A Simple Devotee's Views
பத்மபாணி நாச்சியார் ஸமேத காட்கரை அப்பன் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்ய தேசம் | திருக்காட்கரை |
| மூலவர் | திருக்காட்கரையப்பன் |
| உத்சவர் | |
| தாயார் | பெரும் செல்வ நாயகி ; வாத்ஸல்யவல்லி |
| திருக்கோலம் | நின்ற திருக்கோலம் |
| திருமுகமண்டலம் | தெற்கே திருமுக மண்டலம் |
| பாசுரங்கள் | 11 |
| மங்களாசாசனம் | நம்மாழ்வார் 11 பாடல்கள் |
| தீர்த்தம் | கபில தீர்த்தம் |
| விமானம் | புஷ்கல விமானம் |
மலைநாட்டு திவ்ய தேசங்கள் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கே காணலாம்.
மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).
திருக்காட்கரை – இந்த ஸ்தலத்தை பற்றி
திருகாட்கரை – location – Google Map
திருக்காட்கரை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திவ்ய தேசத்தை பற்றி
கேரளாவில் ஆலவாய் திருச்சூர் இரயில் மார்க்கத்தில் இருஞானக்கொடி புகை வண்டி நிலயத்தில் இருந்தும் அங்காமலி புகை வண்டி நிலையத்தில் இருந்தும், வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆலவாய் போகும் வழியில் . 8 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் செல்ல வேண்டும். அதிக வசதிகள் இல்லை. இத்தலம் ஷோரனூர் – எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த க்ஷேத்திரத்தை வாமன க்ஷேத்திரம் என்று கூறுவார்கள். இக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த எம்பெருமானை வாமன மூர்த்தி என்று சொல்லி வழிபடுவார்கள். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே திருக்காக்கரா என்றும் திருக்காட்கரை என்றும் வழங்க படுகிறது. திருமால், வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து, குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதை, பத்ம (தாமரை) ஏந்தி கொண்டு இருக்கின்ற நான்கு திருக்கரங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளார்.
அழகிய சுற்றுப்புறங்களுடன் ஒரு பெரிய பகுதியில் சூழப்பட்டுள்ள கோயில் வளாகம், வாமனருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதான சன்னதியைக் கொண்டுள்ளது. பிரதான சன்னதியின் கருவறையில் விஷ்ணு சிலை உள்ளது. பிராமண அசுர மன்னன் மகாபலியின் மீது கால் வைக்கத் தயாராகும் கடவுள், வாமனன் உருவில் சிலை உள்ளது. பரசுராமர் கோயிலை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் திருவிதாங்கூர் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
வாமனன் கோவிலின் உப தெய்வங்கள் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணா, நாகா, பிரம்மராக்ஷசா மற்றும் யக்ஷி. பிரம்மராக்ஷஸ் சன்னதி வெளிப்புற வளாகத்தில் அமைந்துள்ளது, ஆலமரக் கடவுள் மற்றும் சர்ப்பம் ஆகியவற்றுடன் காணபடுகிறது. உள் வளாகச் சுவர்களைச் சுற்றிலும் சுட்டுவிளக்கு எனப்படும் ஆயிரக்கணக்கான விளக்குகளின் வரிசை ‘சுற்று விளக்குகள்’ என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
கோயிலுடன் தொடர்புடைய இரண்டு குளங்கள் உள்ளன, ஒன்று கருவறையின் வடக்குப் பகுதியில் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கபிலதீர்த்தம், மேலும் இது அர்ச்சகர்களுக்கு மட்டுமே அணுகக்கூடியது. மற்றைய குளம் கோவில் சுவர்களுக்கு வெளியே வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, மேலும் ஓணம் கொண்டாட்டங்களின் போது சிலையின் ஆராட்டு சடங்கு குளியல் போது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
2014 இல் புதுப்பிக்கப்பட்ட பிரதான வாமனமூர்த்தி கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இதில் சிவன், விநாயகர், கார்த்திகேயர் மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்களின் சிலைகள் உள்ளன. சிவன் கோவிலின் வயது மற்றும் தோற்றம் பற்றி அதிகம் அறியப்படவில்லை, இது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. திருவிழாவின் போது ஓணம் விருந்து நடத்துவதற்கும் வழக்கமாக பயன்படுத்தப் படுகிறது.
ஓணம் பண்டிகை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சரஸ்வதி பூஜை, நவராத்திரி ஆகியவைகளும் கொண்டாடப் படுகின்றன.
ஸ்தல வரலாறு
ஒரு வணிகன், இங்கு வாழை தோட்டம், வைத்து இருந்தான். அங்கு ஒவ்வொரு முறையும் குலை தள்ளாமல் அழிந்து போய் கொண்டு இருந்தது. அதனால் அந்த வணிகன், இந்த திருத்தல திவ்ய தேச எம்பெருமானுக்கு பொன்னினால் செய்த ஒரு வாழை குலையை சமர்ப்பித்தார். அதற்கு பின் அவரின் வாழை தோட்டம் நன்றாக உயர்ந்து வளர்ந்து, செழித்து, நேந்திரம் பழம் என்று சிறப்படைந்து, வணிகனின் பிரச்சனை தீர்ந்தது.
ஒரு முறை பொன் வாழைபழம் தொலைந்து ஒரு யோகியை சரியாக விசாரிக்காமல் தண்டனை கொடுத்தாகவும் யோகி அவமானத்தல் சாபம் இட்டு, தற்கொலை செய்து கொண்டதாகவும், பின்பு கர்ப்பகிரகத்தில் அந்த பொன் வாழையை மீட்டதாகவும் சொல்கிறார்கள். அந்த யோகி அந்த ஊரில் திரிந்து மக்களுக்கு தொல்லை கொடுத்தகாவும், பிறகு மக்கள் ஒன்று சேர்ந்து அந்த யோகியிடம் வேண்டி, அவருக்கு ஒரு சன்னதி உருவாக்கி தினமும் நிவேத்தியம் கொடுத்து வருகிறார்கள்.
திருமால் மூவடிமண்வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவது அடியை மாவலியின் தலையில் வைக்க நினத்த போது, வந்திருப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்பதை முன்பே அறிந்திருந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு வரம் கேட்டான். அதாவது தான் இந்த நாட்டினை நன்றாக ஆட்சி புரிந்ததாகவும், இந்த மக்களுக்கு நல்லது செய்தவைகளை சொல்லியும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஊறி, உலக மக்களைச் சந்திக்க விரும்புவதாகவும் . அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான். எம்பெருமான், அப்படி நடந்த அந்த தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக் கொண்டாடும் நாளில் அவனுக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து மக்கள் விழா எடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்று அ ழைக்கின்றனர். இந்த தினத்தில் மகாபலியும் திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப் பெரும் திருவிழா இது ஒன்று தான். இந்தியாவில் வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள ஓரு சில கோவில்களில் இது சிறப்பான ஒன்று.
காட்கரை அப்பன் கபில முனிவருக்கு நேரடியாக காட்சி கொடுத்தார். கபில முனிவர் விஷ்ணுவின் ஹம்ஸம் என்று கூறப்படுகிறது. தன்னுடைய தாயாருக்கே ஞான தத்துவத்தை விளக்கினார். சமுத்திர ராஜன் அவர் தனது தினசரி தபஸ் செய்ய இடம் கொடுத்தார்.
நம்மாழ்வார் – திருவாய்மொழி – ஒன்பதாம் பத்து – ஆறாம் பதிகம்
நம்மாழ்வார் இந்த எம்பெருமானை பற்றி 11 பாடல்கள் பாடி உள்ளார். எம்பெருமான் கிடைக்காத அளவில் ஆழ்வார் நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் என்று எண்ணியதும், இப்போது விட்டால், ஆழ்வாரை இழந்து விடுவோம் என்று எம்பெருமான், ஹனுமான் சீதா பிராட்டியை இலங்கையில் சென்று தரிசித்த போது, எப்படி 12 ஆண்டுகள் ஸ்ரீராமன் திருமாளிகையில் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்தோம், எல்லா வித விருப்பங்களும் நிறைவேற பெற்றோம் என்று சீதை சொன்னதை போல, எம்பெருமானும் ஆழ்வாரை இந்த பதிகத்தில் அனுவிபவிக்க விரும்பியதை சொல்லும் பாடல்கள்.
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி * பெருகு மால் வேட்கையும் * என் செய்கேன் தொண்டனேன் * தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை * மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே * (9.6.1)
சௌலப்பயம் முதலான குணங்களுக்கு உறைவிடமான திருக்காட்கரை எம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை (மாயங்களை) நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப் பண்டமாகின்றதே என்கிறார். அநுபவத்திற்கு முதன்மையான கருவியான நெஞ்சம் சிதிலமாகின்றது. அநுபவிக்கைக்கும் அநுபவித்துக் களிக்கைக்கும் நெஞ்சுவேணுமே; அது சிதில் ஆனால் என்ன செய்வது. ஆத்மாவால் தாங்க முடியாதபடி, ஆசை பெருகுகின்றதே. ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேலும் பெருகி வருகின்ற காதல், அணுபரிமாணமான ஆத்ம வஸ்துவின் அளவு போல சிறியது இல்லை என்கிறார். நெஞ்சு உருகாதபடி செய்யவும் வேட்கை பெருகாதபடி செய்யவும் ஆழ்வார் தனக்கு ஒரு உபாயம் அறியவில்லை. மேல் தெருவெல்லாம் காவி கமழென்று தொடங்கி, குறுந் தெருவோடு நெடுந் தெருவோடு வித்யாசம் இன்றி, எங்கும் நெங்கழுநீரின் நறுமணம் கமழப் பெற்ற திருக்காட்கரை, வெளியே இந்த பரிமளமானால், உள்ளே ஸர்வகந்தா என்னும்படியானவனுடைய பரிமளம் இன்னும் சிறப்பு.
பரத்துவத்தின் மேன்மை, அர்ச்சையின் எளிமை இரண்டும் சேர்ந்து சொல்லப்படுகிறது. அவனோ மாயன், ஸெளந்தர்யம் ஸெளசீல்யம் முதலிய குணங்களினால் பிறரை பைத்தியம் பிடிக்க வைக்க வல்லவன். அப்படிப் பட்டவனுடைய மாயம், கிட்டின போது தாழ நின்று பரிமாறின சீல குணம்; அதனை நினைக்கும்தோறும் உருகுமால் நெஞ்சம் என்று முதலடியோடே சேர்ந்து அனுபவிப்பது விசேஷம். ஒரு குணத்தையே காலம் என்ற ஒரு தத்துவம் உள்ள வரையில் கணம் தோறும், புதுமை பிறந்து அனுபவிக்க வல்ல ஆழ்வார்; ‘அப்போதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் ‘, என்று அனுபவித்தவர் இந்த ஆழ்வார்.
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் * வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர் * கனை கொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா * நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே. (9.6.2)
திருக்காட்கரை எம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தி இல்லாதவனாக இருக்கிறேன் என்கிறார். உன்னுடைய குண சேஷ்டிதங்களை நினைக்க தொடங்கினால், அந்த நினைவு மாறாதே, சொல்ல முடியாதபடி. பலவீனம் அடைவார். ஆனாலும் மறக்கமாட்டார்; மறுபடியும் நினைக்கத் தொடங்குவர். அந்த நினைவும் வெகு நேரம் சென்று முடியாது. இப்படி எத்தனை காலம் நினைக்க தொடங்குவது ? எத்தனை காலம் சென்றது. இதனை இது நினைதொறும் என்கிறார். நெஞ்சால் நினைக்கவே முடியாத விஷயம் வாயால் சொல்ல முடியாது என்பதை சொல்ல வேணுமோ?
இவர் பேசாமல் இருந்தாலும், இவருடைய வாக்கும் பேசிக் கொண்டே இருக்கும். அப்படி பேசும் போது அந்த பேச்சு செவி வழியாலே உள்ளே புகுந்து இருப்பது, பாவங்களை போக்குகின்ற, குணாதி விஷயமாகையாலே நெஞ்சை அழிக்கும்; நெஞ்சு கட்டுக் குலைந்து நீராக நின்றது. பாடும் போது, என் அரிய உயிரானது வெந்து போயிற்று. அதனால் நான் உனக்கு அடிமை செய்யும் தன்மையை நினைக்க முடிய வில்லை. எல்லாவற்றுக்கும் குளிர்ச்சியைப் பண்ணகூடிய பனி தாமரையை கருகப் பண்ணுவதைபோல சகலர்க்கும் ஆர்த்தியை அழிக்கும் குணங்கள், எனக்கு ஆர்த்தியை விளைவிக்கின்றன என்கிறார். நீ என்னிடம் தாழ நின்று ஆட்செய்து காட்டின சீல குணத்தை நெஞ்சாலும் நினைக்க முடியவில்லை என்கிறார்.
இருத்தும் வியந்து, (திருவாய்மொழி 8.7) என்ற பதிகத்தில் ஆழ்வார், ‘ எம்பெருமான் எல்லா விஷயங்களிலும் முறையாக செய்வதாகவும், ஆனால் ஆழ்வார் விஷயத்தில் மட்டும் முறைமாறி செய்வதாக கூறுகிறார். அதே போல, இந்த பதிகத்திலும் எம்பெருமான் ஆழ்வார் விஷயத்தில் முறை மாறி தாழ்ந்து ஆட் செய்கிறார். சீதா பிராட்டி தன்னுடைய மாமனாரான தசரத சக்ரவர்த்தியின் அரண்மனையில் 12 ஆண்டுகள் சந்தோஷமாக இருந்ததை சொல்லி, அதற்கு காரணம், இராமனின் திருகுணங்களின் பூர்த்தியே ஆகும் என்று சொன்னதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
அதே போல, தசரதன் இராமருக்கு யுவராஜா அபிஷேகம் செய்ய நினத்தபோது, அதை பற்றி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்ட போது, அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர். இருந்தாலும், மேலும் கேட்ட விரும்பி, தசரதன் அவர்களிடம், தானும் 60 ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டிற்கு நல்ல விதமாகவே ஆட்சி செய்கிறேன், தான் ஏன் இப்போது போக வேண்டும், ராமன் ஏன் வர வேண்டும் என்று வினவினார். அதற்கு மக்கள், எல்லா நல்ல குணங்களும் நிரம்ப பெற்ற இராமனை பெற்றது தான் அவன் செய்த தவறு என்று எடுத்து உரைத்தனர். இங்கேயும் ஸ்ரீ ராமனின் குணங்கள் முழுமையாக சொல்ல பட்டன. அப்படிபட்ட குணங்களை கொண்ட எம்பெருமான், இன்று ஆழ்வாருக்காக தாழ வந்து காரியம் செய்வது சொல்லபட்டது.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை * ஈர்மை செய்து என்னா உயிராய் என் உயிருண்டான் * சீர் மல்கு சோலைத் தென்காட்கரை என்னப்பன் * கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன். (9.6.3)
சென்ற பாட்டின் கடைசி வரிக்கு வியாக்கியானமாக இந்த பாட்டு இருக்கிறது. அடிமை கொள்வதாக ஒரு காரணம் சொல்லி, உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி முழுவதுமாக ஆட் கொண்டான். ”வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈர்மை செய்து” என்று சேர்த்து பொருள் கொள்வது சுவை மிக்கது. எம்பெருமான் சேஷியாகவும் ஆழ்வார் சேஷனுமானகவும் உள்ள முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி ஆழ்வாரின் நெஞ்சை இசையப் பண்ணிப் புகுந்து, முறை கேடாகப் பரிமாறப் போகிறேன் என்று முன்னமே சொன்னால் ஆழ்வார் இசைய மாட்டார் என்று எண்ணி, முறை கெடாது பரிமாறுவதாகப் பொய் சொல்லி உள்ளே புகுந்தானாயிற்று. புகுந்தபின் நீர்மையைக் காட்டத் தொடங்கினான். அதாவது, எம்பெருமான் தாழ நின்று பரிமாறத் தொடங்கினான் என்கிறார். அதனால் ஆழ்வாரின் நெஞ்சை ஈடுபடுத்தினான். எம்பெருமான் ஆழ்வாரை உண்ணவும் செய்தான்.
இதே போல, இராமாயணத்தில், தாரை வாலியிடம் கூறுவது, பொன் முதலிய தாதுகளுக்கு இமய மலை போன்று, சௌலப்யம் முதலிய குணங்களுக்கு உறைவிடம், ஸ்ரீ ராமர் என்றும், நாட்டிலே சிலர் குணம் இல்லாதவர் என்றும், சிலர் குணம் நிரம்பியவர்கள் என்றும் கொண்டாடுவது, இந்த இடத்தில் உருவான பொன் என்று அதற்கு தகுந்த விலை போவது போல், இராமன் இருக்கிறான் என்று கூறுகிறார். இதே போல ராமன் பட்டாபிஷேகத்தின் போது, மக்கள் நிறைந்த நெடுஞ்சாலையில் நுழைந்தார், அதைத் தனது பிரகாசத்தால் ஒளிரச் செய்தார், மேலும் அவரது சிறந்த நற்பண்புகளால் அவர்களின் இதயங்களை நினைவுகள், தூண்டினார் என்று சொல்லி, சிறந்த குணம் உடையவர்கள் மக்களின் மனதை தூண்டுவார் என்று ராமாயணம் சொல்கிறது.
இப்படிச் செய்தவன் யார் என்றால், சீர்மல்கு சோலைத் தென்காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன், ஆழ்வாரோடு கலந்து ஆழ்வாருடைய நீர்மையையும் கொள்ளை கொண்டதனால், கடலைக் கழுத்தளவாகப் பருகின காளமேகம் போலே, புகர் படைத்து விளங்குகின்ற திருக்காட்கரையப்பன். அவனுடைய கள்ளத்தனம் அறிய முடியவில்லை. இப்படி தாழ நின்று பரிமாறுகை அஸம்பாவிதம்; நான் மருண்டு பேசுகிறேனோ என்கிறார்.
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க * நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் * வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பன் * சிறிய வென் ஆருயிர் உண்ட திருவருனே. 9.6.4
தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறை தப்பாமல் எல்லாருடன் கலக்கிறவன், நீசனேன் நிறையொன்றும் இலேன் என்று நின்ற எம்பெருமான், என் பக்கம் காட்டும் ஆசை / காதல் இன்னது என்று என்னால் சொல்ல முடியவில்லையே என்று தடுமாறுகிறார். “சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளை அறிகிலேன்” என்று அனுபவித்து பொருள் கொண்டு, “உகப்பாலே செய்தானோ? இந்த வஸ்துவை அழிக்கைக்குச் செய்தானோ? அறிய வில்லை” என்பார் நம்பிள்ளை.
தன்னுள் அனைத்து உலகும் நிற்க, தானும் நெறியாமையால், உலகங்களெல்லாம் தன்னுடைய ஸங்கல்பத்தைப் பற்றிக் கிடக்க, தான் அவற்றினுள்ளே தன் சேஷித்வ முறை தப்பாதபடி நிற்குமவன். இப்படிப்பட்டவன் வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பனாய் இருந்து கொண்டு சிறியேனான என்னுடைய அரிய உயிரை உண்ட ஆசையை என்ன சொல்வேன் என்கிறார். பிரளய காலத்தில் எல்லோரையும் காப்பாற்றியவன் தன்னை மட்டும் அழித்தான் என்கிறார். பகைவர்களை அம்பால் அழிப்பவன் அடியவர்களை குணத்தால் அழிப்பான். அம்புக்கு மருந்து உண்டு, அவனின் குணத்தால் வந்த புண்ணுக்கு மருந்து கிடையாது என்கிறார். அவனுடைய மேன்மைக்கு எல்லை இல்லாதது போல, தன்னுடைய சிறுமைக்கும் எல்லை இல்லை என்று ஆழ்வார் நினைக்கிறார். அவன் இவரை நித்யசூரிகளை விட அவன் அருகே உள்ளார் என்றும், ஆழ்வாரை பற்றி ஆழ்வார் அறியவில்லை என்றும், ஆழ்வார் மேல் விழுந்து கிடந்தார் என்கிறார். திருஅருள் அறிகிலேன் என்று சொன்னது, தன்னுடைய ஸ்வரூப ஞானத்தால் ஆழ்வாரை அழிக்க வில்லை என்றும், விரும்பியே ஏற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார்.
வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பன் என்று சொன்னது, அந்த ஊரில் இருப்பவனுக்கு ஓரு பொருள் மேல் கண் என்றும், அது ஆழ்வாருடைய சிறு ஆருயிர் என்றும் கூறுகிறார்.
திருவருள் செய்பவன் போல என்னுள் புகுந்து * உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் * திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன் * கருவளர்மேனி என் கண்ணன் கள்வங்களே * 9.6.5
எம்பெருமான் என்னை அடிமை கொள்வான் போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக எடுத்துக்கொண்டான். இது என்ன காதல் என்று வியக்கின்றார். கைங்கரியம் கொள்ளுகையையே திருவருள் செய்கையாக ஆழ்வார் திருவுள்ளம் பற்றியிருப்பது. என்னிடத்தில் கைங்கர்ய வ்ருத்தி கொள்ளுகையாகிற திருவருளைச் செய்பவன் போல உள்ளே புகுந்து அருளைத் தான் செய்கை அன்றிக்கே தான் பெற்றான், வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம், என்று நான் பார்த்த அத்தனை; அவன் இங்ஙனே பாரித்துப் பேற்றினை அடைந்தான்.
திருவிருத்த முதல் பாட்டிலே “அழுக்குடம்பு ” என்று தாம் வெறுத்ததை அவன் விரும்பிப் புகுந்தான். இங்கே நம்பிள்ளை ஈடு வியக்கத் தக்கது; “அவன் அங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பி இருந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு, இவர் தன் தேஹத்தை வெறுக்க, அவன் இவருடைய தேஹத்தை விரும்பி புகபார்த்தான் ; இவருக்கு அவனுடைய சகவாசம் ஸ்வரூப ஞானத்திருக்கு (மயர்வர மதிநலம் அளித்ததை சொல்கிறார்) காரணமாயிற்று. அவனுக்கு இவருடைய சகவாசம், இவர் உடலை உயிராக விரும்புவதற்கு (இவர் சிந்தையினுள் புகுந்து இருந்ததை சொல்கிறது) காரணம் ஆயிற்று. இந்த சரீரம் ஆத்மாவை விட்டு தனியாக இயங்காததால் இவர் ஆத்மா அளவும் சென்று உண்டான்.
கருவளர்மேனி என்றது, வளர்ந்த, வளரும், இன்னும் வளர போகும் என்று சொல்கிறது. எப்போதும் ஒரே தன்மையான உருவம் என்கிறது. இவவடிவில் கண்டிலோம் என்றபடி சொல்கிறார்.
அடியவர்களுக்கு எளியவனான கண்ணன், முதலில் அடிமை கொள்வாரை போல புகுந்து, தாழ நின்றதையும், விரோதியான சரீரத்தை கழிக்க என்று சொல்லி புகுந்து, உடலையும் உயிரையும் வேறுபடுத்தி, ஆழ்வார் வேண்டியதை உடலை ஒழித்தல் செய்யாமல், இனிய பொருளாக தான் புகுந்து அனுபவிக்கின்றான். இப்படி முதலில் ஒன்றும் முடிவில் வேறு ஒன்றுமாக இருந்ததை கள்வங்கள் என்கிறார். ஆழ்வார் தன் பேறு என்று நினைத்து இருக்கையில், அவன் பேறு என்று ஆழ்வாரை கொண்டான் என்கிறார். இத்தனையும் செய்தது, எப்போதும் வளர்கின்ற கருவளர்மேனியால், வடிவ வேறுபட்டால், என்கிறார். அடியார்கள் சொல்லுக்கு கட்டுபட்டு இருந்த கண்ணன், என்பதை ‘என் கண்ணன்‘ என்பதால் சொல்கிறார்.
ஆழ்வாரை புஜித்து அவன் செழிப்புக் கொண்டமை அவன் அளவிலே நில்லாமல், அவன் உறையும் திருக்காட்டக்காரை ஊரிலுள்ள சோலைகளிலும் ஏறிப் பாய்ந்தது போலும்.
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும், * அங் கண்ணன் உண்ட என் ஆருயிர்க்கோதிது * புன் கண்மையெதிப் புலம்பியிராப் பகல் * என் கண்ணன் என்று அவன் காட்கரை யேத்துமே. 9.6.6
ஒருவனைக் கள்ளன் என்று அறிந்தால் அவனுடைய சகவாசத்தை விட்டு விலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை அறிந்த நீர் அவனை விட்டு அகல வேண்டாவோ என்று கேட்டுகொண்டு, அவனைக் கண்டவுடன் அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே என்கிறார். எனக்கு அடங்கினவனை போல தோன்றும் கண்ணனுடைய வஞ்சனைகள் எனக்கே செவ்வித்தாக தோன்றும். ஒருநாள் அவன் களவிலே அகப்பட்டால் பின்னை மீளமாட்டேன்; அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவை எல்லாம் மெய்யாகவே தோன்றும் எனக்கு. “எனக்குச் செம்மாய் நிற்கும் என்றதை எனக்குச் சேமமாயிருக்கு மென்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்” என்பது ஈடு.
இந்த என் ஆத்மாவானது, ஆசையின் எல்லையில் நின்று மிக்க காதலை உடையவனான அவனால் உண்ணப்பட்டு விட்டது என்கிறார். அங்கண்ணர் என்பதற்கு அதிக சபலம் உடையவன் என்றும் அதிக காதல் உடையவன் என்றும் சொல்லபடுகிறது. என் ஆத்மா கோது ஆகும் படி செய்தது. கோது ஆன போது மீளவும், பொல்லா நோக்கத்தை உடைய போது மீளவும், உயிர்ப்பித்து இருக்க வேண்டும். (ஆழ்வார் ஆத்மா என்ற) பொருளின் தன்மையால், தானே வரும் என்கிறார். முன்பு எனக்கு அடங்கி இருந்த கண்ணன் இரவு பகல் பாராது, கூப்பிட்டு, அவன் எழுந்தருளி இருக்கின்ற திருக்காட்கரை திருப்பதியை கொண்டாடியது. இராகவன் திருமாளிகையில் பன்னிரெண்டு ஆண்டுகள் உலக வாழ்க்கை இன்பங்களை மிக அதிமாக அனுபவித்ததாக சீதா பிராட்டி திருவடியிடம் சொன்னது போல இங்கே எழுந்து அருளி இருக்கிறார் என்று சொல்கிறார்.
காட்கரையேத்தும் அதனுள் கண்ணா என்னும் * வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும் * ஆட் கொள்வான் ஓத்து என்னுயிர் உண்ட மாயனால் * கோட் குறைபட்டது என்னாருயிர் கோளுண்டே. 9.6.7
என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து, என்னுயிரை முழுவதுமாக உண்டு முடித்தப்பின் பின்னும் உண்ணாதது போலே கிடந்து நின்றான் என்கிறார். அவனைக் காட்டிலும் அவனிருக்கும் ஊரிலே ஆசை மிகுந்து, அவ்வூரையே ஏத்தி நின்றது இவருடைய ஆருயிர். ஊருக்கு அவனாலே ஏற்றமாய், அவனுக்கு ஊராலே ஏற்றமாக இருப்பதாலே ஊரையும் சொல்லி அவனையும் சொல்ல வேண்டி இருத்தலால் அதனுள் கண்ணாவென்னும் திருக்காட்கரைப் பெருமானே, என்று அவ்வூரின் ஸம்பந்தத்தை சொல்லி அவனையும் ஏற்றியது. பரமபதநாதனென்றால் ஏற்றமில்லையே, அந்த இடத்திலும் இந்த இடத்திலும் வாஸத்தாலே ஏற்றம் பெறுவோம் என்று வந்து இங்கே நின்று ஏற்றம் பெற்றான்.
அவ்வூரையும் அவ்வூர்ப் பெருமானையும், நினைத்த மாத்திரத்திலேயே காதல் நோய் அதிகரிக்கும்; அதனால் உடலும் உள்ளமும் கரைந்து உருகும். இப்படி எல்லாம் ஆகைக்கு காரணம் என்ன என்றால், “சென்ற பாடல்களில், திருவருள் என்று மறைத்துச் சொன்னதை வெளியிடுகிறார்” என்பர் நம்பிள்ளை. அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னை சூன்யமாக்கின ஆச்சர்ய பூதனாலே (மாயன்) என் ஆருயிர் உண்டு நிற்கிறார். அவன் கிடைத்த போது, தாழ நின்று, மின்மினி பறக்க செயல் புரிந்த ஆச்சரியம் சொல்லப் படுகிறது. ஆழ்வார் பக்கம், சிறிது அடிமை செய்து, ஆட்கொண்டது, இன்னமும் இருந்து கிலேசப்பட வேண்டியதால் இன்னும் சிறிது ஆட்கொள்ள வேண்டும். இப்படி ஆட்கொள்வதில் சிறிது குறை உண்டு என்றால், என் உயிர் திருக்காட்கரை அப்பனை துதிக்கும். ஒரு முற்று அறிவு இல்லாத தன் மேல் எம்பெருமான் இவ்வளவு காதல் செய்ய கூடாது என்று இவர் சொல்கிறார்.
இந்த பாசுரத்தில் அவனை முதலில் கூறாமல், ஊரை கூறுகிறார். அவனை விட ஊர் சிறப்பு என்கிறார். கண்ணா என்று சொல்லாமல், ‘அதனுள் கண்ணா; என்று சொன்னது, பரத்துவத்தை காட்டிலும் இந்த ஊரில் புகுந்த சிறப்பை சொல்கிறது. என் கண்ணா என்று சொல்லாமல், காட்கரை ஏத்தும் என்று சொன்னது ஊரை ஏத்தும். சென்ற பாசுரத்தில், கண்ணன் பிரதானம், இந்த பாசுரத்தில் ஊர் பிரதானம்.
கோள் உண்டான் அன்றி வந்து என்னுயிர் தானுண்டான் * நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான் * காள நீர் மேகத் தென் காட்கரை என்னப்பற்கு * ஆளன்றேபட்டது என்னாருயிர் பட்டதே. 9.6.8
எம்பெருமானை அநுபவிக்கும் ஆழ்வார்க்கு “எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே” என்னும்படி, தினமும் புது அனுபவம் போல, எம்பெருமான் தனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் தினமும் புதிய அனுபவமாக உள்ளது என்கிறார். நாள் தோறும் என்னை உண்டு கொண்டு இருந்தாலும், பெறாப் பேறு பெற்றாப்போலே, வந்து உண்ணும் இப்பெருமானுடைய குணத்தை என் என்பேன் என்கிறார்.
கோள் உண்டான் அன்றி வந்து என்னுயிர் தானுண்டான் என்பதற்கு மூன்று வகையாக பொருள் சொல்வார்கள். (1) என்னிடத்தில் ஓர் உபகாரமும் கொள்ளாமலே என் ஆத்ம வஸ்துவை அனுபவித்தான். (2) இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஓரு சரக்கு உண்டது அறியாதவன்போல் என் பக்கலிலே ஆசை கொண்டான் (3) என்னாலே தான் கொள்ளப்படாது இருக்க, தான் என்னைக் கைக் கொண்டான்.
ஒரு நாள் உண்டு ‘இது நாம் முன்பு உண்ட பொருள் தானே’ என்று பழமை தோன்றி ருசி இல்லை என்று இருப்பவன் அல்லன். தன்னை முற்றவும் தான் உண்டான், இங்கே தன்னை என்று சொன்னது ஆழ்வாரின் ஆத்மாவை. அது அணு அளவில் உள்ளது, முழுவதும் என்று சொல்லுவதற்கு விஷயமில்லையே என்று கேட்டுகொண்டு, நம்பிள்ளை யருளிச் செய்வது, ஆழ்வாருடைய ஆத்மவஸ்து அணுவாயிருந்தாலும் கூட, அளவு கடந்த பாரிப்புக் கொண்ட ஸர்வேச்வரன் அநுபவிக்குமிடத்து, இந்த அணு அளவுள்ள வஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பதாம். இதற்கு ஒரு உதாரணம், கண்ணபிரான் விதுரர் திரு மாளிகைக்கு எழுந்தருளின போது விதுரர், கண்ணனுக்கு அன்னம் இட்டார் என்பதை சொன்ன முனிவர், விதுரர் இட்ட அன்னத்தை ஏகவசனத்தாலே சொல்லி, கண்ணன் அமுது செய்த அந்த அன்னத்தையே வெகுவாக சொல்லியதில் இருந்து ஓரு விசேஷ அர்த்தம் தோன்றுமே, அது போலவே இதுவும் என்கிறார்.
காள நீர் மேகத் தென் காட்கரை என்னப்பற்கு என்று சொன்னது, எம்பெருமானின் வடிவழகு ஆகும். என்னாருயிர் பட்டதே என்றது அந்த வடிவழகினால் என்றும், ஏ காரம், ஆச்சர்யத்தின் வெளிபாடாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி என்னை அநுபவிப்பவனான திருக்காட்கரையப்பனுக்கு, எம்பெருமானோடு எதிர் அம்பு கோப்பவர்கள் உடம்மை இழப்பதோ, புண்பட்டதுக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ செய்வார்கள்; உயிர் நோவு படுவது என்பது அவர்களுக்கு இல்லை; இது ஆழ்வார்க்கே. அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக்குணம் படுத்தும் பாட்டுக்கும் பெரிய வித்யாசம் உண்டு என்கிறார்.
ஆருயிர் பட்டது எனது உயிர்பட்டது * பேரிதழ்த் தாமரைக் கண் கனி வாயதோர் * காரெழில் மேகத் கேன் காட்கரை கோயில் கொள் * சீரெழில் நால் தடந்தோள் தெய்வ வாரிக்கே. 9.6.9
சென்ற பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஈடுபட்டவர்களான எல்லார்க்குமே இது சகஜம் தான் ; இருந்தாலும், தான் பட்டது யாரும் பட்டு இருக்க மாட்டார்கள் என்கிறார். தான் பட்ட பாட்டை நித்யஸுரிகள் பட்டதுண்டோ? எப்போதும் எம்பெருமானின் திருகுணங்களை அனுபவிக்கும் நித்ய சூரிகளும் இப்படி பட்டது இல்லை என்கிறார். திருமணமான புது பெண்ணிற்கு கணவன் கை பட்டபின் வேர்த்து விடுவது போல், இவர் அனுபவத்தில் புதியவர் ஆதலால் தான் பட்டது யாரும் பட்டது இல்லை என்கிறார். “இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது” என்று எம்பெருமானார் அருளிச் செய்வாராம். ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு பேரிதழ்த் தாமரைக்கண்கள், திருவதரமும் படுத்தினபாடு என்கிறார். வடிவழகு படுத்தின பாடும், கோயில் படுத்தின பாடும் நான்கு திவ்ய தோள்கள் படுத்தின பாடும் என்கிறார். வடிவழகையும் இந்த ஊரில் இருப்பையும் காட்டி தன்னை அழித்ததை சொல்கிறார்.
எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் தெய்வ வாரி என்றும் ஒன்று. வாரி என்னும் வட சொல் ஜலத்தைச் சொல், கடலை குறிக்கும் இங்கு. தெய்வங்கள் எல்லாம் தோன்றுவதற்கு காரணமான கடலை சொல்கிறது. தெய்வங்களை எல்லாம் படைத்தவனுக்கு என்றும், தம்மை தாமே மதிக்கிற தெய்வங்களை படைத்தவன் கண்டீர், யான் எனது என்னும் செருக்கற்ற என்னை அழித்தான் என்கிறார்.
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணிலென்று * ஆர்வற்ற என்னையொழிய என்னில் முன்னம் * பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் * காரொக்கும் காட்கரை அப்பன் கடியனே. 9.6.10
திருவாய்மொழி ஆயிரத்தினுள்ளும் இப்பாட்டு உயிரானது என்று சொல்லலாம். ஈச்வர லாபம் அடியார்களுக்கு புருஷார்த்தமா, அடியவர்கள் லாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமா என்று விவாதம் செய்வது உண்டு. சேதந லாபம் தான் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம். எம்பெருமான் ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றில் பண்ணுவதெல்லாம் ஒரு அடியவன் நமக்குக் கிடைப்பான் என்ற நப்பாசையினால் அன்றோ. கீதையிலே அப்படிபட்ட மகாத்மா கிடைப்பது துர்லபம் அல்லது மிகக்கடினம் என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ. வாசுதேவனே எல்லாம் என்று இருக்கின்ற மஹாத்மா தனக்குக் கிடைக்க வில்லையே என்றன்றோ எம்பெருமான் சொல்லுகிறான். பாடுபட்டு, தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருந்திச் சொல்லுகிற வார்த்தைகள் இவை என்று நன்கு தெரிகிறது.
இப்பாட்டில் “என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் ” என்றது ஸத் ஸம்ப்ரதாய ரஸிகர்களின் நெஞ்சை உருக்கும் வார்த்தை. தன்னோடு கலந்த எம்பெருமானுக்கு தன்னை விட காதல் அதிகமாக இருந்ததாக கூறுகிறார். இந்த ஆழ்வார் வழுவு இலா அடிமை செய்ய வேண்டும் என்றும், திருவனந்தாழ்வான், திருவடி போன்றவர்கள் செய்த எல்லா கைங்கர்யங்களையும் தான் செய்ய வேண்டும் என்று ஆசைபட்டவர் அல்லவா. ‘வாரிக்கொண்டு‘ என்று சொன்னதால், இந்த பொருளில் யாருக்கும் சிறிதும் இல்லாதவாறு உண்போம் என்று சொல்லி, முன் சொன்ன எல்லா கைங்கர்யங்களையும் செய்வதை சொல்கிறார். இங்கு லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரிடம் சொன்ன வார்த்தைகள் நினைவு கூறபடுகின்றன. லக்ஷ்மணன் தான், ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடன் மலைகளில் நடந்து செல்லும் போதும், மற்றும் உறங்கும் போதும், முழித்து இருக்கும் போதும் வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்வதாக சொன்னது. (அயோத்தியா 31.25) உன்னை என்றது, எல்லோருக்கும் தலைவனான உன்னை என்று சொல்வதாக கொள்ளவேண்டும்.
‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் ‘ என்று தாம் ஆசைப்பட்டு இருந்தாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இப்படி பாரித்து இருந்து, தன்னுடைய மனோரதமே நிறைவேற்ற பெற்றான் என்ற அருளிச் செய்தார். கடியன் என்று சொன்னது இன்ப நிலையில் விரைவு உள்ளவன் என்று சொல்கிறார். இருவரால் செயல் என்று இருந்தால், இரண்டாவது மனிதற்கு இடம் கொடுக்க மாட்டான்.
சென்ற பாட்டுக்களில் “என்னுயிருண்ட மாயன் ” என்றும், “என்னுயிர்தானுண்டான் “என்றும், “என்னைமுற்றவுந் தானுண்டான் ” என்றும் எம்பெருமான் உண்டபடியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் வேண்டி இருக்குமே ; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப்பாட்டில். அவனுடைய குணங்களை செயல்களையும் காட்டி என்னை நீராக்கி, குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் என்று சொல்கிறார். தான் என்னை முற்றப் பருகினான் என்று சொல்கிறார். இவருடைய உண்ணும் சோறு பருகுநீர் அவன். அவனுடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் இவர்.
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை * கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் * வடிவமையாயிரத்து இப்பத்தினால் சன்மம் * முடிவு எய்தி நாசம் கண்டீர்களெங்கானலே. 9.6.11
இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதற்கு காரணமான ஸம்ஸாரமும் நசிக்கும் என்று பயனுரைத்து முடிக்கிறார். சென்ற பாட்டின் முடிவில் “காட்கரை யப்பன் கடியனே” என்றார்; இப்பாட்டின் தொடக்கத்தில் “கடியனாய்” என்கிறார்; சொல் ஒன்றாயிருந்தாலும் பொருள் வேறுபட்டிருக்கும். “காட்கரையப்பன் கடியன்” என்ற முன்பு செய்தது, தம்மை அநுபவிப்பதில் விரைவு கொண்டவன் என்றும் “காற்றை விட கடியனாய்” என்றது. இங்கே சொன்னது, கோபத்தை ஏறிட்டுக் கொண்டவனாய்க் கம்ஸனை முடித்ததை சொல்கிறார். எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்ற ஆயிரம் என்கிறார். இந்த பத்து பாடல்களை கற்பவர்கள், தொடர்ந்து வருகின்ற பிறவியானது முடிவு அடைந்து, ஸம்ஸாரமும் அழிந்து விடும் என்கிறார். அப்படிப்பட்டதான இந்த ஸம்ஸாரத்திற்குக் கானலெனும் பெயர் மிகப் பொருந்தும்.
கம்சன் தான் நினத்த நினைவினை அவன் தன்னோடு போகும்படி செய்ததை சொல்கிறார். கொண்ட சீற்றம் விரோதிகளை அழித்தது உபகாரம் என்கிறார். கம்சனை கொன்றதற்கு ஆழ்வார் திருநகரியில் கொடி ஏற்றுகிறார். ஸ்வாமியின் வெற்றிக்கு அடியவர்கள் இருந்த இடத்தில் கொடி ஏற்றுகிறார்.
மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.