076 திருநாவாய் / Thirunaavaai

மலர்மங்கை நாச்சியார் ஸமேத நாராயணப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி.

மலைநாட்டு திவ்ய தேசங்களை பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காண்போம்.

மலையாள திவ்ய தேசங்கள் யாவும் அழகான சூழ்நிலையிலேயே அமைந்து உள்ளன. கோவில்கள் மிகவும் தூய்மை. இங்கு கோவில்களை தமிழ் சொல்லான அம்பலம் என்றே அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவஸ்தலங்கள் அம்பலம் என்ற சொல் கொண்டே முடிகிறது. வைணவ திவ்ய தேசங்களிலும், திருத்தெற்றியம்பலம் என்று ஒரு திவ்ய தேசத்திற்கு அம்பலம் என்ற பெயரில் முடிகிறது.  

மலையாள நாட்டையே, பரசுராம க்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள். இங்கு விமானங்களும் கோபுரங்களும் தமிழ்நாட்டில் உள்ளது போல இல்லை. அதே போல அங்கு உள்ள சிற்பங்களும் சித்திரங்களும் தமிழ் நாட்டில் உள்ளது போல இல்லை. மலை நாட்டு திவ்ய தேசங்கள் செவ்வக வடிவில் அமைந்தவை. நான்கு வாசல்கள் கொண்டதாக
நாற்புரம் சூழ்ந்த சுற்றுச் சுவர்களால் அமைக்கப்பட்டவை. இதற்குள் வட்ட வடிவமான மூலஸ்தானம். மூலஸ்தானத்தின் மேல் கூம்பு வடிவில் தொப்பியைக் கவிழ்த்து வைத்தது போன்ற கூரைகள் உள்ளன. வேறு சில வடிவில் மூலஸ்தானங்களும் உண்டு.  தூய்மை நிறைந்த சுற்றுப்புற நடைபாதைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ளது போல பெரிய கொடி மரங்கள் (துவஜஸ்தம்பங்கள்) கோவிலின் முகப்பில் உள்ளது.  இந்த கொடி மரங்களில் கருடாழ்வார் திருஉருவம் உள்ள விளக்குகள் உள்ளன. திருவல்லாவில் உள்ள கொடிமரம் மிகப் பெரியதாகும்.

இங்குள்ள கோவில்களில், மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுர வடிவிலான ஒரு மேடை உள்ளது. பொதுவாக இதை பலிபீடம் என்று கூறுவர். இந்த மேடையின் முன்பு நின்றுகொண்டு தான் நாம் எம்பெருமானை வழிபட வேண்டும். மேடையில் மேல் யாரும் ஏற கூடாது. எம்பெருமானுக்கு பூஜை செய்யும் போத்திகள் மட்டும் இந்த மேடையின் மீது ஏறி எம்பெருமானுக்கு சாஷ்டங்கமாய் நமஸ்காரம் செய்து விட்டு பூஜையில் ஈடுபடுவர்.

இங்கு கோவிலுக்குள் மேல் சட்டை அல்லது பனியன் அணிந்து செல்லக் கூடாது. கைலிகளும் கட்டிக் கொண்டு போகக் கூடாது. பாரம்பரிய உடைகளில் தான் ஆண்களும் பெண்களும் செல்ல வேண்டும்.

இங்கு தமிழ் நாட்டைப் போல் ஸ்ரீவைஷ்ணவர்களால் எம்பெருமான் ஆராதிக்கப் படுவதில்லை. இங்கு பூஜை செய்பவர்கள் போத்திகள் அல்லது நம்பூதிரிகள் எனப்படுவர். இவர்கள் மலையாள பிராம்மணர்கள், இவர்கள் தூய்மையான பக்தியோடு விடியர் காலையில் எழுந்து நீராடி ஈரத்துணியோடு பூஜை செய்ய வருவார்கள். இவர்கள் எம்பெருமானை ஆழ்வார்கள் இட்ட பெயரால் சொல்வதில்லை, அவர்கள் எம்பெருமானை நாமாவளி சொல்லி ஆதாரிப்பதும் வெளியில் இருக்கும் நம் காதுகளில் விழுவது இல்லை. ஆனால் நமது பெருமாளும் நமது பிராட்டியும் நமது கருடாழ்வாரும் தான் இங்கு எழுந்தருளி இருக்கின்றனர்.

பெரும்பாலும் தனி தாயார் சன்னதி கிடையாது, சிறிய தாயார் விக்ரகம் பெருமாள் சந்நிதியில் இருக்கும். திருநாவாய் என்ற திவ்ய தேசத்தில் மட்டும் தனி தாயார் சன்னதி உண்டு. திருவல்லவாழ் என்ற திவ்ய தேசத்தில் விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்.

இங்கு தீர்த்தம், துளசி சடாரி முதலியவை பிரசாதமாக கொடுக்கப் படுவதில்லை. மாறாக
துளசி, புஷ்பம், சந்தனம் போன்றவற்றை ஒரு சிறிய வாழை இலையில் வைத்து தருகிறார்கள். தினந்தோறும் எம்பெருமானுக்கு திருமஞ்சனம் உண்டு. அதே போல தினமும் பிரகார புறப்பாடும் உண்டு, அதற்கு ஸ்ரீவளி என்று பெயர்.

மலையாள திவ்யதேசங்கள் பதிமூன்றில் பஞ்ச பாண்டவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட, ஐந்து திவ்ய தேசங்கள் உண்டு. இவைகளைப் பாண்டவர் கோயில் என்றே அழைக்கின்றனர். அவைகள், திருச்சிற்றாறு, (தர்மன்) திருஆரம்முளா (அர்ஜு னன்), திருப்புலியூர் (பீமன்), திருவன்வண்டூர்(நகுலன்), மற்றும் திருக்கடித்தானம் (சகாதேவன்).

கேரளத்தில் கோவில்களைக் காப்பதிலும், புனருத்தாரணம் செய்வதிலும் கைங்கர்யங்களில் ஈடுபடுதலிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்குள்ள பதின்மூன்று திவ்ய தேசங்கள் :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா)

இவற்றை தவிர, மலைநாட்டு திவ்ய தேச பயணத்தின் போது, நாம் தரிசிக்க வேண்டிய இன்னோர் முக்கியமான இடம் திருவஞ்சிகுளம். இங்கு தான் குலசேகர ஆழ்வார் அவதரித்தார். கேரளாவில் உள்ள பல கோவில்களை போல இதுவும், காலை 430 மணிக்கே திறந்து காலை பத்து மணிக்கு மூடி விடுகிறார்கள். மாலையிலும் 4 முதல் 8 மணி வரை தான் திறந்திருக்கும். இதனையும் வரைபடம் 3 ல் காண்பித்து உள்ளேன்.

சென்னை கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள திருநாவாய் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த இடக்குளம் என்ற ஊரிலிருந்து சுமார் அரை மைல் தூரம் உள்ளது.

இந்த திருத்தலம் பாரத புழா என்ற ஆற்றின் கரையில் உள்ளஅது. கேரளாவில் இத்தலம்
மிகவும் முக்கியத்துவமும், புராதனமும் வாய்ந்ததாகும். இந்த திருத்தலத்தை காசிக்கு சமமாக கருதி, அங்கு நடைபெறுவதைப் போன்று இங்கு முன்னோர்களுக்கு செய்யும் காரியங்கள் (சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும்) செய்யப்படுகின்றன. தை மற்றும் ஆடி அமாவாசைகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆற்றின் கரைகளில் புராதன முறைபடி செய்யபடுகிறது. இந்த திருத்தலத்தின் எதிர்புறம் சிவன் கோவிலும், பிரம்மன் கோவிலும் உள்ளதால், இது மும்மூர்த்திகள் ஸ்தலம் என்றும் கூறப்படுகிறது.

மலையாள திவ்ய தேசங்களில், இங்கு மட்டும் தான் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

எம்பெருமானைக் குறித்து ஒன்பது (நவ) யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த ஸ்தலம் நவ யோகிஸ்தலம் என்று அழைக்கப்பட்டு, காலப் போக்கில் மருவி நாவாய் ஸ்தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு முறை மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து பகவானை அர்ச்சித்து வர கஜேந்திரனுக்குப் பூ கிடைக்காமல் போயிற்று. இதனால் பகவானிடம் கஜேந்திரன் தனது நிலையை விளக்கி முறையிட பகவான் லட்சுமி தேவியைப் பூப்பறிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப் பறித்துப் பகவானை அர்ச்சிக்கலானான். பூஜையின்போது லட்சுமி தேவியுடன் சேர்ந்து எம்பெருமான் கஜேந்தரனின் பூஜையை ஏற்று கொண்டார்.

மலை நாட்டு திவ்ய தேசங்களில் வழிபாட்டு முறையை மாற்றி தமிழ் நாட்டில் உள்ள
வைணவ நெறியிலான வழிபாட்டு முறையை இங்கும் ஏற்படுத்த வேண்டும் என்று
ஸ்ரீஇராமானுஜர் திருவுள்ளம் கொண்டு மலையாளத்தின் எல்லைக்குள் பிரவேசம்
செய்ததாகவும், இதையறிந்த போத்திகள் எம்பெருமானிடம் வேண்டி தாங்கள் செய்து வரும் வழிபாட்டு முறைகளையே எம்பெருமான் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கவும், பக்தர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் பக்தவத்சலனான எம்பெருமான், மலையாள நாட்டின் எல்லையில் ஓரிடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இராமானுஜரை அப்படியே எடுத்து வந்து திருக்குறுங்குடிக்கு அருகில் ஒரு பாறையில் படுக்க வைத்ததாக வரலாறு.

இராமானுஜருக்கு வடுக நம்பி என்பவரே தினமும் திருமண் இட்டு அலங்கரிப்பர். இராமானுஜர் பாறையில் இருந்து துயில் நீத்து எழுந்து வடுகநம்பியே வாரும் என்று கூற, திருக்குறுங்குடி எம்பெருமானே வடுக நம்பியாக வந்து இராமானுஜருக்குத் திருமண் இட்டு அலங்கரித்தார். இராமனுஜரூடன் சென்ற வடுகநம்பி இராமானுஜரைக் காணாததால் வடுகநம்பி, திருக்குறுங்குடி அடைய, இவரின் வருகையைக் கண்ட இராமானுஜர் மிகவும் அதிர்ந்து போனார். வடுக நம்பியின் வடிவில் இராமானுஜருக்குத் திருமண் இட்டவர் திருக்குறுங்குடி பெருமாளேயாவார்.

இராமானுஜர் தாம் தமிழகத்தில் இருப்பதை அறிந்ததும், எம்பெருமானின் திருவுள்ளக்
கருத்தை அறிந்து மீண்டும் தமது திருப்பணிகளைத் தமிழகத்திலேயே தொடர்ந்ததாகவும் வரலாறு. இந்த வரலாற்றை இராமானுஜரின் வரலாற்றில் காணலாம்.

திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஸ்தலம். திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும் திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.

பரிசுத்தமான வாயை உடைய பெரிய திருவடியை (கருடனை) வாகனமாகக் கொண்டு, நதிக்கரைக்கு வந்து சேர்ந்து, ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பம் அடையாதபடி அருள்புரிந்து, முதலையை இரு துண்டமாக்கி ஓழித்தவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை உடையவனும் திருநாவாய் என்னும் திருத்தலத்தில் இருப்பவனுமான எம்பெருமானை திருநரையூரில் கண்டனே என்று பாடுகிறார்.

கண்டவர்களுக்கு நடுக்கத்தை விளைவிக்க கூடியதாய் பெரிய வடிவு கொண்ட, குவலயாபீடம் என்ற யானை அஞ்சி, கலங்கி, முடியுமாறு, அதன் கொம்பினை முறித்தவனும் ஒலிக்கின்ற வீரக்கழலை உடையவனும், வீசித்திரமானவனை, அவன் அடியவர்கள் நம்பிக்கையுடன் அணுக தகுந்தவனை, கிளைகள் விளங்குகின்ற சோலைகளை கொண்ட திருக்கோட்டியூரில் சென்று ஸேவித்து, திருநாவாயில் போய் ஸேவிப்போம் என்று கூறுகிறார்.

கீழ் வரும் பாடல்கள் எல்லாம், திருவடி (ஹனுமான்) சீதா பிராட்டியை இலங்கையில் சந்தித்து, மீண்டும் இராமன் இருக்கும் இடத்திற்கு ஹனுமான் வருவதற்கு முன்னால், சீதையின் மனத்தில் ஓடிய எண்ணங்களை சொல்வது போல ஆழ்வாரின் எண்ண ஓட்டங்களை சொல்வதாக அமைந்த பாடல்கள். திருவாய்மொழி 6.10 ல் நம்மாழ்வார் திருவேங்கடமுடையான தமக்கு மோக்ஷம் அருளிய போதும், அது எப்போது கிடைக்கும் என்பதை சொல்ல வில்லை. அதே போல, திருவடியை கண்ட சீதா பிராட்டி, இராமபிரான் வந்து தன்னை காப்பாற்றுவான் என்று உறுதியாக நம்பியபோதும், அது எப்போது என்று தெரியாத நிலையில் இருப்பது இங்கே உதாரணமாக சொல்லபடுகிறது.

உள்ளத்தில் எம்பெருமானை நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணும் என்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய, எண்ணங்களை உடைய பக்தர்களுக்கு விரோதிகளை எல்லாம் போக்கக் கூடிய குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட சோலைகளாலே சூழப்பட்டதான திருநாவாய் திருப்பதியை, கொடியேனான எனக்கு கிடைக்குமா என்று ஆழ்வார் கேட்கிறார். திருநாவாய் திவ்ய தேசம், விரோதிகளைப் போக்குவது மாத்திரமன்றிக்கே பரம போக்யமுமானது என்கிறார்.

மூன்று விரோதிகளை சொல்கிறார்; ருசிவிரோதி, அதாவது, பகவத் விஷயத்தில் ஆசை பிறக்க விடாதபடி தடுக்கிற விரோதிகள்; அதாவது வேறு பயன்கள் தேடி போவது, வேறு தேவதைகளை தேடி செல்வது போன்றவை; இரண்டாவது, உபாய விரோதி, அதாவது அவனே என்று ருசி பிறந்தாலும், அவனே உபாயமாக கொள்ளாமல், வேறு உபாயங்களை தேடுவது; மூன்றாவது பேற்றினை பெறும் இடத்தில் வரும் விரோதிகள்; அவன் திருவடிகளை அடையும் இடத்தில் வரும் கர்ம வாசனா ருசிகள், பாகவத அபச்சாரம் போன்ற விரோதிகள்.

எம்பெருமானார் மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையாக எழுந்தருளும் போது, திருநாவாய் ஸமீபத்திலே இருக்கும் போது, எதிரே வந்து கொண்டிருந்த மலையாள பாஷை பேசும் சிலரை நோக்கி ‘திருநாவாய் எவ்வளவு தூரம்’ என்று கேட்க, அவர்கள் ‘குறுக்கும்’ என்றார்களாம். தமிழில் குறுகும் என்பது, மலையாளத்தில் குறுக்கும் என்று இருக்கிறது. அதாவது ஸமீபத்தில் தானுள்ளது என்று பொருள். எம்பெருமானார் அது கேட்டு ‘இப்பாஷையாலே அருளிச் செய்வதே ஆழ்வார்’ என்று ஈடுபட்டாராம். (குறுக்கும் வகை உண்டு)

பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடும் கூட அவன் எழுந்தருளி இருக்கிற திருநாவாயிலே போய் புகுவது என்றைக்கோ என்கிறார்.  கொடி போன்ற அழகிய இடையை உடையளாய், தாமரைப் பூவில் பிராட்டிக்கு வல்லபன், கூரிய வேல் போன்று அழகிய கண்ணை உடையளான நப்பின்னை பிராட்டிக்கு மணவாளன்.  இவ்விரண்டு விசேஷங்களின் கருத்து, புருஷகாரம் செய்து சேர்ப்பிக்க வல்லவர்கள் இருவர் அருகே இருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாகும்.

அடியேன் என்று ஆழ்வார் சொல்வது, வனவாசத்திற்கு பெருமாள் (ஸ்ரீராமன்), பிராட்டி (சீதை) புறப்படும் முன்னர் எல்லா சேவைகளையும் அவர்களுக்கு செய்ய இளைய பெருமாள் (லட்சுமணன்) புறப்பட்டது போல, இங்கே (திருநாவாயில்) இவனுக்கு சேவை செய்ய ஆழ்வார் உள்ளார் என்பதை தெரிவிக்கவே என்கிறார்.

திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ, அறிய முடியவில்லை என்று அலமருகின்றார்.  நான் வந்து கிட்டப் பெறும் நாள் எதுவோ என்று இதையே எப்போதும் சொல்லிக் கண்ணீர் சோர இருக்கின்றேன்.ஒரு வேளை இதனை சொல்லும் போது ஒன்றும், மற்ற நேரங்களில் வேறு ஏதாவது எண்ணங்களோடு இருக்கின்றேனோ என்று தன்னையே கேட்டுகொள்கிறார்.   திருநாவாயிலே வந்து இருக்கின்ற, சுலபனான, ஸ்ரீமந் நாராயணன் இருக்க, அத்திரளிலே சென்று அவனுடன் கூடாமல் இருக்க முடியுமோ என்கிறார். அடியார்கள் குழாங்களுடன் கூடுவது என்று கொலோ என்று ஆசைப்பட்ட நான் அத்திரளிலே சென்று கூடாமல் இருப்பது தகுமோ என்கிறார்.

ஆத்மா உள்ள வரையில் தேவரீருக்கு கைங்கரியம் பண்ணும்படி தேவரீரால் ஏற்று கொள்ளப்பட்ட அடியேன், திருநாவாயில் நப்பின்னைப் பிராட்டியோடு கூட இருக்கிற இருப்பிலே அடிமை செய்யப் பெறும் நாள் என்றோ, அறியவில்லையே என்கிறார். இப்படி பிரிந்து தூக்க பட வேண்டிய நாள் இன்னும் எத்தனை நாள் உண்டு என்று அறியவில்லையே என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்றைக்கு என்று அறியவில்லை என்றும் இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம். 

நித்ய ஸுரிகள் பண்ணும் இடைவிடாத கைங்கரியத்தில் அன்றோ, நானும் ஆசைப்படுவது. ஒரு வேளை கைங்கரியத்தின் வாசனையின் இனிமையாய் அறியாதவனாக இருக்கிறேனோ என்று கவலை பாடுகிறார்.

கைங்கர்யம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலியவைகளுக்கு குறையொன்றும் இல்லாது இருக்கிற திவ்ய தேசம் என்கிறார். இந்த பதிகத்தில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி சொல்லபடுகிறது, வேறு தேசத்திற்கு சென்று இருந்த குழந்தை, ஒவ்வொரு ஊர் சென்று அடையும் போதும், தாயினை நினைப்பதை போல், அடைய தக்க இடம் ஸ்ரீவைகுந்தம் (தெளிவீசும்பு திருநாடு) என்றபின் தனித் தனியே பிராட்டிமார்களிடம் வேண்டி கொள்கிறார்.

என் கண்களின் ஆசை தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப் பெறுவது என்றைக்கோ என்கிறார்.  பெரிய பிராட்டியார்க்கும் (ஸ்ரீதேவி தாயார்) பூமிப் பிராட்டியாருக்கும் வல்லபனானாவன்.  ஒருத்தி புருஷகாரத்திலே ஊன்றியிருப்பள்  மற்றொருத்தி பொறுமையே வடிவெடுத்தவளாக இருப்பவள். இப்படிப்பட்ட இருவரும் அருகே இருக்க, நான் இழக்கத் தகுமோ என்பது போல கேட்கிறார். மண்ணுலகிலுள்ள மனிசர்களென்ன, விண்ணுலகிலுள்ள தேவர்களென்ன ஆகிய அனைவர்க்கும் நிர்வாஹகன்.  உபயவிபூதி (இந்த பூவுலகதிற்கு) நாதனான அவனுக்கு நான் ஒருவன் தள்ளபட்டேனோ /ஒதுக்கபட்டேனா என்பது கருத்து.   பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரமபதத்தில் இருந்து நித்ய சூரிகளை நிர்வஹிக்கிறவன் பெறாப் பேறாக ஆதரித்து உறைகின்ற திவ்ய தேசம் அன்றோ திருநாவாய்; இது எம்பெருமான் உகந்து பெற பேராக நினைக்கின்ற திவ்யதேசம் ஆகையால் கண்ணார காண விரும்புகிறார்.  இதனைக் காண்பதற்கு ஆசைபட்ட கண்கள் வயிறு நிறையக் கண்டு களிப்பது எந்நாளோ என்கிறார்.

இங்கே களிப்பது ‘காண்பது நிச்சயம்” என்ற எதிர்கால நம்பிக்கையால் அல்ல, கண்டே களிக்கின்றது என்று நிகழ்காலத்தில், தற்போது நடக்கிற சம்பவதை சொல்கிறார்.

இந்த பாடலில், ஊரை இல்லாமல், ஊரில் எழுந்தருளி இருக்கிற உன்னை எப்போது கண்டு களிப்பேன் என்கிறார். எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர் கோவே! வேறு ஒன்றில் பற்று இல்லாமல் உன் திருவடிகளுக்கே காதலன் ஆனேன். அரைக்கணம் இழக்க மாட்டாதபடி அன்றோ இருக்கிறது என் ஆசை என்கிறார். உன்னைத் தவிர வேறு யாரும் பயன் இல்லை என்று, (அநந்ய ப்ரயோஜனமான) உனது திருவடி அருகிலே என்னுடைய கண்களின் ஆசை சொல்லி முடிக்க முடியாது. என் பசி தீரா விட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால்  போதுமே என்கிறார். உலகில் யாசிப்பவர்களே ‘என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிற பாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்’ என்பார்களே ; அது போல உள்ளே ஒரு எண்ணமும் (நீயே வேண்டும் என்பது) வெளியே மற்றோறு எண்ணமுமாக (உலக விஷயங்களில் ஈடுபடுவது) இருக்கும் இருப்பு, துரிசு எனப்படும் ; அப்படி துரிசு எதுவும் இல்லமால், உனக்கே தொண்டாய் ஓழிந்தேன் என்கிறார். நமக்கும், நமக்கு உகந்தாருக்கும் நினத்தபடி அனுபவிக்கலாம் என்று திருவுள்ளத்திலே ஆதரிக்கின்ற திவ்ய தேசம் ஆயிற்றே என்கிறார். கிருஷ்ணனாய் வந்து அவதரித்து, ஆயர் குல மக்களுக்கு சுலபன் ஆனதைபோல், திருநாவாய் தனில் வந்து எனக்காக சுலபன் ஆனாயே என்கிறார்.

திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணி அருள்கின்ற தேவரீர் அடியேனுடைய, அநந்யகதித்வத்தைக் (உன்னை விட்டால் எனக்கு வேறு புகலிடம் கிடையாது) கண்டு அருள் செய்ய வேண்டும் என்கிறார்.

எம்பெருமான் இந்திரனை த்ரிலோகாதிபதியாக்கி வைத்தான்; அவனைத் தள்ளி அந்தப் பதவியைத் தான் கொள்ளை கொண்டு ‘நானே அரசு’ என்று மாவலி இருந்தான். ஔதார்யம் என்று ஒரு மஹாகுணம் உடையவனாக இருந்த படியால், தான் இரப்பாளனாய் நின்று வெகு சாதுரியமாகக் காரியத்தை முடித்தான். எம்பெருமான் தேவர்கள் அசுரர்களுக்கு இடைய நடந்த யுத்தத்திலே, அநுகூலரான தேவர்களுக்காக அஸுரரை அழியச் செய்தவனே! என்கிறார். விரோதிகளை அழித்து அடியார்களைக் காத்தருள்வதற்கு காரணம் பிராட்டியோடு உண்டான சேர்த்தி என்று தெரிவிக்கிறார். வாறு.  இப்படிப்பட்ட திருக்குணங்கள் திருநாவாயிலே வெளிப்படும்படி இருக்கின்றார்.

பொன் என்பது, எல்லை இல்லாத இனிமை தருகிற என்ற பொருளில் வருகிறது. தெருளே தரு என்பதை திரு நாவாய்க்கு அடைமொழி ஆக்கி பொருள் சொல்வதும் உண்டு. அறிவில்லாத பொருள் போன்று இருக்கின்ற என்னை ‘உள்ளவன் ஆகிறான்’ என்கிறபடி ஒரு பொருளாக்கி என்கிறார்.

ஆழ்வார் இப்படிச் சொல்லும் போதும் ஒரு விசேஷ கடாக்ஷம்/பார்வை செய்து அருளாமையால், ‘நான் இந்த ஆசையோடு நிற்க போவது இல்லை,   என்னுடைய ஆசைகளின் / பக்தியின் வெளிப்பாட்டை பெற்றுக் களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ என்கிறார்.  தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன் என்று சொல்வதால், பிரமன் முதலிய தேவர்களுக்கும், சனக சனந்த நாதிகளான யோகிகளுக்கும் கூட தாமாகக் காண நினைக்கையில், காண்பதற்கு அரியவன அவன்.   மூவர் முதல்வன் என்று சொன்னது, அரி, அயன், அரன் என்று சொல்லப்படுகிற மூவர்களுக்குள்ளே முதன்மை பெற்றிருப்பவன் என்றும், பிரமன், சிவன் இந்திரன் என்றும் மூவர்க்கும் நிர்வாஹகன் அல்லது காரணமானவன் என்றும் உரைப்பர்.  ஒரு மூவுலகாளி என்று சொல்வதால், மூவுலகங்களையும் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹிப்பவன் இவன். ஆக இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தேவன் அடிவர்களை காப்பாற்றுவதற்ககு பாங்கான (சௌகரிமாக) உறையும் தேசம் இது என்று விரும்பி உறையும் இடமான திருநாவாய் என்ற இந்த திவ்ய தேசத்தை நான் அணுக பெறாமல் இருக்கிறேனே,   இனி பெறுவார் யாரோ, அவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லி இராமாயணத்தில் தசரதன் ராமன் 14 ஆண்டுகள் காட்டிற்கு செல்ல முடிவு செய்யபட்டபின், அது முடிந்து வரும்போது தான் இருக்க மாட்டேன் என்றும், அப்போது யார் ராமனை தரிசிப்பார்களோ அவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்வது போல முடிக்கிறார்.

திருநாவாயில் சென்று ஸேவிக்க வேண்டும் என்று ஆழ்வார்க்கு நினைவாகில் இதில் அருமை ஒன்றும் இல்லையே, அவர் புறப்பட்டுச் சென்று சேவிக்க தடை ஏது என்று சிலர் சங்தேகிக்க கூடும்.  திருநாவாயை அணுகப் பெற வேண்டும் என்பதே ஆழ்வாரின் எண்ணம் அன்று, அவ்விடத்தில் உறையும் எம்பெருமானுக்கு அஸாதாரணமான திருநாடு தான் இது என்று உத்தேசம்.

உன்னைக் காணமுடியாததால் நெஞ்சு அழிந்து கூப்பிடாமல் நின்றேன் என்கிறார்.   தொடங்கும் போதே அந்தோ என்கிறார், உன்னை எப்போதும் திருவோடு கூடிய மால் என்றே அழைப்பேன் என்கிறார்.

எம் மா மணிவண்ணா என்று சொன்னது, ஒரு தேச விசேஷத்தாலே, அதாவது, திருநாட்டிலே வந்து காண வேண்டிய வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு, திருநாவாயிலே வந்து நித்யவாஸம் பண்ணுகின்றவனே என்கிறார். அந்த வடிவினை எனக்கு காட்டாத போது, உன் வரவு வாராமல் இருப்பதற்கு சமம் என்கிறார்.

இத்திருவாய்மொழி வல்லார் இந்த பிறவியிலும் மறுமையிலும் ஸகல போகங்களையும் பெறுவர் என்று பயன் உரைத்து இந்த பதிகத்தை முடிக்கிறார். மண்ணாண்டு என்று சொன்னதால், இவ்வுலக, இப்பிறப்பில் போகம் பெறுவது சொல்லப்பட்டது. மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் மறுமையில் போகம் பெறுவது சொல்லப்பட்டது. மல்லிகை மணமென்று ஒரு வாசனையை சொன்னது, உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே  ஸர்வ கந்த என்று சொல்லப்படும் ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானை பெறுவர் என்று பொருள்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d