069 திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்) / Badrinath

காலையும் மாலையும்

அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!!

திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி
மூலவர் பத்ரி நாராயணன்
உத்ஸவர்
தாயார் அரவிந்தவல்லித்தாயார்
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்22
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 21
பெரியாழ்வார் 1
தொலைபேசி 070607 28843.

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

Google Map

திருபத்ரிகாசிரமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கோவில் பற்றி

இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிபடர்ந்த சூழலில், மலையின் மத்தியில், எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நர நாராயண பர்வதத்தின் மடியில், பவித்திரமான அலகநந்தா நதிக்கரையில், அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் பத்ரிநாத் மலைச் சிகரங்களின் மத்தியில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில்,  இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது.  இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.  

எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும், ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில், இதுவும் ஒன்றாக, இத்தலம் அமைந்து உள்ளது. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள் ஆகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

பரமாத்மா, தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து அல்லது எம்பெருமானே தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு, ஓம் நமோ நாராயணாய என்ற ”அஷ்டாக்ஷர மந்திரம்” எனும் மூல மந்திரமாகிய திருமந்திர உபதேசத்தை, நாராயணன் என்ற திருநாமத்துடனே உலகத்திற்கு வந்து உகந்து அருளின இடம், பத்ரிகாஸ்ரமம் தான். குரு நாராயணன், சீடன் நரநாராயணன். எம்பெருமான் ஆச்சார்யராக இருந்த ஸ்தலங்களில் பத்ரிநாத்தும் திருநறையூரும் முக்கியமானவை. திருநறையூரில் எம்பெருமான் குரு, திருமங்கையாழ்வார் சீடர். எம்பெருமானைச் சரண் புகுந்து மோட்சம் புகும் பக்தர்கட்கு மிக எளிய வழி திருமந்திர உபதேசத்தில் சொல்லப்பட்டது. அதனால், திருமந்திரம் அவதரித்த திருத்தலமாக இந்த பத்ரிநாத் கருதப்படுகிறது.

மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்ரிகாச்ரமம் ஆயிற்றென்பர். எம்பெருமான் தவம் செய்ய அமர்ந்த பின், அவருக்கு நிழலாக மஹாலக்ஷ்மி இலந்தை தோட்டமாகவே அவதரித்து இங்கு வந்ததாகவும் சொல்வார்கள். மஹாலக்ஷ்மி சொரூபமான இலந்தை(பதரி) மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக தேர்ந்தெடுத்ததால் பத்ரிகாஸ்ரமம் ஆயிற்றென்பர். வடமொழியில் இலந்தை மரங்களுக்கு பதரீ என்று பெயர். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடம் என்பது பதரிகாச்ரமம் என்று ஆயிற்று.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தொடக்கூட முடியாத அளவில் வேகமாகவும், மிகக்குளிர்ந்த நிலையிலும், அலகநந்தா பக்கத்திலேயே ஓடிக்கொண்டு இருக்கும் போது இந்த வெந்நீர் ஊற்று மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். அதற்கான காரணம் இன்னும் அறியப்படாததும் மேலும் ஆச்சர்யம் தரும். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் சூடாக வருகிறது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு எம்பெருமானின் அனுக்கிரகம். இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து,  தரிசிக்க வசதியாக உள்ளது. தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் சிம்ம துவாரத்தில் இருக்கும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார்.

கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், உத்தவர், குபேரன், நரன் மற்றும் நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர். பத்ரி நாராயணர், இலந்தை மரத்தின் கீழ், ஜடாபரிதனாய், நான்கு திருக்கரங்களுடன், (சதுர் புஜங்களுடன்), கிழக்கு நோக்கி மேல் வலது திருக்கரத்தில் சக்கரமும், மேல் இடது திருக்கரத்தில் சங்கும், கீழ் வலது இடது திருக்கரங்களை யோக முத்திரையாக் கொண்டு, மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன், பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மூர்த்தியாக வீற்று இருந்து தபஸ்வி வேஷத்தில் காட்சி கொடுக்கிறார்.

பகவானின் வலப்புறம் குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள். இடப்புறத்தில் தேவரிஷி நாரதர், உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர். ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே. தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள தாயார் சந்நிதியில்,  மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள். பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது.  கோவிலின் பின்புறம் லக்ஷ்மிநரசிம்ஹருக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது, அதில் இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.  

இங்கு எம்பெருமானுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை, மக்களுக்கு எதிரிலேயே, திரை எதுவும் போடாமல் பக்தர்கள் நேரடியாக காண்பதற்கு ஏதுவாக கேரளத்தை சேர்ந்த நம்பூத்ரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து நடைபெறுகின்றன.

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு,  திருமஞ்சனம் செய்து நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார். இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர். இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். இந்த பூஜை நடைபெறும் சமயம் எம்பெருமானின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.

