029 திருஅரிமேயவிண்ணகரம் Thiruarimeya vinnagaram

அம்ருதகடவல்லித்தாயார் ஸமேத குடமாடுகூத்தபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஅரிமேயவிண்ணகரம்
மூலவர்குடமாடுகூத்தன் / அமிர்தகடேஸ்வரர்
உத்ஸவர்கோபாலன் (நான்கு கரங்களுடன்)
தாயார்அமிர்தகடவல்லி
திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364 – 275 689, +91 94439 – 85843.
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

இங்கு எல்லாம் அமிர்தம். எம்பெருமான், தாயார், புஷ்கரணி என்று எல்லாம் அமிர்தத்தில் தொடங்கும்.

அடியவர்களின் பகைவர்களை அழிக்கும் பொருட்டே எம்பெருமான் இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பகை நீக்கும் பரந்தாமன் என்றும் சொல்லலாம். பகைவர்களை வெல்ல நினைப்பவர்கட்கு இப்பெருமாள் ஒரு வரப்பிரசாதி.

குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளி குடத்தின் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கொண்டு, குடமாடு கூத்தனாக காட்சி அளிக்கிறான்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

ஸ்தல வரலாறு

உதங்க முனிவர், பாரத போர் முடிந்து துவாரகைக்கு செல்லும் கண்ணனை வழியில் சந்திக்கிறார். கண்ணனிடம் பாரதப்போர் பற்றியும், யார் ஜெயித்தார், ஏன் ஜெயித்தார் என்று கேட்டார். கண்ணனும் எல்லாம் சொல்லி, விதியின் படி தர்மர் வென்றார் என்று சொல்லி முடித்தார். உதங்க முனிவருக்கு இதில் உடன்பாடு இல்லை, இருந்தாலும், கண்ணன் அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால், அவருக்கு அவர் வேண்டியபடி விஸ்வரூப தரிசனம் கொடுத்து, விடைபெற்றான்.

பின் ஒரு நாள், முனிவருக்கு தாகம் எடுத்தபோது, தண்ணீர் கிடைக்காமல் போக, அங்கே வந்த ஒரு இடையன் தன்னுடைய பானையில் உள்ள தண்ணீரை கொடுக்க முயன்றபோது, முனிவர் அவனுடைய தோற்றத்தையும் சுற்றுசூழலையும் பார்த்து தண்ணீரை மறுக்கிறார்.

இடையன் சென்றபின், கண்ணன் அங்கு தோன்றி, இடையன் பானையில் வைத்து இருந்தது அமிர்தம் என்றும், விதியின் படி அது அவருக்கு கிடைக்கவில்லை என்றும், இடையன் இந்திரன் என்றும், சொல்ல, முனிவர் முன்பு கண்ணன் சொன்னதை நினைவில் கொண்டு, கண்ணனை வணங்கி விதிப்படி நடக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். இந்த திருத்தலத்தில் இது நடந்தது என்றும், பானையில் இருந்து ஒரு சில அமிர்தத்துளிகள் இந்த திவ்யதேசத்தில் விழுந்தன என்றும் ஒரு வரலாறு.

இன்னொரு வரலாறு

கருடாழ்வாரின் தாயான வினதாவை, அவளின் தங்கையும் நாகத்தின் தாயும் ஆன கத்ரு தன்னுடைய தந்திரத்தால் அடிமையாக்கிக் கொண்டாள். அந்த அடிமைத்தன்மையில் இருந்து விடுதலையாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட கருடனிடம், கத்ரு தேவலோகத்தில் இருந்து அமிர்தம் வேண்டும் என்று சொன்னாள். கருடாழ்வாரும் தன்னுடைய திறமையால் அமிர்த குடத்தை கொண்டு வந்தார். ஆனால் அங்கு வந்த கண்ணன் அமிர்த குடத்தில் ஏறி நின்று நடனம் ஆடி நாகங்கள் அமிர்தத்தை உண்ணாமல் பார்த்துக் கொண்டான். கருடாழ்வாரும் தன்னுடைய தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்க, கருடனை மன்னித்து, அவன் தாயாரையும் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார் என்பது சரித்திரம்.

கண்ணனின் பிரசித்தமான நடனங்களில் சில, இந்த குடமாடு கூத்து, காளிங்க நர்த்தனம், கோபிகைகளுடன் ராசாலீலா, குன்றமெடுத்து கோவர்த்தன நடனம் ஆடியது.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் எம்பெருமான் தேவர்களுக்காக
அமிர்தம் கடைந்து அசுரர்களை வென்றதையும், கம்சனைக் கொன்றதையும், ஹிரண்யனை இரண்டாக பிளந்ததையும், மாவலியை வாமன அவதாரம் எடுத்து வென்றதையும், இராவணனை கொன்றதையும், பூதனையை அழித்ததையும் சொல்லி, பகைவர்களை வெல்ல அருள் செய்பவர் இவரே என்று முடிக்கிறார்.

குடக்கூத்த” என்ற ஒரு சொல்லினால், குடங்கள் மேல் ஆடினான் என்றும் குன்றை குடையாய் கொண்டும் ஆடினான் என்றும் அர்த்தம் காணமுடியும். காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் (பெரிய திருமொழி, 3.10.8) என்று கூறியதால், ஆழ்வார் பிருந்தாவனத்தில் இருந்து வந்து, குன்றை குடையாய் பிடித்த கோவர்தனகிரியாக அனுபவித்தார் என்று தெரிகிறது.

Google Map

திருஅரிமேய விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅரிமேய விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: