Please click here to view the English Version, thanks
இதுவரை
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும், “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
- ஒரு நல்ல குணமும் இல்லை என்று, 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும்,
- அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்றும் (போதெல்லாம் போது கொண்டு 26),
- இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்றும் (குரங்குகள் மலையை நூக்க 27),
- உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்றும்,
- ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஆழ்வார் அருளியதை பார்த்தோம்.
அடுத்த ஐந்து பாடல்களில்,
- தன்னிடம் எல்லாவிதமான கெட்ட குணங்களும் உண்டு என்பதை, தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், (மனத்திலோர் தூய்மையில்லை 30),
- தன்னால் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை என்று இந்த பிறவி வீணானதை நினைத்து (தவத்துளார் தம்மில் அல்லேன் 31) வருந்துவதும்,
- எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக அவன் முன் வந்து நின்றது (ஆர்த்து வண்டு அலம்பும் சோலை 32) தன்னுடைய மூடத்தனம் என்றும்,
- தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாகவும் (மெய் எல்லாம் போக விட்டு 33),
- எல்லோர் நெஞ்சத்திலும் இருந்து எல்லாவற்றையும் அறியும் அவன் முன், அடிமை செய்பவன் போல தான் போட்ட கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக (உள்ளத்தே உறையும் மாலை 34) நினைத்ததையும் பார்த்தோம்.
ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில்,
- முதலில், ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளியதையும்,
- இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் (மழைக்கன்று வரை(36) என்பதையும் பார்த்தோம்.
- இருந்தும், ஆழ்வாரின் மனம், ‘தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். அவனின் குளிர்ந்த பார்வை தானே நமக்கு வேண்டியது , ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று அவன் சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ (37) சொல்கிறார்.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள்போகவிட்டு (38)என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்ய த்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. உபாயாந்தரங்களில் பற்று அறுத்து, அதாவது பேற்றுக்கு எம்பெருமான் ஸாதனமே ஒழிய, நாம் செய்யும் காரியங்கள் ஸாதனமல்ல என்று அஹங்காரத்தை விடுத்து, உன் திருவாசலில் கிடக்கும் பரமபாகவதர்கள் விஷயத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கிறது என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
இனிவரும் ஆறு பாடல்களில் (39-44), ‘மேம்பொருள்‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறார்.
அரங்கனே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாத, நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்கின்றாய் என்று ‘அடிமையில் குடிமை‘ (39) பாசுரத்தில் சொல்கிறார்.
எத்தனை பாவங்கள் செய்தவரும், மேம்பொருளில் சொன்ன ஞானத்தை உணர்ந்தவர்கள், பாவங்களின் கர்ம பலம் அனுபவிக்க வேண்டாம் என்று அடுத்த பாடலான ‘திருமறு மார்வ‘ (40) பாசுரத்தில் சொல்கிறார். எம்பெருமானுடைய அன்புக்கு இவ்வளவு பாத்திரமானவர்கள், ஒரு போதும் பாவங்கள் செய்ய மாட்டார்கள் என்று அறிய வேண்டும்.
சென்ற இரண்டு பாசுரங்களில், ‘இவர்களுக்கு பிறப்பினாலோ, ஒழுக்கத்தினாலோ வரும் குறைகள் இல்லை’ என்றார். ‘ ‘வானுளார் அறியலாக’ (41) என்ற பாசுரத்தில், ‘குறை இல்லாமை மாத்திரம் அன்று ; இவர்களுடன் தொடர்பு உள்ள ஸம்ஸாரிகளும், அந்த தொடர்பே காரணமாக பரிசுத்தி அடையும்படியான சிறப்பும் உடையவர்கள் இவர்கள்’ என்கிறார்.
பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தவர்களுக்கு, பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் தாழ்வு உடையவர்களானாலும் ‘மேம்பொருள்’ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்கள், ஸர்வேஸ்வரனைப் போல பூஜிக்கத் தக்கவர்கள் என்றும், ஞானம் கொடுப்பது, கொள்வது போன்றவைகளை செய்யவேண்டும் என்றும் ‘பழுதிலா ஒழுகலாற்று’ (42)ல் சொல்கிறார்.
பிறப்பு ஒழுக்கம் முதலானவற்றால் வந்த பெருமைகளுக்கு மேலே ஞான பெருமையையும் உடைய ஜாதி அந்தணர்கள், பிறப்பாலும் ஒழுக்கத்தாலும் வந்த பெருமை இல்லாத ஞான பெருமை உடைய பாகவதர்களை, பகவத் பிரபாவத்தால் பிரசாதமாக, அவர்களுக்கு வந்த ஞான விஷயங்களை புத்தியில் கொள்ளாமல், கர்மத்தின் விளைவால் வந்த பிறப்பினால் வந்த தாழ்வை மட்டும் கருத்தில் கொண்டு, அவர்களை தாழ நினைத்தார்கள் ஆகில், அந்த நொடியே அவர்கள்தான் சண்டாளர் என்பது ‘அமரவோ அங்கம் ஆறும்’ (43) பாசுரம்.
மேம்பொருள் பாசுரத்தின் பின் சொன்ன பாசுரங்களில் பாகவதர்களுக்குச் சொன்ன பெருமைகள் பொருந்தியவையே என்பதை, பிரமன் முதலானார்க்கும் பெறுவதற்கு அரிய பேற்றை ஒரு விலங்கான கஜேந்திரன் பெற்றான் என்னும் சரித்திரத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று கூறி, தாம் பெற்ற பேற்றை உணர்த்தி, இப்பிரபந்தத்தின சாரத்தை பெண்ணுலாவும் சடையினானும் (44) பாடலில் சொல்கிறார்.
இனி அடுத்த பாசுரம்
பாசுரம் 45
வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை * துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடிசொல் * இளையபுன் கவிதையேலும் எம்பிரார்க்கினிய வாறே. (திருமாலை 45)
அழகு மிகுந்து உள்ளதும் வெண்ணிறத்தை உடையதுமான, மாடங்களை உடைய, பெருமை பொருந்திய வட மதுரையில், கவளத்துடன் கூடியதும் பெருத்து இருப்பதுமான (குவாலயாபீடம் என்ற) யானையை கொன்ற கிருஷ்ணனாய் ஸ்ரீ ரங்கநாதனான பெரியபெருமாளை, திருதுழாய் தொண்டினிலே ஈடுபட்டுள்ளவரும், இயற்கையான பாகவத சேஷத்வத்திலே நிலைநின்றவருமான, தொண்டரடிப்பொடி ஆழ்வார் (அருளிச் செய்த) திருமாலையாகிற இந்த பிரபந்தம் சப்தம், கவித்வம் முதலிவற்றால் (ஆழ்வார் சொற்படி) குற்றம் உடையதாக இருந்தாலும் எம்முடைய ஸ்வாமியான பெரியபெருமாளுக்கு இனிமையான இருந்தது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பிரபந்தத்தின் முடிவில், குவாலயாபீடத்தை முடித்ததை போல் தாம் எம்பெருமானை அடைய தடையாய் இருந்த பாவங்களை போக்கியதைச் சொல்லி, பெரியபெருமாளுடைய உகப்பே தமக்கு பயன் என்று சொல்லி திருமாலை என்ற இந்த பிரபந்தத்தை ஆழ்வார் முடிக்கிறார். அதுவே இந்த பிரபந்தத்தை படிப்பவர்களுக்கு பலன் என்று உரையாசிரியர் முடிக்கிறார்.
இனி சற்று விரிவாக
வளவெழும் தவளமாட
அழகு மிகுந்து இருப்பதாய் என்று பொருள். வெள்ளியாலே செய்தது போல் மிகவும் வெண்மை நிறம் உடைய மாட மாளிகைகளை உடையதாக இருப்பது; கண்ணன் அவதரித்த போது வட மதுரையை அலங்கரிக்காமல் இருந்த குறை தீர வடமதுரையை சொற்களால் அலங்கரித்து ஆறுதல் அடைகிறார். மேலே குவாலயாபீட சரித்திரம் சொல்வதாலே, விழாவிற்காக கம்ஸன் அலங்கரித்ததை சொல்வதாகவும் கொள்ளலாம். வளம் என்பது அழகையும் எழும் என்பது மிகுதியையும் காட்டுகிறது. தவள என்பது வெண்மையைக் காட்டுகிறது.
மதுரை மா நகரந்தன்னுள்
பெருமை பெற்ற (வட) மதுரை நகருக்குள்ளே என்பது பொருள். இதற்கு பெருமை என்ன என்றால், முதலில் வாமன பெருமான் எழுந்தருளி வாமன ஆஶ்ரமமாய் இருந்தது. பின்பு ஸ்ரீ சத்ருக்னனுக்கு தலைநகரமாக இருந்தது; அதன்பின் கண்ணன் அவதரித்ததால் உண்டான பெருமையைச் சொல்கிறது; எம்பெருமானோடு இடைவிடாமல் சம்பந்தம் இருக்கும் தேசமாகையால் பகலில் விளக்குப் போல இருக்கும் வைகுந்த மாநகரைக் காட்டிலும் இருள் தருமா ஞாலத்தில் இருட்டில் விளக்கு போல் பிரகாசிக்கும் இந்த மதுரா நகரம் சிறப்பு பெற்றது என்று கருத்து.
கவளமால் யானை கொன்ற கண்ணனை
கவளம் எனப்படும் மதமூட்டிய உணவை, உட்கொண்ட, பெருத்து இருக்கும் குவலயாபீடம் என்ற யானையைக் கொன்ற கண்ணனை என்பது இதன் பொருள். ‘களபமால்‘ என்று பாடம் ஆனபோது ‘களபம்’ என்று இளைய பருவத்தின் மிகப் பெருத்து இருக்கும் யானை என்று பொருள்படும்.
சென்ற பாசுரத்தில் ‘ஆனைக்கு அன்று அருளை ஈந்த‘ என்று பாடினார்; இங்கு ‘யானை கொன்ற‘ என்று பாடுகிறார். விஷ்ணு மீது பக்தி உடையவர்களுக்கும் பக்தி இல்லாதவர்களுக்கும் எப்போதும் ஒரே மாதிரியாகப் பற்றாலம்படி இருக்கிற உன் திருவடியிணையை உபாயமாக உறுதி கொள்கிறேன் என்ற ஜிதந்ததே ஸ்தோத்திர ஸ்லோகத்தின் படி, ‘தேவர்கள் அசுரர்கள் என்று அனைவருக்கும் பொதுவான தெய்வம்’ என்று சொன்னதற்கு விதி விலக்கு உண்டு என்று காட்டப்படுகிறது.
மதுரை நகரத்தில் குவலயாபீடம் முதலான விரோதிகளைப் போக்கி அங்குள்ளவர்களுக்கு, தன்னை அனுபவிக்க கொடுத்தது போல், தாம் எம்பெருமானை அனுபவிக்கத் தடையாய் இருந்த பாபங்களைப் போக்கி, பெரியபெருமாள் தம்மை அனுபவிக்கச் செய்ததை உணர்த்துகிறார்.
கண்ணனை என்றது கண் காண வந்தவனை என்பதற்காக. அதாவது பிறந்த அன்று இவனைக் காணக் கூடாது என்பதற்காக இந்த இடத்தில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டவன், இன்று எல்லோரும் காண வேண்டும், அதாவது, எல்லோரும் கண் காண வேண்டும் என்பதற்காக வந்தான் என்கிறார். பிறந்த அன்று ‘ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ (திருப்பாவை 25) என்கிறபடி இரவோடு இரவாக ஒளித்துப்போன ஊரிலே அனைவரும் கண் காண வந்து விரோதிகளான கம்ஸன் முதலானவர்களை அழிய செய்த பெருமையை ஆழ்வார் அனுபவிக்கிறார்.
அரங்கமாலை
அந்த அவதாரத்துக்குப் பிற்பட்ட தம்முடைய விரோதிகளை போக்கினது, அர்ச்சாவதாரம் எடுத்து, பெரியபெருமாளாக ஸ்ரீரங்கத்திற்கு வந்த நிலையில் என்கிறார்.
அடியார்கள் விஷயத்தில் பெருங்காதலை உடையவர் என்பதற்காக மாலை என்றது. ‘யானை கொன்ற‘ என்ற இடத்தில் சொல்லப்பட்ட விரோதியை போக்கினதும், ‘கண்ணனை‘ என்ற இடத்தில் சொல்லப்பட்ட சுய அனுபவமும் (தன்னை அனுபவிக்கச் செய்ததும்), தன் அடியவர்கள் மேல் இவன் கொண்ட பிரேமத்தை பார்த்தால், இவனுக்கே பேறு என்பது போல தோன்றுகிறது.
துளபத்தொண்டாய
திருத்துழாயாழ்வாருக்கு அடிமை செய்யுமவர் என்று பொருள். புருஷார்த்தத்தின் எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்தில் நிலை நின்றவர் என்றபடி. ‘துளபம்’ என்று சொன்னது பாகவதர்கள் அனைவரையும் சொன்னபடி ஆகும். துளபத்தொண்டு என்பது எல்லா பாகவதர்களுக்கும் தொண்டு செய்வதை கூறுவதாகக் கொள்ளலாம். எல்லா பாகவதர்களுக்கும் தொண்டு செய்தால், அபச்சாரங்கள் நேரக் கூடும். திருத் துழாய்க்கு தொண்டு செய்வது அப்படி அபச்சாரத்திற்கு இடமில்லாத கைங்கர்யம் ஆகும். திருபள்ளியெழுச்சி (10) பாசுரத்தில், ‘தொடை ஒத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி ‘ என்று துளபத் தொண்டையே தனக்கு அடையாளமாக அருளிச் செய்தார் அல்லவா ?
தொல்சீர்
இயல்பான பகவத் சேஷத்வத்தின் எல்லையான பாகவத சேஷத்வத்தில் நிலை நின்றவர். ‘துளபத் தொண்டாய’ என்றது எம்பெருமானுக்காகத் திருதுழாய் வளர்த்தல் என்ற பகவத் கைங்கரியத்தையும் ‘தொல் சீர்’ என்ற அந்த பகவத் கைங்கர்யத்தின் மேல் எல்லையான ஸ்ரீ வைஷ்ணவ கைங்கரியத்தையும் சொல்வதாக கொள்ளலாம்.
தொண்டரடிப்பொடி சொல்
இந்த பாகவத கைங்கர்யத்துக்குத் தக்கபடி ‘தொண்டரடிப்பொடி’ என்னும் திருநாமத்தையும் உடையவர். இதனால் இவருக்கு ஞானானந்தங்களும் பகவத் சேஷத்வமும் தனக்கு அடையாளம் இல்லை என்றும், பாகவத சேஷத்வமே தனக்கு அடையாளம் என்றும் விளங்குகிறது. ‘தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்‘ (திருவாய்மொழி 7.1.11) என்ற நம்மாழ்வாரை போல ‘தொண்டரடிப்பொடி’ என்று தம்மை அழைத்துக் கொண்டவர் இவர்.
இளைய புன் கவிதை ஏலும்
சொற்களில் பழுத்த அனுபவமின்மை ஆகிற இளமையும், கவிதையில் குற்றமும் உண்டேயானாலும் என்று பொருள். உண்மையில் இப்படி இல்லாவிடிலும், ஆழ்வார் இப்படி நைச்யானுசந்தானம் செய்து கொள்கிறார்.
எம்பிராற்கு இனியவாறே
எம்பெருமானுக்கு மிக இனிதாய் இருக்கும் என்று பொருள். விஷ்ணு தர்மம் என்ற சாஸ்திரத்தில்,
- எது போக்கியமானது என்று கேட்டு, குழந்தையின்(சிசு) மழலைச் சொல்லே போக்கியமானது என்றும்,
- மறுபடியும் போக்கியமாக இருப்பது அந்தக் குழந்தையின் (பாலன்) பிள்ளைப்பேச்சுக்களே என்றும்,
- போக்கியாமான சகல பொருள்களிலும் போக்கியமானது, அந்த பிள்ளையின் (யுவன்) அறிவு நிரம்பிய அந்த வார்த்தைகளே என்றும்,
சொல்லியது போல, தனக்குக் குழந்தை போன்ற ஆழ்வார், தம் திருவாயினால் திருநாமத்தின் பெருமையை அருளிச் செய்ய, அதை கேட்டகையினால் உண்டான உகப்பாலே கேட்டார். பெரியபெருமாள் இந்த என்னுடைய மழலைச் சொல்லை உகந்தது என்ன ஆச்சர்யம் என்று ஆழ்வார் கூறுகிறார். ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மழலைச் சொல் கேளாதவர்’ (திருக்குறள் 66) என்கிறபடி, தன் குழந்தையின் மழலைச் சொல்(ஆழ்வார் சொல்), பெற்ற தகப்பனுக்கு (பெரியபெருமாள்) இனிதாய் இருக்கும் அன்றோ.
ஸ்தோத்திரரத்னம் 46 ல் கூறியபடி, ‘உன்னையே இடை விடாமல் பின் தொடர்ந்து கொண்டு, மற்ற எல்லா ஆசைகளும் வாசனையும் இல்லாமல் நீங்கப் பெற்றவனாய், ஒருபடிப்பட்டதாய், நித்யமான கைங்கரியத்தை உடையவனாய், சபலமான ஜன்மத்தை உடையவனாய், என்று நான் உன்னை உகப்பிக்க போகிறேன்’ என்றபடி அவன் உகப்புதானே எல்லோருக்கும் புருஷார்த்தம். எம்பெருமானுடைய உகப்புக்கு தானும் ஒரு காரணமாக இருப்பது தானே மோக்ஷம் வேண்டுகிற பக்தனுக்கு ஊக்கம் அளிப்பது. ‘இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று நம்ஜீயர் அருளிச்செய்த வார்த்தை இங்கு நினைவில் கொள்ளலாம்.
இந்த திவ்ய பிரபந்ததை கற்றவர்களுக்கு இவர் மற்ற ஆழ்வார்களைப் போல் கடைசி பாசுரமான இதில் பலன் சொல்லாமல் முடித்தது, ‘இந்த உகப்பு தானே அவர்களுக்கும் பலன்’ என்று தெரிவிக்கைக்காக என்கிறார். இந்த ஆழ்வாரை பெரியபெருமாள் உகந்ததைப் போல், இந்த திருமாலையின் சொற்பொருள்களைக் கற்றவர்களையும் பெரியபெருமாள் உகந்து அருளுவர் என்று பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய விளக்கத்தில் அருளுகிறார்.
ராமாயணமிதம் க்ருத்ஸ்நம் ஶ்ருண்வத: படதஸ்ஸதா * ப்ரீயதே ஸததம் ராம ஸ ஹி விஷ்ணு : ஸ்ஸநாதந: (யுத்த காண்டம் 131-118)
இந்த இராமாயணம் முழுவதையும், எப்போதும் கேட்பவனிடமும், படிப்பவனிடமும் ராமபிரான் எப்போதும் பிரியம் வைக்கிறான். அந்த ராம பிரானே அன்றோ பழமையான விஷ்ணு என்பது மேற்சொன்ன ஸ்லோகத்தின் பொருள். ஸ்ரீ ராமாயணம் கற்றவற்கு ஸ்ரீ வால்மீகி சொன்ன இந்த பலமே, இந்த திவ்ய பிரபந்தத்தை கற்றவருக்கும் பலன் ஆகும்.
இத்துடன் திருமாலை என்ற திவ்ய பிரபந்தம் நிறைவு பெறுகிறது. தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம். பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சரணம்.
இதுவரை பொறுமையாக தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தவர்களுக்கு நமஸ்காரம்; படித்து, கருத்து சொல்லி ஊக்கம் அளித்தவர்களுக்கும் நமஸ்காரங்கள் ; படித்து, அடியேன் செய்த தவறுகளை சரிசெய்த அனைவருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்; உங்கள் அனைவரின் அன்பான வார்த்தைகள் அடியெனின் அடுத்த முயற்சிக்கு மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்கின்றன என்று சொல்லி உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. உங்கள் அனைவருக்கும் பல்லாண்டு கூறி மீண்டும் ஒரு பதிப்பில் சந்திக்கலாம். நன்றி
