A Simple Devotee's Views
ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவேங்கடம் | |
மூலவர் | திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான் திருப்பதியில், கோவிந்தராஜன் | |
உத்சவர் | திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி | |
தாயார் | அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் | |
திருக்கோலம் | திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் | |
திருமுகமண்டலம் | கிழக்கு | |
பாசுரங்கள் | 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. | |
மங்களாசாசனம் | பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் | |
தீர்த்தம் | 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி, 5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம். திருச்சானூரில் பத்ம ஸரோவரம் | |
கோபுரம் | ஆனந்த நிலைய விமானம் | |
ஸ்தல வ்ருக்ஷம் | புளியமரம் (சேஷ அம்சம்) |
வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
திருத்தலம் பற்றி
திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் திருப்பதி வேங்கடாசலபதி கோவில் உள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார், கோவில் கொண்டுள்ள அலர்மேல்மங்காபுரம் என்ற திருப்பதியும், இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவாக சேர்ந்து திருவேங்கடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதி என்று முன்பு அனுபவித்தோம். இங்கே வேறு சில தலைப்புகளில் சிலவற்றை காண்போம்.
Google Map
திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது
இராமானுஜர் மூன்று முறை திருமலைக்கு எழுந்தருளி உள்ளார். இராமானுஜருக்கு இருந்த ஐந்து ஆச்சார்யார்களில் ஒருவரான திருமலை நம்பிகள் திருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார். முதல் முறை, தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது, ஆழ்வார்கள் திருமலையில் ஏறுவதால் அந்த மலையின் தூய்மை கெடும் என்று அஞ்சி, மலை அடிவாரத்திலேயே நின்று, திருவேங்கடவனுக்கு மங்களாசாஸனம் செய்து நலம் பெற்றனர் என்பதை அறிந்து, தானும் அதன் மேல் நடந்து வர விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாகவும், இவருக்காகவே இவரது தாய் மாமனும், ஒரு ஆச்சார்யராகவும் இருந்த திருமலை நம்பிகள் மலையில் இருந்து தினமும் இறங்கி வந்து, ஒவ்வொரு நாளும், இராமானுஜருக்கு திருமலை அடிவாரத்தில் உள்ள புளிய மரத்தடியில் ராமாயண பாடம் கற்றுத் தந்தார்.
அப்படி பாடம் சொல்லி கொடுக்கும் போது, தான் திருமலையில் மதிய பூஜை சமயம் திருவேங்கட தரிசனம் கிடைக்கவில்லையே என்று உணர்ந்து வருந்தியபடி உறக்கத்தில், எம்பெருமானே திருமலை நம்பிகளுக்கு கனவினில் காட்சி தந்து, மலையடிவாரத்தில் நின்று காட்சி கொடுத்ததாகவும், அவரும் திருமஞ்சன கைங்கர்யம் செய்து உறக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது அங்கு ராமானுஜரும் எழுந்தருள, இருவரும் என்றும் இல்லாதபடி, கற்பூர, கஸ்தூரி பரிமளங்கள் வீச, என்ன ஒரு ஆச்சரியம் என்று திகைத்து சுற்றி திரும்பி பார்க்க, என்றும் இராமாயணம் கற்று தரும் அந்த புளிய மரத்தடியில் திருவேங்கடமுடையானின் திருவடிகள் இரண்டும் இருந்தன. ஸ்வயம்வக்தமான அந்த திருவடிகளை சேவித்து, அவற்றின் கீழாக ஆழ்வார்கள் பதின்மரையும் திருவடிகளோடு ஒரு திருமேனியாக ஏறி அருள செய்து, அதற்கு திருவாலயமும் அமைத்து வைகானச ஆகம முறைப்படி ஸ்தாபித்து, அந்த புளிய மரத்தையும் ஆதிசேஷனின் அம்சம் என்று நிச்சயித்து “கலௌ வேங்கட நாயக” என்று பல்லாண்டு பாடியதாக வரலாறு. அந்த இடத்தில், இன்றும் திருவேங்கடவனின் திருவடிகள் உள்ளன, அதற்கு பாத மண்டபம் என்று பெயரிட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இரண்டாம் முறை சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே திருவேங்கடவன் தங்கள் தெய்வம் என்ற வாதத்தை தீர்த்து வைக்க வந்தது. இந்த முறை வந்தபோது இராமானுஜர் மூன்று நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து, மலை ஏறினார் என்றும், அப்படி அவர் ஏறும் போதும், தன் முழங்கால்களையே படிகளில் வைத்து ஏறினார் என்றும், அப்படி ஒரு இடத்தில் ஏறும் போது அவர் முழங்கால் எலும்பு முறிந்தது என்றும் அப்போது திருவேங்கடவன் தோன்றி அவருடைய இடர்களை போக்கி, கால்களுக்கு உரமூட்டி, மலை ஏறுவதற்கு தகுந்தவைகளாக செய்து திருவருள் காட்டி மறைந்தான் என்றும் ஒரு செவி வழி செய்தி உள்ளது. அதனால் தான் இந்த பகுதிக்கு முழங்கால் முறிச்சான் என்று இறந்த காலத்தில் பெயர் உள்ளதாக சொல்கிறார்கள்.
இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததாலும் திருக்கரங்களில் நாகாபரணம் என்ற நகை அணிந்து இருந்ததாலும், இந்த தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வம் என்றும் பலவாறு கூற, திருமலையில் ராமானுஜர் மூன்று நாட்கள் தங்கி இருந்து, வேதம், புராணங்களில் இருந்து வாக்கியங்கள் எடுத்து அருளி, அவைகளையும் வேறு பிரிவினர்கள் ஏற்காததால், இறுதியில், எம்பெருமானின் சந்நிதியில், சங்கு, சக்கரம், மற்றும் சிவன், பிற தெய்வங்களின் ஆயுதங்களையும் வைத்து, எம்பெருமானிடம் அவனுக்கு உகந்த ஆயுதங்களை தரித்து அடுத்த நாள் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டி கதவுகளை மூடி பூட்டி வைத்து வந்து வந்தார். அடுத்த நாள் கதவு திறந்ததும் எம்பெருமான் சங்கு சக்கரங்களை தரித்து காட்சி அளித்து, இராமானுஜரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எல்லோருக்கும் அப்போதும், மறுபடி எப்போதும் விவாதங்கள் வராதபடி, தான் வைணவ தெய்வமே என்று சேவை சாதித்தார். . இப்படி இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். அதனால் இராமானுஜருக்கு ‘அப்பனுக்கு சங்கு ஆழி தந்தவன்’ என்ற பெருமை உண்டு.
தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், திருவேங்கடத்தான், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரும் இந்த திவ்யதேசத்திற்கு வந்திருந்து,
“உபசாந்த சித்த குருகுல பவபாண்டவர்க்கு வரதன் மையுருவோன்ப்ர சித்த நெடியவன் …… ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன் வடவேங்க டத்தி லுறைபவ னுயர்சார்ங்க சக்ர கரதலன் …… மருகோனே” (திருப்புகழ் 75)
என்று இந்த எம்பெருமான் திருமாலே என்று பாடி உள்ளார்.
இந்த முறை தான் இராமானுஜர் கோவிந்தராஜரை திருப்பதியில் நிறுவி கோவிலையும் பெரிதாக்கி, வழிபாட்டு முறைகளையும் சீர் செய்தார்.
மூன்றாம் முறை இராமானுஜர் திருமலையில் ஒரு வருடம் இருந்து தானே அதன் நிர்வாக பொறுப்புகளை ஏற்று திருக்கோவிலின் செல்வம் அழியாமல் காத்து, அது மேலும் வளர்ந்து திருக்கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடத்திட வழிகள் செய்தார்.
ரிஷிகளும், முனிவர்களும், பரம பாகவதர்களும் வேதம், புராணங்களில் சொன்னபடி திருமலா யாத்திரையின் போது அனுசரிக்க வேண்டிய நியமங்களை தொகுத்து விதிகளாக வழங்கினார். இவைகளை அனுஷ்டிப்பவர்கள் தனக்கும் வேதங்களுக்கும் உகந்தவர்கள் என்றும் அதனை அனுஷ்டிக்காதவர்கள் தனக்கும் வேதங்களுக்கும் வெளிப்பட்டவர்கள் என்றும் தன்னுடைய குரலாக ஒரு அர்ச்சகரின் மேல் ஆவிர்பவித்து திருவேங்கடவனே சொன்னதாக திருமலையொழுகு கூறுகிறது.
ஒரு மடத்தை சன்னதிக்கு எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் பக்கத்தில் கட்டி அங்கேயே தங்கி இருந்து ஜீயர், ஏகாங்கி நால்வர் என்று ஏற்பாடு செய்து திருவேங்கடமுடையானின் திருப்பணிகள் தடையின்றி நடத்த ஏற்பாடு செய்து பிறகு திருவரங்கம் திரும்பினார். தினமும் திருக்கோவில் நடைசாத்தும் போது கதவுகளில் திருவடி (ஆஞ்சநேயர்) முத்திரையுடன் பூட்டி ஜீயரிடம் சமர்ப்பித்து, மீண்டும் அடுத்த நாள் காலையில் அங்கிருந்தே பெறுவதற்கும் ஏற்பாடு செய்தார். ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவருக்கு சேனாதிபதி ஜீயர் என்று பெயர் வழங்கினார்.
திருமலையில் கட்டியம் யாதவ நாராயணன் அல்லது கட்டியத்தேவன் என்பவன் இராமானுஜரின் திருவடிகளை பற்றி, அவர் சீடனாகி, திருமலையிலும் திருப்பதியிலும் இராமானுஜர் கோவில் திருப்பணிகள் அனைத்தும் செய்வதற்கு துணையாக இருந்தான் என்று திருமலை ஒழுகு என்ற நூல் சொல்கிறது.
திருவேங்கடவன் சன்னதியில் தினமும் ஸ்நபன பேரரான அழகப்பிரானார் இரவில் சயனம் கொள்வது வைகானச ஆகமம் ஆகும். ஆழ்வார் திருமகளான ஆண்டாள் கிருஷ்ணருடன் அனுபவத்தை ஆசைப்பட்டு, தினமும் ஒரு பாடலாய் மார்கழியில் முப்பது பாடல்கள் பாடியதாலும், ‘வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே ‘ என்று இதர அர்ச்சாவதாரங்களை விட்டு, திருவேங்கடவனையே விரும்புவதாலும், விபவ அர்ச்சைகளுக்கு ஒரு பாலமாக இருப்பதாலும், வைகானச ஆகமத்தில் ஒரு ஸம்ஹிதையில் கிருஷ்ணரே மார்கழியில் சயன பேரராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதாலும், மூன்று விக்ரகங்கள் இருக்கும் போது, கிருஷ்ணரே என்ற விதி இருப்பதாலும், இராமானுஜர், திருவேங்கடத்தில், கிருஷ்ணரே மார்கழி மாதத்தில் சயன பேரராக இருந்து உலகை காத்தருள ஏற்பாடு செய்தார்.
தொண்டைமான் சக்ரவர்த்தி, போரில் தோற்று ஸ்வாமியின் மீது உள்ள பக்தியினால் அவர் காட்டிய குகை வழியாக அகாலத்திலே, திருவேங்கடவன் சந்நிதியை அடைய அப்போது அந்தரங்கத்தில் இருந்த ஸ்ரீ, பூமா தேவிகள், அந்நிய புருஷன் வந்ததினால் உடனே மறைந்து, ஸ்ரீதேவி தன்னுடைய இருப்பிடமான எம்பெருமானின் திருமார்பில் மறைந்து கொள்ள, பூமாதேவி, அருகில் கைங்கர்யத்திற்காக கட்டியிருந்த கிணற்றில் மறைந்தாள் என்று ஒரு செவி வழி செய்தியினை கேள்வியுற்ற இராமானுஜர், பூதேவியை அர்ச்சா ரூபமாக எழுந்தருள செய்து, ஒரு தீர்த்த நயினாரையும் அந்த கிணற்றிலே சேர்த்தியாக கிணற்றில் எழுந்தருள செய்து அவர்களுக்கு நித்திய தளிகைகள் அமுது செய்யும்படி செய்தார்.
ராமானுஜர் திருமலையில் நிறைய நந்தவனங்கள் அமைக்க ஏற்பாடு செய்து எம்பெருமானுக்கு புதிய புஷ்பங்கள் கிடைக்க செய்தார். ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களில் ஒருவரான அனந்தாழ்வான் என்பவரை திருவரங்கத்தில் இருந்து இங்கு அனுப்பினார். அவர் திருமலையில் தங்கி, பல நந்தவனங்கள் அமைத்து இந்த திருமலையை தன்னுடைய கடின உழைப்பினால் புஷ்பமண்டபம் என்பதற்கு ஏற்ப அதிக புஷ்பங்களை ஸ்வாமிக்கு தொடர்ந்து கிடைக்க செய்தார். இன்றும் அனந்தாழ்வான் பெயரில் திருமலையில் நந்தவனம் உள்ளது, அவர் பெயரில் ஒரு உற்சவமும் நடைபெறுகிறது. திருவேங்கடத்தானும் அனந்தாழ்வானுடன் செய்த திருவிளையாடல்களும் இந்த உற்சவத்தில் இடம் பெறுகின்றன.
கட்டியம் யாதவராயன் அனந்தாழ்வான் கேட்டுக்கொண்டபடி யமுனைத்துறை என்ற பெயரில் எம்பெருமானுக்கு திரு மாலைகள் கட்டுவதற்கு திருமலை திருக்கோவிலில் ஒரு மண்டபம் கட்டி கொடுத்தான். இன்றும் அங்கு தான் பூக்கள் தொடுக்க படுகின்றன.
அனந்தாழ்வான் இராமானுஜரின் விருப்பப்படி திருமலையில் பூங்காவனம் அமைந்து தினமும் எம்பெருமானுக்கு புஷ்பகைங்கர்யம் செய்து வந்தார். அந்த திருப்பணியில் திருவேங்கடவனும் உகந்து இருந்ததார். ஒருமுறை புரட்டாசி ப்ரம்மோத்ஸவம் காலத்தில், 7 ம் நாள் திருநாள் அன்று திருவேங்கடவனும் அலர்மேல்மங்கை தாயாரும், ராஜா, ராணி என்று வேடம் தரித்து, அனந்தாழ்வான் புஷ்பதோட்டத்தில் புகுந்து புஷ்பங்களை பறித்து செல்வதை பார்த்த அனந்தாழ்வான் அவர்களை தொடர்ந்து சென்று அவர்களை பிடிக்க பார்த்தார். அவர்கள் திருக்கோவிலை அப்பிரதக்ஷிணமாக (தலைகீழாக அல்லது மாற்றி சுற்றுவது) சுற்றி வந்து மீண்டும் அனந்தாழ்வான் தோட்டத்தில் சென்று மறைந்து விட்டனர். இந்த ஐதீகம் ப்ரம்மோத்ஸவத்தில் அனுஷ்டிக்க தக்கது என்று ராமானுஜர் கருதி ப்ரம்மோத்ஸவத்தில் ஒரு நாள் பூந்தோட்ட உலா செல்லும்படி செய்து, திரும்பும்போது அப்பிரதக்ஷிணமாக சுற்ற கட்டளை பிறப்பித்தார். அந்த உத்சவம் இன்றும் நடக்கிறது.
திருமலையில் நிறுவப்பெற்றுள்ள இராமானுஜர் திருவுருவத்தை செய்து அவரிடம் கொடுத்த போது, அதனை அவர் தழுவி அனந்தாழ்வானிடம் கொடுத்ததாகவும் அவர் யாதவராயன் துணை கொண்டு அவருக்கு கோவில் எழுப்பி அங்கு நிறுவினார் என்று திருமலை ஒழுகு கூறுகிறது. இந்த இராமானுஜர் திருவுருவம் அவரது 40 வது ஆண்டில் வடித்தது, அவரது வலது திருக்கரம் ஞான முத்திரை குறிக்கும் வண்ணம் உள்ளது. திருமலை திருப்பதிக்கு பலவற்றை திருத்தி புதியவைகளை புகுத்தி, பிறருக்கு தெரியாதிருந்த பல உண்மைகளை வெளிப்படுத்தியும், வேங்கடவனுக்கு சங்கும் சக்ரமும் கொடுத்ததை அவன் ஏற்றுக்கொண்டதையும் மனதில் கொண்டு இராமானுஜரை ஆச்சார்யார் போல் கருதத்தக்க ஞானமுத்திரையுடன் கூடிய திருவுருவுடன் செய்திருப்பர் என்பது ஆன்றோர் கருத்து. திருப்பதியில் கோவிந்தராஜன் சன்னதியிலும், பெரிய ரகுநாதன் சந்நிதியிலும் இருக்கும் இராமானுஜர் திருவுருவங்களும் ஞான முத்திரையுடன் தான் இருக்கிறன.
திருமலையின் ஸ்தல வ்ருக்ஷம் நித்யசூரியான அனந்தனின் அம்சமான புளிய மரம். முன்பொரு நாள், கஜபதி என்று ஒரு பக்தன் திருவேங்கடவனுக்கு திருமலையில் ஒரு கோபுரமும் கட்ட ஆசை கொண்டு அதற்குரிய செல்வமும் மக்களையும் கொடுத்து கோபுர வேலையை தொடங்க சொல்லி, அவர் மற்ற திவ்யதேச யாத்திரை சென்று கட்டப்பட்டுள்ள கோபுரத்தை தரிசிக்க திருமலைக்கு திரும்பினான். திருமலையை அடையும் முன்பு, அவனுடைய கனவில், ஒரு சர்ப்பம் தோன்றி, இந்த மலைத்தொடர், தான், தான் என்றும், வாமன, வராக புராணங்களில் சொன்னது போல், திருப்பதியில் தலையாகவும், அஹோபிலத்தில் உடம்பாகவும், ஸ்ரீசைலத்தில் வாலாகவும் இருப்பதாகவும், இப்படி இங்கே மலையை வெட்டுவதாலும், கற்களை கொண்டு குவிப்பதாலும், கோபுரம் கட்டுவதாலும், தன் மேல் பாரம் அதிகமானதாகவும் அதனால் தன்னுடைய சுத்தம் குறைந்து வருவதாகவும், அது திருவேங்கடவனை தரிசித்தால் தான் அவை தீரும் என்று சொல்லி திருவேங்கடவனை வலம் வந்து, அவன் வைகுண்ட ஹஸ்தத்தில் சுற்றிக் கொண்டதை கண்டான்.
ஆதிசேஷனிடம் அபசார படவேண்டாம் என்று அடுத்த நாளே, கோபுர திருப்பணிகளை நிறுத்தி, இந்த கனவிற்கு என்ன பலன் பரிகாரம் என்று விசாரிக்க, வேங்கடவனுக்கு நாகாபரணம் அணிவிக்கலாம் என்று ஆன்றோர்கள் யோசனை கூற, அப்படியே அவர் தங்கத்திலே செய்து எங்கு அணிவிக்கலாம் என்று சந்தேகம் பிறந்த்து. அப்போது ஒரு பக்தன் மேல் எம்பெருமான் ஆவேசித்து, முன்பு ஒரு நாள் வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் வாக்கு வாதம் வந்ததாகவும் எம்பெருமான் வாயு பக்கம் நின்றதாகவும், அதனால் வருத்தமுற்ற ஆதிசேஷன், நாகதீர்த்தம் என்ற இடத்தில் தவம் செய்ய, எம்பெருமான் மனம் உகந்து, ஆதிசேஷனை ஏற்றுக்கொண்டார். எப்படி ஒரு தகப்பன் தன்னுடைய குழந்தையை தன்னுடைய கரங்களில் ஏந்தி கொள்வாரோ அப்படியே இந்த நாகபரணத்தையும் தனது வலது கரத்தில் தோள்வளைகளோடே சூடி கொள்வேன் என்று கூற, எம்பெருமானுக்கு வலது திருக்கரத்தில் நாகாபரணம் சேர்ந்தது. பின்னாளில் இந்த நாகாபரணமே அவர் வைணவ கடவுள் அல்ல என்ற பிறர் சொல்ல ஒரு காரணமாக அமைந்தது என்பதை முன்பு பார்த்தோம். . பின்னாளில் ராமானுஜர் எம்பெருமானின் இன்னொரு திருக்கரத்திற்கும் நாகாபரணம் அணிவிக்க ஏற்பாடு செய்தார்.
ஸ்கந்த புராணத்தில் ஸ்வர்ணமுகரீ மஹாத்மியத்திலும், வாமன, வராஹ புராணங்களில் சொன்னது போல், திருமலையில் சிவனுக்காக ஸ்வாமி புஷ்கரிணியின் மேற்கு கரையில் ஆவிர்ப்பவித்த அழகியசிங்கரான வேங்கடத்தரியை ஒரு காலத்தில், சில சைவ பக்தர்கள், இது சிவனுக்காக தோன்றிய அழகிய சிங்கர், ஆகையால் ஒரு சிவனையும் இங்கே பிரதிஷ்டை செய்து கொள்கிறோம் என்ற கோரிக்கையை வைக்க, ஸ்ரீவைஷ்ணவர்களும் அர்ச்சகர்களும் வாமன, வராஹ, மார்க்கண்டேய, ப்ரஹ்மாண்டாதி புராணங்களில் கூறியது போல் இது கருடாத்ரி, விஷ்ணு க்ஷேத்ரம், இங்கே சிவப்ரதிஷ்டி உசிதம் இல்லை என்று சொல்ல, அரசனும் அதை ஏற்று, சிவபக்தர்களுக்கு செய்தி அனுப்ப அவர்களும் சென்று விட்டனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள், இப்படி இந்த அழகிய சிங்கர் ப்ரசித்தராய், தினமும் ஆராதனம் கண்டு அருளி இருந்தால், எல்லோரும் இந்த ஸ்தலத்தை தங்களுது என்று சொல்வார்கள் என்பதால், தின திருவாராதனத்தை குறைத்துக்கொண்டு அவரை பிரசித்தம் இல்லாமல் செய்ய பார்த்தார்கள்.
இதனை கேள்வியுற்ற ராமானுஜர், இவருக்கு நித்ய ஆராதனம் இல்லாமல் இருந்தால் அது இந்த ஸ்தலத்திற்கு நல்லது அல்ல என்று, இந்த வேங்கடத்தரி என்ற உக்கிர நரசிம்மரை, திருமலை திருக்கோவிலில் ஈசான மூலையில் இந்த உக்ரம் குறையும்படி, விமானாபி முகமாய் பிரதிஷ்டை செய்து, தினமும் திருவாராதனம் தவறாமல் நடக்க ஏற்பாடு செய்தார்.
தில்லையில் கோவிந்தராஜன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்து கொண்டு இருந்தார். அப்போது சோழ தேசத்தை ஆண்டு கொண்டு இருந்த முதல் குலோத்துங்கன் என்ற அரசன் தன்னுடைய சமய பற்றின் காரணமாக இந்த கோவிந்தராஜனை அவர் இடம் கடல் ஆனதால் அங்கேயே இருக்கட்டும் என்று வைணவர்கள் மனம் புண்படும்படியும் அந்த திவ்யதேச பெருமைகள் முழுவதுமாக அழியும்படியும், கடலில் எறிந்தான், தில்லையில் இருந்த வைணவர்களை துன்புறுத்தியும் வந்தான். தான் செய்த அடாவடி செயல்களினால், தன்னுடைய இறுதி காலத்தில் ராஜபிளவை என்ற நோய் வந்து உடம்பில் நிறைய புழுக்கள் வந்து கிருமி கண்ட சோழன் என்று பெயர் பெற்று இறந்தான்.
இவற்றைப்பற்றி கேள்விப்பட்ட இராமானுஜர், குலசேகர ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் ஈடுபாடு கொண்ட திவ்யதேசமான தில்லைநகர் திருச்சித்ரகூடம் அழிந்துவிட கூடாது என்ற சிரத்தையுடன், மீண்டும் அந்த திவ்யதேசத்திற்கு பாகவத பற்று வர வேண்டும் என்ற காரணத்துடனும், கோவிந்தராஜர், திருவேங்கடமுடையானின் அன்புக்கு பாத்திரமானவராய் கீழ் திருப்பதியில் எழுந்தருளி இருப்பதை மனதில் கொண்டு, ஒவ்வொரு இரவும், திருவேங்கடமுடையான் அர்த்தஜாம பூஜை பிரசாதம் அமுது செய்த பிறகு, சடகோபனை போர்த்தி, கையில் எழுந்தருளி கொண்டு, குடை, சாமரம் போன்ற உபசாரங்களோடு, வென்று கொண்டான் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர், தெற்கு முகமாக நின்று கொள்ள, கட்டியம் சொல்பவர் “அருளப்பாடு, திருச்சித்ரக்கூட கைங்கர்ய துரந்தரராய், திருவேங்கடமுடையான் செங்கோல் முத்ரா நிர்வாஹரான சேனை முதலியார்” என்று சொல்லி, கோவிலுக்கு பாரபத்யம் செய்யும் ஸ்ரீ வைஷ்ணவருக்கு பரிவட்டம், ஸ்ரீசடகோபன் (சடாரி) பிராசாதிக்கும்படி இராமானுஜர் கட்டளை செய்தார். யாதவராயன் திருப்பதி கோவிந்தராஜர் சன்னதிக்கு எதிரே ஒரு மண்டபம் கட்டினான். அதற்கு தில்லைக்கு வாய்த்தான் மண்டபம் என்றும் திருச்சித்ரகூட மண்டபம் என்றும் பெயர்.
இரண்டாம் முறை இராமானுசர் திருமலை எழுந்தருளி இருந்த போது, தில்லையில் இருந்து வந்த சில அந்தணர்கள் தில்லை எம்பெருமானின் உற்சவ மூர்த்தியின் விக்ரகத்தை கொண்டு வந்து அங்கே நடந்த கொடுமைகளை விவரித்தனர். திருவேங்கடத்தானுக்கும் கோவிந்தராஜனுக்கும் உள்ள ஒற்றுமை தோன்ற, திருமங்கை ஆழ்வார் அருளி செய்த “தென்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை” (பெரிய திருமடல் 67-68) எனபதை மனதில் கொண்டு, அதனை செயல் படுத்துதல் தக்க செயல் என்று திருப்பதியில் பார்த்தசாரதி சன்னதிக்கு அடுத்து கோவிந்தராஜனுக்கு கர்ப்பக்கிரகம் மற்றும் சன்னதி ஏற்பாடு செய்து தில்லைநகர் கோவிந்தராஜனைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது பார்த்தசாரதி திருவுருவமும் சிதிலடைந்து இருந்ததால் பூஜை நைவேத்தியம் இல்லாமல் இருந்ததும் கோவிந்தராஜனுக்கு இவை ஏற்பாடு செய்வதற்கும் ஏதுவாக இருந்தது.
இராமானுஜர், திருவேங்கடமுடையானும் கோவிந்தராஜனும் ஒருவரே என்பதற்கு ஏற்ப திருவேங்கடமுடையான் வேத பாராயணம் செவி சாய்க்கும் போது, வெங்கடேச மஹாத்மியத்துடன் திருச்சித்ரகூட மஹாத்மியத்தையும் கேட்டருளும்படி செய்தார். அதே போல் கோவிந்தராஜனும் வெங்கடேச மஹாத்மியத்தையும், திருச்சித்ரகூட மஹாத்மியத்துடன் செவிசாய்க்க செய்தார். அதே போல் திருவேங்கடவன் மாலைப் பொழுதில் நித்யாநுஸந்தானம் கேட்டருளும் போது, ‘ஊன் வாட உண்ணாது ‘ மற்றும் ‘வாட மருதிடை போகி ‘ என்ற திருமொழிகளையும் சேவித்து, கோவிந்தராஜனுக்கு ‘ஒழிவில் காலம் எல்லாம் ‘ மற்றும் ‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழி பதிகங்களையம் சேவிக்க செய்தார். இப்படி இரண்டு ஸ்தலங்களும் ஒன்றே என்பதற்கு ஏற்ப ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் உத்சவ காலங்களில், திருவேங்கட முடையான், கோவிந்தராஜன், அலர்மேல்மங்கை நாச்சியார், திருமகளார் சம்பாவனை என்று இரண்டு ஸ்தலங்களிலும் ஒரே மாதிரியாக நடைபெற ஏற்பாடு செய்தார்.
திருவேங்கடமுடையான் ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையருக்காக மற்ற ஸ்தலங்கள் போல் இல்லாமல், அத்யயன உத்ஸவத்திலே இயற்பா முதல் நாலாயிரமும் கேட்டுஅருளும்படி ஒவ்வொரு ஆண்டும், இருபத்துமூன்று நாட்களாகவும், பிறகு ஞானப்பிரான் ஒரு நாளும், கோவிந்தராஜர் ஒரு நாளும் கட்டளை பிறப்பித்து இப்படி சில உத்ஸவங்கள், திருவேங்கடமுடையானுடன் ஒரே காலத்தில் நடைபெறாமல் பக்தர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க வழி செய்தார்.
மார்க்கண்டேய மகரிஷி, திருமலை யாத்திரையின் போது வரும் வழியில், அழகியசிங்கர் மார்கண்டேயருக்கு பிரத்யக்ஷம் ஆனார் என்று மார்க்கண்டேய புராணத்தில் குறிப்பிட்டது போல், இராமானுஜர், அவருக்கு பிரத்யக்ஷம் ஆன குகை அருகில் ஒரு கோவில் அமைத்து, அழகியசிங்கரை வைகானச ஆகம முறைப்படி நிறுவி அவருக்கும் நித்திய ஆராதனம் நடக்கும்படி ஏற்பாடு செய்தார்.
கபில தீர்த்தக்கரையில் 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்மாழ்வார் என்று கருதப்படுபவருக்கு திருக்கோவிலை கட்டி அவரை அதில் நிறுவியவர் பல்லவராயன் என்ற சிற்றரசன் ஆவான். அச்சுத ராயன் என்பவன் 1513ல் இந்த துறைக்கு படிகள் நிறுவி மண்டபம் கட்டி நான்கு புறங்களிலும் திருவாழி வைத்து சக்கர தீர்த்தம் என பெயரிட்டு இது திருவேங்கடமுடையானுக்கு உரியது என்னும்படி செய்தான். கோவிந்தராஜர் ஸ்ரீதேவி, பூமாதேவிகளுடன் உபகர்மா நாளில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். இன்றும் நடைபெறும் இந்த நிகழ்வு 1467ல் இராமானுஜர் ஏற்பாடு செய்தது என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தீர்த்தத்தை விட தூய தீர்த்தம் திருப்பதியில் இல்லை. கந்தாடை ராமானுஜ அய்ங்கார் என்பவர் இந்த தீர்த்தத்தின் மேற்கு கரையில், தொண்டைமான் சக்ரவர்த்தி திருமலைக்கு செல்லும் வழியாக இருந்த குகையில் நரசிம்மரையும் தெற்கு கரையில் லக்ஷ்மிநாராயணனையும் பிரதிஷ்டை செய்து பிற மதத்தினரால் தொல்லை வாராது செய்தார் என்று திருமலை ஒழுகு கூறுகிறது.
இப்படி பல உத்சவ காலங்களில், கோவிந்தராஜருடன் ஆழ்வார் திருமகளான ஆண்டாளும் எழுந்தருளும்படி செய்தார். திருவாடி பூரத்தன்று திருமலை அடிவாரத்தில் ஸ்வயம்வக்தமான திருவடிகள் (ஆஞ்சநேயர்) சன்னதியில் ‘கூடல் வளைச்சு’ கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார். கணு நாள் அன்று, ஆண்டாளும் கிருஷ்ணரும் மாலை மாற்றி இந்த உலக நலத்திற்காக சேவை சாதிக்கும்படி செய்தார்.
நைமிசாரண்ய ரிஷிகள், திருவேங்கட மஹாத்மியத்தை கேள்வியுற்று மற்ற நாமங்களை தவிர்த்து, கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே ஒலித்துக்கொண்டு, இந்த க்ஷேத்திரத்தில் திருமாலை தவிர வேறு எந்த தெய்வத்தையும் உச்சரிக்காது, திருமலை ஏறினார்கள் என்று வராஹ புராணத்தில் உள்ள அர்த்த விசேஷத்தை மனதில் கொண்டு, திருமலை ஏறும் யாத்ரிகர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா ‘ என்றே பரம பாகவதர்களும் பரம ரிஷிகளைப் போல், திருமலை ஏற குரல் கொடுத்தார்.
தென் மதுரையில் வைகைக்கரையின் மேற்கு கரையில், குருவித்துறை என்னும் ஊரில், விஸ்வம்பரன் என்ற முனிவர், இராமபிரான் லக்ஷ்மணனுடன் கடற்கரையில் இருக்கும் போது, விபீஷணன் வானத்தில் வந்து சக்கரவர்த்தி திருமகனிடம் சரணாகதி என்று வந்த காட்சியை காட்டியருள வேண்டும் என்று தவம் புரிந்தான். எம்பெருமானும் அந்த முனிவனின் கனவில் விபீஷ்ண சரணாகதி காட்சியை, இளையபெருமான் அருகே நிற்க, சக்ரவர்த்தி திருமகன் அமர்ந்திருக்க, அனுமன் எம்பெருமான் சந்நிதியில் விபீஷணனுக்கு அனுகூலமாக வார்த்தைகளை சொல்லி, எம்பெருமான் திருவுள்ளப்படி முடிவு எடுக்க வேணும் என்று கேட்டு அஞ்சலி முத்திரையுடன் நின்று கொண்டு இருந்தததையும், அங்கதன் வானில் விபீஷணன் இருக்கிறான் என்று தன்னுடைய விரல்களால் பவ்யமாக காட்டி கொண்டிருந்தததையும் முனிவர்க்கு சாதித்து அருளினார். முனிவர் மனம் மகிழ்ந்து, இந்த விபவத்தை அர்ச்சையில் என்னென்றும் தானும் மற்றவர்களும் அனுபவிக்கும் வண்ணம் விக்ரகங்கள் செய்து அந்த குருவித்துறையில் பல காலம் நித்ய திருவாராதனம் கண்டு வந்தார். ஒரு நாள் ஒரு பக்தனின் வாக்கினால் தன்னை திருமலைக்கு எழுந்தருள கேட்டு கொள்ள அவனும் அந்த விக்ரகங்களை திருமலைக்கு எடுத்து சென்றான்.
அப்போது அங்கே ராமானுஜர், திருமலை நம்பிகளிடம் இராமாயண பாடம் கற்று வந்தார். இந்த பக்தர் கொண்டு வந்த தினம், விபீஷண சரணாகதி என்று பகுதி நடக்கவே, இருவரும் இது தெய்வ சங்கல்பம் என்று திருமலையில், திருவேங்கடமுடையான் சந்நிதியில் இந்த எம்பெருமானுடன் சீதா தேவியும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று சங்கல்பித்து, சீதா கல்யாணமும் செய்து வைத்து நித்ய ஆராதனம் செய்துவிக்க ஏற்பாடு செய்தனர்.
திருமலை நம்பி, திருவேங்கடவனுக்கு பாபவிநாச தீர்த்தத்தில் இருந்து தினசரி திருமஞ்சன மற்றும் திருவாராதன தீர்த்த கைங்கர்யம் செய்து வரும் சமயம், திருவேங்கடவன் அவரின் கைங்கர்யத்தில் திருப்தி கொண்டவராய், ஒரு நாள் அவர் வரும் வழியில் வேடன் உருவில் வந்து, திருமலை நம்பிகளை பார்த்து தனக்கு தாகமாக உள்ளது என்றும் தீர்த்தம் தரவும் கேட்டான். திருமலை நம்பிகள் இது திருவேங்கடவனுக்கு, மனிதர்களுக்கு அல்ல என்று கூறி தரமறுத்து திருமலைக்கு செல்ல ஆரம்பித்தார். வேடன் அந்த தீர்த்த பாத்திரத்தை சேதம் செய்து தண்ணீர் கீழே விழச்செய்து, அதை பருகியபடி இருந்தான். தீர்த்த பாத்திரத்தில் பளு குறைந்ததை உணர்ந்த திருமலைநம்பி திரும்பி பார்த்து நடந்ததை அறிந்து மீண்டும் தீர்த்தம் எடுத்து வர திரும்பியபோது, வேடன் ஆகாய கங்கை இடத்தை காண்பித்து அங்கு ஒரு அம்பு விட்டு, ஒரு ஊற்று பெருக செய்து அந்த தீர்த்தத்தை எடுத்து கொள்ள சொல்லி தன்னையும் யார் என்று காட்சி அளித்து மறைந்தார். திருமலை நம்பிகள் தனக்கு காட்சி கொடுத்த எம்பெருமானின் கருணையை மகிழ்ந்து அதே ஆகாய கங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்ய அன்று முதல் தொடங்கினார். சில நாட்களில் திருமலைநம்பிகள் பரமபதம் அடைந்தார். இதனை கேள்வியுற்ற இராமானுஜர் திருமலை நம்பிக்கு திருவேங்கடவன் காட்சி அளித்து ஆகாய கங்கை தீர்த்தத்தை கொண்டு முதலில் திருமஞ்சன நாளை கொண்டாடும் வண்ணம், அது அத்யயன உற்சவநாட்களுக்கு இடையில் வருவதால், அந்த உத்சவம் முடிந்த அடுத்த நாளில் அந்த திருமஞ்சனத்தை நடத்த உத்தரவு இட்டார். இந்த நிகழ்விற்கு தண்ணீர் அமுது வழி திருத்துதல் என்று பெயர்.
குரும்பறுத்த நம்பியை பற்றி முன் பார்த்தோம். இங்கே இன்னும் சிறிது விளக்கமாக காண்போம். தொண்டைமான் சக்கரவர்த்தி திருவேங்கடவனிடத்தில் மண்ணினால் புஷ்பம் செய்த பக்தனை பற்றி கேட்டபோது, திருவேங்கடவன் அந்த பக்தனுக்கு முக்தி அளிக்க முடிவு செய்து அவன் குரும்பறுத்த நம்பி என்றும் அவன் திருமலைக்கு ஈசானமுலை திசையில் உள்ள குருவை என்ற கிராமம் என்றும் அவனை தனியே சென்று சந்திக்க வேண்டும் என்றும் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு திருவேங்கடவன் தெரிவித்தான். தொண்டைமான் சக்ரவர்த்தி குறும்பறுத்த நம்பியை புகழ்ந்து எம்பெருமானிடம் விடை பெற்று நம்பியை சந்திக்க செல்கிறான்.
தொண்டைமான் சக்கரவர்த்தி குருவை கிராமத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை சென்ற போது, எம்பெருமானின் நோக்கத்தை அறிந்த நம்பி, தன்னுடைய தொழில் செய்யும் சட்டியால் (தட்டுமரத்தினால்) தன் தலையில் அடித்துக்கொண்டு உடன், திருவேங்கடவன் தன்னுடைய வெள்ளிக்கிழமை திருமஞ்சன நேரம் என்றும் கருதாமல் உடனே அதே தோற்றத்துடன் நம்பிக்கு அங்கேயே காட்சி அளித்து உடனே மோக்ஷம் அளித்தார். இதனை அறிந்த இராமானுஜர், திருவேங்கடவன் தன்னை சேர்ந்தவர்களுக்கு வசப்பட்டவன் என்பதையும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு துணை இருப்பவன் என்று தெரியும்படி அப்படியே நம்பியின் முன் நேரில் வந்து அவனை அங்கீகரித்ததனை உலகில் அனைவரும் அறிந்து அவன் திருவடி பற்றவேண்டும் என்பதற்காக, குருவை கிராமத்தில், திருவேங்கடவனின் திருமஞ்சன கோலத்துடன், குறும்பறுத்த நம்பியின் தட்டுமர காட்சியோடு ஒரு கோவில் கட்டி நித்திய திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்தார்.
இராமானுஜர் திருப்பதி மற்றும் திருமலையில் செய்த சில சிறப்பான புதியவை மற்றும் திருத்தங்கள் கீழே:
திருவரங்கம், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திருத்தலம் என்று முன்பு பார்த்தோம். இந்த திருவேங்கடம், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருத்தலம். ஆழ்வார்கள் இந்த திருமலையைப் பற்றியும், வேங்கடவனைப் பற்றியும், பாசுரங்கள் சமர்ப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் வேங்கடவனின் மகிமைகளைக் கூறி இருப்பதை நிற்பதை அடியேனுடைய எழுத்துக்களில் அடக்கிவிட முடியாது.
திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு திருவேங்கடவனுக்கு மார்கழி மாதத்தில் சாத்தப்படுகிறது. ஆண்டாள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்களில் திருவேங்கடமும் ஒன்று.
மொத்தம் 202 பாக்களுக்கு மேல் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. வேங்கடவனுக்கு ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசன பாக்களை கீழே உள்ளவாறு காணலாம்.
1 | பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி | 10 |
2 | பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி | 11 |
3 | பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி | 19 |
4 | திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் | 16 |
5 | நம்மாழ்வார் | 49 |
திருவிருத்தம் | 8 | |
திருவாய்மொழி – துவய மஹாமந்திரத்தின் முதல் பகுதி | 11 | |
திருவாய்மொழி – துவய மஹாமந்திரத்தின் இறுதி பகுதி | 11 | |
திருவாய்மொழி – மற்ற பாசுரங்கள் | 18 | |
பெரிய திருவந்தாதி | 1 | |
6 | குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி | 11 |
7 | பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி | 7 |
8 | ஆண்டாள் | 16 |
9 | திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் | 2 |
10 | திருமங்கையாழ்வார் | 61 |
10,1 | பெரிய திருமொழி 1.8 கொங்கு அலர்ந்த | 10 |
10.2 | பெரிய திருமொழி 1.9 தாயே தந்தையே | 10 |
10.3 | பெரிய திருமொழி 1.10 கண்ணார் கடல்சூழ் | 10 |
10,4 | பெரிய திருமொழி 2,1 வானவர் தங்கள் சிந்தை | 10 |
10.5 | 5. 1 பெரிய திருமொழி மற்றைய பாடல்கள் மற்றும் மற்ற பிரபந்தங்கள் 5.2 திருகுறுந்தாண்டகம் 5.3 திருநெடுந்தாண்டகம் 5.4 பெரிய திருமடல் 5.5 சிறிய திருமடல் | 15 1 2 2 1 |
அனந்தாழ்வான் ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்; அவர் இராமானுஜரின் வார்த்தைகளை ஏற்று, அவரிடம் “அங்கிருந்த அனைவரில் அனந்தாழ்வானே ஆண்பிள்ளை’ என்று பாராட்டினை பெற்று, திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யும் பொருட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து சேர்ந்தவர். திருவேங்கடமுடையானும் அவரது கைங்கர்யத்தில் உவந்தவராய் அவரிடம் அன்பும் பரிவும் காட்டி வந்தார்.
ராமானுஜர் பரமபதம் அடைந்ததை (அவதார ஸமாப்த்தி ) ஒரு பக்தர் அனந்தாழ்வாரிடம் பகிர்ந்து கொண்டபோது, அனந்தாழ்வார் மிகவும் சோகம் அடைந்து சுமார் ஒரு வருட காலம் திருவேங்கடமுடையானுக்கும் கைங்கர்யம் எதுவும் செய்யாமல் வேதனையில் தவித்து வந்தார். திருவேங்கடமுடையான் அனந்தாழ்வாரிடம் தாமன்றோ தன்னுடைய இராமானுஜரை இழந்தது, அதற்காக தான் தான் வருத்தப்பட வேண்டும். அனந்தாழ்வாருக்கு எந்த குறையும் வராது என்று ஆறுதல் கூறி அவரை கைங்கர்யம் செய்ய அழைத்தார். அனந்தாழ்வாரும் திருவேங்கடமுடையானின் அழைப்பை ஏற்று அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். அதாவது அத்யயனோத்சவத்தில் ஒரு நாள், ராமானுஜ நூற்றுஅந்தாதியை செவி சாய்த்திட வேண்டும் என்பதாகும். திருவேங்கடமுடையானும் உகந்து, சடகோபன், கலியன் சொன்ன வார்தைகளை கேட்பதை போல், இராமானுஜரை பற்றிய வார்த்தைகளை நூற்று அந்தாதியில் கேட்போம் என்று அருள, கண்ணினும் சிறு தாம்பு சொல்லி முடித்த பிறகு அடுத்த நாள் இராமானுஜ நூற்று அந்தாதியும் வாசிக்க ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த நாள் இராமானுஜர் ஏற்படுத்திய தண்ணீரஅமுது வழி கைங்கர்யமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியார் ஸ்ரீ அனந்த சூரியார் என்பவருக்கும் தோதாத்திரி அம்மையார் என்பவருக்கும் திவ்ய குமாரராய் காஞ்சி மாநகரில் தூப்புல் என்ற திருத்தலத்தில், திருவேங்கடவன் திருக்கோவிலின் திருமணியின் அம்சமாக கி பி 1268 ஆண்டு புரட்டாசி மாதம் சரவண நக்ஷத்திரத்தில் ஒரு புதன் கிழமையில் அவதரித்தார். வேதாந்த தேசிகன் வேதங்களை, வேத நாதம் என கணீர் என்று எங்கும் ஒலிக்க செய்தார்.
மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை எழுந்தருளியுள்ளார். அவரின் ஆணையின்படி அவரது சிஷ்யர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பொருட்டு ஸ்ரீ வேங்கடஸ்வர சுப்ரபாதத்தை அருளி செய்தார்.
இந்த சுப்ரபாதத்தினை அருளி செய்தவர் ஸ்ரீ அண்ணங்கராச்சார்யார் அல்லது பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமி அவர்கள். இவர் சுவாமி தேசிகனின் திருக்குமாரரிடம் கற்று பின் மணவாள மா முனிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர். ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவை சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகும்.
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ச்லோகம் : “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே | ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் ||”
அதாவது ஸ்ரீவைகுண்டத்தில் நித்யனாக இருக்கும் எம்பெருமான், அவ்விருப்பிடத்தை வெறுத்து, தான் வானோர்க்கு மட்டும் தெய்வமில்லை; இந்தப் பூமியில் வாழ்பவர்க்கும் தெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம், விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் நடுநாயகமாக இருக்கும் உயர்ந்த மலைகளையும், வராஹ புஷ்கரிணியையும் உடைய இடத்தை இருப்பிடமாகக் கொண்டான். வேங்கடேசன் என்ற திருநாமத்தையும் சார்த்திக்கொண்டான். இதனால் இந்த மலையானது திருவேங்கடமலை என்று பிரசித்திபெற்று திகழ்கிறது. இப்படிப்பட்ட தயை உடைய திவ்யமான திருவேங்கடத்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு (வாழ்ச்சி) என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம்.
தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருமலை கோயிலுக்கு வந்திருக்கிறார்.அவரும் அன்னமய்யாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், பல தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
இந்த சுப்ரபாதத்தை தன்னுடைய இனிய குரலால் பாடி இந்த உலகின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்றவர் MS சுப்புலக்ஷ்மி. அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு சிலை திருப்பதியில் இருந்து அலிபிரி வரும் வழியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலே சொன்ன திருவேங்கட விஷயங்களை சொல்லியபின் அடியேன் உறுதியாக புரிந்து கொண்டது, திருவேங்கட அனுபவத்தை சொல்லி முடிக்க முடியாது. மேலும் திருவேங்கடமுடையான் பற்றிய விஷயங்களை அடியேன் அறிய முடிந்தால், இன்னொரு வலைப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். தற்போது, திருவேங்கட அனுபவத்தை சற்று இங்கே நிறுத்திவிட்டு, இனி இன்னொரு திவ்யதேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.
===================================================================================