A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும், “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
ஒரு நல்ல குணமும் இல்லை என்று, 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும், அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்றும் (போதெல்லாம் போது கொண்டு 26), இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்றும் (குரங்குகள் மலையை நூக்க 27), உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்றும், ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஆழ்வார் அருளியதை பார்த்தோம்.
அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான கெட்ட குணங்களும் உண்டு என்பதை, தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், (மனத்திலோர் தூய்மையில்லை 30), தன்னால் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை என்று இந்த பிறவி வீணானதை நினைத்து (தவத்துளார் தம்மில் அல்லேன் 31) வருந்துவதும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக அவன் முன் வந்து நின்றது (ஆர்த்து வண்டு அலம்பும் சோலை 32) தன்னுடைய மூடத்தனம் என்றும், தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாகவும் (மெய் எல்லாம் போக விட்டு 33), எல்லோர் நெஞ்சத்திலும் இருந்து எல்லாவற்றையும் அறியும் அவன் முன், அடிமை செய்பவன் போல தான் போட்ட கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக (உள்ளத்தே உறையும் மாலை 34) நினைத்ததையும் பார்த்தோம்.
ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில், முதலில், ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளியதையும், இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் (மழைக்கன்று வரை(36) என்பதையும் பார்த்தோம். இருந்தும், ஆழ்வாரின் மனம், ‘தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். அவனின் குளிர்ந்த பார்வை தானே நமக்கு வேண்டியது , ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று அவன் சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ (37) சொல்கிறார்.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள்போகவிட்டு (38)என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்யத்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. உபாயாந்தரங்களில் பற்று அறுத்து, அதாவது பேற்றுக்கு எம்பெருமான் ஸாதனமே ஒழிய, நாம் செய்யும் காரியங்கள் ஸாதனமல்ல என்ற அஹங்காரத்தை விடுத்து, உன் திருவாசலில் கிடக்கும் பரமபாகவதர்கள் விஷயத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கிறது என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
இனிவரும் ஆறு பாடல்களில் (39-44), ‘மேம்பொருள்‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறார்.
அரங்கனே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாத, நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்கின்றாய் என்று ‘அடிமையில் குடிமை‘ (39) பாசுரத்தில் சொல்கிறார்.
எத்தனை பாவங்கள் செய்தவரும், மேம்பொருளில் சொன்ன ஞானத்தை உணர்ந்தவர்கள், பாவங்களின் கர்ம பலம் அனுபவிக்க வேண்டாம் என்று அடுத்த பாடலான ‘திருமறு மார்வ‘ (40) பாசுரத்தில் சொல்கிறார். எம்பெருமானுடைய அன்புக்கு இவ்வளவு பாத்திரமானவர்கள், ஒரு போதும் பாவங்கள் செய்ய மாட்டார்கள் என்று அறிய வேண்டும்.
இனி அடுத்த பாசுரம்,
வானுளார் அறியலாகா வானவா என்பராகில் * தேன் உலாந் துளப மாலைச் சென்னியாய் என்பராகில் * ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள் ஏலும் * போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே.
கீழ்மையான காரியங்களை செய்பவர்கள் ஆனாலும், பிறர்களைக் கொண்டு கீழ்மையான காரியங்களை செய்பவர்கள் ஆனாலும், ‘மேல் உலகத்தில் உள்ள பிரமன் முதலியவர்களால் அறிய முடியாத பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவனே’, என்று சொல்வார்களாகில், தேன் ஒழுகும்படியான திருதுழாய் மாலையை தன் திருமுடியில் உடையவனே என்று சொல்வார்களாகில், (அவர்கள்) அமுது செய்து மிகுந்த பிரசாதத்தை (தயை செய்து) தருவார்களாகில், அப்போதே (அது) பரம பாவனம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சென்ற இரண்டு பாசுரங்களில், ‘இவர்களுக்கு பிறப்பினாலோ, ஒழுக்கத்தினாலோ வரும் குறைகள் இல்லை’ என்றார். இந்த பாசுரத்தில், ‘குறை இல்லாமை மாத்திரம் அன்று ; இவர்களுடன் தொடர்பு உள்ள ஸம்ஸாரிகளும், அந்த தொடர்பே காரணமாக பரிசுத்தி அடையும்படியான சிறப்பும் உடையவர்கள் இவர்கள்’ என்கிறார்.
தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய: ।
திவீவ சக்ஷுராததம் ॥
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே ।
விஷ்ணோர்யத் பரமம் பதம் ॥ இது பிரம்மாவே பாடுவதாக அமைந்த பிரசித்தி பெற்ற ஸ்லோகம். இதன் எளிய அர்த்தம். அந்த மகாவிஷ்ணுவின் உன்னதமான, மேலான இருப்பிடத்தை (பரமபதம்/வைகுண்டம்) எப்போதும் ஞானிகளும், நித்தியர்களும் முக்தர்களும் தங்களின் ஞானக் கண்ணால் தரிசித்துக் கொண்டே இருக்கிறார்கள். அது எப்படி இருக்கிறது என்றால், ஆகாயத்தில் தடையின்றி எங்கும் பரந்து விரிந்து பிரகாசிக்கும் சூரியக் கண்ணைப் போல, அந்தப் பரம்பொருள் என்றும் ஒளிர்கிறது. அந்தப் பரம்பொருளைப் போற்றும் வேத விற்பன்னர்களும் தங்களின் தியானத்தாலும் துதியினாலும் அந்த உன்னத நிலையை மேலும் சுடர்விடச் செய்கிறார்கள். அதுவே எங்கும் நிறைந்திருக்கும் விஷ்ணுவின் உன்னதமான பரமபத நிலை ஆகும். மிக உயர்ந்த இடம் பரமபதம்.
பிரமன் முதலான தேவர்களால் அறிய முடியாத ‘பரமபதத்தில் என்றும் வாழ்கின்றவனே, பரண் மேல் இருப்பவர்கள், சற்று உயரத்தில் இருப்பதால் மாத்திரம், மிக உயரத்தில் இருக்கும் நக்ஷத்திர மண்டலத்தை அறிய முடியாது. அது போலவே சத்ய லோகம் போன்ற உயர்ந்த இடத்தில் உள்ள இவர்களாலும் பரமபத நாதனை அறிய முடியாது என்பது கருத்து. மனிதர்களைக் காட்டிலும் இந்த தேவர்களுக்கு ஞானம், சக்தி முதலியவற்றில் சிறிது சிறப்பு என்றாலும் அதைக் கொண்டு இவர்கள் பரமபதம் போக முடியாது என்று பொருள்.
அறியலாகா என்பதில் உள்ள ஆகா என்பதற்கு முடியாத என்றும், கூடாத என்றும் பொருள் கொள்ளலாம். அக்னிஹோத்திரம் செய்யும் இடங்களில் சண்டாளன் செல்லக்கூடாது என்பது போல இவர்களும் பரமபதத்திற்கு உள் புகக்கூடாது என்கிறார். ஆழ்வார் போன்ற ஞானிகள் பரமபதநாதனை அறிவதாக காண்பது, அவர்கள் தங்கள் முயற்சியால் காண்பது அல்ல என்றும், அவன் அருளால் அவனை கண்டவர்கள் என்றும் கொள்ள வேண்டும். ஸ்தோத்திர ரத்தினம் 22 ல் சொல்லியது ஒரு பிரமாணம்.
ந தர்ம நிஷ்டோஸ்மி, ந சாத்மேவதீ, * ந பக்தி மாந், த்வச் சரணார விந்தே * அகிஞ்சநோ அநந்ய கதி: ஶரண்ய * த்வத்பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே
அதே போல பகவத் கீதை (16.14)ல் சொல்லியது இன்னொரு பிரமாணம்.
ஈச்வரோஹமஹம் போகீ ஸித்தோஹம் பலவாந் ஸுகீ, அதாவது ‘இன்று இது என்னால் அடையப்பட்டது; இன்னும் இந்த விருப்பங்களை நான் பெறுவேன்; இப்போது எனக்கு இவ்வளவு பணமிருக்கிறது; மேலும் பல செல்வம் எனக்கு வந்து சேரும். என்னுடைய அப்பகைவன் கொல்லப்பட்டான்; மற்ற என் பகைவர்களையெல்லாம் நான் கொன்றுவிடுவேன்; எல்லோரையும் ஆளுபவன் நான்; நானே சித்தி பெற்றவன், வலிமையுடையவன் இன்பத்தை அனுபவிப்பவனும் நானே என்கிறபடி, தானே ஈஸ்வரன்’ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பிரமன், சிவன் போன்றவர்கள் அடைய முடியாததாக இருப்பது மட்டுமின்றி அறிய முடியாததாகவும் பரமபதம் இருக்கிறது என்கிறார். பிரமன் சிவன் போன்ற தேவர்கள் அவர்கள் முயற்சியால் அவனை அடைய நினைக்கும் போது அது நடவாமல் போகிறது என்கிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி (10.9) ல் வைகுந்தத்தை அறிந்து (பரமபதம்), அதைப் பற்றி பாடி உள்ளார். சுவாமி ராமானுஜர் வைகுந்த கத்யம் என்று பாடிஉள்ளார். கூரதாழ்வான் வைகுந்த ஸ்தவம் என்று பாடி உள்ளார். அவர்களால் எப்படி அறிய முடிந்தது என்பதை கீழ்கண்டவாறு சொல்கிறார்.
கப்பலைக் கொண்டு கடலை கடப்பவர்கள் போல, ஆழ்வார்கள் விஷ்ணு என்ற கப்பலைக் கொண்டு ஸம்ஸாரம் என்ற கடலை கடக்கிறார்கள் என்றும், தங்கள் முயற்சியால் நீந்தி கடலை கடக்க நினைப்பவர்கள் தேவர்கள். அதனால் அது முடிவதில்லை. இது நீந்த சக்தி உள்ளவனுக்கும், சக்தி இல்லாதவனுக்கும் உள்ள வேறுபாடு அல்ல. தன் சக்தியால் கடலை நீந்தி கடக்க முடியம் என்று நினைப்பவன், கடலின் நீள, அகல, ஆழத்தை அறியாததால், அதனை கடக்க முடியாது போய்விடுகிறது ; ஆனால் சக்தி இல்லாதவன் தன்னால் முடியாது என்று உணர்ந்து அதற்கான உபாயத்தை தேடுகிறான். அவன் அருள் இல்லாமல் அவனை யாராலும் அவர்களுடைய முயற்சியால் காண முடியாது என்பதை அறிந்து அவனே உபாயம் என்று உணர்கிறான்.
நாச்சியார் திருமொழி (5.3)ல் ஆண்டாளும், ‘வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்‘, அதாவது, ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல், அந்த சம்சாரம் என்ற கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டு இருக்கின்றேன் என்று சொன்னதை இங்கே நினைவில் கொள்ளலாம். .
பரத முனியின் பிரபத்தி (சரணாகதி) லக்ஷண வாக்கியமாவது (வரையறுக்கும் வாக்கியம்), ‘தன்னுடைய இஷ்டம் வேறு ஒன்றினாலும் நிறைவேறாது என்று உறுதியான போது, மஹா விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு, அவன் ஒருவனையே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது பிரபத்தி (சரணாகதி) ஆகும். ஆக எம்பெருமான் ஒருவனையே உபாயமாக பற்றிக் கொண்ட சரணாகதி அதிகாரிகள், ஆழ்வார்கள் போன்ற ஞானிகள்.
இதே திருமாலை (22)ல், ஆழ்வார், ‘ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன், மாசற்றார் மனத்து ளானை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, தன்னிடம் அவனை அடைவதற்கு அவனைத் தவிர வேறு உபாயம் இருக்கிறது என்ற குற்றம் உள்ளவர்கள்(ஆசு) அவனை அறிய முடியாது; அந்த குற்றம் இல்லாதவர்கள் அவனை அடைந்தபின் அவனை மட்டுமே வேண்டுவது என்று இருப்பவர்கள் மட்டுமே அவனை முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.
ஸம்ஸாரத்தின் வாசனை முற்றும் இல்லாமல், சுத்த சத்வமயமான, உயர்ந்த, இந்த உலகங்களுக்கு அப்பாற்பட்ட தோற்றம்/பரிமாணம் உடையவனாய் இருக்கிற அவனுடைய பெருமைகளைப் பார்த்தாலும் அவனே உபாயம் என்று விளங்கும். அதே போல சத்வ, ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களினால் சூழப்பட்டு இருக்கும் சேதனனின் சிறுமையைப் பார்த்ததாலும் இவனே உபாயம் என்று விளங்கும். தன்னைத் தானே காத்துக் கொள்ளும் தகுதி இல்லாதவனான, இவனுடைய பரதந்திர ஸ்வரூபத்தை பார்த்தாலும் அவனே உபாயம் என்று விளங்கும்.
மந பூர்வோ வாகுத்தர என்ற தைத்திரிய ஸம்ஹிதை வாக்கியத்தின் படி, முதலில் மனது அதற்கு பிறகுதான் வார்த்தை என்பதால், மனத்தால் நினைத்ததைத் தான் வாய் பேச முடியும். இதன்படி நெஞ்சினால் அவனை உபாயமாக நினைப்பவர்களுக்கு மட்டுமே அந்த நினைவு வாய் வார்த்தைகளால் வெளியே புறப்பட்டு ‘வானுளார் அறியலாகா வானவா‘ என்று வருகிறது என்பது இங்கு கருத்து. ‘நான் குற்றங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறேன்; என்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு உபாயமும் இல்லாதவனாக இருக்கிறேன்; உன்னைத் தவிர வேறு கதி அற்றவனாக இருக்கிறேன்; நீயே எனக்கு உபாயமாக ஆவாய் ஆக’ என்று பிரார்த்திக்கும் புத்தியே சரணாகதி எனப்படுகிறது என்ற வேத வாக்கியத்தின் படி அவனையே உபாயமாகும்படி பிரார்த்திப்பவர்கள் இவர்கள் என்று உரையாயசிரியர் கூறுகிறார். ‘ஆகில் ‘ என்று சொல்வதால், தங்கள் திறமையால் தங்களைக் காத்துக்கொள்வது என்பது அரிது என்பது விளங்கும். ஆக இதுவரை எம்பெருமானையே உபாயமாகக் கொண்ட அதிகாரிகள் இவர்கள்.
தேன் நிறைந்த திருதுழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடையவனே ! பூவில் சிறந்த துளபத்தை மாலையாக அணிந்தவன் என்பதால் இவனே தேவர்களில் சிறந்தவன் என்று உணர்த்தப்படுகிறது. ‘நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறுதுறக்கம்’ என்ற சங்கத்தமிழ் (பரிபாடல் 15) பாடலும் இங்கே மேற்கோளாக கூறப்பட்டது. தேனுலாம் துளபமாலை என்றதால் இவன் மிகவும் இனியவனாக இருப்பவன் என்று காட்டப்படுகிறது. மேற்சொன்ன இரண்டாலும் இவனே அடையத்தக்கவன் என்று உணர்த்தப்படுகிறது.
பாடலின் முதல் வாக்கியத்தில் உள்ள என்பராகில், உபாய பிரார்த்தனை என்றால் இந்த இரண்டாம் வரியில் உள்ள என்பராகில், ப்ராப்ய பிரார்த்தனை (அடைய வேண்டியதற்கான பிரார்த்தனை. ஆகில் என்பது எம்பெருமானையே மேலான பயனாக நினைப்பது அரிது என்று காட்டுகிறார். பஹூநாம் ஜந்மநாம் அந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே | * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: (கீதை 7.19) – பல பிறவிகளின் முடிவில் தனக்கு எல்லாம் கண்ணன் என்கிற ஞானம் பிறந்து ஞானி என்னை அடைகிறான்; இப்படிப்பட்ட மஹாத்மா கிடைப்பது மிக அரிது என்று, தன்னையே உபாயமாகவும் அடையவேண்டியதாகவும் என்னும் அதிகாரிகளின் அருமையை கண்ணனே சொல்கிறான்.
ஆக, வானுளார் அறியலாகா வானவா என்பராகில் * தேன் உலாந் துளப மாலைச் சென்னியாய் என்பராகில் என்பதை சுருக்கமாக ஈஸ்வரனே உபாயம் என்பர் ஆகில், ஈஸ்வரனே உபேயம் என்பர் ஆகில் சொல்லலாம்.
திருவாய்மொழி (5.7.3)ல் அவனே உபாயம் என்று குறிப்பிடும் போது, ‘கருள புட்கொடி சக்க ரப்படை வான நாட! எங் கார்முகில் வண்ணா‘, வானநாட என்று சொல்கிறார். திருவாய்மொழி (9.5.10)ல் ஆழ்வார் ‘நாமும் நம் வானநாடனோடு ஓன்றினோம்‘ என்று சொல்லி, எம்பெருமானே(வானநாடனோடு) பிராப்யம் என்று சொல்கிறார்.
வயிறு வளர்ப்பதற்காக ஜீவ ஹிம்சை செய்யும் கொடியவர்கள்; நடு இரவில் மாமிசம் வேண்டும் என்று வருபவர்களுக்காக ஆடு மாடு போன்ற பிராணிகளை உயிர் போகாமல் கட்டி வைத்து பகுதி பகுதியாக அவற்றின் மாமிசத்தை அறுத்துக் கொடுக்கும் அளவுக்கு கொடியவர்கள்; இப்படிபட்டவர்கள் ஒரு பக்கம். சிபிச் சக்ரவர்த்தி போன்றவர்கள் மற்றவர்களுக்காக தங்கள் மாமிசத்தை அறுத்து கொடுப்பவர்கள் இன்னொரு பக்கம்.
தாங்கள் இத்தகைய செயல்களைச் செய்து, பாவிகள் ஆவதோடு இல்லாமல், பிறரைக் கொண்டு இச்செயல்களை செய்ய தூண்டி அவர்களையும் பாவிகள் ஆக்குகிறார்கள்; இங்கு ஊனம் என்பது தாழ்வான செயல்களைக் குறிக்கிறது. அவனே பிராப்ய, பிராபகங்கள் என்று அறிவு பிறந்தபின் இத்தகைய செயல்களைச் செய்ய மாட்டார்களாகையால், அந்த அறிவு பிறப்பதற்கு முன்பு இப்படிப்பட்ட செயல்களை செய்தார்கள் என்று கொள்ள வேண்டும்.
அறிவு பிறப்பதற்கு முன் இத்தகைய செயல்களை செய்து இருந்தாலும், அறிவு பிறந்தபின் இவை நேராது. பிறர் துன்புற்றால் அதனைக் கண்டு தான் மயங்கி விழுவார்கள். ஒரு பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையின் குரலைக் கேட்ட கூரத்தாழ்வான், ‘ஐயோ இந்த நிலையில் தன்னை யார் காப்பாற்றுவார்’ என்று நினைத்து கூப்பிடுகிறது என்று சொல்லி மயங்கி விழுந்தார் என்பது ஐதீகம். இத்தகைய அறிவு உடையார், ‘தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய்‘ (திருமாலை 8) என்ற இடத்தைப் போல், ஜீவஹிம்சை செய்தாலும், ஸர்வேஸ்வரன் ஜீவர்களுக்கு செய்யும் ஹிம்சையை போலவே, நன்மை பயப்பதாக இருக்கும்.
போனகம் என்றால் அமுது. எம்பெருமானைக் காட்டிலும் இத்தகைய ஞானிகள் முக்கியமானவர்களாக இருக்கும்போது, அவன் விஷயத்தில் அமுது செய்த என்பது போல, இவர்கள் விஷயத்திலும் ‘போனகம் செய்த’ என்று சொல்லும் அளவில் திருப்தி அடைகிறார்.
த்வதீ₃யபு₄க் தோஜ்ஜி₂தஸேஷபோ ₄ஜிநா * த்வயா நிஸ்ரு’ஷ்டாத்மப₄ரேண யத்₃யதா₂ *
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி ₃ தத் * ததா₂ಽநுஜாநந்தமுதா₃ரவீக்ஷைண: (ஸ்தோத்ர ரத்தினம் 42) ல் சொல்லியபடி உன்னுடைய, உண்டு மிகுந்த ஸேஷத்தை, உண்பவரும், உன்னாலே வைக்கப்பட்ட உன்னுடைய (உபய விபூதி நிர்வாகரூபமான) பாரத்தை உடையவரும், (எல்லோருக்கும்) இனியவருமான விஷ்வக்ஸேனராலே எந்த காரியம் எம்மாதிரி விண்ணப்பம் செய்யப்பட்டதோ, அருள் நிரம்பிய கடாக்ஷங்களாலே அந்த காரியத்தை அந்த மாதிரியே (செய்வதென்று) நியமித்து அருளுமவனான உன்னை என்றும், ‘கலத்ததுண்டு‘ (திருப்பல்லாண்டு 9) என்றும் சொல்லுகிறபடியே அமுது செய்து கழித்த இலையில் இருக்கும் பிரசாதம்.
மற்ற பயன்களை விரும்புவோருக்கும் கிடைக்கக்கூடிய பகவத் பிரசாதம் போலே பொதுவாக இருப்பதல்லவே இது; அப்படி கிடைத்தற்கரிய இப்பேறு கிடைத்தாகில் என்பது ‘தருவரேல்’ என்கிறார்.
ஒருநாள் பட்டர் திருவிருத்தத்திற்கு விளக்கம் அருளிச் செய்து வருகையில் ‘மைப்படி மேனி’ (திருவிருத்தம் 94) என்னும் பதத்திற்கு ‘இன்னபடி’ என்று அறியமுடியாதபடி கண்டார் கண்களை இருளச் செய்யும் திருமேனி என்று அர்த்தம் என்று அருளிச்செய்ய, அதைக் கேட்டு கொண்டு இருந்த சிஷ்யரான நஞ்ஜீயர், ‘இன்னார் என்றறியேன்’ (பெரிய திருமொழி 10.10.9) என்ற பாசுரத்தை இவ்வர்த்தத்திற்கு பிரமாணமாக எடுத்துக் கொடுக்க, அதைக் கேட்டு உகந்த பட்டர், நஞ்ஜீயருக்குத் தாம் போனகம் செய்த சேடத்தை பிரசாதமாக இட்டார் என்பது ஐதீகம்.
மற்றொரு தேகம் எடுத்த பின்போ, மற்றொரு காலத்திலோ, மற்றொரு தேசத்திலோ, பரிசுத்தப்படுத்தும் மற்ற பாவனப் பொருள்களைப் போல அல்லாமல், தொட்டவுடன் இரும்பைப் பொன்னாக்கும் ஸ்பர்ஸவேதி குளிகையைப் போல இவர்களுடைய போனகம் செய்த சேடம் அந்த நொடியே அதனை உண்டவர்களைப் பரிசுத்தப்படுத்தும். நாராயணன் ஒருவனிடத்திலேயே பக்தியை உடையவனுடைய எந்தெந்தக் காரியங்கள் உள்ளனவோ, அவை எல்லாம் பகவத் ஆராதனம் ஆகும். எந்தெந்த வார்த்தைகள் உண்டோ அவை எல்லாம் ஜபம் ஆகும். அவனுடைய பார்வை எல்லாம் விஷ்ணு தியானம் ஆகும். அவனுடைய திருவடி சம்பந்தபட்ட ஜாலம் ஒப்பற்ற தீர்த்தம் ஆகும். அவன் உண்டு மிகுந்த சேஷம் மிகப் பரிசுத்தமானது; அவனுடைய ஒரு சொல்லும் மிகச் சிறந்த மந்திரம் ஆகும். அவனால் தொடப்பட்டவை எல்லாம் பரிசுத்தமானவை என்று சாஸ்திரங்களும் (விஹகே-ஸம்) சொல்கின்றன. எம்பெருமானுடைய பிரசாதம் பாவனம் என்றால் அவனுடைய அடியார்களுடைய பிரசாதம் ஸூபாவனம் (மிகவும் பரிசுத்தப்படுத்துவது) ஆகும்.
பகவத் கீதையில் கண்ணன் தாமஸ உணவு வகைகள் இவை என்றும் அவை தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லும்போது, ‘போனகம் செய்த சேடத்தை’ சொல்லி உள்ளார். ஸ்வாமி ராமானுஜர் இதனை விளக்கும் போது, குரு முதலானவர்களைத் தவிர மற்றவர்களின் ‘போனகம் செய்த சேடத்தை’ தவிர்க்க வேண்டும் என்றார். இதனை விளக்கும் ஸ்வாமி தேசிகன், குரு முதலானவர்கள் என்பதை விவரித்து, ‘ஆச்சார்யன், மூத்த அண்ணன், கணவன், பரம பாகவத்தோத்தமர்கள்’ என்று சொல்லி உள்ளார்.
ஆக, எம்பெருமான் பிரசாதம் புனிதம் அன்றோ, மேம்பொருள் பாடலின் அர்த்தத்தை உணர்ந்தவர் ‘போனகம் செய்த சேடம்’ புனிதம் அன்றே.
இத்துடன் இந்த பதிவினை நிறுத்தி, இன்னொரு பாடலின் சந்திப்போம், நன்றி.