Site icon Vaishnavism

053 திருக்கார்வானம் Thirukarvaanam

Advertisements

கமலவல்லித் தாயார் ஸமேத கள்வர் திருவடிகளே போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கார்வானம்
மூலவர் கள்வர்
உத்ஸவர்
தாயார்கமலவல்லித் தாயார் / தாமரையாள்
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 94435 97107, +91-98943 88279

தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி

கோவில் பற்றி

கார் வானத்துள்ளாய் (திருநெடுந்தாண்டகம் 8) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்யதேசமும் உலகளந்த பெருமாள் கோவிலில் தான் உள்ளது.

காரகம், நீரகம், ஊரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச எம்பெருமான்களும் சேர்ந்து காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி உள்ளனர். காரகம், நீரகம், கார்வானம் என்ற மூன்று திவ்யதேச பெருமான்களும் ஊரக திவ்யதேச எம்பெருமானான உலகளந்த பெருமாளின் பெருமை, திருகுணங்களுக்கு விளக்கமும் உருவமும் கொடுக்கிறார்கள்.

நீர்மை என்னும் எளிய திருக்குணத்தை திருநீரகப் பெருமாளிடம் காண்கிறோம். அதே எளிமை திருக்குணத்துடன் ஏழை அந்தணராக வாமனனாக அவதரித்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்த திருஊரகப் பெருமானிடம் சேவிக்கிறோம்.

நீரைக்கொடுக்கும் மேகத்தை போன்ற கருணையை, காரக பெருமானிடம் சேவிக்கின்றோம். மேகம், யாருக்கு, எப்பொழுது, எங்கே என்றல்லாம் கேட்காமல் மழை பொழிவதைப் போல், திருக்காரக எம்பெருமானான கருணாகர பெருமாள் கருணை மழையை எல்லோருக்கும் அளிக்கிறார். இதே போல் திருக்குணத்தை ஊரக எம்பெருமானான உலகளந்த பெருமாளிடம் நாம் பார்க்கிறோம். யார், எங்கே, சரணாகதி கேட்டாரா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருடைய தலைகளிலும் த்ரிவிக்ரமனாக தன்னுடைய திருவடியைக்கொண்டு தீண்டி எல்லோருக்கும் மோக்ஷம் அளித்ததை, அந்த எம்பெருமானின் தனிப்பெருமையாக நமது ஆச்சாரியார்கள போற்றி உள்ளனர்.

கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி

இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”. 

கார்வானம் என்பது மேகம் இருக்கும் வானத்தைக் குறிப்பது. எங்கும் பரந்து விரிந்து உள்ள திருமால், விஸ்வம், விஷ்ணு போன்ற திருநாமங்கள் மூலம் வானத்தை தன்னுள்ளே கொண்டுள்ளார். த்ரிவிக்ரமன் இந்த மண்ணுலகத்தை ஒரு திருவடியாலும், வானத்தை இன்னொரு திருவடி மூலம் அளந்ததையும் ஊரக எம்பெருமானிடம் பார்த்து உள்ளோம்.

ஆக நீரகம், காரகம், கார்வானம், ஊரகம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் சேர்ந்து இருப்பது நமக்கு எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்று பாரபட்சம் இன்றி காக்கும் திருமாலின் திருக்குணங்களை நமக்கு தெரிவிக்கவே என்று கொள்ளலாம்.

கார்மேகம் சூழ்ந்த வானத்திற்குள் உள்ள எம்பெருமானே இங்கு எழுந்தருளியுள்ளான் என்று கொள்ளலாம்.

இந்த திருத்தலத்தைப் பற்றி வேறு அதிக தகவல்களோ, ஸ்தல வரலாறு என்றோ அதிகம் தெரியவில்லை.

ஆழ்வார்

நீரகத்தாய் என்றும், காரகத்தாய் என்றும் , ஊரகத்தாய் என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார், கார்வானத்துள்ளாய் கள்வா என்று, இத்தலத்து எம்பெருமானின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து இருப்பதாகக் கொண்டும் ரசிக்கலாம்.

ஆனால், திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால் அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இருந்தாலும், கள்வா என்று இந்த திருநெடுந்தாண்டம் எட்டாவது பாசுரத்தில் சொல்வது திருக்கள்வனூருக்குத் தான் என்று நம் முன்னோர்கள் வகைப்படுத்தி உள்ளனர். அதனால் கார்வானத்துள்ளாய் என்பது மட்டுமே இந்தக் கார்வானத்து எம்பெருமானான கள்வர் என்ற திருநாமம் கொண்டவர்க்கும் கள்வா என்பது திருக்கள்வனூரில் உறையும் ஆதிவராகப்பெருமாளுக்கு என்றும் கொள்ளவேண்டும். கார்வானத்துள்ளாய் கள்வா என்ற சொற்தொடரை இரண்டு திவ்ய தேசங்களுக்கான மங்களாசாசனமாகக் கொண்டு இந்த பாடலில் மொத்தம் ஒன்பது திவ்யதேசங்களுடன், ஆழ்வாரின் நெஞ்சம், மற்றும் சிந்திப்பவர்களின் நெஞ்சம் என்று எம்பெருமான் உகந்து வாழும் திவ்யதேசங்களாக திருமங்கைஆழ்வார் சொல்கிறார் என்றும் ரசிக்கலாம்.

நீரகத்தாய் (1) நெடுவரையின் உச்சி மேலாய் (2) நிலாத்திங்கள் துண்டகத்தாய் (3) நிறைந்த கச்சி ஊரகத்தாய் (4), ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் (5), உள்ளுவார் உள்ளத்தாய்(A) , உலக மேத்தும் காரகத்தாய் (6) கார்வானத் துள்ளாய் (7) கள்வா (8), காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்,(9) பேராது என் நெஞ்சி னுள்ளாய் (B) பெருமான் உன் திருவடியே பேணினேனே (திருநெடுந்தாண்டகம், 8)

Google Map

திருக் கார்வானம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக் கார்வானம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

Exit mobile version