A Simple Devotee's Views
அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி | |||
| மூலவர் | லட்சுமி வராகப் பெருமாள் | |||
| உத்ஸவர் | நித்யகல்யாண பெருமாள் | |||
| தாயார் | கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார் | |||
| திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 13 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 13 | |||
| தொலைபேசி | +91 44 – 24272235 / +91- 98405 99310 / +91- 98409 36927 |
கோவில் பற்றி
எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர்.
நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவர் முகத்தில், தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தப் பொட்டு திருமண நிகழ்ச்சியில் மணமகனுக்கு வைக்கும் த்ருஷ்டி பொட்டு போல் இயற்கையாகவே உள்ளது என்பார்கள்.
இங்கு எம்பெருமான், ஒரு திருவடியை பூமியிலும் மற்றொன்றை ஆதிசேஷன் தலையினிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது
தொடையில் தாங்கிக்கொண்டு, அவர் மூலமாகவே, சரம ஸ்லோகத்தை இந்த உலகத்திற்கு உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்று சேவை சாதிக்கிறார். ஆதிசேஷன் அருகில் அவரது மனைவியும் இருக்கிறார்.
360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால், ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் ஒரு பெயர் உண்டு.
எம்பெருமான் ஒருவனே நாயகன், நாம் எல்லோரும் நாயகிகளே என்று சொல்லும் வைஷ்ணவ தத்துவத்தின் பொருளாக, இவ்வுலகத்தில் பிறக்கும் எல்லாரையும் எம்பெருமான் ஏற்றுக்கொள்வதின் அடையாளமாக தினம் ஒரு திருமணம் செய்து நித்யகல்யாண பெருமாளாக உள்ளார் என்றும் சொல்வர்.
வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின்
அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு பெயர் உண்டு.
இன்று கோவளம் என்பதே ஒரு காலத்தில்
பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.
கோமளவல்லித்தாயாருக்கு தனி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், ரங்கநாதர் சந்நிதியும் உள்ளன.
யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.
இது திருஷ்டி பரிகார ஸ்தலம், ராகு, கேது, சுக்கிரன் தோஷ பரிகார ஸ்தலம், மற்றும் திருமண தடை உள்ளவர்கள் பரிகார ஸ்தலம் ஆகும்.
Google Map
திருஇடவெந்தை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருஇடவெந்தை பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
ஸ்தல வரலாறு
க்ருத யுகத்தில், மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக அரசு நடத்தி வந்தான். அப்பொழுது மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான். அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.
அரக்கர்களுக்காக பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து அவனுக்கு மோட்சம் நல்கி சக்தி வாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.
சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவம் செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே ஸ்வர்க்கம் செல்ல எண்ணி தவம் செய்யும் போது, நாரதர் வந்து, அவள் மணமாகாதவள், திருமணம் செய்தால் அன்றி ஸ்வர்க்கம் கிடைக்காது என்று சொல்லி, அங்குள்ள மற்ற முனிவர்களிடம் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டினார்.
அங்கு காலவரிஷி என்ற ஒரு ரிஷி அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு 360 கன்னிகைகளைப் பெற்றார். பருவமடைந்த இவர்களை திருமணம் செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், வாரகப்புரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி என்றும் காலவரிஷிக்குச் சொல்ல அவரும் இங்கு வந்து வராஹமூர்த்தியைக் குறித்து கடும் தவம் செய்தார். இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரிடம் வர, ரிஷி அவரிடம் தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டினார். எம்பெருமானும் அதற்கு சம்மதித்து, தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து கொண்டார்.
கடைசி தினத்தில் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி அவரை இடப்புறம் ஏற்றுக் கொண்டார். அவரே திருவாகிய மஹாலக்ஷ்மி. தனது இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். இடது புறம் திருவை வைத்து எம்பெருமான் சேவை கொடுத்ததால், இந்த திருத்தலம், திரு இட எந்தை என்று மாறி, திருவிடவெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை என்று ஆயிற்று.
இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக் கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் எழுந்தருளினார். அந்த கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார்.
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், * கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெங்கோவலன் * ஏத்துவார்த் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான் * தீர்த்த நீர்த் தடஞ்சோலைசூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே. (பெரிய திருமொழி 1.8.4)
முற்காலத்தில் அர்ஜுனுக்காக பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து வெற்றி பெற்ற பரம்சோதியானவனும், திருவாய்பாடியில் ராசக் கீரீடை செய்து அருளின நம் கோபலனும், தன்னை துதிப்பவர்கள் நெஞ்சில் வசிப்பவரும் திருவிடவெந்தையில் பொருந்திய ஸ்வாமியானவன் எழுந்தருளி இருக்க பெற்றதும், புண்ணிய தீர்த்தங்களாலும், சூழ பெற்றதுமான திருவேங்கடம் அடை நெஞ்சே என்கிறார்.
பெரிய திருமொழி பதிகம் 2.7 ல் வரும் எல்லா பாடல்களில், திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார், திருவிடந்தைப் பெருமானிடத்திலே தன் மகள் காதல் கொண்டு இருப்பதையும், அந்த அநுபவம் கைகூடாததால் பலவகை மாற்றங்களை அடைந்திருக்கிறதை ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு வகையாகப் பேசி ‘இப்படிப்பட்ட இப்பெண்பிள்ளை விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்ன பிரானே!’ என்று கேட்பதாகச் செல்லுகிறது. உண்மையில், ஆழ்வாரே, ‘தாய்’ என்று பாடுவதால், ஆழ்வார் தாமே தம்முடைய காதலை கூறி ‘இப்படிப்பட்ட ஆசைகள் உடைய என் விஷயத்திலே என்னை நிராகரிக்க திருவுள்ளமோ! அன்றி அங்கீகரித்துக்கொள்ளவே திருவுள்ளமோ? இரண்டில் ஓன்றைச் சோதி வாய் திறந்து அருளிச் செய்யவேணும்’ என்று கேட்கிறார் என்றே எடுத்து கொள்ளவேண்டும்.
திவளும் வெண் மதி போல் திருமுகத் தரிவை செழுங் கடல் அமுதினில் பிறந்த * அவளும், நின் ஆகத்திருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால், * குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த * இவளை, உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7 1)
திருவிடவெந்தையில் எழுந்தருளி இருக்கிற எம்பெருமானே, ஒளி வீசிக்கொண்டு இருக்கும் வெளுத்த சந்திரனை போன்று அழகிய முகம் உடையவளாய், நித்ய இளமை உடையவளாய், செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூட பிறந்தவளான அந்த பெரிய பிராட்டியாரும் உனது திருமார்பில் எழுந்தருளி இருப்பதை, இந்த பரகால நாயகி அறிந்திருந்த போதும், உன்னிடத்தில் ஆசையை விடுவதாக இல்லை; கரு நெய்தல் போன்று அழகிய கண்கள் உடையவளும், கொல்லி மலையில் உள்ள அழகிய பதுமை போன்றவளும், உனது திருவடிகளை ஆசை பட்டு கொண்டு இருப்பவளுமான இந்த பெண் விஷயத்தில் என்ன செய்வதாக நினத்து இருக்கிறாய், அதனை வெளியிட்டு அருள் என்று தாயார் சொல்வதான பாசுரம். .
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டணியாள், * குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள் கோல நன்மலர்க்குழற் கணியாள், * வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த, மால் என்னும் மால் இனமொழியாள், * இளம்படி இவளுக்கு என்ன நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.2)
இடவெந்தை எம்பெருமானே, தன்னுடைய ஆசைக்கு தகுதியான பேச்சை உடையவளான இப்பெண்பிள்ளையானவள், மாதுளம் விரை போன்ற பற்களில் உண்டாகின்ற புன்சிரிப்பை தன் தோழிமார்களை நோக்கி, அருளுகின்றாள் இல்லை; சேர்த்தி அழகுடைய முலைகளை சந்தனத்தை கொண்டு அலங்கரிக்கிறாள் இல்லை; தடாகத்தில் உள்ள செவ்விய குவளை மலர் போன்ற கண்களில் மை இட்டு கொள்ளவில்லை; கூந்தலில் அழகிய சிறந்த பூக்களை சூட்டி கொள்ளவில்லை; ரத்னம் முதலிய நல்ல சரக்குகளுக்கு இடமான கடலால் சூழப்பட்ட பூமியை, முன்னொரு கால், அளந்த மால், ஸர்வேஸ்வரன் என்று சொல்லி கொண்டு இருக்கிறாள்; விரகம் பொறாத சுகுமாரமான பாவையான இவள் விஷயத்தில் என்ன செய்வதாக திருவுள்ளம் என்று தாயார் கேட்பதாக அமைந்த பாசுரம்.
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம், * போந்த வெண் திங்கள் கதிர் சுடமெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும், * மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன் * ஏந்திழை இவளுக்கு என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.3)
இடவெந்தை எம்பெருமானே, கலவை சந்தனமும், முத்து வடத்தையும், குழம்பான சந்தனத்தையும், இவள் தனது பெரிய முலைகளில் அணிந்து கொண்டாலும், அவையெல்லாம், நெருப்பாகவே தகின்றன. வெளி வந்த தோன்றின வெளுத்த சந்திரனின் கிரணங்கள் நெருப்பு போல தகிக்க, அதனால் நோவு பட்டு நின்றாள் ; அலை எறிகின்ற கடலானது கோஷம் செய்ய தொடங்கினால் இவளும் கூக்குரல் இட்டு கொண்டு இருக்கிறாள்; மாந்தளிர் போன்ற இவளின் உடம்பின் நிறமும் பசலை நிறமாக மாறி விட்டது; கையில் வளைகளும் சற்றேனும் தங்குவதில்லை. எனது பெண்பிள்ளை ஆகிய இவள் விஷயத்தில் என்ன செய்வதாக திருவுள்ளம் என்று தாயார் கேட்கிறார்.
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும், * ஆழியும் புலம்பும். அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம், * தோழியோ. என்னும் துணை முலையரக்கும் சொல்லுமினென் செய்கேன் என்னும், * ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. பெரிய திருமொழி 2.7.4)
இடவெந்தை எம்பெருமானே, இந்த பெண்பிள்ளையானவள் ஒரு நாழிகை பொழுதானது ஒரு கல்பத்தை காட்டிலும் நெடிது என்கிறாள்; சூரியன் செத்து விட்டான் என்கிறாள்; அடியே தோழி என்று அழைத்து அவளிடம் என்ன சொல்கிறாள் எனில், சமுத்திரமோ கோஷம் போடுகின்றது ; அன்று பறவையோ உறங்குவதில்லை ; தென் திசை காற்றோ நெருப்பை விட கொடியதாக உள்ளது; ஐயோ என்ன செய்வேன் என்கிறாள்; இரண்டு முலைகளையும் பிடுங்கி எறிபவள் போல இருக்கிறாள்; இப்படி பட்ட கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் செய்வேன் ? மிகவும் சாபல்யம் உடைய என் பெண் விஷயத்தில் என்ன உன் திருவுள்ளம் என்று தாயார் கேட்கிறாள்;
ஓதிலும் உன் பேரன்றி மற்றோ தாள் உருகும் நின் திருவுரு நினைந்து, * காதன்மை பெரிது கையற உடையள் கயல் நெடுங் கண் துயில் மறந்தாள், * பேதையேன் பேதை பிள்ளை மை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல், * ஏதலர் முன்னா என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2,7,5)
இடவெந்தை எம்பெருமானே, என் மகள் வாய் விட்டு எதை சொன்னாலும், உனது திருநாமம் தவிர வேறு ஒன்றையும் சொல்கிறாள் இல்லை; உனது திருமேனியை சிந்தித்து உருகி நின்றாள் ; உன் விஷயத்தில் ஆசை பெருகுகிறது என்று ஒன்றும் செய்யாமல் இருந்தாள் ; கயல் மீன் போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்து விட்டாள் ; அறிவு கெட்டவளான இந்த பெண் பிள்ளை; மிகவும் இளம் வயதில் இருந்த போதும், எம்பெருமானுடைய ஸ்வரூப குணங்களில் தெளிவாக இருக்கிறாள்; கொடி போன்ற நுட்பமான இடையை உடைய இம்மகளை பற்றி, எதிரிகள் முன்பாக, என்ன செய்வதாக திருவுள்ளம்; அவமானபடுத்துவாயா அல்லது மரியாதை செய்வாயா என்று தாயார் சொற்களால் திருமங்கைஆழ்வார் கேட்பதாக அமைந்த பாசுரம்.
தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயில் இலங்கை, * வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின் புறும் மயங்கும், * மின்கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென்முலை பொன் பயந் திருந்த, * என்கொடி இவளுக்கு என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.6)
இடவெந்தை எம்பெருமானே, இந்த என் பெண்ணானவள் தனது குல மரியாதைக்கு தக்கபடி, சிறிதும் ஆராயாமல் பெரிய கடலோடும், வளைந்த மதிலோடும் கூடின இலங்கையில் இருந்த வலிய ராக்ஷச குலமானது அழியும்படி, கொடிய போர்க்களத்தில் ஒழித்த செய்தியை கேட்டு, ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்கிறாயே என்று ஈடுபட்டு நின்றாள் ; அந்த பிராட்டிக்கு செய்தது போல எனக்கு செய்ய வில்லையே என்று மூர்ச்சித்து விழுந்தாள் ; மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி மெல்லிய மூலைகளானவை மார்பின் மேல் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக பசலை நிறத்தில் எனது பெண்பிள்ளையின் திறத்திலே என்ன செய்வதாக திருவுள்ளம் என்று தாயார் கேட்கிறாள்;
உளங் கனிந்திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கு அன்பு ஓன்று இலளால் * வளங் கனி பொழில் சூழ் மாலிருஞ் சோலை மாயனே! என்று வாய் வெருவும், * களங் கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த, * இளங் கனி இவளுக்கு என்ன நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.7)
இடவெந்தை எம்பெருமானே, இந்த என் பெண்பிள்ளையானவள் உன்னையே நினத்து இருக்கிறாள்; நெஞ்சு கனிந்து இருக்கிறாள்; உன்னை பற்றியே வாய் பிதற்றுகிறாள்; உன் விஷயத்தை தவிர, என் விஷயத்தில் கூட அன்பு இல்லாதவளாக இருக்கிறாள்; செழிப்பான பழங்களை உடைய சோலைகளால் சூழப்பட்ட திருமாலரின்சோலையில் எழுந்தருளி இருக்கின்ற என் ஆச்சாரியனே, என்று வாய் வெறுவுகின்றாள்; களா பழம் போல இனிதான முறவலையும், அழகையும் உடையவளாய், மிக்க மனக்கவலையையும் இளைப்பும் உடையவளாய் இளம் கன்னியாகிற என் பெண்பிள்ளை திறத்தில் என்ன நினத்து இருந்தாய் என்று தாயார் கேட்கிறாள்;
அலங்கெழு தடக்கையாயன் வாயாம் பற்கழியுமால் என்னுள்ளம் என்னும், * புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கென்னும், * குலங் கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி, * இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.8 )
இடவெந்தை எந்தை பிரானே, கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை உடையவனான கோபால கிருஷ்ணனுடைய திருபவளத்தில் வைத்து ஊதுகின்ற குழல் ஓசைக்கு என் நெஞ்சு அழிகின்றது என்கிறாள்; மனோகரமான அலை எரிகின்ற நீர் பெருக்கை உடைய திருபுட்குழி விஷயமாக பாடுகிறாள்; திருநீர்மலைக்கு போவோம் என்கிறாள்; மிக சிறந்த கொல்லி மலையில் உள்ள பாவை போன்றவளும் வஞ்சி கொடி போன்ற இடை உள்ளவளும் பெரு மழை போல நீர் தாரை பெருக பெற்ற கண்களை உடையவளாய், விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவளாய் என் பெண்பிள்ளை திறத்தில் என்ன நினைத்து இருக்கிறாய் என்று தாயார் கேட்பதாக அமைந்த பாசுரம்.
பொன் குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள், * அன்பினால் உன் மேலாதரம் பெரிது இவ்வணங்கினுக்கு உற்ற நோயறியேன், * மின்குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வனமுலையாளுக்கு, * என்கொலாம் குறிப்பில் என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.9)
இடவெந்தை எந்தை பிரானே, இந்த பெண்பிள்ளையினுடைய மென்மை தங்கிய தோள்கள் ஆனவை, பொன்னிறம் என்று சொல்லத் தக்க பசலை நிறத்தை கொண்டவை. ஒன்றோடுஒன்று போர் செய்ய தக்க இரண்டு மீன்களாகிற கண்களில் உறக்கத்தை மறந்து விட்டாள் ; உன் விஷயத்திலே ஆசையினால், ஆதரவு பெருகி செல்கின்றது; இந்த பெண்ணுக்கு உண்டான வியாதியை நான் அறிந்து இலேன் ; மின்னல் போன்ற கொண்டாடத்தக்க இடையானது துவளும் படியாக மார்பின் மேலே ஒன்றோடு ஒன்று நெருக்கமுற்று வளர்ந்துள்ள அழகிய முலைகளை உடைய இம்மகளுக்கு என்ன ஆகுமோ , இவளை பற்றி உன் திருவுள்ளத்தில் என்ன நினத்து உள்ளாய் என்று தாயார் கேட்கிறாள்;
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே ! அருளாய், * என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை, * மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள், * பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே! (பெரிய திருமொழி 2.710)
ஹம்ஸரூபியாகவும் மத்ஸ்யரூபியாகவும் கூர்மரூபியாகவும் நரஸிம்ஹரூபியாகவும் திருவவதரித்த ஆச்சரியமான எம்பெருமானே, கிருபை செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்ற உன் அடியவர்களுக்கு பரம கிருபை செய்து அருளுகின்ற திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக, நிரந்தரமாக பெரிய மாடங்களையுடைய திருமங்கையில் உள்ளவர்களுக்கு தலைவரும் சிறந்த வேல் என்ற ஆயுதத்தை உடைய திருமங்கை ஆழ்வார் விளக்கம்ஆகிய அருளி செய்த இப்பாசுரங்களை பாடுபவர்கள் எந்நாளும் முந்திய வினைகளை முற்றுமாக அறுத்து பற்று இல்லாமல் இருப்பார்கள் என்று முடிக்கிறார்.
இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாட்டும் வேற்று வாயாலே (தாயார்) பேசி, இதில் கலியன் வாயொலிகள் என்பதால், தம்முடைய பக்திப் பெருங்காதலைத் தாமே பேசிக்கொண்டார் என்பது விளங்கும் . “உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்?” என்று பாசுரந்தோறும் எம்பெருமானை வினவிக் கொண்டேவந்தவர் அகற்கு ஒரு மறுமொழியும் பெறாமல் எப்படி பதிகத்தை முடித்து விட்டார் என்பதற்கு கீழ்கண்டவாறு மறுமொழி பெற்றே முடித்தார் என்று கொள்ளலாம். “நீர் கவலையற்று இரும்; உம்மை நாம் கைவிடுவோமோ? உம்மிடத்தில் பரிபூர்ண க்ருபை செய்வதாகவே திருவுள்ளம் பற்றி யிருக்கிறோம். இல்லை என்றால் அங்கு (பரமபதத்தில்) இருந்து இங்கு வந்து திருவிடவெந்தையிலே நிற்போமோ, அஞ்சாதே கொள்ளும், உமக்கு அருள்புரித்தோம்’ என்று எம்பெருமான் சோதி வாய் திறந்து அருளிச் செய்தது கொண்டு தேறுதலடைந்து இந்த பதிகத்தை முடித்ததார்.
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் *காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை * சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் (சிறிய திருமடல் 2707 2673 -73)
சிறிய திருமடலில் சில திவ்ய தேசங்களை குறிப்பிடும் போது இட வெந்தை என்று இதனையும் ஆழ்வார் இணைத்து கொள்கிறார்.
வல்லவாழ் * பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, * என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம் (பெரிய திருமடல் 119 /2774)
பெரிய திருமடலில் என் மனத்து மாலை என்று இடவெந்தை எம்பெருமானை குறிப்பிடுகிறார்.
மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.