திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்குச் செய்த மிகப் பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாகக் கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளைப் பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், அடியவர்களுக்கு நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமானுக்கு அடிமை செய்பவன் போல வேஷங்களைப் போட்டு, அவன் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லா நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை சொல்கிறார்.

இனி திருமாலையின் அடுத்த பகுதி.

இப்படி ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, தான் எல்லோருக்கும் அவர்கள் கேட்காமலே செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இனி, இந்த பகுதியில் உள்ள முதல் பாசுரத்தைப் பார்ப்போம். நன்றி.

பாசுரம் 35

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னை அல்லால், சிக்கென செங்கண் மாலே ! ஆவியே ! அமுதே ! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய் ! பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே (35)

ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகுவதை உணர்ந்த எம்பெருமான், அவர் ஏன் விலகுகிறார் என்று வினவ, ஆழ்வார், எல்லாம் அறிந்த எம்பெருமான் முன் பொய்களை சொல்லி அணுகினதாகவும் அதனால் அவனுக்கு சிறுமை என்று முடிவு செய்து, பற்பல ஜென்மங்களாக, ஆழ்வாரைப் பற்றி ஒன்றும் அறியாத சாதாரண மக்களுடன் சேர்ந்து இருப்பதற்கு செல்வதாக பதில் உரைக்கிறார். எம்பெருமான், இந்த பாடலில், தாம் அடியவர்களின் எந்த குறையும் பார்ப்பதில்லை என்றும், சாதாரண மக்கள் எல்லா குறைகளையும் ஒன்று விடாமல் பார்ப்பார்கள் என்றும், தாம் அடியவர்களின் எல்லா குணங்களையும் ஒன்று விடாமல் கவனித்து கருத்தில் கொள்வதாகவும் கூறி, அவனை அணுகுவதே சரியானது என்கிறார். அதற்கு ஆழ்வார், அப்படி செய்ததற்கு ஏதாவது சரித்திரம் உண்டா என்று வினவ, த்ரிவிக்ரமனாக, மூவுலங்களையும் அளந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடிகளை சாத்தி, அருள் செய்து, எல்லை இல்லாத நீர்மையை (எளிமையை) காட்டியதைச் சொல்லி, ஆழ்வார் இல்லாவிட்டால், தன்னால் இருக்க முடியாது என்று உரைக்கிறார்.

சென்ற பாசுரத்தில் சொன்னது போல், இந்த பாட்டும் நம்மாழ்வாரின், வளவெழு உலகின் என்ற திருவாய்மொழி முதல் பத்து, ஐந்தாம் பதிகத்தில் சொன்னதை நினைவு படுத்தும். நம்மாழ்வார் முதல் பத்து முதல் நான்கு பதிகங்களில் நிறைய செய்தும் எம்பெருமான் மனம் இரங்கவில்லை, அதற்கு ஆழ்வார் தன்னுடைய குற்றங்களே காரணம் என்று எண்ணி விலகப்பார்த்தார். இந்த பதிகத்தில் மூன்றாம் பாட்டில் “திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்“என்று த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி, தன் பால் மனம் வைக்கத் திருத்தி (திருவாய்மொழி, 1.5.10) அவரை விலகாமல் அவருடனே இருக்கும்படி செய்கிறார்.   இங்கும் அதே போல், தொண்டரடி பொடி ஆழ்வாருக்கும் த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி அவரையும் அவனை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறார்.

அதே போல், திருவாய்மொழி (7.10.10) என்ற பாசுரத்தில், ஆழ்வார், “சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும், சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை“என்று சொல்வதில் “தன் சிந்தையில் அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தேவபிரான் அறிவான் என்றும், சிந்தையினால் செய்யப்படுவனவற்றுள் அவன் அறியாதன ஒன்றும் இல்லையே” என்றும் சொல்வது தொண்டரடிப்பொடி ஆழ்வார் விலவர சிரித்திட்டேனே என்று சொல்லும் போது சொல்வதுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். அங்கே நம்மாழ்வார் எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் தன் சிந்தையில் இல்லை என்றும் அதனை அவனே அறிவான் என்றும் சொல்வதும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன் சிந்தையில் அவனை தவிர மற்ற விஷயங்களே உள்ளன என்றும் அதனை அவரே அறிவார் என்றும் சொல்வதும் நினைவில் கொள்ளத்தக்கது.

“மஹாபலி எல்லா உலகங்களையும் அபகரித்த போது, எல்லா உலகங்களையும் கடந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடி படும்படி வியாபித்த, என் ஸ்வாமியே, உன்னைத் தவிர, வேறு ஒரு பொருளையும் சேவிக்க மாட்டேன், சிவந்த திருக்கண்களை உடையவனே, அடியவர்களின் பக்கம் இருப்பவனே, எனக்கு உயிர் போன்றவனே, அமிர்தம் போன்றவேனே, என்னுடைய அருமருந்து போன்ற உயிர்க்கு அந்தராத்மாவாக இருக்கும் என் ஸ்வாமியே, பாவியாகிய நான், உன்னைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், நான் மிக்க பாவத்தை செய்தவனே’ என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

இனி சற்று விளக்கமாக,

தாவி

முன்கூட்டியே அறிவித்துவிட்டால், பல காலங்களாக மனதில் உள்ள அகங்காரம் உள்ள சம்சாரிகள், அவன் திருவடிகளை தங்கள் தலைமீது வைக்க மறுத்து ஆணை இடுவார்கள். எப்படி திருவாய்மொழியில் (10.10.2) நம்மாழ்வார், அவன் மறுக்க முடியாதபடி, “திருவாணை, நின் ஆணை ” என்று சொன்னபடி அடியவர்கள், அவன் மறுக்க முடியாதபடி திருவடிகளை தலையில் ஏந்தி கொள்வார்களோ, அதே போல் இவர்கள் இவனது திருவடிகளை ஏற்க மறுப்பார்கள் என்று எம்பெருமான் யாரும் அறியாதபடி, யாருக்கும் களைப்பு ஏற்படாதபடி எல்லோர் தலைகளிலும் தன் திருவடி தீண்டும்படி தாவி வளர்ந்தான் என்கிறார்.

அன்று

க்ருத யுகத்தில் மஹாபலியால் மூன்று உலகங்களும் அபகரிக்கப்பட்டு, எம்பெருமானுடைய சேஷித்வமும், மக்களுடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று என்கிறார்.

உலகமெல்லாம்

மஹாபலியால் கவரப்பட்ட மூன்று உலகங்களை அளந்தது மட்டும் இல்லாமல், பிரம்மாவின் சத்ய லோகம் வரையில் உள்ள ஏழு உலகங்களையும் அளந்து, எல்லாவற்றிலும் உள்ள எல்லா ஜீவராசிகள் மீதும், உயர்ந்தவர்(வசிஷ்டர்), தாழ்ந்தவர் (சண்டாளர்கள்) என்ற பேதமில்லாமல், தன்னுடைய திருவடிகள் தீண்டும்படி வளர்ந்ததை காட்டுகிறார்.

தலைவிளாகக் கொண்ட

ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ : ஸஹஸ்ரபாத் , ஸ பூமிம், விஸ்வதோ வ்ருத்வா , அத்யதிஷ்டத் தசாங்குலம் (புருஷஸூக்தம் 1) என்றதன் படி, புருஷன் எனப்படும் நாராயணன், கணக்கற்ற தலைகளையும், அளவற்ற கண்களையும், அனந்தமான கால்களையும் உடையவர், அவர் பூமியை எல்லாப்புறமும் சூழ்ந்து, அதற்கு மேலும் எல்லையற்ற தூரம் வியாபிக்கிறார் என்று பொருள் ஆகும். அதனால், பூமியையும் மற்றும் நித்ய விபூதியான மேல் உலகங்களையும் வியாபிக்கிறார் என்று பொருள் வருவது போல், தலைவிளாக்கொண்ட என்பது, அளக்க வேண்டியதற்கு மேலே அளந்ததை காட்டுகிறது. அதே போல், காக்க வேண்டிய (ரக்ஷிக்க வேண்டிய) பொருட்களின் அளவினை விட எம்பெருமானின் காக்க வேண்டிய ஆசை (பாரிப்பு) மிக அதிகமா இருப்பதை காட்டுகிறது.

எந்தாய்

திருமங்கையாழ்வார், திருகுறுந்தாண்டகம், பாடல் 6ல் “அமரர் சென்னி பூவினை‘ என்று சொன்னபடி, நித்யஸூரிகள் தங்கள் தலையினால் தாங்கும் எம்பெருமானின் திருவடிகளை, அவற்றில் ஈடுபாடற்ற சம்சாரிகள் தலைகளிலும் எம்பெருமான் வைப்பதற்கு என்ன காரணம் என்றால், அது எம்பெருமானனுக்கு ஜீவாத்மாக்களுடன் உடன் உள்ள, விட முடியாத உறவே என்று சொல்வது கவனிக்கத்தக்கது. நம் சம்பிரதாயத்தில் நவவித சம்பந்தம் என்று பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை கூறுவார்கள். 

எம்பெருமானுடன் இருந்த இந்த உறவு, அன்று தெரியாமல் இருந்த குறை தீர, இப்போது, அவ்வுறவை அறிந்தபின்னர், ஆழ்வார் என்தந்தை என்று சொல்லாமல் எந்தாய் என்று சொல்லி, தன்னுடைய நன்றி கடனை செலுத்துகிறார். அன்று எம்பெருமான் தன் திருவடிகளால் தடவி காத்ததினால், அவனுடைய அந்த முயற்சியால் தான், இப்பொழுது திருந்தியது என்று உணர்ந்து எந்தாய் என்று அழைக்கிறார். திருப்பாவை 24ம் பாட்டில், “அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை குறிப்பிடுகிறார்.

தாய் தன்னுடைய குழந்தையை கட்டி கொண்டு உறங்குவது போல், எம்பெருமான், எல்லோருடைய தலைகளையும், தான் பெற்ற பேறாக கருதி, தீண்டினான். சம்சாரிகள் இன்றும் அவனுடனான உறவை அறிந்து இருக்கவில்லை என்றாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆழ்வார் உகக்கிறார்.

சேவியேன் உன்னை அல்லால்

ஆழ்வார், இப்பொழுது எம்பெருமானின் எளிமையை அறிந்து, அவனை விட்டு அகன்று மற்றொன்றை பற்ற மாட்டேன் என்கிறார். எம்பெருமானை விட்டால், ஆழ்வார், தான், எவர் தயவும் இன்றி, சுதந்திரமாக இருக்க வேண்டும் (சுதந்திரன்), அல்லது இன்னொருவரை சார்ந்து அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்(பாரதந்திரியன்), இந்த இரண்டு குறையும் தனக்கு வராது என்கிறார்.

திருமந்திரத்தின் முதல் பதத்தில், பாரதந்த்ரியம் எனப்படும் எவருக்கும் அடிமையாக இருப்பதை தவிர்ப்பதையும், இரண்டாவது பதத்தில், ஸ்வாதந்த்ரியம் எனப்படும், தனக்கு தானே ராஜாவாக இருக்கும் தன்மையை தவிர்ப்பதையும், ஆழ்வார் சேவியேன் உன்னை அல்லால் என்கிறார். எம்பெருமானை சேவிப்பது வழக்கம் ஆகிவிட்டதால், வெளிவிஷயங்களையும் சேவிக்க மாட்டேன் என்ற வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.

சிக்கென

மேலே சொன்ன விஷயம் எல்லா காலங்களிலும் இருக்கும், தன்னுடைய ஆத்மா உள்ளவரையிலும் இருக்கும், எப்பொழுதும் இருக்கும் என்பதை சிக்கென என்றதால் சொல்கிறார். நம்மாழ்வார் “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.” திருவாய்மொழி (2.6.1) சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அதே போல் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை இழந்து விடுவோமோ என்று கவலையுற்ற எம்பெருமானுக்கு ஆழ்வார் இந்த வார்த்தையால் உறுதி அளிக்கிறார்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்பது, பகவத் கீதையில், எம்பெருமான், ‘எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்’ என்று சரமச்லோகத்தில் ஜீவனை கவலைப்படாதே என்று சொன்ன எம்பெருமானுக்கு, இங்கே ஆழ்வார் அபயப்ரதானம் செய்கிறார்.

செங்கண்மாலே

இந்த வார்த்தைகள், எம்பெருமானுக்கு இயற்கையில் உள்ள சிவந்த திருக்கண்களை பற்றி சொல்வது அல்ல. ஆழ்வார் சிக்கென என்று சொன்னவுடன் எம்பெருமானின் திருக்கண்களில் பிறந்த ஒரு தனிச் சிவப்பினைக் குறிக்கிறது. சென்ற பாட்டில் (திருமாலை 34), ‘வெள்கிப் போய் ‘ என்றவுடன் கவலையுற்ற எம்பெருமான், இந்த பாட்டில், “‘சேவியேன் உன்னை அல்லால் சிக்கென “ என்று சொன்னதால் உண்டான பயம் தீர்ந்து, ஆழ்வாரின் மேல் உண்டான பெரும் காதல் உள் அடங்காமல் கண் வழியே புறப்பட்டு ஒளி வீசுவதை சொல்கிறார். செங்கண்மாலே என்பதால், பெருங்காதலால் இப்படி குதறி சிவந்த கண்களை உடையவனே என்று பொருள் கொள்ளலாம்.

கண்ணும் சிவந்து , பெரியவாய் வாயும் சிவந்து, (திருவாய்மொழி 8.8.1) என்ற பாடலிலும் ஸ்வாமி நம்மாழ்வார் கண்கள் சிவந்து என்று சொன்னது, எம்பெருமானது இயற்யான கண்ணழகை சொல்வது அன்று, ஆழ்வாரோடு சேர்ந்தபின் உண்டான பூரிப்பை சொல்கிறது.

இராமாயணம், யுத்த காண்டத்தில், விபீஷணன் இராவணனை பிரிந்து இராமனை தேடி வந்த போது, சுக்ரீவன், விபீஷணன் இராவணன் தம்பி என்பதால் அவனை கொல்ல வேண்டும் என்று சொன்னதும், பிறகு அனுமன் அவனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

“வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிவைஸ் ஸஹ, ராவணஸ்ய, ந்ருஶம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண(யுத்த காண்டம், 17.29) என்பது, இந்த விபீஷணன் கொடூரமான ராவணனின் சகோதரன் என்பதால் அவனது மந்திரிகளுடன் சேர்ந்து தண்டனை கொடுத்துக் கொல்வோம் என்று சுக்ரீவன் ராமனிடம் சொன்னான். எம்பெருமானுக்கு ஆழ்வார் கூறிய ‘வெள்கி போய் ‘என்ற வார்த்தை, சுக்ரீவன் இராமனிடம் கூறிய வார்த்தைக்கு ஒப்புமை கூறி எம்பெருமான் திருவுள்ளம் பட்ட பாட்டை காண்பிக்கின்றது. பின்னர் இராமன் மற்றவர்கள் கருத்தினை கேட்ட போது, வாயுவின் புத்திரனான அனுமன் விபீஷணனை நம் சொந்த நபராக ஏற்றுக்கொள்ளலாம் (17.67) என்று சொன்ன வார்த்தைகள், வலிமை மிக்க இராமன் இதயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைய செய்து, தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினான் என்பது கீழ் வரும் ஸ்லோகத்தில் வருகிறது. அதராமःப்ரஸந்நாத்மா ஶ்ருத்வா வாயுஸுதஸ்ய ஹ, ப்ரத்ய பாஷத துர்த்தஷ ஶ்ருதவாநாத்ம நிஸ்திதம் (யுத்த காண்டம், 18.1). ராமாவதாரத்தில் அனுமன், ஸ்ரீராமனுக்கு வருந்தாதீர் என்று அபயம் அளித்ததாகவும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் உள்ள பெரியபெருமாளுக்கு அபயம் அளித்ததாகவும் உரையாசிரியர் சொல்கிறார். ஆழ்வார் சிக்கென என்று சொன்னபோது, எம்பெருமானுக்கு அவ்வாறே இருந்தது என்கிறார்.

செங்கண்மாலே, உன்னை அல்லால் சேவியேனே என்று சேர்த்து பார்த்தால், தன்னை பெற்றதால், பெரும் காதலால் முகம் மலரும்படி இருக்கும் எம்பெருமானத் தவிர வேறு எங்கு போவார் என்ற கருத்தை சொல்கிறது.

ஆவியே

தன்னுடைய உயிரை போன்று இருக்கும் எம்பெருமானை விட்டு எங்கே போவேன் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் பிராணனை (உயிரினை), வாயுவின் ஒரு நிலையாக கருதவில்லை. திருவாய்மொழி (7.2.9) யில் சொன்னது போல், இந்த ஆழ்வார், ‘என் திருமகள் சேர் மார்வனே. என்னும் என்னுடைய ஆவியே என்னும்’ என்று ஸ்ரீமன் நாராயணனையே தன்னுடைய உயிராக நினைத்து இருப்பவர்.

அமுதே

ஆழ்வார் எம்பெருமானை வாழ்விற்கு தேவையான உயிர் போல் மட்டும் எண்ணாமல், மிகவும் இனிமையான தன்னுடைய உயிரினை சாவாமல் காக்கும் அருமருந்தமான அமுதம் என்று நினைக்கிறார்.

எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்

எம்பெருமான் தன்னுடைய ஆத்மாவாகவே இருக்கிறார் என்கிறார். ஆத்மாவான எம்பெருமானை விட்டு, வெறும் சரீரத்தை மட்டும் கொண்டு தான் வெளியில் வாழ முடியாது என்பது கருத்து.

அணுகத்தகாதவன் என்று எண்ணி எம்பெருமானை விட்டு அகல செல்ல நினைத்த ஆழ்வாரை, அகன்று, அழிந்து விடாதபடி, சேர்த்துக்கொண்ட சுவாமி என்பதை, இங்கே எந்தாய் என்பதால் தெரிவிக்கிறார்.

வாத்ஸல்யம் என்ற எம்பெருமானின் திருக்குணம் என்பது, குற்றம், குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, அதாவது, பிறந்த கன்றை, தாய்ப் பசு, அருவருப்பு இல்லாமல், ஆசையுடனும் பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் போல எம்பெருமான் அடியவர்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிபவர்.

இங்கே, எம்பெருமானின் வாத்ஸல்யம் அல்லது அடியவர்களிடம் பரிவு என்ற திருக்குணத்தை காட்டும் சிவந்த கண்களை உடைய செங்கண்மால் என்கிறார். ஆழ்வாருக்கு உயிராக இருப்பவனே, இத்துடன் மிக இனிமையான அமுதம் போன்றவனே, தனக்கு ஆத்மாவாக இருந்து அவரை நல்வழியில் நடத்தி செல்லும் ஆருயிர் அனைய எந்தாய் என்கிறார், இப்படி உள்ள பல பெருமைகளையும் கொண்ட எம்பெருமானை விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாது என்று ஆழ்வார் கூறுகிறார்.

பாவியேன் உன்னை அல்லால்

கீழ் பாசுரங்களில் ஐயனே அரங்கனே (33) என்றும், ‘என்னை ஆளுடைய கோவே ‘ என்றும் சொன்ன வார்த்தைகளும் பொய் தானோ என்று எம்பெருமானின் திருவுள்ளமாகுமோ என்று கவலையுற்று, எம்பெருமானை தவிர வேறு ஒன்றையும் நினைக்க மாட்டேன் என்பதை, ‘பாவியேன் உன்னை அல்லால் ‘ என்ற வார்த்தைகளால் சொல்கிறார்.

பாவியேன் பாவியேனே

பாபம் மிகுந்த சம்சாரிகளை விடாமல், எல்லோர் தலையிலும் தன்னுடைய திருவடிகளால் தீண்டிய எம்பெருமானை விட்டு ஆழ்வார் விலகி செல்ல நினைத்ததற்கு காரணம் அவரின் பாவங்களே என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இரண்டாவதாக சொன்ன ‘பாவியேனே ‘என்றது, உன்னை தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று முன்பு சொன்னதை உறுதி செய்கிறார்.

பாவியேன் பாவியேனே என்று இரண்டு வார்த்தைகளிலும் பாவி என்ற சொல் வருவது, தான் செய்த அதிக அளவு பாவங்களை குறிப்பதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடியார்களின் குற்றங்களை காண மாட்டாத அளவோடு இல்லாமல், எம்பெருமானை வெறுக்கும் சம்சாரிகளையும் வெறுக்காத எம்பெருமானை தான் அகல நினைத்ததற்கு காரணம், தான் செய்த மிக அதிக அளவிலான பாவங்களே என்ற கருத்தையும் சொல்வதாக கொள்ளலாம்.

இந்த இரண்டு பாவங்களில், முதல் பாவம், ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகி தன்னை தானே அழித்து கொள்ள நினைத்தது. இரண்டாவது பாவமாவது, அனைவரும் வாழ்வதற்கு காரணமாக ஆவியாயிருக்கும் எம்பெருமானையும் தான் அகல்வதின் மூலம் அழித்து, அனைவரையும் அழிக்க முற்பட்ட பாவத்தை குறிப்பதாக அமையும் என்றும் கொள்ளலாம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் இல்லை என்றும் தீய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் என்றும் இப்பாடலுடன் நைச்சாநுசந்தானம் என்ற நான்காம் பாகம் முடிகிறது. அடுத்த பகுதி ஆழ்வார் அருளிய திருமாலையின் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும். எங்களின் வரும் வலைப்பதிவில் நாம் அனுபவித்து மகிழலாம். நன்றி.

இனி அடுத்த பாசுர அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.

One Comment on “திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்

  1. Extremely well presented. Thank you and Congratulations. Especially the hand holding of every layman like me through 01-34 serves as a fantastic prelude before knowing about 35!

    Your very liberal quotations from Purusha Suktam as well as citing Vibishana Saranagathi Sugreeva- Rama Samvatham are apt and Brilliant.

    May God Bless you to publish more and more such Pasurams and Explanations!!

    Sincerely Yours
    Swaminathan S

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: