A Simple Devotee's Views
ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவேங்கடம் | |
மூலவர் | திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான் திருப்பதியில், கோவிந்தராஜன் | |
உத்சவர் | திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி | |
தாயார் | அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் | |
திருக்கோலம் | திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் | |
திருமுகமண்டலம் | கிழக்கு | |
பாசுரங்கள் | 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. | |
மங்களாசாசனம் | பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் | |
தீர்த்தம் | 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி, 5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம். திருச்சானூரில் பத்ம ஸரோவரம் | |
கோபுரம் | ஆனந்த நிலைய விமானம் | |
ஸ்தல வ்ருக்ஷம் | புளியமரம் (சேஷ அம்சம்) |
வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
திருத்தலம் பற்றி
திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் திருப்பதி வேங்கடாசலபதி கோவில் உள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார், கோவில் கொண்டுள்ள அலர்மேல்மங்காபுரம் என்ற திருப்பதியும், இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவாக சேர்ந்து திருவேங்கடம் என்று அழைக்கப்படுகிறது. கீழ் திருப்பதி, மேல் திருப்பதி என்றும் கூறப்படுகிறது. மேல் திருப்பதி திருமலா என்றும், கீழ் திருப்பதி, திருப்பதி என்றும் சொல்லப்படுகிறது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை கீழ்கண்ட தலைப்புகளில் அடியேன் ஆரம்பிக்கின்றேன்.
திருமலை ஏழு மலைகளை கொண்டது. இதனால் இது சப்தகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏழு மலைகளுக்கு மத்தியில் திருவேங்கடமுடையான் எழுந்தருளி இருக்கிறார். கிழக்கு தொடர்ச்சி மலையில் இந்த திருமலை ஆதிசேஷனின் தலைப்பகுதி என்றும் அஹோபிலம் உடம்பு பகுதி என்றும் ஸ்ரீசைலம் என்ற திருத்தலம் வால் பகுதி என்றும் சொல்லப்படுகிறது. சேஷாத்திரி நீலாத்ரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். இந்த திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியின் காரணமாக ஒரு பெயர் வழங்கி வந்தது. கிருத யுகத்தில் வ்ருஷபாத்ரி என்றும், திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும் துவாபர யுகத்தில் சேஷாத்திரி என்றும் கலியுகத்தில் வேங்கடாத்ரி (வேங்கடாசலம்) என்றும் அழைக்கப்பட்டது.
வேங்கடம் என்றால், வேம் என்றும் கடம் என்றும் பிரித்துப் பார்த்தால், கொடுமையான பாவங்களை எரிக்கவல்ல என்று பொருள் வரும். வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள் கொண்ட இந்த திருத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், வராக புராணம், ஸ்கந்த புராணம், பாத்ம புராணம், போன்ற பத்து புராணங்கள் பேசுகின்றன. வேம் என்பது அழிவின்மை என்றும் கடம் என்பது ஐஸ்வர்யம் என்றும் பொருள் கொண்டால், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னை அடைந்தவர்களுக்கு தருவதால் வேங்கடம் என பெயர் வந்தது என்று கூறுவாரும் உண்டு.
இந்த எம்பெருமான், ஸ்ரீனிவாசனே, எத்தனையோ பிறவிகளாக தீர்க்க முடியாமல் தொடர்ந்து வரும் பாவங்களைத் தீர்ப்பவன். அதனால் தான் வல்வினைகள் தீர்க்கும் திருமால் என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.
இராமாயணத்தில் சுக்ரீவன், சீதையை தெற்கு நோக்கி தேடச் சென்ற தன்னுடைய வானரப்படைக்கு வழி சொல்லும் போது, திருவேங்கடம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. சீதை வெற்றிகரமாக தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால், சுக்ரீவன், வானரங்களை திருமலைக்குள் செல்ல வேண்டாம் என்றும், சென்றால் அந்த இடத்தின் புனித தன்மை காரணமாக பாவங்கள் களையப்பட்டு உடனே மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்வது திருமலையின் பெருமையை விளக்குகிறது. நன்றி ஸ்வாமிநாதன் சுவாமி. மேலும் இங்கே காண்க.
திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபம் ஆகும். சிந்துபூ மகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.
இன்றைய கலியுகத்தில் உலகப் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது. கேட்ட வரங்களை எல்லாம் தரும் கலியுக தெய்வம் இந்த வேங்கடத்தான் என்று உறுதியாக வேதங்கள் சொல்கின்றன.
இந்த திருமலையில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பம் கொண்டு வைகுந்தத்தில் இருந்து நேரில் இந்த திருவேங்கட மலைக்கு எழுந்தருளி, கலியுகம் முடியும் வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே இருப்பதாகவும், அதன் காரணமாகவே நித்யஸூரிகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், திருமலைக்கு வந்து எம்பெருமானை தினமும் துதிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் திருவேங்கடமும் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).
எம்பெருமானே மீண்டும் மீண்டும் இது ஒரு பரம பவித்ரமான (பாவனமான) நாராயண க்ஷேத்திரம் என்பதை இது கருடாத்திரி(கருடன் மலை), இது சேஷாத்ரி(ஆதிசேஷன் மலை), இங்கே தானே அர்ச்சா ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறேன் என்று பலவாறாக வராக புராணம், வாமன புராணம், வேங்கடதேச மஹாத்ம்யம் பாகவதம் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
குலசேகர ஆழ்வார் திருமலையில் வாழும் தாவரங்களிலோ, பிராணிகளில் ஒன்றாகவோ, அல்லது அங்கு ஓடும் ஆறு அல்லது ஓடை என்ற ஒன்றாகவோ அல்லது அங்குள்ள ஒரு பொருளாகவோ பிறக்க மாட்டேனா என்று மன்றாடுகிறார். திருமலையில் ஒரு படிக்கல்லாகக் கிடந்து வேங்கடவனைத் தரிசிக்க மாட்டேனா என்று படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனா என்கிறார். இதனால்தான் இந்த எம்பெருமானின் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி என்றே பெரியோர் பெயரிட்டுள்ளனர். அது மட்டுமல்ல, எல்லா விஷ்ணு கோவில்களிலும் எம்பெருமானுக்கு முன்னே உள்ள படி குலசேகரப்படி என்றே அழைக்கிறார்கள்.
ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. இவருயை நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை, அவ்ருக்கு சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் உபரியாக உள்ள நகைகளை அவ்வப்போது விளம்பரப் படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. பாதகவசம் 375 கிலோ. உலகில் யாரிடமும் இல்லாத ஒற்றை நீலக்கல், மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் ஆகும். திருமலையில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
இங்கு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொடுக்கும் முடிக் காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும் நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் அதிகம் உள்ளன. அன்னதான ததியாரதனங்களும் நடைபெற்று வருகின்றன. இனிக்கும் திருமலா திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவையுடன் அமைந்தது இல்லை.
கலியுகம் முடியும் வரை எம்பெருமான் இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பாவங்களைப் போக்கி நிற்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. குரும்பருத்த நம்பியின் சரித்திரம் ஒரு சிறந்த உதாரணம்.
குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண் பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்ணினால் சிறு புஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த தொண்டை மன்னனும் வேங்கடவன் மேல் பக்தி கொண்டு இருந்தான். இந்த மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து வந்தான். ஒரு நாள் காலையில் மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும் போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் பூமியில் கிடப்பதையும் மண் புஷ்பங்கள் வேங்கடவனின் திருமுடியில் வீற்று இருந்ததையும் கண்டான். இதனை விசாரித்த மன்னன், அது குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து அவரின் பக்தியின் மேன்மையைக் கேட்டு அவரை மனதார தொழுதான்.
இன்னொரு உதாரணம், ஹாதிராம் பாலாஜி என்னும் வட இந்திய பக்தர். இவர் ஒருமுறை பாலாஜி தரிசனம் முடிந்த பின் தன்னுடைய மடத்தில் தங்கியிருந்த போது, பாலாஜி அவருக்கு முன் காட்சி அளித்தார். பக்தர் எம்பெருமானிடம் தன்னுடன் சொக்கட்டான் ஆட வேண்டும் என்று விண்ணப்பித்தார். எம்பெருமானும் சம்மதித்து ஆடி விட்டு பின் சென்றான். போகும் போது ஒரு மாலையை விட்டுவிட்டு சென்றுவிட, ஹாதிராம் பாலாஜி அதை அடுத்த நாள் கவனித்து, கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க செல்லும் போது, அதற்கு முன்பே எம்பெருமானின் நகை இல்லாதை கவனித்து அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அதிகாரிகள் பக்தர் ஹாதிராம் இதனை திருடினார் என்று அவர்க்கு தண்டனையாக ஓர் கட்டு கரும்பினை ஒரே இரவில் உண்டு முடிக்க வேண்டும் என்று கட்டளை இட்டனர். ஹாதிராம் பாலாஜி எம்பெருமானை உருக்கமாக வேண்ட, எம்பெருமான் யானை வடிவில் வந்து ஒரு கட்டு கரும்பினை முடித்து பக்தரின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். இந்த ஹாதிராமின் அதிஷ்டானம், (சமாதி) பாபவினாசம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலின் உள்ளது.
இன்னொரு உதாரணம் அன்னமாச்சார்யா. திருமலை நடைபயணமாக முழங்கால் முறிச்சான் பகுதியில் ஏறி வரும் போது அன்னமய்யா என்று 17 வயது சிறுவன் மயங்கி விழுந்தான். அப்போது, பத்மாவதி தாயார் அவன் முன் தோன்றி அவனுக்கு உணவு தண்ணீர் அளித்து அந்த சிறுவனை ஊக்கப்படுத்தி மறைந்தாள். பின்னாளில் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் என்ற பெயரில் அவர் எம்பெருமான் மேல் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடினார். அந்த அன்னமாச்சார்யாவின் வாழ்க்கை தொடங்கியது முழங்கால் முறிச்சானில் இருந்து தான்.
வென்று மாலை இட்டான் மண்டபம் : வென்று என்பது, சிசுபாலனை வென்று என்று அர்த்தம். மாலை இட்டான் என்பது கிருஷ்ணர் ருக்மணியை மாலை இட்டதை சொல்கிறது. ஆகையால், வென்று மாலையிட்டான் என்பது கிருஷ்ண சர்மா என்று திருநாமத்தை உணர்த்தும். வென்று மாலையிட்டபிரான் என்ற ஒரு வைணவ பிரபு திருமலையில் கட்டிய மண்டபத்திற்கு அவனுடைய கைங்கர்யத்தை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த கிருஷ்ணசர்மா கட்டிய மண்டபத்தை வென்று மாலையிட்டான் மண்டபம் என்று பெயர் வந்தது. ஏனெனில், பலராமனின் சகோதரன், கண்ணன் என்பதால், இராமானுஜ தாசன் என்பதும் கிருஷ்ணனயே குறிக்கும்.
மலை குனிய நின்ற பெருமாள் : மலை என்பது, திருமலை; குனிய என்பதற்கு முழுவதும் என்று அர்த்தம். நின்ற என்பதற்கு நிலையாக நிற்பதை குறிக்கும்.
தேவயாள் சிங்கன் : தேவியான பிராட்டியின் ஆள் என்றும், உபச்சாரக நாச்சியாரின் ஆள் என்றும் பொருள் வரும். சிங்கன் என்ற பக்தர் ஒருவர், முன்பு, திருமலையில், எம்பெருமான் சன்னதிக்கு விறகு விநியோகம் செய்து வந்தார். திருவேங்கடவனும் சிங்கன் தனக்கு விருப்பம் உடையவன் என்பதை உலகம் அறிந்து கொள்ள, அவனது இறுதி சடங்கிற்கு கோவிலில் இருந்து பொருட்கள் செல்ல வேண்டும் என்று கோவில் அர்ச்சகர்கள் மூலம் எம்பெருமான் தெரிவிக்க அன்று முதல் இந்த எம்பெருமான் உகந்த கைங்கர்யத்திற்கு சிங்கன் முறை என்று பெயர் வந்தது.
ஜீயர் : ஸ்வாமிக்கு உகந்தவர். ஸ்ரீ வசன பூஷணம் 237வது சூத்திரத்தில் பிள்ளை லோகாச்சார்யார், மாறனேரி நம்பி விஷயமாக பெரிய நம்பி, உடையவருக்கு அருளி செய்த வார்த்தைகள் என்ற இடத்தில் இராமானுஜர், ஜீயா என்று தன்னுடைய ஆச்சார்யரான பெரிய நம்பியை அழைக்கிறார். இங்கு மோக்ஷத்தை பெறுவதற்கும் பெறாததற்கும் உயர்குல பிறப்பும், இழிகுல பிறப்பும் காரணங்கள் ஆக மாட்டாது என்றும், பகவத் சம்பந்தம் இருப்பதும் இல்லாமையுமே காரணங்கள் என்றும், பகவத் சம்பந்தம் பெற்ற உயர்குலத்தர்களுக்கு, பகவத் சம்பந்தம் பெற்ற மற்ற குலத்தவர்கள் ஒப்பு ஆக மாட்டார்கள் என்பது தவறு என்றும், அந்த உயர்குலத்தவர்களை காட்டிலும் இந்த தாழ்குலத்தவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், இந்த உண்மைகளை உணராமல், இரண்டு தோஷங்களை உடைய பகவத் சம்பந்தம் பெற்ற உயர்குலத்தவர்களுக்கு, அத்தகைய தோஷங்கள், பாகவத சம்பந்தம் மூலம் மட்டுமே நீங்கும் என்பதையும் இந்த ஸ்ரீ வசன பூஷணம் 211 முதல் 223 வரை சூத்திரங்களினால் விளக்குகிறார். இந்த உபதேசம் தன்னுடைய குருவின் வாய் வழியாக வரவேண்டும் என்பதற்காக இராமானுஜர், பெரிய நம்பிகளிடம் இது பற்றி கேட்பதற்கு முன் அவரை ‘ஜீயா ‘என்று அழைத்துள்ளார்.
திருவேங்கமுடையான் பற்றிய மற்ற தலைப்புகளில் உள்ள விஷயங்களை அடுத்த வலைப்பதிவினில் காணலாம். நன்றி.