A Simple Devotee's Views
ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவேங்கடம் | |
மூலவர் | திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான் திருப்பதியில், கோவிந்தராஜன் | |
உத்சவர் | திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி | |
தாயார் | அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் | |
திருக்கோலம் | திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் | |
திருமுகமண்டலம் | கிழக்கு | |
பாசுரங்கள் | 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. | |
மங்களாசாசனம் | பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் | |
தீர்த்தம் | 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி, 5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம். திருச்சானூரில் பத்ம ஸரோவரம் | |
கோபுரம் | ஆனந்த நிலைய விமானம் | |
ஸ்தல வ்ருக்ஷம் | புளியமரம் (சேஷ அம்சம்) |
வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
திருத்தலம் பற்றி
இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தின் முதல் மூன்று தலைப்புகளை முதல் பகுதியில் சொல்ல முயன்றுள்ளேன். அடுத்த சில தலைப்புகளில் இன்னும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.
ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராக ரூபியாய் காட்சி தந்தருளினார். அதனால், இது ஆதி வராக க்ஷேத்திரம் என்றே ஒரு காலத்தில் இது புகழ் பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதி வராகரைச் சேவித்த பின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டும் என்பது வழக்கம்.
எம்பெருமான் ஸ்ரீனிவாசனாக இங்கு வந்த போது, இந்த ஆதி வராஹ பெருமாளிடம் அனுமதி பெற்று இங்கு தங்கியதாக சொல்லப் படுகிறது. முதல் நைவேத்தியம் இந்த வராஹ பெருமானுக்குத் தான்.
முகலாய படையெடுப்பில் மதுரை மீனாக்ஷியம்மன் கோவில், திருவரங்கன் ஆலயம் போன்றவற்றை சூறையாடிய போது, இந்த திருமலை மட்டும் அவர்களிடம் சிக்கவில்லை. மலைமேல் உள்ள கோவில் என்ன என்று முகலாயர் கேட்ட போது, அது பன்றி கோவில் என்று வராக சுவாமி கோவிலை குறிப்பிட்டு சொன்னதால், பன்றி மேல் உள்ள வெறுப்பினால் அவர்கள் இங்கே வராமல் சென்றனர் என்று கூறுவதுண்டு.
ஆதிவராஹ க்ஷேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் மூன்று பிரிவுகள் கொண்டது. அவை கீழ் திருப்பதி என்ற திருப்பதி, திருமலா என்ற திருமலை மற்றும் அலர்மேல்மங்காபுரம் என்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவில்.
திருப்பதி ஏழுமலையான், அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வெங்கடாத்ரி, நாராயணாத்ரி, ரிஷபாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி ஆகிய 7 மலைகள் மீது குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பதை கீழே பார்க்கலாம். திருவேங்கடமுடையானை திருமலைக்கு சென்று தரிசனம் செய்ய ஏழு மலைப் பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
முதலாவது அலிபிரி பாதை. ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் மைத்துனர் மட்டி குமார அனந்தராயுலு என்பவர்தான் அலிபிரி மலைவழிப் பாதையை ஏற்படுத்தியாக தெரிகிறது. 3,650 படிகளும், 8 கி.மீ. தொலைவும் கொண்டது இந்த மலைப்பாதை. திருமலைக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும், இந்த வழியே மலையை நடந்து சென்று தரிசிக்கும் பக்தர்களும் நிறைய உண்டு. இப்படி செல்பவர்களுக்கு தேவஸ்தானம் மிக சிறப்பான வசதிகளை செய்து தந்து உள்ளது. மலைஅடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்.
இங்கிருந்து தான் முனிவர்களும், யோகிகளும், ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் எம்பெருமானை சேவிக்க சென்று உள்ளார்கள் என்று நினைத்தபடி மலைப்படிகளை ஏறினால் சிரமம் தெரியாது.
இதற்கு அடுத்த பகுதி, பாத மண்டபம், அங்கே எம்பெருமானின் திருவடிகள் உள்ளன. இதன் விவரம் கீழே ஆச்சாரியர் என்ற பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. அடுத்த பகுதி தலையேறு குண்டு பாறை, அங்கு ஆஞ்சநேயரை சேவிக்கலாம். மலை பாதையில் ஏறும் வழியில் தசாவதார மண்டபங்கள் கள் உள்ளன. மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணா அவதாரங்களுக்கு பிறகு ஹயக்ரீவர் மண்டபம் உள்ளது. அதையடுத்து 12 ஆழ்வார்களின் மண்டபங்கள் உள்ளன. எல்லா மண்டபங்களையும் கடந்தவுடன் நாம் திருமலையை அடைந்து விடுவோம்.
திருமலைக்கு நாம் நடந்து செல்லும் போது, மூன்று கோபுரங்கள் உள்ளன; ஒன்று அலிபிரியில் உள்ள முதல் கோபுரம். இது ராயர் கோபுரம் என்று பெயர். இது சாளுவ நரசிம்மன் கி பி 1482ல் கட்டியது. இரண்டாவது குருவ நம்பிக்கான ஒரு கோபுரம், இது சுமார் 2000 படிகள் கடந்தவுடன் உள்ளது, சிறிது சிதலடைந்து உள்ளது. மூன்றாவது கோபுரம் காலி கோபுரம்.
காலி கோபுரத்தை தொடர்ந்து நரசிம்மர் சன்னதி உள்ளது. இதற்கு தபோவனம் என்று பெயர். இங்கு தவம் புரிந்த முனிவர்களுக்கு நரசிம்மன் காட்சி அளித்ததாக வரலாறு. யோகநரஸிம்ஹர் சுயம்புவாக நெடிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.
சேஷாத்திரி மலையை கடக்கும் போது, முழங்கால் முறிச்சான் என்ற பகுதி வருகிறது. இந்த புனித மலையில் பாதம் பதித்து நடந்தால், பாவம் வந்து சேரும் என்று ஸ்ரீ ராமானுஜர் முழங்காலாலேயே ஊர்ந்து சென்றதாக வரலாறு. இங்கு ராமானுஜருக்கு ஒரு சன்னதி உள்ளது.
செல்வன் என்ற ஒரு இடையன் முதலில் திருமலைக்கு திருப்படிகள் அமைத்தான் என்று திருமலை ஒழுகு கூறும். கந்தாடை இராமானுஜ அய்யங்கார் என்பவர் 15ம் நூற்றாண்டில் இந்த படிகளை சீர் செய்தார். அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதி வண் சடகோபதீந்தர மகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை மேலும் சீர் அமைத்தார்.
இரண்டாவது, ஸ்ரீவாரி மெட்டு மலைப் பாதை. இவ்வழியாகத்தான் மகா விஷ்ணுவே திருமலைக்கு மலையேறிச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. இதுவே திருப்பதி – திருமலை இடையே இருந்த முதல் வழித்தடம். அரசர் சாளுவ நரசிம்ம ராயுலு இந்த வழியில் பயணம் செய்து திருமலையை அடைந்தார். 2,100 படிகள் மட்டுமே உள்ள இப்பாதையில், ஒரு மணி நேரத்திலேயே பக்தர்கள் திருமலையை சென்றடையலாம்.
இது திருப்பதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உள்ள ஸ்ரீனிவாச மங்காபுரம் என்ற இடத்தில இருந்து தொடங்குகிறது. ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட பிறகு சுமார் ஆறுமாதங்கள் அவரை ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் தங்குமாறும், மேலும் திருமலை ஏற வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதை வழியாக ஸ்ரீனிவாச பெருமாள் திருமலைக்கு திருப்பதிக்கும் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
மூன்றாவது அன்னமாச்சாரியார் பாதை. இது, கடப்பா மாவட்டம், தாள்ள பாக்கம் பகுதியில் இருந்து குக்கல தொட்டி வழியாக திருமலையில் உள்ள பார்வேட்டி மண்டபம் வரை அமைந்துள்ளது. இவ்வழியாகத்தான் அன்னமாச்சாரியார் திருமலையை அடைந்ததாக கூறப்படுகிறது.
நான்காவதாக தும்புரு தீர்த்தம் பாதை. திருமலையில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் இருந்து, குக்கல தொட்டி வழியாக கடப்பா மாவட்டம் சோமேஸ்வரர் கோயில் வரை உள்ளது. ஆனால் இந்த வழித்தடம் இருப்பது பலருக்கு தெரியாது.
ஐந்தாவதாக தரிகொண்ட வெங்கமாம்பாள் பாதை. ஏழுமலையானின் தீவிர பக்தையான தரிகொண்ட வெங்கமாம்பாள் இந்தப் பாதை வழியாகதான் திருமலையை அடைந்துள்ளார். இப்பாதை திருப்பதியை அடுத்துள்ள பாகரா பேட்டை வனப் பகுதியிலிருந்து தலக்கோனா வழியாக மொகலிபெண்டா, யுத்தகள்ளா, தீர்த்தம் குண்டா வழியாக திருமலையில் உள்ள வேதபாட சாலையை வந்தடையும். மிகவும் அடர்ந்த வனப் பகுதி வழியே இப்பாதை செல்வதால் இந்த வழியில் இடர்கள் அதிகம்.
அடுத்தது, பாலகொண்டா பாதை. இது யுத்தகள்ளா தீர்த்தத்தில் இருந்து பால கொண்டாவரை நீண்டுள்ளது. கண்டி கோட்டை அரசர் ஏற்பாடு செய்த வழித்தடமாக இது கூறப்படுகிறது. ஆனால் இந்த பாதையை தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.
இறுதியாக தொண்டமான் பாதை என்பது ஏழாவது வழி. இது தொண்டமான் சக்கரவர்த்தி காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழித்தடமாக கூறப்படுகிறது. திருப்பதி அருகே உள்ள கரகம்பாடியில் இருந்து அவ்வாச்சாரி கோனா வழியாக திருமலையை சென்றடையலாம். பக்தர்கள் ஏறிச்செல்ல மிகவும் சிரமமான பாதை என்பதால் காலப்போக்கில் இந்தப் பாதையும் காணாமல் போனது.
வேங்கட மலை – வேங்கடாத்ரி : ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
சேஷ மலை – சேஷாத்திரி : பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
நாராயணாத்திரி – வேதகிரி : எம்பெருமான், வேதங்களை மீன் வடிவத்தில் காத்ததால், வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது. இங்கே எம்பெருமான் நாராயணனே, மலை வடிவிலேயே காட்சி அளிப்பதால், இது நாராயணத்ரி என்று அழைக்கப்படுகிறது.
கருட மலை – கருடாத்திரி : இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
விருஷப மலை – விருஷபாத்ரி : விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவன் எம்பெருமானை வேண்டி, அவன் பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
அஞ்சன மலை – அஞ்சனாத்ரி : ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
நீலாத்ரி : ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
திருமலையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற ஒரு பாறை படிமம் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து தான் ஸ்ரீனிவாச பெருமாள் வெளிப்பட்டதாக சொல்வார்கள். இங்கு ஐராவதம், அபாய ஹஸ்தம், கருடாழ்வார் வடிவில் அமைந்த பாறைகள் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடங்கள் ஆகும். .ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை என்று சொல்வார்கள்.
திருமகளை தேடி அலைந்த ஸ்ரீனிவாச பெருமாள் ஒரு சிகரத்தில் நின்றதாக சொல்வார்கள். அது நாராயணகிரி என்ற மலை ஆகும். இப்போதும் அங்கு எம்பெருமானின் திருவடிகள் உள்ளன, அவற்றை ஸ்ரீவாரி பாதம் என்று பக்தர்கள் வணங்குகிறார்கள். இந்த இடம் சிலாதோரணத்திற்கு அருகில் உள்ளது.
திருமலையில் உள்ள திருவேங்கடவன் திருக்கோவிலும், திருச்சானூரில் இருக்கும் அலர்மேல் மங்கை திருக்கோவிலும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றனவையும் தொண்டைமான் கட்டியதே ஆகும். இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப் பட்டுள்ளது. இந்த தொண்டைமான், ஆகாயராஜனின் சகோதரர் என்றும் சொல்லப்படுகிறது.
திருமலையில், த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீ நிவாசர், மற்றும் மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.
த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி : இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பார்கள். உயர்ந்த திருவுருவம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.
போக ஸ்ரீநிவாச மூர்த்தி : இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.
கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி : கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.
உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி : இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்ப ஸ்வாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.
உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி : இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர், தர்பார் ஸ்ரீனிவாசர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சி அளிப்பவர் மலையப்பர்.
சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப் படுகிறது. இவர் வேறு, திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.
இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயக்ஷமாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்கு வந்து கூடுகின்றன. சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.
குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம் : மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. அன்று இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்கள் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.
தும்புரு தீர்த்தம் எம்பெருமானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர்
தவமியற்றிய இடத்திற்கு அருகில் இருப்பதால் இது தும்புரு தீர்த்தம் எனப்படுகிறது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு
பரமபதம் உண்டு.
இராம கிருஷ்ண தீர்த்தம் : தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இந்த உலக சுகம், மற்றும் வைகுண்ட பிராப்தி இரண்டும் கிடைக்கும்.
ஆகாச கங்கை : தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு
திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இந்த தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு நித்ய கைங்கர்ய தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருவாராம். கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்து அந்த தீர்த்தத்தை கோவிலினுள்ளேயே காண்பித்ததாகவும் சொல்வார்கள். சகல சித்திகளையும் அளிக்கும் இந்த தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நீராடுவது மிக சிறப்பு.
பாண்டு தீர்த்தம் வைகாசி மாதம் சுக்ல பட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அப்போது இதில் நீராடுவோர் சகல
பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.
பாபவிநாசன தீர்த்தம் மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக் கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்குஅறிய ஞானம் பெறுகின்றனர். சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.
ஸ்வாமி புஷ்கரிணி தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும், சரஸ்வதி தேவி
தவம் இயற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில் தான் ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது. இதில் மூன்று கோடி தீர்த்தங்கள் கூடுகின்றன மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பில் இருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. எம்பெருமானும் இங்கு நீராடுவதாக ஐதீகம். அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.
கபில தீர்த்தம். இது கீழ் திருப்பதியில் மலை அடிவாரத்தில் அலிப்பிரிக்கு அருகில் உள்ளது. கபில முனிவர் பெயரில் இது இப்படி அழைக்கப்படுகிறது. இதுவே ஆழ்வார் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
முதல் பிரிவு, கீழ் திருப்பதி என்று சொல்லப்படும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சன்னதி. இங்கே இவர் சயன திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் காட்சி அளிக்கிறார். புண்டரீகவல்லி தாயார், ஆண்டாள், உடையவர் ஆகியவர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோவிந்தராஜ எம்பெருமான், ஒரு மரக்காலை (அளவுகோல்) தலையில் வைத்துக்கொண்டு சயனித்து உள்ளார், அந்த மரக்கால், திருமலையில் எம்பெருமானுக்கு வரும் காணிக்கையை அளந்து குபேரனுக்கு கொடுப்பதாக ஐதீகம்.
சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லைநகர் திருச்சித்திரகூட உத்சவ மூர்த்தி கோவிந்தராஜனே, இங்கே கீழ் திருப்பதியில் கோவிந்தராஜனாக சேவை சாதிக்கிறார்.
இரண்டாம் பிரிவு, மலை மேல் உள்ள திருப்பதி, திருமலா அல்லது திருமலை எனப்படும் மலை மேல் உள்ள திருக்கோவில். எம்பெருமான், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான் என்று பல திருநாமங்களுடன், ஆனந்த விமான நிலையத்தின் கீழ், கிழக்கு நோக்கி திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறான்.
திருமலை திருக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. ஒன்று சம்பங்கி சுற்று. இந்த பிரஹாரத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராயன் மண்டபம், சாளுவ நரசிம்ம மண்டபம், ஜனா மஹால், துஜஸ்தம்பம் ஆகியவை உள்ளன. கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் பிரதிமை மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயர், அவரது மனைவிகளான திருமலாதேவி, சின்னா தேவி இவர்களின் சிலைகள் உள்ளன.
அடுத்து ரங்க மண்டபம், இதில் 14ம் நூற்றாண்டில், முகலாய படையெடுப்பின் போது, தாக்கபட்ட ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட திருவரங்கன் உற்சவர் விக்ரகம், இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டதாக வரலாறு. கி பி 1328ல் முஹம்மது பின் துக்ளக் என்பவன் மதுரையும் அதனை சுற்றியுள்ள ஊர்களை கொள்ளை அடித்து கோவில்களை சூறையாடிய போது, திருவரங்கனை கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிக்க, சில பக்தர்கள் அவரை சுமந்து வந்து பல ஊர்களை கடந்து திருமலையில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். நடைபயணமாக வர சுமார் 2 ஆண்டு எடுத்து இருக்கும். 1330ல் திருமலை திருக்கோவிலில் ரங்கமண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் எழுந்தருள செய்து அவரை விருந்தாளியாக உபசரித்து அவருக்கு முதல் திருவாராதனம் நடந்தது என்றும் கங்குலும் பகலும் என்ற பதிகம் (திருவாய்மொழி 7.2) திருவேங்கடவன் முன் ஓதப்பட்டது என்றும் சொல்வார்கள். இங்கிருந்த திருவரங்கனை 1363ல் செஞ்சிக்கு கொண்டு சென்று அங்கு ஒரு எட்டு ஆண்டுகள் வைத்திருந்து மதுரையில் கலகம் தணிந்த பின், திருவரங்கத்துக்கு 1371ல் எழுந்தருளினார்.
அடுத்த பகுதி, திருமலை ராயர் மண்டபம். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மலையப்ப சுவாமி எழுந்தருளி திருக்கோவில் கணக்குகளை பார்ப்பார். ஜனா மஹாலில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் உற்சவம் காணுவார். வைகானச ஆகம முறைப்படி இந்த கோவில் துவஸ்தம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவேங்கடத்தானுக்கு அமைக்கப்பட்டு இருக்கும் விமானத்தில் தங்கத்தில் பதிக்கப்பட்ட பரவாசுதேவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் உண்டியலுக்கு போவதற்கு முன்பு, இவரை முழுவதுமாக தரிசிக்கலாம்.
அடுத்த மண்டபம், நடிமி படி காவலி என்ற மண்டபம், இங்கு நைவேத்தியம் சமயத்தில் அடிக்கப்படும் இரண்டு கோவில் மணிகள் உள்ளன. அதனால் இந்த மண்டபத்தை திருமாமணி மண்டபம் என்றும் அழைப்பர். இந்த மண்டபத்திற்கு வடக்கே பரகாமணி மண்டபம் என்ற எம்பெருமானின் முக்கிய உண்டியல் உள்ள மண்டபம் உள்ளது. இங்கே காவாளம் என்ற பெரிய பித்தளை அண்டாவில் துணி சுற்றி உண்டியலாக வைத்து உள்ளார்கள். கிழக்கே கருடர் சன்னதி உள்ளது.
அடுத்து பங்காரு வகிலி என்னும் தங்க வாசல் வழியாக திருவேங்கடவனை தரிசிக்க செல்கிறோம். இதன் வாசலில் ஜெயன் விஜயன் என்ற துவார பாலகர்கள் இருக்கிறார்கள். எம்பெருமான் கருவறைக்கு செல்வதற்கு முன், உள்ள மண்டபம் ஸ்நாபன மண்டபம். அடுத்த கட்டம், ராமர் மேடை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர், சுக்ரீவன், அனுமன் அங்கதன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். சுதர்சன சக்ரத்தாழ்வார், விஷ்வக்சேனர், கருடர் போன்றவர்களும் எழுந்தருளி உள்ளனர். அடுத்து ஸ்ரீ கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர் என்று நடன நிலையில் ஸ்ரீ ருக்மணி தேவியுடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு மார்கழி மாதம் சிறப்பு பூஜை
அடுத்தது அர்த்தமண்டபம் எனப்படும் கர்ப்பகிரகம். இங்கு ஸ்ரீனிவாச பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமாக நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார். கீழ் வலது திருக்கரத்தால் வரதஹஸ்தம் (உள்ளங்கை பக்தர்களை நோக்கி, திருவிரல்கள் தன் திருவடியை நோக்கி இருப்பது) காண்பித்து, எல்லோரும் அவன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.இதற்கு வைகுண்ட ஹஸ்தம் என்றும் பெயர். கீழ் இடது திருக்கரங்களினால் கட்டியவலம்பிதா (திருவிரல்கள், இடது திருத் தொடையினை காட்டி தொடையின் மேல் இருப்பது) என்ற நிலையில் நிற்கிறார். முகத்தில், பெரிய திருமண்ணுடன் கீழ் தாடையில் பச்சைக்கற்பூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எம்பெருமான் வைர கீரிடம் அணிந்து இருப்பார். வலது திருமார்பில் மஹாலக்ஷ்மி தாயாரும், இடது திருமார்பில் பத்மாவதி தாயாரும் எழுந்தருளி உள்ளனர். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பூசு போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.
பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகர ஆழ்வார் படி உள்ளது.
திருவேங்கடவனை சேவித்து விட்டு வந்தவுடன் நாம் அடைவது முக்கோடி என்னும் அடுத்த பிரகாரம் ஆகும். இங்கே விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. அவர் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். வைகானச ஆகம முறைப்படி இந்த கோவிலுக்கு வருபவர்கள் அவரை வணங்கி செல்ல வேண்டும். இவர் எம்பெருமானுக்காக எல்லா நிர்வாக பொறுப்புகளையும் எடுத்து நிர்வகிக்கிறார். ப்ரம்மோத்ஸவத்தின் போது இவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.
எம்பெருமானின் சந்நிதிக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் காட்சி அளிக்கிறார். ப்ரம்மோத்ஸவத்தின் போது கருட கொடி ஏற்றப்படும்.
திருமலை திருக்கோவில் கோபுரத்தின் இடது பக்கத்தில் ஸ்ரீ வரதராஜர் சுவாமி சன்னதி உள்ளது. அபயஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்ற இவரை சேவித்தால் எல்லா செல்வங்களும் பெறலாம் என்று நம்புகிறார்கள். முதல் பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் கிரிஜாநரசிம்மர் என்ற யோகநரசிம்மஹ சுவாமி சன்னதி உள்ளது. வைகாசி ஸ்வாதி நட்சத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாப்படும்.
ராமானுஜர் சன்னதி, மற்றும் சங்கீர்த்தனா பாதுகாப்பு அறை போன்றவையும் உள்ளன. சங்கீர்த்தனா பாதுகாப்பு அறையில், அன்னமார்ச்சார்யா, அவர் மகன் மற்றும் பேரன், திருவேங்கடவன் மேல் எழுதிய பாடல்கள் பாதுகாக்க பட்டு வருகின்றன.
எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்யும் மடப்பள்ளியை பொட்டு அறை என்கிறார்கள். இங்கே மஹாலக்ஷ்மி அருள் பாலிக்கிறார். அவரை மடப்பள்ளி நாச்சியார் என்றும், அவளே வகுளமாலிகா என்றும் வணங்குகிறார்கள். திருமலை திருக்கோயில் சமையல் கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியில் தயிர் சாதம் மட்டுமே நைவேத்தியதிற்காக கோவில் கர்பக்கிருகத்திற்குள் குலசேகரப் படியைத் தாண்டி எடுத்து செல்லப்படுகிறது. மற்ற எந்த பிரசாதமோ. அல்லது எந்த வகையான பாத்திரத்திலோ எடுத்துக்கொண்டு குலசேகர படியை தாண்டாது. திருவேங்கடத்தானுக்கு அமுது செய்யப்பட்ட மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப் பெரிய பாக்கியமாகும்.
ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த மேல் சாத்து வஸ்திரத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு பணம் செலுத்தி, அதற்கான நாளுக்கும் அவன் திருவுள்ளத்திற்கும் மூன்று வருடத்திற்கு மேல் காத்து இருக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். ஒரு நாளில் பல வஸ்திரங்களை எம்பெருமான் முன் சமர்ப்பித்து அன்று அவனுக்கு என்ன திருவுள்ளமோ (எந்த அர்ச்சகரோ / எந்த பணியாளரோ / எந்த நிறமோ / எந்த பக்தரோ ) அதுவே அவனை சேரும். அதே போல் கீழ் சாத்து அல்லது உள்சாத்து ஆடையை அணிவிக்க, தனி கட்டணமும், பத்து வருடங்கள் வரையும் காத்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகின்றன.
திருவேங்கடவனுக்கு திருமஞ்சனம் செய்ய கட்டணம் செலுத்தி மூன்று ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். திருமஞ்சத்திருக்காக ஸ்பெயினில் இருந்தும், குங்குமப்பூ நேபாளத்திலிருந்தும் கஸ்தூரி சைனாவிலிருந்தும் புனுகு பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளி நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கபடும். 51 வட்டில்கள் மூலம் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு சேர்த்து, காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை திருமஞ்சனம் நடத்தப்படும். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து ரோஜா மலர்களும், சீனாவில் இருந்து, சீனச்சூடம், மற்றும் வாசனைப் பொருட்களும் வரவழைக்கப் படுகின்றன.
திருவேங்கடவனுக்கு வாரம் ஒருமுறை வெள்ளியன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு நைவேத்தியம், வடகலை மற்றும் தென்கலை ஸம்ப்ரதாயங்கள்படி என்று சிறப்பு சாத்துமுறை நடைபெறுகிறது. அதன்போது நடைபெறும் தீபாராதனை ஒளியில் ஏழுமலையான் எந்தவித அலங்காரங்களும் இல்லாமல், கண்ணை பறிக்கும் அழகோடு காட்சி அளிப்பார்.
திருவேங்கடமுடையானின் முன் கோபுர வாயிற் படிக்கு “அவாவர சூழ்ந்தான் வாயில்” எனவும், துவார பாலகர் மண்டபத்திற்கு “வென்று கொண்டான் மண்டபம் ” என்றும் வழங்கி வந்தன.
கோவிலின் வலது பக்கத்தில் ஸ்வாமி புஷ்கரணி கரையில் ஆதி வராகபெருமான் சன்னதி உள்ளது.
திருமலை சன்னதி வீதியில் திருக்கோவிலுக்கு எதிரே தனிக்கோவிலாக ஒரு ஆஞ்சனேயர் சந்நதி உள்ளது. அதற்கு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் என்று பெயர். ஆஞ்சநேயரின் தாயார் அஞ்சனாதேவி இந்த மலையில் இருந்து ஸ்வாமியை தவம் இருந்து வேண்டி பெற்றதினால், இங்குள்ள ஒரு மலைக்கு அஞ்சனாத்ரி என்ற பெயர் உண்டு என்று பார்த்தோம். வைகாசி ஒருமுறை ஆஞ்சநேயர் சூரியனை பிடிப்பதற்காக வானில் பறந்து சென்று வந்தபோது, கவலையுற்ற தாய் அஞ்சனாதேவி, அனுமனை வானம் என்ற சங்கிலியால் இங்கே கட்டி வைத்து எம்பெருமானை விட்டு எப்போதும் அகலக்கூடாது என்று சொன்னதாக வரலாறு. விலங்கிடப்பட்ட ஆஞ்சேநேயர் என்பதால், இவருக்கு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் என்று பெயர்.
திருமலா திருப்பதி லட்டு மிகவும் பிரசித்தம். திருமலையில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள் விசேஷம். திருமலையில் உற்சவர், ஊஞ்சல் ஊர்வலத்தில் ஆடு மேய்க்கும் கோலத்தில் இருப்பார், மற்ற திருத்தலங்களில் எம்பெருமான் மாடு மேய்க்கும் காட்சியை மட்டுமே காணலாம்.
எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாத அர்சனைகளுக்கும் வில்வ இலை உபயோகப் படுத்தப் படுகிறது.
மூன்றாம் பிரிவு, அலர்மேல்மங்காபுரம் எனப்படும், திருச்சானுர் ஆகும். திருமலை எம்பெருமானின் வலது திருமார்பில் மகாலெட்சுமியும், இடது திருமார்பில் பத்மாவதி தாயாரும் இருக்கின்றனர். பத்மாவதி தாயார் திருச்சானூர் என்னும் அலமேலு மங்காபுரத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். திருமலை வந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால் தான் திருமலைப் பயணம் பூர்த்தி அடைவதாக ஐதீகம். இங்குள்ள பத்ம ஸரோவரத் தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும்.
திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை தாயாரின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள், மது, மாமிசம் உண்ண மாட்டார்கள். வெள்ளிக்கிழமை திருமஞ்சனதிற்கு தேவையான சந்தனம், பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது.குங்குமப்பூவும் சேர்க்கப் படுகிறது. வெளிநாடு வாசனை திரவியங்களும் சேர்க்கப்படும்.
கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முகலாய படைகளால் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன, அதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
மேலும் உள்ள தலைப்புகளை அடுத்து வரும் வலைப்பதிவுகளில் காணலாம், நன்றி.