திருமாலை 36 – மழைக்கு அன்று

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் எம்பெருமான் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாக கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளை பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமான் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லாவற்றையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, அவனுக்கு அடிமை செய்பவன் போல தான் போட்ட, கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக நினைக்கிறார்.

ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், அவரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இந்த பகுதியின் முதல் பாசுரமான ‘தாவி அன்று உலகம் ‘ (35) , என்ற பாடலில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், என்று ஆழ்வார் கூறுகிறார்.

இனி, அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 36

மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே மதுர வாறே * உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு * உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே உன்னை யன்றே*அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகருளானே. (திருமாலை 36)

இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடாமல் மழை பெய்வித்த அந்த காலத்திலே பிருந்தாவனத்தில் பசு, கன்று மற்றும் அங்குள்ள அனைவரும் மழையினால் கஷ்டப் படுவதற்கு முன், மழையைத் தடுப்பதற்காக கோவர்த்தன மலையை தன்னுடைய திருக்கரத்தில் ஒரு குடையாக ஏந்திய பலம் பொருந்திய இளைஞனான எம்பெருமானை, இனிய ஆறுபோல், எல்லார்க்கும் விருப்பங்களையும் தீர்ப்பவனான எம்பெருமானை, மான் குட்டியின் விழிபோன்ற விழியையுடைய மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருக்கிறாரே, அந்த முழுமுதற் கடவுளை , அரங்கமா நகருளானை நோக்கியன்றோ தான் கூப்பிடுகிறேன் என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

சென்ற பாட்டில் ‘அணுகத்தகாதவன்’ என்று ஆழ்வார் விலக முடியாதபடி தன்னுடைய நீர்மையை (எளிமையை ) காட்டி, எம்பெருமான் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்துக் கொண்டு பின்பு, எம்பெருமானை அடைய வேண்டும் என்ற அவா, ஆழ்வாருக்கு அதிகமாக, அப்படி அவா கொண்டவர்களை எம்பெருமான் அழைத்து செல்லும் பரமபதத்திற்கு தன்னையும் உடனே கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைபட்டார். ஆனால் எம்பெருமான் ஆழ்வாருக்கு அஜீர்ணம் தீர்ந்து நன்றாக பசித்த பின், முழுமையாக உண்டு களிப்பது போல ஆழவாரும் தன்னை நன்றாக, முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வாரை காக்க வைக்க, ஆழ்வாரோ, விரோதி விஷயங்களை கண்டு பயந்தவராய், பெரியபெருமாள் நிம்மதியாக கண் வளரந்தருள முடியாதபடி, எல்லோரும் நீராய் உருகும்படி பெரும் குரலிட்டு கூப்பிடுகிறார்.

இனி சற்று விளக்கமாக,

மழைக்கு

ஆழ்வார் கோஷ்டியில் ‘மழை ‘என்று குறிப்பிட்டால் அது எம்பெருமான் கோவர்த்தன மலையை தூக்கி கல் மழையில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய இந்திரனின் கல் மழையையே குறிக்கும். ஆனை என்று பொதுவாக சொன்னாலும் அது கஜேந்திர ஆழ்வானையே குறிப்பது போல் இதுவும் ஒன்று. ஆயர்கள், இந்திரனால் வந்த கல்மழை ஆபத்தினை தீர்த்த எம்பெருமானை தஞ்சம் அடைந்தது போல் தானும் தன்னுடைய சம்சார துக்கங்களில் இருந்து விடுபட எம்பெருமானிடம் தஞ்சம் புகுகிறார். பசியினால் வாடுபவர்கள் செல்வந்தர்களை பார்த்து யாசிப்பது போல், ஆபத்தினை போக்கும் எம்பெருமானை நோக்கி, தன்னுடைய ஆபத்தினை போக்குமாறு வேண்டுகிறார்.

அன்று ஆயர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினைப் போன்றதே இன்று ஆழ்வாருக்கு சம்சாரத்தினால் ஏற்பட்ட ஆபத்து, அதனால் தன்னையும் காக்க வேண்டும் என்கிறார்.

கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினால் பாதிக்கபட்டவர்களை மட்டும் தான் எம்பெருமான் காப்பாற்றுவாரா என்றும், துன்ப மழையில் கஷ்டப்படும் எல்லோரையும் காப்பாற்ற கூடாதா என்றும், ஒரு ஊராக உள்ள எல்லோரும் துன்பப்பட்டால் தான் காப்பாற்றுவாரா என்றும், ஒரு ஊர் பட்ட துன்பங்களை தான் ஒருவனே படுவதாகவும் தன்னை காக்க கூடாதா என்றும் ஆழ்வார் கேட்கிறார்.

வரை

இந்திரன் ஏவ, மேக கூட்டங்கள், திரண்டு மழையை தொடர்ந்து கொட்ட, பசிக் கோபத்தாலே இப்படி மழை பெய்விக்கிறான் என்று உணர்ந்த எம்பெருமான், சக்ரத்தாழ்வானை கூப்பிடக்கூட நேரம் இல்லாமல், உடனே கையில் கிடைக்கக்கூடிய மலையை கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இதனால் எம்பெருமானுக்கு இந்த பொருளை கொண்டுதான் இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை என்பது விளங்கும். ஆகையால் ஆழ்வாரை ரக்ஷிப்பதற்கும் எந்த கருவியும் இல்லை என்ற குறையும் எம்பெருமான் சொல்லமுடியாது என்பது ஆழ்வாரின் எதிர்பார்ப்பு.

பசுக்களுக்கு மழையினால் துன்பம் ஏற்படுவதற்கு முன்னரே எம்பெருமான் காத்தான் என்பதை தெரிவிக்கவே முன்பு என்று கூறுகிறார். ஆயர்கள் முதலானோர் எம்பெருமானை தவிர வேறு ஒருவரை சார்ந்து இருப்பவர் இல்லாததால் அவர்களுக்கு ஆபத்து வரும் முன்னரே காப்பாற்றுகிறான் என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு உரையாசிரியர் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்தில் இருந்து 49வது ஸ்லோகத்தை எடுத்துக்காட்டுகிறார். அந்த ஸ்லோகத்தின்படி, ஞான, சக்தியாதி குணங்கள் நிறைந்தவரும், அடியவர்களை கை விடாதவனும் ஆன எம்பெருமானிடம், , விவேகம் இல்லாத மேகங்களால் இருள் அடைந்த திசைகள் உடைய இடத்தில், இடைவிடாமல் பொழிவதால், பலவிதமாக இன்னல்களை கொடுப்பதும் ஆகிய சம்சாரமாகிய இருள் மழையில் இருந்து வழி தவறிய அடியேனை காத்து அருள்வாயாக என்று ஆளவந்தார் வேண்டுகிறார். இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், தான் இப்படி சம்சார துன்ப மழையில் நனைந்து வருந்தி அழைத்த போதும், காப்பாற்ற வரவில்லையே என்று கதறுகிறார்.

ஏந்தும்

ஏழு வயதில் எளிதாக ஒரு பூ பந்தை தூக்குவது போல் தூக்குகிறார். ஆழ்வார் தன்னை காப்பாற்றுவதால் எம்பெருமானுக்கு ஒரு பாரமாக இருக்குமோ என்ற காரணத்தினால் தான் இன்னும் காப்பாற்ற படாமல் இருக்கிறோமோ என்று கவலை படுகிறார். நம்மாழ்வார் திருவிருத்தம் 21 பாடலில் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி என்று கூறியதைப்போல், நித்ய சூரிகள் இவனுக்கு சாற்றுவதற்கு மாலைகளை ஏந்தி இருப்பது போல், எம்பெருமான் அடியவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மலை ஏந்தி நிற்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

மைந்தனே

மலையை எளிதாக எடுப்பதற்கு தேவையான வலிமையை, மிடுக்கை, மைந்து என்ற சொல் காட்டுகிறது. மைந்தன் என்பது பாலகன் என்றும் தன்னை அண்டியவர்களை காப்பாற்றியதால் வயது குறைந்தவன் போல் ஆனான் என்றும் கொள்ளலாம். மனிதர்கள் தங்களுக்கு பிரியமான உணவு கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்து வயது குறைந்தது போல் தோன்றுவது போல், எம்பெருமானுக்கு அடியார்களை ரக்ஷிப்பது மிகவும் பிரியமான ஒன்று ஆகும். அதனால் அவன் வயது குறைந்து இளையவன் ஆகிறான். இப்படி ஆழ்வாரான தன்னை காப்பது, எம்பெருமானுக்கு விருப்பானான ஒன்றாக இருந்தும், தான் இப்படி கூப்பிட்டும் வராமல் இருக்கிறானே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

மதுரவாரே

இனிமையான வடிவை எடுத்து நதியைப் போன்றவனே என்கிறார். முன்பு சொன்னது போல் காப்பவனாகவே இல்லாமல், அடித்து விழுங்குபவன் ஆனாலும் அவனை விட்டு செல்ல முடியாதபடி அவனுடைய வடிவழகு இருக்கிறது என்று ஆழ்வார் கூறுகிறார். மதுர கடலே என்று சொல்லாமல் மதுர ஆறே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம், கடல் நீர் உப்பு கலந்தது, குடிப்பதற்கு முடியாது, கடல், ஆறு போல் இருக்கும் இடத்தைத்தேடி ஓடி வராது; ஆறானது வெள்ளம் வந்தால், அணையை கடந்து அடித்து கொண்டு வருவது போல், ஆழ்வார் தன்னை பாவி என்று சொல்லி விலக நினைத்த போது, ஆழ்வார் விட்டு செல்ல முடியாமல் அவரை அணைத்து கொண்டதை சொல்கிறார். ஆறு பயன்படுத்துபவன் இருக்கும் இடம் தேடி செல்வது போல், இந்த மதுர ஆறும் பரமபதத்தில் தோன்றி, இடைச்சேரியில் இருக்கும் ஆழ்வாரை தேடி வருகிறது என்கிறார்.

உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு, உழைக்கின்றேற்கு

இந்திரனால் பொழிந்த கல் மழையில் இருந்து வந்த ஆபத்தில் இருந்து அன்று காப்பாற்றியதாகவும் இன்று யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் ஆக அதற்கு ஆழ்வார் விடை தருகிறார். மான் குட்டியின் கண் போன்ற கண் அழகை உடைய பெண்களின் பார்வை ஆகின்ற வலையில் அகப்பட்டு துன்பப் படுகிறேன் என்கிறார். உள்ளே அன்பு ஒன்றும் இல்லாது இருந்தாலும், எல்லாம் இவனே என்பது போல், இவனை விட்டால் வேறு கதி இல்லாதவர்கள் போலவும், வெளி வேஷம் போட்டு, அழகிய மான் குட்டியின் பார்வையாகிய வலையில் சிக்கிய ஆழ்வாரை என்பதை, உழை என்பதால் மானையும், உழைக்கன்று என்பதால் மான் குட்டியையும் சொல்கிறார். வலையானது அகப்படுத்திக் கொள்வதாய், தப்பி போக முடியாததாக உள்ளதாய், அகப்பட்டவர்க்கு எந்த பலனும் தராததாய் இருப்பது போல் இந்த பெண்களின் கண் வலை, ஆழ்வார் எம்பெருமானை பற்றி ஈடுபட முடியாததாய், இனிமை இல்லாததாய், அதில் இருந்து தப்பி போவது அரிதாவதாக உள்ளதாய் இருக்கிறது என்கிறார்.

எனக்கு

கல் மழையின் போது காப்பாற்றப்பட்ட பசுக்களை போல் துன்பப்பட்டேன் என்று தெரிந்தும், இத்தகைய துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவன் எம்பெருமான் மட்டுமே என்பதையும் உணர்ந்தும், நீயே என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியும் என்ற ‘என்னை‘ என்று ஆழ்வார் கூறுகிறார்.

நோக்காது ஓழிவதே

கல்லால் வந்த ஆபத்திற்கு கல்லை எடுத்து காப்பாற்றியது போல், கண்ணால் வந்த ஆபத்தை கண்ணால் அருள் புரிந்து காப்பாற்ற வேண்டாமா என்று ஆழ்வார் கேட்பது போல் உள்ளது. என்னை காப்பாற்றும் போது மலையை தூக்கி காப்பாற்றும் சிரமம் இருக்காது. ஆழ்வாரின் நெஞ்சம் குளிரும்படி நோக்கினால் போதும் என்று சொல்கிறார். நோக்க வேண்டும் என்று பிரார்த்திக்காமல், நோக்காமல் இருக்கிறாயே என்று கேள்வி கேட்பதன் காரணம், தனக்கும் அவனுக்கும் உள்ள உறவை எண்ணியும், அவனது உறுதியான எளிமையை மனதில் கொண்டும் இருக்கலாம்.

இப்போதும் எம்பெருமான் வராததின் காரணம், உடனே கொடுத்து விட்டால், தான் ஒரு அயோக்கியன் என்பதை மீண்டும் சொல்லி, ஆழ்வார் தன்னை விட்டு விலகி விடுவார் என்ற எண்ணத்தினால் தான். ஆகவே அஜீரணம் தீர்ந்து பசி ஏற்பட்ட நன்றாக உண்டு அனுபவிப்பது போல, பின்னர் அனுபவம் கொடுத்து ஆழ்வார் தம்மை நன்றாக அனுபவிக்கட்டும் என்று எம்பெருமான் இருந்தான். நோய் வாய்ப்பட்ட குழந்தை மீண்டும் பசி என்று அழைப்பது, எப்படி தாய்க்கு இன்பம் கொடுக்குமோ அதே போல் எம்பெருமானும் ஆழ்வாரின் இது பற்றிய குரல் கேட்க, காத்து கிடந்தான்.

உன்னை அன்றே அழைக்கின்றேன்

ஆழ்வார், தான் யாராவது தாழ்ந்தவர் முன்னே நின்று தன்னை காப்பாற்று என்று கதறுகின்றேனா, காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார் என்று காத்து இருக்கும் பெரியபெருமாள் முன்னே தானே இருக்கிறேன், வேறு வேலை இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி இருக்கும் எம்பெருமானிடத்தில் தானே கேட்கிறேன் என்கிறார். ஆழ்வார் அழைத்தவுடன் வர வேண்டிய நிர்பந்தம் என்ன என்று, எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வாரின் சமாதானம் ஆதிமூர்த்தி என்ற அடுத்த பதத்தில் கொடுக்கிறார்.

ஆதிமூர்த்தி

பிரளய காலத்தில் எல்லா ஜீவாத்மாக்களையும் ஒன்றாக தன்னுடைய திருவயிற்றில் வைத்து காப்பாற்றி பின் சங்கல்பத்தால் எல்லாவற்றையும் படைத்த எம்பெருமான் தானே காப்பாற்ற வேண்டும் என்கிறார். குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருக்கு தானே உள்ளது, அழும் குழந்தை அம்மா என்று தானே கூப்பிடும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.

அரங்க மா நகருளானே

ஆழ்வாரை ரக்ஷிக்க பழைய கிணறுதனை தூர் வாருவது போல், உலகை படைத்த வரலாற்றை எல்லாம் சொல்ல வேண்டுமோ, பரமபதத்தில் இருந்து இந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கின்ற காரணம் போதாதா என்று கேட்கிறார். இங்கே பள்ளி கொண்டு இருப்பதற்கு, ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது இல்லாமல் வேறு என்ன பலன் உள்ளது என்று பெரிய பெருமாளை கேட்கிறார். எல்லோரும் அவரவர் பாவ புண்ணியங்களை மட்டும் பொறுத்து உஜ்ஜீவனம் கொடுப்பதனால், பரமபதத்தில் இருந்தே செய்து இருக்கலாமே இங்கே வந்து பள்ளி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்கிறார்.

அரங்க மா நகருளானே உன்னை அன்றே அழைக்கின்றேன் என்று சேர்த்து பார்த்தால், எம்பெருமான் பரமபதத்தில் இருந்து வந்து அழைக்க வல்லமை பெற்றவன் இல்லை என்றும், தனக்கு ருசி விளைவிக்க இங்கு, திருவரங்கத்தில், வந்து இருந்த பின், ருசி விளைந்த பின், தான் அதை இழப்பதோ என்கிறார். இப்படி கூப்பிட்ட பின்பும் எம்பெருமான் அருள் பாலிக்காமல் இருப்பது ஏன் என்றால், எம்பெருமானுக்கு பரமபதத்தில் உள்ளவர்கள் கூப்பிடுவதை தான் கேட்டு பழக்கம். சம்சாரிகள் குரல் உலக விஷயங்களுக்காகவே மட்டுமே எம்பெருமானை அழைப்பது என்று இது வரையில் இருந்தன. ஆனால் ஆழ்வார் ஒருவர் மட்டுமே, எம்பெருமான் முயற்சி செய்து தேடி பெற்றது, அதனால் இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டதாக சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

மீண்டும் இன்னொரு பாடலின் அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading