A Simple Devotee's Views
ஸ்ரீஹரிலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ தேவராஜன் திருவடிகள் போற்றி போற்றி !!
திவ்யதேசம் | திருநைமிசாரண்யம் | |||
மூலவர் | ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீஹரி, | |||
உத்ஸவர் | ஸ்ரீ தேவராஜன் | |||
தாயார் | ஸ்ரீஹரிலக்ஷ்மி புண்டரீகவல்லி | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 |
வடநாட்டு திவ்யதேசங்களை பற்றி ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.
கோவில் பற்றி
“குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…” என்று சொன்னவர் காஞ்சி மஹாபெரியவர்.
இந்த திருத்தலம் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் அதாவது காடு ஆனதால் நேமிச ஆரண்யமாகி, நைமிசாரண்யம் ஆயிற்று.
இங்கு, நைமிச ஆரண்யம் என்ற கருத்தை கொண்டு, மக்களும் இறைவனை ஆரண்ய ஸ்வரூபியாக, அதாவது எம்பெருமானின் உருவமாய் காடுகளைக்கொண்டு, காடுகளையே எம்பெருமானாக வணங்குகின்றனர். இங்கு வனம் என்று இயற்கையையே வழிபாடு செய்யும் வைணவர்களுக்கு, இதே போல் நீர் என்ற இயற்கையை எம்பெருமானாக செய்யும் திருத்தலம், ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் ஆகும்.
தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை. ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).
சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். கோமதி நதிக்கு ஆதிகங்கை என்று மற்றொரு பெயர் உண்டு. இந்த கோமதி தான் முதலில் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்ட நதி என்று சொல்வார்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்ரதீர்த்ததில் நீராடுவது விசேஷம். அமாவாசை அன்று சக்ரதீர்த்ததில் நீராடினால் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்றும், திங்கள் அன்று நிகழும் அமாவாசையின் போது சக்ரதீர்த்தத்திலும், கோமதி நதியிலும் நீராடினால் எல்லா ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பிக்கை.
இங்குள்ள சக்ர தீர்த்தம் 14 லோகங்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படுவதால், சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ரதீர்த்த கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு.
இங்கிருந்து கோமதி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி (வ்யாஸகத்தி) என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்ற புராணங்களை உருவாக்கினார்கள். வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்த பெருமை இத்தலத்திற்கு உண்டாகிறது. இந்த கோவிலில் ஓலை வடிவில் இந்த புராணங்கள் இன்றும் பாதுகாக்கப் படுகின்றன. இங்கேயுள்ள ஆலமரத்தடியில் பல மஹரிஷிகள் இருந்து உபதேசம் செய்ததால், அதனை சுற்றி வருபவர்களுக்கு, இன்றும் இந்த ஆலமரமே, அதில் இருந்து வீசும் புண்ணிய கிரணங்கள் மூலம், அந்த ரிஷிகளின் அருளை அள்ளி வழங்குவதாக நம்பிக்கை.
இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான்கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.
ஹநுமான்கட்டி செல்வதற்கு சற்று முன்னால், புராண மந்திர் என்று சுகப்பிரம்ம ரிஷிக்கு ஒரு கோவில் உள்ளது, கிளி மூக்குடன் பெரிய வெண்கல சிலை உள்ள கோவில் ஆகும்.
இங்கு ராமானுஜ கூடமும், அஹோபில மடமும் தங்குவதற்கும் தென்னிந்திய உணவுக்கும் உள்ளன. அஹோபில மடத்தில், தேவனார் விளாக அழகியசிங்கர் என்ற ஆச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது.
இங்கு தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள்
ஸ்தல வரலாறு
உக்கிரஸ்ரவஸ் என்ற சூத பௌராணிகர் மஹாபாரத இதிகாசத்தை சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்து உரைத்தார்.
ஒரு சமயம் சௌனகர் தலைமையில் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்கு உகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான். இந்த பாரத தேசத்தில் கோமதி நதி தீரத்தில் உள்ள இந்த இடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.
வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து தவம் செய்தனர். மஹாவிஷ்ணுவும் வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகத்தை ஏற்றுக் கொண்டு அந்த முனிவர்களுக்கு அருள் புரிந்தார்.
இங்கு தான் இராமர், இராவணனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக ஒரு அஸ்வமேத யாகம் செய்தார். 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 4 வேதம் ஆகியவற்றை வேதவியாசர் வழங்கியதும் இங்கே தான். பின்னாளில் பாகவதம் விடாமல் படிக்கப் பட்டதும் இங்கேதான். கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் ஆகியோரும் இந்த தலத்திற்கு வருகை புரிந்து உள்ளனர். துளசிதாசர் இராம சரித மானஸ் எழுதியதும் இங்கேயே. இதனை சுற்றியுள்ள 16 கிலோமீட்டர் தூரமும் புனித பூமியாக கருதப்படுகிறது.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் இந்த திருத்தலத்தின் மேல் பத்து பாசுரங்கள் பாடி உள்ளார். வம்புலால் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் இவற்றை நம்பினார் இறந்தால், நமன் தமர் பற்றி ஏற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் (பெரிய திருமொழி 1.6.4) என்று தனது மனைவியைத் தவிர்த்து பிறர் மனைவியையும், மற்றவர்களின் பொருள்களையும் விரும்புகின்றவர் இறந்த பிறகு, அந்த பாவங்களுக்காக செம்பினால் செய்யப்பட்ட , நெருப்பினில் இட்ட ஒரு பாவையின் சிலையைக் கட்டித் தழுவு என்று நரகத்தில் தண்டனை வழங்குவர். எனவே அது போன்ற கொடுமைகள் செய்வதற்கு தான் அஞ்சுவதாகவும் நம்பினாரை ஒரு போதும் கைவிடாத நைமிசாரண்யத்தில் உள்ள எம்பெருமானின்
திருவடியை வந்து அடைந்தேன் என்றும் பாடுகிறார்.
இந்த பத்துப் பாசுரங்களில் திருமங்கையாழ்வார் தம்முடைய தாழ்வுகளையெல்லாம் கூறிக்கொண்டு
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அந்த பகவானை நைமிசாரண்யத்தில் உள்ளாய் என்று சரணம் அடைவதாகவும், அதனை எப்படி செய்தேன் என்றும், அதனால் பெற்ற பலனையும் கூறி நம்மையும் நைமிசாரண்யத்திற்கு அழைக்கின்றார்.