழித்துக்கொண்டு இருக்கும் போதும் அவர்களுக்குத் தேவையான எல்லாவித சேவைகளையும் செய்வேன் சென்று லக்ஷ்மணன் கூறியது போல், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வடிவில்லா அடிமை செய்ய வேண்டியதற்காக பிறந்த ஆத்மா அல்லவோ, என்று ஆழ்வார் தன்னுடைய ஆத்மாவை எண்ணி அது வீணாகிவிட்டதே என்று கவலைப் படுகிறார்.

அயர்க்கின்றேனே

இப்படி தன்னுடைய ஆத்மா வீணாகி விட்டதே என்பதற்கான காரணம், தான் எம்பெருமானை மறந்ததுதான் என்றும், தகுதி இல்லாதால் அல்ல என்றும் சொல்கிறார். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (6.2.2), மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின் மனத்தால், இறந்தேன் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

ஆழ்வார் தன்னுடைய வர்ணாசிரம தர்மத்திற்கு தகுந்த, கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, என்று இந்த பகுதியின் முதல் பாடலிலும், இரண்டாம் பாடலில், தான் எந்த மனிதன் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்வதில்லை என்றும் இப்போது மூன்றாம் பாடலில் குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்கள் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல, ஆழ்வார் எதுவும் செய்தது இல்லை என்று நைச்சானுசந்தானத்தை தொடர்கிறார்.

இனி மீண்டும் அடுத்த பாசுரத்தில் பார்க்கலாம், நன்றி.

065 திருஅயோத்தி Thiru Ayodhi

ஸீதா ஸமேத சக்கரவர்த்தி திருமகனார் திருவடிகள் போற்றி போற்றி

வடநாட்டு திருப்பதிகள் – முன்னுரை

இன்று தமிழகம் என்று சொல்கின்ற பகுதிக்கு வடக்கு பக்கம் தான் விபவத்தில் அமைந்த அத்தனை அவதாரங்களும் நிகழ்ந்தது. ஆனால் வட இந்தியாவில் காலச் சூழ்நிலைகளாலும், அன்னியர் வருகையாலும், அடிக்கடி நிகழ்ந்த யுத்தங்களாலும், படையெடுப்புகளாலும், திருத்தலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கூம்பு வடிவமைந்த கோபுரங்களும், சிறிய அளவிலான மூலஸ்தானங்களும் தமிழகத்தில் நாம் கண்டு களிக்கும் அர்ச்சாவதார மூர்த்திகளின்றும் வித்தியாசமான வடிவில் அமைந்த மூர்த்திகளோடு இத்தலங்கள் திகழ்கின்றன.

இந்த வடநாட்டுப் எம்பெருமான்கள், வேதங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும், புராண இதிகாசங்களுக்கும் மத்தியில் புகழில் மண்டிக் கிடக்கின்றார்கள். தமிழ் மொழி தவிர்ந்த மற்ற மொழி கவிகளின் வார்த்தைகளிலும் பிரகாசித்து இருக்கிறார்கள். வால்மீகி, வியாசர், துளசிதாசர், காளிதாசன் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டு போகும். அதே போல், புண்ணியங்கள் நிறைந்த புகழ் மலிந்த கங்கை, யமுனை, சரஸ்வதி, கோமதி, பிரம்மபுத்திரா, அளகநந்தா ப்ராயாகை, சரயு என்னும் பல புண்ணிய தீர்த்தங்களையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. ஸ்தலவரலாறுகளுக்கும் குறைவில்லை, காலம் காலமாக, யுகம் யுகமாக நீண்டுகொண்டே இருக்கும்.

திருப்பாற்கடல், சாளக்கிராமம், துவாரகா, திருபிரிதி போன்ற திவ்யதேசங்கள் இருந்த இடம், இன்று இருக்கும் இடம் பற்றியும் நிறைய தொடர் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூர்த்திகள் சில ஸ்தலங்களில் இல்லை.  சிலவற்றை பிரதேச அளவில் மங்களாசாசனம் செய்து உள்ளார்கள். அதாவது கோகுலம் என்றும், பிருந்தாவனம் என்றும், அயோத்தி என்றும்
சரித்திர நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடம் முழுமையும் பாடி பரவசம் அடைந்துள்ளார்கள்.
பனி மூடிய சிகரங்களுக்கிடையே பளிச்சென மின்னும் திவ்ய தேசமும் உண்டு. வேத, இதிகாச, புராண ஸ்மிருதிகளோடு, தர்மம், ஞானம், யாகம் என்ற கோட்பாடுகள் சூழ திகழும் திவ்யதேசங்களாகும்.

ஓம் என்பது, அ உ ம என்பதின் சேர்க்கை என்பது ஒரு புறமும், வியூக வாசுதேவன், பிரத்யும்ன, சங்கர்ஷண, அநிருத்த என்று தன்னையும் சேர்த்து நான்காக பிரிந்ததை இன்னொரு புறமாகவும் கொண்டு, சரஸ்வதி, யமுனை, கங்கா என்ற புண்ணிய நதிகளை இன்னொரு புறமும் கொண்டு அவற்றை எல்லாம் இணைக்கும் அவதார ரகசியங்களை விளக்கும் சாஸ்திரங்களுக்கு பிரிதிநிதியாக இந்த திவ்யதேசங்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

துவாரகா என்ற திவ்யதேசமும் பஞ்ச துவாரகா என்ற பெயரில் ஐந்து வெவ்வேறு இடங்களில் பரந்து பக்தர்களை பரவசப்படுத்துவதும், நரனாக, தீர்த்தமாக, வனமாக, சங்கமித்துக் கொண்ட நதிகளின் அரவணைப்பில், வேதம், பரமபதத்திலிருந்து எம்பெருமான் தன்னை வ்யூக நிலைக்கு எழுந்தருளப் பண்ணியதை விவரிக்கும் இத்தலங்கள், சில ஆழ்வார்களால் பாடப்பட்டவை, சில புஷ்கர், கயா, குருஷேத்திரம், சித்திரகூடம், பஞ்சவடி, போன்ற அபிமான ஸ்தலங்கள்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட வடநாட்டுத் திருப்பதிகள் 11.  அவை, திருஅயோத்தி, திருநைமிசாரண்யம், திருப்பிரிதி, திருகண்டமென்னும்கடிநகர், திருப்பத்ரிகாச்ரமம், திருசாளக்ராமம், திருவடமதுரை (கோவர்த்தனம் பிருந்தாவனம் சேர்ந்தது), திருஆய்ப்பாடி, திருதுவாரகை, திருசிங்கவேள்குன்றம், திருவேங்கடம்.

Thanks Google Map
திவ்யதேசம்திருஅயோத்தியா
மூலவர்ஸ்ரீ இராமன், சக்ரவர்த்தி திருமகன், ரகு நாயகன்
உத்ஸவர்ஸ்ரீராமன்
தாயார்ஸீதாப்பிராட்டி
திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம்
திசைவடக்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்பெரியாழ்வார் 6
குலசேகராழ்வார் 4
நம்மாழ்வார் 1
தொண்டரடிபொடியாழ்வார் 1

திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி
தீர்த்தம் பரமபத சத்ய புஷ்கரணி சரயு நதி
விமானம் புஷ்கல விமானம்

சக்ரவர்த்தி திருமகன்

இராமன், சித்திரை மாதத்தில், வளர்பிறை நவமி அன்று, புனர்வசு கூடிய நக்ஷத்திரத்தில் கடக லக்கினத்தில் அவதரித்தான். இராமனின் அவதார தினத்தை ஒரு விரதமாகவே கொண்டாடும் படி நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம் ஸம்ப்ரதாயத்தில் இராமனை சக்ரவர்த்தி திருமகன் என்று அழைப்பது வழக்கம்.

இராமன் பற்றி சொல்லி முடிக்க முடியாது என்பது உண்மை. இருந்தாலும், ஒரு சில வரிகள் இராமன் பற்றி பிறர் சொல்லியது.

மண்டோதரி, இராவணன் மனைவி.  ராமனைப் பற்றி கூறுகிறாள். ரகு வம்ச மணி ராமன், விஸ்வரூபன். அவனுடைய ஒவ்வோர் அங்கத்திலும் லோகங்கள் இருக்கிறது. பாதாளம் அவரது பாதங்கள். பிரம்மலோகம் அவரது சிரசு. சூரிய சந்திரர்கள் அவனது கண்கள். மேகம் அவனது கேசம். அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி. அவர் இமைப்பதே இரவு பகல். பத்து திசைகளும் அவனது செவி. அவனது நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது, என்று வேதம் ஒலிக்கிறது. எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவர் மீது கொண்ட பகைமையை விடுக என்று ராவணனிடம் அவனது மனைவி மண்டோதரி மன்றாடுகிறாள்.

வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்கிறார். த்வம் அப்ரமேயஶ்ச, துராஸதஶ்ச, ஜிதேந்த்ரியஶ்ச, உத்தம தார்மிகஶ்ச. அக்ஷய்யகீர்திஶ்ச விசக்ஷணஶ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் ‘நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

இராவணனின் நண்பன் மாரீசன் இராமனின் பெயரை கேட்டவுடன், தன்னுடைய வாய் உலர்ந்து, மிகவும் கவலையுற்று, உலர்ந்த தன் உதட்டினை ஈரப்படுத்திக் கொண்டு, உயிரற்றவனின் கண்கள் இமைக்காது இருப்பதுபோல் இராவணனை பார்த்தான். ராமனின் வீரத்தை நேரில் பார்த்ததால் மாரீசன், கரம் கூப்பி இராவணனிடம் தங்கள் இருவருடைய நன்மைக்காக சொன்னது. இராமனின் வீரத்தை நேரில் பார்த்த ஒற்றன் ஒருவனையும், இராவணன் நியமிக்கவில்லை என்றும், ராமனுக்கு கோபம் வந்தால் இந்த உலகத்தில் ஒரு ராக்ஷசன் கூட இல்லாமல் செய்துவிடுவார் என்றும், சீதை இராவணனுடைய உயிரைக் குடிப்பதற்காக பிறக்கவில்லை என்று தான் நம்புவதாகவும், ராமன் தர்மத்தை விட்டு ஒரு சிறிதும் பிசகாதவன் என்றும், ராமன் உண்மைக்கு இலக்கணம் என்றும், இராமன் புலன்களை அடக்கியவன் என்றும், இராமனிடம் சண்டைக்கு செல்வது இராவணனுக்கு உசிதம் இல்லை என்றும் ஒரு சர்க்கம் முழுவதும் உபதேசம் செய்கிறான்.

இராமனை புகழ்ந்து மேலே கொடுத்துள்ள வார்த்தைகளை சொன்ன மூவருமே, இராமனுக்கு எதிரிகள்.

இராம நாம மஹிமை

அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமனால், அவனது திருநாமம், உலகம் முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி சொல்லி முடித்து விட முடியாது. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டு எரிக்க வல்லது. லவ குசர்கள், இராமாயணம் பாடும் போது இராமனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, அனுமன் சொன்னதால், சீதைக்கு உயிரை தக்க வைத்தது. அனுமன் சொன்னதால், பரதனுக்கு உயிரை மீட்டுக்குக் கொடுத்தது. ம்ருத சஞ்சீவனம் ராம நாமம் – போகிற உயிரை மீட்டுக் கொடுக்கும்.

திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள். ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள், அழியா மகத்துவம் உடையவை.

ராம நாமத்தை உலகிற்குக் கொடுத்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்பும் ஆகும். அது அயோத்தியில் தொடங்கி, கோசல நாட்டில் வளர்ந்து, இந்தியா எங்கும் பரவி, இன்று உலகளவில் பெரிதும் பேசப்படும் நாமமாக உள்ளது. இராமாயணம், அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட / எழுதப்பட்ட சரித்திரமாக இன்று உள்ளது.

கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் சூரிய குல  இக்ஷ்வாகு மன்னரின் வழித்தோன்றல்கள் எனப்படுகின்றனர். இக்ஷ்வாகு குலத்தின் புகழ் பெற்றவர்களாக பகீரதன்,  தசரதன்  மற்றும் இராமன்  கருதப்படுகிறார்கள்.

கம்பர், ராமநாமத்தின் மகிமையை, “ நன்மையும், செல்வமும் நாளும் பெருகுமே, தின்மையும், பாவமும் சிதைந்து தேயுமே, சென்மமும், மரணமும் இன்றித் தீருமே, இம்மையே ராமாவென்ற இரண்டு எழுத்தினால்” என்றும், “நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம், விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும், நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே” என்றும் கூறுகிறார். பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராம ஜெயம்”  அல்லது  “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும்,  ஞானம் பெருகும்,  பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்,  வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.

இத்திருத்தலம் பற்றி

சிற்றன்னையின் சொல் காரணமாக தந்தை தயரதன் ஆணையை சிரமேற்கொண்டு கானகம் அடைந்த ஸ்ரீராமனே, ஞானம் அற்றவர்கட்கு அருமருந்தாய் திகழும் அயோத்தி நகருக்கு அதிபதியே, என்று குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் திருத்தலம் வட இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்து உள்ளது. எங்கு நோக்கினும் ராம, சீதா பிராட்டியின் கோவில்களும், ஆஞ்சநேயர் கோவில்களும், ராம பஜனையும் ராம பக்தர்களுமாகத் திகழ ஒரே ராம மயமாகத் திகழ்கிறது இந்த ராம ஜென்ம பூமி.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்யா என்ற சொல்லுக்கு எதிர்த்து வெற்றி பெற முடியாதது என்று சொல்வார்கள். அதாவது தோல்வியே இல்லாத ஊர்.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

அயோத்தி, சரயு நதியின் தெற்கு கரைக்கும் தமஸா நதியின் வடக்கு கரைக்கும் இடையில் அமைந்து உள்ளது. பண்டைய கோசல நாட்டின் தலைநகர் ஆகும். சரயு நதிக்கரையில் கோ (பசு) தானம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. சரயு நதியின் மூலம் தான் முதலில் ஸ்ரீ லக்ஷ்மணனும் பின்னர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும் பரமபதம் அடைந்தார்கள் என்றும், அவனைத் தொடர்ந்த மக்கள், மரம், செடி, கொடி, விலங்கு என எல்லா ஜீவராசிகளும் பரமபதத்தை கொடுத்தான் என்றும் வரலாறு கூறுகிறது.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்

இராம ஜென்ம பூமி, இது இராமர் அவதரித்த இடம். வாழ்ந்த இடம். பல வரலாறுகளை சுமந்து கொண்டு உள்ள இடம். கூடிய விரைவில் மிக பெரிய இராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற இடம். இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடம்.

அநுமான்கார்ஹி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. 76 படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் அழகிய சிலைகளையும் கொண்டு கம்பீரத்தோறறத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. ஆஞ்சேநேயரின் பெரிய திருவுருவ சிலையைத்தவிர, அவருக்கும், அவரது தாயார் அஞ்சனாதேவிக்கும் இங்கே சிலைகள் உண்டு. இங்கு போகும் வழியில் நிறைய கடைகள், அங்கு விற்கப்படும் பிரசாதங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி, ஆஞ்சேநேயர்க்கு சமர்பிக்கிறார்கள். இந்த ஆலயத்தின் சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் பக்தர்கள் ராமாயணம் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு தான் ஹனுமான் வாழ்ந்துகொண்டு எல்லோரையும் காத்துகொண்டு இருப்பதாக நம்பிக்கை. இராம ஜென்ம பூமிக்கு போவதற்கு முன் இவரை தரிசித்துவிட்டு செல்வது வழக்கம்.

இங்கு அமைந்துள்ள கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதையின் இடம் ஆகும், கைகேயி அவர்களுக்கு உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

வால்மீகி பவன், இது ஒரு அருமையான இடம். இங்கு வால்மீகி, லவ குசர்களுடன் காட்சி அளிக்கிறார். இது வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்ட பார்க்க வேண்டிய இடம் ஆகும். வால்மீகி ராமாயணத்தின் 24,000 ஸ்லோகங்களும் இங்கே பொறிக்கப்பட்டு உள்ளன.

சீதா பவன், இது சீதை சமையல் செய்த இடமாக கருதப்படுகிறது. இங்கு இரண்டு சமையல் அறைகள் உண்டு, கீழ்த்தளத்தில் உள்ளது சீதா தேவியின் சமையல் செய்யும் இடம் என்றும் அங்கு சில பாத்திரகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கே, ராமர், சீதை, பரதன் மாண்டவி, லக்ஷ்மணன், ஊர்மிளா, சத்ருக்னன் ஸ்ருதகீர்த்தி என்று அவரவர் மனைவியுடன் தரிசனம் செய்யும் கோயிலாகவும் உள்ளது. சீதாவை அன்னபூரணி என்றும், இது அவருடைய கோவில் என்றும் சொல்வதுண்டு.

தசரத பவன், என்பது தசரதனின் அரண்மனை, இராமன் வளர்ந்த இடம், பெரிய அரண்மனை, தசரத மஹால் என்றும் சொல்லப்படும்.

சரயு நதி இமயமலையில் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது. அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காக்ரா என்னும் நதி கலக்கிறது. சரயு நதியில் உள்ள ராம்காட் என்னுமிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம். மேலும் குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய படித்துறைகள் ஆகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுக்கு வரும் போது, ராமன் சரயு நதிக்கு வந்து, தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது. ராமன் தனது சரீரத்தைக் களைந்த சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு தென்னிந்திய பாணி கோவில் உள்ளது. தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ளது. இராமன் சந்நிதியில், ராமன், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன், அனுமன், மற்றும் கருடன் என்று எல்லோரும் சேர்ந்து தரிசனம் தருகின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் மணவாளமாமுனிகள் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

இராமாயணத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். ஸ்ரீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

ஸ்தல வரலாறு

புராணங்கள், எண்ணற்ற இலக்கியங்கள், கணக்கில் அடங்கா நூல்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த அயோத்தி விரிவாக சொல்லப்பட்டு உள்ளது. மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று சொல்லப் படுகிறது. வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம் இடம் பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்பு மனுவுக்கு, ஸ்ரீமந்நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும் பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென் கரையில் ஸ்தாபித்தார் என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. மனு விஸ்வகர்மாவைக்கொண்டு அதை பெரிய நகரமாக மாற்ற, எம்பெருமான் வசிஷ்டரை அங்கேயே வாசம் செய்ய அனுப்பி வைத்தான்.

தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன் வைகுந்தத்தை முதலிலேயே இங்கு கொண்டு வைத்து விட்டார் போலும்.

பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன் பூவுலகிற்கு வந்து முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான். திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார்.

இக்ஷ்வாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இக்ஷ்வாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி கொண்டது.

அயோத்தியில் பார்க்க வேண்டிய இடங்கள்

 1. ராம ஜென்ம பூமி, இதற்கு வடக்கே பரதன் அவதரித்த இடமும், ராமஜென்ம பூமியின் கிழக்கே லக்ஷ்மண, சத்ருகுண ஜென்மபூமிகளும் உள்ளன.
 2. ஹனுமான் கடி
 3. சரயு நதி (ராம் காட், லக்ஷ்மண் காட், குப்தார் காட்) லக்ஷ்மண் காட், இங்கிருந்து தான் லக்ஷ்மணன் தன்னுடைய அவதார முடிவின் போது தன்னுடைய சுய ரூபமான ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷனாக மாறி பரமபதம் அடைந்தான். அதனால் இது சஹஸ்ராதார தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். குப்த காட் என்ற இடத்தில இருந்து தான் ராமன் பரமபத்திற்கு எழுந்து அருளினான்.
 4. வால்மீகி பவன்
 5. தசரத பவன்
 6. அம்மாஜி மந்திர் தெற்கு பக்க கோவில்போல் அமைப்பும், பூஜைகளும்
 7. கனகபவனம் என்று அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கைகேயியின் அரண்மனை – இராமன் சீதை அந்தப்புரம்
 8. லகட்மண்டி / பரத் பவன் என்று தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம்
 9. வசிஷ்ட ஆஸ்ரமம்
 10. பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும் வரை காத்திருந்து நாட்டை ஆண்ட நந்திகிராமம் (இது அயோத்தியிலிருந்து சுமார் 20 மைல்)

இராமாயணம் பற்றி இன்னும் சில இடங்கள்

 1. பிட்டூர் – இது கான்பூருக்கு அருகில் உள்ளது, வால்மீகி ஆஸ்ரமம் உள்ளது. லவ குசர் பிறந்த இடம். துருவன் தவம் செய்த இடம்.
 2. ப்ரயாக்ராஜ் அருகில், ஶ்ருங்கிபேரபுரம் என்று குகன் ராமனை சந்தித்து கங்கையை கடந்த இடம், குகன் மந்திர்
 3. ப்ரயாக்ராஜ் நகரில் பரத்வாஜமுனிவரின் ஆஸ்ரமம், த்ரிவேணி சங்கமம்
 4. சீதாமர்ஹி (பிஹார்) – சீதா அவதரித்த இடம்
 5. பஸ்ர் பிஹார் – தாடகா வனம், வதம், யாக சம்ரக்ஷணம், வைகுந்தநாதர் கோவில் . வாமன அவதார ஸ்தலம் (தற்போது, பிஹார் ஜெயில்)
 6. ஜனக்புரி (நேபாளம்) – தனுஷாதம், ஜனகபவன்
 7. சித்திரகூட் – மந்தாகினி ஆறு, ராமன் காட், துளசிதாசர் பவன்

அயோத்தியா யாத்ரா பலன்கள்

ஒருவர் அயோத்திக்கு போக எண்ணினாலும், போகும்படி சொன்னாலும், போகிறவர்களுக்கு ஏதாவது உதவி செய்தாலும், அவர்களுக்கு அச்வமேத யாக பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. அயோத்தி செல்பவர்களுக்கு ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் தொலையும். அயோத்தி செல்ல தொடங்கி, பிறகு தடைகள் ஏற்பட்டு செல்ல முடியாவிட்டாலும், அஸ்வமேத யாக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சரயு நதியில் நின்று இராமனை நினைத்தால், அவர்களுக்கு ஒரு குறையும் இராது என்று சரயு நதியே, தசரதனிடம் கூறியதாக பார்வதி தேவிக்கு பரமசிவன் கூறியுள்ளார். சரயு நதி, வசிஷ்டரின் வேண்டுதலால் ஸ்ரீமன் நாராயணானால் அனுப்பப்பட்ட மானஸ சரஸ். ப்ரம்மா ஸ்ரீமன் நாராயணனை ஸ்தோஸ்திரம் செய்யும் போது, எம்பெருமானின் கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீரை பிரம்மன் குளம் போல் சேர்த்து வைத்ததே மானஸ சரஸ்.

சரயூநதியின் குப்தா காட்டில், சவரம் செய்து இராமனை வழிபடுவர்களுக்கு சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

சீதையின் சமையல் அறையை பார்த்ததினால், பரசுராமர் க்ஷத்திரிய வத பாவத்தில் இருந்து விடுபட்டார் என்றும், பலராமர், சூதவத பாவத்தில் இருந்து விடுபட்டார் என்றும் சொல்லப்டுகிறது. இந்த இரண்டு சரித்திரங்களை சீதை வாழ்ந்த காலத்திற்கு பிறகு என்று தெரிகிறது.

அயோத்தியில் ஹனுமனை பூஜிப்பவர்களுக்கு ஒரு குறையும் வராது என்று சொல்லப்படுகிறது.

ஆழ்வார்கள்

பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் 13 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். அயோத்தி நகரத்தையே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளதால் இங்குள்ள அனைத்து வைணவத் தலங்களும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகவே கொள்ளலாம். குலசேகராழ்வார் ராமாயணம் முழுவதையும் 10 பாடல்களால் ராமாயண காவியத்தையும் மங்களாசாசனம் செய்துவிட்டார்.

நன்றி whatsapp group நண்பர்கள் மற்றும் dinamalardaily

Google Map

திருஅயோத்யா பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅயோத்யா பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

கம்ப ராமாயணத்தில் அயோத்தி பற்றிய சில பாடல்களை தொகுத்து வழங்கிய நண்பர் சுவாமிநாதனுக்கு நன்றி

பெரியாழ்வார்

பெரியாழ்வார் : ஒரு தொகுப்பில், அனுமான் தன்னை எப்படி, லங்காவில் உள்ள அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் அடையாளம் காட்டிக் கொண்டார் (3.10) என்றும், ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த குண நலன்களை மற்றொரு தொகுப்பிலும் (3.9) பாடி உள்ளார்.

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன், அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.6) இங்கு பரதன் இராமனை பிரிந்து வாடும் மனநிலையை, அந்த குணநலனை ஆழ்வாரை படியில் குணத்துப் பரத நம்பி என்று புகழ்கிறார்.

தார்க்கு இளந் தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற  அயோத்திக்கு அரசனைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.8) இங்கு பரதனுக்கு அரசை ஈன்றதையும், சூர்ப்பனகையின் செவி, மூக்கு அறுத்த வரலாற்றினை இராமனின் சிறப்பாக கூறியுள்ளார்.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு, ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா, அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த, ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.10) . இங்கு சமுத்திரத்தில் பாலம் கட்டியதையும், இராவணனை வென்றதையும், விபீஷணனுக்கு அரசு ஈந்ததையும் அளித்த இராமனின் சிறப்புகளை சொல்கிறார்.

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம், தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓர் அடையாளம் (பெரியாழ்வார் திருமொழி 3.10.4) இங்கு, அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் இராமபிரான் குஹனுடன் ஸ்நேஹம் செய்து கொண்ட வரலாற்றை அனுமன் ஒரு அடையாளமாக சொன்னதை, தெரிவிக்கின்றார்.

மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாள இவை மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே. (பெரியாழ்வார் திருமொழி 3.10.8) இங்கு அனுமன், சீதையிடம் இராமன் தன்னுடைய திருக்கரத்தில் அணிந்து கொள்ளும் மோதிரமாகும் என்று சொல்லி கொடுத்ததை ஒரு அடையாளமாக பாடுகிறார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி, இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை, தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே. (பெரியாழ்வார் திருமொழி 4.7.9) இது கண்டம் எனும் கடி நகர் என்ற திவ்யதேச எம்பெருமானை பாடும் போது ஆழ்வார், வைகுந்தம், துவாரகை, அயோத்தி, பத்ரிகாச்ரமம் இடங்களில் வாசம் செய்யும் எம்பெருமானையும், பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது இறங்குகின்ற வேகத்தையும் சொல்கின்றார்.  

குலசேகராழ்வார்

குலசேகராழ்வாருக்கு ராமச்சந்திரமூர்த்தியின் மேல் இருந்த அபரிமிதமான அன்பினால், அவரை குலசேகரப்பெருமாள் என்று குறிப்பிடுவர். குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தத்தை பாடி உள்ளார். நம் சம்பிரதாயத்தில், பெருமாள் என்றால், அது ஸ்ரீராமனை குறிக்கும். (பெரியபெருமாள் என்றால் திருவரங்கனைக் குறிக்கும்). பெருமாள் திருமொழியில், 105 பாசுரங்கள், 10 பதிகங்களாக உள்ளன. இதில் மூன்று பதிகங்களில், இராமாயணத்தின் காட்சிகளை தனக்கே உரிய தனித்துவத்துடன் சொல்லி உள்ளார். எட்டாவது பதிகத்தில், கோசலை இராமனை தாலாட்டு பாடுவதையும், ஒன்பதாவது பதிகத்தில், இராமனை பிரியும் தசரதனின் புலம்பல்களையும், பத்தாவது பதிகத்தில், இராமாயணத்தை முழுமையாக தில்லைநகர் திருச்சித்திரகூடம் கோவிந்தராஜ பெருமாளை அருகில் வைத்துக்கொண்டு சொல்லியுள்ளார்.

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!, அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!சிற்றவை தன் சொற் கொண்ட சீராமா! தாலேலோ! (பெருமாள் திருமொழி 8.6) என்ற பாடலில், எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்கிறார்.  அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராக இருந்ததை குறிப்பிடுவது அல்ல, அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும்.

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே, வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே, காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (பெருமாள் திருமொழி 8.7) இங்கு அயோத்தி நகர்க்கு அரசனே!, ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார்.

அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி, வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை செங்கண் நெடும் கருமுகிலை இராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச் சித்ர கூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே. ((பெருமாள் திருமொழி 10.1) இங்கு, அயோத்தியின் புகழை ஆழ்வார், அழகிய இடத்தையுடையதும், உயர்ந்த மதில்களினால் நாற்புறமும் சூழப்பட்டதும் அயோத்யா என்று ப்ரஸித்தமுமான அழகிய நகரம் என்று குறிப்பிட்டு, ஸகல லோகங்களையும் விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே தேவர்களெல்லாரையும் துன்பம் தீர்ந்து வாழச்செய்த இராமபிரான் என்கிறார்.

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெருந் தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச் சித்ர கூடந் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதை மதியோம் இன்றே (பெருமாள் திருமொழி 10.8). இங்கும் அயோத்தியின் பெருமையை அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு அமைக்கப்பட்ட உப்பரிகை வீடுகளையுடைய அயோத்தி என்று கூறுகிறார். ஆராவமுதமாக உள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும், அதேபோல் உள்ள அந்த எம்பெருமானின் சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை சிறிதும் ஈடாகாது என்பதை இன் அமுதை மதியோம் என்கிறார். லவ குசர் இராமாயணத்தை சொல்லக்கேட்டு அதனால் உலகத்தை நன்னெறியில் செலுத்தினார்கள் என்றும், இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிது ஆண்டு வந்ததால், உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.

தொண்டரடிபொடியாழ்வார்

தொண்டரடிபொடியாழ்வார் எம்பெருமானை திருப்பள்ளியெழுச்சி செய்யும் பிரபந்தத்தில், அயோத்தியாவை அரசுசெய்வதால், எங்களுக்கு ஸ்வாமியானவனே! என்று சொல்கிறார்.

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள், வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும், ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள், இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை, வாட்டிய வரிசிலை வானவர் ஏறே, மாமுனி வேள்வியைக் காத்து அவ பிரதம். ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே, அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. (திருப்பள்ளியெழுச்சி 4)

திருமங்கையாழ்வார்

திருமங்கை ஆழ்வார், யானைகளும் குதிரைகளும் தேர்களுமாகிய சேனை ஆகிய எல்லாவற்றோடும் அரக்கர் தொலையுமாறு கொன்று, வெற்றி பெற்ற அந்த சக்ரவர்த்தி திருமகன் கண்டு மகிழும்படியாகக் குழமணிதூர கூத்து ஆட எங்களோடே வந்து கூடுங்கள் என்கிறார்.

கவள யானை பாய் புரவித் தேரோட அரக்கர் எல்லாம், துவள, வென்ற வென்றியாளன், தன் தமர் கொல்லாமே தவள மாடம் நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே. (பெரியதிருமொழி 10.3.8)

நம்மாழ்வார்

நம்மாழ்வார் இங்கு இராம பிரானுடைய ஒரு விசேஷமான தன்மையை / குணத்தை அருளிச் செய்கிறார். இராமன் காட்டுக்கு சென்றபோது, அயோத்தியில் உள்ள உயிருள்ள, உயிரற்ற எல்லாம் துக்கத்தால் பிடிக்கப்பட்டன. அதாவது துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி உலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் காலடி வைக்க முடியாதபடி, கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்கள் என்ற பிரிவின்றி அவையெல்லாம் பசுமையை இழந்து இலையுலர்ந்து அழகு அழியும்படி ஆயின என்றும், பதினாலாண்டுகள் கடந்த பிறகு மீண்டும் அவன் திருஅயோத்திக்கு எழுந்தருளிய போது, அவை துயரம் நீங்கி, மீண்டும் செழிப்புற்று மகிழ்ச்சி அடைந்தன என்றும் சொல்லி, இராமபிரானின் பிரிவும் அருகாமையும் உயிரற்ற பொருள்களுக்கும் உயிருள்ளவை போல், பிரிவில் துக்கத்தையும் சேரும்போது மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கக்கூடிய தன்மையை உடைய இந்த பாடலில் காணலாம். இம் மஹாகுணத்தை உடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை ஆழ்வார் அனுபவிக்கிறார். நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே என்று சொன்னதற்கு, தான் பரமபதம் செல்லும் போது எல்லாவற்றையும் அழைத்து சென்றான் என்று ஒரு பொருள் கொண்டாலும், அயோத்தியில் அவன் ஆட்சி செய்யும் போதே அங்கேயே அவர்கள் எல்லோரையும் நல்ல சுபாவங்களை கொண்டு இருக்கும்படி செய்தான் என்றும் கொள்ளலாம்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?, புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே. (திருவாய்மொழி, 7.5.1)

வார்த்தை இராமாயணம் ( நன்றி whatsapp group நண்பர்கள்)

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

விளக்கம்:

 1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
 2. வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
 3. கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
 4. பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
 5. மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
 6. சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
 7. துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
 8. நெகிழ்ந்தார்:
  *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
  *குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
  *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
  *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
  *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
  *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
  *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
  *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
 9. இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
 10. அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.
 11. அழித்தார்: இலங்கையை அழித்தது.
 12. செழித்தார்: *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது ; *ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
 13. துறந்தார்: அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
 14. துவண்டார்: அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
 15. ஆண்டார்: என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
 16. மீண்டார்: பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

ஜெய் ஸ்ரீராம்.

064 திருக்கடிகை Thirukadigai

ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோகநரஸிம்ஹ சுவாமி திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கடிகை, சோளிங்கர், சோளசிங்கபுரம், சோளங்கிபுரம், கடிகாசலம்
பெரிய மலைமூலவர்யோக நரசிம்மர் (அக்காரக் கனி)
உத்ஸவர் இங்கே இல்லை (கீழ்க்கோவிலில் இருக்கிறார்)
தாயார் அம்ருதவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசை கிழக்கே திருமுகமண்டலம்
சிறிய மலைமூலவர்யோக ஆஞ்சநேயர் (நான்கு திருக்கரங்களுடன், கையில் சங்கு சக்கரத்துடன் )
மற்ற சன்னதிகள்ரங்கநாதன்,சக்ரவர்த்தி திருமகன்
கீழேயுள்ள
கோவில்
மூலவர்இங்கே இல்லை (பெரியமலையில் உள்ளார்)
உத்ஸவர்பக்தவத்சலப்பெருமாள், தக்கான், பக்தோசித ஸ்வாமிஆதிகேசவப்பெருமாள் (பின்புறம் உள்ளார், சில சமயங்களில் தரிசனம் கிடைக்கும்)
தாயார் சுதாவல்லி நாச்சியார் , அம்ருதவல்லி
மற்ற சன்னதிகள்ஆண்டாள், ஆழ்வார், ஆச்சார்யர்கள், எறும்பியப்பா, தொட்டாச்சாரியார்
பாசுரங்கள் 4
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 3
பேய்ஆழ்வார் 1
தொலைபேசி 91- 44-2232 1221, +91-4172-260 255

கோவில் பற்றி

காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம். இந்த திருத்தலத்தில் கீழே உள்ள திருக்கோவிலில் உற்சவரும், பெரிய மலை மீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரங்களுடன் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். நரசிம்மர் ஆஞ்சநேயர் இருவரும் யோகநிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பு.

சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை என்றால் நாழிகை, அசலம் என்றால் மலை, இரண்டும் சேர்ந்து கடிகாசலமானது.

சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என்றும் ஆச்சாரியர்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் ஆகும். பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால், எல்லா தீரும், மகிழ்ச்சியுடன் இருப்பர் என்று நம்பிக்கை.

அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒரு முறை முனிவர்களுக்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால், இது தனிச் சிறப்பாகும்.

பிரிவுகளும் சேர்க்கைகளும் இன்றி ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் இதற்கு ஏகசிலா பர்வதம் என்ற பெயரும் உண்டு.

இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளி உள்ளார். சுமார் 750 அடி உயரமுள்ள 1305 படிகள், ஏழு மண்டபங்கள் உள்ள கடிகாசலம் என்ற பெரியமலை இது. இங்கு நரசிம்மர் சாளக்ராம மாலை அணிந்து, யோகநிலையில், கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட இரண்டு மூன்று முறை முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது).

இங்கு கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வெள்ளி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திருவிழா போல் விசேஷங்கள் நடைபெறும். எங்கும் மக்கள் அலை போல் இருக்கும். சித்திரை ப்ரம்மோத்ஸவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி மாதம், நரசிம்ம ஜெயந்தி திருவிழாவாகவும், காஞ்சி கருட சேவை உற்சவமும் கொண்டாடப் படுகிறது. ஆடியில் திருவாடிப்பூரமும், ஆவணியில் பவித்ரோத்ஸத்வமும் புரட்டாசியில் நவராத்திரியும் மார்கழியில் வைகுந்த ஏகாதசியும், மாசியில் தொட்டாச்சார்யார் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பெரிய மலையில் உள்ள நரசிம்மரை தரிசித்துவிட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சேநேயரின் கண்கள் நேரடியாக யோக நரசிம்மரின் திருவடிகளை நோக்கி அமைந்துள்ளது. சிறிய மலை சுமார் 350 அடிஉயரம் உள்ளது, 400 படிகள் ஏறி சேவிக்க வேண்டும்.

ஆஞ்சநேயருக்கு சங்கு சக்கரம் கொடுத்தருள இராமன் இங்கு எழுந்து அருளினார். இராமனின் ஆராதனை பெருமாள் ரங்கநாதர் ஆவார். அதனால் அவரும் சின்னமலையில் காட்சி அளிக்கிறார். மிகவும் அழகான சிறிய வடிவில் உள்ள (பால) ரங்கநாதர் ஆகும். இவரை தரிசிக்கும் போது, திருசிறுபுலியூர் நினைவுக்கு வருவது ஆச்சர்யம் இல்லை.

உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார்.  அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் பக்தோசிதப்பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். 

இங்குள்ள தீர்த்தத்தில் (குளத்தில்) நீராடி எம்பெருமானை வழிபட்டால், ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Google Map

திருக்கடிகை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்கடிகை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

திருக்கடிகை பற்றி நம் பதிப்புகளில் இருந்து

Thanks to friends from Whatsapp

ஸ்தல வரலாறு

சப்தரிஷிகளும், (அத்ரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர்) வாமதேவர் என்ற முனிவரும் பிரஹ்லாதனுக்காக எம்பெருமான் எடுத்த நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டும் என்ற ஆசையினால் இம்மலையில் வந்து தவம் செய்யத் தொடங்கினர். முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றதால், தாங்களும் ஒரு நாழிகை நேரத்தில் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கையில் இம்மலையைத் தெரிவு செய்து இங்கே வந்து தவம் இருந்தனர்.

இது இவ்வாறு இருக்க இராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் தருவாயில், கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம் வருவாயாக என்று ஆஞ்சநேயரிடம் கூற, அவரும் அவ்விதமே இந்த மலைக்கு வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகளுக்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களோடு போர் புரிந்த ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க, ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளின் தவம் தடை இல்லாமல் தொடர அருள் புரிகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய நாராயணன் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் “நீ நமது முன்பு அமர்ந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு தீராத பிணிகளை தீர்த்து, எம்மை வந்தடைவாயாக என்று அருளி மறைந்தார். இதனால் தான் யோக நிலையில் (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. கலியுகம் முடியும் வரை அனுமனும் வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம். இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார் என்பதை கீழ் கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம், பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து நரசிம்மனை வணங்கி அவரின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கூட்டத்தில் நின்ற நவக்கிரகங்களில் ஒருவனான புதன் துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இந்த கடிகாசலத்தில் பாண்டவ தீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபம் தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணம் கூறுகிறது.

ஆழ்வார் ஆச்சாரியர்

முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம், மூன்றாம் திருவந்தாதி 61 பாசுரம்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே  (பெரிய திருமொழி 8.9.4)

ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், இராமானுஜரும் மணவாள மாமுனியும், மங்களாசாசனம் செய்துள்ளனர்.

தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்யர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே, தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த , காஞ்சிப் பெருமாள் கருட வாகனத்தில் இவருக்குக் காட்சி தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாச்சார்யாருக்கு சேவை சாதிப்பதாய் குடைகளால் வரதன் மறைக்கப்பட்டு, கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில் கீழ்க்கோவிலில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.

கீழ்க்கோவிலை அமைத்து உற்சவ ஸ்வாமியை பிரதிஷ்டை செய்ததும் இவரே. சிதம்பரம் கோவிலில் இருந்து மூலவரை கிருமிகண்டசோழன் கடலில் போட்டு சென்ற பிறகு அதனைத்தேடி கண்டுபிடிக்க செய்து, மீணடும் சிதம்பரம் கோவிலில் பிரதிஷடை செய்ததும் இவரே.

தொட்டையாசார்யார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவர் சென்றால், இவருக்கு முன்னால் சக்ரத்தாழ்வார் வழிகாட்டிய படி செல்வார் என்று சொல்வர்.

இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.

திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத அன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

063 திருகடல்மல்லை Thirukadalmallai

நிலமங்கைத் தாயார் சமேத ஸ்தலசயனப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கடல்மல்லை, மஹாபலிபுரம் , அர்த்த சேது
மூலவர்ஸ்தலசயனப்பெருமாள்
உத்ஸவர்உலகுய்யநின்றான்
தாயார்நிலமங்கைத்தாயார் (தனிக்கோயில் நாச்சியார்)
திருக்கோலம்கிடந்த திருக்கோலம் (ஸ்தல சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்27
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 26
பூதத்தாழ்வார் 1
தொலைபேசி+91 – 44 – 27443245

கோவில் பற்றி

இத்தலம், பல்லவ வேந்தர்களின் கலைக் களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது. சங்க காலத்திலேயே நீர்ப்பாயல், சலசயனம் என்று குறிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆலயத்தில் ஸ்தல சயனப் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் தனது மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி என்ற தேவிமார்கள் எவரும் இல்லாமல், திருமார்பில் வக்ஷஸ்தல லக்ஷ்மி மட்டும் கொண்டு, தனது வலது, கீழ், மேல் என்ற இரண்டு திருக்கரங்களையும் மண்ணில் அழுத்தி வைத்து, ஆதிசேஷ பர்யங்கம் இல்லாமல், நிலத்தில் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடலில் உள்ள எம்பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்று நம்பப் படுகிறது.

உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு சிறு தாமரை பூவுடன் உள்ளார். அதை அவரே மூலவரிடம் சமர்பிக்கின்றார் என்று ஐதீகம்.

பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் நிலமங்கைத் தாயார் சந்நிதியும் ஆண்டாள் சந்நதியும் உள்ளன. கோவில் வெளிச்சுற்றில், ராமர், ஆஞ்சநேயர், பூதத்தாழ்வார் , கருடன், ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர் என்று சந்நதிகள் உள்ளன.

ஒருகாலத்தில் ஏழு கோவில் நகரம் என்று ஏழு விஷ்ணு கோவில்களை கொண்டு இந்த நகரம் இருந்தது. பின்னர் கடலின் சீற்றத்தால் பல கோவில்கள் கடலுக்குள் அடித்துச் செல்ல, பிறகு மூன்று கோவில்கள் கட்டப் பட்டதாகவும், அவற்றிலும் இரண்டு கோவில்கள் மீண்டும் கடலில் மூழ்கிவிட்டதாவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது கோவில் இருந்த எம்பெருமான், சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இப்பொழுது இருக்கும் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி பூஜை, திருவாராதனம் முதலியவை நடைபெறுகின்றன.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் எம்பெருமான் அலங்கார பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளுகிறார். பூதத்தாழ்வார் சன்னிதியில் அவருக்கு மரியாதை நடக்கும். தொடர்ந்து, சுவாமியின் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

புண்டரீக ரிஷி பாதம் பட்ட தீர்த்தத்தில், புஷ்கரணியில் மாசிமகம் அன்று தெப்பம் சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசை, சரவண நட்சத்திரம், திங்கட்கிழமை மூன்றும் சேர்ந்து வரும் அன்று மஹோதன்ய தீர்த்தவாரி என்று எம்பெருமான் கடலில் சென்று தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராகர் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று கடலுக்கு சென்று தீர்த்தவாரி வழங்குவார்கள். மேலும் அமாவாசை, மஹாளயம், உள்ளிட்ட புண்ணிய தினங்களில் திதி தர்ப்பணம் முதலியவை நம் முன்னோர்களுக்கு கொடுத்தால், அவை சிறந்த பலனை தரும் என்றும், கயா, காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் செய்ததற்கு ஈடாகும் என்றும் நம்பப் படுகிறது.

Google Map

திருகடல்மல்லை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருகடல்மல்லை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

ஆதி வராக பெருமாள்

மாமல்லபுரம், பல்லவ அரசர்களால் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க பட்ட ஒரு நகரமாய் இருந்தது. இந்த ஸ்தல சயன பெருமாள் கோவிலைத் தவிர, சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது பக்தியின் அடையாளமாக ஆதிவராஹருக்காக ஒரு குகைக் கோவில் அமைத்தான். இது மாமல்லபுரத்தில் உள்ள இன்னொரு வைணவ கோவிலாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருவிடவெந்தை திருக்கோயில் வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல் அரிகேசரிவர்மன் என்னும் மன்னனுக்கு காட்சி தந்த ஆதிவராஹ பெருமாள் கோவிலாக, மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையில் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு பின் புறத்தில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில், குடவரை கோவிலாக, இந்த கோவில் வராஹ பெருமானுக்காக கட்டப்பட்டது. கடந்த பத்து நூற்றாண்டுகளில், மாமல்லபுரத்தில், கடலின் சீற்றத்திற்குத் தப்பித்த இரண்டு வைணவ கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று ஸ்தலசயன பெருமாள் கோவில்.

இந்த திருக்கோவிலில் மூலவர் ஆதிவராஹர் வர்ண கலாப மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். இங்கு வராஹப் பெருமான் பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறார். ஆகையால் இவர் வலவெந்தை பெருமாள் ஆகிறார். இடது திருவடிகள் ஆதிசேஷன் மற்றும் ஆதிசேஷன் மனைவி மேலும் இருக்கிறது. எம்பெருமானின் இடது திருக்கரம் பூமிபிராட்டியின் மேல் அவரை ஆசுவாசப்படுத்தும் படியாக உள்ளது.

இப்பெருமாள் (ஏனப்பிரான்) வலது திருக்கரத்தை தமது திருமார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து ஞானத்தமிழ் புரிந்த நான் என்று பூதத்தாழ்வார் தனது மூன்றாம் திருவந்தாதி முதல் பாசுரத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் கூட்டி காட்சி அளிக்கிறார்.

இந்த திருக்கோவிலில் இருந்து திருவிடவெந்தை கோவிலுக்கு செல்லும் சுமார் 15 கிலோமீட்டர் சுரங்கபாதையும், காஞ்சியில் உள்ள பரமேஸ்வர விண்ணகரம் கோவிலுக்கு செல்லும், சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உள்ள சுரங்கபாதையும் உள்ளன. அவை தற்சமயம் மூடப்பட்டு உள்ளன.

ஸ்தல வரலாறு

பாகவத புராணத்தில் புண்டரீக மஹரிஷியின் வரலாற்றைச் சொல்லும் போது இத்தல வரலாறும் இணைந்து வருகிறது. இந்த முனிவர் புஷ்பங்களைக் கொண்டு க்ஷீராப்தி நாதனை (திருப்பாற் கடல் எம்பெருமான்) பள்ளி கொண்ட கோலத்தை வழிபட எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர நீரைக் கைகளால் இறைக்க ஆரம்பித்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், இவருக்குக் காட்சி கொடுக்க எண்ணியவராய் ஒரு முதியவர் வேடம் கொண்டு இவரிடம் வந்து ஆகாரம் கேட்க, தாம் கொண்டுவந்த மலர்க்கூடையை அவரிடம் பாதுகாக்கும்படி கொடுத்துவிட்டு, தாம் சென்று ஆகாரம் கொண்டு வருவதாக சொல்லிச் சென்றார். அவர் ஆகாரம் கொண்டு வருவதற்குள் எம்பெருமான் மாமல்லைக்கடலில் ரிஷியால் கொடுக்கப்பட்டப் பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இதைக் கண்டு ரிஷி மிகவும் ஆனந்தம் அடைந்து, இந்த சிறுவனுக்காகவா நீங்களே நேரிடையாக வந்தீர்கள் என்றும், தங்களிடமேவா பூக்கூடையை கொடுத்து காக்கவைத்தேன் என்றும் வருந்தி, எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகில் அமரும் பாக்கியம் தமக்கு வேண்டும் என்று வேண்ட, எம்பெருமானும் அவ்வாறே அருளினார்.

அந்த ஸ்தலத்திலேயே சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததால் ஸ்தல சயனப் பெருமாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே, எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பியபடி எம்பெருமான் அருகில் உள்ளார்.

இன்னொரு செவி வழி வரலாறும் சொல்லப்படுகிறது. மல்லேஸ்வரன் என்ற ஒரு அரசன் இருந்தான் என்றும் அவன் தினமும் மக்களுக்கு அன்னதானம் செய்து வந்தான் என்றும், நாளடைவில் அதனை நிறுத்தி விட்டதால், கோபம் கொண்ட மக்கள் அவனை ஒரு முதலையாக மாற சாபம் இட்டார்கள். பின் ஒரு நாள் புண்டரீக ரிஷி அங்கு வந்தபோது, அவருக்கு 1000 தாமரை மலர்களை பறித்துக் கொடுத்து அவரிடம் தனக்கு சாப விமோசனம் பெற்று தர வேண்டியதால், அவரும் கடலில் இருந்த ஸ்தல சயன பெருமாளுக்கு அந்த ஆயிரம் மலர்களை சார்த்தி வழிபட்டார் என்றும் எம்பெருமானும் கருணைகொண்டு மல்லேஸ்வரனின் சாபத்தை நீக்கினார் என்றும் சொல்வதுண்டு.

ஆழ்வார்

பூதத்தாழ்வார் அவதாரம் செய்தது இங்குதான். இவரைக் குறித்து திருக்குருகைப் பிரான் பிள்ளான் பாடும் போது, நன்புகழ்சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை பூதத்தார் பொன் அம் கழல் என்று திருகடல்மல்லையையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 2.6.4 ல் , கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை, கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வமே என்று இந்த எம்பெருமானை வணங்குபவர்கள் ஆழ்வாருக்கு குலதெய்வம் என்றும் 2.6.7ல், கடல் மல்லைத் தலசயனம், நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே என்றும் பாடி, பாகவத பக்தியின் பெருமைகளை இந்த திவ்யதேச எம்பெருமானை முன்னிட்டு பாடுகிறார்.

திருமங்கையாழ்வார் ஆதிவராஹ பெருமாளையும் கீழ்கண்டவாறு பாடி உள்ளார். ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான், வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலங்கொள்ளக் கானத்தின் கடல் மல்லைத் தலசயனத் துறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் நாயகரே
(பெரிய திருமொழி, 2.6.3) என்ற பாசுரத்தில், பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்று குறிப்பிட்டதோடு, நிலைமை மாறி அழகு அழிந்திருந்த பூமிப்பிராட்டியின் அழகை மறுபடியும் பழையபடியே நிலை நிறுத்தினான் என்பதை நிலமங்கை யெழில் கொண்டான் என்றும் சொல்லி உள்ளார்.

இப்படி ஸ்தல சயன பெருமாள் கோவில், ஆதிவராஹர் கோவில் என்று இரண்டு கோவில்கள் இருந்தும், இரண்டிற்கும் ஆழ்வார் பாசுரங்கள் இருந்தும் திருகடல்மல்லை என்று ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.

திருச்சந்தவிருத்தம், நூற்று பத்தாவது பாசுரத்தில், திருமழிசையாழ்வார் நீர்பாயல் என்று குறிப்பிட்டு உள்ளார், ஆனால் அந்த பாசுரத்தை, மேல் உலகில் உள்ள திருப்பாற்கடல் திவ்யதேசத்திற்கு என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

Thirumaalai PoDhellam

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி.

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by mentioning silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally to Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

 • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma using the twenty six significant conceptual points in the hymn Meyyerke meyyanaagum.
 • Emperumaan occupied the heart of Azhwaar and made azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell in the next hymn Soodhanaai Kalvanaai.
 • Emperumaan melted Azhwaar’s hard heart and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not suited to receive any favours from Periyaperumal. (Virumbi ninru)
 • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy. (ini thirai thivalai modha)
 • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can worshipped to get abode / Moksham (Kuda Thisai mudiyai)
 • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are for the happiness of His devotees. (Paayum Neer Arangam)
 • Emperumaan made Azhwaar to realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar. (Panivinal manamadhu onri)
 • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas and our Acharyaas had already said about Him and we need not toil to speak anything new about Him. (Pesitre pesal allaal)
 • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan. (Gangaiyil punithamaaya)
 • Finally, Emperumaan made Azhwaar to realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him. (Vella Neer parandhu paayum)

These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).

Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusanthaanam in our tradition. Azhwaar cannot be taken to speak atheism in this subsection. Azhwaar is telling us about a higher state of devotion than a normal situation. For example, when Azhwaar says that he did not have abilities to practise karma(actions), gnana (knowledge) and bhakthi (devotional) yogams, and that he had not offered his prayers using his hands(offering flowers), mind (thinking about Him) and mouth(singing His glories), it is to be taken as though he sings the ten hymns in this subsection with his mind in a higher level of understanding such as,

 • Emperumaan knows everything
 • Emperumaan is capable of anything and everything
 • Emperumaan acts at His own will and pleasure
 • Every action is because of Him
 • Nothing should happen by azhwaar’s own efforts
 • Azhwaar always makes himself to be a slave to Him
 • He Himself should grant azhwaar everything

We had earlier seen in our previous weblog, about the first hymn of this subsection, namely, the 25th hymn of Thirumaalai, (Kulithu Moondru Analai), where Azhwaar conceded that he was not even qualified to do karma, gnana, bhakti yogas and asked Thiruvarangan to bless him with everything from the qualification onward. Let us now move on to the next hymn.

Hymn 26

Podhellam Podhu kondu, un ponnadi punaiya maaten, theethila mozhigal kondu un thirukunam seppa maaten, kaadhalaal nenjam anbu kalandhilen adhu thannaale, yedhilen Arangarku elle, en seyvaan thondrinene (Thirumaalai 26)

In this hymn, Periyaperumal had asked Azhwaar if he could not practise karma, gnana, bhakti yogas, which are stipulated for Brahmins, Kshatriyas, Vysyas, then, he could do, what are prescribed for others, such as the archana, sthuti, etc. To adorn Him with flowers, to say His praises by words, and to think of Him by the mind, are said to be as the archana and stuti as mentioned by Emperumaan.

Azhwaar said that all the time, he never had the strength to offer the flowers to His holy feet or express His virtues with faultless words, or had truthful love towards Him from within his heart. By this hymn, Azhwaar said that he did not use any of his limbs to enjoy the experience of Thiruvarangan and cried why he was born.

Here we refer to the hymn from Bhoothathazhwaar, “Podharindhu vaanarangal poonchunai pukku, aangu alarndha podhu arindhu kondu yethum podhu ullam – podhu, Manivenkadavan malar adike sella, Anivenkadavan per aaynthu” (Irandaam Thiruvandhaadhi, 72). In this hymn, the monkeys of Thirumala, does service to Emperumaan, by the three deeds, that is with their hands, pluck the flowers, (poonchunai pukku, aangu alarndha podhu arindhu kondu), with their mouths recite His holy names (per aayndhu) and with their minds, think about Emperumaan’s glories ( yethum podhu ullam). The salient words of the hymn are given in brackets at the respective places.

Podhu ellaam Podhu Kondu

Azhwaar says that it is always the right thing to adorn His holy feet that are shining like gold, with red flowers and that he has no strength or motivation to do so. It could be taken, that Azhwaar had strength and motivation in other things besides matters pertaining to Him. As mentioned earlier, in Vishnudharma, it is said that whichever tongue that says the name of Vishnu alone can be called as ‘tongue’ and similarly whatever body that serves Vishnu, alone can be classified as body, everything else is a waste.

In this phrase, there are two places where the word “podhu” is used; the first one represents the period or time and the second one refers to flowers.

Podhellaam Un Ponnadi Punaiya Maaten

Here Azhwaar did not mean that he has prayed some times, but not all the times, like 24 hours a day or seven days a week. The commentator clarified that Azhwaar meant that he did not pray even once and he did not have stamina to offer the prayers even once.

It is said in Vishnu Dharma (70.84) that all the things that lead to Moksha are done by uttering the two letters Hari just once. If one thinks of Lord Govinda once, He burns the sins committed in hundreds of births like burning sacks of cotton . We must remember that Lord Rama (Ramayana, Yudha Kaantam, 18-33) said that for the one who surrenders once and for all who say that they are His servant, He would endanger them completely and that was His vow.

Thus, He is illustrious and capable to grace the benefits on those who get involved with Him even for one time. Azhwaar says that all the time, he had never had the capability to worship such a Lord.

Those Who Performed Service with Flowers

The service rendered to Emperuman with flowers is one of His favorites, because Vishnu is Alankarapriyan and Shiva is Abhishekapriyan, meaning that Vishnu likes to get beautified, whereas Siva likes to get him holy bathed. The chances of making a mistake in offering this service with flowers are very low. It makes it easier to do also. In our tradition, many have done this service with flowers.

History is that Periyaazhwaar raised and reared a garden for flowers (Nandavanam) in Srivilliputhur, and brought them to Lord Vatapathrasayi . It was in the same garden that he found Andal and raised her as his daughter. Periyaazhwaar enjoyed this kainkaryam and sang ten hymns, “aanirai meyka” in Periyazhwaar Thirumozhi (2.7) as Yasodha calling out Krishna and enjoying the various flowers adorning Him.

Aandal, got named Soodi Kodutha Sudarkodi, by garlanding Thirumal with both hymns and floral garlands. She made the three important parts of prayers, simple by singing “thoomalar thoovi thozhudhu, vaayinaal paadi, manathinaal sindhikka” (Thiruppavai 5), meaning, He shall be worshiped by offering the flowers with folded hands, singing His glory with the tongue and thinking about Him with our mind.

History is that Tondaradipodi Azhwaar had a floral garden for Emperumaan in Thiruvarangam. When Thirumangaiazhwaar was constructing a fortification wall for the Thiruvarangam temple, he made sure that the garden of Thondaradipodi Azhwaar was not disturbed. As a mark of mutual respect to Thirumangaiazhwaar, Thondaradipodi Azhwaar also named one of his gardening tool, as Arulmari, one of the titles of Thirumangai Azhwaar.

It can be seen from the Bhagavatham that before Lord Krishna killed Kamsan, one of His devotees, Malaakaaran bedecked Krishna with the best garlands and enjoyed the dharsan of beautiful Krishna. Adhering Swami Ramanujar’s wishes, Ananthaazhwaan a disciple of Swami Ramanuja and an achaaryan, moved to Thirumala and raised a floral garden in Thirumalai to grow and offer flowers for Ezhumalaiyan for many years. The crowbar he used is still on display in Thirumalai temple.

We can also recollect and enjoy the Thirukkannapuram hymns ‘Malai Nanni Thozhudhu Ezhumino’ (Thiruvaaimozhi 9.10) sung by Swami Nammazhvaar about the services related to offering flowers (Pushpa kainkaryam). He sang,

 • Kalai Malai Kamalamalar ittu to offer lotus both in the morning and evening,
 • Kal avizhum malar ittu, to offer flowers oozing nectar
 • vindu vaada malar ittu, to offer flowers which are not dry but bloomed
 • Thenai vaada malar ittu to offer flowers which are oozing honey and not wilted.

Theedhilaa Mozhigal Kondu Un Thirukunam Seppa Maatten

When Periyaperumal said that it was enough to say the divine qualities of the Emperumaan, with unflawed words, even if Azhwaar was involved in other worldly affairs without doing any service to Emperumaan using his limbs. Azhwaar said that although his words were innocent and beautiful, he was incapable of speaking the Emperumaan’s glories. Vishnu Dharmam, says that the tongue should only speak about Vishnu. Azhwaar said that his tongue was very sharp when it talks about other worldly matters, but when it comes to talking about Vishnu, it is incapable of talking.

Kaadhalaal Nenjam Anbu Kalandhilen

Periyaperumal asked, whether Azhwaar could love Perumal through his heart, even if he could not render his services with his limbs and tongue. Azhwaar said in this case, his affection towards Periyaperumal did not come from true love and whatever he showed until then was untrue. As told in Bhagavadh Gita (2.62) that interest in material things will result in lust which again will lead to anger, Azhwaar said that the love he had experienced till that day, even in worldly matters, was also not a true one and it was only to steal others’ possessions.

The commentator takes the 62nd sloka from Aalavandhaar’s Sthothra Rathna, in which he declared himself as

 • Transgressor of the limits set by Sastras (Vedhas)
 • One who is lustful in vile things
 • One who has a wavering heart
 • One who does not tolerate the good living of others (jealousy)
 • The one who does evil to those who do good
 • Arrogant
 • Lustful
 • The deceiver of the women
 • The one who does cruel things
 • One who is steeped in sins

With so many sins under his belt, Aalavandhar was asking Emperumaan, how to cross the large ocean of pain, which has no shore or end, and reach Him to do service to Him.

Next quote is taken from the Vishnu Purana (3.7.30), where Emperuman said that he who thinks of harming his friends, relatives, wife, children, parents and servants and plans coveting their wealth is not His devotee.

Adhu Thannaale, yedhilen

Azhwaar said that he did not use any of these triads, mind, body and words to get involved in Him, unlike the great adults who benefitted by using these triads. Azhwaar regretted that he became a void, who could not even engage any one of the above.

Yedhilen Arangarku

Here again, the commentator takes the 16th verse of Sthothra Rathnam and quotes how Emperuman is truthful to His devotees with the same triad, namely, mind, body and words. Emperuman, naturally is the ocean of all good qualities, and lists them as follows.

 • Submissive to His devotees
 • Gives Himself to His devotees
 • Simple in nature and He is approachable very easily by all
 • Has His mind, the speech, and the body synchronized to support the devotees
 • Has a pure intention in helping His devotees
 • Cannot tolerate the separation from His devotees
 • Can not bear to see the grief of his devotees
 • Is very sweet
 • Treats his devotees equally
 • Thinks and acts on the matters of His devotees as if they are His own
 • Thinks of even the smallest services rendered by His devotees as great

Tondaradipodi Azhwaar says in this hymn that there is Thiruvarangan in a beautiful reclining posture, and a simple dharsan of whom could easily give us the moksham, and we do not have to study any Shastras with such difficulty to understand and look for moksham. He laments that he has become nothing, without offering any prayers using any of his parts of the body or mind.

Elle

Azhwaar says that the reason for Emperumaan not to merge Azhwaar with Him was not because any of the following faults of Azhwaar, but because of the sins committed by Azhwaar by a single word ‘elle‘.

 • Azhwaar was not near Emperumaan
 • Azhwaar was worthless
 • Azhwaar was looking at the shortcomings of Emperumaan.

Azhwaar tells an important point for us to learn, that Emperumaan does not consider the faults of jeevathmaas, but the sweetest Emperumaan takes them as virtues. Azhwaar also states that every jeevathmaa is very dear to Emperumaan like the gemmed jewel Kausthubha, and Azhwaar cries with remorse that he wasted his life. Here a hymn from Periya Thirumozhi (3.7.6) “Arangathu uraiyum inthunaivan” is taken as a reference. Azhwaar cries that he has moved very much away from such a sweet companion and lost the favour graced by Emperumaan, Who can be enjoyed with all His beauty and Who graces us with Moksham, like milk which is enjoyed as a drink and also used as a medicine too.

En Seivaan Thondrinene

Azhwaar cries that he had wasted his limbs, mind and body by not using them to serve Emperumaan, as told in Vishnu Dharmam and regrets why he even was born.

It is customary to say that evil planets appeared, when they come out in the sky. Similarly, Azhwaar concluded the song by saying that he was born evil, like an evil planet, without doing any good to others, but only to do bad things to others. This he called it as “thondrinene” rather than ‘piranthen‘, which is generally used for normal birth of human beings.

Let us catch up again in our next weblog, thanks.

062 திரு இடவெந்தை / THIRUIDAVENDHAI

அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி
அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி
மூலவர்லட்சுமி வராகப் பெருமாள்
உத்ஸவர்நித்யகல்யாண பெருமாள்
தாயார்கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார்
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 13
தொலைபேசி+91 44 – 24272235 / +91- 98405 99310 / +91- 98409 36927

கோவில் பற்றி

எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர்.

நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவர் முகத்தில், தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தப் பொட்டு திருமண நிகழ்ச்சியில் மணமகனுக்கு வைக்கும் த்ருஷ்டி பொட்டு போல் இயற்கையாகவே உள்ளது என்பார்கள்.

இங்கு எம்பெருமான், ஒரு திருவடியை பூமியிலும் மற்றொன்றை ஆதிசேஷன் தலையினிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது
தொடையில் தாங்கிக்கொண்டு, அவர் மூலமாகவே, சரம ஸ்லோகத்தை இந்த உலகத்திற்கு உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்று சேவை சாதிக்கிறார். ஆதிசேஷன் அருகில் அவரது மனைவியும் இருக்கிறார்.

360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.

எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால், ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் ஒரு பெயர் உண்டு.

எம்பெருமான் ஒருவனே நாயகன், நாம் எல்லோரும் நாயகிகளே என்று சொல்லும் வைஷ்ணவ தத்துவத்தின் பொருளாக, இவ்வுலகத்தில் பிறக்கும் எல்லாரையும் எம்பெருமான் ஏற்றுக்கொள்வதின் அடையாளமாக தினம் ஒரு திருமணம் செய்து நித்யகல்யாண பெருமாளாக உள்ளார் என்றும் சொல்வர்.

வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின்
அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு பெயர் உண்டு.

இன்று கோவளம் என்பதே ஒரு காலத்தில்
பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

கோமளவல்லித்தாயாருக்கு தனி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், ரங்கநாதர் சந்நிதியும் உள்ளன.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

இது திருஷ்டி பரிகார ஸ்தலம், ராகு, கேது, சுக்கிரன் தோஷ பரிகார ஸ்தலம், மற்றும் திருமண தடை உள்ளவர்கள் பரிகார ஸ்தலம் ஆகும்.

ஸ்தல வரலாறு

க்ருத யுகத்தில், மேகநாதன் என்னும் அரசன் இருந்தான்.
அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக அரசு நடத்தி வந்தான். அப்பொழுது மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான்.
அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.

அரக்கர்களுக்காக பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து அவனுக்கு மோட்சம் நல்கி
சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.

சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி
தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே ஸ்வர்க்கம் செல்ல எண்ணி தவம் செய்யும் போது, நாரதர் வந்து, அவள் மணமாகாதவள், திருமணம் செய்தால் அன்றி ஸ்வர்க்கம் கிடைக்காது என்று சொல்லி, அங்குள்ள மற்ற முனிவர்களிடம் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டினார்.

அங்கு காலவரிஷி என்ற ஒரு ரிஷி அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு 360 கன்னிகைகளைப் பெற்றார். பருவமடைந்த இவர்களை திருமணம் செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், வாரகப்புரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி என்றும் காலவரிஷிக்குச் சொல்ல அவரும் இங்கு வந்து வராஹமூர்த்தியைக் குறித்து கடும் தவம் செய்தார். இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரிடம் வர, ரிஷி அவரிடம் தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டினார். எம்பெருமானும் அதற்கு சம்மதித்து, தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கடைசி தினத்தில் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி அவரை இடப்புறம் ஏற்றுக் கொண்டார். அவரே திருவாகிய மஹாலக்ஷ்மி. தனது இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். இடது புறம் திருவை வைத்து எம்பெருமான் சேவை கொடுத்ததால், இந்த திருத்தலம், திரு இட எந்தை என்று மாறி, திருவிடவெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை என்று ஆயிற்று.

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச்
செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில்
வைத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் எழுந்தருளினார். அந்த கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

ஆழ்வார்

Google Map

திருஇடவெந்தை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஇடவெந்தை பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார்.

061 திருநீர்மலை Thiruneermalai

அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்)
மூலவர் 1

தாயார்
திசை
திருக்கோலம்
இடம்

நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன்
அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்)
கிழக்கே திருமுகமண்டலம்

நின்ற திருக்கோலம்
மலை அடிவாரக்கோவில்
மூலவர் 2
திசை
திருக்கோலம்
இடம்
சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர்
கிழக்கே திருமுகமண்டலம்
வீற்று இருந்த திருக்கோலம்
மலைக்கோவில்
மூலவர் 3
தாயார்
திசை
திருக்கோலம்
இடம்
உற்சவர்
ரங்கநாதன்
ரங்கநாயகி (தனிக்கோவில் நாச்சியார்)
தெற்கே திருமுகமண்டலம்
மாணிக்க சயன திருக்கோலம் (கிடந்த)
மலைக்கோவில்

அழகிய மணவாளன் (இவர் இருப்பது மலையடிவார கோவிலில்)
மூலவர் 4
திசை
திருக்கோலம்
இடம்
த்ரிவிக்ரமன் , உலகளந்த பெருமாள்
கிழக்கே திருமுகமண்டலம்
நின்ற திருக்கோலம் (நடந்தான்)
மலைக்கோவில்
பாசுரங்கள் 20
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 19
பூதத்தாழ்வார் 1
தொலைபேசி91- 44-2238 5484, +91 98405 95374, +91 94440 20820.

கோவில் பற்றி

இது ஒரு மலைக்கோயில் ஆகும். சுமார் 200 அடிஉயரம் உள்ள மலை இது ஆகும். மலைக்கு மேல் ஏறிச்செல்ல படிகள் வசதியாக உள்ளன. மலையடிவாரத்திலும், மலையின் மேலும் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. இங்கு எம்பெருமான் நான்கு திருக்கோலங்களில், மூன்று அவதார பெருமைகளோடு காட்சி அளிக்கிறார். நின்றான்(நீர்வண்ணன்), இருந்தான்(நரசிம்மன்), கிடந்தான்(ரங்கநாதன்), நடந்தான்(த்ரிவிக்ரமன்) என்ற நான்கு திருக்கோலங்களில் இந்த எம்பெருமான் நரசிம்மன், த்ரிவிக்ரமன், இராமபிரான் என்ற அவதாரங்களாக திருநீர்மலையில் காட்சி தருகிறார்.

தாமரை மலர் பீடத்தில் ஹஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பில் சாளக்கிராம மாலையுடன் நீர்வண்ண எம்பெருமான், மலையடிவாரத்தில் காட்சி தருகிறார். நீர் சூழ்ந்த மலையின் நடுவில் காட்சி கொடுப்பதால், இவருக்கு நீர்வண்ணன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த எம்பெருமான் நீல வண்ணத்தில் இருப்பதால், நீலவண்ணப்பெருமாள் என்றும் பெயர் உண்டு.

இராமன் தனி சன்னதியில் மலையடிவார கோவிலில் தரிசனம் தருகிறார். வால்மீகி இராமரை வணங்கிய நிலையில் சுயம்புவாக இந்த சந்நிதியில் உள்ளார்.

பொதுவாக கோவில்களில் சுவாமி, கோபுரம், கொடிமரம், பலிபீடம் என்று எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும். வால்மீகிக்கு நீர்வண்ணனாகவும், ராமனாகவும் காட்சி அளித்ததால் இரண்டு எம்பெருமான்களுக்கும் மரியாதை செய்யும் வண்ணம், கோபுரம் ராமர் சன்னதிக்கு எதிராகவும், கொடிமரம் நீர்வண்ணனுக்கு எதிராகவும் அமைக்கப்பட்டு உள்ளது.

மலைமேல் உள்ள நரசிம்மர் பாலநரசிம்மராக காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்மனும் த்ரிவிக்ரமனும் பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின், அவதார பயன் கிடைத்தபின், மகிழ்ச்சியுடன் ஸ்ரீ வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது என்கிறார்கள். அதாவது வீற்றுஇருந்த திருக்கோலத்தில் பாலநரசிம்மராகவும், நடந்த நிலையில் உலகளந்த திரிவிக்ரமனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.

மேலும்,  மலைமேல் சயன திருக்கோலத்தில், ரங்கநாதனாகவும், மலையடிவாரத்தில் திருமணக் கோலத்தில் இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் போகும் முன் உள்ள சீதாராமனாகவும், நின்ற திருக்கோலத்தில் நீர்வண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.

பொதுவாக மூலவரும் உற்சவரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு, மலைமேல் உள்ள மூலவரான ரங்கநாதரின் உற்சவரான அழகிய மணவாளன் வருடத்தில் மூன்று முறை தான் மலைமேல் காட்சி அளிக்கிறார். மற்ற நாட்களில் மலையடிவார கோவிலிலே தான் இருக்கிறார். சித்திரை ப்ரம்மோத்ஸவத்தின் போது கொடியேற்றம் நாள் அன்றும், விடையாத்தி (உற்சவ கடைசி நாள்) நாளன்றும், பங்குனி திருக்கல்யாண வைபவத்தின் போதும் மட்டும் மலைமேல், அழகியமணவாளன் மூலவருடன் காட்சி அளிக்கிறார்.

மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என்று ஐந்து தீர்த்தங்கள் பெயர்களுடன், இங்கு உள்ள திருக்குளம் மூன்று ஏக்கர் பரப்பில், நடுவில் நீராழி மண்டபத்துடன் அமைந்து உள்ளது.

காண்டபவனப் பெருமாள் என்றும், காண்டபவன நாதன் என்றும், இந்த பிரதேசத்தின் பெயரில் இந்த எம்பெருமானை அழைத்து வந்தார்கள். திருமங்கை ஆழ்வார் வந்த போது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் நீர்மலை என்றும் திருநீர்மலை என்றும் பெயர் வந்தது. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த இடம் இன்று திருமங்கைஆழ்வார்புரம் என்னும் பெயருடன் இங்கிருந்து சமீபத்தில் உள்ளது.

மலைமேல் உள்ள கோவில் என்பதால் பௌர்ணமி அன்று கிரிவலம் செய்வதும் இங்கு ஒரு விஷேசம். தோயம் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். இங்குள்ள மலைக்கு தோயாத்ரி, நீரால் சூழப்பட்ட மலை என்று பெயர்.

திரு நீர் மலை என்று பிரித்துப் பார்த்தால் நீர் என்பது எம்பெருமானின் நீர்மை என்ற குணத்தை குறிக்கும். நீர்மை என்பது எளிமை, அல்லது அடியார்களைக் கண்டால் உருகும் தன்மை. மலை என்பது எம்பெருமானின் உறுதியை குறிக்கும், அதாவது அடியார்களை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு உள்ள உறுதியை குறிக்கும். நீர் என்பது எம்பெருமானின் சௌலப்யத்தையும் (எளிமை), மலை என்பது எம்பெருமானின் பரத்துவத்தையும் (உயர்ந்தவன்) என்பதையும் குறிப்பதாக கொள்ளலாம்.

Google Map

திருநீர்மலை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருநீர்மலை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

நன்றி Whatsapp group நண்பர்கள்

கோவில் திருவிழாக்கள்

சித்திரையில் ப்ரம்மோத்ஸவம் 10 நாட்கள் மலைமேல் உள்ள ரங்கநாதருக்கும், வைகாசியில் வசந்த உற்சவம், ஆனியில் கோடை உற்சவம், புரட்டாசியில் சனிகிழமைகள், பவித்ரோத்ஸவம், என்று பல திருவிழாக்கள் மலைக்கோவில், மற்றும் மலையடிவாரக் கோயில்களில் கொண்டாப்படுகின்றன. ப்ரம்மோத்ஸவத்தின் போது ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் எம்பெருமான் புறப்பாடு காண்கிறார்.

தைமாதம், ரதசப்தமி அன்று ஒரே நாளில் ரங்கநாதர் ஏழு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அன்று சூரிய உதயத்திற்கு முன்பு சூரிய பிரபை வாகனத்தில் புறப்பட்டு தீர்த்தக்கரையில் சூரிய உதயத்தின் போது, எம்பெருமானின் பாதம் முதல் கேசம் வரை படிப்படியாக தீபாராதனை காண்பார். இது எம்பெருமானுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவார்கள். பின்னர் அன்று, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம் என்று தொடர்ந்து, சந்திரப்பிரபையுடன் என்று அன்றைய திருவிழா நிறைவுபெறும். ரதசப்தமி திருவிழா திருமலையிலும் சிறப்பாக ஏழு வாகன புற்பாடுகளுடன் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசியின் போது அழகிய மணவாளன் சொர்க்கவாசல் கடக்கிறார். மாசி மகத்தின் போது கருடவாகனம் காண்பதும் அவரே. பங்குனி உத்திரத்தில் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஆனியில் ஒரு நாள் உற்சவம் நரசிம்மருக்கும், ஆடியில் ஒருநாள் உற்சவம் உலகளந்த பெருமாளுக்கும் நடைபெறுகிறது. அப்பொழுது அவர்கள் மலையடிவார கோவிலுக்கு எழுந்தருளி கருடசேவையும் சாதிக்கிறார்கள்.

பங்குனியில் நீர்வண்ண பெருமாளுக்கு மலை அடிவாரத்தில் ப்ரம்மோத்ஸவம். சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் நீர்வண்ணனுக்கும் அணிமாமலர் மங்கை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

சித்திரை மற்றும் பங்குனி ப்ரமோத்ஸவத்தின் போது 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி அன்றும் என்று மூன்று துவாதசி நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும்.

ஸ்தல வரலாறு

இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. வால்மீகி மலை மீது ஏறி சயனத் திருக்கோல ரங்கநாதன், அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே வந்தார்.

வால்மீகிக்கு இம்மூவரைச் சேவித்தும் ஏனோ பூரண திருப்தி உண்டாகவில்லை. உள்மனத்தை ஏதோ வருத்தியது. மலையில் இருந்து இறங்கியதும் கிழக்கு நோக்கி நின்று, வால்மீகி தன்னுடைய இனிமையான, பிரியமான, பேரழகு வாய்ந்த ஸ்ரீராமபிரான் எங்கே என்று கண்ணீர்நீர் மல்க பிரார்த்தித்து வணங்கினார்.

ஸ்ரீமன் நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கி, இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் மூலமாகவே வால்மீகிக்கு இராமராக காட்சி அளித்தார். அதாவது இங்குள்ள ரங்கநாதனே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகவும், மகாலட்சுமியே சீதா பிராட்டியாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும், சக்ரத்தாழ்வான் பரதராகவும், சங்கு சத்ருக்னனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்யமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து வால்மீகியின் துக்கத்தைப் போக்கி, கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம். நீர்வண்ணனாக ராமனின் பேரழகுடன், காட்சி அளித்த திருக்கோலத்துடன் இங்கேயே எப்பொழுதும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று வால்மீகி வேண்ட, அப்படியே எம்பெருமான் காட்சி அளிக்கிறார் என்பது வரலாறு.

மிகுந்த கோபத்துடன், ஹிரண்யகசிபுவை இரண்டாக பிளந்த பின், இருந்த உக்ர நரசிம்ம தோற்றத்தைக் கண்டு சிறுவன் பிரஹலாதன் பயந்து நடுங்கியபோது, அவனுக்காக, சாந்த சுவரூபியாய், பாலநரசிம்மனாக காட்சி அளித்தார்.

பிருகு முனிவருக்கும் மார்கண்டேய மகரிஷிக்கும் அவர்களின் வேண்டுதலின் படி ரங்க நாயகி சமேத ரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயன சேவையில் இங்கு காட்சி கொடுத்ததும் அவர்களும் மூலவரின் சந்நிதியில் வணங்கி நிற்கிறார்கள்.

ஆழ்வார்

இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்த போது தொடர்ந்து மழை பெய்ததால், மலையைச் சுற்றிலும் அரண் போல் நீர் சூழ்ந்து கொண்டது. ஆழ்வாரால், எம்பெருமானை தரிசிக்க முடியவில்லை. ஆறு மாதங்கள் காத்து இருந்து நீர்வற்றிப் போன பின்பு இந்த எம்பெருமானை சேவித்து சென்றார் என்பது வரலாறு.

திருநரையூரில் நின்ற திருக்கோலத்திலும், திருவாலியில் வீற்றுஇருந்த திருக்கோலத்திலும், திருகுடந்தையில் சயனத் திருக்கோலத்திலும், திருக்கோவிலூரில் நடந்த திருக்கோலத்திலும் காணும் எம்பெருமான்களை இவ்வூரில் நான்கு நிலைகளிலும் காணலாம். அதனால் நீர்மலையான இந்த திவ்யதேசம், மாமலை ஆயிற்று என்று பெரிய திருமொழி (2.4.1) பாடலில் திருமங்கையாழ்வார் கூறுகிறார்.

பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்களுக்கு உண்டான புகழோடு இத்தலத்தையும் இணைத்துப் பாடி உள்ளார் பூதத்தாழ்வார்.    

மணிகர்ணிகா *

பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவற்கு பல வழிகள் சொல்லப்பட்டாலும், அவற்றுள் மணிகர்ணிகா வழிபாடு விசேஷமானது. காசிக்குச் செல்பவர்கள் கங்கைக்கரையிலுள்ள ‘மணிகர்ணிகா காட்’ என்ற தீர்த்தக் கட்டத்துக்குச் சென்று பித்ருக்களை நினைத்து வழிபட்டு வரலாம். ஒருமுறை, இந்த தீர்த்தக்கட்டத்துக்கு எழுந்தருளிய ஆதிசங்கரர், அங்கே தன் தாயாருக்குத் தர்ப்பணம் செய்தார். அப்போது, தமது ஞானதிருஷ்டியால் மணிகர்ணிகாவின் பெருமையையும் சக்தியையும் அறிந்து வியந்து மணிகர்ணிகா அஷ்டகம் என்ற ஸ்லோகத்தை இயற்றினார். எவரொருவர், மணிகர்ணிகா தீர்த்தக் கரையில் அமர்ந்து பித்ரு பூஜை செய்து, இந்தத் துதியை மூன்று முறை படிக்கிறாரோ, அவர் பிரம்மனைப் போன்று மதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் உள்ள நான்கு மணிகர்ணிகா தீர்த்தங்களில், திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறையில், ஸ்ரீசெண்பகவல்லி உடனுறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் தலத்தில் உள்ள தீர்த்தமும் சென்னை திருநீர்மலையில், ஸ்ரீஅணிமாமலர் தாயார் சமேத ஸ்ரீநீர்வண்ணர் சந்நிதிக்கு எதிரில், புஷ்கரிணி தீர்த்தமும் அடங்கும். திருநீர்மலை மணிகர்ணிகா தென்னகத்து விஷ்ணு கயா ஆகும்.

மணிகர்ணிகா ஸ்துதி !

1.த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ
வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே!
மத்ரூபோ மனுஜோsயமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்!
தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!!

ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹரனும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணி மரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான்.

2.இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன:
ஜாயந்தே மனுஜாஸ்ததோsபி பவச:கீடா:பதங்காதய:!
யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா:
ஸாயுஜ்யேsபி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!!

தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!

3.காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா
தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ!
ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா
காசீ க்ஷே£ணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:!

புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிக கனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது.

4.கங்காதீரமெனுத்தமம் U ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா
தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I
தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம்
பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!!

கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகை ஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.

5.து:காம்போதி கதோ ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி:
ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா!
லோகா:ஸ்வர்க முகாஸ்ததோsபி லகவோ போகாந்தபாதப்ரதா:
காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!!

உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோ தர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும்.

6.ஏகோ வேணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார
யோsப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ: !
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா:
ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹ§த்வம் கதம் !!

புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்ணே. நினது பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது.

7.த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே
சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர: !
ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோsபூத் ஸதா
புண்யோsஸெள வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!!

ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறான்.

8.மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம:
ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ£ குரு: !
யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத:
த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம் !!

மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார்.

9.க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம்
தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்!
ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம்
தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!!

கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர், ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர்.

*- Thanks to friends from whatsapp group for the details on Manikarnika.

060 திருவல்லிக்கேணி Thiruvallikeni

ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவல்லிக்கேணி
பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு)
பஞ்சமூர்த்தி ஸ்தலம்
மூலவர் 1
உத்ஸவர் 1
தாயார் 1
மற்றவர்கள்

வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் )
பார்த்தசாரதி
ருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்)
பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன்
மூலவர் 2
தாயார் 2
ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க சயனம்)
வேதவல்லி தாயார் (தனிக்கோவில் நாச்சியார்-மன்னாதனுக்கு)
மூலவர் 3
தாயார் 3
மற்றவர்கள்

ஸ்ரீ ராமன் (தெற்கே திருமுகமண்டலம், நின்ற திருக்கோலம்)
சீதா தேவி (மூலவர் 3 சந்நிதியில்)
பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கனன்
மூலவர் 4ஸ்ரீ வரதராஜன் (கிழக்கே திருமுகமண்டலம், கருடன்மேல் அமர்ந்த திருக்கோலம்)
மூலவர் 5தெள்ளிய சிங்க பெருமாள் (மேற்கே திருமுகமண்டலம், அமர்ந்த திருக்கோலம்)
திசைகிழக்கு (மூலவர் 1,2 மற்றும் 4); மேற்கு (மூலவர் 5), தெற்கு (மூலவர் 3)
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
பேய் ஆழ்வார் 1
திருமழிசையாழ்வார் 1
தொலைபேசி+91 44 – 2844 2462, +91 44 2844 2449.

திருவல்லிக்கேணி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

Google Map

திருவல்லிக்கேணி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவல்லிக்கேணி தொடர்பான நம் பதிப்புகள்

கோவில் பற்றி

திருவேங்கடவனால் காட்டப்பட்ட எம்பெருமான், ஆதலால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று. வலதுபுறம் ருக்மிணி  பிராட்டியுடன் தெற்கே பலராமன், இடது புறம் ஸாத்யகி, வடக்குப்புறம் அநிருத்தன், பிரத்யும்னன் இவர்களோடு குடும்ப சகிதமாக கிழக்கு நோக்கி 9 அடி உயரம் கொண்ட நின்ற திருக்கோலம்.  108 திவ்ய தேசங்களிலே தன் குல வழக்கப்படி பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்றுதான். மார்கழி மாதம் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை மட்டும் இவரை மீசை இல்லாமல் சேவிக்க முடியும். மூலவர் திருவடிகளில், அனந்தாழ்வான், நின்றால் திருவடியாம் என்பதைக் காட்டும் திருக்காட்சியை காணலாம்.

இங்கு பார்த்தசாரதி எம்பெருமான், இரண்டு திருக்கரங்களுடன் தான் காட்சி அளிக்கிறார். ஒரு திருக்கரத்தில் சங்கும், இன்னொரு திருக்கரத்தால், திருமலையில் உள்ளது போல் தன் திருவடியைக் காட்டியபடி சேவை சாதிக்கிறார். தன் முக்கிய ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமல் காட்சி தருகிறார். மஹாபாரத போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால், போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.

கண்ணன் அர்ஜு னனுக்குத் தேரோட்டியாக இருந்த போது, பீஷ்மர் விட்ட அம்புகளை ஏற்றுக் கொண்டதை காண்பிக்க இன்றைக்கும், பார்த்தசாரதி (உற்சவர்) திருமுகத்தில் வடுக்களைக் காணலாம். அதனால் இந்த கோவிலில் செய்யப்படும் பிரசாதங்களில் அதிகம் நெய் சேர்க்கப்படுகிறது. இங்கு உற்சவ மூர்த்தி கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும், அதிகமாக ஈடுபட்டு வந்த ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளில் திருஅரங்கம்,  திருப்பதி, மற்றும் காஞ்சி தேவப் பெருமாள் என்ற மூன்று ஸ்தலங்களின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய  ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,  ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்,  ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்” என்ற ஸ்லோகம் உள்ளது. அந்த முக்கிய திவ்யதேசங்களான வேங்கடம், அரங்கம், கச்சி என்ற மூன்று எம்பெருமான்களையும் இந்த ஒரு இடத்திலேயே தரிசிப்பது ஒரு சிறப்பு. (ஸ்லோகத்தில் உள்ள மற்றொரு திவ்யதேசமான மேல்கோட், 108 திவ்யதேசங்களுக்குள் இல்லை).

ஒரே கோவிலில் உள்ள ஐந்து மூலவர்களும் ஆழ்வார்களிடம் இருந்து பாடல் பெற்ற ஸ்தலம் இது ஒன்று தான். ராமர், ரங்கநாதர், நரசிம்மர், வரதராஜர், பார்த்தசாரதி என்ற ஐந்து எம்பெருமான்களுக்கும் தனியே பாசுரங்கள் பெற்ற திவ்யதேசம். இவர்களில், பார்த்தசாரதியை நின்ற திருக்கோலமாகவும், நரசிங்க பெருமானை அமர்ந்த திருக்கோலமாகவும், ரங்கநாதனை சயன திருக்கோலமாகவும், ராமனை நடந்த திருக்கோலத்திலும், வரதராஜனை பறந்த திருக்கோலத்திலும் சேவிக்கலாம் என்று சொல்வார்கள்.

நித்யம் கருட சேவை சாதிக்கும் பெருமாள் என்று இந்த கஜேந்திர வரதராஜ பெருமாளை கூப்பிடுகிறார்கள்.

திருப்பதியில் வராக பெருமாள் ஸ்தலத்து பெருமாளாக இருப்பது போல், இங்கு ஸ்தலத்து பெருமாள், மன்னாத பெருமாள் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் ஆவார். ரங்கநாதர் நான்கு திருக்கரங்களுடன் ஒரு ஆயுதமும் இல்லாமல் சயனித்து காட்சி அளிக்கிறார்.

இக்கோயிலிலுள்ள யோக நரசிம்மர் யோகபீடத்தில் வீற்றுஇருந்த திருக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சி அளிக்கிறார் அங்கு அவரை வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை முகத்தில் தெளித்தால், அந்த தீர்த்ததை அருந்தினால், பீடித்திருக்கும் “துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள்” போன்ற பாதிப்புகள் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் எந்த சப்தமும் வரக்கூடாது என்பதால், இந்த சந்நிதியில் உள்ள மணிகளில் நாக்கு கிடையாது.

இங்கே, பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனி வாயில்கள், கொடிமரங்கள் உற்சவங்கள் உண்டு. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.

ஐப்பசி மாதம் திருமூல நட்சத்திரத்தில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் தெப்போத்ஸவம் மாசி மாதம் ஏழு நாட்கள் நடைபெறுகின்றன. பார்த்தசாரதிக்கு 3 நாட்கள், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதருக்கு தலா ஒரு நாள் என்று ஐந்து எம்பெருமான்களும் வெவ்வேறு தினங்களில் தெப்பத்தில் இருந்து தரிசனம் தருகிறார்கள். தெப்பத்திலேயே ஒரு நாள் பார்த்தசாரதிக்கு நடைபெறும் திருமஞ்சனம் மிகவும் விசேஷம்.

வேதவல்லி தாயார், வரதராஜர், நரசிம்மர், ஆண்டாள், ராமர், ரங்கநாதர், சக்ரத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், இராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் சன்னதிகள், பிரகாரத்தில் உள்ளன.

ஆனந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம் என்று ஐந்து விமானங்களுடன், இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ள கைரவிணி (அல்லிக்கேணி) என்ற தீர்த்தமும் அடங்கிய திருத்தலம். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், இந்த தீர்த்தத்தில் (குளத்தில்) மீன்கள் வசிப்பதில்லை. அழகிய அல்லிமலர்கள் நிறைந்த குளத்தை கொண்டதால், திரு அல்லிக் கேணி என்ற பெயர் வந்தது என்பர்.

இக்கோவிலில், சக்கரை பொங்கல் பிராசாதம் மிகவும் பிரசித்தமானது.

Thanks to friends and relatives who shared the video through whatsapp Group.
தமிழ்
மாதம்
ஆங்கில
மாதம்
திருவிழாக்கள்
சித்திரை Apr-May ப்ரம்மோத்ஸவம், உடையவர் உற்சவம்
வைகாசிMay-Jun வசந்தோத்ஸவம், கஜேந்திரவரதர்உற்சவம் , ரங்கநாதஸ்வாமி வேதவல்லி உற்சவம்
ஆனி Jun-Julஸ்ரீ நரசிம்ம சுவாமி ப்ரம்மோத்ஸவம் மற்றும் கோடை உற்சவம்
ஆடி Jul-Augகஜேந்திரமோக்ஷம், பார்த்தசாரதி ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, திருஆடிப்பூரம்
ஆவணி Aug-Sep பவித்ரோத்ஸவம் ஸ்ரீ ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜெயந்தி
புரட்டாசி Sep-Octநவராத்திரி, வேதவல்லி தாயாருக்கு லக்ஷார்ச்சனை, புரட்டாசி சனி
ஐப்பசி Oct-Novஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம், தீபாவளி, அன்னக்கூட உற்சவம்
கார்த்திகை Nov-Decகார்த்திகை தீபம்
மார்கழி Dec-Janமார்கழி பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து
தை Jan-Febபார்த்தசாரதி பெருமாளுக்கு லக்ஷார்ச்சனை, ரத சப்தமி
மாசி Feb-Marமாசி மகம், தெப்போத்ஸவம்
பங்குனி Mar-Apr பங்குனி உத்திரம், ஸ்ரீ ராம நவமி

புகழ் பெற்ற மனிதர்களான “சுவாமி விவேகானந்தர்”, “மகாகவி பாரதியார்”, “கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம்” போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர். தியாகப்ரம்மம், முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாரதியார் இந்த எம்பெருமானைப் பாடி உள்ளார்கள்.

சுவாமி விவேகானந்தர், பார்த்தசாரதியின் பக்தர். 1893 ஆம் ஆண்டில் தனது சீடரான அலசிங்காவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘திருவல்லிக்கேணியின் பார்த்தசாரதி பகவான் முன் சிரம் தாழ்ந்து (குனிந்து), ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் தியாகத்தை செய்ய முன் வாருங்கள், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் பார்த்த சாரதி இறைவன் அவ்வப்போது வருகிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அவர்களை நேசிக்கிறான்’ என்று எழுதி உள்ளார். அவரது சீடருக்கு எழுதிய இந்த கடிதத்தை கோவில் நடைபாதையில் சுவர்களில் ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளதை இன்றும் காணலாம்.

ஸ்தல வரலாறு

வேத வியாசருக்கு, ஆத்ரேய முனிவர் என்னும் ஒரு சீடர் இருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி, தவம் செய்ய பிருந்தாரண்யத்திற்கு வந்தார். அப்பொழுது வியாசரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகம் ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த விக்ரகம் ஒரு திருக்கரத்தில் சங்குடனும், மற்றொரு திருக்கரத்தை தன் திருவடியில் சரணம் அடைய சொல்லி அருள் புரியும் வண்ணமும் விளங்கியது.

சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப் பெருமாளை வழிபட்டு, பார்த்தனுக்கு சாரதியாக தேரோட்டிய கண்ணனாக எம்பெருமானை தரிசிக்க விரும்புவதாக பிரார்த்தித்து தவம் செய்ய தொடங்குகிறார். தவத்தின் பலனாக ஸ்ரீனிவாசப் பெருமாள் வானில் தோன்றி, மன்னன் விரும்பிய தோற்றத்துடன் கைரவிணி தீர்த்தம் உள்ள பிருந்தாரண்யத்தில் எழுந்தருளி உள்ளேன் என்றும் அங்கு சென்று தரிசிக்கவேண்டும் என்றும் சொன்னார். சுமதி என்ற மன்னனும் அவ்வாறே செய்தான் என்பது வரலாறு. சுமதி என்னும் மன்னனின் விருப்பத்திற்கு இசைந்து, ஆத்ரேய முனிவர் பிரதிஷ்டை செய்த எம்பெருமானே இங்கு வேங்கட கிருஷ்ணனாக / பார்த்தசாரதியாக எழுந்து அருளி உள்ளார்.

அத்ரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்து அருளினார்.

மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன், பரத சத்ருக்னரும் பின் தொடர்ந்தனர்.

சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்கு உகந்து கஜேந்திரவரதர் கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.

திருமகள் இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின் குடிசைக்கருகில் குழந்தையாய் அவதரிக்க, வேதங்களில் கூறப்பட்ட தேவ பெண் இவளே என்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளான இந்த வேதவல்லியை திருமணம் புரிந்து ரங்கநாதராக இங்கேயே எழுந்து அருளி ஏற்றுக் கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே என் கணவர் (மந்நாதர்) என்று கூறியதால், மந்நாதர் என்ற பெயரும் இந்த ரங்கநாதருக்கு உண்டு. இங்கே உள்ள தனிக்கோவில் நாச்சியாரான வேதவல்லித் தாயார், இந்த மந்நாதரான ரங்கநாதனுக்குத் தேவி.

ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள்

முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இந்த எம்பெருமான்களைப் பாடி உள்ளார்கள்.

தெள்ளிய சிங்கம் ஆக அவதரித்த தேவன் என்று ஆழ்வார் அழைத்ததால் திருவல்லிக்கேணியில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளை “தெளிசிங்கப்பெருமாள்” அல்லது தெள்ளிய சிங்க பெருமாள் என்று திருநாமம் கொண்டு அழைப்பர். ‘துளசிங்கப் பெருமாள்’ என்று அழைப்பது பிழை ஆகும்.

திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில் (2.3.1) பாசுரத்தில், “விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ, செற்றவன் தன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை, சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே” என்று பார்த்த சாரதியையும்,

பெரிய திருமொழியில் (2.3.7) பாசுரத்தில், “பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும், இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவண அந்தகனை எம்மானை,” என்று ராமரையும்,

பெரிய திருமொழியில் (2.3.8) பாசுரத்தில், “பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம், ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதற்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே” என்று நரசிம்மரையும்,

பெரிய திருமொழியில் (2.3.9) பாசுரத்தில் “மீன் அமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த, கான் அமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை, தேன் அமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே” என்று கஜேந்திர வரதனையும் பாடி உள்ளார்.

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில், (35), “தாளால் உலகம் அளந்த அசைவே கொல், வாளா கிடந்து அருளும் வாய்திறவான், – நீள் ஓதம்வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்து தலைவாய் நாகத்தணை” என்று பள்ளிகொண்டு காட்சி கொடுக்கும் ரங்கநாதனைப் பார்த்து, வாமனனாக இந்த உலகத்தை அளந்ததால் வந்த களைப்பின் மிகுதியால், பேசாமல் இந்த கடற்கரையில் ஐந்து தலை நாகத்தின் மேல் அயர்ந்து சயனித்துக் கொண்டுவிட்டாயோ என்று பாடி உள்ளார்.

ஸ்ரீ பிள்ளைலோகச்சாரியார் தனது “ராமானுஜ திவ்யசரிதம்” என்ற படைப்பில், ஸ்வாமி ராமானுஜரின் தந்தை ஸ்ரீ அஸூரி கேசவ சோமயாஜி, திருவல்லிகேணியில் உள்ள கோயில் குளத்தில் புத்ரகாமேஷ்டி யாகத்தை நிகழ்த்தினார் என்றும், அவருக்கு புத்திர பாக்கியம் வேண்டி இந்த எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்தார் என்றும் எழுதி உள்ளார். பார்த்தசாரதி எம்பெருமான் ஸ்ரீ அஸூரி கேசவ சோமயாஜியின் கனவுகளில் தோன்றி, மனிதகுலத்தின் நலனுக்காக தனது கீதையின் போதனைகளை வழங்க, தானே அவருக்கு மகனாகப் பிறப்பதாக உறுதியளித்தார். பார்த்தசாரதிப் பெருமானே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது. பின் காலத்தில் ஸ்ரீ ராமானுஜரால் கீதா பாஷ்யம் என்ற நூல், பகவத் கீதை பற்றிய மதிப்பாய்வு மற்றும் வர்ணனைகளை உள்ளடக்கி எழுதப்பட்டது.

திருவிழாக்களின் போது மேற்கண்ட மரபுக்கு இணங்க, மற்ற ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்களைப் போல் அல்லாமல், ஸ்ரீ ராமானுஜர் காலையிலும் மாலையிலும் தனியே புறப்பாடு காண்பார். அதாவது பார்த்தசாரதி எம்பெருமான், அவரே ராமானுஜராக அவதரித்ததால், ராமானுஜருடன் சேர்ந்து புறப்பாடு காண்பதில்லை.

இப்படி குடும்பத்துடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மங்களம் பாடும் போதும், “ப்ருந்தாரண்ய நிவாஸாய, பலராம அநுஜாய ச, ருக்மிணி ப்ராண நாதாய, பார்த்தஸூதாய மங்களம் என்று எல்லோருக்கும் சேர்த்து வணக்கம் செலுத்தி, அவர்களுடைய பரிபூர்ண அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தித்து, இந்தத் திருத்தலம் பற்றிய மேல் விவரங்கள் கிடைத்தால், திரும்ப வந்து பதிவு செய்வோம் என்றும் கூறி, இந்தப் பதிவில் இருந்து இப்போது விடைபெறுவோம். நன்றி.

059 திருஎவ்வுள் (திருவள்ளூர்) Thiruvallur

கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஎவ்வுள்
திருவள்ளூர்
புண்ணியாவர்த்த க்ஷேத்திரம்
விஷாரண்யக்ஷேத்திரம்
மூலவர்வீரராகவ பெருமாள்,
வைத்யவீரராகவப்பெருமாள் ,
க்ரும்க்ருஹேசன்
உத்ஸவர் வீரராகவ பெருமாள்
தாயார்கனகவல்லி,
வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்)
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 11
திருமழிசையாழ்வார் 1
தொலைபேசி+91 44-2766 0378, +91 97894 19330

கோவில் பற்றி

இந்த திவ்யதேசத்திற்கு திருவள்ளூர் என்பதே பிரசித்தமான பெயர். சென்னை திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 50 கீ மீ தூரத்தில் உள்ளது.

சாலிஹோத்திரர் முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி கிழக்கே திருமுகம் வைத்து காட்சி அளிக்கிறார். மூலவர் சுமார் 15 அடி நீளமும் 5 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக எழுந்து அருளி உள்ளார். மூலவருக்கு சந்தனத்தில் மட்டுமே திருமஞ்சனம். இந்த எம்பெருமானுக்கு திருக்கோவிலில் கிடைக்கும் பப்பிளி துப்பட்டி என்ற மேல் வஸ்திரம் வாங்கி சாத்தலாம்.

எம்பெருமானுக்கு வடமொழியில் கிங்க்ருஹேசன், என்னும் திருநாமம். அதுவே தமிழில் எவ்வுள் கிடந்தான் என்னும் திருநாமமாக மாறியது.

இந்த தாயாருக்கு வசுமதி என்றும், கனகவல்லித் தாயார் என்றும் திருநாமங்கள் உண்டு. அவருக்கு தனி சன்னதியும் உண்டு.

இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னதிகள் பிரசித்தி பெற்றவை.

இந்த திருத்தலத்தில் உள்ள விமானம், விஜயகோடி விமானம் ஆகும்.

இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால் புண்யாவர்த்த க்ஷேத்ரம் என்று பெயர்.

அமாவாசை அன்று இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, குளத்தில் வெல்லம் கரைத்து, இந்த எம்பெருமானை சேவித்தால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வீரராகவன், வைத்ய வீரராகவனாக கருணை புரிவான் என்பது ஐதீகம். தை அமாவாசை அன்று இங்கு பக்தர்கள் பெருந்திரளாக கூடியிருந்து நீராடுவர்.

ஹ்ருதபாபநாசினி என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஹ்ருதயத்தில் உள்ள பாபங்களை கூட நாசம் செய்யவல்ல இந்த திருக்குளம் கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படும்.

இத்தீர்த்தமும் திருக்கோவில் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும்.

தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
தரிசித்தபடி சிவன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.

தைமாத ப்ரமோத்ஸவம், சித்திரை மாதம் ப்ரமோத்ஸவம் பத்து நாட்கள் என்று சிறப்பாக கொண்டப்படுகின்றன. பவித்ரோத்ஸவம் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Google Map

திருவள்ளூரைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

Thanks to friends from whatsapp group for all the images

ஸ்தல வரலாறு

இது பல சரித்திரங்கள் கொண்ட புண்ணியம் நிறைந்த திவ்யதேசம் ஆகும்.

க்ருதயுகத்தில் புரு புண்ணியர் என்பவர் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டி சாலி எனப்படும் நெல்மணிகளால் செய்யப்படும் சாலியக்ஞம் என்னும் யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் தோன்றின மகாவிஷ்ணு அவரின் யாகத்தை மெச்சி, அவரது விருப்பனான புத்திர பாக்கியத்தையும் அளித்தார். சாலி யக்ஞம் செய்து புத்திரப்பேறு பெற்றதால், சாலிஹோத்ரன் என்ற பெயருடன் பிரசித்தி பெற்று, தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இந்த திவ்யதேசத்தை அடைந்தார். இங்கு, பல ரிஷிகள், தவம் செய்வதும், இங்குள்ள ஹ்ருதபாபநாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடி செல்வத்தையும் பார்த்து, இங்கேயே தங்கி எம்பெருமானிடம் பக்தியுடன் தொண்டு செய்து வந்தார். அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு அமுது படைத்து அதனை அதிதிக்கு கொடுத்த பின்னே தான் உண்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், தானே ஒரு முதியவர் ரூபத்தில் அதிதியாக வர, தாம் வைத்திருந்த மாவில் ஒரு பகுதியை சாலிஹோத்ரர் கொடுத்தார். அதை உண்ட பின்பும் தமது பசி அடங்கவில்லை என்று முதியவர் கேட்க தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் மிகவும் களைப்பாக உள்ளது என்றும், படுக்கச் சற்று இடம் வேண்டும் என்றும், எங்கு படுக்கலாம் என்றும் கேட்டது “எவ்வுள்” என்பதால், இந்த திருத்தலம் திரு எவ்வுள் என்று ஆனது.

சாலி ஹோத்ரர் அங்குள்ள ஒரு இடத்தைக் காட்டி, “இந்த அறையில் சயனிக்கலாம்” என்று சொல்ல, தனது முதிய சொரூபத்தை மாற்றி, எம்பெருமான் கிழக்கே திருமுகம் வைத்து சயனித்தார். சாலிஹோத்ரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானிடம் பணிந்து நிற்க அவரும், தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து அருள்பாலித்து சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட, எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலட்சுமி வஸு மதி என்ற பெயரில், தர்மசேனபுரம் என்னும் நாட்டை ஆண்ட திலீப மகாராஜாவுக்குப் பெண்ணாக அவதரித்து, இந்த எம்பெருமானை மணம் முடித்ததாக வரலாறு.

ஒரு சமயம் சிவனை அழைக்காது அவரது மாமனார் தட்சன் யாகம் செய்ய, அவனுக்குப் புத்திமதி கூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவளின் பயணம் பயனில்லாது போயிற்று. இதனால் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும் போராட்டம் உண்டாகி பின்பு சிவன் தனது நெற்றியின் வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி தட்சனை அழித்தான்.

பிரம்ம வித்தான தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவனுக்கு ஏற்பட்டது. அதனில் இருந்து விடுபட, சிவன் இத்திருத்தலம் வந்து திருக்குளத்தில் நீராடி, எம்பெருமானை வணங்கியதால், சிவனுக்குப் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு.

பயங்கர ரூபங்கொண்ட மது கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகசியத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலிடம் வேண்டினார். திருமால், இவ்விருவரையும் போர் செய்து ஓட விட்டார். அவர்கள் சூர்ய சந்திரர்களின் ஒளியை மறைத்து இந்த உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ, இருவரும் ஓடி ஒழிந்தார்கள்.

அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் ஹ்ருதபாபநாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினம் தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.

இந்த மது கைடபர்கள் வரலாறு, ஸ்தல புராணமாக வானமாமலை திருமய்யம் போன்ற திவ்ய தேசங்களுக்கும் சொல்லப் பட்டுள்ளன. ஓடி ஒளிந்த மது, கைடபர் மீண்டும் மீண்டும் தவம் செய்து வலிமை பெற்று பல முயற்சி செய்தார்கள் என்றோ வேறு வேறு மது கைடபர்கள் என்றோ கொள்ளலாம்.

பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில் தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை மார்க்கண்டேய முனிவரை சகல பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும், மோக்ஷத்தைத் தரக் கூடிய எம்பெருமான் எழுந்து அருளியுள்ள திருத்தலம் எது என்று வினவ அவர் தேவபாகரிடம் இந்த திருத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறியதாக புராணம் கூறுகிறது.

கௌசிகன் தனது முதுமை பருவத்தில் இங்குள்ள ஹ்ருதபாபநாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தை அமாவாசை என்றும் இவனை யமலோகத்திற்கு எடுத்து சென்ற யமதூதர்கள் இவன் செய்த பாவங்களால் நரகத்திற்கு கொண்டு வந்ததாக சொல்ல, எமன் இவன் தை அமாவாசையன்று ஹ்ருதபாபநாசினி நீராடியதால் இவனுடைய பாவங்கள் தீர்க்கப்பட்டன என்றும் சொல்லி, கௌசிகனை மோக்ஷத்திற்குக் கொண்டு செல்லவும் உத்தரவு விட்டதாக புராணம் கூறும்.

ஆழ்வார்கள்

இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் இந்த திருத்தலத்தில் சயன திருக்கோலத்தில் (கிடக்கிறார்) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு உள்ளது. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.

திருமழிசையாழ்வார், நான்முகன் திருவந்தாதி (3.6) என்ற பாசுரத்தில், ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே எம்பெருமான் திருஎவ்வுள் போன்ற ஏழு திவ்யதேசங்களில் சயனித்துள்ளான் என்று சொல்லி உள்ளார். அந்த ஏழு திவ்ய தேசங்களாவன, “திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், திருவரங்கம், திருப் பேர்நகர், அன்பில் மற்றும் திருப்பாற்கடல்.

நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத்தணை அரங்கம் பேரன்பில், – நாகத் தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால், அணைப்பார் கருத்தனாவான்.

ஸ்ரீகிங்கிருஹேச ஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று எழுதி உள்ளார்.

058 திருநின்றவூர் Thirunindravoor

ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம்

திவ்யதேசம்திருநின்றவூர்
மூலவர்பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள்
உத்ஸவர் பத்தராவிப்பெருமாள்
தாயார்என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2
தொலைபேசி+91 44 5517 3417

தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.

கோவில் பற்றி

இத்தலம் சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில் உள்ளது. திருநின்றவூர் என்பதை விட திண்ணனூர் என்று சொன்னாலே பலருக்கு தெரிகிறது.

திருவாகிய மஹாலக்ஷ்மி, திருப்பாற்கடலை விட்டு இங்கு வந்து நின்றதால் இந்த திருத்தலம் திரு நின்ற ஊர் ஆயிற்று.

பக்தர்க்கு இரங்கும் பண்பினானதால், பக்தவத்சல பெருமாள் என்றும் பக்தர்கள் அவனுக்கு உயிர் ஆனதால், பக்தராவி பெருமாள் என்றும் எம்பெருமானுக்கு திருநாமம். பக்தர்களின்
உயிருக்குயிராய் இருப்பதால் பக்தராவி பெருமாள் என்றும் கொள்ளலாம்.

ஸமுத்திரராஜன் வந்து மஹாலக்ஷ்மியிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டும் போது, “என்னை பெற்ற தாயே” என்று வேண்டியதால், தாயார் திருநாம என்னை பெற்ற தாய் என்று ஆயிற்று. தெலுங்கில் ‘நன்னு கன்ன தல்லி’ என்பர்.

ஸமுத்திர ராஜன் இங்கே வந்தபோது, மேகத்திற்கு எடுத்து செல்ல சமுத்திர நீர் இல்லாததால், மழை தேவதையான வருணனும் இங்கே வந்தபோது அவனுக்கும் இங்கு எம்பெருமானும் தாயாரும் காட்சி அளித்துள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

இங்குள்ள ஆதிசேஷன் சந்நிதியில் பால்பாயசம் செய்து நிவேதனம் செய்வதன் மூலம் இராகு கேது தோஷங்கள் நீங்கும் என்று சொல்கிறார்கள்.

இராஜகோபுரம் பிரம்மாண்டமாக உள்ளது. கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னதி தாண்டி சென்றால் உள்மண்டபத்தில், எம்பெருமான் தாயாருடன் சுமார் 11 அடிஉயரத்தில் ஐந்து ஆயுதங்களுடன் சேவை சாதிக்கிறார்.

வருண தீர்த்தம் அருகில் (குளம்) ஏரி காத்த இராமர் சன்னதி உள்ளது ஆஞ்சநேயருக்கு சன்னதி உண்டு. மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரி காத்த ராமன் உள்ளார்.

ஸ்தல வரலாறு

மஹாலக்ஷ்மி ஆதிசேஷனைத் தாங்கியுள்ள தன்னுடைய தந்தையான ஸமுத்திர ராஜனுடன் கோபம் கொண்டு, இவ்விடத்து வந்து நின்றார். பிறகு ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும், மஹாலக்ஷ்மி மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் சென்று, எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும் என்றும், ஸ்ரீதேவித் தாயாரை மீண்டும் எழுந்தருளச் செய்ய அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினான். பக்தர்க்கு இரங்கும் பண்பினான பரந்தாமன், ஸமுத்திர ராஜனை முதலில் பிராட்டியிடம் செல்லச் சொல்லியும், பிறகு தான் பின்னால் வருவதாகவும் சொல்லியனுப்ப, அப்படியே ஸமுத்திர ராஜன் பிராட்டியிடம் திரும்ப வந்து, “என்னை பெற்ற தாயே, என்னை மன்னிக்கவேண்டும்” என்று வேண்டியும் திருமகள் சமாதானம் அடையவில்லை. அப்பொழுது அங்கு எம்பெருமானும் எழுந்தருளி, சமாதானம் செய்ய மஹாலக்ஷ்மி மீண்டும் வைகுந்தம் எழுந்தருள சம்மதித்தார். எம்பெருமானும் பிராட்டியும் ஸமுத்திர ராஜனைக் நோக்கி, என்ன வேண்டும் என்று
கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து இங்கேயே நின்றிருக்க வேண்டும் என்று வேண்ட அப்படியே திருமகளும், திருமாலும் அருளினார்கள்.

குபேரன் தன் செல்வதை இழந்தபோது, இந்த திருத்தலத்தின் என்னை பெற்ற தாயாரை வணங்கி செல்வதை திரும்ப பெற்றான் என்று ஒரு வாய்வழி செய்தியும் உள்ளது.

இந்த எம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் வேண்டிக்கொண்டவர்களுக்கு அவர்களது பிரார்த்தனை ஈடேறுகிறது என்பதற்கு உதாரணம் இராமானுஜரின் மூத்த சகோதரிக்கு ராமபிரானின் அம்சமாக முதலியாண்டான் என்ற ஆசார்யன், அவர்களின் தாய் தந்தை இந்த எம்பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டதால், பிறந்து அந்த பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்தது.

Google Map

திருநின்றவூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருநின்றவூர் பற்றி தினம் ஓர் திவ்யதேசம்

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் வடக்கில் இருந்து தொடங்கி, திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது எம்பெருமான் மஹாலக்ஷ்மியையே பார்த்துக் கொண்டு இருந்து, ஆழ்வாரை பார்க்காமல் இருந்ததால், இத்தலத்தின் வழியாகச் சென்றும் ஆழ்வார் இதனைப் பாடாது சென்றார். இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை ஆழ்வாரிடம் உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கை ஆழ்வார் திருவள்ளூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் திருவிடந்தை சென்று அதையும் தாண்டி, திருக்கடல்மல்லைக்கு (மாமல்லபுரம்) சென்று விட்டார். திருக்கடல் மல்லை திவ்யதேசத்தை பாடும் போது, அங்கு திருநின்றவூர் எம்பெருமானைக் கண்ட திருமங்கையாழ்வார், “நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்று பக்தராவிப்பெருமாள் வந்து நின்றதை நான் கண்டது திருக்கடல்மல்லையில் என்று (பெரிய திருமொழி 2.5.2) பாடி உள்ளார்.

பாடல் பெற்றுவந்த எம்பெருமானை நோக்கிய பிராட்டி, ஒன்று தானா என்று கேட்க எம்பெருமான் மீண்டும் பாடல் பெற திருமங்கை ஆழ்வாரை தேட, அதற்குள் அவர் திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். திருநின்றவூர் எம்பெருமான் அங்கு வர, திருக்கண்ணமங்கை எம்பெருமானை பாடும் போது, திருநின்றவூர் பெருமாள் நிற்பதைக் கண்ட ஆழ்வார் “நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை, காற்றி னைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே” என்று திருநின்றவூர் எம்பெருமானை, திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவு கொண்டு எழுந்து அருளி இருப்பவன் என்றும், அவன் காற்றினும் மேலாக வந்த வேகத்தைக் குறித்தும் பெரியதிருமொழியில் (7.10.5) திருக்கண்ணமங்கை எம்பெருமானுடன் சேர்த்து மங்களாசாசனம் செய்து உள்ளார்.

Thanks to friends from whatsapp group for all the images

RSS
Follow by Email