இனிதிரைத் திவலை மோத


To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.

அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார். அடுத்து, கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார். அடுத்த 17வது “விரும்பி நின்று” பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும், இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாள் தனது அழகைக் கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தெரிவித்தார். இனி அடுத்த பாசுரம்.

திருமாலை பதினெட்டாவது பாசுரம்

இனிதிரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே, தனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான், கனியிருந்து அனைய செவ்வாய், கண்ணனைக் கண்ட கண்கள், பனி அரும்பு உதிருமாலோ, என் செய்கேன் பாவியேனே. (திருமாலை 18)

சென்ற பாசுரத்தில், ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார். அதனால் வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக ரசிக்கமுடியவில்லையே என்று இந்த பாடலில் ஏங்குகிறார். ஆழ்வார்கள் பொதுவாகத் தங்களைப் பாவிகளாக, அதிகமாக பாவம் செய்ததாகவும், அதனால் தான் பரமபதம் அடையமுடியவில்லை என்றும் என்று சோகமாக பாடுவார்கள், ஆனால் இந்த பாடல் அப்படி இல்லை.

இந்த பாசுரத்தில், ஆழ்வார், எம்பெருமானை தரிசிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த போது, அந்த ஆனந்தம் அளவிற்கு அதிகமாக போனதால், அதன் அடையாளமாக ஆனந்தக் கண்ணீர் பெருக, ஐயோ! இக்கண்ணீர் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது தரிசிக்க முடியாமல் செய்கின்றதே என்று கவலையுற்று கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாது போன்ற ஒரு பெரிய பாவத்தை எண்ணி தன்னையே வெறுத்துக் கொள்ளும் பாடல்.

இனிமையான அலைகளில் இருந்து வரும் நீர்த்துளிகள் அடிக்க, அந்த குளிர்ந்த அலைகளை உடைய கடல் போன்ற காவிரியின் மேல், தனி ஒருவனாய் கண் வளர்ந்து அருளி, அரசு செலுத்தும் செந்தாமரை கண்ணனும், தனக்கு ஸ்வாமியுமான, கொவ்வை கனி போன்று சிவந்த வாயினையுடைய ஸ்ரீ கிருஷ்ணனை கண்ட கண்கள் குளிர்ந்த ஆனந்த கண்ணீரை பெருக விடுவதால், நன்றாக சேவிக்க முடியாத பாவியாகிய தான் என்ன செய்வேன் என்று ஆழ்வார் சொல்வது போல் உள்ளது இந்த பாடலின் பொருள்.

இனிதிரைத் திவலை மோத

இனிது என்பதில் கடைசி எழுத்து குறைந்து இனிதிரை என்று வந்துள்ளது. இதுபோல், ஒண்சங்கதைவாளாழியான் (திருவாய்மொழி 8.8.1) ஒண் சங்கு கதை வாள் ஆழியான் என்று உள்ளது. இனிமையான சிறு துளிகள், பெரும் அலைகளில் இருந்து சிதறி (அங்கு சயனித்து இருக்கும் பெரியபெருமாளின் திருமேனியை) தொட்டு என்பதே இதன் பொருளாக கொள்ள வேண்டும். மோத என்று சொல்லியதால், பெரியபெருமாளின் திருமேனியின் மென்மையை சொல்கிறார். சிறு துளி தான், மெதுவாகத்தான் பெருமாளை தொட்டது, இருந்தாலும், பெரியபெருமாளின் மென்மையை பார்க்கும்போது, அது மோதுவது போல் இருந்தாக ஆழ்வார் சொல்கிறார். முன்பு (திருமாலை, 11) அரக்கர்கோனை செற்ற நம் சேவகனார் என்று பெரியபெருமாள் நம்மை காக்கும் போது, சக்தியை சொன்னார். இங்கு பெரியபெருமாளை அனுபவிக்கும்போது மென்மையை சொல்கிறார்.

எறியும் தண் பரவை மீதே

பெருமாளின் களைப்பை போக்கும் விதமாக குளிர்ந்த அலைகளை கொண்ட கடலின் மீது சயனித்து இருக்கும் பெருமாளை போல் இங்கு காவிரியின் மேல் கண்வளர்ந்து அருளுகின்ற பெரிய பெருமாளை ஆழ்வார் சொல்கிறார். பரப்பாலும் நீர்பெருக்காலும் காவிரி கடலை ஒத்து உள்ளது என்றும் கொள்ளலாம்.

தனிக் கிடந்து

தனி என்பது ஒப்புமை இல்லாதவர் என்று கொள்ளலாம். நினைவுஅறிந்து அவனுக்கு மட்டுமே சேவை செய்ய காத்திருக்கும் நித்தியசூரிகளும், முக்தாத்மாக்களும் நிறைந்த பரமபதத்தை விட்டு திருவரங்கத்திற்கு வந்து, இங்குள்ள பக்தர்களின் மேல் உள்ள ஆசையினால், யாராவது ஒருவராவது தன்னை வந்து சேர மாட்டார்களா என்று தனியாகக் காத்துகொண்டு இருப்பதாகவும் கொள்ளலாம்.

முக்தி பெறுவதற்கான காரியங்களை செய்யாமல், இந்த உலக வாழ்க்கையில் தங்கள் நேரத்தை செலவழித்து, அதையே பெரிய இன்பமாக நினைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த பூவுலகில், தனியேன் வாழ்முதலே(திருவாய்மொழி, 2.3.5) என்று பிரார்த்திக்கும் நம்மாழ்வார் போன்ற, தனி ஒருவனைப் பெறுவோமா என்ற ஆசையினால் அன்றோ, தனியாக வந்து சயனித்து இருப்பது என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம். நம்மாழ்வார், திருவாய்மொழி (10.10.1)ல், மறுபடியும் “தனியேன் ஆருயிரே” என்று சொல்லி, தான் சாதாரண உலகத்தாருடன் பொருந்த வில்லை என்பதை தெரிவிக்கின்றார்.

அரசு செய்யும்

‘நீ என்னுடையவன்’ என்று பரமாத்மா / பெருமாள் சொன்னால், அதனை மறுத்து, ‘நான் எனக்கே உரியவன்” என்று சொல்லும் ஜீவாத்மாக்கள் இருந்தால் அது ஈரரசு (இரண்டு அரசு); அத்தகைய ஈரரசினை தவிர்த்து தனியாக ஒரு அரசாக மாற்றி, ஜீவாத்மாக்கள் ‘நமஹ ‘ (நான் எனக்கு உரியவன் அல்லன்) என்று சொல்லும்படி மாற்றி ஆட்சி செய்வதே இங்கு அரசு எனப்படுகிறது.

மஹாபாரதத்தில் (சாந்தி 344.45) கூறியதுபோல் நித்யஸூரிகள் எப்போதும் அஞ்சலி செய்துகொண்டும், நமஹ என்று சொல்லிக்கொண்டும் அதில் ஆனந்தப்பட்டு கொண்டும் இருப்பதைப்போல், இந்த உலகத்தில் உள்ளவர்களையும் அகங்காரம், மமகாராம் இவற்றை தொலைக்கவைத்து ஆட்சி செய்கிறான் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

தாமரைக் கண்ணன் அம்மான்

இந்த உலகத்தில் உள்ளவர்களின், அகங்காரம், மமகாராம் முதலியவற்றை எதை கொண்டு அழிக்கிறான் என்று கேட்டுக்கொண்டு, தன்னுடைய கண் அழகினை காட்டி மயக்குகிறான் என்பதையே இந்த பதங்கள் சொல்கின்றன. கையில் பிரம்மாஸ்திரம் இருக்கும் போது அதை கொண்டு வெல்லமுடியாத எதிரிகளே கிடையாது அல்லவா, அதைபோல் தன்னுடைய தாமரை கண்களை கொண்டு பரமபதத்தில் உள்ளவர்களை வென்றதை போல், இவ்வுலகத்தில் உள்ளவர்களை வெல்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார். நித்யஸூரிகள் இந்த தாமரைக்கண்களுக்கு தோற்று இருப்பார் என்பதை “தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை”, (திருவாய்மொழி 2.6.3) என்று நம்மாழ்வார் கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

இப்படி கண் அழகினால் மயங்கியவர் யார் என கேட்டுக்கொண்டு, இவ்வுலத்தாரில் மிகவும் கடைப்பட்டவனாக இருக்கும் தன்னை தோற்கடித்தபின், இவரால் வெல்ல முடியாதவர் யாரும் இல்லை என்றும், தானே அப்படி அடிமைப்பட்டவர் என்பதையும் சேர்த்து ‘அம்மான்’ என்று சொல்லி இருக்கிறார்.

கனியிருந்து அனைய செவ்வாய்

இப்படி அகங்காரம் அறுக்கப்பட்டவர் அனுபவிக்கும் விஷயம், கனி போன்று இனிமையாகவும் அழகாகவும் இருக்கும் பெரியபெருமாளின் திரு பவளவாய் என்று ஆழ்வார் கூறுகிறார். கனி என்று நேரிடையாக கூறாமல், கனி இருந்து அனைய என்று சொன்னதால், நாள் செல்லச் செல்ல இந்த பவள செவ்வாய் என்ற கனி, மற்ற கனிகளை போல் அன்றி, புதுமை குறையாமல் அப்படியே இருக்கும் என்கிறார். விஷ்ணு புராணத்தில் பராசர முனிவர் கூறிய ‘அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே” (1.2.1) என்பதை குறிப்பிடலாம்.

கண்ணனை

பராசர பட்டர் என்னும் ஆச்சார்யர் பெரியபெருமாளே கண்ணன் என்றும், நம்பெருமாள் ஸ்ரீராமன் என்று கூறுவதையும் இங்கு குறிப்பிடவேண்டும். கிருஷ்ணாவதார காலத்திற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற காரணத்தோடு திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கின்ற பெரியபெருமாள் என்றும் குழந்தை கிருஷ்ணன் ரொம்பவும் அதிகமாக விளையாட்டு காட்டினாலும் (துஷ்டத்தனமான), அவற்றைப் பொறுத்துக் கொண்டு அவனுக்கு மென்மேலும் வெண்ணெய் மற்றும் தயிர் கொடுத்து வளர்த்த தோற்றம் தெரியும்படி உள்ள பெரியபெருமாள் என்றும் திருவரங்க மூலவரைப் பற்றி பராசர பட்டர் கூறுவார். அதேபோல், எப்போதும் வசிஷ்டர் போன்ற அறிவார்ந்த முனிவர்களுடன் பழகியதால் உண்டான அடக்கம் கண்களில் தெரியும்படி உள்ள நம்பெருமாள் என்று உற்சவ மூர்த்தியைப் பற்றியும் பராசர பட்டர் கூறுவது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ட கண்கள்

பலகாலங்களாக பெரியபெருமாளை சேவிக்காத இழப்பை சரி செய்து, தற்பொழுது அந்த பாக்கியத்தைப் பெற்ற கண்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.

பனி அரும்பு உதிருமாலோ

கண்டு அனுபவிக்கின்ற காரணத்தால், ஆழ்வாரின் கண்களில், ஆனந்த கண்ணீர் வெள்ளம் போல் பெருகி வருகின்றது. அது குளிர்ந்து இருந்ததாக சொல்லி இருப்பதும், வறுத்த பயிறு முளைக்கும்படி இருந்ததாக சொல்லி இருப்பதும், விரக தாபத்தில் இருந்தால் அந்த கண்ணீர் சுடும் என்றும் விளக்கம் கொடுத்து இருப்பது சுவாரஸ்யமே. ஆலோ என்று சொல்வது பின்னால் சொல்லப்போகும் வருத்தத்தின் மிகுதியை சொல்வது.

என் செய்கேன் பாவி யேனே

கண்ணீர் அருவிபோல் பெருகி வருவதால் அது சுவர் போல் இருந்து பெரியபெருமாளை சேவிக்க முடியாமல் மறைப்பதால், என் செய்வேன் என்று ஆழ்வார் சொல்கிறார். காண்பதற்கு அரிய விஷயத்தை காணகிடைத்து இருந்தும், தொடர்ந்து தரிசிக்க முடியாமல் கண்ணீர் சுவர்போல் மறைத்து இருப்பதை நினைத்து, தான் பாவி என்று வருந்துகிறார். பெரியபெருமாளின் பெருமைகள் அளவிடமுடியாதவை; அதனால் அவரை தரிசிக்கும் போது கிடைக்கும் இன்பமும், அதனால் வரும் கண்ணீரும் அளவிட முடியாதவைகளே. கண்ணீர் வரும் போது இடைவெளி இருந்தால், அப்போதாவது பெரியபெருமாளை காணப்பெறலாம், ஆனால் தொடர்ந்து கண்ணீர் வருவதால், அவரை காண முடியவில்லையே என்று ஆழ்வார் மேலும் வருந்துவதாக பாடல் அமைந்துள்ளது. இப்படி ஆழ்வாரின் அனுபவம், தண்ணீரால் வரும் வெள்ளக் கேடும், வறட்சி கேடும் ஒருங்கே அமைந்தது போல் உள்ளது என்று சொல்லி உரையாசிரியர் இந்த பாடலை நிறைவு செய்கிறார்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம். நன்றி.

3 Comments on “இனிதிரைத் திவலை மோத

  1. அடியேன் இராமாநுச தாசனின் வணக்கங்கள்.
    1. எம்மான் எனத் தான் ஆழ்வாரின் பாசுர வரிகள் அமைந்துள்ளன.”தாமரைக்கண்ணன் அம்மான்” என்றல்ல.
    எம்மான் என்ற சொல்லின் தனிச்சிறப்பான “என்னுடைய” அம்மான் என எம்பெருமானை உறவு கொண்டாடும் பாங்கு வெறுமனே “அம்மான்” என விளிப்பதில்பெரிதும் குறைந்தே காணப்படுகிறது என்பது அடியேனின் கருத்து.
    2. “பிராட்டிமார்கள் யாரும் இல்லாமல், தனியாக காட்சி கொடுக்கும் பெரிய பெருமாள் என்பது ஒரு பொருள்”- தனி என்ற சொல்லுக்கு இத்தகைய பொருள் சிறிதும் உகப்பாகாது. அண்ணங்கராச்சாரியார் உரையில்,தனி கிடந்து -“பிராட்டிமாருமில்லாமல் பரதேஸியாய்க் கிடக்கிறானென்றபடி யன்று;” -அன்று என மிகமிகத் தெளிவாக மறுத்துள்ளமையை நோக்கலாம்.”திரு”மால் அன்றோ அவன்😀
    நன்றி.🙏

    • அடியேன் இராமாநுச தாசன், வணக்கங்கள். முதற்கண் அடியேனின் நன்றிகளை ஏற்றுக்கொள்ளவும்.
      1. அம்மான் என்று பிரித்து படித்தது அடியேனின் தவறு. எம்மான் என்று விளக்கங்களில் இருந்தும், இங்கு விடுபட்டது கவனக்குறைவால் என்பது உண்மை. இதுபோல் தவறுகள் நிகழாமல் இருக்க ஆச்சாரியார் தயையை தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். வலைப்பதிவில் உடனே மாற்றிவிடுகிறேன்.
      2. தனிகிடந்தது என்பதற்கு தாங்கள் சொன்ன கருத்தும் அதற்கான விளக்கமும் மிக அருமை. அண்ணங்கராச்சாரியார் உரையையும் அடியேன் பார்த்து இருந்தேன், இருந்தாலும், இங்கேயும் கவனக்குறைவு ஏற்பட்டது என்பதே உண்மை. காரணம் என்று பார்த்தல், “வக்ஷ ஸ்தலம் தவிர, தனியாக பிராட்டிமார்கள் யாரும் இல்லாமல், காட்சி கொடுக்கும் பெரிய பெருமாள் அல்லது அப்படி திருஅரங்கத்திற்கு முதலில் வந்து சேர்ந்த பெருமாள்’ என்று உபன்யாசங்களில் அடியேன் கேட்டு இருக்கிறேன். மேலும் பதவுரையில், ‘தனியே வந்து கண்வளர்ந்தருளி” என்று சொல்லி இருந்ததையும் மனதில் கொண்டு இப்படி எழுத நேர்ந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
      அடியேன், ராமானுஜ தாசன்.

      • நன்றி தாசன்! 🙏🏽🙏🏽 தேவரீரின் பணி சீரியது, பாராட்டுதற்குரியது👏. பரஸ்பரம் கருத்து பரிமாறி எம்பெருமானைப் போற்ற , எம்பெருமான் நமக்குக் கொடுத்த பெரும் வாய்ப்பு எனக் கருதுகிறேன்.

        ‘வக்ஷ ஸ்தலம்’ வேறு, எம்பெருமான் வேறு என எவ்வாறு தனித்து உணர வாய்ப்பில்லையோ, அங்ஙனமே பிராட்டிமாருமே. இது இராமாநுச நற்றரிசனத்தின் சீரிய தத்துவம் என்பது அடியேனின் கருத்து.

Leave a Reply to supremeconceptsCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading