திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார்- திருவாய்மொழி- ஒழிவில் காலம் எல்லாம்


தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற (11) எல்லா ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை  முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை  இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19)  இங்கே  காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் திருவேங்கடமுடையான் மேல் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்து திருவாய்மொழியில் த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியாகிய உலகமுண்ட பெருவாயா என்ற பகுதியை இங்கு பார்த்தோம். இனி இப்பொழுது திருவாய்மொழியில் இருந்து த்வய மந்திரத்தின் இறுதிப் பகுதியாகிய ஒழிவில் காலமெல்லாம் என்ற மூன்றாம் பத்தின் மூன்றாவது பதிகத்தைப்பற்றி ஒரு சிறிய விளக்கத்தை காண்போம். நன்றி.

திருவாய்மொழி

மூன்றாம் பத்து, மூன்றாம் பதிகம், மிக விசேஷமானது. ஒழிவில் காலமெல்லாம் எனும் இந்த பதிகத்தில் 3.3.1 முதல் 3.3.10 வரை ஒவ்வொரு பாசுரத்திலும் திருவேங்கடமுடையான் திருநாமம் உள்ளது. இந்த பதிகத்தில் ஆழ்வார், த்வய மந்திரத்தின் இறுதிப்  பகுதியாகிய  “ஸ்ரீமதே நாராயணாய நம: ” என்பதின் அர்த்தத்தை, நாம் தொடர்ந்து பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இந்த பத்து பாசுரங்களின் மூலம் விளக்குகிறார்.  த்வய மஹா மந்திரத்தின் முதல் பகுதியான, ‘ஸ்ரீமந் நாராயண சரணெள   சரணம்   ப்ரபத்யே‘ என்பதை  “உலகம் உண்ட பெருவாயா என்ற (6.10) பதிகத்தில் சொன்னதை முன்பு பார்த்தோம்.

தன்னுடைய சொரூபத்திற்குத் தகுதியான எம்பெருமானுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆழ்வார் விரும்புகிறார். எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று இருந்த ஆழ்வாருக்கு, எம்பெருமான், ஆழ்வாரை அழைத்து, அவருக்காகவே திருமலையில் வந்து இருப்பதாகவும், ஆழ்வாரை அனுபவிக்கைக்காகவே திருமலையில் வந்து நிற்பதாகவும் சொல்லி, பரமபதத்திற்கு சென்று காணக்கூடிய காட்சியை இங்கே வந்து காட்டியதாகவும், எல்லோரும் அனுபவிக்கும்படி ஆழ்வாரை மேலும் பாட சொல்கிறார்.

பாடல் விளக்கம்
3.3.1ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம், தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே. (3.3.1)
மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற அழகினைக்கொண்ட ஒளி உருவனான, தங்கள் குலத் தலைவனான, எம்பெருமானுக்கு எல்லையில்லாத காலமெல்லாம், எல்லா இடத்திலும், அவன் கூடவே உடன் இருந்து, ஒன்றும் குறையாதபடி எல்லா தொண்டுகளையும் நாம் செய்ய வேண்டும் என்பது பாடலின் பொழிப்புரை.
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளையும் செய்ய வேண்டும் என்கிறார் ஆழ்வார்; காலம் எல்லாம் என்று சொன்னது முடிவில்லாத காலம் என்பதையும் கடந்த, நிகழ், எதிர் என்ற எல்லா காலங்களையும் குறிக்கும். கடந்த காலத்தில் தொண்டு செய்ய வேண்டும் என்று சொன்னதை, இனி வரும் காலங்களில் செய்யும் தொண்டு, கடந்த காலத்தில் தொண்டு செய்யாமல் போன துக்கம், மனதிற்கு வராத அளவிற்கு செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பாடலை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் அநுஸந்திக்கும்போது, ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம் என்று நெடு நேரம் பாடுவாராம்.
வழுவிலா அடிமை என்றது தொண்டில் யார்க்கும் பங்கு கிடைக்காதபடி தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று விரும்புவது, லக்ஷ்மணன் இரவும் பகலும் எப்பொழுதும் தொண்டு செய்தது போல் செய்யவேண்டும் என்கிறார். பரதன் நாட்டில் இருந்து சேவை செய்ததுபோல், லக்ஷ்மணன் காட்டில் இருந்து சேவை செய்தது போல், எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்கிறார். ஆழ்வாராக இல்லாவிட்டாலும், திரையாக, குத்துவிளக்காக எதுவாக இருந்தாலும், எப்பொழுதும் எம்பெருமானுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிறார். அதாவது, தான் கைங்கர்யம் செய்ய விரும்பும் எம்பெருமான் நிரந்தரமாக இருந்து கொண்டு, அடிமை செய்யும் தானும் எப்போதும் அங்கு இருந்து கொண்டு, காலமும் நிரந்தரமாக இருந்து கொண்டு, தேசமும் நிரந்தரமாய், அகங்கார, மமகாரங்களுடன் கூட வரும் அனுபவம்போல் இல்லாமல், துக்கம் கொஞ்சமும் இல்லாமல், எப்போதும் சுக அனுபவம் தருகிற கைங்கர்யம் வேண்டும் என்கிறார்.
கைங்கரியம் செய்வதைக் காட்டிலும், செய்ய வேணும் என்கின்ற ஆசை எப்பொழுதும் நிலை நின்றிருந்தாலும் போதும் என்ற சாஸ்திர அர்த்தம் வெளிப்படும்படி ஆழ்வார் பாடுகிறார். எம்பெருமானார்  ஸ்ரீவைகுண்ட கத்யத்தில் “கைங்கரியத்தில் ஆசையை வளர்த்திக் கொள்ள வேண்டும்” என்ற கருத்துப்பட அருளிச் செய்திருப்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
நாம்‘ என்று சொல்லி இருப்பது, தன்னுடன் கூடிய அடியவர்களை சேர்த்து கொண்டு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கேசவன் தமர் என்ற 2.7 பதிகத்திற்கு பிறகு, ஆழ்வார் தனியாய் இல்லாமல், ஸ்ரீவைஷ்ணவர்களையும் சேர்த்து கொண்டு இருப்பதை நினைவில் கொள்ளலாம்.
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, என்று சொன்னது, கைங்கரியம் செய்ய வேண்டும் ஆழ்வாரின் எண்ணத்தைவிட, இவரிடம் கைங்கர்யம் கொள்ள வேண்டும் என்ற எம்பெருமானின் எண்ணத்தை தெரிவிக்கிறது என்பர். ஆழ்வார் தான் இருந்த இடத்திலே இருக்கும் போது, எம்பெருமான் கலங்கா பெரு நகரான பரமபத்தைவிட்டு திருமலையில் நின்று இருப்பது அதனை காட்டுகிறது என்பர். கைங்கர்ய ருசி உடையவர், இங்கு பாயும் அருவிகளின் சப்தத்தை ஒரு காரணமாக கொண்டு, எம்பெருமானுக்கு தொண்டு புரிய திருமலைக்கு வாருங்கள் என்கிறார். திவ்யதேச யாத்திரை செல்கிற அடியவர்களிடம் வழிப்பறி செய்பவர்களின் ஆராவாரமும் ஆழ்வார்களுக்கு ஒரு காரணமாக இருக்கும் போது, அருவியின் ஓசையை சொல்ல வேண்டுமோ என்று உரையாசிரியர் எழுதுகிறார்.
அடியவர்களின் சேவையை பெற உகந்த நிலமாக எம்பெருமான் திருவுள்ளம் பற்றி அவன் வந்து இருக்கின்ற நிலம் ஆகையால், ஏதோ ஒரு காலத்தில், சரீர சம்பந்தம் அற்று, அர்ச்சிராதி மார்க்கத்தில், பரமபதம் அடைந்து செய்கின்ற சேவையை இங்கேயே செய்யுங்கள் என்று சொல்வது போல் அமைந்துள்ள பாசுரம்.
எழில் கொள் சோதி என்பது அவன் மேல் விழுந்து அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது போல் இருக்கும் வடிவழகு என்கிறார் ஆழ்வார். வானோர் சோதி(திருவாய்மொழி 1.5.5), பகலில் விளக்கு வைத்தது போல் இருக்கும் என்றும், நீல் ஆழி சோதி, (பெரிய திருவந்தாதி 34) கடல் கொண்டு கிடக்கும் (மீனுக்கு தண்ணீர் வார்த்தது போல்) என்றும், திருவேங்கடத்து எழில் கொள் சோதி, குன்றின் மேல் இட்ட விளக்காக இருக்கும் என்று இதன் பெருமை பேசுகிறார். அதாவது அந்த இடங்களில் இவனது சோதி குன்றியே இருக்கும், இங்கு பிரகாசிக்கும் என்பது போல் உள்ள ஈட்டு ஸ்ரீஸுக்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி ராமானுஜர் இந்தபதிகத்தை அருளிச்செய்யும்போது, அங்குஇருந்த நூற்றுக்கணக்கான சிஷ்யர்களை நோக்கி, “ஆழ்வார் விரும்பியபடி, திருவேங்கடமுடையான் திவ்யதேசத்தில் இருந்து நித்திய கைங்கரியம் பண்ண விருப்பமுடையார் யாரேனும் உண்டோ என்று வினவ, எல்லாரும் அஞ்சி விடை கூறாமல் இருக்க, அனந்தாழ்வான் எழுந்து ‘அடியேனுக்கு நியமித்தருளவேணும்’ என்றார்; அது கேட்டு உகந்த எம்பெருமானார் ‘நீர் ஒருவரே ஆண்பிள்ளை’ என்று சொல்லி அவரை கொண்டாடித் தழுவி விடைகொடுத்தருளினர்; அதுமுதல் அனந்தாண்பிள்ளை என்று பெயர் உண்டாயிற்று.
இந்த பாட்டின் மூலம் திருமந்திர அர்த்தத்தை அருளி செய்ததாகவும் சொல்வர்; ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்பது பிரார்த்தனையை சொல்கிறது. தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து, எழில் கொள் சோதி என்பது நாராயண அர்த்தத்தை சொல்வது.
3.3.2எந்தை தந்தை தந்தை தந்தைக்கும், முந்தை, வானவர் வானவர் கோனொடும், சிந்துபூ மகிழும் திரு வேங்கடத்து, அந்தம் இல் புகழ்க் காரெழில் அண்ணலே. (3.3.2)
நித்தியசூரிகள் சேனை முதலியாரோடும் (விஷ்வக்ஸேனர்) வந்து, வாசனை வீசுகின்ற பூக்கள் தூவி, வணங்குகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான், முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல், ஆழ்வார் குலத்திற்கு முதல்வன் ஆவான் என்று சொல்கிறார்.
பரமபதத்திற்கு சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதுதான், பொதுவாக எல்லோரும் செய்வது, விரும்புவது; அப்படியிருக்க, ஆழ்வார் மட்டும், இங்கே திருமலையிலே தொண்டு செய்ய விரும்புவது ஏன் என்று எம்பெருமான் நினைக்க, திருநாட்டிலுள்ள நித்யசூரிகளும் முக்தர்களும் கூட இத்திருமலையிலே வந்து தொண்டு செய்யும் போது, தான் இங்கே தொண்டு செய்வதில் என்ன குறை என்கிறார்.
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று சொல்லி, எம்பெருமானின் தலைமையின் மேன்மையை, பர ஸ்வரூபத்தை மேன்மையை சொல்கிறார். (பரமாத்மாவின் பெருமை / மேன்மை). இதே ஆழ்வார் தன்னுடைய நிலையை சொல்லும்போது, (ஜீவாத்மாவின் அடிமை செய்யும் தன்மை-சேஷி) அடியார், அடியார்தம் அடியார், அடியார் தமக்கடியார் அடியார், தம் மடியார் அடியோங்களே” (திருவாய்மொழி 3.7.10) என்று தன்னை மேலும் மேலும் கீழே இறங்கிக் கொண்டு சொல்வதும் குறிப்பிடத்தக்கது.
பரமபதத்தில் தங்களுக்கு அருகில் இருக்கும் எம்பெருமான், இங்கு திருமலையில் கானமும், வானரமும் என்று எல்லோருக்கும் முகம் கொடுத்து தன்னுடைய சௌசீல்யத்தை காட்டிக்கொண்டு இருப்பதை அனுபவிக்க விரும்பி, விஷ்வக்சேனர் முதல் எல்லா நித்யஸூரிகளும் விண்ணுலகில் இருந்து திவ்ய புஷ்பங்களை எடுத்துக்கொண்டு, வரும்போது, அவனின் சௌசீல்யத்தில் உருகி, அவை அவர்களின் கைகளில் இருந்து அவசரமாக சிந்தினாலும், இந்த புண்ணிய ஸ்தலத்தின் ஸ்வபாவத்தால் புஷ்பங்களின் வாசமும் மலர்ச்சியும் சிறிதும் குறையவில்லை என்கிறார். இங்குள்ளார் அங்கு சென்று அவனது மேன்மையை அனுபவிப்பதைப்போல், அங்குள்ளார் இங்கு வந்து இவனின் நீர்மையை அனுபவிப்பதை சொல்கிறார்.
பரமபதத்தில் புகழுக்கு அந்தம் உண்டு என்பது போலேயும் இங்கு திருமலையில் புகழுக்கு அந்தம் இல்லை என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு ஆளி, கோளரி, பொன்மணி, முத்து. பூ மரம் ஆனவற்றிக்கு தன்னை கொடுத்துக்கொண்டு இருப்பதால், இங்கு அவனுக்கு புகழ் ஸாஸ்வதமாக இருக்கும் என்கிறார்.
3.3.3அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன், செங்கனி வாய்க் கரு மாணிக்கம்,
தெண்ணிறைச் சுனை நீர்த் திரு வேங்கடத்து, எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன், அழகினைக் கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களை உடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையும் உடையவன், தெளிந்த, நிறைந்த தண்ணீரை உடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவிடமுடியாத இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகளுக்குத் தலைவன் ஆவன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருமலையில் தொண்டு செய்ய வேணும் என்று ஆசைப்படுகிறீர்கள், அது கிட்டுமோ என்று கேட்க, ஆழ்வார், ஆசையற்றவர்களான நித்யஸூரிகளுக்கு இங்கே அருள் புரியும் எம்பெருமான், ஆசையுடன் இருக்கும் தனக்கும் அருள் புரிவார் என்று சொல்லும் பாடல்.
அண்ணல் என்றதால், குறிஞ்சி நிலத்தின் தலைவன், சர்வஸ்வாமி என்று கூறுகிறார். மாயன் என்றதால், சௌந்தர்ய சீல குணங்களால் ஆச்சரியமானவன், என்கிறார். இந்த கண் அழகு உடையவனுக்கு ஒப்பு ஒன்றும் வேண்டாம் என்பதுபோல் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் என்று சொல்லி, முதல் சந்திப்பில் தப்ப முடியாமல் இருக்கும் கண் அழகு சொல்லப்பட்டது. அதில் இருந்து தப்பினாலும், தப்ப முடியாதபடி இருக்கும் வாய் முறுவல், என்று செங்கனி வாய் சொல்லப்பட்டது. மொத்த வடிவழகும் சேர்ந்து கரு மாணிக்கம் என்று சொன்னார்.
கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, எம்பெருமானின் குணங்களும் அளவு இல்லாமல், எண்ண முடியாத கல்யாண குணங்களை இயல்பலாகவே கொண்டதால், எண்ணில் தொல்புகழ் ஈசன் என்கிறார்.
3.3.4ஈசன் வானவர்க்கு என்பவன் என்றால், அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு ? நீசனேன் நிறைவொன்றும் இலேன், என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
தாழ்ந்தவனாய், குணம் சிறிதுமில்லாதவனான தான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று சொன்னால், அது திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் புகழாகுமோ?ஆகாது, திருமலையில் வந்து நின்று சுலபனாய் எல்லோருக்கும் அருள் பாலிக்கின்ற வைகுந்தநாதனுக்கு ஏற்றம் என்று பொருள். ஆழ்வார் தன்னிடத்தில் அன்பை வைத்த, மேலான சுடரை உடைய ஒளி உருவனான எம்பெருமான் என்கிறார்.
எண்ணில் தொல் புகழ் வானவரீசன்” என்று கீழ்ப்பாட்டில் சொன்னது, நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தான் என்பதை ஒரு ஏற்றமாக அருளிச் செய்தார்; நீசத்தன்மையும் நிறைவு ஆகாத தன்மையும் ஒன்று சேர்ந்து ஆழ்வார் என்று ஆனது என்கிறார். இந்த பாடலில் மிகவும் நீசனான தன் பக்கலிலே பாசம் வைத்திருப்பது பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறார்.  மிகவும் நீசனான, தன்னிடத்தில் பாசம் வைத்து அதனால் பெருமை உடைய எம்பெருமானை, வானவர் ஈசன் என்பது என்ன பெருமை என்றார்.
நித்யஸூரிகளிடம் உள்ள அன்பு, முதல் மனைவியிடம் காட்டும் கடமை போன்றது என்றும், ஆழ்வார் பக்கம் காட்டுவது ஆசையின் காரணமாக என்றும் உரையாசிரியர் கூறுகிறார். என்கண்பாசம்வைத்த என்பதற்கு எம்பெருமான் விஷயமான பாசத்தை ஆழ்வார் பக்கலிலே உண்டாக்கின என்று இன்னொரு வகையாகவும் பொருள் சொல்லலாம்.
3.3.5சோதி ஆகி,எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவு ஆகுமோ,   வேதியர் முழு வேதத்து அமுதத்தைத் தீதுஇல் சீர்த் திரு வேங்கடத் தானையே?
நீசனான தனக்கு, தன்னைத் தந்தவனுக்கு, நித்யஸூரி நிர்வாஹம் ஒரு ஏற்றமோ என்று கீழ்ப்பாட்டில் கேட்ட ஆழ்வார் இந்த பாட்டில், தன்னிலும் தாழ்ந்தவர்களைத் தேடிக் கிடைக்காத எம்பெருமானுக்கு, ஆழ்வாருக்கு தன்னைத் தந்தான் என்று சொல்வது தான் ஓர் ஏற்றமோ என்கிறார்.
வேதங்களை அறிந்த அந்தணர்களுடைய, எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற, அமிர்தம் போன்ற இனிமை உடையவனை, குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற பேரொளி உருவனாகி, எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற, வடிவை உடையவன் என்று கூறினால் அது பெருமையாகுமோ? ஆகாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
தனக்கு மேம்பட்ட, மேல் ஒன்று இல்லாத பேரொளி உருவமான திருமேனியை உடைய எம்பெருமான் என்பதை சோதி என்கிறார்.
ஆதி மூர்த்தி என்பதால் எல்லா உலகங்களையும் படைத்தவன் (ஜகத் காரண ஸ்ருஷ்டி) என்பதும் எல்லா உலகுந் தொழும்’  என்பதால் உலகங்களுக்கு எல்லாம் முதல் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்பதும் விளங்கும். அதோடு, இந்த ஒரு குணத்தை சொல்வதால் எம்பெருமானின் எல்லா கல்யாண குணங்களையும் சொல்வது போல் என்று நம் பெரியவர்கள் சொல்வர்.
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை என்றது குற்றமற்ற குணங்களை உடையவன் என்றும் குற்றங்களைக் குணமாகக் கொண்டு அங்கீகரிப்பவன் என்றும் பொருள்படும். வேதங்களை நன்றாக படித்து எம்பெருமானை அறிந்துகொள்வதற்கு ஈடாக திருமலையில் எளிமையாக எம்பெருமான் காட்சி அளிக்கிறான் என்பதும் தெரிய வரும்.  
ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ ஏற்றம் என்று கண்டோம். அதேபோல், எல்லா உலகுந்தொழும்’ என்பதைக் காட்டிலும் தீதுஇல் சீர்த் திரு வேங்கடத் தானையே என்பது ஏற்றம்.
3.3.6வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை, அது சுமந்தார்க்கட்கே
திருவேங்கடத்தில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானுக்கு வணக்கம் என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியம்; அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக் கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்து விடும்; அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருமந்திரத்தின் பொருளை முதல் பாடலில் (ஒழிவில் காலம் எல்லாம்) அருளிச்செய்தார்; அங்கு அருளிச் செய்யாத ‘நம:’ என்ற பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். எம்பெருமானுக்கு தொண்டு செய்ய அடியவர்கள் விரும்பும்போது, அவர்களின் பாவங்கள் அவர்களை தொண்டு செய்ய விடாமல் தடுக்குமே என்று கேட்டதற்கு ஆழ்வார், அடியவர்கள் தொண்டு செய்ய விரும்ப தொடங்கும் போதே அந்த பாவங்கள் தானாகவே எரிக்கப்படும் என்கிறார்.
பக்தர்களின் வாக்கில் நம, என்கிற ஒரு சிறிய சொல் வந்தாலும் இதை மலையாக எம்பெருமான் நினைப்பான் என்பது தெளிவாகும். எல்லோரும் பிறக்கும் போது மூன்று கடன்களுடன் வருவார்கள்; அவைகளை, பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பித்ரு கடனையும் தீர்க்கலாம் என்று வேதம் சொல்கிறது.
மெய் மேல் வினை என்பது, உடம்பினால் (சரீர சம்பந்தத்தால்) வருகிற வினைகளை சொல்கிறது.
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார், என்று சொல்லும்போது, அதற்கான விரோதிகளை பிரார்த்தித்து போக்க வேண்டாம் என்றும் சொல்கிறார்.
வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை, அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்று அமைத்து பொருள் கொள்ளலாம். (திருவேங்கடவனுக்கு தொண்டு செய்ய விரும்பும் அடியவர்களின், சரணாகதிக்கு முன் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை எரித்தும், சரணாகதிக்குப் பின் தெரியாமல் செய்த பாவங்களையும் ஒதுக்கி தள்ளியும், நம்மிடம் இருந்து விலக்கி விடுவான் என்பது உண்மை (மெய்) என்ற சாஸ்திர வார்த்தைகளை இந்த பாடல் சொல்கிறது என்று இராமானுஜர் மற்றும் ஆளவந்தாரின் விளக்கமாக கூறுவது உண்டு).
3.3.7சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு, அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு, சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.
நித்தியசூரிகள், விஷ்வக்சேனருடன் அல்லது ப்ரம்மா தேவர்களுடன், சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப் புகையையும் தாங்கிக்கொண்டு வந்து வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாகவுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய பெரிய மலையாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருவேங்கடமுடையானை பின்பற்றக்கூட வேண்டியதில்லை, திருமலையை வணங்கினாலே போதும் என்கிறார்.
கைங்கரியம் என்பது, பகவானை அடைதலுக்குப் பலனாக வருவதால், முதல் பாட்டில் சொன்ன கைங்கர்யத்தையும், இப்பொழுது சொல்கின்ற வீடாகிய மோக்ஷத்தையும் திருவேங்கடம் தரும் என்பது பொருத்தமே.
வானவர் வானவர்கோனொடும் மாமலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு அமர்ந்து நமன்று எழும் திருவேங்கடம் தடம் குன்றம் நங்கட்குச் சமன்கொள்வீடு தரும்’ என்று பாடலை அர்த்தம் கொள்ளலாம்.
மா என்ற சிறப்பு, மலருக்கு மட்டும் அல்லாமல் நீர், தீபம், சுடர் என்று கொள்ளவேண்டும்.
பக்தியின் கனத்தாலே சுமந்து என்று சொல்கிறார்.
ப்ரம்மா தேவர்களுடன் வந்து என்று சொல்லும் போது, அவர்கள் ஒரு பலனை எதிர்பார்த்தே எம்பெருமானிடம் வருவார்களே என்றாலும், இந்த திருப்பதி, அவர்களையும் பலன் ஒன்றும் எதிர்பாராமல் வணங்கும்படி செய்யும் என்று அமர்ந்து என்ற பதத்திற்கு விளக்கம் சொல்வர்.
சங்கரர் அத்வைதத்தில் மோக்ஷம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் கலந்து விடும் என்பது. ஆனால் இராமானுஜர் விஸிஷ்ட்டாத்வைதத்தில், மோக்ஷம் என்பது ஜீவாத்மா பரமபதம் சென்று பரமாத்மாவிடம் இருந்து எட்டு உயரிய குணங்களில் நிறைவு பெற்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து எம்பெருமானை அனுபவித்துக் கொண்டு இருக்கும் என்பதை ஆழ்வார் இந்த பாட்டில், சமன் கொள் வீடு என்கிறார்.
அந்த எட்டு குணங்கள், பாவங்கள் தீண்டாது, பசி இருக்காது, தாகம் இருக்காது, துன்பம் அண்டாது, மூப்பு வராது, மரணம் கிடையாது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற பட்டவையாக இருக்கும், நினைத்த எதனையும் செய்து முடிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.
திருமலை தனக்கு சமமான குணத்தை அடியவர்க்குக்கு பெற்று தரும் என்பது இன்னொரு அர்த்தம். திருமலை எப்படி எம்பெருமானுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து வருகிறதோ, அதே போல் அடியவர்களை எம்பெருமானுக்கு தொண்டு செய்பவர்களாக செய்து விடும் என்றும் பொருள் கூறுவர்.
3.3.8குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன் சென்று சேர் திரு வேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
கோவர்த்தனம் என்ற மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையில் இருந்து பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; முன்பு உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலையை வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எம்பெருமானுக்கு விருப்பமான திருமலையே தங்களுக்கும் விருப்பம்; தங்களுக்கு ஒரு பயனையும் தராவிட்டாலும் திருமலையே தாங்கள் அடையவேண்டியது, திருவேங்கடமுடையான்தான் பலனை தர வேண்டும் என்பதிலை, திருமலையே பலனைத் தரும், என்பதை ஆழ்வார் இந்த பாடலில் அறுதியிட்டு சொல்கிறார். ஒரு ஊரை காப்பாற்ற கிருஷ்ணர் குன்றத்தை கையில் எடுத்தார். எல்லா உலகங்களையும் காக்க த்ரிவிக்ரமனாக அவதாரம் எடுத்து தாவி அளந்தார்.இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று சேர்ந்த இடம் திருமலையாகும். அந்த திருமலையை தொழுதால் நம் பாவங்கள் நீங்கும் என்கிறார்.
3.3.9ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன், நாள் மலராம் அடித் தாமரை வாயுளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே.
நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்தில் இருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளின் பெருமைகளை வாயினால் சொல்பவர்களுக்கும் மனத்தினால் நினைப்பவர்களுக்கும், முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
முன் இரண்டு பாடல்களில், நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையே தரும் என்றார்; இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலை முழுவதும் வேண்டுமோ? திருமலையின் ஒரு பகுதி போதாதோ என்று இந்த பாசுரத்தில் கேட்கிறார். ஆழ்வார் சொன்ன ஒரு பகுதி என்றது திருவேங்கடமுடையானை என்பது சுவையான விளக்கம். திருமங்கை ஆழ்வார் இதனையே ‘வட மா மலை உச்சியை’ என்பார்.
ஓயும் மூப்பு என்பதை, ஓய்வை விளைவிக்கின்ற மூப்பு என்று மூப்புக்கு அடைமொழியாக விளக்கம் செய்வார்.
பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அவன் திருவடிகளை காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும் என்று பொருள் கொள்ளவேண்டும்.
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு என்று சொன்னது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சொன்னதாகவும், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்று சொல்வதாகவும் நினைவில் கொள்ளலாம்.
வாயுள் வைக்கை என்பது ‘ஓவாது உரைக்கும் உரை’ என்கிறபடி உரைத்தல் என்றும் மனத்துள் வைக்கை என்பது மறவாதிருத்தல் என்றும் ஆகும்.
3.3.10வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று, எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.
வானவர் வானவர் கோனொடும்’ என்றதனால் நித்தியசூரிகளுக்கும், ‘பரன் சென்று சேர் திருவேங்கடம்’ என்றதனால் சர்வேசுவரனுக்கும் உகந்த தேசமாக உள்ளதால், எல்லோருக்கும் உகந்த தேசமான திருமலையை எல்லோரும் சென்று அடையுங்கள் என்கிறார்.
ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளி இருக்கின்ற திருவேங்கடத்தினது நெருங்கின சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய நீர்நிலைகளையும் உடைய திருத்தாள்வரையை, ஆயுளின் முடிவில் தளர்ச்சி அடைவதற்கு முன் சென்று சேருங்கள் என்று ஆழ்வார் கூறும் பாடல். திருதாள்வரை என்பது மலையடிவாரம்.
சர்வேஸ்வரன் இந்த ஆத்மாவிற்கு உடலை கொடுத்தது நரகம் செல்வதற்கு காரணமாக உள்ள இடங்களை தேடி செல்வதற்கு அல்ல என்றும் திருமலை செல்வதற்கு என்றும் ஆழ்வார் இந்த பாடலில் சொல்கிறார். சுமித்திரை, இராமன் காட்டுக்கு செல்லும் போது, லக்ஷ்மணனிடம், உன்னை பெற்றது எப்பொழுதும் எம்பெருமானுக்கு சேவை செய்வதற்கு என்றும், ஸ்ரீராமன் காட்டில் நடந்து செல்லும் போது அவன் நடை அழகில் மயங்கி தளர்ந்து விடாதே என்றும் சொல்வதை இங்கே எடுத்து, நம் போன்ற ஆத்மாக்கள் பிறந்தது திருமலையை அடையவே என்று கூறுகிறார்.
பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்று சொல்வதனால், திருமலை தம்மைத் திருவனந்தாழ்வானாக எடுத்துக் கொண்டதாக சொல்லலாம்.

3.3.11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழிற் குருகூர்ச் சட கோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.

திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், பூமியில் உள்ளவர்கள் எல்லாரும் புகழும்படி பேற்றினை அடைந்து வாழ்வார்கள் என்பது பொழிப்புரை.
இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக் கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்யப் பெறுவர் என்கிறார்.  தாள் பரப்பி மண் தாவிய ஈசனை என்று சொன்னது, கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற் போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்து கொண்ட சர்வேசுவரன் என்று அர்த்தம்.
கேழில் என்று சொன்னது ஆத்மாவினுடைய ஸ்வரூபத்திற்கு தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பதிகம் ஆகையால் ஒப்பு இல்லாத பாடல்கள் என்றார்.
 • முதற்பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளையும் செய்யவேணும் என்று விரும்பினார்;
 • இரண்டாம் பாட்டில், மேல் உலகத்தில் உள்ளவர்களும் இங்கே வந்து தொண்டு செய்வதால் நாமும் இங்கே தொண்டு செய்யலாம் என்றார்.
 • மூன்றாம் பாட்டில், ஆசையற்றவர்களான நித்யஸூரிகளுக்கு இங்கே அருள் புரியும் எம்பெருமான், ஆசையுடன் இருக்கும் தனக்கும் அருள் புரிவார் என்கிறார்.
 • நான்காம் பாட்டில், ‘எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு, நித்யஸூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, என்றார்;
 • ஐந்தாம் பாட்டில், ‘தன்னைவிட தாழ்வானவரை தேடிக் கிடைக்காமல், நிற்கிறவனுக்கு, தனக்குத் அவனைத் தந்தான் என்றது ஒரு ஏற்றமோ என்றார்;
 • ஆறாம் பாட்டில், ‘விரோதிகள், தானே போய்விடும் ’ என்றார்
 • ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையே நமக்குத் தருவர்,’ என்றார்;
 • எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தரும்,’ என்றார்;
 • ஒன்பதாம் பாட்டில், நமக்குப் பேற்றினைத் தருகைக்கு ‘திருமலை முழுவதும் வேண்டுமோ? அவருடைய சம்பந்தம் உடையவர் இருந்தால் போதும்,’ என்றார்;
 • பத்தாம் பாட்டில், ‘எம்பெருமானுக்கு உகந்த நிலம், அதுவே அடியவர்களுக்கும் உகந்த நிலம், எல்லாரும் திருமலையை அடையுங்கள்’, என்றார்;
 • முடிவில், இந்த பாடல்களை படித்தவர்கள், எல்லாரும் புகழும்படி பேற்றினை அடைந்து வாழ்வார்கள் சொல்லி முடித்தார்.

மீண்டும் ஆழ்வாரின் திருவேங்கடமுடையானின் இன்னொரு அனுபவத்தில் சந்திக்கலாம். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d