A Simple Devotee's Views
வஞ்சுளவல்லி நாச்சியார் ஸமேத நறையூர் நம்பிபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருநறையூர், நாச்சியார்கோவில் , சுகந்தகிரி , சுகந்தவனம் | |||
மூலவர் | திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வாசுதேவன் | |||
உத்ஸவர் | ஸ்ரீனிவாசன் | |||
தாயார் | வஞ்சுளவல்லி , நம்பிக்கை நாச்சியார் (பெருமாள் பக்கத்தில் திருமண கோலத்தில் நின்ற திருக்கோலம் ) | |||
திருக்கோலம் | நின்ற (தாயாரை மணம் புரிந்து கொள்ளும் நிலையில் ) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 110 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 110 | |||
தொலைபேசி | +91 435 246 7017 ; + 91 94435 97388 |
கோவில் பற்றி
இந்த ஒரு வைஷ்ணவ கோவில் மட்டும் மணிமாட கோவில் முறையில் கட்டப்பட்டது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின் மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும்.இதனை கட்டியவர் சோழ மன்னன் கோச்செங்கட் சோழன், அவன் 63 நாயன்மார்களில் ஒருவர். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்று வழங்கப்படுகிறது. திருநறையூர்தான் கிருஷ்ணாரண்யத்தின் துவக்கமாகும். கிருஷ்ணாரண்யம் என்னும் இந்த கிருஷ்ணன் காடு திருநறையூரில் ஆரம்பித்து திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக் கண்ணபுரம் வரை சென்று திருக்கண்ணங்குடியில் முடிகிறது.
நாச்சியார்
மேதாவி ரிஷியின் வளர்ப்பு பெண்ணான வஞ்சுளவல்லி தாயாரை, எம்பெருமான், சங்கர்ஷ்ண, ப்ரத்யும்ன், அநிருத்த, புருஷோத்தம, வாசுதேவ என்ற ஐந்து உருவங்களில் மணந்து கொள்கிறார். அப்போது மேதாவி மகரிஷிக்கு எம்பெருமான், நாச்சியாரே (தாயார்) அனைத்திலும் முதலிடம் பெறுவார் என்று ஒரு வரம் அளித்தார். அதனால் இந்த ஸ்தலம் நாச்சியார்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தாயார் கர்ப்பகிரஹத்தில் எம்பெருமானுக்கு சற்று முன் மத்தியில் பிரதானமாக காட்சி அளிப்பார்.
இவ்வூரில் திருவெள்ளறையில் பார்த்தது போல், நாச்சியார்க்கே முதல் ஸ்தானம். அங்கு ஸ்ரீதேவி தாயார், இங்கு நீளாதேவி தாயார் பிரதானம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமிதேவி. ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியார் திருமாளிகை என்றும், திருநறையூரை நாச்சியார் கோவில் என்றும் அழைப்பர்.
நறை என்றால் தமிழில் தேன், மணம் என்னும் இருபொருள்களும் உண்டு. திருநறையூர் என்பதற்கு திருவாகிய இலக்குமி தேவிக்கு தேன்போல் இனிக்கும் இருப்பிடமாயிற்று என்று பொருள் கூறுவார்கள்.
நறையூர் நம்பி
சங்கர்ஷ்ண, ப்ரத்யும்ன், அநிருத்த, புருஷோத்தம, வாசுதேவ என்ற ஐந்து உருவங்களுடன் கர்ப்பகிரகத்தில் இன்றும் திருநறையூர் நம்பி காட்சி கொடுக்கிறார். எம்பெருமானை திருமணக்கோலத்தில் நாள்தோறும் பிரம்மனால் பூஜிக்கப்படும் தலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த திவ்யதேசத்தில், 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்ள் உள்ளன என்றும் அவை எம்பெருமான், ஒரு பக்தனுக்காக அருளியவை என்றும் சொல்கிறார்கள்.
கருடசேவை
எம்பெருமானின் கல் கருட வாகன சேவை மிகவும் சிறப்பு பெற்றது. கல் கருடனுக்கு தனி சன்னதி உள்ளது. கல்லான கருடன் முதலில் சன்னதியில், நான்கு பேர்களாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிக கனத்துடன் முடிவில் 64 பேர்கள் தூக்கவேண்டிய அளவிற்கு கனம் கூடி, மீண்டும் சன்னதிக்கு வரும்போது 4 பேர் அளவுக்கு கனம் குறையுமாம்.
எம்பெருமான் கருட வாகனத்தில் உலா வரும் போது, தாயார் எம்பெருமானுக்கு முன்னால் அன்னபறவை (ஹம்ஸ) வாகனத்தில் எழுந்தருளுவார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.
ஆழ்வார்
இந்த எம்பெருமான் தான் திருமங்கையாழ்வாருக்கு ஸமாச்ரயணம் (பஞ்ச சம்ஸ்காராம்) செய்து வைத்தார். திருநறையூர் நம்பி, சங்கு, சக்கரம் இவற்றை மற்ற எம்பெருமான்கள் போல் அல்லாமல் கரம் மாற்றி பிடித்து இருப்பார். திருநறையூர் நம்பியை உற்று நோக்கினால் அவர் சற்றே முன்வந்து பஞ்ச ஸமஸ்காரம் செய்யும் தோற்றத்திலேயே இருப்பது போலத் தோன்றும். இது திருமங்கை ஆழ்வாருக்கு சங்கு சக்கர பொறி ஒற்றியதை சொல்லும்.
நம்பி என்றால் முழுமையானவர், பூர்ணர்; நற் குணங்களில் முழுமையானவர் என்று பொருள். திருக்குறுங்குடி எம்பெருமானுமும், இத்தலத்து எம்பெருமானும் மட்டுமே திருக்குறுங்குடி நம்பி என்றும் திருநறையூர் நம்பி என்றும் அழைக்கப்பட்டு நம்பி என்ற புகழ் பெறுகிறார்கள்.
வைணவ சம்பிரதாயத்தில் நம்பி என்னும் சொல் ஆச்சாரியர்களைக் குறிக்கும். இத்திருப்பெயரை முதலில் மதுரகவியாழ்வார் தமது ஆச்சார்யரான நம்மாழ்வாருக்குச் சூட்டினார். “நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால் ” என்றார். அவ்விதமே தமக்கு வைணவ லட்சணத்தைப் பொறித்து மந்திர உபதேசம் செய்த இந்த (ஆச்சார்யனை) எம்பெருமானை திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பி என்றழைத்தார்.
எம்பெருமான் ஆச்சர்யாராக இருந்த ஸ்தலங்களில் பத்ரிநாத்தும் திருநறையூரும் முக்கியமானவை பரமாத்மா, தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து பத்திரிநாத்தில் எம்பெருமானே திருமந்திரத்தை உலகிற்கு அருளினான் என்று சொல்வர். பரமாத்மாவே ஆசிரியனாகவும், சீடனாகவும் இருந்ததால், பத்திரி எம்பெருமானை
முழுமையான ஆச்சார்ய லட்சணம் பெற்றவன் என்று சொல்ல முடியாது. ஆனால் பரமாத்மாவான நறையூரானோ தாம் முழு லட்சணம் பெற்ற ஆச்சார்யனாய் இருந்து நீலன் என்னும் பக்தனை (ஜீவாத்மாவை) சீடனாகக் கொண்டு பஞ்ச ஸமஸ்காரம் செய்து திருமங்கையாழ்வாராக ஆக்குகிறார்.
திருமங்கையாழ்வார் இந்த பெருமானுக்கு நூறு பாசுரங்களுக்கு மேல் பாடினார். சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரண்டு பிரபந்தங்களும் இந்த எம்பெருமானுக்கே பாடினார். இவ்விதம் திருமங்கையாழ்வாரிடம் மடல் பெற்றது இத்தலத்திற்குண்டான தனிச் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் இத்தகைய சிறப்பு வேறெந்த தலத்திற்கும் இல்லை.
திருவரங்கம் கோவிலுக்கு மதில் திருப்பணிகள் செய்த பொழுது திருவரங்கன் மகிழ்ந்து ஆழ்வாருக்கு மரியாதைகள் செய்ததாகவும், அப்படியே ஆழ்வாரிடம் இந்த மடல்களை பற்றி சொல்லி, அதே போல் மடல் ஒன்று தனக்கும் இயற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க, எம்பெருமான் முன் பணிந்து வாய் புதைத்து நின்று ‘நம்பிக்குத் திருமடலும், தேவரீருக்கு திருமதிலும் அமைந்தது, மதில் இங்கே மடல் அங்கே ” என்று கூறியதாக ஒரு ஸ்வாரசியமான தகவல் ஒன்று உண்டு.