திருவேங்கடமுடையான் நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

 • த்வய மஹாமந்திரத்தின் முதல் பகுதி, (6.10) – 11 பாசுரங்கள்
 • த்வய மஹாமந்திரத்தின் இறுதி பகுதி, (3.3) – 11 பாசுரங்கள்
 • திருவாய்மொழியில், திருவேங்கடவனை பற்றிய மற்ற பாசுரங்கள். (18)

இனி பெரியாதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காண்போம். நன்றி

பெரிய திருவந்தாதி

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல் என்று ஓழிந்தன கொல் ஏ பாவம், வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனது உள்ளத்து அகம். (68)

எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்தோடு தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரமாக இருக்கும் நிலையை இந்த பாடலில் ஆழ்வார் சொல்கிறார். இந்த பாசுரத்தில் முதல் வார்த்தையான கல் என்பது திருமலையை குறிக்கும் என்பதால், இந்த பாசுரம் திருவேங்கடமுடையனுக்கு என்று நம் பெரியவர்கள் கூறுவர்.

வெல்ல நெடியான் என்றது நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாது இருப்பவன் என்று சொல்கிறார். அவன் தானே, தன் அருளாலே தடை செய்வார் இல்லாமையாலே வந்து புகுந்தான் என்கிறார். வெல்ல நெடியான் என்பதற்கு வெல்வதற்கு முடியாதவன் என்றோ ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்றோ பொருள் கூறுதல் இங்கே சிறப்பாக இருக்காது.

வந்து புகுந்ததாகத் தோன்றுவது மட்டும் இல்லாமல், மெய்யே (உடம்போடும்) வந்து புகுந்தான் என்பதை தெரிவிப்பதற்காக நிறங்கரியான் என்று திருமேனியையும் கண்டறிந்து பேசுகிறார். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேன் இறையும், அகலகில்லேன் இறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “அகலகில்லேன் இறையும், அகலகில்லேன் இறையும்” என்று தானே சொல்லிக் கொண்டு, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறான் என்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று பாடுகிற அழகு மிகவும் ரசிக்கத் தக்கது.

எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், திருவேங்கடமலை முதலான உகந்து அருளினை இடங்களில் இருப்பதை காட்டிலும் மெய்யடியாருடைய இதய கமலத்திலே வாழ்வதே சிறந்தது என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் எம்பெருமான் தங்குகின்றான் என்றும், அதனால், பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாகவும் பக்தருடைய இதயத்தில் வாஸமே அவனுடைய இலக்காக இருக்கும் என்றும், இது நடந்து விட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் அவனுடைய ஈர்ப்பு குறைந்து விடும் என்றும் ஸ்ரீவசன பூஷத்தில் பிள்ளையுலகாசிரியர் பரம ரஸமாக அருளிச் செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டே என்று உணர வேண்டும்.

கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தன கொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை, என்ன சொல்வது, இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியாகிற நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே! ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவர்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயினும், ஏதோ பாக்ய விசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசுரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சிறிது நேரம் நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இந்த உலகத்தில் பெற்றதொரு கனத்த பேறாம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேண்டும் என்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும் என்பது சாதாரணமாக மலையைச் சொல்வது, அது இங்கே சிறப்பாக திருவேங்கடமலையைச் சொல்கிறது. கனைகடல் என்பது சப்தம் செய்யும் என்ற அர்த்தத்தில், எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றான் என்கிற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கிறது. “புல் என்று ஒழிந்தன கொல்” என்பதற்கு அற்பத்தனமடைந்து என்ற பொருளில், எனது நெஞ்சின் முன்னே அவை எல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்று வருகிறது. அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு நின்றதால், அவை புல் மூடிப் போயினவோ என்று சிலர் சொல்வதும் உண்டு. சிறந்த ஸ்தலங்கள் என்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது, ஐயோ பாவம்!! என்று சொல்வது போல் “ ஏ பாவம்” என்று சொல்லப்பட்டது.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு“தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்” என்ற இரண்டு பாசுரங்களின் கருத்தும் இப்பாசுரத்தின் இரண்டாம் அடியின் கருத்துடன் நினைவு கொள்ளலாம்.

மீண்டும் இன்னொரு பாசுரம், இன்னொரு ஆழ்வார் என்று சந்திக்கலாம், நன்றி.

திரு வடமதுரை – ஆண்டாள்

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர்.

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.

பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, தனியாக ஒரு கோவில் என்றில்லாமல் அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி கொண்டாடி விட்டார்கள். இந்த பதிப்பினில் திருவடமதுரா திவ்யதேசத்தை கொண்டாடும் ஆண்டாள் பாசுரங்களை நாம் சிறிது காணலாம்.

ஆண்டாள் திருப்பாவை

1மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை, தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி மனதினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினுள் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் – திருப்பாவை 5 தனது திருஅவதாரத்தினால் தன் தாயாருக்கு மேன்மை அளித்த, யமுனை நதிக்கரையில் உள்ள வடமதுரையில் பிறந்த ஆச்சர்யமானவனை, தூய உள்ளதோடு வந்து, தூய மலர்களை தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்தித்தால், நாம் செய்த தவறுகளால் நமக்கு ஏற்பட்ட பாவங்களும், நம்மிடம் வந்து சேர வேண்டும் என்று காத்திருக்கும் பாவங்களும் தீயிலிட்ட தூசு போலாகிவிடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

1மாட மாளிகை சூழ் மதுரைப் பதி, நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு ஓடை மாமத யானை யுதைத்தவன் கூடுமாகில் நீ கூடிடு கூடலே 4.5குவலயா பீடமென்னும் யானையை முடித்த கண்ணன், மாட மாளிகைகளாலே சூழப்பட்ட (திருவட)மதுரை மாநகரிலே நம் வீட்டைத்தேடி, நம் தெருவிற்கே வந்து நம்மை கட்டுவானாகில் கூடிடு கூடலே என்று ஆண்டாள் பாடுகிறார். ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர். கண்ணன் திருவாய்ப்பாடியில் இருந்து வருவதாகவும், ஆண்டாள் திருவடமதுரையில் இருப்பதாகவும் விளக்கம் செய்வார்கள். திருவடமதுரை செழிப்புடன் இருப்பதையும் நோக்கலாம்.
2அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால் செற்றவன் திகழும் மதுரைப்பதி கொற்றவன் வாரில் கூடிடு கூடலே 4.6முன்னமே, “ஆண்டாளுக்கானவன் இவன்” என்று அற்றுத் தீர்த்தவன் என்றும், மருத மரங்கள் முறிந்து விழும்படி, தவழ் நடை கற்றவன் என்றும், கம்சனை வஞ்சனையில் கொன்று தீர்த்தவன் என்றும் விளங்குகின்ற மதுரை நகரத்தின் மன்னனான கண்ணன் வருவானாகில் கூடலே கூடிடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை. கண்ணன் உக்ரஸேந மஹாராஜனை விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்து வைத்தாலும், திகழும் மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனே ஆனாலும், கண்ணனே மன்னன் என்பது ஆண்டாளுடைய வாதம் ஆகும்.
3கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள, மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் 6.5பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லோரும் நோக்கிக் கொண்டிருக்கும்படி மிக்க அழகு வாய்ந்த மாதர்கள் தீபங்களையும் பூர்ண கும்பங்களையும் ஏந்திக்கொண்டு எதிர்கொண்டு வர, மதுரா ராஜ்யத்திற்கு அரசனான கண்ணன், பாதுகை சாத்திக்கொண்டு பூமி அதிரும்படி நடநது வருவதை கனவில் கண்டேன் என்று ஆண்டாள் கூறுகிறார்.
அதிர புகுந்த என்ற இடத்திற்கு ஒரு ஐதீகம் அருளி செய்வர். மஹாபலியின் யாக பூமியில் ஸ்ரீவாமனன் நடந்த போது பூமி நெளிந்தது என்று ஒரு நூலில் இருக்க அதற்கு என்னபொருள் என்று சொல்லும் போது, பட்டர் என்னும் ஆச்சார்யர் அருளிச்செய்வதாவது, ‘ யாசகம் செய்ய வந்த பதற்றத்தாலே பூமியில் திருவடிகளை பதித்ததால் பூமி நெளிந்தது என்றும், பூமிக்காக, இப்படி பதறியவன், பெரியாழ்வார் திருமகளை பெற எங்கனே பதறாமல் இருப்பான் என்பார்.
4தடவரையின் மீதே சரற்கால சந்திரன் இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே 7.3சரத்காலத்தில் முழுமையாக நிரம்பின பூரணசந்திரன், உதயகிரியின் மேல் வந்து தோற்றினால் போல், ஸ்ரீ பாஞ்ஜசந்நியமே ! நீயும் கண்ணனது, திருக்கரத்தின் மேலே அழகாக வீற்றிருந்து தோன்றுகின்றாய், உனது பெருமையே பெருமை என்று ஆண்டாள் கொண்டாடுகிறாள். வாசுதேவன் என்றது, வஸுதேவருடைய புத்திரன் என்றும், எங்கும் நிறைந்த கடவுள் என்றும் பொருள்படும்.
5மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி மற்பொருந்தாமற் களமடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் 12.1 எம்பெருமானை இப்பொழுதே பெற்று விட வேண்டும் என்று வருந்தி இருக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் தாயும் ‘அம்மா! இது நம்மால் முடிவதில்லை, பேறு, அவன் தான் கொடுக்க வேண்டும் என்பதே ஸித்தாந்தமான பின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே, பேறு பெறுபவர் என்று ஆனபின்பும் அதற்காக காத்து இருப்பதே முறை, அசோக வனத்தில், சீதா பிராட்டி சொன்னதும் செய்தவைகளும் உனக்குத் தெரியாததா, அவளைப் போலே நீயும் பொறுத்து இருக்க வேண்டும், நீ இப்படி பதற கூடாது’ என்று சொல்லும் போது , ஆண்டாள் ‘எனக்கு இப்போது நிகழ்கிற துன்பங்களை சிறிதும் அறியாத நீங்கள், எம்பெருமான் விஷயத்தில் எனக்கு இருக்கின்ற ஆசை, மிகவும் அதிகமாக உள்ளதால், நீங்கள் எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என் காதுகளில் புகாது. புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை. ஆகையாலே நீங்கள் எனக்கு சமாதானம் சொல்வதை விட்டுவிட்டு, “ஒருத்தி மகனாப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து, முஷ்டிக சாணுரர் என்ற மல்லர்களோடு போர் புரிந்து, வெற்றி பெற்ற கண்ணன் எழுந்து அருளி இருக்கின்ற மதுரா நகர் புறம் என்னை சேர்த்து விடுங்கள்” என்கிறாள். இதுவே இந்த பாடலின் கருத்து.
‘இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசலாமா’ என்று தாய் வினவ, அதற்கு ஆண்டாள், “அந்த கண்ணனே, பெற்ற தாயை விட்டு ஒரே இரவில் மற்றொரு இடத்தில வளர்ந்தவன் தானே”, தானும் அதேபோலே என்பது போல் உள்ளது.
ஆண்டாள், தான் கண்ணனை அணைக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கையில் , அவன் முஷ்டிக சாணுர்களுடன் உடம்போடு உடம்பு கட்டி மல் யுத்தம் செய்வதற்கு முன், தான் இடையில் சென்று கண்ணனை அணைக்கும்படி, தன்னை மதுராவிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்வதாக உரை ஆசிரியர் சொல்வது சுவாரஸ்யமான ஒன்று.
6கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக்கொலோ, கற்றன பேசி வசை உணாதே காலிகளுய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் 12.8மற்றும் சில பெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘ நீ இராமபிரானை ஆசைப்பட்டாலும் குற்றமில்லை, மாடு மேய்க்கப் பிறந்த கண்ணனைப் போய் நீ ஆசைப்படுகிறாய், அவனோ ஊரில் தங்குபவன், இவனோ மாடுகன்றுகளை மேய்ப்பதற்காக அவற்றின் பின்னே திரியும் சிறுவன்; பசுக்களுக்கு நீரும் புல்லும் உள்ள இடத்தே தங்குவான்; வெண்ணையையும் நெய்யையும் களவாடிவிட்டு உரலிலே கட்டுப்பட்டு திண்டாடுமவன், அப்படிப்பட்டவனை பெறுவதற்காகவோ நீ இப்படி துடிப்பது” என்று ஏளனமாகச் சொல்ல, அவர்களைநோக்கிச் ஆண்டாள், “அவன் கன்றுகளை மேய்த்ததும் காடுவாழ் சாதியாக வாழ்ந்ததும், உரலிடை ஆப்புண்டதும் குணமாகத் தோன்ற வேண்டியது, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோன்றுவதற்கு காரணம் உங்களுடைய பாவமேயாம், உரலோடு இணைந்திருந்தது அவன் எளிமையே, இனி நீங்கள் இப்படிப்பட்ட தீய வார்த்தைகளை என் காதில் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன். அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது அந்த மழையைத் தடுத்து அனைவரையும் காத்த கோவர்த்தன மலையின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்கிறாள்
7பட்டி மேய்ந்தோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீர் இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே 14.1
சிறையில் இருப்பவர் போல், பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும், ஸேனை முதலியார் பிரம்பின் கீழிலும், பெரியதிருவடி சிறகின் கீழிலும், ஒடுங்கி இருக்கின்ற எம்பெருமான் இந்த பூவுலகில் தடை செய்வார் யாரும் இல்லாதபடி, எல்லா சுதந்திரத்துடன் திரிந்து விளையாடி நீங்கள் கண்டதுண்டோ என்று கேட்டுக்கொண்டு, தனக்கு மிகவும் பிடித்தமான பசுக்களைப் புல்லும் தண்ணீரும் உள்ள இடங்களிலே அழைத்து சென்று, மிக்க சந்தோஷத்துடன், விளையாடும் பிருந்தாவனத்தில் காணலாம் என்று பதில் கொடுக்கும் விதமான அமைந்துள்ள பாசுரம்.
பெண்களிடத்தில் நிச்சலும் தீமைகள் செய்து திரியும் கண்ணன், பலராமனிடத்தில் பவ்யமாக இருக்க காரணம், கண்ணனுக்கு பிடித்த விஷயங்களிலே அவனுக்கு துணையாக அவன் நினைத்தபடி இருப்பதால் என்று உரையாசிரியர் கூறுவர்
8அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே 14.2
என்னைப் பிரிந்து, அதனால் நான் மிகவும் தளர்ச்சியடையும்படி, திருவாய்ப்பாடி முழுதையும் கொள்ளை கொண்டு திரிபவனை, “வெண்ணெயளைந்த குணுங்கு” நாற்றம் கமழும் கண்ணனைக் கண்டதுண்டோ என்று கேட்டு, மின்னலும் மேகமும் சேர்ந்ததது போல், எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்ற வனமாலை அசைய “தன்னோராயிரம் பிள்ளைகளோடு” விளையாடும் விருந்தாவனத்தே கண்டோம் என்று பதில் கூறும்விதம் அமைந்த பாசுரம்.
9மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.3பெண்களிடத்தில் உள்ள மோகமே ஒரு வடிவுகொண்டது போல் இருப்பவனும், ஸகல குணங்களாலும் பரிபூர்ணனும், எல்லோரும் ஆசைப்படத் தகுந்தவனும், பொருந்தாத பொய்களைக் கூசாது கூறுபவனுமான கண்ணன் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ என்று கேட்டதற்கு, மேலே வெய்யில் படாதபடி பெரிய திருவடி தன் சிறகை விரித்து நிழல் செய்ய, அதன் கீழ் விருந்தாவனத்திலே எம்பெருமான் எழுந்தருளக் கண்டோம் என்று விடையளிப்பர் .
10கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங் கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்  ஈசன் தன்னைக் கண்டீரே போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே 14.4மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ என்றபடி திருக்கண்களாகிற வலையிலே என்னை அகப்படுத்தித் தான் போகும் இடம் எங்கும் என்னையும் (அதாவது, என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு போகும் எம்பெருமானை கண்டீர்களா என்ற கேள்விக்கு, முத்துச் சட்டை போட்டு கொண்டாற்போல் வேர்வை அரும்பிய உடலுடன் விளையாடுவதை விருந்தாவனத்திலே கண்டோம் என்று விடை அளிப்பது போல் உள்ள பாசுரம். கண்ணன் யானைக்குட்டிபோலவும், அவன் உடலில் துளிர்த்து இருக்கும் வேர்வை அரும்புகள் முத்துச்சட்டை அணிந்திருப்பது போலவும் சொல்லி இருப்பது அழகு.
11மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரே பீதக வாடை உடை தாழப் பெரும் கார்மேகக் கன்றே போல் வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.5திருமகள் கேள்வனாய், எனக்கு நீலமணி போலே அனுபவம் கொடுப்பவனாய் , வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றி போல் ஒருவர் கைக்கும் பிடி கொடுக்காதவனான பாய்ந்தோடும் எம்பெருமானை கண்டதுண்டோ என்ற கேள்விக்கு பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்து கொண்டு காளமேகக் குட்டி போல் திருவீதி நிறைய எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம் என்று விடை அளிப்பது போல் அமைந்துள்ள பாசுரம்.
12தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே உருவு கரிதாய் முகம் செய்தாய் உதயப் பருப்பதத்தின் மேல் விரியும் கதிரே போல் வானை விருந்தா வனத்தே கண்டோமே 14.6 தயை என்கிற தர்மத்தை சிறிதும் அறியாதவன் போல் குறும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டவனாய், தன் கையிலுள்ள சார்ங்க வில் போன்று வட்டமாய் அழகிய திருப்புருவங்களை உடையவனாய், உகதந்தாரோடே பொருந்தி வாழப் பெறாதவனான எம்பெருமானைக் கண்டது உண்டோ என்ற கேள்விக்கு பார்த்தவர்களின் கண்களெல்லாம் குளிரும்படி கருமை உடலுடன், செந்தாமரை போன்ற சிவந்த திருமுக மண்டலத்தை உடையவனாய், உதய பர்வதத்தின் மேலே ஆதித்யன் உதிப்பது போல் விளங்கும் கண்ணனை விருந்தாவனத்திலே கண்டோம் என்று பதில் சொல்வதைப்போல அமைந்துள்ள பாசுரம். தர்மம் என்ற வடசொல்லுக்கு, பிறர் பக்கல் இரக்கமே, பரம தர்மமாகச் சொல்லப்படுவதால், அப்படிப்பட்ட இரக்கமில்லாதவன் என்று சொல்கிறார். பர்வதம் என்பது பருப்பதம் என்று சொல்லப்பட்டது.
13பொருத்தமுடைய நம்பியைப் புறம் போலுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கருமா முகிலைக் கண்டீரே அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.7
பொருத்தமுடைய ஸ்வாமியாய் உடம்பு போலே உள்ளமும் கறுத்து நின்றவனாய், சேர்ந்து இருக்கும் காலத்திலே “பெண்ணே, உன்னை நான் விட்டுப் பிரியேன், பிரிந்தால் தரியேன்“ என்று அவன் சொல்ல அதை உண்மைதான் என்று நம்பியிருக்கிற நம்பிக்கையைப் போக்கடித்தவன் அல்லது, இப்படிச் சொல்லுகிறவன் ஒருகாலும் நம்மைவிட்டுப் பிரியமாட்டான் என்று கொண்ட கருத்துக்கு மாறாக, பிரிந்திருப்பவனாக, கறுத்த பெரிய மேகம் போன்ற கண்ணனை கண்டீர்களாக என்ற கேள்விக்கு எல்லோராலும் விரும்பப் படுகின்ற நட்சத்திர கூட்டங்கள் நிறைந்த ஆகாயம் போல், பெரும்கூட்டமாக விருந்தாவனத்தில் கண்டோம் என்று பதில் சொல்வதுபோல் அமைந்துள்ள பாசுரம்.
14வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக வாடை உடையானை அளி நன்கு உடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே களி வண்டு எங்கும் கலந்தாற் போல் கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே 14.8 வெளுத்த ஸ்ரீ பாஞ்ச சந்நியம் என்ற சங்கினை திருக்கரத்தில் உடையவனும், பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனும், பிராட்டியோடு கொண்ட சேர்த்தியினால் கருணையுடையனும் திருஆழியானை திருக்கரங்களில் கொண்டவனும் ஆன எம்பெருமானை கண்டதுண்டோ என்ற கேள்விக்கு, மது உண்டு களித்த வண்டுகள் எல்லா பக்கங்களிலும் பரந்து பரிமளிக்கின்ற அழகான திருக்குழல்களானவை திருத்தோள்களிலே விளங்க நின்று விளையாடும் கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோம், என்று விடை சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம்.
15நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே, காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே 14.9 உலகங்களில் உள்ள ஜீவராசிகளை படை(பிறப்பித்தல்) என்று ப்ரம்மா முதலியவர்களை படைத்து, அந்த நான்முகனுக்கு இருப்பிடமாக தன்னுடைய திருநாபிக்கமலத்தை தந்து, விளையாடுகின்ற எம்பெருமானை கண்டீரோ என்ற கேள்விக்கு, தேனுகாஸுர னையும் குவலயாபீடம் என்ற யானையையும், மற்றும் கம்சன் ஏவின எல்லாவற்றையும் காட்டிற்கு சென்று வேட்டை ஆடி, உடனே மடியும் படியாக செய்த கண்ணனை விருந்தாவனத்தில் கண்டோம், என்று விடை சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம்.
தேனுகாஸுரன், குவலயாபீடம், மற்றும் கம்சன் ஏவின எல்லாம் பற்பல சமயங்களில் அழித்து இருந்தாலும் , ஆண்டாளைப் பார்வையில் எல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தாற்போல், உடன் மடிய என்று சொல்வதாகவும் கொள்ளலாம்.
16பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே 14.10 பருத்த கால்களையுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த எம்பெருமானை, இந்த உலகில், பிருந்தாவனத்தில் சேவித்தமை பற்றி பெரியாழ்வார் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த இந்த பாடல்களை பிறவி பிணிக்கு மருந்தாக தங்கள் மனதில் அனுசந்தித்து கொண்டு வருபவர்கள் பெருமை மிகுந்த திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே எந்நாளும் அனுபவித்து வருவார்கள் என்று இந்த பதிகத்தை முடிக்கிறார்.
17உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே 13.8என்னுள்ளே உருகி நைந்து போகின்ற என்னை, இருக்கிறேனோ இல்லையோ என்று எல்லாம் கேட்காமல், என்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளை கொண்டவன்னான, பெண்களிடத்தில் குறும்பு செய்யும் கோவர்தனனை, ஒருக்கால் நான் காணும் போது, ஒரு பயனுமில்லாத என் மார்பகங்களை வேர் முதலாக பிடுங்கி அவன் மார்பில் எறிந்து என் ஆயாசத்தை, களைப்பினை, தாபத்தை, துக்கத்தை போக்கிக்கொள்வேன் என்கிறார். இங்கு, கிழங்கோடு என்று ஆத்மாவை சொல்கிறார். பகவத் அனுபவத்திற்கு பயனில்லாத ஆத்மா மற்றும் உடம்பினை வெறுக்கும் பக்தர்களை உவமையாக உரை ஆசிரியர் கூறுகிறார். அதேபோல் கோவர்தனனை என்ற இடத்தில் ” பெண்களை வெறும் தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறுஆயிரம் ஆக்கும் ” என்ற ஸ்ரீஸுக்தியை குறிப்பிட்டதும் ரசிக்கதக்கது .

மீண்டும் இன்னொரு ஆழ்வார், இன்னொரு திவ்யதேசம், என்ற ஒரு கருத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.

திருவடமதுரை – பெரியாழ்வார்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர்.

பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும் தனித் தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள். ஆண்டாள் இந்த திவ்யதேசத்தை பாடிய பாடல்களைப் பற்றி இங்கே கண்டோம். திரு வடமதுரா திவ்யதேசத்தை கொண்டாடும் பெரியாழ்வாரின் பாசுரங்களை இங்கே காணலாம்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

1ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார், பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று, ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. 1.1.2கோகுலத்தில், எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து, தாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஓடினார்கள்; சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; உரக்க கோஷம் செய்தார்கள்; குழந்தை எங்கே என்று தேடினார்கள்; பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்றபடி கூத்தாடினார்கள்; ஆக பஞ்சலக்ஷம் குடியில் இருந்த எல்லோரும் கோலாகலமாக இருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தால் திருவாய்ப்பாடியில் சந்தோசம் அடையாதவர் ஒருவரும் இல்லை; ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்று என்பர்.
2உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.1.1.4 கண்ணன் பிறந்த சந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டு, முற்றத்திலே கொட்டி உருட்டி விட்டு ஆடினார்கள்; நெய் பால் தயிர் முதலியவற்றை அதிக அளவில் தானம் செய்தார்கள்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள்; கோகுலத்து இடையர்கள் எல்லாரும் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்துடன் ஆடினார்கள்; நன்றாக தூவுவார் என்று சொன்னதை, நன்று ஆக தூவுவார் என்று கொண்டு, பிறந்த பிள்ளைக்கு நன்மை உண்டாகும்படி என்றும் பொருள் கொள்ளலாம்.
3வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது வான் இளம் படியர் வந்து வந்து தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப தேனளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.3.6.3கண்ணபிரானது குழலிசையைக் கேட்ட மேல் உலகத்து பெண்கள் தங்கள் இருப்பிடத்திலே இருக்கமாட்டாமல், கண்ணன் இருக்குமிடத்தில் கூட்டம் கூட்டமாக ஓடி வந்து அக்குழலோசையை நன்றாக கேட்டு அனுபவித்த பிறகு அவர்களது மனம் உருகி, கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகி பனித்தன; கூந்தல் அவிழ்ந்தது; நெற்றி வேர்த்தது; இப்படி பல மாறுதல்களுடன் அந்த இசையைக் கேட்டு மயங்கி கிடந்தனர்.
பரமபதத்தில் எம்பெருமான் நித்யஸூரிகளின் தலைவராக, அவர்களையும் நிர்வகிப்பவனாக இருப்பதை வானிளவரசு என்கிறார். “திருவனந்தாழ்வான் மடியிலும், ஸேநாபதியாழ்வான் பிரம்பின் கீழிலும், பெரிய திருவடி சிறகின் கீழிலுமாயிற்று இத்தத்துவம் வளர்வது” என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் அருளி செய்வார். அந்த நித்ய ஸூரிகள் இவன் மேலுள்ள பரிவினால் குழந்தையை கொண்டாடி, இவனுக்கு மங்களாசாஸனம் செய்வதை வைகுந்தக் குட்டன் என்கிறார்.
பரமபதத்தில் ஸ்வதந்திரர் ஒருவரும் இல்லாததால் அங்கு அவன் இளவரசராக இருப்பது அவரின் தன்மைக்கு தகும். ஆனால் இந்த உலகத்தில் உள்ளவர்கள் ஸ்வதந்திரராக இருப்பதால், அவர்களுக்கும் மன்னனாக இருப்பதை நாம், உணர மதுரை மன்னன் என்றார். இடைச்சேரியிலுள்ள பஞ்சலக்ஷம் குடிக்கும் அரசர் நந்தகோபன் என்பதால் இவனை நந்தர்கோன் இளவரசு என்கிறார்.
சென்னி என்ற சொல் தலையைக் குறிப்பதாயினும், இங்கு நெற்றியைக் குறிக்கிறது.
4வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை, தடவரை அதிரத் தரணி விண்டி அடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே. 4.7.9
தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றை எல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடிநகர் என்கிறார்.
பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளையும் குறிப்பிடுகிறார்.
5அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத்துற்று மாரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு குற மகளிர் கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.1 குறப்பெண்கள், பெரிய கண்களை உடைய, மான்குட்டியை வலையிலே பிடித்து, அதனைத் தங்களுடையதாக கொண்டு, அதற்கு பஞ்சுச் சுருளின் நுனியாலே பாலை எடுத்து ஊட்டி வளர்க்கும் இடம் ‘கோவர்த்தனம்’.
மலையாக குவிக்கப்பட்ட சமைத்த சாதமும், ஓடையாகிற தயிர் திரளும், சேறு போல் கிடக்கின்ற நெய்யும் ஆகிய இவற்றை முழுதும் ஒரே கபளமாக, விரைவில் அமுது செய்து விட்டு, இதனால் இந்திரனுக்குக் கோபம் மூட்டி, பெரு மழையை பகையாக்கி, அலையெறிகிற பெரிய கடலினது நிறம் போன்றவனான கண்ணன் தனது திருக்கைவிரலால் தூக்கின மலையே கோவர்தனத்தில் வெற்றியை உடைய குடை ஆகும்.
வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது.  மலையில் ஓடைகளும் சேறுகளும் இன்றியமையாதன ஆகையால், இங்குத் தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப்பெருக்கைச் சேறாகவும் உருவகப் படுத்தினார். பாலும், பழமும் காய்கறிகளும் அடக்கம். இந்திரன் பசிக்கோபத்தினால் ( கல்வ்ருக்ஷங்கள் – கல் மேகம் – ஆலம் கட்டி மழை) மேகங்களை ஏவி ஏழு நாட்கள் விடாமல் மழை பெய்வித்ததனால், மழையாகிற பகைக்குக் கண்ணன் காரணம் ஆனதால், ‘மாரிப்பகைபுணர்த்த’ என்கிறார்.
6வழு வொன்று மிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு மழை வந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடு குதலும் குழவி இடைக் காலிட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.2 ஒரு குறையுமற்ற செய்கைகளை செய்து இந்திர பதவியை அடைந்த தேவேந்திரனுடைய அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அவனுடைய கோபத்தினால் ஏவப்பட்ட மேகங்களானவை, குமுறிக் கொண்டு வந்து ஏழு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து பசுக்களையும் மனிதர்களையும் துன்பப்படுத்த, கண்ணபிரான் எல்லாவற்றையும் காப்பதற்காக, அடியோடு எடுத்து தலைகீழாகப் பிடித்து அருளின மலையானது ‘கோவர்த்தனம்’ ஆகும்.
தன்குட்டியின் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத, அதனை பெற்ற பெண் யானையானது, தன் குட்டியை, தன்னுடைய நான்கு கால்களின் நடுவில் அடக்கிக்கொண்டு, அந்தச் சிங்கக்குட்டியோடு எதிர்த்து போரிட்ட இடம் கோவர்த்தனம் என்ற குடையே என்கிறார்.
7அம்மைத் தடங்கண் மடம் ஆய்ச்சியரும் ஆன ஆயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புன மேய்கின்ற மானினம் காண்மினென்று கொம்மைப் புயக் குன்றர்சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.3 அழகிய மை அணிந்த விசாலமான கண்களையும், மடப்பம் என்ற குணத்தையும் கொண்ட இடைச்சிகளும், ஆயர்களும், பசுக்கூட்டங்களும் மழையின் கடுமையால் கதறி, ‘எம்பிரானே! நீயே எங்களுக்கு ரக்ஷகனாக இருக்க வேண்டும் ’ என்று வேண்ட, பிரகாசமான ஆழியை கையில் ஏந்திய எங்களுக்கு ஸ்வாமியான கண்ணன், கையில் எடுத்த மலை, பெரிய புஜங்களை உடைய குறவர்கள், தங்களை சரண் என்று சேர்ந்த பெண்களின் கண்களை கண்டு, இவை மான் பேடைகள் என்று ஆச்ரயித்து தங்களின் வில்லினை வளைத்து நிற்கும் கோவர்தனம் என்ற குன்று ஆகும்.
இந்த பாடலில் ஆழ்வார் ஆழி என்று சொல்லியது, எம்பெருமான், இந்திரனை அழிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், தன்னுடைய திருக்கரத்தில் இருக்கும் சுதர்சன சக்கரத்தை உபயோகித்து இருக்கலாம், ஆனால் எம்பெருமானின் கருணையால் அவனை அழிக்க நினைக்கவில்லை என்பதை எடுத்து உரைக்க என்று உரையாசிரியர் கூறுகிறார்.
குறப்பெண்களின் கண்களை மானுக்கு ஒப்பிட்டு, அவை தங்களின் தோட்டங்களை அழிக்க வந்தனவோ என்று எண்ணி, வில்லினை கையில் எடுக்கிறார்கள் என்று சொன்னது மரபு கவிதை.
8கடுவாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக் கவளம் எடுத்துக் கொடுப்பானவன் போல்
அடி வாயுறக்கை இட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் படநீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப் பட நின் று மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.4
பயங்கரமான வாயையும் மிக்க சீற்றத்தையும் கூர்மையான கண்களையுமுடைய ஒரு யானைக்கு சோற்றுக் கவளத்தை எடுத்து கொடுக்கின்ற யானைப்பாகனைப் போல, தேவர்களுக்குத் தலைவனான கண்ணன், தன்னுடைய ஒரு திருக்கரத்தால் மலையின் அடிபாகத்தையும், மற்றொரு திருக்கரத்தினால் மலையின் மேல்பக்கத்தையும் பிடித்து தாங்கி நின்ற மலை கோவர்தனம் என்ற மலையாகும் .
முதலில், மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம் மலையை எடுத்து பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப் படுத்தினார். மீண்டும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளார். கடுவாய், சினம், வெங்கண் என்ற மூன்று அடைமொழிகளை மேகத்துக்கும் பொருந்தும்.
மேகங்கள் திருவாய்ப்பாடி முழுவதும் மழையைப் பொழிந்து வருத்த, அதனை குறைப்பதற்காக தூக்கின குடை கோவர்தனம் என்ற குடையே என்கிறார்.
9வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கும் என்பவன் போல் ஏனத் துருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை கானக் களியானை தன் கொம்பிழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை யெடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.5 வராஹரூபம் கொண்டருளின ஸ்வாமியாயும் எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணன், “மேலுலகத்திலிருப்பவர்களே! நீங்கள், என்னோடு சமமாக வல்லமை உள்ளவர்களாய் இருப்பீர்களாகில் இங்கே வந்து, இந்த மலையை தாங்கிக்கொண்டு நில்லுங்கள்” என்று சொல்கிறவன் போல், ஒரு மண்கட்டி போல் எடுத்து, நிற்கின்ற மலையாவது, காட்டில் செருக்குடன் திரிகின்ற யானையானது,  ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த தன் தந்தத்தை இழந்ததனால் அக்கொம்பு முறிந்து புண்பட்ட வாயிலே மதநீரானது ஒழுக தனது துதிக்கையை உயரத்தூக்கி, வானில் தோன்றும் பிறையை தான் இழந்த கொம்பாக நினைத்து பிடிக்க விரும்பி மேல்நோக்கி பார்த்து கொண்டு இருக்கும் மலையே, கோவர்தனம் என்ற குடையே.
கண்ணன், விடாது, வருந்தாது , தூக்கிக்கொண்டு இருக்கும் ஆற்றலை இங்கே ஆழ்வார் சொல்கிறார். மேலுலகத்தில் உள்ளவர்களிடம் உண்மையிலேயே வலிமை உள்ளவர்கள் ஆனால், இந்த மலையை சிறிது நேரம் தூக்குங்கள் என்று கூப்பிடுகிறார். பாதாள உலகம் சென்று பூமாதேவியை விடுவித்து திருஎயிற்றிலே தாங்கி நின்ற எம்பெருமானுக்கு இந்த மலையை தூக்குவது ஒரு அரிதான காரியமா என்று ஆழ்வார் கேட்கிறார்.
10 செப்பாடுடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.6
செவ்வைக் குணத்தை உடைய கண்ணன் தன்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருக்கரத்தில் உள்ள ஐந்து விரல்களையும் மலைக்கு கிளைக் கொம்புகளாக அமைத்து அழகிய நீண்ட திருத்தோளினை மலைக்கு தாங்கு காம்பாகக் கொடுத்து தலைகீழாகக் கவித்த மலையாவது, எல்லாப் பக்கங்களிலும் பரவி தெளிந்த சுனை நீர் அருவிகள் அழகிய முத்துக்களாலான சட்டை என்று காணப்பெற்ற கோவர்தனம் என்ற குடையே.
செவ்வை குணம் என்பது, இந்திரனுக்கு கொடுக்க வேண்டிய சோற்றைத் தான் அமுது செய்து, அதனால் மழை பெய்ய வைத்து, அதனால் துன்பமுற்ற மக்களை ஈரமற்ற நெஞ்சத்துடன் இல்லாமல் தானே முன்னே இருந்து காப்பாற்றியது. இந்த குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்தது என்பர், அதனால், ஆழ்வார் திருமால் என்றார்.  
11படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை தான் அடங்கச் சென்று இலங்கையை ஈடு அழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே. 3.5.7 பல படங்களையுடைய ஆதிசேஷன், தங்கள் பரந்த பூமியை தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டிருப்பது போல கண்ணன், பெரிய திருக்கரத்திலுள்ள ஐந்து விரல்களாலும் விரித்து தாங்கிக்கொண்டு இருக்கின்ற மலை, பெண் குரங்குகள் இலங்கையில், தங்களுடைய குலத்தில் தங்களுக்கு முன் அவதரித்த அனுமன், இலங்கையை துவம்சம் செய்த கீர்த்தியை பாடிக்கொண்டு, தங்களுடைய குட்டிகளை தங்கள் கைகளில் படுக்க வைத்துக் கொண்டு, கண் வளர்ந்த மலை கோவர்தனம் என்ற குடையே.
12சலமா முகில் பல் கணப் போர்க் களத்துச் சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை, இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலைவாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் கொற்றக் குடையே. 3.5.8 நீர் கொண்ட கார்மேகங்கள் பல, யுத்த பூமியில் அம்புமழை பெய்தாற்போல் இடைச்சேரி முழுவதும், இடித்து முழங்கி யுத்தம் செய்து அங்குள்ள மக்களையும், ஆநிரைகளையும் வருத்தி, எங்களிடம் இருந்து தப்ப முடியமா என்று கேட்பது போல் இருந்தபோது, கண்ணன், அந்த அம்புமழை போன்ற மேகங்களை எதிர்கொண்டு கேடயம் போல் ஏந்திக்கொண்டு எல்லாவற்றையும் காப்பாற்றிய மலை, பர்ணசாலைகளில், வசிக்கின்ற முனிவர்களுக்கும், தவம் செய்பவர்களுக்கும் எதிரே, புலிகளைக் கண்டு அவர்கள் தங்களுடைய கழுத்தை சொரியும் நேரம், அவர்களை கொல்லக் கூடிய வாயையும் சினத்தையும் உடைய புலிகள் அந்த சுகத்திலேயே நின்றுகொண்டே உறங்கும் என்ற தன்மை கொண்ட கோவர்தனம் என்ற குடையே.
13வன் பேய் முலை உண்டதோர் வாய் உடையன் வன்தூண் என நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக்கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் முன்பே வழிகாட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம் முடைக் குட்டன்களை கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.9 கொடிய பூதனையின் விஷம் தடவின முலையை உண்ட வாயை கொண்ட கண்ணன், தன்னுடைய திருநாமத்தை ஒரு மலைக்கு கொடுத்து, பாரத்தைத் தாங்கிக் கொண்டு நின்ற ஒரு வலிமையான தூணைப்போல நின்று, இந்த உலகத்தில் உள்ளவர்கள் பார்க்கும்படி, தான் தாங்கி கொண்டு மலையானது, முசு என்ற குரங்குகள் தங்கள் குட்டிகளுக்கு மரம் விட்டு தாவுவதை கற்றுக்கொடுக்க அவைகளை தங்கள் முதுகில் காட்டிக்கொண்டு ஒரு மரக்கொம்பில் இருந்து மற்றொரு கொம்பிற்கு குதிப்பதை பழகுவிக்க செய்யும் கோவர்தனம் என்ற குடையே.
கண்ணன், குன்றத்தை ஏந்தும் இந்த அற்புத செய்கையைப் பிரமன் இந்திரன் முதலிய தேவர்களுக்கு காட்டாது, தன்னுடைய பரம கிருபையினால் மனிதர்க்குக் காட்டி அருளியதை, தரணிதன்னில் என்று ஆழ்வார் கூறுகிறார்.
14கொடியேறு செந்தாமரைக்கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் முடி எறிய மா முகிற் பல் கணங்கள் முன்னெற்றி நரைத்தன போ குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே. 3.5.10 அழகிய செந்தாமரை போன்ற திருக்கரங்களையும் திரு விரல்களையும் கொண்ட கண்ணன் ஏழு நாட்கள் இந்த குன்றினை ஏந்திய போதும், அழகு சிறிதும் குறையாமல், கொஞ்சமும் வாட்டமும் முடியாமல், திருநகங்களும் சிறிதும் நோவு எடுக்காமல், சிறிதும் மாற்றம் இல்லாமல் இருந்த நீலமணி போன்ற நிற கண்ணன், எடுத்த மலையும் அவன் நின்ற நிலையும் ஒரு மாயா ஜால வித்தையை போல் உள்ளது. அந்த மலை, முகட்டில் சேர்ந்த பல மேகங்கள் மழையை பெய்வித்து செழிப்பாக செய்ததனால் அந்த மலையின் முன்புறம் நரைத்திருந்ததைப்போல் பலர் குடியேறி வாழும் கோவர்தனம் என்ற குடையே.
15அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர்தி அவனுடைய குரவில் கொடி முல்லைகள் நின்றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடை மேல் திருவிற் பொலி மா மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மன நன்கு உடைப் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே. 3.5.11இந்த திருமொழி / பதிகம் கற்றவர்க்கு பலன் சொல்லி முடிக்கிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு, காளியன் என்ற பாம்பை துரத்தி விட்டு, பாம்பின் பகைவனான கருடனின் மேல் அமர்ந்து செல்லும் பரமாத்மா இந்த கண்ணன் என்று மொழிகிறார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிறைந்து விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதங்களை நன்கு அறிந்த பெரியாழ்வார் சொன்ன இந்த பத்து பாடல்களை விருப்பத்துடனும், பரவசமாய் பேசும் நல்ல மனதை உடைய பக்திமான்கள், தங்களுடைய ஞான, பிரேமா குணமான பகவத் அனுபவ கைங்கர்யங்களில் ஆழ்ந்து, அடியார்கள் கூட்டங்களுடன் சேர்ந்து இருக்கும்படியான சர்வ உத்தமமான ஸ்ரீவைகுந்ததை அடையப்பெறுவர் என்று முடிக்கிறார்.
16ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க் கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை வானாட்டில் நின்று மாமலர்க் கற்பகத் தொத்திழி தேனாறு பாயும் தென்திரு மாலிருஞ் சோலையே. 4.2.4 சொர்க்க லோகத்தில் உள்ள பெரிய பூக்களையுடைய கற்பக மரத்தில் இருந்த பூங்கொத்தில் இருந்து பெருகும் தேன் ஆறாய் பாய்ந்து ஓடுகின்ற அழகை உடைய திருமாலரின்சோலை, இடையர்கள் ஒன்று சேர்ந்து, இந்திரனுக்கு படைப்பதற்கு இருந்த உணவை தேவேந்திரனுக்கு சேராமல், கோவர்தன மலைக்கு அருளிய கண்ணனின் மலையாகும்.
17நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மாமாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.4.10.8பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் தலைவனாக இருப்பவனே, திருவடமதுரையில் திருஅவதாரம் செய்தவனே, மிக ஆச்சரியமான சக்திகளை உடையவனே, பாகனுக்கு வசப்பட்டுள்ள யானையைப் போல் எனக்கு வசப்பட்டு உள்ளவனே, அடியேன் உன் மாயைகளில் எதுவும் அறிய மாட்டேன், திருவரங்கத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டு இருப்பவனே, யமகிங்கர்கள் என்னை பிடித்து, இந்த சரீரத்தோடு கொடுக்க வேண்டிய துன்பங்களை அளித்தபின், ‘இந்த யாத்நாசரீரத்தினுள்ளே செல்” என்று சொல்லி துன்புறுத்தும் போது உன்னை நினைக்க மாட்டேன், நீதான் என்னை காக்க வேண்டும் என்பது இந்த பாட்டின் பொழிப்புரை. நரகத்தில் மிகவும் தீவிரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் இந்த ஆத்மாவிற்கு பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நா சரீரம்” என்று பெயர்.  

மீண்டும் இன்னொரு ஆழ்வார், இன்னொரு திவ்யதேசம், என்ற ஒரு கருத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி.

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார்- திருவாய்மொழி- ஒழிவில் காலம் எல்லாம்


தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற (11) எல்லா ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை  முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை  இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19)  இங்கே  காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் திருவேங்கடமுடையான் மேல் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்து திருவாய்மொழியில் த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியாகிய உலகமுண்ட பெருவாயா என்ற பகுதியை இங்கு பார்த்தோம். இனி இப்பொழுது திருவாய்மொழியில் இருந்து த்வய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய ஒழிவில் காலமெல்லாம் என்ற மூன்றாம் பத்தின் மூன்றாவது பதிகத்தைப்பற்றி ஒரு சிறிய விளக்கத்தை காண்போம். நன்றி.

திருவாய்மொழி

மூன்றாம் பத்து, மூன்றாம் பதிகம், மிக விசேஷமானது. ஒழிவில் காலமெல்லாம் எனும் இந்த பதிகத்தில் 3.3.1 முதல் 3.3.10 வரை ஒவ்வொரு பாசுரத்திலும் திருவேங்கடமுடையான் திருநாமம் உள்ளது. இந்த பதிகத்தில் ஆழ்வார், த்வய மந்திரத்தின் இறுதிப்  பகுதியாகிய  “ஸ்ரீமதே நாராயணாய நம: ” என்பதின் அர்த்தத்தை, நாம் தொடர்ந்து பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த பத்து பாசுரங்களின் மூலம் விளக்குகிறார்.  த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள   சரணம்   ப்ரபத்யே‘ என்பதை  “உலகம் உண்ட பெருவாயா என்ற (6.10) பதிகத்தில் சொன்னதை முன்பு பார்த்தோம்.

தன்னுடைய சொரூபத்திற்குத் தகுதியான எம்பெருமானுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆழ்வார் விரும்புகிறார். எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று இருந்த ஆழ்வாருக்கு, எம்பெருமான், ஆழ்வாரை அழைத்து, அவருக்காகவே திருமலையில் வந்து இருப்பதாகவும், ஆழ்வாரை அனுபவிக்கைக்காகவே திருமலையில் வந்து நிற்பதாகவும் சொல்லி, பரமபதத்திற்கு சென்று காணக்கூடிய காட்சியை இங்கே வந்து காட்டியதாகவும், எல்லோரும் அனுபவிக்கும்படி ஆழ்வாரை மேலும் பாட சொல்கிறார்.

பாடல் விளக்கம்
3.3.1ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம், தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே. (3.3.1)
மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற அழகினைக்கொண்ட ஒளி உருவனான, தங்கள் குலத் தலைவனான, எம்பெருமானுக்கு எல்லையில்லாத காலமெல்லாம், எல்லா இடத்திலும், அவன் கூடவே உடன் இருந்து, ஒன்றும் குறையாதபடி எல்லா தொண்டுகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது பாடலின் பொழிப்புரை.
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளையும் செய்ய வேண்டும் என்கிறார் ஆழ்வார்; காலம் எல்லாம் என்று சொன்னது முடிவில்லாத காலம் என்பதையும் கடந்த, நிகழ், எதிர் என்ற எல்லா காலங்களையும் குறிக்கும். கடந்த காலத்தில் தொண்டு செய்ய வேண்டும் என்று சொன்னதை, இனி வரும் காலங்களில் செய்யும் தொண்டு, கடந்த காலத்தில் தொண்டு செய்யாமல் போன துக்கம், மனதிற்கு வராத அளவிற்கு செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பாடலை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் அநுஸந்திக்கும்போது, ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம் என்று நெடு நேரம் பாடுவாராம்.
வழுவிலா அடிமை என்றது தொண்டில் யார்க்கும் பங்கு கிடைக்காதபடி தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று விரும்புவது, லக்ஷ்மணன் இரவும் பகலும் எப்பொழுதும் தொண்டு செய்தது போல் செய்யவேண்டும் என்கிறார். பரதன் நாட்டில் இருந்து சேவை செய்ததுபோல், லக்ஷ்மணன் காட்டில் இருந்து சேவை செய்தது போல், எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்கிறார். ஆழ்வாராக இல்லாவிட்டாலும், திரையாக, குத்துவிளக்காக எதுவாக இருந்தாலும், எப்பொழுதும் எம்பெருமானுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிறார். அதாவது, தான் கைங்கர்யம் செய்ய விரும்பும் எம்பெருமான் நிரந்தரமாக இருந்து கொண்டு, அடிமை செய்யும் தானும் எப்போதும் அங்கு இருந்து கொண்டு, காலமும் நிரந்தரமாக இருந்து கொண்டு, தேசமும் நிரந்தரமாய், அகங்கார, மமகாரங்களுடன் கூட வரும் அனுபவம்போல் இல்லாமல், துக்கம் கொஞ்சமும் இல்லாமல், எப்போதும் சுக அனுபவம் தருகிற கைங்கர்யம் வேண்டும் என்கிறார்.
கைங்கரியம் செய்வதைக் காட்டிலும், செய்ய வேணும் என்கின்ற ஆசை எப்பொழுதும் நிலை நின்றிருந்தாலும் போதும் என்ற சாஸ்திர அர்த்தம் வெளிப்படும்படி ஆழ்வார் பாடுகிறார். எம்பெருமானார்  ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் “கைங்கரியத்தில் ஆசையை வளர்த்திக் கொள்ள வேண்டும்” என்ற கருத்துப்பட அருளிச் செய்திருப்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
நாம்‘ என்று சொல்லி இருப்பது, தன்னுடன் கூடிய அடியவர்களை சேர்த்து கொண்டு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கேசவன் தமர் என்ற 2.7 பதிகத்திற்கு பிறகு, ஆழ்வார் தனியாய் இல்லாமல், ஸ்ரீவைஷ்ணவர்களையும் சேர்த்து கொண்டு இருப்பதை நினைவில் கொள்ளலாம்.
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, என்று சொன்னது, கைங்கரியம் செய்ய வேண்டும் ஆழ்வாரின் எண்ணத்தைவிட, இவரிடம் கைங்கர்யம் கொள்ள வேண்டும் என்ற எம்பெருமானின் எண்ணத்தை தெரிவிக்கிறது என்பர். ஆழ்வார் தான் இருந்த இடத்திலே இருக்கும் போது, எம்பெருமான் கலங்கா பெரு நகரான பரமபத்தைவிட்டு திருமலையில் நின்று இருப்பது அதனை காட்டுகிறது என்பர். கைங்கர்ய ருசி உடையவர், இங்கு பாயும் அருவிகளின் சப்தத்தை ஒரு காரணமாக கொண்டு, எம்பெருமானுக்கு தொண்டு புரிய திருமலைக்கு வாருங்கள் என்கிறார். திவ்யதேச யாத்திரை செல்கிற அடியவர்களிடம் வழிப்பறி செய்பவர்களின் ஆராவாரமும் ஆழ்வார்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் போது, அருவியின் ஓசையை சொல்ல வேண்டுமோ என்று உரையாசிரியர் எழுதுகிறார்.
அடியவர்களின் சேவையை பெற உகந்த நிலமாக எம்பெருமான் திருவுள்ளம் பற்றி அவன் வந்து இருக்கின்ற நிலம் ஆகையால், ஏதோ ஒரு காலத்தில், சரீர சம்பந்தம் அற்று, அர்ச்சிராதி மார்க்கத்தில், பரமபதம் அடைந்து செய்கின்ற சேவையை இங்கேயே செய்யுங்கள் என்று சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம்.
எழில் கொள் சோதி என்பது அவன் மேல் விழுந்து அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது போல் இருக்கும் வடிவழகு என்கிறார் ஆழ்வார். வானோர் சோதி(திருவாய்மொழி 1.5.5), பகலில் விளக்கு வைத்தது போல் இருக்கும் என்றும், நீல் ஆழி சோதி, (பெரிய திருவந்தாதி 34) கடல் கொண்டு கிடக்கும் (மீனுக்கு தண்ணீர் வார்த்தது போல்) என்றும், திருவேங்கடத்து எழில் கொள் சோதி, குன்றின் மேல் இட்ட விளக்காக இருக்கும் என்று இதன் பெருமை பேசுகிறார். அதாவது அந்த இடங்களில் இவனது சோதி குன்றியே இருக்கும், இங்கு பிரகாசிக்கும் என்பது போல் உள்ள ஈட்டு ஸ்ரீஸுக்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி ராமானுஜர் இந்தபதிகத்தை அருளிச்செய்யும்போது, அங்குஇருந்த நூற்றுக்கணக்கான சிஷ்யர்களை நோக்கி, “ஆழ்வார் விரும்பியபடி, திருவேங்கடமுடையான் திவ்யதேசத்தில் இருந்து நித்திய கைங்கரியம் பண்ண விருப்பமுடையார் யாரேனும் உண்டோ என்று வினவ, எல்லாரும் அஞ்சி விடை கூறாமல் இருக்க, அனந்தாழ்வான் எழுந்து ‘அடியேனுக்கு நியமித்தருளவேணும்’ என்றார்; அது கேட்டு உகந்த எம்பெருமானார் ‘நீர் ஒருவரே ஆண்பிள்ளை’ என்று சொல்லி அவரை கொண்டாடித் தழுவி விடைகொடுத்தருளினர்; அதுமுதல் அனந்தாண்பிள்ளை என்று பெயர் உண்டாயிற்று.
இந்த பாட்டின் மூலம் திருமந்திர அர்த்தத்தை அருளி செய்ததாகவும் சொல்வர்; ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்பது பிரார்த்தனையை சொல்கிறது. தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி என்பது நாராயண அர்த்தத்தை சொல்வது.
3.3.2எந்தை தந்தை தந்தை தந்தைக்கும், முந்தை, வானவர் வானவர் கோனொடும், சிந்துபூ மகிழும் திரு வேங்கடத்து, அந்தம் இல் புகழ்க் காரெழில் அண்ணலே. (3.3.2)
நித்தியசூரிகள் சேனை முதலியாரோடும் (விஷ்வக்ஸேனர்) வந்து, வாசனை வீசுகின்ற பூக்கள் தூவி, வணங்குகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல், ஆழ்வார் குலத்திற்கு முதல்வன் ஆவான் என்று சொல்கிறார்.
பரமபதத்திற்கு சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதுதான், பொதுவாக எல்லோரும் செய்வது, விரும்புவது; அப்படியிருக்க, ஆழ்வார் மட்டும், இங்கே திருமலையிலே தொண்டு செய்ய விரும்புவது ஏன் என்று எம்பெருமான் நினைக்க, திருநாட்டிலுள்ள நித்யசூரிகளும் முக்தர்களும் கூட இத்திருமலையிலே வந்து தொண்டு செய்யும் போது, தான் இங்கே தொண்டு செய்வதில் என்ன குறை என்கிறார்.
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று சொல்லி, எம்பெருமானின் தலைமையின் மேன்மையை, பர ஸ்வரூபத்தை மேன்மையை சொல்கிறார். (பரமாத்மாவின் பெருமை / மேன்மை). இதே ஆழ்வார் தன்னுடைய நிலையை சொல்லும்போது, (ஜீவாத்மாவின் அடிமை செய்யும் தன்மை-சேஷி) அடியார், அடியார்தம் அடியார், அடியார் தமக்கடியார் அடியார், தம் மடியார் அடியோங்களே” (திருவாய்மொழி 3.7.10) என்று தன்னை மேலும் மேலும் கீழே இறங்கிக் கொண்டு சொல்வதும் குறிப்பிடத்தக்கது.
பரமபதத்தில் தங்களுக்கு அருகில் இருக்கும் எம்பெருமான், இங்கு திருமலையில் கானமும், வானரமும் என்று எல்லோருக்கும் முகம் கொடுத்து தன்னுடைய சௌசீல்யத்தை காட்டிக்கொண்டு இருப்பதை அனுபவிக்க விரும்பி, விஷ்வக்சேனர் முதல் எல்லா நித்யஸூரிகளும் விண்ணுலகில் இருந்து திவ்ய புஷ்பங்களை எடுத்துக்கொண்டு, வரும்போது, அவனின் சௌசீல்யத்தில் உருகி, அவை அவர்களின் கைகளில் இருந்து அவசரமாக சிந்தினாலும், இந்த புண்ணிய ஸ்தலத்தின் ஸ்வபாவத்தால் புஷ்பங்களின் வாசமும் மலர்ச்சியும் சிறிதும் குறையவில்லை என்கிறார். இங்குள்ளார் அங்கு சென்று அவனது மேன்மையை அனுபவிப்பதைப்போல், அங்குள்ளார் இங்கு வந்து இவனின் நீர்மையை அனுபவிப்பதை சொல்கிறார்.
பரமபதத்தில் புகழுக்கு அந்தம் உண்டு என்பது போலேயும் இங்கு திருமலையில் புகழுக்கு அந்தம் இல்லை என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு ஆளி, கோளரி, பொன்மணி, முத்து. பூ மரம் ஆனவற்றிக்கு தன்னை கொடுத்துக்கொண்டு இருப்பதால், இங்கு அவனுக்கு புகழ் ஸாஸ்வதமாக இருக்கும் என்கிறார்.
3.3.3அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன், செங்கனி வாய்க் கரு மாணிக்கம்,
தெண்ணிறைச் சுனை நீர்த் திரு வேங்கடத்து, எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன், அழகினைக் கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களை உடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையும் உடையவன், தெளிந்த, நிறைந்த தண்ணீரை உடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவிடமுடியாத இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகளுக்குத் தலைவன் ஆவன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருமலையில் தொண்டு செய்ய வேணும் என்று ஆசைப்படுகிறீர்கள், அது கிட்டுமோ என்று கேட்க, ஆழ்வார், ஆசையற்றவர்களான நித்யஸூரிகளுக்கு இங்கே அருள் புரியும் எம்பெருமான், ஆசையுடன் இருக்கும் தனக்கும் அருள் புரிவார் என்று சொல்லும் பாடல்.
அண்ணல் என்றதால், குறிஞ்சி நிலத்தின் தலைவன், சர்வஸ்வாமி என்று கூறுகிறார். மாயன் என்றதால், சௌந்தர்ய சீல குணங்களால் ஆச்சரியமானவன், என்கிறார். இந்த கண் அழகு உடையவனுக்கு ஒப்பு ஒன்றும் வேண்டாம் என்பதுபோல் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் என்று சொல்லி, முதல் சந்திப்பில் தப்ப முடியாமல் இருக்கும் கண் அழகு சொல்லப்பட்டது. அதில் இருந்து தப்பினாலும், தப்ப முடியாதபடி இருக்கும் வாய் முறுவல், என்று செங்கனி வாய் சொல்லப்பட்டது. மொத்த வடிவழகும் சேர்ந்து கரு மாணிக்கம் என்று சொன்னார்.
கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, எம்பெருமானின் குணங்களும் அளவு இல்லாமல், எண்ண முடியாத கல்யாண குணங்களை இயல்பலாகவே கொண்டதால், எண்ணில் தொல்புகழ் ஈசன் என்கிறார்.
3.3.4ஈசன் வானவர்க்கு என்பவன் என்றால், அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு ? நீசனேன் நிறைவொன்றும் இலேன், என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
தாழ்ந்தவனாய், குணம் சிறிதுமில்லாதவனான தான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று சொன்னால், அது திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் புகழாகுமோ?ஆகாது, திருமலையில் வந்து நின்று சுலபனாய் எல்லோருக்கும் அருள் பாலிக்கின்ற வைகுந்தநாதனுக்கு ஏற்றம் என்று பொருள். ஆழ்வார் தன்னிடத்தில் அன்பை வைத்த, மேலான சுடரை உடைய ஒளி உருவனான எம்பெருமான் என்கிறார்.
எண்ணில் தொல் புகழ் வானவரீசன்” என்று கீழ்ப்பாட்டில் சொன்னது, நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தான் என்பதை ஒரு ஏற்றமாக அருளிச் செய்தார்; நீசத்தன்மையும் நிறைவு ஆகாத தன்மையும் ஒன்று சேர்ந்து ஆழ்வார் என்று ஆனது என்கிறார். இந்த பாடலில் மிகவும் நீசனான தன் பக்கலிலே பாசம் வைத்திருப்பது பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறார்.  மிகவும் நீசனான, தன்னிடத்தில் பாசம் வைத்து அதனால் பெருமை உடைய எம்பெருமானை, வானவர் ஈசன் என்பது என்ன பெருமை என்றார்.
நித்யஸூரிகளிடம் உள்ள அன்பு, முதல் மனைவியிடம் காட்டும் கடமை போன்றது என்றும், ஆழ்வார் பக்கம் காட்டுவது ஆசையின் காரணமாக என்றும் உரையாசிரியர் கூறுகிறார். என்கண்பாசம்வைத்த என்பதற்கு எம்பெருமான் விஷயமான பாசத்தை ஆழ்வார் பக்கலிலே உண்டாக்கின என்று இன்னொரு வகையாகவும் பொருள் சொல்லலாம்.
3.3.5சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவு ஆகுமோ,   வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீதுஇல் சீர்த் திரு வேங்கடத் தானையே?
நீசனான தனக்கு, தன்னைத் தந்தவனுக்கு, நித்யஸூரி நிர்வாஹம் ஒரு ஏற்றமோ என்று கீழ்ப்பாட்டில் கேட்ட ஆழ்வார் இந்த பாட்டில், தன்னிலும் தாழ்ந்தவர்களைத் தேடிக் கிடைக்காத எம்பெருமானுக்கு, ஆழ்வாருக்கு தன்னைத் தந்தான் என்று சொல்வது தான் ஓர் ஏற்றமோ என்கிறார்.
வேதங்களை அறிந்த அந்தணர்களுடைய, எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற, அமிர்தம் போன்ற இனிமை உடையவனை, குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற பேரொளி உருவனாகி, எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற, வடிவை உடையவன் என்று கூறினால் அது பெருமையாகுமோ? ஆகாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
தனக்கு மேம்பட்ட, மேல் ஒன்று இல்லாத பேரொளி உருவமான திருமேனியை உடைய எம்பெருமான் என்பதை சோதி என்கிறார்.
ஆதி மூர்த்தி என்பதால் எல்லா உலகங்களையும் படைத்தவன் (ஜகத் காரண ஸ்ருஷ்டி) என்பதும் எல்லா உலகுந் தொழும்’  என்பதால் உலகங்களுக்கு எல்லாம் முதல் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்பதும் விளங்கும். அதோடு, இந்த ஒரு குணத்தை சொல்வதால் எம்பெருமானின் எல்லா கல்யாண குணங்களையும் சொல்வது போல் என்று நம் பெரியவர்கள் சொல்வர்.
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை என்றது குற்றமற்ற குணங்களை உடையவன் என்றும் குற்றங்களைக் குணமாகக் கொண்டு அங்கீகரிப்பவன் என்றும் பொருள்படும். வேதங்களை நன்றாக படித்து எம்பெருமானை அறிந்துகொள்வதற்கு ஈடாக திருமலையில் எளிமையாக எம்பெருமான் காட்சி அளிக்கிறான் என்பதும் தெரிய வரும்.  
ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ ஏற்றம் என்று கண்டோம். அதேபோல், எல்லா உலகுந்தொழும்’ என்பதைக் காட்டிலும் தீதுஇல் சீர்த் திரு வேங்கடத் தானையே என்பது ஏற்றம்.
3.3.6வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை, அது சுமந்தார்க்கட்கே
திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானுக்கு வணக்கம் என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியம்; அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக் கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்து விடும்; அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருமந்திரத்தின் பொருளை முதல் பாடலில் (ஒழிவில் காலம் எல்லாம்) அருளிச்செய்தார்; அங்கு அருளிச் செய்யாத ‘நம:’ என்ற பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். எம்பெருமானுக்கு தொண்டு செய்ய அடியவர்கள் விரும்பும்போது, அவர்களின் பாவங்கள் அவர்களை தொண்டு செய்ய விடாமல் தடுக்குமே என்று கேட்டதற்கு ஆழ்வார், அடியவர்கள் தொண்டு செய்ய விரும்ப தொடங்கும் போதே அந்த பாவங்கள் தானாகவே எரிக்கப்படும் என்கிறார்.
பக்தர்களின் வாக்கில் நம, என்கிற ஒரு சிறிய சொல் வந்தாலும் இதை மலையாக எம்பெருமான் நினைப்பான் என்பது தெளிவாகும். எல்லோரும் பிறக்கும் போது மூன்று கடன்களுடன் வருவார்கள்; அவைகளை, பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பித்ரு கடனையும் தீர்க்கலாம் என்று வேதம் சொல்கிறது.
மெய் மேல் வினை என்பது, உடம்பினால் (சரீர சம்பந்தத்தால்) வருகிற வினைகளை சொல்கிறது.
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், என்று சொல்லும்போது, அதற்கான விரோதிகளை பிரார்த்தித்து போக்க வேண்டாம் என்றும் சொல்கிறார்.
வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை, அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்று அமைத்து பொருள் கொள்ளலாம். (திருவேங்கடவனுக்கு தொண்டு செய்ய விரும்பும் அடியவர்களின், சரணாகதிக்கு முன் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை எரித்தும், சரணாகதிக்குப் பின் தெரியாமல் செய்த பாவங்களையும் ஒதுக்கி தள்ளியும், நம்மிடம் இருந்து விலக்கி விடுவான் என்பது உண்மை (மெய்) என்ற சாஸ்திர வார்த்தைகளை இந்த பாடல் சொல்கிறது என்று இராமானுஜர் மற்றும் ஆளவந்தாரின் விளக்கமாக கூறுவது உண்டு).
3.3.7சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு, அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு, சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.
நித்தியசூரிகள், விஷ்வக்சேனருடன் அல்லது ப்ரம்மா தேவர்களுடன், சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப் புகையையும் தாங்கிக்கொண்டு வந்து வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாகவுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய பெரிய மலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருவேங்கடமுடையானை பின்பற்றக்கூட வேண்டியதில்லை, திருமலையை வணங்கினாலே போதும் என்கிறார்.
கைங்கரியம் என்பது, பகவானை அடைதலுக்குப் பலனாக வருவதால், முதல் பாட்டில் சொன்ன கைங்கர்யத்தையும், இப்பொழுது சொல்கின்ற வீடாகிய மோக்ஷத்தையும் திருவேங்கடம் தரும் என்பது பொருத்தமே.
வானவர் வானவர்கோனொடும் மாமலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு அமர்ந்து நமன்று எழும் திருவேங்கடம் தடம் குன்றம் நங்கட்குச் சமன்கொள்வீடு தரும்’ என்று பாடலை அர்த்தம் கொள்ளலாம்.
மா என்ற சிறப்பு, மலருக்கு மட்டும் அல்லாமல் நீர், தீபம், சுடர் என்று கொள்ளவேண்டும்.
பக்தியின் கனத்தாலே சுமந்து என்று சொல்கிறார்.
ப்ரம்மா தேவர்களுடன் வந்து என்று சொல்லும் போது, அவர்கள் ஒரு பலனை எதிர்பார்த்தே எம்பெருமானிடம் வருவார்களே என்றாலும், இந்த திருப்பதி, அவர்களையும் பலன் ஒன்றும் எதிர்பாராமல் வணங்கும்படி செய்யும் என்று அமர்ந்து என்ற பதத்திற்கு விளக்கம் சொல்வர்.
சங்கரர் அத்வைதத்தில் மோக்ஷம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் கலந்து விடும் என்பது. ஆனால் இராமானுஜர் விஸிஷ்ட்டாத்வைதத்தில், மோக்ஷம் என்பது ஜீவாத்மா பரமபதம் சென்று பரமாத்மாவிடம் இருந்து எட்டு உயரிய குணங்களில் நிறைவு பெற்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து எம்பெருமானை அனுபவித்துக் கொண்டு இருக்கும் என்பதை ஆழ்வார் இந்த பாட்டில், சமன் கொள் வீடு என்கிறார்.
அந்த எட்டு குணங்கள், பாவங்கள் தீண்டாது, பசி இருக்காது, தாகம் இருக்காது, துன்பம் அண்டாது, மூப்பு வராது, மரணம் கிடையாது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற பட்டவையாக இருக்கும், நினைத்த எதனையும் செய்து முடிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.
திருமலை தனக்கு சமமான குணத்தை அடியவர்க்குக்கு பெற்று தரும் என்பது இன்னொரு அர்த்தம். திருமலை எப்படி எம்பெருமானுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து வருகிறதோ, அதே போல் அடியவர்களை எம்பெருமானுக்கு தொண்டு செய்பவர்களாக செய்து விடும் என்றும் பொருள் கூறுவர்.
3.3.8குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர் திரு வேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
கோவர்த்தனம் என்ற மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையில் இருந்து பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; முன்பு உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலையை வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எம்பெருமானுக்கு விருப்பமான திருமலையே தங்களுக்கும் விருப்பம்; தங்களுக்கு ஒரு பயனையும் தராவிட்டாலும் திருமலையே தாங்கள் அடையவேண்டியது, திருவேங்கடமுடையான்தான் பலனை தர வேண்டும் என்பதிலை, திருமலையே பலனைத் தரும், என்பதை ஆழ்வார் இந்த பாடலில் அறுதியிட்டு சொல்கிறார். ஒரு ஊரை காப்பாற்ற கிருஷ்ணர் குன்றத்தை கையில் எடுத்தார். எல்லா உலகங்களையும் காக்க த்ரிவிக்ரமனாக அவதாரம் எடுத்து தாவி அளந்தார்.இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று சேர்ந்த இடம் திருமலையாகும். அந்த திருமலையை தொழுதால் நம் பாவங்கள் நீங்கும் என்கிறார்.
3.3.9ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன், நாள் மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே.
நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்தில் இருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளின் பெருமைகளை வாயினால் சொல்பவர்களுக்கும் மனத்தினால் நினைப்பவர்களுக்கும், முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முன் இரண்டு பாடல்களில், நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையே தரும் என்றார்; இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலை முழுவதும் வேண்டுமோ? திருமலையின் ஒரு பகுதி போதாதோ என்று இந்த பாசுரத்தில் கேட்கிறார். ஆழ்வார் சொன்ன ஒரு பகுதி என்றது திருவேங்கடமுடையானை என்பது சுவையான விளக்கம். திருமங்கை ஆழ்வார் இதனையே ‘வட மா மலை உச்சியை’ என்பார்.
ஓயும் மூப்பு என்பதை, ஓய்வை விளைவிக்கின்ற மூப்பு என்று மூப்புக்கு அடைமொழியாக விளக்கம் செய்வார்.
பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அவன் திருவடிகளை காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும் என்று பொருள் கொள்ளவேண்டும்.
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு என்று சொன்னது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சொன்னதாகவும், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்று சொல்வதாகவும் நினைவில் கொள்ளலாம்.
வாயுள் வைக்கை என்பது ‘ஓவாது உரைக்கும் உரை’ என்கிறபடி உரைத்தல் என்றும் மனத்துள் வைக்கை என்பது மறவாதிருத்தல் என்றும் ஆகும்.
3.3.10வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.
வானவர் வானவர் கோனொடும்’ என்றதனால் நித்தியசூரிகளுக்கும், ‘பரன் சென்று சேர் திருவேங்கடம்’ என்றதனால் சர்வேசுவரனுக்கும் உகந்த தேசமாக உள்ளதால், எல்லோருக்கும் உகந்த தேசமான திருமலையை எல்லோரும் சென்று அடையுங்கள் என்கிறார்.
ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளி இருக்கின்ற திருவேங்கடத்தினது நெருங்கின சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய நீர்நிலைகளையும் உடைய திருத்தாள்வரையை, ஆயுளின் முடிவில் தளர்ச்சி அடைவதற்கு முன் சென்று சேருங்கள் என்று ஆழ்வார் கூறும் பாடல். திருதாள்வரை என்பது மலையடிவாரம்.
சர்வேஸ்வரன் இந்த ஆத்மாவிற்கு உடலை கொடுத்தது நரகம் செல்வதற்கு காரணமாக உள்ள இடங்களை தேடி செல்வதற்கு அல்ல என்றும் திருமலை செல்வதற்கு என்றும் ஆழ்வார் இந்த பாடலில் சொல்கிறார். சுமித்திரை, இராமன் காட்டுக்கு செல்லும் போது, லக்ஷ்மணனிடம், உன்னை பெற்றது எப்பொழுதும் எம்பெருமானுக்கு சேவை செய்வதற்கு என்றும், ஸ்ரீராமன் காட்டில் நடந்து செல்லும் போது அவன் நடை அழகில் மயங்கி தளர்ந்து விடாதே என்றும் சொல்வதை இங்கே எடுத்து, நம் போன்ற ஆத்மாக்கள் பிறந்தது திருமலையை அடையவே என்று கூறுகிறார்.
பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்று சொல்வதனால், திருமலை தம்மைத் திருவனந்தாழ்வானாக எடுத்துக் கொண்டதாக சொல்லலாம்.

3.3.11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழிற் குருகூர்ச் சட கோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.

திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், பூமியில் உள்ளவர்கள் எல்லாரும் புகழும்படி பேற்றினை அடைந்து வாழ்வார்கள் என்பது பொழிப்புரை.
இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக் கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்யப் பெறுவர் என்கிறார்.  தாள் பரப்பி மண் தாவிய ஈசனை என்று சொன்னது, கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற் போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்து கொண்ட சர்வேசுவரன் என்று அர்த்தம்.
கேழில் என்று சொன்னது ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பதிகம் ஆகையால் ஒப்பு இல்லாத பாடல்கள் என்றார்.
 • முதற்பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளையும் செய்யவேணும் என்று விரும்பினார்;
 • இரண்டாம் பாட்டில், மேல் உலகத்தில் உள்ளவர்களும் இங்கே வந்து தொண்டு செய்வதால் நாமும் இங்கே தொண்டு செய்யலாம் என்றார்.
 • மூன்றாம் பாட்டில், ஆசையற்றவர்களான நித்யஸூரிகளுக்கு இங்கே அருள் புரியும் எம்பெருமான், ஆசையுடன் இருக்கும் தனக்கும் அருள் புரிவார் என்கிறார்.
 • நான்காம் பாட்டில், ‘எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு, நித்யஸூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, என்றார்;
 • ஐந்தாம் பாட்டில், ‘தன்னைவிட தாழ்வானவரை தேடிக் கிடைக்காமல், நிற்கிறவனுக்கு, தனக்குத் அவனைத் தந்தான் என்றது ஒரு ஏற்றமோ என்றார்;
 • ஆறாம் பாட்டில், ‘விரோதிகள், தானே போய்விடும் ’ என்றார்
 • ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையே நமக்குத் தருவர்,’ என்றார்;
 • எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தரும்,’ என்றார்;
 • ஒன்பதாம் பாட்டில், நமக்குப் பேற்றினைத் தருகைக்கு ‘திருமலை முழுவதும் வேண்டுமோ? அவருடைய சம்பந்தம் உடையவர் இருந்தால் போதும்,’ என்றார்;
 • பத்தாம் பாட்டில், ‘எம்பெருமானுக்கு உகந்த நிலம், அதுவே அடியவர்களுக்கும் உகந்த நிலம், எல்லாரும் திருமலையை அடையுங்கள்’, என்றார்;
 • முடிவில், இந்த பாடல்களை படித்தவர்கள், எல்லாரும் புகழும்படி பேற்றினை அடைந்து வாழ்வார்கள் சொல்லி முடித்தார்.

மீண்டும் ஆழ்வாரின் திருவேங்கடமுடையானின் இன்னொரு அனுபவத்தில் சந்திக்கலாம். நன்றி

திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

 • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருவரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
 • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
 • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
 • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
 • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
 • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
 • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
 • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
 • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
 • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.

மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள  குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.

உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், பிரம்மா போன்ற தேவர்களால் கூட, அறியமுடியாதபடி, பரமபதத்தில் உள்ள எம்பெருமான், முதலைமேல், கோபித்துக் கொண்டு வரும்படி செய்த, கஜேந்திரன் என்ற யானையின், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்றும், கஜேந்திரனுக்கு அருளியதைப் போல், தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், தான் எதற்காக பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.

குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான,  போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27)  பாடலில்,  கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து  இருக்கிறீர்களா என்பதை தனித்தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.

அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியில், 25 முதல் 29 வரை, ஆழ்வார் தன்னிடம் எந்த நன்மையையும் இல்லை அல்லது எந்த நல்ல குணமும் இல்லை என்று சொல்லியதை பார்த்தோம், இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடம், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் உள்ளதாக சொல்லும், அடுத்த பாடலை இங்கே காண்போம், நன்றி.

பாசுரம் 30

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொல் இல்லை, சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா, புனத்துழாய் மாலை யானே பொன்னி சூழ் திருவரங்கா, எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே. (30)

எம்பெருமான் ஆழ்வாரிடம், மேலே சொன்ன ஐந்து பாடல்களில் எந்தவிதமான நல்ல குணங்களும் இல்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒருவிதமான நன்மையையும் இல்லாதை போல், ஒருவித தீமைகளும் இல்லாது இருந்தால் அது போதும், அதைக் கொண்டே ஆழ்வார் விரும்பும் வீடு போன்ற பேறு கொடுப்போம் என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் பின்னொரு காலத்தில் சொன்னது போல், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லாவித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்கிறார்.  

நம்மாழ்வார், திருவாய்மொழியில் (3.3.4) நிறையொன்றும் இல்லேன், என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார், 25வது பாடல் முதல் 29வது பாடல் வரை, தன்னுடைய நன்மை இல்லாமையை சொல்கிறார். அதே பாடலில் நீசனேன் என்று சொன்னதை, தொண்டரடிபொடியாழ்வார், 30வது பாடல் முதல், 34வது பாடல் வரை தாழ்வுகள் அனைத்திற்கும் கொள்கலமாய், இருப்பதாக விவரிக்கிறார்.

திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே, காவிரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் இருந்து அருளுபவனே, அடியேனை அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே, என் மனதில் தெளிவு கொஞ்சமும் இல்லை, ஒரு நற்சொல்லும் வாயில் இருந்து வருவதில்லை, கோபத்தினால் பகைமையுடன் பார்த்து, மிக கொடுமையான வார்த்தைகளை சொல்பவன், இப்படி துர்குணங்கள் கொண்ட எனக்கு என்ன கதி, எம்பெருமான் தான் அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இனி சிறிது விளக்கத்துடன் கீழே காண்போம்.

மனத்திலோர் தூய்மை யில்லை

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற பல துர்குணங்களில் ஏதாவது ஒன்றில் கொஞ்சம் குறைத்தாலாவது கொஞ்சம் சுத்தி ஏற்படும் என்று ஆழ்வார் சொல்கிறார். மனதை சுத்தமாக வைத்திருப்பதை பேற்றுக்கு உதவியாக உள்ளதை ஆழ்வார் சொல்கிறார். பரமாத்மா, கண்களாலும் வாக்காலும், அறியப்பட முடியாதவன் என்றும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனத்தினால் மட்டுமே அறியப் படுகிறான் (மனஸா து விசுத்தேந) என்ற வாக்கியதாலும், “எவர்கள் ஞான ஸ்வரூபமான ஆத்மாவை அறிந்தவர்களாயும், விவேகம் முதலியவற்றால் சுத்தி அடைந்த மனதை உடையவர்களையும் உள்ளனரோ, அவர்கள், உலகம் எல்லாவற்றையும் ஞானமயமானது என்றும் அது எம்பெருமானின் உடலாகவும் உள்ளதை அறிந்து கொள்கிறார்கள்” என்ற விஷ்ணு புராண (1-4-41) ஸ்லோகத்தாலும், மனத்தூய்மை, பரமாத்மா ஞானமாகிற பேறுக்கு உபாயமாக சொல்கிறார்கள். அந்த தூய்மை தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அந்த தூய்மை இல்லாதால், மனதுக்கு தோஷங்களான, காமம், குரோதம், லோபம்(பேராசை), பயம், துவேஷம், மோகம், மதம், மாத்சர்யம் என்பவை எதாவது ஒருவிதத்தில் எப்போதும் குடிகொண்டு உள்ளன என்றும் அதனால், ஒரு போதும் மனம் தூய்மை ஆக இருப்பதிலை என்று ஆழ்வார் சொல்வது தெரிய வரும்.

வாயிலோர் இன்சொல் இல்லை

மனது முழுமையாக கெட்டுப் போயிருந்தாலும், வாயினால் சில நல்ல அல்லது பிரியமான சொற்களை சொல்வதுண்டா என்று எம்பெருமான் வினவ, தான், அப்படியும் இல்லை, மறந்தும் ஒரு நல்ல வார்த்தை வாயினில் இருந்து வருவதில்லை, என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார். இன்சொல் இல்லை என்றது, தான் யாரையும் குளிர விசாரித்தது கிடையாது, தன்னை விசாரித்தவரையும் இனிய மறுமொழி கூறி குளிர்வித்தது கிடையாது என்கிறார். பெரிய திருமொழியில், திருமங்கையாழ்வார் சொல்லிய “நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், ” என்ற 1.6.5 நைமிசாரண்ய பாடலை இங்கு நினைவு கூறலாம்.

மேற்சொன்ன இரண்டு தொடர்களாலும், தனக்கு நிறைவு ஒன்றும் இல்லை என்று, இதற்கு முன் சொன்ன ஐந்து பாடல்களில் சொன்ன கருத்தை சுருக்கமாக சொல்கிறார்.

சினத்தினால் செற்றம் நோக்கித்

மனத்தூய்மையும் இன்சொல்லும் இல்லாவிட்டாலும், இவரிடம் இருந்து ஒதுங்கி பிழைக்கலாம் என்று தப்பி செல்ல முயல்பவர்களையும் தப்ப முடியாதபடி, இவர் வலியச் சென்று அவர்களுக்கு தீமை செய்ய முயல்வதாக ஆழ்வார் சொல்கிறார். முதலில் நெஞ்சில் உள்ள கோபத்தையெல்லாம் காட்டி விரோத பாவத்துடன் அவர்களை எரிப்பது போல், அதாவது, எதிரியானவன் சுருண்டு விழும்படி பார்ப்பேன் என்கிறார். சினம் என்றாலும் செற்றம் என்றாலும் கோபம் என்ற ஒரே அர்த்தத்தையே தருவதால், ஆழ்வார் மிகவும் கோபமுடன் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவன் நல்ல ஆடையை உடுத்திக்கொண்டு, நல்லவனாக இருந்தால், அவனுடைய அந்த மேன்மையைப் பொறுக்க மாட்டாமல், காரணம் ஒன்றும் இல்லாமல், தான் அவர்களை பழித்துக் கூறும் சொற்களுக்கும் ஒரு அளவே இல்லை.

தீவிளி விளிவன் வாளா

ஆழ்வார் சொல்வதாவது, அவரை பார்த்தால் இப்படி கோபப் பார்வையுடன் எப்போதும் இருப்பாரா என்றால் இல்லை; வாய் திறந்து பேச தொடங்கினால் கேட்பவர்களுக்கு நெருப்பை வாரி கொட்டி, பூண்டோடு அழியும்படி இருக்கும் வார்த்தைகள் என்கிறார். இப்படி சொல்கிற வார்த்தைகளால் ஏதாவது பயன் உண்டா என்றால் இல்லை; இப்படி பார்ப்பதும், சொல்வதுமே பயனாக கருதி செய்வதாக ஆழ்வார் சொல்கிறார். இதன் கருத்து, சத்வ குணம் மிக்க நல்லவர்கள், பிறர் பயன் பெறுவதையே தங்கள் பயனாக எண்ணிக் கொள்வது போல், பிறர் துன்பப்படுவதையே தனக்கு பயனாக நினைத்து இருப்பதாக ஆழ்வார் சொல்வதாக பொருள்.

புனத்துழாய் மாலை யானே

“நீர் இவ்வளவு தீமை உடையவரானால் தன்னை நிர்பந்திப்பதில் எந்த பயனும் இல்லை ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார், “அடியவர்களின் தாழ்வுகளை பார்த்து, அகல முடியாதபடி, அவர்கள் நம்மிடம் வேண்டுவதை ஒன்றையே அவர்களிடம் எதிர்பார்த்து, அவர்களை பாதுகாப்போம்” என்று பாதுகாப்பதிலேயே குறிக்கோளாக உறுதியாக கொண்டு, அதற்கேற்ப, திருத்துழாய் மாலை அணிந்து இருப்பவர் அன்றோ தேவரீர், நீர் ஸ்வாமியாக இருப்பதையும் இனிமையாக இருப்பதையும் கண்டபின், உம்மை விட்டு அகலமுடியுமோ ?’ என்று விடையளிக்கிறார். புனம் என்பது துளசி விளையும் செழிப்பான நிலத்தை குறிக்கிறது. இங்கு எம்பெருமானின் திருமார்பில் அதேபோல் இருக்கும் திருத்துழாய் மாலையை உடையவனே என்று சொல்கிறார்.

பொன்னி சூழ் திருவரங்கா

பாதுகாப்பவனாக இருந்தாலும், அருகில் இல்லாமல் இருந்தால், பயன் இல்லை; ஆனால் எம்பெருமான், தனக்கு மிக அருகில் திருவுள்ளம் கொண்டு இருப்பதாக சொல்கிறார். எந்த அளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் ஆட்கொள்வதுபோல் ஆச்சரியமாக திருவரங்கத்தில் எழுந்து அருளி உள்ள எம்பெருமானே என்கிறார். தங்களை போன்றவர்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு எம்பெருமான் ஏன் தனிமாலை அணிந்து கொண்டு இருப்பானேன் என்று வினவுவது போல் உள்ளது.  

பொன்னிசூழ் என்று சொன்னது, திருத்துழாய் மாலைக்கு மாலை சூடினாற்போல் திருக்காவேரியால் சூழப்பட்டு இருப்பது என்கிறார்.

எனக்கு இனி கதி என் சொல்லாய்

எனக்கு என்று சொன்னது, இது வரை சொல்லப்பட்ட அத்தனை தாழ்வுகள் நிறைந்திருக்கும் தன்னை சொல்லிக்கொள்கிறார். இனி என்று சொல்வது, தன்னுடைய தாழ்வுகளை சொல்லிக்கொண்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ள முயலாமல், தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை எம்பெருமானிடம் ஒப்படைத்த பின்பு என்று கொள்ளவேண்டும். கதி என் சொல்லாய் என்று சொல்வது, உய்ய வழி சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். உஜ்ஜிவிக்க முடியாதபடி தீமைகளை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு, தான் உஜ்ஜிவிக்க தேவரீர் வழி சொல்ல வேண்டும் என்று வழக்காடுவது போல் உள்ளது. ஆனால் ஆழ்வார் வழக்காடவில்லை.

என்னை ஆளுடைய கோவே

எம்பெருமான் வகுத்த (பொருத்தமான) ஸ்வாமியாக இருப்பதால், ஆழ்வார் வழக்காடவில்லை. “நீர் உஜ்ஜிவிக்க வழி கேட்டவுடன் தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன ” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் “தான் அடிமையாய் இருப்பதும், எம்பெருமான் ஸ்வாமியாக இருப்பதும் எப்போதும் நிலையாக இருக்கும் ஒன்று அன்றோ, ஆகையால் தன்னை காப்பதற்கு அவனை தவிர வேறு யார் தகுதி பெற்றவர் இருக்கிறார், தன்னுடைய ஆத்மா தாழ்வுற்று போனால் அதனால் வரும் குறையும் எம்பெருமானையே சேருமே ” என்று கவலை தோன்ற ஆழ்வார் இந்த பாடலை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம், நன்றி.

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி- உலகமுண்ட பெருவாயா


தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை  இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கும் நான்கு வேதங்களுக்கு இணையான தமிழ் மறைகள் ஆகும். இதில் திருவிருத்தத்தில் உள்ள 100 பாடல்களுமே திருவாய்மொழியில் உள்ள 100 பதிகங்களுக்கு இணையாக சொல்லப்படுகின்றன. (திருவாய்மொழியில் மொத்தம் 1102 பாசுரங்கள், 100 பதிகங்கள் என்ற விவரங்களை இங்கே காணலாம். )

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும். இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.

இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இனி சுவாமி நம்மாழ்வார், திருவாய்மொழியில் திருவேங்கடத்தானைப் பற்றி பாடிய பாசுரங்களை பார்க்கலாம். திருவாய்மொழியில் மொத்தம் 40 பாசுரங்களில் சுவாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையானை குறித்து பாடியுள்ளார். அவற்றில், இப்பொழுது த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியை உலகமுண்ட பெருவாயா என்ற பதிகத்தில் உள்ள 11 பாடலைகளைப் பற்றிய ஒரு குறிப்பை இங்கு காண்போம். நன்றி.

திருவாய்மொழி

உலகமுண்ட பெருவாயா

ஆறாம் பத்து, பத்தாம் பதிகம் மிக விசேஷமானது. ஐந்து இடங்களில் சரணாகதி வேண்டிய ஆழ்வார்க்கு  இந்த பதிகத்தில்தான், பிராட்டியை முன்னிட்டு 6.10.1 முதல் 6.10,11 வரை சரணாகதி விண்ணப்பித்ததால், இது நிறைவேறியது என்று சொல்வார்கள். சரணாகதி என்பது எப்போதும் அவன் திருவடிகளிலேயே  என்பதால், இந்த பதிகத்தில்  உள்ள  ஒவ்வொரு பாசுரத்திலும், திருவேங்கடத்தையும், அவனது திருவடிகளையும் நேரிடையாகவே ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். எட்டாவது பாசுரத்தில் ப்ரம்மா, சிவன், இந்திரன் போன்றவர்கள் எம்பெருமானின் திருவடிகளை காண விழைவதையும், பதினோராவது பாசுரத்தில், எம்பெருமானே தன்னுடைய அடிகளில் வந்து அடைந்த ஆழ்வாரைப் பற்றியும் சொல்கிறார். மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடியின் சிறப்பினை போற்றுகிறார். திருமலையில், திருவேங்கடமுடையானும் தனது வலது திருக்கரத்தால், நாம் எல்லோரும் அவனிடம் சரண் அடைய, தன் பாதங்களையே நமக்கு காண்பிக்கின்றார்.

திருவடிகளின் சிறப்பு
உலகமுண்ட பெருவாயா

இந்த பதிகத்தில் ஆழ்வார், எம்பெருமான் பிராட்டிக்கு அருளிய த்வய மந்திரத்தின் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள  சரணம்  ப்ரபத்யே‘ என்பதை  “உலகம் உண்ட பெரு வாயா” என்று தொடங்கி விளக்குகிறார். த்வய மஹா மந்திரத்தின் இறுதி பகுதியை பின்பு ஒழிவில் காலம் எல்லாம் என்ற 3.3 பதிகத்தில் கண்போம். இதற்கு முந்திய சரணாகதிகள், திருமந்திரம் போல் என்றும், இந்த சரணாகதி த்வய மஹா மந்திரம் போல் என்றும் சொல்வார்கள். திருமந்திரத்தில் பிராட்டி சம்பந்தம், த்வயத்தில் உள்ளது போல் நேரடியாக இல்லை. அதே போல் மற்ற சரணாகதிகளில் பிராட்டி சம்பந்தம் எம்பெருமானின் ஸ்வரூபம் மூலம் வருவது போல் இல்லாமல் இங்கே அலர்மேல்மங்கை மலர்மார்பா என்று நேரடியாக உள்ளது. கால நியதி, அங்க நியதி, அதிகாரி நியதி என்று நிர்பந்தங்கள் எதுவும் இல்லாமல் ஆச்ரயிக்கும்படி தன்னுடைய சீல குணத்தை வெளிகாட்டிக்கொண்டிருக்கும் திருவேங்கடமுடையானிடம் ஆழ்வார் சரணாகதி செய்கிறார். ஒன்பது பாடல்களில் எம்பெருமானின் பெருமைகளை சொல்லி, பத்தாம் பாட்டில் சரணாகதி செய்கிறார்.

எண் விளக்கம்
1உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி. நெடியாய் அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குல தொல் லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. (6.10.1)
பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் அமுது செய்த பெரிய வாயை உடையவனே, தேஜோ மயமான திவ்ய விக்ரஹத்தை உடையவனே, மிகப்பெரியவனே, அடியேனுக்கு உயிராய் இருப்பவனே, உலகுக்கெல்லாம் திலகம் போன்ற திருமலையிலே விளங்குகின்ற எம்பெருமானே, பரம்பரை பரம்பரையாக எம்பெருமானுக்கு அடிமையான அடியேன், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேரும்படி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.
உலகம் உண்டது எம்பெருமான் உலகங்களை காக்கும் குணத்தை சொல்வது; ஆழ்வார் பிரளய காலத்தில் ஏற்படும் மொத்த துன்பமும் ஒருசேர தனக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்சாரத்தில் இருந்து காக்கவேண்டும் என்று வேண்டுவது. மிகவும் அனுபவிக்க வேண்டிய ஈட்டு ஸ்ரீஸூக்தியை கீழே காணலாம்; ஒரு உலகத்திற்கு ஆபத்து என்ற போது, ஓடி வந்த எம்பெருமான் ஆழ்வாருக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடிவரக்கூடாதா; பிரளய ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் எம்பெருமான் சம்சார ஆபத்தில் உள்ளவரை காப்பாற்றலாகாதோ; உதவி கேட்காதவர்களுக்குக் கூட உதவும் எம்பெருமான், உதவி கேட்கும் ஆழ்வாருக்கு உதவக்கூடாதோ; பிரளய காலத்தில் சரீரத்திற்கு வரும் ஆபத்தை நோக்குபவர், இங்கே ஆத்மாவிற்கு ஆபத்தை நோக்கக்கூடாதோ; ஜலப்ரளயத்தில் அமுங்குவோரை காக்கும் எம்பெருமான், பிரிவு துயரத்தில் வீழ்ந்தோரை காப்பாற்ற வேண்டாமோ; பிறரால் வந்த துன்பம் என்றால் காப்பாற்றுவாய், அவனால் நேரும் துன்பம் என்றால் காப்பாற்ற மாட்டானோ; சரணம் புகாதவரை தான் காக்க வேண்டும் என்று நியதி உள்ளதோ, சரணம் என்று வந்தவரை காக்க மாட்டானோ என்று ஆழ்வார் கதறுவது போல் உள்ளது.
பெருவாயா என்று சொன்னது எவ்வளவு செய்த பின்னரும், அடியவர்களுக்கு மேலும் செய்யவேண்டும் என்ற மனது கொண்ட எம்பெருமானை சொல்வதாகும். உதாரணம், திரௌபதிக்கு எல்லாம் செய்த பின்னரும், மனதில் புண்ணோடு தன்னடி சோதிக்கு எழுந்தருளிய எம்பெருமானின் நிலையை சொல்லலாம்.
உலப்பில் கீர்த்தியம்மானே என்று சொன்னது ராமாயணத்தில் சூர்ப்பணகை, தாரை, மண்டோதரி ஆகிய மூன்று பெண்களும், நிந்திக்கவேண்டிய சமயத்திலும், வாயார வாழ்த்தினதை சொல்வதாகும்.
நெடியாய் என்று சொன்னது, தொட்ட எல்லா துறை தோறும் தரை காண முடியாதபடி பெருகிச் செல்பவனே என்று சொல்வது. அதாவது எல்லா குணங்களுக்கும் எல்லை காணமுடியாதபடி உள்ளவனே என்று பொருள். இதில் விளக்கம் சொல்லும் போது, எந்த குணத்திற்கு எல்லை கண்டாலும், அவனுடைய சௌந்தர்யத்திற்கும் லாவண்யத்திற்கும் எல்லை இல்லாதவனே என்று சொல்கிறார். இதே போல், நெடியானே என்று பெருமாள் திருமொழியில் (4.9) குலசேகர ஆழ்வார் சொல்லும் போது, அடியவர்களை காப்பதில் எல்லை இல்லாத கருணை உடையவனே, என்று சொல்வதை நினைவில் கொள்ளலாம். அதற்கு இன்னொரு உதாரணம், எம் அடியார் அது செய்யார் என்ற பெரியாழ்வார் திருமொழி, 4.9.2 பாசுரம் ஆகும். அதேபோல் நெடியானே என்பதற்கு நீண்டகாலம் ஆனாலும் நினைவில் கொள்பவன் அல்லது நாம் ஒருகால் நினைக்க, அதையே பலகால் நினைத்ததாகக் கொண்டு செயல்படுபவன் என்று பொருள்படும்படி “நினைமின் நெடியானே” (திருவாய்மொழி 10.5.10) என்று நம்மாழ்வார் சொல்வதையும், அப்போதைக்கு இப்போதே சொன்னேன் (பெரியாழ்வார் திருமொழி 4.10.1) என்ற பெரியாழ்வார் பாடலையும் நினைவில் கொள்ளலாம்.
அடியேன் உன் திருவடி சேருவதைப் பற்றி மாசுச : என்று ஒரு வார்த்தை அருள வேண்டும் என்கிறார்.
2கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலம் எல்லாம் சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே. (6.10.2)
மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் பல துண்டுகளாக செய்தும் ஜுவாலையுடன் ஸ்ரீஸுதர்சனத்தை கையில் ஏந்திக்கொண்டு இருக்கும், திருவேங்கடமுடையான், நித்யஸூரிகளுக்கு நாயகன், ஆழ்வாரை அவன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாடுகிறார்.
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் என்பதற்கு எண்ணெயாலே எரியும் விளக்கு இல்லாமல், நீராலே எரியும் விளக்கு கண்டு அநுபவிக்க வேண்டும் என்று ஆழ்வார் ஆசைப்படுவதாகவும், நீரிலே நெருப்பு எழுந்தார் போல் இருப்பதாகவும் சொல்கிறார். ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன் என்பது போல், சுனை நீர் வற்றினாலும் தன் அன்பு மாறாத, ஆறாத அன்பு உடைய ஆழ்வார் என்கிறார். இப்படிப்பட்ட அடியேன் உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி கிருபை செய்ய வேண்டுகிறார்.
3வண்ணம் அருள் கொள் அணி மேகவண்ணா! மாயவம்மானே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே! தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடிசேர அடியேற்கு ஆவாய் என்னாயே (6.10.3)

அழகிய மேகம் போன்ற நிறத்தை உடையவனே! ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! தேவாதி தேவனே! தெளிந்த அழகிய அருவிகள் மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் கொழிக்கும் இடமான திருமலையிலே விளங்குபவனே! உன் திருவடிகளில் வந்து சேரும்படி அடியேன் விஷயத்திலே இரங்கி அருள வேணும் என்கிறார்.
வண்ணம் அருள் என்று கொண்டு, அருள் தானே வடிவெடுத்த மாதிரி, அருளே திருவேங்கடமுடையானாக மூர்த்தியாக நின்று என்று கொள்ளலாம். வண்ண மருள் கொள் அணி என்று கொண்டு, கண்டவர் நெஞ்சை இருளச் செய்கின்றவனே என்றும் கொள்ளலாம்.
மாயவம்மானே! என்பதற்கு, வெறும் வடிவழகு மாத்திரம் இல்லாமல், ஆச்சரியமான குண விசேஷங்கள் கொண்ட பெரியவனே என்கிறார்.
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்ற இடத்தில், தேவர்களுக்கான அமிர்தத்தின் பலனை பெற பல நியதிகள் உள்ளன, ஆனால், திருவேங்கடமுடையானின் கருணையை பெற, நினைத்த மாத்திரத்தில், “ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்“ (5.10.10) என்று தித்திக்கும் என்று மீண்டும் சொல்கிறார் போலும்.
4ஆ ஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல், தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமா மகள் கேள்வா, தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே. (6.10.4)
உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான அசுரர்களின் ஆயுளை முடிப்பதற்காக நெருப்பை உமிழ்கிற அம்புகளை மழை போல பொழியும் சார்ங்கம் என்ற வில்லை உடையவனே, திருமகள் மணாளனே, தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக கூடியிருக்கும், திருவேங்கடமலையில் எழுந்தருளி இருப்பவனே, உனது திருவடிகளை அடியேன் அடைய வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.
பரம தயாளுவாய் சக்திமானான எம்பெருமான் பாவங்களைப் போக்கி, அருள வேண்டும் என்கிறார். எம்பெருமான் கண்டு அருளிய நான்கு சாதனங்கள் (கர்ம, ஞான, பக்தி, சரணாகதி) தனக்கு உதவவில்லை என்றும், புதியதொரு சாதனம் வேண்டும் என்கிறார். இதனை உரையாசிரியர்கள், புதிய சாதனம் முக்கியமில்லை, எம்பெருமானே! நீ இருக்கும் போது நான் இங்ஙனே இழக்கலாகுமோ என்ற கருத்தே முக்கியமாம் என்று சொல்வார்கள்; நஞ்ஜீயர், நம்பிள்ளை ஆச்சார்யர்களின் உரையாடல் இங்கு சொல்லப்பட்டு உள்ளது. ஐந்தாவது சாதனம் என்று ஆச்சார்ய அபிமானத்தை சொல்ல முடியாது, ஏன் என்றால் ஆச்சார்ய அபிமானம் நான்காவது சாதனமான சரணாகதியில் அடக்கம், ஆச்சார்யனே, எம்பெருமானின் திருவடி ஆவார், ஆகையால், “ஈச்வரனைப் பற்றுகை, கையை பிடித்துக் கார்யங்கொள்ளுமோ பாதி, ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி’ என்ற ஸ்ரீவசனபூஷணத்தில் சொல்வது போல், ஆச்சார்ய அபிமானம், காரியம் செய்துவிக்கையில் அமோகமானது என்று தெரியம்.
“தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமாமகள் கேள்வா“ என்று சேர்த்து சொல்கின்ற அழகு மிகவும் ரஸிக்கத் தக்கது. அசுரர்களை (கரதூஷணாதிகள்) வதை செய்ய நெருப்பை உமிழ்கின்ற மிகக்கொடிய அம்புகைளப் பிரயோகித்த கோதண்டராமா (தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா) என்று சொல்லும் போது, அப்போது சக்கரவர்த்தி திருமகனின் வெற்றியை கண்ட சீதா பிராட்டி, “தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே” என்று பிராட்டி, அதுவரை கணவனாக மட்டும் அணைத்துக் கொண்ட எம்பெருமானை அன்றுதான் எம்பெருமானை ஆண்மகனாக கொண்டு அணைத்துக் கொள்வதை போல் உள்ள காட்சியினை நினைத்து, ஆழ்வார் திருமாமகள் கேள்வா என்று சேர்த்து பாடுகிறார். ஒரு வில்லினை முறித்ததற்கே ஸ்ரீராமனின் வீரத்தை வியந்த ஜனகன் உகந்து சீதாபிராட்டியை மணம் செய்வித்தவர் இப்பொழுது பதினாலாயிரம் ராக்ஷசர்களை தனியொருவனாக கொன்று குவித்ததை பார்த்தால் என்ன செய்வார் என்று வியந்ததையும் நினைவில் கொள்ளலாம்.
5புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ, புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ, திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே, திணரார் சார்ங்கத்து உனபாதம் சேர்வது அடியேன் என் நாளே? (6.10.5)
‘உனது திருவடிகளை அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ’ என்று கேட்கும் பாசுரம். ‘உன் கையில் வில் இருக்க நான் இழக்க வேண்டியதில்லை, இழக்கமாட்டேன், இனி உன்னைப் பெறும் நாளைச் சொல்லி அருளினால் போதும்’ என்று ஆழ்வார் வேண்டும் பாடல். தேவகிக்கு பத்து ஆண்டுகள் என்று, பரதனுக்கு பதினான்கு ஆண்டுகள் என்று, சீதைக்கு பத்து மாதங்கள் என்று, கோபிகைகளிடம் ஒரு பகல் முடிந்து சாயங்காலம் வந்து விடுவதாக சொன்னது, என்று ஒவ்வொருக்கும் நேரம் சொல்லி தந்தது போல், தனக்கும் ஒரு நாள் குறித்து தரவேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
சுக்ரீவனின் சந்தேகத்தை போக்குவதற்காக, இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அவரிடமே அடைந்தது என்கிற வரலாற்றை ஆழ்வார் இங்கு எடுத்துக் கூறியது, சந்தேகம் கொண்ட சுக்ரீவனுக்கே காரியம் செய்த எம்பெருமான், சிறிதும் சந்தேகமின்றி இருக்கும் தனக்கு காரியம் செய்யலாகாதோ என்பதற்காக என்று கொள்ளலாம். கண்ணன் குழந்தையாய், இரட்டை மருத மரத்தின் நடுவே எழுந்தருளிய பொழுது உரல் அந்த மரங்களுக்கு இடையே சென்றதால் முறிந்து விழ, முன் நாரதர் சாபத்தால் குபேர புத்திரர் இருவர் சாபம் தீர்ந்து சென்றனர் என்கிற வரலாறு இங்கு சொன்னது, எம்பெருமான் இன்னாருடைய சாபத்தைத் தீர்ப்பது, இன்னாருடைய சாபத்தைத் தீர்க்கலாகாது என்று ஒரு நியதி கொண்டு இருக்கிறார் என்று ஆழ்வார் கேள்வி கேட்பது போல் உள்ளது .
6எந் நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று, எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய், மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே, மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? ( 6.10.6)
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாளே“ என்று ஐந்தாம் பாடலில் சொன்னது, ‘உன் திருவடிகளே, நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா?’ என்று சந்தேகிக்கிற மாதிரியும் பொருள் சொல்லக்கூடும். அந்த சந்தேகத்தை இங்கே எம்பெருமான் தீர்ப்பது போல் அமைந்துள்ள பாடல். இந்த உலகத்தில் உள்ளவர்கள், எம்பெருமானின் பரத்துவத்தை எண்ணி, உகந்து அங்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்பது போல், ‘மண்ணளந்த இணைத்தாமரைகளை நாம் காண்பதற்காகும் நாள் எந்நாள்’ என்று நித்யஸூரிகள் ‘ஸௌலப்ய ஸர்வஸுலபமான திருவடிகளை நாம் காணப் பெறுவதன்றோ“ என்று இங்கே திருமலைக்கு வந்து தங்கி, உடல், மனம், வாக்கு என்று மூன்று கரணங்களாலும் பலன் ஒன்றையும் விரும்பாமல் வணங்கும்படி ஆச்சரியமாக எழுந்தருளி உள்ள பெருமானே, இங்கு, தான் எப்படி உன்னை இழக்க முடியும் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானை அடைந்து அவரை விட்டு ஓரடி கூட விலகாத நிலை வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திப்பதை பாடலின் கடைசி வரி கூறுகிறது.
7அடியேன் மேவி அமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே, கொடியா அடு புள் உடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே, செடியார் வினைகள் தீர் மருந்தே. திருவேங்கடத்து எம் பெருமானே, நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலாது ஆற்றேனே. (6.10.7)
இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையவனாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலாக்கனிவாய் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதமானவனே, உன் பாதம் காண நோலாதே நொடியார் பொழுதும் ஆற்றேன், என்று பொருள் காணலாம். ஆழ்வார், எம்பெருமான் திருவடி கிடைப்பதற்கு தொடர்ந்து அல்லது எப்பொழுதும் அனுஷ்டானம் செய்யாமல், ஏதோ அனுஷ்டானம் செய்து பலம் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனவரைபோல் கூப்பிட்டுக் கொண்டு உள்ளேன் என்கிறார். வேறு சாதனங்களை அனுஷ்டித்து அதில் பலன் பெற காலதாமதம் ஆவதற்கு அந்த அனுஷ்டானத்தில் ஒரு சில சிறு குறைகள் இருந்து இருக்கலாம் என்று காத்துகொண்டு இருப்பது போல் இல்லாமல், ஆழ்வாருக்கு எம்பெருமானே சாதனமாக இருந்தாலும், ஆழ்வாரின் மனதில், அவன் கிருபையும் இவருக்கு வந்து சேரமுடியாதபடி இவர் இருக்கிறாரோ என்ற பயத்தை இங்கே சொல்லி உள்ளார். திருவாராதனத்தில் பெருமாளுக்கு அமுது செய்தருளப் பண்ணும்போது “அடியேன் மேவியமர்கின்றவமுதே, பச்சை மாமலை போல் மேனிபோன்ற பாசுரங்களை விண்ணப்பம் செய்வது என்று பராசர பட்டர் என்ற ஆச்சாரியர் சொல்லி உள்ளார். மேவி அமர்கின்ற அமுதே! என்பது எம்பெருமானுக்கு இவர் சாத்தும் ஒரு திருநாமம் ஆகும். தேவாமிர்தத்தை எம்பெருமானிடம் வேண்டும் தேவர்களையே காக்கும் எம்பெருமான், அவரையே அமிர்தமாக எண்ணும், தன்னை காக்கக் கூடாதா என்று கேட்டு கொள்ளவதாகவும் சொல்வதுண்டு. தேவர்கள் அமுதம் கேட்கும்போது அவர்கள் அதனை உண்டு சாகா வரம் வேண்டுவது; ஆனால் ஆழ்வார் எம்பெருமானான அமுதத்தை வேண்டி இவ்வுலகில் இருந்து சென்று பரமபதம் அடைய வேண்டும் என்பது இரண்டு அமுதங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை விளக்கும்.
இமையோர் அதிபதியே என்றது, நித்யஸூரிகள் எம்பெருமானை பரமபதத்தில் அனுபவிக்கும் அளவு தானும் இங்கு அனுபவிப்பவனாக சொல்கிறார்.
கொடியா அடு புள் உடையானே என்றது, ஆழ்வாரை திருமலைக்கு வந்து சேர சொன்னதற்கு, கஜேந்திர சரித்திரத்தில், கருடனையும் தான் சுமந்து விரைந்து சென்றதைப் போன்ற கருணையை எம்பெருமான் தன்னிடம் காட்டக்கூடாதோ என்று சொல்வதுபோல் உள்ளது.
கோலக்கனிவாய்ப் பெருமானே! என்பது தன்னுடைய திருவதரத்தின் பழுப்பைக் காட்டி தன்னை அடிமையாக்கி கொண்டவனுக்கு மீண்டும் அதை காண்பிப்பது அரிதாக உள்ளதோ என்று கேட்பது போல் தோன்றும்.
கோலக்கனிவாய் பெருமானே கொடியாவடு புள்ளுடையானே“ என்று சேர்த்து சொல்லி, அடியவர்கள் இந்த அழகை அனுபவிக்க கொடி கட்டி பறந்துகொண்டு இருப்பவனே என்று நம்பிள்ளை என்ற ஆச்சார்யர் அனுபவிப்பார்.
செடியார் வினைகள் தீர்மருந்தே என்று சொன்னது, நிலத்தில் விளையும் மருந்தைக் காட்டிலும் மலையில் விளையும் மருந்த மிகச் சிறப்பாகும் என்ற கருத்தில் திருமலையை சொல்வது.
8நோலாது ஆற்றேன் நுன பாதம் காண வென்று நுண் உணர்வில், நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும், சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே, மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போல வாராயே. (6.10.8)
சிவபிரானும், பிரமனும், தேவேந்திரனும் எம்பெருமானின் திருவடிகளைக் காண்பதற்கு சாதனா அனுஷ்டானங்கள் என்று உபாயம் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, ஆசைப்பட்டு, எம்பெருமானின் திருவடிகளை காண்கிறார்கள். இப்படி ப்ரம்மாதிகளுக்கும் ஆகிஞ்சன்யம் மூலமே எம்பெருமான் தரிசனம் என்பதை விளக்கும் பாடல். ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அல்லது எம்பெருமானை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கலங்குவது.சேலேய்கண்ணார் பலர் சூழவிரும்பும் என்று சொல்வதால், சிவனும், பிரமனும் இந்திரனும் தங்கள் மனைவிகளுடன் வந்து சரணம் புகுந்தார்கள் என்று சொல்கிறார். மாலாய் மயக்கி அடியேன்பால் வாராய் என்று ஆழ்வார் சொல்லும் போது, அவர் மால் என்று கண்ணபிரானை சொன்னது மட்டும் இல்லாமல், கண்ணனை அவன் செய்த விளையாட்டுகளுடன் ஆழ்வார்க்கு காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
இந்த பாடலில் வரும் எம்பெருமானின் திருவடிகளை என்று சொன்னது, பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் காண விழைவது. மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை வேண்டுவார்.
9வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே, செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோளமுதே. எனதுயிரே, சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே, அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே. (6.10.9)
கைக்கு கிடைத்ததைப்போல் இருந்து கிடைக்காதவனே, கிடைக்காதவன் போல் இருந்து சற்று தள்ளி நிற்பவனே, செந்தாமரை கண், செங்கனி வாய், நான்கு தோள்கள் என்று அனுபவிப்பதற்கு சிறந்தவனே, ரத்தினங்களின் ஒளியால், இரவையும் பகல்போல் ஜொலிக்கும் திருமலையில் உறைபவனே, உன் திருவடிகளை ஒரு கணமும் பிரிந்திருக்கும் சக்தி தனக்கு இல்லை என்று ஆழ்வார் திருவேங்கடவனிடம் முறையிடும் பாடல். ஆழ்வார் தனது மானசீகமான அனுபவத்தில் எம்பெருமானை அடைந்தோம் என்று இருக்கையில், அதனை உண்மை என்று எண்ணி அவனை அணைக்க நினைத்தால் அங்கு அவன் இல்லாதது கண்டு, வந்தாய் போலே வாராதாய் என்றார். இதனை வேறு ஒரு விதமாக விளக்குவதும் உண்டு. விபவாவதாரங்களில் எதிரிகளுக்கு கிட்டாதவனாகவும், அவனுடைய பரத்துவத்தை எண்ணி தங்களுக்கு எங்கே எளியவனாக வந்து காட்சி தரப்போகிறான் என்று இருக்கையில், அடியவர்களுக்கு தன்னுடைய சௌலப்யத்தால் அவர்கள் முன் வந்து நிற்பான் என்பதே அது.
பரமபதம் போலே எப்போதும் பகலாய் இருக்கின்ற திருமலையில் எழுந்து அருளி இருப்பவனே என்பதை  (சிந்தாமணிகள் பகர் ) அல்லைப் பகல் செய் மூலம் தெரிவிக்கின்றார்.
அந்தோ என்று சொல்வதன் மூலம் அவன் அருளுக்கும் குறைவில்லை, தன் ஆசைக்கும் குறைவில்லை, இருந்தும் அவனை அடைய முடியவில்லையே என்பதை வெளிப்படுகிறார்.
10அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா, நிகரில் புகழாய், உலகம் மூன்று உடையாய், என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (6.10.10)

மேலே சொன்ன ஒன்பது பாடல்களில் எம்பெருமானின் ஸ்வரூபத்தையும் தன்னனுடைய ஆற்றாமையையும் சொல்லியுள்ளார். இந்த பாடலில், தன்னுடைய ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். (அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால்  எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது.)
இது அகன்று இருந்து சொல்லும் பாசுரம் இல்லை. இறையும் அகலகிலேன் என்று ஒரு நொடி கூட விலகாமல் பாட வேண்டிய பாசுரம். இங்கு வரும் அகலகிலேன் என்பது மற்றவர்கள் சொல்வது போல் அன்று என்றும், மற்றவர்கள் சொல்வது அவரவர் கர்மத்தின் பலனாக வருவது என்றும், பிராட்டியார் சொல்வது விஷயத்தின் பொருட்டு வருவது என்றும் சொல்கிறார். பிராட்டியாருக்கு கர்மங்கள் கிடையாது என்பதாலும், அவனுக்கு அவள் மேல் இருக்கும் பிரியத்தால் அவளை விட்டு பிரியாத ஸ்வபாவம் உடையவன் ஆகையாலும், அவளும் அவனை விட்டு பிரியாதவள் ஆகையாலும் அகலகிலேன் என்ற இந்த வார்த்தை அவனுடைய திருமார்பின் மேன்மையை சொல்லும் பொருட்டு, இந்த இடத்தில தேவை என்கிறார். எம்பெருமானுடைய திருமார்பிலே நித்யவாஸம் செய்கின்ற பெரிய பிராட்டியார், அகலகில்லேன் என்று சொல்வது, பெற்றிருக்கும் பாக்கியத்தின் உயர்வினை எண்ணி, அகன்று விடுவோமோ என்ற சந்தேகத்தின் வெளிப்பாட்டினால் தேவை ஆகிறது என்கிறார்.
அலர் மேல் மங்கை என்றதால், புஷ்பத்தின் மணம், அதுவே ஓரு வடிவு எடுத்தது போல் தோன்றின மஹாலக்ஷ்மி, அந்தப் பூவில் வசிக்க பிடிக்காமல், எம்பெருமானின் திருமார்பிலே சேர்ந்தது, அந்த பூவைக் காட்டிலும் மென்மையான, மேன்மையான சிறந்த இடமாக இந்த திருமார்பே ஆகும் என்ற முடிவால் ஆகும். அப்படிப்பட்ட திருமார்பை உடையவனே என்பதை உறை மார்பா என்று சொல்கிறார். உறை என்பதால் எப்பொழுதும் வாசம் செய்வது சொல்லப்பட்டது. உறைமார்பா என்பதனால் பிராட்டி ஈச்வரன் இவர்களின் சேர்த்தியானது எப்போதும் உண்டு என்பது காட்டப்பட்டது. அதனால், அடியவர்கள் எப்போது வேண்டுமானாலும் சரணாகதி செய்யலாம் என்றும், பிராட்டி உடன் இருப்பதால், சரணாகதி பலிக்கும் என்றும், அடியவர்கள் பயப்படாமல் இருக்கலாம் என்றும், சரணாகதி செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதும் என்றும் அறியலாம்.
எம்பெருமானுக்கு உள்ள தனிசிறப்புகளில் உபாயத்துவம் என்ற ஒரு ஜீவாத்மாவிற்கு முக்தி அளிக்கும் சக்தி மிகவும் முக்கியமானது. பெரிய பிராட்டிக்கும் புருஷகாரத்துவம், என்ற தோஷங்கள் நிறைந்துள்ள அடியவர்களை / அறிவுள்ள ஜீவாத்மாக்களை, எம்பெருமான் அங்கீகரிக்கும்படி செய்யும் குணம் தனிச்சிறப்புடன் முக்கியமாக உள்ளது.
எம்பெருமானுக்கு முக்தி அளிக்கும் சக்தி இருக்கும் போது ஏதற்காக பிராட்டியை முன்னிட்டு சரணாகதி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஆச்சார்யார்கள் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள். ஜீவாத்மா செய்யும் எண்ணற்ற பாவங்களை கண்டு எம்பெருமான் மிகவும் சீற்றம் அடைய காரணம் உள்ளது. அப்படி சீற்றம் பிறந்தாலும், அந்த ஜீவாத்மாவை மன்னித்து அருளுவது பெரிய பிராட்டியாருக்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தன்னுடைய கருணையால், எம்பெருமானுக்கு பாவங்கள் பல செய்த இந்த ஜீவாத்மா மேல் தயை பிறக்கும்படி செய்வது பிராட்டியின் புருஷகாரத்துவம் ஆகும். சம்பந்தப்பட்ட ஜீவாத்மாவிற்கும் அபராத பயத்தினால் பிராட்டியின் புருஷகாரத்துவம் மிகவும் தேவையான ஒன்று.
பிராட்டிக்கு, அனைவர்க்கும் மாதாவாக இருந்து, அனைவரின் மேல் நெஞ்சார்ந்த அன்பு கொண்டு, அந்த ஜீவாத்மாக்களின் வருத்தங்களை கண்டு பொறுத்திருக்க முடியாத ஒரு தன்மையும், எம்பெருமானுக்கு பத்தினியாக இருந்து, தான் செய்யும் பணிவிடைகளை கண்டு, அவன், அவள் சொற்படி நடக்க வைக்கும் தன்மையும் இருப்பதால், அவளது புருஷகாரத்துவம் நிச்சயம் ஒவ்வொரு முறையும் பயன் அளிக்கும்.
பிராட்டி கூடஇருந்ததால், பிராட்டியிடம் தவறு செய்து இருந்தாலும், எம்பெருமான் ராமச்சந்திர மூர்த்தி, காகாசுரனை மன்னித்ததும், பிராட்டி கூட இல்லாததால், இராவணன் தலையறுப்பு நடந்து அவன் வாழ்வு முடிந்ததும் பிராட்டியின் புருஷகாரத்துவத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
பிராட்டியின் அபயப்ரதானத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. இராவணனை அழித்த பின், அனுமன், சீதையிடம் செய்தி சொல்லி, பிறகு பிராட்டிக்கு, அசோகவனத்தில், முன்னாளில் தீமைகள் செய்த ராக்ஷசிகளை, எம்பெருமான் பகவத் அபச்சாரம் செய்தவர்களையும், பாகவத அபச்சாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் வண்ணம் / முறையில் முடித்துவிட உத்தரவு வேண்டிய அனுமனுக்கு தாயார் சொல்லும் பதில் இதுதான். “அவர்கள் தாங்கள் சொல்வது போல் பாபிகள் அல்ல; நான் நினைப்பது வேறு; அப்படியே பாவிகள் என்றாலும், அழுக்கு உடையவர்கள் தாம் குளிப்பதற்கு தகுதியானவர்கள்; ஆகவே அவர்களுக்கு, நாம் தாம் முகம் கொடுக்க வேணும், கைமுதல் இல்லாதவர்க்கன்றோ, நாம் கைமுதலாக இருக்க வேண்டும். சரணம் என்று வந்த விபிஷணனுக்கு தோஷம் இருந்தாலும், எம்பெருமான் சரணாகதி கொடுத்தார் அல்லவா? வசிஷ்டாதிகளை, மந்திரிகளாக கொண்ட இஷுவாகு வம்சத்தில் பிறக்காததாலோ, யோகிகளான ஜனககுலத்தில் பிறக்காததாலோ, சரணாகதியின் சிறப்பு தங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் போனது; எம்பெருமானும், எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்; இப்படி கேட்டு இங்கே கோபம் வர செய்வாயோ? இவர்களது பாவ புண்ணியங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இப்பொழுது தங்கள் கையில் இவர்கள் அகப்பட்டு எங்களை காப்பாற்றுபவர் யார் என்று ஓலமிடும் போது, நாம் இவர்களிடத்தில் இரங்க வேண்டும், நாம் இவற்றை உமக்கு கற்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம், இந்த வாழ்க்கையில் குற்றம் செய்யாதவர் யார் ? நல்லவர் என்று பெயர் எடுத்த இராமபிரான் மீது குற்றம் சொல்ல முடியாதா, எங்கள்மேல் குற்றம் சொல்ல முடியாதா, அல்லது தங்கள் மேல் குற்றம் சொல்ல முடியாதா ? இராவணன் சொன்ன காரியத்தை செய்த இவர்களை தண்டிப்பது எப்படி? இராமன் ஒரு விஷயத்தில் முனைப்பாக இருந்தாலும், அவனை ஆற விடுவதற்கு நாங்கள் உண்டு, அவன் செல்வதற்கு நாங்கள் இருக்கும்போது, தாங்களும் எங்களுடன் இருப்பீர்கள் என்று இருந்தேன், நீங்கள் இப்படி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்” என்று நீண்ட விளக்கம் கொடுத்த பிராட்டி கருணை கடல், புருஷகாரத்வத்திற்கு அவள் ஒருவளே. எட்டு மாதம் பிராட்டியை விட்டு பிரிந்து இருக்க வல்லவரானதால் இராமனிடத்தில் குற்றம் ஆகிறது. பாரதந்திரியத்திற்கு அனுகுணமாக தான் பேசாமல் இருந்திருக்கவேண்டும், அப்படி செய்யாததே தன குற்றம் ஆகிறது; இராவணன் சொன்ன வார்த்தைகளுக்கு காரியம் செய்த இந்த ராக்ஷிசிகளை தண்டிக்க சொல்வது அனுமனின் குற்றம் என்று சீதையின் கூற்றாக கொள்ள வேண்டும்.
எம்பெருமான் பிராட்டி சொல்வதை நிச்சயம் கேட்பார் என்பதற்கு உதாரணமாக, “மாய மானின் பின்னே போ“ என்றாலும், அதன் பின்னே தொடர்ந்து போகும் இவன் அவளுக்கு ரசிகன் என்பதின் மூலம் அறியலாம்.
நிகரில் புகழாய் என்று தொடங்கும் பதத்தை நாராயண சப்தத்திற்கு அர்த்தமாக சொல்லி, சரணாகதனை ஏற்றுக்கொண்டபின், ஒரு போதும் நழுவ விட மாட்டான் என்ற குணாதிசயத்தை சொல்வதாக கூறுவார்கள். இதனை தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் எனது அடியார் அது செய்யார் என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். நிகரில் புகழாய் (வாத்ஸல்யம்),உலகம் மூன்று உடையாய், ( ஸ்வாமித்வம் ) என்னை யாள்வானே (ஸௌசீல்யம்), நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே ( சௌலப்யம் ) என்றது எம்பெருமானின் பல குணங்களையும் வரிசையாக சொல்லி உள்ளார். அடியார்கள், எம்பெருமானிடம் தங்களுடைய அபராதங்களை பொறுக்க வேண்டும் என்று பிராட்டியை முன்னிட்டு வேண்டும்போது, எம்பெருமானின் வாஸ்தல்யம் தலையெடுக்கும் என்பதால், அது முதலாக சொல்லப்பட்டது. தானே உபாயமாகவும், தானே ப்ராப்யமாகவும் (தானே வழி, தானே அடையும் இடம்) இருந்து தனக்கு செய்த உபகாரத்தை நினைவு கூறுகிறார். அவன் மேன்மையும் தன்னுடைய சிறுமையும் பாராது, ஒரே நீராக கலந்து போல் தன்னுடன் கலந்ததை சொல்கிறார். மொத்தத்தில், தாழ்ந்தோருக்கும் முகம் கொடுக்கும் திருவேங்கடம் என்பதால் இங்கு பரமபதத்தை விட அதிகமாக சிறப்பாக வெளிப்படும் சீல குணமே முக்கியத்துவம் பெறுகிறது.
புகல் ஒன்று இல்லா அடியேன் என்று சொல்வதன் மூலம், ப்ரபத்யே என்ற பதமும், அநந்யகதித்வமும் அநன்யார்க சேஷத்வமும், அதிகாரியான எம்பெருமானின் ஸ்வரூபமும் சொல்லப்பட்டுள்ளன. ( அநன்யார்க சேஷத்வம் என்பது அவரைத் தவிர வேறு யாரிடம் அடிமையாக முடியாது என்று சொல்வது, அநந்யகதித்வம் என்பது அவனைத்தவிர வேறு யாரிடமும் சேரும் வழி இல்லை என்று சொல்வது).
உன் அடிக்கீழ் என்பதனால், சரநௌ என்ற பதம் சொல்லப்பட்டு, நடுவோர் இடையூறு இல்லாமல் இருக்கும் தன்மை என்று விளக்கப்பட்டது. உலக விஷயங்களில் ஆசையை அகற்றியது முதல், எம்பெருமானிடத்தில் ருசியை ஏற்படுத்தி, அப்படி பிறந்த ருசியையும் நன்றாக வளர்த்து, அடைய வேண்டியதில் உள்ள அத்தனை விரோதிகளை தவிர்த்து, எப்பொழுதும் இந்த உலகத்தில் கைங்கர்யம் செய்து அனுபவிக்க வைக்கும், அழகுமிகு திவ்யமங்கள விக்ரகத்தை இங்கு சொல்கிறார். திருவாய்மொழி முதல் பாடலிலேயே ‘ துயர் அறு சுடர் அடி தொழுது எழு ‘ என்று சொன்ன ஆழ்வார், தாம் எம்பெருமானின் திருவடிகளை பற்றுகின்ற இந்த பதிகத்தில், விடாமல் ஒவ்வொரு பாசுரத்திலும் மண்ணளந்த இணைத்தாமரைகளான திருவடிகளின் சிறப்புகளை பாடியதை மேலே பார்த்தோம்.
அமர்ந்து என்று சொல்வது, ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்றும் சரணம் வ்ரஜ என்றும் எம்பெருமான் சொல்லும் போது திருவேங்கடமுடையானுடைய திருவடிகளும், தன்னுடைய தலையும், ஆபரணத்தில் கொக்குவாயும் படுகண்ணியும் போலே, இந்த பக்க விளக்கின் வெளிச்சம் அந்த பக்கம் தெரியாதது போலே, ஒன்றுடன் ஒன்று சரியாக பொருந்தி அமைந்துள்ளதை சொல்கிறது.
தன்னுடைய சரீரத்தில், தமக்கு அந்தர்யாமியாய் இருக்கும் எம்பெருமானை அறிந்திருந்த ஆழ்வார், புகுந்தேனே என்ற இந்த வார்த்தை சாதாரண இயக்கத்தை சொல்வதல்ல என்கிறார். புகுந்தேனே என்று சொல்வது, அவனுடைய சர்வ ஜகத் காரணத்துவத்தையும், சர்வ ஆத்மபாவத்தையும், சர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து அவனே உபாயம் என்கிற அத்தியாவசியமான ஞானத்தை சொல்கிறது.
11அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்றும் அருள் கொடுக்கும், படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும், பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. (6.10.11)
இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் கற்றவர்கள், மஹாகம் என்றும், பிரமாகாசம் என்றும் சொல்லப்படுகிற, பரமபதத்தில், நித்ய கைங்கர்யம் செய்து நன்றாக அனுபவிப்பர் என்று பயன் உரைக்கும் பாசுரம். பட்டர் என்ற ஆச்சாரியார், ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் திருவேங்கடமுடையானுடைய திருக்கையானது அவரது திருவடியை நோக்கி இருப்பதன் காரணம், “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்து அருள் பெறுவீர்” என்று காட்டுவதே ஆகும் என்கிறார். அடியவர்களுக்கு அருளுவதில், ஒப்பில்லாத சர்வேஸ்வரன் என்கிறார். சில ஆசாரியர்கள், தம்முடைய மநோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரமென்று உரைத்தார்கள். நம்பிள்ளை என்ற ஆச்சார்யர், “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த ஆயிரம்“ என்பர். திருவேங்கடத்துக்கு இவை பத்தும் என்று சொன்னது, “வான் திகழும் சோலை, மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்” என்ற திருவாய்மொழி தனியன்படியே ஆயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக ஸங்கல்பிக்கப்பட்டு அதில் இந்த பதிகம், திருவேங்கடத்துக்குப் பகுத்துக் கொடுக்கப்பட்டது. நம்பிள்ளை மேலும், “ஆழ்வார் பண்ணின ப்ரபத்தியே நமக்கு எல்லாம் போதும், தனித்து வேண்டாம் ” என்று இப்பாசுரத்தை சொல்லி அதன் பலனை அனுபவிப்பார்.   ஆழ்வாரை நினைத்து, இப்பத்தும் கற்றவர்கள் இடத்தும் ஈச்வரன், ஸ்ரீ விபிஷ்ணாழ்வானோடு கூட வந்த நால்வர்க்கும், விபீஷணன் பண்ணின சரணாகதியே அமைந்தார் போல், இவனுடையவன் என்று இந்த பாசுரங்களை கற்றவர்களுக்கும் அருள் புரிவார் என்கிறார். பிடித்தார் பிடித்தார் என்ற இரண்டு முறை சொன்னதை, இரண்டு வகையாக பொருள் கூறுவர், இந்த பாசுரத்தின் சொல்லைப் பற்றினவர்கள் என்றும், பொருளைப் பற்றினவர்கள் என்றும் சொல்வது ஒரு வகை. பிடித்தாரைப் பிடித்தவர்கள் என்று அர்த்தம் கொண்டு, ஸம்பந்த ஸம்பந்திகளைச் சொன்னதாக மற்றொரு வகை.
இந்த பாசுரத்தில் குறிப்பிடும் திருவடிகள் எம்பெருமானே தன் திருவடிகளை, “அடிக்கீழ்” என்று குறிப்பிடுவது போல் ஆழ்வார் பாடியுள்ளார். முன்பே சொன்னது போல், எட்டாவது பாடலில் வரும் திருவடிகளை என்று குறிப்பிட்டது, பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் எம்பெருமானின் திருவடிகளை காண விழைவது. மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை வேண்டுகிறார்.

இந்த பதிப்பு கொஞ்சம் நீண்டு விட்டது, மன்னிக்கவும். மீண்டும் ஆழ்வாரின் திருவேங்கடமுடையானின் இன்னொரு அனுபவத்தில் சந்திக்கலாம். நன்றி

Thirumaalai-Oorlien kaani illai-Hymn 29

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

 • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our sampradhayam in the hymn Meyyerke meyyanaagum.
 • Emperumaan entered the heart of Azhwaar in the next hymn Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
 • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal in the next hymn, Virumbi ninru.
 • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in the next hymn, ini thirai thivalai modha.
 • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
 • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are for the happiness of His devotees only in the next hymn, Paayum Neer Arangam.
 • Emperumaan made Azhwaar to realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, in the next hymn, Panivinal manamadhu onri.
 • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas and our Acharyaas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in the next hymn, Pesitre pesal allaal.
 • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
 • Emperumaan made Azhwaar to realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in the last hymn of this sequence, namely, Vella Neer parandhu paayum.

These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).

Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

In the first hymn of this subsection, Kulithu Moondru Analai (25), doing Naichiyaanusandhaanam, we saw Azhwaar mentioning that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In the next hymn, Podhellam Podhu Kondu (26), we saw Emperumaan asking Azhwaar, that he could do the poojas and singing slokas on Him, which anyone could do, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams. We also saw Azhwaar mentioning that he did not do them as well.

After hearing Azhwaar say that he did not do any good deeds that humans could do, Paramathmaa stated that He accepted the services that were carried with good intention by squirrels and monkeys, when He took Rama incarnation, the same way as He accepts the services of Nithyasoories, like Vishwaksena, Ananthazhwaan and Garudazhwaar in Paramapadham. When Periyaperumal inquired Azhwaar whether he had done any such thing with good intentions, Azhwaar responded negatively in the hymn “kurangugal malaiyai nooka” (27).

In the hymn Kulithu moondru analai (25), Emperumaan asked Azhwaar, if he had done prayers using all the three elements, thinking through mind, offering flowers using hands and reciting holy chants using mouth. In the next hymn, Podhellam Podhu Kondu (26), Emperumaan asked Azhwaar whether he did prayers using his mouth, by reciting holy chants. In the next hymn kurangugal malayai nooka, (27), Emperumaan asked Azhwaar whether he had served with his hands and legs, like the monkeys and squirrels. In the next hymn, Umbaraal ariyalaaha” (28), Emperumaan asked Azhwaar whether his mind had thought about Paramaatma as his saviour, like the elephant Gajendra when a crocodile caught the legs of the elephant and was saved by Emperumaan. Azhwaar responded negatively like how did in the previous hymns.

So, initially Emperumaan asked Azhwaar whether he has done all the three together, when Azhwaar replied negatively, Emperumaan started asking about each one of them in each of the subsequent hymns.

Now let us move on with the next hymn.

Hymn 29

Oorlien, kanni illai, uravu matroruvar illai, Paaril nin paadha moolam patrilen Parama Moorthi, Kaaroli vannane (en) Kannane kadharukinren, aar ular kalaikan amma Arangamaa nagarulaane (29)

Perumal asked, if Azhwaar had thought about Him as the protector, Azhwaar replied negatively, unlike the elephant Gajendra who thought of Emperumaan as its saviour, when it was in trouble as in the previous hymn. Now in this hymn, Emperumaan is asking, if Azhwaar atleast had any association with His Divyadesams, and Azhwaar, like previous paasurams, replied negatively. Emperumaan is checking whether Azhwaar had any association with divyadesams as He has committed to protect all those who have some association in places like Salagramam, Ayodhya, Thiruvarangam, such as birth or chanting of Tirupallandu, or holding any piece of land for doing some service to Him, or bought a piece of land by him independently; azhwaar denied all in this hymn.

Azhwaar was neither born nor lived in those eternal divyadesams of Emperumaan’s; did not have the privilege of performing services to Him in those places; had no relatives in those divine lands and did not even know anyone else; he had not taken refuge on the holy feet of Emperumaan, which are the only shelter for all, those, who have no support in this world. Azhwaar called Him as his dear and the leader of all, who is in the hue of dark rainy clouds and cried in deep sorrow, as to who else would solve his grievance except Emperumaan. This the direct meaning of this hymn. Now let us go into a little bit more details.

Oorilen

What Ahwaar mentions as ‘oor‘ is not commonly known ordinary ‘oor’ or town, but those divyadesams like Saalagraamam, Ayodhya, Thiruvarangam, where Emperuman resides forever. Azhwaar says that the town where he was born and lived, does not offer Moksha. If all cities can give abode, all will attain the abode. There is no evidence for that, in our vedas, ithihaasams and puranams. This is the reason why Azhwaar meant divyadesams when he just mentioned Oor or town.

But the Divyadesams can bestow that moksha, as told in Aranya Kaanta in Valmiki Ramayana, (1.20) sages tell Sri Rama that they deserve to be protected by Sri Rama because they live in His territory. They continue to say that whether they live in the city or in the jungle, Rama is the master of the people, and He was our king ” in Dandakaranya. In the same way, in Uthara Kaanta, (109.22) there was not a single living being was found in Ayodhya, and is mentioned that all living beings followed Rama which meant that all got moksha by following Rama. According to the Garuda Purana, in verse 11, it says that this land is holy and sacred, and leads the people to reach moksha and people who live here could attain all the desired things. In this way, the divyadesams where Emperumaan lives for ever, are the means for moksha.

In Thiruvaaimozhi, (7.5.1) verse, “Karpar Ramapiranai Allaal”, Swami Nammazhwaar, says that Sri Rama took all the living beings from grass to ants, without missing anything, from Ayodhya to Sri Vaikuntham in, “purpaa mudhalaa pul erumbu aadhi onru indriye, narpaal Ayodhiyil vaazhum sara asaram mutravum narpaaluku uythanan“. Similarly, Kulasekara Azhwwar in his Perumal Thirumozhi (10.10) sings that Sri Rama took everything from Ayodhya to Vaikuntha as “anru saraa asarangalai Vaikunthathu yetri“. So, any association with divyadesams is bound to give salvation. Therefore what Thondaradipodi Azhwaar meant here as Oor is only divyadesam and not a normal town.

Kaani Illai

Emperumaan asked Azhwaar, if not born in a divyadesam, had Azhwaar at least got some land there, as a right to perform holy rituals like chanting Thirupallaandu, forming a garden (nandavanam) or making garlands and offering the same to Emperumaan. Emperumaan queried, that those lands could either be purchased by Azhwaar or donated by someone to perform those services, which are generally called as Kaani Land. Azhwaar denied that he did not hold any land in divyadesams, to indicate that he did not have any association with divyadesams, because of which Azhwaar could get uplifted.

Uravu Matru Oruvar Illai

Emperuman tried to find, some reason to protect Azhwaar. He enquired Azhwaar, if he had not born in a divyadesam or did not hold any land in divyadesams,

 • did Azhwaar have any relatives in divyadesams; or
 • was Azwaar associated with anyone, and along with them, taught or listened to divine mantras in divyadesams, or
 • Had Azhwaar or his relatives have given their girls, or taken, girls through marriage, in divyadesams.

But Azhwaar denied all of the above.

When Azhwaar mentioned Uravu illai he meant that he did not have close relatives in those divyadesams. Similarly by matru oruvar illai, he meant, that he did not have any distant relatives or friends in those divyadesams.

Paaril

Paaril means ‘this world’. When Azhwaar said that he did not have a place or town, Emperumaan asked him about his town, to which Azhwaar replied that he came from a place with the cruelty of infinite suffering, from where one’s food is robbed by seven people and one’s clothes by seven people. In the third Thiruvandhadhi (51), Peyaazhwaar, described the Paramapadham as Kalangaa Perunagar, to mean that Paramapadham is a great place free of perplexing lust and wrath and where everyone is without worries. So according to Thondaradipodi Azhwaar , all places except Paramapadham are towns that make people unclear.

Nin Paadha Moolam Patrilen

Azhwaar says he has no association with the holy feet of Emperumaan that are the support to those who are helpless. Here the commentator takes the history of Kakasuran from the Sundara Kanta (38-33) in the Ramayana. Kakasuran, who was abandoned by his father, mother, Maharishis and gods, ran around the three worlds, then surrendered to Rama Himself, who had sent the Brahmasthra. Azhwaar says that he has become unwanted to the holy feet of Emperumaan, who could give protection to even those who committed adultery, being targetted by the Brahmastra but later surrendered to Him, like Kakasuran. This highlights the kindness of Emperumaan. Azhwaar feels that He is in disadvantage in every aspect, hence Emperumaan might think that Azhwaar might have lost the blessed chance of attaining Him.

The following words in the hymn, explain the response to the above to Azhwaar.

Parama Moorthi

Azhwaar felt that he did no have any means to protect himself, but Emperumaan has many of those means to protect him. The word Parama means that He who has no superior or equals and Moorthi means idol. Emperumaan is the Lord / Swami to all, and He would be known as Paramamoorthy, as who protects everyone. Azhwaar says that He would be remembered as Paramamoorthy, only if He protects Azhwaar, His devotee. The commentator says that Azhwaar queries to Emperumaan, would it bring a blemish to Emperumaan’s leadership attribute if He does not accept His devotees. To this Emperumaan, replied, to Azhwaar, as, should not the devotees also realise that they are required to do services to Him. To that, Azhwaar said that even during the time of the great deluge, Emperumaan protected all of them without them knowing or remembering that they are subservients to Him and that can not be changed by any one. Azhwaar puts forth his thought, that because He knows the relationship between Him and them, He will make them understand that they are subservients to Him and and correct them.

Kaaroli Vannane

Emperumaan listens to Azhwaar and asks him what would be the way to give him moksha or Siddhi and Azhwaar answers that His beauty alone is the way. As in the 16th verse of Thirumalai, ‘aadharam peruga vaitha azhagan’, meaning that His beauty kindles the interest towards Him; Azhwaar says that first, His beauty arouses the curiosity of a devotee and that interest creates the way to reach Him. Azhwaar confidentally says, when Emperumaan is with that beautiful form, he will not have any shortcomings in his services to Him.

Kannane

Azhwaar says that such beauty is not in the unattainable Paramapadham or in Sri Vaikuntham. Emperumaan has taken many incarnations for His devotees like Azhwaar, to show and exhibit His simplicity and accessibility and suitable to being called Parama Moorthi. Since He is luminant Kaaroli Vannan, He starts the interest in His devotees towards Him, shows the path towards Moksham and epitome of simplicity, hence Azhwaar called Him Kannane here. Azhwaar says further that He is true to His stature in, simplicity, accessibility with added beauty, there is no constraint for Azhwaar to do his services to Emperumaan. In some places, it is also mentioned as En Kannane, meaning my dear Kannan. The overall meaning is same whether it is mentioned as En Kannane, or Kananne.

Katharukindren

Kathrukindren means that ‘Iam crying out loudly in distress’. Azhwaar says that he is crying like those, who think about these glories of Emperumaan, follow means like Bakthi , Karma or gnaana and feel that they are getting delayed in getting their turns for moksham.

Aar ular kalai kann

Azhwaar was wondering the various reasons on why Emperumaan was not protecting him when he was crying out.

 • Does He think that someone else would come and protect Azhwaar and that is why He is delaying
 • Does He think that Azhwaar, who does not have anything, would be able to protect himself,
 • Can anyone else protect Azhwaar, when Azhwaar himself knows that he does not have anything to protect himself and no one else knows that, more than Azhwaar.

Thus, Azhwaar asks who else could remove his sufferings, as ‘aar ular kalai kann’

Amma

Azhwaar is distraught, and cries out Amma, if Emperumaan’s property, Azhwaar himself is wrecked, would not that be a loss to Emperumaan himself.

Aranga Maa Nagar Ulaane

Azhwaar says that he may not have cried, had Emperumaan, who is the possesser of Azhwaar, is not near to him. But when He is awaiting eagerly, in this world, in Thiruvarangam, for someone to come and surrender to Him longingly, with in this world, how Azhwaar could not cry out.

Thanks and let us catch up soon in the next hymn.

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவிருத்தம்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்குத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு சுருக்கமாக பார்த்து உள்ளோம். மீண்டும் அவற்றை பின்னர் பார்க்கலாம் இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை கீழே காண்போம். நன்றி.

திருவிருத்தம்

எண் பாடல் பொருள் உள்ளுறை பொருள்
1.காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன, இதெல்லாம் அறிந்தோம்
மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர் நம்பும் சேண்குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே. (1.8)
தலைவனின் இயல்புக்கு வேறுமாதிரியான தற்போதைய செயல்களும் சொற்களும், அவன் பொருள் சம்பாதிப்பதற்காக தலைவியை பிரிந்து திருவேங்கடம் செல்வதை அறிந்து, தலைவி, தோழியிடம் பாடுவது.
தலைவன் ஏழை இல்லை, இருந்தாலும், தேவகாரியமும் பித்ருகாரியமும் சுயமாக சம்பாதிப்பதை கொண்டு செய்யாவிட்டால் பயனளிக்காது.
‘பிரிந்து போக நினைத்ததால் தலைவன், புதிய செயல்களை செய்யவும் புதிய வார்த்தைகளைச் சொல்லவும் நேர்ந்தது’ என்று நாயகி தோழியிடம் சொல்லித் தன்னை விட்டு பிரிவது தகாது என்று சொல்லும் பாசுரம்.
பொருளின் பொருட்டுப் பிரியக் கருதி எங்கேயோ புதிதாகக் கற்று வந்த குணம் என்பதை, கற்ற திண்ணனவே என்று கூறுகிறாள். கல்நெஞ்சர் என்று சொல்ல நினைத்து குன்ற நாடர் என்கிறாள்.
ஒரு மலையின் மேல் நின்றும், ஒரு மலையை தாங்கியும் உயிர்களை காத்திடுவான் என்றும் நித்யஸூரிகள் விரும்பி, விரைந்து வந்து தொழுவதற்கு ஏற்றதான உயர்ந்த திருமலை என்றும் அங்கு சர்வ ஸுலபனாக எம்பெருமான் எழுந்தருளி உள்ளான் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் எம்பெருமானுடைய பிரிவை ஆற்றாது இருந்த காலத்தில், ஆழ்வாரை ஆற்றிவித்த பாகவதர்கள், திருமலையை இடமாகக் கொண்டு வாழ எண்ணம் கொண்டு , ஆழ்வாரிடம் விடைபெறும் போது ஆழ்வார் பாடிய பாடல் என்றும் கொள்ளலாம்.
பாகவதரோடு கூடி இருப்பதைத் தவிர, எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசத்துக்குப் போக நினைப்பதும் தவறு என்று பாகவதர்களுடன் கூடி இருக்கும் சிறப்பு இந்த பாட்டினால் வெளியிடப்பட்டது.
2மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது வாயோ அது அன்றி வல்வினை எனும் கிளியும் எள்கும் ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவது அரிதே (1.10)
ஆச்சரியமான குணங்களை உடைய எம்பெருமானது வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய பூங்கொடி போன்ற இளம் பெண்களே, கொடிய தீவினையை உடைய நானும் நீங்கள் விரட்டும் கிளியும் தளரும்படி செய்தது உங்களது ‘ஆயோ’ என்கிற சொல்லோ, கோவைக் கனி போன்ற உங்களது சிறந்த அதரமோ, என்னுடைய காதல் நோயோ, நீங்கள் தாமாக அறியா விட்டாலும் நான் சொன்னாலும் கேட்பது இல்லை என்பதாலோ, உங்களுடைய வாயின் அழகோ என்னை உயிர்க்கொலை செய்கிறது. இவற்றில் இன்னது என்னை வருத்தும் என்பதை தெரிந்து கொள்வது அரிதாக உள்ளது. நீங்கள் சொல்லுங்கள்;
இது முறையிட்டுக் கூறும் வார்த்தை என்று தலைவன், தலைவி மற்றும் தோழியிடம் அவர்கள் கிளி முதலிய பறவைகள் வந்து தானியக் கதிர்களைக் கவராதபடி பாதுகாத்துக் கொண்டு இருக்கும் போது திருமலையில் பேசுவது போல் அமைந்துள்ள பாசுரம்.
நாயகன் தன்னுடைய கருத்தை தோழி தெரிந்து கொள்ளும்படி செய்வதாக அமைந்த பாடல் ஆகும். கேட்கின்றிலீர் என்று சொல்வதன் மூலம், தான் படும் வேதனையை கேட்கவாவது மாட்டீர்களா என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வாரைப் பிரிய விரும்பாத அடியவர், ஆழ்வாரின் வாய் மொழிகளில் ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தை இது. அற்புதனான எம்பெருமான் பரமபதத்தை விட்டுத் திருமலையில் வந்து எளிமையுடன் நிற்கிற எம்பெருமானை நாடுகின்ற ஆழ்வாரை அழைத்து அவரிடம் அன்பு மிகுதியால் அடியவர்கள் படும்பாட்டை விண்ணப்பம் செய்தாலும் ஆழ்வார் பரவசத்தால் கேட்காமல் இருப்பதாகவும், அதற்கு காரணம், ஆழ்வாருடைய திருமுக மண்டல மலர்ச்சியா, இல்லை, அவரை பிரிந்துபோக முடியாதபடி ஆழ்வாரும் பைங்கிளி வண்ணனான எம்பெருமானும் பேசும் சொற்களா. இல்லை அப்படிப்பட்ட சொற்களைக் கூறும் வாயிதழ்களா என்று பலவற்றை கூறி, இவற்றில் எது அடியவரின் வருத்தத்திற்கான காரணம் என்று ஆழ்வாரிடமே கேட்கும்படி அமைந்த பாடல் என்றும் கொள்ளலாம்.
3கயலோ நும் கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர், அயலோர் அறியிலும் இதென்ன வார்த்தை, கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத் தெம்மொடும்
பயலோ விலீர், கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. (2.5)
கண்ணழகைக் கொண்டாடின நாயகனைக் குறித்துத் தோழி தலைவியின் கருத்தறிந்து உரைத்த பாசுரமிது. தலைவி மற்றும் தோழி அருகில் சென்று நேரடியாக பேச்சினை தொடங்காமல், தன் காதல் தோன்ற ‘இவ்விடத்தில் ஒரு மதயானை வரக்கண்டீரோ?’ என்று தலைவன் தொடங்குகிறான். இப்பாட்டு. தலைவன் அன்பு மிகுதி தோற்றும் விதமாகவும், தலைவியின் சார்பில் தோழி பதில் உரைக்கும் விதமாகவும் உள்ளது.
கயலோ நும் கண்களென்று களிறு வினவி நிற்றீர் ‘ என்பதை இரண்டு விதமாக பார்க்கலாம்; யானையை பற்றி பேச வந்தவர் ஏன் கண்கள் பற்றி பேசுகிறீர்கள், அயலார் என்ன நினைப்பர்’ என்று தோழி மறுத்து, புதியவராய் வந்த நீங்கள், பல கொல்லைகளை உடைய திருவேங்கட மலையிலே, கூட்டுப்பயிர் பார்ப்பவர் போல இங்கு எங்களுடன் நெடு நேரம் வீண் பேச்சுப் பேசி நிற்பது தகாது என்பது முதல் கருத்து. ‘கண்ணழகில் ஈடுபட்டே வந்திருக்கிறீர், ஏன் யானையை பற்றி பேசி எங்களையும் மகிழ விடாமல் செய்கிறீர்’ என்பது இரண்டாவது கருத்து.
‘நாங்கள் உங்களுக்கு உரியவர்கள்; நீங்கள் எங்களுக்கு உரியவர்’ என்கிற கருத்து, அயலோர் அறியிலும் இதென்ன வார்த்தை என்று சொன்னதன் மூலம் தெரிகிறது. நாங்கள் உமக்கு அயலார் அல்லோம், அயலார் வேறு உளர் என்பதும் தெரியவரும்.
கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே என்று சொன்னது, நாங்களும் பயிரை காப்பது நேற்று இன்று அல்ல; பல நாட்களாக தினந் தோறும் காத்து வருகிறோம், நீங்கள் வரவில்லை, எங்களுடன் கூட்டுப்பயிர் செய்ய வில்லையே என்பதை தெரிவிப்பதற்காக, தோழியானவள் இப்படி கூறித் தலைமகளின் காதலைத் தலை மகனுக்குக் குறிப்பு கொடுத்ததாக பாடல் உள்ளது.
ஒரு ஆசார்யன் அர்த்தம் கற்பிக்கைக்காக நாள் குறித்து சிஷ்யனிடம் சொல்ல, சிஷ்யன் அந்த நாள் தவறி, இன்னொரு நாள் வர, ஆசார்யன், அன்றே வரவில்லையே, இப்போது தனக்கு முடிவு வந்துவிட்டது, இருந்தாலும் இப்போதாவது வந்தீரே, என்று மகிழ்ந்து அர்த்தம் சொல்லி கொடுத்தார் என்பது உள்ளுறைபொருள்.
4இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம், என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம், அம்பொன் மாமணிகள் திசைமின் மிளிரும் திரு வேங்கடத்துவன் தாள் சிமயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே. (4.1)தூது போகச் சொன்ன போது, போகாத மேகங்களைக் குறித்துத் தலைவி பேசும் பரசுரம் இது. திருவேங்கட மலையின் மேற் சென்று சேரும் பொருட்டுப் பிரயாணப்பட்ட மேகங்களை நோக்கித் தலைமகள் ‘என்னைப் பிரிந்து அங்குச் சென்று வசிக்கின்ற எனது தலைமகனுக்கு என் நிலைமையைச் சொல்லும் தூதராக வேணும்’ என்று வேண்ட, அதற்கு அவை உடன்படாததால் மீண்டும் அவற்றை நோக்கி, அவனுள்ள இடம் செல்லும் பாக்கியமுடைய நீங்கள், எனது தலையின் மேல் உங்கள் பாதத்தை வைத்தாவது செல்லுங்கள்’ என்று பிரார்த்திக்க, திருமலையின் தலை மேல் சென்று தங்குவதற்கு விரும்புகின்ற மேகங்கள் இவள் தலைமேல் தங்கி நிற்பதற்கு ஒப்புக்கொள்ளாத தன்மையைக் குறித்துத் தலைவி இரங்குகிறாள். திருமலை செல்லுவோரின் திருவடிகளை தம் தலைமேல் கொள்வது சிறப்பு என்பதை ஆழ்வார் சொல்கிறார். இங்கு திருச்சேறை எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் ‘தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலைமேலாரே” (பெரிய திருமொழி 7.4.1) என்ற பாடல் குறிப்பிடத்தக்கது.எம்பெருமானிடம் ஆழ்ந்த ஆழ்வாரின் நெஞ்சை மீட்கும் படி, கீழ் பாட்டில், ஆழ்வார் கேட்டுக்கொண்டதற்கு ‘இவர் நெஞ்சை மீளச் செய்வது அந்த எம்பெருமானுக்கே அரிதான ஒன்று ஆனதால், நம்மால் செய்ய முடியாது என்று அடியவர்கள் கைவிட, பின்பு ஆழ்வார் திருமலையை நோக்கி திவ்யதேச யாத்திரை செல்லும் சிலரைக் கண்டு ‘இவர்கள் நம் குறையை எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்து நம்மை அவனோடு சேர்த்து வைப்பதற்கு ஏற்றவர்கள்’ என்று கருதி அவர்களை ஆச்சார்யர்களாக வேண்டும் என்று கேட்க, அவர்கள் இவருக்கு ஆசார்யராவதற்கு உடன்படவில்லை. மாறாக அடியவர்கள், தங்கள் தலைகளின் மேல் ஆழ்வாரின் திருவடிகளை வைப்பதே தங்களுக்கு சிறந்த புருஷார்த்தமாகும் என்று ஆழ்வாரை வேண்டினார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
5ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.(5.10)
தலைவன் தலைவி இருக்கும் இடம் நோக்கி திரும்பி வருகையில் தேர்ப்பாகனிடம் கூறும் பாடல். பொருள் சேர்த்துவர தலைவியை பிரிந்த தலைவன், காரியம் முடிந்து தேரில் வருகிறான்; வரும்போது தான் காலம் கடந்து வருவதாக எண்ணி, தலைவி மிகவும் துயர் படுவாள் என்று எண்ணி, தேரை மிகவும் வேகமாக செல்லுமாறு கட்டளை இடும் பாசுரம். தன்னைப் பிரிந்து நந்திக்ராமத்தில் துடித்துக்கொண்டிருக்கின்ற பரதாழ்வானுடைய ஆற்றாமையைக் கருதி ஸ்ரீராமபிரான் பதினான்கு வருஷ காலம் சென்றதை ஒரு பகலில் வந்ததைப் போல என்று இங்கே நினைவில் கொள்ளலாம். தலைவியின் மேனி வெளுத்துப்போய் விடுவதற்கு முன் செல்லவேண்டும் என்று தோன்றினாலும், தான் விரைந்து சென்று சேராவிடில் ஆற்றாமை அதிகமாகி அவள் இறந்து விட்டால் அந்த பழி தமக்கு வந்து சேரும் என்பதும் தெரியவரும். எம்பெருமானது திருக்குழல் இயற்கையில் திவ்ய பரிமளம் உடையது மற்றும், செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி முதலிய நன்மலர்களை எப்பொழுதும் சூடிக்கொள்வதாலும் தேன் நவின்ற நீண்முடி என்கிறார். ‘தேன் நவின்ற” என்பதை முடிக்குச் சொல்லாமல், தேனாகச் சொல்லப்படுகிற எம்பெருமான், என்று அவனையே சொல்லலாம். ‘தேன் நவின்ற மாமலைக்கே’ என்று எடுத்துக்கொண்டால், ‘தென்னாதெனா வென்று வண்டுமுரல் திருவேங்கடம்’ என்று மலைக்கே சிறப்பாக கொள்ளலாம். விண்முதல் நாயகன் என்று சொன்னது, விண்ணுலகத்துக்கு முதன்மை ஆனவன் என்றும், உலகங்கள் எல்லாவற்றிற்கும் தலைவன் என்றும் கொள்ளலாம். கரிய நிறமுடைய எம்பெருமானது திருமுடியில் இருந்து திருவடி வரை தொங்குகின்ற முத்துமாலை, கரிய மலையின் உச்சி முதல் அடியளவும் இடையறாது பெருகுகின்ற வெள்ளத்திற்கு உவமையாக சொல்லப்பட்டது.   திருவேங்கடமுடையானின் சீலகுணமும் தரை காணமுடியாதபடி ஓடுவதாகவும் சொல்லலாம். பேறு பெறாமையால் வருந்துகின்ற ஆழ்வாருடைய ஆற்றாமையை உணர்ந்து, அன்புடைய அடியவர்கள் திவ்யதேச பயணத்தில் இருந்து விரைந்து வந்து, ஆழ்வாரை குளிர வைக்க வருவதை பாடுகிறார்.
எம்பெருமானையும், அவரின் அடியார்களையும், பிரிதாலாகிய துயரம் தீர, ஆழ்வாரைத் தேற்றுவதற்காக, ஆசை கொண்ட அடியவர்கள், அந்த ஆசையை செலுத்தவல்ல நெஞ்சை, விரைவாக செல்லத் தூண்டிய பாடலாகும்.
திருமலையில் எம்பெருமானின் சீலம் என்ற அருவியின் வெள்ளப் போக்கில் தவித்துக்கொண்டு, ஸ்ரீராமபிரானை திருமணம் செய்துகொண்ட சீதாபிராட்டி, மிதிலையை நினைக்காததைப் போல், ஆழ்வார் திருநகரியையும் மறந்து, ஆழ்வார் எழுந்தருளிய நிலையை அனுபவிக்க விழையும் அடியவர்களின் மனநிலையும் வேகத்தையும் சொல்கிறது.
6முலையோ முழுமுற்றும் போந்தில, மொய் பூங்குழல் குறிய
கலையோ அரை யில்லை நாவோ குழறும், கடல் மண்ணெல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே.(6.10)
தலைமகளின் இளமையை நோக்கிச் செவிலித்தாய், இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனோடு சேர்ந்த நாயகி, அவன் பிரிந்த நிலையில், ஆற்றாது, வருந்தி, வாய் பிதற்றிக் கண்ணீர் சொரிந்து, உடல் இளைத்து, வடிவம் வேறுபட, அந்த வேறுபாட்டினை கண்ட தாய், இதற்கு காரணம் என்ன என்று கவலைப்பட்டு, அவளது உயிர்த்தோழியைக் கேட்க, அவள் உண்மையான காரணத்தைக் கூறிட, அது கேட்ட தாய், இவளது இளமையை எண்ணி இரங்கிக் கூறிய பாடல்.
‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ’ என்று பலகாலும் சொல்லிப் பழகுகின்ற வார்த்தை, இப்படி இளமைப் பருவமுடைய இவளிடம் உண்டாவதோ? என்று தாய் சொல்வதாக அமைந்துள்ள பாசுரம். எப்பொழுதும் திருவேங்கடவன் நித்யவாஸம் செய்யும் திருவேங்கடத்தையே சிறு வயது முதல் சொல்லிக் கொண்டு இருக்கிறாள் என்பது புரியும். இப்பொழுது இவள் எம்பெருமானின் திருநாமம் சொல்வது ஆச்சர்யம் இல்லை, இது இவளுடைய சுவாபம் என்று சொல்வது போல் முடிக்கிறார்.
ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள், ‘எம்பெருமானைச் சேர உபாயமான, பக்தி முதலியன நிறையாமல் இருக்க, இவருக்கு ஏன் இந்த விரைவு, என்பது உள்ளுறை பொருள். எம்பெருமானைச் சேர்ந்து அனுபவிப்பதற்கு, பக்தி முதிர்ந்து, பேற்றுக்குச் சாதனமான, பரமபக்தியாக வளரவில்லை. சாதனம் ஒன்றும் இன்றியே இருக்கும் போது, விரைவை வேண்டுதல் தகுமோ?
இப்பாட்டில், ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி, எம்பெருமானுடன் அல்லது தரியாமை என்ற நிலை கொண்டுள்ளார் என்பது வெளிப்படும்.
7காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் ஆனாள் கண்களாய துணைமலரே. (7.7)
தான் திருவேங்கட மலையில் கண்ட மங்கையின் கண்கள், தன்னை வருத்தத் தொடங்கிய அளவுக்கு, என் உயிர் ஈடாகாது என்று தலைமகன் தான் வலிமை இழந்ததை, நண்பனுக்கு கூறி வருந்துகிற பாடல்.
அசுரர்களை அழித்த பெரிய ஆச்சரியமான கருடனை, வழி நடத்துகிற திருமாலின்  திவ்ய தேசமாகிய திருவேங்கட மலையிலே, தலைவன் பார்த்த மலர் போன்ற கண்களானவை, செம்மையால் செங்கழுநீரையும், கருநிறத்தால் நீலோற்பல மலரையும், கூர்மையாலும் ஒளியாலும் வருத்துதலாலும், வேலாயுதத்தையும், குளிர்ச்சியாலும் வடிவத்தாலும், கயல்மீனையும், மற்றும் மருட்சி முதலிய பலவற்றால் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய பல பொருள்களையும் தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து தன்னை வருத்துதற்கு காரணமானவை. எனது உயிரைவிட மிக பெரியவை. இந்த மெல்லிய உயிரை மாய்ப்பதற்கு இத்தனை பெரிய முயற்சி கொள்ளத் தேவையில்லை என்று சொல்வது போல் உள்ளது.
ஆழ்வாருடைய ஞான விளக்கத்தை அடியவர் ஒருவர், மற்றொருவர்க்கு எடுத்து உரைக்க முயற்சி செய்தல்.
துஷ்டர்களை அழித்து கருட வாகனத்துடன் புருஷகாரம் செய்பவளான திருமகளுக்கு வசப்பட்டவனும், ஆத்மாக்களைப் பாதுகாக்கும் திருமாலின், போக ஸ்தலமான திருமலையில் ஈடுபாடுடையவர் ஆழ்வார். வேங்கடத்தை இடைவிடாது நினைப்பவர். ஆழ்வாரது சுத்த ஸ்வபாவமும், ஞான அனுஷ்டானங்களும் பாரதந்திரியமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அலர்மேல் மங்கைத் தாயாரைச் சொல்லி, அவளுடன் இவருடைய ஸ்வரூபத்துக்கு ஒப்பு சொல்லியது. தமக்கும் தம்மடியார்க்கும் துணையாகிற பரந்த ஞான வகைகளை சொல்லிற்று. அந்த ஞானம் செந்நிறத்தாகிய ரஜோ குணத்தைக் கடந்தமை சொன்னது. நீலத்தை வென்றது என்பது, தமோ குணத்தைக் கடந்தமை. முக்குணங்களையும் கடந்ததால் ஜட பொருள்களில் சேராததை சொன்னது. சஞ்சலத் தன்மை இல்லாமை சொன்னது. இப்படிப்பட்ட ஞானத்தின் மஹிமைக்கு எம்மை வசப்படுத்திக் கொள்ளுதல் ஒரு பெரிதன்று என்றதாயிற்று.
8உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பிலராய், இவளைப் பெருகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்து உறுகின்றிலர் தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவளாகம், மெல்லாவி எரி கொள்ளவே! (9.1
)
தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக, வேட்கை நோய் கொண்டு, மேனி மெலிந்து, வடிவு வேறுபட, அது கண்ட தாய் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததால் இருக்கும்’ என்று நினைத்து, பரிஹாரமாக வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள் இறைத்தல், இறைச்சி தூவல், கருஞ் சோறு, செஞ் சோறு வைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன் மேல் ஒன்றாகச் செய்யத் தொடங்க, நோய் ஒன்றும் மருந்து வேறு ஒன்றுமாக, தான் காதலித்த நாயகனுக்கு உகந்தவைகள் ஆகாத அக்காரியங்களை நோக்கி, நாயகி மேன்மேலும் வருந்த, அது கண்டுத் தலைவியின் உள்ளதை அறிந்து, வெறி விலக்க வந்த தோழி, தாயின் காதுபட, இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும், அதன் காரணத்தையும், அதனைத் தீர்க்க வழி என்ன என்பதையும் ஆராயாமல், இவள் தாய் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள், மேன்மேலும் நடப்பதால், இவளை மேலும், மெய் நொந்து போகும்படி செய்கிறார்களே என்று வருத்தப்பட்டாள்.
எம்பெருமானது திருத்துழாயை முடியில் சூட்டுதலும், அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே, இந்நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவற்றை செய்யவில்லேயே என்று இவளது உயிரை விறகாக்கி இவளுக்கு தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே ! என்ன பரிதாபம் !! என்கிறாள். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்ணி வைக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே என்கிறாள்.
ஆழ்வாரை ஆசுவாச படுத்த வேண்டும் என்பதற்காக ஞானிகள் தங்கள் பரிவால் வேறு சில விதமான பரிஹாரங்களைச் செய்ய, இவரது தன்மையை அறிந்த அன்பர்கள் இவரது ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளை செய்யாமல், வேறு வழிகளில் செய்து என்ன பயன் என்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம். பகவத் ப்ரஸாதமும் திவ்யதேச செல்லுகையுமே இவரது ஆற்றாமைக்குப் பரிஹாரம்; அவை செய்யாமையால் ஆழ்வாருக்கு தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது

மீண்டும் இன்னொரு பதிப்பில் சந்திக்கலாம், நன்றி

திருவேங்கடமுடையான் ஆண்டாள்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.  பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேயாழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.

இனி பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே காண்போம்.

ஆண்டாள்

ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று இரண்டு பாசுரங்கள் பாடி உள்ளார். திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் சேர்ந்து மொத்தம் 173 பாசுரங்கள் உள்ளன. அவற்றில் பதினாறு (16) பாசுரங்கள் திருவேங்கடமுடையான் மேல் உள்ளன, அவற்றை கீழே காண்போம்.

நாச்சியார் திருமொழி

1. தையொரு திங்களும் தரைவிளக்கித், தண் மண்டலமிட்டு மாசி முன்னாள், ஐய நுண் மணற்கொண்டு தெருவணிந்து, அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா, உய்யவும் ஆங்கொலோ என்று சொல்லி, உன்னையும் உம்பியையும் தொழுதேன், வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை, வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (1.1)

கண்ணபிரானோடு சேர்வதை எண்ணி, திருப்பாவையில் பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், அவன் வந்து சேராததால், இனி நாம் சும்மா இருக்கலாகாது என்று பிரிந்தாரைச் சேர்ப்பிக்க வல்லவன் மன்மதன் என்று அறிந்து அவனது காலில் விழுந்தாவது கண்ணபிரானோடு கூடப்பெறுவோம்’ எனக்கருதி, அந்த மன்மதனைத் தன் காரியம் செய்யும்படி ஆராதிக்க நினைத்து, அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து அழகுபெற வைத்து பூஜைக்காக மேடையிட்டு அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது.

உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம், ஸ்வரூப நாசத்தை விளைவிக்கவல்ல தேவதையாகிற மன்மதனை பற்றியதால், இப்பற்று உஜ்ஜீவனம் செய்ய உதவுமா அல்லது கீழே தள்ளி விடுமோ என்று ஆண்டாள் நெஞ்சு தவிக்கும்படி சொல்கிறார். மன்மதனுக்குப் பல பெயர்கள் இருக்க, அவற்றைவிட்டு ‘அனங்க தேவா!’ என்றழைத்தமையால், ‘நீ உன் உடம்பை இழந்தும் பிரிந்தாரை சேர்த்து வைப்பவன்’ என்ற கருத்துத் தோன்றும்படி அமைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில் கண்ணபிரானைப் பற்றும் போது, நம்பிமூத்தபிரான் (பலராமன்) முன்னதாக பற்றியதால், அதே நினைவோடு இங்கும் மன்மதனை உடன் பிறந்தானோடு கூட தொழுவதை, “உன்னையும், உம்பியையும் தொழுதேன்” என்று ஆண்டாள் கூறுகிறார். கண்ணபிரானுக்கும் ருக்மணிபிராட்டியும் மன்மதன் அம்சமாக பிறந்தவர் ப்ரத்யும்னன்; கண்ணபிரானுக்கும் ஜாம்பவதி தேவிக்கும் பிறந்தவன் சாம்பன் என்று பாகவதம் கூறுகிறது. இவர்களையே “காமன் தம்பி சாமன்” என்று பெரியவாச்சான் பிள்ளை இந்த பாடலுக்கான உரையில் கூறி உள்ளார். ஸ்ரீ வைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு காட்சிக் கொடுத்துத் தன் செருக்குத் தோற்ற வீற்றிருக்கும் எம்பெருமான், ‘ஸம்ஸாரிகளும் இப்பேற்றைப் பெற்று வாழவேணும்’ என்று அந்த பரமபதத்தில் இருந்து கிளம்பி அடியார்களின் விரோதிகளை அழிக்கும் இயல்பினனாகவும், சக்கரத்தாழ்வானை கையில் பிடித்து திருமலையில் இருப்பவனுமான எம்பெருமானோடு தன்னை சேர்த்து வைக்க சொல்கிறார்.

2. மத்த நன் நறுமலர் முருக்கமலர், கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி, தத்துவம் இலியென்று நெஞ்சு எரிந்து, வாசகத்(தை) அழித்து உன்னை வைதிடாமே, கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு, கோவிந்தன் என்பதோர் பேரேழுதி, வித்தகன் வேங்கட வாணனென்னும், விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே (1.3)

நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும் முருக்க மலர்களையும் கொண்டு மூன்று காலங்களிலும் உன் அடிகளை வணங்கி, ‘இவன் பொய்யான தெய்வம்,’ என்று சொல்லி மனம் கொதித்து அவனை நிந்திக்க வேண்டாதபடி கொத்துக் கொத்தாக புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு கோவிந்த நாமத்தை நெஞ்சில் ஏற்றிக் கொண்டு அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே தன்னை சேர்க்க வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறார்.

மன்மதன் ரஜோ குணம் உடையவனாதலால், ஊமத்தை மலர்களும் முருக்க மலர்களும் அவனுக்கு இடத்தக்கவை என்று அவற்றை பாடி உள்ளார். தான் மன்மதன் அடி பணிவதற்குப் பலனாக தன்னுடைய எண்ணத்தை அவன் நிறைவேற்றாவிட்டால், தனது நெஞ்சானது மிகவும் கொதிப்படைந்து, ‘மன்மதன் உண்மையான பலன் தரும் தெய்வம் இல்லை, பொய்த்தெய்வம்’ என்று நாடெங்கும் அறியும் வண்ணம் அவன் சிறப்பை அழிக்க நேரிடும் என்று சொல்லும் பாடல்.

கோவிந்தனென்பதோர் பேரேழுதி என்று இந்த பாட்டிலும், “கடல்வண்ண னென்பதோர் பேரேழுதி” என்று இதற்கு முந்தைய (2) பாட்டிலும் சொன்னது குறிப்பிடத்தக்கது.

3. காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர், வாட்டமின்றி மகிழ்ந்து உறை வாமனன், ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும், கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே (4.2)

மனக்கவலை கொண்டவர் குறி பார்ப்பது ஒரு பழக்கம். பலசோழிகளை தரையில் உள்ள ஒரு வட்டத்தில் எறிந்து, பின்பு ஒற்றை எண்ணுள்ள சோழிகள் வட்டத்தினுள் இருந்தனவா, இரட்டைபடை எண்ணுடன் இருந்தனவா என்று பார்த்து அதன்படி தான் எண்ணிய காரியம் நடக்குமா என்று மனதை திடம் செய்து கொள்வார்கள். அப்படிப்பட்ட அனுபவத்தை ஆண்டாள் இந்த பதிகத்தில் பாடுகிறார்.

காட்டிலுள்ள திருவேங்கடமலையில், நகரமாகிய திருக்கண்ண புரத்திலும் மனக் குறை இல்லாமல், திருவுள்ளம் உகந்து, நித்யவாஸம் செய்தருளுகிற வாமன அவதாரம் செய்த எம்பெருமான் ஓடிவந்து தன்னுடைய கையைப் பிடித்து அனைத்துக் கொள்வானா என்று கூற குறி பார்க்கிறார். இதையே சுவையாக, நம் உரையாசிரியர்கள், எம்பெருமான் தன்னோட சேர வேண்டும் என்று திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்து நிற்பதாகவும், ஆண்டாளுக்கு அதில் விருப்பம் இருக்குமோ இல்லையோ என்று தயங்கி, நிற்கின்றான் என்றும், அப்பெருமான் தன்னுடைய மனதில் உள்ளதை நன்கு அறிந்து, விரைவில் ஓடிவந்து தன்னை அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்க வேணும் என்று நினைப்பதாக சொல்வர்.

காட்டில் வேங்கடம் என்று கூறியது தண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்ததற்கு ஒப்பாகவோ, விருந்தாவனத்திற்கு ஒப்பாகவோ கொண்டும், கண்ணபுர நகர் வாசம், அயோத்தியில் அனைவருடன் கூடி இருந்த நகர வாசத்திற்கு ஒப்பாகவோ ஆயர்பாடிக்கு ஒப்பாகவோ கொள்ளலாம் என்பது உரையாசிரியர் கூற்று. நகர வாசம், வன வாசம் இரண்டையும் இனிதாக ஏற்ற விபவங்களைப்போல் அர்ச்சாவதாரங்களும் என்று சொல்கிறார். வாட்டமின்றி மகிழ்ந்துஉறை என்றது, இருட்டறையில் விளக்குப் போலே அவனுடைய கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்குமாறு இங்கு வரப்பெற்றோமே என்ற அளவற்ற மகிழ்ச்சியோடே எழுந்தருளியதை சொல்வது.

எம்பெருமானை அடிபணிந்து வேண்டி எதையும் பெற வேண்டியவர்கள் அடியவர்கள், ஆகவே அடியார்கள் அவன் இருக்கும் இடம் செல்ல வேண்டும். ஆனால் எம்பெருமான், அர்ச்சாவதாரத்தில் அடியவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து அருள்கிறான். அது ஏன் என்று கேட்டு கொண்டு, தன்னுடைய உடைமையை பெறுவதற்காக வாமனனாக அவதரித்து இங்கு வந்ததும் நம்முடைய சம்பிரதாயத்தில், எம்பெருமானுக்கு அடியவர்களின் லாபமே நோக்கு என்பதும், அடியவர்களுக்கு எம்பெருமானின் லாபம் நோக்கு அல்ல என்பதும் தெளிவாகும். பாடலில் வாமனன் என்று ஆண்டாள் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. “வாமனன் ஒட்டராவந்து” என்று சொல்லும்போது, பெரியவாச்சான்பிள்ளை, ஓரடி மண்ணுக்கு பதறி ஓடி வந்த வாமனன், இவளை பெறுவதற்கு காற்றை விட வேகமாக வருவான் என்று சொல்வது சுவாரஸ்யம். எம்பெருமானுடைய திருக்கரங்களின் ஸ்ப்ரிசத்தால் அவள் துவண்டு விழுந்துவிடுவதால், அவளை அவனே இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்கிறாள்.

4. வெள்ளை விளிசங்கு இடங்கையிற் கொண்ட விமலன் எனக்கு உரு க் காட்டான், உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும், கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே, மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கடவன் வரக் கூவாய் (5.2)

சோலையில் வாழும் குயிலிடம், தானும் இங்கேயே இருப்பதால் தன்னுடைய துயர் குயிலுக்கு தெரிந்து இருக்கும், நல்ல குரல் படைத்து என்ன பலன், குயில் ஒரு பாட்டு பாடி, கண்ணனனை அழைத்து வா என்று சொல்லும் பதிகம்.

செண்பகப் பூவிலே ஆனந்தம் அடைந்து, இசை பாடும் குயிலிடம், ஸ்ரீ பாஞ்சசன்யத்தை இடக்கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற பரமபுருஷன் தனது திவ்யமங்கள விக்ரஹத்தை தனக்கு சேவை சாதிக்காமல் இருக்கிறான் என்பதாகவும், தன்னுடைய உள்ளத்தில் புகுந்து தத்தளிக்க செய்கிறான் எனவும், தனக்காக திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் இங்கே வரும்படியாக கூப்பிட வேண்டும் என்கிறாள். சீதா பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக மிதிலையின் புறச்சோலையிலே வந்து தங்கி இருந்தார் போல், திருமலையிலே வந்து நின்ற எம்பெருமானை இங்கே நாலடி வரும்படியாக குயில் கூவ வேணும் என்று வேண்டுகிறாள். கரிய திருமேனிக்கு அருகில் நன்றாக விளங்கும்படி வெண்மை நிறத்தை உடைய பாஞ்சஜன்யம், ‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போல் எம்பெருமானின் இடது திருக்கையிலே ஏந்தி இருப்பது கூறப்பட்டது.

விமலன் என்றது, திவ்யாயுதங்களை ஏந்தி இருப்பது அடியார்களை காப்பதற்காகவே என்ற சுத்தமான இதயத்துடன் இருப்பவன் என்பதைக் காட்டுகிறது. எனக்கு உருக்காட்டான் என்றது மீன்களுக்கு நீர் கொடுப்பது போல், நித்யஸூரிகளுக்கு தரிசனம் தந்து சம்சாரிகளுக்கு தரிசனம் தாராமால் இருக்கிறார் என்பது போல் உள்ளது. உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் என்று சொன்னதற்கு உரையாசிரியர், நாளும் உயிர் பெய்து குற்றவாளிகளை அடிக்கும்போது உயிர்போகும் தருணத்தில் சேவகர்கள் அவனுக்குத் தண்ணீர் வார்த்துத் தேறுதலை உண்டாக்கிக் கொஞ்சம் தெளிவித்து, பழையபடியே அடிப்பார்கள், அதுபோல முடியப்போகிற உயிரை மறுபடியும் உண்டாக்கி வருத்துகிறான் என்கிறார்.

இனிவரும் பத்து பாசுரங்களும் தொடர்ச்சியாக திருவேங்கடமுடையான் மேல் பாடியவை. பிரிவாற்றாமையால் மேகம் கிளி நாரை இவற்றை தூது விடுவதை நாம் இலக்கியங்களில் காணலாம். இது தலைவனிடம் இருந்து தலைவிக்கோ, தலைவியிடம் இருந்து தலைவனுக்கோ சொல்லும் தூதாக அமையும். பிரிவாற்றாமையால் வாடும் ஆண்டாள் இந்த பத்து பாசுரங்களில், நீல நிறமான பகவானின் மேல் உள்ள ஆசையால், நீல நிறமான மேகங்களைத் தூது விடுகிறார். மேகங்களே, உங்களுடன் எம்பெருமானும் சேர்ந்து வருகிறானா, அவனுடன் தான் சேரா விட்டால், தான் உயிர் பிழைக்க முடியாது என்றும், அவனிடம் இதை சொல்லி, அவன் தன்னை ஏற்கும்படி செய்ய வேணுமாய் கேட்டு கொள்கிறார்.

5. விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள், தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே, கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை, பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே? (8.1)

ஆகாசம் முழுவதிலும் நீல நிறமான மேற்கட்டு கட்டினாற்போல் நின்ற மேகங்களே, தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கும், திருமாலாகிய எம்பெருமானும் உங்களுடன் எழுந்தருளி உள்ளானா? மேகங்கள் மறுமொழி கொடுக்காததால், அவன் அங்கு வரவில்லை என்று நினைத்து வருந்தி, தன்னுடைய பெண்மையை உருவழிகின்ற இந்த காரியம் அவருக்கு பெருமையோ என்று வினவுகிறார். திருவேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையில் இருந்த போது ஆகாசத்தில் காளமேகங்களின் பரப்பானது மேற்கட்டி கட்டினாற்போலத் தோற்றம் அளித்தது என்பதை விண்ணீலமேலாப்பு விரிந்தாற்போல் மேகங்காள்! என்கிறாள். என்திருமாலும் என்றதனால் திருவேங்கடவன் முன்பு வந்த போது பிராட்டியும் வந்ததை சொல்வது. திருவேங்கடமுடையானைப் பெரியாழ்வார் திருமகள் ஆசைப்பட்டுப் பெறாமல் போனால் என்றால் அவனுடைய பெருமை என்னவாகும் என்றபடி இந்த பாடலை முடித்துள்ளார்.

6. மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய் நா னிருப்பேனே (8.2)

சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற காள மேகங்களே! திருமலையில் எழுந்தருளி இருக்கின்ற நீலநிறம் உடையவனான எம்பெருமானுடைய செய்தி ஏதாவது உள்ளதா, என்று கேட்க பதில் வராததால், மேலும் தன்னுடைய துயரத்தைச் சொல்ல தொடங்குகிறாள். எம்பெருமான் மேலான காமத்தீயானது, தன் உடலின் வெளிபாகங்களை சுட்டு பொசுக்கி, தனக்கு உணவு கிடைக்காததால், உள்ளே புகுந்து மேலும் தகிக்கிறது. தென்றல் காற்று வீசி, இந்த துயரத்தை அதிகரிக்க செய்கிறது என்கிறாள். வார்த்தை என்ன என்று சொன்னது, அவர் தான் இங்கு வரவில்லை, ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாமே என்று சொல்வது போல் அமைந்துள்ளதது.

7. ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம், எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால், குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம் பாடி, அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே (8.3)

மேகங்களே! அருள் புரிக, தன்னுடைய உடலின் ஒளியும், நிறமும், வளைகளும் நெஞ்சும், உறக்கமும் இவை எல்லாம், தன்னுடைய எளிமையால், தன்னை கைவிட்டுவிட்டு, தன்னுடைய சீர் குலையும்படி நீங்கி பொய் விட்டன. குளிர்ந்த அருவிகளையுடைய திருமலையில் எழுந்து அருளி இருக்கிற எனது கண்ணபிரானுடைய திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடிக்கொண்டு தன்னுடைய உயிரை காத்துக்கொள்ள முடியுமா என்று வினவுவது போல் உள்ள பாசுரம்.

எம்பெருமானைப் பிரிந்து விட்ட துக்கத்தினால்  உடல் ஒளி இழந்து, நிறமிழந்து, வளை கழன்று, நெஞ்சு தளர்ந்து, உறக்கம் இழந்து, தான் சீர்குலைந்து தடுமாறி இருப்பதை முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார். எம்பெருமானுடன் சேர்ந்து இருக்கும் காலங்களில் உடல் பிரகாசமாக இருப்பதும், அவரை பிரிந்தால் ஒளி குறைவதும், உண்மையான அன்பர்களின் இலக்கணமாகும். மேனி மெலியும் போது, வளை கழலும், நெஞ்சு உருகுலையும். எளிமையால் என்றதால், எளிமையாய் இருப்போரை எல்லோரும் கைவிட்டு விடுவது உலக நியதி அன்றோ. ஆபத்தை அடைந்தவர்களை விட்டு விலகுவது நீசர்களின் செயல் ஆனதால், இங்கு எளிமையால் என்று சொன்னது நீசத்தனத்தினால் வேண்டும் கொள்ளலாம். நாயகனைப் பிரிந்து தளர்ந்திருக்கும் காலத்தில் மேகங்கள் வந்து முகங்காட்டின படியாலே அந்த உபகாரத்தைக் கொண்டாடி “அளியத்த மேகங்காள்“ என்கிறாள். பிராணநாதன் அவனான பின்பு உயிர்களைக் காப்பது அவன் கடமை ஆகும், அது தன் பணியாக மாறுமோ ? என்பதை ஆவி காத்திருப்பேனே என்பதால் தெரிவிக்கின்றார்.

8. மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு என் ஆகத்து இளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே (8.4)

தன்னுள்ளே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே, எம்பெருமான் தன்னை விரும்பி அவருடைய மார்போடு இடைவிடாது கட்டி தழுவ வேண்டும் அல்லது அங்கேயே எம்பெருமான் கிடக்க வேணுமென்று என்று தினமும், திருமலையில் தன்னுடைய மார்பில் பிராட்டியுடன் எழுந்தருளி உள்ள எம்பெருமானிடம் சொல்லுங்கள் என்று ஆண்டாள் கூறும் பாடல். எம்பெருமானுடைய கரிய திருமேனியில் மின்னற்கொடி போன்று விளங்கும் பிராட்டியை, நினைவுறுத்தும் வகையில் மின்னி எழுகின்ற மேகங்களே என்றும் கொள்ளலாம். ஆகம் என்று உடம்புக்கும் மார்புக்கும் அர்த்தம். முதலடியில் ஆகத்து என்றது உடம்பிலே என்ற அர்த்தத்தில் வந்து உள்ளது. பெரியவாச்சான்பிள்ளை, மேகங்காள்! என்று சொன்ன இடத்தில, “நடுவே ஜடாயு பறவை வந்து தோற்றினாற் போலே இருந்த தீ! அவனைப் பிரிந்து நோவு படுகிற ஸமயத்திலே மேகங்களாய் வந்து தோற்றின படி.“ என்று கூறுவார். பொன் ஆகம் என்று சொன்னது விரும்பத்தக்க திருமார்பு என்றும் புரிவுடைமை என்பது அன்புடமை, ஆசையுடைமை என்றும் கொள்ள வேண்டும்.

9. வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத் தேன் கொண்ட மலர்ச் சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள், ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான், தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. (8.5)

திருமலையிலே தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி திரள் திரளாக ஆகாயத்தில் இருந்து மழையைப் பொழிகின்றதாயும், ஆகாயத்தை விழுங்கி விடுபவைகளாகவும் உள்ள மேகங்களே, வலியள்ளவையாயும் கூர்மையுடையவையான நகங்களாலே, ஹிரண்யகசிபுவின் உடலைப் பிளந்து எறிந்த எம்பெருமான் நரசிம்மமூர்த்தி, என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன கைவளைகளை திருப்பிக் கொடுப்பதாக இருந்தால், எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள் என்று ஆண்டாள் கூறுவதாக அமைந்துள்ள பாசுரம்.

தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி விழும்படி அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு மேகங்கள் மழைபொழிவதனால் என்ன பயன்? பிறர்க்குத் தீங்கை விளைப்பதோ மேகங்களின் வேலை, துன்பப்பட்டாரை, இன்பமடைய வைக்கவேண்டும் என்பது உட்கருத்து. எம்பெருமானிடம் இருந்து பிரிந்திருக்கும் காலங்களில் தனக்கு துன்பம் அளிக்கும் மலர்களை அழிப்பதில், தனக்கு ஒரு வகையில் இன்பமாக இருந்தாலும், அது போதாது, தன்னை எம்பெருமானுடன் சேர்த்து அவர்களை மகிழ்விக்கவும் இந்த பூக்கள் வழி செய்ய வேண்டும் என்பதும் ஒரு கருத்து. இது அநிஷ்ட நிவர்த்தியுடன் இஷ்ட பிராப்தியையும் சேர்த்து வேண்டுவது போல் அமைந்துள்ளது.

எம்பெருமான் இவளை விட்டுப் பிரிந்ததனால் இவள் மேனி மெலிந்து வளைகள் கழன்று போவதற்கு அல்லது அவளை விட்டு நீங்குவதற்கு அவனே காரணம் ஆகின்றதால் தான்கொண்ட சரிவளைகள் என்று ஆண்டாள் எம்பெருமான் தன்னுடைய வளைகளை கொண்டதாக கூறுகிறார். சரிவளைகள் தருமாகில் என்றது, மீண்டும் ஆவலுடன் சேர்ந்து வளைகள் அவளிடமே தங்கும்படி செய்த்தவதாகும்.

10. சலங் கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை, நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள், உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை, நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. (8.6)

கடல் நீரை முகந்து கொண்டு மேலே வருகின்ற குளிர்ந்த மேகங்களே என்றும், மஹாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து பூமியை திரும்பி பெற்றுக்கொண்ட எம்பெருமான், எழுந்தருளி இருக்கின்ற திருவேங்கட மலையின் மேலே உள்ள மேகங்களே என்றும், ஆண்டாள் மேகங்களை கூப்பிட்டு, கொசுக்கள் கடித்த விளாம்பழத்தை போல் தன்னுடைய மேனி மெலிந்து இருப்பதற்கு காரணமாக தன்னுள்ளே புகுந்த நாராயணன், தன்னுடைய நிறைவுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கொடுத்த தன்னுடைய கஷ்டங்களை அவனிடம் சொல்லவேண்டும் என்று ஆண்டாள் மேகங்களை கேட்கும் பாடல்.

மேகங்களே, உங்களுடைய வடிவழகும், குளிர்ச்சியும் நன்றாகத்தான் உள்ளது, எனினும், நீங்கள் பொழியும் இடத்தில் தான் குறை உள்ளது என்றும், திருவேங்கடத்தில் மழை பெய்கிறீர்கள் என்றும், தங்களுடைய சுய பலன்களுக்காக அந்த எம்பெருமானை அசுரனாகிய மாபலியிடம் இருந்து நிலத்தை மீட்டு வரவேண்டிய தேவர்களைப்போல், ஆண்டாள் உங்களை அசுரர்களிடம் சென்று வர சொல்லவில்லை, எம்பெருமானிடம் தான் சொல்லி வாருங்கள என்று சொல்லி உள்ளேன் என்றும் அதை செய்வதில் உங்களுக்கு என்ன குறை என்று ஆண்டாள் கேட்பதாக கூட கொள்ளலாம்.

11. சங்க மா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம், கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என்னாவி தங்குமென் றுரையீரே (8.7)

சங்குகள் நிறைந்த திருப்பாற்கடலை கடைந்த எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருமலையில், திரியும் குளிர்ந்த மேகங்களுக்கு ஆண்டாளின் விண்ணப்பம் யாதெனில், அந்த எம்பெருமானின் திருவடிக்கீழ் ஒரு நாளேனும் சேர்ந்து இருந்தால் தான் தன் உயிர் நிற்கும் என்று அந்த எம்பெருமானிடம் சொல்லவேண்டும் என்கிறார்.

தன்னை சிரமப்படுத்திக்கொண்டு, பிறர் காரியங்களை கருத்துடன் செய்யும் எம்பெருமான் வாழும் திருப்பதி திருத்தலத்தில் வாழ்பவர்கள், அவனுடைய குணத்தை அனுசரிக்க வேண்டியது அவசியம் என்று ஆண்டாள் சொல்லி, அந்த மேகங்களை ஒரு காரியம் செய்ய சொல்லி வேண்டுகிறாள். குங்கும பூவை குழைத்து தன்னுடைய கொங்கைமேல் பூசி வைத்து அவன் தன்னுடன் சேர்வான் என்ற எண்ணத்துடன் அவனுக்காக காத்திருப்பதாக எம்பெருமானிடம் சொல்ல சொல்லி வேண்டுகிறாள்.

12. கார்காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப், போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை வார்காலத் தொரு நாள் தம் வாசகம் தந் தருளாரே! (8.8)

மழை காலத்திலே தவறாமல் வந்து சேருகிறேன் என்று சொல்லிப்போன எம்பெருமான் வரவில்லை என்றாலும், அவனுடைய உருவத்தை ஒத்து இருக்கும் மேகங்களாகிய நீங்களாவது வந்தீர்களே என்று மகிழ்ச்சியுடன், நாம் திருநாம ஸங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டாவது ஒருவாறு வாழ்ந்துகொண்டு இருக்கலாம் என்று, அடியார் களுக்காக காரியம் செய்வதையே தொழிலாகக் கொண்டு எதிரிகளை அழிப்பதில் உற்சாகம் கொண்ட சக்ரவர்த்தி திருமகனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தாயும், அதுவே காரணமாக உடனே மனம் தளர்வு அடைந்ததாகவும் ஆண்டாள் கூறுகிறார். மழைகாலத்தில் எருக்கம் பழுப்புகள் அற்று விழுவதுபோல் தளர்ந்து விழும்படியான நிலைமையில் நின்ற ஆண்டாள், இந்த நிலையிலும், எம்பருமான் தனக்கு அருள் செய்ய நினை க்கவில்லை என்றும், தன் வாழ்நாளெல்லாம் இப்படி துக்க மயமாகவேயோ கழியப் போகிறதோ என்று கவலை அடைந்தாள். ஒரு நாளாகிலும் சொல் சொல்லி அனுப்ப மாட்டாரோ? என்கிறாள்.

13. மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே (8.9)

ஆண்டாள், இந்த பாசுரத்தில், மேகங்களை இரண்டு விதமாக கொண்டாடுகின்றாள்; திருவேங்கடமுடையானை இடைவிடாது ஸேவித்துக் கொண்டு இருப்பதால், அவை மதம் பிடித்த யானைகளை போல் செருக்குடன் இருப்பதாக சொல்கிறார். திவ்ய தேசத்தில் எப்பொழுதும் வசிக்கின்றவர்கள் அதுவே பெரிய பாக்கியம் என்று இரண்டாவது வகையாக கொண்டாடுகிறார். திருவானந்தாழ்வானிடம் இருந்து எல்லாவித கைங்கர்யங்களையும் பெற்றுக்கொள்ளும் எம்பெருமான், அதே போல் தன்னிடத்தில் இருந்தும் பெற்றுக்கொள்வான் என்று இருந்ததாகவும், அவன் அப்படி செய்ய வில்லை என்றும் கூறுகிறார். பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமான் அதனை விட்டுத், திருமதுரையிலே வந்து அவதரித்த கண்ணபிரான், தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தைகளை உண்மை என்று (சரமஸலோகத்தை) நம்பி இருந்ததாகவும், பாம்பிற்கு இரண்டு நாக்குகள் இருப்பதுபோல், அவனும் இரண்டு நாக்கு கொண்டான் என்றும் பாம்பில் படுத்து, பாம்பின் தன்மையே அவனும் பெற்றான் என்றும் சொல்கிறார். அதாவது பொய்யனாய் விட்டான்  என்று கூறுகிறார். பலபேர்களுக்கு மெய்யானாக இருக்கும் எம்பெருமான், ஆண்டாளுக்கு மட்டும் பொய்யனாக இருந்தால் அவனுக்கு ஒன்றும் குறை இல்லை என்று மேகங்கள் சொல்வதாக நினைத்துக்கொண்டு, எல்லோருக்கும் ரக்ஷகன் என்ற பெரும் பெயரை விட்டு, ஒரு சிலபேரை மட்டும் விசேஷித்து ரக்ஷித்தால் அவன் பின் இந்த உலகத்தார் என்ன சொல்வாரோ என்று கேட்கிறார். இப்படி ஆண்டாளை ரக்ஷிக்காதது மட்டும் இன்றி, ஒரு பெண் கொடியினை வதை செய்தால் அது அவனுக்கு அவப்பெயர் உண்டாக்கும் என்றும் சொல்கிறார். பெண்கொடியை வதை செய்தானா என்றால், பெண்கொடியை தரையில் படர விடுதல் கொலைக்கு சமம் என்றும், கோல் கொம்பில் சுற்றி விட்டு வளர விட வேண்டும் என்று சொல்வதுண்டு. பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது என்று 8.1 ல் சொல்வதைப்போல இங்கும் சொல்கிறார்.

14. நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்துரைசெய், மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம் போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ் ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே (8.10)

மேல் சொன்ன பத்து பாசுரங்களை சொல்வதால் உண்டாகும் நன்மைகளை சொல்லும் பலஸ்ருதி பாடல் ஆகும். வேண்டின படியெல்லாம் பகவத் அனுபவத்தைப் பெற்று மகிழ்ந்தவரான பெரியாழ்வார்க்குத் திருமகளாகப் பிறந்ததுவே பெரிய நன்மையாக கொண்டு, தான் எம்பெருமானிடம் விருப்பம் கொண்டவள் ஆனாள் என்றும், திருவனந்தாழ்வானைப் படுக்கையாக கொண்ட திருவேங்கடமுடையானிடம் ஆசைப்பட்டு, மேகத்தை தூது விடுவதாக அமைந்த விண்ணப்பம் ஆகிய இந்த பத்து பாசுரங்களை இதயத்தில் வைத்துக்கொண்டு உரைப்பவர்கள் எம்பெருமானுக்கு தினமும் கைங்கரியம் பண்ணப் பெறும் அடியவர்கள் ஆவார்கள் என்றும் சொல்லி முடிக்கிறார்.

15. பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல் வேங்கட நாடர் நமக்கொரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின், ஆடும் கருளக் கொடியுடையார் வந்தருள் செய்து கூடுவராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே (10.5)

முன்பு மேகங்களை தூது விட்ட ஆண்டாள், இந்த பதிகத்தில், காந்தள் மலர்கள், கொடிகள், முல்லைக்கொடி, குயில்கள் மயில்கள், கடல் என்று மனதில் பட்ட எல்லாவற்றிடமும் புலம்புகிறார். இந்த பாட்டில், குயில்களிடம், ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள், திருவேங்கடமுடையான் வந்து தனக்கு நல்வாழ்வு அளிக்குமாறு பாடக்கூடாதா என்று கேட்கிறார்.

இரண்டு பக்கமும் நெருப்பு பற்றி எரியும் போது, நடுவில் சந்தனம் பூசுவாரைப்போல் குயில்களின் பாட்டு இருக்கிறது என்றும், சேர்ந்து இருக்கும் போது பாட வேண்டிய பாடல்களை பிரிந்து இருக்கும் போது பாடுகிறீர்களே என்று வருந்தி, எம்பெருமான் இங்கே எழுந்தருளி வந்து, தன்னை வாழ்விக்கும் காலம் வருமாகில், அப்போது இங்கே வந்து ஆசை தீர பாடுங்கள் என்றும் கூறுகிறார். தற்பொழுது தன்னுடைய எல்லா இந்திரியங்களும் அவனால் அபகரிக்க பட்டு குயில்களை பார்க்கவும் முடியவில்லை, அவற்றின் பாட்டினை கேட்கவும் முடியவில்லை என்று சொல்வது போல் உள்ளது. திருவேங்கடவன் வருவது எப்படி குயில்களுக்கு தெரியும் என்று கேட்டுக்கொண்டு, கருடபகவான் பெரிய சிறகுகளை விரித்து உற்சாகமாக கூத்தாடிக்கொண்டு வருவதில் இருந்து புரிந்து கொள்ளலாம் என்றும், அப்படி இல்லை என்றால், தானே சொல்லி அனுப்புவதாகவும் கூறி உள்ளார்.

16. மழையே மழையே மண் புறம் பூசியுள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற, அழகப் பிரானார் தம்மை யென் நெஞ்சத் தகப்படத் தழுவ நின்று என்னைத் ததர்த்திக் கொண்டூற்றவும் வல்லையே (10.8)

எட்டாம் பதிகத்தில் மேகங்களை தூது விட்ட ஆண்டாள், மீண்டும் மேகங்களை அழைக்கிறார். மேகங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும் அவற்றின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதால் மழையே, மழையே என்று இரண்டு முறை அழைத்தது, வெண்கல பாத்திரம் செய்பவர்கள், மண் பூசி, உள்ளே மெழுகு வைத்து அதனை உருக்குவார்களைப் போல் என்பதை, மண் புறம் பூசியுள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினாற் போல் என்று குறிப்பிட்டுள்ளார். மேலே உள்ள மண்ணை இணைத்து, உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளி விடுவதுபோல, அந்த திருவேங்கடமுடையானும் உடம்பின் மேலே அணைந்து உள்ளிருக்கும் ஆத்மா உருகி போகும்படி செய்ய வல்லவன் என்பதை, வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார்  என்பதால் தெரியப்படுத்துகிறார். தன்னை இந்த பாடு படுத்துவதற்கு அவனுடைய அழகே காரணம் என்பதை, ஊற்றும் அழகப்பிரானார்  என்று சேர்த்து ரசிக்கலாம். நெஞ்சத்தில் இருப்பது போல் இருந்தாலும், தான் அணைக்க விரும்பும்போது, அணைக்க முடியாமல் அவன் விலகி விடுவதை மாற்றி அவனை அணைக்கும்படி செய்ய வல்ல மழையே என்கிறார். பிரிந்தபோது மழை எப்படி துன்பம் கொடுக்கிறதோ அதுவே, சேரும் காலத்தில் இன்பம் கொடுக்கவல்லது என்பதை இங்கே சொல்வதுபோல் அமைந்துள்ளது.

திருமலை நம்பிகள் இந்த பாட்டினையும் இதற்கு முன் பாட்டினையும் அநுஸந்திக்கும் போது, கண்ணீர் பெருக உருகி வெகு நேரம் இருப்பாராம்; அதனால் நம் பூர்வாசார்யர்கள் இவற்றை மிகவும் ஆதரிப்பார்கள்.

மீண்டும் இன்னொரு ஆழ்வார் பாடல்களில் சந்திக்கலாம், நன்றி.

திருவேங்கடமுடையான் பெரியாழ்வார்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.  பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.

இனி இங்கு பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களைப் பார்ப்போம் நன்றி.

பெரியாழ்வார்

ஆழ்வார், பெரியாழ்வார் திருமொழி என்ற ஒரு பிரபந்தம் பாடியுள்ளார். அதில் முதல் பதிகமாக திருப்பல்லாண்டு என்ற சிறப்பு பதிகம் உள்ளது. பெரியாழ்வார் திருமொழியில் திருப்பல்லாண்டையும் சேர்த்து மொத்தம் 473 பாசுரங்கள் உள்ளன. அதில் ஏழு (7) பாசுரங்கள் திருவேங்கடமுடையான் மேல் உள்ளன, அவற்றை கீழே காண்போம்.

 1. சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும், எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய், வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற, கைத்தலம் நோவாமே அம்புலீ கடி தோடிவா. (1.5.3)

கண்ணன் வளர்ந்து வருகின்றான். திறந்தவெளியில், நிலவினை பார்த்து தன்னோடு விளையாட அழைக்கிறான், வேகமாய் சென்ற சந்திரனைப் பார்த்து, இவன் எம்பெருமான், இவனை அலட்சியம் செய்தால் தப்ப முடியாது என்று சந்திரனுக்கும் நமக்கும் யசோதை கூறுவதாக அமைந்துள்ள பதிகம். ஆச்சர்யப்படத்தகவனாய் திருவேங்கடமலையிலே நின்று வாழ்பவனான இந்த கண்ணபிரான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

`மாமதி!  மகிழ்ந்தோடிவா’’ என்று அடுத்த பாசுரத்தில் அழைக்க இருக்கும் ஆழ்வார், சந்திரனை அழைத்த போதும், சந்திரன் ஓடி வராததால், ‘அழகில் தன்னோடொப்பார் ஒருவருமில்லை’ என்கிற கர்வத்தினால் இவன் வாராமல் செருக்குடன் உள்ளான் என்று எண்ணி யசோதை, அதனை அடக்க, ‘சந்திரனே ! நீ நாள்தோறும் தேய்வதும் வளர்வதுமாய் களங்கமுடன் இருக்கின்றாய்; நீ எப்போதும் பூர்ணமண்டலமாகவே இருந்து களங்கமும் நீங்கிச் செயற்கை அழகு செய்துகொண்டு விளங்கினாலும் என் குழந்தையான கண்ணபிரானின் முகத்திற்குச் சிறிதும் ஒப்பாக மாட்டாய்.  ஆகையாலே இவன் உன்னைக் கைகளை தூக்கி அழைப்பதைப் பெரிய பாக்யமாக கருதி, விரைந்து ஓடிவா; வராவிட்டால் இக்குழந்தைக்குக் கை வலிக்கும், அந்த அபசாரத்தை நீ அடைந்திடாதே என்று பாடுவதாக அமைந்துள்ளது.

2. என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன, மன்னு நமுசியை வானில் சுழற்றிய, மின்னு முடியனே அச்சோ வச்சோ, வேங்கட வாணனே அச்சோ வச்சோ. 1.9.8

இந்த பதிகம், யசோதை கண்ணனை அணைத்துக்கொள்ள அழைக்கும் விதமாய் அமைந்த பாடல்கள் கொண்ட பகுதி. எம்பெருமான் பக்தர்களிடம் சபலன், அதிகம் அன்பு கொண்டவன், அவர்கள் நினைத்த மாத்திரம் நெருங்கி வருபவன். பெரியாழ்வார் அழைத்தால், உடனே வருபவன்; யசோதை அழைத்தால் வருபவன்; அதேபோல் தாயை கண்டவுடன் ஓடி வந்து அணைத்துக் கொள்பவன். அதையே யசோதையும் விரும்புவாள் என்று சொல்லும் பாசுரங்கள் அமைந்த பகுதி.

வாமனனாய் வந்து திருமால் மாவலியிடத்தில் தானம் பெற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து உலகங்களை அளக்க ஆரம்பிக்கும் போது, மஹாபலியின் பிள்ளையான நமுசி ஓடி வந்து, ‘யாசிக்கும் போதிருந்த உருவத்தை மாற்றி அளப்பது மாயச்செயல், வந்த வடிவத்துடனே அளக்க வேண்டும்’ என்று பிடிவாதமாய் நின்ற நமுச்சியை வானில் சுழற்றி அடித்த மின்னும் கிரீடத்தை உடையவனே, திருமலையில் வாழ்பவனே என்று ஆழ்வார் முடிக்கிறார். நமுசி, த்ரிவிக்ரமனோடு வெகு நேரம் வாதாடி எம்பெருமான் சொன்ன வாதங்களைக் கேளாமல் தான் பிடித்த எம்பெருமானின் திருவடியினை விடாமல் உறுதியாக பிடித்துக்கொண்டு இருக்க, எம்பெருமான் வளர்ந்த திருவடியினால் அவனை ஆகாசத்திலே கொண்டுபோய் சுழன்று விழும்படி செய்த வரலாறு இங்கே கூறப்படுகிறது.

3. தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து, மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு, என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற, மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல்கொண்டுவா. 2.6.9

இது இன்னொரு அழகான பதிகம், அன்னையின் அன்பினை காட்டும் விதமாக அமைந்துள்ள பதிகம். கண்ணன் தலை வாரி அமர்ந்துள்ளான், தாய் மணமிக்க மலர்களை கொண்டு வர உள்ளே சென்ற போது, கண்ணன் ஆயர்குல சிறுவர்கள் மாடு கன்று மேய்க்க சென்று கொண்டு இருந்ததைப் பார்த்து தானும் உடன் செல்ல ஆசை பட்டான். தாயாரிடம் மாடு மேய்க்கும் கோல் கொண்டு வர சொல்கிறான். தாய் அது காகம் தூக்கி சென்று விட்டது என்றும் இதோ கொண்டு வர சொல்கிறேன் சென்றும் கண்ணனை இங்கேயே தங்கவைக்க முயற்சிக்கும் பதிகம்.

அழகிய இலங்கைக்கு அரசனாகிய ராவணனுடைய தலைகளையும் தோள்களையும் வெட்டி வீழ்த்தி விபீஷணாழ்வானுக்கு அரசும் அருளும் அளித்து, மின்னல்போல் விளங்குகின்ற மாலை அணிந்துள்ளவனுக்கு ஒரு கோல் கொண்டு வா, திருமலையில் வாழ்கின்றவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்று ஆழ்வார் பாடுகிறார். இதேயே உரையாசிரியர்கள், துஷ்டர்களைத் தொலைத்து, சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக் கோல் கொண்டு வா என்றும் கொண்டு வராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களைக் காக்கப்போவன் என்பது தொனிக்கும்படி சுவையாக சொல்வார்கள்.

4. மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு, கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி, நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள்திரு வேங்கடத்து எந்தாய், பச்சைத் தமனகத் தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய். 2.7.3

பகவானுக்கு எட்டு வகை மலர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும், அவற்றை பக்தியுடன் சமர்ப்பித்தால், புகழுடன் வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது.

பெண்களிருக்கிற வீடுகளில் நடுநிலைகளிலும், மேல் பகுதிகளிலும் புகுந்து அவர்களின் கச்சு மற்றும் பட்டாடைகளையும் கிழித்து செய்யும் துஷ்ட செயல்களை செய்பவனே, உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியே! பசுமை நிறமுள்ள மருக்கொழுந்தையும் பாதிரிப்பூவையும் சூட்டவாராய் என்று கூறுகிறார்.

5. போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய், ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன், கோது கலமுடைக் குட்டனேயா குன்றெடுத் தாய் குடமாடு கூத்தா, வேதப் பொருளே என்வேங்கடவா வித்தகனே, இங்கே போதராயே. 2.9.6

இந்த பதிகத்தில், கண்ணனின் விளையாட்டுகள் சுவையானவை, தனிப்பட்டவை. குழந்தை கண்ணனை யசோதை தூங்க செய்துவிட்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க சென்று விட்டாள். கண்ணன் சப்தமிடாமல் எழுந்து, பல வீடுகளுக்கு சென்று வெண்ணை, பால் தயிர் முதலியவற்றை களவு செய்து பாத்திரங்களை உருட்டி விட்டு, வீடு திரும்புவான். அந்தந்த வீட்டு பெண்கள் யசோதையிடம் வந்து முறையீடு செய்கிறார்கள். தாய் யசோதை, கண்ணனை அழைத்து, அவர்கள் கூறிய பழிச்சொற்களை ஏற்க முடியவில்லை என்று கண்டிக்கும் நோக்கத்துடன் கூப்பிடுகிறாள்.

ஆனால், குழந்தையை கூப்பிடும் போது, எல்லோருடைய கொண்டாட்டங்களையும் தன்மேல் உடையவனே, கோவர்த்தன கிரியை தூக்கியவனே, குடக்கூத்தாடு செய்பவனே, வேதங்களுக்கு பொருளாய் இருப்பவனே, என்னுடையவன் என்று சொல்லும்படி திருமலையில் இருப்பவனே, வியக்கத் தக்கவனே என்று பற்பல அடைமொழிகளுடன் அழைப்பது போல் அமைந்துள்ள பாசுரம்.

6. கடியார் பொழில் அணி வேங்கடவாகரும் போரேறே நீ யுகக்கும், குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே, கடிய வெங் கானிடைக் கன்றின்பின் போன சிறுக் குட்டச் செங் கமல அடியும் வெதும்பிஉன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான். 3.3.4

யசோதை கன்றுகளை மேய்க்க கண்ணனை அனுப்புகிறாள்; அனால் அவன் பிரிவினை தாங்கமுடியாமல் ஏங்கினாள்; மாலையில் கண்ணன் திரும்பி வந்ததும் அவனுடைய அலங்காரத்தை ரசிக்கிறாள், மற்றவர்களையும் அழைத்து காட்டுகிறாள்; கண்ணனின் பெருமைகளையும் அவனுடைய விளையாட்டுகளையும் எடுத்து சொல்லி, “கண்னா, நாளை முதல் கன்றின் பின் போகேல் ‘ என்று பாடுவதை சொல்லும் பதிகம்.

அழகிய மலர்கள் கொண்ட சோலைகளை உடைய திருவேங்கடத்தில் வாழ்பவனே, யுத்தம் செய்ய இருக்கின்ற காளையைப்போல் நிமிர்ந்து இருப்பவனே, கன்றுகளிடத்தில் ஆசை உள்ளவனே, எனக்கு ஸ்வாமியானவனே என்று யசோதை அழைப்பதைப்போல் ஆழ்வார் சிறு கண்ணனை முதலில் அழைக்கிறார். கண்ணன் கன்று மேய்க்குமிடமான காடுகளின் கொடுமையை நினத்துக் ‘குடையையும் செருப்பையும் எடுத்துக்கொள் என்று யசோதை மன்றாடி கேட்டபோதும், அவற்றை அவன் கொள்ளவில்லை. எல்லா இடங்களிலும் திரியும் கன்றுகளை இருந்த இடத்திலிருந்து கொண்டே புல்லாங்குழல் ஊதி, அழைத்துக் கொண்டு இருக்கலாம், என்று கண்ணனுக்கு குழலை கொடுக்க, அதையும் அவன் எடுத்து செல்லவில்லை. அவன் சென்ற இடமோ, மிகவும் கொடுமையான காடு. காலில் செருப்பில்லாமல் அவன் செங்கமலவடிகள் வெதும்பிப் போயின; மேலே குடை இல்லாததால், கண்கள் சிவந்தன; குழல் இல்லாததால், அங்கும் இங்கும் தேடி திரிந்து கன்றுகளை ஒன்று சேர்த்து உடம்பு இளைத்தது; இப்படியொரு கஷ்டம் வர வேண்டுமா என்று தாயான யசோதை கலங்குவதான பாடல்.

7. சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ, தாமோதரா சதிரா என்னையும், என்னுடைமையையும் உன் சக்கரப் பொறி யொற்றிக் கொண்டு, நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே. 5.3.4

எம்பெருமான் அவதாரங்களை எடுப்பது நல்லவர்களை காப்பதற்காகவே. அதர்மத்தை அழித்து தர்மத்தையும் நல்லவர்களையும் காப்பாற்றுகிறார். அவதார காலங்களில் உதவி பெறாதவர்களுக்கு உதவுவதற்காகவே அர்ச்சையில் இப்போதும் உள்ளார். திருமலையில் நிற்பதுவும் அதற்காகாவே என்று ஆழ்வார் இந்த பதிகத்தில் கூறி தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியை முடிக்கிறார். பெரியாழ்வார், திருவேங்கடமுடையானிடம் சரணாகதி வேண்டி அதையும் பெற்று விட்டதாக தெரிவிக்கின்றார். “திருப்பொலிந்த உன் சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்”  (5.4.7)  என்ற போதும், அதே பாடலில் “என்னை உனக்கு உரித்தாகினையே” என்றும்,   “பறவை ஏறு பரம் புருடா, நீ என்னை கை கொண்ட பின் ” (5.4.1) என்ற போதும், சரணாகதி அடைந்ததைப் பற்றி மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.   இந்த 11  பாடலகளிலும், ஆழ்வார் தான் சரணாகதி அடைந்ததையும், அதற்காக பெருமாளுக்கு நன்றி தெரிவித்தும், அதன் மகிழ்வை கொண்டாடியும் மிக நிறைவாக சொல்லி முடிக்கிறார்.

தண் திருவேங்கடம் என்பது குளிர்ந்த திருமலை என்றும், ஸம்ஸார தாபங்களில் இருந்து விடுதலை கொடுக்கும் திருமலை என்றும் கொள்ளலாம். சென்னியோங்கு என்று சொன்னது, திருமுடி வானமளவும் உயர்ந்து இருப்பதை சொன்னது.  ‘உலகுதன்னை’ என்பதை உருபுமயக்கமாகக் கொண்டு, உலகத்தவர்கள் வாழும்படி நின்ற நம்பீ; என்று உரைக்கலாம். தாமோதரா என்று சொன்னது, “கண்ணிநுண் சிறுந்தாம்பினாற் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‘, அத்தாம்பின் தழும்பு திருவயிற்றில் தோன்றும் படி நின்றவன் என்று பொருள் கொள்ளலாம். சதிரா என்றது, நம்முடைய குறைகளை கண்ணெடுத்து பார்க்காதவன் என்று சொல்லலாம். என்னையும் என் உடைமையையும் என்று சொன்னது, உடலையும், ஆத்மாவையும் சொன்னதாகும். ஆத்மாவிற்கு சக்கரப்பொறி என்பது ஆத்மாவிற்கு அநன்யார்க்க சேஷத்துவத்தை உண்டாக்குவது., அதாவது, பரமாத்வுக்கே ஜீவாதாமா உரியது, மற்ற எவர்க்கும் அடிமை செய்யாது என்பதாகும். நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றது, அவனுடைய கருணையையே வழியாகவும் பலனாகவும் (ஸ்வயம்பிரயோஜனம்) விரும்பி நின்றதாகவும், வேறு எந்த உபாயாந்தரத்திலும் ருசி குலையப் பெற்றேன் என்றும் ஆழ்வார் சொல்வது போல் அமைந்துள்ளது.

இனி வேறு ஒரு ஆழ்வாரின் பாசுரங்களில் சந்திக்கலாம். நன்றி.

RSS
Follow by Email