073 திருத்துவாரகை

ஸ்ரீ கல்யாணநாச்சியார் சமேத கல்யாணநாராயணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருத்துவாரகை
மூலவர்கல்யாணநாராயண பெருமாள் துவாரகாதீசன் – துவாரகாநாத்ஜீ
உத்ஸவர்
தாயார் கல்யாண நாச்சியார் / லக்ஷ்மிஸ்ரீ / ருக்மணி தேவி / அஷ்ட மகிஷிகள்
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்பெரியாழ்வார் – 5
ஆண்டாள் – 4
திருமங்கை ஆழ்வார் – 2
திருமழிசையாழ்வார் – 1
நம்மாழ்வார் -1
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

திருத்தலம் பற்றி

குஜராத் மாநிலத்தில், ஜாம்நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் துவாரகை உள்ளது. மேற்கு சௌராஷ்டிராக் கடலோரம் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில், கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. கோமதி நதி சுமார் ஐந்து மைல் தூரமே ஓடும் சிறிய நதி. இந்த திருத்தலத்தை பாடாத, சொல்லாத வடநாட்டுப் புராணங்களே இல்லை என்று சொல்லலாம்.

அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு முக்தி தரும் க்ஷேத்திரங்களுக்குள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு இங்கிருந்து மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப் படுவதால் இது துவாரகை என்று அழைக்கப் படுகிறது.

திருத்துவாரகைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்

Google Map

திருத்துவாரகை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தலம். ‘அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ என ஸ்ரீகிருஷ்ணனால் கொண்டாடப்பட்ட திவ்யதேசம். துவாரகையின் பெருமையால், புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள்கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையும் என்றும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு முக்தி உண்டு என்றும், துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும் கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, மோக்ஷத்தை அடையும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவிகளுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம்.

Nava Dwaraka – Thanks to google map நவ துவாரகா google க்கு நன்றி

நவ துவாரகா மற்றும் பஞ்ச துவாரகா

பஞ்ச துவாரகா என்று, ஐந்து கிருஷ்ணர் கோவில்களை உள்ளடக்கிய பயணம் ஒன்று சொல்வதுண்டு, அவற்றில், இந்த கோமதி துவாரகா என்னும் துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில் ஆகியவை உள்ளன. இவற்றில் நாத் துவாரகா (ஸ்ரீநாத் ஜீ), காங்கோர்லி (துவாரகீஷ்) என்ற இரண்டும் ராஜஸ்தானில் உள்ளன. மற்றவை குஜராத்தின் மற்ற பகுதிகளில் உள்ளன.

இதனை தவிர, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா என்ற நான்கினை சேர்த்து நவ துவாரக என்றும் கூறப்படுகிறது.  

துவாரகாவில் எங்களின் திருத்தாயார்

துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் மட்டுமே குறிக்கும். பஞ்ச துவாரகை தரிசனம் என்பது நெடுங்காலத்து வழக்கம் அல்ல. எனினும், கிருஷ்ண அனுபவத்தின் பெருமையினால், துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட இன்னும் சில கிருஷ்ண ஸ்தலங்களை சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றும், நவ துவாரகா என்றும் நம் முன்னோர்கள் கொண்டாடுகிறார்கள்.

கோமதி துவாரகா

With Kannan anna
Nice art work at the temple

துவாரகையை துவாரவதி என்றும் கோமதி துவாரகா என்றும் அழைப்பார்கள். துவாரகை, மகாபாரதத்தில், யது குலத்தின் ஒரு பிரிவான  விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டதாகும். புராணங்களில் குறிப்பிட்ட துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இங்குள்ள கோவிலை துவாரகா நாத்ஜி ஆலயம் என்று அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். இப்போதுள்ள கோவில் கண்ணனின் வழிவந்தவர்களில் ஒருவரான வஜ்ரநாபி கட்டியது என்றும் ருக்மணி தேவி பூஜித்த மூர்த்தி என்றும் சொல்கிறார்கள். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றங்களாலும் பிற இன்னல்களாலும் இந்த கோவில் பாதிக்கப்பட்ட போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப் பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கே பல படிகள் (56) ஏறித் தான் கண்ணனை தரிசிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணன் 56 கோடி யாதவர்களை இங்கே கொண்டு வந்து தங்க வைத்தான், அதனால் 56 படிகள் என்று சொல்வார்கள்.

இங்கு அவனது அஷ்ட மகிஷிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணன் சன்னதிக்கு எதிரே அவன் தாயார் தேவகிக்கு ஒரு சன்னதி உண்டு. அதிகாலையில் எம்பெருமான் கண் விழிப்பது தாயின் திருமுகத்தில் தான். மேலும் எந்த குறையும் இல்லாமல் தன் மகனுக்கு எல்லா சீர்களும் நடைபெறுகின்றதா என்று அன்னை கவனித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை.

இத்தலத்தின் ஸ்ரீ கிருஷ்ணன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் கருப்பு நிறத்தில் சிரசில் கொண்டையுடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். தாயார் கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிஷிகள் (எட்டு பட்டத்தது அரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பைச் சேர்ந்தது.

temple view
கோமதி ஆறு கடலில் சேரும் இடம்

இங்கே ஆஹாரப்ரியன் க்ருஷ்ணனுக்கு கண்டருளச் செய்யும் உணவும் அலங்காரமும் விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரண்மனையில் கொடுப்பது போல், 56 வகை உணவுகள் கொடுத்து ஒவ்வொரு மணியும் உடை மாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். காலை 7.30 க்குள் தீர்த்தமும் பிரசாதமும் அமுது செய்த படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சர்க்கரை பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு பலவகை பழங்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு செய்யப்படும் திருவாராதனத்திற்கு போக் என்று பெயர், ஒரு நாளைக்கு பண்டா போக், ஸ்நான் போக், ஷ்ருங்கார் போக், ராஜ் போக், உத்தப்பன் போக், சயன் போக் என்று ஆறு காலங்கள். மதியம் உணவிற்கு பிறகு சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர்.

இங்கே, யாத்ரீகர்கள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக வருவதால் எந்நேரமும் இந்த திருக்கோவில் கலகலப்புடன் இருக்கிறது. இங்கு பெண்கள் ஆயர்ப்பாடி கோபிகைகள் போல் ஆடை அணிந்து வருவது ஒரு சிறப்பு,

துவாரகநாத்ஜீ பிரதான கோவிலின் மேல் உள்ள கொடிகம்பம் தனித்துவமானது, மற்றும் புனிதமானது. இது 52 கெஜம் துணியால் ஆனது. ஒவ்வொரு நாளும் இந்த கொடி கோபுரத்தின் மேல் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு முற்றத்திலும் 52 சிறிய கொடிகள் தனித்தனியாக நெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முற்றமும் பண்டைய நகரமான துவாரகாவின் நுழைவாயில்களைக் குறிக்கிறது. சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது என்றும் மூன்று முறை ஏற்றப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறன. அடியேன் ஒருமுறை ஏற்றும் போது பார்த்து உள்ளேன். வாயிலில் இருக்கும் பலராமன் சன்னதியில் சமர்ப்பித்து அனுமதி பெற்று கொடி ஏற்றப்படுகிறது. இந்த 52 கெஜ கோடி, 10 கிலோமீட்டர் தூரம் வரை தெரிகிறது என்பார்கள். 27 நக்ஷத்திரம், 12 ராசி, 9 கிரகங்கள் 4 திசைகள் – இவற்றின் கூட்டுத்தொகை 52. இதுவே கொடியின் நீளத்திற்கான காரணம்.

இந்த கோவில் ஐந்து நிலைகளைக் கொண்டது, மற்றும் 72 சுண்ணாம்பு தூண்களில் உள்ளன. மேலும், இங்கு கோபுரத்தின் மொத்த உயரம் 157 அடி. இந்த ஸ்தலம் உலக பாரம்பர்ய ஸ்தலம் என்று அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கோகுலாஷ்டமி, தீபாவளி, குஜராத் புத்தாண்டு, ஹோலி, மட்கோபாட் என்ற உறியடி திருநாள் ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. கோகுலாஷ்டமி அன்று ஆண்களும் பெண்களுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பானைகளை சுமந்து பாவன் பேடா என்ற நடனம் ஆடுவார்கள்.

காலையில் பால கிருஷ்ணனாகவும், மதியம் மஹாராஜாவாகவும் இரவில் எல்லோரும் வணங்கும் பூஜிக்கும் தெய்வமாகவும் அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு முறை ஆர்த்தி நடக்கும் போது அங்குள்ள பக்தர்கள் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது கண் கொள்ள காட்சியாக உள்ளது.

இங்கு கோமதி நதி கடலில் கலக்கும் இடத்தில துவாரகசிலா எனப்படும் தெய்வீக கற்கள் கிடைக்கின்றன. இது சாளக்ராமம் போல் வைத்து வீட்டில் பூஜை செய்கிறார்கள். சாளக்ராமத்திற்கு உள்ள பலன்கள் இதற்கும் உண்டு என்று சொல்கிறார்கள். இவற்றை தாயார் வடிவம் என்றும் போற்றுகிறார்கள். துவாரகசிலா  மகாலட்சுமியின்  அம்சம்,  சாளக்கிராமத்துடன் துவாரகசிலாவையும் சேர்த்து வழிபடுவது மிகச்சிறப்பானது என்றும், இவ்வாறு வழிபடுவது கோடிக்கணக்கான பலன்களை தரும் என்பதும் இந்துக்களின் நீண்ட நாள் நம்பிக்கை.

ருக்மணி துவாரகா

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 4 KM தூரத்தில் ருக்மணி தேவி கோவில் உள்ளது. இந்த ருக்மணி தேவியின் சன்னதியில் தான் ஸ்ரீகிருஷ்ணன் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப் படுகிறது.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜ களை ஜொலிக்க சிரித்த முகத்துடன் வீற்றிருக்கிறாள். இது ருக்மணி துவாரகா என்று கூறப்படுகிறது.

Rukmani Devi Temple = a separate temple in Dwarka

பேட் துவாரகா

இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இதனை பேட் துவாரகை என்று பெயர். இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். மகாபாரதத்தில், இந்த இடம் ‘அந்தர்த்வீபா’ அல்லது ‘சங்கிதர்’ என்று குறிப்பிடப்படுகிறது. துவாரகாவில் இருந்து ஒகா துறைமுகம் (சுமார் 33 கிலோ மீட்டர்) வரை சென்று அங்கிருந்து விசைப்படகு மூலம் (சுமார் 2 கிலோமீட்டர்) இத்தலத்தை அடையலாம்.

இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினம் தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். இதனை நாம் நேரில் நின்று காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி காட்சி தருகிறாள். இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவதி, லட்சுமி நாராயணன், பலராமன் என்று தனித்தனி சன்னதிகள் உண்டு.

With Manni, Kannan in Bhet Dwarka

இங்கு தான் கண்ணனின் குருகுல நண்பனாகிய குசேலர், அவனிடம் உதவி கேட்க நினைத்து பேட்டி கேட்க வந்த இடம், பேட் துவாரகா. ஆனால் கண்ணனின் உபசரிப்பையும் பரிவையும் கண்டு ஒன்றும் கேட்காமலே திரும்ப சென்று விட்டார். இருந்தும், கண்ணன் அவர் கேட்காமலேயே அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பலவித நன்மைகளை செய்தார் என்பது வரலாறு.

சுதாமா துவாரகா

நம்முடைய தேச தந்தை மஹாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் அருகே குசேலருக்கு என்று ஒரு கோவில் உள்ளது. குசேல பட்டினம் என்று ஒரு பெயரும் உண்டு. இது சுதாமா துவாரகா ஆகும்.

தூய நட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன்-சுதாமா. சுதாமா தான் குசேலர். துவாரகையிலிருந்து சோம்நாத் செல்லும் வழியில் 105 கி.மீ தொலைவில் போர்பந்தர் எனும் சுதாமா துவாரகை அமைந்துள்ளது.  ஊரின் மையமாக சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் நடுவே ஆலயம் அமைந்துள்ளது.

Kannan anna explaining to Ravi in Sudama Temple, Porbandar
Kuchelar place in Porbandar
Kannan anna explaining to Ravi in Sudama Temple, Porbandar

ஒரே   ஒரு மண்டபம், அழகிய தூண்களுடன்  பிரம்மாண்டமான இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும் ஒரு சித்திரத்தையும், பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையும் தரிசிக்கலாம்.

முக்தி துவாரகா

Sri Krishna side view
Somnath

ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்பினால் அடி பட்ட இடத்தின் பெயர் விராவல்.  அந்த ஆலமரம் இன்றும் உள்ளது,  நன்றாகப் பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்ர கதாதாரியாக, ஒரு காலை மற்றொரு காலின் மேல் வைத்த கோலத்தில் இருக்கிறார். அறியாமல் அம்பு எய்த வேடன் மண்டியிட்டு எம்பெருமானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் உள்ளது.

பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு விராவல் என்னும் ரயில் நிலையம் அமைந்துள்ள பிரபாஸ் பதான் (ப்ரபாஸ தீர்த்தம்) என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் திரும்புவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை சயன திருக்கோலத்தில் காணலாம். இது முக்தி துவாரகா என்கின்றனர். இதற்கு அருகில் பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயம் உள்ளது.

Kannan Anna in Prabasa Theertham
Krishna in Prabasa Theertham with Hunter apologising

இந்த சமயத்தில் கிருஷ்ணன் பற்றிய சில தகவல்கள் (சுருக்கமாக)

கிருஷ்ணன் திருஅவதாரம் செய்தது இன்றைக்கு (22 Feb 2023) சுமார் 5255 ஆண்டுகளுக்கு முன்னர். ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்திரம், அஷ்டமி திதி, நடுநிசியில் (0:00 hrs). ஸ்ரீ கிருஷ்ணன் இந்த உலகத்தில் 125 ஆண்டுகளும், 8 மாதங்களும் 7 நாட்களும் வாழ்ந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் 89 வயதில் மஹாபாரத போர் நடைபெற்றது. அதற்கு பிறகு 36 வருடம் சென்று அவர் பரமபத்திற்கு மீண்டும் எழுந்தருளினார்.

ஸ்ரீ கிருஷ்ணரை, கிருஷ்ணா என்று மதுராவிலும், ஜகன்னாதா என்று ஒரிசாவிலும், விதோபா என்று மஹாராஷ்ட்ராவிலும், ஸ்ரீநாத்ஜீ என்று ராஜஸ்தானிலும், துவாரகாதீஷ் என்றும், ரன்சோடராய் என்றும் குஜராத்திலும், கிருஷ்ணா என்று உடுப்பியிலும், அன்புடன் அழைத்து வணங்குகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணனை பெற்ற தாய் தேவகி, தந்தை வசுதேவர்; வளர்த்த தாய் யசோதா, வளர்த்த தந்தை நந்தகோபன்; பலராமன் அண்ணன், சுபத்ரா சகோதரி, பிறந்த இடம் மதுரா.

கண்ணனின் மனைவிகள், ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, நக்நாஜிதி, பாத்ரா, லக்ஷ்மணா.

கிருஷ்ணர் மதுராவிற்கு திரும்பிய பின் நான்கு பேர்களை கொன்று இருக்கிறார்; அவர்கள், சாணூரன் (மதுராவில் கண்ணனுடன் மற்போர் புரிந்தவன்), கம்சன், (கண்ணன் மாமா) சிசுபாலன், தந்தவக்ரன் (இவர்கள் இருவரும் கண்ணனின் உறவினர்கள்). சிறு வயதில் பூதனையில் தொடங்கி, தன்னுடைய தாய் மாமன் கம்சன் அனுப்பிய பல அரக்கர்களை முடித்து உள்ளான்.

ஸ்ரீகிருஷ்ணரின் தாய் உக்ரா குலத்தைச் சேர்ந்தவர், தந்தை யாதவ குலத்தைச் சேர்ந்தவர், இனங்களுக்கு இடையேயான திருமணம். அவர் கருமையான நிறத்துடன் பிறந்தார். அவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய உயிருக்கு ஆபத்தான பல சூழ்நிலைகள் கொண்டது.

அவர் தன்னுடைய 14-16 ஆண்டுகள் வரை கோகுலம் மற்றும் பிருந்தாவனத்தில் இருந்தார். பிறகு மதுராவிற்கு சென்று தனது மாமனைக் கொன்று, மாமனால் சிறையில் அடைபட்டு இருந்த தன்னுடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்தார். இதற்கு பின் அவர் பிருந்தாவனம் திரும்பவே இல்லை; தன்னுடைய வளர்த்த தாய் தந்தை மற்றும் அவனுடன் விளையாடி காலம் கழித்த ஆயர்குல சிறுவர் சிறுமியர்களை சந்திக்கவே இல்லை.

தன்னுடைய குடிமக்களுக்கு காலயவனின் அச்சுறுத்தல் காரணமாக மதுராவிலிருந்து துவாரகாவிற்கு குடிபெயர வேண்டியிருந்தது. கோமந்தக மலையில் (இப்போதைய கோவா) பழங்குடியினரின் உதவியுடன் ‘ஜராசந்தனை’ தோற்கடித்தார்.

16-18 வயதில் பள்ளிப்படிப்பைத் தொடங்க உஜ்ஜயினியில் உள்ள சாந்திபனியின் ஆசிரமத்திற்குச் சென்றார். குசேலர் அங்கு தான் அவருக்கு நண்பர் ஆனார்.

தனது கல்விக்குப் பிறகு, வனவாசத்தில் பாண்டவர்களுக்கு “மெழுகு இல்லத்தில்” ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து காப்பாற்ற வந்தார், பிறகு மஹாபாரதத்தில் திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் துணையாக இருந்த அவரது பங்கு அளப்பற்றது.

யாதவர்களின் கேலி பேச்சினால் தங்களுடைய குலமே அழிவதை கிருஷ்ணர் பார்க்க நேரிட்டது. இறுதியில் ஜரா என்ற வேடன் தவறாக அம்பு எய்ததால் அதையே காரணமாக கொண்டு இந்த திருவவதாரத்தை முடித்துக்கொண்டு பரமபதத்திற்கு திரும்பினார்.

வாழ்நாள் முழுவதும் அவருக்கு சவால்கள் மற்றும் இன்னும் பெரிய சவால்கள் இருந்தன.
அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பொறுப்புணர்வுடன் எதிர்கொண்டு எல்லாவற்றில் இருந்தும் விலகியே இருந்தார். இதையே அவர் நம் எல்லோருக்கும் பகவத் கீதை என்ற பெரும் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷத்தில் அளித்தார்.

மீண்டும் துவாரகா பற்றி தொடர்வோம்.

மூல துவாரகா

துவாரகையிலிருந்து 75 கி.மீ தொலைவில் , சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருக்கும் விசாவாடா எனும் கிராமத்தில் உள்ள  ஒரு புராதமான ஆலய வளாகத்தை  மூலத் துவாரகை என்றழைக்கின்றனர். மூல துவாரகா என்பது கிருஷ்ணர் துவாரகைக்கு முதலில் காலடி எடுத்து வைத்த இடம். காலயவனன் ஸ்ரீகிருஷ்ணரை துரத்தி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்கு சாமர்த்தியமாக வழி காண்பித்த முசுகுந்தன்  குகை அருகில் உள்ளது. மதுராவிலிருந்து துவாரகை செல்லும் வழியில்  முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தம் பாதத்தை இவ்விடம் பதித்துத் தங்கினார் என்பது சரித்திரம். விஷ்ணு தன் பாதத்தை இங்கு பதித்ததால் ரண்சோட்ராய் ஜீ சன்னதியில் விஷ்ணு பாதம் உள்ளது. விஷ்ணு பாதம் என்பதே  மருவி விசாவாடா ஆகிவிட்டதாம்.     தற்போதைய முக்கிய துவாரகையான கோமதி துவாரகா ஆலயத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் இது மூலத் துவாரகை ஆயிற்று. ஆலய முகப்பில் அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ரண்சோட்ராய்ஜீ,  நீலகண்டேஸ்வரர் ஆகியோருக்கு முக்கிய சன்னதிகள் உள்ளன. அருகில் மற்றொரு ஆலய வளாகம் உள்ளது. அதில் சிவன், கார்த்திகேயன், தத்தாத்ரேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில், குர் ஸோமன்த் மாவட்டத்தில் கோடிநார் என்ற ஊர் அருகில் உள்ள இன்னொரு கிருஷ்ணன் கோவிலையும் மூல துவாரகா என்று சிலர் கூறுகின்றனர். இது ப்ரபாஸ தீர்த்தம் அல்லது முக்தி துவாரகாவில் இருந்து தெற்கில் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிருஷ்ணர் துவாரகைக்கு முதலில் காலடி எடுத்து வைத்த இடம் என்பதை தெரிவிக்கும் வகையில் இங்கு ஒரு கல்வெட்டு உள்ளதாக சொல்கிறார்கள். மஹாபாரத நாட்களின் போது இது ஒரு சிறந்த துறைமுகமாக இருந்தது என்று சொல்லப் படுகிறது. இங்கு ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் துவாரகாவிற்கு செல்வதற்கு முன்னால் வாழ்ந்தார்கள். இங்குள்ள கோவில் சிறிது பாழடைந்த நிலையில் உள்ளது. அதில் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ராமர் சீதா ஆகியோரில் விக்ரகங்கள் உள்ளன. கோவில் அருகில் உள்ள கிணற்றில் ஸ்ரீ கிருஷ்ணன் குளித்ததாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர் இந்த இடத்தைத் துறந்து பேட் துவாரகாவுக்குச் சென்றதாகத் தெரிகிறது.

காங்கோர்லி துவாரகாதீஷ்

காங்கோர்லி கோயில் அல்லது துவாரகீஷ் என்ற பஞ்ச துவாரகையில் ஒன்றானது ராஜஸ்தானில் உதய்பூருக்கு அருகில் உள்ளது. இது உதய்பூரில் இருந்து 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது துவாரகாதீஷ் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது வைணவர்களின் மிக முக்கியமான கோவில். கிருஷ்ணரின் சிவப்புக் கல் சிலை மதுராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக பலர் நம்புகிறார்கள்.

இத்தலத்தில் எம்பெருமான், வலது  மேல் திருக்கரத்தில் கதை, இடது மேல் திருக்கரத்தில் சக்கரம், வலது கீழ்கரத்தில் பத்மம், இடது கீழ் கரத்தில் சங்கம் ஏந்தி  நின்ற கோலத்தில்  சதுர்புஜ விஷ்ணுவாக சேவை சாதிக்கின்றார்.

நாத் துவாரா / ஸ்ரீநாத் ஜீ

ராஜஸ்தானில் உதய்பூரில் நாத துவாரா என்ற ஸ்ரீநாத்ஜி கோவில் உள்ளது. நாதத்வாரா என்றால் கடவுளின் வாசல் என்று பொருள். இது உதய்பூருக்கு வடகிழக்கில் சுமார் 48 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீநாத்ஜி அசல் கருப்பு பளிங்கு சிலையினால் ஆன இவர் முதலில் 14ம் நூற்றாண்டில் சுயம்புவாக கோவர்தனில் தோன்றினார். பின்னர் முகலாயர்கள் படையெடுப்பின் போது இவரைப் பாதுகாத்து, அங்கிருந்து ஸ்ரீநாத்ஜீ இந்த ஸ்தலத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து, இக்கிராமத்தில் கோவில் அமைத்தனர். ஸ்ரீநாத்ஜீ கோவில் கொண்டதால் பின்னர் இவ்வூர்  நாத்துவார் என்று அழைக்கப்படலானது.

எம்பெருமான் ஸ்ரீநாத்ஜி, ‘கோவர்த்தன’ மலையை தூக்கியபோது, இருந்த கிருஷ்ணரின் ஒரு வடிவத்தை அடையாளப் படுத்துகிறார். கோவர்த்தன கிரிதாரியாக, நின்ற கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர்  சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் ஸ்ரீநாத்ஜீ இடது திருக்கரத்தால் கோவர்த்தனகிரியைத் தாங்கி வலக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்துக் கொண்ட அற்புதக் கோலம். பக்த மீராபாயை ஆகர்ஷித்த கோலம். மாயக்கண்ணனின்  கண்கள் இத்தலத்தில் விரிந்து பரந்தனவாக இல்லாமல் பாதி மூடிய நிலையில் கீழ் நோக்கிய பார்வையாக தனி அழகுடன் அமைந்திருக்கும். .

காய்கறிகள் வெட்டுதல், கோவில்களை துடைத்தல், மாலைகள் கட்டுதல் மற்றும் விறகு சுமந்து செல்வது என பல சேவைகளை இங்கு பக்தர்கள் செய்கிறார்கள். கோயில்களின் பணியாளர்கள் அரசர்கள் மற்றும் ராணிகளின் காலத்து ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை பிரியமான இளவரசராக சேவிப்பார்கள். இதனாலேயே இந்த ஆலயம் ‘ஹவேலி’ அதாவது பணக்கார வணிகர்களின் பெரிய மாளிகைகள் என்று பொருள்படும். அனைத்து வாசல்களிலும் யானைகள், குதிரைகள், கன்னிகள் மற்றும் பல அழகான பெரிய ஓவியங்கள் உள்ளன. நுணுக்கமான மர வேலைப்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை அழகுடன் கூடிய அற்புதமான ஆலயம் மற்றும் இறைவன் தனது அனைத்து மகிமையிலும் நிற்கிறார். கேரளாவில் இருக்கும் குருவாயூரப்பன் போல் உள்ளார்.

இவருக்கு தினமும் எட்டு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது மட்டுமே பக்தர்கள் இவரை தரிசிக்க முடியும், மற்ற சமயங்களில் திரை போடப்படுகிறது. கிருஷ்ணரைக் காண எப்போதும் கோபியர்கள் யசோதையின் வாயிலில் காத்துக் கிடப்பதால், தனது செல்லப்பிள்ளை உரிய சமயத்தில் உணவு உட்கொள்ளவும், சிறுவர்களுடன் விளையாடவும், தோழர்கள் பின் செல்லவும், கோபியர்களுடன் இராசலீலை ஆடவும் யசோதை அன்று செய்தது போல இன்று இங்கு அமைத்து உள்ளார்கள். அதுவும் இரவு, பகல், கோடை, குளிர், வசந்தகாலம் என்று கால நேரத்தைப் பொறுத்து இவருக்கு செய்யும் அலங்காரமும் மாறுபடுகின்றது. அவசியம் இரண்டு நாட்களாவது தங்கி இருந்து தரிசிக்க வேண்டும்.

அந்தந்த காலங்களுக்கு ஏற்ற இராகத்தில் பாடல்கள் இசைக்கப்பட்டு, அந்தந்த நேரத்திற்கு ஏற்றவாறு பிரசாதம் (போக்),  உடை மற்றும் அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுகின்றது. கோடை காலத்தில் ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார், குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன் சேவை சாதிக்கின்றார்.

முதல் பூஜை, மங்களா எனப்படும்; கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம். இந்த பூஜை, திருக்கதவுகள் மூடிய நிலையில், குளிர்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது. சிறுவர்கள் கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால்  எழுந்தவுடன் அவர் விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் தருவதில்லை, ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்ய விடமாட்டான் என்பதாக ஐதீகம்.

இரண்டாவது பூசை சிருங்கார்  என்றழைக்கப்படுகின்றது. கண்ணனுக்கு அலங்காரம் செய்து வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர் தன் மகனைக் காண யசோதை அனுமதிக்கின்றாள். அப்பொழுது கண்ணனுக்கு புல்லாங்குழல் தரப்படுகிறது.

மூன்றாவது பூசை க்வால்.மாடு கன்றுகளை  ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.

அடுத்த பூஜை, மதிய நேரத்தில் நடைபெறும் ராஜ் போக்ஆகும். மிக விமரிசையாக நடக்கும் இந்த பூஜைக்குப்பின், மூன்று மணி நேரம் நடை அடைக்கப்படுகின்றது.

அடுத்த பூஜை,  உத்தப்பன் என்று அழைக்கப்படுகிறது.  மாடுகளை மேய்த்தபின் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம்.

அடுத்த பூசை போக் ஆகும். பசுக்களை கறவைக்காக அழைத்து செல்ல ஒரு அறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம்.

மாலை பூசை சந்தியா ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது. யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன.

நாளின் நிறைவு பூசை  சயன்  ஆகும். சயன ஆரத்திக்குப் பிறகு திரையிடப்படுகின்றது. எம்பெருமான் திருப்பள்ளி கொள்கிறார். .

டாகூர் துவாரகா

அசல் துவாரகாதீஷ் சிலை தனது சொந்த விருப்பத்தின் பேரில் டாகோரில் உள்ள தனது பக்தரின் இடத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. அகமதாபாத் நகரில் இருந்து பரோடா செல்லும் வழியில், ஆனந்த் எனும் ஊருக்கு அருகில் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் டாகோர் நகரம் அமைந்துள்ளது. இங்கு கண்ணனின் திருநாமம் ரணசோட் ராய்; ‘யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்’ என்று அர்த்தம், மதுரா நகர மக்களும், யாதவ குல மக்களும் போரில் அவதி படுவார்களே என்று கண்ணன் யுத்தத்தை துறந்ததை சொல்வது. ஆக, காலயவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்தது.

கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறார். துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, என்னும் பக்தர், தன்னுடைய தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்கு நடந்து சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். வரும் காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியாதோ என்ற கலக்கத்துடன் பகவானை வேண்ட, அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான். தன்னை எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியிலேயே அழைத்து செல்ல போடானாவிற்கு எம்பெருமான் கட்டளை இட்டாராம். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக கண்ணன் ஒரு வேப்ப மரக் கிளையில் சாய்ந்து நின்றதாகவும், அந்த மர இலைகள் மட்டும் இனிப்பாக உள்ளதாகவும் சொல்லி, அந்த மரத்தை இன்றும் மக்கள் வழிபடுகிறார்கள்.

டாகோர் துவாரகை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் ஒரு கோட்டை போல அமைந்துள்ளது. மிகப் பிரம்மாண்டமான மதிற்சுவர்,  நாற்புறமும் வாயில்கள், கோட்டை வாயில்களைப் போலவே உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தின் உட்புறத்தில்  இரு புறமும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பங்கள் இச்சுற்றில் மற்ற அலுவலக அறைகளும் உள்ளன. ஆலயத்தை வலம் வரும் போது துவாரகை கிருஷ்ணரை எடையை அளந்த துலாபாரத்தைக் காணலாம். தற்போது தங்கக் கவசத்தில் கண்ணாடி பெட்டிக்குள் மின்னுகின்றது அந்த தராசு.

கருவறையும் சபா மண்டமும் உயரமாக அமைந்துள்ளன. வண்துவாராபதி மன்னனைச் சேவிக்க   சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். சியாமள வண்ணத்தில் சங்கு, சக்கரம், கதை, அபயத் திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கின்றார் மனமோகனன். அபயத் திருக்கரத்தில் தாமரையும் உள்ளது. கிரீடத்தில் கண்ணனுக்கே உரித்தான மயிற்பீலி, பட்டுப் பீதாம்பரம், வனமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருமேனியை அலங்கரிக்க எழிலாக, ஒயிலாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். துவாரகையிலிருந்து வந்த சக்கரவர்த்தி   என்பதால் பொன் சிம்மாசனத்தில்  நின்ற கோலத்தில் எழிலாகச் சேவை சாதிக்கின்றார்.

பெருமானுக்கு மிக அருகில் பெண்களுக்குக்கென்றே தனி இடம் ஒதுக்கியிருக்கின்றனர். கிருஷ்ணருக்கு அருகில் சென்று தரிசிக்க உரிமை, அவர்கள் கோபிகைகளாக இருந்ததனால் அந்தச்சலுகையை இக்கோவிலில் வழங்கியுள்ளனர்.

அடியேன் இதுவரை தரிசித்தவை, துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா.  ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில்களுக்கு அந்த கண்ணன் தான் அழைத்து செல்ல வேண்டும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • துவாரகநாத்ஜி கோவில்
  • பேட் துவாரகா
  • குசேலர் பவன்
  • ப்ரபாஸ தீர்த்தம்
  • மூல துவாரகா
  • ருக்மணிதேவி கோவில்
  • கோமதி நதி

ஸ்தல வரலாறு

காலயவனன்‘ என்று ஒருவன் செருக்குடன் திரிந்து கொண்டு இருந்தான்; ஒருமுறை நாரதரைப் பார்த்து ‘இவ்வுலகில் யாராவது சூரர்கள் உண்டா?’ என்று கேட்க, அதற்கு நாரதர் ‘வட மதுரையில் யாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்‘ என்றார். காலயவனன் அதைக் கேட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டு வடமதுரைக்கு வந்து யாதவர்களுடன் போர் செய்யத் தொடங்கினான், கண்ணபிரான் இதையறிந்து மேற்கு கடலுக்குச் சென்று அங்கு ஸமுத்ர ராஜனிடம் கேட்டு, பன்னிரண்டு யோஜனை பரப்புள்ள இடத்தை வாங்கி அங்கு துவாரகை என்ற தங்க மயமான இந்த நகரத்தை ஒரே நாள், ஒரே இரவில் அமைத்து வடமதுரையிலுள்ள யாதவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்து அவர்களுடைய அச்சத்தை அழித்தான். பிறகு திரும்பி வந்து காலயவனனையும் முடித்தான். காலயவனனை முடித்த இடம், ரண சோட ராய் என்று அழைக்கப்படும் பஞ்ச துவாரகையில் ஒன்றான டாகூர் துவாரகா ஆகும்.

இதே போல் கண்ணன் மதுரையின் மஹாராஜாவாக இருந்த போது, ஜராசந்தன் என்னும் அரக்கன் மதுராபுரி மக்களுக்கு பல துன்பங்கள் விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டும் என்று கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை அழைக்க அவனால் வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி என்ற ஒரு வரலாறும் உண்டு. இந்த துவாரகாபுரி முன்பு சொன்னது போல் கடல் சீற்றத்தால் விழுங்கப்பட்டு விட்டது.

ருக்மணியின் அண்ணன் ருக்மி, ருக்மணியை சிசுபாலனுக்கு மணம் செய்விக்க விரும்பினான். ஆனால் ருக்மிணி,  ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக வரித்து விட்டார். எனவே  கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். கண்ணனின் ஆலோசனைப்படி காத்யாயினி ஆலயத்திற்கு பூசை செய்ய வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் தேரில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார். எதிர்த்து வந்த சிசுபாலனையும், ருக்மியையும் போரில் தோற்கடித்து துவாரகை வந்து சித்திரை மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசியன்று திருமணம் செய்து கொண்டார்.  ருக்மிணித் தாயார் எழுதிய கடிதத்தை தினமும் படித்து வந்தால் எல்லா  நன்மைகளும் கிட்டும், வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் என நம்பிக்கை.

ப்ரபாஸ தீர்த்தத்தில் தான் கண்ணன் மீண்டும் இந்த திருஅவதாரத்தை முடித்து மீண்டும் பரமபதம் திரும்பியது. யாதவர்கள் ஒரு முனிவரிடம் பெற்ற சாபத்தினால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு முடிந்தனர். இறுதியில் கண்ணன் ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறி கொண்டு இருந்த போது, ஒரு வேடன் கண்ணனின் திருவடிகளை மான் கொம்பு என்று தவறாக நினைத்து மறைந்து இருந்து அம்பு எய்தியதால், அதையே காரணமாக கொண்டு கண்ணன் பரமபதம் அடைந்தான்.

வேடன் மறைந்திருந்து எய்தது, முன்பு இராம அவதாரத்தில், வாலியை தாக்கியதற்கு பரிகாரமாக இந்த அவதாரத்தில் இப்படி தன் திருஅவதாரத்தை முடித்து என்று சொல்பவர்கள் உண்டு. அதே போல் மஹாபாரதத்தில் காந்தாரியின் சாபத்தினால் கண்ணன் தன் குலத்தோர் அனைவருடன் மறைந்ததாகவும் சொல்வது உண்டு. இவைகளுக்கு ஆதாரம் சேகரிக்க வேண்டும்.

மஹாபாரதத்தில் துவாரகையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகள்;

துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160). பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அர்ச்சுனன் சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான். பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72) துவாரகைக்கும்  இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. (14-53, 55). குருக்ஷேத்திரப் போரில் துவாரகையின்  கிருதவர்மன்,  கௌரவர்  அணியிலும்;  சாத்யகி  பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர். மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35).

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துவாரகாவில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சியில் இருந்து செப்பு நாணயங்கள், கற்பாறைகள், தூண்கள் மற்றும் பானை வகைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். எனவே, 2 ஆம் நூற்றாண்டில் நன்கு நிறுவப்பட்ட நகரம் இருந்தது என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், 1983 மற்றும் 1990 க்கு இடைப்பட்ட ஆய்வுகள், நகரம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது. அவை கரையிலிருந்து ஒரு மைல் தூரம் வரை நீட்டிக்கப்பட்டன. கடல் ஆய்வுகள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் தூண்கள், துறைமுகங்கள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளன. எனவே, பகவான் கிருஷ்ணரின் காலத்தில் ஒரு பழங்கால நகரம் இருந்ததை இது ஆதரிக்கிறது. மேலும், பண்டைய கையெழுத்துப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நகரத்தின் அமைப்பு, இந்தியாவின் கடல் தொல்லியல் துறையால் (The Marine Archaeology Unit of India) கண்டுபிடிக்கப்பட்ட நகரத்துடன் பொருந்துகிறது.

1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல்  அகழ்வாய்வுப்  பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது. கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர்  சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில்  துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய ஹரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. 

துவாரகையில் தான் பக்த மீரா  கண்ணனை ஆரத்தழுவி அவனுடன் கலந்தது. அவளுக்கு விஷம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதும் இங்கே கதவுகள் மூடி கொண்டன, அதே போல் மீரா கண்ணனை தேடி இங்கே வந்ததும் அந்த கதவுகள் தானாகவே திறந்தன.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம், இந்த திருத்துவாரகை ஆகும்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி அஞ்சப் புணர் முலை வாய் மடுக்க, வல்லானை மாமணி வண்ணனை மருவும் இடம் நாடுதிர் எல், பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை, எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர். (4.1.6)

சிறு குழந்தையாக இருந்த, கண்ணனை வஞ்சனையால் கொல்ல நினைத்த, வறண்டு வளைந்து எலும்பும் நரம்பும் தோண்டும் படியாக, பொல்லாத உருவம் கொண்ட பூதனை என்ற அரக்கி, கம்ஸனால் ஏவப்பட்டு, தன்னுடைய உருவத்தை மறைத்து, பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி என்றபடி, முலையில் விஷத்தைத் தடவிக் கொண்டு, யசோதை போல் தாய் உருவம் எடுத்து முலை கொடுக்க, அதனை வாயில் வைத்து, விஷப்பாலை, அமுதமாகவே அமுது செய்து, உண்ண வல்லவன் இந்த கண்ணன். நீலமணி போன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமான் கண்ணன், அவனை தேடுகிறீர்கள் என்றால், கடல் அலைகள் வீசி எறிகின்ற துவாரகையில், பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிம்மஹாசனத்தில் எழுந்தருளி எல்லோரும் சூழ இருப்பதை கண்டார் உண்டு என்கிறார்.

நரகாசுரனால் பல திசைகளில் இருந்தும் கொண்டு செல்லப்பட்டு, மந்தரகிரியின் சிகரமான ரத்தகிரியில், சிறை வைக்கப்பட்டிருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும், கண்ணபிரான் நரகாஸுரனை வதம் செய்த பின்னர், மணந்துகொண்டு வந்தது சரித்திரம். இது ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவார் என்று சொல்லப் படுகிறது. கண்ணன் சத்தியபாமாவிற்காக கொண்டு வந்த, பரிஜாதம் முதலிய எல்லா பொருட்களையும் சேர்த்து எல்லாரும் சூழ என்று சொல்கிறார்.  

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டமென்னும் கடி நகரே. (4.7.8)

கடல் சூழ்ந்து திண்மையான மதிளை உடைய துவராகையின் இராஜாவான எம்பெருமான், தன்னையே தங்களுக்கு துணையாகவும், பலமாகவும், காதலாகவும் பற்றிக்கொண்டு உள்ள தன்னுடைய மைத்துனர்களான பாண்டவர்களுக்கு ஒரு தலை பட்சமாக இருந்து, அவர்களிடம் இருந்து சூழ்ச்சி செய்து, சூதில் பறித்துக் கொண்ட இராஜ்யத்தில் பத்து ஊர், ஒரே ஒரு ஊர் என்று எல்லாம் கேட்டு, அவை மறுக்கப்பட்ட பிறகு, துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு தோல்வியை கொடுத்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும், கண்ணபிரான், கண்டமெனும் கடி நகரில் புருஷோத்மனாக சேவை சாதிக்கிறான் என்கிறார். தன்னை பற்றிக் கொள்பவர்களுக்கு சகல பாவங்களையும் போக்கிவிடுகிறான் என்பது கருத்து. பசுக்கள் கட்ட உள்ள ஸ்தம்பங்கள் இடைவிடாமல் இருக்கும் கங்கைக்கரை, வேள்வி அல்லது யாக புகை இரண்டு கரைகளிலும் மணம் கமழ்கின்ற கங்கைக்கரை என்று அடைமொழி கொடுத்து அங்கே இருக்கும் கங்கை எனும் கடிநகர் திவ்யதேசம் (தேவப்ரயாகை) என்று பெருமையுடன் கூறுகிறார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தட வரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே. (4.7.9)

தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமார்கள் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளைக் குறிப்பிடுகிறார்.

பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாண் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இருமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே. (4.9.4)

பதினாறாயிரவர் தேவிமார் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா என்று முன்பு (4.1.6 மற்றும் 4.7.9) சொன்னவர் இங்கும் அதனை குறிப்பிடுகிறார். தேவிமார் பதினாறாயிரத்து ஓரு நூற்றுவர் என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காணப் படுகிறது. திருவரங்க மாநகரைச் சுற்றிச் சூழ்ந்துள்ள காவேரியில் எம்பெருமானது திருநாபிக் கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றன என்றும், அப்பூக்களுக்கு சமமான அழகிய பூக்கள் மற்றோர் இடத்தில் இல்லை என்றும் கூறுகிறார். எல்லா உலகங்களையும் அதனுள் எல்லா ஜீவராசிகளையும் படைப்பதற்கு தானே காரணமாக இருந்து அவை எல்லாவற்றிற்கும் நிர்வாஹகமாக இருக்கின்ற இருப்பை நினைத்து கர்வத்துடன் அருள்பாலிக்கிறார் என்று சொல்கிறார்.

Somnath

தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடி போல் சுடர் ஒளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே.(5.4.10)

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரிணி தடே ! ரமயா ரமமாணாய  வேங்கடேசாய மங்களம் ” என்பது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ஸ்லோகம்.    இதன் படி, வெங்கடேச பெருமாள், தனது நிரந்தர வாசஸ்தலமான பரமபதம் அல்லது ஸ்ரீ வைகுந்ததில் இருந்து, மிக புனிதமானதும் வராக புஷ்கரணியும், உயர்ந்த மலைகளை உடையதுமான திருவேங்கடம் என்ற இந்த ஸ்தலம் வந்து, விண்ணோர்களுக்கும், இந்த மண்ணில் உள்ளவர்களுக்கும் அருள் பாலிக்கிறார்.   இப்படிப்பட்ட திருவேங்கடத்தை   விட்டு விலகி, ஆழ்வாரின் மனதிற்குள் வந்து விட்டார் என்று பெரியாழ்வார், தனது திருமொழியின்  (5.4.10) கடைசி பாடலில் “வடதடமும், வைகுந்தமும், மதிள் துவராபதியும், இட வகைகள் இகழிந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே” என்று முடிக்கிறார். இதற்கு முன் பாட்டில், தாம் உகந்து அருளின நிலங்களுடன் ஒப்பிட்டு பெரியாழ்வாரின் திருமேனியையும் எம்பெருமான் விரும்பினார் என்று கூறினார், இந்த பாடலில், அவற்றை விட்டு தம்மையே விரும்பியதை சொல்கிறார்.
ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டும், பின்பு அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பது போல் அன்றி, அந்த பொருளில் சில குற்றம் குறை காரணமாக அதனை இகழ்ந்து விட்டால், மீண்டும் ஒருநாளும் அவற்றை நினைக்க மாட்டாது போல், எம்பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்திபூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்ததனால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளக் கருத்து. 
பெரிய பரப்பை உடைய உயரமான மலையின் உச்சியில் விளங்குகின்ற ஒரு பரிசுத்தமான கோடி எல்லாரும் காண எளிதாக இருப்பதைப்போல் தன்னுடைய இதயத்தில் பளிச்சென்று இருந்த தேஜஸ்ஸ்வரூபியே என்று எம்பெருமானை விளிக்கின்றார். 

சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணங்கள் என்று பொருள் கொள்ளலாம். எம்பெருமான் தன்னுடைய திருவுள்ளத்தில் புகுந்த பின்பு, தன் உடல் பூரித்ததை, பூர்ணமானதை, சொல்கிறார். மேலே சொன்ன திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணங்கள் எல்லாம், ஆழ்வார் தனக்கு பிரகாசித்ததாக சொல்கிறார்.

கொண்டனையே” என்றதற்கு, இப்படியும் ஒரு ஸௌசீல்யம் இருக்கின்றதே, இப்படியும் ஒரு ஸௌலப்பயம் இருக்கின்றதே, இப்படியும் ஒரு வாத்ஸல்யம் இருக்கின்றதே என்று எம்பெருமானை ரசிக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

“உனக்குரித்தாக்கினையே”என்பாலிடவகை கொண்டனையே’ என்பதற்கு, ‘இப்படி செய்தாயே’ என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட ஆழ்வாரை எடுத்து தன் மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய் இந்த பிரபந்தத்தை முடிக்கிறார். “அதனிற் பெரியவென்னாவா‘ என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசம் எல்லாம், இப்பெரியாழ்வார் பக்கம் எம்பெருமானுக்கு பிறந்தபடி இத்திருமொழி என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

One Siva temple on the way to Bhet Dwarka
The SunSet in Western India

சுவரில் புராண நின் பேரேழுதிச் சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும் கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா அவரைப் பிராயந் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – 1.4

முதல் இரண்டு வரிகளில், கண்ணபிரானைக் காண வேண்டும் என்ற ஆவலுடைய ஆண்டாள், அவனைக் கண்ட பின்பு காமதேவனை மறக்கக் கூடும் ஆகையால், அப்படி மறதி நேர்ந்திடாமல் இருக்க, அந்த மன்மதன் பெயரையும் மற்றும் அவனது அம்சங்களையும் சுவரில் எழுதியதை கூறுகிறார். இறுதி இரண்டு அடிகளில், கண்ணபிரானை அன்றி மற்ற எவரையும் அனுபவிக்கத் தனக்கு ருசி இல்லாததையும், பிரிந்தாரை சேர்த்து வைப்பவன் என்று பழைய காலத்தில் இருந்து பெயர் பெற்று இருக்கும் மன்மதன், கண்ணபிரானிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தனது பருத்த முலைகளை துவாரகைக்குத் தலைவனான அக்கண்ணபிரானே அனுபவிக்க தகுந்தவன் என்று அவனை சங்கல்பித்து, அவற்றை தொழுகின்றேன் என்கிறார். பக்திசெல்வம் மிகுந்தவனான இளைய பெருமாள் (லக்ஷ்மணன்) எல்லா உலகங்களையும் ஆனந்திக்க செய்பவனும், தன் அண்ணனுமான ஸ்ரீ ராமபிரானிடம், சிறு வயது முதல் எப்பொழுதும் அன்பு கொண்டவனாக இருந்தான். அது போல், ஆண்டாள் நாச்சியாரின் திருமுலைகளும் பருவம் நிரம்புவதற்கு முன்பே கண்ணனை அணைக்க ஆசைப்பட்டதால் அவனே அனுபவிக்க தக்கவன் என்கிறார். இப்போது அவனாலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி பெருத்து உள்ளதாகவும் கூறுகிறார். அவனுக்கு என்று சங்கல்பித்த பின்பு அவைகளும் தொழ தக்கவைகளே என்கிறார். இவை வாடுவதற்கு முன்பு அவனோடே சேர்ப்பிக்க வேண்டுமாக கேட்கிறார்.

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக்கு காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே 4.8

தனக்கு அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, அவனுடைய ரக்ஷகத்வத்திற்கும் (பாதுகாக்கும் தன்மைக்கும்) ஸௌலப்யத்திருக்கும் (எளிமையாக பழகும் தன்மை) குறையில்லை; கூடல் கூடாததுதான் காரணம் என்று ஆண்டாள் சொல்வதான பாடல்.

ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் நல்ல வாசனை சூழ்ந்த துவாரகையை நிர்வகிப்பவனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனான கண்ணனுடன் கூடிட, கூடலே நீ கூடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன், ஆகையால் நம்மை ஏற்றுக்கொண்டே தீருவான், எனவே அவன் வரும்வரை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதே நமக்கு நல்லது என்று சீதா பிராட்டி இருந்ததைப்போல் என்று ஆண்டாள் உபவாசம் இருந்தாலும், ஆர்வம் மிகுதியால் அவனை பெறுவதற்காக, நோன்பு நோற்பது, காமனிடம் சொல்வது, சிற்றில் இழைப்பது, பனி நீராடுவது, கூடலிழைப்பது என்று தங்களுடைய ஸ்வரூபத்திற்கு ஒவ்வாத காரியங்கள் செய்பவர்கள் ஆவல் உடையார்.

மல்லாண்ட திருத்தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பாடுவதும், “உரகல் உரகல்” என்று எப்போதும் விழித்திருக்கும் நித்யஸூரிகளை பார்த்து , உறங்காமல் இருந்து எம்பெருமானை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொங்கும் பிரிவால் பெரியாழ்வாரை போல், காரியங்கள் செய்பவர்கள் அன்புடையோர்.

ஆழ்வார் குடிப் பிறப்பால் தன்னுடைய அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, என்பதை ஆண்டாள் சொல்கிறார்.

விரைசூழ் துவராபதிக்கு என்று சொல்வதன் மூலம் இயற்கையிலேயே வாசம் நிறைந்த பதினாயிரம் தேவிமார்களை காப்பாற்றி துவாரகைக்கு அழைத்து வந்தது சொல்லி அவனது ரக்ஷகத்துவம் சொல்கிறார். இவள் அளவுக்கு ஆவல் அன்பு இல்லாதவர்கள் ஆதலால் எம்பெருமான் தன்னை சேர்த்துக்கொள்வார் என்கிறார்.

நித்யஸூரிகளை ரக்ஷிப்பதைக் காட்டிலும் பசுக்களை காப்பதில் உவந்து இருப்பான் (திவத்திலும் பசுநிரை மேய்ப்பு என்று நம்மாழ்வார் திருவாய்மொழி10.3.10) என்று சொல்வது போல் இங்கே கன்று மேய்த்து விளையாடும் கோவலன் என்று சொல்லி அவனது எளிமை (சௌலப்யம்) சொல்லப்பட்டது.

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள், மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ, சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே (9.8)

கரியகுருவிக் கூட்டங்கள் விடியற்காலையில் மனிதர்களுக்கு முன்னம் எழுந்திருந்து திருமாலிருஞ்சோலை மலை மற்றும் துவாரகைக்கு தலைவனாகவும், ஆல மரத்தின் இலையில் எழுந்தருளிய ஸர்வேஸ்வரனாகவும் உள்ள எம்பெருமானின் வார்த்தைகளை சொல்லி அவன் வருவதை மருள் என்ற பண்ணினை பாடுகின்றன, இது உண்மையா என்று ஆண்டாள் சொல்கிறார்.

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற, என்று நம்மாழ்வார் (திருவாய்மொழி 6.7.2) சொல்வதுபோல், ஆண்டாள் தன்னுடைய ஊரில் அறிவற்ற குருவிக்கூட்டங்களும், எம்பெருமானைப்பற்றி பேசுகின்றன என்கிறார்.

ஆலின் இலை பெருமான் என்றதால், எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கிக்கொண்டு, அப்போது துளிர்த்த ஓர் ஆலிலையில் சயனித்து, சேராதவற்றை சேர்த்து வைக்கும் திறமையை உடையவன் என்று சொல்லிற்று.

கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும், ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும், நாட்டிற்றலைப் பழி எய்தி உங்கள் நன்மை அழிந்து தலையிடாதே, சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (12.9)

தான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்துகொண்டு எல்லா நேரங்களிலும் கோவிந்தா கோவிந்தா என்று கூறுகின்றது, உணவு கொடுக்காமல் இருந்தால் உலகளந்த பெருமானே என்று உரக்க கூவுகிறது, இந்த திருநாமங்களை கேட்டாலே தான் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறது என்கிறார். பெரும் பழியை ஏற்றுக்கொண்டு தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி தன்னை துவாரகைக்கு கொண்டு விடுங்கள் என்கிறார்.

தான் எம்பெருமானுடன் சேராமல் தவித்துக்கொண்டு இருக்கும் போது, தான் வளர்த்த கிளி முன்பு சொல்லி கொடுத்த திருநாமங்களை சொல்லி தன்னுடைய துயரத்தை அதிகரிக்க, அந்த கிளியை கூண்டில் அடைத்தாள். அது கோவிந்தா கோவிந்தா என்று கூவ ஆரம்பித்தது. இவள் சொன்ன ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்ற பரமபத நாதன் திருநாமத்தை சொல்லாமல், சௌலப்யத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பசுக்களை மேய்த்த கண்ணனின் திருநாமத்தை சொன்னால் அது அவளுக்கு மேலும் துயர் கொடுக்கும் என்று தெரிந்து இன்னும் உரக்க சொன்னது. அந்த கிளிக்கு பட்டினி போட்டால் அது பேசாமல் இருக்கும் என்று நினைத்தது தவறாக சென்று அந்த கிளி, த்ரிவிக்ர அவதார நாமத்தை, எம்பெருமானின் திருவடிகள் சென்ற வானத்தில் எல்லாம் கேட்கும்படி உரக்க கூவ ஆரம்பித்தது. கோவிந்தன் பசுக்களின் பின்னே தனிமையில் செல்லும்போது அந்த பசுக்களின் ரக்ஷகத்துவத்திற்கு அடிமையானவள் இவள்; அதனால் தான் அது கோவிந்தா என்று கூவிற்று.

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே, இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டானடிக் கீழெய்தகிற்பீர் மலைத்தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளங் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே. (6.6.7)

பூதனையானவள் முடியும்படியாக, அவளின் பெருத்த முலையில் சுரந்த விஷம் நிறைந்த பாலை அமுது செய்தவனாய், துவாரகைக்கு நிர்வாககனாய், பசுக்களின் பின்னே பெரிய இலையினால் செய்யப்பட்ட குழல் கொண்டு, ஊதிக்கொண்டு போனவனாய், இடை பெண்களுடைய வளை மற்றும் ஆபரணங்களை விளையாட்டுக்காக (லீலை) அபகரித்தவனின் திருவடிகளை அடைய விரும்புபவர்களே, மலைகளில் இருந்து மணிகளை திரட்டிக்கொண்டு, உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி, வளத்தை கொண்டு தருகின்ற, பெருகி வருகின்ற தண்ணீரை கொண்டு உள்ள, காவேரியை உடைய நாட்டுக்கு அதிபதியாய், வில்லை கையில் ஏந்திய க்ஷத்ரிய வம்சத்து சோழன் சேர்ந்த கோவில் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே. (6.8.7)

காண்டவ வனம் என்பது தேவேந்திரனுக்கு உரிய இந்த உலகத்தில் உள்ள ஒரு காடு. ஒரு நாள் அக்னி, ஓரு அந்தணன் வேடம் பூண்டு அர்ஜுனனும் கண்ணனும் யமுனா நதி கரையில் கூடி இருந்த இடத்தில வந்து சேர, அந்த அந்தணனை அவர்கள் நன்கு உபசரிக்க, அக்னி அவர்களிடம் உணவு வேண்ட, ‘வேண்டிய உணவை அளிப்போம்’ என்று அவ்விருவரும் உறுதி கூற, உடனே அந்த அந்தணன் தான் யார் என்ற உண்மையை தெரிவித்து காண்டவ வனத்தைத்  தனக்கு இரையாக அளிக்குமாறு வேண்ட, அவர்கள் பல கொடிய அசுரர்களும் அரக்கர்களும் துஷ்ட மிருகங்களும் நிரம்பியிருக்கும் இந்த காடு அழித்து ஒழிவதே நாளது என்று நிச்சயித்து அக்னியிடம், ‘அப்படியே உண்பாயாக’ என்று அனுமதி கொடுத்ததினால் அக்னி அந்த காடு முழுவதையும் ஆக்ரமித்துப் பூர்ண திருப்தியுடன் உண்டான் என்பது கதை மஹாபாரத்தில் ஆதி பருவத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனான கண்ணபிரான் தனது அன்பனான இந்திரன் வருந்தும்படி அவனது காட்டை அழிக்க அனுமதித்தது அவதார பலன் நிறுவுவதற்காக என்று அறிந்து கொள்ளலாம். காட்டில் உள்ள அளவற்ற கொடுமையான விஷ உயிரினங்களை அழித்து பூமியி்ன் பாரத்தைக் குறைத்து அருளினதை உணரலாம். . 

திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும், தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை சத்தியபாமாவிற்காக துவாரகையில் கொண்டு நட்டவனான எம்பெருமானை திருநறையூரில் கண்டனே என்கிறார்.

திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன், அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய் ஞானம் இல். (71)

மஹா பிரளயத்தின் போது, பூமியை எடுத்து காப்பாற்றியதை அறியாததை போல், இந்த பூவுலகில் இருந்து உய்ய (சம்சார பிரளயத்தில் இருந்து மீள) அவன் கூறிய வார்த்தைகளை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்று வருந்துகிறார். இப்பாட்டில் சேயன் என்பது மிகப்பெரியன் என்பதோடும் அணியன் என்பது சிறியன் என்பதோடும் சேர்ந்து வரும். எம்பெருமான் எளியவனாகவும் மிக உயர்ந்தவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பான் என்று சொல்வது மாயன் என்பதால் விளங்கும்.

ருத்ரன், பிரமன் போன்ற தங்களுக்கே, மிக தூரத்தில் இருப்பவன் என்று இராமாயணம் உத்ரகாண்டத்தில் சொன்னது போல், இவன் எக்காலத்திலும் எவனாலும் காண அரியவன் என்று பிரமன் சொன்னதை இங்கே குறிப்பிட்டு உள்ளார். இதேபோல், வராக புராணம், கீதை, மற்றும் விஷ்ணு தர்மம் இவற்றில் இருந்தும் மேற்கோள் காட்டப்படுகிறன. வேதத்தில் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவன் என்று சொல்லி அளவிடமுடியாதபடி பெரியவன் என்று சொல்கிறது. அவன் மிகவும் பெரிய ரூப, ஸ்வரூப, குண விபூதிகளை கொண்டவன் ஆகையால், இப்படி அரியவனாக இருக்கிறான்.

அணியன் என்று சொன்னது, ஆசையுள்ளவர்களுக்கு மிக அருகிலேயே எளிமையாக அறியலாம்படி உள்ளவன் என்கிறார். அணியன் சிறியன் என்று சௌலப்யத்தை சொல்லும். சேயன் பெரியன் என்பது அவனுடைய பரத்வத்தை சொல்லும்.

துரியோதனன் போன்றவர்களுக்கும் தன் முயற்சியால் அறிய முயல்பவர்களுக்கும் தூரத்தில் உள்ளவன்; யசோதை, ஆய்ச்சியர் போன்ற ஆசை உடையவர்களுக்கு மிக அருகில் உள்ளவன் என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொன்னதும் (1.3.4) இங்கே குறிப்பிட்டுள்ளார்.

துவரைக்கோனாய் என்று சொன்னதில் துவாரகைக்கு நிர்வாககன் என்ற பெருமை உடையவனாய், பதினாயிரம் ஸ்திரீகளுக்கு ஒரே காலத்தில், ஆடல் கொடுக்கவல்ல ஆச்சர்யமான கண்ணன் என்பது விளங்கும். பாரத போரில், சொன்ன சரம ஸ்லோகத்தை அறியாதவர்கள் எம்பெருமானுக்கு எதிரிகள் என்கிறார். அவர்கள் சரம ஸ்லோகத்தை அறியாததற்கு காரணமே அவர்கள் எம்பெருமானை வெறுப்பவர்களாக இருப்பது தான் என்கிறார்.

எல்லா தர்மங்களையும் அடியோடு விட்டுவிட்டு, என் ஒருவனையே உபாயமாக அடைவாய் என்று சொன்னது சரம ஸ்லோகம். ‘ஞான சக்திகளுடன் கூடிய நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுகின்றேன்’ என்று சொன்னதில் மாம் என்ற சௌலப்பியம் அணியன் சிரியன் ஓதிய வாக்கு என்றும் அஹம் என்ற பதத்திற்கு சொன்ன ஞான சக்தி முதலியவை சேயன் பெரியன் ஓதிய வாக்கு என்றும் கூறுகிறார். துவரைகோன் என்றது ஸ்வாமித்யம் சொல்கிறது. மாயன் என்பது சௌலப்யதோடு ஞான சக்திகளை சேர்த்து சொன்னது.

நம்மாழ்வார் – திருவாய்மொழி 5.3.6

அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லி என் தோழிமீர், என்னை இனியும் உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன், முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன், மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.

தோழிமார்களே! அழகிய துவாரகைக்கு அரசனும் நித்யஸூரிகளுக்கு தலைவனும் மணிவண்ணனும் ஆன கண்ணனின் கண் வலையில் அகப்பட்டுக்கொண்டதாகவும், அதனால் தோழியர்களும், தாயாரும் தன்னை பற்றி இனி ஆசைவைக்க நியாயம் இல்லை, ஊரார் என்ன செய்தால் என்ன என்று ஆழ்வார் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

முதல்வன் வண் துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், ஆகையாலே தன்னைப் பற்றி இனி உமக்கு ஆசை இல்லை என்று தாயாருக்கும் தோழிக்கும் சொல்கிறார். கண்ணபிரானுடைய குணசேஷ்டிதங்களில் தான் அகப்பட்டதாகவும் இனி யார்  என்ன செய்தால் என்ன என்றும் கூறுகிறார். “வாசுதேவன் வலையுளே அகப்பட்டேன்” என்றது தப்ப முடியாதபடி அகப்பட்டு விட்டேன் என்று சொல்வதாகும். எம்பெருமானுடைய வலை என்பது அவனது திருக்கண்களை வலையாக கொள்வது ஆகும்.

மீண்டும் இன்னொரு திவ்யதேச அனுபவத்தோடு சந்திக்கலாம். நன்றி.

2 Comments on “073 திருத்துவாரகை

  1. ஐயா க்ருஷ்ணரே உங்களுள் இருந்து இவ்வளவு நேர்த்தியாக தொகுத்து எங்களையும் துவாரகைக்கே அழைத்து சென்று விட்டார். கோடானுக்கோடி நன்றிகள்🙏🙏

    • அர்ச்சனா அவர்களே, மிக்க நன்றி. உங்களின் வார்த்தைகள் அடியேனுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக தொகுத்து வழங்க வேண்டும் என்ற பொறுப்பையும் கொடுக்கும் வண்ணம் அமைந்து உள்ளன. அந்த கிருஷ்ணருக்கும் நன்றி சொல்லி அடியேனுடைய பணிவான வணக்கங்களை தெரிவிக்கின்றேன். நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: