075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தபோது கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை முதல் மூன்று தலைப்புகளை முதல் பகுதியாகவும், அடுத்த சில தலைப்புகளை இரண்டாவது பகுதியாகவும் முன்பு பதிவு செய்து இருந்தோம். இப்போது அடுத்த சில தலைப்புகளை உள்ளடக்கிய மூன்றாவது பகுதியை இங்கே காணலாம்.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

திருமலை நிகழ்ச்சிகள்

சுப்ரபாத சேவை : தினசரி காலையில் 3 மணி முதல் 330 வரை சுப்ரபாத சேவை நடக்கும். இதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், ஒரு வீணை வாசிப்பவர், ஒரு தீபம் ஏந்துபவர் என்று ஆறு பேர் உள்ளே செல்வார்கள். துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்து ஊழியரிடம் இருந்து சாவி வாங்கி, கதவை திறப்பார்கள். ஸ்வாமியை வணங்கி விட்டு, கதவை சாத்திவிட்டு, உள்ளே செல்வார்கள்; கெஸல்யா சுப்ரஜா ராமா என்று ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம் இன்னொரு குழு வாசிக்க ஆரம்பிபார்கள். இது சுப்ரபாத சேவா என்று பெயர். விளக்குகள் ஏற்றப்பட, வீணை வாசிக்க, சயன திருக்கோலத்தில் இருக்கும் போக ஸ்ரீனிவாச மூர்த்தியை, மூல மூர்த்திக்கு அருகில் நின்ற திருக்கோலத்தில் ஏளச் செய்வார்கள். இந்த போக ஸ்ரீனிவாசமூர்த்தியை இரவில் சயன திருக்கோலத்தில் ஒரு தொட்டிலில் ஏளச் செய்து இருப்பார்கள். சுப்ரபாதம் முடிந்தவுடன் கதவு திறக்கப்பட்டு, எம்பெருமானுக்கு பாலும் வெண்ணையும் அமுது செய்து தீபாராதனை நடக்கும்.

தினமும் ஆகாய கங்கையில் இருந்து மூன்று வெள்ளி குடங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். அவைகள், ஒவ்வொன்றும், காலை, மாலை, இரவு பூஜைகளுக்கு எடுத்து வைக்கப்படும். மூல மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வதற்கு ஒப்பாக, போக மூர்த்திக்கு நடத்தப்படும். முழு மூர்த்திக்கும் நடக்காமல், திருவடிகளுக்கு மட்டுமே தீர்த்தம் சேர்க்கப்படுகிறது. எம்பெருமானுக்கு வாசனை தைலம் சாத்திய பின் மஞ்சள் நீர், பால், தேன், சந்தனம் , மீண்டும் மஞ்சள் நீர் என்று திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து, திருமண் இட்டு, கண்ணாடி காட்டி, குடை பிடித்து, சாமரசம் வீசி சுப்ரபாத சேவையை முடிப்பார்கள்.

3.30 முதல் 3.45 வரை சன்னதி சுத்தம் செய்யப்படும். திரைபோட்டு, பழைய மாலைகளை களைந்து திருக்கோவிலுக்கு முன்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்க்கப்பட்டு, புது மாலைகள் அணிவிக்க படும். கோவிலுக்குகள் இருக்கும் யமுனாத்துறை என்ற இடத்தில கட்டப்பட்ட, புது மாலைகளை ஜீயர் ஸ்வாமிகள் பொறுப்பில், ஏகாங்கி என்பவரால் கொண்டு வரப்படும். ஜீயருடன், ஏகாங்கி, ஒரு வாத்தியக்காரர், திருப்பள்ளியெழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷஸுக்தம் பாட இருவர் என்பவர்கள் செல்வர்.

தோமாலை சேவை : 3 45 மணிக்கு இந்த சேவை ஆரம்பம் ஆகும். இது தோள் மாலை சேவை என்று முதலில் அழைக்கப்பது, பின்னாளில் மருவி தோமால சேவை என்று ஆனது. சுமார் 25 நிமிடம் ஆகும் இந்த சேவையின் போது, முதலில், எம்பெருமானின் திருமார்பில் எழுந்தருளி இருக்கும், மஹாலக்ஷ்மிக்கு, மாலை சார்த்தி, பிறகு எம்பெருமானுக்கு சாத்துவார்கள். திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஆகியவை சேவிக்கப்படும். இது சுமார் 430க்கு முடிவடையும்.

கொலுவு நிகழ்ச்சி : இதற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது. மூலவர் சன்னதியில் இருந்து கொலுவு ஸ்ரீனிவாச மூர்த்தியை வெள்ளிப் பல்லக்கில் ஏளப் பண்ணி, ஒரு தனி இடத்தில, எள்ளுப் பொடி வெல்லம் வெண்ணெய் அமுது செய்து, ஆராதனை செய்வார்கள். அன்றைய பஞ்சாங்கம் படித்து (நாள், கிழமை, திதி போன்றவை) அதற்கு முந்தய நாள் உண்டியல் வரவு இவற்றை சொல்லி, இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். மூலவரே வந்து கணக்கு வழக்குகளை கேட்டு இந்த நிகழ்வை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

இது முடிந்தவுடன் இரண்டு மணி அடித்து மூலவருக்கு தயிர் சாதம், முதல் நைவைத்தியம் செய்யப்படும். இதில் மூலவருடன், விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யஸூரிகளுக்கும் நைவேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு பணியாரங்கள் இரண்டாவது நைவைத்யம் செய்யப்படும். இதன் போது வராக ஸ்வாமியின் 108 திருநாமங்கள் வாசிக்கப்படும். இதன் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

ஸஹஸ்ரநாம அர்ச்சனை : அடுத்து 4:45 முதல், 5:30 வரை திருவேங்கடத்தானின் 1008 திருநாமங்களை சொல்லி இந்த சேவை நடக்கும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை முடிந்தவுடன், அர்ச்சனாந்திர தரிசனம் நடக்கும்.

மற்றவை : மதியம் 1200 மணி அளவில் தினமும் மலையப்ப ஸ்வாமிக்கும் ஸ்ரீதேவி தாயார், பூ தேவி தாயார் ஆகியவர்களுக்கு திவ்ய திருமண நிகழ்ச்சி நடைபெறும். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த வைபவம் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

கீழ்க்கண்ட காணொளி மற்றும் படங்களை கொடுத்து உதவிய whatsapp குழு நண்பர்களுக்கு நன்றி

மாலை நான்கு மணிக்கு டோலஸ்தவம் எனப்படும் வைபவம் நடைபெறும், இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூ தேவி ஆகியோர் ஊஞ்சல் மண்டபத்தில், ஊஞ்சலில் ஆடும் போது, வேத பாராயணம், மற்றும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்கும். 530 மணி அளவில் இது முடிவடையும்.

மாலை 5:30 மணிக்கு ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில், சஹஸ்ர தீப அலங்காரம் நடைபெறும். வியாழக் கிழமைகளில், முக்கிய ஆபரணங்கள் இன்றி, வேட்டி அங்கவஸ்திரத்துடன் எம்பெருமான் காட்சி அளிப்பார். வழக்கமாக அணியும் திருமண் இல்லாமல், மெல்லிய திருமண் இடப்படும்.

இரவு 1 30 அளவில் திருக்கோவில் நடை சாத்தப்படும். அதற்காக எம்பெருமானுக்கு சயன தரிசனம் அல்லது ஏகாந்த தரிசனம் நடத்தப்படும். மூல மூர்த்தி பக்கத்தில் எழுந்தருளி இருக்கும் போக ஸ்ரீனிவாசமூர்த்தியை மாலைகளை களைந்துவிட்டு, வெல்வெட் மெத்தை உள்ள வெள்ளி கட்டிலில் ஏளச் செய்வார்கள். அதற்கு முன், காய்ச்சிய பால், திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து விளக்கு திரியை சிறியதாக வைப்பார்கள்; அன்னமாச்சார்யா பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் அவர் கீர்த்தனைகளை எம்பெருமானுக்கு பாடுவார்கள். எம்பெருமானுக்கு திரை சேர்த்து அன்றைய நிகழ்ச்சிகளை முடித்து, மறுநாள் காலையில் சுப்ரபாத சேவையுடன் தான் துவங்கும்.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் வலைத்தளத்தில், நடைபெறும் நிகழ்வுகளையும் Sevas என்ற தலைப்பின் கீழ் இங்கே காணலாம். இதன்படி, தினசரி சேவைகளாக, சுப்ரபாதம், அர்ச்சனா, தோமாலை சேவை மற்றும் ஏகாந்த சேவைகள் உள்ளன.

வாராந்திர சிறப்பு பூஜைகள் : திங்கள் அன்று 14 கலச விஷேச பூஜையும் (அர்ச்சித சேவா) செவ்வாய் கிழமைகளில் பாத பத்ம பூஜையும் (108 தங்க தாமரைகளை 108 நாமங்களை உச்சரித்து எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்கும் பூஜை), புதன் கிழமைகளில் மூலவருடன் பட்டு நூலால் இணைத்த போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலச அபிஷேகமும், வியாழ கிழமைகளில் திருப்பாவாடை சேவை என்ற எம்பெருமானுக்கு முன் பெரிய அளவில் சமைத்த உணவு பரிமாறப்பட்டு நைவேத்தியம் செய்யப்படும் பூஜையும், (இந்த சமயத்தில் எம்பெருமானுக்கு மெல்லிய திருமண் சாத்தி இருப்பதால் எம்பெருமானின் திருக்கண்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்), இதன் பிறகு எம்பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்படும், சிலப்பதிகாரம் காலம் தொட்டு இருக்கின்ற, அதில் சொல்லப்பட்ட பூலாங்கி சேவையும், வெள்ளிக் கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி, புரட்டாசி ப்ரஹ்மோத்ஸ வம், ரதசப்தமி ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மார்கழியில் திருப்பாவை சேவை இங்கு பிரசித்தம்.

