திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

 • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
 • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
 • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
 • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
 • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
 • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
 • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

 • பெரிய திருமொழி
 • திருவெழுகூற்றிருக்கை
 • சிறிய திருமடல்
 • பெரிய திருமடல்
 • திருகுறுந்தாண்டகம்
 • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம். அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி இங்கே கண்டோம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மீது பாடிய மற்ற பாடல்களை கீழே காண்போம். நன்றி.

பெரியதிருமொழி

4.3.8

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை, மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை, தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்  செம்பொன் செய் கோயிலி னுள்ளே, மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஓழிந்தேனே.

இங்கே, பாலோடு சக்கரையும் சேர்த்து பருகுவார் போல் க்ருஷணாவதாரத்தோடு திருவேங்கடமுடையானையும் சேர்த்து அனுபவிக்கிறார். தன்னுடைய பேரனோடு பகைத்த பாணாசுரனின் ஆயிரம் தோள்கள் கீழே விழும்படி அன்று திருவாழியை தொட்டவனை, இன்னமும் விரோதிகள் வந்தால் என்ன செய்வது என்று ஒளிபடைத்த சிகரங்களை உடைய திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற, வேதங்களை பிரதிபலிக்கின்றவனாய், தானே பிரகாசம் மிக்கவனாய், தெற்கே திலகம் போல் இருக்கின்றவர்கள் எல்லோரும் கூடும் திருநாங்கூர் செம்பொன்கோவிலில் கண்டு தொழுதேன்.

4.7.5

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே, நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், சேடார் பொழில் சூழ் திருவெள்ளக் குளத்தாய், பாடா வருவேன் விணையாயின பாற்றே.

திருவெள்ளக்குளத்தில் இருப்போருக்கு முகம் காட்டிக் கொண்டுள்ள எம்பெருமானிடம் , தன் பாவங்களை நீக்கு என்ற ஆழ்வாரிடம், அங்குள்ள புகழ் பெற்ற வேதியர்கள் போல் சில தர்மங்களை செய்து ஆழ்வாரும் விரோதிகளை போக்கிக்கொள்ள கூடாதோ என்ற எம்பெருமானிடம், கானமும், வானரமும், வேடுவரும் என்று எல்லாவற்றிற்கும் முகம் காட்டி கொண்டுள்ளவன் அன்றோ அவன்; தனக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகிறார்.

பரிவிற்கும் ஆண்பிள்ளைத்தனத்திற்கும் குறைவற்றும், திருமலையில் நின்றும், வேடுவர்கள் நிறைந்திருக்கின்ற அங்கே நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமான் தன்னுடைய ரூப, ஸ்வரூப குணங்களுக்கு தானே பிரகாசம் கொடுக்கின்றான் என்றும், தேசம் எங்கும் இருக்கின்ற கீர்த்தியுடைய வேதியர்கள் நிறைந்துள்ள, தளிர் சோலைகளில் சூழப்பட்ட திருவெள்ளக்குளம் என்ற திருநாங்கூர் திவ்யதேசத்தில் எழுந்தருளி இருப்பவனே என்றும் எம்பெருமானுடைய குணங்களை பாடி வருகின்ற தன்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் சிதற அடிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு உள்ள சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டு என்பது வழக்கம். இந்த ஒற்றுமை விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என்று இங்கே விளிக்கின்றார்.  திருவேங்கடமலை விஷயமான “கண்ணார் கடல் சூழ” என்ற திருமொழியில் அடியேன் இடரைக்களையாயே என்றதும், இந்த ஒற்றுமையை குறித்தே என்று கொள்ளலாம்.

5.3.4

வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்க்கட்கு அரசளித்த, காம்பின் ஆர்த் திருவேங்கடப் பொருப்ப. நின் காதலை அருள் எனக்கு, மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த, தீம் பலங்கனித் தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!

மாஞ்சோலையிலே சென்று அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அதனை போக்க வேறு சுவை வேண்டி, இனிய பலாப்பழத்தின் தேனினை சுவைக்கின்றது. அத்தகைய திருவெள்ளரையில் நின்ற எம்பெருமானிடம், பாரத போரில் மேல் விழுகின்ற குதிரைகள் மாய்ந்து போகும்படியும், எதிரிகள் உயிர் போகும்படியும் செய்து, பஞ்ச பாண்டவர்களை வெற்றி பெற செய்த உதவி செய்தவனும் மூங்கில்கள் நிறைந்த திருவேங்கட மலையில் உள்ள அவனிடத்தில் பரமபக்தியை பிறப்பித்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

காவ்யங்களிலும், நாடகங்களிலும் ஆகமங்களிலும் ஈடுபட்டு அவைகள் கசந்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவத் அனுபவம் செய்து களிக்கின்றார்கள் என்று உள்ளுறை பொருளாக கூறுகிறார்.

5.5.1

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள், மருவாளா என்குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே.

இது திருமங்கையாழ்வார் பாடும் தாய் பாசுரம் ஆகும். திருவரங்கம் பற்றி ஆழ்வார் பாடிய ஐந்து பதிகங்களில் இரண்டாவது பதிகம். ஆனால் இதில் திருவரங்கமே என்று சொல்லாமல், வேங்கடமே வேங்கடமே என்று திருவேங்கடத்தைப்பற்றி ஆழ்வார் சொல்வதை உரையாசிரியர் பெரியபெருமாள் இங்கு வந்து சேர்ந்த வரலாறு கூறுவதாக கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அங்கு உள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக ரிஷிகளும் நம் ஆச்சார்யார்களும் சொல்வார்கள். பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு இருந்து பயணம் தொடங்கி, வரும் வழியில் திருவேங்கட மலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சயனிப்பதாக சொல்வார்கள்.

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் என்ற திவ்ய ப்ரபந்தத்தின் முதல் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்று சொல்லி, விண்ணவர் கோனான எம்பெருமான், வேங்கடவனான வந்தான் என்கிறார். இரண்டாம் பாட்டில் அன்று நேர்ந்த நிசாசரரை என்று, நம்பெருமாள் (உத்ஸவர்) இராவண வதத்திற்கு பிறகு தெற்கு வாசல் வழியாக வந்து சேர்ந்ததை சொன்னார். மூன்றாம் பாட்டில் “மந்திபாய் வடவேங்கடமலை வானவர்கள் சந்திசெய்ய நின்றான் அரங்கத்தரவினணையான்” என்று சொன்னதை, திருவேங்கடமலையில் இருந்து, வடக்கு வாசல் வழியாக பெரியபெருமாள் (மூலவர்) வந்து திருவரங்கத்திலே நுழைந்தான் என்று பட்டர் என்ற ஆச்சாரியார் சொல்வார்.

மேலும், திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலமாக இருப்பதால், அடுத்த பயணத்திற்கு காத்து இருப்பவர் போல் தெரிகிறார். திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக ஸேவை சாதிப்பதால் இனி எங்கும் போகவேண்டாம் என்ற தோற்றத்தோடு இருப்பது போல் உள்ளது பொருத்தமாக இருக்கும். ஆக, திருவரங்கத்துக்கு மூலம் திருமலை என்பதால், இப்போது திருவரங்கத்திலே  ஆழ்வார்க்கு ஏற்படும் பற்று, திருமலையளவும் சென்றதனால் ‘வேங்கடமே வேங்கடமே’ என்கிறார் என்று விளக்கம் கொடுக்கிறார்.

தன் வயது, பருவத்தின் காரணமாக, ஒரு சில விஷயத்தை சிலருக்கு சொல்லி, ஒரு சில விஷயத்தை சிலருக்கு மறைத்து என்று மனிதர்கள் இருப்பார்கள்; உதாரணமாக தோழிகளுக்கு சொல்லும் மகள் சில விஷயத்தை தாய்க்கு சொல்ல மாட்டாள்; ஆனால் தன்னுடைய பெண், அப்படி இல்லாமல், வேங்கடமே, வேங்கடமே என்று எவருக்கும் அஞ்சாமல் / வெட்கப்படாமல் பிதற்றுகின்றாள், என்கிறாள்.

பரத்துவத்தை பற்றி சொல்லாமல், வியூகத்தை சொல்லாமல், விபவங்களை சொல்லாமல், விட்டு விட்டு, அவன் உகந்து அருளின தேசத்தை மட்டுமே (வேங்கடமே) என்று பிதற்றுகிறாளே தவிர அதனுள் புகுந்து செல்வதற்கு அறியாதவள், தன் மகள் என்கிறாள். காட்கரை ஏற்றும் அதனுள் கண்ணா (திருவாய்மொழி, 9.6.7) என்று நம்மாழ்வார் திவ்ய தேசத்தையும், எம்பெருமானையும் சேர்த்து சொன்னது போல் இல்லாமல், இங்கு திருவேங்கடமுடையான் என்று குறிப்பிடவில்லை.

நீண்ட கண்களில் உறக்கத்தை மறந்துவிட்டாள் ; தன்னுடைய மடியிலும் பொருந்த மாட்டேன் என்கிறாள்; வேறு யார் மடியில் தான் பொருந்துகிறாளோ ? திருப்பாற்கடலில் பிராட்டியை கைகொண்டவனான எம்பெருமான் தன் மகள் விஷயத்தில் செய்த காரியங்களை தான் நினைக்க முடியுமோ என்று சொல்வதாக பாசுரம். கணவனின் ஊர் பெயரை அஞ்சாமல் கூச்சம் கொள்ளாமல் பிதற்றுகின்றாள்; தன்னுடைய வடிவைக்காட்டி முன்பு திருப்பாற்கடலில் இருந்து பிராட்டியை கொள்ளை கொண்டான், இன்று ஸம்ஸாரக் கடலில் இருந்து தன் மகளை கொள்ளை கொண்டான் என்றும் எப்போதும் இவனுக்குப் பெண்பிள்ளைகளைக் கொள்ளை கொள்வதே வேலை என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.

ஸம்ஸாரத்துக்கு ஆளாகாதபடி செய்யும் அனைத்தும் கொள்ளை கொண்டது போல் என்று சொல்லி, தாய் வசத்தில் இருக்கும் மகளைகூட, எம்பெருமான் கொள்ளை கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமானால் ஏற்று கொள்ள கூடிய பெருமை ஒருவரால் சிந்திக்கக் கூடியதோ? நெடுநாளாக இருகின்ற ஸம்ஸாரத்திலே இன்று இப்படிப்பட்ட பகவத் விஷயம் கிடைத்தது என்றால் அதற்கான காரணம் தன் பெண் அறிய மாட்டாள் என்றும், கரையிலே நிற்கிற தான் எப்படி அறிவேன் என்று தாய் சொல்வது போல் உள்ள பாசுரம்.

5.6.7

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்து எனது, மனத்திருந்த வடமலையை, வரி வண்டார் கொந்தணைந்த பொழில் கோவல் உலகளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, யான் கண்ட தணி நீர்த் தென் அரங்கத்தே

“ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி 3.3.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், ஒருவருக்கு உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவனும், அவைகளுக்கு உபாயமாக இருப்பவனும், உபாயத்திற்கு புருஷகாரத்வம் செய்யும் திருமகளுடன் சேர்த்தி கொள்பவனும், திருவேங்கட மலையின் நிர்வாகம் செய்பவனும், எம்பெருமானே ஆவார்.

அப்படியிருந்தும், அதனை விட்டு எழுந்து, தன்னுடைய நெஞ்சத்தில் ஒரு நொடி கூட விட்டு பிரியாமல் இருப்பவனும் அவனே; அழகிய பூங்கொத்துகள் உள்ள வண்டுகள் இருக்கும் சோலைகளைக் கொண்ட பூங்கோவலூரில், உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான எம்பெருமானை தான் கண்டது திருவரங்கத்தில் என்கிறார்.

அந்தணனை என்று சொன்னது, வேதத்தை காப்பவன் என்று சொல்லி, பிரம்மச்சர்ய வேஷத்தை குறிப்பிட்டு, உலகளந்த விஷயத்திற்கு நம்மை கூட்டிச்சென்றது.  அந்தணன் என்பது, அழகிய தண்மை பொருந்தியவன், பரம தயாளு என்ற அர்த்தத்தில் வருகிறது.

6.8.1

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய், மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.

மான் தோலை மார்பிலே போர்த்திக்கொண்டு, மஹாபலியிடம் பூமியை யாசித்து பெற்று, அவனை தன் திருவடிகளால் ஆக்ரமித்துக்கொண்ட தேனை உடைய சாரல்களை கொண்ட திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானை தான் தேடி சென்று திருநாரையூரில் சேவித்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமான் தன்னைப் பெறுதற்குப் பல அவதாரங்கள் எடுத்தார் என்றும், அந்த சமயங்களில் தான் ஒரு புக்தி அற்றவனாக இருந்ததாகவும், இன்று தான் அவனைத் தேடித் திரிய வேண்டி உள்ளது என்றும் ஆழ்வார் கூறுகிறார். நீண்ட பயணம் சென்று திருமலை உச்சியிலே காண வேண்டாமல், தாகம் எடுத்தவார் தண்ணீர் கண்ட இடத்திலே குடிப்பதை போலே திருநறையூரிலே கண்டு சேவித்தேன் என்கிறார்.

கொண்டல்லது போகேன் என்று தானம் வாங்கியதை சொல்கிறார். மாவலி தன்னையுடையது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பூமியை, தன்னுடையதாக ஆக்கிக்கொண்ட எம்பெருமான் என்கிறார். அவனல்லாததை அவனுடையதாக்கி, தனக்கு இதுவே போதும் என்று மாவலியிடம் கேட்டு வாங்கியதை சொல்கிறார். கையில் நீர் விழுந்தவுடன், மனம் மாறுவதற்குள் சுகுமாரமான திருவடிகளாலே காடும் மேடையும் எல்லை நடந்து அளந்து கொண்டவன் என்கிறார். எல்லோரையும் அடிமை கொள்ள கூடியவன், (சர்வசேஷி), எல்லோருக்கும் அதிகாரி (சர்வாதிகாரனாய்) இருக்கும் எம்பெருமான் தன்னை தாழ விட்டுக்கொண்டது தான் தோற்றதால் அல்ல என்றும் தன்னை தாழ விட்டுக் கொள்ளும் நல்ல குணம் உடையவன் என்றும் சொல்கிறார். உலகளந்த போது, எம்பெருமானை தவறவிட்டவர்கள், இப்போது தவறவிட கூடாது என்பதற்காக திருமலையில் நிற்பதை சொல்கிறார்.

7.3.5

ஆங்கு வெந் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு, தாமரை யன்ன பொன்னார் அடி எம் பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற, வேங்கடத்து அரியைப் பரி கீறியை வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட தீங் கரும்பினை, தேனை நன் பாலினை அன்றி யென் மனம் சிந்தை செய்யாதே.

கொடிய நரகங்களிலே நோவுபட நேர்ந்த போது, அங்கு வந்து, பயப்படவேண்டாம் என்று அடியேனை, அழகு மிக்க திருவடிகளையுடையனும், தனக்கு உபகாரம் செய்பவனும், மேல் உலகங்களுக்கு எல்லாம் அலங்காரமாய் இருக்கின்ற, திருமலையில் எழுந்தருளி இருக்கிற, சிங்கம் போன்றவனும், குதிரை முகத்துடன் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும், வெண்ணையை திருடி உண்டு, உரலோடு கட்டுண்டு இருந்தவனும், கரும்புச்சாறு மற்றும் தேன் போன்றவனும், இனிய பால் போன்ற திருநறையூர் நம்பியை தவிர வேறு எவரையும் தன் நெஞ்சம் நினைக்காது என்கிறார்.

7.10.3

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை, பங்கில் வைத்த உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ் மங்குலைச், சுடரை வட மாமலை உச்சியை, நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை, பகலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.

தங்கள் விஷயத்தில் கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும், வாசம் வீசுகின்ற கூந்தலை உடைய பார்வதியைத் தன்னுடலில் பாதி உடையவனான ருத்ரனை, தனது ஒரு பக்கத்திலே இடம் கொடுத்து அதிலே ஒரு உகப்பை உடையவனும் இப்படிப்பட்ட சீல குணமே சுபாவம் உள்ளவனும், குளிர்ந்த முழு சந்திரன் தவழ்கின்ற ஆகாசமாய் நிற்பவனும், சூரியனை அந்தர்யாமியாக உள்ளவனும், திருவேங்கடமலையின் உச்சியில் இருப்பவனும், நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும், இரவு பகல் என்ற இரண்டிற்கும் நிர்வாஹகனை சென்று நாடி திருகண்ணமங்கையில் கண்டு கொண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

8.2.3

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள், உள் மெலிந்தாள் இது வென்கொலோ.

பரகாலநாயகியானவள் (திருமங்கை ஆழ்வார் நாயகியாக பாடுவது) அருவிகள் பொழியும் திருமலை என்றும், திருநீர்மலை என்றும் சொல்லி வாய் பிதற்றுகின்றாள். திருமெய்யத்தைப் பற்றி, அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்த இடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று என்று கேள்வி கேட்டு அதற்கும் பதில் எதுவும் கிடைக்காததால் பெருமூச்சு விடுகிறாள். சீர் மிகுந்த திருக்கண்ணபுரம் என்று சொல்லியபோது, நீர் பண்டமாக உருகுகிறாள். நெஞ்சு தளர்கின்றாள்; இதற்கு இவள் செய்த பாவமே அன்றி வேறு எந்த காரணமும் தெரியவில்லை என்கிறாள்.

9.7.4

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று, எண்ணுவார் எண்ணம் அது ஓழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல், விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடத்து உளார் வளங் கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

இசை விளக்குகின்ற இனிய பேச்சுக்களுடைய பெண்களை அணைப்போம் என்ற சிந்தையில் உள்ளவர்களை சிந்தனையை மாற்றி, நாம் உஜ்ஜிவிக்க வேண்டுமானால், நித்யஸூரிகளுக்காக பரமபதத்தில் காட்சி கொடுக்கின்றவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவரும், அழகிய கடல் போன்ற வடிவை உடையவருமான திருவல்லவாழ் எம்பெருமானுடைய பெருமையை பேசவேண்டும் என்கிறார்.

9.9.9

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன் தன்னை, புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை, சிலம்பு இயல் ஆறு உடைய திரு மாலிருஞ் சோலை நின்ற, நலந் திகழ் நாரணனை நணுகும் சகால் என் நல் உதலே

சங்கும் சக்கரமும் உடையனும், மலை போன்ற திரண்ட திருத்தோள்களை உடையவனும், யஜ்ஞோபவீதத்தை உடையவனும், சோலை சூழ்ந்த திருவேங்கட மலையில் உள்ளவனும், வேதியனை, ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுர கங்கையை உடைய திருமாலிருஞ் சோலை என்ற திவ்யதேசத்தில் நிற்பவனும், திருக்கல்யாண குணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந் நாராயணனை, அழகிய நெற்றியை உடையவளான தன்னுடைய மகள் கிடைக்க பெறுவாளா என்று ஆழ்வார் கூறுகிறார். வட திருவேங்கட மலையையும் தென் திருமாலிருஞ்சோலையையும் சேர்த்து ஆழ்வார் அனுபவிக்கிறார்.

10.1.2

பொன்னை மாமணியை அணியார்ந்த ஓர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை எம் பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்கா விலே.

நேற்று திருவேங்கடத்தில் கண்ட எம்பெருமானை இன்று திருத்தண்காவில் கண்டேன் என்கிறார். திருத்தண்கா என்பது காஞ்சியில் உள்ள விளக்கொளி பெருமாள்; பொன்போல விரும்பத் தகுந்தவனும் நீலமணி போன்றவனும், அழகு மிக்க ஒரு மின்னல் போன்று ஜவாலை ஸ்வரூபமானவனும் தன்னை அடிமை கொண்ட ஸ்வாமி என்கிறார்.

10.10.5

சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலன் உயர்த்த, மல்லார் தோள் வட வேங்கடவன் வர, சொல்லாய் பைங்கிளியே.

பசுமை தங்கிய கிளியே! ஒளிமிக்க திருவாழியை வலத் திருக் கையிலே உயர தாங்கி பிடித்தவனும், மிடுக்குடைய திருத்தோள்களை உடையவனும் வட திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானை இங்கே வரச்சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். தன்னை அணைப்பதற்கு என்றே பயணம் மேற்கொண்டு திருவேங்கட மலையிலே நிற்கின்ற எம்பெருமானை இங்கு வரச் சொல்கிறார்.

11.3.7

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன் மேய, அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.

கண்ணபிரான் என் நெஞ்சில் எழுந்தருளி இருக்கச் செய்தேயும், எனது கைகளில் வளைகளானவை ஏனோ கழன்று போயின; இவை என்ன ஆச்சரியம் ; பெண்குடியிலே பிறந்துள்ள நாம் வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாய் இருக்கின்றோம் ; அந்த எம்பெருமான் விரும்பி இருக்கும் இடமான திருவரங்கமும் திருவேங்கடமலையும், பாடாமல் இருக்கிறோமோ என்கிறார்.

11.5.10

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான், வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, வெள்ளத்தான் வேங்கடத்தானேலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உலன் கண்டாய் சாழலே.

தோழி, கபட வேடித்தினால் மஹாபலியிடம் இருந்து மூன்றடி மண்ணை இரந்து பெற்று அளந்து கொண்டவன், திருப்பாற்கடலிலே உள்ளான், திருமலையிலே உள்ளான் என்று சொல்கின்றார்களோ ? திருப்பாற் கடலிலும் திருமலையிலும் உள்ளவனே ஆயினும் கலியனுடைய நெஞ்சத்தில் உள்ளான் என்கிறார்.

திருக்குறுந்தாண்டகம்

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற, மெய்ம்மையை விரிந்த சோலை வியந் திருவரங்கம் மேய, செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையானை, தன்மையை நினைவார் எந்தன் தலைமிசை மன்னுவாரே. (7)

அமரர் சென்னி பூவினை என்று இதற்கு முந்தைய பாடலில், நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருக்கும் எம்பெருமான், என்று பாடியதை தொடர்ந்து, எம்பெருமான் ஆழ்வார் தலைமீதும் அணியாக இருக்க விரும்புவதை தெரிவிக்க, ஆழ்வார் அதைவிட அவன் சீலத்தை போற்றி பாடும் அடியவர்களை தன் சிரத்திலே ஏற்க விரும்புகிறார் போலும்.

இந்த பிறவியில் இவ்வுலக இன்பத்தையும், மறுபிறவியில் பரமபத இன்பத்தையும் தருபவரும், பல சோலைகளை உடைய வியப்பு தரும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்பவரும், வெவ்வேறு யுகங்களில் கருப்பு சிவப்பு என்று வெவ்வேறு நிறம் கொண்டு உள்ளவரும், விண்ணவருக்கும் மண்ணில்உள்ளவருக்கும் ஒருமையாக திருவேங்கடமலையில் நின்று கொண்டு இருப்பவனுமான எம்பெருமானை நினைப்பவர்கள், தன்னுடைய சிரத்திலே பொருந்த தக்கவர்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.

திருமலையில் உள்ள எம்பெருமானை, இங்கு உள்ளவர் பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள் என்றும், மேலுலகத்தில் உள்ளவர்கள் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள் என்று உரையாசிரியர் கூறுவது சிறப்பு.

திருநெடுந்தாண்டகம்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய். நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே. (8)

பல திவ்யதேசங்களையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.

காஞ்சியில் திருநீரகம், என்பது ஸ்ரீ உலகளந்த  பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. அந்த எம்பெருமானை நீரின் ஸ்வபாவத்தை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம் என்பார்கள்;

நெடுவரையின் உச்சி மேலாய் என்று சொன்னது, இந்த உலகத்தில் உள்ளவர்களும், மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கும்நாடி ஓங்கியுள்ள திருமலையிலே நின்று அருள்பவன் என்பதை குறிக்கும். “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற பாசுரங்களிலும் இது சொல்லப் படுகிறது.

நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திவ்யதேசம் ஆகும்.

ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரக ரூபியாக (ஆதிசேஷன் வடிவமாக) இத்தலத்தில் ஸேவை சாதிக்கிறார். நிறைந்தகச்சி என்று சொல்வது பல திவ்யதேசங்கள் நிறைந்த காஞ்சி என்று சொல்வதாகவும், ஆதிசேஷனின் ஒளியால் நிறைந்த கச்சிநகர் என்றும் கொள்ளலாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய் என்பது திருவெஃகா திவ்யதேசத்தை சொல்லும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண் வளர்ந்து அருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை”என்கிறார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா என்ற திருமழிசை ஆழ்வாரின் சொற்களுக்கும், “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா!  நீ கிடக்க வேண்டும் “என்ற சொற்களுக்கும் கட்டுப்பட்டு அந்த ஆழ்வாரின் பின்னே அவன் சென்றும் பிறகு திரும்பி வந்ததும் எம்பெருமானின் ஆச்ரித பாரதந்திரியம் என்ற குணம் இருப்பது என்கிறார். ஆச்ரித ஸ்பர்சமுள்ள ஒரு துறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யம் என்கிறார்.

தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருப்பவன் என்பதை உள்ளுவார் உள்ளத்தாய் என்கிறார். எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் (திருவரங்கத்தில்), திருமலை (திருவேங்கடம்) பெருமாள் கோயில் (திருக்கச்சி) முதலான உகந்தருளின இடங்களில் இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரம உத்தேச்யம் என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் / திவ்யதேசங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், நம் ஆசார்யர்கள் சொல்வது இங்கே நினைவில் கொள்ளலாம்.

உலகமேத்துங் காரகத்தாய் என்பது திருகாரகம் என்ற திவ்யதேசத்தை சொல்வது. இதுவும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் இருக்கும் இடம் என்பதால் இந்த திருத்தலத்திற்கு திருகாரகம் என்று பெயர் என்பார்கள்.

கார்வானத்துள்ளாய் என்பது திருகார்வானம் என்ற தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ள நான்கு திவ்யதேசங்களில் ஒன்று.

கள்வா என்பது ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்தில் உறைபவனே என்ற பொருளில் வரும். பிறர் அறியாதபடி காரியம் செய்பவனைக் கள்வன் என்பர்; இவன் காத்திருந்து சிறந்தவர்களையே (சத்தான) பிடித்துக்கொள்வார் என்பதால் கள்வன் எனப்படுகிறான்.  

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்“என்று சோழநாட்டு திவ்யதேசங்களில் ஒன்றான ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளி கொண்டருள்கின்றவனை கூப்பிடுகிறார்.

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய். என்றும், கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும், மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும், வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும், வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும், விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும், துன்று குழல் கருநிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோரச் சோர்க்கின்றாளே. (16)

இது திருத்தாயார் பாடும் பாடலாக ஆழ்வார் அருளி உள்ளார். “மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே“ என்று கீழ்ப்பாட்டில்(15) சொன்னபோது நாயகன் எதிரே நிற்பதாக நினைத்து மென்மையான கிளி போல் வார்த்தைகள் சொல்லியபோதும் அவன் ஒன்றும் சொல்லவில்லை என்பதால் நிலைகுலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் தன் மகள் என்று திருத்தாயார் சொல்கிறார். அவனுடைய திருகுணங்களான ரக்ஷகத்வமும் லௌலப்யமும் ளெஸசீல்யமும் பாவியாகிய தன்னிடத்தில் பலிக்க இல்லையே என்று கண்ணீருடன் கதறுகிறதை சொல்கிறார்.

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றது ரக்ஷகத்வத்தை சொல்லியது. நித்யஸூரிகளுக்கு மட்டும் என்று இருந்தாலோ, ராம கிருஷ்ணராக அவதரித்து இடக்கை வலக்கை அறியாத இடையர்களோடு மட்டும் என்று இருந்தாலோ தான் பொறுத்து இருந்திருக்க கூடும் என்றும் அறிவுக்கு கீழ் எல்லையான கன்றுகளையும் ரக்ஷித்த எம்பெருமான், அவனை தவிர வேறு எங்கும் செல்லாத தன்னை ரக்ஷிக்காமல் விட்டது ஏன் என்று கேட்டு கன்றாக பிறக்கவில்லை என்பதாலோ என்று கூறுகிறார். கண்ண பிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும், கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆகுமாம் என்பது சொல்வழக்கு. நம்மாழ்வாரும் “திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி“ என்கிறார்.

கடி பொழில்சூழ் கணபுரத்து என் கனியே என்றது அக்காலங்களில் மட்டும் அல்லாது பின்னாட்களில் உள்ளவர்களையும் ரக்ஷிக்க திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருப்பது சொல்லப்பட்டது. கடிபொழில்சூழ் என்றது “ஸர்வகந்த;“ என்கிறதன்படி, பரிமளமயனாய் இருக்கிற எம்பெருமானையும் தன்னை தாழ்த்திகொள்ள வல்லவனாய் இருப்பதையும் சொல்கிறது.

கணபுரத்தென் கனியே என்றது அச்சோலையில் பழுத்த பழம் போல இருக்கும் திருக்கண்ணபுர எம்பெருமானான, சௌரிராஜனை சொன்னது. என் கனியே என்பது ப்ரபன்னர்களுக்கு சரியான சமயத்தில் அவர்களது அனுபவத்திற்கு கனியாகவும் மற்றவர்களுக்கு காயாகவும் இருப்பான் என்கிறது.

மன்றமரக்கூத்தாடி மகிழ்ந்தாய் என்றது கண்ணபிரான் குடக்கூத்தாடினதை சொல்கிறது. “இடையர்க்குச் செல்வம் மிகுந்தால், ஆடுவதொரு கூத்து, குடக்கூத்து” என்று சொல்வார்கள். தானும் இடையர்களுடன் சேர்ந்தவர்தான் என்பதை மெய்ப்பிப்பதற்காக இவனும் குடக்கூத்தாடி மகிழ்ந்தான் என்று சொல்கிறார்.

வடதிரு வேங்கடம் மேய மைந்தா என்பது ஒரு ஊரிலே இருந்து தன்னை கொடுத்தது மாத்திரம் இன்றி வைகுந்தத்திற்கும் இந்த பூமிக்கும் இடையே நடுவான திருமலையில் நின்று தன்னைக் கொடுக்கிறதை சொல்கிறது. “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ – “வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும் “கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்று சொல்வது போல், உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வித்தியாசம் பாராமல் அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவும் (சௌலப்ய சௌசீல்யங்கள்) தனக்கு அரிது என்று பரிதாபமாக ஆழ்வார் சொல்கிறார்.

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்று சொன்னது, அவனுடைய விரோதிகளை அழிக்கும் சக்தியையும் அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களை அடியோடு வெற்றி பெற்ற பெரு வீரனாய் அவன் விளங்கும்போதும் தான் இழக்கிறனே என்று வருந்திச் சொல்கிறார்.

வீரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாயென்றும் என்று சொன்னது, பிராட்டி விஷயத்தில் பித்துபிடித்து, தன்னுடைய ஊரை அவள் பெயராலே சிறப்புறச் செய்து, “நாச்சியார் கோவிலாக்கி”, இப்படி ஒருத்திக்கு எல்லாவற்றையும் செய்பவன் தன் விஷயத்தில் விஷமாக நினைப்பது ஏன் என்ற உள்ளுறை பொருளில் வருகிறது.

சிறிய திருமடல்

மற்று எனக்கு இங்கு கற்பிப்பார் நாயகரே,  நான் அவனை, காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேங்கடமே திருக்கோவல் ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே பேராமனுதிருத்தான் வெள்ளறையே வெஃகாலே, பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை (36)

இங்கே ஆழ்வார் பல திவ்யதேசங்களை குறிப்பிடுகிறார்.

பெரிய திருமடல்

தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, – அடியிணையைத்  (4)

திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலைகளாக உடையவளாய், பொருத்தமான ரூபத்தை உடையவளாய் அன்னத்தின் நடைபோன்ற நடை உடையளாய் தெய்வப் பெண்ணாகிய பூமிப்பிராட்டியின் அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்ற எம்பெருமான் என்று திருமங்கை ஆழ்வார் தொடர்கிறார்.

மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை, மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை, கொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர் (68)

பளபள என்று மின்னும் சிகரங்களை உடைய திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானை, ஆச்சரியமான திருகுணங்களை கொண்டவனை, திருமாலரின்சோலை மணவாளனை, பகைவரை கொல்ல வல்ல சுதர்சன சக்கரத்தை கொண்டவனை, திருக்கோட்டியூர் பெருமானை என்று பல திவ்யதேச பெருமான்களை இந்த பகுதியில் அழைக்கிறார். தன்னை அடைந்தவர்களது பாவங்கள் அனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடம் எனப் பெயர் பெற்றது.

மீண்டும் இன்னொரு ஆழ்வார் / இன்னொரு திவ்யதேசம் பற்றிய சிந்தனையில் சந்திக்கலாம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: