கஜேந்திர மோக்ஷமும் ஆழ்வார்களும்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகவும் முக்கிய சரணாகதிகளில், கஜேந்திரன் சரணாகதி, விபீஷ்ண சரணாகதி, திரௌபதி சரணாகதி போன்றவை அதிகம் பேசப்படும் சரணாகதிகள். பாகவத புராணம் இந்த கஜேந்திர மோக்ஷ வரலாற்றை கேட்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியர், “வாரணம் அழைக்க வந்த காரணன்” என்ற சிறப்பு அடைமொழியுடன் எம்பெருமானை மும்மணிக்கோவை என்ற நூலில் அழைக்கிறார்.

கஜேந்திர மோக்ஷம் பற்றி சில ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை இங்கே கொடுத்துள்ளேன். திவ்யப்ரபந்த உரையாசிரியர்கள், சில பாடல்களுக்கான விளக்கங்களில், கஜேந்திர மோக்ஷத்தை எடுத்து காட்டியும் உள்ளார்கள். அத்தகைய பாசுரங்களையோ, இன்னும் சில நேரடியான பாசுரங்களை நான் தவற விட்டு இருக்கலாம், அது அடியேனுடைய பிழையாகும், மன்னிக்க வேண்டுகிறேன். அவற்றைப்பற்றி தெரிவித்தால், நன்றி, இங்கே சேர்த்து விடுகிறேன். முதலில் கஜேந்திர மோக்ஷம் பற்றி சில குறிப்புகள்;

கஜேந்திர மோக்ஷம்

இந்திரத்யும்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூஜையில் இருக்கும்போது இவ்வுலகம் மறந்த நிலையில் இருப்பான்.  இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு நாள் துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இந்திரத்யும்னன் தனது பக்திக் குடிலை விட்டு வெளிவராததால், இறுதியில் அவன் மீது மிகவும் சினங்கொண்ட முனிவர், யானையைப் போலச் செருக்குடன் இருந்ததனால், அவனுக்கு விலங்குகளிலேயே மதம் பிடித்த யானையாக பிறக்க சாபமிட்டார். நிலையுணர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து முனிவரிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக இருந்தாலும் திருமால் மீது பக்திகொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு முதலை உன் காலை பிடிக்க நீ மஹாவிஷ்ணுவை கூவி அழைக்க உனக்கு மோட்சம் கிடைக்கும் என்றார்.

கூஹு என்னும் அரக்கன் ஒருவன் ஒரு நாள், அகத்தியர் தண்ணீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலை பிடித்து இழுத்தான். சினமுற்ற அகத்தியர் அவனை ஒரு முதலையாக பிறக்க சாபம் இட்டார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன் என்னும் யானையின் காலை பிடித்து இழுக்கும் போது திருமாலின் சக்ராயுதம் பட்டு சாபவிமோசனம் அடைவதாக கூறினார்.

பின்னொருநாள், மேலே சொன்ன சாப விமோச்சனைகளை போல், கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடன் மீதேறி அங்கு எழுந்தருளித் தனது  சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையை கொன்று யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருளினான். இதனை கபிஸ்தலம் என்ற திவ்யதேச ஸ்தலபுராணத்திலும் அறியலாம்.

இனி, ஆழ்வார் பாடல்களும், அவற்றின் சிறு விளக்கங்களுடன் :

பெரியாழ்வார்பெரியாழ்வார் திருமொழி
1பதக முதலைவாய்ப் பட்ட களிறு, கதறிக் கை கூப்பி என் கண்ணா, கண்ணா என்ன உதவப் புள் ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த, அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் 2.1.9:முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனின் குரல் கேட்டு துயர் தீர்க்க கருட வாகனனாக வந்து வருத்தத்தைப் போக்கியவன் அப்பூச்சி காட்டுகின்றான்.
2ஒரு ஆரணம் பணி கொண்டவன் பொய்கையில், கஞ்சன் தன் ஒரு ஆரணம், உயிருண்டவன் சென்று உறையும் மலை, கரு ஆரணம் தன்பிடி துறந்தோட கடல் வண்ணன், திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே 4.2.5கஜேந்திரன் என்ற யானையின் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்டு, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, எம்பெருமான் கண்ணன் நித்தியவாசம் செய்கின்ற திருமாலிரும்சோலையில், கோபித்துக்கொண்டு சென்ற பெண் யானையை ‘கடல்வண்ணர் மேல் ஆணை, செல்லாதே’, என்ற ஆண் யானையின் சொல் கேட்டு நின்ற திருத்தலம் ஆகும். ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக்கொன்றான்; ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான்;- (அர்ஜுநனும்  சிசுபாலனும்.); ஒரு ராக்ஷஸனைக் காத்து, ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; (விபீஷணனும் ராவணனும்.); ஒரு குரங்கைக் காத்து, ஒரு குரங்கைக் கொன்றான்;  (ஸுக்ரீவனும் வாலியும்); ஒரு பெண்ணைக் காத்து, ஒரு பெண்ணைக் கொன்றான்; (அஹல்யையும் தாடகையும்.); ஒரு அம்மானைக் காத்து, ஒரு அம்மானைக் கொன்றான்; (யசோதைக்கு உடன் பிறந்தவரும் நப்பின்னை தந்தையுமாகிய கும்பரும், கம்ஸனும்) என்று ஒன்றை காத்து ஒன்றை கொன்ற எம்பெருமானின் பெருமையை சொல்லி மகிழலாம்.
3துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே, ஒப்பிலேன் ஆகிலும், நின்னை அடைந்தேன், ஆனைக்கு நீஅருள் செய்தமையால், எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளி யானே. 4.10.1திருவரங்கம் கோவிலில் திருஅனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு உள்ளவனே, அடியார்களை காப்பதில் மிகவும் சாமர்த்தியம் உள்ள தங்களை அடைவதற்கு, சர்வ இந்திரியங்களும் அடங்கிய பின்னும் தேவரீர் துணை இருப்பீர் என்ற எண்ணம் தானே காரணம். அப்படி எம்பெருமான் திருஉள்ளத்தில் திட்டமிட்டு இருக்கும் அடியார்களுக்கு தான் நிகரில்லை என்றாலும், கஜேந்திரன் என்ற யானையை காத்தவன் என்ற காரணத்தினால், அதைபோல் அவனுடைய கருணையினால், தன்னையும் காத்து அருள்வார் என்று ஆழ்வார் அவனை சரண் புகுந்ததாக சொல்கிறார். தன்னுடைய முதுமையில், துயர் படும் காலத்தில், இந்திரியங்கள் ஒன்றுக்கும் பயன் பெறாமல் போகும் போது, எம்பெருமானை ஒரு நொடிகூட, நினைக்கமுடியாமல் போகும் காலத்திற்காக (அப்போதைக்கு), இப்போதே, இந்திரியங்கள் நன்றாக உள்ள காலத்தில், சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்படி ஆழ்வார் சொல்லியதால் இதை எம்பெருமான் நினைத்து வைத்து இருந்து ஆழ்வாரை காக்க வேண்டுமோ எனில், ஆழ்வார், அதற்காகத்தான் ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் ஆழ்வாரின் மனக்கோவிலில், வந்து பள்ளி கொண்டு அருளினது என்று பின்னால் சொல்ல போவதற்கு வகையாய் அமைந்துள்ளது இப்பாசுரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
4குண்டு நீருறை கோளரீ மத யானை கோள்விடுத்தாய் உன்னைக் கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல், வண்டல் நுண் மணல் தெள்ளியாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம், தெண்டிரைக்கடற் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே 1.2.3மிக்க ஆழத்தை உடைய கடலிலே சாய்ந்து அருளுபவனும், சிங்கம் போன்று மிடுக்கை உடையவனும், மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு, முதலையால் நேர்ந்த துன்பத்தைத் தொலைத்து அருளினவனுமான கண்ணபிரானே! அடியார்களின் துயரத்தை தீர்க்க வல்லவனான நீ, உன்னை பார்த்து ஆசைப்படுகின்ற எங்களை கடைக்கண்ணால் பார்த்து துன்பப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார்.
திருமழிசைப்பிரான்
திருச்சந்தவிருத்தம்
5ஆனை காத்து ஓர் ஆனை கொன்றது அன்றி, ஆயர் பிள்ளையாய், ஆனை மேய்த்தி, ஆ நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால், ஆனைகாத்து மையரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயமென்ன மாயமே. 40கஜேந்திர ஆழ்வான் என்ற யானையை காத்தருளி, ஆயர் குல பிள்ளையாக, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, பசுக்களை மேய்த்து, பசுவின் நெய்யை அமுது செய்து, கோவர்தனம் என்ற மலையினை கொண்டு பசுக்களை காப்பாற்றி, நப்பின்னை பிராட்டிக்காக, அவள் எதிரே நின்று, ஏழு எருதுகளை முடித்தது, என்ன ஆச்சர்யம், என்ன ஆச்சர்யம்.
நான்முகன் திருவந்தாதி
6மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ, மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித்தாய் மடுகிடந்த மாமுதலை கோள் விடுப்பான், ஆழிவிடற் கிரண்டும் போயிரண்டின் வீடு.உன்னைச் சிந்தித்து அடிபணியாதவர்கள், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில், வீடு என்ற பரமபதத்தை பெறாமல், மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து துன்புறும்படி மதித்தாய் என்பது ஒரு கருத்து. நான்கு வேதங்களைக் கொண்டு, உன்னை சிந்திக்காதவர்கள் ஒழியும்படி மதித்தாய் என்பது அதே வரிக்கு இன்னொரு கருத்து. கஜேந்திரன் என்ற யானைக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யமும், முதலைக்கு சாபமோக்ஷமும் கொடுத்து அருளினாய் என்றும் ஆழ்வார் எம்பெருமானை நோக்கி பாடும் பாசுரம் இது.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
7உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே. 28தேவர்களாலும் அறிய முடியாத தேஜோ மயமான பரமபதத்தை உடைய எம்பெருமான், கஜேந்திராழ்வானுக்காக, சிவந்த மாமிசத்தை அப்படியே உண்டு வாழும் முதலையின் மேலே கோபம் கொண்டு, ஆற்றங்கரைக்கே வந்து காத்து அருளினார். அப்படி அடியார்களின் மேல் ஒருதலை பட்சமாக அன்பு காட்டுகிற எம்பெருமான் இருக்கிறது போது, நாம் ஏன் நம்மைப்பற்றி கவலைப்பட வேண்டும். அவனுக்கு தொண்டு செய்து காலத்தை கழிக்காமல் ஏன்தான் தோன்றினேனோ என்று ஆழ்வார் கவலைப்படும் பாடல்.
8பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான், எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த கண்ணறா உன்னை யென்னோ களை கணாக் கருது மாறே. 44கங்கா நதியை சடையில் உடைய சிவனும், நான்முக கடவுளும், உன்னை காண்பதற்காக, எண்ணமுடியாத நெடுங்காலமாக காணமுடியாமல் தவம் புரிந்தவர்களாய் வெட்கமடைந்து தலை கவிழ்ந்து இருக்க, அந்த காலத்தில், முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனுக்காக எழுந்தருளி நித்யஸூரிகளும் ஆச்சர்யிக்கும்படி பரம க்ருபையைச் செய்தருளி, சிலருக்காக சிலரை கொன்ற எம்பெருமானை சர்வ ரக்ஷகன் என்று தஞ்சமாக நினைக்கலாகுமோ என்று சில மதிகேடர் கூறுவர் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருப்பள்ளியெழுச்சி
9கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக் கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ, எழுந்தன மலரணைப் பள்ளி கொள் அன்னம், ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி, விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தி னுக்கு அனுங்கி ,அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே 2கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றானது, முல்லை கொடிகளில் மலர்ந்து கொண்டு இருக்கும் முல்லை மலர்களை தழுவிக் கொண்டு அதன் வாசத்தினால் பெருமாளுக்கு பொழுது புலர்ந்ததை தெரிவிக்கின்றது. அன்று கஜேந்திர ஆழ்வான் என்னும் யானையை, கொடிய ஆபத்தில் இருந்து வேகமாக வந்து காப்பாற்றியது போல், அடியோங்களையும் காக்க விரைவில் கண் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
10மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த, கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட் டானை, தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. 2.3.9மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன் தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும் படியாக முதலையானது அவ் யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு, பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின் மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய  திருவல்லிக்கேணி கண்டேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
11கொழுந்து அலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டதற்கு எள்கி, அழுந்தி யமா களிற்றினுக்கு அன்று ஆழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள் செய்தானை, எழுந்த மலர்க் கருநீலமிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட, செழுந்தடநீர்க் கமலம் தீ விகை போல் காட்டும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே. 2.10.3சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே  முதலை வாள் போன்ற பற்களினால் காலைக் கவ்வினதற்கு வருந்தின கஜேந்திராழ்வானுக்காக ஆழி கொண்டு வந்து தோன்றி, அந்த யானைக்கு கருணை பொழிந்த பெருமானை செழித்த நீரையுடைய தடாகங்களில் தாமரைகள் விளங்கும் திருக்கோவலூரதனுள், நான் கண்டேன் என்கிறார்.
12முதலைத் தனிமா முரண்தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய, விதலைத் தலைச் சென்றதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம், விண் அண்ணவும் பதலைக் கபோதம் ஓளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம், மதலைத் தலை மென்  பெடை கூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.2முன்பொருகாலத்தில் பொய்கைக் கரையிலே முதலையினால் ஏற்பட்ட மிகப் பெரிய துன்பம் தீருமாறும், கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும், தாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!என்று அஞ்சி நடுங்கியிருந்த காலத்தில், எழுந்தருளி, அந்த யானைக்கு உதவி செய்த எம்பெருமானை, விண்ணுலகு வரை உயர்ந்து இருப்பதும், கலசங்களையும் உடைய திருநாங்கூர் திவ்யதேசத்தில் உள்ள மணிமாடக்கோயில் சென்று, என் மனனே, வணங்கு, என்று ஆழ்வார் தன்னுடைய மனதுக்கு கூறுகிறார்.
13தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி, முன்னு காம்பு உடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை, பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட, எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே. 4.5.1பனை போன்ற துதிக்கையை உடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கி அருள் செய்தவன், மூங்கில்களை கொண்ட கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்து, கடுமையான மழையைத் தடுத்த எம்பெருமான், திருநாங்கூரில் திருமணிக்கூடம் என்னும் திருப்பதியில் நித்ய வாசம் செய்கின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
14தாவளந்து உலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்று ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே. 4.6.1உலகம் அனைத்தும் தேடி பெரிய பூக்களை உடைய குளத்தில் இறங்கியபோது, முதலையினால் கவ்வப்பட்டதால், நாவுக்கு அலங்காரம் போல் இருக்கும் திருநாமங்களை சொல்லி துதிக்க, கஜேந்திரனின் அச்சத்தை போக்கியவனே, மிக்க செல்வமானது அதிகமான திருக்காவளம்பாடி என்ற திவ்யதேசத்தில் நித்யவாஸம் செய்யும் கண்ணபிரானே நீயே காப்பாற்றவேண்டும் என்று ஆழ்வார் பாடுகிறார்.
15கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே! 5.1.2வாமனனாக அவதரித்து மஹாபலியிடம் இருந்து எல்லா உலகங்களையும் கைப்பற்றியவனும், கஜேந்திரனுடைய துயரத்தை போக்கி அருளினவனும், பரம பவித்திரனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், கழனிகளில் மீன்களானவை துள்ளி விளையாடும் போது, பறவைகள், தங்கள் குட்டிகளுக்கு தேவையான சிறு மீன்களை தேடும் புள்ளம்பூதங்குடி ஆகும்.
16ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடைய தேர் ஓருவனாய் உலகில், சூழிமால் யானைத் துயர்கெடுத்து, இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து, பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவனொளி கெட, பகலே ஆழியால் அன்று அங்கு காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந்தானே. 5.7.8காலம் போன்ற எல்லாவற்றையும் நிர்வகிக்கும், ஹோமம் யாகம் இவற்றுக்கு தலைவனாய், ஒற்றை சக்கர தேர் ஓட்டும் சூரியனுக்கு அந்தராத்மாவாக இருக்கும், எம்பெருமான், கஜேந்திரனுடைய துன்பத்தை போக்கியவனும், முன்பு ஒரு காலத்தில், இலங்கை அழியும்படியாக கூறிய அம்புகளை பிரயோகித்தவனும், அர்ச்சுனனுக்கு பின்னொருநாள், பகலில் ஆழிகொண்டு சூரியனை மறைத்து உதவி செய்தவனும் அரங்கமாநகரில் அமர்ந்து உள்ளான் என்று கூறுகிறார்.
17கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம், முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப, கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளதறிந்து, உன் அடியனேனும் வந்தடியிணை யடைந்தேன் அணிபொ ழில் திரு வரங்கத்தம் மானே, 5.8.3நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையில் இருந்த தாமரைமலரை எம்பெருமானுக்காகப் பறித்த யானை ஆபத்தை அடையும்படி, மிக்க வலிமையையுடைய ஒரு முதலையானது பிடித்துக்கொள்ள, யானை தன்னை தன்னுடைய வலிமையினால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், எம்பெருமானை சரண் அடைய, எம்பெருமான் முதலையின் உயிர்போகும் வரை கோபத்தை வரவழைத்து கொண்டது தெரிந்து, அடியேனும் வந்து உன் சரண் அடைந்தேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
18தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம், மூவாமை நல்கி முதலை துணித்தானை, தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை, நாவாயுளானை நறையூரில் கண்டேனே. 6.8.3பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு, ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி வந்து, அருள்புரிந்து, முதலையை ஒழித்தவனை, நித்யஸூரிகளுக்கு தலைவனை, செந்தாமரைப்பூ போன்ற திருக்கண்களை உடையவனை, திருநாவாய் என்னும் திருப்பதியில் இருப்பவனை, திருநறையூரில் கண்டனே என்று பாடுகிறார்.
19குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று, பொன்றாமை, அதனுக்கருள் செய்த போரேற்றை, அன்று ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர், நின்றானை, அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே. 7.6.4கோவர்த்தன மலையைக்கொண்டு மழையை தடுத்தவனும், நல்ல குலத்தில் பிறந்த கஜேந்திரன் என்ற யானை அன்று முதலையின் வாயில் சிக்கி முடிந்து போகாமல் தடுத்து அருள் செய்தவனும், போர் செய்ய வல்ல காளையை போன்றவனும், பசு நெய்யை நன்றாக ரசித்து உண்பவனும், அன்றே தேரழுந்தூரில் அமர்ந்து இருப்பவனை தான் கண்டு கொண்டு விட்டதாகவும், அதனால் குறை ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
20குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று, நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின், மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய, அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3மலையில் இருந்து சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும், திரட்டிக்கொண்டு கழனிகளில் எல்லாம் நீர் பாயும், அலை எறியும் காவிரியினால், செழிப்பும் சிறப்பும் பெற்ற தேரழுந்தூர், எம்பெருமான் உகந்து நின்ற திவ்யதேசம் ஆகும். கஜேந்திராழ்வான் ஆற்றில் இறங்கியபோது, வலிமையான முதலை பிடித்து இழுத்ததினால் அந்த முதலைக்கு அஞ்சி, சந்திரனைப்போன்று குளிர்ந்த ஒளியை உடையவனே என்று ஓலமிட்டு துதித்த யானையின் துன்பத்தை நீக்கியவன் என் குற்றங்கள் இல்லாத எம்பெருமான் ஆவான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
21இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு, கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான், அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி, முன் கலை மாச்சிலையால் எய்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.7கஜேந்திரன் என்ற யானை இலைகள், பூக்கள் நிரம்பிய அழகிய குளத்தில், முதலையினால் துன்பம் அடைந்து, கையேந்தி, நிற்கையில் அருள்புரிந்து காத்தவன், கடல் சூழ்ந்த இலங்கைக்கு தலைவனான இராவணனின் தம்பியான விபீஷணனுக்கு, லங்கா அரசை கொடுத்து அருளினவன், அதற்கு முன்பு, மாயமான் வேடத்தில் வந்த மாரீசனை கூறிய அம்பினால் கொன்றவனுடைய ஊர், நாம் தொழும் திருக்கண்ணபுரம் ஆகும் என்கிறார் ஆழ்வார்.
22கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை, மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை, அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. 8.9.1நீண்ட துதிக்கையையுடையதும், மதம் கொள்ளும் இயல்பு உடையதுமான கஜேந்திரனுடைய துயர் போக்கி அருளின காளமேகத்தைப் போன்ற, மை நிறத்தை உடைய, மிகப்பெரிய விலைமதிப்பில்லாத நீல ரத்தினத்தைப் போன்றவனும் மரகத பச்சை போன்றவனும், எனக்கு ஸ்வாமியும், எனக்கு உபகாரம் செய்து அருள்பவனும், சர்வேஸ்வரனும், என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை அடியேன் அடைந்து உய்ந்து போனேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
23கவளமா கதத்த கரி உய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து, துவள மேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன் குவளை நீள் முளரி குமுதம் ஓண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தல் ஓண் கழனி திவளும் மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 9.1.2கவளம் கொள்ளும், மிக மதத்தை உடைய கஜேந்திரன் என்ற யானை, ஒரு குளத்தில் இருந்த முதலையினால் கவ்வப்பட்டு கலக்கம் அடைந்து, எம்பெருமானை நினைத்து, வருந்திய போது, அது உஜ்ஜிவிக்கும் படி, மேல் வழியாக வந்து முதலையை இரு பிளவாக பிளந்து, ஜொலிக்கின்ற திரு ஆழி என்ற சக்கரத்தை உடைய எம்பெருமான், நெய்தல், தாமரை, ஆம்பல், செங்கழுநீர் என்று பலவகை பூக்கள் நிறைந்து இருக்கும் நீர்நிலைகளையும், பிரகாசிக்கின்ற திரு மாளிகைகளையும், அவைகளை சூழுந்துள்ள மதில்களையும் உடைய திருக்கண்ணங்குடியில் நின்றான்.
24 இருந்தான் என் உள்ளத்து இறைவன்,கறை சேர் பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த, செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட வருந்தாது என் கொங்கை ஓளி மன்னும் அன்னே. 11.3.2என் நெஞ்சினுள்ளே வாழ்ந்து இருப்பவனும், ஸர்வ ஸ்வாமியும், கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும், செந்தாமரைக் கண்ணனும், திருத்தோள்களை உடையனும் ஆன ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் பாடிக் கூத்தாட எனது முலைகளானவை வருத்தம் இல்லாமல் ஒளி பெறும் என்று பெண் பாவனையில் ஆழ்வார் பாடி உள்ளார்.
திருவெழுகூற்றிருக்கை
25நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனைஎம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப்பூப் பறிக்கப் போன குளத்தில் முதலை வாயில் அகப்பட்ட ஸ்ரீ கஜேந்திரனுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடன் மேல் விரைந்து வந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளினது பிரசித்தம். நால்திசை நடுங்க என்பதனால், எம்பெருமானின் வேகத்தை கண்டவர்கள், ‘இன்று ஏதோ பிரளயம் விளையப் போகிறது‘ என்று அஞ்சி நடுங்கினர் என்பதாகும். தொங்குகின்ற வாயையும் மூவிடங்களில் மதநீர்ப் பெருக்கையும் இரண்டு காதுகளையும் உடைய அழகிய சிறகையுடைய பெரியதிருவடியான கருடன்மேல் ஏறிக்கொண்டு, ஆழமான நீரையுடைய மடுவின் கரையிலே எழுந்தருளி,  பகவத்பக்தியில் ஒப்பற்ற கஜேந்திரனுடைய துக்கத்தை போக்கி அருளினாய்.
சிறிய திருமடல்
26போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி, நீரார் மலர்க்கமலம் கொண் டோர் நெடுங்கையால் நாராயணா ! ஓ ! மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய் – என வெகுண்டு – (2694) மிகப் பெரிய மலைபோன்ற மத்தகஜமானது, நீர்நிலத்திலே முதலையின் வாயில் அகப்பட்டு நின்று வருந்தி நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போது அலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு ஓ நாராயணனே! நீலமணி வண்ணனே! என் எஜமானனே ! வந்தருளவேணும், எனது பெருந்துக்கத்தைப் போக்கி யருளவேணும், என்று கூவ, அக்கூக்குரலைக் கேட்டு
27தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடர்க்கடிந்தான் எம்பெருமான் பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர்
உம்மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கனுமற்று  (2695)
கஜேந்திரனின் விரோதியின் (முதலை) மேல் கோபித்து அடங்காத கோபத்தோடு பொய்கைக்கரைக்கு எழுந்தருளி முதலயை இருதுண்டமாகப் பிளந்து அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான் இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான ஆயிரம் ஆயிரம் நாமங்களை உடையவன், அவ்வெம்பெருமான் தான், அறிவு கெட்ட பெண்டுகளே! உங்கள் மகளுக்கு இப்படிப்பட்ட தீராத நோயை உண்டு பண்ணினான் காண்மின் என்று கட்டுவிச்சி சொல்லி முடித்தாள்.
பொய்கையாழ்வார், முதல் திருவந்தாதி
28அடியும் படி கடப்பத், தோள் திசை மேல் செல்ல, முடியும் விசும்பு அளந்தது என்பர் – வடியுகிரால் ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான் உலகளந்த நான்று 17இந்த பாசுரத்தில் நேரடியாக கஜேந்திர மோக்ஷம் சொல்லப் படவில்லை என்றாலும், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான் என்பதை, நம் ஆச்சார்யர்கள் விளக்கும் போது, ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடி வந்த காலத்திலும் நேரில் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லையே என்று அநுதாபப்படுவது தோன்றும் என்பர்.
29இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும், அறைபுனலும் செந்தீயும் ஆவான் , பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த, செங்கண்மால் கண்டாய் தெளி. 29ஸ்ரீவைகுந்தநாதன் ஆகவும், பூமி, ஆகாயம், வாயு, நீர், தீ, ஆகிய பஞ்ச பூதங்களாலான இந்த உலகத்தை உடையவனுமான எம்பெருமான், பிறைபோன்ற தந்தத்தையுடையதும் பசுமை தங்கிய கண்களை உடையதுமான பெரிய கஜேந்திரனை, முதலையின் வாயிலே அகப்பட்டு பட்ட துக்கத்தில் இருந்து காத்தவன் புண்டரீகாக்ஷன் என்று நெஞ்சே தெரிந்துகொள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
30வாரி சுருக்கி மதம் களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே, மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல். 47மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற ஐந்து இந்திரியங்களையும் உலக விஷயங்களில் இருந்து இழுத்துப்பிடித்து, கண்டவிடங்களிலும் திரிய வொட்டாமல் நிலைநிறுத்தி, மிகவும் துல்லியமான உண்மையான பக்தியினால், அவனை உள்ளபடி உணர வல்லவர்கள், முன்பொரு காலத்திலே கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய திருவடிகளை கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள் என்பது இந்த பாடலின் கருத்து.
3`இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், கொய்ந்நாகப் பூம் போது கொண்டு. 78கஜேந்திராழ்வானை தொடர்ந்து வந்த கொடுமை பூண்ட முதலையை கொன்றவனும், பசுமை நிறத்தை உடைய திருவனந்தாழ்வானை மெத்தையாக உடையனுமான எம்பெருமானது திருவடிகளை புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு தொழுவோம் என்று தன் மனதிற்கு ஆழ்வார் சொல்கிறார். மேலும் அவனுக்கு அடிமை செய்யாமல் இருக்கும் துயரத்தை தன்னால் அனுபவிக்க முடியாது என்றும் கூறுகிறார்.
32பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன், அடிசேர்ந்தருள் பெற்றாள் அன்றே, – பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை என்னும் பேர்ப் பொன். 97புண்ணியமும் பாபமும் அவனிட்ட வழக்காய் இருக்கும் என்று 96 ம் பாட்டில் ஆழ்வார் சொல்லி உள்ளார். அதனை தொடர்ந்து. இந்த பாடலில் கஜேந்திரன் சென்ற ஜென்மத்தில் செய்த புண்ணியம் தொடர, இந்த ஜென்மத்திலும் பக்தியை தொடர்ந்தாலும், மற்ற யானை கூட்டங்களின் சகவாசத்தினால், உலக விஷயங்களிலும் ஈடுபட்டதை, ஆழ்வார் பேடையோடு சேர்ந்து போகங்களை அனுபவிக்கிற கஜேந்த்ராழ்வான் என்பதை பிடி சேர் களிறு என்கிறார். அப்படிப்பட்ட கஜேந்திரனை காத்து அருளினை எம்பெருமான், கங்கைக்கு பாவங்களை போக்கும் சக்தியை தன்னுடைய திருவடிகளை தீண்டியதால் அருளினான் என்றும் கூறி உள்ளார்.
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
33தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சிப் படரெடுத்த பைங்கமலம் ¦ கொண்டு, அன்று இடர் எடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப் பண்டு. 13மதயானையானது, விசாலமாயிருந்த பொய்கையிலே இறங்கி மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் துதிக்கையில் கொண்டு வரும்போது, முதலையின் வாயில் அகப்பட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் பெருந்துன்பம் உண்டாக, இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோ என்று மனம் பதறி, திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை தியானித்து வணங்கியபடியாலே அந்த கஜேந்திரன் பரமபதத்தை அடைந்தது என்று ஆழ்வார் சொல்கிறார்.
34அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி, பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர் வெண்கோட்டு மால் யானை வென்று முடித் தன்றே, தண் கோட்டு மாமலரால் தாழ்ந்து. 22முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக் கொண்டு அந்த ஆபத்தைப் போக்கி கொள்ள நினைத்துத் தானே முயற்சி செய்து கொண்டிருந்த வரையில் துன்பம் நீங்க வில்லை ; ‘தன்னாலான மட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமானும் விலகியே நின்றான்; இனி நம்மாலாகாதென்று துணிந்து தன்னுடைய முயற்சியை கைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின், அந்த யானையை காப்பாற்றுவதை, தன் காரியமாகக் கொண்ட எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய  மடுவின்கரையிலே ஓடி வந்து துன்பம் தீர்த்தான். அதேபோல், அடியார்களுக்கு வேண்டிய அத்தனை காரியங்களையும் தானே செய்வதாக என்று எண்ணிக் கொண்டு மிகவும் உற்சாகம் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை கிடைக்கப்பெற்றால், நடப்பதற்கு அரிய காரியமும், எளிதாகும்.
35 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆய் நடு அந்தி வாய், வாய்ந்த மலர் தூவி வைகலும், – ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட் படத் துணிந்த யான். 73எம்பெருமான் கஜேந்திராழ்வானிடத்தில் வெளியிட்ட உபகாரத்தைப் பார்த்தபின், நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட அனுகிரத்திற்கு பாத்திரம் ஆகலாம் என்று எப்பொழுதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய திருநாமங்களை சொல்லிக் கொண்டு இருப்பதுமான தம்முடைய செயல்களை ஆழ்வார் சொல்லி கொள்கிறார். சந்திரகலை போன்ற தந்தரத்தையும் சிவந்த கண்களையு ம் உடைய கஜேந்திரன் என்கிறார். ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமை செய்ய உறுதிகொண்ட காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்களிலும் கிடைத்த புஷ்பங்களை கொண்டு ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை ஆராய்ந்து உரைக்கிறேன் என்கிறார்.
பேய்ஆழ்வார் – மூன்றாம் திருவந்தாதி
36சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணிமுடி மால், தாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த மணிநீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான், அணி நீல வண்ணத்தவன். 50எம்பெருமான் அடியார்களுக்காக செய்தருளின காரியங்களெல்லாவற்றினும் ஸ்ரீகஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின உதவி, தனிப்பட்டு விளங்குகையாலே, கஜேந்திர மோக்ஷம் பற்றி இந்த பாசுரத்தில் அருளி இருக்கிறார். இப்பாட்டில் நடுவே இரண்டடிகளில் கதையை சொல்லி, முதலடியிலும் கடைசி வரியிலும் எம்பெருமானைச் சிறப்பித்துக் கூறியிருப்பதன் கருத்தை உணர வேண்டும், எம்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்து கொண்டிருப்பதும், திருவபிஷேகம் (கிரீடம்) அணிந்து கொண்டிருப்பதும் ‘தானே அனைத்துலகும் காக்கவல்ல முழுமுதற் கடவுள்‘ என்பதை விளக்குவதற்குத் தான். பரமபக்தனான கஜேந்திராழ்வான் நெடுங்காலமாக ஒரு முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு மிகவும் சிரமப்பட்டதனால், எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் (காப்பாற்றும் தன்மை என்ற குணம்) சற்று குன்றி இருந்தது என்பதை, அவனுடைய திருத்துழாய் மாலையும்வாடி, திருவபிஷேகமும் ஒளிமழுங்கிக் கிடந்தது என்பதாக சொல்வது முதல் அடியில். பிறகு முதலையை கொன்று வேழத்தை வாழ்வித்ததனால் எம்பெருமானின் காப்பாற்றும் குணம் பிரகாசமாக, திருத்துழாய் மாலையும் திருவபிஷேகேமும் ஒளி கூடியதால், அதனை ‘சூழ்ந்த துழாயலங்கல் ‘ என்று கூறுகிறார். பக்தனுடைய விரோதியை ஒழித்தோம் என்ற மகிழ்ச்சியினால் திருமேனி மேலும் ஒளிவிட, ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற கடைசி வரியினால் அருளிச்செய்தார். கஜேந்திரவான் தாமரைப்பூ பறித்த பொய்கை மலை மேல் இருந்ததினால், ‘தடைவரைவாய்‘ எனப்பட்டது.
37அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம் சுழிந்த மொய்ம்பன், – சரணா மேல் ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பு என்னாதே
ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78
எம்பெருமான் ஸர்வ ரக்ஷகன் என்று பேர் எடுத்துஇருந்தாலும், அவனுடைய ரக்ஷகத்வம் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் தானே அமையாது. தம்மை ரக்ஷித்துக் கொள்வதில் தாங்களே முயற்சி செய்யும் போது, அவர்களிடத்தில் அந்த சமயங்களில் அவன் தனது ரக்ஷகத்வத்தை காட்டமாட்டான். இரு கைகளையும் விட்டு ‘நீயே சரண்‘ என்று எல்லா சுமைகளையும் அவன் மேல் ஏற்றிவிட்டு, தம் கையாலே ஒரு முயற்சியும் செய்யாத ஞானிகளையே தான் காத்து அருள்வான். “இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போலே“ என்னும்படியாக அவள் ஒரு கையாலே துணியை பிடித்துக்கொண்டு தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த போது, அவளுடைய ரக்ஷணத்திலே கண்ணபிரான் திருவுள்ளம் செலுத்தவில்லை. ஸ்ரீகஜேந்திராழ்வானும் தன்னை காப்பாற்ற தானே முயற்சி எடுத்த வரையில் நாராயணன் அவனுடைய ரக்ஷணத்தை பற்றி நினைக்கவில்லை. எம்பெருமான் நமக்கு ரக்ஷகனாக எல்லாக் காலத்திலும் துணையாக இருக்கிறான் என்ற முதல் அடியை எடுத்துக்கொண்டால், இதன் உட்கருத்து, நாம் நம்மை காப்பதில் உள்ள முயற்சியை விட்டுவிட்டு, அவன் காப்பான் என்று இருந்தால், அவன் “என் உடம்பில் உள்ள அழுக்கை நானே போக்கிக்கொள்வேன்” என்றபடி நம்மை காப்பான் என்பதே. நம் ஜென்மம் என்ன, ஞானம் என்ன, ஆசாரம் என்ன என்று நம் தாழ்வுகளை பார்க்காமல், அந்த மாயனை மனத்தால் எப்போதும் நினைத்திடு என்று தன் மனதிற்கு உபதேசிக்கிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
38நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றெவ்வெவையும், நீந்தும் துயரில்லா வீடு முதலாம், பூந்தண் புனல் பொய்கை யானை இடர்க் கடிந்த, பூந்தண் துழாயென் தனி நாயகன் புணர்ப்பே. 2.8.2போக்கிக்கொள்ள முடியாத துக்கத்தை விளைக்கின்ற பிறப்பு, இறப்பு இவற்றை பகவத் ஸம்பந்தம் போக்கடிக்கும், துக்கம் சிறிதும் இல்லாத முக்தியையும் அளிக்கும் என்பது ஒரு கருத்து. அபாரமான துயரங்களை விளைவிப்பதான கடந்து செல்வதற்கு அரிதான பிறவி முதலான பிறப்பு, இறப்பு என்ற எல்லா வகைப்பட்ட துக்கங்களும் தொடமுடியாத மோக்ஷம் என்ற ஆனந்தத்திற்கு வழி செய்து கொடுக்கும் பகவத் சம்பந்தம் என்பது முதல் இரண்டு வரிகளின் இன்னொரு கருத்து. கஜேந்திராழ்வானைக் காத்தருளினவனும், அப்படியே பக்தர்கள் அனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலையிட்டுக் கொண்டு நாயகனாக விளங்கும் எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமே பகவத் சம்பந்தம் என்று பின்னால் வரும் வரிகளில் விளக்குகிறார். அவன் திருவடி சம்பந்தம், துக்கங்களை களைந்து பேரானந்தத்தை கொடுக்கும் என்பது இந்த பாசுரத்தில் சுருக்கம்.
39எம்மாவீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த் தொல்லை, கைம்மா துன்பம் கடிந்த பிரானே, அம்மாவடியென் வேண்டுவது ஈதே. 2.9.1 கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே! உன்திருவடிகளை அடியேன் தலைமீது சீக்கிரமாக வைக்க வேண்டும் என்பது மட்டுமே நாம் வேண்டுவது; மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
40மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய், தொழுங் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9
எம்பெருமானுடைய திரு அவதாரங்களுக்கு மூன்று வகையான பயன் பேசப்பட்டுள்ளன. அடியார்களைக் காத்தல், துஷ்டர்களை அழித்தல், தர்மத்தை நிலை நாட்டுதல் என மூன்று காரியங்களுக்காக எம்பெருமான் அவ்வப்போது அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. மூன்றும், ஒன்று போலவே தோன்றும்.பரமபதத்தில் வீற்றிருந்தபடியே ஸங்கல்பத்தால் செய்ய முடியாத காரியமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் வண்ணம் அமைந்து உள்ள பாசுரம். எம்பெருமானை நேரில் ஸேவிக்க வேணும் என்ற ஆசை கொண்ட அடியார்களின் விருப்பத்தை எப்படி ஸங்கல்பத்தினால் செய்ய முடியும், நேரில் எழுந்தருளித்தான் ஸேவை ஸாதித்தாக முடியும் என்பதை விளக்கும் பாசுரம்.
மழுங்காத வைநுதிய சக்கரநல்வலத்தையாய்!” என்ற சொற்தொடரின் கருத்தாவது, பரமபதத்திலிருந்துகொண்டே திருவாழியாழ்வானை ஏவி முதலையை முடித்திட ஆற்றல் அவனுக்கு உண்டு என்று காட்டுவதாகும். அப்படியிருந்தும் கருடன்மேல் ஏறி வந்து பொய்கைக் கரையில் காட்சி தந்தது இரண்டாம் அடியில் சொல்லப்படுகிறது. களிற்றுக்குத் தொழுங்காதல் என்றதால், கஜேந்திராழ்வான் எம்பெருமானை தொழ வேண்டும் என்ற காதலை நிறைவேற்றுதற்காகவே தோன்றினான் என்பது சொல்லப்பட்டது. எம்பெருமான் அவதரித்தே செய்யத்தக்க காரியம் ஸங்கல்பத்தினால் செய்யப்போகாது என்பது இறுதியாக சொல்லப்பட்டது. ஸங்கல்பத்தைக் கொண்டே ரக்ஷிக்கப் பார்த்தால், ‘அடியார்க்காக ஓடிவந்து உதவுமவன்’ என்கிற பெயரால் உண்டாகும் ஜோதி மறையும் என்கிறார். இந்த பாசுரம் முடிச்சோதியாய் என்ற பதிகத்தில் வருகிறது.
41வந்தாய்போலே வந்தும் என் மனத்தினை நீ, சிந்தாமல் செய்யாய் இதுவே இதுவாகில், கொந்தார்க் காயாவின் கொழு மலர்த் திருநிறத்த எந்தாய், யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே? 3.2.5ஆழ்வார் எம்பெருமானிடம், இராம, கிருஷ்ண அவதாரங்கள் போலே தனக்காகவும் வந்து சில நாட்கள் இருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் நன்று. அது செய்யத் திருவுள்ளம் இல்லையாகில், ஆனைக்குத் தோன்றினால் போல், ப்ரஹ்லாதனுக்குத் தோன்றினால் போல், தனக்கும் ஒரு சிறிய நேரம் தோற்றம் அளித்து அருள வேண்டும் என்கிறார். இப்படி உதவ முடியாது என்பதே தினமும் எம்பெருமான் சொல்வாரானால், தான் தன்னுடைய முயற்சியினால் அவனை வந்து சேர்வது என்று ஒன்று உண்டோ என்று வினவுகிறார். இனி அவன் வடிவழகை காண்பது என்பது தான் இழந்து போகிற ஒன்றாகிவிடுமே என்று கவலை படுகிறார்.
42மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற, கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல் வண்ணன் கண்ணன், எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார், தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. 3.5.1ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த அடியார்கள் மேல் உள்ள அன்பை அறிந்தும், எம்பெருமான் மேல் அன்பு பாராட்டாதவர் பிறப்பு வீண் என்கிறார். கஜேந்திராழ்வானுடைய கூக்குரல் கேட்டு பதறிப் பொய்கைக்கரைக்கு வந்தது மட்டுமின்றி, முதலைவாய்ப்பட்டுப் புண்பட்ட அதன் காலைத் திருக்கைகளினால் தடவி உபசாரங்கள் செய்தது அந்த யானைக்கு, செய்த பெரிய அருள். இதனை அறிந்தவர்கள், எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும், பறந்தும், துள்ளவேண்டும்; அப்படி செய்யாதவர்கள் இவ்வுலகில் பிறந்தாலும், என்ன பலன் என்கிறார்.
43அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர், கைம்மா துன்பொழித்தாய் என்று கைதலை பூசலிட்டே, மெய்ம்மாலாய் ஓழிந்தேன் எம்பிரான் என் மேலானே.5.1.7 தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்கும் போது அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி என்று ஆழ்வார் சொன்னாலும், எம்பெருமானின் கருணை பிரவாகமாக ஓடுவதையும் சொல்லி உள்ளார். ஆழ்வார், முதலடியினால் எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலைநாட்டினார். இரண்டாம் அடியினால் எல்லா வழியாலும் மஹாபாவங்களைப் செய்தவர்களிடமும் எம்பெருமானுடைய பரமக்ருபை பெருக தடை எதுவும் இல்லை என்கிறார். அவருடைய அருள் வெள்ளப் பெருக்கினாலே எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்பட்டது என்கிறார். மெய்யன்புடையார் நெஞ்சு கனிந்து சொல்லும் சொல்லை தான் கபட பக்தியோடே சொன்னதாகவும், அது மெய்யான பக்தியாகவே எம்பெருமான் எடுத்துக்கொண்டான் என்றும் சொல்கிறார்.
44செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான் அலப்பாய் ,ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.5.8.4
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே என்று சொல்லும் போது, ஆழ்வார், கஜேந்திராழ்வானுக்கு உதவ ஆகாசத்தில் வந்து தோன்றினாப்போலே தனக்காகவும் வந்து தோன்றுகிறாரோ என்று ஆகாசத்தை நோக்குகிறார். திருக்குணங்களையுடையவனே!அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே! எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான ஒப்பற்ற தலைவனே!பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே எம்பெருமான் வருதற்குரிய வானத்தைப்பார்த்து அழுவதும் தொழுவதும் செய்து நின்றதாக ஆழ்வார் கூறுகிறார்.
45வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும், உட்குடை யசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள்ளுருகும், கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும், திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்திட் டாயே? 7.2.3 இந்த பாடலிலும், ஆழ்வார் “வானமே நோக்கும்” என்று சொல்லி, யானைக்கு உதவ வந்ததைப் போல நமக்கும் உதவ வரக்கூடும் என்று வானத்தையே நோக்குகின்றார். நீல மணிவண்ணனே என்று கூப்பிடுகிறார். எம்பெருமான் வராத காரணத்தால் ஏமாற்றம் / மயக்கம் ஏற்பட்டு, வலிமையுடையவர்களான அசுரர்களினுடைய உயிர்களை பறித்த வீரனே என்கிறார். உள்ளம் நீராக உருகுவதாகவும், கண்களில் புலப்படாதவராகவும் இருக்கிறார் என்கிறார். இராம, கிருஷ்ண அவதாரங்களில் வந்து காட்சி அளித்தது போல் எம்பெருமானை கண்ணார காண அருள் புரிய வேண்டுகிறார். இந்த பதிகம் முழுவதும், ஆழ்வார் பெண் பாவனையில் பாடுவதால், இந்த பெண்ணுக்கு திருவரங்கத்து எம்பெருமான் செய்தது என்ன என்று கேட்டு பாசுரத்தை முடிக்கிறார்.
46அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான், சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை, ஒன்றி வலஞ் செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே (7.10.8)
திருவாறன்விளையிலே நுழையும்போதே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையும் என்று ஆழ்வார் சொல்கிறார். கஜேந்திராழ்வானுடைய துயரைக் தீர்த்தவன் அது போலவே நம்முடைய துயரையும் தீர்க்கத் திருவாறன்விளையிலே வந்து நிதான நின்றான்; நாம் அங்குச் சென்று வலஞ்செய்ய கொடிய பாவங்களெல்லாம் நம்முள்ளத்தில் பொருத்தமற்றவையாகிப் பறந்தொழியும் என்கிறார். “நின்சரணேயன்றி மற்றொன்றிலம்” என்று சொல்லி எம்பெருமானது திருவடிகளை முக்கியமானதாக ஏற்றி முதல் அடியிலேயே கூறப்பட்டது. ஆனையின் நெஞ்சிடர்தீர்த்த பிரான் என்பதில், ஆனைக்கு இடராவது, தன் உயிர் போகிறதே என்பதில்லை, வெகு சிரமப்பட்டுப் பறித்த பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியவில்லையே, அதனால் எம்பெருமானுக்கு என்ன தவறு விளைகிறதோ என்பதாம். அதாவது, பரமபக்தனான கஜேந்திராழ்வானைக் காப்பாற்றததனால் ரக்ஷகன் என்ற தகுதி இல்லை என்று உலகத்தார் சொல்லி விடுவார்களோ என்று யானை துன்பம் கொண்டது .
47இருந்தான் கண்டுகொண்டு என ஏழை நெஞ்சாளும், திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்தற மன்னி, பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.  8.7.2
ஆழ்வார், பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலி மாண்டு ஓழியும்படி எம்பெருமான், தன்னழகாலே செய்து என்னை ஆட்கொண்டு அருளினை பேருதவி, கஜேந்திரனுக்காக செய்த உதவியோடு கூட ஒப்பிட முடியாது என்கிறார். ஒரு முதலையின் வாய்ப்பட்ட களிறன்றோ அது, ஐந்து முதலைகளினான ஐம்பொறிகள் மூலம் அன்றோ தாம் பட்ட இடர் என்கிறார். கண்டது எல்லாவற்றிலும் சபலமாயிருக்குமே நெஞ்சு, அப்படிப்பட்ட நெஞ்சை இந்திரியங்கள் தம் வழியே இழுத்துக் கொண்டு இருக்கும். எம்பெருமான் அந்த நெஞ்சை அவர் பக்கம் திருப்பி, எல்லா கரணங்களும் பகவத் விஷயத்திலேயே லயிக்கும்படி செய்ததை, எனதேழை நெஞ்சாளுந் திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்தர மன்னி ‘ என்று சொல்லி அதையே எம்பெருமான் தனக்கு செய்த பேருதவி என்கிறார்.
48பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காணவந்து நின் பன்னிலாமுத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய், பவள நன்படர்க் கீழ்ச்சங்குறை பொருநல் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் கவள மாகளிற்றின் இடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே.
9.2.5
 “கவள மாகளிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே!” என்ற சொற்களால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே தமக்கு வந்து தோன்றி அருள வேண்டும் என்று பிரார்த்திப்பது விளங்கும். பவளம் போல் கனிவாய் சிவப்பக் காண வந்து, அதற்கு மேலே நிலா போன்ற பற்களால் ஒளியுடைய இதழ் கதிர் முறுவல் செய்ய வேணும்;  அதற்குமேலே திருக்கண் தாமரை விளங்கும்படி நின்றருளவும் வேணும் என்கிறார். தாமிரபரணியை கொண்ட திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்து அருளுபவனே, “நாராயணா! ஓ ! மணிவண்ணா நாகணையாய்! வாராய், என் ஆரிடரை நீக்காய்” என்று கூவி அழைத்த ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துன்பம் கெடும்படி மடுவின் கரையிலே பெரிய திருவடியை நடத்தினவனே ! என் வேண்டுகோளை நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார்.

மீண்டும் இன்னொரு தலைப்பில் சந்திப்போம், நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d