பேசிற்றே பேசல் அல்லால்

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (எம்பெருமானை/பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் மக்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யெற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.

அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.

அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார்.

தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, எம்பெருமானை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.

கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். எம்பெருமான் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.

உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் எம்பெருமானை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.

அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம்.

திருமாலை இருபத்தி இரண்டாம் பாசுரம்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரலாகாது, ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன், மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பதல்லால், பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் (திருமாலை 22)

சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனதினால் முழுமையாக உட்கொள்ளமுடியாத விஷயத்தை எப்படி பேசி தீர்ப்பது என்று ஆழ்வார் கேட்கும் பாடல். தைத்ரீய ஸ்ம்ஹிதை 7.5.3 ன் படி, முதலில் மனது, பிறகுதான் பேச்சு என்பது வரிசை. அதாவது மனது நினைப்பதைத்தான் வாய் பேசமுடியும். மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்பது கருத்து.

ஆழ்வார் தன் மனத்திடம், “அறிவில்லாத மனமே, வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவன் அறியமுடியாதவனாக இருப்பவன். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை பாசுரம் எழுதி பேச முடியுமா” என்று கேட்கிறார்.

பேசிற்றே பேசல் அல்லால்

மனத்தால் நினைக்க முடியாவிட்டால், மற்ற விஷயங்களை வாய் பேசுவது போல், பகவத் விஷயத்தையும் வாயால் பேசலாமே என்றதற்கு, மற்ற விஷயங்கள் அளவிற்கு உட்பட்டவை, அதனால் வாய் பேசமுடியும், ஆனால் இதுவோ, அளவிடமுடியாதது, அதனால் வாய் பேசி முடிக்க முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார். விஷ்ணு தர்மத்தில் சொன்னபடி, எது விஷ்ணுவை பற்றி பேசுகிறதோ அது நாக்கு, எது விஷ்ணுவை நினைக்கிறதோ அது நெஞ்சு என்பது போல், பகவத் விஷயங்களை மட்டும் பேசி மற்ற விஷயங்களைப் பேசாமல் இருந்து விடவேண்டியது தானோ என்று ஆழ்வாரிடம் சொன்னதற்கு, ஆழ்வார், முன்பு வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும் பேசிய பரமாத்மாவின் பெருமைகளையும் விஷயங்களையும் பேச முடியுமே தவிர, வேறு ஒன்றும் நாம் பேசமுடியாது என்கிறார். மணவாள மாமுனிகள், இதனை “முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு, பின்னோர்ந்து தாம் அதனை பேசாமல் தம் நெஞ்சில் தோன்றினதே” பேசுபவர் மூர்க்கர் என்று உபதேச ரத்னமாலை (71) என்ற நூலில் கூறுகிறார்.

வேதங்களுக்கும், அவற்றை சாட்சியாக கொண்டவர்களும் பேசிய விஷயங்களுக்கு சில உதாரணங்கள் :

  • நாராயணவல்லி – அந்த இதயக்கமலத்தின் நடுவில், சிறியதும், மேல்நோக்கி இருப்பதும் பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்ரகம், அது நீல மேகம் கொண்ட மின்னல் போல் பிரகாசமாக காட்சி அளிக்கிறது
  • நீலமுண்ட மின்னன்ன மேனி (திருவிருத்தம், 29) – மின்னல் கொடியை நடுவில் கொண்ட நீல மேகம் போன்ற திருமேனி என்ற பொருளில், வருகிறது. மின்னல் என்பது திருமார்பில் உள்ள நாச்சியாரையும், எம்பெருமானின் மேனி என்று இரண்டினையும் குறிக்கும்.
  • மஹாபாரதம், சாந்தி பர்வத்தில் (46.118) சொல்வது, அடியவர்களை நழுவ விடாதவனும், காயாம்பூவை போன்றவனும், பீதாம்பரத்தை உடையவனுமான கோவிந்தனை நமஸ்கரிப்பவர்களுக்கு எங்கும் பயமில்லை.
  • சூரியனுக்கு நடுவில், தங்கம் போன்று அழகிய உருவுடன் உள்ள இந்த பரமபுருஷன், தங்கம் போன்ற மீசையும், கேசத்தையும், நகம் முதலான எல்லா அவயங்களுடன் சூரியனால் மலரும் தாமரையைப்போல் இரண்டு கண்களும் உடையவன் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில் (1.6.6) (Chandogya Upanishad) சொல்லப்படுவது,
  • மநு ஸ்ம்ருதி (12.122) சொல்வது, எல்லாவற்றையும் நியமிப்பவனான பரமாத்மாவை, உருக்கிய தங்கம் போல் ஒளி விடுபவனான அந்த பரமபுருஷனை, ஆச்சரியமான கனவில் வரும் ஞானத்தால் அறியப்படவேண்டும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சாதாரண ஞானத்தால் அவனை அறியமுடியாது என்பதே இதன் பொருள்.
  • திருவாய்மொழி 3.1.2 சொல்வது, “சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது”, அதாவது, நெருப்பில் இட்டு சுட்டு, உரைக்கல்லில் பட்டை தீட்டப்பட்ட நல்ல உயர்ந்த பொன்னானது எம்பெருமானின் திவ்யமங்கள விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பு ஆகாது. நீலமேக ஸ்யாமளனான எம்பெருமானை எதற்கு பொன்னுடன் ஒப்பிடுவது என்று கேட்டால், “பொன்னிவர்மேனி மரகதத்தின் ” (பெரிய திருமொழி 9.2.1) என்றும், “கணபுரத்து பொன்மலை போல் நின்றவன்” (பெரிய திருமடல் 91), என்றும் சொன்னதுபோல் இங்கும் பொன்னிறமாகவே விளங்குகிறது. மேலும், “ருக்மாபம் ” என்றும் “ஹிரண்மய புருஷோத்ருச்யதே” என்றும் கூறப்படுவதால் பொன்மயமான தாயாரின் ஒளிசேர்க்கையால் எம்பெருமானும் அவ்வாறே தோன்றுகிறான் என்று சொல்வதும் உண்டு.

கண் முதலிய உறுப்புகளுக்கு புலப்படாதவற்றை விளக்க, இந்த உலகத்தில் உள்ள, கண்களுக்கு தெரியக்கூடிய சில உதாரணங்களை கொண்டு வெளிப்படுத்து உலக வழக்கம். அதனால், விவரிக்கமுடியாத உயர்ந்த பகவத் விஷயமான திரு உருவத்திற்கு, தாழ்வான சிலவற்றை உதாரணமாக கூறியதால். எம்பெருமானை பற்றி முழுவதும் தெரிவித்து விட்டோம் என்று சொல்ல முடியாது.

தைத்ரிய உபநிஷத் – ஆனந்தவல்லி 9.1 – எவன் ஒருவனின் மனம், ப்ரம்மத்திடம் சென்று அதனை வாக்கினால் (வார்த்தைகளால்) அளவிடமுடியாது என்று திரும்புகிறதோ, அவன் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் என்றும் அவன் எதற்கும் பயப்படமாட்டான் என்றும் கூறுகிறது. இதனால் பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேசி முடிக்க முடியாத விஷயம் என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக வாக்கினால் சொல்லமுடையாததை கூட மனம் உணரமுடியும். ஆனால் இங்கே மனதினால் கூட அளவிடமுடியாது என்று திரும்புவதை கவனிக்க வேண்டும்.

இராமாயணத்தில், வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம். த்வமப்ரமேயஷ்ச துராஸதஷ்ச, ஜிதேந்த்ரியஷ்சோத்தமதார்மிகஷ்ச. அக்ஷய்யகீர்திஷ்ச விசக்ஷணஷ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

பெருமை ஒன்று உணரலாகாது

பிரம்மத்தை அறிந்தவன், அதனை பேச முடியாத விஷயம் என்று சொல்வதை ஏன் ஏற்க வேண்டும் என்றால், ஒரு உதாரணம் சொல்லும்போது உபமானம் எப்போதும் உபமேயத்தை விட உயர்ந்ததாகவே இருக்கும். ஆனால் எம்பெருமானுக்கு உபமானமாக எதைச் சொன்னாலும் அவை தாழ்ந்தவையாகவே இருக்கின்றன. இங்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம், குணம், செல்வம், திவ்யமங்கள விக்கிரகம் என்று எதையும் அளவிடமுடியாது என்று தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது மேலே சொன்ன ஸ்வரூபம் முதலிய எந்த ஒன்றினுடைய பெருமையையும் முழுவதாக சொல்ல முடியாது என்பதையே “ஒன்று” குறிப்பிடுகிறது.

ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலாவானும் அல்லன்

அப்படி என்றால் யாராலும் அறிந்துகொள்ளவே முடியாததா என்று கேட்டு அதற்கு ஆழ்வார் சொல்வது, மற்ற உபாயங்களை விட்டு, எம்பெருமானையே உபாயமாக கொண்டவர்களால் மட்டுமே அறியப்படுபவன், மற்றவர்களால் அறியமுடியாது என்பதே ஆகும். இதையே கீதையில் (7.3), கிருஷ்ணன், “பல்லாயிரமானவர்களில் ஒருவரே என்னை உள்ளபடி புரிந்து கொள்கிறார் என்று சொல்கிறார்.

இந்த வரியில் உள்ள “ஆசு” என்ற சொல்லும், அடுத்த வரியில் வரும் “மாசு” என்பதும் குற்றம் என்ற ஒரே அர்த்தத்தை சொன்னாலும், ஆழ்வார் இரண்டு விதமான குற்றங்களை சொல்கிறார். மேலே சொன்ன எம்பெருமான் தவிர, மற்ற உபாயங்களை (கர்ம, பக்தி, ஞானம்), கொண்டு தங்களுடைய முயற்சியால் அவனை அடைய நினைப்பவர்களின் மனதில் உள்ள அகங்காரத்தை ஆசு என்று குறிப்பிடுகிறார். அப்படி அவனை அடைந்தபின், அவனிடம் அவனை கேட்காமல் மற்றவற்றை கேட்பதை மற்றொரு குற்றமான மாசு என்கிறார்.

மாசு அற்றார்

மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம்.

  • இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்
  • பரமனையே வேண்டும் பகவன்லாபார்த்திகள்
  • இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை வேண்டும் கைவல்யார்த்திகள்

இதில் நாம் அடையவேண்டியது பரமனையே; ஐஸ்வர்யமும் கைவல்யமும் நாம் அடையவேண்டியவே என்று ஜீவாத்மா நினைத்தால் அது மனதின் இன்னொரு குற்றம் ஆகும். இதே ஆழ்வார் மாசு என்று இந்த பாசுரத்தில் கூறுகிறார். அவனை உபாயமாக கொண்டு, அவனிடம் கைவல்யம், மற்றும் ஐஸ்வரியம் வேண்டாம் என்று நிராகரித்து, அவனையே வேண்டுபவர்களை ஆழ்வார் மாசு அற்றார் என்று இங்கு கூறுகிறார்.

மனத்து உள்ளானை

இப்படி உபாயங்களையும், மற்ற அடையத்தக்கவைகளையும் விலக்கி, இந்த சம்சார வாழ்க்கையை விட்டு, பரமபதத்தில் எப்பொழுதும் எம்பெருமானையே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு, எல்லா பொறுப்புகளையும் அவனிடத்தில் விட்டு, அதாவது மாசு அற்றவர் ஆகவும், ஆசு அற்றவர் ஆகவும் உள்ள அடியவர்களின் இதய கமலத்தில், என்றும் வாழ்பவன் என்பதை மனத்து உள்ளானை என்று ஆழ்வார் கூறுகிறார். எப்படி காட்டு தீயை எந்த ஜீவராசியும் தாங்கிக் கொள்ள முடியாதோ, எப்படி மீன் முதலிய ஜீவராசிகள் தண்ணீரை விட்டு வெளிய வந்தால் தாங்கிக்கொள்ள முடியாதோ அது போல் எம்பெருமானாலும் மாசு, ஆசு உள்ள நெஞ்சகளில் இருப்பது என்பது தரிக்க முடியாதது என்றும் ஆழ்வார் கூறுவது போல் ஆயிற்று.

ஆசு, மாசு அற்றவர்களை கண்டுகொண்டு அவர்களின் நெஞ்சத்தில் நித்யவாஸம் செய்ய வேண்டியே, எம்பெருமான் திவ்யதேசங்களில் கண்வளர்ந்து அருளுகிறார்.

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு சிறப்பு இருப்பது என்பதும் திருமழிசைஆழ்வார் எம்பெருமானின் ஐந்து நிலைகளில் ஒன்றான, அந்தர்யாமியில் மிகவும் ஆழ்ந்து இருப்பார் என்பதும் நாம் முன் பார்த்து உள்ளோம். அவருடைய திருச்சந்தவிருத்த பாடல்கள் 64 மற்றும் 65, உரையாசிரியரின் உரையில் மனத்து உள்ளானை என்பதற்கு இடம் பெற்று உள்ளன.

மனத்து உள்ளானை என்பதற்கு மேலும் ஒரு சில பாசுரங்களை இங்கே காணலாம்.

வணங்கி நாம் இருப்பதல்லால்

அவன் அடியார்களின் நெஞ்சத்தைவிட்டு அகலாதவனான பின், நாம் செய்ய வேண்டியது அவனை அனுபவிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார். இங்கு வணங்கி என்று சொல்வது, மனம், உடல், மொழி ஆகிய முக்கரணங்களாலும், எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும், எல்லாவிதமான பகவத் அனுபவங்களையும் உள்ளடக்கியது.

பேசத்தான் ஆவது உண்டோ

அவனுடைய பெருமைகளை நினைத்து பார்க்கையில், அவற்றை பாசுரமிட்டு பேச முடியுமோ என்று கேட்டுக்கொண்டு, முடியாது என்று அர்த்தத்தில் ஆழ்வார் முடிக்கிறார்.

பேதை நெஞ்சே நீ சொல்லாய்

பல காலங்களாக தாழ்ந்த விஷயங்களையே பேசி வந்த நெஞ்சே, இவ்வளவு பெருமைகள் பெற்ற விஷயத்தை பேசி விடலாம் என்று உன்னுடைய அறிவின்மையாலே நினைக்கிறாயோ, அளவிட்டு விடலாம் என்று பேச ஆசைப்படும் நீ சொல்வாயாக என்று ஆழ்வார் தன் நெஞ்சத்திடம் கேட்பதுடன் இந்த பாசுரம் நிறைவடைகிறது.

மீண்டும் சந்திப்போம், நன்றி.

மனத்து உள்ளானை பற்றிய சில பாசுரங்கள்

ஸ்வாமி நம்மாழ்வார் – திருவாய்மொழி
(10.8.2)பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து, பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் ,
(10.8.6)திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
(10-8-9)இன்று என்னை பொருளாக்கி, தன்னை என்னுள் வைத்தான் ” 
(1.7.6)என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
(1.8.5)வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான், பொய் கலவாது, என் – மெய்கலந்தானே
(1.9.5)ஈசன் மாயன் என் நெஞ்சில் உளானே
(2.6.7)உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி”
(2.9.4)என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி
(2.9.8)எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில்
(5.5.9)கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
(8.4.7)திருச்செங்குன்றூர் எம்பெருமான் “என்றும் என் சிந்தை உளான்
(8.6.2)“திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான் கண்டீர்”
(8.6.4)நேயத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
(8.6.8)என் நெஞ்சும் திருக்கடித்தான நகரும், தனதாயப் பதியே
(10.4.4)என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே
8.7 (எல்லா பாடல்களிலும் வருவது ஒரு சிறப்பு)இருந்தும் வியந்து” என்ற பதிகத்தில், (8.7) – (எல்லா பாசுரங்களிலும் இது பற்றி வருவது ஒரு சிறப்பு)
முதல் பாடலில், “பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து” என்றும்,
இரண்டாம் பாடலில், ‘எனது ஏழை நெஞ்சு ஆளும்: என்றும்,
மூன்றாம் பாடலில் ‘அவன் என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான்‘ என்றும்,
நான்காம் பாடலில் “எனது அம்மான், தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்,’ என்றும்
ஐந்தாம் பாடலில் “என்னுள் திகழும் மணி குன்றம்” என்றும்,
ஏழாம் பாடலில் ‘செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்திருந்த‘,
எட்டாம் பாடலில் ” சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும்,தம் நெறியா வயிற்றிற் கொண்டு நின்று ஒழிந்தாரே‘ என்றும்
ஒன்பதாம் பாடலில் “வயிற்றிற்கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே” என்றும்
பத்தாம் பாடலில் “வைத்தேன் மதியால் என் உள்ளத்து அகத்தே‘ என்றும் கூறுகிறார்.

மற்ற எல்லா பாசுரங்களில் நேரடியாக சொன்ன ஆழ்வார், ஆறாவது பாசுரத்தில், கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல், திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே (8.7.6) என்று சொல்வது, எம்பெருமானுடைய இயற்கையான அழகை கூறுவன அல்ல, தம்மோடு சேர்ந்த பின், அதாவது, எம்பெருமான் நம்மாழ்வாருடன் கலந்த பின், அவனுடைய திவ்ய அவயங்களில் பிறந்த புது அழகாகும். ஆக ஆறாவது பாசுரத்தில் நெஞ்சுள் புகுந்த பெருமானின் பெருமையை ஆழ்வார் கூறுகிறார்
ஸ்வாமி நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி
22மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே“,
35நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சு அகலான்,,
75நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய்
பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி
99வெள்ளத்திலுள்ளானும் வேங்கடத்து மேயானும்உள்ளத்திலுள்ளான் என்றோர்’
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
54வெற்பு என்று திருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும், நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல், நிற்பு என்று இளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன், வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று.
95என் நெஞ்சம் மேயான் என் சென்னியான், …….. உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்.
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
26“சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும்”
81நெஞ்சால் நினைப்பு அரியன் எலும் நிலைபெற்றேன், நெஞ்சமே பேசாய், நினைக்குங்கால், நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ, ஓராது நிற்பது உணர்வு.
82உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை,
83விண்கடந்த பைங்கழலான், உள்ளத்தின் உள்ளே யுளன்
84உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வர் ஏலும், உளனாய வண் தாமரை நெடுங்கண் மாயவனை யாவரே, கண்டார் உகப்பர் கவி.
திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்
65நிற்பதும் ஓர் வெற்பு அகத்து, இருப்பும் விண், கிடப்பதும் நற்பெருந்திரைக் கடலுள், நானிலாத முன்னெலாம், அற்புதன் அனந்த சயன ஆதி பூதன் மாதவன், நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
64நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம், அன்று நான் பிறந்திலேன், பிறந்த பின் மறந்திலேன், நின்றதும், இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
30அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் “
86உளன் கண்டாய் நன் நெஞ்சே. உத்தமன் என்றும் உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து, உளன்கண்டாய் தன் ஓப்பான் தானா உளன் காண் தமியேற்கும், என்னொப்பார்க்கு ஈசன் இமை”
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
2.3.2நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா,
5.2.5“மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே, பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண்டேன்பிறிதின்றி”
5.2.10அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
5.4.8அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்துஎன் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்
5.4.9பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ
5.4.10வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டுஎன்பால் இடவகை கொண்டனையே
5.4.11வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே, கோயில்கொண்ட கோவலனைக் 
ஆண்டாள் – திருப்பாவை
5வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் (5) – மற்ற ஆழ்வார்கள் தங்கள் மனதில் உள்ள பரமாத்மாவை கூறினார்கள். ஆண்டாள், முனிவர்கள் யோகிகள் உள்ளத்தில் உள்ள பரமாத்மாவை குறிப்பிடும் சிறப்பினை இங்கு காணாலாம்.
திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான்
5என்னை தன் வாரமாக்கி வைத்தான், என்னுள் புகுந்தான்
9“முடிவு இல்லது ஓர் எழில் நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே”
திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி
1.1.3திருமங்கையாழ்வார் தன்னுடைய முதல் ப்ரபந்தத்தின் முதல் பத்தின் முதல் பதிகத்திலேயே மூன்றாவது பாசுரத்தில், எம்பெருமான் தன் பக்தர்களின் மனதினில் இருப்பார் என்பதை, “தம் அடைந்தார் மனத்திருப்பார், நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்கிறார்
1.10.6அதே முதல் பிரபந்தத்தில் முதல் பத்தின் இறுதியில் பத்தாவது பதிகத்தில் ஆறாவது பாசுரத்தில், “மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே!” என்று மீண்டும் உறுதிசெய்கிறார்.
1.10.7திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே
11.5.10வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை
16“மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை, போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து”
34உள்ளத்தே உறையும் மாலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading