A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும், “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
அடுத்த ஐந்து பாடல்களில்,
ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில்,
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள்போகவிட்டு (38)என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்ய த்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. உபாயாந்தரங்களில் பற்று அறுத்து, அதாவது பேற்றுக்கு எம்பெருமான் ஸாதனமே ஒழிய, நாம் செய்யும் காரியங்கள் ஸாதனமல்ல என்று அஹங்காரத்தை விடுத்து, உன் திருவாசலில் கிடக்கும் பரமபாகவதர்கள் விஷயத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கிறது என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
இனிவரும் ஆறு பாடல்களில் (39-44), ‘மேம்பொருள்‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறார்.
அரங்கனே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாத, நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்கின்றாய் என்று ‘அடிமையில் குடிமை‘ (39) பாசுரத்தில் சொல்கிறார்.
எத்தனை பாவங்கள் செய்தவரும், மேம்பொருளில் சொன்ன ஞானத்தை உணர்ந்தவர்கள், பாவங்களின் கர்ம பலம் அனுபவிக்க வேண்டாம் என்று அடுத்த பாடலான ‘திருமறு மார்வ‘ (40) பாசுரத்தில் சொல்கிறார். எம்பெருமானுடைய அன்புக்கு இவ்வளவு பாத்திரமானவர்கள், ஒரு போதும் பாவங்கள் செய்ய மாட்டார்கள் என்று அறிய வேண்டும்.
சென்ற இரண்டு பாசுரங்களில், ‘இவர்களுக்கு பிறப்பினாலோ, ஒழுக்கத்தினாலோ வரும் குறைகள் இல்லை’ என்றார். ‘ ‘வானுளார் அறியலாக’ (41) என்ற பாசுரத்தில், ‘குறை இல்லாமை மாத்திரம் அன்று ; இவர்களுடன் தொடர்பு உள்ள ஸம்ஸாரிகளும், அந்த தொடர்பே காரணமாக பரிசுத்தி அடையும்படியான சிறப்பும் உடையவர்கள் இவர்கள்’ என்கிறார்.
பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தவர்களுக்கு, பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் தாழ்வு உடையவர்களானாலும் ‘மேம்பொருள்’ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்கள், ஸர்வேஸ்வரனைப் போல பூஜிக்கத் தக்கவர்கள் என்றும், ஞானம் கொடுப்பது, கொள்வது போன்றவைகளை செய்யவேண்டும் என்றும் ‘பழுதிலா ஒழுகலாற்று’ (42)ல் சொல்கிறார்.
இனி அடுத்த பாசுரம்
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி * தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்களேலும் * நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே * அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே (43)
அரங்கமா நகருளானே, ஒப்பற்ற ஆறு வேதாந்தங்களையும், நிகரற்ற நான்கு வேதங்களையும், நெஞ்சில் பதியும்படி, அத்யயனம் செய்து, உன் அடியார்களில் முதல்வராய், பிராஹ்மண வர்ணத்தவர்களாயினும் தேவரீருடைய அடியார்களை, (அவருடைய குலம் மற்றும் பிறப்புப் பார்த்து) கடிந்து கொள்வார்களாகில், அந்த நொடியிலேயே அந்த உயர்ந்த குலத்தவர்கள் அங்கேயே தாழ்ந்த வர்ணத்தவர்கள் (சண்டாளர்) ஆவார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கீழ் பாசுரத்தில் சொன்ன பிறப்பு ஒழுக்கம் முதலானவற்றால் வந்த பெருமைகளுக்கு மேலே ஞான பெருமையையும் உடைய ஜாதி அந்தணர்கள், பிறப்பாலும் ஒழுக்கத்தாலும் வந்த பெருமை இல்லாத ஞான பெருமை உடைய பாகவதர்களை, பகவத் பிரபாவத்தால் பிரசாதமாக, அவர்களுக்கு வந்த ஞான விஷயங்களை புத்தியில் கொள்ளாமல், கர்மத்தின் விளைவால் வந்த பிறப்பினால் வந்த தாழ்வை மட்டும் கருத்தில் கொண்டு, அவர்களை தாழ நினைத்தார்கள் ஆகில், அந்த நொடியே அவர்கள்தான் சண்டாளர் என்கிறார்.
இனி சற்று விரிவாக
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதத்திற்கு ஒப்பற்ற ஆறு அங்கங்கள் ; அமர என்றது, இவற்றை நன்றாகப் பாடங்களாக படித்தது மட்டும் அல்லாமல், அவற்றின் பொருளையும் நன்றாக அறிந்தது என்று சொல்கிறது. ஓரு வேதாங்கத்திலே ஒருவனுக்குக் குறைவற்ற அறிவு ஏற்பட்டு இருந்தால் உலகினர் அவனை ‘எல்லாம் அறிந்தவன்’ என்று கொண்டாடும்படி இருப்பது அங்கங்களுக்கு இருக்கும் ஒப்பற்ற தன்மை ஆகும்.
ஸ்ரீ ரங்கநாதரே ! ஸ்ரீக்ஷை என்னும் வேதாங்கத்திலே அக்ஷரங்களை உச்சரிக்கும் கிரமம் உரைக்கப்பட்டு உள்ளது; வியகரணம், நிருத்தம் என்னும் அங்கங்களால் பதங்களைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது. சந்தஸ் என்னும் சாஸ்திரத்தில் காயத்ரி முதலிய சந்தஸ்ஸுகள் சொல்லப்பட்டிருக்கும். ஜோதிஷ சாஸ்திரம் கர்மானுஷ்டான காலத்தை உணர்த்துகிறது. கல்ப சூத்திரங்களில் கர்மானுஷ்டான முறை உரைக்கபட்டு உள்ளது. (வைதிக சித்தாந்த்திற்கு) அணுகுணமாகச் செலுத்தப் பட்ட நியாய மீமாம்ஸா சாஸ்திரங்களிலும் புராண ஸ்ம்ருதிகளிலும் பொருள் தெளிவு ஏற்படும். கீழ்ச் சொன்ன ஸ்ரீக்ஷை முதலிய அங்கங்களுடன் கூடிய வேதங்கள், எம்பெருமானைத் தேடுகின்றன என்று ரங்கராஜ ஸ்தவத்தில் ஸ்ரீ பராசர பட்டர் கூறி உள்ளார். அது அங்கங்களோடு கூடிய வேதங்களின் பெருமைகளை உணர்த்தியது.
வேதங்களுக்கு ஓப்பற்ற தன்மையாவது, ஒரு மனிதனால் இயற்றப்பட்ட மற்ற நூல்களுக்கு ஏற்படக்கூடிய இருள், துயக்கு(மன மயக்கம்), மயக்கம், மறப்புகள் இல்லாமல் இருக்கை. அன்றிக்கே மந்திரம், விதி, அர்த்த வாதம் என்னும் வேதப்பகுதிகளுக்குத் தனித்தனியே உள்ள பெருமையைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்.
ஆறு அங்கங்களையும், அங்கியான நாலு வேதங்களையும் முழுமையாக ஆச்சார்யன் சொல்ல, அதைத் திருப்பிச் சொல்லுவது மூலமாக அத்யயனம் செய்தவர்கள் என்று கருத்து. இப்படி அத்யயனம் செய்தவர்களாகையால் எம்பெருமானை உள்ளபடி அறிந்தவர்கள் என்று கருத்து.
இப்படி எம்பெருமானை உள்ளபடி அறிந்ததற்கு அணுகுணமாக, அவனடியார்கள் கோஷ்டியில், முன்னால் நிற்பவர்கள் என்று அர்த்தம்.
அங்கங்களோடு கூடிய வேதங்களை அத்யயனம் செய்வது, தமர்களில் தலைவராக இருப்பது முதலான பெருமைகள் மற்ற வர்ணங்களாகிய க்ஷத்திரிய வைஸ்யர்களுக்கும் பொதுவானவை ஆகும். அப்பெருமைகளோடு நில்லாமல், பிராஹ்மணர்களாகவும் இருப்பவர்கள் என்றபடி. பிறப்பு ஒழுக்கம் அறிவு என்ற மூன்றிலும் சிறந்தவர்கள் என்றதாயிற்று.
இதுவரையில் சொன்ன ‘பெருமைகள் எவரிடமும் சேர்ந்து இருக்க முடியாது. ஒரு வேளை சேர்ந்து இருந்தாலும், இவர்கள் வைஷ்ணவர்களை நிந்தித்து இருந்தவர்களானால், இவை எல்லாம் பயனற்றுப் போய்விடும் என்று காட்டுவதற்காக சொல்லுகிறார். உண்மையில் இப்பெருமைகள் துரபிமானம் கொண்டவர்களுக்கு பாகவத அபசாரத்துக்கே காரணம் ஆகின்றன. அந்த பெருமை இல்லாதவர்கள் ஞானிகள் ஆயினும், அவர்கள் தலை மேலே கால் இட்டுத் திரிவது முதலான தகாத காரியங்களையே செய்விக்கின்றன. (அந்த பெருமை இல்லாதவர்கள் ஞானிகள், யமாதிகள் தலையிலே கால் இட்டு திரிவது போல உள்ள உடல் கொண்டவர்கள் என்று சொல்வார்களும் உண்டு)
‘மேம்பொருள்’ பாசுரத்தில் சொன்ன ஞானத்தை உடையவர்களாய், அதனாலேயே தமர்களில் தலைவராயிருக்கும் உன்னடியார்களை, என்று பொருள். இங்கு தமர்கள் என்றது நித்யசூரிகளை. ‘விண்ணுளாரிலும் சீரியரே‘ (திருவிருத்தம் 79) என்றும், ‘உண்ணாட்டுத் தேசன்றே‘ (பெரியதிருவந்தாதி 79) என்று நம்மாழ்வாரும் இத்தகையவர்களை நித்ய சூரிகளைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்றும், உள்நாடாகிற பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளுடைய தேஜஸ்ஸைக் காட்டிலும் மண்ணாடாகிற இவ்வுலகில் உள்ள ஞானிகளின் தேஜஸ் மிக்கதென்றும் காட்டினார்;
பகவத் சம்பந்தத்தால், இவர்களுக்குண்டான பெருமையை அகங்காரத்தாலே மறந்து, அவர்களுடைய பிறப்பில் தாழ்வையே நினைத்துத், தங்களைக் காட்டிலும் அவர்களைத் தாழ்வாக நினைத்தல், வார்த்தை சொல்லுதல், நடத்துதல் ஆகியவற்றை செய்வாராகில் என்பது பொருள். பழிப்பாவது குற்றம் என்பதாகும். அதாவது பரம பாகவதர்களான இவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் பகவானுக்குச் செய்யும் அபச்சாரங்களில் மிகக் கொடியதாகும். அர்ச்சாவதாரத்தில் விக்ரஹத்தின் மூலப்பொருளைப் பற்றி சிந்திப்பதும், வைஷ்ணவர்களுடைய பிறப்பைப் பற்றி சிந்திப்பதும், பெற்ற தாயை ஆராய்வதை ஒக்கும் என்று அறிவாளிகள் சொல்கின்றனர். எனவே வைஷ்ணவரின் பிறப்பைப் பார்த்து தாழ்த்த நினைப்பது என்பது அச்சாவதாரத்தை தாழ்த்த நினைப்பதோடு ஒக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அவர்களை கொண்டாடுவதே தக்கது. அகங்காரமாகிற அசுர குணத்தாலே மயங்கியபோது தான் அவர்களைத் தாழ்த்த நினைப்பது என்கிறார்.
இப்படி பழித்தார்களாகில் நேரும் கெடுகளை சொல்கிறார். மற்றோரு காலத்திலோ, மற்றொரு தேசத்திலோ மற்றொரு தேகம் எடுத்த பின்போ அல்ல. அந்தக் கணத்திலே (நொடியிலேயே) அவ்விடத்திலே அந்த தேகத்துடன் இருக்கும்போதே பழித்ததின் பலனை அனுபவிக்கப் பெறுவர் என்கிறார். ‘புனிதமன்றே‘ (திருமாலை 41) என்று அவர்களோடுள்ள சம்பந்தத்தால் நன்மை ஏற்படுவதில் தாமதம் இல்லாதது போலே, அவர்களைப் பழிப்பதால் வரும் தீமையும் தாமதம் இல்லாது வரும் என்கிறார்.
