Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று (1-3) பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு (4-14) பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
ஆழ்வார், எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து (15-24) பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான்,
- பரமாத்மாவிடம் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து,
- அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, அவரது கடினமான நெஞ்சத்தை கரைத்து,
- சேவையையும் அருளையும் பலகாலங்களாக சேவிக்காததற்கும் சேர்த்து கொடுத்து,
- கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து,
- நாம் உய்வதற்கு தன்னுடைய அங்கங்களை தான் படைத்த திசைகளில் வைத்து,
- தன் அவயவங்களின் அழகு, அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து,
- விஸ்வாசம் இல்லாததால் இதுவரை இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி,
- அவன் பெருமைகளை பேச, சிரமம் இல்லை, என்று ஆழ்வாரை பாட வைத்து,
- திருவரங்கத்தில் இருக்கும் அவன் அழகை மறந்து வாழமுடியாதபடி செய்து,
- சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
அடுத்து பத்து பாசுரங்கள் கொண்ட நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி.
ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் ஒரு ஐந்து பாடல்களிலும்(25-29),
- ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்று 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) சொல்கிறார்.
- அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்பதை, ஆழ்வார் போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரத்தில் சொல்கிறார்.
- இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
- உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
- ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.
அடுத்து, தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் / கெட்ட குணங்களும் உண்டு என்று ஐந்து பாடல்களிலும்(30-34)
- தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
- தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானது என்று தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
- எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.
- தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
- உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமான் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லாவற்றையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, அவனுக்கு அடிமை செய்பவன் போல தான் போட்ட, கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக நினைக்கிறார்.
ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.
இந்த பகுதியில் உள்ள ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற முதல் பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானின் பெருமைகளை பார்த்தோம்.
இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் பெருமையை மழைக்கன்று வரை என்ற அடுத்த பாடலில் (36) பார்த்தோம்.
இனி, அடுத்த பாசுரம்,
பாசுரம் 37
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கங்கத்துள் ஓங்கும், * ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார், * எளியதோர் அருளுமன்றே, எந்திறத்து எம்பிரானார், * அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (திருமாலை 37)
தெளிவில்லாமல், கலங்கிய காவிரியால் சூழப்பட்டுள்ள திருவரங்கத்துள் பிரகாசிக்கும்படியான, தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். என் விஷயத்தில் செய்ய வேண்டியது, சாமானியமான குளிர்ந்த பார்வை அன்றோ, எனக்கு உபகாரகரான அவர், ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே, ஐயோ, இவர் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்பது இந்த பாடலின் பொருளுரை.
ஆழ்வார் இப்படி கதறிய போதும், பெரியபெருமாள் இரக்கம் கொண்டு, ‘வருந்தாதே’ என்று கூறாததால், ‘தம்மை தவிர வேறு யாராவது உதவி செய்பவர்கள் இருப்பார்களோ என்று எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ, ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் மற்ற பயன்களை விரும்பி இருக்கிறேன் என்று நினைக்கிறாரோ, நம்முடைய பையல் என்று சொன்னாலே உயிர் பிழைத்து விடுவேனே, என்கிறார். இதைக் கூட செய்யாமல், நாம் கதறுவதையும் கேட்டு கண் உறங்கும்படி இவன் திருவுள்ளம் இப்போது இவ்வளவு கொடியதாய் போனதே, என்று வெறுக்கிறார்.
இனி சற்று விளக்கமாக,
தெளிவிலா கலங்கல்
நீர் வரத்து மாறினால் அன்றோ தெளிய இடம் உண்டு. அதற்கு இடம் இல்லாதபடி வெள்ளம் மேலும் மேலும் பெருகி வருகிற படியால் காவிரியில் கலக்கம் மாறாது இருக்கும். இந்த ஆழ்வாரும் காவிரி ஆற்றை போல் கலங்கியே இருப்பார். எம்பெருமானை பெறுவதற்கு முன்பு இவன் கிடைக்கவில்லையே என்று கலங்குவார். எம்பெருமான் கிடைத்த பின் காதலால் கலங்கி இருப்பார். அதே போல காவிரியும் திருவரங்கத்திற்கு மேற்கில் பெரிய பெருமாளை காணப் போகிறோம் என்ற கலக்கத்திலும், கிழக்கில் பிரிந்து போகிறோமே என்று வருத்தத்துடன் கலங்கி செல்லும். ஆகையால் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை என்று பேதம் இல்லாமல் கலங்கும் என்கிறார்.
நீர் சூழ்
‘அதனில் பெரிய என் அவாவர சூழ்ந்தாய்‘ (திருவாய்மொழி 10.10.10) என்று பெரியபெருமாள் ஆழ்வார்களை பெரும் காதலால் சூழ்ந்து கொள்வது போல, காவிரியும் பெரியபெருமாளிடத்தில் உள்ள காதலால் அவரை இந்த இடத்தில் சூழ்ந்து கொண்டபடியை சொல்கிறது.
திருப்பாற்கடல் தந்தை, அந்த கடலின் மனைவியான நான் தாய், இந்த ஸ்ரீரங்க நாயகியே மகள், இப்படிபட்ட இவர்கள் விஷயத்தில் என்ன தகுந்த சீர் செய்வேன் என்று காவிரி ஆறானது வருத்தம் அடைந்து, பிரகாசம் உடைய சாமரங்களையும், பச்சை கற்பூரத்தையும், சந்தன மரங்களையும், நல் முத்துக்களையும், மணிகளையும், அலைகளாகிய கைகளால் ஏந்தி வருகின்றாள்; அப்படிபட்ட காவிரி உங்களால் நீராடப் பட வேண்டும் என்று பாராசர பட்டாரால் அருளி செய்யபட்ட ஸ்லோகத்தை இங்கே நினைவில் கொள்ளலாம்.
உலகில் ஒவ்வொரு தாயும் தன்னுடைய மாப்பிள்ளை மகளுக்கு தகுந்த சீர் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்கே மகள், ரங்கநாச்சியார், செல்வங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆன, ஐஸ்வர்யங்களுக்கு எல்லாம் அதிபதியான, ஸ்ரீதேவி பிராட்டியார். மாப்பிள்ளையோ எல்லோரையும் விட சிறந்த பரமாத்மாவான அழகிய மணவாளன்; பெண்ணின் தந்தையோ சிறந்த ரத்தினங்களுக்கு உறைவிடமான திருப்பாற்கடல் ஆகும்; பெண்ணை பெற்ற தாயோ, கடல் அரசியின் நாயகியான, கங்கையில் புனிதமாகிய காவிரியாகிய நான்; இப்படி எல்லாம் தலைசிறந்தவைகளாக இருக்கும் போது, தகுந்த சீர் என்ன செய்ய போகிறேன் என்று கலங்கி, காவிரி தாய், கற்பூரம், சந்தனம், முத்து மாணிக்கம் என்ற பல சீர்களை அலைக்களாகிய கைகளில் ஏந்தி, தயங்கி தயங்கி, மத யானை போல வருகிறாள் என்று பட்டர் சொல்கிறார்.
திருவரங்கங்கத்துள் ஓங்கும் ஒளிஉளார்
ஆற்று வெள்ளத்தை நீக்கி, அடித்தரையை கண்டு உள்ளே புக அரியதாக இருப்பது போல, பெரியபெருமாளின் மேல் உள்ள ஒளி வெள்ளத்தை நீக்கி, உள்ளே புகுந்து அதற்கு இருப்பிடமான வடிவழகு காண அரியதாக உள்ளது என்கிறார். திருவரங்கதிற்கு எழுந்தருளிய பின் பரமபதத்தில் பகல் விளக்கு என்றபடி ஒளி குன்றி காணப்படுவதாக சொல்கிறார். இரவில் ஒளி போல, ஸம்ஸாரிகளுக்கு உதவும் திருவரங்கதில் ஒளி கூடி இருப்பதை போல என்கிறார். நித்ய சூரிகளுக்கு இடையே பரமபத நாதன் இருப்பது, சூரியர்களுக்கு நடுவே சூரியன் நிற்பது போல இருக்கிறது என்றும், ஸம்ஸாரிகளுக்கு, தாபங்களால் வருந்துபவர்களுக்கு நடுவே அவர் ரக்ஷித்துக் கொண்டு இருப்பது, ஒளி மிகுந்து இருப்பது போல உள்ளது என்கிறார்.
ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார்
சுபாலோப உபநிஷத்தில்(16) கூறுவது போல, நாராயணன் தாயாகவும் தந்தையாகவும், தன்னுடன் பிறந்தவனாகவும், தங்கும் இடமாகவும், மோக்ஷத்திற்கு உபாயமாகவும், நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையபடுபவனாகவும் இருப்பவன் என்று கூறியதை தாமே என்ற ஏகாரத்தாலே தெரிவிக்கிறார். இப்படி இங்கே சொல்லபட்ட நாராயணன், எல்லோருக்கும் பொதுவான பரமபத நாதன் இல்லை என்றும், சிலருக்கு பொதுவான வியூக, விபவங்களும் இல்லை என்றும், மற்றைய ஆழ்வார்களுக்கு பொதுவான மற்ற அர்ச்சாவதாரங்களும் இல்லை என்றும், எனக்கே உரிய தந்தையும் தாயும் ஆன பெரியபெருமாள் என்கிறார். இப்படி எனக்கு எல்லா உறவுகளுமாய் இவரே இருக்கும் போது இவரை தவிர எனக்கு வேறு ஒரு உறவு உண்டு என்று நினத்து எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ என்கிறார்.
இங்கே மகாபாரதத்தில் வரும் (192.56) ஸ்லோகத்தின் பொருளை நினைவில் கொள்ளலாம். தர்மன் வனவாசம் செய்யும் போது, ஆபத்து காலத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும் சத்யபாமையும் எழுந்தருளிய போது, பாராசரர், மார்க்கண்டேயர் போன்ற பல மகரிஷிகள் வந்து பெரிய சபையாக இருக்க, தர்மன் அங்கு இருந்த மகரிஷிகளிடம், தான் எல்லா தர்மங்களையும் பின்பற்றுவதாகவும் தனக்கு துன்பங்களே வருவதாகவும், துரியோதனன் போன்றவவர் தர்மங்களை பின் பற்றுவதில்லை என்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என்றும் கேட்க, பலர் மேலும் தர்மங்களை பின்பற்ற சொல்ல, மார்க்கண்டேயர் சொல்லும் இந்த ஸ்லோகம் தர்மருக்கு விளக்கம் கொடுக்கிறது. இதன் அர்த்தம், எல்லா உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன், லக்ஷ்மி நாதனே சரணடையத் தகுந்தவன், இவனைச் சரண் அடையுங்கள் என்று சொல்வது. எல்லா அடியவர்களுக்கும் இயற்கையிலேயே உறவினனாக இருக்கும் மாதவனை சரண் அடைவதே உண்மையான சுகத்திற்கு உதவுவது ஆகும் என்கிறார். அவனை அல்லாமல் மற்றவற்றை செய்வது ஸம்ஸாரத்தில் உழல செய்யும் என்றும் சொல்கிறார்.
பாராசர பட்டரும் தன் தம்பியான சீராம பிள்ளைக்கு துன்பம் வந்த போதும் இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்ததையும் அருளி செய்கிறார். தந்தையும் தாயும் ஆவார் என்று சொன்னது, தாயை போல இனியதையும், தந்தையை போல நல்லதையும் செய்ய கூடியவர் பெரியபெருமாளே ஆவார் என்பதாகும்.
எளியதோர் அருளுமன்றே எந்திறத்து
என் விஷயத்தில் ஆயர்களுக்கு செய்தது போல கடினமான காரியங்கள் செய்து காக்க வேண்டியது இல்லை; உங்களை தவிர நான் வேறு பலன் வேண்டுகின்றேன், அதையே தகுந்த காலத்தில் கொடுத்து விடலாம் என்று பேசாமல் இருக்கிறீர்களா என்று கேட்கிறார். விபீஷணன் போன்றவர்களைக் காக்க, வில்லை எடுத்தது போலவோ, பாண்டவர்களை காப்பாற்ற கொல்லாமாக்கோல் எடுத்தது போலோ என்னை காக்க வேண்டும் என்று இருக்கிறாரோ என்கிறார். என் விஷயத்தில் ஒரு குளிர்ந்த பார்வை பார்த்தாலே போதும் என்கிறார்.
