Please click here to view the English Version, thanks
இதுவரை
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும், “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
- ஒரு நல்ல குணமும் இல்லை என்று, 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும்,
- அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்றும் (போதெல்லாம் போது கொண்டு 26),
- இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்றும் (குரங்குகள் மலையை நூக்க 27),
- உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்றும்,
- ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஆழ்வார் அருளியதை பார்த்தோம்.
அடுத்த ஐந்து பாடல்களில்,
- தன்னிடம் எல்லாவிதமான கெட்ட குணங்களும் உண்டு என்பதை, தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், (மனத்திலோர் தூய்மையில்லை 30),
- தன்னால் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை என்று இந்த பிறவி வீணானதை நினைத்து (தவத்துளார் தம்மில் அல்லேன் 31) வருந்துவதும்,
- எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக அவன் முன் வந்து நின்றது (ஆர்த்து வண்டு அலம்பும் சோலை 32) தன்னுடைய மூடத்தனம் என்றும்,
- தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாகவும் (மெய் எல்லாம் போக விட்டு 33),
- எல்லோர் நெஞ்சத்திலும் இருந்து எல்லாவற்றையும் அறியும் அவன் முன், அடிமை செய்பவன் போல தான் போட்ட கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக (உள்ளத்தே உறையும் மாலை 34) நினைத்ததையும் பார்த்தோம்.
ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில்,
- முதலில், ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளியதையும்,
- இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் (மழைக்கன்று வரை(36) என்பதையும் பார்த்தோம்.
- இருந்தும், ஆழ்வாரின் மனம், ‘தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். அவனின் குளிர்ந்த பார்வை தானே நமக்கு வேண்டியது , ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று அவன் சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ (37) சொல்கிறார்.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள்போகவிட்டு (38)என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்ய த்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. உபாயாந்தரங்களில் பற்று அறுத்து, அதாவது பேற்றுக்கு எம்பெருமான் ஸாதனமே ஒழிய, நாம் செய்யும் காரியங்கள் ஸாதனமல்ல என்று அஹங்காரத்தை விடுத்து, உன் திருவாசலில் கிடக்கும் பரமபாகவதர்கள் விஷயத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கிறது என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
இனிவரும் ஆறு பாடல்களில் (39-44), ‘மேம்பொருள்‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறார்.
அரங்கனே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாத, நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்கின்றாய் என்று ‘அடிமையில் குடிமை‘ (39) பாசுரத்தில் சொல்கிறார்.
எத்தனை பாவங்கள் செய்தவரும், மேம்பொருளில் சொன்ன ஞானத்தை உணர்ந்தவர்கள், பாவங்களின் கர்ம பலம் அனுபவிக்க வேண்டாம் என்று அடுத்த பாடலான ‘திருமறு மார்வ‘ (40) பாசுரத்தில் சொல்கிறார். எம்பெருமானுடைய அன்புக்கு இவ்வளவு பாத்திரமானவர்கள், ஒரு போதும் பாவங்கள் செய்ய மாட்டார்கள் என்று அறிய வேண்டும்.
சென்ற இரண்டு பாசுரங்களில், ‘இவர்களுக்கு பிறப்பினாலோ, ஒழுக்கத்தினாலோ வரும் குறைகள் இல்லை’ என்றார். ‘ ‘வானுளார் அறியலாக’ (41) என்ற பாசுரத்தில், ‘குறை இல்லாமை மாத்திரம் அன்று ; இவர்களுடன் தொடர்பு உள்ள ஸம்ஸாரிகளும், அந்த தொடர்பே காரணமாக பரிசுத்தி அடையும்படியான சிறப்பும் உடையவர்கள் இவர்கள்’ என்கிறார்.
பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தவர்களுக்கு, பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் தாழ்வு உடையவர்களானாலும் ‘மேம்பொருள்’ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்கள், ஸர்வேஸ்வரனைப் போல பூஜிக்கத் தக்கவர்கள் என்றும், ஞானம் கொடுப்பது, கொள்வது போன்றவைகளை செய்யவேண்டும் என்றும் ‘பழுதிலா ஒழுகலாற்று’ (42)ல் சொல்கிறார்.
பிறப்பு ஒழுக்கம் முதலானவற்றால் வந்த பெருமைகளுக்கு மேலே ஞான பெருமையையும் உடைய ஜாதி அந்தணர்கள், பிறப்பாலும் ஒழுக்கத்தாலும் வந்த பெருமை இல்லாத ஞான பெருமை உடைய பாகவதர்களை, பகவத் பிரபாவத்தால் பிரசாதமாக, அவர்களுக்கு வந்த ஞான விஷயங்களை புத்தியில் கொள்ளாமல், கர்மத்தின் விளைவால் வந்த பிறப்பினால் வந்த தாழ்வை மட்டும் கருத்தில் கொண்டு, அவர்களை தாழ நினைத்தார்கள் ஆகில், அந்த நொடியே அவர்கள்தான் சண்டாளர் என்பது ‘அமரவோ அங்கம் ஆறும்’ (43) பாசுரம்.
இனி அடுத்த பாசுரம்
பாசுரம் 44
பெண்ணுலாம் சடையினானும் பிரமனுன் உன்னைக் காண்பான் * எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப * விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த * கண்ணறா உன்னை யென்னோ களை கணாக் கருதுமாறே. (44)
கங்கை சஞ்சரிக்கும் படியான சடையை உடையவனான சிவனும் பிரம்மாவும் உன்னைப் பார்ப்பதற்காக எண்ண முடியாத ஊழி காலமாக தவம் செய்தவர்கள்; (காண முடியாததால்) வெட்கித் தலை கவிழ்ந்து இருக்க அந்தக் காலத்திலே (முதலை வாயில் விழுந்த) ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்காக (அவன் துன்பப் படுகின்ற மடுவின் கரைக்கு) வந்து, நித்ய சூரிகளும் ஆச்சரியப்படும்படியாக, கிருபை செய்து அருளிய (எனக்கு அருள் செய்யாததால்) ‘கண்ணற்றவனான உன்னை’ எல்லோருக்கும் தஞ்சமாக நினைப்பது எவ்வாறோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மேம்பொருள் பாசுரத்தின் பின் சொன்ன பாசுரங்களில் பாகவதர்களுக்குச் சொன்ன பெருமைகள் பொருந்தியவையே என்பதை, பிரமன் முதலானார்க்கும் பெறுவதற்கு அரிய பேற்றை ஒரு விலங்கான கஜேந்திரன் பெற்றான் என்னும் சரித்திரத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று கூறி, தாம் பெற்ற பேற்றை உணர்த்தி, இப்பிரபந்தத்தின சாரத்தை இந்த பாடலில் சொல்கிறார்.
இனி சற்று விரிவாக
பெண்ணுலாம் சடையினானும்
கங்கையான பெண் உள்ளே சஞ்சரிக்கும்படியான விஸ்தாரமான ஜடை உடைய சிவன் என்பது இதன் பொருள். கங்கையை ஜடைக்குள்ளே அடக்கின பெருமையைக் கொண்டு, ஸர்வேஸ்வரனை கண்டு விட முடியுமோ என்று கருத்து. ‘ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும், கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே‘ (நான்முகன் திருவந்தாதி 4), அதாவது கங்கையை தனது சடையில் மறைத்து தாங்கிக் கொண்டு இருக்கின்ற சிவனும், தேவாதி தேவனான ஸ்ர்வேஸ்வரனுடன் சமம் என்று சொல்லும் பாமரரின் சொல் அங்கீகரிக்க முடியுமா, என்ற திருமழிசையாழ்வாரின் கருத்தையும் இங்கே அனுபவிக்கலாம்.
பிரமனும்
அந்த சிவனை படைத்தவனான பிரமனும் என்கிறார்.
கர்த்தா ஸர்வஸ்ய லோகஸ்ய பிரஹ்மா பிரஹ்மவிதாம் வர : (ராமாயணம் யுத்த காண்டம், 120-3) (எல்லா உலகங்களையும் படைப்பவரும், பிரஹ்மஞானிகளுள் தலை சிறந்தவருமான பிரம்மா) என்கிறபடியே மற்ற ஜீவர்களுக்கும் அறிவளிக்கும் பெருமையைக் கொண்டு, பிரம்மா எம்பெருமானை அடைந்து விட முடியுமா என்று கேட்கிறார். படைக்கும் கடவுளாயிருப்பது கொண்டு தன்னால் படைக்கப் பட்டவர்களையும் அவர்கள் புண்ணிய பாவங்களையும் அளவிட்டு அறியலாமே, தவிர அளவிட முடியாதவனான எம்பெருமானை அளவிட்டு அறிய முடியுமோ என்கிறார்.
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன் அடிக்கமலந் தன்னை அயன் (முதல் திருவந்தாதி 56), அதாவது, பிரம்மாவானவன், மணம் மிகுந்த எம்பெருமானின் நாபிக் கமலத்தில் பிறந்து அங்கேயே வாசம் செய்து கொண்டு இருக்கின்ற போதும், அந்த எம்பெருமானின் திருவடிகளை சேவித்தது இல்லை என்று பொய்கையாழ்வார் அருளி செய்கிறார்.
உன்னைக் காண்பான்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ * ஆனந்தம் ப்ரஹ்மணோ விதவாந் நபிபேதி குதஸ்ச நே தி (தை உப 9-1) – எந்த ப்ரஹ்மத்தினிடம் இருந்து, மனத்துடன் கூடிய வாக்குகள் (அதை) அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ, அந்த பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன், எதனிடமும் பயப்பட மாட்டான். அதன்படி, வேதங்களாலும் உன் குணங்களில் ஒன்றான ஆனந்தத்தின் எல்லையைக் கூட காண முடியாதபடி பெருமையை உடையவன் நீ.
ரிக் வேதம், அந்த பரமபுருஷனை, மாமிசத்திலான இந்த கண்கள் கொண்டு காண முடியாது என்று கூறுகிறது.
இவனைக் கண்ட பின்பு அன்றோ இவனிடம் இருந்து ஒரு பயனைப் பெறுவது. தானே தன்னைக் கண்ணுக்கு விஷயமாக்கிக் காட்டினான் அல்லாமல் எத்தனை உயர்ந்த ஞான சக்திகளை உடையவர்களாலும் தம் திறமையினால் காண முடியாதவனாய் இருப்பவன் இவன் . இவனுடைய உருவம் கண்ணால் காணும்படி இருக்காது என்றும் ஒருவரும் இவனைக் கண்ணால் காண்பது இல்லை என்றும் உபநிஷத் சொல்கிறது;
‘எம்பெருமான் குற்றமற்றவர்; அடைய அரியவர்; தமக்கு ஒரு ஆதாரம் அற்றவர்; அழிவற்றவர்; தடையற்ற மிக உன்னதமான சாகசத்தை உடையவர்; ஸ்ர்வேஸ்வரராகிய உங்களிடம் ஈடுபட்டு இருக்கும் எல்லோருக்கும் ஆதாரமாக இருப்பவர். ஜோதிகளுக்கும் ஜோதியாக இருப்பவர்; குறைவற்றவர்’ (விஷ்ணு புராணம்)
இராமாயணத்தில் தாரை வாலி வதத்திற்கு, ஸ்ரீ ராமனை நிந்ததிக்க வரும் போது, ஸ்ரீ ராமனைப் பார்த்து, ‘உன்னை நேரில் பார்க்கிறேன், ஆனால் இன்னார் என்று அறியேன்’ என்று சொல்கிறார். அதாவது, நேரில் பரமாத்மாவான ஸ்ரீ ராமனை தரிசித்த பின்பும், உன்னை அறிய முடிய வில்லை என்கிறாள்.
பிரம்மமாகிய அவன் மாமிச கண்ணால் காண அரியவன் என்று விஷ்ணு தர்மம் என்ற சாஸ்திரம் கூறுகிறது.
நித்யசூரிகள் எப்போது அனுபவித்தாலும் எல்லை காண முடியாத உன்னை காண்பதற்காகவே தொடர்ந்து கைங்கர்யம் செய்து கொண்டு வருகின்றார்கள்.
பிறரால் அறிய முடியாதவனாய் இருப்பதோடு மட்டும் இல்லாமல், உன்னாலும் உன்னை எல்லை காண முடியாதபடி இருக்கும் போது இவர்களால் உன்னை எல்லை காண முடியமோ என்பதை தனக்கும் தன் தன்மை அறிவரியான் (திருவாய்மொழி 8.4.6) என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்தார்;
திருமங்கை ஆழ்வாரும், பெரிய திருமொழியில் (10.10.9) ‘இன்னார் என்றறியேன், அன்னே. ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை, இன்னார் என்றறியேன்’ என்று கூறுவதையும் இங்கே மனதில் கொள்ளலாம்.
இப்படி, வேதம், உபநிஷத், புராணம், நித்யசூரிகள், ஆழ்வார் என்று எல்லோராலும் சொல்லப்பட்ட காண அரியவன் தான் இந்த உன்னை என்று சொல்லப்பட்ட அவன்.
பிரமனுக்கும் சிவனுக்கும் அடைமொழிகள் கொடுத்த ஆழ்வார் எம்பெருமானைக் குறிப்பிடும்போது அடைமொழிகள் ஒன்றும் இல்லாமல், ‘உன்னை‘ என்று சொல்லி உள்ளார். பிரமன் சிவன் போன்றவர்களை உயர்த்தி சொல்லி, அவர்களால், இவனை காண முடியவில்லை என்கிறார். திருவாய்மொழி(2.7.12)ல் ஸ்வாமி நம்மாழ்வார் அருளியபடி ‘தாமோதரனுருவாகிய சிவற்கும் திசைமுகற்கும், ஆமோதரமறிய ‘ எளிமைக்கு எல்லை நிலமான தாமோதரனையே அறிய முடியாதவர்கள் பெருமைகள் பல நிறைந்த எம்பெருமானை, அவனே காட்டாவிட்டால் அறிய முடியுமோ என்கிறார்.
அப்படி, அவனை அவனே காட்ட, கண்டவர்கள் உண்டோ என்று வினவி, காட்டவே கண்ட பாத கமலம் என்ற பெருமை வாய்ந்த திருப்பாணழ்வார், மணக்கால் நம்பி கேட்டுக்கொண்டதால் ஆளவந்தார்; இராமானுஜர் கேட்டுக்கொண்டதால் பிள்ளை உறங்காவல்லி தாசர் ஆகியோருக்கு தன்னை காட்டி அருளிய பெரியபெருமாள் சரித்திரங்களை மேற்கோள் காட்டப்படுகின்றன.
பகவத் கீதை (4.6)ல் அஜோபி ஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபி ஸந் |
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்ட்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா || 4.6 என்கிறார். அதாவது ‘பிறப்பில்லாத தன்மையனாயிருந்தும், எல்லோருக்கும் ஈஸ்வரனாயிருந்து கொண்டு, என் ஜ்ஞான சக்தி முதலான கல்யாண குணங்களுடனேயே ஒன்றையும் விடாமல் நான் அவதரிக்கிறேன்’. பகவான் அவதரிக்கும் பொழுதெல்லாம், அவனுடைய ஞான சக்தி முதலிய குணங்களில், பூர்ணமாக பிறக்கிறான். அப்படிப்பட்ட அவனை அறிவது அரிதே.
பார்ப்பது, அறிவது பின்பு அடைவது என்பதுதான் சரியான வரிசை என்று கொண்டால், இங்கு பிரம்மத்தை காண்பதே அரிது என்று சொல்லிய பிறகு, அறிவதும் அடைவதும் துர்லபம் என்று சொல்லவும் வேண்டுமோ.
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
நெடுங்காலம் தவம் புரிந்து ‘நாம் யாரைக் குறித்துத் தவம் செய்கிறோமோ அவன் வரவில்லையே’ என்று வெட்கம் கொண்டு தவத்தில் இருந்து மீண்டு இருப்பது இதன் அர்த்தம். ஹிரண்யன், ராவணன் போன்றோர் தங்களைக் குறித்து செய்யும் தவத்துக்குப் பலம் கொடுக்குமவர்கள் அன்றோ இவனைக் குறித்துத் தவம் புரிகிறார்கள். தாமரையில் பிறந்த நான்முகன் ஆயிரம் கொடி யுகங்கள் விஷ்ணுவை ஆராதித்து, மறுபடியும் மூவுலகிற்கும் பதியாய் இருக்கும் தன்மையை அடைந்தான் என்று கேள்விப் படுகிறோம் என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டது.
வெள்கி நிற்ப என்பதற்கு ‘இப்படி வீணாக கற்பகோடி காலம் தவம் புரிந்து நின்றதைக் காட்டிலும் ஒரு முதலையின் வாயில் விழுந்து இருந்தால் மேலாக இருந்து இருக்குமே’ என்று வெட்கம் கொண்டு நிற்கிறார்கள் என்று கருத்து. மேலான ஆபத்தை அடைந்தவனும் கைங்கர்ய செல்வத்தை உடையவனும், நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனதாலேயே ஹரியை நினைத்தான் என்று விஷ்ணு தர்மத்தில் சொல்லியபடி ஆபத்தை முன்னிட்டு சரணம் புகாமல் பெறு முயற்சி செய்வதாகிற தவத்தைச் செய்தது தப்பாகி விட்டாதே என்று லஜ்ஜை கொண்டு நிற்கிறார்கள் என்கிறார்.
விண்ணுளார் வியப்ப வந்து
பரமபதத்தில் உள்ள நித்யசூரிகள் ‘பிரமன் முதலானோர் இப்பாடு படும்போது, அவர்களையும் எங்களையும் அலட்சியம் செய்து ஒரு விலங்கின் காலிலே அரைகுலையத் தலை குலைய வந்து விழுவதே, எத்திறம், எத்திறம் என்று ஆச்சர்யப்படுவதை சொல்கிறார்.
கஜேந்திர ஆழ்வானுடைய தீனக்குரல் செவியில் பட்டதும், சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட ஹஸ்தாவலம்பத்தை கவனிக்காமலும், கொண்டு வரப்பட்ட ரத்ன பாதுகையை அணிந்து கொள்ளாமலும், ‘இது என்ன அதிசயம்’ என்று அந்தப்புரத்தில் உள்ளவர் வியக்கும்படியும், வாகன அலங்காரங்கள் இல்லாத பெரிய திருவடியின் மேல் ஏறுகின்ற எம்பெருமானுடைய வேகத்தின் பொருட்டு என் நமஸ்காரம் என்று ரங்கராஜஸ்தவத்தில் பாராசர பட்டர் அருளுகிறார்.
வெள்கி நிற்பவர்களைக் காட்டிலும் வியப்பவர்கள் வேறுபட்டு இருக்க வேண்டுமாகையால், ‘விண்ணுளார்’ என்றது, பிரமன் முதலானவரைக் காட்டிலும் வேறுபட்ட நித்யசூரிகளைக் காட்டுகிறது.
வந்து என்றது, கஜேந்திரன் துன்பம் அடைந்த மடுவின் கரையிலே வந்ததைச் சொல்கிறது. ‘சென்று’ என்று கூறாமல், ‘வந்து’ என்றதால் அடியானான ஆனை இருந்த இடமே தன்னுடைய இடம் என்றும், அவனுக்கு உதவியது தான் காரியம் என்றும் எம்பெருமான் நினைத்து இருந்ததைக் காட்டுகிறது.
ஆனைக்கு அன்று அருளை யீந்த
ஆனைக்கு என்று சொன்னது ‘பிரமன் முதலானவர்கள் தேவ ஜாதியில் பிறந்தவர்கள்; கஜேந்திரன் விலங்கு ஜாதியில் பிறந்தவன் என்று பிறப்பில் உள்ள ஏற்ற தாழ்வைப் பார்க்காமல், ஆபத்தையே பார்த்து காப்பாற்றியதை சொல்லியது.
அன்று என்பது, தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள தன் பலம் உதவாது போன அன்று என்று சொல்கிறது. கஜேந்திரன் கரையை நோக்கி இழுக்க, முதலை ஜலத்தை நோக்கி இழுக்க, இந்த இருவருக்கும் தேவ வருடங்களில் ஆயிரம் வருடம் சமமாக யுத்தம் நடப்பதை விஷ்ணு தர்மம் சொல்கிறது. இப்படி தான் முயற்சியால் தன்னைக் காத்துக்கொள்ள முயன்ற காலத்தே, இந்த கஜேந்திரனுக்கும், தமக்கு நன்மையை விரும்பித் தவம் செய்த பிரமன் முதலானவர்க்கும் வித்தியாசம் இல்லாமல் இருந்தது. தன் முயற்சியில் இருந்து கஜேந்திரன் பின்வாங்கிய பிறகு அவர்களைக் காட்டிலும் இவனுக்குப் பெரும் சிறப்பு ஏற்பட்டது.
அன்று ஒரு முதலையின் வாயில் அகப்பட்ட யானைக்கு அருள் புரிந்தாய்; இன்று சப்த, ரஸ, கந்த முதலான ஐந்து முதலைகளான புலன்களிடம் அகப்பட்ட எனக்கு அருள் புரிவாய்; ஆனை ஆயிரம் வருடம் துன்புற்றது; நான் பற்பல காலங்களாக, பிறவிகளாக துன்புறுகிறேன்; அவன் அகப்பட்டது ஒரு சிறு மடுவிலே ; நான் அகப்பட்டதோ பிறவி என்னும் பெரும் கடலிலே; இப்படி எந்த விதமாகப் பார்த்தாலும் கஜேந்திரனைக் காட்டிலும் நான் பேராபத்தில் உள்ளேன்; மிகவும் அருள் புரியத் தக்க எனக்கு அருள் புரிய வேண்டும் என்று தொண்டரடிப்பொடிஆழ்வார் வேண்டுவதாக கருத்து.
அருளைஈந்த
அருளுவது என்பது,
- கஜேந்திரனை முதலை வாயில் இருந்து எடுத்து
- அவனுடைய புண்பட்ட காலை தன் திருக்கைகளால் தடவிக் கொடுத்து
- வஸ்த்ரத்தை வாயினால் ஊதி ஒத்தடம் கொடுத்து
- அவனுக்கு ஆறுதல் அளித்து
- அவன் கையில் இருக்கும் பூவைத் தான் திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளுதல் என்கிறார்.
அப்படியே என்னையும் சப்தம் முதலான விஷயங்களில் இருந்து, தான் இழந்த காலத்துக்கும் சேர்த்து ஆறுதல் அளித்து அன்றோ அடிமை கொள்ளப் போகிறான் என்று கருத்து.
கண்ணுறா
கண்ணில்லாதவனான என்று பொருள்; கண்ணறாய் என்று எடுத்துக் கொண்டால், கண் அற்றவனே என்று அழைக்கும் சொல் ஆயிற்று. அவன் தமக்கு உதவிய நேரத்தில் உகப்பு அளவற்று போனதால் சொன்ன வார்த்தை தான் கண்ணில்லாதவன் என்பது. இது இகழ்வது போல புகழ்வது. தம் நன்மைக்கு தாம் முயற்சி செய்வாரை அலட்சியம் செய்வது கண்ணுறா; தம்மை காப்பாற்றிக் கொள்ளுகிறதில் பின்வாங்கி கொள்ளுகிறவர்களை பாதுகாத்துக் கொடுக்கும், உன் ஈரமான கருணை உள்ளத்தை புகழ்வது.
இது உன் பேராண்மையை காட்டுகிறது; தம்மை காப்பாற்றிக் கொள்வதில் தாம் முயல்வதை விட்டு, தங்களிடம் ஒன்றும் இல்லை என்று முன்னிட்டு, உன்னை உபாயமாகப் பற்றினால், நீ அவர்கள் காலிலேயே விழுந்து விடுவாய் என்பதை அறியாமல் இந்த உலகம் இழந்து போவதே என்று ஆச்சர்யப்படுகிறார்.
உன்னை யென்னோ களை கணாக் கருதுமாறே
உன்னையே உபாயமாகக் கொண்டவர்களை காப்பாற்றி, உன்னோடு தம் முயற்சியையும் துணை என்று இருப்பவர்களை அலட்சியப்படுத்தும் உன்னை உலகுக்குப் பொதுவான காப்பாளான் என்று சொல்பவர்கள் அறிவிலிகள் என்கிறார்.
ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் விஷ்ணு பக்தி உடையவர்களுக்கும், பக்தி அற்றவர்களுக்கும், எப்போதும் ஒரே மாதிரியாகப் பற்றலாம்படி இருக்கும் உன் திருவடிகளை உபாயமாக உறுதி கொள்கிறேன் என்றபடி எல்லோருக்கும் பொதுவான உறவு உடையவனாக இருந்த போதிலும், கஜேந்திரனைப் போன்ற சிலருக்காக முதலையைப் போன்ற சிலரை அழிக்கிற இவனை சர்வ ரக்ஷகன் என்று நினைக்கலாமோ என்று கேலியாகப் பேசுவது போல, உண்மையிலே துதிக்கிறார்.
இனி அடுத்த பாசுரமான, இந்த பிரபந்தத்தின் இறுதி பாடலில் சந்திக்கலாம், நன்றி.
