A Simple Devotee's Views
ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்ய தேசம் | திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் |
| மூலவர் | அற்புத நாராயணன் அம்ருத நாராயணன் |
| உத்சவர் | |
| தாயார் | கற்பகவல்லி தாயார் |
| திருக்கோலம் | நின்ற திருக்கோலம் |
| திருமுகமண்டலம் | கிழக்கே திருமுக மண்டலம் |
| பாசுரங்கள் | 11 |
| மங்களாசாசனம் | நம்மாழ்வார் |
| தீர்த்தம் | பூமி தீர்த்தம் |
| விமானம் | புண்ணிய கோடி விமானம் |
| தொலைபேசி |
மலைநாட்டு திவ்ய தேசங்கள் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கே காணலாம்.
மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).
திருக்கடித்தானம் – இந்த ஸ்தலத்தை பற்றி
திருக்கடித்தானம் – location – Google Map
திருக்கடித்தானம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திவ்ய தேசத்தை பற்றி
திருக்கடித்தானம் என்று இந்த திவ்ய தேசம், திருவல்லவாழில் இருந்து கோட்டயம் சாலையில், செங்கணச்சேரியில் இருந்து வேறு ஒரு சாலையில் கிழக்கே இரண்டு மைல் சென்றால் உள்ளது.
இந்த திருத்தலத்தில் நரசிம்மன், கிருஷ்ணன், சன்னதிகளும் உள்ளன.
கடிகை என்றால் நாழிகை. மூன்று திவ்ய தேசங்களின் பெயர்களில் ‘கடி’ என்று வருகிறது; அவை திருக்கடித்தானம், திருகண்டம் எனும் கடி நகர் மற்றும் திருக்கடிகை அல்லது சோளிங்கர். இந்த மூன்று திவ்ய தேசங்களிலுமே சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹம்.
திருக்கார்த்திகை மற்றும் கோகுலாஷ்டமி மிக விசேஷமாக இங்கே கொண்டாடப் பாடுகிறது. கோவிலில் சாஸ்தா, சுப்ரமணியர் மற்றும் நாகர் விக்கிரகங்கள் உள்ளன.
இங்கே நேர்த்திக் கடனாக தாயாருக்கும் பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்கு பால் பாயசம் நிவேதியம் செய்யப்படுகிறது.
ஒரே கர்ப்பகிரகத்தில் அற்புத நாராயணன் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் எழுந்து அருளி உள்ளனர். இருவருக்கும் தனித்தனி கொடி மரம் உள்ளது. மேலும் சந்நிதியில் தெற்கு நோக்கி தக்ஷிணாமூர்த்தியும், விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள்.
இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோர் மிக்க பேரழகு வாய்ந்தவர்கள். இத்தலத்திற்குள்ளாகவே தனித்தனி சன்னதிகளாக அமைந்துள்ளன.
ஸ்தல புராணம்
இது ருக்மாங்கதன் என்ற சூரிய குல அரசன் ஆண்ட தேசம். இவனது தோட்டத்தில் உயர்ந்த புஷ்பங்களை எடுத்துச் சென்ற தேவர்களைப் பிடித்து அவர்கள் வேண்டியபடி, ஏகாதசி விரத பலன்களை கொடுத்து அவர்களை மீண்டும் அனுப்பி வைத்ததாக வரலாறு. இவை அனைத்தும் ஒரு நாழிகை காலத்தில் நிகழ்ந்ததாக சரித்திரம். அதனாலும் இந்த திவ்ய தேசத்திற்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்.
இங்குள்ள கோவிலின் முன் ஒரு மனித உருவ சிலை படுத்த நிலையில் உள்ளது. இது இந்த கோவிலின் மெய்க்காப்பாளின் சிலை என்றும் அது அவனுக்கு கிடைத்த தண்டனை என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை மன்னன் இந்த கோவிலுக்கு நடை சார்த்தியபின் வந்ததாகவும், அரசனிடம் பொருள் வாங்கி கோவில் கதவினை திறந்து விட்டதாகவும் அதனால் அவனுக்கு தண்டனை என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் இன்றும் இந்த கோவிலில் நேரம் சரியாக பின் பற்றப்படுகிறது.
இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய ஸ்தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. சகல சாஸ்திரங்களும் கற்று மேதாவியான சகாதேவன் ஜோதிடக் கலை வல்லுனன். அவனால் பிரதிஷ்டை (ஸ்தாபிக்கப்பட்ட) செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரகம் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதிய சக்தியைப் பெற்றுக்கொண்டே சென்று கலியுகம் முடியும் தறுவாயில் ஜோதி மயமாய் மாறி விண்ணுள் கலக்கும் என்று கூறுகிறார்கள்.
ஆழ்வார்கள்
நம்மாழ்வார் பதினொரு பாடல்கள் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார். இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடிய பாசுரங்களை பற்றி கீழே காண்போம்.
நம்மாழ்வார் – திருவாய்மொழி – எட்டாம் பத்து ஆறாம் பதிகம்
நம்மாழ்வார் தன்னுடன் சேர்வதற்கு பிரியம் உள்ளவனாகவும், தன்னுடைய ப்ரீதியை பொறுப்புடன் காண்பித்து, திருக்கடிதானத்தில் எழுந்துயருளி, தம்மிடம் காட்டும் பிரேமத்தை நினைத்து இனியவராய் அதனை பேசி இந்த பதிகத்தில் அனுபவிக்கிறார். சென்ற பதிகத்தில் துக்கம் கொடுத்ததினால், இந்த பதிகத்தில் உஜ்ஜீவனம் அடைந்தவராய் ஆழ்வார் அனுபவிக்கிறார்.
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ * நல்ல அருள்கள் நமக்கே தந்தருள் செய்வான், * அல்லியந் தண்ணந் துழாய் முடியப்பன் ஊர், செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (8.6.1)
இரவும் பகலும் தன்னையே நினைந்து வாழும்படியாக சிறந்த திருவருளை நமக்கே கொடுத்துக் கிருபை செய்கின்றவனான அல்லியை உடைய அழகு பொருந்திய குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்த என் தந்தையானவன் எழுந்தருளி இருக்கின்ற நகரம், கைங்கர்ய செல்வத்தை உடைய வைஷ்ணவர்கள் வாழ்கின்ற திருக்கடித்தானம் என்ற திவ்ய தேசம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
என்னுடைய துன்பத்தை தீர்த்து அருளுவான் சர்வேஸ்வரன் அவன் ஊர் திருக்கடித்தானம் என்கிறார். பகல் இரவு என்று வேறுபாடு இன்றி, எல்லாக் காலத்திற்கும் உபகாரகன் என்கிறார். நல்ல அருள்கள் என்பது, என் குற்றத்தை பாராமல், என் அறிவு முழுமை ஆகாததை பாராமல், அவனுக்கு பேறு என்று மகிழ்வுடன் செய்த அருள் என்கிறார். நமக்கே என்பதில் உள்ள ஏகாரம், நித்ய சூரிகளும் தான் பெற்ற பேறு பெற்றிலர் என்கிறார்.
இப்படி உபகாரகானானவன் வாழும் திருக்கடித்தானம் நமக்கும் அடையத் தக்க தேசம் என்கிறார். இங்குள்ளவர்கள் அவன் அனுபவத்தோடு காலத்தை கழிக்கிறவர்கள் என்றும், அனுபவம் சம்பத்து ஆகுமோ என்று கேட்டு, லக்ஷ்மணன் கைங்கர்ய லக்ஷ்மியைப் பெற்றான் என்பதை, இராமாயணம், ‘ஸர்வ ப்ரிய கர : தஸ்ய ராமஸ்யாபி ஸரீரத: * லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்நோ பஹி: ப்ராண இவாபர:. (பாலகாண்டம் 18.28) மூலம் காட்டுகிறார்.
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும், * ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர், * செருக்கு எடுத்து அன்று திகைத்த அரக்கரை, உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. (8.6.2)
அக்காலத்தில் போரிலே சீற்றம் கொண்டு அறிவு மயங்கிய இராவணன் முதலான அரக்கர்களுடைய உருவங்கள் அழியும்படி அமுத மழையைப் பொழிந்த ஒருவன், திருக்கடித்தானத்தையும் என்னுடைய மனத்தினையும் ஒன்றாக நினைத்து உள்ளே வாசிக்கின்ற பிரான் ஆவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
என் பக்கம் வருவதற்கு உள்ள தடைகளையும் தானே போக்கி, திருக்கடித்தானத்திலும் என் மனத்திலும் ஒருசேர காதல் கொண்டு என் உள்ளே வசிக்கிறான், என்கிறார்.
அரக்கர்கள் பட்ட பாட்டினை விரோதி பட்டது என்கிறார். போரில் செருக்கு எடுத்து, ஒருவரையும் வணங்கேன் என்று அன்று திகைத்த அரக்கர்களை, சக்ரவர்த்தி திருமகனை வெல்லலாம் என்று நினைத்த மதி கேடர்களான இராக்கதர்களை, சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக அம்பு மழையை பெய்தார் அன்றோ என்று சொல்லி, ஏக வீரன் ஆனவன் என்கிறார்.
என்னிடத்தே வருகைக்கு இடையூறாக உள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே என்னுள்ளே எழுந்தருளினார். திருக்கடித்தானப்பதியையும் இவருடைய திருவுள்ளத்தையும் ஒன்றாக நினைக்கை, ஸ்ரீவசந பூஷணத்தில்(171) சொல்லியபடி, “அங்குத்தை வாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம். என்பது போல ஆகும்.
ஒருவர் இருவர் ஓர் மூவர் எனநின்று, * உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான், * திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை, * மருவி உரைகின்ற மாயப் பிரானே திருவாய்மொழி 8.6.3
ஒருவர் என்னும்படியாகவும், இருவர் என்னும்படியாகவும், ஒரு மூவர் என்னும் படியாகவும் நின்றும், சாரிகை வந்த வேகத்தாலே, கண்களால் காண முடியாதவாறு நின்றும் உருக்கெட வாளி பொழிந்த ஒருவனும், திரு அமர்ந்த மார்பனும், திருக்கடித்தானத்தை மருவி எழுந்து அருளி இருக்கிறான் என்றும் என் மாயப்பிரான் நினைக்கும் தோறும் இனியன் ஆகிறான் என்று சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.
கரந்து என்பதை சென்ற பாடலின் ‘பொழிந்த‘ என்பதுடன் சேர்த்து, கரந்து பொழிந்த ஒருவன், திரு அமர் மார்வன்; அவன் திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான் ஆவான்; அவன் உள்ளந்தோரும் தித்திப்பான் என்கிறார்.
பிராட்டியோடு திருக்கடித்தானத்திலே நித்திய வாசம் செய்கிற ஆச்சரியத்தை உடையவனான உபகாரகன் நினைக்கும்தோறும் இனியவனாக நின்றான் என்கிறார்.
சென்ற பாசுரத்தில் ‘வாளி பொழிந்தபடி’ என்று சொன்னது எங்கே என்று கேட்டு இங்கே என்று பதிலும் சொல்கிறார். ஒருவர் இருவர் மூவர் என்று தோன்றி செருக்கு எடுத்து அன்று இருந்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன், திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் உருக்கெடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் என்று சென்ற பாசுரத்துடன் சேர்த்து அனுபவிக்கலாம். மூல பலத்தை நிர்மூலம் ஆகும்படி ஒருவனாய் தோன்றி, வேகம் மிக மிக, இருவரும், மூவருமாய் தோன்றி, வேகம் அதிகமாகி, இந்திரியம் செயல் படுவதற்கு இடம் இல்லாதபடி வேகமாய், இருக்கிற ரூபம் அரியதாய், உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று 24 ஆயிரம் படி உரையாயசிரியர் கூறுவது சிறப்பு.
திரு அமர் மார்வன் என்பது குற்றம் செய்யாதவர் யார் என்று கேட்ட பிராட்டியோடு கூட வந்தது கூறியது.
மாயப் பிரான் என வல்வினை மாய்ந்தற, * நேயத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான், * தேசத் தமரர் திருக்கடித்தானத்தை, * வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே 8.6.4
திருக்கடித்தானத்தை கோவில் கொண்டான், நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான்.
ஒளியை உடைய நித்திய சூரிகள் எழுந்து அருளி இருக்கிற வாசனையை உடைய சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்தை நிலை பெற்ற கோவிலாக் கொண்டு நித்ய வாசம் செய்கின்ற மாயப் பிரான், என்னுடைய கொடிய வினைகள் எல்லாம் வாசனையோடு அழியும்படியாக அன்போடு என் நெஞ்சமாகிய நாட்டினைப் பரம பதத்தைப் போலக் குடி இருப்பாகக் கொண்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருக்கடித்தானத்தைப் பகல் இருக்கை மாத்திரமாகக் கொண்டு, அன்பின் மிகுதியாலே என் மனத்தையே எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் என்று ஈடு உரையாசிரியர் சொல்கிறார்.
மாயப்பிரான் என்று சொல்வது, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடைய உபகாரகன்;
என் வல்வினை மாய்ந்து அற என்றது சென்ற பாடலில் சொன்ன தன் துயரத்திற்கு தகுதியாக, தன்னை பிரிந்து ஆழ்வார் பட்ட துன்பம் எல்லாம் நசிந்து போகும் படி என்றது. அதே போல சென்ற பதிகத்தில் (மாயக்கூத்தா ) ‘காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து’ என்று பட்ட கஷ்டங்கள் எல்லாம் வாசனையோடு அகலும்படி என்றது.
நெஞ்சம் நாடு என்று சொன்னது கலவியினாலும், பிரிவினாலும் ஒரு பரம பதத்தைப் போல இவர் திரு உள்ளத்தை ஆக்கினான் என்கிறார்.
குடி கொண்டான் என்றது பரிகரங்களோடு நித்ய வாசம் செய்கிறான் என்றது. பெரியாழ்வார் திருமொழி (5.2.10)ல் சொல்லியதை, “அரவத்து அமளியினோடும், அழகிய பாற் கடலோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து” நினைவில் கொள்ளலாம்.
தேசத்து அமரர் திருக்கடித் தானத்தை என்று சொன்னது, நித்ய அனுபவம் கொண்டதால் உண்டான ஜோதி / ஒளி உடைய நித்ய சூரிகள் அடையத்தக்க திருக்கடித்தானத்தை என்கிறார்.
தேசத்து அமரர் திருக்கடித் தானத்தை, நேசத்தினால், நெஞ்சம் நாடு குடி கொண்டான் என்று ரசிக்கலாம்.
கோயில் கொண்டான் தன் திருக்கடித் தானத்தை, * கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம், * கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ, * வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்து அம்மானே. 8.6.5
ஒவ்வொரு கோவிலில் தங்கி இருக்கின்ற தெய்வங்கள் எல்லாம் தொழும்படியாக ஸ்ரீவைகுந்தத்தைக் கோவிலாகக் கொண்ட குடக்கூத்து ஆடிய அம்மான், திருக்கடித்தானத்தைத் தனக்குக் கோவிலாகக் கொண்டான்; திருக்கடித்தானத்தோடு கூட வந்து என் நெஞ்சினைக் கோவிலாக் கொண்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
ஈட்டு உரையாசிரியர், என் பக்கம் உண்டான மிக்க காதலால் திருக்கடித்தானத்தோடு கூட என் மனதிலே புகுந்து அருளினான் என்கிறார். திருவடி திருவனந்தாழ்வான் மற்றும் சேனை முதலியார் தொழும்படி ஸ்ரீ வைகுந்தத்தை தனக்குக் கோவிலாக் கொண்ட சர்வேசவரன், கிருஷ்ணனாய் அவதரித்த கூட கூத்த அம்மான் என்கிறார். அந்த சிரமம் ஆறும்படி திருக்கடித்தானத்தில் கோவில் கொண்டான். அதனோடு கூட என் மனத்தினை தனக்கு கோவிலாகக் கொண்டான் என்கிறார்.
திருக்கடித்தானத்தில் இருந்தது தன்னை பெறுவதற்காக என்று ஆழ்வார் சொல்லி, அது சாத்தியம் ஆனதால், அந்த சாதனத்தோடு (அந்த திவ்ய தேசத்தோடு) வந்து புகுந்தான் என்கிறார்.
கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும், * மாய்த்த அம்மான் மது சூத அம்மான் உறை, * பூத்த பொழில் தண் திருக்கடித் தானத்தை, * ஏத்த நில்லா குறிக் கொண்டமின் இடரே. 8.6.6
குடக்கூத்து ஆடிய அம்மானும், கொடியேனுடைய துன்பம் முழுதினையும் அழித்த அம்மானும், மதுசூதனனாகிய அம்மானுமாகிய எம்பெருமான் எழுந்து அருளி இருக்கின்ற, மலர்ந்து இருக்கின்ற சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்கடித்தானத்தை துதித்த அளவிலே துன்பம் முழுவதும் நில்லாவாம்; இதனை நினையுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. தம்முடைய மிக்க பிரீதியாலே ‘திருக்கடித்தானத்தை எல்லோரும் அடையுங்கள்’ என்கிறார்.
கூத்தஅம்மான் என்று சொன்னது, எல்லோர் மனங்களையும் கொள்ளை கொள்ளுகின்ற செயல்களை உடைய சர்வேசவரன் என்பதாகும்.
இடர் முற்றவும் என்று சொன்னது, தன்னைப் பிரிந்து தான் பட்ட துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக்கிய என் சுவாமி என்பதாகும்.
மதுசூத அம்மான் என்றது, பகைவர்களை அழிக்கும் தன்மையனான சர்வேசவரன் நித்ய வாசம் செய்கின்ற தேசன் என்பதாகும்.
அவன் நித்ய வாசம் செய்வதால் எப்போதும் மலர்களோடு கூடிய பொழில் என்றும், திருவருளாகிய மழை மாறினால் தானே பூக்கள் மாறுவது என்றும் கூறுகிறார்.
இனிமையாக ஏத்தினால் இடர் போகுமோ என்று கேட்டு, இனியதனைச் செய்ய, இடரானது, இது நமக்கு தேசன் அன்று என்று ஓடும் என்றும், இது ஓலக்க வாரத்தை என்று இல்லாமல் புத்தியில் கொள்ள வேண்டும் என்கிறார்.
கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன், * மண் விண் முழுதும் அளந்த வொண் தாமரை, * மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து, * நண்ணு திருக்கடித் தான நகரே. 8.6.7
கோவிந்தனுடைய மண்ணுலகம், விண்ணுலகம் முழுவதையும் அளந்த தாமரை போன்ற திருவடிகளை மக்கள் தொழ, நித்திய சூரிகள் வந்து சேரும் படியான, திருக்கடித்தானம் ஆகிற நகரத்தை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி மனத்திலே கொள்ளுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டாம் ; திருக்கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் என்கிறார். அதாவது இடர்கெட உள்ளத்துக் கொண்மின் என்கிறார்.
கோவிந்தன் என்பது சர்வ சுலபன் என்பதைக் குறிக்கும். ஒரு தாமரைப் பூவைக் கொண்டு பூமியையும் வானுலத்தையும் அளந்து கொண்டது என்கிறார். மண்ணவர் தாம் தொழ என்றது, வலக்கை இடக்கை அறியாதவர், பூமியில் தொழுவது; பரமபதம் நித்திய சூரிகளுக்கே இருப்பதைபோலே, உகந்து அருளின தேசம் ஸம்ஸாரிகளுக்கே என்கிறார்.
இங்கு உள்ளார் அங்கு செல்வது, அவனின் மேன்மையை அனுபவிக்க, அங்கு உள்ளார் இங்கு (திருக்கடித்தானம்) வருவது அவனின் சீல குணத்தை அனுபவிக்க என்கிறார்.
தான நகர்கள் தலை சிறந்து எங்கெங்கும், * வானின் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே, * ஆன விடத்து என் நெஞ்சும் திருக்கடித் * தான நகரும், தனதாயப் பதியே. 8.6.8
பரமபதம் என்ன, இந்த உலகம் என்ன, திருப்பாற்கடல் என்ன, ஆகிய எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்குகிற தலங்கள் முழுவதும் எம் மாயவனுக்கே வசிக்கும் நகரங்கள் ஆனாலும் கூட என்னுடைய மனமும் திருக்கடித்தான நகரும் தன்னுடைய தாயம் (முறையாக வந்த) பதிகளாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
அவனுக்கு வேறுபட்ட சிறப்பினை உடைய நகரங்கள் பலவும் இருந்த போதும், என்னுடைய நெஞ்சத்தையும் திருக்கடித்தானத்தையும் தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி இருக்கிறான் என்று கூறுகிறார்.
தாயப் பதிகள் தலை சிறந்து எங்கெங்கும், * மாயத்தினால் மன்னி வீற்றிருந்து தான் உறை, * தேயத்து அமரர் திருக்கடித் தானத்துள், * ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே. 8.6.9
தாய நகரங்களாகிய எல்லா இடங்களிலும் தனது விருப்பத்தினாலே நிலை பெற்று, உயர்வு தோன்ற எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமான், ஒளியோடு கூடிய நித்திய சூரிகள், வந்து தங்கி இருக்கின்ற திருக்கடித்தானத்தில் உறைகின்ற, ஆயர்க்கு அதிபதியான அற்புதனே ஆவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தாயப் பதிகள் எங்கெங்கும் மாயத்தினால் மன்னி தலை சிறந்து அற்புதன் தானே வீற்றிருந்தான் என்று கொள்ளலாம்.
எல்லா திருப்பதிகளும் அவனுக்கு அப்படியே இருந்தாலும், தான் கிடைப்பதற்கு காரணமாக இருந்த நிலம் திருக்கடித்தனாம் ஆகையால் அதன் மேல் மிக்க காதல் ஆனான் என்று ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.
மாயம் என்பது இங்கே ‘இச்சை’ அல்லது விருப்பம் என்ற பொருளில் வருகிறது. மன்னி என்பது தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோன்ற வீற்று இருந்தான் என்கிறார். மேலும் ஐஸ்வர்யத்தால் வந்த வேறுபாடு தோன்ற வீற்று இருந்தான் என்கிறார்.
தேயத்து அமரர் என்பது, ஒளி விளங்கும் நித்திய சூரிகள் அடையத்தக்க பூமியான திருக்கடிததானம் என்கிறார்.
உகந்து அருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும், என்னைப் பெறுவதற்காக திருக்கடித்தானத்தில் தன் மேன்மையும் நேர்மையும் எல்லாம் பிரகாசிக்க நின்றான் என்கிறார்.
அற்புதன் நாராயணன் அரி வாமனன், * நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம், * நற்புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர், * கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. 8.6.10
அற்புதனும் நாராயணனும் அறியும் வாமனனும் ஆன எம்பெருமான் பொருந்தி வீற்று இருப்பது என் நெஞ்சகமாகும். நின்று கொண்டு இருப்பது நல்ல புகழ் நிறைந்த பிராமணர்களுடைய நான்கு வேதங்களும் நிலை பெற்று முழங்கிக் கொண்டு இருக்கின்ற கற்பகச் சோலை சூழ்ந்த திருக்கடித்தானம் என்னும் நகரம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. ‘
மேவி இருப்பது என் நெஞ்சகம்; நிற்பது திருக்கடித்தானம் என்கிறார். என்னை பெறும் வரையில் திருக்கடித்தானத்தில் நின்றான்; என்னை பெற்ற பிறகு நிற்பதும் இருப்பதும் என் நெஞ்சிலே என்று கொள்ளலாம்.
நாராயணன் என்பது தன் உடைமையை விட்டுக் கொடுக்காத வத்சலன், அதாவது அன்பை உடையவன் என்கிறார். அரி என்று சொல்வதால், அடியவர்களின் விரோதிகளை அழிக்கின்ற ஆற்றல் பெற்றவன் என்கிறார்; வாமனன் என்பதால் தன்னை சிறுக விட்டு அடியார்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் முடிக்குமவன் என்கிறார். அற்புதன் என்பதால், மேற்சொன்னபடி எல்லாவற்றையும் செய்து ஆச்சரியத்தை உடையவன் என்கிறார்.
சுயம் பிரயோஜனர் என்று இல்லாமல், அநன்யப் பிரயோஜனர் என்னும் புகழை உடைய வைதிகராலே உச்சரிக்கப் படுகின்ற நான்கு வகை வேதங்களும் முழங்கும் கற்பக வனத்தை உடைய திருக்கடித்தானத்தில் அவன் நிற்பது; மேவி இருப்பது என் நெஞ்சகத்தில் என்கிறார்
மேலும், திருக்கடித்தானத்து நாராயணன், அரி, வாமனன் அற்புதன் நிற்பதும், மேவி இருப்பதும் என் நெஞ்சகம் என்றும் கொள்ளலாம்.
சோலை திருக்கடித்தானத்து உறை திருமாலை, * மதிள் குருகூர்ச் சடகோபன் சொல், * பாலோடு அமுது அன்ன ஆயிரத்தில் இ பத்தும், * மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே. 8.6.11
சோலைகள் சூழ்ந்த திருக்கடித் தானத்தில் உறைகின்ற திருமாலை, மதிள்களை உடைய திருக் குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச் செய்யப்பட்ட பாலையும் அமுதையும் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களில் இப்பத்துத் திருப்பாசுரங்களும் எல்லா உலகங்களிலும் மேலே உள்ள பரமபதத்திலே வியக்க இருத்தும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இப்பத்தும் வைகுந்தத்து வியக்க இருத்தும். இந்த பதிகத்தின் முடிவில் இத்திருவாய்மொழி கற்றவர்களை இது, தானே, திருநாட்டிலே கொண்டு போய் விடும் என்கிறார்.
சோலை திருக்கடித்தானத்து உறை திருமாலை, என்பதால், சிரமத்தைப் போக்குவதாய்க் காட்சிக்கு இனியதான சோலைகள் உடைய திருக்கடித்தானத்தில் நித்திய வாசம் செய்கின்ற திருமகள் கேள்வனை சொல்கிறார்.
மதிள் குருகூர் என்பதால் சம்சாரம் காரணமாக உண்டாகின்ற பாவக் கூட்டங்கள் புக முடியாத அரணை உடைய திருநகரி என்கிறார்.
‘ரகுவரசரிதஂ முநிப்ரணீதம்‘ (பாலகாண்டம் 2.43) என்று சொன்னது, ‘வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இந்த ராமர் கதை, கூட்டுச் சொற்கள், மற்றும் அர்த்தமுள்ள சொற்றொடர்களில் இயற்றப்பட்ட வரிகளைக் கொண்டுள்ளது’ என்பதைப் போல, ‘ பாலோடு அமுது அன்ன ஆயிரம்’ என்று சொன்னது, சொற்களின் பொருள் மற்றும் வாசகங்களின் சேர்த்தி என்கிறார். பால் என்றது திருக்கடித்தானத்து திருமாலை ; அமுது என்றது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை என்று ஆளவந்தார் நிர்வகிப்பார் என்கிறார்
‘மாயக் கூத்தா’ என்ற சென்ற பதிகத்தில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து, ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்.
மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.