ஆழ்வாரின் அனுபவம் -பச்சை மாமலையும் வேதநூல் பிராயமும்

For English version of this weblog, kindly click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அதில் முதல் பாசுரத்தை நாம் சென்ற வலைப்பதிவினில் பார்த்தோம். திருநாமம் எம பயத்தை போக்கிவிடும் என்றும் திருநாமத்தின் புனிதத்தன்மையையும் அந்த பாசுரம் நமக்கு விளக்கியது.

இரண்டாவது பாசுரம்

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் மிக பிரபலமான பாடல்கள் என்று ஒரு சிலவற்றை பட்டியல் செய்தால், அதில் இந்த பாசுரம் நிச்சயம் இடம் பெறும் என்று நினைக்கிறேன். எளிமையாக, அதே சமயம் ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது இந்த பாசுரம். இந்த உலகத்தில் இருந்து விலகி, பரமபத்திற்கு சென்று அதனை ஆளுவதற்கு அருள் கிடைத்தாலும், அதைவிட திருநாமங்கள் சொல்லி திருவரங்கத்தில் இருப்பதில் உள்ள ருசி அதிகம் என்று சொல்லி, ஆழ்வார் பரமபதத்தையே மறுப்பது போல் இந்த பாசுரம் அமைந்துள்ளது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது,

 • திருநாமம் சொல்வது, பரமபதம் இவற்றில் எது உயர்ந்தது என்று ஆழ்வார் பேச வரவில்லை
 • பரமபதத்தை ஆளும் சுவை இனியது இல்லை என்று அவர் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால், பரமபதத்தை மதிக்காதவர் என்று சொல்லப்பட்டு இருப்பார்.
 • அவர் பரமபதம் தனக்கு வேண்டாம் என்றுதான் மறுத்தார். அதற்கு சில காரணங்கள் :
  • திருநாமங்களை இன்றே, இப்போதே, இந்த உடலுடனே, இங்கேயே (பூலோக வைகுந்தமாகிய ஸ்ரீரங்கத்திலேயே) சொல்லி அனுபவிக்க முடிகிறது. ஆகவே இவை இச்சுவை என்று தனக்கு மிகநெருக்கமாக, ஆழ்வாரால் கொண்டாடப்பட்டது. மேலும் மிகவும் சிரமப்பட்டு பெருமாளின் குணங்களை அறிந்துகொண்டு அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், திருநாமங்களை, அவற்றின் அர்த்தங்கள் தெரியாமல் சொன்னால்கூட சுவை கிடைக்கும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
  • சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம், மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (திருவாய்மொழி, 9.10.5) என்று நம்மாழ்வார் சொன்னது போல் மோக்ஷமாகிய அவ்வுலக இன்பம் கிடைப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்பதையும், பரம்பதம் செல்வதற்கு வேறு உடல் பெற்று அதனுடன் அனுபவிக்க வேண்டும் என்பதையும் ஆழ்வார் அறிவார். ஆகவே பரமபதம் “அச்சுவை” ஆயிற்று.
  • ஸ்ரீவைகுந்ததைப்பற்றி தெரிந்தது எல்லாம், யாரோ ஒருவர் வாய் சொல்லி கேட்டது மட்டுமே, அவரும் வைகுந்ததை நேரடியாகப் பார்த்தது கிடையாது, அவருக்கும் அது வாய்ச் சொல்லே என்பது போன்ற சில கேள்விகள் ஒரு சிலருக்கு எழலாம். ஆனால், திருநாமங்கள் சொல்லி மகிழ்கின்ற இன்பத்தினை ஒருவரால் இப்போதே அடைய முடிகின்றது. இனி பாடலுக்குச் செல்வோம்.

பச்சை மா மலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச் சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும் 
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே

பரமபதத்தை மறுத்தவர்கள்

ஆஞ்சநேயர்

ஆழ்வார் பரமபதத்தையே மறுப்பது போல் உள்ள இந்த பாசுரத்திற்கு முன்னால், பரமபதத்தை மறுத்தவர்களில் சிலர் உள்ளனர். அவர்களில் முதலாவதாக உள்ளவர், திருவடி என்று மிகுந்த பக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ அனுமன். இராமாயணத்தில், அனுமன், “பாவோ நாந்யத்ர கச்சதி “- இராமனை விட்டு எனது நினைவானது வைகுந்தநாதனிடம் கூட செல்வதில்லை என்றார். இவர் வைகுந்தம் செல்லாமல், இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார் என்பதை கீழ் கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

திருப்பாணாழ்வார்

அடுத்து, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், திருப்பாணாழ்வார், “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்று சொல்வதால், ஸ்ரீரங்கநாதனாகிய அமுதத்தைத் தவிர மற்றொரு அர்ச்சாவதாரத்தையோ அல்லது பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி போன்ற மற்ற நிலைகளிலும் பரமாத்மாவையும் காண வேண்டாம் என்று மறுக்கிறார்.

சுவாமி தேசிகன்

ஆசார்யன் ஸ்வாமி தேசிகன், வைகுண்டவாஸேபி நமேபிலாஷஃ என்று, காஞ்சிபுரம் வரதனின் ஸேவையை விட்டு ஸ்ரீவைகுண்டத்திலும் ஆசை இல்லை என்றார். புதிய புதிய உத்ஸவங்களால் மிகவும் ஸந்தோஷத்துடன் பெரியபிராட்டியுடன் வரதன், ஸ்ரீஹஸ்திகிரியில், நித்யவிபூதியான ஸ்ரீவைகுண்டத்தையும் மறந்து எழுந்தருளி உள்ளார். காஞ்சியில் ஸ்ரீதேவாதிராஜன்(வரதன்), இம்மாதிரி உத்ஸவங்களால் ஸ்ரீவைகுண்டத்தையே மறந்தார் என்பதாக அனுபவம்.

அதேபோல் பராசர பட்டர் என்னும் ஆசார்யன், தனக்கு பரமபதம் கிடைத்தபோது, தான் ஸ்ரீவைகுந்ததில், அரங்கநாதனை தரிசிக்க முடியாவிட்டால், அங்கிருந்து குத்திக்கொண்டு குதித்து ஸ்ரீரங்கம் வந்து அரங்கனை தரிசிப்பேன் என்று சொன்னதாக ஐதீகம்.

திருநாமங்களின் சிறப்பு

முதல் பாசுரத்தில் திருநாம வைபவம், எம பயத்தை போக்கிவிடும் என்று சொன்ன ஆழ்வார் இந்த இரண்டாவது பாசுரத்தில் பெருமாளின் வடிவழகினை ரசித்துப் பாடுகிறார், ஏனென்றால், பயம் சென்ற பின் தான் எதையுமே ரசிக்க முடியும் என்பது உலக வழக்கு.

முதல் பாசுரமானது, ரிஷிகள் எப்படி பெருமாளை பயத்துடன் அணுகுவார்களோ அது போன்றும், இரண்டாவது பாசுரமானது ஆழ்வார்கள் எப்படி பெருமாளை ரசித்து அனுபவித்து அணுகிறார்களோ அதுபோன்றும், இந்த ஆழ்வார் முதல் இரண்டு பாசுரங்களை கொண்டு திருநாம வைபவங்களை அணுகுகிறார்.

பெருமாளுக்கு திருநாமங்கள் பற்பல என்று பார்த்தோம், அவை ஏனெனில், ஒவ்வொரு திருநாமமும் பெருமாளுடைய ஸ்வரூபத்தையோ, ரூபத்தையோ, குணநலன்களையோ அல்லது அவரது திருவிளையாடல்களையோ (சேஷ்டிதங்களை) குறிப்பனவாக இருக்கும். கீழே சில உதாரணங்கள்.

 • ஸ்வரூபம் – விஷ்ணு( எங்கும் வியாபித்து இருப்பவன்), நாராயணன் (எல்லாவற்றையும் தாங்குபவன்)
 • ரூபம் – கேசவன் (நீண்ட கேசம் உடையவன்)
 • குணநலன்கள் – வத்சலன் (வாத்சல்யம் உடையவன்) – சுசீலன் (எளிதில் அடையமுடிபவன், சுலபன்)
 • சேஷ்டிதங்கள் – பார்த்தசாரதி (அர்ச்சுனனுக்கு தேர் ஒட்டியவன்)

இவை அனைத்திலும் ஆழ்வாருக்கு ஆனந்தம் அளிப்பது, ரூபம் சம்பந்தப்பட்ட திருநாமங்களே என்றும் அவைகளே எல்லோருக்கும் எளிமையாக இருக்கும் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.

இனி பாசுரத்தில் சில சிறப்பு பகுதிகளை பார்க்கலாம்.

பச்சைமாமலை போல் மேனி

மலை என்பது எம்பெருமானின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் மட்டுமே ஒப்பாகும். நம் கண்களையும் நெஞ்சினையும் குளிர்வித்து நம்முடைய பாபங்களை போக்குவதாலும், பெருமாள், பெரும் கருணைக்கு இருப்பிடமாதலாலும் ‘பச்சைமா‘ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு “பச்சை மாமலை” என்றானது. போல் என்று சொன்னதால், எல்லா பெரிய மலைகளும் பரமாத்மாவிற்கு இணையாகாது என்பது தெளிவாகிறது, ஏனென்றால், பரமாத்மாவின் எண்ணிறந்த குணங்கள் எந்த மலைக்கும் கிடையாது. ஒன்பதாவது ஆழ்வாரான திருப்பாணாழ்வார் அவரது அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், ஏழாவது பாசுரத்தில், ” நீள் வரைபோல் மெய்யனார்” (7) என்று அரங்கநாதனைக் குறிப்பிடுகின்றார். வரை என்றால் மலை என்பதால், நீண்ட மலையைப் போல் இருக்கும் பெருமாளின் திருமேனி என்ற பொருளுடன் இருக்கும் அந்த பாசுரம், தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்த பாசுரத்துடன் ஒப்பிடலாம்.