எம்பிரானார்
எமக்கு உபகாரராக இருப்பவர், என்னைக் குளிர நோக்க வில்லையே என்று வருந்துகிறார். ஏற்கனவே பெரிய பெருமாள் செய்த உதவிகளை ஆழ்வார் மறக்காதவர் ஆகையால், இன்னும் குளிர நோக்காத போதும், உபகாரகர் என்று சொல்கிறார். இந்த உபகாரத்தையும் செய்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார். பெரியபெருமாள் முன்பு செய்த உபகாரங்களில் சில : தமக்கும் பெரியபெருமாளுக்கும் உள்ள உறவை ஆழ்வாருக்கு உணர்த்தியது, அதற்கு மேல் மோக்ஷத்திற்கு உபாயமும், அடைய வேண்டியவனும் அவனே என்றும் உணர்த்தியவன்; இப்போதும் நம்முடைய கூக்குரல் கேட்டு அருகில் வந்து இருப்பவன் என்பவை.
அளியன் நம் பையல்
இனி செய்ய வேண்டிய உபகாரம் என்ன என்று கேட்டதற்கு ஆழ்வார் சொல்லும் பதில். அளி என்றால் அருள் என்றும் அளியன் என்றால் அருள் புரிய தகுந்தவன் என்றும் பொருள் தரும். இவனை நாம் கருணை செய்யலாம் என்னும்படி நன்மை உடையவன், நம்முடைய பையல் என்று பெரிய பெருமாள் அருளி செய்ய கேட்கிறார். ஆழ்வாருக்கு இப்போது நம் பையல் என்று பெரியபெருமாள் சொல்லாமல் ‘ஆழ்வீரே’ என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. அவனுக்கு அடிமை பட்டிருக்கும் நம்மை, நம் பையல் என்று நினைத்தால் போதாதா, கூப்பிடவும் வேண்டுமோ, என்று கேட்டு கொண்டு, அவனும் அப்படி கூப்பிட்டு உறுதிப் படுத்தினால் தான் தன்னுடைய சேஷத்துவம் நிலை நிற்கும் என்று ஆழ்வார் கருதுகிறார்.
மணக்கால் நம்பி, கதவை சாத்திக் கொண்டு ரகஸ்யார்த்தம் உபதேசம் செய்து கொண்டு இருந்த போது, அவரது சிஷ்யரான திருமகிழ் மாலைமார்வன், வந்து கதவை தட்ட, மணக்கால் நம்பி, ‘நம் பிள்ளையான திரு மகிழ் மாலை மார்வனுக்கு கதவை திற ‘ என்று அருளி செய்ததையும், பிள்ளை, பிள்ளை ஆழ்வான் வாயாலேயே, ‘தம்பி அப்பிள்ளை ஆழ்வான், நம்பிள்ளை என்னப்பெற்றேன்’ என்று அப்பிள்ளை ஆழ்வான் அருளி செய்ததையும் அனுசந்திப்பார்.
அம்மவோ கொடிய வாறே
வருத்தத்தால் அழும் கூக்குரல் கேட்டால் எழுந்திருக்க வேண்டாமோ, அக்குரல் கேட்டதும் கண் உறங்குவதே, இவன் திருவுள்ளம் இப்படி கொடியதாய் இருக்கின்றதே, அம்ம, என்ன இவன் தன்மை என்று கூறுகிறார். இங்கே அம்ம என்பது, வருத்தத்தின் மிகுதியை குறிக்கும். இத்துடன் இந்த பாசுரம் நிறைவு பெறுகிறது.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, இந்த பிரபந்தத்திற்கு அடுத்த பாடல் என்ற அளவிற்கு முக்கியமான பாடல், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போல் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அத்தகைய பாடல் அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம், நன்றி.