அந்த தேகத்தோடு அவர்கள் சண்டாளர்கள் ஆவார் என்கிறார். த்ரிஶங்குவிற்கு வசிஷ்டபுத்திரர்களின் சாபத்தால் கழுத்தில் கட்டின வீர சங்கலியே வார் ஆனது போலே, இப்படி பழித்தவர்களும் மார்பில் இட்ட பூணூலே வெறும் வாராய் மாறி விடும் என்கிறார்.
தாம் புலையர் என்று சொன்னது, பிறப்பு முதலானவற்றால் எத்தனை பெரியவர்களாய் இருந்த போதிலும் அப்பெருமைகளே, அகங்காரத்திற்கு உதவியாகி பாகவத அபச்சாரத்தில் கொண்டுவிட்டு, அவர்களுக்கு பெரும் தீங்கை விளைத்து விடும். கீழ் ஜாதியில் பிறந்தவனுக்கு (ஜாதி சண்டாளனுக்கு) ஒரு காலத்தில் வைஷ்ணவனாவதற்கு தகுதி உண்டு; ஆனால், இவன் பிறப்பு முதலியவற்றால் உயர இருந்து, படு குழியில் விழுந்தவனாகையாலும், பாகவத அபசாரம் என்ற பெரும் பாவத்தை செய்தவனாகையாலும், பிறப்பில் தாழ்ந்த ஜாதியில் (சண்டாளனாக) பிறந்தவனைக் காட்டிலும் தாழ்ந்து கர்மத்தினால் தாழ்ந்த ஜாதியை விட தாழ்ந்தவனாகி (கர்ம சண்டாளனாகி) விடுவான்.
சுவாமி இராமனுஜாரின் சிஷ்யரான கூரத்தாழ்வான் மிகப் பெரிய செல்வந்தர்; மிக உயர்ந்த குலத்தில் பிறந்தவர்; அறிவு விஷயத்தில் உன்னதமானவர்; இப்படி எல்லாவிதத்திலும் சிறந்தவர். அப்படிப்பட்ட கூரத்தாழ்வானே, தன்னுடைய வைகுந்த ஸ்தவத்தில், தனக்கு இப்படிப்பட்ட உயர்ந்தவற்றால் சிறிதும் அகம்பாவம் வரக்கூடாது என்றும் அதனால் எங்காவது பாகவத அபசாரம் ஏற்பட்டுவிடுமோ என்றும் பயந்து, ‘கைங்கர்யத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவர்களும், எம்பெருமானையே போகமாகக் கொண்டு இருப்பவர்களும், ஒவ்வொரு நொடி தோறும் புதிது புதிதான ரசானுபவங்களாலே நெஞ்சு உருகுபவர்களும், எப்போதும் ஒருவருக்கொருவர் அடிமையாய் இருப்பதை ஆசைபடுபவர்களும், எனக்கு பூஜிக்கத் தக்க, எம்பெருமானுடன் கூட இருக்கும் நித்ய சூரிகளுடன், கூடப் பெறுவேனாக என்று அருளிச் செய்கிறார்.
பிள்ளைப்பிள்ளையாழ்வான் என்ற சீடர் கூரத்தாழ்வானிடம் சேர்ந்த காலத்தில், இவருடைய பிறப்பு முதலானவற்றில் தமக்குள்ள பெருமையைப் பார்த்து பாகவத அபச்சாரப்படுவதைக் கண்ட கூரத்தாழ்வான், இவரைப் படுகுழியில் வீழ்த்திவிடக் கூடிய பாகவத அபச்சாரத்தில் ஈடுபடாமல் வேலியிட்டு வைக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, ஒரு புண்ணிய தினத்தில் ‘நீர் எனக்கு ஒரு தானம் செய்ய வேண்டும்’ என்று கேட்க, ‘எல்லாம் தேவரீருடையதாக இருக்க அடியேன் எதை தானம் செய்ய வேண்டும்’ என்று பதில் அளிக்க, கூரத்தாழ்வான் ‘முக்கரணங்களாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வாழக் கடவேன், என்று நம் கையில் நீர் வார்த்துத் தர வேண்டும்’ என்று அருள, இவரும் அப்படியே செய்து கொடுத்தார்.
பிறகு ஒரு நாள் பழக்கத்தாலே ஒரு பாகவதருடைய தோஷத்தைப் பிள்ளைபிள்ளை நினைத்து விட்டார். உடனே நடுங்கி, முக்காடு இட்டு, தம் திருமாளிகையிலே இருந்து விட்டார். இவர் வராததைக் கண்டு ஆழ்வான் இவன் இருக்கும் இடம் எழுந்தருளி, ‘ஏன் இப்படி இருக்கிறீர்கள்’ என்று வினவ, தாம் மனத்தாலே பாகவத அபசாரப் பட்டதை சொன்னார். ‘மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் பாகவத அபசாரம் வராதபடி இந்த உடம்போடு வாழ்வது அரிதாக உள்ளதே’ என்று கூரத்தாழ்வான் திருவடிகளை கட்டிக் கொண்டு அழுதார். ‘இத்தனை அனுதாபம் இவருக்கு உண்டாகப் பெற்றதே’ என்று உகந்த ஆழ்வான் ‘மனத்தாலே உண்டான அபசாரத்திற்கு அனுதாபம் பிறந்து விட்டதால், நேரே எம்பெருமான் மன்னித்து விடுவார். மேலும் தண்டனை ஏற்பட்டுவிடும் என்று பயத்ததாலே நீர் உடம்பைக் கொண்டு பாகவத அபசாரம் செய்ய மாட்டீர். வாய் ஒன்றை மாத்திரம் அதி ஜாக்கிரத்தையாகப் பாதுகாத்துக் கொண்டு பாகவத விஷயத்தில் அபவாதம் சொல்லி திரியாமல் இரும்’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதீகம் இங்கு பொருத்தமாக இருக்கும்.
வராக புராணத்தில் எம்பெருமான், ‘பூதேவி! சண்டாளனாக இருந்த போதிலும், என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள் நிந்திக்கிறார்களோ, அவர்களைக் கோடிக்கணக்கான பத்ம காலங்களானாலும் ஒரு போதும் பொறுக்கமாட்டேன் என்று அருளி செய்தார். இந்த பாடலில் ஆழ்வார் இதனைக் குறிப்பிட்டு, ‘பெரியபெருமாளே, இப்படி அருளிச்செய்த தேவரீருக்கு அன்றோ பாகவத அபச்சாரத்தின் கொடுமை தெரியும்’ என்கிறார்.
கர்ம யோகம், முதலான மற்ற சாதனங்களைப் பற்றி எம்பெருமானைப் பெற நினைப்பவர்களுக்கு அவற்றை அனுஷ்டிக்கும் போது ஏற்படும் குறைகளை, பிராயசித்தங்களின் மூலமும் அவற்றையே தொடர்ந்து அனுஷ்டிப்பதன் மூலமும் தவிர்த்துக் கொள்ளலாம். பகவத் சம்பந்தத்தை கொண்டு மோக்ஷ பலனைப் பெற வேண்டிய பக்தனுக்கு, பாகவத அபச்சாரமானது பகவத் சம்பந்தத்தையே அறுத்து விடுமாயாகையாலே இவன் உஜ்ஜீவிக்க வழியே இல்லாமல் போய் விடும்.
எம்பெருமானைப் பெறுவதற்கு பாகவதர்களுடைய சம்பந்தமே போதுமானதாக இருப்பது போல், அவனை இழப்பதற்கும் அவர்கள் விஷயத்தில் அபசாரமே போதுமானது. ஆகையால் மோக்ஷத்தை வேண்டுபவன், மற்ற தெய்வங்களோடு தொடர்பும், பாகவதர்கள் விஷயத்தில் அபசாரமே ஏற்படாதபடி அதி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். எம்பெருமான் விஷயத்தில் ஒரு கைங்கர்யம் /ஆனுகூல்யம் செய்யாதவனாய் இருந்தாலும் இவ்விரண்டு குற்றங்களும் இல்லாதவனுக்கு எம்பெருமான் எளியவன் ஆவான் என்று இந்த பாசுரத்தில் இருந்து விளங்கும்.
இனி அடுத்த பாசுரத்தில் பார்க்கலாம், நன்றி.
excellent as usual Sir.
PRANAMS !
Dear Swami, thank you very much for your kind words, Regards