திருச்சானூரில் கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் பிரம்மோத்ஸவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச் சேலை, ஆபரணங்கள் மலர் மாலைகள் ஆகியவற்றுடன் யானை மேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை பிராட்டி அணிந்து கடைசி நாள் உற்சவம் நடைபெறுகிறது.

வைகாசி தெப்ப திருவிழா சுவாமி புஷ்கரணியில் நடக்கும். புரட்டாசி மாத ப்ரஹ்மோத் ஸவத்தின் கடைசி நாள் நிகழ்ச்சியான சுதர்சன சக்ர தீர்த்தவாரியும் சுவாமி புஷ்கரணியில் நடைபெறும். தை மாத இராம கிருஷ்ண தீர்த்த திருவிழாவும், மாசி பௌர்ணமியில் நடைபெறும் குமாரதாரா தீர்த்த திருவிழா, பங்குனி தும்புரு தீர்த்தத் திருவிழாவும், கார்த்திகை மாத க்ஷீராப்தி துவாதசியில் நடக்கும் சக்ர தீர்த்த திருவிழாவும் இதே சுவாமி புஷ்கரணியில் நடைபெறும்.

ப்ரம்மோத்ஸவம் : திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக் கிடைப்பது மிக அரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீஹம். இதனை தரிசிப்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ப்ரம்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவில் எம்பெருமான் கருடசேவை நடக்கும் போது, மூலவரே வந்து புறப்பாடு காண்பதாக ஐதீகம். இதை குறிக்கும் வண்ணம் இன்றும் இந்த புறப்பாட்டின் போது, மூலவர் கதவு சிறிது நேரம் சாத்தப்பட்டு இருக்கும்.

புரட்டாசி ப்ரமோத்ஸவத்தின் முந்தய நாள் எல்லா தேவதைகளையும், தேவர்களையும், முனிவர்களையும் பக்தர்களையும் அழைக்கும் அங்குரார்ப்பணம் என்ற விழா நடக்கும். முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைக்கும் விழா இது. ப்ரஹ்மாவே ப்ரம்ம லோகத்தில் இருந்து வந்து நேரடியாக நடத்தி வைக்கும் உத்சவம் ஆகும்.

முதல் நாள் மாலை கொடி ஏற்று விழா நடக்கும். பின்னர் இரவு பெரிய சேஷ வாஹனத்தில் எம்பெருமான் புறப்பாடு காண்பார். இரண்டாம் நாள் காலை சிறிய சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகன புறப்பாடும் நடக்கும். மூன்றாம் நாள் காலை சிம்ம வாகன பவனியும் இரவு முத்து பந்தல் வாகன பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூபால வாகனத்திலும் புறப்பாடு காண்பார். ஐந்தாம் நாள் காலை மோஹினி அலங்காரத்திலும், இரவில் கருட வாகனத்திலும் எம்பெருமான் வலம் வருவார். இந்த கருட வாகன தரிசனம் மிகவும் விசேஷமானது. இது கிடைப்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். கூட்டமும் அலை மோதும். மூலவருக்கு அணியும் லட்சுமி ஹாரத்தை அணிந்து மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு காண்பார். அதனால் இது மூலவரே வருவதாக ஐதீகம். ஆறாம் நாள் காலையில் அனுமந்த வாகனமும், மாலையில் தங்கத்தேர் உலாவும், இரவில் சந்திர பிரபை வாகனத்திலும் எம்பெருமான் எழுந்து அருளுவார். எட்டாம் நாள் காலையில் தேரோட்டமும் இரவில் குதிரை வாகனமும் நடக்கும். ஒன்பதாம் திருநாளன்று காலையில் பல்லக்கில் பவனியும் தொடர்ந்து சுவாமி புஷ்கரணியில் சுதர்சன் சக்ர தீர்த்தவாரியும் நடைபெறும்.

ப்ரம்மோஸ்த்வம் பற்றி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சொல்வதை இங்கே காணலாம்.

தெப்போத்ஸவம் : பங்குனி மாத சுக்ல பக்ஷ (பௌர்ணமிக்கு முன்) வரும் ஐந்து நாட்கள் இங்கு தெப்போத்சவம் நடைபெறுகிறது. ஏகாதசி அன்று ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோர் வலம் வருவார்கள். துவாதசி அன்று ருக்மிணி, சத்தியபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வலம் வருவார்கள். கடைசி மூன்று நாட்களில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் வலம் வருவார்.

வசந்தோத்ஸவம் : சித்திரை மாதம் சுக்ல பக்ஷ த்ரியோதசி, சதுர்த்தசி மற்றும் பௌர்ணமி நாட்களில் மலையப்ப சுவாமி பரிவார தேவதைகளுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டு அருளுவார். பௌர்ணமி அன்று ஸ்ரீ சீதா, ராமன், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர் மற்றும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரும் சேர்ந்து வருவார்கள். மதியம் 1 மணி சுமாருக்கு இந்த சேவை தொடங்கும்.

பத்மாவதி பரிணயம் : வைகாசி மாதம், தசமி, நவமி மற்றும் ஏகாதசி ஆகிய நாட்களில் நாராயணகிரி தோட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாட்களில் தான் ஸ்ரீனிவாசன் பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்து கொண்டார். மலையப்ப ஸ்வாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீ தேவி பூமாதேவி தாயார்களுடன் தனித்தனியாக எழுந்து அருளுவார்கள். இவர்களுக்கு இங்கு திருமணம் நடைபெறும். அதன் பிறகு கொலுவு நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4 மணி முதல் இவை தொடங்கும்.

ஜேஷ்டாபிஷேகம் : ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரம் தொடங்கி மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். எம்பெருமான், தாயார் திருவுருவங்கள் சிதிலடையாமல் இருப்பதற்காக அவர்களுக்கு இங்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை அபிதேயக திருமஞ்சனம் என்றும் கூறுவார்கள். திருமஞ்சனம் முடிந்தவுடன் எம்பெருமானுக்கு வைரம் பொதித்த வஜ்ர கவசம் அணியப்படும். மலையப்ப ஸ்வாமி தேவிமார்களுடன் திருவீதி உலா வருவார். இரண்டாம் நாள் முத்தங்கி சேவையும், மூன்றாம் நாள் தங்க கவச சேவையும் நடைபெறும்.

புஷ்பப் பல்லக்கு : திருக்கோவில்களில் தக்ஷிணாயண புண்ணிய காலத்தில் இருந்து ஆண்டுக்கான கணக்குகள் தொடங்கப்படும். அநேகமாக இது ஜூலை மாதம் 16ம் நடக்கும். திருமலையில் எம்பெருமானிடம் வருட கணக்கு ஒப்படைக்கப்படும். மாலை ஆறு மணிக்கு எம்பெருமான் புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு கண்டு, திருக்கோவிலின் முக்கிய அதிகாரிகளுடன் பவனி வருவார். அதிகாரிகள் சரியாக கணக்கு பார்ப்பதை எம்பெருமான் உறுதி செய்வதாக ஐதீகம்.

ரதசப்தமி : தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதி ஆகிய ஏழாம் நாள் ரத சப்தமி (சூரிய ஜெயந்தி) திருவிழா திருமலையில் கொண்டாடப்படுகின்றது. மலையப்ப சுவாமி, அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை ஏழு வெவ்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் எம்பெருமானை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.

ரத சப்தமி அன்று திருமலையில் “ஒரு நாள் பிரம்மோத்ஸவம்” நடைபெறுகிறது. இந்நாளில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருமலையில் உள்ள திருமாட வீதிகளில் ஊர்வலம் வருகிறார். ஏழு வாகனங்களில் ஒரே நாள், வருவதால் இந்த ரதசப்தமி தினத்தை திருமலையில் “அர்த்த -பிரம்மோத்ஸவம்” என்று அழைக்கிறார்கள். அதிகாலை 5.30 மணிக்கு ‘சூர்ய பிரபா வாகனம்’ தொடங்கி, 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம், 11 மணிக்கு கருட வாகனம், மதியம் 1 மணிக்கு அனுமன் வாகனம், மாலை 4 மணிக்கு கல்பவ்ருக்ஷ வாகனம், 6 மணிக்கு சர்வபூபால வாகனம். முறையே மாலை 8 மணிக்கு சந்திர பிரபா வாகனத்துடன் நாள் நிறைவு பெறுகிறது. மதியம் 2 மணிக்கு சுவாமி புஷ்கரணியில் சக்ரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். திருமலை திருக்கோவில் திருமாட வீதிகளில் ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் வெங்கடேஸ்வரர்.

புஷ்பயாகம் : கார்த்திகை மாத ஸ்ரவணத்தின் போது, புஷ்ப யாகம் என்று ஒரு திருவிழாவும் கொண்டப்படுகிறது. மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் தங்க பல்லக்கில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி, பலவித அளவற்ற புஷ்பங்களால் அலங்கரிக்க பட்டு திருவீதி வலம் வருவார்.

அத்யயனோத்ஸவம் : இயற்பா முதல் நூற்றந்தாதி வரை 23 நாட்கள் திவ்யப்ரபந்தம் ஓதப்பட்டு, இறுதியில் தண்ணீரமுது வழி திருத்து விழாவும் நடைபெறுகின்றன.

தண்ணீரமுது வழி திருத்துகை : இந்த விழா ஆண்டுக்கு ஒரு முறை திருஅத்யயன உற்சவத்தின் முடிவில், திருமலைநம்பியிடம் இருந்து திருமஞ்சனத்திற்காக எடுத்து வரும் தீர்த்தத்தை எம்பெருமான் வரும் வழியிலேயே எடுத்து அமுது செய்த காட்சியை இந்த திருத்தலத்தில் உள்ள பெரியவர்களும், ஜீயர்களும், ஸ்ரீ வைணவர்களும்,கண்டுகளித்து திருவேங்கடவன் மற்றும் இராமானுஜர் திருவருளை பெறுவதற்கான திருவிழாவாக கொண்டப்படுகிறது. இந்த சமயம் திருவேங்கடவனுமும், இராமானுஜரும் ஆகாயகங்கை தீர்த்தத்திற்கு செல்லும் வழிக்கு எழுந்தருள கொண்டுபோய், எதிரே திருமொழி அனுசந்தானத்தோடு திருமஞ்சன தீர்த்தம் ஆகாய கங்கையில் இருந்து எடுத்து வரப்பட, அவர்களோடு திருவேங்கடவனும் ராமானுஜரும் சேர்ந்து திருவீதிகளில் திரு உலா வரும் போது, வீதியில் உள்ளவர்களும் தங்களுடைய இல்லத்தில் இருந்து, திருமஞ்சனத்திற்கு உரிய பொருட்களையும் எடுத்து திரு உலாவில் சேர்ந்து கொண்டு திருக்கோவிலை அடைவார்கள். அங்கு திருவேங்கடவனுக்கும் இராமானுஜருக்கும் புருஷஸூக்தத்தோடு திருமஞ்சனம் செய்து அவர்களின் திருவருளை வேண்டுவார்கள்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் : இவைகளைத் தவிர, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று ஆண்டுக்கு நான்கு முறை மூலவர் சன்னதியிலும் கோவில் முழுவதும் அடியவர்களால் ஆகம முறைப்படி சுத்தம் செய்யும் திருவிழா நடைபெறும். நடைபெறும். பொதுவாக இது உகாதி, அணிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதேசி, பிரம்மோத்சவம் முன்னிட்டு நான்கு முறை நடைபெறும்.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று மலையப்ப ஸ்வாமி வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதி உலா காண்கிறார்.  

மற்ற திருக்கோவில்கள்

ஆதிவராஹ சுவாமி திருக்கோவில் : இது சுவாமி புஷ்கரணி கரையில் உள்ளது.

கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் : இது திருப்பதி நகரத்தில் உள்ளது. இந்த இடம் முன்பு ரகுநாதபுரம் என்று கூறப்பட்டது. இங்கே ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இந்த கோவிலுக்கு எதிரே இதனுடன் சேர்ந்த ஸ்ரீ அனுமான் கோவிலும் உள்ளது. உகாதி, ஸ்ரீ ராம நவமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ரங்கபூபாலன் என்ற பாண்டிய மன்னன் பல அரசர்களை வெற்றி பெற்று அந்த வெற்றிகளுக்கு அறிகுறியாக திருமலையில் கொடி நாட்டினான். அவன் ராமபிரானுடன் சீதா தேவி, மற்றும் லக்ஷ்மணன் இவர்களை நிறுவி இந்த திருக்கோவிலையும் கட்டினான் என்று திருமலையொழுகு கூறுகிறது. இவனே கோவிந்த ராஜர் சன்னதிக்கு அருகில் குலசேகர ஆழ்வாருக்கு ஒரு சன்னதியும் கட்டினான். குமார ராமானுஜ அய்யங்கார் என்பவர் இந்த கோவிலுக்கு ஒரு திருத்தேர் சம்பர்ப்பித்து, 1530ம் ஆண்டு பங்குனி 8ம் நாளில் எம்பெருமானைத் திருவீதி வலம் காண செய்தார்.

கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் : இது திருப்பதியில் இருந்து வடக்கே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் ஸ்ரீனிவாசமங்காபுரம் என்ற இடத்தில இருக்கிறது. கபில தீர்த்தம் இங்கு தான் உள்ளது

பிரசன்ன வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் : இது திருப்பதியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அப்பாலயகுண்டா என்ற ஊரில் உள்ளது. இங்கே சுவாமி அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பி, வரதராஜர், பெரியாழ்வார், திருமலை நம்பி, கூரத்தாழ்வான், மதுரகவி ஆழ்வார், இராமானுஜர் ஆகியோருக்கு பல்வேறு காலங்களில் சன்னதிகள் கட்டப்பட்டு உள்ளன.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் வலைத்தளத்தில் எல்லா விவரங்களும் உள்ளன. மற்ற கோவில்கள் பற்றி இங்கே காணலாம்.

ஸ்தல வரலாறு

கலியுகம் பிறந்த பின்னர் எங்கும் கலியின் கொடுமை தாங்க முடியாததாக இருந்தது. முனிவர்கள் கலியின் கொடுமை குறையவும், உலக நன்மைக்காகவும், காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர், இந்த மகா யக்ஞத்தின் பயனை கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் தீர்த்து வைக்கும் மூர்த்திக்கே தரவேண்டும் என்கிறார்.

மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பினை பிருகு மஹரிஷிக்கு கொடுத்து அவரை மூவுலகுக்கும் அனுப்பினர். பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் கண்டும் காணாதது போல் இருக்கிறான் என்று, அங்கிருந்து புறப்பட்டு கைலாயத்திற்கு வந்தார். கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருந்து இவரை கவனிக்காமல் இருக்க, பிருகு இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை என்று வைகுண்டம் அடைந்தார். அங்கே திருமகள் பாதம் வருட திருமால் துயில் கொண்டு இவரை பார்க்கவில்லை. மூம்மூர்த்திகளில் யாருக்கும் பொறுமை இல்லை என்று கோபம் கொண்டு திருமால் அருகில் சென்று, தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

உடனே, திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு, பாறை போன்ற என் மார்பில் உதைத்த முனிவரின் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று முனிவரின் பாதங்களை தாங்கி, பிடித்து விடத் தொடங்கினார். தன் தவற்றை உணர்ந்த பிருகு, மன்னிப்புக் கேட்டு, தான் வந்த காரியத்தை தெரிவித்து விட்டு அவருக்கே யாக பலன்களை தருவது என்று யாகபூமிக்கு திரும்பினார்.

எம்பெருமானின் திருமார்பு, மஹாலக்ஷ்மியின் உறைவிடம் ஆகையால், அங்கு ஒருவர் உதைத்ததை பொறுக்க முடியாத மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு நீங்கி, பூவுலகுக்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தார். மஹாலக்ஷ்மி இல்லாததால், திருமால் துயர் கொண்டு தாமும் பூலோகம் வந்து திருமலையில் ஒரு புற்றில் எழுந்தருளி, திருமகளை அடைய தவம் செய்யலானார்.

திருமலையில் ஒரு புற்றில் எம்பெருமான் நெடுநாள் ஆகாரமின்றி இருந்த நிலை கண்டு பிரம்மனும் சிவனும் தாங்களே பசுவும் கன்றுமாக தோன்ற, பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் மன்னனிடம் விற்க, மன்னனின் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப் பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி, ஸ்ரீனிவாசன் எழுந்தருளி இருந்த புற்றுக்கு சென்று பாலைச் சொரிய, தெய்வப்பசு மட்டும் மன்னருக்கு பால் கொடுக்காமல் இருப்பதை அறிந்த மன்னன் இதன் காரணத்தைக் கண்டுபிடிக்குமாறு சொல்ல, தெய்வப்பசு புற்றருகே
சென்று பால் சொரிவதைக் கண்டு, ஆத்திரமுற்று தன் கையிலிருந்த கோடாலியால் மாடு மேய்ப்பவன் பசுவை அடிக்க முயற்சிக்க, புற்றின் உள்ளே இருந்த எம்பெருமான் லேசாக எழுந்திருக்க, கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் கசிய ஆரம்பிக்க, அதைப் பார்த்த மேய்ப்பவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் மன்னனின் மாளிகையை அடைய, மன்னன் பசுவினைப் பின் தொடர்ந்து புற்றுக்கு அருகே வந்து பசு மேய்ப்பவன் கீழே விழுந்து கிடப்பதையும், ரத்தம் சிந்தி இருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றில் இருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக் காப்பாற்றி, அந்த மன்னனிடம் பின் ஒரு காலத்தில், அந்த மன்னன், ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வான் என்றும், அப்போது திருமகளே அவனுக்கு மகளாக பிறந்து வர, எம்பெருமானே வந்து அவளை மணம் புரிவதாக கூறி பசுமேய்ப்பவனைக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார்.

குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்து, தான் ஸ்ரீவிஷ்ணுவை மணம் முடிக்க வேண்டும் என்று எண்ணி, அவனை குறித்து தவம் செய்ய தொடர்ந்தார். அக்கினிதேவன், இந்த வேதவதியைத் தான் சீதையாக இலங்கையில் இருக்க வைத்ததை தொடர்ந்து, இராவண வதம் முடிந்தபின், அவளின் தவத்தை மெச்சி, இராமன், அந்த அவதாரத்தில் தான் ஏகபத்தினி விரதன் என்றும் கலியுகத்தில் அவளை அடைவோம் என்று வரம் கொடுத்து இருந்தார். அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திர வம்சத்தைச் சார்ந்த ஆகாசராஜன் என்னும் மன்னனுக்கு ஒரு பெண்ணாக பிறந்து பத்மாவதி என்னும் பெயரில் கலியுகத்தில் வளர்ந்து வந்தாள்.

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். இருந்தாலும், கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும் திருமணம் செய்து கொண்டதை யசோதை காணவில்லை என்ற அவளுடைய மனக்குறையை, கலியுகத்தில் தீர்த்து வைப்பதாக கண்ணன் யசோதைக்கு வரம் தந்திருந்தார். இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த ஸ்ரீ வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை, ஸ்ரீனிவாசனை, யசோதை எப்படி கண்ணனை வளர்த்தாளோ அதன்படி தன் மகனாகவே வளர்த்து வர,
ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு, தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் சென்று பெண் கேட்க அனுப்பி வைத்தார்.

எம்பெருமான் ஸ்ரீனிவாசனே குறத்தி வேடம் பூண்டு, ஆகாசராஜன் மனைவியிடம் வகுளமாலிகை வருவதை பற்றியும் அவள் பத்மாவதியை பெண் கேட்பது பற்றியும் சொல்லி, அது அவர்களுக்கு நல்லது என்றும் குறி சொல்லி சென்றார். அதன்படியே வகுளமாலிகை வந்ததும், பத்மாவதியை பெண் கேட்டதும் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாலும் ஆகாச ராஜனும் அதற்கு இசைந்து, அது எம்பெருமான் திருமகள் திருமணம் என்பதை உணர்ந்து, அதற்கு ஒப்புதல் கொடுத்தான். இதுவரை யாரும் செய்யாத வண்ணம் இந்த திருமணத்தை நடத்த எண்ணி எம்பெருமான் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். அக்னி பகவான் வந்தவர்களுக்கு உணவு தயார் செய்து பரிமாறும் சேவையை செய்ய இங்கே வருகிறார். வாயு, ப்ரஹ்மா ருத்ரன் என்று எல்லோரும் ஆளுக்கு ஒரு சேவையாக எல்லாவற்றையும் நடத்தி தர வருகிறார்கள். மஹாலட்சுமி எம்பெருமானிடம் இல்லாததால், அவர், குபேரனிடம் கடன் வாங்கி, எம்பெருமான் திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாக வரலாறு. அந்த கடனுக்கான வட்டியை பக்தர்கள் காணிக்கையில் இருந்து இப்போதும் குபேரனுக்கு கட்டுவதாக கூறுவதுண்டு.

திருவேங்கடம் ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாணத்தின் போது தயாரிக்கப்பட்ட உணவினை அஹோபில நரஸிம்ஹருக்கு திருவாராதனம் செய்யப்பட்டது.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று, யசோதையான வகுளமாலிகையின் குறை தீர்த்த ஸ்ரீனிவாசன், மனக்கிலேசம் உள்ளவர் போலவே இருக்க, எம்பெருமானின் திருவுள்ளம் அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்று சொல்ல, பத்மாவதி, மகாலெட்சுமியை அழைத்து வர சொல்ல, திருமகள் கோலாப்பூரில், லட்சுமி தேவி என்ற பெயரில் வளர்ந்து வருவதை அறிந்து, அங்கு சென்று, அவர் இல்லாதை அறிந்த போது எம்பெருமான் மேலும் வருத்தமுற்றார். மஹாராஷ்டிராவில் கோலப்பூரில் இன்றும் லட்சுமி சேத்திரம் என்பது உண்டு. அப்போது அங்கு ஒலித்த அசரீரி, மகாலக்ஷ்மி இருக்கும் இடத்தை தெரிவிக்க, எம்பெருமான் நித்யஸூரிகள் மற்றும் வாயு போன்ற பஞ்ச பூதங்களை கொண்டு மஹாலக்ஷ்மியை திருமலாவிற்கு அழைத்து வர செய்தார். வகுளமாலிகையும் பத்மாவதி தாயாரும் அவரை மனமார வரவேற்க, நித்யஸூரிகள் பிருகு முனிவர் அப்படி செய்ததற்கான காரணத்தை விளக்க மகாலட்சுமியும் மனம் உகந்து, திருமாலை அடைய, அவரும் மகிழ்ச்சியுடன் திருமகளை ஏற்க மகாலட்சுமியும் அகலகிலேன் இறையும் என்று திருவேங்கடத்தானின் திருமார்பில் ஏறி அமர்ந்து கொண்டார்.

பிரம்மாண்ட புராணத்தில், பத்தாவது அத்தியாயமான திருவேங்கட மஹாத்மியத்திலே நாரதர், திருப்பாற்கடலில் எம்பெருமானை தரிசித்த போது, அவரிடம் அவருக்கு உகந்த தேசம் எது என்று கேட்க, நாரதரும் திருமலை என்று குறிப்பிட, எம்பெருமானும் நித்யசூரியான அனந்தனை மலையாக இருக்க சொல்ல, தானும், பிராட்டிமார்களோடு சேனை முதலியார் மற்றும் நித்யஸூரிகளோடு, அங்கே அவதரிக்க வேண்டும் என்று திருவுள்ளமாக, திருப்பாற்கடல் நாதனே சங்கல்பித்து திருமலையில் தேவிமார்களுடன் எழுந்தருளி உள்ளான் என்று இருப்பதாலும், கிருமிகண்ட சோழன் மூலமாக தில்லைநகர் திருச்சித்திரகூடம் என்ற திவ்யதேச எம்பெருமான் கரும்கடலுள் புகுந்ததையும் மனதில் கொண்டு, அந்த எம்பெருமானையே ஆவாகனம் செய்து, உத்சவ பேரராய் எழுந்தருளி இருக்கும் தேவாதிதேவனுக்கு மூல விக்ரகமாய் திருப்பாற்கடல் நாதனை மது கைடபர்கள் சேவித்துக்குக் கொண்டு இருக்கும் விதமாக திருமலை அடிவாரத்தில் திருப்பிரதிஷ்டை செய்ததாக திருமலையொழுகு சொல்கிறது.

காசி ராஜன் சந்தான பிராப்தி வேண்டி குடும்ப சகிதமாக திருவேங்கடமுடையானை பக்தியுடன் தரிசித்து அன்று இரவு உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவனது மனைவியின் கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி அவளுக்கு சந்தான ப்ராப்தி கொடுப்பதாகவும் அவளின் நகை ஒன்றினை தருமாறும் கேட்டார்; அதற்கு அந்த மனைவி தன் கணவனிடம் கேட்டு தருகிறேன் என்று சொல்ல, திருவேங்கடமுடையானும், தன் அண்ணனான கோவிந்தராஜனிடம் கேட்டு சொல்வதாக சொல்லி மறைந்தார். இதனால் திருமலை அடிவாரத்தில் இருக்கும் கோவிந்தராஜன், திருவேங்கடமுடையானின் அண்ணா என்று சொல்வார்கள்.

தொண்டைமான் சக்கரவர்த்தி இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். எம்பெருமானுடன் தொண்டைமான் சக்கரவர்த்தி பேசியதாகவும் வரலாறு கூறுகின்றது. இவனைப் பகைவர்கள் சூழ்ந்து போது, போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில், வேங்கடவனை வேண்ட, வேங்கடவன், அவன் பகைவர்களை அழிப்பதற்கு தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளித்து போரில் அவனை வெற்றி பெற செய்ததாக, ப்ரம்ம புராணத்தில் ஏழாம் அத்தியாயத்திலும், இந்த கோவிலின் வரலாற்றில், இராமானுஜர் அப்பனுக்கு சங்காழி கொடுத்த வரலாற்றின் போது சொல்லப்பட்டு உள்ளது.

தொண்டைமான் சக்ரவர்த்தி கபில தீர்த்த (ஆழ்வார் தீர்த்தம்) கரையில் உள்ள ஒரு துவாரத்தின் மூலம் சென்று திருவேங்கடவனை வணங்கி வந்தார் என்றும், அந்த வழியினை எம்பெருமானே அவனுக்கு காட்டி கொடுத்தார் என்றும் திருமலையொழுகு என்ற நூல் சொல்கிறது.

சாளுவ நரசிம்ம ராயன் காலத்தில் நாட்டில் முகலாய கலகங்கள் காரணமாக, திருவேங்கடமுடையான், கோவிந்தரராஜர், ஆழ்வார் மற்றும் எம்பெருமான் பாபவிநாசத்திற்கு அருகில் உள்ள குகையில் பாதுகாத்து, திருவாராதனம் கொண்டு சுமார் ஒரு வருடம் இருந்தனர் என்று திருமலையொழுகு கூறுகிறது.

சாளுவ நரசிம்ம ராயனும், கிருஷ்ணதேவ ராயரும், பல கிராமங்களை வரியில்லாமல் தானமாக விட்டு திருவேங்கடமுடையானுக்கும், கோவிந்தராஜனுக்கும் ஆழ்வாருக்கும் பல கைங்கர்யம் செய்து திருவேங்கடமுடையானின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள்.

திருவேங்கடமுடையானைப் பற்றி மீண்டும் வேறு சில தலைப்புகளில் காண்போம். நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: