012 திருக்குடந்தை / Thirukudanthai

கோமளவல்லித்தாயார் ஸமேத ஆராவமுதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்குடந்தை / பாஸ்கர க்ஷேத்திரம்
மூலவர்சாரங்கபாணி / ஆராவமுதன் / அபர்யாப்தாம்ருதன் / உத்தானஸாயி / ஆராவமுதாழ்வான்
உத்ஸவர் ஆராவமுதன்
தாயார்கோமளவல்லி / படிதாண்டாப்பத்தினி
திருக்கோலம்கிடந்த
திசைகிழக்கு
பாசுரங்கள்51
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 25
நம்மாழ்வார் 11
திருமழிசையாழ்வார் 7
பெரியாழ்வார் 3
பூதத்தாழ்வார் 2
பேய் ஆழ்வார் 2
ஆண்டாள் 1

ஸ்தல புராணம்

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்க சென்றார். இதை திருமால் தடுக்க வில்லை. “உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்கள் என கோபப்பட்ட லட்சுமி கணவரைப் பிரிந்தார். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், ‘அம்மா, கோபிக்க வேண்டாம், ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்விகமானவர் யார் என்று அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர், அந்த சோதனையின் விளைவே உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும் என்றார். லட்சுமி தாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசீர்வதித்தார். தன் சபதப்படி திருமாலை மணம் புரிவதாகவும், பூலோகத்தில், பிருகுவின் மகளாக பிறக்க போவதாகவுஜம், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேம புஷ்கரணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு, வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்து கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்ற வில்லை ஏந்தி வந்ததால், ‘சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் .என்கிறார்கள்.

உத்தான சயன பெருமாள் :

திருஆராவமுதன்

பெருமாள் பள்ளி கொண்டுஇருக்கும் ஸ்தலங்களில் பலவித சயனங்களில் காட்சி தருவார். இங்கு, ‘உத்தான சயன ‘ பள்ளி கொண்டு இருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார், ஸ்வாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர் ‘நடந்த கால்கள் நொந்தவோ, ‘ என்றா பள்ளி கொண்டு இருக்கிறாய் என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளை கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், ‘அப்படியே காட்சி கொடு’ என்றார். ஸ்வாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டு இராமல், சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.

ஆசார்யன் மங்களாசாசனம் thanks to friends from whatsapp group for sharing this image

அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம்

திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் இவை இரண்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயிலே அத (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாசன் செய்யப்பட்டு இருக்கிறது. பேய் ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாதாள ஸ்ரீனிவாசன் மேட்டு ஸ்ரீனிவாசன்

திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கீழ் ஒளிந்து கொண்டார். திருமாலை காணாத தாயார் கலக்கம் அடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், பாதாள சீனிவாசன் சன்னதி என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்கு பிறகு இவர் மேடான இடத்தில, மெட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

Google Map

திருக்குடந்தை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்குடந்தை பற்றி சொல்வது

நம் வலைப்பதிவில் குடந்தை பற்றி

Thanks to friends from whatsapp group for sharing these images

திவ்யப்ரபந்தம் தந்த திருமால்

புகைப்படம் அனுப்பி உதவிய whatsapp குரூப் நண்பர்களுக்கு நன்றி

பெருமாளை குறித்து பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த பாடல்கள் நாலாயிர திவ்யப்ரபந்தமாக தொகுக்க பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவர். ஆம், நாதமுனி என்பவர் சார்ங்கபாணியை வணங்க வந்தார். அப்பொழுது சில பக்தர்கள் ஸ்வாமியின் பெருமையை ‘ஓராயிரத்தில் இப்பத்தும் ‘ என்று சொல்லி பாடினார். இன்னும் ஆயிரம் உள்ளதா’ என்று வியந்து மீதி பாடல்களையும் பாடும் படி கேட்டார். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை.

அப்பொழுது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி, தூத்துக்குடி மாவட்டம்) சென்று நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்கும் என்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்கும் என்று வந்த இடத்தில, நாலாயிரம் பாடல்கள் கிடைத்தன. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யபிரபந்தம் ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சார்ங்கபாணிக்கு “திராவிட ஸ்ருதி தர்சகாய நம” என்று ஒரு நாமாவளி. அதாவது “திராவிட வேதம் காட்டிய பெருமாளே போற்றி” என்பதாகும்.

சொர்க்கவாசல் இல்லாது ஏன் ?

திவ்யதேசங்களில், பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இததலத்து சுவாமி நேரே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும் இங்குள்ள உத்தராயண, தெட்சிணாயன வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்தராயண வாசல் தாய் முதல் ஆனி வரையும் தெட்சிணாயன வாசல் ஆடி முதல் மார்கழி வரையும் ஸ்வாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் திறந்து இருக்கும்.

உபய பிரதான திவ்யதேசம்

திவ்யதேசம் தெரியும், அதென்ன, உபயப்ரதான திவ்யதேசம் என்கிறீர்களா? இதற்கான விளக்கம் இது தான். திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றுஇருப்பார். அவருக்கே பூஜையின் போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும், ஆனால், இந்த கோவில் உத்சவர்க்கு மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகின்றன. அதாவது உத்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார், எனவே, இத்தலம், உபய பிரதான திவ்யதேசம் எனப்படுகிறது.

வில்லுடன் பெருமாள்

பெருமாள் சங்கு சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்து இருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உத்சவர் இருவருமே சார்ங்கம் வைத்து இருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர் சாரங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சாரங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால் மஹாமகத்திற்கு வாரும் நதி தேவதைகளும் தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதை காணலாம்.

மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால் அவளை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே இங்கே தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமாக இருந்தாலும், இத்தலத்தை பொறுத்தவரை தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்ய பட்டு இருக்கிறது. நடை திறக்கும் போது சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை இக்கோயிலில் கோமளவல்லி தாயார் சந்நதியில் நடத்தப்பட்ட பிறகே சுவாமி சன்னதியில் நடக்கிறது.

பக்தனுக்கு ஸ்ரார்த்தம் செய்யும் பரந்தாமன்

லட்சுமி நாராயணஸ்வாமி என்னும் பக்தர் சார்ங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டுஇருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தை இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார். ஸ்ரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால் நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால் தனக்கு சேவை செய்த தன பக்தருக்கு தானே மகனாக இருந்து இறுதி சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோவிலை திறந்து பார்த்த போது பெருமாள் ஈரவேட்டியுடன் மாற்றிய பூணூலுடன் தர்ப்பைகளுடன் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சி அளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்காக ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால் பக்தர்கள் பார்க்க முடியாது.

கோவில் பற்றி

மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி, மற்றும் மஹாலக்ஷ்மியுடன் பெருமாள், அருள் பாலிக்கிறார். நாபியில் ப்ரஹ்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். ஸ்வாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டு உள்ளன.

சிருஷ்டிக்கு வேண்டிய மூலப்பொருள்கள் உள்ள (அமிர்த கும்பம்) இந்த ஊரில் தங்கி விட்டதால் திருக்குடந்தை என்ற பெயர் என்று சொல்வதுண்டு.

தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் 236 அடியும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் 165 அடியும், கொண்டவை. மூன்றாவது உயரமான கோபுரம் கும்பகோணம், சாரங்கபாணி கோவில் கோபுரம் ஆகும். 11 நிலைகளை உடைய இது 150 அடி உயரம் கொண்டது.

பெருமாள் சன்னதியே கருங்கல்லான தேர் சக்கரங்களுடன் காட்சி அளிக்கின்றது. ராமஸ்வாமி கோவிலும், சக்ரபாணி கோவில்களும் அருகே உள்ளன. சக்ரபாணியின் தமயனாராக கருதப்படும் சார்ங்கபாணியுடன் சேர்ந்து பல உற்சவங்கள் நடைபெறுகின்றன.

ராமஸ்வாமி கோவிலில், பரத, சத்ருக்குன, லக்ஷ்மணன் சீதையுடன் என்று சக்ரவர்த்தி திருமகனை பட்டாபிஷேக கோலத்தில் காணலாம். (இராமர் சீதை ஒரே சிம்மாசனத்தில் காட்சி). ஆஞ்சநேயர் வீணா வாசித்துக்கொண்டு இராமாயண புத்தகத்துடன் பாராயணம் செய்யும் காட்சியாக சேவை சாதிக்கிறார். இந்த கோவிலின் சுவர்களில், ராமாயணம் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளது. பட்டாபிஷேக இராமர் ஆனதால், லக்ஷ்மணன், இராமரின் வில்லுடன் சேர்ந்து இரண்டு வில் கொண்டு சித்திரத்தில் காணலாம்.

திருத்தேர் பற்றி

குடந்தை திருத்தேர்

தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு தேரில் சார்ங்கபாணி வந்தார். சுவாமி சன்னதி, தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இரு புறங்களிலும் உத்தராயண தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும் சுற்று புற சுவர்களில், அழகிய சிலைகளும் வடிக்க பட்டு உள்ளன. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கை ஆழ்வார் பாடி உள்ளார். இந்த பாடல் ரதபந்தம் என்று அழைக்கப்படுகிறது

இங்கு சித்திரை தேர் விசேஷமானது. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும். இத்தேரை திருமங்கையாழ்வாரே இப்பெருமானுக்கு அர்ப்பணித்தார். இத்தேரினையே மங்களாசாசனம் செய்வது போல் திருவெழு கூற்றிருக்கை
என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார்.

ஆழ்வார்கள்

108 திவ்யதேசங்களில், திருஅரங்கம், திருவேங்கடம் திவ்யதேசங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான ஆழ்வார்களால் பாடப்பட்ட ஸ்தலம்.

திருமழிசையாழ்வார்

ஆழ்வார் குடந்தை ஆராவமுதனுக்கு மங்களாசாசனம் செய்ய ஆரம்பித்தார்.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

குடந்தை கிடந்த பெருமாளையே, ஆழ்வார், தான் பெரியவன், உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன், நீ படுத்துக்கொண்டு உள்ளாயே, ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே ” என்று கூறுகிறார்.   திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின், “எழுந்திருந்து பேசு ” என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க, பாதி எழ தொடங்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று வாழ்த்தி, இனி எழுந்திருக்கவேண்டாம் என்ற அர்த்தத்தில் பாடினார். அந்தத் திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) (உத்தான சயனம்) இங்கு எம்பெருமான் அருள் பாலிக்கிறான்.

ஆழ்வாரும் ஆராவமுதனும் பரஸ்பரம் அன்பு பாராட்டி தங்கள் பெயரின் கடைசி பகுதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.   அதாவது ஆராவமுத பிரான், திருமழிசையாழ்வார் என்று இருந்த தங்கள் பெயர்களை ஆராவமுத ஆழ்வார் என்றும் திருமழிசை பிரான் என்றும் மாற்றிக்கொண்டனர்.   பிரான் என்றால் அளப்பரிய உதவி செய்பவன் என்று பொருள்.

திருமங்கையாழ்வார்

இந்த ஆழ்வார் ஆறு பிரபந்தங்கள் பாடி உள்ளார். எல்லா ப்ரபந்தங்களிலும் இந்த ஒரு திவ்யதேசம் மட்டுமே இடம் பெற்று, தனிச்சிறப்பு பெற்றது. வேறு ஒரு திவ்ய தேசத்திருக்கும் இப்படி ஒரு பெருமை கிடைக்கவில்லை.

ஆழ்வார் பாடிய முதல் திவ்யதேசம், திருக்குடந்தை ஆகும். பெரிய திருமொழி என்ற அவருடைய முதல் பிரபந்தத்தில் இரண்டாவது பாசுரத்திலேயே சூழ்புனல் குடந்தையை தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயண என்னும் நாமம் என்று பாடினார். இவர் கடைசியாக பாடிய திவ்யதேசமும், திருகுடந்தையே. தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட்டேனே என்று (29) திருநெடுந்தாண்டகம் என்ற இறுதி பிரபந்தத்தில் இறுதி திவ்யதேசமாக குடந்தையை குறிப்பிட்டு உள்ளார்.

திருகுறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறியதிருமடல், திருவெழுகூற்றுஇருக்கை என்ற மற்ற நான்கு ப்ரபந்தங்களிலும் திருக்குடந்தை இடம் பெற்று உள்ளது. இதில் திருவெழுகூற்றுஇருக்கை திருக்குடந்தை திவ்யதேசத்திருக்காக மட்டுமே ஆகும்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவாய்மொழியில, ஐந்து முறை மோட்ஷம்,  வேண்டி கேட்டு உள்ளார். அதில் திருகுடந்தையும் ஒன்று. திருக்குடந்தையில் ஆராவமுதப் பெருமாளிடம்  உன் சரணம் தந்து என் சன்மம் களைவாயே  (5-8-7) என்ற பாசுரத்தின் மூலம் இரண்டாவது  முறை சரணாகதி வேண்டுகிறார்.

மேல் உலகத்தில் உள்ள எல்லோரும், “திருக்குடந்தை எம்பெருமானிடத்திலே   பல குலங்களாக அடிமைப்பட்டவர்கள்” (குடந்தை என் கோவலன் குடி குடியார்க்கே)(திருவாய்மொழி 10.9.7) என்று சொல்லி ஆழ்வாரை வரவேற்றார்கள்.  இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட  (பரமபதத்திலும்)  குடந்தை பெருமாளின் நினைவும் அனுபவமும் மறக்க முடியாதபடி இருந்தது என்று தெரிய வரும். நம்மாழ்வாரும் இறுதியாக பாடிய திவ்யதேசம் திருகுடந்தையே ஆகும்.

திவ்யதேசம் 12 திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்திரம் – கும்பகோணம்)
பெரியாழ்வார் 173, 177, 188
ஆண்டாள் 628
திருமழிசையாழ்வார் 807-812, 2417
திருமங்கையாழ்வார் 949, 954, 991, 1078, 1202, 1205, 1394, 1526, 1538,
1570, 1606, 1732, 1759, 1853, 1949, 2010, 2037,
2045, 2068, 2070, 2080, 2672, 2673(73) 2674 (114)
பூதத்தாழ்வார் 2251, 2278
பேய் ஆழ்வார் 2311, 2343
நம்மாழ்வார் 3194-3204
மொத்த பாசுரங்கள் 51

பெரியாழ்வார்

173.

கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநில் அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா

177.

ஆலத் திலையான் அரவி னணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த கோலப் பிரானுக்குஓர் கோல்கொண்டுவா குடந்தைக் கிடந்தார்க்குஓர் கோல்கொண்டுவா

188.

குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய் குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.

ஆண்டாள்

628.

பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை, வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே, கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே

திருமழிசையாழ்வார்

807.

இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக, கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே, விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார், வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

808

சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன், அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான். கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர். பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.

809

மரங்கெட நடந்தடர்த்து மத்தயானை மத்தகத்து, உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா, துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாதவேதியர், வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

810

சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில், கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா, காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை, காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.

811

செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய், விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று, எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ், செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

812

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய், இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம், கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள், கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

2417

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத், தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத் தனா வான்.

திருமங்கையாழ்வார்

949

ஆவியே அமுதே எனநினைந்துருகி அவரவர்ப்பணைமுலைதுணையா, பாவியேனுணரா தெத்தனைபகலும் பழுதுபோயொழிந்தனநாள்கள், தூவிசேரன்னம் துணையொடும்புணரும் சூழ்புனற்குடந்தையேதொழுது, என், நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

954

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்இன்னதோர்த்தன்மையென்றுணரீர், கற்பகம்புலவர்களைகணென்றூலகில் கண்டவாதொண்டரைப்பாடும், சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையேதொழுமின், நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின் நாராயணாவென்னும்நாமம்.

991

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய, தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற, தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே.

1078

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க், கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ், நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர், நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

1202

வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப, நாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த, தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த. தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே.

1205

குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி! துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ!, முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே. வயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே.

1394

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள்,எண்ணில், பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான், தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே.

1526

பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும், சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை, கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை, நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.

1538

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை, இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரணழிய, கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால். நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே!

1570

வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச், சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன், கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்குட மாடிய கூத்தனை, எந்தை யையெந்தை தந்தைதம் மானை எம்பி ரானையெத் தால்மறக் கேனே?

1606

பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர், வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை, ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற, காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.

1732

வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, எந்தாய் போயறியாய் இதுவே யமையாதோ, கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த, மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே.

1759

தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த, சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி, பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி, ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா.

1853

வானை ஆரமு தம்தந்த வள்ளலை, தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய், ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம், கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே

1949

இங்கே போதுங்கொலோ, இனவேல்நெடுங் கண்களிப்ப, கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், இங்கே போதுங்கொலோ.

2010

அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் திரைததும்ப ஆவவென்று, தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தானருளி, உலகமேழும், உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட, கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர்ப்பாடி யாடீர்களே.

2037

மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட, கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப், பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப், பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?

2045

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும், பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன், தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை, பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே.

2068

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று, செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே, தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

2070

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும், அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி, பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

2080

அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை, குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து, வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும், நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.

2672

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

2673

காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர், காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை, சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர்

2674

மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை, பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை, தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை, மன்னிய தண்சேறை வள்ளலை, – மாமலர்மேல்   (114)

பூதத்தாழ்வார்

2251

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், தமருள்ளும் தண்பொருப்பு வேலை, – தமருள்ளும், மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே, ஏவல்ல எந்தைக் கிடம்.

2278

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ, செங்க ணெடுமால் திருமார்பா, – பொங்கு, படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய், குடமூக்கில் கோயிலாக் கொண்டு.

பேய் ஆழ்வார்

2311

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம், நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, – வாய்ந்த, மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி யாய இவை.

2343

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த, தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.

நம்மாழ்வார்

3418

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே, நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே, சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை, ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!

(3419)

எம்மா னே!என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே, எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே, செம்மா கமலம்  செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை, அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே.

(3420)

என்நான் செய்கேன்? யாரே களைகண்? என்னையென் செய்கின்றாய்? உன்னால் அல்லால் யாவ ராலும் ஒன்றும் குறைவேண்டேன், கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்ணாள், சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள் பிடித்தே செலக்காணே.

(3421)

செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!, உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!, நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான், அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.

(3422)

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன், தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன், செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!, தொழுவன் னேனை யுன்தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

(3423)

சூழ்கண் டாயென் தொல்லை வினையை அறுத்துன் அடி சேரும், ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்றிருப்பன்?, வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே! யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரியேறே!

(3424)

அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே, எரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே, பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே, தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.

(3425)

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன், வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா! தளரா வுடலம் என்ன தாவி சரிந்து போம்போது, இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து போத இசைநீயே.

(3426)

இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ் இருத்தும் அம்மானே! அசைவில் அமரர் தலைவர்! தலைவா ஆதி பெருமூர்த்தி! திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை, அசைவில் உலகம் பரவக் கிடந்தாய். காண வாராயே.

(3427)

வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

(3428)

உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான், கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன், குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும், மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.

RAMASWAMY TEMPLE: SRI RAMAN posing in Pattabishega Thirukkolam. Aanjaneyar in sitting posture with veena in one hand and Rama Nama Parayana Book on the other. Ramayana Pictorial story is painted in Pragaram

In this Divya Desam Thayaar is also known as Padi Thanda Pathini. Thiruveedhi ula is only
for Perumal. Thayar will not come out of the Temple.

CHAKRAPANI TEMPLE: CHAKRATHAZHVAR posing with Ashta Bujangal. Perumal is elder

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: