திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி- உலகமுண்ட பெருவாயா


தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை  இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கும் நான்கு வேதங்களுக்கு இணையான தமிழ் மறைகள் ஆகும். இதில் திருவிருத்தத்தில் உள்ள 100 பாடல்களுமே திருவாய்மொழியில் உள்ள 100 பதிகங்களுக்கு இணையாக சொல்லப்படுகின்றன. (திருவாய்மொழியில் மொத்தம் 1102 பாசுரங்கள், 100 பதிகங்கள் என்ற விவரங்களை இங்கே காணலாம். )

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும். இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.

இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இனி சுவாமி நம்மாழ்வார், திருவாய்மொழியில் திருவேங்கடத்தானைப் பற்றி பாடிய பாசுரங்களை பார்க்கலாம். திருவாய்மொழியில் மொத்தம் 40 பாசுரங்களில் சுவாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையானை குறித்து பாடியுள்ளார். அவற்றில், இப்பொழுது த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியை உலகமுண்ட பெருவாயா என்ற பதிகத்தில் உள்ள 11 பாடலைகளைப் பற்றிய ஒரு குறிப்பை இங்கு காண்போம். நன்றி.

திருவாய்மொழி

உலகமுண்ட பெருவாயா

ஆறாம் பத்து, பத்தாம் பதிகம் மிக விசேஷமானது. ஐந்து இடங்களில் சரணாகதி வேண்டிய ஆழ்வார்க்கு  இந்த பதிகத்தில்தான், பிராட்டியை முன்னிட்டு 6.10.1 முதல் 6.10,11 வரை சரணாகதி விண்ணப்பித்ததால், இது நிறைவேறியது என்று சொல்வார்கள். சரணாகதி என்பது எப்போதும் அவன் திருவடிகளிலேயே  என்பதால், இந்த பதிகத்தில்  உள்ள  ஒவ்வொரு பாசுரத்திலும், திருவேங்கடத்தையும், அவனது திருவடிகளையும் நேரிடையாகவே ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். எட்டாவது பாசுரத்தில் ப்ரம்மா, சிவன், இந்திரன் போன்றவர்கள் எம்பெருமானின் திருவடிகளை காண விழைவதையும், பதினோராவது பாசுரத்தில், எம்பெருமானே தன்னுடைய அடிகளில் வந்து அடைந்த ஆழ்வாரைப் பற்றியும் சொல்கிறார். மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடியின் சிறப்பினை போற்றுகிறார். திருமலையில், திருவேங்கடமுடையானும் தனது வலது திருக்கரத்தால், நாம் எல்லோரும் அவனிடம் சரண் அடைய, தன் பாதங்களையே நமக்கு காண்பிக்கின்றார்.

திருவடிகளின் சிறப்பு
உலகமுண்ட பெருவாயா

இந்த பதிகத்தில் ஆழ்வார், எம்பெருமான் பிராட்டிக்கு அருளிய த்வய மந்திரத்தின் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள  சரணம்  ப்ரபத்யே‘ என்பதை  “உலகம் உண்ட பெரு வாயா” என்று தொடங்கி விளக்குகிறார். த்வய மஹா மந்திரத்தின் இறுதி பகுதியை பின்பு ஒழிவில் காலம் எல்லாம் என்ற 3.3 பதிகத்தில் கண்போம். இதற்கு முந்திய சரணாகதிகள், திருமந்திரம் போல் என்றும், இந்த சரணாகதி த்வய மஹா மந்திரம் போல் என்றும் சொல்வார்கள். திருமந்திரத்தில் பிராட்டி சம்பந்தம், த்வயத்தில் உள்ளது போல் நேரடியாக இல்லை. அதே போல் மற்ற சரணாகதிகளில் பிராட்டி சம்பந்தம் எம்பெருமானின் ஸ்வரூபம் மூலம் வருவது போல் இல்லாமல் இங்கே அலர்மேல்மங்கை மலர்மார்பா என்று நேரடியாக உள்ளது. கால நியதி, அங்க நியதி, அதிகாரி நியதி என்று நிர்பந்தங்கள் எதுவும் இல்லாமல் ஆச்ரயிக்கும்படி தன்னுடைய சீல குணத்தை வெளிகாட்டிக்கொண்டிருக்கும் திருவேங்கடமுடையானிடம் ஆழ்வார் சரணாகதி செய்கிறார். ஒன்பது பாடல்களில் எம்பெருமானின் பெருமைகளை சொல்லி, பத்தாம் பாட்டில் சரணாகதி செய்கிறார்.

எண் விளக்கம்
1உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி. நெடியாய் அடியேன் ஆருயிரே! திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே! குல தொல் லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. (6.10.1)
பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் அமுது செய்த பெரிய வாயை உடையவனே, தேஜோ மயமான திவ்ய விக்ரஹத்தை உடையவனே, மிகப்பெரியவனே, அடியேனுக்கு உயிராய் இருப்பவனே, உலகுக்கெல்லாம் திலகம் போன்ற திருமலையிலே விளங்குகின்ற எம்பெருமானே, பரம்பரை பரம்பரையாக எம்பெருமானுக்கு அடிமையான அடியேன், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேரும்படி அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.
உலகம் உண்டது எம்பெருமான் உலகங்களை காக்கும் குணத்தை சொல்வது; ஆழ்வார் பிரளய காலத்தில் ஏற்படும் மொத்த துன்பமும் ஒருசேர தனக்கு ஏற்பட்டுள்ள இந்த சம்சாரத்தில் இருந்து காக்கவேண்டும் என்று வேண்டுவது. மிகவும் அனுபவிக்க வேண்டிய ஈட்டு ஸ்ரீஸூக்தியை கீழே காணலாம்; ஒரு உலகத்திற்கு ஆபத்து என்ற போது, ஓடி வந்த எம்பெருமான் ஆழ்வாருக்கு ஒரு ஆபத்து என்றால் ஓடிவரக்கூடாதா; பிரளய ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் எம்பெருமான் சம்சார ஆபத்தில் உள்ளவரை காப்பாற்றலாகாதோ; உதவி கேட்காதவர்களுக்குக் கூட உதவும் எம்பெருமான், உதவி கேட்கும் ஆழ்வாருக்கு உதவக்கூடாதோ; பிரளய காலத்தில் சரீரத்திற்கு வரும் ஆபத்தை நோக்குபவர், இங்கே ஆத்மாவிற்கு ஆபத்தை நோக்கக்கூடாதோ; ஜலப்ரளயத்தில் அமுங்குவோரை காக்கும் எம்பெருமான், பிரிவு துயரத்தில் வீழ்ந்தோரை காப்பாற்ற வேண்டாமோ; பிறரால் வந்த துன்பம் என்றால் காப்பாற்றுவாய், அவனால் நேரும் துன்பம் என்றால் காப்பாற்ற மாட்டானோ; சரணம் புகாதவரை தான் காக்க வேண்டும் என்று நியதி உள்ளதோ, சரணம் என்று வந்தவரை காக்க மாட்டானோ என்று ஆழ்வார் கதறுவது போல் உள்ளது.
பெருவாயா என்று சொன்னது எவ்வளவு செய்த பின்னரும், அடியவர்களுக்கு மேலும் செய்யவேண்டும் என்ற மனது கொண்ட எம்பெருமானை சொல்வதாகும். உதாரணம், திரௌபதிக்கு எல்லாம் செய்த பின்னரும், மனதில் புண்ணோடு தன்னடி சோதிக்கு எழுந்தருளிய எம்பெருமானின் நிலையை சொல்லலாம்.
உலப்பில் கீர்த்தியம்மானே என்று சொன்னது ராமாயணத்தில் சூர்ப்பணகை, தாரை, மண்டோதரி ஆகிய மூன்று பெண்களும், நிந்திக்கவேண்டிய சமயத்திலும், வாயார வாழ்த்தினதை சொல்வதாகும்.
நெடியாய் என்று சொன்னது, தொட்ட எல்லா துறை தோறும் தரை காண முடியாதபடி பெருகிச் செல்பவனே என்று சொல்வது. அதாவது எல்லா குணங்களுக்கும் எல்லை காணமுடியாதபடி உள்ளவனே என்று பொருள். இதில் விளக்கம் சொல்லும் போது, எந்த குணத்திற்கு எல்லை கண்டாலும், அவனுடைய சௌந்தர்யத்திற்கும் லாவண்யத்திற்கும் எல்லை இல்லாதவனே என்று சொல்கிறார். இதே போல், நெடியானே என்று பெருமாள் திருமொழியில் (4.9) குலசேகர ஆழ்வார் சொல்லும் போது, அடியவர்களை காப்பதில் எல்லை இல்லாத கருணை உடையவனே, என்று சொல்வதை நினைவில் கொள்ளலாம். அதற்கு இன்னொரு உதாரணம், எம் அடியார் அது செய்யார் என்ற பெரியாழ்வார் திருமொழி, 4.9.2 பாசுரம் ஆகும். அதேபோல் நெடியானே என்பதற்கு நீண்டகாலம் ஆனாலும் நினைவில் கொள்பவன் அல்லது நாம் ஒருகால் நினைக்க, அதையே பலகால் நினைத்ததாகக் கொண்டு செயல்படுபவன் என்று பொருள்படும்படி “நினைமின் நெடியானே” (திருவாய்மொழி 10.5.10) என்று நம்மாழ்வார் சொல்வதையும், அப்போதைக்கு இப்போதே சொன்னேன் (பெரியாழ்வார் திருமொழி 4.10.1) என்ற பெரியாழ்வார் பாடலையும் நினைவில் கொள்ளலாம்.
அடியேன் உன் திருவடி சேருவதைப் பற்றி மாசுச : என்று ஒரு வார்த்தை அருள வேண்டும் என்கிறார்.
2கூறாய் நீறாய் நிலனாகிக் கொடுவல் அசுரர் குலம் எல்லாம் சீறா எறியும் திருநேமி வலவா. தெய்வக் கோமானே! சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே! ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே. (6.10.2)
மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம் பல துண்டுகளாக செய்தும் ஜுவாலையுடன் ஸ்ரீஸுதர்சனத்தை கையில் ஏந்திக்கொண்டு இருக்கும், திருவேங்கடமுடையான், நித்யஸூரிகளுக்கு நாயகன், ஆழ்வாரை அவன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாடுகிறார்.
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் என்பதற்கு எண்ணெயாலே எரியும் விளக்கு இல்லாமல், நீராலே எரியும் விளக்கு கண்டு அநுபவிக்க வேண்டும் என்று ஆழ்வார் ஆசைப்படுவதாகவும், நீரிலே நெருப்பு எழுந்தார் போல் இருப்பதாகவும் சொல்கிறார். ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன் என்பது போல், சுனை நீர் வற்றினாலும் தன் அன்பு மாறாத, ஆறாத அன்பு உடைய ஆழ்வார் என்கிறார். இப்படிப்பட்ட அடியேன் உன் திருவடிகளிலே சேர்ந்து அடிமை செய்யும்படி கிருபை செய்ய வேண்டுகிறார்.
3வண்ணம் அருள் கொள் அணி மேகவண்ணா! மாயவம்மானே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே! தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடிசேர அடியேற்கு ஆவாய் என்னாயே (6.10.3)

அழகிய மேகம் போன்ற நிறத்தை உடையவனே! ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே! தேவாதி தேவனே! தெளிந்த அழகிய அருவிகள் மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும் கொழிக்கும் இடமான திருமலையிலே விளங்குபவனே! உன் திருவடிகளில் வந்து சேரும்படி அடியேன் விஷயத்திலே இரங்கி அருள வேணும் என்கிறார்.
வண்ணம் அருள் என்று கொண்டு, அருள் தானே வடிவெடுத்த மாதிரி, அருளே திருவேங்கடமுடையானாக மூர்த்தியாக நின்று என்று கொள்ளலாம். வண்ண மருள் கொள் அணி என்று கொண்டு, கண்டவர் நெஞ்சை இருளச் செய்கின்றவனே என்றும் கொள்ளலாம்.
மாயவம்மானே! என்பதற்கு, வெறும் வடிவழகு மாத்திரம் இல்லாமல், ஆச்சரியமான குண விசேஷங்கள் கொண்ட பெரியவனே என்கிறார்.
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்ற இடத்தில், தேவர்களுக்கான அமிர்தத்தின் பலனை பெற பல நியதிகள் உள்ளன, ஆனால், திருவேங்கடமுடையானின் கருணையை பெற, நினைத்த மாத்திரத்தில், “ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்“ (5.10.10) என்று தித்திக்கும் என்று மீண்டும் சொல்கிறார் போலும்.
4ஆ ஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல், தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமா மகள் கேள்வா, தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே. (6.10.4)
உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான அசுரர்களின் ஆயுளை முடிப்பதற்காக நெருப்பை உமிழ்கிற அம்புகளை மழை போல பொழியும் சார்ங்கம் என்ற வில்லை உடையவனே, திருமகள் மணாளனே, தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக கூடியிருக்கும், திருவேங்கடமலையில் எழுந்தருளி இருப்பவனே, உனது திருவடிகளை அடியேன் அடைய வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்.
பரம தயாளுவாய் சக்திமானான எம்பெருமான் பாவங்களைப் போக்கி, அருள வேண்டும் என்கிறார். எம்பெருமான் கண்டு அருளிய நான்கு சாதனங்கள் (கர்ம, ஞான, பக்தி, சரணாகதி) தனக்கு உதவவில்லை என்றும், புதியதொரு சாதனம் வேண்டும் என்கிறார். இதனை உரையாசிரியர்கள், புதிய சாதனம் முக்கியமில்லை, எம்பெருமானே! நீ இருக்கும் போது நான் இங்ஙனே இழக்கலாகுமோ என்ற கருத்தே முக்கியமாம் என்று சொல்வார்கள்; நஞ்ஜீயர், நம்பிள்ளை ஆச்சார்யர்களின் உரையாடல் இங்கு சொல்லப்பட்டு உள்ளது. ஐந்தாவது சாதனம் என்று ஆச்சார்ய அபிமானத்தை சொல்ல முடியாது, ஏன் என்றால் ஆச்சார்ய அபிமானம் நான்காவது சாதனமான சரணாகதியில் அடக்கம், ஆச்சார்யனே, எம்பெருமானின் திருவடி ஆவார், ஆகையால், “ஈச்வரனைப் பற்றுகை, கையை பிடித்துக் கார்யங்கொள்ளுமோ பாதி, ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி’ என்ற ஸ்ரீவசனபூஷணத்தில் சொல்வது போல், ஆச்சார்ய அபிமானம், காரியம் செய்துவிக்கையில் அமோகமானது என்று தெரியம்.
“தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமாமகள் கேள்வா“ என்று சேர்த்து சொல்கின்ற அழகு மிகவும் ரஸிக்கத் தக்கது. அசுரர்களை (கரதூஷணாதிகள்) வதை செய்ய நெருப்பை உமிழ்கின்ற மிகக்கொடிய அம்புகைளப் பிரயோகித்த கோதண்டராமா (தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா) என்று சொல்லும் போது, அப்போது சக்கரவர்த்தி திருமகனின் வெற்றியை கண்ட சீதா பிராட்டி, “தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம், பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே” என்று பிராட்டி, அதுவரை கணவனாக மட்டும் அணைத்துக் கொண்ட எம்பெருமானை அன்றுதான் எம்பெருமானை ஆண்மகனாக கொண்டு அணைத்துக் கொள்வதை போல் உள்ள காட்சியினை நினைத்து, ஆழ்வார் திருமாமகள் கேள்வா என்று சேர்த்து பாடுகிறார். ஒரு வில்லினை முறித்ததற்கே ஸ்ரீராமனின் வீரத்தை வியந்த ஜனகன் உகந்து சீதாபிராட்டியை மணம் செய்வித்தவர் இப்பொழுது பதினாலாயிரம் ராக்ஷசர்களை தனியொருவனாக கொன்று குவித்ததை பார்த்தால் என்ன செய்வார் என்று வியந்ததையும் நினைவில் கொள்ளலாம்.
5புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ, புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ, திணரார் மேகம் எனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே, திணரார் சார்ங்கத்து உனபாதம் சேர்வது அடியேன் என் நாளே? (6.10.5)
‘உனது திருவடிகளை அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ’ என்று கேட்கும் பாசுரம். ‘உன் கையில் வில் இருக்க நான் இழக்க வேண்டியதில்லை, இழக்கமாட்டேன், இனி உன்னைப் பெறும் நாளைச் சொல்லி அருளினால் போதும்’ என்று ஆழ்வார் வேண்டும் பாடல். தேவகிக்கு பத்து ஆண்டுகள் என்று, பரதனுக்கு பதினான்கு ஆண்டுகள் என்று, சீதைக்கு பத்து மாதங்கள் என்று, கோபிகைகளிடம் ஒரு பகல் முடிந்து சாயங்காலம் வந்து விடுவதாக சொன்னது, என்று ஒவ்வொருக்கும் நேரம் சொல்லி தந்தது போல், தனக்கும் ஒரு நாள் குறித்து தரவேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
சுக்ரீவனின் சந்தேகத்தை போக்குவதற்காக, இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அவரிடமே அடைந்தது என்கிற வரலாற்றை ஆழ்வார் இங்கு எடுத்துக் கூறியது, சந்தேகம் கொண்ட சுக்ரீவனுக்கே காரியம் செய்த எம்பெருமான், சிறிதும் சந்தேகமின்றி இருக்கும் தனக்கு காரியம் செய்யலாகாதோ என்பதற்காக என்று கொள்ளலாம். கண்ணன் குழந்தையாய், இரட்டை மருத மரத்தின் நடுவே எழுந்தருளிய பொழுது உரல் அந்த மரங்களுக்கு இடையே சென்றதால் முறிந்து விழ, முன் நாரதர் சாபத்தால் குபேர புத்திரர் இருவர் சாபம் தீர்ந்து சென்றனர் என்கிற வரலாறு இங்கு சொன்னது, எம்பெருமான் இன்னாருடைய சாபத்தைத் தீர்ப்பது, இன்னாருடைய சாபத்தைத் தீர்க்கலாகாது என்று ஒரு நியதி கொண்டு இருக்கிறார் என்று ஆழ்வார் கேள்வி கேட்பது போல் உள்ளது .
6எந் நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று, எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய், மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங் கடத்தானே, மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? ( 6.10.6)
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாளே“ என்று ஐந்தாம் பாடலில் சொன்னது, ‘உன் திருவடிகளே, நான் சேரப்பெறும் நாள்கூட ஒன்று உண்டா?’ என்று சந்தேகிக்கிற மாதிரியும் பொருள் சொல்லக்கூடும். அந்த சந்தேகத்தை இங்கே எம்பெருமான் தீர்ப்பது போல் அமைந்துள்ள பாடல். இந்த உலகத்தில் உள்ளவர்கள், எம்பெருமானின் பரத்துவத்தை எண்ணி, உகந்து அங்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்பது போல், ‘மண்ணளந்த இணைத்தாமரைகளை நாம் காண்பதற்காகும் நாள் எந்நாள்’ என்று நித்யஸூரிகள் ‘ஸௌலப்ய ஸர்வஸுலபமான திருவடிகளை நாம் காணப் பெறுவதன்றோ“ என்று இங்கே திருமலைக்கு வந்து தங்கி, உடல், மனம், வாக்கு என்று மூன்று கரணங்களாலும் பலன் ஒன்றையும் விரும்பாமல் வணங்கும்படி ஆச்சரியமாக எழுந்தருளி உள்ள பெருமானே, இங்கு, தான் எப்படி உன்னை இழக்க முடியும் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானை அடைந்து அவரை விட்டு ஓரடி கூட விலகாத நிலை வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திப்பதை பாடலின் கடைசி வரி கூறுகிறது.
7அடியேன் மேவி அமர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே, கொடியா அடு புள் உடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே, செடியார் வினைகள் தீர் மருந்தே. திருவேங்கடத்து எம் பெருமானே, நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலாது ஆற்றேனே. (6.10.7)
இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையவனாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய், திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலாக்கனிவாய் பெருமானாய், அடியேன் மேவி அமர்கின்ற அமுதமானவனே, உன் பாதம் காண நோலாதே நொடியார் பொழுதும் ஆற்றேன், என்று பொருள் காணலாம். ஆழ்வார், எம்பெருமான் திருவடி கிடைப்பதற்கு தொடர்ந்து அல்லது எப்பொழுதும் அனுஷ்டானம் செய்யாமல், ஏதோ அனுஷ்டானம் செய்து பலம் கிடைப்பதற்கு காலதாமதம் ஆனவரைபோல் கூப்பிட்டுக் கொண்டு உள்ளேன் என்கிறார். வேறு சாதனங்களை அனுஷ்டித்து அதில் பலன் பெற காலதாமதம் ஆவதற்கு அந்த அனுஷ்டானத்தில் ஒரு சில சிறு குறைகள் இருந்து இருக்கலாம் என்று காத்துகொண்டு இருப்பது போல் இல்லாமல், ஆழ்வாருக்கு எம்பெருமானே சாதனமாக இருந்தாலும், ஆழ்வாரின் மனதில், அவன் கிருபையும் இவருக்கு வந்து சேரமுடியாதபடி இவர் இருக்கிறாரோ என்ற பயத்தை இங்கே சொல்லி உள்ளார். திருவாராதனத்தில் பெருமாளுக்கு அமுது செய்தருளப் பண்ணும்போது “அடியேன் மேவியமர்கின்றவமுதே, பச்சை மாமலை போல் மேனிபோன்ற பாசுரங்களை விண்ணப்பம் செய்வது என்று பராசர பட்டர் என்ற ஆச்சாரியர் சொல்லி உள்ளார். மேவி அமர்கின்ற அமுதே! என்பது எம்பெருமானுக்கு இவர் சாத்தும் ஒரு திருநாமம் ஆகும். தேவாமிர்தத்தை எம்பெருமானிடம் வேண்டும் தேவர்களையே காக்கும் எம்பெருமான், அவரையே அமிர்தமாக எண்ணும், தன்னை காக்கக் கூடாதா என்று கேட்டு கொள்ளவதாகவும் சொல்வதுண்டு. தேவர்கள் அமுதம் கேட்கும்போது அவர்கள் அதனை உண்டு சாகா வரம் வேண்டுவது; ஆனால் ஆழ்வார் எம்பெருமானான அமுதத்தை வேண்டி இவ்வுலகில் இருந்து சென்று பரமபதம் அடைய வேண்டும் என்பது இரண்டு அமுதங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை விளக்கும்.
இமையோர் அதிபதியே என்றது, நித்யஸூரிகள் எம்பெருமானை பரமபதத்தில் அனுபவிக்கும் அளவு தானும் இங்கு அனுபவிப்பவனாக சொல்கிறார்.
கொடியா அடு புள் உடையானே என்றது, ஆழ்வாரை திருமலைக்கு வந்து சேர சொன்னதற்கு, கஜேந்திர சரித்திரத்தில், கருடனையும் தான் சுமந்து விரைந்து சென்றதைப் போன்ற கருணையை எம்பெருமான் தன்னிடம் காட்டக்கூடாதோ என்று சொல்வதுபோல் உள்ளது.
கோலக்கனிவாய்ப் பெருமானே! என்பது தன்னுடைய திருவதரத்தின் பழுப்பைக் காட்டி தன்னை அடிமையாக்கி கொண்டவனுக்கு மீண்டும் அதை காண்பிப்பது அரிதாக உள்ளதோ என்று கேட்பது போல் தோன்றும்.
கோலக்கனிவாய் பெருமானே கொடியாவடு புள்ளுடையானே“ என்று சேர்த்து சொல்லி, அடியவர்கள் இந்த அழகை அனுபவிக்க கொடி கட்டி பறந்துகொண்டு இருப்பவனே என்று நம்பிள்ளை என்ற ஆச்சார்யர் அனுபவிப்பார்.
செடியார் வினைகள் தீர்மருந்தே என்று சொன்னது, நிலத்தில் விளையும் மருந்தைக் காட்டிலும் மலையில் விளையும் மருந்த மிகச் சிறப்பாகும் என்ற கருத்தில் திருமலையை சொல்வது.
8நோலாது ஆற்றேன் நுன பாதம் காண வென்று நுண் உணர்வில், நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும், சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே, மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போல வாராயே. (6.10.8)
சிவபிரானும், பிரமனும், தேவேந்திரனும் எம்பெருமானின் திருவடிகளைக் காண்பதற்கு சாதனா அனுஷ்டானங்கள் என்று உபாயம் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, ஆசைப்பட்டு, எம்பெருமானின் திருவடிகளை காண்கிறார்கள். இப்படி ப்ரம்மாதிகளுக்கும் ஆகிஞ்சன்யம் மூலமே எம்பெருமான் தரிசனம் என்பதை விளக்கும் பாடல். ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அல்லது எம்பெருமானை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கலங்குவது.சேலேய்கண்ணார் பலர் சூழவிரும்பும் என்று சொல்வதால், சிவனும், பிரமனும் இந்திரனும் தங்கள் மனைவிகளுடன் வந்து சரணம் புகுந்தார்கள் என்று சொல்கிறார். மாலாய் மயக்கி அடியேன்பால் வாராய் என்று ஆழ்வார் சொல்லும் போது, அவர் மால் என்று கண்ணபிரானை சொன்னது மட்டும் இல்லாமல், கண்ணனை அவன் செய்த விளையாட்டுகளுடன் ஆழ்வார்க்கு காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
இந்த பாடலில் வரும் எம்பெருமானின் திருவடிகளை என்று சொன்னது, பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் காண விழைவது. மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை வேண்டுவார்.
9வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே, செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோளமுதே. எனதுயிரே, சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே, அந்தோ அடியேன் உனபாதம் அகல கில்லேன் இறையுமே. (6.10.9)
கைக்கு கிடைத்ததைப்போல் இருந்து கிடைக்காதவனே, கிடைக்காதவன் போல் இருந்து சற்று தள்ளி நிற்பவனே, செந்தாமரை கண், செங்கனி வாய், நான்கு தோள்கள் என்று அனுபவிப்பதற்கு சிறந்தவனே, ரத்தினங்களின் ஒளியால், இரவையும் பகல்போல் ஜொலிக்கும் திருமலையில் உறைபவனே, உன் திருவடிகளை ஒரு கணமும் பிரிந்திருக்கும் சக்தி தனக்கு இல்லை என்று ஆழ்வார் திருவேங்கடவனிடம் முறையிடும் பாடல். ஆழ்வார் தனது மானசீகமான அனுபவத்தில் எம்பெருமானை அடைந்தோம் என்று இருக்கையில், அதனை உண்மை என்று எண்ணி அவனை அணைக்க நினைத்தால் அங்கு அவன் இல்லாதது கண்டு, வந்தாய் போலே வாராதாய் என்றார். இதனை வேறு ஒரு விதமாக விளக்குவதும் உண்டு. விபவாவதாரங்களில் எதிரிகளுக்கு கிட்டாதவனாகவும், அவனுடைய பரத்துவத்தை எண்ணி தங்களுக்கு எங்கே எளியவனாக வந்து காட்சி தரப்போகிறான் என்று இருக்கையில், அடியவர்களுக்கு தன்னுடைய சௌலப்யத்தால் அவர்கள் முன் வந்து நிற்பான் என்பதே அது.
பரமபதம் போலே எப்போதும் பகலாய் இருக்கின்ற திருமலையில் எழுந்து அருளி இருப்பவனே என்பதை  (சிந்தாமணிகள் பகர் ) அல்லைப் பகல் செய் மூலம் தெரிவிக்கின்றார்.
அந்தோ என்று சொல்வதன் மூலம் அவன் அருளுக்கும் குறைவில்லை, தன் ஆசைக்கும் குறைவில்லை, இருந்தும் அவனை அடைய முடியவில்லையே என்பதை வெளிப்படுகிறார்.
10அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா, நிகரில் புகழாய், உலகம் மூன்று உடையாய், என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (6.10.10)

மேலே சொன்ன ஒன்பது பாடல்களில் எம்பெருமானின் ஸ்வரூபத்தையும் தன்னனுடைய ஆற்றாமையையும் சொல்லியுள்ளார். இந்த பாடலில், தன்னுடைய ஆகிஞ்சந்யத்தையும் அநந்யகதித்வத்தையும் தெரிவித்துக் கொண்டு பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். (அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால்  எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது.)
இது அகன்று இருந்து சொல்லும் பாசுரம் இல்லை. இறையும் அகலகிலேன் என்று ஒரு நொடி கூட விலகாமல் பாட வேண்டிய பாசுரம். இங்கு வரும் அகலகிலேன் என்பது மற்றவர்கள் சொல்வது போல் அன்று என்றும், மற்றவர்கள் சொல்வது அவரவர் கர்மத்தின் பலனாக வருவது என்றும், பிராட்டியார் சொல்வது விஷயத்தின் பொருட்டு வருவது என்றும் சொல்கிறார். பிராட்டியாருக்கு கர்மங்கள் கிடையாது என்பதாலும், அவனுக்கு அவள் மேல் இருக்கும் பிரியத்தால் அவளை விட்டு பிரியாத ஸ்வபாவம் உடையவன் ஆகையாலும், அவளும் அவனை விட்டு பிரியாதவள் ஆகையாலும் அகலகிலேன் என்ற இந்த வார்த்தை அவனுடைய திருமார்பின் மேன்மையை சொல்லும் பொருட்டு, இந்த இடத்தில தேவை என்கிறார். எம்பெருமானுடைய திருமார்பிலே நித்யவாஸம் செய்கின்ற பெரிய பிராட்டியார், அகலகில்லேன் என்று சொல்வது, பெற்றிருக்கும் பாக்கியத்தின் உயர்வினை எண்ணி, அகன்று விடுவோமோ என்ற சந்தேகத்தின் வெளிப்பாட்டினால் தேவை ஆகிறது என்கிறார்.
அலர் மேல் மங்கை என்றதால், புஷ்பத்தின் மணம், அதுவே ஓரு வடிவு எடுத்தது போல் தோன்றின மஹாலக்ஷ்மி, அந்தப் பூவில் வசிக்க பிடிக்காமல், எம்பெருமானின் திருமார்பிலே சேர்ந்தது, அந்த பூவைக் காட்டிலும் மென்மையான, மேன்மையான சிறந்த இடமாக இந்த திருமார்பே ஆகும் என்ற முடிவால் ஆகும். அப்படிப்பட்ட திருமார்பை உடையவனே என்பதை உறை மார்பா என்று சொல்கிறார். உறை என்பதால் எப்பொழுதும் வாசம் செய்வது சொல்லப்பட்டது. உறைமார்பா என்பதனால் பிராட்டி ஈச்வரன் இவர்களின் சேர்த்தியானது எப்போதும் உண்டு என்பது காட்டப்பட்டது. அதனால், அடியவர்கள் எப்போது வேண்டுமானாலும் சரணாகதி செய்யலாம் என்றும், பிராட்டி உடன் இருப்பதால், சரணாகதி பலிக்கும் என்றும், அடியவர்கள் பயப்படாமல் இருக்கலாம் என்றும், சரணாகதி செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதும் என்றும் அறியலாம்.
எம்பெருமானுக்கு உள்ள தனிசிறப்புகளில் உபாயத்துவம் என்ற ஒரு ஜீவாத்மாவிற்கு முக்தி அளிக்கும் சக்தி மிகவும் முக்கியமானது. பெரிய பிராட்டிக்கும் புருஷகாரத்துவம், என்ற தோஷங்கள் நிறைந்துள்ள அடியவர்களை / அறிவுள்ள ஜீவாத்மாக்களை, எம்பெருமான் அங்கீகரிக்கும்படி செய்யும் குணம் தனிச்சிறப்புடன் முக்கியமாக உள்ளது.
எம்பெருமானுக்கு முக்தி அளிக்கும் சக்தி இருக்கும் போது ஏதற்காக பிராட்டியை முன்னிட்டு சரணாகதி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஆச்சார்யார்கள் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்கள். ஜீவாத்மா செய்யும் எண்ணற்ற பாவங்களை கண்டு எம்பெருமான் மிகவும் சீற்றம் அடைய காரணம் உள்ளது. அப்படி சீற்றம் பிறந்தாலும், அந்த ஜீவாத்மாவை மன்னித்து அருளுவது பெரிய பிராட்டியாருக்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தன்னுடைய கருணையால், எம்பெருமானுக்கு பாவங்கள் பல செய்த இந்த ஜீவாத்மா மேல் தயை பிறக்கும்படி செய்வது பிராட்டியின் புருஷகாரத்துவம் ஆகும். சம்பந்தப்பட்ட ஜீவாத்மாவிற்கும் அபராத பயத்தினால் பிராட்டியின் புருஷகாரத்துவம் மிகவும் தேவையான ஒன்று.
பிராட்டிக்கு, அனைவர்க்கும் மாதாவாக இருந்து, அனைவரின் மேல் நெஞ்சார்ந்த அன்பு கொண்டு, அந்த ஜீவாத்மாக்களின் வருத்தங்களை கண்டு பொறுத்திருக்க முடியாத ஒரு தன்மையும், எம்பெருமானுக்கு பத்தினியாக இருந்து, தான் செய்யும் பணிவிடைகளை கண்டு, அவன், அவள் சொற்படி நடக்க வைக்கும் தன்மையும் இருப்பதால், அவளது புருஷகாரத்துவம் நிச்சயம் ஒவ்வொரு முறையும் பயன் அளிக்கும்.
பிராட்டி கூடஇருந்ததால், பிராட்டியிடம் தவறு செய்து இருந்தாலும், எம்பெருமான் ராமச்சந்திர மூர்த்தி, காகாசுரனை மன்னித்ததும், பிராட்டி கூட இல்லாததால், இராவணன் தலையறுப்பு நடந்து அவன் வாழ்வு முடிந்ததும் பிராட்டியின் புருஷகாரத்துவத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
பிராட்டியின் அபயப்ரதானத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. இராவணனை அழித்த பின், அனுமன், சீதையிடம் செய்தி சொல்லி, பிறகு பிராட்டிக்கு, அசோகவனத்தில், முன்னாளில் தீமைகள் செய்த ராக்ஷசிகளை, எம்பெருமான் பகவத் அபச்சாரம் செய்தவர்களையும், பாகவத அபச்சாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் வண்ணம் / முறையில் முடித்துவிட உத்தரவு வேண்டிய அனுமனுக்கு தாயார் சொல்லும் பதில் இதுதான். “அவர்கள் தாங்கள் சொல்வது போல் பாபிகள் அல்ல; நான் நினைப்பது வேறு; அப்படியே பாவிகள் என்றாலும், அழுக்கு உடையவர்கள் தாம் குளிப்பதற்கு தகுதியானவர்கள்; ஆகவே அவர்களுக்கு, நாம் தாம் முகம் கொடுக்க வேணும், கைமுதல் இல்லாதவர்க்கன்றோ, நாம் கைமுதலாக இருக்க வேண்டும். சரணம் என்று வந்த விபிஷணனுக்கு தோஷம் இருந்தாலும், எம்பெருமான் சரணாகதி கொடுத்தார் அல்லவா? வசிஷ்டாதிகளை, மந்திரிகளாக கொண்ட இஷுவாகு வம்சத்தில் பிறக்காததாலோ, யோகிகளான ஜனககுலத்தில் பிறக்காததாலோ, சரணாகதியின் சிறப்பு தங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் போனது; எம்பெருமானும், எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்; இப்படி கேட்டு இங்கே கோபம் வர செய்வாயோ? இவர்களது பாவ புண்ணியங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இப்பொழுது தங்கள் கையில் இவர்கள் அகப்பட்டு எங்களை காப்பாற்றுபவர் யார் என்று ஓலமிடும் போது, நாம் இவர்களிடத்தில் இரங்க வேண்டும், நாம் இவற்றை உமக்கு கற்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம், இந்த வாழ்க்கையில் குற்றம் செய்யாதவர் யார் ? நல்லவர் என்று பெயர் எடுத்த இராமபிரான் மீது குற்றம் சொல்ல முடியாதா, எங்கள்மேல் குற்றம் சொல்ல முடியாதா, அல்லது தங்கள் மேல் குற்றம் சொல்ல முடியாதா ? இராவணன் சொன்ன காரியத்தை செய்த இவர்களை தண்டிப்பது எப்படி? இராமன் ஒரு விஷயத்தில் முனைப்பாக இருந்தாலும், அவனை ஆற விடுவதற்கு நாங்கள் உண்டு, அவன் செல்வதற்கு நாங்கள் இருக்கும்போது, தாங்களும் எங்களுடன் இருப்பீர்கள் என்று இருந்தேன், நீங்கள் இப்படி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்” என்று நீண்ட விளக்கம் கொடுத்த பிராட்டி கருணை கடல், புருஷகாரத்வத்திற்கு அவள் ஒருவளே. எட்டு மாதம் பிராட்டியை விட்டு பிரிந்து இருக்க வல்லவரானதால் இராமனிடத்தில் குற்றம் ஆகிறது. பாரதந்திரியத்திற்கு அனுகுணமாக தான் பேசாமல் இருந்திருக்கவேண்டும், அப்படி செய்யாததே தன குற்றம் ஆகிறது; இராவணன் சொன்ன வார்த்தைகளுக்கு காரியம் செய்த இந்த ராக்ஷிசிகளை தண்டிக்க சொல்வது அனுமனின் குற்றம் என்று சீதையின் கூற்றாக கொள்ள வேண்டும்.
எம்பெருமான் பிராட்டி சொல்வதை நிச்சயம் கேட்பார் என்பதற்கு உதாரணமாக, “மாய மானின் பின்னே போ“ என்றாலும், அதன் பின்னே தொடர்ந்து போகும் இவன் அவளுக்கு ரசிகன் என்பதின் மூலம் அறியலாம்.
நிகரில் புகழாய் என்று தொடங்கும் பதத்தை நாராயண சப்தத்திற்கு அர்த்தமாக சொல்லி, சரணாகதனை ஏற்றுக்கொண்டபின், ஒரு போதும் நழுவ விட மாட்டான் என்ற குணாதிசயத்தை சொல்வதாக கூறுவார்கள். இதனை தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் எனது அடியார் அது செய்யார் என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். நிகரில் புகழாய் (வாத்ஸல்யம்),உலகம் மூன்று உடையாய், ( ஸ்வாமித்வம் ) என்னை யாள்வானே (ஸௌசீல்யம்), நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே ( சௌலப்யம் ) என்றது எம்பெருமானின் பல குணங்களையும் வரிசையாக சொல்லி உள்ளார். அடியார்கள், எம்பெருமானிடம் தங்களுடைய அபராதங்களை பொறுக்க வேண்டும் என்று பிராட்டியை முன்னிட்டு வேண்டும்போது, எம்பெருமானின் வாஸ்தல்யம் தலையெடுக்கும் என்பதால், அது முதலாக சொல்லப்பட்டது. தானே உபாயமாகவும், தானே ப்ராப்யமாகவும் (தானே வழி, தானே அடையும் இடம்) இருந்து தனக்கு செய்த உபகாரத்தை நினைவு கூறுகிறார். அவன் மேன்மையும் தன்னுடைய சிறுமையும் பாராது, ஒரே நீராக கலந்து போல் தன்னுடன் கலந்ததை சொல்கிறார். மொத்தத்தில், தாழ்ந்தோருக்கும் முகம் கொடுக்கும் திருவேங்கடம் என்பதால் இங்கு பரமபதத்தை விட அதிகமாக சிறப்பாக வெளிப்படும் சீல குணமே முக்கியத்துவம் பெறுகிறது.
புகல் ஒன்று இல்லா அடியேன் என்று சொல்வதன் மூலம், ப்ரபத்யே என்ற பதமும், அநந்யகதித்வமும் அநன்யார்க சேஷத்வமும், அதிகாரியான எம்பெருமானின் ஸ்வரூபமும் சொல்லப்பட்டுள்ளன. ( அநன்யார்க சேஷத்வம் என்பது அவரைத் தவிர வேறு யாரிடம் அடிமையாக முடியாது என்று சொல்வது, அநந்யகதித்வம் என்பது அவனைத்தவிர வேறு யாரிடமும் சேரும் வழி இல்லை என்று சொல்வது).
உன் அடிக்கீழ் என்பதனால், சரநௌ என்ற பதம் சொல்லப்பட்டு, நடுவோர் இடையூறு இல்லாமல் இருக்கும் தன்மை என்று விளக்கப்பட்டது. உலக விஷயங்களில் ஆசையை அகற்றியது முதல், எம்பெருமானிடத்தில் ருசியை ஏற்படுத்தி, அப்படி பிறந்த ருசியையும் நன்றாக வளர்த்து, அடைய வேண்டியதில் உள்ள அத்தனை விரோதிகளை தவிர்த்து, எப்பொழுதும் இந்த உலகத்தில் கைங்கர்யம் செய்து அனுபவிக்க வைக்கும், அழகுமிகு திவ்யமங்கள விக்ரகத்தை இங்கு சொல்கிறார். திருவாய்மொழி முதல் பாடலிலேயே ‘ துயர் அறு சுடர் அடி தொழுது எழு ‘ என்று சொன்ன ஆழ்வார், தாம் எம்பெருமானின் திருவடிகளை பற்றுகின்ற இந்த பதிகத்தில், விடாமல் ஒவ்வொரு பாசுரத்திலும் மண்ணளந்த இணைத்தாமரைகளான திருவடிகளின் சிறப்புகளை பாடியதை மேலே பார்த்தோம்.
அமர்ந்து என்று சொல்வது, ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்றும் சரணம் வ்ரஜ என்றும் எம்பெருமான் சொல்லும் போது திருவேங்கடமுடையானுடைய திருவடிகளும், தன்னுடைய தலையும், ஆபரணத்தில் கொக்குவாயும் படுகண்ணியும் போலே, இந்த பக்க விளக்கின் வெளிச்சம் அந்த பக்கம் தெரியாதது போலே, ஒன்றுடன் ஒன்று சரியாக பொருந்தி அமைந்துள்ளதை சொல்கிறது.
தன்னுடைய சரீரத்தில், தமக்கு அந்தர்யாமியாய் இருக்கும் எம்பெருமானை அறிந்திருந்த ஆழ்வார், புகுந்தேனே என்ற இந்த வார்த்தை சாதாரண இயக்கத்தை சொல்வதல்ல என்கிறார். புகுந்தேனே என்று சொல்வது, அவனுடைய சர்வ ஜகத் காரணத்துவத்தையும், சர்வ ஆத்மபாவத்தையும், சர்வ ரக்ஷகத்வத்தையும் அறிந்து அவனே உபாயம் என்கிற அத்தியாவசியமான ஞானத்தை சொல்கிறது.
11அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்றும் அருள் கொடுக்கும், படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும், பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. (6.10.11)
இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் கற்றவர்கள், மஹாகம் என்றும், பிரமாகாசம் என்றும் சொல்லப்படுகிற, பரமபதத்தில், நித்ய கைங்கர்யம் செய்து நன்றாக அனுபவிப்பர் என்று பயன் உரைக்கும் பாசுரம். பட்டர் என்ற ஆச்சாரியார், ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் திருவேங்கடமுடையானுடைய திருக்கையானது அவரது திருவடியை நோக்கி இருப்பதன் காரணம், “அடியவர்களே! உங்களுக்கு இந்தத் திருவடியே தஞ்சம், இதன்கீழே அமர்ந்து புகுந்து அருள் பெறுவீர்” என்று காட்டுவதே ஆகும் என்கிறார். அடியவர்களுக்கு அருளுவதில், ஒப்பில்லாத சர்வேஸ்வரன் என்கிறார். சில ஆசாரியர்கள், தம்முடைய மநோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரமென்று உரைத்தார்கள். நம்பிள்ளை என்ற ஆச்சார்யர், “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற ஸம்ஸார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே அருளிச் செய்த ஆயிரம்“ என்பர். திருவேங்கடத்துக்கு இவை பத்தும் என்று சொன்னது, “வான் திகழும் சோலை, மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்” என்ற திருவாய்மொழி தனியன்படியே ஆயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக ஸங்கல்பிக்கப்பட்டு அதில் இந்த பதிகம், திருவேங்கடத்துக்குப் பகுத்துக் கொடுக்கப்பட்டது. நம்பிள்ளை மேலும், “ஆழ்வார் பண்ணின ப்ரபத்தியே நமக்கு எல்லாம் போதும், தனித்து வேண்டாம் ” என்று இப்பாசுரத்தை சொல்லி அதன் பலனை அனுபவிப்பார்.   ஆழ்வாரை நினைத்து, இப்பத்தும் கற்றவர்கள் இடத்தும் ஈச்வரன், ஸ்ரீ விபிஷ்ணாழ்வானோடு கூட வந்த நால்வர்க்கும், விபீஷணன் பண்ணின சரணாகதியே அமைந்தார் போல், இவனுடையவன் என்று இந்த பாசுரங்களை கற்றவர்களுக்கும் அருள் புரிவார் என்கிறார். பிடித்தார் பிடித்தார் என்ற இரண்டு முறை சொன்னதை, இரண்டு வகையாக பொருள் கூறுவர், இந்த பாசுரத்தின் சொல்லைப் பற்றினவர்கள் என்றும், பொருளைப் பற்றினவர்கள் என்றும் சொல்வது ஒரு வகை. பிடித்தாரைப் பிடித்தவர்கள் என்று அர்த்தம் கொண்டு, ஸம்பந்த ஸம்பந்திகளைச் சொன்னதாக மற்றொரு வகை.
இந்த பாசுரத்தில் குறிப்பிடும் திருவடிகள் எம்பெருமானே தன் திருவடிகளை, “அடிக்கீழ்” என்று குறிப்பிடுவது போல் ஆழ்வார் பாடியுள்ளார். முன்பே சொன்னது போல், எட்டாவது பாடலில் வரும் திருவடிகளை என்று குறிப்பிட்டது, பிரம்மா, சிவன் மற்றும் இந்திரன் எம்பெருமானின் திருவடிகளை காண விழைவது. மற்ற பாடல்களில் ஆழ்வார் எம்பெருமானின் திருவடிகளை வேண்டுகிறார்.

இந்த பதிப்பு கொஞ்சம் நீண்டு விட்டது, மன்னிக்கவும். மீண்டும் ஆழ்வாரின் திருவேங்கடமுடையானின் இன்னொரு அனுபவத்தில் சந்திக்கலாம். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d