இங்கு கோவிலின் வடபுறம் அலகநந்தாவின் கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு, கயா ஸ்ராத்தம் போல், இங்கும் ஸ்ராத்தம் செய்யப்படுகிறது. பத்ரிநாராயணனுக்கு காலையில் நிவேதனம் செய்துவிட்டு, பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் எனப்படும் பிரசாதத்தை, கோவிலிலேயே கொடுப்பார்கள். இவ்விடத்தில் ஸ்ராத்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோக்ஷம் கிடைப்பதாக ஐதீஹம்.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன. அவை, தப்த குண்டம், பிரகலாத குண்டம்,  நாரத குண்டம், கூர்ம தாரா மற்றும் ரிஷிகங்கா. இதில் தப்த குண்டத்தில், அக்னி வாசம் செய்வதாக வரலாறு. தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது. கூர்ம தாரா தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது.  இங்கு  எம்பெருமானின் திருவடிகளை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை மானா கிராமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள். இந்த மானா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது, அதற்கு பிறகு திபெத். இங்கே கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது. சரஸ்வதி நதி இங்கே பூமிக்குள் சென்று, திரிவேணி சங்கமத்தில் ( அலஹாபாத் பிரயாகை) மீண்டும் வெளிவருவதாக நம் புராணங்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. இவற்றை தவிர, பத்ரியில் வஸுதார என்ற பனித்திவலைகள் விழும் நீர்வீழ்ச்சியும் உண்டு. அந்த நீர்திவிலைகள் நம் மேல் படும் போது புண்ணியம் தரும் என்று நம்பப் படுகிறது.

இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும் இப்பிரதேசத்திற்கு குளிர்தாங்கும் பருவம் இளமை
என்பதால், கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் (திருவாய்மொழி 2.10.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து விடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு மீண்டும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும் போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள் மறுநாள் காலையில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் இருக்குமாம். அதனால் தான் மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் ஆராதித்து செல்கின்றனர் என்ற ஐதீஹம். மேலும் பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6 மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும். அதனால் இங்கு ஆறு மாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனுஷ்ய பூஜை என்று சொல்லப்படுகிறது.

குளிர்காலத்தில், சுமார் 6 மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை,  ஜோஷிமத் நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனைகள் நடைபெறுகின்றன. மறுபடியும் சித்திரை மாதம், அக்ஷய திருதியைக்கு மறுநாள்,  கோயில் கதவுகள் திறக்கப் பட்டு எம்பெருமானும் பத்ரியில் எழுந்தருளுகிறார்.

Thanks to Google maps. Please note that more information may be needed to travel to these places, thanks

பத்ரிகாச்ரம் பற்றி குறிப்பிடுகையில் “பஞ்ச பத்ரி” என்று ஐந்து பத்ரி பற்றி சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலானவை இறுதியில் 4 அல்லது 5 கிமீ, போல் நடைப் பயணத்தின் மூலமாகவே அடையவேண்டி உள்ளது. புருஷசூக்தம் ஸ்லோகத்தை இயற்றிய நாராயணர், இந்த ஐந்து இடங்களில் தவம் இருந்ததாக சொல்வர். அவை, யோகபத்ரி, வ்ருத்தபத்ரி, த்யானபத்ரி,  தபோபத்ரி மற்றும் பவிஷ்ய பத்ரி.

வ்ருத்தபத்ரி அலகநந்தாவின் அழகான பள்ளத்தாக்கு ,  மிகவும் ரம்யமான இடம்.  இங்குதான் நாரதர் தவம் செய்தார். ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார். த்யானபத்ரியில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார். யோகபத்ரியில் தியான மந்திர் அமைந்துள்ளது. அங்கே,  கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். த்யானபத்ரி, யோகபத்ரி இரண்டும் ஒன்று, பாண்டுகேஸ்வரில் உள்ளது, என்று சொல்பவர்கள் உண்டு. அவர்கள், இதனைத்தவிர, ஆதிபத்ரி என்று இன்னொரு ஸ்தலமும் கர்ணப்ரயாகை அருகில் சொல்லப்படுகிறது. பவிஷ்யபத்ரி தபோவனில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்டதாகவும், கலியுகத்தில் தாம் இங்கு எழுந்தருளப் போவதாகவும் சொல்லப் படுகிறது. வரும் காலத்தில்,  இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகும் என்றும், அது சமயம் பத்ரி நாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது. தபோ பத்ரி தான் இன்றைய பத்ரிநாத், அல்லது பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகிறது. அடியேன் பத்ரிவிஷால் மட்டுமே தர்சனம் செய்து உள்ளேன். மற்றவை தரிசிக்க மீண்டும் செல்ல ஆசை உள்ளது, பத்ரிநாராயணன் தான் நிறைவேற்றி தர வேண்டும்.

பத்ரிநாராயணன் கோவில் அமைந்து இருப்பது நாராயண பர்வதம். இதைத்தவிர கோவிலுக்கு எதிர்புறம், நரநாராயண பர்வதங்கள்; கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள நீலகண்ட பர்வதம் போன்றவை காண்பதற்குப் பேரெழில் பொலிந்தனவாகும். குளுமை மிக்க அழகான மலைத் தொடரில், நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம்  என்று வழங்கப்படுகிறது.  

இங்கு அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அடியேன் பத்ரிக்கு சென்றது 26 மற்றும் 27 அக்டோபர் 2014. கோவில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் அந்த ஆண்டுக்காக மூடி விடுவார்கள் என்ற நிலை; பனியும் குளிரும் அதிகம். முதல் நாள் பகலில், பத்ரி வந்து சேர்ந்து அன்று மாலையில் ஒரு முறை எம்பெருமானை ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்று சேவித்துவிட்டு அடுத்த நாள் காலையில் சில சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம். அதிகாலையில் அலாரம் இல்லாமல் சுமார் 03 00 மணிக்கு எழுந்து விட்டதால் தங்கியிருந்த இடத்திலே ஒரு ஸ்னானம் செய்து விட்டு, எங்களுடன் வந்த வழிகாட்டியை (guide) தொந்தரவு செய்யாமல், காலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு கிளம்பலாம் என்று நடந்து வந்து கொண்டு இருந்தோம். கோவிலுக்கு வருவதால் கேமரா, போன் போன்றவற்றை எடுத்து வரவில்லை. வரும் போது, நீலகண்ட பர்வதத்தை தரிசித்த காட்சி மறக்க முடியாதது. இரண்டு மலைகள், வானத்தில் சிறிய சந்திர ஒளியினால், (வளர்பிறை சதுர்த்தி அல்லது பஞ்சமி), நீல நிற ஒளியுடன், மிக பிரகாசமாக நாங்கள் விவரிக்க முடியாதபடி, வியக்கும் வண்ணம், மறக்க முடியாதபடி, ஒரு மலையில் உள்ள பனியினால் சந்திர ஒளி பட்டு அதனுடைய பிரதிபலிப்பு இன்னொரு மலையில் விழுந்து, அந்த ஒளியும் மீண்டும் அதிகமாக ஒளி விட, மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றிய விதமாய் எங்களை மேலும் நடக்க விடாமல் அதையே பார்த்து பிரமிக்கும்படி செய்தது. அப்போது எங்களுக்கு அது நீலகண்ட பர்வதம் என்று தெரியாது. நாங்கள் நினைத்தது நரனும் நாராயணனும் என்றே நினைத்து, நன்றாக அனுபவித்தபடி கோவிலை அடைந்தோம். விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு எங்கள் நண்பர் ஸ்வாமிநாதன் அவர்களிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் எங்களுக்கு நீலகண்டனின் நேரடியான தரிசனமே கிடைத்து விட்டது என்று சொன்னார். நர நாராயணர்களுடன் நீலகண்டரின் அருளாசியும் இந்த பயணத்தில் எங்களுக்கு கிடைத்து ஒரு அரிய அனுபவமே.

இங்கு தப்த குண்டத்தில் நீராடியது, விஸ்வரூப தரிசனம், ஸஹஸ்ரநாம தரிசனம், சர்வ தரிசனம் என்று ஒரு சில தடவை பத்ரி நாராயணனனை தரிசித்து, ப்ரம்ம கபாலத்தில் பித்ரு ஸ்ராத்தம் கொடுத்தது, நீலகண்டரின் நேரடி அருளாசி, போன்றவற்றை ஆனந்தமாக அனுபவித்தது, அடியேன் பாக்யம். மீண்டும் அவனை தரிசிக்க இன்னொரு சந்தர்ப்பம் அருளவேண்டும் என்பதே இப்போதும் எம்பெருமானிடம் பிரார்த்திப்பது.

ஸ்தல வரலாறு

இந்த திருத்தலம் பற்றி தனி புத்தகமே போடும் அளவிற்கு புராணங்களும், வட நாட்டு நூல்களும் குறிப்புக்களை கொடுக்கின்றன. பத்ரிநாத்தில் ஸ்ரீமந்நாராயணன் தானே எழுந்தருளித் தவம் புரிந்த தலம் என்பது புராண வரலாறு.

ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி முதல் யுகத்தின் ஆரம்ப காலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தானே உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்கு சுலபமாக தனது திவ்ய தரிசனத்தைக் கொடுத்து அருள்பாலிக்கவும் பத்ரிநாத் என்ற பத்ரிகாச்ரமத்தில் (உத்தராகண்ட்) அர்ச்சாரூபமாக எழுந்து அருளி உள்ளார்.

நர நாராயணன் : எம்பெருமான் நர மற்றும் நாராயணா என்று இரண்டு தர்மத்தின் உருவங்களாக அவதரித்து துறவறத்தை அமைக்க, பக்திமிக்க இமயமலைகளுக்கு மத்தியில் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது, அலகநந்தா ஆற்றின் பின்புறத்தில் இரண்டு கண்கவர் குளிர்ச்சியான மற்றும் வெந்நீர் ஊற்றுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு இடத்தை கண்டனர். இந்த இடத்திற்கு பத்ரி விஷால் என்று பெயரிட்டனர். இதில் நரனாக அவதரித்தது ஆதிசேஷன் என்று சொல்லப்படுகிறது. அலகாநந்தா நதிக் கரையில்,  ‘சேஷ நேத்ரம்’ என்று ஒரு பகுதி உள்ளது.  இங்கே ஒரு சிறு பாறை அனைவராலும் வணங்கப்படுகிறது.  இதன் மேல்புறத்தில் ஆதிசேஷ நாகத்தின் கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன; பக்கவாட்டில் பகவானின் திருவடிகள் காணப் படுகின்றன.  

கீழே கொடுத்துள்ள இந்த வரலாறு ஒரு செவி வழி செய்தியே தவிர எந்த புராணத்திலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. இங்கு சஹஸ்ரகவசாசுரன் என்று ஒருவன் இருந்தான். அவன் சூரியனிடம் கடினமாக தவம் இருந்து, சாகா வரம் வேண்டும் என்று கேட்க, சூரிய பகவான் அது இயற்கைக்கு முரணானது என்று சொல்லி மறுத்து, வேறு வரம் கேட்க சொல்ல, அவனும் பதினாயிரம் கவசம் வேண்டும், அதில் உள்ள ஒவ்வொரு கவசத்தையும் அழிக்க கூடியவன் பதினாயிரம் நாட்கள் தவம் செய்தவனாக இருக்க வேண்டும், அப்படி ஒரு கவசத்தை அழித்தவுடன் அவனும் மடிய வேண்டும் என்று வரம் கேட்டான். சூரிய பகவானும் அந்த வரத்தை அளித்தார். அதனால் அவன் பதினாயிரம் கவசம் அணிந்து யாராலும் அழிக்க முடியாதபடி இருந்தான்.

பத்ரிகாசிரமத்தில் தவம் இருந்த முனிவர்களுக்கு சிவன், இந்த திருத்தலத்தில் தவம் இருந்தால், இந்த இடத்தில் செய்யும் எல்லா தவங்களும் அது பதினாயிரம் மடங்கு பலன் அளிக்க வல்லது என்று ஒரு வரம் அளித்து இருந்தார்.

சஹஸ்ர கவசாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் எம்பெருமானிடம் வேண்ட, அவரும் ஆதிசேஷனுடன் நர நாராயணர்களாக இங்கு அவதரித்தார்கள். ஆதிசேஷனுக்கு உயிர்ப்பிக்கும் மந்திரத்தையும் உபதேசித்து இந்த அசுரனிடம் போரிட ஆரம்பித்தார். அதன்படி ஒரு நாள் ஒருவர் போர் புரிவது, அதே நாள் மற்றொருவர் தவம் புரிவது. போரில் அசுரனின் ஒரு கவசத்தை அழிப்பது, அதனால் மடிந்தால், உயிர்ப்பிக்கும் மந்திரம் கொண்டு ஒருவர் மற்றொருவரை பிழைக்க வைப்பது என்று பேசி வைத்து கொண்டனர். அதன்படி நரனும் நாராயணனும் 9999 நாட்கள் போர் மற்றும் தவம் புரிந்து அசுரனின் 9999 கவசங்களை அழித்து விட்டனர். கடைசி நாள் பிரளயம் ஏற்பட, கடைசி கவசத்தோடு அசுரன் கர்ணனாகப் பிறந்தான் என்று சொல்வார்கள். இந்த நர நாராயணர்களே பின் வந்த யுகத்தில், அர்ஜுனனாகவும் பகவான் கிருஷ்ணன் ஆகவும் அவதரித்தார்கள் என்று இங்கே கூறுகிறார்கள்.

தப்த குண்டம் : அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு, அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால் அவருடைய பாவமெல்லாம் நீங்கும் என்றும், அதனால் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம். சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலகாநந்தா நதியில் தொட முடியாத அளவிற்கு குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

நாரதர் : வ்ருத்தபத்ரி நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.  நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும்,  பின்னாளில் ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குபேரன் : மஹாலக்ஷ்மியை திருமணம் முடிக்க எம்பெருமான் இங்கு குபேரனை அழைத்து விமரிசையாக தன்னுடைய திருமண ஏற்பாட்டை செய்த திருத்தலம். அதனால், குபேரனும் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார்.

ப்ரம்ம கபாலம் : சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை.  சிவன், விஷ்ணுவிடம் இதற்கு பரிகாரம் கேட்டபோது, ‘பூலோகத்தில் ஒரு பதிவிரதையிடம் பிச்சையினை பெற்றால்’, பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று கூறினார். சிவபெருமான், பூலோகத்தில்  பத்ரி ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க, மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது. அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர். இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஹனுமான் : பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான் கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

உத்தவர் : ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,  பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி உத்தவரை அங்கு சென்று, தனது திருவடி தீர்த்தமான அலகநந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய வேண்டும் என்று உபதேசித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர், கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பத்ரி சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் வைகுந்தம் வந்தடைய ஆசி வழங்கினார். கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் சென்று பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

வியாசர் : இந்த மலையில், மணிபத்ரபூர் என்ற மானா கிராமத்தில், ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார். வியாச குகைக்கு எதிரில் உள்ளது. இந்த குகை புராதனப் பெருமையைப் பறைசாற்றியபடி அமைந்திருக்கிறது. இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவியம் மனதில் ஊன்றியது.  வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார். உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகம் எடுத்ததாகவும், அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை என்றும், ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்துபோகச் செய்துவிட்டார் என்றும் ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.   

பாண்டு : இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும், அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. பீமன் கட்டிய பீம்பாலம் வழியாகத் தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள் என்று இங்கு நிலவும் செவி வழி செய்தி.

ஆதி சங்கரர்: எம்பெருமானின் உத்திரவு படி பிரம்மா முதலிய தேவர்கள், அலகானந்தா, நாரத குண்டத்தில் இருந்த பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்து அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வந்தார். இடையில் இதற்கு தடை ஏற்பட்டு, விக்ரகம் மறைந்தது. ஆதிசங்கரர் பத்ரிநாத் வந்தபோது, அவர் கனவில் தோன்றிய எம்பெருமானை, ஆதிசங்கரரே மீண்டும் நாரத குண்டத்தில் இருந்து மீட்டு மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தான் இன்னும் ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நம்பூதிரிகளால், அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 22 பாசுரங்களில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

திருமங்கையாழ்வார்:

திருமங்கை ஆழ்வார் ஒரு பதிகத்தில், “வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” என்று பதரிகாச்ரம க்ஷேத்ரத்தை மங்களாசாஸநம் செய்தும், “வதரியாச்சிரமத்துள்ளானே” என்ற அடுத்த பதிகத்தில் அந்த க்ஷேத்திரத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானைத் துதிக்கின்றார். ஆழ்வார், ஸ்ரீபதரீநாதன் எழுந்தருளியிருக்கிற திருமலை முழுவதையும் திருவுள்ளம் பற்றி வதரிவணங்குதுமே என்று சொல்லி, அந்தத் திருமலையில் எல்லா இடங்களிலும் ஸ்ரீநாராயணன் தவம் புரிந்த இடமாயும், தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டு அருளின இடமாக இருக்கிற ஸ்ரீபதரிகாச்ரம விசேஷத்தை வதரியாச்சிராமத்துள்ளானே என்று சொன்னதால், மேலே சொன்ன ஐந்து பத்ரிகளும், ஆதிபத்ரி எல்லாம் சேர்ந்து இந்த திவ்யதேசம் என்று கொள்ள வேண்டும்.

பெரியதிருமொழி 1.3

  1. வதரி என்னும் இதுத் திருத்தலம் மற்ற திருப்பதிகள் போல் இல்லாமல் வெகு சிரமப் பட்டு அடையக்கூடியது ஆகையால், உடல் கட்டுக்குலைவதற்கு முன்னே போய் அநுபவிக்க வேண்டும், இல்லையானால், உடல் தளர்ந்து போனபின் நெஞ்சால் கூட நினைக்கவும் அரிதாகும். அப்படிப்பட்ட தளர்ச்சி நேருவதற்கு முன்னே சென்று ஸேவிக்க வேண்டும் என்று அருளிச்செய்கிறார். வயதான காலத்தில், முதுகு கூனிட்டபின், முன்னடி நோக்கி வளைதல் இயல்பு என்றும், அதற்கு முன்பே வதரி சென்று வணங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
  2. முதுமை வருதற்கு முன்பே நம்முடைய கரணங்கள் சக்தியோடு இருக்கும் இளமையில் பரமபோக்யமான வதரியை வணங்குதல் நன்று என்கிறார். தேனைப் பருகின வண்டுகள் களிப்புக்கு இடமான வதரி என்று சொன்னது “எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” ( திருவாய்மொழி 10.7.2) என்னும்படியான எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து முக்தாத்மாக்கள் வாழப் பெற்ற வதரி என்கிறார்.
  3. உடம்பில் இளமையில் மறைந்து கிடக்கும் நரம்புகள், முதுமையில் உறிகள் போலே, உடம்பின் மேற்பக்கம் தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையில் உடல் நடுங்கி திருநாமங்களை வாயினால் சொல்ல முடியாது; ஒரு திவ்ய தேசத்திற்கு காலினால் செல்ல முடியாது; நெஞ்சால் நினைக்கவும் முடியாது; ஆகையால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், உடல் திடமாக உள்ள போதே, பக்தியுடன் திருநாமங்களை சொல்லி பரமபோக்யமான வதரி சென்று வணங்குதல் நன்று என்கிறார்.
  4. முதுமையில் கண்கள் சுருங்கி அவற்றில் இருந்து பீளை பெருகவும், இருமி, பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தடுமாறி நடக்கவும் முடியாமல், இருக்கும் காலத்தில் வதரி வணங்குதல் முடியாத காரியமாகும். அப்படி நேருவதற்கு முன்னமே அங்கு சென்று, ‘கண்ணபிரானே நம் குலக் கொழுந்து, இவன் சொற்படி நடப்பதே நமது கடமை’ என்று இருந்த இடையர்களுக்கு, கோவர்த்தன குன்றினை ஏந்தி, பெருமழையில் இருந்து காத்த கண்ணபிரானது, வாளை மீன்கள் குதித்து வாழும் குளிர்ந்த குளங்களைக் கொண்ட வதரியை சென்று வணங்குதல் நன்று என்கிறார்.
  5. இளமையில், மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும் சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொல்லுவது இருமுவது என்ற இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டு, தடியைக் காலாகக்கொண்டு, முதுமையில் தடுமாறி நடக்க நேருவதற்கு முன்னே, வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை உடையவனான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். இங்கு, மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும் சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொன்னது சம்சாரிகளைப் பற்றி தானே தவிர, ஆழ்வாருடைய நெஞ்சில் ஒரு துளி கூட அப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
  6. பலஹீனமான பேச்சுடனே இருமி சரீரம் மெலிந்து பைத்தியம் பிடித்தவர்கள் போல விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தைகள் சொல்லி தளருவதற்கு முன்பே, எல்லோருக்கும் ஸ்வாமியாயும், தனக்கு தந்தையாயும், உலகத்திற்கு மூலக் கடவுளாயும், ஒரு காலத்தில் தேவர்களுக்காக ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாயும் உள்ள எம்பெருமானுடையதான ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். அத்தன் என்பதனால், பொதுப்படையாக உலகத்துக்கெல்லாம் ‘ஸ்வாமி என்பதும், எந்தை என்பதனால், விசேஷித்துத் தமது ஸ்வாமி என்றும் ஆழ்வார் அருளுகிறார்.
  7. உலகில் விசித்திரமான ஒன்றையோ, விகாரமான ஒன்றையோ பார்க்கும் போது கண்கள் கூசி ‘அப்பப்ப!’ என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டு கொண்டு கால் ஊன்றி தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதி செல்லும் போது, அளவு கடந்த முதுமை விகாரங்களைக் கண்டு அந்த மாதர்கள் தங்களுக்குள்ளே அதிசயித்து, பக்கத்து வீட்டுக்காரிகளை அழைத்து அவர்களுடைய எஜமானர் வருகிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டி சிரிப்பார்க்கள். அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவதற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று என்கிறார்.
  8. முதுமையில் கருநெய்தல் போன்ற அழகிய கண்களை உடைய மாதர்கள் இருக்கும் இடத்தின் வழியே செல்லும் போது, ‘அப்பால் ஒழிந்து போங்கள், இங்கே இருக்கக் கூடாது’ என்று அவமரியாதையாகப் பேசுகிறர்களிடம், ஆசைகளை விட்டுத் தொலைத்து நல்வழி போகப் பார்க்க நினைத்தால், பரிமளம் மிக்க குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்த எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். குவளையங்கண்ணியர் என்று சொன்னது கண்ணழகிலே துவண்டு நிற்கும் முதியவர்களின் எண்ணத்தினால் என்று கொள்ளவும்.
  9. இந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்றும் ஞானேந்திரியங்கள் என்றும் இருவகைப்படும். வாய், கை, கால், குதம், குறி என்பன கர்மேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். பொதுவாக முதுமையில், இவை எல்லாம் படிப்படியாக அழியும். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் முதுமை அதிகரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை வணங்குதல் முடியாது. அப்போதைக்கு இப்போதே குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு, அவனது திருநாமங்களை பாடுதலும் ஆடுதலும் செய்யப்பெற்ற, வதரி வணங்குதல் நன்று என்கிறார்.
  10. வண்டுகள் ரீங்காரம் செய்து குளிர்ந்த மலர்களில் இருக்கும் மதுவை உண்டு மகிழும் அழகிய பூக்கள் சூழ்ந்து திகழும் பத்ரி எனப்படும் இடத்தில் எழுந்தருளியுள்ள நெடுமாலைப் பற்றி மங்கை நாட்டின் வேந்தனான கலியன் சொன்ன பாடல்களை கூட்டமாய்ச் சேர்ந்து ஆடிப்பாடும் தொண்டர்கள் நீள்விசும்பில் பரமபதம் எனப்படும் வைகுந்தத்தில் சென்று ஆட்சி செய்திருப்பார்களே தவிர அற்பர்களாய் மீண்டும் இவ்வுலகிற்க்கு வந்து துவள மாட்டார்கள் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் வதரிவணங்குதுமே என்று இந்த தலத்தைப் பற்றிச் சொல்லி வந்தவர் இப்பாட்டில் வதரிநெடுமாலை என்று சொல்லி முடிப்பதால் வதரிநாராயணனை முன்னிட்டே வதரி வணங்கினார் என்பது தெளிவாயிற்று.

பெரியதிருமொழி 1.4

  1. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சிமார்களுக்காக அரிய பெரிய காரியம் செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார். முதலடியில் பூதேவிக்கு செய்த வராஹ அவதாரமும், இரண்டாம் அடியில் ஸ்ரீதேவிக்கு செய்த இராம அவதாரமும் சொல்லப்படுகிறது. இப்படி நிலமகள் இருவர்க்கும் காரியம் செய்த எம்பெருமான், தான் என்றைக்கும் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் காரியம் செய்வதற்காக, இந்திரன் முதலிய தேவர்கள் தேனொழுகுகின்ற கற்பக நறுமலர்களைக் கொணர்ந்து வணங்குமிடமாயும் கங்கைக் கரையில் உள்ளதாயும் இருக்கிற பதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறார் என்கிறார்.
  2. எம்பெருமானையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவு கொண்டு வந்த மாரீசனை ஒழித்ததையும், ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்ததையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார். வாலியை, ஆழ்வார் கொடுமையான தொழிலை உடைய பலசாலியானவன் என்று கூறுகிறார். தேனையுடைய திருநாபிக் கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட தேவர்களும் பல காலம் வந்து வணங்கப் பெற்றதும் பெருகுகின்ற புராதனமாக ஆகாச கங்கைக் கரை மீது உள்ளதுமான ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறான். முதுநீர் என்று கங்கை நீரை சொல்கிறார், முதுநீர் என்பதால் புதிதாகச் சுரந்த நீர் அல்ல என்று புரியும். இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டுள்ளமையால் வேதம் போலவே நித்யமான நதி என்பது புலப்படும்.
  3. ஒருவரால் அழிக்க முடியாத லங்கா புரியும் அதற்கு பாதுகாப்பாக இருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸ ஜாதி முற்றிலும் நாசம் அடையும் விதம் தனது மிகச் சிறந்த பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியம் செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம் என்கிறார். “கடலை வற்றச் செய்துவிடுகிறேன்” என்று இங்கிருந்து கிளம்பும் முன் திருப்புல்லாணியில் சிவந்த கண்களுடன் அம்பு தொடுத்ததனாலும், கடலிடையே அணைகட்டினதாலும், கடல் கெடாவிட்டாலும், “கடல் கெடக் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் ” என்று ஆழ்வார் கூறி உள்ளார். கங்கையின் மிடுக்கையும் வேகத்தையும், சூரியன் சுழன்று வரும் மேருமலையை முட்டி வருகின்ற வெண்ணிறமான கங்கை நீர் ஆகாயத்தில் பரவி இருப்பதைப் பார்த்தால், மாளிகைகளின் உச்சியில் இருக்கிற தூண்களில் கட்டப்பட்டுள்ள வெளுத்த துணிக் கொடிகள் காற்றில் அசைந்து பரவுவது போல் இருக்கின்றது என்று ஆழ்வார் சொல்கிறார்.
  4. ‘நெஞ்சே! தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளி இருக்கிறான். அங்கே சென்று அவனை நீ வணங்கி வாழ்வாயாக; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதியான ‘ஒரு நல்வார்த்தை ‘ என்கிறார். அந்த வதரியாச்சிரமம் கங்கைக்கரையிலுள்ளது; அந்த கங்கை, கண்ணன் செய்கிற காரியமெல்லாம் செய்யும். அவன் “ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு, காற்றிற் கடியனாய் ஓடி” ( பெரியாழ்வார் திருமொழி, 2.10.1) என்றபடி ஆய்ச்சிகளின் துகில்களையும் ஹாரங்களையும் வாரிக்கொண்டு ஓடுவது போல், மேலுலகத்து மாதர்களுடைய வஸ்த்ரங்களையும் முக்தாஹாரம் முதலியவற்றையும் வாரிக்கொண்டும் பல பல ரத்னங்களையும் தள்ளிக்கொண்டும் பெருகி ஓடுகின்றதாம் கங்கை.
  5. சென்ற பாட்டில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வரவே, மற்றொரு க்ருஷ்ண வரலாற்றை இங்கே பேசுகிறார். பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையுண்டு அவளை முடித்த வரலாறு தெரிந்த ஒன்று. யசோதையைப் போலவே வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய மடியிலே நல்ல மகன் போல இருந்து அவளது முலையையுண்டு அவளை முடித்த கண்ணனைக் கண்ட தாயானவள், ‘இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக்கூடாது, முலையுண்கிற பாவனையில் உயிரை முடிக்கும் பிள்ளை இது’ என்று கூசும்படியாக சூரனாய் வளர்ந்த தலைவன் எழுந்தருளி இருப்பது வதரியாச்சிரமம். இந்த பிள்ளையை நாம் மடியிலே வைத்து முலைகொடுத்துப் பழக்கியதால் இவன் கண்டார் மடியிலும் முலையுண்கிறது ; இனி நாம் இவனை இடுப்பில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்று கூசினாள் யசோதை என்கிறார். வதரியாச்சிரமம், ஓங்கி இருக்கும் சிகரத்தின் உச்சியிலே அண்டத்தைத் தரிக்கிற செம்பொன்மலையாகிற மேருபர்வததில் விளங்குகின்ற விசாலமான சிகரத்தில் இருந்து விழுந்தது போல் ஓடி வருகின்ற கங்கையின் கரையிலுள்ளது என்கிறார்.
  6. கண்ணபிரான் தொட்டில் பருவத்தில் செய்த லீலை ஒன்றை சென்ற பாசுரத்தில் சொன்னார். இதில் குமாரனான பருவத்தில் செய்த மற்றொரு செயலைச் சொல்லுகிறார். கும்பன் என்னும் இடையர் தலைவனது மகளாகவும் நீளாதேவியின் அம்சமாகவும் பிறந்த “நீளா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருபவளுமானவும், இதற்கு உவமையாக முடியாது வருந்துகின்ற அல்குல் படைத்தவளுமான, நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை குறித்தபடி யார்க்கும் அடங்காத ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு அவற்றை அடக்கி அப்பிராட்டியை மணம் செய்து கொண்ட அப்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான் என்கிறார். அந்த வதரி, கங்கைக்கரையில் உள்ளது. கபில மாமுனியின் சாபத்தால் நீறாய்க் கிடந்த தன் பாட்டன்மாரை, சுத்தி செய்தற்காகக் கங்கையைப் பெற வேணுமென்று பகீரதன் தவம் புரிந்ததால் காரணந்தன்னால் என்று ஆழிவார் கூறியுள்ளார். அந்த கங்கையை, பகீரதன் இந்த உலகத்திற்கு அழைத்து வரும் போது / அவதரிக்க செய்த போது, நடுவழியிலே ஒரு மலை தடுத்துக் கொண்டு நின்றதாகவும், கங்கை நீரின் அளவும் வேகமும் ஏற்படுத்திய விசையினால் அந்த மலையை இரண்டு பிளவு ஆகும் படி குத்திப் புறப்பட்டு, அம்மலையிலிருந்த யானைகளையும் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தது எனபது ஒரு விளக்கம். பகீரதன் கொணர்ந்த கங்கா ப்ரவாஹத்தை ஒரு மலை தடுத்த போது, அவன் இந்திரனை நோக்கித் தவம் புரிந்ததாகவும், அவன் தவத்தை மெச்சி, இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி, அது அந்த மலையை, தன்னுடைய நான்கு தந்தங்களால் இருபிளவாகும் படி குத்தி கங்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாதாகவும் புராணம் சொல்லுவது இன்னொரு விளக்கம்.
  7. திருமால் தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கிக் கடல்கடைந்து அருளியபோது, கடையப் பட்ட அந்த கடலில் இருந்து ஐராவதம் என்ற யானை, உச்சிச்ரவஸ் என்னும் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயின. அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவத யானையையும், அமிருதத்தையும், தேவர்களுக்குத் தலைவனாயிருக்கும் சொர்க்க லோகத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரியில் உள்ளான்; அவ்வாச்சிரமம் கங்கையின் கரைமேலுள்ளது. அந்தரத்து அமரர் அடியிணை வணங்க, ஆயிரம் முகத்தினால் அருளி கங்கை, மந்தர மலையில் இருந்து விழுந்தது. அதாவது கங்கையானது ஒரு முகமாக வந்து இறங்கினால், பெரிய விசையோடே வருகிற மிடுக்கைக் கடல் தாங்காது என்று தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து ‘ கங்கை பல முகமாகப் பெருகும்படி அருள் புரிய வேணும்’ என்று பிரார்த்திக்க, அவன் ‘ அப்படியே ஆகுக’ என்று அருள் கூர்ந்து கங்கையை நியமித்த வளவிலே கங்கை பல முகமாகப் பெருகிற்றாம். அதையே, கங்கா தேவியின் திருவடிகளிலேயே வணங்கிப் பிரார்த்தித்தனர் என்றும் கங்காதேவியே ஆயிரம் முகமாக பிரிந்து வந்தாள் என்றும் கூறுவார் உளர்.
  8. மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரம பக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமை செய்த ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்து ஒழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்ம ஹத்தி சாபத்தைத் தொலைத்து அருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். தவம் புரிந்துயர்ந்த மாமுனி கொணர்ந்த என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர். ஒன்று பெரிய தவம் செய்து பகீரதன் கொண்டுவந்த கங்கை என்பது. மற்றொன்று, பெரிய தவம் புரிந்து பிரம்மரிஷி என்று உயர்ந்த, விசுவாமித்திர முனிவர், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அழைத்துக் கொண்டு போன போது கங்கையின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே கங்கைக் கரை மேல் சென்றதால், தவம் புரிந்து உயர்ந்த மாமுனியினால், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன் கரைமீது கொண்டு வரப்பெற்ற கங்கை என்ற விளக்கம் சொல்வதுண்டு.
  9. எல்லா உலகங்களில் உள்ள எல்லா பொருட்களையும், பிரளய காலத்தில், தன்னுடைய திருவயிற்றிலே வைத்து காப்பாற்றியவனும், உபயவிபூதி நாதனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். “ஒண்சுடர் எய்ந்த உம்பரும் ஊழியுமானான்” என்றது மேலுலகத்திற்கும் கீழுலகத்திற்கும் நாதன் என்று சொன்னது. உம்பரும் ஆனான் என்பதனால் மேலுலகத்திற்கு நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ‘ஊழியுமானான்’ என்பதனால், காலம் நகரக்கூடியதான இவ்வுலகுக்கு நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ப்ரஹ்மலோகத்தில் இருந்து நடுவே வழிபண்ணிக்கொண்டு அதற்குக் கீழ்ப்பட்ட அந்தரிக்ஷலோகத்திலே வந்து இறங்கி, அங்கு நின்றும், பூமிப்பிராட்டி பொறுக்க மாட்டாமல் தடுமாறும்படி, பூமியிலே வந்து பெருகுகின்ற கங்கையின் கரைமேலுள்ளது வதரியாச்சிரமம்.
  10. பெரிய வேகத்தோடு வருகிற அலைகளை உடைய தெளிந்த தீர்த்தத்தை கொண்ட கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளி இருக்கிற கடல் வண்ணனான ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சிந்தித்துத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறந்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை நெடு நாள் ஆண்ட பின் ப்ரஹ்ம லோகத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர். எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன்கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள். தம்முடைய கவன ஸாமர்த்தியத்தால் இல்லாமல், எம்பெருமானுடைய இன்னருளால் செய்யப்பட்ட பாசுரம் எனபதை பனுவல் என்ற வார்த்தையால் ஆழ்வார் சொல்கிறார்.

சிறிய திருமடல் 74:

நிறைய திவ்யதேசங்களைப் பற்றி சொல்லும் இடத்தில, பாரோர் புகழும் வதரி என்று ஆழ்வார் கூறுகிறார்.

பெரியாழ்வார் :

பெரியாழ்வார் திருமொழி (4.7.9) பாசுரத்தில், பெரியாழ்வார் பத்ரிநாத் பற்றி சொல்லி உள்ளார். தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார்.

மீண்டும் இன்னும் ஒரு திவ்யதேசம் பற்றி பார்க்கும் போது சந்திப்போம் நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: