A Simple Devotee's Views
வேளுக்கைவல்லி தாயார் ஸமேத முகுந்தநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவேளுக்கை | |||
மூலவர் | அழகியசிங்கர், ந்ருஸிம்ஹர், முகுந்தநாயகன், ஆள் அரி, | |||
உத்ஸவர் | முகுந்தநாயகன் | |||
தாயார் | வேளுக்கை வல்லி , அம்ருதவல்லி | |||
திருக்கோலம் | அமர்ந்த திருக்கோலம் (யோக நரசிம்மர்) | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 4 | |||
மங்களாசாசனம் | பேய் ஆழ்வார் 3, திருமங்கையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44 6727 1692 ; +91 98944 15456 |
தொண்டை நாட்டு திவ்யதேசங்கள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி
முன்னுரை
இன்று(25 5 2021) நரசிம்ம ஜெயந்தி. ஆழ்வார் பாடிய திவ்யதேசங்களில் நரசிம்மருக்கு என்று சில திவ்யதேசங்கள் சிறப்பாக உள்ளன, அஹோபிலம் (சிங்கவேள்குன்றம்), திருக்கடிகை (சோளிங்கர்), திருவேளுக்கை, திருவல்லிக்கேணி என்ற சிலவற்றை உதாரணமாக கொள்ளலாம். பொதுவாக எல்லா ஆழ்வார்களும், பற்பல திவ்யதேச எம்பெருமான்களை அழகியசிங்கராகவே (நரசிம்மராகவே) அனுபவித்து உள்ளனர். இன்று நாம் இந்த பதிவில் திருவேளுக்கை பற்றி சிறிது காண்போம். எல்லோருக்கும் அழகியசிங்கரின் அருளாசி கிடைக்க பிரார்த்தித்து தொடங்குவோம்.
பெருமாளின் அவதாரங்களில்
பல பெருமைகளுடன் போற்றப்படும் அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகும்.
பிரஹ்லாதன் கூப்பிட உடனே, தூணிலிருந்து புறப்பட்ட மாதிரி, தனக்கு உதவ வரவில்லையே என்று மகள் நான்கு பக்கங்களும் சுற்றி சுற்றி பார்த்து வருந்தியதாக தாய் சொல்லும் பாடல் நம்மாழ்வாரின், ” ஆடியாடி அகம் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும் நாடிநாடி நரசிங்காவென்று, வாடி வாடும்“ (திருவாய்மொழி 2.4.1).
கோவில் பற்றி
வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள், நரசிம்மன் ஆசையுடன் இருக்கும் இடம் என்ற பொருளோடு இந்த இடம், வேள் இருக்கை, என்றாகி மருவி வேளுக்கை ஆனது.
தான் இல்லாமல் பிரம்மன் செய்யும் யாகத்தைத் தடுத்து நிறுத்த சரஸ்வதி தேவி பல அரக்கர்களை யாக சாலையை நோக்கி அனுப்பினாள். நரசிம்மர் மேற்கு திசையில் இருந்த ஹஸ்திசைலம் குகையில் இருந்து வெளி வந்து வேறொரு நரசிம்ம உருவில், அசுரர்களை துவம்சம் செய்து அவர்கள் மீண்டும் காஞ்சிக்கு வராதபடி அங்கேயே மேற்கு நோக்கி யோகநரசிம்மராக அமர்ந்த திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார். இது காமாஸிஹா நரசிம்மன் சன்னதி.
பெருமாள், தாயார், கருடன் சக்ரத்தாழ்வார் சன்னதிகள் உள்ளன. நரசிம்மஸ்வாமியின் உக்ரம் தாங்காமல் கருடன் சற்று தலை தாழ்ந்து பயத்துடன் இருப்பது ஒரு சிறப்பு.
ஸ்தல புராணத்தில் பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீஹம். ஆனால்
தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று ஆழ்வார் சொல்வது போல், மூலவர் அழகியசிங்கர் அழகு; உத்சவர் முகுந்த நாயகன் மிக மிக அழகு.
ஆழ்வார் ஆச்சாரியார்
‘மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ (பெரிய திருமடல் 127) என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம். ஆள் அரி என்பது அழகான தமிழ் திருநாமம்.
பேயாழ்வார், “ சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம்கடவார் தண்டுழா யார் ” (மூன்றாம் திருவந்தாதி, 26) என்று இந்த திவ்யதேசத்தை. எம்பெருமான் என்றும் வாழும் (நித்யவாஸம்) இடங்களை சொல்லும் போது சொல்கிறார்.
“இருந்து வேளுக்கை (34) ” என்ற பாசுரத்தில், திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் எம்பெருமான் வீற்றுஇருந்து சேவை சாதிப்பது, முன்பு உலகளந்த களைப்பு தீருவதற்கோ என்று பேய்ஆழ்வார் வினவுகிறார்.
இன்னொரு பாசுரத்தில் இந்த திருத்தல எம்பெருமானின் சௌலப்ய, ஸௌசீல்ய அனுபவங்களில் ஆழ்வார் திளைக்கிறார். “விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம், மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு” (62) என்பதில் கடைசி வரியில் உள்ள நீர் ஏற்றான் தாழ்வு என்பது வாமன அவதாரத்தின் போது, தாழ்ச்சிதோற்ற இருந்த எளிமையை சொல்வது ஆகும்.
ஸ்வாமி வேதாந்த தேசிகன், இந்த திவ்யதேச எம்பெருமானுக்கு காமாஸிகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தை அருளியுள்ளார். அதனால் இந்த சந்நிதியை காமாஷிகா நரசிம்ம சந்நிதி என்று அழைப்பார்கள்.
Google Map
திருவேளுக்கைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருவேளுக்கை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்
நம்முடைய வலைப்பதிவில் இருந்து