பவள வாய்

பவளவாய் என்பதை, சிவப்பு நிற பவள கற்கள், பச்சை நிற மலையில் பொறிக்கப்பட்டதாக ஒரு விளக்கமும் பச்சைநிற மரகதக் கல்லில் பவள நிறம் ஓடியதுபோல் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது இன்னொரு சிறப்பு. உரையாசிரியர், திருமேனி மற்றும் திரு அதரம் இவற்றின் நிறத்தை மட்டும் குறிப்பிடாமல், பெருமாள் திரு அதரத்தின் மூலம் அருளிய சில முக்கிய விஷயங்களையும் சொல்லி இருப்பது மிக சிறப்பு. விபீஷ்ண சரணாகதியின் போது சுக்ரீவன் மற்றும் அங்குள்ளோரிடமும் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தது இதே பவள வாய் தான். விபீஷ்ணன் நேரில் வந்தபோது அவனை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் வார்த்தைகள் கூறியதும் இதே பவள வாய் தான். முன்பு சொன்ன அமலனாதிபிரான் ப்ரபந்தத்தின் அதே (7) பாசுரத்தில், திருப்பாணாழ்வார் ” செய்ய வாய் ! ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே” என்று முடிப்பதும் இந்த ஆழ்வார்களுக்குள்ள ஒற்றுமையே. ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் இருந்து (11.8) “தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே” (11.8) என்றதும் சொல்லவேண்டிய ஒன்று. அதே போல், பவள வாய் சொன்ன மூன்று சரம ஸ்லோகங்களையும் உரையாசிரியர் இங்கு குறிப்பிட்டது மற்றொரு சிறப்பு.

கமலச் செங்கண்

செங்கண் என்றது, தாமரைக்கு ஒப்பு சொல்லப்பட்டது. சூரியனின் உதயமும் அஸ்தமனமும் தாமரையை பாதிக்கும், ஆனால் திருமாலின் செங்கண் எப்போதும் கருணை பொழிந்து கொண்டுஇருக்கும். பவள வாய்க்குப் பிறகு கண் என்றதால், வாய் சொல்லி முடிக்கும்முன் தன்னுடைய பார்வையினாலே பெருமாள் சொல்லி முடித்து விடுவார் என்பது பொருள். முதலில் திருமேனியை சொன்னது, பெருமாளின் சௌந்தர்யத்தை சொல்வதாவும், அதன்பின் சொல்லப்பட்ட பவளவாய், மற்றும் கமலச்செங்கண் அங்கங்களின் அழகினை அல்லது லாவண்யத்தை சொல்வதாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.

பவள வாய், கமல செங்கண் என்று திருவாய், திருக்கண் இரண்டை மட்டும் சொன்னது எல்லா அவயவங்களையும் சொன்னதற்கு சமமானதாகிறது. இதேபோல், திருவாய், திருக்கண் இவற்றை ஒரே பாடலில் சொன்ன ஆழ்வார்களும் பல, பாசுரங்களும் பல. உதாரணத்திற்கு நம்மாழ்வார் பாசுரங்களில் இருந்து ஒன்று, “செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோளமுதே. எனதுயிரே ” (திருவாய்மொழி, 6.10.9).

அச்சுதா

அச்சுதா என்பதற்கு நழுவுதல் இல்லாதவன் என்று அர்த்தம். பெரியவாச்சான்பிள்ளை இங்கு மூன்று விதமான விளக்கங்கள் தெரிவிக்கின்றார்.

 • அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே ” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் சொன்னதற்கு ஏற்ப பச்சைமாமலை போல் திருமேனியை கொண்டதில் அச்சுதன் ; பவளம் போல் திருவாய் இருப்பதில் அச்சுதன் ; கமலம் போல் செங்கண் உள்ளதில் அச்சுதன் என்று சொல்வதன் மூலம், அவை என்றும் மாறுவதில்லை என்று முதல் விளக்கம் தெரிவித்தார்.
 • இரண்டாவது விளக்கத்தில், ஆழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடுகிறார் என்கிறார். அரங்கநாதன், பச்சைமாமலை போல் மேனி கொண்டதில் மாறுதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், பவளம் போல் வாய் என்றும் இருக்க வேண்டும் என்றும், கமலம் போல் செங்கண் எப்போதும் இருக்கவேண்டும் என்றும் பல்லாண்டு பாடுகிறார்.
 • இப்படி திருநாமங்களை சொல்பவர்களை என்றும் நழுவ விடாமல் பார்த்துக் கொள்கிறான் என்றது மூன்றாவது அர்த்தமாகும்.

அமரர் ஏறே

தேவர்களுக்கு தலைவன் என்பதால் பரமாத்மா உயர்ந்தவர் என்று சொல்லி பெருமாளின் பரத்துவத்தை இங்கு ஆழ்வார் தெரிவிக்கின்றார். இங்கு “ஸதா’ பஶ்யந்தி ஸூரயஃ ” என்ற விஷ்ணுஸுக்த வாக்கியம் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. புண்ணியம் அதிகம் செய்ததால் நம்மை விட சிறிது காலம் அதிகம் வாழ்கின்ற இந்திரன், அக்னி போன்ற தேவதைகள் போல் அல்லாமல், எப்போதும் மரணம் இல்லாமல் இருக்கின்ற அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனன் போன்ற நித்யஸூரிகள், விஷ்ணுவினுடைய அந்த மேலான பரமபதத்தில், எப்போதும் அவருக்கு சேவை செய்வதையே தொழிலாகக் கொண்டு, எந்நேரமும், விழிப்புடன் விளங்குவார்கள். அந்த அனுபவம் சிறிது கணம் இல்லை என்றால் கூட அவர்களுக்கு எல்லாம் முடிந்து விடும் என்பதை ‘அமரர்‘ என்ற ஒரே வார்த்தையில் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

ஆயர் தம் கொழுந்தே

இந்த பதத்தால் திருஅரங்கன் எளியவன் என்று ஆழ்வார் சொல்கிறார். மேன்மைக்கு எல்லை நிலமான, பிராட்டி, விஷ்வக்ஸேன, அனந்த, கருடன் போன்றவர்கள் அனுபவிக்கும்படி இருக்கும் எம்பெருமானை, எளியவர்களும் அனுபவிக்கலாம் என்கிறார். மேன்மைக்கு எல்லை நிலமானவர்களை நியமிக்கும் தலைவனாக இருப்பது போல், ஆடுமாடு மேய்க்கும் இடையர்களாலும் பசுக்களாலும் நியமிக்கத் தகுமவனாய் இருந்து, எளிமைக்கும் எல்லை நிலமாக பரமாத்மா இருக்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

பச்சைமாமலை, பவளவாய், கமலச்செங்கண், அச்சுதா, அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்ற ஆறுபதங்களை சொல்லி அவற்றை அறுசுவை உணவோடும், அவற்றை உண்பவர்களோடும் ஒப்பிட்டு, தன்னால், ஆறு பதங்களில் ஒன்றில் இருந்து கூட நகர முடியாதபோது, அறுசுவை உண்பவர்களால் எப்படி ஒரு சுவையில் இருந்து மற்றொன்றுக்குச் செல்ல முடிகிறது என்று வியக்கிறார்.

யான் போய்

யான் போய் என்றதில் முதலில், யான் என்பதை பார்ப்போம். திருநாமங்களை சொல்லவல்ல நாவினை கொண்ட நான் என்று முதல் பொருள். இன்னும் சில காலம் காத்திருந்து வேறு ஒரு தேசம் சென்று அனுபவிக்க பொறுமையுடன் இருக்க மாட்டாத நான் என்று இரண்டாவது பொருள். “போய்” என்று சொன்னது வேறு ஒரு தேசத்துக்கு செல்வதை சொன்னது. திருமங்கை ஆழ்வாரின் “ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே” என்ற சிறிய திருமடல் பாசுரத்தின் வரியையும் மேற்கோளாக காட்டப்பட்டு உள்ளது.

இந்திரலோகம்

இந்திர லோகம் என்று சொன்னது இந்திரன் ஆளும் சொர்க்கத்தை அல்ல என்றும் இந்திர என்ற சொல்லுக்கு முக்கிய அர்த்தமாக உள்ள பெருமாளையே குறிக்கும் என்று ஓர் விளக்கமும், எல்லோருக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவின் உறைவிடமான பரமபதத்தையே குறிக்கும் என்ற இரண்டாவது விளக்கமும் சொல்லப்பட்டது.

அச்சுவை பெறினும் வேண்டேன்

அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே ” என்று சொன்னதில், பரமபதத்தை விட்டு அரங்கமாநகர் வந்து, தன்னுடைய அழகையும் குணநலன்களையும் இங்குள்ளோர் அனுபவிக்க வேண்டும் என்று வந்த பெருமானை, தான் ஏன் அங்கு(பரமபதத்திற்கு) சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வார் சொல்வது போல் இந்த பாசுரம் அமைந்துள்ளது. நம்மைப் போல், தாழ்ந்தோர்க்கு திருஅரங்கன், இங்கு வந்து சேவை கொடுக்கும் அழகை ரசிப்பதற்கு, மேலுலகத்தில் இருந்து அங்குள்ள தேவர்கள் இங்கு (திருஅரங்கம்) வந்து தரிசிக்கும் போது, தான் ஏன் அங்கு செல்ல வேண்டும் என்பது இன்னொரு கருத்து.

முதல் பாசுரத்தில் திருநாம வைபவத்தால் எமபயம் நீங்கியது என்று சொன்ன ஆழ்வார், இரண்டாவது பாசுரத்தால், இப்போது கிடைக்கும் திருநாம வைபவச் சுவை, என்றோ, எங்கோ, எப்படியோ கிடைக்கும் பரமபத அனுபவத்தைவிட தான் அதிகம் ரசிப்பதாக சொல்லி ஸ்ரீவைகுந்தத்தை மறுக்கிறார். மூன்றாவது பாசுரத்தால், இந்த பூவுலகமும் வேண்டாம் என்று மறுப்பதை காண்போம்.

மூன்றாவது பாசுரம்

வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் 
பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு 
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம் 
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே     

வேதங்கள் எல்லோரும் பொதுவாக நூறு ஆண்டுகள் வாழ்வார்கள் என்றும், அதில் மனிதர்கள் எவராவது நூறு ஆண்டுகள் வாழ்ந்தால், அதில் பாதியாகிய ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலும், மீதி ஐம்பது ஆண்டுகளை குழந்தை, சிறுவயது மற்றும் இளமை அல்லது வாலிப வயது போன்ற பருவங்களைக் கடந்து வந்தாலும், நோய், பசி, முதுமை போன்ற கொடுமைகளுக்கு தள்ளப்பட்டு விடுவதாலும், திருநாமங்களை சொல்லி அனுபவிப்பதற்கு நேரம் இல்லாமல் மொத்த காலத்தையும் இழந்துவிடுவதால், தனக்கு இந்த பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் ஆழ்வார் முறையிடும் பாசுரம். இதற்கு முந்தைய பாசுரத்தில் ஸ்ரீவைகுந்தம் வேண்டாம் என்றவர், பூலோக வைகுந்தம் எனப்படும் திருஅரங்கம் தவிர வேறு எந்த இடமும் இவ்வுலகத்தில் வேண்டாம் என்று இந்த பாடலில் சொல்கிறார்.

ஆழ்வாரைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் உள்ள துன்பங்களை சொல்லி பெருமானிடம் முறையிடுவதைவிட, திருநாமங்களை சொல்லும் காலம் குறைந்துவிட்டதே என்று உருகுகின்றதை தன்னுடைய அனுபவமாக சொல்லும் பாசுரம்.

நின்றதில் பதினைந்து ஆண்டு

ஒளவையார் என்ற பெரும் தமிழ் புலவரின் தனிப்பாடலின் படி, “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது, மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு  பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என்ற சொற்களின் படி மனிதர்களாய் பிறப்பதே கடினம். கர்ப்பத்திலும், பிறந்து சில நாட்களுக்கும், அல்லது சில மாதங்களிலும் அல்லது சில வருடங்களிலும் இறப்பவர்கள் அதிகம். அப்படியே தீர்க்க ஆயுள் என்ற நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் திருநாமங்களை சொல்ல நேரம் இல்லாமல் வாழ்ந்து, இறந்து, மறுபடி பிறந்து அல்லல் படுவதால் இந்த பிறவியே வேண்டாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பேதை, பாலகன் மற்றும் வாலிபம் என்ற மூன்று பருவங்களுக்கும், தனித்தனியே ஒவ்வொன்றுக்கும் பதினைந்து ஆண்டுகள் என்று முதல் அர்த்தம் கொள்ளலாம். அல்லது மூன்று பருவங்களுக்கும் சேர்த்து பத்துமுறை ஐந்து ஆண்டுகள் (10 x 5) ( பதினையாண்டு) என்ற ஐம்பது ஆண்டுகள் என்று இரண்டாவது விளக்கம் கொள்ளலாம்.

பேதை என்பது, பசி வலி என்றால் அழத்தெரியுமே தவிர அது என்னது என்று சொல்லத்தெரியாத பருவம். அதாவது திருநாமம் சொல்ல வராத வயது. பாலகன் என்பது திருநாம சொல்ல முடிந்தாலும், அவைகளை சொல்லாமல் விளையாடித் திரியும் அறியாமை நிறைந்த பருவம். அது என்று ஆழ்வார் சொன்னது, தீமைகள் அதிகம் சூழுந்த வாலிபப் பருவம். தீமைகள் சூழ்ந்து இருப்பதால், இந்த வயதில் திருநாமம் சொல்வதும் அரிதாகிறது. மேலும், ஆழ்வார் தனக்கு வாலிப பருவத்தில் நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களால் வாலிபம் என்று சொல்லாமல் பயந்து அது என்கிறார். அதே போல், வாலிப பருவத்தில் செய்யும் குறும்புகளின் பலனாக வரும் விளைவுகளைக் குறிக்கவே பிணி என்பதை வாலிபத்திற்கு பின்னே உடனே சொன்னார். மூப்பிற்கு பிறகாவது நிம்மதி வருமா என்றால், அதுவும் உறுதியாக தெரியாது ஏனென்றால்,

புனரபி ஜனனம் புனரபி மரணம், புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே க்ருபயா பாரே பாஹி முராரே
– (பஜ கோவிந்தம் 21)

என்று ஆதிசங்கரர் சொன்னது போல், மறுபடி பிறப்பு மறுபடி இறப்பு என்று ஒரு சூழலில் திரியும் ஜீவாத்மா. (கரையே இல்லாததும் கடப்பதற்கு மிகவும் கடினமானதுமான இந்த ஸம்ஸாரத்தில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும், இறக்க வேண்டும், மறுபடியும் தாயின் வயிற்றில் தங்கி பிறக்க வேண்டும். இப்படி முடிவில்லாத பிறத்தல் இறத்தல் ஆகிய சூழலில் சிக்கி தவிக்கும் என்னை கிருஷ்ணா கருணை கூர்ந்து நீ தான் கரை சேர்த்து காப்பாற்ற வேண்டும் என்பது மேலே சொன்ன பாடலின் அர்த்தம்.)

பிணி பசி மூப்பு துன்பம்

ஆக தூக்கம், பசி, பிணி, மூப்பு மற்றும் துன்பம் போன்றவைகளால் திருநாமங்களை சொல்ல முடியாமல், நேரம் இல்லாமல் இருக்கும் இந்த பூவுல வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று ஆழ்வார் மறுக்கிறார். முந்தைய பாசுரத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மேலுலகம் வேண்டாம் என்றவர் இப்போது இந்த பூவுலகம் வேண்டாம் என்கிறார். அதனை அறிந்த பெருமாள் ஆழ்வாரை பூவுலகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட (தோள் தீண்டி) பூலோகவைகுந்தம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருநாமங்களை சொல்லி வருமாறு பணிக்கிறார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இந்த பூவுலகத்தில் பசி பிணி மூப்பு துன்பம் இவை இருக்கும். ஆனால் பெரியபெருமாளும், நம்பெருமாளும் உறையும், திருஅரங்கத்தில் அவை இருந்தாலும், நாம் திருநாமம் சொல்லி மகிழ்ந்து வாழலாம் என்று பொருள். இதற்கு காரணம் என்னவென்றால், சிறு வயதில், பெருமாள் அருகில் அன்னப்ராசனம் என்ற சடங்கு செய்வதால், குழந்தைக்கு (பேதை பருவத்திலேயே) பெருமாள் தொடர்பு இந்த பூலோக வைகுந்தத்தில் சிறுவயதிலேயே ஏற்படுகிறது.

அந்த குழந்தை, பாலகனாகும் போது, பெருமாள் புறப்பாடு நடைபெறும் போது தாங்களும் தங்கள் விளையாட்டு பொருள்களை வைத்துக்கொண்டு அவர்களும் அவனுடன் சேர்ந்து புறப்பாடு நடத்துவதால், அவர்களுக்கு அரங்கன் சம்பந்தம் கூடுகிறது. திருவரங்கத்தில் பெருமாளுக்கு வருடத்திற்கு சுமார் 250 நாட்கள் ஏதாவது ஒரு கொண்டாட்டம் அல்லது புறப்பாடு நடப்பதால், சிறுவர்கள் எல்லாவற்றிலும் பங்கு கொள்கிறார்கள். காவிரிக் கரையில், குழந்தைகள் பெரிய பாவாடை உத்ஸவம் செய்து விளையாடிடும் போது அவர்களின் மணல் பிரசாதத்தை வாங்கி ஸ்ரீராமானுஜர் மகிழ்ந்த ஐதீகம் இங்கு மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. அதில் “தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே, தமர் உகந்தது அப்பேர்” என்ற பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதி (44) பாசுரத்தையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது.

வாலிப பருவத்தில் தங்களுக்கு வேண்டியவர்கள் கோவிலுக்கு வருவதால், தானும் கோவிலுக்கு வந்து, திருஅரங்கனின் தொடர்பினை அதிகப் படுத்திக்கொள்கிறார்கள்.

மூப்பு வந்தால் அவர்களால் கோவிலுக்கு செல்ல முடிவதில்லை. ஆனாலும் அரங்கனே நம்பெருமாளாக, வருடத்திற்கு 250 நாட்களுக்கு மேல் புறப்பாடு மேற்கொண்டு அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து தரிசனம் கொடுத்து தன்னுடைய சம்பந்தத்தை உறுதி செய்து கொள்கிறார். இப்படி அரங்கனின் தொடர்பு எல்லா வயதிலும் இருப்பதால், கனவிலும் காண்பது அரங்கனின் வடிவழகாகத் தான் இருக்கும் ஆதலால், திருவரங்கமாகிய இந்த பூலோக வைகுந்தம் தனிச்சிறப்பு பெறுகிறது.

மூன்றாவது விபூதி

ஸ்ரீவைகுந்தம் முதல் விபூதி என்றும், இந்த பூவுலகம் இரண்டாவது விபூதி என்றும் பூலோக வைகுந்தமாகிய திருஅரங்கம் மூன்றாவது விபூதி என்றும் இந்த பாசுர விளக்கத்தில் பார்த்தோம். பெரியாழ்வார் திருமொழியின் (5.4), இறுதியில், சென்னியோங்கு என்ற பதிகத்தில், பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் கொடுக்கும் போது, திருவேங்கடத்தை மூன்றாவது விபூதியாக சொல்கிறார். ஆண்டாளின் நாச்சியார் திருமொழி (103) பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காகும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான்” என்ற பாசுரத்தில் எம் பெருமான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும் போது, ஆண்டாளையே மூன்றாவது விபூதி என்று சொல்கிறார்.

அடுத்து

இத்துடன் ஆழ்வாரின் அனுபவம் என்ற திருமாலையின் முதல் பகுதியான முதல் மூன்று பாசுரங்கள் முடிகிறது. அடுத்த பகுதியான ஆழ்வார் நமக்கு செய்யும் உபதேசங்களின் தொகுப்பான நான்காவது பாசுரத்தில் இருந்து பதினான்காம் பாசுரம் வரை உள்ளவற்றினை அடுத்த வலைபதிப்பில் காண்போம்.

திருமாலையின் முழு பாசுரங்களையும் கீழ்கண்ட முகவரியில் காணலாம். அவர்களுக்கு எங்கள் நன்றி. http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090

11 Comments on “ஆழ்வாரின் அனுபவம் -பச்சை மாமலையும் வேதநூல் பிராயமும்

 1. அடியேன் இராமாநுச தாசன்! 🙏🏽🙏🏽
  மிக்க அருமை.👌❤️
  ஒரு விஷயத்தில், அடியேனின் கருத்தைப் பகிர விழைகின்றேன். தேவரீர் “ஒன்பதாவது ஆழ்வாரான திருப்பாணாழ்வார் அவரது அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், ஏழாவது பாசுரத்தில், ” நீள் வரைபோல் மெய்யனார்” (7) என்று அரங்கநாதனைக் குறிப்பிடுகின்றார்.” என குறிப்பிட்டுள்ளீர்.
  நீள் வரை போல் என்பது மெய்யனார் என்ற திருநாமத்தை சிறப்பிக்காது, அப்பாசுரத்தின் முதல் நாமமாக வரும் கையினார் என்பதை சிறப்பித்துக் கூறுவதாகக் கொண்டால், ‘நீள்வரை போல் கையினார்‘ என்பது
  கூடுதல் சிறப்பு எனத் தோன்றுகிறது.

  தவிரவும், மெய்யினார் என்ற திருநாமமே எவ்வித உவமைக்கும் உட்படாது என்பதும் அடியேனின் தாழ்மையான கருத்து.
  தாசன் 🙏🏽

  • ஐயா, அடியேன் ராமானுஜ தாசன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களை போன்றவர்கள் படித்து கருத்துக்களை பகிர்வதில் உள்ள மகிழ்ச்சியே ஒரு தனி உற்சாகத்தைத் தருகிறது. அதற்கும் அடியேனின் நன்றி.

   நீங்கள் கூறிய நீள் வரை போல் என்பது மெய்யனார் என்ற திருநாமத்தை சிறப்பிக்காது என்பதும் நீள்வரை போல் கையினார்‘ என்பது இன்னும் சிறப்பாக இருக்கும் எனபதும் மெய்யினார் என்ற திருநாமமே எவ்வித உவமைக்கும் உட்படாது என்பதும் உங்களின் கருத்துக்களாக அறிகிறேன். இதில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

   இந்த வலைப்பதிவிற்கு நான் அதிகம் நாடுவது வியாக்கியான சக்ரவர்தியான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் உரைகள் ஆகும். அமலனாதிபிரான் விளக்கத்தில் ( பதிப்பாசிரியர்: R ரகுராமன் 24/71 புத்தூர் அக்ரகாரம் திருச்சி 620 017) பக்கம் 155 இந்த ஒப்புமை இருந்ததே அடியேனுக்கு துணையாக இருந்தது. பகுதியைஇணைத்திருக்கிறேன்.

   நீள்வரை போல் கையினார் என்பது சிறப்பாக இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை

   மெய்யினார் என்ற திருநாமமே எவ்வித உவமைக்கும் உட்படாது என்ற உங்கள் கருத்துக்கு நன்றி. எம்பெருமானுடைய எந்த அவயமும் எவ்வித உவமைக்கும் உட்பாடாது என்பதே உண்மை. இங்கு கூட, மலை, கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிமையாக இருப்பதாக சொல்கிறார். நம்உடம்புக்கு வரும் நோய்கள், இடி போன்ற இயற்கை இடர்களால் வரும் துயரங்கள், மற்றும் வேறுபூதங்களால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் தீர்க்கும்படியான திருமேனி என்கிறார். இந்த குணங்கள் நிச்சயமாக மலைக்கு கிடையாது. நெய் உறைந்தாற்போல் இரக்க குணம் திருவுள்ளத்தில் நிறைந்து இருக்கும். அதனால் திருமேனி ஆராதிக்க தக்கதாக இருக்கும் மலை நிலையாகவும் பெரியதாகவும் இருக்குமேதவிர மற்ற குணங்கள் இருக்காது, அதனால்தான் ஆழவார் மாமலை என்று கூறுகிறார்

   இதையெல்லாம் தவிர திருமாலையின் நோக்கம் திருநாம வைபவம். அமலனாதிபிரானின் நோக்கம் அரங்கனின் கேசாதி பாதம் வரையில் உள்ள அழகினை வர்ணிப்பதே

   • பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல🙏 ,
    சில ஆழ்வார்கள்,ஆசார்யர்களின் ஸ்ரீசூக்திகளை அடியேன் நோக்குங்கால், தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையினின்றே மெய்யர்க்கே மெய்யனாகும் என்னும் வரிகளும், திருமால் அடியவர்க்கு மெய்யனார் என்ற ஸ்வாமி தேசிகனின் மும்மணிக்கோவை வரிகளும் காணப் பெற்றேன்.

    மெய்யனார் என்கிற எம்பெருமானின் திருநாமத்தை ஆழ்வார்கள்,ஆசார்யர்கள் மற்றும் அடியார்களே சிறப்பிக்க வல்லவர் என்பது தெளிவாகிறது.

   • சுவாமி, அடியேன். உங்கள் கருத்துக்கு நன்றி. சரியாக சொல்லி உள்ளீர்கள். மெய் என்ற தமிழ் வார்த்தைக்கு, உண்மை, உடம்பு, உடம்பில் இருந்து வரும் தொடுஉணர்ச்சி, ஆத்மா, மெய்எழுத்து என்பதில் உள்ள அர்த்தம் என்று பல அர்த்தங்கள் உள்ளன. அவற்றில், உண்மை என்ற பொருளை கொண்டு நீங்கள் குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களும் அமைகின்றன. பச்சைமாமலை என்ற இடத்திலும், நீள் வரை போல் மெய்யனார் என்ற இடத்திலும் திருமேனி என்ற அர்த்தத்தில் மெய் என்ற பதத்தை நம் பெரியவர்கள் பயன் படுத்தியுள்ளது சிறப்பானதே. நன்றி.

   • மெய்யினார் மெய்யினை உடையவர்.
    மெய்யனார்-மெய்மையே உருவானவர்.

    கையினார்-கைகளைக் கொண்டவர்,கைகளை உடையவர். மெய்யினார் மெய்யினை , உடலினை அல்லது மேனியை உடையவர். மெய்யனார்-மெய்மையே உருவானவர்.

    ஆக, மெய்யினார்,மெய்யனார் என இவ்விரு வெவ்வேறு சொற்களின் பயன்பாட்டால்,பொருளும் மாறுபடுகிறது என்பது என் கருத்து. பல பிரபந்தப் பிரதிகளில் மெய்யனார் என்றே அச்சில் உள்ளது எனத் தெரிகிறது.ஆனால் திருவோணம் இணைய தளத்தில் மெய்யினார் என்றே உள்ளது.இணைய தளச்சான்றை இணைத்துள்ளேன்.https://thiruvonum.wordpress.com/2010/09/
    நன்றி!

   • அடியேன. தங்கள் கருத்துக்கு நன்றி. சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி. அடியேன் இது வரை இவ்வளவு நுணக்கமாக மொழியில் ஈடுபட்டது இல்லை. முக்கியமாக பார்த்தது பக்தி என்ற பார்வையில் மட்டுமே, இப்பொழுது மொழியிலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும் என்ற உண்மை புலப்படுகிறது. ஒருவேளை முறையான வழியில் கற்றுக்கொண்டு இருந்தால் இந்த மாதிரி பல நுணுக்கங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறன். ஒரு வேண்டுகோள், தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன், நன்றி.

 2. ஆயர்தம் கொழுந்தே. என்ற வார்தைக்கு நீர் கூரியுள்ள இவ்வளவு விளக்கம் எந்த பாசுரத்தில் உள்ளது என்பதை நிறுபிக்காவிட்டால் உம்மீது வழக்கு பதியப்படும்

  • வணக்கம். இந்த விளக்கத்திற்கு பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளி செய்த திருமாலை வ்யாக்யானம் மூலம் ஆகும். இந்த விளக்கத்தில் தங்களுக்கு சரி என்று படாத பகுதியோ வார்த்தைகளோ இருந்தால் தெரிவிக்கவும். அதனை மாற்ற முயற்சி செய்வோம். நன்றி.

   • அடியேன் தாசன்!
    ‘ஆயன்’ ஸ்வாமி அவர்களின் பின்னூட்டத்தை கவனித்தேன்.

    ‘ஆயர்தம் கொழுந்தே’ என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ஈரச்சொற்களுக்கு தேவரீரின் விளக்கப்பதிவை திரும்பவும் படித்தேன்.
    அடியேனைச் சற்று உறுத்திய வரி
    ‘இடையர்களுக்கு தொண்டனாக இருந்து’ என்ற இடம் தான்.

    தொண்டன் என்பது பாகவதனைக் குறிப்பதாகையால், பகவானுக்கு அச் சொல்லாடல் என்றும் பொருந்தாது.

    எம்பெருமானை அடியவர்க்கு மெய்யன் , எளியவன் என்றெல்லாம் கொண்டாடிய ஆழ்வார்கள் யாவரும் சரி , ஆழ்வாரின் மறைச்சொற்களுக்கு வியாக்யானம் புனைந்த பெரியவாச்சான் பிள்ளையும் சரி, எம்பெருமானை ‘ இடையர்களுக்கு தொண்டன்’ என்றவாறு கூறியிருக்க வாய்ப்பில்லை என்றே அடியேனின் சிற்றறிவுக்குத் தோன்றியது.

    நன்றி!🙏🏽🙏🏽

   • ஐயா, உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது மிகவும் சரியாகத்தான் இருக்கிறது. நான் மீண்டும் வ்யாக்யானம் சென்று பார்த்தேன். அங்கே சொல்லி உள்ளது இடையர்களும் பசுக்களும் நியமிக்க தகுந்தவனாக இருக்கும் எளிமை என்று. அதனை நான் தொண்டன் என்று குறிப்பிட்டேன். இப்போது மாற்றி விடுகிறேன். மீண்டும் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடியேன் ராமானுஜ தாசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: