A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
எம்பெருமான், திருவரங்கனாக
எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:
அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,
தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன, மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக ஆனதாகவும் ஆழ்வார் வருந்தி இந்த பிறவி வீணானதாக தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்கிறார்.
திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.
தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால் அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற பாடலில் சொல்கிறார்.
இனி அடுத்த பாசுரம், நன்றி.
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா, கள்ளத்தே நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.
ஆழ்வார் இந்தப் பாடலில், ஆத்மாவை தன்னுடையதாக எண்ணிக் கொள்ளும் கள்ளவனாகிய தான், அவனுக்கு அடிமை செய்பவன் போலத் தோன்றி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்த போதிலும், எம்பெருமான் ஒவ்வொருடைய நெஞ்சத்தில் இருந்து கொண்டு எல்லாருடைய நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை, புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே தன் விலா எலும்பு நோகும்படி சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.
கள்வனாகிய தான், எம்பெருமானுக்கு தொண்டு செய்பவனாக, தொண்டு செய்வதற்கு வேண்டிய வேஷங்களை போட்டு கொண்டு இருப்பதை, சிந்திப்பவர்களின் சிந்தனைகளை எல்லாம், கூடவே இருந்து அறிந்துகொள்ளும் எம்பெருமான் தெரிந்து கொண்டு இருப்பான் என்று ஆழ்வார் தெரிந்து கொண்டு, அதனால், தனக்குள்ளே, வெட்கம் அடைந்து, எம்பெருமானை விட்டு விலகிச் சென்றதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய விலா பக்கத்துக்கு எலும்பு உடைந்து விழும்படி ஆழ்வார் சிரித்தார் என்பது பாடலின் பதவுரை.
அறிவு வெளிப்படும் வழியான மனதிலே, எப்போதும் வாழ்கின்றவனாய், அதனால் நம்முடைய குற்றங்களை நேரே எல்லாவற்றையும் அறிபவனான (சர்வக்ஞனான) இவனை, பொய்யனாக தான் அணுகி, இவனுக்கும் தோஷத்தை விளைவித்து, என்ன காரியம் செய்து விட்டேன் என்று வெட்கமடைந்து, இருட்டும், சூரியனின் தேஜஸும் ஒன்றாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, இப்படி எம்பெருமானுக்கு குற்றம் விளைவிப்பதை காட்டிலும், நம்முடைய குற்றங்களை அறிந்து கொள்வதற்கு அறிவில்லாமல் இருக்கிற சம்சாரிகளோடு கூடியிருந்து அழிந்து போவதே நல்லது என்று நினைத்து பெரியபெருமாள் திருவடிகளில் உள்ள ஆசையை விட்டு அகல நினைக்கிறார். இங்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த வளவேழ் உலகின் (5.1) பதிகத்தை நினைவில் கொண்டால், ஸ்வாமியும் எம்பெருமானின் பெருமையும் தன்னுடைய தாழிச்சியையும் சொல்லிக்கொண்டு அவனை விட்டு அகல பார்த்ததையும் ஒரு வித ஒப்புமையாக கொள்ளலாம்.
இனி சற்று விளக்கமாக.
எண்ணங்களின் ஊற்று வாயாக உள்ள நெஞ்சத்தில் வாழ்பவன் என்பதை உள்ளத்தே என்று ஆழ்வார் கூறுகிறார். வெளியிலே உள்ளவன் கண்ணால் கண்டதை தவிர வேறு ஒன்றையும் அறிய மாட்டான் என்றும், உள்ளத்திலே இருப்பதனால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. உறையும் என்பதால் எப்போதும் வசிப்பவன் என்று பொருள். அவன் எங்காவது, எப்போதாவது வெளியே போய்விட்டு வந்தால், அந்த சமயத்தில், சரியான வழியாகவோ (சாஸ்திரப்படி நடப்பது), அல்லது நம் இஷ்டப்படி (மூளை சொன்னபடி) நடக்கலாம், எப்போதும் வசிப்பதால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. மாலை என்பதால் எல்லோரையும் விட பெரியவன் என்று பொருள் கொள்ளலாம். அதனால் இவனை ஏமாற்ற முடியாது.
ஜீவாத்மா இந்த உடலின் உள்ளே இருந்த போதும், அதனால் இந்த உடலினுள்ளே இருப்பவற்றை எல்லாம் அறியாது. ஆகாயம் எல்லா இடத்தில வியாபித்து இருந்தாலும் அதனால் எல்லாவற்றையும் நியமிக்க முடியாது. ஆனால் இவன் எல்லாவற்றையும் அறிந்தவனாய், அனைத்தையும் நியமிப்பவனாய் பெரியவனாக இருப்பதால் இவனை ஏமாற்றுவது என்பது அடியோடு முடியாது என்று கருத்து.
பெரியாழ்வார் திருமொழியில் (5.4.11) பெரியாழ்வார் “விட்டுசித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனை” என்று அருளிச் செய்தார்.
ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.6.1) “என் நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ் நூல் இவை மொழிந்து” என்று கூறுகிறார். இவரே திருவாய்மொழி (7.9.3) ல், “என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை ” என்று எம்பெருமான், ஆழ்வாரின் நாவின் மூலமாக அவருள் புகுந்ததை சொல்கிறார். “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-2) என்றும் திருமாலிரின்சோலை பதிகத்தில் சொல்கிறார். இதேபோல், திருவட்டாறு பதிகத்தில் (திருவாய்மொழி 10.6.8), “மெய் நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன், கை நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல், மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு, எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?” அருளிச்செய்த பாடலையும் சொல்லலாம். ஆழ்வார் திருமேனியில் நின்ற எம்பெருமான் என்று ஒரு அர்த்தம்; எம்பெருமான் திருமேனியில் அணிந்திருந்த திருத்துழாய் மாலையின் மணம் அவர் திருமேனியில் இருந்து அவரது திருமுடிக்கு மேலே சென்றதாக இன்னொரு பொருள். ஆழ்வார், “என்ன நன்மை செய்தேன் என்று என் நெஞ்சில் புகுந்து, ஏதோ பெறாப் பேறு பெற்றார் போலே விளங்குகிறான்! ” என்று மகிழ்கிறார்.
எம்பெருமான் நம்மாழ்வாரின் வாக்கிலும் உடம்பிலும் அவருக்கு நல்லது செய்வதற்காக அவருள்ளே வசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆசார்யன் தெரிவிக்கிறார்.
திருமங்கையாழ்வார் “வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போய் அறியாய்” என்று பெரிய திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் பதிகத்தில், (8.9.5) திருக்குடந்தை பெருமானை பற்றி சொல்வதை நினைவில் கொள்ளலாம்.
நமக்குள்ளே அந்தர்யாமியாக வாழ்கிறான் என்று சிந்திப்பதற்கு உறுப்பான அறிவு இல்லை என்று கருத்து. பரமாத்மாவான அவனை பற்றி அறிவு இல்லாததோடு ஜீவாத்மாவாகிற தன்னைப்பற்றிய அறிவும் இல்லை, தன்னை பற்றி அறிந்தால் மட்டுமே தன்னை உடையவனாக அவனை பற்றிய அறிவு வரும் என்பது கருத்து. ஒன்றில்லா என்பதற்கு விளக்கம் சொல்கையில்,
என்று சொல்கிறார்.
அந்தர்யாமி என்பதும், அந்தராத்மா என்பது இரண்டு வேறு வேறு விஷயங்கள். அந்தராத்மா என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளே இருக்கும் பரமாத்மாவின் ஐந்து நிலைகளில் ஒன்று. அந்தர்யாமி என்பது அந்த ஜீவாத்மாவின் உள்ளே இருக்கும் அந்தராத்மாவின் / பரமாத்மாவின் நியமிக்கும் (நியந்த்ருத்வம்) தன்மை அல்லது குணம். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதுமாக வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)
அறிவற்றவன் என்று உலகத்தார் அறியமுடியாதபடி வெளி வேஷங்களால் தன்னை மறைத்து கள்ளன் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அறிவு இல்லாதவர்களிடம் தன்னிடம் தன்னுடைய அந்தராத்மா அறிய தீய குணங்கள் ஒன்றும் கிடையாது என்று சொல்லி ஏமாற்றுவாராம். அறிவாளிகளிடம் தன்னிடம், தன் அந்தராத்மா அறிய ஒரு நல்ல குணமும் கிடையாது என்று சொல்லி நைச்சானுசந்தானம் வேஷம் தரித்து, அவர்களும் இவருக்கு ஆத்மாவை பற்றிய அறிவும், பரமாத்மாவைப் பற்றிய அறிவும் அவசியம் இருக்கும் என்று நினைக்கும்படி செய்து அவர்களையும் ஏமாற்றுவாராம்.
பிறப்பில் இருந்தே தீய குணங்களுக்கு கொள்கலமாக இருந்ததாகவும், அவை ஒன்றும் தமக்கு இல்லை என்று மற்றவர்களை நம்ப செய்ததாகவும், அதுவும் எம்பெருமான் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இந்த கள்ளத்தனங்களை செய்ததாக சொல்கிறார். கள்ளத்தனங்களை செய்த போதும், இப்போது அப்படி இல்லை என்று காட்டிக்கொள்ளும் இந்த சமயத்திலும், எம்பெருமான் கூடவே சாட்சியாக இருந்தார் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்.
ராமாயணத்தில் பகவத் சம்பந்தம் இல்லாதவனை குறித்து வால்மீகி தன்னை தானே நிந்தித்து கொள்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
“யஶ்ச ராமஂ ந பஶ்யேத்து யம் ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)
‘யார் ராமனைப் பார்க்கவில்லையோ அல்லது ராமனைக் காணவில்லையோ, அவர் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களாலும் குற்றம் சாட்டப்படுவார். தன்னை தானே கூட இகழ்ந்து கொள்வான்.” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இங்கு ஆழ்வார், ஆத்ம குணங்கள் நிரம்பியவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகளை ஒரு நன்மையும் இல்லாத தானும் செய்ய வந்ததாக சொல்லி, நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வந்ததால் தன்னை தானே இகழ்ந்து கொள்கிறார்.
எம்பெருமான் விஷயத்தில் கள்ளத்தனம் செய்வதோடு மட்டும் இல்லாமல், சத்வ குணங்களை கொண்ட நல்லவர்களும் தன்னை கொண்டாடும்படி வேஷங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு உள்ளதாக ஆழ்வார் கூறுகிறார். தன் உடம்பு முழுவதும் 12 திருமண் இட்டுக்கொண்டும் பஞ்ச ஆயுதங்களை தரித்துக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்.
ஆழ்வார் பஞ்ச ஆயுதங்களையும் தரித்து கொண்டதாக சொல்கின்ற உரைநூல் ஆசிரியர் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலங்களிலோ பஞ்சசம்ஸ்கார நிகழ்வின் போது ஐந்து ஆயுதங்களையும் தரிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், அது தற்பொழுது சங்கு சக்கரங்களை தரிப்பதோடு உள்ளது.
கோலம் பூண்டு என்று சொல்வதால், கோலம் மட்டும் பூண்டு கொண்டு, அடிமைத்தனம் (கைங்கர்யம்) எதுவும் செய்யாமல் என்றும் கொள்ளலாம். ஆத்ம குணம் நிறைந்தவர்கள் செய்ய வேண்டிய அடிமைத்தனங்களை செய்யாமல் இருந்தேன் என்பதை “தொண்டுக்கே” என்ற ஏகாரத்தின் மூலம் சொல்கிறார்.
மனப்பூர்வமாக இல்லாமல், வெளி வேஷத்திற்காக அச்சுதா, அமரர் ஏரே, ஆயர் தம் கொழுந்தே (திருமாலை 2), என்று எம்பெருமான் பெயர்களை சொல்லியும், இச்சுவை தவிர, யான் … அச்சுவை பெறினும் வேண்டேன் (2) என்று அவன் இனிமையை பேசியதாகவும், நாவலிட்டுழி தருகின்றோம், நமன் தமர் தலைகள் மீது (1) என்று பிறர் மயங்கும்படி எமன் முதலியோர் தலையில் கால் வைக்கின்றேன் என்றும், தன்னை ஒரு பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு பிறருக்கு உபதேசம் செய்கிறேன் என்றும் இப்படி எத்தனை பிதற்றினேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
எண்ணங்கள், ஊற்று போல் புறப்படும் நெஞ்சத்தில் எழுந்தருளி இருப்பதால் நினைப்பவர்கள் நினைப்பதையெல்லாம் கூடவே இருந்து அறிகிறான் என்பதை தான் உணர்ந்ததாக சொல்கிறார்.
சகுந்தலை, துஷ்யந்தனைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “துஷ்யந்த மஹாராஜனே, நான் ஒருவனே இருக்கிறேன் என்று நீ எண்ணுகிறாய், இதயத்தில், நித்யவாசம் செய்கின்ற ஆதிபுருஷனான பகவானை நீ அறியவில்லை, எவரொருவர் பாப கர்மங்களை அறிபவரோ, அவர் அருகிலேயே, நீ பாபத்தைச் செய்கிறாய்” என்று சகுந்தலை கூறிய வார்த்தைகள் இங்கே கவனிக்க தக்கவை. எல்லாம் அறிந்தவன் ஆன, எல்லாவற்றையும் நியமிக்கின்றவன் ஆன, எம்பெருமான் நெஞ்சினில் இருக்கும்போதே, யாருக்கும் தகாத காரியங்களைச் செய்ததாக ஆழ்வார் கூறுகிறார்.
தன்னுடைய கள்ளத்தனத்தையும், அவன் எல்லாம் அறிபவன் என்பதையும், அவன் நெஞ்சினில் எப்பொழுதும் இருப்பவன் என்பதையும் நினைத்தவுடன் ஆழ்வார் வெட்கம் அடைகிறார். இப்படி வெட்கம் அடைந்து, தலை குனிந்து எம்பெருமான் முன் நிற்கமுடியாமல், அவரை விட்டு விலகி போனார். மற்ற விஷயங்களில் வெட்கம் அடைந்தால், அது இல்லாத இடமாக பார்த்து விலகி போவது போல், எம்பெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை சிந்திக்க மறந்து, பெரியபெருமாள் இல்லாத இடமாக, ஆழ்வார் தேடி போவதாக சொல்கிறார்.
சம்சாரிகள் சுத்தமாக வெட்கம் அற்றவர்கள் ஆகையால், அவர்கள் விலவறச் சிரிக்கும் விஷயத்தில் ஆழ்வாரோடு சேர மாட்டார்கள்; பெரிய பெருமாளை விட்டு ஆழ்வார் விலகி விட்டதாக நினைத்தாலும், முன்னே இருந்தால் கூட ஆழ்வாரை பார்த்து சிரிப்பது என்பது எம்பெருமானுக்கு இஷ்டம் இல்லாத ஒன்று, ஆகையால், பெரியபெருமாளும் ஆழ்வாருடன் இந்த விஷயத்தில் சேர மாட்டார்; இதனால், ஆழ்வார் மட்டும் தனக்கு தானே சிரித்து கொள்ள வேண்டி உள்ளது. தாம் சிரிக்க தக்கவன் என்பதை உணர்ந்து, கூட சிரிப்பவர் யாரும் இல்லாமையால், இவ்விஷயத்தில், இவரே இவர்க்கு துணை ஆனார் என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.
விலா எலும்புகள் முறியும் படி சிரித்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார். தாம் செய்த காரியம், சிரிக்கத்தக்க காரியங்களின் எல்லையில் நிற்பதால், தன் சிரிப்புக்கும் எல்லை இல்லை என்று சொல்கிறார். தீக்குளிக்க நினைப்பவர்கள், முதலில் வெற்றலை போட்டுகொண்டு தீக்குளிக்கலாம் என்று நினைப்பது போல், பெரிய பெருமாளை விட்டு அகன்று அழியலாம் என்று நினைப்பதுவும் ஒன்றே என்று எண்ணி சிரிக்கிறார்.
பரத பெருமான், இராமபிரானை தேடி, அந்த பரத்துவாச முனிவர் சொன்ன ஆசிரமத்தை அடைந்தேனோ என்று சத்ருக்னனிடம் மகிழ்ச்சியுடனும் ஒளிரும் முகத்துடனும் சொல்கிறார்.
ககச்சந்நேவ மஹாபாஹுர்த்யுதிமாந் பரத ஸ்ததா.
ஷத்ருக்நம் ச அப்ரவீத்தரிஷ்டஸ்தாநமாத்யாம் ச ஸர்வஷஃ৷৷
“மந்யே ப்ராப்தாஃ ஸ்மதஂதம் தேசம் பரத்வாஜோ யம் அப்ரவீத். நா அதிதூரே ஹி மந்யே அஹம் நதீஂம் மந்தாகிநீமிதஃ (இராமாயணம், அயோத்தியா காண்டம் 2.99.8 மற்றும் 9)
சரம ஸ்லோகம் கேட்பதற்கு முன்னால், அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் அதனை அடைய வழிகளை கேட்டு அறிந்து, அவை அரியனவை என்று சோகத்துடன் இருந்தான். கிருஷ்ணனிடம் மீண்டும் கேட்டால் அவன் அதற்கும் அவன் ஒரு பரிகாரம் சொல்வான், அவனை அதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தான். அதே போல், அர்ச்சுனன் சோகத்துடன் இவ்விஷயத்தை விட்டு அகன்று விடுவானோ என்று எம்பெருமான் சரம ஸ்லோகம் அருளி செய்கிறார்.
அதே போல் ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.1.3)ல், “அந் நலனுடை ஓருவனை நணுகினம் நாமே” என்று சொல்வதும் “எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!” என்ற பொருளில் வரும்.
பரதனும், அர்ச்சுனனும் நம்மாழ்வாரும் எம்பெருமானை நெருங்கும் போது, இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், இவ்விஷயத்தில் இனி பெரியபெருமாளை அணுக கூடாது என்று ஆசையற்று நீங்க பார்க்கிறார். ஆகையால், வெற்றிலை தின்று, பூச்சூடி, தீக்குளிப்பவர்களை போலே சிரித்துக்கொண்டே எம்பெருமானை விட்டு அகலப் பார்க்கிறார்.
இந்த பாடலுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை, கெட்ட குணங்கள் அத்தனையும் உண்டு என்று சொல்லும் நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி நிறைவடைகிறது. இனிஅடுத்து வரும் பகுதி, ஆழ்வார் அருளி செய்த திருமாலையின் மிக முக்கிய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும். அதனை அடுத்த பாசுரம் பற்றிய பதிப்பில் அனுபவிக்கலாம். நன்றி.