குரங்குகள் மலையை நூக்க

To read this weblog in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருவரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவத்அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியின் முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம். கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு என்ற பாசுர விளக்கத்தையும் முன்வலைப்பதிவில் பார்த்தோம்.

இனி அடுத்த பாசுரம்.

பாசுரம் 27

குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டு ஓடி, தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன், மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால், அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே திருமாலை 27

வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால், மலைகளை தள்ளிக்கொண்டு வருவது போலவும், தண்ணீரிலே மூழ்கி, பின்னர் கரையில் உள்ள மணலில் புரண்டு ஓடி, அலைகளுடன் பொங்கும்படியான கடலை, தூர்ப்பதில் ஈடுபட்ட கபடம் அற்ற அணில்களைப்போலவும், தான் இல்லை என்றும், மரங்களைப்போல் கடினமான மனதை உடையவனாய், வஞ்சனையில் ஈடுபட்டுள்ளவனாய் எல்லாவித கைங்கர்யங்களுக்கும் தகுதி வாய்ந்த, பெருமை உடைய, தான் திருவரங்கனுக்கு நெஞ்சார அடிமை செய்யாமல், அனர்த்தப்பட்டு நிற்கிறேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

சென்ற இரண்டு பாசுரங்களில் சொல்லியது போல், மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம்.

குரங்குகள் மலையை நூக்க

குரங்குகள் என்று பன்மையில் சொல்லி, மலை என்று ஒருமையில் சொன்னது, எண்ணிக்கையில் குரங்குகள் அதிகம் என்றும், மலைகள் குறைவாகவும் இருப்பது என்றும் ஒரு மலையை பல குரங்குகள் தள்ளிக் கொண்டு வருகின்றன என்றும் தெரிகிறது. ஒவ்வொரு வானர வீரரும் ஒரு மலையை ஒரு சிறு கல் போல் தூக்கும் சக்தி உடையவர் என்றாலும், மலைகள் குறைவாக இருப்பதால் இராம கைங்கர்யம் செய்யும் ஆசையால் பல குரங்குகள் ஒரு மலையை தொட்டு வருகின்றன என்று உரை ஆசிரியர் கூறுகிறார். மேலும், விலங்குகளுக்கு இத்தகைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வருமா என்று கேட்டுக்கொண்டு, சேவையை ஏற்றுக்கொள்ளும் ஸ்வாமியான ஸ்ரீ ராமபிரான், பொருத்தமான ஸ்வாமி ஆனதாலும், அவர் வில்லும் கையுமாக நிற்கும் நிலையைக் கண்டவுடன், ஞானம் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசம் இல்லாமல் சிறு துரும்பு போன்றவைகளும் கூட கைங்கர்யம் செய்யும் என்று சொல்கிறார்.

மலையை நூக்க

மலையை கடலில் போட என்று சொல்லாமல், நூக்க என்ற சொல்லால், மலையை தள்ளிக்கொண்டு வருவது என்று சொல்வது, முதலில் வரும் மலையை தள்ளிக்கொண்டு வரும் வானரக்கூட்டத்தில் இருந்து அடுத்த வானரக்கூட்டம் மலையைபெற்றுக்கொண்டு அப்படியே அடுத்து வரும் வானரக்கூட்டத்திற்கு கொடுக்க, இப்படி மலையை யாரும் தூக்காமல் கைமாறிமாறி, கடலில் தள்ளி விட்டன என்று கருத்து.

குளித்து

இராமாயணம், யுத்தகாண்டத்தில் (5.9) இராமர், சீதையை நினைத்து தன் உடல் மிகவும் கொதித்து உள்ளதாகவும், தான் அப்படியே சமுத்திரத்தில் சிறிது நேரம் இருந்தால், அந்த ஜுவலிக்கின்ற காமாக்னியானது ஜலத்தில் கூட கஷ்டப்பட்டே தகிக்கும் என்றும், நீரெல்லாம் வற்றி விடும் என்றும் கூறுகிறார். எம்பெருமான் சீதாபிராட்டியின் பிரிவால் வாடுவதை பார்த்த வானரவீரர்கள் எல்லோரும் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு, மிகவும் வேகமாக கடலில் அணைக்கட்டுவதை காட்டுகிறது என்று உரையாசிரியர் சொல்கிறார்.

குளித்து …. அணிலம் போலேன்

இங்கு ஆழ்வார் முதலில் அணிலின் பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.

  • குரங்குகள் மலைகளை தள்ளிக்கொண்டு போவதை பார்த்து, எம்பெருமான் பிராட்டியை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு, அந்த வேகம் போதாது என்று எண்ணின.
  • மலைகளை கடலில் வெறுமே போட்டுவிட்டால், பாலம் கட்டி முடியாது, அவைகளை பூசவேண்டும், ஒரு குரங்கும் அதை செய்யவில்லை;
  • மலைகளை பூச மணல் வேண்டும், அதையும் மலைகளுக்கு நடுவே போடவேண்டும், அவற்றை இந்த குரங்குகள் செய்ய வில்லை.
  • அதனால், அணில்கள் கடலில் மூழ்கி, கரையில் புரண்டு தன்னுடைய உடல்களில் மணலை ஒட்டி மீண்டும் கடலில் உள்ள அந்த மலைகளுக்கு இடையே மீண்டும் கடலில் குளித்தன. (குளித்து)
  • இவ்வாறு அணில்கள் கடலில் உள்ள மலைகளை பூசுவதாக நினைத்தன.
  • இப்படி அடிக்கடி கடலில் முழுவதால் அந்த தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொண்டு போக முடியும், அதனால் கடல் தண்ணீரும் சீக்கிரத்தில் வற்றி விடும் என்று அணை கட்டும் இராம கைங்கர்யத்தில் அணில்கள் ஈடுபட்டன.
  • இவை எவ்வளவு சிறியவை, இதனால் அணை கட்டிமுடிக்கமுடியாது என்று எல்லாம் அணில் நினைக்காமல், இராம கைங்கர்யத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தன.
  • குரங்குகளால் பூச முடியாமல் போன, ராமகாரியத்தை, நம்மால் செய்ய முடிகிறதே என்ற கர்வத்துடன் அணில்கள் ஓடிஓடி சேவை புரிந்தன என்பதை ஆழ்வார் ‘தாம்‘ என்ற வார்த்தையால் சொல்கிறார்.
  • தாம் என்பதற்கு சிறிய மேனி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
  • தண்ணீரில் இவ்வாறு மணலை உதிர்த்து விட்டு, மீண்டும் குளித்து, பின் அதிக மணலை தன்னுடைய உடம்பில் ஓட்டும் என்ற தவறான நம்பிகையால், கடற்கரையில் வெகு தூரம் சென்று உருண்டு, பிரண்டு மீண்டும் கடலுக்கு சென்றன. (புரண்டிட்டோடி )
  • அப்பொழுது அதனை கவனித்த வானரங்கள் ஏன் இவ்வளவு வேகம் என்று கேட்டதற்கு, இராமபிரான் துக்கமாக உள்ளார், மத்திய உணவு இலங்கையின் வடக்கு வாசலில் தான், அதற்குத்தான் இந்த வேகம் என்று சொல்லி, வானரங்களுக்கு வேகம் போதவில்லையே என்று குறைபட்டுக்கொண்டன.
  • இராம காரியத்தில் உள்ள விருப்பத்தால், தம்மால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியமா என்று யோசிக்காமல், அணில்கள் அந்த சேவையை தொடர்ந்தன.
  • அலைகளால் பொங்குகின்ற கடலை அடைப்பதற்கு இந்த சிறிய அணில்கள் முயற்சி செய்தன. (தரங்க நீரை அடைக்கல்)
  • தாங்கள் தான் மேஸ்திரிகள் போல் இருந்து கடலை அடைகின்றோம் என்றும், தங்களுக்கு உதவியாக வானரங்கள் மலையை கொண்டு கடலில் கொட்டுகின்றன என்றும் அணில்கள் நினைக்க தொடங்கின. (உற்ற)
  • அணில்கள் இந்த காரியத்தை கைங்கர்யமாக செய்கின்றவே தவிர, ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை (சலம் இலா அணிலம் )
  • அணில்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவும் கடலை அடைக்க உதவி இல்லாமல் இருக்கும்போது அது எப்படி எம்பெருமான் கைங்கர்யமாக கருதப்படுகிறது என்றால், அவைகளின் எண்ணத்தில் உள்ள சுத்தத்தன்மையே போதுமானது என்று ஆழ்வார் சொல்கிறார். எண்ணம், எம்பெருமான் விரைவில் கடலைகடந்து இலங்காபுரியை அடையவேண்டும் என்பதே.

சலமிலா என்பதை, சலனம் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு, ஆழ்வார், மனிதர்கள் போல், சாஸ்திரங்களால் வசப்படாமல், கைங்கர்யம் செய்ய கை கால்கள் கூட இல்லாமல், குளித்து, ஓடி, புரண்டு, என்று பல செயல்கள் செய்யும் இந்த தாழ்ந்த விலங்குகளிடம் உள்ள நல்ல எண்ணங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை, சென்ற பாசுரத்தாலும் (குளித்து மூன்று) இந்த பாசுரத்தாலும் சொல்கிறார்.

எல்லா விருப்பங்களும், என்றும் நிறைவேற பெற்று இருக்கும், எம்பெருமானுக்கு ஜீவாத்மாக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது இந்த நல்ல எண்ணம் ஒன்றைத்தான். பூர்ணனான எம்பெருமானுக்கு பூர்ணமில்லாத ஜீவாத்மாக்களால் ஒன்றும் செய்து விட முடியாதுதான். அதற்காக அற்ப ஞானமும், அற்ப சக்தியும் உள்ள தான் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்குவது பாக்கியம் இல்லாதவன் செய்வது. பூர்ணனான எம்பெருமானுக்கு ஒரு சிறிது காரியம் செய்தாலும், மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வான் என்று எந்த பிரதிபலனையும் கருதாமல் அவனுக்கு தொண்டு செய்பவர் ஒரு சிலரே. அப்படி செய்யும் அணிலுக்கு உள்ள ஈடுபாடு தனக்கு இல்லையே என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

அணைக்கட்டியதை பற்றிய சில பாசுரங்கள் :

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய், சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து, மலைகொண்டலை நீரணைகட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன், தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 1.5.1)

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து, கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று, தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ, கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. திருமங்கையாழ்வார், (பெரிய திருமொழி, 8.6.4)

மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே ! (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 8.8)

குரை கடலை அடல் அம்பாள் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அர்க்கரோடு இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி 10.7)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய, செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 11)

மரங்கள்போல் வலிய நெஞ்சம்

இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று 17 வது பாசுரத்தில் பாடிய ஆழ்வார், இங்கு மரங்கள் போல் வலிய நெஞ்சம் என்று பாடுகிறார். இரும்பினை தீயில் இட்டு தனக்கு வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும், ஆனால் மரத்தினை தீயில் இட்டால் சாம்பல் ஆகிவிடும் என்று காரணத்தால் ஆழ்வார் தனது நெஞ்சினை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

சலமிலா மரங்கள் போல் என்று ஒரு அர்த்தமும் சொல்லப்படுகிறது. மரத்தை ஆயுதத்தால் அசைத்து விடலாம் என்றும், ஆழ்வார் தன் நெஞ்சம் அதைவிட வலியது, எதனாலும் அசைக்கமுடியாது என்று கொள்ளலாம்.

வஞ்சனேன்

இப்படி கடினமான நெஞ்சம் இருக்கும் போது, பார்க்கிறவர்கள் இவன் நெஞ்சம் எம்பெருமானை நினைத்து இப்படி உருகுகிறதே என்று நினைக்கும்படி நடிக்க வல்லவனாக தான் இருப்பதாக ஆழ்வார் சொல்கிறார். உலகில் உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, எம்பெருமானிடத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல், ஆனால் பார்ப்பவர்கள் இவனைப்போல் உண்டோ என்று மயங்கும்படி உட்கருத்தை மறைத்து வாழ்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார். இறை இறை உருகும் வண்ணம் என்று 17வது பாசுரத்தில் சொன்னது இப்படி வேஷம் போட்டது என்று ஆழ்வார் சொல்கிறார்.

நெஞ்சு தன்னால்

அணில்கள் தங்களுடைய நல்லெண்ணத்தாலே கைங்கர்யம் செய்தது போல், அவர் கொடுத்த நெஞ்சத்தை வைத்து, அருகே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்டு இருக்கலாம் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.

அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே

ஆட்செய்தல் என்றால் அது முழுமையாக பரிபூர்ணமாக செய்வதாகும், மேலே சொன்னது போல், கொஞ்சம் ஈடுபாடு இருந்தால், அது ஆட்செய்தல் என்று ஆகாது. அணில்களின் நல்ல எண்ணத்தையே கைங்கர்யமாக திருவுள்ளம் கொள்ளும் எம்பெருமானைக் கருத்தில் கொண்டால் அவன் அந்த கொஞ்சத்தையே முழுமையாகக்கொள்வான் என்று ஆழ்வார் சொல்கிறார்.

அளியத்தேன்

இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31-25), சீதையும், இராமனும் மலை சரிவுகளில் ரம்யமாக பயணம் செய்யும் போதும் மற்றும், அவர்கள் உறங்கும் போதும், முழித்துக்கொண்டு இருக்கும் போதும் அவர்களுக்குத் தேவையான எல்லாவித சேவைகளையும் செய்வேன் சென்று லக்ஷ்மணன் கூறியது போல், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வடிவில்லா அடிமை செய்ய வேண்டியதற்காக பிறந்த ஆத்மா அல்லவோ, என்று ஆழ்வார் தன்னுடைய ஆத்மாவை எண்ணி அது வீணாகிவிட்டதே என்று கவலைப் படுகிறார்.

அயர்க்கின்றேனே

இப்படி தன்னுடைய ஆத்மா வீணாகி விட்டதே என்பதற்கான காரணம், தான் எம்பெருமானை மறந்ததுதான் என்றும், தகுதி இல்லாதால் அல்ல என்றும் சொல்கிறார். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (6.2.2), மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின் மனத்தால், இறந்தேன் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

ஆழ்வார் தன்னுடைய வர்ணாசிரம தர்மத்திற்கு தகுந்த, கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, என்று இந்த பகுதியின் முதல் பாடலிலும், இரண்டாம் பாடலில், தான் எந்த மனிதன் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்வதில்லை என்றும் இப்போது மூன்றாம் பாடலில் குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்கள் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல, ஆழ்வார் எதுவும் செய்தது இல்லை என்று நைச்சானுசந்தானத்தை தொடர்கிறார்.

இனி மீண்டும் அடுத்த பாசுரத்தில் பார்க்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: