திருமாலை-40 திருமறு மார்வ

Please click here to view the English Version, thanks

இதுவரை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்று, 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும், அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்றும் (போதெல்லாம் போது கொண்டு  26), இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்றும் (குரங்குகள் மலையை நூக்க 27), உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்றும், ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஆழ்வார் அருளியதை பார்த்தோம்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான கெட்ட குணங்களும் உண்டு என்பதை, தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், (மனத்திலோர் தூய்மையில்லை 30), தன்னால் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை என்று இந்த பிறவி வீணானதை நினைத்து (தவத்துளார் தம்மில் அல்லேன் 31) வருந்துவதும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக அவன் முன் வந்து நின்றது (ஆர்த்து வண்டு அலம்பும் சோலை 32) தன்னுடைய மூடத்தனம் என்றும், தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாகவும் (மெய் எல்லாம் போக விட்டு 33), எல்லோர் நெஞ்சத்திலும் இருந்து எல்லாவற்றையும் அறியும் அவன் முன், அடிமை செய்பவன் போல தான் போட்ட கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக (உள்ளத்தே உறையும் மாலை 34) நினைத்ததையும் பார்த்தோம்.

ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில், முதலில், ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளியதையும், இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் (மழைக்கன்று வரை(36) என்பதையும் பார்த்தோம். இருந்தும், ஆழ்வாரின் மனம், ‘தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். அவனின் குளிர்ந்த பார்வை தானே நமக்கு வேண்டியது , ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று அவன் சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ (37) சொல்கிறார்.

மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள்போகவிட்டு (38)என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்யத்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. உபாயாந்தரங்களில் பற்று அறுத்து, அதாவது பேற்றுக்கு எம்பெருமான் ஸாதனமே ஒழிய, நாம் செய்யும் காரியங்கள் ஸாதனமல்ல என்று அஹங்காரத்தை விடுத்து, உன் திருவாசலில் கிடக்கும் பரமபாகவதர்கள் விஷயத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கிறது என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.

இனிவரும் ஆறு பாடல்களில் (39-44), ‘மேம்பொருள்‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறார்.

அரங்கனே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாத, நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்கின்றாய் என்று ‘அடிமையில் குடிமை‘ (39) பாசுரத்தில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம்,

பாசுரம் 40

பெரிய பிராட்டியாரையும், ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவையும் திருமார்பில் தரித்து உள்ளவனே, அரங்கமா நகருளானே, இந்த பெரிய பூமியில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் நடுங்கும்படி (ஜந்துக்களை ஆயுதங்களால்) கொலை செய்தும், (தீயினால்) கொளுத்தியும் பாதிக்கப்பட்ட பாபத்தை உடையவர்களானாலும், உன்னை, (தங்கள்) நெஞ்சினில் (உபாயமாக) விளங்கும்படி வைத்து, (நீயே உபேயம்) என்று திடமான நம்பிக்கை உடையவராக இருப்பவர்களானால், (அவர்கள்) கொடிய பாபங்களின் பலனை அனுபவிக்க மாட்டார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஜன்மத்தால் வந்த தாழ்வை சென்ற பாடலில் சொன்னார். அது இவனால் வந்தது அல்ல என்பதால் மன்னிக்கத் தக்கது; அப்படி இல்லாமல், மன்னிக்கத் தகாத ஒழுக்க குறைவை உடையவர்களும் ‘மேம்பொருள்’ அறிவை உடையவர்கள் என்றால், அந்த ஒழுக்க குறைவால் உண்டான பலனையும் அனுபவிக்க வேண்டியதில்லை என்கிறார், அதாவது, எத்தனை பாவங்கள் செய்தவரும், மேம்பொருளில் சொன்ன ஞானத்தை உணர்ந்தவர்கள், பாவங்களின் கர்ம பலம் அனுபவிக்க வேண்டாம் என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.

இனி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

திரு மறு மார்வ

தன் மார்பில் ஸ்ரீயையும் வத்ஸத்தையும் தாங்கியவராக எம்பெருமானை ஆழ்வார் வர்ணிக்கிறார். ஸ்ரீ என்பது எம்பெருமானின் தெய்வீகத் துணைவியாகக் கருதப்படும் பெரிய பிராட்டியாரைக் குறிக்கிறது, அதே சமயம் வத்ஸம் என்பது ஒரு தனித்துவமான மச்சம் அல்லது மருவைக் குறிக்கிறது. இவை இரண்டும் அவரைப் பரமாத்மா என்று அடையாளப்படுத்தும் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. இந்தக் குறியீடு மற்ற சாஸ்திரங்களிலும் எதிரொலிக்கிறது. உதாரணமாக, வால்மீகி ராமாயணத்தில் ‘ஶ்ரீவத்ஸவக்ஷா நித்யஶ்ரீ அஜய்ய ஶ்ஶாஶ்வதோ த்ருவः (யுத்த காண்டம் 114.15), இராவணனின் மனைவியான மண்டோதரி, ராமரின் மேன்மையை உறுதிசெய்து, அவரை “பெரியவர்களிலும் பெரியவர், இருளுக்கு அப்பாற்பட்டவர், காப்பவர்” என்று வர்ணிக்கிறார். மேலும், ராமர் “எப்போதும் செல்வந்தர், வெல்ல முடியாதவர், நித்தியமானவர், நிலையான பரமாத்மா மற்றும் உண்மையான வீரம் உடையவர்” என்று மண்டோதரி வலியுறுத்துகிறார். வெல்ல முடியாதவரும், நித்தியமானவரும், ஒரே வடிவமுடையவருமானவர் ஸ்ரீமன் நாராயணன் என்று அழைக்கப்படுகிறார்.

வாத்ஸல்ய குணம்: எம்பெருமான் / பிராட்டி தனது பக்தர்களின் குறைகளையும் பாவங்களையும் மன்னித்து, அவர்கள் மீது வெளிப்படுத்தும் பெற்றோர் பாசம் அல்லது கருணையான அன்பைக் குறிக்கிறது.

புருஷகாரம்: பரிந்துரைக்கும் செயலைக் குறிக்கிறது; இங்கு, பெரிய பிராட்டி / ஸ்ரீ, எம்பெருமானிடம் பக்தர்களுக்காகப் பரிந்துரைக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுகிறார்.

உபாயம்: ‘வழிமுறை’ அல்லது ‘பாதை’ என்று பொருள்படும் — எம்பெருமானை ஒரு கருவியாகக் கொண்டு, பக்தர்கள் தெய்வீக அருளை அடையும் செயல்முறை.

உபேயம்: ‘இலக்கு’ அல்லது ‘முடிவு’ என்று பொருள்படும் — அவருக்குச் சேவை செய்வதே ஆன்மீகப் பயிற்சியின் இறுதி நோக்கமாகும்.

வாத்ஸல்ய குணத்தின் காரணமாக, பாவத்தினால் ஏற்படும் துன்பத்தை அனுபவிக்காமல் இருப்பது போன்ற பலன், இந்தத் துதியில் சிறப்பித்துக் காட்டப்படுகிறது. எனவே, இந்தக் கருணையான அன்பின் (வாத்சல்ய குணம்) வடிவமான பெரிய பிராட்டி, எம்பெருமானின் மார்பில் வீற்றிருப்பதாக ஆழ்வார் கூறுகிறார். அவளது சம்பந்தம் மறைத்து சொல்லப்பட்ட முந்தைய பாசுரம் போல இல்லாமல், இங்கே அது வெளிப்படையாக சொல்லப்பட்டது. இது, ‘மேம்பொருள் ‘ பாசுரத்தில் ஆழ்ந்து தேர்ச்சி பெற்றவர்களின் பெருமிதத்தையும் ஆன்மீக உயர்வையும் குறிக்கும் இந்த பாசுரத்தில் சொல்லியது குறிப்பிடத்தக்கது. மற்ற ஆழ்வார்கள், ‘அலர்மேல் மங்கை உறை மார்ப’ (திருவாய்மொழி, 6.10.10) மற்றும் ‘நின் வல மார்பில் வாழின்ற மங்கையும் பல்லாண்டு‘ (திருப்பல்லாண்டு 2) போன்ற வரிகளில் பெரியபிராட்டி, எம்பெருமானின் மார்பில் அவளது நிலையான இருப்பைக் கொண்டாடுகின்றன; அவனைப் பரம்பொருளாகக் குறிப்பதோடு, அவளது பங்கின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.

எம்பெருமான் ஒரு பக்தனுக்கு நன்மைகளை வழங்கும் போது, ​​பெரிய பிராட்டி புருஷகாரமாகச் செயல்பட்டு, அந்த பக்தனை அவனிடம் பரிந்துரைத்து, அதன் மூலம் அவனுடைய தெய்வீக அருளைப் பெறுவதற்கு வழிவகுக்கிறது. இந்தச் செயல்முறை, எம்பெருமானை உபாயமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பக்தன் இந்த நன்மைகளைப் பெற்று கைங்கர்யம் (சேவை) செய்யும் போது, ​​அந்தச் சேவையை ஏற்றுக்கொள்வதிலும் பெரியபிராட்டி ஒரு முக்கியப் பங்காற்றுகிறாள் ; இதன் மூலம், உபாயம் மற்றும் உபேயம் ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவள் இன்றியமையாததாக இருப்பதை, ஆழ்வார் தனது பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து

‘ஸ்ரீமன் நாராயணனான உன்னைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று நெஞ்சில் விளங்கும்’ என்பது இதன் பொருள். காயத்திரி ஹோமம் செய்யும் போது, சமித்து இட வேண்டும், மற்றும் காயத்திரி மந்திரமும் சொல்ல வேண்டும் என்று இரண்டு காரியங்கள் செய்வது போல இல்லாமல் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே உபாயம் என்று இருப்பது ‘திகழ்வது‘ என்று சொல்கிறார். இவன் செய்ய வேண்டியது சிறிது உண்டாகிலும் எம்பெருமானின் உபாயத் தன்மை திகழாமல் மழுங்கும் என்ற கருத்து.

புருஷகாரம் செய்து ரக்ஷிக்க பிராட்டியும், ரக்ஷிக்க எம்பெருமானும், அவனை உபாயமாகவும் உபேயமாகவும் அறிந்து உறுதி செய்து கொள்வதற்கு தானும் (ஆழ்வாரும்), அவனே ‘உபாயமும் உபேயமும்’ என்ற இந்த அர்த்தத்தை அறிவிக்கும் ஆச்சார்யானையும் தவிர வேறு ஒன்றினையும் வேண்டாது இருப்பதைக் காட்டுகிறார்.

வைத்து என்பதால், ‘சிந்தையில் வைப்போம்’ என்ற எண்ணத்தை பற்றாக கொண்டு எம்பெருமானும் பிராட்டியும் ஆன ஒரு மிதுனமாக இவன் சிந்தையில் எழுந்தருளி அவனுடைய அடியவனுக்கு கட்டுப்படுகிறான் என்பதை காட்டுவதாகக் கொள்ளலாம்.

மருவிய மனத்தராகில்

இது உபேயத்தில் உள்ள உறுதியை சொல்கிறது. மற்ற பயன்களை விட்டு, ஸ்ரீமன் நாராயணனே மேலான பயன் என்று உறுதி பூண்டு இருப்பதை சொல்கிறது. ‘ஆகில்‘ என்று சொல்வதால் உபேயத்தில் உறுதி கொண்டு இருப்பது அரிது என்று சொல்கிறார். ‘ஆகில்‘ என்பதை ‘சிந்தையில் திகழ வைத்து‘ என்ற பதத்தில் சொன்ன உபாயத்தில் உறுதி கொண்டு இருப்பத்தையும் சேர்த்து எந்த அடியவனுக்கும் அரிது என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

மாநிலத்து உயிர்கள் எல்லாம், வெரு வரக் கொன்று

மாநிலத்து உயிர்கள் எல்லாம் கொன்று என்று எடுத்துக் கொள்ளாமல் மாநிலத்து உயிர்கள் எல்லாம் வெரு வர என்று கொள்ள வேண்டும். அதாவது ஒரு உயிரைக் கொல்லும் போது அதனால் அதனைக் கண்டு உலகமெல்லாம் நடுங்கும்படி என்று சொல்கிறார். இதனால் இவனுக்கு ஜீவஹிம்சையில் உள்ள ஈடுபாடு சொல்லப்படுகிறது.

சுட்டிட்டு

உயிர்களை ஆயுதம் முதலியவற்றால் சடக்கென்று கொல்லாமல், உயிரோடு எரித்து சித்ரவதை செய்வது கொல்வதாயிற்று.

ஈட்டிய வினையரேலும்

ஒரு பயனை விரும்புவோர் அதனை அரும்பாடுபட்டு சம்பாதிப்பது போல, இவனும் இந்த மஹா பாவங்களை அரும்பாடுபட்டு சம்பாதிக்கிறான் என்கிறார்.

ஏலும்

‘மேம்பொருள்’ பாசுரத்தில் சொன்ன ஞானம் பிறந்த பின் இந்த காரியங்களை செய்ய முடியாதாகையால், ஞானம் பிறப்பதற்கு முன்பு உள்ள இவன் ஒழுக்கத்தைச் சொல்கிறது. பகவத் கீதை (7.19)ல் சொல்லிய

‘ப₃ஹூனாம் ஜன்ம நாமந்தே
ஜ்ஞானவான் மாம் ப்ரபத்₃யதே
வாஸுதே₃வஸ்꞉ ஸர்வம் இதி
ஸ மஹாத்மா ஸு-து₃ர்லப₄꞉’ (கீதை 7.19)

ஸ்லோகத்தின் படி, பல புண்ணிய ஜன்மங்களுக்குப் பிறகு ஞானியானவன், ‘வாசுதேவனே (எனக்கு) எல்லாம்’ என்று என்னை துதிக்கிறான், அப்படிப்பட்ட மஹாபுருஷன் கிடைப்பது மிகவும் அரிது என்றபடியும், பகவத் கீதை (6.54)ல் சொல்லிய

ப்ரயத்னாத்₃ யதமானஸ் து
யோகீ₃ ஸம்ஸு²த்₃த₄-கில்பி₃ஷ꞉
அநேக-ஜன்ம-ஸம்ஸித்₃த₄ஸ்
ததோ யாதி பராம் க₃திம்
(கீதை 6.54 )

ஸ்லோகத்தின் படி, (அநேக ஜன்மங்களில் செய்த புண்ணியங்களை உடையவனும், அதனால்) பாவங்களில் இருந்து சுத்தி அடைந்தவனும் முயற்சியுடன் யோகத்தில் ஈடுபடுபவனாகிய யோகி (நழுவின யோகத்தைத் திரும்பப் பெற்று) மேலான கதியை அடைகிறான் என்றபடியும்

பல புண்ணிய ஜன்மங்கள் கழிந்த பின்பே இத்தகைய ஞானமும் பக்தியும் ஏற்படும் என்பது விளங்குவதால் இப்படிப்பட்ட தீய ஒழுக்கம் இவனுக்கு முன் ஜன்மங்களில் ஏற்படுவது அரிது. ஏலும் என்று சொல்வதால் இப்படி அரிதானது நடந்தாலும் என்கிறார்.

அருவினைப் பயனதுய்யார்

தான் அப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பாவங்களின் பயன்களை அடையமாட்டார்கள் என்கிறார். கடல் அரசன்(சமுத்திர ராஜன்), தான் சரண் அடைந்த பின்பும், இரங்காமையால் அவன்(பெருமாள், ஸ்ரீ ராமன்) தொடுத்த அம்பை, அவன் தன் காலில் விழுந்தவுடன், அவனுடைய விரோதிகள் வாழும் இடத்திற்கு விட்டதைப் போல, இவர்கள் செய்த பாவங்களின் பயனை, இவர்களின் விரோதிகள் அனுபவிக்கும்படி எம்பெருமான் செய்து விடுவார் என்பது இதன் பொருள்.

முக்தி அடைந்தவன், பரமபதம் செல்லும் போது, அவனுடைய தனத்தை பிள்ளைகள் அடைகிறார்கள், விரோதிகள் பாவ கர்மங்களையும், நண்பர்கள் நற்கர்மங்களின் பயன்களையும் அடைகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. அப்படி இல்லை என்றால், கர்ணன் அர்ஜுனன் மேல் நாகாஸ்திரம் செலுத்திய போது, அது அர்ஜுனனின் கிரீடத்தை அடித்து, அவன் தலை தப்பியது போல, இவர்களுக்கும் தலைக்கு வந்தது தலை பாகையுடன் போகும்படி செய்வான் என்று கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் பகதத்தன் அர்ஜுனன் மேல் செலுத்திய சக்தியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டு அர்ஜுனனை காத்தது போல இவர்களின் பாவத்தின் பயனை தான் அனுபவிக்கவும் செய்வான் என்று கொள்ளலாம். உண்மையில் இவர்கள் செய்த பாவத்தை மன்னித்தேன் என்று சொல்லி தீர்த்து விடுவான். கீதை (18.66)ல் சொல்லியபடி

ஸர்வ-த₄ர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ-பாபேப்₄யோ
மோக்ஷயிஷ்யாமி மாஸு²ச꞉
(கீதை 18.66)

மோக்ஷ சாதனமான எல்லா கர்மங்களையும் வாசனையுடன் விட்டுவிட்டு என் ஒருவனையே உபாயமாகப் பற்று நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்து விடுவிக்கிறேன், வருந்தாதே என்று அபயம் அளிக்கலாம். இப்படி செய்தால் இவர்கள் பாவங்களின் பயனை அனுபவிக்க வேண்டாம் அன்றோ.

அரங்கமா நகருளானே

இவை எல்லாம் அவதார சமயத்தில் என்று சொல்லிவிட முடியாதபடி, அவதாரங்களுக்கு பிற்பட்டவர்களுக்காகவே தேவரீர் திருவரங்கத்தில் வந்து கண்வளர்ந்து அருளுவது என்கிறார். இப்படி பாவம் செய்தவர்களையும் ரக்ஷித்தோம் என்று எம்பெருமான் ஆசைப்படலாமே தவிர மேம்பொருள் பாசுர ஞானத்தை அடைந்தவர்கள் பாவங்களை செய்ய மாட்டார்கள் என்பது கருத்து.

(அத பாதக பீதஸ்த்வம்) விஷ்ணு தர்மத்தில்(66-72)ல் சொல்லியபடி கவனம் இல்லாமல் உபாய புத்தியுடன் செய்யப்படும் புண்ணியத்தையும் பாவம் என்று நினைத்து பயப்படும் இவர்கள், பாவத்தை செய்ய மாட்டார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

அவன் திருமார்பில் இருந்து, ‘பாபாநாம் வாஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம * கார்யம் கருண்ய மார்யேண ந கஸ் சிந்நா பராத்யதி । (யுத்த காண்டம் 116.46) , அதாவது ‘ வானர, பாபிகளாயினும், புண்ணியம் உள்ளவர்கள் ஆனாலும், கொல்லத் தகுந்தவர்களானாலும், குணவானாய் இருப்பானாகில், அவன் விஷயத்தில் கருணை காட்டவேண்டும்.

அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லை, என்று புருஷ காரம் செய்யும் பிராட்டியே குறை சொன்னாலும் ‘என் அடியார் அது செய்யார், செய்தாரேல், நன்று செய்தார் (பெரியாழ்வார் திருமொழி 4.9.2) என்று எம்பெருமான் கூறுவான் என்று நாம் சொன்னால், ‘அப்படியானால் இவர்கள் பாவங்களையே செய்ய வேண்டி வருமே’ என்று ஒரு சிலர் சொன்னால் அது இங்கு பொருந்தாது. எம்பெருமானுடைய அன்புக்கு இவ்வளவு பாத்திரமானவர்கள், ஒரு போதும் பாவங்கள் செய்ய மாட்டார்கள் என்று அறிய வேண்டும்.

இத்துடன் இந்த பாடலை முடித்துவிட்டு, இன்னொரு பாசுரத்தில் தொடருவோம். நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading