A Simple Devotee's Views
ஸ்ரீ அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி தாயார் சமேத லட்சுமிநரசிம்மர் திருவடிகள் போற்றி போற்றி !!
திவ்யதேசம் | திருஅஹோபிலம் / திரு சிங்கவேள் குன்றம் | |
மூலவர் | ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர் | |
உத்சவர் | மாலோல நரசிம்மர் மற்றும் எட்டு நரசிம்மர்கள் | |
தாயார் | ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி | |
திருக்கோலம் | அமர்ந்த திருக்கோலம் | |
திருமுகமண்டலம் | கிழக்கு | |
பாசுரங்கள் | 10 | |
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் (10) | |
தீர்த்தம் | பாபநாசினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம், காவல தீர்த்தம், இராம லக்ஷ்மண தீர்த்தம், பீம தீர்த்தம், சங்க தீர்த்தம், வராஹ தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் | |
கோபுரம் | குகை கோபுரம் |
வடநாட்டு திவ்யதேசங்களை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதனைப்பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம். வடநாட்டு திருப்பதிகளில், முதலில் கிழக்கே உள்ள திவ்யதேசங்களான திருஅயோத்தி, நைமிசாரண்யம் தரிசித்துவிட்டு, பின்னர் வடக்கே உள்ள திவ்யதேசங்களான முக்திநாத், பத்ரிநாத், கண்டமென்னும் கடி நகர், ஜோஷிர்மட், வடமதுரை, ஆயர்பாடி சேவை செய்து விட்டு, மேற்கே உள்ள திருதுவாரகையும் பார்த்து உள்ளோம். இன்னும் உள்ள இரண்டு வடநாட்டு திவ்யதேசங்களை சற்று தெற்கே சென்று சேவிப்போம், முதலில் திருசிங்கவேள்குன்றம் எனப்படும், திருஅஹோபிலம்.
Google Map
திருஅஹோபிலம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருத்தலத்தைப்பற்றி
இந்த திருத்தலம், சென்னை பம்பாய் ரயில்பாதையில் உள்ள கடப்பா என்னும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 85 கி.மீ. தூரம் உள்ள அர்லகட்டா
என்ற ஊருக்குச் சென்ற பின்னர் நந்தியால் கிராமத்திற்கு அருகே அஹோபிலம் சென்று அடையலாம். இங்குள்ள மலைப்பிராந்தியங்களும், சுற்றிச்சூழ்ந்துள்ள காடுகளும் அடர்ந்து கருமையாக உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த மரங்களை கொண்டு உள்ள கருமையான கருப்பு மலையில் (தெலுங்கில் நல்ல கொண்டா) இந்த நவநரஸிம்ஹ க்ஷேத்திரம் உள்ளது. ஆதி சேஷனே இந்த கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்; அதன் தலை பாகமே திருமலை; அதன் வால் பாகம் ஸ்ரீசைலம்; அதன் முதுகு அல்லது உடல் பாகமே இந்த அஹோபில க்ஷேத்திரம் என்று கூறுவார்கள். மூன்று நாட்கள் இங்கு தங்கி இருந்து, நவ நரசிம்மர்களையும், ஸ்தம்ப நரசிம்மரையும் நன்றாக சேவித்து விட்டு திரும்பலாம். பாவன நரசிம்மரை சேவிக்க ஒரு அரை நாள் ஆகும். ஸ்தம்ப நரசிம்மரை சேவிக்க தனியாக ஒரு நாளும், அங்கு பழக்கப்பட்ட வழித்துணை ஆள் ஒருவரும் வேண்டும்.
இங்கு மலையடிவாரத்தில் கீழ் அஹோபிலம் என்று ஒரு கோவிலும், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மலையின் மேல் சுமார் 3000 அடி உயரத்தில் ஒரு கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலை மேல் உள்ள கோவிலில் தான் ப்ரஹ்லாதன், கருடனுக்கு காட்சி அளித்ததாகவும் இங்கு தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.
எம்பெருமான் புஷ்கரம் என்ற புண்ணிய க்ஷேத்திரத்தில், தீர்த்த ரூபியாக இருக்கிறான். எம்பெருமான் நைமிசாரண்யம் என்ற திவ்யதேசத்தில் ஆரண்ய ரூபியாக இருக்கிறான். எம்பெருமான் திருவேங்கடத்தில் பர்வத ரூபியாக இருக்கிறான். அஹோபிலம் என்ற இந்த திவ்யதேசம், காடு, மலை, ஆறு மற்றும் அருவிகளை உள்ளடக்கியது. அதனால், அஹோபிலம் சென்று நரசிம்மனை தரிசித்தாலே, மேலே சொன்ன மூன்று திருத்தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
நரம் கலந்த சிங்கத்தை விட உயர்ந்த தெய்வம் கிடையாது என்பார்கள்; பாவநாசினி தீர்த்தத்தை விட உயர்ந்த தீர்த்தம் கிடையாது என்பார்கள்; கருடாசல மலையை விட உயர்ந்த மலை கிடையாது என்பார்கள்; அஹோபிலத்தில் உறைகின்ற நரசிம்மனிடம் பக்தி செலுத்துபவர்களை விட உயர்ந்த யோகி கிடையாது என்பார்கள்; அஹோபிலம் அடைந்து, பாவநாசினி தீர்த்தத்தை பார்த்தால் கூட பல கோடி பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து போகும் என்பார்கள்.
அஹோபில மஹாத்மியம் என்ற நூலில், பித்ருக்களின் ப்ரீத்தி கிடைக்க, கயா செல்ல வேண்டும் என்றும், இந்த உடல் நற்கதி அடைய கங்கை செல்ல வேண்டும் என்றும், மந்திரோபதேசம் பெற காசி செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், இவை அனைத்தையும் அஹோபிலத்தில் 100 மடங்கு எளிதாக பெறலாம் என்று சொல்கிறது.
பிலம் என்றால் குகை அஹோ என்றால் சிம்மம் ஆதலால் வடமொழியில் அஹோபிலம் என்று பெயர் வந்தது. இதேயே சிங்கவேள் என்று தமிழில் குறிப்பிட்டு மலையும் சேர்த்து,
சிங்கவேள்குன்றம் என்று ஆயிற்று. எம்பெருமானே வேட்கையுடன் வந்து தங்கி நரமும் சிங்கமும் கலந்து வந்து உறையும் மலையை சார்ந்த இடம் ஆதலால் இது சிங்கவேள் குன்றம் ஆகியது என்றும் சொல்வர். ப்ரஹ்லாதன் மற்றும் பல தேவர்களின் வேட்கைக்கும் விருப்பிற்கும் ஏற்றவாறு எம்பெருமான் உறைந்தஇடம் ஆதலால் இது சிங்கவேள்குன்றம் என்றும் சொல்வர். எம்பெருமான் மிகுந்த வலிமையுடன் திரு அவதாரம் எடுத்து இரணியனை வதைத்ததால், ‘ஆஹா, என்ன பலம் என்ன பலம்’ என்று தேவர்கள் போற்றியதால், அஹாபலம் என்று சொல்வாரும் உண்டு. ‘சிங்கவேழ்குன்றம்’ என்று கூறி, யாவராலும் விரும்பப்படுகின்ற கட்டழகுடையவரான எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற ஏழு குன்றங்களை உடைய நரசிம்ம திருத்தலம் என்றும் பொருள் கூறுவார் உண்டு.
இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச் சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரம் சென்றால் மாலோல நரசிம்ம க்ஷேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் இரண்டு மைல் தொலைவு சென்றால் நரசிம்ம அவதாரம் எடுத்த, ஸ்ரீ நரசிம்மன் தூணில் இருந்து வெளிப்பட்ட ஸ்தம்பம் உள்ளது. இது ஸ்தம்ப நரசிம்மர் என்று கூறுவார். இங்கு செல்வது மிகவும் கடினம், தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். . பொதுவாகவே இங்கு மலை மேல் உள்ள எல்லா நரசிம்மர்களையும் நடந்து சென்று சேவிப்பது என்பது மிகவும் கடுமையான, கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறுவது மட்டுமின்றி காட்டு மிருகங்கள் நடமாடக் கூடிய பகுதிகளும் உண்டு. இங்கு சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற காட்டு விலங்குகள் பார்க்கப்பட்டு உள்ளன.
நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான ஒன்பது மூர்த்திகளில் எட்டு உற்சவ
மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான உற்சவமூர்த்தி மட்டும் தனியாக உள்ளார். சுயம்புவான இந்த உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக (ஸ்ரீ ராமபிரானாக) சேவை சாதிக்கிறார்.
நவநரசிம்மர்கள்
இங்கு மலையடிவாரத்திலும், மலையின் மேலுமாகமொத்தம் ஒன்பது நரசிம்மர் கோவில்கள்/சன்னதிகள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம க்ஷேத்திரம் என்றும் வழங்குவர்.
இதனைத் தவிர ஸ்தம்ப நரசிம்மர், எட்டு உத்சவர்களை உள்ளடக்கிய கீழ் அஹோபிலத்தில் உள்ள அஹோபில மடத்தை சேர்ந்த கோவிலும் உள்ளன.
1. அஹோபில நரசிம்மன்
இந்த உக்ர நரசிம்மர் மலைமேல் உள்ள முக்கியமான கோவில். கருடனின் கடும் தவத்தினை மெச்சி இரணியனை மடியில் போட்டுகொண்டு வதம் செய்யும் கோலத்தில் சக்ராசனத்தில் சத்திய ஸ்வரூபனாக மலை குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு சுயம்புவாக தோன்றிய எம்பெருமான். எதிரே கருடன். ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சீதா ராம பரமேஸ்வர லிங்கம், நரசிம்ம சுதர்சன சக்ரம் மற்றும் செஞ்சு லட்சுமியை இந்த கோவிலில் சேவிக்கலாம். சுக்கிர தோஷத்தினால் ஏற்படும் கஷ்டங்களை களைகிறார்.
2. வராக நரசிம்மன் / க்ரோட நரசிம்மன்
க்ரோட என்றால், கோரைப்பல்; இவர் வராஹ நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகிறார். ஹிரண்யனின் சகோதரன், ஹிரண்யாட்சன் பூமாதேவியை பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, பிராட்டியை வராக உருவில், தன்னுடைய கோரைப்பற்களில் ஏந்தியவாறு காப்பாற்றி, சரம ஸ்லோகத்தை உபதேசித்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கூடவே லட்சுமி நரசிம்மரும் சேவை சாதிக்கிறார். குருவினால் ஏற்படும் சிரமங்களை வராஹ நரசிம்மன் களைகிறார்.
3. பாவன நரசிம்மர்
நம்முடைய பாவங்களை களைந்து இந்த சம்சார சூழலில் இருந்து காப்பற்றுபவர். மாலோலநரஸிம்ஹர் போலவே செஞ்சுலக்ஷ்மியுடன் சேர்ந்து சேவை சாதிக்கிறார். செஞ்சு இனத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக ஒரு உயர்ந்த மலையில் காட்சி அளிக்கிறார். வேடர் குல வழக்கம் போல் சனிக்கிழமை தோறும் செஞ்சு லக்ஷ்மிக்கு மாமிசம் படைத்து வழிபட அதனை எம்பெருமானும் ஏற்று அருள் பாலிக்கிறார். பாவன நரசிம்மர் இராகுவால் ஏற்படும் பாபங்களை களைகிறார்.
4. காரஞ்ச நரசிம்மர்
அனுமன் செய்த தவத்தின் பலனாக இந்த நல்ல கொண்டா மலையில் புங்க மரத்தின் அடியில் சுயம்புவாக தோன்றிய நரசிம்மர். அனுமனின் வேண்டுகோளின் பேரில் நரசிம்மராக இல்லாமல், வில் அம்பு ஏந்தி இராமபிரானாகவே காட்சி கொடுத்த கராஞ்ச நரசிம்மர். ஆதிசேஷன் குடை தாங்க வைகுண்ட நாதனாகவும் காட்சி அளிக்கிறார். இராவண வதத்திற்கு அனுமனை மெச்சி, எம்பெருமான் அனுமனை தழுவியதால், அனுமனின் கைகளில் சங்கு சக்கரம் காண முடிகிறது. கேதுவினால் ஏற்படும் தோஷங்களை கராஞ்ச நரசிம்மர் போக்குகிறார்.
5. ஸ்ரீ சத்ர வட நரசிம்மர்
சத்ரம் என்றால் குடை; வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஆனந்தமாக அமர்ந்து இரண்டு கந்தர்வர்களின் இனிமையான சங்கீதத்தை செவி மடுத்து சேவை சாதிக்கும் இந்த சத்ர வட நரசிம்மர். கந்தர்வர்கள் எம்பெருமானின் கோபத்தை தணிப்பதற்காக சங்கீதம் பாடுவதாக ஐதீகம். பத்மாசனத்தில் அமர்ந்து கந்தர்வர்களின் இசைக்கு ஏற்ப இடது தொடையில் தாளம் போட்டு கொண்டும், சங்கு சக்கரங்களை தரித்துக்கொண்டும், வலது கீழ் கரம் அபய முத்திரையுடன் அற்புதமாக சேவை சாதிக்கின்றார். அவரது சிரிப்பு நம்மை வா என்று அருகே அழைக்கும் வண்ணம் உள்ளது. ஒன்பது மூர்த்திகளின் பெரிய மூர்த்தி இவரே. சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்குகிறார்.
6. பார்கவ நரசிம்மர்
பார்கவ முனிவர் என்பவர் எம்பெருமானை நரசிம்மராக தரிசிக்க வேண்டும் என்று விரும்பி தவம் இயற்றியதால் பார்கவ நரசிம்மர், கீழ் அஹோபிலத்தில் ஒரு சிறிய குன்றல் தோன்றினார். பார்கவ புஷ்கரணி குன்றின் அடிவாரத்தில் உள்ளது. இரணியனை வதம் செய்யும் காட்சியாக, அவனை மடியில் கிடத்தி, குடலை உருவி மாலையாக போடும் உக்கிர நரசிம்மராக காட்சி அளிக்கிறார். ஹிரண்யன் கையில் வாளுடன் இருக்கிறான். அருகில் பக்தியுடன் ப்ரஹ்லாதன் எம்பெருமானின் கருணையை வியந்து காண்பது தெரிகிறது. தசாவதார காட்சிகளையும் இந்த சந்நிதியில் காணலாம். சந்திரனால் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து இந்த பார்கவ நரசிம்மர் தீர்வு தருகிறார்.
7. ஜ்வாலா நரசிம்மர்
எங்கு இருக்கிறன் உன் நாராயணன் என்று ஹிரண்யன் கேட்டவுடன், பதிலாக தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பிரஹலாதன் சொன்னவுடன், கோபத்தின் உச்சியில் தன்னுடைய கதையினால் அரண்மனையின் ஒரு தூணினை தாக்க அதில் இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்டு, வஜ்ர நகங்களுடன், தோன்றிய கோலமே ஜ்வாலா நரசிம்மர் ஆவார். தற்பொழுது வேதகிரியில் உக்கிர ஸ்தம்பத்தின் கீழ் ஒரு குகையில் உள்ள சன்னதியில் சேவை சாதிக்கிறார். எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இரண்டு திருக்கரங்களால் இரணியனை மடியில் கிடத்தி நன்றாக இரண்டு பக்கமும் பிடித்து கொள்கிறார்; அடுத்த இரண்டு கரங்களால் அவனுடைய மார்பினை கீறி அவன் நெஞ்சினுள்ளே ஈரத்தை தேடியதை சொல்கிறார் ; இன்னும் இரண்டு திருக்கரங்களால் அவனுடைய குடலினை உருவி தன்னுடைய கழுத்தினில் மாலையாக அணிந்து கொள்கிறார்; மேலும் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார்.
உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் |
என்ற ஸ்லோகத்தின் படி உக்ரராகவும், வீரராகவும், மஹா விஷ்ணுவாகவும், ஜுவாலா நரசிம்மராகவும் சேவை சாதிக்கிறார். இவருக்கு ஸ்ரீ மஹா மிருத்யுஞ்ஜயர் என்ற திருநாமமும் உண்டு. அசுர குரு சுக்ராச்சாரியரும், மஹாவிஷ்ணுவும் உடன் சேவை சாதிக்கிறார்கள்.
குகைக்கு அருகில் பாறைகளின் இடுக்கில் அமைந்து உள்ள, இரணியன் வதம் செய்த பின் எம்பெருமான் திருக்கரங்களை கழுவிக்கொண்ட ‘இரத்த குண்டம் உள்ளது. இந்த நீர் இன்னும் சிவப்பாகவே உள்ளது. அதனை எடுத்து தலையில் தெளித்து கொண்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
இதன் அருகில் தான் ஸ்தம்ப நரசிம்மர் மலை உள்ளது. கீழ் இருந்தே மலையை தரிசிக்கலாம்.
இவர் சனி பகவானின் தொல்லைகளில் இருந்து காக்கிறார்.
8. மாலோல நரசிம்மர்
மா என்றால் பிராட்டி, லோல என்றால் ஆசை, மஹாலக்ஷ்மியின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது இதன் பொருள். எம்பெருமானின் இடது தொடையில், சுகாசனத்தில் அமர்ந்து ஆனந்தமாக சேவை சாதிக்கிறார். ஹிரண்ய வதத்திற்கு பிறகு, எம்பெருமானின் கோபத்தை தணிக்க தேவர்களின் வேண்டுகோளின் பேரில் வந்த மஹாலக்ஷ்மியை ஆனந்தமாக சேர்த்து காட்சி தரும் கோலம். அஹோபில மடத்தின் திருவாராதன மூர்த்தி இவரே. செவ்வாயினால் ஏற்படும் எல்லா தோஷங்களையும் போக்கி மாலோல நரசிம்மர் அருள் புரிகிறார்.
9. யோகானந்த நரசிம்மர்
பிரகலாதனுக்கு குருவாக இருந்து யோக நெறி கற்பித்த நரசிம்மர் இவர். ஆதிசேஷன் மேல் கால்களை மடக்கி யோக கோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கிறார். ஹிரண்ய வதம் முடிந்த பின்னர், நரசிம்மர் பிரகலாதனுக்கு சில யோக முத்திரைகள் கற்று தருவதாக சொல்லப்படுகிறது. அதன் ஒரு நிலையே இந்த யோகானந்த நரசிம்மர். தெற்கு திசை நோக்கி, மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் இரண்டு திருக்கரங்களால் யோக முத்திரை காட்டி அமர்ந்திருக்கும் திருக்கோலம். புதன் கிரகத்தாள் ஏற்படும சகல பாவங்களையும் தோஷங்களையும் தீர்க்க அருள் பாலிக்கும் இந்த யோகானந்த நரசிம்மர். ராமர் சன்னதியும் யோகநரசிம்மர் சன்னதியும் அருகில் உள்ளது. ஒரு அன்னதான மண்டபமும் உள்ளது.
இந்த நவ நரசிம்மர் தவிர, கீழ் அஹோபிலத்தில் ப்ரஹ்லாத வரதன், சாந்த நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. மூன்று பிரகாரங்கள், புஷ்கரணி, துவஜஸ்தம்பம் என்று விரிவாக அமைந்துள்ளது.
இதனை தவிர பிரஹலாதன் படித்த பள்ளி, அவர் எழுதிய மந்திரங்களையும் காணலாம் என்று சொல்லப் படுகிறது.
திருவிழாக்கள்
மாசி மாத ப்ரம்மோத்ஸவம், மற்றும் நரசிம்ம ஜெயந்தி இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள். மேலும், பாவனவார உத்சவம், ஆனி ஸ்வாதி கருட சேவை, புரட்டாசி மாத ஸ்ரீமத் ஆதி வண் சடகோபன், ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருநட்சத்திர உத்சவம், திருவாடிப்பூரம், ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி இராமானுஜர் திருநட்சத்திரம் என்று இவை சிறப்பாக கொண்டாப்படுகிறது. மாதாமாதம் ஸ்வாதி திருமஞ்சனம் இங்கு இன்னொரு சிறப்பு.
ஸ்தல வரலாறு
பிரம்மாண்ட புராணம், பாகவத புராணம், மற்றும் விஷ்ணு புராணம் இவற்றில் அகோபிலத்தை பற்றிய தகவல்கள் உள்ளன.
படைக்கும் தொழிலை நடத்தி வருவரான பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிள்ளை. ஹிரண்யகசிபு, தன்னை யாரும் அழித்து விடக்கூடாது என்பதற்காக, பிரம்மாவைக் குறித்து, கடுமையாக தவம் புரிந்தார். ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் இருந்து கீழ்கண்ட வரங்களை பெற்றார். இரவிலோ அல்லது பகலிலோ, மனிதனலோ அல்லது மிருகதாலோ, ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ, வீட்டின் உள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியிலேயோ, பிரம்மாவோ அல்லது அவரால் படைக்கப் பட்டவர்கள் மூலமாகவோ, ஆகாயத்திலேயோ அல்லது பூமியிலேயோ, உயிர் உள்ளதாலேயோ அல்லது உயிர் அற்றதாலேயோ, தான் இறக்கக்கூடாது என்று ஹிரண்யகசிபு வரம் வேண்டி பெற்றுக் கொண்டான்.
ஹிரண்யகசிபு இப்படி வரங்களைப் பெற்ற பின் அவன் மக்களை மிகவும் கொடுமைப் படுத்தினான். கடவுளை வணங்குவதற்கு பதில் தன்னையே வணங்கவேண்டும் என்றும் பிரகடனம் செய்தான். ஆனால் ஹிரண்யகசிபுவின் மகனான ப்ரஹ்லாதன் தன் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப் படவில்லை. அவன் ஸ்ரீ விஷ்ணுவை வணங்கவேண்டும் என்று நல்வழி காட்டினான். இதனால் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனுக்கு பல கஷ்டங்களை கொடுத்து அவனை கொல்லவும் முயற்சிகள் செய்தான். ஆனால் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒவ்வொரு முறையும் பிரகலாதனைக் காப்பாற்றினார். இதனால் மிகவும் கோபமடைந்த ஹிரண்யகசிபு ஒரு நாள் மாலைப் பொழுது ஸ்ரீவிஷ்ணு எங்கு உள்ளார் என்று உரக்கக் கேட்டான். ப்ரஹ்லாதன், “எம்பெருமான் எங்கும் வியாபித்து உள்ளார், தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்,” என்றார். கம்பன் சொல்வது போல், “நீ கேட்கும் சொல்லிலும் அவன் உறைகிறான்”, என்று ப்ரஹ்லாதன் சொல்கிறார். அங்குள்ள ஒரு தூணைக் காட்டி அதில் விஷ்ணு உள்ளானா என்றான். அதற்கு ஆம் என்று பிரகலாதன் சொல்ல ஹிரண்யகசிபு அந்த தூணை உதைக்க அதில் இருந்து ஸ்ரீ விஷ்ணு, மனித உடம்புடனும் சிங்கத் தலையுடனும், பகலும் இரவும் இல்லாத மாலை நேர பிரதோஷ காலத்தில், நரசிம்மமாக வெளிப்பட்டார். அவர் ஹிரண்யகசிபுவை, தூக்கிக்கொண்டு வாசல் படியில், தான் அமர்ந்து கொண்டு, தன் மடியில் அவனை கிடத்தி, தன்னுடைய கூரிய நகங்களால் அவனை கிழித்துக் கொன்று ப்ரஹ்லாதனின் பக்தியை உலகுக்கு காட்டிய அவதாரம் இந்த நரசிம்ம அவதாரம்.
ப்ரஹ்லாதனுக்கு கருணை வடிவும், ஹிரண்யகசிபுவிற்கு உக்கிர வடிவும் ஒரே சமயத்தில் காட்டிய திருஅவதாரம் இது. அதே போல் மகாலட்சுமிக்கு மலர் பீடமும் அதே சமயம் பலி பீடமாகிய தன மடியையும் கொடுத்த திருஅவதாரம்.
ஹிரண்யனை வதம் செய்வதற்கு முன், அவனது மார்பினை தனது நகங்களால் துழாவி, அங்கு சிறிது ஈரமாவது இருக்கிறதா என்று பார்த்து, அது இல்லை என்று தெரிந்ததும் அவனை வதம் செய்தார் என்று எம்பெருமானின் கருணையை காட்டும் திருஅவதாரம்.
தன்னிடம் அபராதம் செய்தால் கூடப் பகவான் பொறுத்துக்கொள்வான்; தன் பக்தர்களுக்கு அபராதம் செய்தால், பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதைக் காட்டும் திருவவதாரம்.
பல ஆண்டுகளைக் கொண்ட ராம(10,000 மேற்பட்ட வருடங்கள்), கிருஷ்ண (சுமார் 120 க்கும் மேற்பட்ட வருடங்கள்) அவதாரங்களைப் போல் இன்றி நரசிம்ம அவதாரம் இந்த பூவுலகில் இருந்தது மிகச் சிறிய காலமே. துணினை அடித்த கைகளை, பிடித்தவன் இந்த நரசிம்மன். தோன்றிய உடனேயே அவதரித்ததன், பலனை அளித்து, தான் ஒரு விரைவு அவதாரம் என்று நிலை நாட்டினார்.
மற்ற எல்லா அவதாரங்களைக் காட்டிலும் நரசிம்ம அவதாரமே மிக அழகு என்பது ஆழ்வார்களுக்கும் மற்றும் நம் பெரியவர்களுக்கும் உள்ள கருத்து. அதனாலேயே அவரை அழகிய சிங்கர் என்று குறிப்பிட்டு உள்ளனர். நான்முகன் திருவந்தாதி என்னும் பிரபந்தத்தின், 21 மற்றும் 22 பாசுரங்களில், நரசிம்ம அவதாரத்தின் அழகினை, ஆழ்வார் விவரிக்கிறார். தன்னுடைய பக்தர்களுக்கு விரோதம் இழைக்கும் எதிரிகளிடம் அவர் காட்டும் சீற்றம் எவ்வளவு அற்புதமானது என்ற அவதார பெருமையை விளக்குகிறார். எம்பெருமானின் தெளிவான தோற்றத்தைக் காட்டிலும் அவரது சீற்றமே பக்தர்களுக்கு சிறந்தது என்பதை சொல்லும் 21வது பாசுரம். நெருப்பை உமிழும் பெரிய வாய், உருண்டு, சிவந்து ஜொலிக்கின்ற கண்கள், மற்றும் அக்னி போன்று பொங்கும் திருமேனி என்பவை ஆழ்வாரின் சொல்லும் நரசிம்மனின் அழகு. அந்த சிந்தனையிலே தொடர்ந்து, ஆழ்வார், “அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று அடுத்த பாசுரத்தில் பன்னெடுங்காலமாக நம்மை காத்து வரும் அவனின் திருவடிகளை நாடுங்கள் என்று உபதேசம் செய்கிறார்.
இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்க எம்பெருமான் வைகுண்டத்தை விட்டு வந்ததும், பிராட்டியும் இந்த திருத்தலம் வந்து வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தார். லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில் வளர்ந்து வர எம்பெருமான் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டத்தை விட்டு, இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும் வரை இங்கேயே தங்கி விட்டதாக ஐதீகம். எம்பெருமான் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டதை “கனைந்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கைஆழ்வார் பெரிய திருமொழியில் (1.7.8) சொல்கிறார்.
எம்பெருமான் நரசிம்ம திருஅவதாரம் எடுத்த போது, கருடன் மேல் வராததால், நித்ய சூரியான, கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும்
என்ற ஆவல் உண்டாக அந்த திருஅவதாரத்தை தரிசிக்க, இந்த மலைகள் அடங்கிய
காட்டுப் பகுதியில் வந்து கடும் தவம் இருந்து வர, கருடனின் தவத்தை மெச்சிய
எம்பெருமான், இந்த அஹோபிலம் மலையில் மீண்டும் நரசிம்ம அவதாரத்தை செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது. மஹாலக்ஷ்மி மற்றும் பிரகலாதனின் வேண்டுகோள்களுக்கு இசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது, போன்ற நரசிம்ம அவதாரத்தின் ஒன்பது தத்துவங்களை அர்ச்சா ரூபமாக ஒன்பது திருக் கோலங்களில் காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயருண்டு.
சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இந்த திருத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து, வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ஸ்ரீ ராமபிரான் எண்ணிச் சென்றார்.
திருவேங்கடம் ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாணத்தின் போது தயாரிக்கப்பட்ட உணவினை அஹோபில நரஸிம்ஹர்க்கே திருவாராதனம் செய்யப்பட்டது.
ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சிலர், அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக் காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.
அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு 17 வயது இளைஞர் வந்தார். அப்போது எம்பெருமானே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து, அவருக்கு காட்சி கொடுத்து, மந்திர உபதேசம் செய்து, அவரைத் துறவறத்தில் சேர்த்து, இங்குள்ள ராமானுஜர் சன்னதியில் இருந்து துறவு ஆடையினையும், திரி தண்டத்தையும் கொடுத்து, ஸ்ரீ சடகோப ஜீயர் என்ற திருநாமத்தையும் இட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். எம்பெருமானால் ஜீயர் சுவாமிகளுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேக்ஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை வைத்துக் கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவது என்று ஜீயர் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமான் இங்குள்ள உற்சவ மூர்த்தியான மாலோல நரசிம்மனை ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார். அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத் தான் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்த போது இந்த திருவாராதனப் பெருமாள் திருவரங்கம் வந்து விட்டார்.
அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலை மேல் உள்ள நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்தில் இருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை மூடப்பட்டுள்ளது. அங்கு அந்த ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள்
நரசிம்மரை நரசிங்கம், சிங்கப்பிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆளரி என்று பலவாறாக ஆழ்வார்கள் பாடி உள்ளனர். (மதுரகவி ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார் தவிர, மற்ற ஆழ்வார்கள்) பல ஆழ்வார்களாலும் இந்த திருஅவதாரம் பாடப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
மற்ற எல்லா அவதாரங்களைக் காட்டிலும் நரசிம்ம அவதாரமே மிக அழகு என்பது ஆழ்வார்களுக்கும் மற்றும் நம் பெரியவர்களுக்கும் உள்ள கருத்து. அதனாலேயே அவரை அழகிய சிங்கர் என்று குறிப்பிட்டு உள்ளனர். நான்முகன் திருவந்தாதி என்ற இந்த பிரபந்தத்தின், 21 மற்றும் 22 பாசுரங்களில், நரசிம்ம அவதாரத்தின் அழகினை, ஆழ்வார் விவரிக்கிறார். தன்னுடைய பக்தர்களுக்கு விரோதம் இழைக்கும் எதிரிகளிடம் அவர் காட்டும் சீற்றம் எவ்வளவு அற்புதமானது என்ற அவதார பெருமையை விளக்குகிறார். எம்பெருமானின் தெளிவான தோற்றத்தைக் காட்டிலும் அவரது சீற்றமே பக்தர்களுக்கு சிறந்தது என்பதை சொல்லும் 21வது பாசுரம். நெருப்பை உமிழும் பெரிய வாய், உருண்டு, சிவந்து ஜொலிக்கின்ற கண்கள், மற்றும் அக்னி போன்று பொங்கும் திருமேனி என்பவை ஆழ்வாரின் சொல்லும் நரசிம்மனின் அழகு. அந்த சிந்தனையிலே தொடர்ந்து, ஆழ்வார், “அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று அடுத்த பாசுரத்தில் பன்னெடுங்காலமாக நம்மை காத்து வரும் அவனின் திருவடிகளை நாடுங்கள் என்று உபதேசம் செய்கிறார். (இது நரசிம்ஹற்காகவே இங்கே சொல்லப்பட்டது, மற்றபடி இந்த பாசுரங்கள் அஹோபிலம் திவ்யதேசத்திற்கு என்று நம் முன்னோர்கள் கொள்வது இல்லை).
திருமங்கையாழ்வாரால் 10 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம். சென்று சேவிப்பது கடினமாக இருப்பதை திருமங்கையாழ்வார் தமது பாடல்களில், சென்று காண்டற்கரிய கோவில் சிங்கவேள் குன்றமே என்றும் “தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே” என்றும், “திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள் குன்றமே” என்றும் “தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே” என்றும் அஹோபிலத்தை தரிசிக்க செல்ல இருக்கும் பக்தர்களுக்குள்ள சிரமங்களையும் பகவானின் பெருமைகளையும் திருமங்கையாழ்வார் சேர்த்து சேர்த்து எடுத்து சொல்கிறார். இன்று அஹோபில மட ஜீயர்கள் மற்றும் நிர்வாகத்தின் விடா முயற்சிகள் காரணமாக அஹோபிலம் சென்று தரிசிக்க எளிமை ஆகி உள்ளது.
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன், பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதனிடம், பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச் செங்கண் ஆளியிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே. (1)
பிரஹலாதன், எங்குமுளன் கண்ணன் என்று சத்யம் செய்த போது, ஹிரண்யன், இங்கே இல்லை, என்று சொன்ன இடத்திலேயே, அனைவரும் பயப்படும்படியான நரசிங்க மூர்த்தியாய் எம்பெருமான் வெளிப்பட்டு ஹிரண்யனின் உடலை கூர்மையான நகங்களினால் இரு பிளவாக பிளந்த பரம புனிதனான எம்பெருமான் இருக்கும் இடம், பசுமையான யானைகளின் தந்தங்களை எடுத்து வந்து பக்தியினால் சிவந்த கண்களை உடைய சிங்கங்கள், எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து வணங்கும் அஹோபிலம் என்ற சிங்கவேள்குன்றம் என்ற திவ்யதேசம் என்கிறார்.
தன்னுடைய பக்தனான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை தாங்க முடியாததால் எம்பெருமான் அளவற்ற சீற்றம் கொண்டு பயங்கரமான ஒரு திருவுருவத்தை எடுத்தான். அந்த சீற்றம் இரணியனின் மேல் மாட்டும் இருந்தாலும், அது அளவற்ற நிலையில் இருந்ததால், இந்த உலகமே அஞ்சும்படி இருந்தது என்கிறார்.
போழ்ந்த புனிதன் என்று சொன்னது, தன் பக்தனான ப்ரஹ்லாதனை காக்க ஒரு தேவதையை ஏவிவிடாமல், தானே நேராக வந்து தோன்றி, தன் திருக்கரங்களால் காரியம் செய்தது இங்கு புனிதம் ஆயிற்று.
“யதந்நஃ புருஷோ பவதி ததந்நாஸ்தஸ்ய தேவதாஃ৷৷2.103.15৷৷” (இராமாயணம், அயோத்தியா காண்டம்) – எந்தெந்த உயிர்களுக்கு எது எது ஆஹாரமோ, அந்தந்த உயிர்கள், அந்த ஆஹாரத்தைக் கொண்டு, தம் தேவதைகளை ஆராதிக்கும் என்பது சாஸ்திரம் ஆகையால், யானைகளை கொன்று அவற்றின் அவயவங்களை ஆஹாரமாக உடைய சிங்கங்களும் யானைத் தந்தங்களைக் கொண்டு திருஆராதனம் செய்கின்றன.
அஹோபிலம், சிங்கம் யானை முதலிய காட்டு விலங்குகள் திரியுமிடம் என்கிறார். அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தி கொண்டு இருந்தன என்கிறார். சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து எம்பெருமான் திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்குகின்றன என்கிறார்.
வலிமை மிக்க சிங்கம், ஆனைகளின் மேலே சீற்றம் மாறாமல் இருக்கும் போதே, இராமானுஜரை போல் பகவத் பக்தி, ஒரு குறையும் இன்றி இருக்கும் என்கிறார்.
அலைத்த பேழ் வாய் வாள் ஏயிறு ஓர் கோளரியாய், அவுணன் கொலைக் கையாளன் நெஞசு இடந்த கூர் உகிராளனிடம், மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வல் துடி வாய் கடுப்ப, சிலைக்கை வேடர்த் தெழிப்பு அறாத சிங்கவேள் குன்றமே. (2)
கோபத்தினால், கடைவாயுடன் நாக்கினை ஏற்றிக்கொள்ளுகிற பெரிய வாயை உடைய நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி, மனிதர்களை துன்புறுத்துவதையே தொழிலாக கொண்ட இரணியனுடைய மார்பைப் பிளந்த எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
தீர்த்த யாத்திரையாக வரும் மனிதர்களிடம் அவ்விடத்து வேடர்கள் பெரும் சண்டை செய்யும் போது வேடர்களின் பறை சப்தமும், வில்லோசையும் இடை விடாது ஒலிக்கும் சிங்கவேள்குன்றம் என்கிறார்.
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு ஓர் கோளரியாய், அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம், ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால், தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேள் குன்றமே. (3)
தன்னுடைய வடிவினுக்கு தகுதியாக, பெரிய வாயையும், ஒளி பொருந்திய வாள் போன்ற கோரப் பற்களையும் உடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய பெரிய உடலை பிளந்த எம்பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்குமங்கும் ஓடி அலைந்து ஓய்ந்து நிற்க, உடைந்து கிடக்கும் கற்பாறைகளுடன், மூங்கில்கள் நெருப்புப் பற்றி எரிந்து குறைக் கொள்ளிகளாய் இருக்கும் இடம் இந்த சிங்கவேள்குன்றம் என்கிறார்.
“அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்” என்ற படி எம்பெருமானுடைய சரித்திரம் எதுவாக இருந்தாலும் அவை ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வது போல், அந்த எம்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவை எதுவாக இருந்தாலும் அவை தக்கவை’ என்கிற காரணத்தினால், எல்லாம் ஆழ்வாருக்கு உகந்ததே.
எவ்வம் வெம்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி, ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த எம்மானது இடம், கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று, தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே. (4)
கையும் வேலுமாக இருக்கிற இருப்பைக் கண்ட காட்சியிலே, எல்லாரையும் துக்கப் படுத்த வல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்பைப் பிளந்து அருளின எம்பெருமான் உறையும் இடமாவது சிங்கவேள்குன்றம் என்கிறார்.
வேற்று மனிதரைக் கண்ட உடன் வந்து தொடைகளிலே கவ்விக் கடிக்கின்ற நாய்களும், அப்படி கடிக்கப் பட்டு மாண்டு ஓழிந்த பிணங்களைக் கவ்வுகின்ற கழுகுகளும் அங்கு மிகுதியாக இருக்கும். செடி மரம் என்று ஒன்றும் இல்லாததால் நிழல் என்பது பார்க்க முடியாது. உச்சி வேளையில் எப்படி வெய்யில் காயுமோ, அப்படி காய்கின்றது; சுழல் காற்றுகள் சுழன்று கொண்டே இருக்கும். இப்படிபட்ட திருத்தலத்திற்கு சாதாரண மனிதர்கள் செல்வது மிக அரிது. மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்ல முடியும் என்ற அளவிற்கு கடினமான திருத்தலம் என்கிறார்.
தாம் சென்று சேவிக்க ஆசைப்படுகிற திருத்தலத்தை, ஆழ்வார் ‘தெய்வமல்லால் செல்ல வொண்ணா‘ என்று பாடலாமா என்று கேட்டுக் கொண்டு, அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார். விஷ்ணுபக்தி பரோ தேவ என்ற படி, விஷ்ணுபக்தி இல்லாதவர்களுக்கு செல்ல வொண்ணாதது என்கிறார். ஆழ்வார் போன்று ஆசை படுபவர்களுக்கு “சீதா பவஹநுமத‘ என்பது போல், அந்த நிலவெப்பமே குளிர்ச்சியை கொடுக்குமாம்.
மென்ற பேழ் வாய் வாள் எயிறு ஓர் கோளரியாய், அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதனிடம், நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு உரிய, சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள் குன்றமே. (5)
மிகுந்த கோபத்தினால், பற்களுக்கு இடையே நாக்கை சுழற்றி கொண்டே இருக்கிற பெரிய வாயையும், ஒளி விடுகிற கோர பற்களையும் எயிற்றையும் உடைய நரசிங்கமாய்த் தோன்றி, பார்த்தவுடன் இரணியன் உயிர் போகும்படியான தோற்றத்துடன், அவனது மார்பினை பிளந்த எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
தொடர்ந்து நின்று எரிகின்ற சிவந்த தீயை, சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயம் மீது வீசி ஏறிவதனால், அது ஆகாயம் முழுவதும் பரந்து, ஜுவலித்துக் கொண்டு இருப்பதால், அந்த தீயின் வெப்பமும் ஒளியும் சேர்ந்து, சென்று காண்பதற்கு அரிதாக உள்ள திருத்தலம் இந்த கோவில் என்கிறார். இதனால் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிக்கு கண் எச்சில் படாது, ஹிரண்யன் போன்றவர்கள் வந்து எம்பெருமானுக்கு தொல்லை கொடுக்கா மாட்டார்கள் என்று பல்லாண்டு பாடுகிறார்.
அகோபில மடத்தின் ஜீயர் ஸ்வாமிகளின் தொடர்ந்த அயராத முயற்சிகளால், இப்பொழுது சென்று காண்டற்கு எளியதான திவ்யதேசம் ஆக மாறி உள்ளது.
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய், எயிற்றோடு இது எவ்வுருவு என்று, இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மான் இடம், நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறி வாய் உழுவை, திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்கவேள் குன்றமே.(6)
கோபத்தினால், தீயின் ஜுவாலையைப் போல் சிவந்த ஒளிவிடும் கண்களையும் பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு, “அப்பப்பா ! இதென்ன உருவம் !” என்று பயப்பட்டு தேவர்கள்கூட அங்கும் இங்கும் கால் தடுமாறி சிதறி ஓடும்படியான நரசிங்க உருவம் கொண்டு எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
யானைகளை அடித்துத் தின்பதற்காக, அவை உலாவின இட அடையாளங்களை தேடி, மூங்கில் புதர்களில் இருந்து வந்து திரிகின்ற புலிகள் நிறைந்த திருத்தலம் இது என்கிறார்.
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும், அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த அம்மான் இடம், கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய், தினைத் தனையும் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே. (7)
நரசிங்க மூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவில்லாமல் இருந்ததனால், அந்தக் கோபத் தீ, மேல்உலகம் வரையில் போய்ப் பரவி எங்கும் வெப்பம் உண்டாக்கவே, இப்போது எல்லா உலகங்களும் அழிய போகும் சமயம் நெருங்கி விட்டது என்று மூவுலகத்தில் உள்ளவர்களும் அஞ்சி நடுங்கும் படியாக உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
எரிகிற போது உண்டாகும் படபட என்ற ஓசையை உடைய நெருப்பும், அந்த நெருப்பிலே ஒரு வைக்கோல் போர் போலே வேகும் கற்களும், இவற்றைக் காட்டிலும் கொடியவர்களான வேடர்கள் வேலும் கையுமாக திரிவதும் அஹோபிலத்தில் நிறைந்து இருப்பதனால் ஒரு நொடிப் பொழுதும் சென்று அடைய முடியாத திருத்தலம் என்கிறார்.
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கே ஓர் ஆளரியாய் இருந்த அம்மானது இடம், காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல் அதர் வேய்ங் கழை போய், தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள் குன்றமே. (8)
நான்முகக் கடவுளாகிய பிரமனும், சிவனும் முறை வழுவாது துதிக்கும் நர சிங்க உருவம் கொண்டு எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார். சில இடங்களில், காய்கள், காய்த்துத் தொங்குகின்ற வாகை மரங்களின் உலர்ந்த பழங்கள், காற்றடித்துக் கலகல என்று ஒலிக்கும், சில இடங்களில் ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து இருக்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பற்றி எரிந்து விண்ணுலகத்தையும் சிவப்பாக மாற்றும் சிங்கவேள்குன்றம் ஆகும் என்கிறார்.
ஈசனுமாய் என்றதால் இதற்கு முன்பு ஹிரண்யனுக்கு பயந்து மனித வேஷம் கொண்டு திரிந்தார்கள் என்றும் இப்போது முறையாக துதிக்கிறார்கள் என்கிறார்.
பாலை நிலத்தில் விண் சிவக்கும்படி இருக்கும் அக்னிக்கு அஞ்சி, காட்டில் உள்ள வாகை மரங்கள் தங்களின் உலர்ந்த பழங்கள் மூலம் துதிப்பது போல், நரசிம்மத்தின் சீற்றத்திற்கு அஞ்சி, அது மாற, ப்ரம்மா சிவன் வந்து முறையாக துதிப்பது உள்ளது என்கிறார். என்றது
அகவாய் அடங்க இவர்களின் சோஸ்திரமும் புறவாய் அடங்க உலர்ந்த பழங்களின் சப்தமும் என்று உரையாசிரியர் சொல்வார். அகவாய் என்றது உள்ளிருக்கும் நரசிம்மத்தையும் புறவாய் என்றது வெளியில் இருக்கும் மூங்கில்களையும் சொல்வது.
நல்லை நெஞ்சே. நாந்தொழுதும் நம்முடை நம் பெருமான், அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந்தோளன் இடம், நெல்லி மல்கிக் கல் உடைப்பப் புல்லிலை ஆர்த்து, அதர் வாய்ச் சில்லி சில்லென்று ஒல் அறாத சிங்கவேள் குன்றமே. (9)
பெரியதிருமொழி (1.6.9) ல், ‘தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே!” என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுச் சரணாகதி செய்தது போலவே இத்திருமொழியிலும் ஒன்பதாம் பாட்டில் “அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன்” என்று திருமகள் ஸம்பந்தத்தை முன்னிட்டு அநுபவிக்கிறார்.
கீழ்ப்பாட்டுகளில் இந்த திவ்யதேசம் செல்வது எவ்வளவு கடினமானது என்று சொன்ன ஆழ்வார், அது பகவத் விரோதிகளுக்கே தவிர, இங்கு வருவதற்கு ஆசையுடன் உகந்து இருக்கும் அடியவர்களுக்கு இல்லை என்று இந்த பாட்டில் நெஞ்சிற்கு சொல்கிறார். பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு நாம் அஞ்சாமல் சிங்கவேள் குன்றத்திலே சென்று தொழுவோம் என்கிறார் . தாமரைப்பூவினை இருப்பிடமாக கொண்ட பிராட்டியோடே அணைந்து இருப்பதனாலே, நரசிங்க மூர்த்தியின் கோபத்தீக்கு நாம் அஞ்ச வேண்டியது இல்லை என்றும், அவன் நம்முடைய நம் பெருமான் ஆகையால், அந்த திவ்யதேசத்தில் இருக்கும் கஷ்டங்களுக்கும் நாம் அஞ்ச வேண்டியது இல்லை என்றும் சொல்லி, நம்பெருமான் என்றாலே போதுமாயிருக்க “நம்முடை நம்பெருமான்” என்றது அடியவர்கள் இடத்தில் அவன் மிகவும் ப்ரியமுடன் இருக்கின்றதை காட்டுகிறது.
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந்தோளன் என்றதால், பிராட் டியை அணைக்கும் போது எம்பெருமானுக்கு ஆனந்த மிகுதியினால் தழுவுதற்கு உதவியாக, தோள்கள் ஆயிரம் முகமாக வளர்கின்றதை சொல்கிறது. இதையே பெரியவாச்சான் பிள்ளை என்ற ஆச்சார்யாரும் “இவளை அணைத்தால் இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரம் தோள் உண்டாயிற்று” என்று சொல்வதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
”தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக்கு கைம்மாறாத், தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன்” (திருவாய்மொழி, 8.1.10), என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணியதால் உண்டான ஆனந்தத்தால் “தோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய், துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய், தாள்கள் ஆயிரத்தாய், பேர்கள் ஆயிரத்தாய்” என்று சொன்னால், பிராட்டியின் சேர்த்தியினால் உண்டாகக் கூடிய உடல் பூரிப்பினை சொல்ல வேண்டுமோ என்று உரையாசிரியர் கூறுவது சிறப்பு.
நெல்கி மல்கி என்று சொல்வது, நெல்லி மரங்கள், மலையின் கற்களின் நடுவே முளைத்து கற்களை உடைக்கும் அளவுக்கு வளர்கிறது என்றும், நெல்லி மரங்களில் உள்ள நெல்லிக்காய்கள் உயர்ந்த கிளைகளில் இருந்து கீழே விழுந்து கற்கள் உடைகின்றன என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்.
பனை ஓலை ஓசையும், சிலிக்கா என்ற சுவர்க்கோழியின் ஓசையும் கேட்டுக் கொண்டு இருக்கும் சிங்கவேள்குன்றம் என்கிறார்.
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய, எங்கள் ஈசன் எம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன், மங்கையாளன் மன்னு தொல்சீர் வண்டறை தார்க் கலியன், செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர்த் தீதிலரே (10)
வீரலக்ஷ்மி விளங்கும் கண்களை உடைய சிங்கங்கள், யானை தந்தங்கள் முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்கும் இடமான சிங்கவேள் குன்றத்திலே எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச் செய்த சொல் மாலையை ஓத வல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று இத்திருமொழி கற்றவர்களுக்கு பலன் சொல்லி முடிக்கிறார்.
மீண்டும் இன்னொரு திவ்யதேச அனுபவத்தில் இணைவோம், நன்றி.
அற்புதமான கட்டுரை. திவ்ய தேசத்தினை மீண்டும் நன்றாக சேவித்த திருப்தி ஏற்பட்டது. பாசுர விளக்கம் புரியும்படி சொல்லப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.
Dear Kannan Anna, Thank you very much for your kind words. With best regards